என் மடியில் பூத்த மலரே-13



அத்தியாயம்-13 

ராம்குமாரின் கை கால்கள இழுக்க ஆரம்பித்ததை கண்ட ஜானகி

“ஆதி “ என்று அலறினார்...

அவனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் மெல்ல மாடி ஏறி அவன் அறையை அடைந்தார்... அங்கு ஆதித்யாவோ அலங்கோலமாக கிடந்தான்... அவன் உதடுகளோ

.“நான் தோத்துட்டேன்... என்னால் ஒன்னும் செய்ய முடியல ... அவ என்னை ஏமாத்திட்டா “ என்று புலம்பியது.. அதை பார்த்ததும் நெஞ்சை பிசைந்தது ஜானகிக்கு...

“எப்படி ராஜகுமாரானக இருந்தவன் இப்படி ஆயிட்டானே .. நான் என்ன செய்வேன்” என்று மனதிற்குள் புலம்பியவர்

“ஆதி.. கண்ணா.. அப்பாவுக்கு முடியல.. எழுந்திருடா” என்று அவனை உலுக்கி எழுப்பினார்.. ஆனால் அவனோ அதை உணரும் நிலையில் இல்லை...

“இப்ப என்ன செய்யறது??? .. எனக்கு எந்த டாக்டரையும் தெரியாதே.. எல்லாம் ஆதி இருக்கிற தைரியத்தில் டாக்டர் பற்றி எந்த விவரத்தையும் வாங்கி வைக்கலையே.. இப்ப எப்படி கூப்பிடறது...” என்று புலம்பியவர் அருகில் கிடந்த அவனின் மொபைலை எடுத்தார். அதில் டாக்டர் நம்பரை வச்சிருப்பான் என்று..

மொபைலை ஆன் பண்ணவும் அதில் ஆதித்யாவும் ஸ்வேதாவும் சிரித்து கொண்டிருந்தனர் மிகவும் நெருக்கமாக....அதை கண்டதும் ஜானகியின் மனம் கசந்தது

“பாவி.. எல்லாம் இவளால வந்தது.. என் குடும்பத்தையே இப்படி ஆக்கிட்டாளே” என்று புலம்பியவாறு மொபைலில் டாக்டர் நம்பரை தேட முயன்றார். ஆனால் அது பாஸ்வோர்ட் பேட்டர்ன் வைத்து லாக் ஆகி இருந்ததால் அதை திறந்து பார்க்க முடியவில்லை.... எதையோ முயற்சி செய்து பார்த்தவர் ஒன்றும் சரியாக வராததால் மீண்டும் ஒரு முறை ஆதியை எழுப்பினார்... அவன் இன்னும் குடி போதையிலயே இருப்பதை உணர்ந்து வேகமாக கீழே வந்தார்...

ராம்குமார் இன்னும் வேதனையில் முனகி கொண்டிருந்தார்.. உடல் வேர்க்க ஆரம்பித்து இருந்தது...கண்கள் மட்டும் எதையோ சொல்ல துடித்தது... ஆனால் ஜானகியால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை

ஐயோ!!! .. நான் என்ன செய்வேன்??? ராம்... என் ராமை எப்படியாவது காப்பாற்றி ஆகனும்” என்று இங்கும் அங்கும் ஓடினார். அன்றைகென்று பார்த்து வீட்டில் வேலையாட்கள் யாரும் இல்லை... சமையல் செய்யும் பெண் தங்கம் காய் வாங்க என்று வெளியில் சென்றிருந்தாள்... வீட்டிற்கு வெளியில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தவர் யாரும் தென்படவில்லை எனவும்

“எல்லாரும் எங்க போய் தொலைஞ்சாங்க” என்று புலம்பியவாறு மீண்டும் ராமின் அறைக்கு ஓடினார்...

கடைசியாக அவருடைய மொபைல் கண்ணில் படவும் உடனே அதை எடுத்து தன்னை கடைசியாக அழைத்து இருந்த மேனேஜரை அழைத்து நிலைமையை சொல்லி ஏதாவது அவசரமாக ஏற்பாடு செய்ய சொன்னார்...

அவரும் அருகில் இருந்த கால் டாக்ஷிக்கு புக் பண்ணி உடனே காரை வரவழைத்தார்... அவசரமாக ராம்குமாரை அந்த காரில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்... அவரை பரிசோதித்த டாகடர் அவரின் உயிர் பிரிந்து விட்டது.. இன்னும் கொஞ்சம் முன்னாடியே கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று வழக்கம் போல சொல்லி கையை விரித்தார்... பின் ஜானகியை பார்த்து

“ஏம்மா... பார்த்தால் படித்தவங்க மாதிரி தெரியறீங்க.. இந்த மாதிரி அவசர நேரத்தில் செய்ய வேண்டிய முதல் உதவியை பற்றி தெரிந்து வச்சுக்க மாட்டீங்களா??? ... இப்பதான் எத்தனை விளம்பரங்கள் வருகின்றன.. அதை பார்த்தாவது குறிச்சுக்க வேண்டாம்..

அதான் இல்லை.. உடனே ஆம்புலன்ஸ்க்காவது போன் பண்ணி இருக்கலாம் இல்லை... ஆம்புலன்ஸ் லயே முதலுதவிக்கான உபகரணங்கள் மற்றும் அதை செய்ய ஆட்களும் இருப்பாங்களே... இப்படி அஜாக்கிரதையா கடைசி நேரத்துல கொண்டு வந்திருக்கீங்களே” என்று தன் ஆதங்கத்தை கொட்டினார்..

ஏற்கனவே பாதி மயங்கி இருந்த ஜானகி, டாக்டர் சொன்ன தன் அஜாக்கிரதையால் ராமின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது எனவும், தன்னால் தான் இப்படி ஆகிவிட்டது என்று முழுவதுமாக மயங்கி சரிந்தார்...

