நிலவே என்னிடம் நெருங்காதே!!-8

 


அத்தியாயம்-8

திரதன் தன் குடும்பத்தை பிரிந்து தன் தங்கைகளை பிரிந்து ஊட்டிக்கு படிக்க செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்க, அவன் தாத்தா தேவநாதனோ கண்டிப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார்..

தன் பேரனுடன் எப்பொழுதும் கொஞ்சி பேசும் அவருடைய இலகுவான தோரணையை மாற்றி கொண்டு கண்கள் இடுங்க முகத்தை இறுக்கி கொண்டு கட்டளை இடும் தொணியில் அவன் ஊட்டிக்கு சென்றுதான் ஆகவேண்டும் என்று சொல்லிவிட, அதற்குமேல் அவன் தாத்தாவின் கட்டளையை மீற முடியாமல் போனது..

அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை அடி பணிய செய்தது... மறுபேச்சு பேசாமல் ஊட்டிக்கு கிளம்பி சென்றான் அதிரதன்...

அன்று குடும்பமே ஊட்டிக்கு சென்று அவனை பள்ளியில் விட்டுவிட்டு வர உடன் சென்றிருந்தனர்.. அவன் தாய் வழி பாட்டி பாரிஜாதம் பேரனை பிரிந்து இருக்க வேண்டுமே என்று நீலி கண்ணீர் வடித்தார் யாரும் அறியாமல் தன் பேரனை கட்டி கொண்டு..

அதிரதன் பார்வை தன் செல்ல தாத்தாவிடம் செல்ல, அவரோ தன் முகத்தில் எதையும் காட்டாமல் இறுகிய முகத்துடன் அந்த பள்ளியின் முதல்வருடன் பேசி கொண்டிருந்தார்...

“அவருக்கு என்னை பிரிந்து இருப்பதில் எந்த வருத்தமும் இல்லை.. நான் மட்டும் எதுக்காக அவருக்காக ஏங்கணும்? “ என்று தலையை சிலுப்பி கொண்டவன் தன் தாத்தாவை போலவே அவன் வருத்தத்தை உள்ளுக்குள் வைத்து பூட்டி கொண்டு நிமிர்ந்து நின்றான்..

அவன் வயது ஒத்த பிள்ளைகள் முதன்முதலாக பெற்றோர்களை பிரிந்து இருக்க பயந்து அன்றைய நாளில் இங்கு இருக்க மாட்டேன் என்று சொல்லி தரையில் படுத்து உருண்டு அழுது புரள, அதிரதனுக்கோ  அவன் தாத்தாவின் போதனைகள் கண் முன்னே வந்தது...

“ஆண்மகன் எப்பொழுதும் உணர்ச்சி வசப்படக்கூடாது.. எந்த காரணத்தை கொண்டும்  அழக் கூடாது.. எப்படி பட்ட பிரச்சனை வந்தாலும் அதை தைர்யமாக எதிர்த்து நின்று அதை எதிர்கொள்ளனும்..

பிரச்சனைக்கு பயந்து கொண்டு அழுது புரள்வது எல்லாம் கோழைத்தனம்.. “ என்று  சில கதைகளை கூறி அவன் மனதில் ஆழ பதித்திருந்தார்..

அதை எல்லாம் நினைவில் நிறுத்தியவன் மற்ற பிள்ளைகளை போல தாயின் இடையை கட்டி கொண்டு அழாமல் உள்ளுக்குள் இறுகி போனான் அதிரதன்..

முகமலர்ச்சியுடன் கை அசைத்து தன் குடும்பத்தை அனுப்பி வைத்தான்.. மறந்தும் அவன் தாத்தா பக்கம் திரும்பவில்லை..

தேவநாதனுக்கு அது கஷ்டமாக இருந்தாலும் இந்த வயதில் இந்த மாதிரி துன்பங்களை எல்லாம் தாண்டி வந்தால்தான் பிற்காலத்தில் அவனால் நிமிர்ந்து நிக்க முடியும் என்று தன் மனதை கல்லாக்கி கொண்டு தன் பேரனை கட்டி தழுவி விட்டு கண்ணீரை உள்ளுழுத்து கொண்டுதான் அவரும் திரும்பி வந்தார்...

ஆனால் அதை கண்டு அதிரதன் இளகிவிடவில்லை..மாறாக இன்னும் தன் தாத்தாவின் மீது வெறுப்பைத்தான் வளர்த்தான்..

