நிலவே என்னிடம் நெருங்காதே!!-15

 


அத்தியாயம்-15

ன்று இரவு தன் படுக்கையில் படுத்தவாறே தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தவள் பின் எதுவோ உந்த அவன் எண்ணிற்கு இரவு வணக்கம் மெசேஜ் அனுப்பி வைக்க, உடனே அவனும் இவளுக்கு இரவு வணக்கம் சொல்லி ஸ்மைலி அனுப்பி இருந்தான்..

அதை கண்டதும் துள்ளி குதித்தாள் அமுதினி.. அதற்கு பிறகு காலை வணக்கம், இரவு வணக்கம் என ஆரம்பித்தது அடிக்கடி அழைத்து பேசி கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருந்தது...

மேலும் ஒரு மாதம் கடந்திருக்க அன்று  அவள் தோழிகள் திரைப்படத்திற்கு செல்ல இவளோ அவர்களிடம் வரவில்லை என்று  சொல்லிவிட்டு அவர்கள் சென்ற தியேட்டரை விட்டு வேற ஒரு தியேட்டருக்கு சென்றாள் ரஞ்சனுடன் திரைப்படம் பார்க்க..

உள்ளுக்குள் பயமக இருந்தது.. தப்பு பண்றமோ என்று.. ஆனாலும் வயது கோளாறில் அதெல்லாம் தெரியவில்லை. இளம்கன்று பயம் அறியாது என்பது போல ரஞ்சனை பார்க்க வேண்டும் அவன் உடன் பேச வேண்டும் என்ற ஆவலில் துணிந்து சென்று விட்டாள்..

அவனும் இவளுக்காகவே தியேட்டரின் வெளியில் காத்து கொண்டிருந்தவன்

“ஹாய் அம்மு.. ஏன் இவ்வளவு நேரம்..?  “ என்று செல்லமாக கோவித்து கொண்டு அவளை கையை பிடித்து இழுத்து கொண்டு உள்ளே சென்று விட்டான்..

அமுதினிக்கோ இன்னும் படபடப்பு குறையவில்லை...

“இப்படி யாருக்கும் தெரியாமல் திருட்டுதனமாக ஒரு ஆடவனுடன் படம் பார்ப்பது இதுதான் முதல் முறை.. தாத்தாவுக்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ற பயமே உயிர் வரை பரவ, உள்ளுக்குள் திக் திக் என்று  அடித்து கொண்டது..

அதெல்லாம் கொஞ்ச நேரம் தான்.. விளக்கை அணைத்துவிட்டு திரைப்படம் ஓட ஆரம்பித்ததும் அருகில் இருந்தவன் அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டு காதல் மொழிகளை பேச, அவள் தாத்தா அண்ணா, அப்பா எல்லாம் மறந்து போனார்கள்..

அவனின் காதல் மொழியில் கனவு உலகில் மிதந்தாள் அமுதினி..

பாதி படம் சென்றதும் அவன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு மோதிரத்தை எடுத்து அவள் விரலில் அணிவித்து ஐ லவ் யூ சொல்லி அவள் விரலில் முத்தமிட, அவளோ மொத்தமாக கவிழ்ந்து போனாள்..

அவளும் திருப்பி ஐ லவ் யூ சொல்ல அவனும் துள்ளி குதித்தான்..

அதன்பிறகு சின்ன சின்ன  சீண்டல்கள், கொஞ்சம் கொஞ்சம் உரசல்கள் என்று  காதலர்களுக்கே உரித்தான விதத்தில் நேரம் றெக்கை கட்டி பறந்தது..

அன்று என்ன படம் ஓடியது யார் ஹீரோ ஹீரோயின் என்று  கேட்டால் பேந்த பேந்த முழித்திருப்பாள்.. சொர்க்கமாக சென்றது அந்த இரண்டரை மணி நேரமும்.. அதற்குள் திரைப்படம் முடிந்திருக்க, மனமே இல்லாமல் பிரிந்து சென்றாள் அமுதினி..

வீட்டிற்கு வந்ததும் அவள் தங்கை அவள் கையில் இருந்த மோதிரத்தை பற்றி கேட்க, தோழி பரிசளித்தாள் என்று பொய் சொல்லி சமாளித்து விட்டாள்..ஆனால் உள்ளுக்குள் சிறு குற்ற உணர்வு.. எல்லாரையும் ஏமாற்றுகிறமே என்று..  