கூட வந்த டாக்ஷி ட்ரைவரோ என்ன செய்வது என்று தெரியாமல தன்னை புக் பண்ணி இருந்த நம்பருக்கு கால் பண்ணி விபரத்தை சொல்லவும் அந்த மேனேஜர் சுந்தரம் அவசரமாக கிளம்பி அங்கு வந்து நிலைமையை தன் கையில் எடுத்து கொண்டார். அவரே எல்லா பார்மாலிட்டிஷையும் முடித்து ராமின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தார்...

ஜானகிக்கும் ட்ரிப்ஸ் ஏற்றி கொஞ்சம் நடக்க முடியற மாதிரி ஆனதும் வீட்டிற்கு கூட்டி வந்திருந்தனர்.. ராமின் நண்பர்கள் சிலர் வந்து உதவவும் அவரால் சமாளிக்க முடிந்தது.. அதற்குள் ஆதித்யாவும் போதை விலகி நடந்தவைகளை அறிந்து ஆடிப்போனான்..

“ஐயோ!!! என் அப்பாவின் கடைசி மூச்சில் நான் அருகில் இல்லையே. அருகில் இருந்தும் அவருக்கு உதவ முடியாமல் போயிற்றே “ என்று மேலும் உடைந்து போனான்.. அதற்கப்புறம் எல்லாம் மல மல வென முடிந்து ராம்குமாரின் உடல் தகனம் செய்யபட்டது....அவரின் உடலுக்கு கொல்லி வைத்தவன் இன்னும் நொறுங்கி போனான்..

ஷ்வேதா குடும்பத்தில் இருந்து அவளின் தந்தை மட்டுமே வந்திருந்தார்... அந்த வீட்டின் நிலமையை கண்டு தன் மகள்தான் இத்தனைக்கும் காரணம் என்று அவர் மனம் வெந்தது... ஷ்வேதாவோ அவளின் அம்மாவோ எட்டிகூட பார்க்க வில்லை...

ராமின் மறைவை கேள்விபட்ட சுசிலா தன் வெளிநாட்டு பயணத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்த ப்லைட்டில் வந்துவிட்டார்... வந்தவர் நடைபிணமாக சுவற்றையே வெறித்து பார்த்து கொண்டிருந்த ஜானகியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்...

அவரின் அrருகில் அமர்ந்து அவரை தேற்ற முயன்றார்... அப்பொழுது தான் மேனேஜர் சுசிலாவின் அருகில் வந்து நடந்தவைகளை சுருக்கமாக சொன்னார்.. அவருக்கு தெரியும் சுசிலாவும் அந்த குடும்பத்திற்கு நெருங்கிய பழக்கம்..

அவரும் ஆதியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் என்று. இந்த டாக்டராவது இந்த குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வே ண்டும் என்று நினைத்து கொண்டார்...

சுசிலாவை கண்ட சமையல் செய்யும் தங்கம் அவர் அருகில் வந்து

“டாக்டர் அம்மா...அம்மா வை நான் பார்த்துக்கறேன்.. நீங்க சின்ன அய்யாவை போய் பாருங்க.. ரெண்டு நாளா அவர் கீழயே வரலை.. சாப்பாடும் எதுவும் சாப்பிடலை.. நாங்க கூப்பிடவும் முடியல. எப்பவும் குடிபோதையிலயே இருக்கார்.. நீங்க தான் அவரை எப்படியாவது காப்பாத்தனும் “ என்றாள்

அப்பொழுதுதான் கவனித்தார் ஆதித்யா அங்கு இல்லை என்பதை..

“இவ்வளவு நடந்திருக்கு.. தன்னிடம் யாரும் ஒன்றும் கூறவில்லையே.. போன வாரம் பேசியபொழுது கூட இந்த பையன் எதையும் சொல்லலையே” என்று ஆதங்க பட்டுகொண்டே நேராக மாடிக்கு விரைந்தார்...

அங்கு ஆதித்யாவோ அப்பொழுது தான் ஒரு மது பாட்டிலை திறந்து கொண்டிருந்தான்.. கண்கள் சோர்ந்து முகத்தில் தாடியுடன் அலங்கோலமாக இருந்தான்..அதை கணடதும் அதிர்ந்து நின்றார் ஒரு சில விநாடிகள்...பின்

“ கண்ணா “ என்று ஓடி சென்று அவனை கட்டிகொண்டார் சுசிலா..

“உன்னை இப்படி பார்க்கவாடா நாங்கள் இவ்வளவு கஷ்ட பட்டு உன்னை வளர்த்தோம்” என்று கண்ணீர் சொரிய ஆரம்பித்தார்..

ஆதித்யாவும் அவரை கண்டு கொண்டு

“சுசிலாம்மா... வந்திட்டீங்களா... நான் தோத்து போய்ட்டேன் மா... அப்பாவை காப்பாற்ற முடியாத பாவியாகிட்டேன்” என்று அவரை கட்டி கொண்டு கதற ஆரம்பித்தான்...

சிறிது நேரம் அவன் அழட்டும் என்று இருந்த சுசிலா

“இல்லை கண்ணா.. நீ தோற்கலை.. எப்பவும் ஜெயிக்க பிறந்தவன் டா நீ.. அதனால் தான் ஆதித்யானு தேடி தேடி பெயர் வைத்தொம் உனக்கு... நீ தோற்க மாட்ட.. தோற்க விட மாட்டோம்..” என்று அவனை கூட்டி வந்து கட்டிலில் அமர்ந்து அவனை மடியில் படுக்க வைத்தார்...