ரியற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல, அவன் மனதில் தோன்றிய அந்த வெறுப்பு என்ற நெருப்பை வளர்ப்பதற்காகவே பாரிஜாதம்  அடுத்த வார விடுமுறையில் தன் மகளை அழைத்து கொண்டு அதிரதன் படித்த பள்ளிக்கு சென்றார்..

அந்த ஒரு வாரம் தன் குடும்பத்தை பிரிந்து இருந்தவன் அந்த வார இறுதியில் அவர்களை பார்க்கவும் உள்ளம் துள்ளி குதிக்க ஓடி வந்து தன் தங்கைகளை கட்டி கொண்டான்..

கண்கள் தானாக அவன் தாத்தாவை தேடியது...

ஆனால் அவர் வந்திருக்கவில்லை... அதை கண்டு உள்ளுக்குள் சிறு ஏமாற்றம் ஒன்று பரவ, அதை மறைத்து கொண்டு கலகலப்பாக தன் குடும்பத்துடன் பேசி சிரித்தான் அதிரதன்..

ஆனால் பாரிஜாதம்  அவனை அப்படி விட்டு விடவில்லை... அவர் வாங்கி வந்திருந்த சாக்லெட் பார்களை தன் பேரனிடம் கொடுத்து  அவன் கன்னம் வருடி கொஞ்சியவர்

“அதி கண்ணா... பார்... பாட்டி உன்னை பார்க்க ஓடோடி வந்திட்டேன்.. உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை.. ஆனால் உன் தேவநாதன் தாத்தா இருக்காரே.. கல் நெஞ்சுக்காரர்.. உன் மீது கொஞ்சம் கூட பாசமே இல்லை..

ஆசை பேரனை பிரிந்து இருக்கிறமே என்று கொஞ்சம் கூட வருத்தமே இல்லை அவருக்கு.. இல்லையென்றால் இந்நேரம் ஓடோடி வந்திருக்க வேண்டாமா உன்னை பார்க்க... “ என்று இன்னும் ஏதேதோ சொல்லி அந்த பாலகன் மனதில் நஞ்சை கலந்தார்...

அவனும் முதல் வாரம் எதுவும் கண்டு கொள்ளவில்லை என்றாலும் அதற்கு அடுத்த வாரம் தன் தாத்தா தன்னை பார்க்க வருவார் என்று எதிர்பார்த்திருக்க, அவன் எதிர்பார்ப்பு பொய்யாகியது..

அடுத்து வந்த மூன்று மாதங்களும் அவருக்கு நிக்க நேரம் இல்லாமல் போய்விட, விவசாயத்தையும் டெக்ஸ்டைல் பிசினஸ் ஐயும் ஒன்றாக பார்த்து கொள்ள, அவருக்கு தன் பேரனை நேரில் வந்து பார்க்க முடியாமல் போய்விட்டது..

ஆனாலும் தொலைபேசியில் அழைத்து பேசுவார் தான்... அவர் குரலை கேட்டதும் அவனையும் அறியாமல் துள்ளி குதிக்கும் அவன் மனம்.. ஆனால் பாரிஜாதம் சொல்லி இருந்த கதைகள் எல்லாம் கண் முன்னே  வர, தன் உற்சாகத்தை அடக்கி கொண்டு தன் தாத்தாவிடம் ஏனோ தானோ என்று  பேசிவிட்டு தொலைபேசியை வைத்து விடுவான்..

ஆனால் அதற்கு பிறகு அவன் மனம் ரொம்பவும் வேதனைப்படும்.. உடனே அந்த வேதனையை போக்க க்ரவுண்ட்க்கு ஓடி விடுவான்..

தன் மனதில் இருக்கும் ஏமாற்றம் வலி வேதனை எல்லாம் விளையாட்டில் காட்ட ஆரம்பித்தான்.. சீக்கிரமே புட் பால், பாஸ்கட் பால், வாலிபால்  என எல்லா விளையாட்டையும் கற்று கொண்டான்...

அனைத்திலுமே ஆர்வம் வந்துவிட, எல்லா விளையாட்டுகளிலும் பங்கு பெறும் ஆல்ரவுண்டராக ஆகினான்..