ப்படியாக நாட்கள் நகர, அமுதினி ரஞ்சன் மேல் பைத்தியமாக ஆகிப் போனாள். அவளுடைய கல்லூரி நாட்களும் முடிய கடைசி செமஸ்டர் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.. இன்னும் இரண்டு பரிட்சைகள் மட்டுமே இருந்தன..

அன்று கல்லூரியை விட்டு வந்தவள் வரவேற்பறையில் அவள் தாத்தாவுடன் பெரியவர்கள் சிலர்  அமர்ந்து இருக்க, பழக்கதோஷத்தில் அவர்களுக்கு  வணக்கம் சொல்லி புன்னகைத்து தன் அறைக்கு ஓடி வந்து விட்டாள்..

ஆனால் அவர்கள் சென்ற பிறகுதான் அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என தெரிந்து கொண்டாள்..

அவள் கல்லூரி முடிப்பதால் அவளை பெண் கேட்டு வந்திருந்தனர்.. தேவநாதனும் யோசித்து சொல்வதாக அனுப்பி வைத்தார்..

மாப்பிள்ளை ஈரோட்டில் பெரிய பிசினஸ் மேன் ..

அங்கு முக்கிய தொழிலான மஞ்சள் பல ஏக்கரில் பயிரிட்டு இருந்தனர்.. அதில் விளையும் மஞ்சளை பதபடுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவது மஞ்சள் பொடி தயார் செய்வதும் இன்னும் பல அழகு க்ரீம்கள் மஞ்சளை பயன்படுத்தி தயாரிக்கும் தொழிற்சாலையும் நடத்தி வருகின்றனர்...

மாப்பிள்ளை படித்தவன்,  தங்கமான குணம். தொழிலில் பொறுப்பாக பார்த்து கொள்கிறான் என்று முன்பே தெரிந்து இருந்ததால் தேவநாதனுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி..

அன்று இரவு உணவின் பொழுது அனைவரையும்  அழைத்து இந்த செய்தியை கூற அமுதினியோ அதிர்ந்து போனாள்...

தன் தாத்தா சொல்லும் பொழுது அருகில் இருந்த அதிரதன் அமுதினியை பார்க்க அவள் முகத்தில் வந்து போன அதிர்ச்சியை கண்டு கொண்டான்.. அதற்கு பிறகு அவள் தலையை நிமிர்த்தாமல் குனிந்து கொண்டே சாப்பிட ஏதோ தவறு என புரிந்து கொண்டான் அதிரதன்..

சாப்பிட்டு முடித்ததும் அவளை தனியாக அழைத்து விவரம் கேட்க அவளோ மறைக்காமல் எல்லாம் சொல்லி விட்டாள்.. தான் ஒருத்தனை காதலிப்பதை மறைக்காமல் சொல்லி முடித்தவள் அவன் மார்பில் புதைந்து கொண்டு

“ப்ளீஸ் அண்ணா.... நீங்கதான் என் காதலை சேர்த்து வைக்கணும்.. என் ரஞ்சன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.. “ என கண்ணீர் விட, அவனும் தன் தங்கைக்கு ஆறுதல் சொல்லி தேற்றியவன் நேராக தன் தாத்தாவிடம் சென்று தன் தங்கையின் காதலை பற்றி சொல்லிவிட்டான்..

“அவள் விருப்பபட்டவனுக்குத்தான் திருமணம் செய்து தரவேண்டும்.. “ என்று கோபமாக கூற தேவநாதன் அமைதியாக அவன் சொல்லுவதை கேட்டு கொண்டார்..

தன்னை மீறி தாத்தா எதுவும் செய்துவிட மாட்டார் என்ற நம்பிக்கையில் நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டான் அதிரதன்..

ரு வாரம் கழித்து திரும்பி வர, ஜமீனே விழாக்கோலம் பூண்டிருந்தது..

மலர் மாலைகளும் மாவிலை தோரணங்களும் ஜமீனில் ஏதோ விசேசம் என்று  பறைசாற்ற திரும்பி வந்த அதிரனுக்கு திக்கென்றது..