அவனுக்கு அந்த தாயின் மடி சுகமாக இருந்தது.. இதுவரை தன் நெஞ்சை அழுத்தி வந்த அத்தனை பாரத்தையும் இறக்கி வைத்தான்.. ஷ்வேதா புயலாக தன் வாழ்வில் வந்ததில் இருந்து அதே புயல் வேகத்தில் தன்னை விட்டு போனதிலிருந்து அவள் கடைசியாக பேசிய வார்த்தைகள் என்று தன் மனதை அழுத்தி வந்த அத்தனையும் கொட்டினான் அந்த தாயிடம்..

அதை கேட்டதும் சுசிலாவிற்கு நெஞ்சை அடைத்தது..

“எப்படி வளர்ந்த பையன்?? ... இவனுக்கு இவ்வளவு பெரிய சோதனயா??...இதை பார்க்க முடியாமல் தான் ராம் அண்ணா போய் சேர்ந்துட்டாரா??? இவனை எப்படியாவது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரனும்” என்று உறுதி கொண்டவர் அவசரமாக யோசிக்க ஆரம்பித்தார்...

அவர் மடியிலயே உறங்க ஆரம்பித்து இருந்தான் ஆதித்யா..அவனின் தலையை வருடிய படியே என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்..

முதலில் இந்த குடி பழக்கத்தில் இருந்து இவனை மீட்க வேண்டும் என்று நினைத்தவர் தன் ப்ரெண்ட் ஒருத்தர், மதுவுக்கு அடிமையாகிறவர்களை மீட்க என்று மறு வாழ்வு மையம் நடத்தி வருவது ஞாபகம் வந்தது..

அவருக்கு உடனே போன் பண்ணி ஆதியின் பெயரை சொல்லாமல் சுருக்கமாக நடந்தவைகளை சொல்லி எப்படி இந்த பழக்கத்தில் இருந்து வெளியில் வருவது என்று கேட்டார்..

இப்பதான் மதுவை பழகி இருப்பதால் சீக்கிரம் குணம் படுத்தி விடலாம் என்றார் அந்த நண்பர் ..

“இந்த குடி பழக்கத்தினால் அவருக்கு பெரிய இழப்பு என்று புரிய வைங்க....இந்த குடியினால் ஏதோ ஒன்று தப்பாயிருச்சு என்று திரும்ப திரும்ப சொல்லி அவர் மனதில் பதியுமாறு புரிய வைங்க. இந்த குடி தான் இந்த நிலைக்கு காரணம் என்று உணர்ந்தாலே அதை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள் “ என்று கூறி இன்னும் சில அறிவுரைகளை பின் பற்றும்படி கூறினார்..

“குறிப்பாக நீங்கள் எப்பொழுதும் அவர் பக்கத்திலயே இருங்கள்... அவரை தனியா விட்டால் மீண்டும் அந்த மதுவை நாடி செல்ற மாதிரி தூண்டும்.. அவரை எப்பொழுதும் எதிலாவது ஈடுபடுத்த வைங்க... சீக்கிரம் குணப்படுத்தியிடலாம்” என்று வைத்தார்...

குடியை வெறுக்கிற மாதிரி என்ன செய்வது என்று யோசித்தவர், மடியில் குழந்தையாக உறங்கி கொண்டிருக்கும் ஆதியை வாஞ்சையாக தடவினார்...

ஆதியை பெறாதவர் என்றாலும் அவன் பிறந்த உடன் முதலில் கையில் ஏந்தியவர்.. முதல் மூன்று மாதங்கள் ஜானகி படுக்கையில் இருந்தபொழுது அவனை தாயாக பார்த்து கொண்டவர்... தான் ஒரு குழந்தையை பெறவில்லை என்றாலும் ஒரு குழந்தையை பெற்று வளர்த்த சுகத்தை தனக்கு தந்தவன் இந்த ஆதித்யா... என்று நினைத்தவர் அவன் தலையை மீண்டும் வாஞ்சையாக தடவினார்..

எப்பொழுதும் துள்ளி குதிக்கும் காளையாக, கண்ணில் சிரிப்புடன் இருந்தவன் இப்படி சுருண்டு படுத்திருப்பது அவரின் மனதை பிசைந்தது..

“எப்படியாவது உன்னை பழைய நிலைக்கு கொண்டு வருவேன் கண்ணா “ என்று உறுதி கொண்டார்..

பின் படுக்கையில் இருந்த ஒரு தலையணைய எடுத்து அதன் மேல் ஆதியின் தலையை வைத்து விட்டு மெல்ல எழுந்து கீழே வந்தார்... ஜானகியின் அறைக்குள் வந்தவர் அங்கு ஜானகியின் நிலையை கண்டவருக்கு இன்னும் நெஞ்சை அடைத்தது...ஜானகி சுயநினைவு இல்லாமல் வெறித்தவாறே அமர்ந்து இருந்தார்.. சுசிலா வை கூட அடையாளம் கண்டு கொள்ளவில்லை....

அதை கண்ட சுசிலா மனம் வலித்தது... முதலில் ஆதித்யாவை மீட்கனும்.அப்புறம் இந்த ஜானகியை கவனிக்கனும்... அவனை மீட்க என்ன செய்வது என்று குழம்பினார்..

“ராம் அண்ணா ... ஒரு வழியை காமிங்க” என்று மனதிற்குள் வேண்டி கொண்டவர் அந்த அறையில் இருந்து வெளியில் செல்ல முயன்றார்.. அப்பொழுது அவர் புடவை முந்தானை பட்டு அருகில் இருந்த மேஜையின் ட்ராயர் திறந்து கொண்டது.. அதிலிருந்து தன் புடவையை பிரித்தவர் அந்த ட்ராயரை மூடும் பொழுது எதேச்சையாக உள்ளே கவனித்தார்..

