தவமின்றி கிடைத்த வரமே-18



அத்தியாயம்-18

“நானே பனிமலரை கல்யாணம் பண்ணிக்கிறேன்...இப்பவே இந்த நிமிடமே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அவள் அப்பாவை காப்பாற்ற... “ என்று நிறுத்தி ஒவ்வொரு வார்த்தையாக கோர்த்து தன் உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சியை மறைத்து கொண்டு பேசினான் வசீகரன்.....

அதை கேட்டு மீண்டும் அதிர்ந்தனர் மூவரும்.... வழக்கம் போல சோமு முதலில் சுதாரித்து கொண்டு

“டா... டாக்டர்... நீங்க??? நீங்க எவ்வளவு பெரிய ஆள்... நீங்க போய்.... “ என்று தடுமாறினார்....

“நானும் ஒரு மிடில் க்ளாஸ் தான் சார்... டாக்டர் என்கிறது என் தொழில்... என் அப்பா அம்மா இரண்டு பேரும் டீச்சிங் லைன்ல தான் இருக்காங்க... ஒரே தங்கச்சி.. ப்ளஸ் டூ படிக்கிறா... சொந்தமா வீடு இருக்கு.. உங்களுக்கு சம்மதம் னா நானே பனிமலரை கல்யாணம் பண்ணிக்கிறேன்... “ என்றான்....

அதை கேட்டு மகிழ்ந்து போனார் சோமு....

“டாக்டர்.. ஆனாலும் உங்க வீட்ல என்ன சொல்வாங்களோ?? “ என்று இழுத்தார் தயக்கத்துடன்....

“எங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க சார்.... இன்பேக்ட் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையேனு அம்மா ரொம்ப வருத்தபட்டு கிட்டிருக்காங்க..

நான் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொன்னால் முதல் ஆளா வந்து நிப்பது அவங்கதான்... அப்பாவும் அப்படிதான்... என் விருப்பம்தான் அவங்களுக்கு முக்கியம்...

அதனால எங்க வீட்ல எந்த பிரச்சனையும் இல்லை.. நீங்க ஒரு 5 நிமிசம் டைம் எடுத்துக்குங்க... சீக்கிரம் ஆலோசித்து ஒரு முடிவை சொல்லுங்க...

எனக்கு என் பேசன்ட் ஐ காப்பாற்றணும்... அவ்வளவுதான்...” என்று சொல்லியவன் எழுந்து அந்த அறைக் கதவை மூடிவிட்டு வெளியேறினான்...

வெளியில் வந்தவனுக்கு இதயம் எகிறி குதித்தது... பரிட்சை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனை போல அவன் இதயம் திக் திக் என்று அடித்து கொண்டது...

“ஈஸ்வரா... என்னை விட்டு போக இருந்த என் பொக்கிசம் மீண்டும் என் கை வர ஒரு நல்லா வாய்ப்பு கிடைச்சிருக்கு.... ப்ளீஸ்.... இந்த முறையாவது நீ என் பக்கம் நில்... என்னவள் எனக்கே சொந்தமாகிடணும்...

என்கிட்டயே வந்திடணும்... அவளை என் உயிரை விட மேலாக பார்த்துக்குவேன்.. ப்ளீஸ்.. அவளை என் பககத்துலயே வச்சுக்கிற வரம் தா....” என்று கண் மூடி அந்த ஈசனிடம் மண்டியிட்டு வேண்டி நின்றான் வசீகரன்....

அவர்களை கலந்தாலோசித்து முடிவு எடுக்க சொல்லி அறையில் இருந்து வசி வெளியில் சென்றதும் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு முழித்தனர்..

பின் சோமு தான் மலரை பார்த்து

“மலர்... நீ என்னமா சொல்ற?? உனக்கு டாக்டரை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?? “ என்றார்..

மலரோ எதுவும் யோசிக்காமல்

“என் அப்பா உயிர் எனக்கு முக்கியம் அங்கிள்... அவர் பழையபடி எழுந்து வரணும்.. என் கல்யாணத்துல தான் அவர் உயிர் இருக்குனா நான் ரெடி ..

அவருக்காக ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்ட சொன்னாலும் நான் நீட்டறேன்... எனக்கு னு எதுவும் இல்லை.. என் அப்பா எனக்கு வேணும்... “ என்றாள் வேதனையுடன்...

அதை கேட்டு மகிழ்ந்த சோமு, பின் ஜோதியை பார்த்து

“ஜோதி.. நீ என்னமா சொல்ற?? “ என்றார்..

“எனக்கும் ஒன்னும் தெரியலை ண்ணா.... அவரை எப்படியாவது காப்பாத்திடனும்.. நீங்க எனக்கு அண்ணா மாதிரி... நீங்க பார்த்து எது செஞ்சாலும் எனக்கு சம்மதம்... “ என்றார் அதே வேதனையுடன்..

