என் மடியில் பூத்த மலரே-1






அத்தியாயம்-1




“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்…”



என்ற ஆண்டாள் திருப்பாவை இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது அந்த கிராமத்தில்.

அது ஒரு காவிரி நதிக்கரையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம். காவிரி நீர் வாய்க்கால் வழியாக நேரடியாக அந்த ஊருக்கு வரும். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மின்னும் நெற்பயிர்களும், குலை குலையாக காய்த்து குழுங்கும் வாழை தோட்டங்களும், சாலையின் இரு புறமும் நன்கு உயர்ந்த தென்னை மரங்கலும் சூழ்ந்து ரம்யமாக இருக்கும் அந்த கிராமம் ஒரு காலத்தில்....

இன்று காவிரியில் நீர்வரத்து இல்லாததால் விவசாயமே தேய்ந்து போனது. எங்கயாவது ஒரு சில இடங்களில் மட்டும் சிலர் ஆழ்துளை கிணற்றின் மூலம் கொஞ்சமாக விவசாயம் செய்து வந்தனர்.. பாதி பேர் வேலை தேடி நகரத்திற்கு இடம் பெயர ஆரம்பித்திருந்தனர்..

அந்த அழகிய கிராமத்தில் இன்னொரு சிறப்பு அங்கு உள்ள கோயில்கள். எல்லா தெய்வங்களுக்கும் அங்கு கோயில்கள் உண்டு. அதனாலயே ஏதாவது ஒரு விஷேசம் எப்பவும் இருந்து கொண்டே இருக்கும்.

அதுவும் மார்கழி மாதம் என்றால் தனி சிறப்பு. மாதம் முழுவதும் அதி காலையில் அங்கு உள்ள பெருமால் கோயிலில் இருந்து திருப்பாவை ஒலிக்கும்..

மக்கள் அந்த இனிமையில் மயங்கி தங்கள் நாளை ஊற்சாகமாக தொடங்குவர்...

அன்றும் அதே போல் திருப்பாவையை ரசித்துக்கொண்டே தங்கள் அன்றாட பணிகளை ஆரம்பித்தனர்..

ஆனால் அந்த நாள் ஏன் விடிந்தது, இந்த இரவு இன்னும் நீண்டு இருக்க கூடாதா என்று அந்த அழகான கிராமத்தில் ஒரு உள்ளம் அந்த நாளை ஆரம்பித்து வைத்த ஆதவனை திட்டி கொண்டிருந்தது. அவள் தான் நம் கதையின் நாயகி பாரதி.

பாரதி 23 வயது நிரம்பிய பருவமங்கை. அந்த கிராமத்தின் எழிலரசியாக வளய வருபவள். கிராமத்துக்கே உரித்தான கள்ளம் கபடமற்ற முகம். அகத்தில் இருப்பதுதான் முகத்தில் தெரியும் என்பதை போல கள்ளம் கபடமற்ற, யாருக்கும் உதவும் அன்பான குணம் கொண்டவள். அதனாலயே பாரதி என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அவளை பிடிக்கும்.

அதிலும் இளைஞர்களுக்கு இன்னும் ஒரு படி மேல் பிடிக்கும்.

என்னதான் எல்லாரிடமும் இயல்பாக பழகினாலும் தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களையும் , அத்து மீற நினைப்பவர்களையும் தள்ளியே நிறுத்தி வைத்து விடுவாள். அதனால் அந்த கிராமத்தில் சுதந்திரமாக சுத்தி வரமுடிந்தது.

ஆனால் இன்று அத்தனையும் இழக்க வேண்டுமே!! . அதிலும் இந்த அதிகாலையில் ஒலிக்கும் திருப்பாவையும் , கிராமத்து கோயில்களில் ஒலிக்கும் மணியோசை, அவள் தினமும் கேட்டு ரசிக்கும் அதிகாலை குயிலிசை, பக்கத்து வீட்டு சேவலின் கூவல் என்று அத்தனையும் இழக்க வேண்டுமே என்று மனம் வாடியது.