“தனக்கு கூட சொல்லாமல் அப்படி என்ன நடக்கிறது இங்கே.. “ என்று  யோசித்தவாறு உள்ளே வந்தவனுக்கு அவன் கேள்வி பட்ட விசயம் தலையில் இடி விழுந்ததை போல இருந்தது..

அவள் தங்கை அமுதினிக்கு விடிந்தால் கல்யாணம்.. மாப்பிள்ளை அந்த மஞ்ச காட்டுகாரன் என்று தெரிய கொதித்து போனான் அதிரதன்..

கோபமாக தன் அறைக்கு சென்று  பையை தூக்கி எறிந்து விட்டு நிமிர, அமுதினி ஓடி வந்து அவனை கட்டி கொண்டு அவன் மார்பில் புதைந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள்..

“அண்ணா... தாத்தா... நம்மளை ஏமாத்திட்டார்... என் ரஞ்சனை என்னமோ பண்ணிட்டார்... காலையில் எனக்கு கல்யாணமாம் ... ப்ளீஸ் ணா.. நீயாவது இதை  தடுத்து நிறுத்து.. என் ரஞ்சன் இல்லாமல் என்னால் வாழ முடியாது ப்ளீஸ் ணா.. நீ மட்டும்தான் தாத்தாவை எதிர்த்து கேட்க முடியும்..

எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்து.. “ என்று  கண்ணீர் விட்டு கதறினாள்..

“அழாத டா அம்மு.. அண்ணன் நான் இருக்கேன் இல்ல.. கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது.. சரி ரஞ்சன் போன் நம்பர் இருக்கா? “ என்றான்.

அவள் அவசரமாக சொல்ல, அதை தன் அலைபேசியில் டைப் பண்ணி அழைக்க ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது..

“நானும் நேற்றிலிருந்து ட்ரை பண்ணிகிட்டிருக்கேன் ணா. ஸ்விட்ச் ஆப் னே வருது.. ஒருவேளை தாத்தா அவரை ஏதோ பண்ணிட்டார் போல.. “ என்று குலுங்கி அழுதாள்..

அவள் முதுகை ஆதரவுடன் வருடி கொடுத்தவன்

“அழத டா. தாத்தா அந்த அளவுக்கெல்லாம் போக மாட்டார்.. நான் பார்த்துக்கறேன்..உனக்கு நான் இருக்கேன்.. உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது... “ என்று தன் தங்கையை தேற்றியவன் புயலென தன் தாத்தாவின் அறையை நோக்கி சென்றான்...

தன் அலுவலக அறையில் அமர்ந்து திருமணத்திற்கு வந்திருந்த மற்றவர்களுடன் சிரித்து பேசி கொண்டிருந்த தேவநாதன் புயலென வந்து நின்ற தன் பேரனை கண்டதும்

“வாப்பா ரதன்.. கரெக்ட் ஆ வந்திட்ட... அப்புறம் இவங்க எல்லாம் உனக்கு முன்னரே தெரியுமே.. “ என்று  அங்கிருந்தவர்களை அறுமுக படுத்தி வைக்க, அவர்கள் முன்னால் அவன் தாத்தாவை எதிர்த்து கேட்க நா எழவில்லை..

அவர்களை பார்த்து கரம் குவித்து புன்னகைத்தவன் ஏதோ சொல்ல வர,

“ரதன்.. நீ போய் இவர்கள் குடிக்க ஏதாவது கொண்டு வர சொல். அப்படியே திருமணத்திற்கு மணமேடை அலங்கரம் எல்லாம் சரியா இருக்கா என்று பார். உன் அப்பன் அவ்வளவா கண்டுக்க மாட்டான்.. நீ போய் பார்.. “ என்று நாசுக்காக அவனை வெளியேற்றி விட்டார்...

அவனோ பல்லை கடித்து கொண்டு மற்றவர்கள் அறியாமல் அவரை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவன் விருட்டென வெளியேறி சென்று அவர் சொன்ன ஏற்பாட்டை செய்து முடித்தவன் மீண்டும் அறைக்கு வர, அவர்கள் இன்னுமே உட்கார்ந்து இருந்தார்கள்..