அதை கேட்டு நெகிழ்ந்தவர்,

“டாக்டர் 5 நிமிசம் டைம் கொடுத்திருக்கார்... எதுக்கும் நல்லா யோசிச்சுக்கலாம்.. “ என்றார்..

“இல்ல அங்கிள்.. இதுல யோசிக்க ஒன்னும் இல்லை... யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்... அவருக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் னா இப்பயே நீங்களும் சம்மதம் னு சொல்லிடுங்க..” என்றாள் மலர் அவசரமாக...

“ஹ்ம்ம்ம்ம் சரி மா... உங்க இரண்டு பேரோட நல்ல மனசுக்கு அந்த ஆண்டவன் எந்த குறையும் வைக்க மாட்டான்... தைர்யமா இருங்க... மலருக்கு நல்ல வாழ்க்கைதான் அமையும்....” என்றவாறு எழுந்து வெளியில் சென்றார்...

அறையின் வாயிலை திறந்து கொண்டு வெளியே சென்றவர் சற்று தொலைவில் வசி தன் டென்சனை மறைத்து கொண்டு நகத்தை கடித்து கொண்டு இருக்க, அவன் அருகில் சென்றார்...

அவனும் அவரை கண்டு வேகமாக முன்னால் வந்தான்...

“டாக்டர்.. எங்களுக்கு சம்மதம்... நீங்க அடுத்து செய்யறது பாருங்க... “ என்றார் சோமு...

அதை கேட்டு உள்ளுக்குள் துள்ளி குதித்தவன்

“பனிமலர் சம்மதம் சொல்லிட்டாளா?? “ என்றான் தன் ஆர்வத்தை மறைத்து கொண்டு...

“அவள் அப்பா உயிரை காப்பாற்ற யாருக்கு வேணும்னாலும் கழுத்தை நீட்டறேன் னு சொல்லிடுச்சு டாக்டர் ...”

“ஹ்ம்ம்ம்ம் சரி சார்... அவ அப்பாவை காப்பாற்ற இதை விட்டா வேற வழி இல்லை....அவர் உயிரை எப்படியாவது காப்பாற்றிடணும்.... அதான்.. “ என்று பெருமூச்சு விட்டவன் அறைக்கு உள்ளே வந்தான்...

அவன் சோமுவிடம் பேசியது திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே அமர்ந்திருந்த மலருக்கும் கேட்டது...

“அவன் பேசியதை வைத்தும் அவன் பெருமூச்சு விட்டதையும் வைத்து அவனுக்கு பிடிக்காமல் என் தந்தைக்காகத் தான் இந்த கல்யாணம் பண்றான்.... “ என்ற ஒரு தப்பான விதை அவள் மனதில் விழுந்தது...

உள்ளே வந்தவன் மலர் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்றான் ..

சோமு மற்றும் ஜோதி இருவரும் வெளியேறி செல்ல, தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தவளை கண்டு,

“பனிமலர்... உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா... ?? உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது... நான் சொல்றேங்கிறதுக்காக நீ ஒத்துக்க வேண்டாம்.. நீ நல்லா யோசிச்சு சொல்....

இது பேருக்காக நடக்கிற கல்யாணம் இல்லை.. உண்மையிலயே நாம் இருவரும் இணைந்து முறைப்படி நடக்கும் கல்யாணமாகத் தான் இருக்கும்....

உனக்கு சம்மதமா?? “ என்றான் அவளையே பார்த்தவாறு...

ஏனோ நான் உன்னை விரும்பறேன் என்று சொல்லி அவளை திருமணத்திற்கு சம்மதம் கேட்க தயக்கமாக இருக்க அவள் அப்பாவுக்காகத்தான் இந்த திருமணம் என்ற மாதிரி கொஞ்சம் திரித்து சொன்னான்....

அவன் உண்மையை சொல்லி இருந்தால் பின்னால் வர இருக்கும் வலி வேதனையை தடுத்திருக்கலாம்.... ஆனால் அதை சொல்லாமல் தவிர்த்து அவள் தந்தையின் நிலையை முன் நிறுத்தி மணக்க சம்மதம் கேட்டான்....

வசி அவளின் சம்மதத்தை வேண்டி நின்றதை கண்டவளுக்கோ கண்ணை கரித்து கொண்டு வந்தது...

இந்த நிலையிலும் தன் விருப்பத்தை பெரிதாக மதித்து கேட்கிறானே என்று...

தன் பெற்றோர்கள் கூட தன்னை ஒரு பொருட்டாக நினைக்காமல் வரதட்சணை கொடுப்பதை கூட தன்னிடம் மறைத்து அவளை கை கழுவி விட்டால் போதும் என்று எல்லா ஏற்பாட்டையும் செய்திருக்க, இவன் தன் மனதை பெரிதாக கருதி தன்னிடம் சம்மதம் கேட்கிறானே என்று திகைத்து வாயடைத்து நின்றாள்..

