காதோடுதான் நான் பாடுவேன்-12


அத்தியாயம்-12
ந்த உணவகத்தில் உள்ளே நுழைந்ததும் ஆதியும் பாரதியும் அருகில் அமர்ந்து கொள்ள அவன் அருகில் குழந்தைகள் அமரும் பெரிய நாற்காலியை போட்டு தன் இளவரசியை அருகில் அமர வைத்து கொண்டான் ஆதி.. 

ஜானகி தன் பேத்தியின் அருகில் அமர்ந்து கொள்ள சிவகாமி ஜானகிக்கு எதிர்புறமாக அமர்ந்து கொண்டாள்...

அவரை ஒட்டி அகிலா அமர, அடுத்து மது அவள் அருகில் அமர்ந்து கொண்டாள் பாரதிக்கு எதிர்புறமாக....

தன் காரை பார்க்கிங்கில் விட்டு வரும் வழியில் தெரிந்தவருடன் உரையாடி கொண்டிருந்து விட்டு வந்த நிகிலன் அங்கு மது அருகில் ஒரு இடம் மட்டும் காலியாக இருக்க அதில் சென்று அமர்ந்தான்...

அகிலாவிடம் எதையோ சொல்லி சிரித்து பேசி கொண்டிருந்த மது தன் அருகில் யாரோ அமருவது தெரிந்து தலையை நிமிர்ந்து பார்க்க அங்கு நிகிலனை கண்டதும் உடனே சிரிப்பு மறைந்து தலையை குனிந்து கொண்டாள்..

அவளை கண்டு கொள்ளாமல் அவள் அருகில் அமர்ந்தான் நிகிலன்..

இதுவரை இவ்வளவு நெருக்கத்தில் அவன் அருகில் அமர்ந்தது இல்லை மது.. காரில் வரும் பொழுது கூட நிறைய இடைவெளி விட்டு கதவின் அருகில் ஒட்டி அமர்ந்து கொண்டாள்...

இங்க வேறு வழி இல்லாததால் அவன் அருகில் அமரவும் கை கால் உதற ஆரம்பித்தது அவளுக்கு...

நிகிலன் அங்கு இருந்த மெனு கார்டை எடுத்து அனைவருக்கும் கொடுத்து யார் யார்க்கு என்ன வேண்டும் என்று கேட்க அவர்களுக்கு பிடித்ததை சொல்லினர்..

பாரதி ஒரு மெனு கார்டை எடுத்து படித்து பார்க்க வழக்கம் போல அதில் ஒன்றும் புரியாமல் போக, அந்த மெனு கார்டை ஆதியிடம் தள்ளி

“மாமா... நீங்களே ஆர்டர் பண்ணிடுங்க.. ஒன்னும் புரியலை... ஆனா ஐஸ்கிரீம் மட்டும் வெண்ணிலா இரண்டு கப்.. “ என்று சிரித்தாள்...

“ஹா ஹா ஹா இப்பயாவது ஒத்துக்கறியா நீ பட்டிக்காடு னு.. கருவாச்சி.. என்னமோ எல்லாம் தெரிந்த மாதிரி அந்த அட்டைய வச்சுகிட்டு பில்டப் பண்ணின?? “ என்று அவள் காதருகில் கிசுகிசுத்தான் ஆதி ...

அவளை கருவாச்சினு சொன்னதில் கடுப்பானவள் அவனை முறைத்து அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள்....

“ஆ.. “ என்று சத்தம் வராமல் அலறியவன்

“இராட்சசி... வலிக்குதுடி.. இப்படியா கிள்ளுவ? “ என்று முறைத்தான்..

“ஹீ ஹீ ஹீ.. டேய் ஆதி... இப்ப தெரியுதா இந்த பட்டிகாட்டோட பவர் எப்படி இருக்குனு..??. இன்னொரு தரம் என்ன பட்டிகாடு னோ கருவாச்சி னோ சொன்ன... அப்புறம் கிள்ளெல்லாம் கிடையாது.. வேற... வேற... மாதிரி தான் என் டிரீட்மென்ட்...