வேற வழி இல்லாமல் தன் அறைக்கு சென்றவன் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்றான் கீழ இருந்த அவன் தாத்தாவின் அலுவலக  அறையை பார்த்த வண்ணம்

ஒரு வழியாக ஒன்பது மணி  அளவில் அவர்கள் எழுந்து செல்ல, புயலென உள்ளே நுழைந்தான்.... தாத்தா.. என்று  கர்ஜித்தவாறு...அவன் வருவான் என்று எதிர்பார்த்திருந்த தேவநாதன் கூலாக  

“செத்த இரு ரதன்.. இவர்களை எல்லாம் அனுப்பி வைத்து விட்டு வருகிறேன்.. “  என்று  உடனே வெளியில் சென்று விட்டார்...

அவன் அங்கேயே நின்று கொண்டிருக்க சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவர்

“ஹ்ம்ம் இப்ப சொல்லுடா.. இத்தனை நாளா  இல்லாத திருநாளா இன்னைக்கு என்னை தாத்தானு சொல்லி இருக்க.. என்னப்பா விசயம்..?  “ என்றார் சிரித்தவாறு..

“அம்மு காதல் விசயத்தை பத்திதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே.. அவ மனசுக்கு புடிச்சவனைத்தான் கட்டி வைக்கணும்னு.. இப்ப எதுக்கு இப்படி திடீர்னு இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணினிிங்க..? . உடனே நிறுத்துங்க.. “ என்று எரிமலையாக சீறினான் அதிரதன்.

“ஹ்ம்ம்ம் நம்ம குடும்ப ஜோசியர் அம்முவுக்கு இந்த முகூர்த்தத்துக்குள்ள கல்யாணதத்த முடிக்க சொல்லிட்டார்.. அவளுக்கு பெரிய கண்டம் இருக்காம். இத விட்டா அவளுக்கு பிறகு கல்யாண ப்ராப்தம் இல்லையாம்.. என்னை என்ன செய்ய சொல்ற? “ என்றார் பாவமாக..

“அப்பனா அவ விரும்பற பையனுக்கே கட்டி கொடுக்க வேண்டியதுதான? “ என்று எகிறினான்...

“ஹ்ம்ம்ம் கொடுத்துடலாம். நீ சொல்ற மாதிரியே கட்டி கொடுத்துடலாம்... ஆனால் அதுக்கு அந்த பையன் இருக்கோணும் இல்லையா...?  நீயே போய் அவனை கூட்டிகிட்டு வா..

நாளைக்கு அவனையே உட்கார வச்சு தாலி கட்ட வச்சுடலாம்.. நானும் அந்த பயலுக்கு போன் போட்டேன்.. அவன் தான் போன் ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சுட்டான்.. அவன் வீட்டு அட்ரஸ் ஆவது தெரிஞ்சுதா உன் அருமை தொங்கச்சிக்கு..

அதுவும் தெரியலை.. யார் என்னனே தெரியாதவன காதலிக்கிறா உன் தொங்கச்சி.. நீயும் அதுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு வர.. சேம் சேம்.. “ என்றார் நக்கலாக சிரித்தவாறு..

“ஷிட்.. இப்ப அவன கண்டு பிடிக்க முடியலைனா இன்னும் இரண்டு நாள் ல தேடி கண்டு பிடிச்சிடலாம் தாத்தா.. அதுக்குள்ள எதுக்கு இப்படி அவரபடணும்? அம்மு மனச எதுக்கு காய படுத்தனும்.. ப்ளீஸ் தாத்தா... இந்த கல்யாணத்தை நிறுத்துங்க... “ என்றான் அடிபட்ட பாவத்துடன் கெஞ்சலுடன்..

“தனக்காக இறங்கி வந்து தாத்தாவிடம் பேசாதவன் தன் தங்கைக்காக இறங்கி வந்து இப்படி கெஞ்சி கொண்டிருக்கிறானே... அவ்வளவு பாசமா அவன் தங்கை மேல... நல்ல விசயம்தான்... “ என்று மனதுக்குள் மெச்சி கொண்டவர் மீண்டும் ஒரு முறை தொண்டையை செருமி குரலை சரி செய்து கொண்டு அவனை நேராக பார்த்தவர்

“ரதன்...என் பேத்தி கல்யாண விசயத்துல நான் சொன்னா சொன்னதுதான்.. நாளைக்கு காலையில் என் பேத்தி கல்யாணம் நடக்கோணும்.. வேணும்னா உனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன்..