“ஒரு வேளை நான் எடுத்த இந்த முடிவு தவறோ “ என்று ஆயிரமாவது முறையாக அவள் மனம் முரண்டியது. பாதி மனம் நீ எடுத்தது சரியான முடிவு என்றும் மீதி பாதி மனமோ இது தவறான முடிவு என்றும் பட்டிமன்றம் நடத்தியது. ஆனால் முடிவுதான் கிடைக்கவில்லை.

இதே போல்தான் கடந்த இரண்டு வாரமாக திண்டாடினாலும் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி இந்த கேள்வி எழுந்து அவளை இம்சித்தது. யாரிடமும் ஆலோசனையும் கேட்க முடியவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று அப்போதைக்கு விட்டுவிட்டாலும் மீண்டும் அதே கேள்வி எழுந்து குழப்பும்..

அதுவும் இன்று தன் முடிவை செயல் படுத்த வேண்டிய முதல் நாள். அதை நினைக்கும் பொழுதே பாரதியின் உள்ளம் துவண்டது. ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர்கொள்ளும் பாரதிக்கு இன்று இந்த நாள் ஏன் வந்தது என்று இருந்தது...

பக்கத்து வீட்டில் வாசல் தெளிக்கும் சத்தம் கேட்கவும், பாரதி தன் கவலைகளை பின்னுக்கு தள்ளி அந்த நாளை துவக்க ஆயத்தமானாள்.

அருகில் அவளின் செல்ல தங்கை இந்திரா இவளை கட்டிகொண்டு தூங்கிகொண்டிருந்தாள். இனிமேல் யாரை கட்டிகொள்வாள். நானும்தான் இவள் அருகில் இல்லாமல் எப்படி இருக்க போகிறேன் என்று நினைத்து கொண்டே தங்கையை விலக்கி மெல்ல அவளின் கன்னத்தில் முத்தமிட்டு மெதுவாக எழுந்தாள்.

அவள் கண்கள் தானாக அந்த பக்கம் உறங்கி கொண்டிருந்த அவளின் அன்பு தம்பியை நாடியது. 16 வயதில் அடி எடுத்த வைத்திருந்த போதும் இன்னும் குழந்தைபோல வாயில் விரலை வைத்து தூங்கி கொண்டிருந்தவனை பார்க்கையில் சிரிப்பு வந்தது.

தங்களுக்குள் செல்ல சண்டை வரும்பொழுது தான் தான் இந்த வீட்டு ஆம்பளை. அப்பாக்கு அடுத்து அனைவரும் அவன் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும் என்று மிரட்டுவான். அந்த ஆம்பளை இன்னும் குழந்தையாகவே இருக்கிறானே என்று சிரித்துக் கொண்டாள்.

ஒருவேளை எனக்கு பதிலாக இவன் முதலில் பிறந்து இருந்தால் இந்த துன்பம் தனக்கு வந்திருக்காதோ என்று நினைத்தாள். அப்படி என்றாலும் அவனும் கஷ்ட பட்டுதான் ஆகவேண்டும். என்ன தன் கஷ்டத்தை விட அவனுக்கு வேறு மாதிரியான துன்பமாக அமைந்திருக்கும். எப்படியோ யாரோ ஒருத்தர் சிலுவையை சுமந்தாகனும். அது தானாகவே இருக்கட்டும் என்று தேற்றி கொண்டாள்.

பின் மணியை பார்த்தவள், நேரம் ஆகவும் வேகமாக காலை கடன்களை முடித்து, பின்கட்டுக்கு சென்று சாணம் எடுத்து, வாசல் தெளித்து கோலம் போட்டு நடுவில் கொல்லையில் இருந்து கொண்டு வந்த பறங்கி பூவை வைத்து அழகு பார்த்த பொழுது, எப்பொழுதும் வரும் அந்த உற்சாகம் இல்லாமல் மனம் கனத்து இருந்தது. இனிமேல் இது மாதிரி வைத்து அழகு பார்கக முடியாதே என்று ஏங்கி நின்றாள்.