அதன் உள்ளே இருந்த ராமின் டைரியை கண்டார்.. இதில் ஏதாவது இருக்கும் என்று அந்த டைரியை வெளியில் எடுத்து புரட்டியவர் டைரியில் கடைசியாக எழுதி இருந்த பக்கத்தை படித்தார்.. அதில் ராம் தான் படுக்கையின் விழும் முதல் நாள் இரவு ஷ்வேதாவிற்கும் ஜானகிக்கும் நடந்த வாக்குவாதத்தை எழுதி இருந்தார்...

அதிலும் ஆதி முதல் முதலில் குடித்து விட்டு வந்திருந்ததை வருத்தத்துடன் எழுதி இருந்தார்... பின் ஷ்வேதா ஜானகியை தள்ளியதும், ஜானகி இரவெல்லாம் அழுது கொண்டெ இருந்ததையும், அதை கண்டு தான் மன வேதனை அடைந்ததையும் குறிப்பிட்டிருந்தார்..

அந்த அதிர்ச்சியில் தான் ராமிற்கு இப்படி ஆகியது என்று புரிந்தது.. அதிலும் கடைசியாக இந்த பிரச்சனையை சீக்கிரம் சரி செய்து தன் மகனின் வாழ்க்கையை சரி பண்ணனும் என்று எழுதி இருந்தார்...

அதை கண்டதும் சுசிலாவின் கண்கள் கலங்கியது.. நேராக ஆதித்யாவின் அறைக்கு வந்தார்... அப்பொழுதுதான் எழுந்த ஆதித்யா மீண்டும் மது பாட்டிலை எடுத்து கொண்டிருந்தான்.... சுசிலா ஓடிப்போய் அதை பிடுங்கி கொண்டு அந்த டைரியை கொடுத்து கடைசி பக்கத்தை படிக்க சொனனார்...

அதை படித்தவன் கண்கள் சிவந்தது... தான் குடித்துவிட்டு வந்ததனால் தான் இவ்வளவு பிரச்சனை நடந்ததா??? அவன் மட்டும் அன்று நல்ல நிலையில் இருந்திருந்தால் அப்படி ஒரு வாக்குவாதம் நடக்காமல் இருந்திருக்கும்... தன் தந்தையும் படுக்காமல் இருந்திருப்பார் “ என்று புலம்பினான்...

அதையே ஆயுதமாக கொண்டு சுசிலா அந்த நண்பர் சொன்ன இன்னும் சிலவற்றையும் எடுத்து சொன்னார்.. கடைசியாக இந்த குடியினால் தான் தன் தந்தையை காப்பாற்றம் முடியவில்லை..

அவன் மட்டும் அன்று குடிக்காமல் இருந்திருத்தால அவன் தந்தையை காப்பாற்றி இருக்கலாம். அவன் குடி தான் தந்தை உயிரை காப்பாற்ற முடியாமல் போனது என்று திரும்ப திரும்ப சொன்னார் சுசிலா.

அதோடு அவரின் டைரி முழுவதையும் படிக்க வைத்தார். அதில் முக்கால் வாசி தன் மகனை பற்றியே எழுதி இருந்தார். அவன் தன் வாழ்க்கைய எப்படி வாழ வேண்டும் அவரின் வாழ்க்கையில் இருந்து எதை எல்லாம் கற்று கொள்ள வேண்டும் .எதில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பல விசயங்களை கூறி இருந்தார்... அதை கண்டதும் அவனின் மனம் இன்னும் வேதனை பட்டது..

“இப்படி தனக்காகவே வாழ்ந்த அவரின் கடைசி நிமிசத்தில் கூட அவருக்கு துனையாக இருக்க முடியாமல் போயிட்டனே!! இதுக்கெல்லாம் இந்த மது தான் காரணம்” என்று முதல் முறையாக மதுவை வெறுக்க ஆரம்பித்தது அவன் மனம்...


சுசிலாவும் அவனுக்கு தெரியாமல் அங்கு இருந்த பாட்டில்களை அப்புற படுத்தினார்.. பின் அவன் அருகிலயே இருந்து அவனிடம் ஏதாவது பேசி கொண்டிருப்பார் அவன் மீண்டும் அந்த மது பாட்டிலை நாடாதவாறு...

அவனை சேவ் பண்ண வைத்து குளிக்க வைத்து ஒரு நல்ல ட்ரெஸ்ஷை போட வைத்தார்... பின் சாப்பாட்டை மாடிக்கே கொண்டு வந்து ஊட்டிவிட்டார்... அவன் பக்கத்திலயே இருந்து எப்பல்லாம் அவன் மனம் பழசை நினைத்து வருந்துகிறானோ, அதுவும் அந்த ஷ்வேதாவின் வார்த்தைகள் நினைவு வந்தால் துவண்டு விடுவான்.. அப்பொழுதெல்லாம்

“அவள் ஒரு மோசமான பொண்ணு கண்ணா... எப்ப இந்த வசதிக்காக உன்னை கல்யாணம் பண்ணினேனு சொன்னாளோ, அப்பவே அவள் உன் காதலுக்கு தகுதி இல்லாதவள் டா...

ஒரு தகுதி இல்லாதவள் சொன்னதை எல்லாம் நீ ஒரு பொருட்டாவே எடுத்துக்ககூடாது...அவளை மற.. அவள் வார்த்தையை தூக்கி குப்பையில் போடு.. அவளால்தான் இன்று நீ எல்லாத்தையும் இழந்து நிக்கிற.. இன்னும் அவள் விட்டு சென்ற வார்த்தையை மட்டும் நினைத்து கொண்டு உன்னை ஏன் நீ அழிச்சுக்கிற...