அந்த பயல நீ காலைக்குள்ள  தேடி கண்டுபிடிச்சு கூட்டிகிட்டு வந்திட்டா அவனுக்கே  கட்டி வச்சிடறேன்... அனால் அப்படி அவன் வரலைனா நீயே உன் தொங்கச்சிய கூட்டிகிட்டு வந்து மணமேடையில் உட்கார வைக்கோணும்.. என்ன சம்மதமா? “ என்றார் இடுங்கிய கண்களுடன்..

அதை கேட்டவன் அதிர்ந்து போனாலும் ஒரு வாய்ப்பாக இந்த ஆப்சன் ஆவது இருக்கே.. அவன எப்படியும் தேடி கண்டுபிடித்து காலையில் கொண்டு வந்து நிறுத்திடணும் என்று திட்டமிட்டவன்

“அவ்வளவு தானே.. நான் எப்படியாவது தேடி கண்டுபுடிச்சிடறேன்..உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி என் தங்கச்சி முகத்துல சந்தோஷத்தை வரவழைக்கிறேன்... “ என்று உறுமியவவன் விருட்டென வெளியேறி தன் தங்கையிடம் ஓடினான்...

அவளிடம்  நடந்ததை சொல்லி அந்த ரஞ்சனை பற்றி விசாரிக்க அவளோ திருதிருவென்று முழித்தாள்..

அவன் போன் நம்பரை தவிர வேற எதுவும் அவனை பற்றி தெரியவில்லை அவளுக்கு.. அவன் தாத்தா சொன்னதேதான்..

“ஏன் டி லூசு... இப்படித்தான் ஊர் அட்ரஸ் தெரியாத ஒருத்தனை காதலிப்பியா? இப்ப எங்க போய் தேடறது..?  இரண்டு நாள் முன்னாடியே தெரிந்து  இருந்தாலாவது எப்படியாவது கண்டுபுடிச்சிருக்கலாம்.. சே.. “ என்று கோபத்தில் காலை தரையில் உதைத்தவன் உடனே தன் நண்பர்களை அழைத்து தேட சொன்னான்..

அந்த மொபைல் நம்பரை  வைத்து முகவரியை கண்டுபிடித்து அங்கு போய் பார்த்தால் வீடு பூட்டி இருந்தது.. அக்கம் பக்கம் விசாரிக்க யாருக்கும் தெரியவில்லை..

வெறும் போட்டோவை வைத்து கொண்டு எங்க போய் தேடுவது... அவன் வேலை செய்யும் இடத்தை பற்றி கூட தெரிந்திருக்கவில்லை அமுதினிக்கு.. அதை நினைத்து கோபம் வந்தாலும் தன் தங்கையின் வெகுளித்தனத்தை எண்ணி உள்ளுக்குள் நொந்து கொண்டான்..

முயற்சியை கை விடாமல் எல்லா பக்கமும் தேட, எல்லா பக்கமும் தோழ்வியில் முடிய அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் தளர்ந்து போனான் அதிரதன்..

அதற்குள் இரவு முடிந்து பகல் எழும்ப ஆரம்பித்திருக்க, உடனே ஜமீனுக்கு திரும்ப ஓடி வந்தான்..

அங்கு திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன...ஜமீன் வழக்கப்படி ஹாலின் நடுவில் பெரிய மேடை அமைத்து திருமணம் வீட்டிலயே நடத்த ஏற்பாடு செய்திருந்தார் தேவநாதன்.. ரிசப்ஷன் மட்டும் கோயம்புத்தூரில் பெரிய மண்டபத்தில் வைத்து இருந்தார்  

அதிகாலையில் மாப்பிள்ளைக்கான சடங்குகள் ஆரம்பித்து விட, அமுதினியோ தன் அண்ணன் எப்படியும் ரஞ்சனை கூட்டி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் அவளும் மணமகள் அலங்காரத்தில் தயாராக இருக்க தளர்ந்து போய் வந்தவனை கண்டதும் திக் என்றது அமுதினிக்கு..

அண்ணா என்று அவன் அருகில் ஓடிச்சென்று அவனை கட்டி கொண்டு அவள் அழ ஆரம்பிக்க, மேக்கப் கலைந்து விடும் என்று  அழகு நிலைய பெண்கள் கெஞ்ச. அழுகையை அடக்கி கொண்டாள்..