நான் கடிச்சது இன்னும் உங்களுக்கு மறந்திருக்காதுனு நினைக்கிறேன்... “என்று குறும்பாக சிரித்தாள் பாரதி...

“ஹா ஹா ஹா...போடி.. கேடி.. நீ கடிச்சதையும் மறக்கல.. அதுக்கப்புறம் நீ கொடுத்த மருந்தையும் மறக்கல... “ என்று சிரித்துக்கொண்டே கண்ணடிதான்....

இருவருக்கும் பழைய நினைவு வர

“சீ.. போங்க மாமா.... “ என்று கன்னம் சிவந்தாள் பாரதி... அதில் சொக்கி போனவன் அவன் ரதியையே இமைக்க மறந்து பார்த்திருந்தான்..

அவர்களுக்குள் பேசி சிரித்து கொண்டாலும் எதிரில் அமர்ந்திருந்த மதுவுக்கும் நிகிலனுக்கும் அவர்கள் விளையாட்டு புரிந்தது...

மதுவுக்கு அவர்கள் இருவரின் அன்யோன்யத்தை கண்டு வியந்து அவர்களையே ஓரக் கண்ணால் பார்த்து ரசித்தாள்...

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க அண்ணி.. உங்களுக்கு என்ன வேணும்.. ??“ என்று அகிலா மதுவிடம் கேட்க, அவளோ திருதிருவென்று முழித்து பின் அந்த மெனு கார்டில் அவசரமாக ஆராய்ந்தாள்...

அதில் சில பெயர் புரியாததால் அகிலாவிடம் அது எப்படி இருக்கும் என்று விளக்கம் கேட்டாள்... மறந்தும் நிகிலன் பக்கம் திரும்ப வில்லை...

அதை கண்டு கொண்ட பாரதியும் ஆதியும் அவர்கள் இருவரையும் கண்ணால் ஜாடை காட்டி ஏதோ பேசிக் கொண்டனர்...

பின் உணவு வந்து விட, அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டே உணவை உண்டனர்..

ஆதி தன் மகளுக்கு ஊட்டி கொண்டே பாரதிக்கும் ஒவ்வொன்றாக சாப்பிட சொல்லி suggest பண்ணி அவளுக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்...

ஆதியை காண ,

“எப்படி இருந்தவன்?? இப்ப இப்படி மாறிட்டானே.. “ என்று ஆச்சர்யமாக இருந்தது சிவகாமிக்கு..

சிவகாமி தன் மகனை காண, அவன் இன்னும் விரைத்து கொண்டே சாப்பாட்டில் கவனமாக இருந்தான்... மதுவும் அகிலாவிடம் மட்டும் பேசி கொண்டிருக்க,

“சீக்கிரம் இவனும் அந்த ஆதி மாதிரி மாறிடனும்... முருகா... பார்த்துக்கோ.. “ என்று வேண்டிக் கொண்டவர் ஜானகியுடன் பழைய கதையை பேச ஆரம்பித்தார்..

பின் பாரதி மதுவையும் நிகிலனையும் இழுத்து வம்பு இழுத்து பேசி கொண்டிருந்தாள்..

ஒரு வழியாக எல்லாரும் சாப்பிட்டு முடித்து, பாரதி கேட்ட ஐஸ்கிரீமையே எல்லாருக்கும் வாங்கி கொடுத்து பின் நிகிலன் எழுந்து கை கழுவ சென்றான்...

பாரதி ஆதிக்கு கண்ணால் ஜாடை காட்ட, ஆதியும் எழுந்து நிகிலன் உடன் நடந்தான்..

இருவரும் கையை கழுவி கொண்டு நிகிலன் நகர முயல

“டேய் நிகில்... ஒரு நிமிடம்... “என்று அவனை நிறுத்தினான் ஆதி..