“யாரு பாரதியா. ஏன் கண்ணு, இன்னைக்கும் சீக்கிரம் எழுந்திட்டியா? இன்னைக்கு ஒரு நாளாவது நல்லா தூங்க வேண்டியதுதானே . இந்த சுத்தமான காற்று இனிமேல் உனக்கு கிடைக்காதே. உன்னை சீக்கிரம் எழுப்பி விட்டுட்டு என்ன பண்றா உன் ஆத்தா“ என்றாள் அவளின் பாட்டி காமாட்சி

“இருக்கட்டும் ஆயா. இன்னைக்கு மட்டும் தான் இதெல்லாம் செய்ய முடியும். இனிமேல் அம்மாதான தினமும் செய்ய போறாங்க”

ஹ்ம்ம் உன் அம்மாவ விட்டு கொடுக்க மாட்டியே. சரி எல்லாம் எடுத்து வச்சாச்சா ? எதயாவது மறந்து வச்சுட்டு போயிடாத”

“எல்லாம் எடுத்து வச்சுட்டேன் ஆயா. சரி நான் குளிச்சுட்டு சீக்கிரம் எல்லாம் கோயிலுக்கு போய்ட்டு வந்திடறேன்”. என்று உள்ளே ஓடினாள்.

“இவ இல்லாம இந்த வீடு எப்படி இருக்க போகுதோ . ஆத்தா, நீ தான் என் பேத்திய பார்த்துக்கனும் “

உள்ளே சென்ற பாரதி தலைக்கு குளித்து முடித்து அவளின் நீண்ட கூந்தலின் இரண்டு பக்கமும் சிறு முடி எடுத்து நடுவில் முடிச்சிட்டு, கீழ ஈரம் சொட்டாமல் இருக்க நுனியில் முடிச்சிட்டிருந்தாள். அவளுக்கு பிடித்த ஊதா கலரில் பாவாடை தாவணி அணிந்து கையில் அவளுக்கு பிடித்த கண்ணாடி வளையல்கள் குலுங்கியது.

அதை ரசித்து கொண்டே சமையலறையில் நுழைந்து அங்கு சமையல் செய்து கொண்டிருந்த அம்மா லட்சுமியின் கழுத்தை கட்டிகொண்டள்

“என்ன லட்சு. இன்னுமா காபி ரெடியாகலை. அங்க உன் மாமியார் இன்னும் காபி வரலைனு கத்திகிட்டு இருக்காங்க. நீ மசமசன்னு நின்னுகிட்டு இருக்க ?

மாமியார்ங்கர பயமே இல்லை உனக்கு”

“அதான் மாமியார்க்கு பதிலா நீ இருக்கியே என்னை மிரட்ட. இந்தா காபி. ஆயாவுக்கு அப்பவே குடுத்திட்டேன். என்று காபியை கொடுத்தவர் பாரதியின் தலையில் இருந்து வழிந்த நீரை கண்டு,

“என்ன பாப்பா. எத்தனை தடவை சொல்றது. தலைக்கு குளிச்சா தலையை நல்லா துவட்டு. இல்லைனா தலைல நீர் கோத்துக்கும் னு. பார் தண்ணீ சொட்டிட்டு இருக்கு” என்று செல்லமாக திட்டி கொண்டே துண்டை எடுத்து தலையை நல்லா துவட்டி விட்டார்.

பாரதியின் கண்கள் கரித்தது. இனிமேல் யார் இப்படி துவட்டி விடுவார்.

அதே நேரம் லட்சுமிக்கும் அதே உணர்வு தோண்றியதோ, அவர் கண்களும் கலங்கியது.

“பாப்பா நீ அங்க போய் சமாளிச்சுப்பியா” – என்று குரல் தழுதழுத்து.

பாரதி உடனே தன்னை சமாளித்துகொண்டு,

என்ன மா. நான் என்ன சின்ன குழந்தையா. நான் அதெல்லாம் சமாளிச்சுடுவேன். நீ கண்ணை கசக்காத. பார்க்க நல்லாவே இல்லை.

அதான் அப்பா உன்னை எப்பவும் கண் கலங்காம பார்த்துக்கனும்னு சொல்ராரா. “ என்று கண்ணடித்தாள்.