நீ எங்களுக்கு வேணும் கண்ணா... எனக்கும், ஜானகிக்கும் நீ மட்டும் தான் உலகம். கடைசி வரைக்கும் நீதான் எங்களை பார்த்துக்கனும்... அதோடு உன்னை நம்பி ராம் அண்ணா உருவாக்கி வச்சிருக்க தொழில்களும் அதை நம்பி எத்தனை குடும்பங்களும் இருக்கு...

நீதான் இதை எல்லாம் திரும்ப எடுத்து நடத்தனும்.. நீ இப்படி இருந்தால் அந்த குடும்பங்களும் அழிஞ்சிரும்...அவங்களுக்காகவாது நீ மாறணும்.. அந்த ஷ்வேதாவை மறந்துட்டு உன்னை நம்பி இருக்கிறவங்களை பார் “ என்று திரும்ப திரும்ப போதித்தார்..

சுசிலாவின் கடும் முயற்சியால் ஆதித்யாவும் தன் தவறை உணர்ந்து எப்படியாவது தான் இழந்தவைகளை மீட்க வேண்டும்... தன்னை நம்பி இருக்கும் தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும்.

அதை விட தன்னை கையாலாகாதவன் என்று சொன்ன அந்த ஷ்வேதா முன்னாடி தான் வாழ்ந்து காட்ட வேண்டும்.... அவளை ஜெயிக்க வேண்டும் என்று வெறி கொண்டான்...

அடுத்த இரண்டு நாளில் கொஞ்சம் கொஞ்சமாக பழய நிலைக்கு திரும்பினான்... தன் அன்னையின் நிலையை கண்டு மீண்டும் உடைய போனவனை

“நான் ஜானகியை பார்த்துக்கறேண் கண்ணா...அவள் சீக்கிரம் சரியாயிருவா.. நீ கவலைப்படாமல் உன் தொழிலை முதலில் பார் “ என்று அவனுக்கு அறுதல் கூறி தொழில் பக்கம் அவன் கவனத்தை செலுத்த வைத்தார்...

ஆதியும் தன் அன்னையை அப்போதைக்கு மறந்து தொழிலில் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான்...அந்த மேனேஜர் சுந்தரத்தை வீட்டிற்கு வரவழைத்தான்... ஏனொ அலுவலகத்திற்கு செல்ல மீண்டும் தயக்கமாக இருந்தது... திரும்பவும் எங்கே அந்த மதுவை தேடி போய்டுவேனோ என்று ஒரு சின்ன பயம் அவனுள்ளே!!

சுசிலாவும் அதையே நினைத்து அவனை வீட்டில் இருந்தபடியே பார்க்க சொன்னார்.. அவரும் அவன் அருகிலயே அமர்ந்து இருந்தார்...

மேனேஜர் சுந்தரம் கொண்டு வந்த கொடுத்த பைல்களையும் அந்த தொழில்களின் நிலையை அவரின் மூலம் தெரிந்து கொண்டவன் மீண்டும் ஒடிந்து போனான்...

ஆதித்யா குரூப் ஆப் கம்பெனிஸ் ன் தொழில்கள் பல மடங்கு சரிந்து இருந்தன... ஆதித்யா தலை இட்டு ஓரளவுக்கு நிமிர ஆரம்பித்து இருந்த நிலை அவனின் குடி பழக்கத்தாலும் மற்றும் ராம்குமாரின் மறைவாலும் இன்னும் வேகமாக கீழ சரிந்து இருந்தது.. அதை கண்டு மேலும் துவண்டான் ஆதித்யா... இதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று பயந்து கொண்டிருந்தான்..

அப்பொழுது எல்லாம் சுசிலா தான் அவனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றினார்.. “கண்டிப்பா ராம் அண்ணா கூட இருந்து உனக்கு உதவி பண்ணுவார் கண்ணா.. .கலங்காத.. எப்படியும் ஒரு வழி கிடைக்கும் “ என்று தேற்றுவார்...

அது மாதிரி பேசி கொண்டிருக்கும் பொழுது தான் அவருக்கு திடீரென்று ஒரு மின்னல் அடித்தது.. வேகமாக ராமின் அலுவலக அறைக்கு சென்று எதையோ தேடினார்.. தேடியவரை ஏமாற்றாமல் கிடைத்தது அந்த டைரி...ராமின் இன்னொரு டைரி அது.. அதை திறந்தவர்

“அன்பு மகன் ஆதித்யாவிற்கு” என்று ஆரம்பித்து இருந்ததை கண்டு கண் கலங்கினார்...

அதில் உள்ள பக்கங்களை புரட்டியவரின் கண்கள் விரிந்தது... அவர் எதிர்பார்த்த மாதிரியே அதில் தொழில் சம்பந்தமான பல குறிப்புகள் இருந்தன.. தன் மகன் நாளை தொழில் பொறுப்பை ஏற்கும் பொழுது ஒவ்வொரு சூழ்நிலையையும் எப்படி கையாள வேண்டும் என்று குறிப்பு எழுதி வைத்திருந்தார் ராம்குமார்..

தன் ஒவ்வொரு தொழிலை பற்றியும் ஒவ்வொன்றிலும் யார் யார் போட்டியாளர்கள் , அவர்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும், வாடிக்கையாளர்களை எப்படி அணுக வேண்டும் என்று பல குறிப்புகள் இருந்தன...இதை நினைத்துதான், இந்த டைரியை பற்றி சொல்லத்தான் ராம்குமாரின் கண்கள் துடித்தது அன்று..

தன் கடைசி முச்சை விடும் முன்பு தன் மகனுக்கு எப்படியாவது இந்த டைரியை காட்ட வேண்டும் என்று துடித்தார்.. ஆனால் ஜானகியால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை...

