தவமின்றி கிடைத்த வரமே-13
அத்தியாயம்-13
தன் முன்னே நீட்டிய தன்னவளின் திருமண அழைப்பிதழை கண்டு அந்த இதயநல மருத்துவனின் இதயம் சில நொடிகள் நின்று விட்டன...
தான் கேட்டதும் காண்பதும் உண்மைதானா என்று சந்தேகமாக பனிமலரை நிமிர்ந்து பார்க்க, அவளோ அந்த அழைப்பிதழை அவன் கையில் திணித்து மீண்டும் அவனை அவசியம் தன் திருமணத்திற்கு வருமாறு அழைத்தாள்...
இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை அவள் சொன்னதை...
கை தானாக அந்த அழைப்பிதழின் கவரை திறந்து அதில் உள்ளே இருந்த கார்டை எடுத்து அதில் இருந்த மணமகளின் பெயரை பார்க்க அதில் தெளிவாக
பனிமலர் B.E., M.B.A என்று M.B.A மேல கோடிட பட்டிருந்தது.. மேலும் அவள் பணிபுரியும் அந்த IT Company ன் பெயரையும் அச்சிட்டிருந்தார்கள்...
இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை இதை...
தன் இதயத்தில் குடியேற்றி வைத்து கொஞ்சி வரும் தன்னவள் அடுத்த வாரத்தில் இருந்து வேற ஒருவன் இதயத்திற்கு சொந்தமாக போகிறாள் என்று அவள் சொல்லுகையில் அவன் இதயத்தையே யாரோ கத்தியை வைத்து திருகுவதை போல இருந்தது....
“எப்படி?? ஒரு நாள் கூட அவள் திருமணத்தை பற்றி சொல்ல வில்லையே...சென்ற வாரம் அவள் குடும்பத்தை பற்றி கேட்ட பொழுது கூட இதை பற்றி எதுவும் சொல்ல வில்லையே....
ஒரு வேளை என்னிடம் எதுவும் விளையாடுகிறளா?? இது ஏப்ரல் மாதம் கூட இல்லையே என்னை பூலாக்க.. “ என்று யோசித்தவன் அவள் முகத்தை பார்த்து மெல்ல சுதாரித்து
“எ.. எப்படி?? எப்ப?? ஏன் சொல்ல வில்லை.... “ என்றான் தடுமாற்றத்துடன் வார்த்தை வராமல்....
அவன் மனநிலையை அறியாதவளோ எப்பவும் போல இயல்பாக கதை அடிக்க ஆரம்பித்தாள்...
“ஹீ ஹீ ஹீ 3 மாதம் முன்பு நிச்சயம் ஆனது டாக்டர்... எனக்கே அது மறந்து போச்சு... இந்த ஜோ தான் போன வாரத்துல இருந்து தினமும் அதை சொல்லி ஞாபக படுத்திகிட்டே இருந்தது .... “ என்றாள் அதே வெகுளி சிரிப்புடன்...
அதை கேட்டு மேலும் அதிர்ந்தான்..
யாருக்கோ திருமணம் என்ற ரேஞ்சில் அவள் பேசுவதை கேட்டு அவன் புரியாமல் முழிக்க, அதை கண்டவள்
“சாரி... டாக்டர்.. ரொம்ப குழப்பறேனா?? சரி.. எனக்கு திருமணம் நிச்சயமான கதையை தெளிவாகவே சொல்றேன்...கேளுங்க... “ என்று தன் கதையை ஆரம்பித்தாள்...
“எனக்கு 23 வயசு ஆரம்பிச்ச உடனே எங்க வீட்டு வாத்தியார்... அதான் எங்கப்பா எனக்கு கல்யாணம் பண்ணி தன் கடமையை முடிச்சிடலாம்னு என் ஜாதகத்தை தூசி தட்டி எடுத்து அதை கொண்டு போய் ஒரு ஜோசியர்கிட்ட காட்டியிருக்கார்....
அவரும் என்னென்னவோ கட்டத்தை எல்லாம் போட்டு பார்த்து அலசி ஆராய்ந்து கடைசியில் என் ஜாதகத்துல ஏதோ குறை இருக்காம்..