தன் தங்கையின் கண்ணில் வழிந்த நீரை கண்டு மனம் தாங்காமல் மீண்டும் அவன் தாத்தாவிடம் சென்று இந்த திருமணத்தை நிறுத்த சொல்லி கெஞ்ச, அவரோ எதுவும் பேசாமல் எழுந்து அமுதினியின் அறைக்கு வந்தார்.. அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு பொதுவாக இருவரையும் பார்த்தவர்

“இங்க பாருங்க...இந்த ஜமீனுக்குனு ஒரு கௌரவம் இருக்கு... ரதன்... நீ கேட்டதால் தான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்.. ஆனால் உன்னால அதை பயன்படுத்திக்க முடியல... உங்க உடம்புல ஓடறது இந்த ஜமீன் ரத்தம்னா இந்த தாத்தா சொல்றது தட்டாமல் கேட்பிங்க..

இந்த தாத்தா என்னைக்கும் நல்லதுதான் செய்வார் னு நம்பிக்கை இருந்தால் மணமேடையில்  போய் உட்கார் அம்மு... “ என்று  தீர்க்கமாக தன் பேத்தியை பார்க்க, அதில் அப்படியே அடங்கி போனவள் மறுபேச்சு பேசாமல் மணமேடையில் சென்று அமர்ந்தாள்..

அதிரதன் அவள் கை பிடித்து போக வேண்டாம் என்று தடுக்க, அவளோ திரும்பி தன் தாத்தாவின் முகம் பார்க்க, அவரோ எங்கோ பார்த்து கொண்டிருக்க, அதற்கு மேல் மந்திரத்துக்கு கட்டுண்டவளை போல தன் அண்ணன் கையை விலக்கிவிட்டு நேராக மணமேடைக்கு சென்று அமர்ந்தாள்...  

அடுத்த அரை மணி நேரத்தில் அவள் கழுத்தில் தாலி ஏறி இருந்தது.. தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று தவிப்புடன் உள்ளுக்குள் பெரும் வலி வேதனையுடன் தன் தங்கையின் திருமணத்தை ஓரமாக நின்று பார்த்து கொண்டிருக்க, அவன் தங்கையின் கண்ணீருடனே அந்த திருமணம் நடந்தேறியது...

அதற்கு பிறகு மணமககள் மாப்பிள்ளை வீட்டிற்கு கிளம்பி சென்றிருக்க, அவன் அறையில்  தளர்ந்து போய் அமர்ந்து இருந்தான் அதிரதன்..

அப்பொழுது ஒரு சிறுமி ஒரு மொபைலை எடுத்து வந்து அதிரதனிடம் கொடுத்து விட்டு ஓடி விட்டாள்.. அது அமுதினி உடையது..திருமண கலேபரத்தில் அவள் அலைபேசியை கூட எடுக்காமல் சென்றிருந்தாள்..  

அப்பொழுது அந்த அலைபேசி ஒலித்து கொண்டிருக்க, திரையில் புது எண்ணாக ஒளிர்ந்து கொண்டு இருக்க யோசனையுடன் அந்த அழைப்பை ஏற்று காதில் வைக்க அடுத்த நொடி

“அம்மு.. நான் ரஞ்சன் பேசறேன்.. உனக்கு ஒன்னும் இல்லையே.. உன் தாத்தா இப்படி பண்ணுவார்னு நான் நினைக்கவே இல்லை. இரண்டு நாள் முன்பு உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா சொல்லி என்னை வர சொல்லிட்டு என்னை புடிச்சு அடச்சி வச்சிட்டார்...

நேற்று முழுவதும் மயக்கத்திலயே இருந்திருக்கேன்..இப்பதான் நினைவு வந்தது..

அவர் எது சொன்னாலும் நீ கேட்டுடாத.. நீ எனக்கானவள்.. நான் சீக்கிரம் தப்பிச்சு வந்து உன்னை கூட்டிகிட்டு போய்டறேன்..

உன் தாத்தாவுக்கு காதல் னா புடிக்காதாம்.. என் பேத்திய எப்படி நீ காதலிக்கலாம்? .. என் கௌரவம் எல்லாம் போச்சு..   என்று ஏதேதோ பேசினார். ப்ளீஸ் அம்மு..அவர் பேச்சை கேட்டு நீ மனசு மாறிடாத... நீ என்னுடன் வந்திடு.. “ என்று இன்னும் ஏதேதோ உருகி பேச, அதை எல்லாம் கேட்டு இடிந்து போனான் அதிரதன்..

