என் மடியில் பூத்த மலரே-10



அத்தியாயம்-10 

தான் நினைத்த மாதிரியே அந்த முருகன் உத்தரவு கொடுத்து விட்டதால் ரொம்பவும் மகிழ்து போனார் ஜானகி..

உடனே போனை கையில் எடுத்து சுசிலாவை அழைத்தார்...

ஜானகியின் எண்ணை பார்த்ததும் அதிர்ந்து போனார்..

போனை அவசரமாக எடுத்து

“சொல்லு ஜானு?? என்னாச்சு?? “ என்று வேகமாக வினவினார்...

“ஹே!! பயப்படாத சுசி.. நான் வீட்டுக்கு வந்திட்டேன்.. சும்மாதான் போன் பண்ணினேன் “ என்று சிரித்தார்....

“தாயே!! இனிமேல் சும்மா எல்லாம் வேலை நேரத்துல போன் பண்ணாத... உன் போனை பார்த்தாலே எனக்கு பிபி ஏறுது உனக்கு என்ன ஆச்சோனு “ என்று முறைத்தார்.

அதை கேட்டதும் நெகிழ்ந்து போனார்.. “இந்த சுசிலாவுக்கு தான் என் மேல எவ்வளவு பாசம்” என்று

“ஹே சொல்லுடி... போன் பண்ணிட்டு தூங்கிட்டியா” என்றதும் நினைவுலகத்திற்கு வந்தவர்...

“சுசி.. நாம ஒரு பொண்ணை தேடிகிட்டு இருந்தோம் இல்லை.. அந்த பொண்ணு கிடைச்சாச்சு” என்று உற்சாகமாக சொன்னார்..

“வாவ்.. சூப்பர்... யாரு டீ அது?? “

“எல்லாம் நமக்கு தெரிஞ்ச பொண்ணுதான்... “

“ஹ்ம்ம்ம் எனக்கு தெரிஞ்ச பொண்ணுனு யாரும் இல்லையே!! ரொம்ப பீடிகை போடாமல் யாருனு சொல்லு”

“ஹ்ம்ம்ம்ம் அது வந்து... நம்ம பாரதி தான் “

“What???? “ என்று போனை தவற விட்டார் சுசிலா...

பின் மீண்டும் அவசர அவசரமாக போனை எடுத்து

“என்ன உளறுர ஜானகி” என்றார் கோபமாக..

“நான் ஒன்னும் உளறலை சுசி... நல்லா யோசிச்சு தான் சொல்றேன்.. நான் சொன்ன எல்லா குணங்களும் பாரதி கிட்ட இருக்கு... நீ தானே கொஞ்ச நேரம் முன்னாடி பாரதி பற்றி அப்படி புகழ்ந்து பேசின…

நான் சொன்னதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??..

அப்படி பட்ட நல்ல பொண்ணு வயிற்றில தான் நம்ம ஆதியோட வாரிசு வளரனும் சுசி.. நாமும் பார்த்தோம் இல்லை.. இதுவரைக்கும் வந்த பொண்ணுங்களில் ஒருத்தர் கூட மனதுக்கு பிடித்ததா இல்ல...அவங்களை நம்பி எப்படி நம்ம வாரிசை கொடுக்க முடியும்.. “

“ஹ்ம்ம்ம்ம் நீ சொல்றது சரி தான்.. ஆனால் அதுக்காக... பாரதியோட வாழ்க்கையை நினைச்சு பார்த்தியா??? அவள் இன்னும் கல்யாணம் ஆகாத சின்ன பொண்ணு... இந்த மாதிரி ஒரு குழந்தையை சுமந்ததுக்கப்புறம் அவளோட எதிர்காலம் என்ன ஆகும்னு யோசிச்சியா??? அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும்?? .. “

“அவள் எதிர்காலத்தை நான் பார்த்துக்கறேன் சுசி.. கண்டிப்பா அவளை விட்டுட மாட்டேன்..