அது என்னவோ ராகு கேது னு பாம்புங்க என்னை புடிச்சுகிட்டு ஆட்டுதாம்... அவ்வளவு சீக்கிரம் திருமணம் நடக்காது..
அதுவும் என் ஜாதகத்திற்கு பொருத்தமான ஜாதகம் அமைந்தால் மட்டுமே திருமணம் செய்ய முடியும் என்று நல்லா எங்கப்பாவை பயமுறுத்தி விட்டுட்டார் அந்த ஜோசியர் வாங்கின காசுக்கு வஞ்சகம் இல்லாமல்....
நானே பாம்பை பார்த்து பயப்படாம தைர்யமா கையில புடிச்சிருக்கேன்..
என்னை போய் அந்த இரண்டு பாம்பும் ஆட்டுதுனு ஏதோ கதையை எடுத்து விட, எங்க வீட்டு வாத்தியார் உடனே அதை நம்பி அதுக்கு பரிகாரம் அது இதுனு என்னை கோவில் கோவிலா சுத்த வச்சாங்க...
நானும் வரமுடியாதுனு எவ்வளவோ சொல்லி பார்க்க, அதெல்லாம் எங்க வாத்தியார் மண்டையில ஏறவே இல்லை...
கட்டாயபடுத்தி என்னை இழுத்து கிட்டு போய் பரிகாரம் ன்ற பேர்ல என்னென்னவோ செய்ய வச்சாங்க... நானும் கடனேனு எல்லா கோவிலுக்கும் போய் சுத்திட்டு வந்தேன்....
அப்புறம் எல்லா புரோக்கர் கிட்டயும் என் ஜாதகத்தை கொடுத்து அதுக்கு பொருத்தமா ஏதாவது ஜாதகம் இருக்கானு அலசினார்...
அவரோட கெட்ட நேரமோ என் நல்ல நேரமோ அந்த மாதிரி ஒரு ஜாதகம் அப்போதைக்கு இல்லை....
பொருத்தமா எந்த ஜாதகம் வந்தாலும் தகவல் சொல்வதாக சொல்லி எங்கப்பாவை திருப்பி அனுப்பி விட்டனர்...
அப்பதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்தது....
எங்கப்பாவும் வாரம் ஒரு முறை அந்த ஆளுக்கு போன் பண்ணி கேட்பார்.. இப்படியே ஒரு இரண்டு வருசம் ஓடிடுச்சு....
எனக்கு 24 முடிஞ்சு 25 ஆரம்பிக்கவும் தான் எங்கப்பாவுக்கு கவலை வந்தது... பொண்ணோட வாழ்க்கை இப்படியே போய்டுமேனு...
அவர் பிரண்ட் ஜாதகம் எல்லாம் பார்க்க வேண்டாம்....நல்ல பசங்க நிறைய பேர் இருக்காங்க... அவங்களுக்கு கொடுங்கனு கேட்க, ஜாதகம், ஜோஸ்யத்தில் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருக்கும் எங்கப்பா எல்லாத்தையும் மறுத்துட்டார்....
ஜாதகம் பொருந்தி இருந்தால் மட்டுமே தன் பொண்ணை கொடுப்பேன் என்று பிடிவாதமாக நின்று விட்டார்...
எனக்கும் அதுவே வசதியா போச்சு... இப்போதைக்கு நம்மளை தொல்லை பண்ண மாட்டாங்கனு நிம்மதியா இருந்தது...
எனக்கு 25 வயது ஆரம்பிக்கவும் தான் அவருக்கு கொஞ்சம் கவலை வந்தது..
இன்னும் நிறைய புரோக்கர் கிட்ட சொல்லி சென்னையையே அலசினார்... அதில கொஞ்சம் ஜாதகம் கிடைக்க, அதுவும் பொருந்தி தொலைக்க, உடனே பொண்ணு பார்க்கனு கிளம்பி வந்திட்டானுங்க ஒவ்வொருத்தனுங்களும்...
“ஐயோ.. அவனுங்க வர்ற நாள் எல்லாம் எங்க வீட்ல ஒரே அமர்க்களமா இருக்கும்...
இந்த ஜோ பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தயார் பண்ணி பத்தாதற்கு என்னையும் அலங்காரம் பண்ணு, சேலைய கட்டுனு போட்டு படுத்தி எடுத்து காபி தட்டை கையில கொடுத்து அவனுங்க முன்னாடி நிக்க வைப்பாங்க பாருங்க...