அந்த வருடத்தில் நடந்த ஜூனியர் பிரிவில் எல்லா விளையாட்டுகளிலும் அவன் ஜெயித்து கோப்பையை வாங்கி இருக்க, அதையெல்லாம் தன் தாத்தாவிடம் காட்டி அவரிடம் பாராட்டை பெற வேண்டும் என்று துடிக்கும் அவன் உள்ளே..

ஆனால் அவன் ஈகோ அதுக்கு தடையாக இருந்தது.. தானாக கீழ் இறங்கி வந்து அவரிடம் கொஞ்ச அவன் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.. அதனால் இன்னும் தன் ஏக்கத்தை எல்லாம் படிப்பிலும் விளையாட்டிலும் காட்ட, அந்த பள்ளியிலயே தலைசிறந்த மாணவனாக திகழ்ந்தான்..

தன் பேரனின் வளர்ச்சியை கண்கானித்து கொண்டிருந்த தேவநாதனுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாகி போனது.. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பள்ளிக்கு போன் பண்ணி அவர் பேரனை பற்றி விசாரித்து கொள்வார்...

அதனாலயே அவன் படிப்பிலும் விளையாட்டிலும் சுட்டியாக இருப்பதை கண்டு பெருமை பட்டு கொண்டார்...

கால் ஆண்டு விடுமுறைக்கு வந்தவனை அள்ளி அணைக்க சென்ற தேவநாதனை ஒதுக்கி விட்டு அவரை பார்த்து முறைத்து விட்டு ஒதுங்கி சென்றுவிட்டான் அதிரதன்.. அவருக்கும் தன்னை போலவே அவன் முறுக்கி கொள்கிறான் என்று பெருமையாக இருந்தது..

அன்றிலிருந்து தள்ளி நின்றே தன் பேரனின் வளர்ச்சியை பார்த்து ரசித்தார் தேவநாதன்...

நாட்கள் உருண்டோட, அதிரதனும் வளர்ந்து இளைஞனாக நின்றான்.. தோற்றத்தில் அபடியே அவன் தாத்தாவை உரித்து வைத்து இருந்தான்...

அரும்பு மீசையும் வந்துவிட, கண்ணாடியில் பார்க்கும்பொழுதெல்லாம் தன் தாத்தாவை போலவே மீசையை கம்பீரமாக நீவி விட்டு கொண்டு சிரிப்பான்...

வெளியில் அவன் தாத்தாவை வெறுப்பது போல காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் அவர்தான் அவன் ரோல்மாடல் என்பது அவனே  அறியாத ஒன்று.....

அவன் தாத்தாவை இன்னும் வெறுக்கும் அளவுக்கு அடுத்து வந்த நிகழ்வு இருந்தது..

அதிரதன்  பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க அடுத்து என்ன எடுத்து படிப்பது என்று குழப்பம் வந்தது..

அதிரதனுக்கு கம்யூட்டர் சயின்ஸ்  இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற ஆசை.. படித்து முடித்து தானே சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் .. அந்த துறையில் தன் தாத்தாவை போல பெரிய ஆளாக வரவேண்டும் என்று சொல்ல தேவநாதனோ அவன் டெகஸ்டைல் பிசினஸ்க்குத் தான் வரவேண்டும்..

“எனக்கு அடுத்து இந்த தொழிலை அவனால்தான் திறம்பட நிர்வகிக்க முடியும்..”  என்று சொல்லி அவனை கோயம்புத்தூரில் இருக்கும் புகழ்பெற்ற கல்லூரியில் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் சேர்த்துவிட்டார்...

அதிரதன் எவ்வளவு மறுத்து பார்த்தும் அவன் பேச்சை கேட்காமல் அவருக்கு பிடித்த துறையிலயே சேர்த்துவிட, எப்பவும் போல இந்த முறையும் அவர் பேச்சை தட்ட முடியாமல் அவரை மனதிற்குள் திட்டி கொண்டே தன் கல்லூரி வாழ்க்கையை தொடங்கினான் அதிரதன்...

ஆனால் உள்ளுக்குள் மட்டும்

“நான் படித்து முடிக்கிற வரைக்கும் மட்டுமே இவர் பேச்சுக்கு கட்டு பட்டு நடப்பேன்.. படிப்பு முடிந்ததும் சென்னைக்கு பறந்து விடவேன்டும்.. எனக்கும் 21 வயது ஆகிவிடும்.. அதற்கு மேல் அவரால் என்னை கட்டுபடுத்த முடியாது..