நிகிலனும் “என்னடா மச்சான்?? எதுக்கு சிஸ்டர் உன்னை என் கூட அனுப்பி வச்சாங்க “ என்று சிரித்து கொண்டே நின்று ஆதியை பார்க்க

“டேய்... ஏன்டா இப்படி இருக்க.?? “ என்றான் ஆதி

“எப்படி இருக்கேன்?? “ என்று தன் புருவங்களை உயர்த்தினான் நிகிலன்..

“ஹ்ம்ம்ம் சரி.. நேரடியாகவே கேட்கறேன்... நீ மது கூட சந்தோசமா இருக்கியா?? “ என்றான்...

அவனை ஆழ்ந்து பார்த்த நிகிலன்

“ம்ச்... எனக்குத்தான் திருமணத்துல இஷ்டம் இல்லைனு உனக்கே தெரியும் இல்லடா... அன்னைக்கு நான் எவ்வளவு தூரம் வேணாம்னு சொல்லியும் இந்த அம்மா கட்டாய படுத்திதான தாலி கட்ட வச்சாங்க....

ஏதோ அப்ப வேற வழி இல்லாமதான் அப்ப அவ கழுத்துல தாலிகட்ட வேண்டியதா போச்சு... எல்லாம் அந்த மகி நாயாலா... அவன் மட்டும் என் கையில கிடைச்சான்?? “ என்று அவன் உடல் விரைத்து பல்லை கடித்தான்...

“டேய்.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. அதையே திரும்ப திரும்ப பேசி என்ன யூஸ் ??  எது எப்படியோ.. இப்ப மது உன் பொண்டாட்டி.. இனிமேல் அத மாத்த முடியுமா?? உன்னை நம்பி வந்திட்டா... நீதான அவள நல்லா பாத்துக்கணும்.. “ என்றான் ஆதி

“அதான் மூனு வேலையும் நல்லா கொட்டிகிட்டு தான இருக்கா.... இன்னும் என்ன நல்லா பார்த்துக்கறதாம்?? “ என்று சிடுசிடுத்தான் நிகிலன்..

“டேய்... அவ மூனு வேலை சாப்பாட்டுக்காகவா அவங்கப்பா அம்மா உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்காங்க...

பழசை எல்லாம் மறந்துட்டு உனக்கான ஒரு புது வாழ்க்கையை ஆரம்பி டா... உனக்காக இல்லைனாலும் உன்னை நம்பி வந்திருக்கிற பொண்ணுக்காகவாது நீ உன் திருமணத்தை ஏற்று கொள்ளதான் வேணும்.. “

“ம்ச்... அத விடு டா.. வேற ஏதாவதுனா சொல்.. “ என்று பேச்சை முடிக்க பார்த்தான் நிகிலன்..

“டேய்... இந்த நாட்கள் திரும்பவும் வராதுடா... நீ உன் பிடிவாதத்துல இருந்தா பின்னாடி வருத்த படுவ... நான் என்னோட முட்டாள் தனத்துல என் ரதிய ஒரு வருடமா கஷ்ட பட வச்சேன்..

இன்னைக்கு அவ இல்லைனா நான் இல்லை... ஆனால் அந்த ஒரு வருடத்தில் அவள் பட்ட கஷ்டமும் அதனால நான் பட்ட கஷ்டமும் எவ்வளவு பெருசு தெரியுமா.??..

அதனால அனுபவஸ்தன்.. உனக்கு சீனியர் நான் சொல்றேன்..நான் பண்ணின அதே முட்டாள்தனத்தை நீ பண்ணாத.... பழசை எல்லாம் மறந்துட்டு புதுசா உன் வாழ்க்கையை ஆரம்பி...