அந்த டைரியில் இருந்த குறிப்புகளை கண்ட சுசிலா மகிழ்ந்து போனார்..

“சொந்த வாழ்க்கைக்கே குறிப்பு எழுதி வைத்தவர் தன் தொழில் வாரிசாக தன் பையன் வருவான் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்தவர் கன்டிப்பாக அவனுக்கு குறிப்பை விட்டு வைத்திருப்பார் என்ற தன் நம்பிக்கை பொய்யாக வில்லை..

அவரின் திட்டமிடுதலை நினைத்து ஆதிசய பட்டார் அந்த நிலையிலும்.. இப்படி ஒரு நல்ல மனிதன் கடைசி வரை வாழ முடியாமல் போய் விட்டதே என்று வருந்தினாலும் அடுத்து செய்ய வேண்டியது நினைவு வர வேகமாக ஆதியின் அறைக்கு வந்தவர் அந்த டைரியை கொடுத்தார்... அதை படித்த ஆதித்யா துள்ளி குதித்தான்..

இதுவரை தான் சந்தித்த அத்தனை சூழ்நிலைக்கும் அதில் குறிப்பு இருந்தது.. இந்த டைரி மட்டும் முன்னாடியே கிடைத்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது என்று தோன்றியது.. அதை முழுவதும் படித்த பிறகு தான் தான் இதுவரை செய்த தவறுகள் புரிந்தது. தான் சில கம்பெனிகளை பெரும் நட்டத்தில் விற்றிருப்பதும் தெரிந்தது...

உடனே அதற்கு துணையாக இருந்தவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை வேலையை விட்டு நீக்கினான் அந்த உதவியாளரையும் சேர்த்து.. .. இதுவரை தனக்கும் தன் தந்தைக்கு கடைசி நேரத்தில் உதவிய மேனேஜர் சுந்தரத்தையே தன் உதவியாளராக வைத்து கொண்டு ஒவ்வொன்றையும் திட்ட மிட்டு செயல் பட ஆரம்பித்தான்...

முன்பு , தனக்கு ஒன்றும் தெரியாது.. தன்னால் ஒன்றும் முடியாது, தான் எதுவும் தவறு செய்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்ததால் எதிலும் அவனால் ஸ்ட்ராங்காக இறங்க முடியவில்லை..எதிலும் எந்த முடிவையும் அவனால் எடுக்க முடியவில்லை.. அதுவே பல சரிவுகளுக்கு காரணம்...

இப்பொழுது தன் தந்தையின் டைரி கூட இருப்பது அவனுடைய தந்தையே அவனின் கூட இருப்பதை போல உணர்ந்தான்..அவரே அவனை வழி நடத்துவதாக தோன்றியது அவனுக்கு... அவன் நடையில் ஒரு கம்பீரமும், கண்ணில் ஒரு உறுதியும் வந்தது..அவன் நடந்து வரும்பொழுது அவன் தந்தை ராம்குமாரே நடந்து வருவதை போல இருந்தது அனைவருக்கும்...

அதுவே வாடிக்கையாளரிடம் ஒரு நம்பிக்கையை கொண்டு வந்தது.. சில புதிய டீல்களை வெற்றி கரமாக முடித்தான்.. சில விஷயங்களில் சுசிலாவிடம் ஆலோசனை கேட்பான்.. ஒரு விசயத்தை அடுத்தவரிடம் கலந்து ஆலோசிக்கும் பொழுது நமக்கே சில நேரம் விடை கிடைக்கும்.. அதை தான் பின்பற்றினான்..ஏதாவது குழம்பும் பொழுது நேராக சுசிலாவிடம் சென்று விடுவான்..

சுசிலாவுக்கு தொழில் சம்பந்தமாக எதுவும் தெரியாது என்ற போதிலும் அவரிடம் சில நேரங்களில் அறிவுரைகளை கேட்பான்..

சுசிலாவும் ராம்குமார் சில சமயங்களில் பகிர்ந்து கொண்ட சில சம்பவங்களை நினைவு கூர்ந்து இப்படி செய்யலாம் என்று அறிவுரை கூறினார்..

அதை கேட்டவன் வியந்து

“சுசிலாம்மா.. நீங்க டாக்டர் ஆகறதுக்கு பதிலா பெரிய பிசினஸ் உமன் ஆகியிருக்கலாம்.. கொடி கட்டி பறந்திருப்பிங்க” என்று சிரித்தான்

பல நாட்களுக்கு பிறகு அவனுடைய சிரிப்பை கண்டவரின் உள்ளம் குளிர்ந்து போனது..இது போதும் ஒரு தாய்க்கு.. தனக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும் தன் குழந்தை எப்பொழுதும் சிரித்து கொண்டே இருக்கனும் என்று நினைப்பவள் அல்லவா தாய்..

தான் பெறாத மகனின் சிரிப்பையே ரசித்து கொண்டிருந்தார் சுசிலா..அதை கண்டு கொண்ட ஆதி

“என்ன மா... அப்படி பார்க்கறீங்க?? “ என்றான் அதே சிரிப்புடன்...

“உன்னை இப்படி சிரித்து பார்த்து எவ்வளவு நாளாச்சு கண்ணா” என்று கண் கலங்கினார்...

“போச்சுடா... நான் ஜோக் சொன்னா நீங்களும் சிரிப்பீங்கனு பார்த்தா இப்படி அழு மூஞ்சி அம்மாவா இருக்கீங்களே... உங்களை நம்பி எப்படிதான் பேசன்ட்ஸ் வர்ராங்களோ.. “ என்று சிரித்தான்..அதை ரசித்தவாறே

“போடா... நான் ஒன்னும் அழலை.. என் கண்ணு வேக்குது “ என்று சிரித்தார் அவனுடன் இணைந்து...