என் விருப்பம் போல நான் வாழ்ந்து கொள்வேன்.. “  என்று உள்ளுக்குள் திட்டமிட்டவன் தன் தாத்தாவின் பேச்சுக்கு கட்டுபட்டவனை போல அந்த கல்லூரிக்கு சென்று வந்தான்...

கோயம்புத்தூரில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இருந்தது அந்த ஜமீன்... அதனால் அதிரதன் தினமும் ஜமீனில் இருந்தே கல்லூரிக்கு சென்று வந்தான்...

இத்தனை நாட்கள் தன் குடும்பத்தை,  தன் தாத்தாவை பிரிந்து இருந்த ஏக்கம் நீங்கி விட, வீட்டில் இருந்தே கல்லூரிக்கு சென்று வருவது அவனுக்கு பிடித்துத்தான் இருந்தது...

அதுவும் அவன் தாத்தா அருகிலயே இருந்தது அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது அவன் அறியாமல்..

இப்பொழுது தன் தாத்தாவின் அருகிலயே இருந்தாலும் மனதளவில் அவரிடமிருந்து ரொம்ப தூரம் விலகி சென்றிருந்தான் அதிரதன்.....

றுநாள் காலை கண் விழித்தவள் தன் கண்களை கசக்கி விட்டு கொண்டு சுற்றிலும் உற்று பார்த்தாள் அந்த ஜமீனின் புது மருமகள்..

வழக்கமாக கண் விழித்தால் காதுகளில் ரீங்காரமிடும் சில் வண்டுகளின் சத்தமும், தூரத்தில் கூவும் குயில் ஓசையும், அந்த அதிகாலையில் தவழ்ந்து வந்து அவள் மேனியை தழுவும் தென்றலுமாய்  காலையில் எழும்பொழுதே ஒரு புத்துணர்வோடு எழுவாள் அவள்..

ஆனால் இன்று எழும்பொழுதே அதெல்லாம் மிஸ்ஸிங்... என்னாச்சு? என்று மீண்டும் கண்களை தேய்த்துவிட்டு கொண்டு உற்று பார்க்க அந்த இடமே புதிதாக தெரிந்தது அவளுக்கு..

பளிங்கு கற்களால் ஆன பளிச்சென்ற நான்கு சுவர்கள், கிரானைட் ஆல் ஆன முகம் பார்க்கும் கண்ணாடியை போல பளபளத்த தரை,  நவீன வசதிகளுடன் குளுகுளுவென்று இருந்த ஏ.சி அறை எல்லாம் புதிதாக இருக்க, மீண்டும் தலையை தட்டி யோசித்தவளுக்கு நேற்றைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தன...

கூடவே அவள் இருக்கும் இடமும் இப்பொழுது அறிவுக்கு உறைத்தது... அவள் இருப்பது அவளுடைய புகுந்த வீட்டில்..

அவளுடைய கணவன் அறையில் என்று உறைக்க, தரையில் அமர்ந்தவாறு கண்களை சுழற்றி அருகில் இருந்த கட்டிலில் பார்க்க அங்கு நேற்று அவளுக்கு தாலி கட்டி அவள் கணவனாகியவனை காணவில்லை..

காலியாக இருந்தது கட்டில்.. கூடவே நேற்றிரவு அவளை பார்த்து அவன் கத்தியதும் நினைவு வர, ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு கொண்டு தன் நீண்ட தலைமுடியை தூக்கி கொண்டையாக்கியவள் புடவையை சரி செய்தபடி எழுந்து படுக்கையை சுற்றி வைத்தாள்..

பின் குளியலறைக்குள் சென்று முகம் கழுவ, அப்பொழுது தான் அவள் உடைகள் அங்கு இல்லை என்பது நினைவு வந்தது...

இப்பொழுது மாற்றிக் கொள்ள என்ன செய்ய என்று யோசித்தவாறு கைவிரலால் அங்கிருந்த பேஸ்ட் ல் பல்துலக்கி முகம் கழுவி வெளிவந்தவள் அப்பொழுது அந்த அறையின் கதவு மெதுவாக தட்டும் ஓசை கேட்டது..

வேகமாக சென்று கதவை மெதுவாக திறக்க, வெளியில்  யாழினி நின்றிருந்தாள்..