அவ்வளவு கடுப்பா இருக்கும்...
பேசாம அந்த காபியை அவனுங்க மூஞ்சியில ஊத்திட்டு ஓடிடனும் போல இருக்கும்...
என் எண்ணம் தெரிந்தோ என்னவோ இந்த ஜோவும் என் பின்னாடியே நின்னு என்னையே முறச்சு பார்த்துகிட்டு இருக்கும்...
வேற வழி இல்லாமல் பல்லை கடிச்சுகிட்டு காபிய கொடுத்துட்டு வந்திடுவேன்...
அப்படி பொண்ணு பார்க்க வந்ததில் பாதி பேர் என்னை பற்றி ஏற்கனவே விசாரிச்சு வாயாடினு பயந்து ஓடிட்டானுங்க...
சில பேர் என் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரல் நீளமா இருக்குனு சொல்லி அவங்களுக்கு நான் அடங்க மாட்டேனு சொல்லி எஸ்கேப் ஆகிட்டானுங்க...
இன்னும் சிலர் நான் IT ல வேலை செய்வதை தெரிந்து கொண்டு IT ல வேலை செய்யற பொண்ணுங்க நேரத்தோட வீட்டுக்கு வரமாட்டாங்க.... புருசனுக்கு அடங்க மாட்டாங்க னு யாரோ சொன்ன கதையை நம்பி வேண்டாம் னு ஓடிட்டானுங்க...
எனக்கு என்ன கடுப்புனா இதையெல்லாம் பொண்ணு பார்க்க வர்றதுக்கு முன்னாடியே விசாரிச்சு தொலச்சுட்டு அப்பயே வேண்டாம்னு சொல்லிட்டு போய் தொலைய வேண்டியது தான..
வீட்டுக்கு வந்து நல்லா மொக்கிட்டு அப்புறம் அதுல குறை இதுல குறைனு சொல்லிட்டு எஸ் ஆகிடறானுங்க... இப்படி ஓடினவங்க லிஸ்ட் எல்லாம் வச்சிருக்கேன் டாக்டர்...
எனக்கு மட்டும் கல்யாணம் ஆகட்டும்.. என் புருசனை கூட்டிகிட்டு ஒவ்வொருத்தன் வீட்டுக்கும் போய் என் புருசன காமிச்சு
“பாருங்க டா.... என் அதிர்ஷ்ட கார புருசனை.. நீங்க எல்லாம் unlucky fellows னு துப்பிட்டு வரணும் டாக்டர்... “ என்றாள் இன்னும் அதே கடுப்புடன்....
அவள் கதை சொல்லி விவரிக்கும் ஆக்சனுக்கு மற்ற நாளாக இருந்தால் விழுந்து விழுந்து சிரித்திருப்பான் வசி....
ஆனால் இன்றோ தன் இதயத்தில் இடியை இறக்கி விட்டு அல்லவா அவள் கதையை சொல்லி கொண்டிருக்கிறாள்..
அதனால் அவனால் சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான் அவள் சொல்லும் மீதி கதையை கேட்க...
“ஹ்ம்ம்ம்ம் எங்க விட்டேன் டாக்டர்..?? “ என்று தலையை தட்டியவள்
“ஆங்... இப்படி எங்க வீட்டு பொண்ணு பார்க்கற சீரியல் ஓடிகிட்டிருக்க, 3 மாதம் முன்னாடி தான் ஒரு ஜாதகம் வந்தது டாக்டர்... கவர்ன்ட்மென்ட் ஜாப்..
அதுவும் கிம்பளம் அதிகம் வரும் revenue office ல மாப்பிள்ளைக்கு கை நிறைய சம்பளம் என்று ஒரு வீணாப் போன புரோக்கர் கொண்டு வந்து கொடுக்க, அதை பார்த்து எங்கப்பா உடனே குசியாகிட்டார்...
அவரே இந்த ஜாதக பொருத்தம் எல்லாம் பார்ப்பார்... அவருடைய அறிவை வைத்து இரண்டு ஜாதகத்தையும் அலசி பார்க்க, எல்லா பொருத்தம் இருப்பதாக சொல்லி உடனே பொண்ணு பார்க்க வர சொல்லிட்டார்....