“அது.. .. இப்பதான் நீங்க என் செல்ல அம்மா... எங்க நீங்களும் ஜானகி அம்மா மாதிரி ஆயீட்டீங்களோனு பயந்துட்டேன்.. அவங்க தான் எதுக்கெடுத்தாலும் கண்ணில தண்ணியை தேக்கி வச்சுகிட்டே இருப்பாங்க “ என்றவனின் நினைவுகள் தன் பெற்றோர்களிடம் சிரித்து மகிழ்ந்த நினைவுகளை தொடவும், பின் மீண்டும் ஜானகியின் இப்போதைய நிலையை நினைத்ததும் அவன் முகம் வாடியது ...

தன் மகனின் முகவாட்டத்திற்கான காரணத்தை அறிந்தவர்

“கவலை படாத கண்ணா.. ஜானகியையும் சீக்கிரம் சிரிக்க வச்சுடலாம்... நீ தினமும் இந்த மாதிரி அவள் முன்னாடி வந்து சிரிச்சாலே போதும்... அதுவும் ராம் அண்ணா நடையில் வந்து அவளை பார்த்து அவர் மாதிரி நீ சிரித்தாலே எழுந்து உட்கார்ந்திடுவா...

நீ வேணா பாரேன்.. ராம் அண்ணா மேல இருக்கிற பைத்தியத்துல தான் இப்படி தான் பெற்ற புள்ளையை கூட பார்க்காம இடிஞ்சு போய் உட்கார்ந்து இருக்கா... சீக்கிரம் மாத்திடலாம் கண்ணா” என்று அவனை தேற்றினார்..

“ரொம்ப தேங்க்ஸ் மா “ என்று அவன் தழுதழுத்தான்...

“டேய்... இப்ப என்ன உனக்கும் கண்ணு வேக்குதா... ஒழுங்க போய் வேலையை பார்” என்று விரட்டினார் சிரித்து கொண்டே...

“ஹ்ம்ம்ம் என் செல்ல அம்மா “ என்று குனிந்து அவர் கன்னத்தில் முத்தமிட்டு சென்றான் சிரித்தவாறே..

தன் மகனின் முத்தம் தந்த தித்திப்பில் மயங்கி நின்றார் சில நொடிகள்... இன்னும் இவன் வளரவே இல்லையே.... என்று சிரித்து கொண்டார்..

ஆதி பழைய நிலைக்கு வரவும் சுசிலா இப்பொழுது ஜானகியை கவனிக்க ஆரம்பித்தார்.. அவருடனே எப்பொழுதும் இருந்து ஆதியை பற்றி பெருமையாக பேச ஆரம்பித்தார்...

அவன் எப்படி தொழிலை கவனிக்கிறான் என்றும் அதுவும் ராம்குமார் மாதிரியே நடக்கிறான்.. சிரிக்கிறான் என்று மீண்டும் மீண்டும் ஆதியை பற்றி ஜானகியின் மனதில் பதிய வைத்தார்...

ஆதியும் காலையில் அலுவலகம் செல்லுமுன்பு தன் அன்னையை பார்த்து அவர் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துகொண்டு எதையாவது பேசி கொண்டிருப்பான்.. முடிந்த வரை ராமின் பழக்கதையும் நடையையும் பின் பற்றினான் அவர் முன்னே..

கொஞ்சம் கொஞ்சமாக தன் மகனுக்காக தான் வாழனும் என்ற ஆசையை தூண்டி விட்டனர் இருவரும்...

அவர்களின் முயற்சியால் ஜானகியும் மெல்ல தேறி வந்தா.ர்... மூன்று மாதம் போராடி அந்த வீட்டின் நிலையை ஓரளவுக்கு பழைய நிலைக்கு கொண்டு வந்தார் சுசிலா. அதற்கு பிறகே தன் பணிக்கு திரும்பினார்.

இதற்கிடையில் ஷ்வேதாவிடம் இருந்து டைவர்ஸ் நோட்டிஸ் வந்தது.. அதை மறுக்காமல் அவளிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று அவனும் உடனே கையெழுத்திட்டு திருப்பி அனுப்பினான்...

அடுத்த வருடத்தில் இருவரும் சட்டப்படி பிரிந்தனர்.

எப்பவாது தனிமையில் இருக்கும் பொழுது மட்டும் அவளின் நினைவுகள் அவனை முள்ளாய் குத்தும்.. உடனே அவளால் தான் தங்கள் குடும்பம் இப்படி ஆனது என்று சொல்லி அவளின் நினைவை தள்ளி நிறுத்தினான்...

அவள் தன்னை ஏமாற்றியதை நினைத்து உள்ளுக்குள் இறுகி கடின பாறையாக மாறினான்... முடிந்தவரை தன்னை தனிமையில் இல்லாமல் பார்த்துகொண்டான். அதுக்காக தன் நேரம் முழுவதையும் தொழிலில் செலுத்தினான்..

தன் தொழில் , தன் அம்மாக்கள் இருவர் மட்டுமே உலகம் என்று சுருங்கினான்...அவனுடைய கடின உழைப்பால் அவன் இழந்த அத்தனையும் மீட்டான் அந்த ஆடி காரை தவிர... அது வந்த பிறகு தான் தனக்கு எல்லாம் தப்பாக நடந்தது என்று சொல்லி தன் தந்தை பயன்படுத்தி வந்த காரையே இன்றும் பயன் படுத்தி வருகிறான்..

இதோ மூன்று வருடம் ஓடி விட்டது..