“போடி.” என்று புன்னகைத்தார் லட்சுமி

“சரி எங்க உன் சரி பாதியை காணோம். எங்க ஒலிச்சு வச்சிருக்க”

“நான் எங்க ஒலிச்சு வக்க. அவர்தான் உனக்கு பிடிக்கும்னு மீன் வாங்க சீக்கிரம் கிளம்பி ஆற்றங்கரைக்கு போனாங்க. இன்னும் வரல.”

“எதுக்குமா இதெல்லாம். அவரே உடம்பு முடியாம இருக்கார். இப்படி எதுக்கு அலையனும்”

“என்ன கேட்டா? யார் என் பேச்சை கேட்கிறா”

“சரி வரட்டும் நானே கேட்குறேன். சரிமா நான் கோயிலுக்கு போய்ட்டு வர்ரேன். “

“ஏண்டி, இந்த தாவனி ய போடாத. சேலைய கட்டுனு எத்தனை தரம் சொல்றது. 23 வயசு ஆகுது. இன்னும் இப்படி சுத்திகிட்டிருந்தா என்ன சொல்லுவாங்க

“எனக்கு பிடிச்சதுமா. அதுவும் இல்லாம அங்க போய் இதெல்லாம் போட முடியுமா? அதான் என் ஆசைக்காக இன்னைக்கு ஒரு நாள் மட்டும்”

“சரி சரி சீக்கிரம் போய்ட்டு வந்திடு. அவங்களுக்கு அத பண்ணேன் இவங்களுக்கு இத பண்ணேன் னு தாமதமா வராத. அப்புறம் கிளம்ப லேட் ஆகிடும். அப்புறம் தாவணிய இழுத்து சொருகிக்கோ? சைக்கிள் ல மாட்டிட போகுது”

“லட்சு, இதையே தான் நான் சைக்கிள் ஓட்ட பழகின நாளிலிருந்து சொல்ற. கொஞ்சம் மாத்தி வேர ஏதாவது புதுசா சொல்லு “

“அப்படியும் கீழ விழுந்திட்டு வரல? “

“ஹி ஹி அது யானைக்கும் அடி சறுக்கும் அப்படீங்கற மாதிரி ஒரு நாள் விழுந்துட்டேன். அதுக்காக எப்பவும் அப்படியே இருப்பேனா?

“சரி மா சீக்கிரம் வந்திடறேன் என்று தன் சைக்கிளை எடுத்து பறந்தாள்.

பாரதிக்கு அந்த அதிகாலை சைக்கிள் பயணம் மிகவும் பிடிக்கும். கிராமத்து தெருக்களில் போகும் பொழுது வீசும் இதமான காற்றும், ஒவ்வொரு வீட்டு வாசலில் பூத்திருக்கும் விதவிதமான அழகழகான கோலங்களும் அவளை மயக்கும்.

அதை எல்லாம் விட அந்த ஊர் கோயில்கள் அத்தனையும் அவ்வளவு அழகு. எல்லா கோயில்களுக்கும் தினமும் ஒரு முறை சென்று விடுவாள். அதை விட அவளின் காதலனை காணவாவது அவள் இந்த சைக்கிள் பயணத்தை தினமும் தொடருவாள்.

பொழுது நன்றாக விடிந்து நல்ல வெளிச்சம் பரவ ஆரம்பித்தது. பாரதிக்கு அவளின் காதலனின் நினைவு வந்தது.

“அச்சோ, லேட் ஆயிருச்சே. ஆதி காத்திருக்க மாட்டானே.

சே , எப்படி இவனை மறந்தேன். என்னுடைய பிரச்சனையில் உழன்று கொண்டிருப்பதால் இவனை மறந்தேனோ.

இவனை இனிமேல் பார்க்க முடியாதே. இவனை பார்க்காமல் எப்படி இருப்பேன். அட்லீஸ்ட் கடைசியா இன்னைக்காவது பார்த்துடனும். அவன் கிட்ட எல்லாம் சொல்லனும் என்று தன் சைக்கிளை வேகமாக மிதித்தாள் பாரதி...


🌺🌺 🌺 மலரும் 🌺 🌺 🌺

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!