அவளை கண்டதும் அவள் யாரென்று புரிந்து விட,  பெரியவள் நட்பாக புன்னகைக்க, யாழினியோ  முகத்தை வெடுக்கென்று திருப்பி கொண்டு

“தாத்தா இந்த சூட்கேஸ் ஐ உங்ககிட்ட் கொடுக்க சொன்னார்.. இதுல உங்க திங்க்ஸ் ம் ட்ரெஸ் ம் இருக்கு..  குளிச்சிட்டு இதில் இருக்கும் ட்ரெஸ் ஐ போட்டுகிட்டு கீழ வரச் சொன்னார்.... “

என்று அவளின் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்து சொல்லி விட்டு அந்த சூட்கேஸ் ஐ திறந்திருந்த கதவின் வழியாக அந்த அறைக்குள் திணித்துவிட்டு முகத்தை நொடித்தவாறு விறுவிறுவென்று  மாடி இறங்கி சென்றாள் யாழினி..

அவளும் அந்த சிறுபெண்ணின் முகம் திருப்பலை கண்டு புன்னகைத்தவாறு கதவை தாழிட்டு அந்த சூட்கேஸ் ஐ திறந்து அதில் இருந்த ஒரு புடவையை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள்..

தலைக்கு குளித்து முடித்து அந்த புடவையை கட்டி கொண்டு ஈர முடியை லேசாக துவட்டியவள் அதை அப்படியே விரித்து விட்டு இரு பக்கமும் முடி எடுத்து நடுவில்  க்ளிப் போட்டு கொண்டாள்..

அந்த சூட்கேஸில் இருந்த அவளுடைய பொருட்களில் இருந்து ஒரு குட்டியான ஸ்டிக்கர் பொட்டை எடுத்து புருவத்தின் மத்தியில் வைத்து கொண்டு அவள் கூடவே எடுத்து வந்திருந்த அய்யனார் கோவில் திருநீற்றையும் எடுத்து சிறுகீற்றாக வைத்து கொண்டவள் நேரம் ஆவதை உணர்ந்து அறைக் கதவை சாத்திவிட்டு வேகமாக படி இறங்கி சென்றாள்.

புடவை தட்டிவிடாமல் இருக்க ஒரு கையால் புடவையை சிறிது தூக்கி பிடித்து கொண்டு மறுகையால் முந்தானையை சுழற்றியவாறு நிமிர்ந்த நடையுடன் ஒரு துள்ளளுடன் படி இறங்கி வந்தவளை இமைக்க மறந்து ரசித்து பார்த்து கொண்டிருந்தார் தேவநாதன்..

பூஜை அறையில் இருந்து எதையோ எடுக்க வெளிவந்தவர் கால் கொழுசு கணீரென்று ஒலிக்க, கூடவே அவள் கால் விரலில் அணிந்திருந்த அந்த ஜமீன் பாரம்பரிய பெரிய சைஸ் மெட்டி இன்னும் ஓசை எழுப்ப, ஒரு வித ஆளுமையுடன் மாடியிலிருந்து துள்ளலுடன்   கீழ இறங்கி வந்து கொண்டிருந்த அந்த ஜமீனின் புது மருமகளை ரசித்து பார்த்தார் தேவநாதன்..

அப்படியே தன் மனைவியே நேரில் வந்ததை போல இருந்தாள் அவள்..

தேவநாதன் மனைவி மணியம்மை எப்பொழுதும் சிரித்த முகமாக யாரிடமும் நாணி கோணாமல் நேர் பார்வை பார்த்தும் தைர்யமாக நிமிர்ந்து நின்று பேசும் கண்களும் ஒரே பார்வையில் மற்றவர்களை அடக்கிவிடும் ஆளுமையும் நிறைந்து இருப்பார்..

சில நேரங்களில் தேவநாதனே தன் மனைவிக்கு அடங்கி போய்விடுவார்..

மணியம்மையின்  நிமிர்வு அவர் பேத்திகளிடம் கூட இருந்ததில்லை..

ஆனால் இந்த வீட்டிற்கு மருமகளாக வந்திருப்பவளிடம் தன் மனைவியின் சாயலை கண்டவர்க்கு உள்ளம் குளிர்ந்து போனது..  

“சரியான பெண்ணைத்தான் தேடி பிடித்திருக்கிறேன்... “ என்று பெருமையுடன் மீசையை தடவிக் கொண்டார்..  

அவர் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டு மருமகளை சில கண்கள் வெறுப்புடனும்  பொறாமையுடனும் நோக்கின..  