“கிளிச்ச...என்ன.. அவளுக்கு பணம் கொடுத்து உன் எதிர்காலத்தை பார்த்துக்கனு சொல்லுவ.. உன் பணத்தை கொண்டு அவள் வாழ்க்கையை திரும்ப கொடுக்க முடியுமா... என்னால இதுக்கு சம்மதிக்க முடியாது “ என்று கோபமாக கத்தினார்...

“சரி... நீ கேட்கறதுனால சொல்றேன்... பாரதியின் எதிர்காலத்துக்கு என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு “ என்று தன் திட்டத்தை எடுத்து கூறினார் ஜானகி.

அதை கேட்டும் சுசிலா மனம் சமாதானம் ஆக வில்லை..

இதெல்லாம் நீ சொல்ற மாதிரி நடக்குமா?? சரி வருமா??? நடக்கலைனா ??? “

“கண்டிப்பா நடக்கும் சுசி... “

“எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற??? “

“ஏனா .. என் முருகன் இருக்கான் என் கூட.. அவன் நடத்தி வைப்பான்... அவன் தான் அந்த ஜெயந்தி வழியா இப்படி ஒரு வழி இருக்கு என்று காண்பித்தான்.. நான் மனது ஒடிந்து இருக்கும் பொழுது அவனே பாரதிய என் கண்ணுல காட்டினான்..அன்னைக்கு அத்தனை பேர் அந்த கோயிலுக்கு வந்திருந்தாங்க... ஆனால் பாரதி மட்டும் ஏன் ஓடி வந்து என்னை காப்பாத்தனும்???

அன்னைக்கு கூட ‘சீக்கிரம் அந்த பொண்ணு கிடைப்பானு’ நீ சொன்னப்ப பாரதி கரெக்ட் ஆ வரல?? ...இதெல்லாம் அந்த முருகனோட திருவிளையாடல் தான்... பாரதி வழியாதான் நாம இழந்த சந்தோஷம் திரும்ப கிடைக்கும்னு இருக்கும் போல... “

“ஐயோ!! போதும் நிறுத்தறியா உன் முருகன் புராணத்தை... விட்டால் நான் இருவது வருடம் முன்னாடி இந்த மருத்துவ துறையை எடுத்து படித்து, இப்ப செயற்கை கருவுறதலில் ஸ்பெஷலிஸ்ட் ஆனது கூட, இப்ப உனக்கு ஒரு வழி காண்பிக்க தான் என்னை முருகன் படிக்க வச்சானு சொல்லுவ போல ??? “

“ஹே!! கரெக்ட் ஆ சொல்லிட்ட சுசி. இது கூட முருகனோட ஏற்பாடா தான் இருக்கும்” என்று முடிக்கு முன்னே

“நீ மட்டும் என் எதிர்ல இருந்திருந்த ஓங்கி அறைஞ்சிருப்பேன்... தப்பிச்சுகிட்ட ... நீ என்ன வேனா சொல்லு.. எனக்கு இதில இஷ்டம் இல்லை...

“ஹ்ம்ம்ம் நீ தான சொன்ன இதுவும் ஒரு விதமான தானம் மாதிரி னு.. பாரதி ஏற்கனவே நிறைய தானம் செஞ்சிருக்கா இல்ல.. இதுவும் அது மாதிரி தான... இதையும் நமக்கு உதவி செய்யற மாதிரி உதவ கூடாதா?? ...” என்று ஆதங்கமாக கேட்டார்.. அவரின் குரலில் இருந்த ஏக்கத்தை கண்டு சுசிலாவும் கொஞ்சம் இறங்கி வந்தார்..

“இது பார் ஜானகி.. நீ நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுலபம் இல்லை... மற்ற தானம் எல்லாம் வெறும் உறுப்பு சம்மந்த பட்டது.. கொடுத்திட்டா அதோட முடிஞ்சிடும்.. இது அப்படி எல்லை.. பத்து மாதம் ஒரு குழந்தையை சுமக்கனும்ம்ம்..