மது பாவம்.. ரொம்ப வெகுளித்தனமான நல்ல பொண்ணுடா... உங்க அம்மா நல்ல பொண்ணா தான் பார்த்துதான் செலக்ட் பண்ணியிருக்காங்க..

அதனால ... “என்று இழுக்க

“டேய்.. இப்ப நீ நிறுத்த போறியா?? இல்லையா?? “ என்று மீண்டும் சிடுசிடுத்தான்...

“ஹ்ம்ம்ம் நான் சொன்னா உனக்கு இப்ப புரியாது.. எல்லாம் அனுபவிச்சா தான் புரியும்.. ஏனோ நீ இப்படி இருக்கிறதுக்கு நானும் ஒரு வகையில காரணம்னு நினைக்கிறப்போ கஷ்டமா இருக்குடா மச்சான்... “ என்று நிகிலன் தோளை தொட்டான் ஆதி வருத்தமாக...

“டேய்.. அதெல்லாம் ஒன்னுமில்லை...நான் ஒரு முடிவு பண்ணிட்டா அத எப்பவும் மாத்த மாட்டேன்...எனக்கு இந்த திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லைனா இல்லைதான்... அதனால உன்னால தான் நான் இப்படி னு நினைக்கிற உன் கவலைய விடு.. “என்று சிரித்தான் நிகிலன்....

“ஹ்ம்ம்ம் பார்க்கலாம் டா.. எத்தனை நாளைக்கு நீ இப்படி முறுக்கி கிட்டு இருக்கனு.. அடுத்த வருடம் இதே மாதிரியே நீ சொல்றியானு நான் பார்க்கறேன்.. .”என்று சிரித்தான் ஆதி...

“ஹ்ம்ம்ம் நல்லா பார்...அடுத்த வருடம் இல்ல.. எத்தனை வருடங்கள் ஆனாலும் நான் இப்படியே தான் இருப்பேன்.. “ என்று நிகிலனும் இணைந்து சிரித்தான்...

அவர்கள் இருவரும் இங்கு பேசி கொண்டிருக்க, பாரதியும் மதுவுக்கு சில அறிவுரைகளை கூறினாள்...

பின் அனைவரும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு விடைபெற்று கிளம்பி சென்றனர்...

நிகிலன் காரை ஓட்ட, பின்னால் அமர போன மதுவை சிவகாமி முன்னால் அமர சொல்ல, அவளும் தயக்கத்துடன் முன்னால் அமர்ந்து கொண்டாள்...

வீட்டை அடைந்ததும் சிவாகமியும் அகிலாவும் தங்கள் அறைக்கு சென்று விட,மது தன் அறைக்கு சென்று வேற ஒரு இலகுவான சுடிதாரை எடுத்து கொண்டு குளியலறைக்குள் சென்று மாற்றி வந்தாள்...

வெளியில் வருகையில் கட்டிலில் அமர்ந்திருந்த நிகிலன் எழுந்து

“பிறந்த நாள் வாழ்த்துக்கள்... “ என்று ஒரு பரிசை நீட்டினான்..

திடீரென்று அவன் குரலை கேட்டு அதிர்ந்து இரண்டு அடி பின்னால் நகர்ந்தவள் பின் தயக்கத்துடன் அவன் நீட்டிய பரிசை வாங்கி கொண்டாள்...

.இதுவரை எல்லாரும் அவளுக்கு பரிசு கொடுத்திருக்க நிகிலன் மட்டும் கொடுக்கவே இல்லை ... ஏன் ஒரு வாழ்த்து கூட சொல்ல வில்லை.. சரியான சிடுமூஞ்சி.. “என்று உள்ளுக்குள் திட்டி கொண்டிருந்தாள்...