“சே... மறுபடியுமா?? “ என்று அலுத்து கொண்டே அவன் முன்னாடியும் போய் நின்னேன்...
என் முகத்துல என்னத்தை கண்டானோ?? உடனே அங்கயே ஓகே சொல்லிட்டான்... ஆனால் ஒரே ஒரு கன்டிசன் போட்டு...“ என்று நிறுத்தினாள்...
பின் வசியை பார்த்து
“டாக்டர்... இந்த சிட்சுவேசன்ல நீங்க ஆர்வமாகி என்ன கன்டிசன் னு கேட்டு இருக்கணும்?? ஒரு ரியாக்சனும் காணோமே... " என்று அவனை உற்று பார்த்தாள்..
"என்ன கன்டிசன் னு கேளுங்க டாக்டர்.." என்றாள் குறும்பாக பார்த்தவாறு...
அவனுக்கோ என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்து பின் தன்னை சமாளித்து கொண்டு
"என்ன கன்டிசன்?? " என்றான் மெல்லிய குரலில் தன் வேதனையை மறைத்து கொண்டு....
"ஹ்ம்ம்ம் இப்பதான் நீங்க குட் டாக்டர்.. " என்றவள் மேலும் தொடர்ந்தாள்..
"என்ன கன்டிசன் போட்டானா , கல்யாணத்துக்கு பிறகு நான் வேலைக்கு போகக் கூடாதாம்...
வீட்லயே அவனுக்கு சமைச்சு போட்டு , சாப்பாடு கட்டி கொடுத்து, அவன் ஈவ்னிங் வேலை முடித்து வந்ததும் அவனுக்கு கை கால் அமுக்கி விட்டு அவனுக்கு சேவகம் செய்யணுமாம்....
வந்தது பாருங்க கோபம்... நேரா போய் எழுந்திருச்சு போடா னு சொல்ல கிளம்பிட்டேன்.. ஆனா இந்த ஜோ தான் என் கையை புடிச்சி இழுத்து நிறுத்தி என் வாயை பொத்திட்டாங்க அமைதியா இருக்க சொல்லி...
இல்லைனா அன்னைக்கே என் கிட்ட நல்லா வாங்கி கட்டியிருப்பான்... எஸ் ஆகிட்டான்..." என்றாள் அதே கோபத்தில்....
வசியும் கொஞ்சம் இன்ட்ரெஸ்ட் ஆகி
"அப்புறம் என்னாச்சு?? " என்றான் கொஞ்சம் ஆர்வத்தில்...
"ஹ்ம்ம்ம் குழந்தை அழுதுச்சாம்... " என்று உட்வான்ஸ் விளம்பரத்தை சொல்லி சிரித்தவள்
"எல்லாம் நாசமா போச்சு டாக்டர்... அவன் கேட்ட கன்டிசனுக்கு எங்க வாத்தியார் மண்டைய ஆட்ட உடனே அப்பயே நிச்சயம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க அவங்க வீட்டை சேர்ந்தவங்க....
எங்கம்மா கிட்ட நான் எவ்வளவோ தூரம் சொல்லி பார்த்தேன்... இந்த ஆள் வேண்டாம்னு... நான் இப்படி ஏதாவது எங்கம்மாவை மிரட்டுவேன் னு தெரிஞ்சு அவசரமா உள்ள வந்த எங்கப்பா
இந்த ஜாதக கிடைக்கிறதுக்கு இரண்டு வருசம் ஆச்சு...
இப்ப என்ன?? வேலையை இப்ப விட்டுட்டு கல்யாணத்துக்கு பிறகு மாப்பிள்ளை மனச மாத்தி பின்னாடி வேலைக்கு போ... நீ படிச்சது ஒன்னும் வீணாப் போகாது.. வேலையும் எங்கயும் ஓடிப்போகாது...
ஆனால் காலா காலத்துல நடக்க வேண்டியது நடக்கணும்... என்னால் நிம்மதியா தூங்க முடியல...உன்னை பத்தின கவலையே என்னை அறிச்சுகிட்டிருக்கு என்று அவர் நெஞ்சுல கை வைக்க, எனக்கும் கஷ்டமாயிருச்சு டாக்டர்...