அதோடு கல்யாணத்திற்கு முன்னே தாயாக வேண்டி இருக்கும்.. இது ரொம்பவும் சென்சிடிவ்.. ஒரு பெண்ணின் உணர்வுகள் சம்பந்த பட்டது..

அதுவும் பாரதி கிராமத்து பொண்ணு... அவளால எப்படி இத ஒரு தானமா செய்ய முடியும்??...குழந்தை பிறந்ததுக்கு பிறகு அந்த குழந்தையை விட்டுட்டு அவளால போக முடியுமா??

அவளோட தாய்பாசம் அதை செய்ய விடுமா??? இதை எல்லாம் யோசிச்சு பார்... வீணா அந்த பொண்ணோட வாழ்க்கையை வீணாக்கிடாத.. நாம் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கலாம்... “

"அப்ப இங்க இருக்கிற பொண்ணுக்கு மட்டும் இதெல்லாம் இருக்காதா" என்று விடாமல் கேட்டார்..

"இங்க இருக்கிற பொண்ணுங்க ஏற்கனவே இதை பற்றி தெரிந்தவங்க..தெரிந்து அவங்களாகவே விரும்பி வர்ராங்க... அதுவும் இல்லாமல் இந்த மாதிரி சுமப்பதையும், அவங்க வாழ்க்கையும் சம்பந்த படுத்த மாட்டாங்க...

இது ஒரு கடமையா செஞ்சுட்டு அதோடு குழந்தை பிறந்ததும் அவங்க கடமை முடிஞ்சதுனு விட்டுடுவாங்க....

"பாரதியும் அப்படியே விட்டுவா..அவளும் தைரியமான அந்த பாரதி கண்ட புதுமை பெண்ணாக்கும்.. இதை ஒரு கடமையாகவே எடுத்துக்குவா... அப்படி இல்லைனாலும் நான் தான் அவளோட எதிர்காலத்துக்கு பொறுப்பு னு சொல்றேன் இல்லை சுசி... "

"நீ என்னதான் சொன்னாலும் இதை என்னால ஒத்துக்க முடியாது"

"ஹ்ம்ம்ம் ஆதி உனக்கும் பையன் தான்... அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கறது உன் கடமையும் கூடதான் சுசி.. “ என்று அடுத்த ஆயுதத்தை ஏந்தினார் ஜானகி

"நான் மறுக்கலை ஜானகி.. உன்னை விட அவன் மேல எனக்கு நிறைய அக்கறை இருக்கு. ஆனால் பாரதியும் எனக்கு பொண்ணு மாதிரி தான்.. ஒரு தாய்க்கு ரெண்டு குழந்தையும் தான் வேணும். ஒரு குழந்தை நல்லா இருக்கனும்னு இன்னொரு குழந்தை வாழ்க்கையை அழிக்க முடியுமா?? அதனால இதோடு விட்டுடு..

இல்லையா.. ஒன்னு செய்.. நீயே பாரதிகிட்ட பேசு. அவள் சம்மதித்தால் பார்க்கலாம்.. ஆனால் எனக்கு இது பிடிக்கலை.. அவ்வளவு தான்.. அதற்கு பிறகு உன் விருப்பம் " என்று முடித்தார்

"ஹ்ம்ம்ம்ம் போடி!! நானே பாரதி கிட்ட பேசுறேன்... நீ எப்பவும் போல நல்லவளாகவே இருந்துக்க. நானே இந்த ஆட்டத்திற்கு வில்லியா இருக்கேன்" என்று போனை வைத்தார்...

சுசிலாவோ “இந்த ஜானகி ஏன் இப்படி பைத்தியமாகிட்டானு தெரியலையே.... எப்படி இத சமாளிப்பது" என்று யோசிக்க ஆரம்பித்தார்...

ஜானகியோ சுசிலா சொன்னதையே திரும்ப நினைத்து பார்த்தார்...