அந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்த அமுதினியும் யாழினியும் வெறுப்புடன் அவளை  நோக்க அவர்களை ஒட்டி அமர்ந்து இருந்த அவர்களின் சித்தி மகள் காமினியும் மாமன் மகள் யாமினியும் ஒருவித பொறாமையோடு நோக்கினர்...

சிறியவர்கள் மட்டுமல்லாமல் மனோகரி தாய் பாரிஜாதம் மற்றும் அவள் வீட்டு சொந்தங்கள் அங்கே அமர்ந்திருக்க எல்லாருமே மேலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தவளை ஒருவித ஆற்றாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..

மனோகரியின் அன்னை பாரிஜாதத்திற்கு ஒரு படி மேலே சென்று உடலெல்லாம் பற்றி எரிந்தது...

எப்படியாவது தன் மகன் சுந்தரின் மகள் யாமினியை இந்த வீட்டு  மருமகள் ஆக்கிவிட திட்டமிட்டிருந்தார்.. அதற்காக சில பல குறுக்கு வழியிலும் முயன்றார்..

எப்படியாவது தன் பேரன் மனதை மாற்றி தன் பேத்தியின் பக்கம் சாய வைத்து விட்டால் போதும்.. அவன் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டால்  இந்த கிழவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று திட்டமிட்டு தன் பேரன் மனதை கரைத்து வந்தார்....

அவனோ தன் தங்கைகளுடன் ஒன்றாக விளையாடும் தன் சித்தி மகள் காமினி மற்றும் மாமன் மகள் யாமினியையும் தன் தங்கைகள்  போல பாவித்து வர, பாரிஜாதத்தின் திட்டம் சறுக்க தொடங்கியது..

இந்த நிலையில் பட்டணத்தில் ஒரு புள்ளையுடன் தன் பேரன் சுத்துவதும் அரசல் புரசலாக அவர் காதுக்கு வர, இன்னுமே தளர்ந்து போனார்...

ஆனாலும் முயற்சியை விடாமல் தன் மகள் மனோகரியிடம் நச்சரித்துக் கொண்டிருந்தார் தன் பேத்தி யாமினியை மருமகளாக்கி கொள்ள...

இந்த நிலையில் திடீரென தேவநாதன் புதுசாக ஒருத்தியை கொண்டு வந்து இந்த வீட்டு மருமகள் என்று நிறுத்திவிட, தன் எண்ணம் நிறைவேறாமல் போனதை நினைக்கும் பொழுதெல்லாம் அவர் உடல் எல்லாம் பற்றி எரிந்தது பாரிஜாதத்திற்கு..

“இந்த அதி பய அந்த கிழவனுக்கு பயந்துகிட்டு இப்படி ஒரு ஒன்னும் இல்லாதவள் கழுத்தில் தாலி கட்டுவான் னு தெரிந்திருந்தால் எப்படியாவது அந்த கிழவனிடம் அழுது உருண்டு புரண்டாவது தன் பேத்தியை இந்த வீட்டு மருமகளாக்கி இருக்கலாம்...

அதை விட்டுட்டு பேரன் மனதை கரைக்க போய் அது தோத்து போய்விட்டதே...  " என்று பெருமூச்சு விட்டார்..

ஆனாலும் அவருடைய கிரிமினல் மூளையோ 

“இப்பவும் ஒன்னும் ஆகிவிடவில்லை... உன் பேரன் என்ன அந்த பொண்ணை விரும்பியா மணந்தான்...?  அவனுக்கும் அவளை பிடிக்கவில்லை தான்...

பிடிக்காத கல்யாணத்தை கட்டாயபடுத்தி பண்ணி வைத்ததால், அவன் தாத்தாவின் மீது ஏகப்பட்ட கோபத்தில் இருந்து கொண்டிருக்கிறான்.. அவன் உள்ளே இருக்கும் நெருப்பை ஊதி விட்டு அதில் இந்த புது பொண்ணையும் தள்ளி விட்டு உன் பேத்தியை இந்த ஜமீனின் மருமகளாக்க வாய்ப்பு இருக்கு...

முயற்சியை கை விட்டுவிடாதே. " என்று ஓத அவர் முகத்தில் கொஞ்சமாக நம்பிக்கை சுடர் விட ஆரம்பித்தது....

“ஹ்ம்ம்ம்ம் ஏதாவது செய்ய வேண்டும்... என்ன செய்யலாம்..?  “  என்று அவசரமாக யோசித்தார் பாரிஜாதம்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!