அவர் ஏற்கனவே ஒரு ஹார்ட் பேசன்ட்.. பர்ச்ட் அட்டாக் ல எப்படியோ காப்பாத்திடோம்...
சரி அவரை ரொம்பவும் கஷ்ட படுத்த வேண்டாம்னு நானும் அமைதியாகிட்டேன்...
என்ன ஒரு வருத்தம்னா எனக்கும் இந்த IT ல வேலை செய்யறது அவ்வளவா பிடிக்கலைதான் டாக்டர்.. எப்ப பார் ஒரே டென்சன்..
நானே MBA முடிச்சதும் அந்த வேலையை வீட்டுட்டு ஸ்ட்ரெஸ் இல்லாத வேலையா ஏதாவது ஒரு ஹாஸ்பிட்டலுக்கு போய்டனும் னு தான் நினைச்சு கிட்டிருந்தேன்...
ஆனா அது நானா பார்த்து வேண்டாம்னு சொல்றது எப்படி?? அவன் பார்த்து நீ வேலைக்கு போகக் கூடாதுனு அதிகாரமா சொல்றது எப்படி?? அதான் கடுப்பா வந்திச்சு...
எப்படியோ ஏதேதோ சொல்லி, என்னை சம்மதிக்க வச்சு நிச்சயத்தை அன்னைக்கே முடிச்சிட்டாங்க.. கல்யாண தேதியையும் குறிச்சுட்டு போய்ட்டாங்க... " என்று பெருமூச்சு விட்டாள் பனிமலர்....
அதை கேட்டு அவனுக்கு கஷ்டமாக இருந்தது... அதற்குள் ஒரளவுக்கு தன்னை சமாளித்து கொண்டவன்
"உனக்கு மாப்பிள்ளையை புடிச்சிருக்கா பனிமலர்?? " என்றான் அவள் மேல் இருந்த அக்கறையில் ....
அதை கேட்டு ஒரு நொடி திகைத்தவள் கண்ணில் ஓரம் ஈரம் எட்டி பார்த்தது...
அவசரமாக தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள்
"ரொம்ப தேங்க்ஷ் டாக்டர்... இந்த கேள்வியை என்னை பெத்தவங்க இதுவரைக்கும் என் கிட்ட கேட்டதில்லை...
அவங்களுக்கு எப்படா என்னை புடிச்சு அடுத்தவன் கிட்ட தள்ளி விட்டுட்டு அவங்க கடமையை முடிச்சிடலாம்னு பார்க்கறாங்க... அட்லீஸ்ட் நீங்களாவது கேட்டீங்களே !!! ரொம்ப சந்தோசம் டாக்டர்.... " என்றாள் குரல் தழுதழுக்க...
அதில் இருந்தே அவள் எவ்வளவு வேதனை பட்டிருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு...
அவள் வேதனையெல்லாம் ஒரு நாளும் வெளியில் காட்டியதில்லை..
எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பவள் உள்ளே இப்படி ஒரு வலி வேதனை இருப்பது புரிய அவளை அப்படியே இழுத்து அணைத்து அவள் வேதனையெல்லாம் போக்க துடித்தது அவன் இதயம்....
ஆனால் அது முடியாதே!!! அதற்கான உரிமை அவன்கிட்ட இல்லையே !!
“சே.. இவளை நான் முன்பே சந்தித்திருக்க கூடாதா ?? “ என்று தன்னையே நொந்து கொண்டான்...
பின் தன் வேதனையை மறைத்து கொண்டு அவள் கையை மெல்ல அழுத்தி கொடுத்தான் ...
"கூல் டவுன் பனிமலர்... Dont be emotional..." என்றான் மிருதுவான குரலில் அவளை வருடும் குரலில்...
அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள்
"ஹீ ஹீ ஹீ... நான் எதுக்கு டாக்டர் emotional ஆகணும்.. " என்று சிரித்து சமாளித்தாள்...
"ஹ்ம்ம் தட்ஸ் குட்.. சரி இப்ப சொல். உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?? பெயர் என்ன?? அவர் கூட பேசினியா?? " என்றான்
"டாக்டர்.. ஒவ்வொரு கேள்வியா கேளுங்க... " என்று சிரித்தவள்
“அவன் பேர் கூஜா டாக்டர்.." என்றாள்
"கூஜா வா?? " என்று புரியாமல் பார்க்க
"ஹீ ஹீ ஹீ சாரி டாக்டர்.... பெயர் என்னவோ ராஜாதான்... நான் எப்பவும் கூஜானு சொல்லி சொல்லி அப்படியே வாயில வந்திருச்சு... " என்று சிரித்தாள்...