“ஒரு வேலை சுசி சொல்றது மாதிரி நான் நினைக்கிறது தப்பா??? ...இல்லையே நான் நினைக்கிற மாதிரி நடந்தால அப்ப ஏன் பாரதி கஷ்ட படனும்?? என்று தனக்குள்ள பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தார்... 



லுவலகத்தில் இருந்து திரும்பி வந்த ஆதித்யா மேலே அவன் அறைக்கு சென்று ரிப்ரெஸ் ஆகிட்டு கீழே வந்தான்

தன் அன்னை இன்னும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டு தான் வந்தது கூட தெரியாமல் யோசனையில் இருப்பதை கண்டான்..

“ஐயயோ!! இப்ப என்ன யோசிச்சுகிட்டிருக்காங்களோ??? இவங்க இப்படி எதையாவது யோசித்தாலே அது பெரும் சுனாமியாதான் இருக்கும்... முருகா.. மீண்டும் ஒரு பிரச்சனையை இழுத்து விட்டுடாத “ என்று புலம்பி கொண்டே தன் தாயின் அருகில் சென்றான்...

“என்னமா யோசிச்சுகிட்டு இருக்கீங்க” என்று அவரின் அருகில் அமர்ந்தான்...

“ஓ வந்துட்டீயா ஆதி!! நான் கவனிக்கலையே”

“அதான் கேட்குறேன்.. நான் வந்தது கூட கவனிக்காமல் அப்படி என்ன யோசிச்சுகிட்டு இருந்தீங்க”

“ஹ்ம்ம்ம் அது வந்து... ஒன்னும் இல்லை கண்ணா.. ஒரு சின்ன விஷயம்.. அது சரியா வருமா தப்பாகுமா... நடக்குமா?? நடக்காதானு?? குழப்பம். என்ன முடிவு எடுக்கிறதுனு தெரியல.. அதான் யோசிச்சுகிட்டிருந்தேன் “

“ஹ்ம்ம்ம் நீங்க ஏன் மண்டைய உடைச்சுக்கறீங்க.. உங்க முருகன் கிட்டயே கேட்டுட வேண்டியது தான??”

“கேட்டேனே!!! “

“அப்புறம் என்ன மா யோசனை… அவர் என்ன சென்னாரோ அதே மாதிரியே செஞ்சுட்டு போங்க.. எதுக்கு இல்லாத மூளையை போட்டு கசக்கி உங்களையும் கசக்கிட்டிருக்கீங்க“ என்று அவர் தலையை பிடித்து ஆட்டி சிரித்தான்...

“தவளை தன் வாயாலயே கெடும்

தனக்கு தானே ஆப்பு வச்சுக்கறது

சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது “ என்ற பழமொலியெல்லாம் ஆதிக்கு பொருத்தமாக இருந்தது இந்த சூழ்நிலையில்...

தனக்கு தானெ குழி வெட்டிகிட்டதை அறிய வில்லை ஆதித்யா அப்பொழுது...

ஆதியின் பதிலை கேட்டதும் அவர் முகம் பிரகாசமானது..

“நீ சொன்னா சரியாதான் இருக்கும் கண்ணா “ என்று துள்ளி குதித்து எழுந்து ஒடினார் சமையல் அறைக்கு அவனுக்கு சிற்றுண்டி எடுத்து வர...

அப்பாடா!! எப்படியோ அவங்க குழப்பத்தை தீர்த்தாச்சு... நமக்கு ஒன்னும் பெருசா இழுத்து விடலை.. அது வரைக்கும் நான் தப்பிச்சேன்... இன்னும் இப்படி சின்ன பிள்ளையாகவே இருக்காங்களே” என்று சிரித்து கொண்டான் அவருடைய திட்டத்தை அறியாமல்...