ஜானகி இப்பொழுது பழைய நிலைக்கு திரும்பி விட்டர்.. ஆனால் ஆதித்யா மட்டும் இன்னும் அப்படியே இறுகி அதே உள்ளுக்குள் கொதிக்கும் அனலுடனே இருந்து வருகிறான்... அதனால் தான் தன் அன்னை இன்னொரு திருமணம் என்று பேச்சை எடுத்தாலே எரிமலையாக பொங்க ஆரம்பித்து விடுகிறான்,….

ஆதித்யாவின் திருமண வாழ்க்கை முடிந்ததை பற்றி கூறி பெருமூச்சு விட்டார் ஜானகி.. எல்லாமே வேக வேகமாக நடந்து முடிந்துவிட்டது பாரதிமா.. என் பிள்ளை மூன்று மாதத்திலயே எல்லாத்தையும் அனுபவிச்சுட்டான்” என்று கண் கலங்கினார்...

ஜானகி சொன்னதை கேட்டதும் அதுவரை எதுக்கும் கலங்கியிராத பாரதியின் கண்களும் கலங்கியது... அந்த குடும்பம் பட்ட கஷ்டம் கண் முன்னே வந்து போனது...

அதிலும் சுசிலாவின் முயற்சி அவளை மெய்சிலிர்க்க வைத்தது.. அதை வாய் விட்டே சொன்னாள் ஜானகியிடம்..

“டாக்டர் மேடம் தான் ரொம்ப கஷ்ட பட்டிருப்பாங்க போல அத்தை... இப்படி கூட ஒரு ப்ரெண்ட ஆ னு ஆச்சர்யமா இருக்கு “ என்றாள்..

“ஆமாம் பாரதி.. நான் பண்ணிய புண்ணியத்தில ஒன்னுதான் சுசி எனக்கு ப்ரெண்ட ஆ கிடைத்தது.. அவள் மட்டும் இல்லைனா எங்க குடும்பமே மண்ணோடு மண்ணா போயிருக்கும்.. இன்று வரைக்கும் எங்களுக்காகவே இருக்கா...என் பையனும் அவள் னா உயிரா இருப்பான்..

எங்களோடவே தங்க சொல்லி எவ்வளவோ கேட்டோம்... ஆனால் அவள் அதை மறுத்து கடைசி வரைக்கும் தனியாகவே இருக்கேன்.. அதான் உங்களை எல்லாம் அடிக்கடி பார்க்கறேனே... அது போதும் என்று மறுத்து விட்டாள்... கடைசி வரைக்கும் தான் மருத்துவம் பார்க்கனும்.. தன்னால் ஒரு சிலர் பயனடைந்தால் கூட போதும் என்பது அவளின் ஆசை...

அவளுக்காகவே தனியா ஒரு ஹாஸ்பிட்டல் கட்டிகிட்டிருக்கான் எங்க பையன்... முழுவதும் இலவசமாக மருத்துவம் செய்ற மாதிர்.. சுசிலாவை அதுக்கு பொறுப்பாக்கனும் என்று ...

“அவன் போதை பழக்கத்திலிருந்து வெளியில் வரணும்னு சுசி ஷ்வேதாவை பற்றியும் அவன் அப்பாவின் கடைசி நிமிடத்தில அவன் அவருக்கு உதவ முடியாமல் போனதை பற்றியும் சொல்லியதால் அவன் அதை நினைத்தே தன்னை விட்டு வெளியில் வந்தான்.. ஆனால் திருமணத்தை பற்றிய அவனுடைய எண்ணம் தான் தப்பாகி போனது.. அவனுக்குள்ளயே இறுகி போய்ட்டான்...

நானும் சுசியும் எவ்வளவோ முயன்று பார்த்துட்டோம்... மற்ற எல்லாத்தையும் எங்க பேச்சை கேட்பவன் இந்த ஒரு திருமண விசயத்தில் இறங்கி வரவே மாட்டேங்குறான்...அவன் எங்க இப்படியே தனி மரமா நின்னுடுவானோனு பயமா இருக்கு

அதான்.. இப்படியாவது ஒரு குழந்தை எங்க வீட்டுக்கு வந்தால் அவன் அதை பார்த்து மாறுவான் என்று ஒரு நப்பாசை...

நாங்களும் கடந்த ஒரு மாசமா தேடிட்டோம்.. ஆனால் மனசுக்கு பிடிச்ச மாதிரி யாரும் அமயலை.. அந்த ஷ்வேதாவை நினைத்து எங்க மறுபடியும் அது மாதிரி ஏதாவது பொண்ணுகிட்ட மாட்டி மீண்டும் தப்பாயிருமோனு தான் பயமா இருக்கு பாரதி மா...

ஆனால் அன்னைக்கு எதேச்சையா நீ உன் அப்பாவின் உறுப்புகளை தானமாக கொடுக்க சொல்லி எழுதி இருந்தப்பதான் உன்னை பற்றி தெரிஞ்சுகிட்டேன்..

ஒரு குழந்தையை சுமந்து பெற்று தருவதும் ஒரு தானம் மாதிரி தான் பாரதி... உன்னோட கற்ப பையில எங்க வீட்டுக்கு ஒரு வாரிசை சுமந்து கொடு. இழந்த எங்க குடும்ப நிம்மதி, சந்தோஷம் எல்லாத்தையும் உன்னால தான் மீட்டு கொடுக்க முடியும்.. ப்ளீஸ் பாரதி இந்த ஒரு பெரிய உதவியை மட்டும் எனக்கு செஞ்சு கொடு..

உங்கிட்ட மடிப்பிச்சை கேட்குறேன்... என் குலத்தை வாழ வை “ என்று கண் கலங்கி தன் முந்தானையை நீட்டினார் பாரதியின் முன்னே ஜானகி.....

Comments

  1. சுசீலா அருமையான தோழி

    ReplyDelete
  2. Amma na amma dhan pilaigalukaga enna venua seivangala and dr mam super la

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!