அவனும் மெல்ல புன்னகைத்து
"சரி... ஆள் எப்படி?? நல்லா பேசறாரா?? உன்னை நல்லா பார்த்துக்குவாரா?? " என்றான் அக்கறையுடன்...
"ம்ஹூம் .. யாருக்கு தெரியும் ?? பொண்ணு பார்க்க அன்னைக்கு வந்ததுதான் டாக்டர்.. அன்னைக்கு காபி கொடுக்கிற கடுப்புல அவன் மூஞ்சிய கூட நான் நல்லா பார்க்கலை... அதுக்குள்ள நிச்சயம் னு ஹால் ல கூப்பிட்டு நிக்க வச்சுட்டாங்க....
ஏனோ அவன் என்னை வேலைக்கு போகக் கூடாது னு சொன்ன கடுப்புல அவன் மூஞ்சிய கூட பார்க்க பிடிக்கலை..
சும்மா பேருக்கு நின்னுட்டு வந்திட்டேன்... "
“அதுக்கு பிறகு கூடவா பார்க்கலையா?? “ என்றான் ஆச்சர்யமாக
"ம்ச்... அந்த மூஞ்சியத்தான் காலம் பூரா பார்க்க போறேன்..
அதுக்குள்ள என்ன அவசரம் டாக்டர்??...
அதோட அந்த கூஜா என்னவோ அவன் தான் தமிழ்நாட்டு கவர்ன்மென்ட் ஓட வருவாய் துறையையே தலையில தூக்கி வச்சுகிட்ட மாதிரி எப்பவும் பிசியாம்...
அதனால போன் பண்ண கூட நேரமில்லையாம்...
அவன் அம்மா தான் எங்க ஜோகிட்ட சொல்லி பெருமை அடிச்சுகிட்டாங்க..
அதோட அவங்க சைட் ல , கல்யாணம் முடியறவரைக்கும் இரண்டு பேரும் சந்திக்க கூடாதாம்...
இந்த காலத்துல போய் இப்படி ஒரு பஞ்சாங்கமானு சிரிப்பா வந்தது...
எனக்கும் அதுவே வசதியா போச்சுனு நானும் கண்டுக்கலை...
கல்யாண ஏற்பாடும் அவங்க அம்மா எங்க வீட்ல எங்க வாத்தியாரும் ஜோவும்தான் பார்த்துகிறாங்க...
எனக்கு ஆபிஸ்ல வேலை இருக்கிறதால நானும் பிசியாகிட்டேன் டாக்டர்...
புடவை எடுக்க கூட போகலை.. எங்கப்பா அம்மா வையே பார்த்து ஏதாவது எடுத்துட்டு வாங்கனு சொல்லிட்டேன்... " என்றாள் சலித்து கொண்டே...
“இப்பவும் இந்த இன்விடேசனை யாருக்குமே கொடுக்க பிடிக்கலை...
ஆனா இந்த ஜோதான் தினமும் நச்சு பண்ணி தெரிந்த வங்களுக்கெல்லாம் கொடுக்க சொன்னாங்க...
சரி இன்னையில் இருந்து கொடுக்கலாம் னு தான் ஆரம்பிச்சேன் டாக்டர்....
எனக்கு க்லோஸ் னா கயல் , அப்புறம் நீங்க தான் டாக்டர்.. அப்புறம் சுசிலா மேடம் , மணி மேடம் இன்னும் ஆபிஸ்ல கொஞ்ச பேர் அவ்வளவு தான்...
ஒரு நாள் போதும்.. எல்லாம் கொடுத்து முடிக்க ...
அதனால நீங்க உங்க அப்பா, அம்மா எல்லாரையும் கூட்டிகிட்டு கட்டாயம் என் கல்யாணத்துக்கு வந்திடணும்... " என்று சிரித்தாள் அவன் வேதனை புரியாமல்...
“ஹ்ம்ம்ம்.. “ என்று தலை அசைத்தான் வசி தன் வேதனையை மறைத்து கொண்டு...
“அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பனிமலர்... “ என்றான் முயன்று தன்னை கட்டுபடுத்தி கொண்டு
“ஹ்ம்ம் தேங்க்ஷ் டாக்டர்... சரி.. நீங்க என்னமோ சொல்லணும்னு சொன்னீங்களே?? அது என்ன டாக்டர்?? “ என்றாள் ஆர்வமாக...
அதை கேட்டு
“இனிமேல் நான் அதை சொல்லி எந்த பயனும் இல்லை பெண்ணே...நான் அதை இப்ப சொல்லவும் கூடாது... “ என்று மனதுக்குள் மருகியவன் அவளுக்கு என்ன சொல்வது என்று விழித்து
“ஹ்ம்ம்ம்ம் என்ன சொல்ல வந்தேன்?? “ என்று யோசிப்பதை போல நடித்தவன்
“ நீ உன்னோட மேரேஜ் பத்தி சொன்னதுல நான் சொல்ல வந்தது மறந்து போச்சு பனிமலர்.... “ என்று சமாளித்தான்....
“ஹ்ம்ம்ம் இப்படி அடிக்கடி மறந்து போகாம இருக்க வல்லாரை கீரை நிறைய சாப்பிடணுமாம் டாக்டர்... .
எங்க ஜோ அடிக்கடி என் தம்பிக்கு கொடுப்பாங்க.. அது மாதிரி நீங்களும் தினமும் சாப்பிடுங்க...
சரி எப்பயாவது ஞாபகம் வந்தால் எனக்கு உடனே சொல்லுங்க...” என்றாள் சிரித்தவாறு
“ஹ்ம்ம் அதை இனிமேல் எப்பவுமே உன்னிடம் சொல்ல முடியாது ஜில்லு.... “ என்று மனதுக்குள் சொல்லி கொண்டவன் பின் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி கிளம்ப, மலரும் எழுந்து அவனுடன் நடந்தாள்....
இருவரும் பார்க்கிங் வரும் வரை எப்பொழுதும் பேசி கொண்டே வருவர்...
எப்பவுமே அவள் சிரித்து பேசுவது அவன் காதில் விழுந்தாலும் அவளுடன் இணைந்து நடக்கும் அந்த நொடிகள் மட்டுமே அவன் இதயம் குதூகலிக்கும்....
ஆனால் இன்றோ அதே மாதிரி இணைந்து நடக்க, ஏனோ அவன் இதயம் கதறியது...
இப்படி இவள் கூட காலம் முழுவதும் இணைந்து நடக்கும் வரம் தனக்கு கிடைக்க வில்லையே என்று அடித்து கொண்டது அவன் இதயம்....
அவன் காரை அடைந்ததும் அவளுக்கு கை அசைத்து விடை பெற்று தன் காரை கிளப்பி சென்றான்....
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் வேதனை புழு அவனை அறிக்க ஆரம்பித்தது...
காலையில் இருந்து அவன் இதயத்தில் வந்து வந்து போன வலி இப்பொழுது நிரந்தரமாக ஒட்டி கொண்டது..
அதற்குமேல் சாலையில் கவனம் செலுத்தி ஓட்ட முடியாதவன் காரை சாலையின் ஓரமாக நிறுத்தியவன் அப்படியே ஸ்டியரிங்கில் தலையை கவிழ்த்து வைத்து குலுங்கினான்...
இதுவரை இந்த அளவுக்கு எதற்கும் வேதனை பட்டது இல்லை அவன்..
ஏன் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத பொழுது கூட இந்த அளவுக்கு கலங்க வில்லை...
தனக்கானவள் என்று எண்ணி இருந்தவள் இன்று தனக்கில்லை என்றாகும் பொழுது அதை அவன் இதயம் ஏற்று கொள்ள முடியவில்லை... .
“எத்தனையோ இதயங்களை காப்பாற்றிய அவனுக்கு தன் இதயம் விரும்பும் ஒருத்தியின் இதயத்தை தக்க வைத்து கொள்ள முடிய வில்லையே?? எங்க தப்பு பண்ணினேன்?? “ என்று ஆராய்ந்தான்..