ஆனாலும் மதுவின் வீட்டில் அகிலா, சுகந்தி, மது மூவரும் அவள் அறையில் அமர்ந்து பேசி கொண்டிருக்க, அப்பொழுது அகிலா

“இந்த அண்ணா ரொம்ப மோசம் அண்ணி... உங்களுக்கு பர்த்டே னு தெரிஞ்சு போய் ஏதாவது கிப்ட் வாங்கி தருவார்னு பார்த்தா அசையவே மாட்டேங்கறான்.. நான் போய் ஏதாவது சொன்னால் என்ன திட்டுவான்... “ என்று தன் அண்ணனை பற்றி குற்ற பத்திரிக்கை வாசித்தாள்...

“அகி... உனக்கு ஒன்னு தெரியுமா?? நீங்க எல்லாம் கிப்ட் கொடுக்கிறதுக்கு முன்னாடியே உங்க அண்ணா எனக்கு கிப்ட் கொடுத்திட்டார்... “ என்று கண்ணடித்தாள் மது

“வாட்?? இது எப்ப நடந்தது?? சொல்லுங்க அண்ணி?? அண்ணா என்ன வாங்கி கொடுத்தார்?? ... “ என்றாள் அகிலா ஆர்வமாக

“ஹ்ம்ம்ம்ம் இதுதான்.. “என்று தன் தலையில் வைத்திருந்த மல்லிகை பூவை திருப்பி காட்டினாள்.. காலையில் வர்றப்பயே இத எனக்கு வாங்கிக் கொடுத்தார்... “ என்றாள் அகிலாவின் வாயை அடக்க..

உடனே சுகந்தி

“வாவ்.. சூப்பர் கிப்ட் மது குட்டி... கல்யாண ஆன எல்லா பொண்ணுங்களுக்கும் புருசன் வாங்கி கொடுக்கிற இந்த ஒரு முழம் மல்லிகை பூதான் விலை மதிக்க முடியாத கிப்ட் ஆக்கும்..

உனக்கு சரியாதான் பார்த்து மாப்பிள்ளை வாங்கி கொடுத்திருக்கார்... நீ கொடுத்து வச்சவ... “ என்று அவள் முகத்தை திருஷ்டி சுத்தினாள் சுகந்தி...

ஏனோ அகிலா அவள் அண்ணனை பற்றி குறை கூறுவது பிடிக்காமல் அவளை சமாளிக்க என்று ஏதோ சொல்லி வைக்க, அதுக்கு சுகந்தி கொடுத்த விளக்கத்தை கேட்டு பே என்று முழித்தாள் மது...

அந்த அறையின் அருகில் வந்த நிகிலன் எதேச்சையாக உள்ளே பேசி கொண்டிருந்ததை கேட்டவன்

“பரவாயில்லை.. என்னை விட்டு கொடுக்காமதான் பேசியிருக்கா... “ என்று சிரித்து கொண்டான் உள்ளுக்குள்...

அதற்காகவே ஹோட்டலில் எல்லாரும் சாப்பிட செல்லும் பொழுது காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைக்கு சென்று இந்த பரிசை வங்கி வந்திருந்தான்....

அவன் நீட்டிய பரிசை வாங்கி கொண்டு

“தேங்க்ஸ் சார்...” என்றவள் ஆர்வமாக அதை பிரிக்க, உள்ளே ஒரு அழகிய விலையுயர்ந்த பேனா இருந்தது..

அதை கண்டதும் அவள் கண்கள் விரிந்தன...

“ஹ்ம்ம்ம் நீ கலெக்டர் ஆனா கையெழுத்து போட உதவும்.. அதான் இப்பயே வாங்கி கொடுத்தேன்.. இத யூஸ் பண்றதுக்காகவாது நல்லா படி “ என்று நக்கலாக சிரித்தான்...

அதை கண்டு மதுக்கு கண் கலங்கியது... இதுவரை அவள் கனவை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டது இல்லை...

அவள் பெற்றோர்கள் அவள் ஏதோ உளறுகிறாள்... என்று பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. ஏன் சந்தியா கூட கிண்டல் அடிப்பாள் அதெல்லாம் அவளால் முடியாது... சும்மா ட்ரை பண்ணாத...டைம் வேஸ்ட்..என்று..