மறுநாள் காலையில் மிகவும் பரபரப்பாக இருந்தார் ஜானகி.. இன்று பாரதிக்கிட்ட எப்படியாவது பேசிடனும் என்று சீக்கிரம் எழுந்து பூஜை முடித்து ஆதிக்கு சாப்பிட காலை உணவை எடுத்து வைத்து கொண்டிருந்தார்...

ஆதியும் அலுவலகம் கிளம்பி கீழ வந்தவன் தன் தாயின் முகத்தில் இருந்த பரபரப்பை கண்டுகொண்டே

“என்னமா.. இன்னைக்கு ஒரே பரபரப்பா இருக்கீங்க. என்ன விசயம்?? ”

“என் முகத்தை பார்த்தே எல்லாத்தையும் கண்டு பிடிச்சிடறானே இந்த பய.. இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும்” என்று மனதில் புலம்பி கொண்டே

“அதெல்லாம் ஒன்னும் இல்லை கண்ணா” என்று சிரித்து சமாளித்தார்...

“ஹ்ம்ம்ம் சரி சரி... என் மாமா எப்படி இருக்கார்” என்றான் உணவை உண்டு கொண்டே

“மாமா வா ??? “ என்று புரியாமல் தன் மகனை பார்த்தார் ஜானகி..

“அதான் மா.. உங்களுக்கு ஒரு அண்ணா கிடைச்சிருக்காங்கனு சொன்னீங்களே.. அவர் வந்ததுக்கு அப்புறம் தான் நீங்க என்னை கண்டுக்கறதே இல்லையே... தினமும் நீங்க ஹாஸ்பிட்டல் போய்ட்டு வர்ரீங்களே அவர் தான்...

உங்களுக்கு அண்ணான எனக்கு மாமா முறை தான .. அதான் கேட்டேன் “ என்று சிரித்தான்...

அதை கேட்டதும் மனதுக்குள் பல கோடி மத்தாப்புகள் பூத்தன ஜானகிக்கு ...அதை வெளியில் காட்டி கொள்ளாமல்

“ஹ்ம்ம்ம் நல்லா இருக்கார் கண்ணா.. இன்னும் நான்கு நாள் ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க”

“ஹ்ம்ம் பாத்து மா.. பணக்கார தங்கச்சி கிடைச்சிருக்காங்கனு உங்கள ஏமாத்திட போறாங்க.. எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க” என்று பேசி முடிக்கு முன்

“போதும் நிறுத்து டா... எப்ப பாரு பணம் பணம் னு... உன் பணம் யாருக்கு வேணும்.. அந்த குடும்பத்தை வந்து பார்.. ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவு அனபா , ஒருத்தருக்கு ஒன்னுனா இன்னொருத்தர் துடிச்சு போய்... அவங்களை போய் ஏமாற்றவங்க னு இன்னொரு தரம் சொல்லாத” என்று எரிமலையா முழங்கினார்...

“என்னாச்சு இந்த அம்மாவுக்கு?? ... ஒரு விளையாட்டுக்கு சொன்னதுக்கு இவ்வளவு சீரியஷா எடுத்துக்கிறாங்க... எப்பவும் கோபப்படாத அம்மா இந்த அளவுக்கு கோபப்படறாங்கனா... ஒரு வேலை அந்த கும்பல் அம்மாவை இப்படி மாத்திட்டாங்களோ??? .. எதுக்கும் விசாரிச்சு பார்க்கனும் “ என்று மனதில் குறித்து கொண்டவன்

“சாரி மா... சும்மா ஜோக்குக்கு தான் சொன்னேன்... எதுக்கும் கொஞ்சம் உசாரா இருங்க” என்று சாப்பிட்டு முடித்து அலுவலகத்துக்கு கிளம்பி சென்றான்...

ஆதி அலுவலகம் கிளம்பி சென்றதும், அவசரமாக போனை எடுத்து பாரதியை அழைத்தார்...