ஒருவேளை அவளை பார்த்த அன்றே என் காதலை சொல்லியிருந்தால் என் காதலை அவள் ஏற்று கொண்டு இந்த திருமணத்தை நிறுத்தியிருக்கலாம்...
ஆனால் இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்க, இப்ப போய் அவளிடம் காதலை சொல்லி அவளை குழப்பி அதோடு இரண்டு குடும்பங்களும் திருமண ஏர்பாட்டை எல்லாம் பண்ணி தயாராக இருக்க, தன் சுய நலத்துக்காக அந்த இரு குடும்பங்களின் நிம்மதி சந்தோசம் குழைய வேண்டுமா??
வேண்டாம்.... என் காதல் என்னுள்ளயே இருக்கட்டும்... யாருக்கும் தெரிய வேண்டாம்.. அவளாவது நல்ல படியாக வாழட்டும்.. “ என்று மனதை ஓரளவுக்கு தேற்றி கொண்டான்...
பின் காரை எடுத்து கிளப்பி தன் வீட்டை அடைந்தான்...
வீட்டிற்குள் செல்லவும் தன் அன்னை வரவேற்பறையில் தனியாக அமர்ந்திருப்பதை கண்டவன் நேராக அவரிடம் சென்றான்...
அவனை நிமிர்ந்து பார்த்த மீனாட்சி அவன் முகத்தில் தெரிந்த வலி வேதனையை கண்டு திடுக்கிட்டார்...
நேற்றுதான் அவ்வளவு மகிழ்ச்சியாக துள்ளி குதித்த தன் மகன் முகத்தில் என்றும் இல்லாமல் இவ்வளவு வேதனையை காணவும் அவர் தாய் உள்ளம் உடைந்து விட்டது.....
அவர் அருகில் சென்றவன் அவர் அருகில் அமர்ந்து அவர் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்....
அதை கண்ட அந்த தாய் இன்னும் உள்ளுக்குள் பதற, கைகள் தானாக அவன் தலையை வருடி கொடுத்தன.... சிறிது நேரம் ஆனதும்
“என்னாச்சு வசி கண்ணா?? ஏன் இவ்வளவு டல்லா இருக்கு உன் ஃபேஸ்?? ... “ என்றார் தன் பதற்றத்தை மறைத்து கொண்டு...
“ம்ச்... ஒன்னும் இல்ல மா.. கொஞ்சம் வேலை அதிகம்....டயர்டா இருக்கு “ என்று சொல்லி சமாளித்தான்....
“ஆமா... நீங்க ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க?? உங்க முகமும் சோகமா இருந்ததே?? “ என்றான் அந்த நிலையிலும் தன் தாயின் முகத்தை கவனித்து.....
“ஹ்ம்ம்ம் நான் கோவில்ல பார்த்ததா ஒரு பொண்ணை பற்றி அடிக்கடி சொல்வேன் இல்ல... அவளை எனக்கு மறுமகளாக்கி கொள்ள ரொம்ப ஆசை....
ஆனா அந்த பொண்ணுக்கு இன்னைக்கு வேற இடத்துல நிச்சயம் ஆயிடுச்சாம் பா...
அதான் மனசுக்கு கஷ்டமாயிருச்சு... நம்ம கைக்கு கிடைக்க வேண்டியது கை நழுவி வேற கைக்கு போயிருச்சேனு இருக்கு...
உனக்கு எல்லா விதத்துலயும் ரொம்ப பொருத்தமா இருந்திருப்பா...அவளை கல்யாணம் பண்ணிக்க கொடுத்து வச்சிருந்திருக்கணும்...
அவள் கிடைப்பது உனக்கு கிடைத்த பெரிய வரமா இருந்திருக்கும்... நீ சரி சொல்லாததால உனக்கு அந்த வரம் கிடைக்காமல் போயிடுச்சு கண்ணா...
You are unlucky, வசி.... “ என்றார் தன் மகனின் மனதில் இருக்கும் வேதனையை அறியாமல்...
அதை கேட்டவன் மேலும் வேதனை பட்டு
“ஹ்ம்ம்ம் யெஸ் மா.... நான் ஒரு unlucky fellow தான்... “ என்று தன் தாயின் மடியில் முகம் புதைத்து அவருக்கு தெரியாமல் உள்ளுக்குள் குலுங்கினான்.............
Comments
Post a Comment