ஆனால் இவன் தன்னை திட்டினாலும் நான் கலெக்டர் ஆவேனு நம்பறானே.. அதுக்காகவது நல்லா படிக்கணும்..” என்று மனதுக்குள் நினைத்து கொண்டவள்

“கண்டிப்பா சார்.. நான் நல்லா படிச்சு கலெக்டர் ஆகி என் முதல் கையெழுத்து இதுல தான் சார் போடுவேன்... “என்றாள் கண்கள் மின்ன....

“பொண்டாட்டியோட முதல் பிறந்த நாளுக்கு பேனா வாங்கி கொடுத்த முதல் புருசன் இந்த விருமாண்டியாதான் இருப்பான்... இந்த லூசும் இளிச்சுகிட்டே அத வாங்கிக்கிச்சே... விளங்கின மாதிரிதான்.. “ என்று தலையில் அடித்து கொண்டது மதுவின் மனசாட்சி..

மது கண்கள் மின்ன சொன்னதை கேட்டவன்

“ஹ்ம்ம்ம் குட்..”என்றபடி சிரித்து கொண்டே குளியலறைக்குள் செல்ல முயல

“ஒரு நிமிசம் சார்... “ என்றாள் தயங்கியவாறு...

அவனும் நின்று என்ன?? என்று தன் புருவத்தை உயர்த்த, அவசரமாக தன் பர்சை தேடி அதில் இருந்த 10 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்...

அவன் புரியாமல் அவளை பார்க்க,

“சார்... வந்து... நாம பேனா வை யாருக்காவது கிப்ட் ஆ கொடுத்தால் அவங்க பிரெண்ட்ஷிப் முறிஞ்சு போய்டுமாம்.... எங்க ஸ்கூல் ல சொல்லுவாங்க... அதுக்காக யாரவது பேனா கிப்ட் கொடுத்தால் நாங்க திருப்பி காசு கொடுத்துருவோம்... அப்ப பிரெண்ட்ஷிப் கட் ஆகாது....

நீங்க பேனா கொடுத்தீங்களா.... அதான்...” என்று தயங்கியவாறு மருண்ட விழிகளுடன் நோட்டை அவன் முன்னே நீட்டினாள்...

அவனும் அவள் செய்கையை ரசித்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே

“ஹ்ம்ம்ம் உன் ஸ்கூல் பழக்கத்தை எல்லாம் மூட்டை கட்டி வை... ஒழுங்கா பெரிய பொண்ணா நடக்க பார்...” என்று முறைத்து விட்டு குளியலறைக்குள் சென்றான்...

ஏனோ அவன் திட்டியது எதுவும் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை...மாறாக சிரிப்புதான் வந்தது..

நிகிலன் குளியலறைக்குள் சென்றதும் தன் சோபாவில் வந்து விழுந்தவளுக்கு மனம் நிறைந்து இருந்தது... கடந்த ஒரு மாதமாக மனதை அழுத்தி வந்த பாரம் நீங்கியதை போல இருந்தது...

மனதுக்குள் அன்றைய நாளை ஓட்டி பார்த்தாள் மது .. எல்லாமே வித்தியாசமான அனுபவமாக இருந்தது அவளுக்கு..

அகிலா ஏற்பாடு செய்திருந்த கேக் கட்டிங்..அப்புறம் கோவிலில் சந்தித்த ஆதி பாரதி தம்பதியர்கள் பார்க்க இன்னும் ஆச்சர்யமாக இருந்தது...

ஒரு கணவன் மனைவி என்றால் எப்படி இருக்கனும் என்ற இலக்கணத்தை அவர்களிடம் கண்டாள்... அவள் பெற்றோரும் மனம் ஒத்த தம்பதிகள் தான் ஆனால் அவர்கள் போன தலைமுறை...