ஜானகியின் நம்பரை பார்த்ததும்

“என்ன ஜானகிம்மா... உங்க லவகுஷன் ராஜகுமாரன் கிளம்பி போனதுக்கப்புறம் தான் உங்களுக்கு உங்க அண்ணனும், இந்த மறுமகளும் ஞாபகம் வந்தாங்களா??? “ என்று சிரித்தாள்

பாரதியின் “மறுமகள்” என்றதை கேட்டதும் ஜானகிக்குள் அதே மத்தாப்புகள் மீண்டும் பூத்தன..

“மறுமகளா??? “ என்று கேள்வியாக கேட்கவும்

“ஆமா.. ஜானகிம்மா.. எங்கப்பா உங்களுக்கு அண்ணா, எங்க அம்மா உங்களுக்கு அண்ணி, அப்ப அந்த அண்ணன் பொண்ணு உங்களுக்கு மறுமகள் தானே...

என்னப்பா உங்க தங்கச்சிக்கு உறவு முறையே தெரியலை” என்று தன் தந்தையை இழுத்தாள்...

“ஹே !! வாயாடி... எனக்கு உறவுமுறை தெரியலைனு சொல்லிட்டு, உனக்கு தான் தெரியலை... மறுமகள் னு சொல்லிட்டு ஜானகிம்மானு கூப்பிடற... அத்தைனு தானே கூப்பிடனும்.. என்ன அண்ணா நான் சொன்னது சரி தான???

“ஸ்ஸ் அப்பா.. நீங்க ரெண்டு பேரும் என்னை ஆளை விடுங்க.. நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க என்று நழுவினார்...

“ஜானகிம்மா.. நீங்க வர வர கெட்டு போய்ட்டீங்க.. என்னொட சேர்ந்து நீங்களும் வாயாட ஆரம்பிச்சுட்டிங்க... “

“ஹ்ம்ம்ம் மறுமகள் எவ்வழியோ.. இந்த மாமி... மாமியாரும் என்று வந்ததை விழுங்கி கொண்டு உன் அத்தையும் அவ்வழியே!! “ என்று சிரித்தார்...

“சரி சரி ஒத்துக்கறேன்.. சொல்லுங்க ஜானகிம்மா” என்றாள்..

“ஹ்ம்ம் அம்மா இல்லை... நீ இனிமேல் அத்தைனு தான் கூப்பிடனும்” என்று மாற்றினார்..

“இல்லை.. அது வந்து... இப்படியே இருக்கட்டும்ம்” என்று மழுப்பினாள் பாரதி..

“அதெல்லாம் இல்லை.. நீதான் எனக்கு உறவுமுறை தெரியலனு சொன்ன.. அதனால் இனிமேல் நீ என்னை அத்தைனு தான் சொல்லனும்” என்று கண்டித்தார்..

“சரி அம்... இல்லை அத்தை... சொல்லுங்க... எதுக்கு போன் பண்ணி இருந்தீங்க..

அவள் கேட்டதுக்கு அப்புறம் தான் ஜானகிக்கு போன் பண்ணின காரணம் ஞாபகம் வந்தது...

“அது வந்து பாரதி... உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்.. நீ கோயில் வரைக்கும் வர முடியுமா... “ என்று மெல்ல தயங்கி தயங்கி கேட்டார்..

“அதுக்கு என்ன அத்தை... நான் வர்ரேன்.. நீங்க பத்திரமா வாங்க” என்று போனை வைத்தாள்.. பின் தன் அப்பாவிற்கு காலை உணவை கொடுத்து விட்டு அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பி கோயிலுக்கு சென்றாள்..

அவளுக்கு முன்னரே ஜானகி வந்து அவளுக்காக காத்து கொண்டிருந்தார்.. வந்த உடனே அந்த முருகனை தரிசித்து விட்டு மீண்டும் ஒருமுறை தான் நினைத்திருப்பது நல்லபடியா நடக்கனும் என்று வேண்டிகொண்டார்...