“அவன் தாத்தாவா இப்படி? கீழ்தரமான காரியத்தை பண்ணி இருக்கிறார். அவரே புடிச்சு அடைச்சு வச்சுட்டு என்னையும் தேட சொல்லி பெரிய மனுசனை போல காட்டிகிட்டாரே... நல்லா சதி பண்ணிதான் அம்மு கல்யாணத்தை நடத்தி இருக்கிறார்... “ என்று உள்ளுக்குள் சீறியவன் அடுத்த நொடி

“தாத்தா.................” என்று கர்ஜித்தவாறு அவர் அலுவலக அறைக்கு புயலென செல்ல அதே நேரம் மற்றொரு நண்பருடன் தேவநாதன் சிரித்த முகமாக பேசி கொண்டிருந்தார்.

“இந்த காலத்து பசங்களை நம்பவே முடியலப்பா.. எல்லாம் காதல் கத்திரிக்காய்னு பெத்தவங்களுக்கு தெரியாம யாரையாவது இழுத்துகிட்டு ஓடிடறாங்க..

நல்ல வேளை என் பேத்தி அப்படி எந்த ஒரு தப்பான வழிக்கும் போகலை.. அப்படி எதுவும் அவ தடம் மாறிடக்கூடாதுனு தான்  படிப்ப முடிச்சதும் நம்மளுக்கு தகுந்த மாப்பிள்ளையா பார்த்து கல்யாணத்த முடிச்சிட்டேன்..

இனிமேல் நான் நிம்மதியா இருக்கலாம்.. “ என்று சொல்லி முடிக்கும் முன்னே  மீண்டும் புயலென அங்கு சென்று நின்றான் அதிரதன்..

“தாத்தா.. நீங்க இப்படி பண்ணுவீங்கனு நான் நினைக்கவே இல்லை..என்னை நம்ப வச்சு கழுத்த அறுத்திட்டிங்க இல்ல.. உங்க கௌரவத்துக்காக என் தங்கச்சி மனசை கொன்னுட்டிங்க இல்ல..

வெல்... எந்த காதல் உங்களுக்கு பிடிக்காதோ அதே காதலைத்தான் நான் பண்ணப்போறேன்.. உங்கள் கௌரவத்துக்கு பங்கம் வர்ற மாதிரி ஒருத்தியைத்தான் லவ் பண்ணப்போறேன்... உங்களுக்கு பிடிக்காத ஒருத்தியை இந்த ஜமீனுக்கு மருமகளாக்கி காட்டறேன்..

இனிமேல் உங்க மூஞ்சியிலயே முழிக்க மாட்டேன்.. உங்க காசு, ஜமீன் வாரிசு, ஜமீன் கௌரவம் எதுவும் இனிமேல் எனக்கு வேண்டாம்.. நான் சொந்தமாக என் கால் ல நின்னு ஜெயிச்சு காட்டறேன்..

நீங்க பண்ணின தப்புக்கு தண்டனை அனுபவிப்பிங்க.. அனுபவிக்க வைப்பான் இந்த அதிரதன்.... குட் பை.. “ என்று கத்திவிட்டு வெறும் கையோடு வீட்டை விட்டு வெளியேறினான்...

அவன் அப்பா அம்மா எவ்வளவோ சொல்லி தடுத்தும் திரும்பி கூட பார்க்கவில்லை.. இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த பாரிஜாதத்திற்கு மனம் குளிர்ந்து போனது... எப்படியோ அந்த தேவநாதன் முகத்தில் கரியை பூசியாச்சு..

அவர் செல்ல பேரனை பிரிச்சாச்சு.. இனிமேல் எப்படியாவது தன் பேரனிடம் நயமாக பேசி தன் பேத்தி யாமினியை எப்படியாவது இந்த ஜமீன் மருமகளாக்கிடணும் என்று அவரசமாக திட்டமிட்டார்...  

தேவநாதனோ எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறி செல்லும் தன் செல்ல பேரனையே  வெறித்து பார்த்து கொண்டிருந்தார் தேவநாதன்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!