இந்த தலைமுறையில் சில நிகழ்ச்சிகளை வைத்து திருமணத்தை பற்றியும் திருமண வாழ்க்கையை பற்றியும் ஒரு தப்பான அபிப்ராயத்தை தன் மனதில் பதிவு செய்திருந்தாள் மதுவந்தினி.. அதுக்கு முக்கிய காரணம் சுகந்தி...

சந்தியா வீட்டினர் காலி பண்ணி சென்றதும் அந்த வீட்டிற்கு குடி வந்தவர்கள் சுகந்தி குடும்பதினர்.. மதுவை விட ஆறு வயது பெரியவள்.. மதுவுக்கும் சந்தியா இல்லாமல் போரடித்து இருக்க, சுகந்திக்கும் மதுவை பிடித்து விட, இருவரும் விரைவிலயே நண்பர்களாகினர்...

சுகந்திக்கு அப்பொழுது வரன் பார்த்து கொண்டிருந்தனர்... அவளுக்கு 22 வயது முடிந்ததில் இருந்தே வரன் தேட ஆரம்பித்து கடந்த மூன்று வருடமாக தேடியும் இன்னும் அமைய வில்லை...

இங்கு வந்த நல்ல நேரமோ திருமணம் கூடிவிட, அதுவும் முதல் வாரத்தில் பெண் பார்க்க வந்து அன்றே நிச்சயம் முடிந்து நாள் இல்லை என்று சொல்லி அடுத்த வாரத்திலயே திருமணத்தை வைத்திருந்தனர்...

சுகந்திக்கு திருமணத்தை பற்றி பயம்... என்னதான் 25 வயது ஆனாலும் அவளுக்கு வெளி அனுபவம் அவ்வளவாக இல்லாததாலும் திருமணத்தை பற்றி சரியான புரிதல் இல்லாததால் நிறைய பயந்தாள்...

அதுவும் மாப்பிள்ளையிடமும் பேச சந்தர்ப்பம் கிடைக்காததால் மனம் விட்டு பேசி பழக, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள எல்லாம் நேரம் இல்லை..

அவள் வீட்டில் யாரிடமும் மனம் விட்டு பேசவும் முடியாது...

அதனால் அவள் பயத்தை எல்லாம் அப்படியே வந்து மதுவிடம் கொட்டுவாள்.. மதுவும் அப்பொழுது தான் 19 வயது நடந்து கொண்டிருந்த வயதில் அவளுக்குமே திருமணத்தை பற்றி எல்லாம் எதுவும் நினைத்ததில்லை...

அவள் கனவு IAS ஆகனும் என்பதால் இதை எல்லாம் நினைத்து பார்த்ததில்லை.. ஆனால் சுகந்தி சொல்லும் திருமணத்தை பற்றிய பயங்கள் மதுவின் மனதிலும் பதிய ஆரம்பித்தது....

சுகந்தி பயந்த மாதிரி சுகந்தி வாழ்க்கை பட்டு போன இடமும் அவ்வளவு சரியானதாக இல்லை... அதனாலயே அவசரமாக கல்யாணத்தை நடத்தினர் என்பது பின்னால் தெரிந்தது...

மாமியார் கொடுமை , நாத்தனார் மிரட்டல் என்று ஒன்று விடாமல் அவள் படும் கஷ்டத்தை எல்லாம் மதுவிடம் வந்து கொட்டுவாள்...

அதை விட திருமணம் முடிந்து முதல் இரவில் அவள் கணவன் அவளை வற்புறுத்தி கட்டாய படுத்தி அவன் ஆசையை தீர்த்து கொண்ட கதையையும் மதுவிடம் வந்து கொட்ட அதை எல்லாம் கேட்டு அந்த வயதில் மது மிரண்டு போனாள்....