கோயிலை அடைந்த பாரதி நேராக ஜானகியிடம் சென்றவள் அவர் ஏதோ சீரியஷாக பேசப்போகிறார் என்று தோணவும் எதுவும் வம்பு இழுக்காமல்

“சொல்லுங்க அத்தை.. சீக்கிரம் வந்துட்டீங்களா?? ” என்றாள்

அவளின் சிரித்த முகத்தை பார்த்தவர் சுசிலா சொன்ன மாதிரி இவளை கஷ்டபடுத்த போறேனா?? வாய் நிறைய அத்தை அத்தைனு கூப்பிடறவ நான் சொன்னதை கேட்டதும் என்னை வெறுத்து விடுவாளோ??? “ என்று யோசித்து கொண்டிருந்தார்...

அவர் எதுவும் பேசாமல் தன் முகத்தையே பார்த்து இருக்கவும்

“என்ன அத்தை .. சொல்லுங்க.. “ என்றாள்

“அது வந்து .. வந்து” என்று இழுத்தார் ஜானகி...

“எதுவானாலும் தயங்காம சொல்லுங்க.. எங்கிட்ட என்ன தயக்கம்”

“பாரதி மா. நான் சொல்றதை கேட்டு நீ என்னை வெறுத்து விடகூடாது..”என்று பீடிகை போட்டவர்

“நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்” என்று இழுத்தார்...

“எனக்கே இப்பதான் ஒரு செல்ல அத்தை கிடைச்சிருக்காங்க. நான் அவங்களை எதுக்கு வெறுக்க போறேனாம்.. தயங்காமல் சொல்லுங்க... என்ன உதவி வேணும்னாலும் நான் செய்யறேன் உங்களுக்கு.. இந்த பாரதி இருக்க தயக்கமேன்?? “ என்று சிரித்தாள்

“ப்ராமிஸ்?? “ என்று கையை நீட்டினார் ஜானகி...

“ஐயோ !! என்ன இது அத்தை..சின்ன பிள்ளையாட்டம்?? நான் சொன்ன வாக்கை காப்பாத்துவேன்.. நீங்க தயங்காமல் கேளுங்க... என்னால முடிஞ்ச எந்த உதவினாலும் செய்யறேன்” என்றாள்...

“அது வந்து பாரதி... நீ எங்க வீட்டு வாரிசை.... என் பையனோட குழந்தையை சுமந்து தரணும் “ என்று ஒரு வழியாக போட்டு உடைத்தார்...

பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை...

“என்ன அத்தை சொல்றிங்க??? எனக்கு ஒண்ணும் புரியலை???”

“அது வந்து பாரதி.. என் பையனோட குழந்தையை உன் வயிற்றில சுமந்து தரணும்” என்று மென்று முழுங்கினார்...

அதை கேட்டதும் அதிர்ந்த பாரதி

“என்ன சொல்றீங்க அத்தை??.. அதுக்கு நீங்க அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் இல்லை.. உங்க வசதிக்கும், குணத்துக்கும் உங்க ராஜகுமாரனுக்கு நிறைய ராஜகுமாரிங்க வந்து வரிசையில நிக்கனுமே!! ஏன் யாரும் கிடைக்கலையா?? எதுக்கு இப்படி ஒரு வழி??..

ஒரு வேளை உங்க பையனுக்கு எதுவும் குறையா????” என்று தன் மனதில் இருந்ததை படபட வென்று கொட்டினாள்...

அதை கேட்டதும் பதறிய ஜானகி,

“அப்படி எதுவும் இல்லை பாரதி...அவன் கிட்ட எந்த குறையும் இல்லை.. அவன் எப்பவும் என் ராஜகுமாரானாக்கும்....

ஏன் கல்யாணம் பண்ணலை னா??... என்று இழுத்தவர் சொன்னார்.

“அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு மா... “

Comments

  1. பாவம் ஜானகி அம்மாள்

    ReplyDelete
  2. Enna writerea enna periya gunda thuuki 10th epila podringa .na ennavo love failure nu nenachean

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!