சின்ன பெண்... அவளிடம் இதை எல்லாம் சொல்லக்கூடாது என்று தோன்றாமல் தன் மனக்குறையை தீர்த்துக் கொள்ள எண்ணி ஒரு பிஞ்சு மனதில் பயத்தை விதைத்தாள் சுகந்தி அவளையும் அறியாமல்...

அதை விட இன்னும் சில மோசமான அந்தரங்க நிக்ழ்ச்சிகளையும் மதுவிடம் சொல்ல, மதுவுக்கு தன்னிடம் இதை எல்லாம் சொல்ல வேண்டாம் என்று சொல்லக்கூட தெரியவில்லை..

சுகந்தி சொல்லுவதை எல்லாம் அப்படியே காதில் வாங்கி உள்ளுக்குள் பூட்டி வைக்க அது அவள் மனதில் திருமணத்தை பற்றிய வெறுப்பையும் பயத்தையும் நன்றாக பதிய வைத்தது...

அதனாலயே அவள் பெற்றோர் திருமணம் என்ற பேச்சை எடுத்ததும் வேண்டாம் என்று உடனே மறுத்தாள்...

ஆனால் அவள் நினைத்த மாதிரி அவள் அப்பா அவள் பேச்சை கேட்காமல் திருமண ஏற்பாட்டை நடத்த, அதிலும் என்னென்னவோ குழப்பங்கள் நடந்து போய் இப்பொழுது அவளும் ஒருவனுக்கு மனைவியாகி விட்டாள்...

தன் புகுந்த வீட்டிற்கு வந்த பிறகும் முதலில் அந்த சுகந்தி சொன்ன மாமியார் கொடுமை நாத்தனார் கொடுமை எல்லாம் மிரட்ட ரொம்ப பயந்து கொண்டே தான் இருந்தாள்....

ஆனால் முதல் நாளிலயே சிவகாமியும் அகிலாவும் அவளிடம் இயல்பாக பேசி பழக கொஞ்சம் அவள் பயம் தெளிந்தது..

அடுத்த பயம் அவள் கணவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்வானோ?? என்று பயந்தவளுக்கு அவனும் அவளை கண்டு கொள்ளாமல் மேலும் அவளை மிரட்டி கொண்டிருக்க, கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...

முதல் நாள் அவன் அறையில் தங்க அவளுக்கு பயம் தான்.. அவள் கேட்ட கதையை வைத்து கணவன் என்ற உரிமையில் அவன் தன்னை நெருங்கினால் என்ன செய்ய என்று பயந்து கொண்டே தான் அவன் அறையில் தங்கினாள்...

ஆனால் அவன் அவளை திரும்பியும் பார்க்காததால் அவளுக்கே ஆச்சரியம்...

அவள் கேட்ட கதையில் வந்த ஆண்களை விட இவன் கொஞ்சம் வித்தியாசமானவன் போல.. “என்று நிம்மதி அடைந்தாள்...

“அப்ப சுகந்தி அக்கா சொன்ன கதை எல்லாம் அவங்க வீட்ல மட்டும் தான் போல... நிறைய பேர் நல்லவங்களா இருக்காங்க...என் அத்தை, அப்புறம் ஜானகி அத்தை எல்லாம் நல்லவங்களாதான் இருக்காங்க... “ என்று நினைத்து கொண்டாள்...

அதோடு ஆதியையும் பாரதியையும் பார்த்தவளுக்கு முதல் முறையாக திருமணத்தை பற்றியும் திருமண வாழ்க்கையை பற்றியும் ஒரு நல்ல அபிப்ராயம் அவள் மனதில் மொட்டு விட ஆரம்பித்தது ..



மதுவின மனதில் உருவான அந்த மொட்டு வளர்ந்து திருமண மலராகி மணந்து மணம் வீசுமா?? இல்லை விருமாண்டியின் வீராப்பால் கறுக போகிறதா?? பார்க்கலாம்....

Comments

  1. இவன் இன்னும் பேசறத
    பார்த்தா ஒண்ணும் புரியலியே

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!