கண்கள் மட்டும் நீரை அருவியாக கொட்டி கொண்டிருந்தது... அந்த நிலையில் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலையை குனிந்து கேண்டே இருந்தாள் வார்த்தை எதுவும் வராமல்....

“தான் அவனை மணக்க சம்மதமா என்று கேட்டதற்கு அவள் பேசாமல் அமைதியாக இருப்பதை கண்டவன் அவள் தன்னை மணக்க சம்மதம் இல்லாமல் தான் தலையை குனிந்து கொண்டிருக்கிறாள்..

ஒருவேளை அவள் அவளுக்கு நிச்சயித்து இருந்தவனை மனதில் நினைத்து விட்டாளோ?? அதனால் தான் தன்னை ஏற்று கொள்ள இவ்வளவு தயங்கி நிக்கறாளோ?? “ என்று அவசரமாக யோசித்தவன்

“எது எப்படி ஆனாலும் இனிமேல் அவளை நழுவ விடக்கூடாது.. அவளுக்கு சம்மதம் இல்லை என்றாலும் அவள் தான் என் மனைவி.., மனைவியாக என் பக்கத்தில் இருந்தால் போதும்.. “ என்று தப்பாக யோசித்தவன்

“வெல்.. பனிமலர்... உங்கப்பாவோட கண்டிசன் உனக்கு தெரியும்... இந்த நிலையில் அவரை காப்பாற்ற இதுதான் ஒரே வழி...எனக்கு என் பேசன்ட் முக்கியம்... அதுக்காகத்தான் நானே முன் வந்து இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சது...

உன் அப்பாவை காப்பாற்றும் ஆசை உனக்கிருந்தால் நீயும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலாம்..மீதி நடக்கிறதை பின்னால் பார்த்து கொள்ளலாம்... “ என்றான் ஒரு வெறித்த பார்வையுடன்...

அவன் சொல்லியதை கேட்டு தன் அப்பாவுக்காகத்தான் தன்னை மணக்கிறான் என்ற தப்பான விதைக்கு மேலும் நீர் ஊற்றினாள் மலர்...

உடனே தலையை நிமிர்ந்து

“சம்மதம்... என் அப்பாவுக்காக எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்.. அவர் உயிரை எப்படியாவது காப்பாத்திடுங்க.. ப்ளீஸ்.. “ என்று கை எடுத்து கும்பிட்டாள்....

அதை கண்டு அவனுக்கு பாதி மகிழ்ச்சியும் பாதி வேதனையுமாக இருந்தது.. அவள் தந்தைக்காகத்தான் தன்னை மணக்க ஒத்து கொண்டாள்...” என்று வலித்தது..

“ஆனாலும் இப்போதைக்கு இதை விட்டால் வழி இல்லை.. அவளை தன் அருகில் கொண்டு வந்து வைத்து கொள்ளலாம்.... பின் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதை மாற்றி விடலாம்.... “ என்று மீண்டும் தப்பாக யோசித்தவன்..

“தேங்க்ஷ் பனிமலர்.. அப்ப நான் உடனே திருமண ஏற்பாட்டை ஆரம்பிக்கறேன்... இனிமேல் எல்லாம் நான் பார்த்துக்கறேன்... நீ எதுவும் கவலை படாமல் ப்ரியா இரு.....

உன் அப்பாவை காப்பாற்றி கொடுப்பது என் பொறுப்பு.... இன்னும் ஒரு மணி நேரத்துல நமக்கு கல்யாணம்.. இங்கயே நடக்கும்... “ என்றவாறு வெளியேறி சென்றான் வசி....

அதன் பின் மலமலவென்று தன் திட்டத்தை செயல் படுத்தினான்....

அந்த மருத்துவமனையின் MD யிடம் நிலைமையை எடுத்து சொல்லி அவள் தந்தை இருந்த அறையிலயே சிம்பிளாக திருமணம் நடத்த போவதாக சொல்ல, அவரும் அதிசயித்து உடனேயே ஒத்து கொண்டார்...

அவருக்கும் வசி என்றால் ரொம்ப பிடிக்கும்... ஒரு பேசன்ட் ன் உயிரை காப்பாற்ற திருமணம் வரைக்கும் செல்கிறானே என்று அதிசயித்தார்...

ஜோதி சோமு இருவரிடம் அவர்கள் பக்கம் இருக்கும் முக்கியமானவர்களை இங்கயே வரவழைக்க சொன்னான்...

பின் தன் வீட்டிற்கு அழைத்து விசயத்தை சொல்ல மீனாட்சி துள்ளி குதித்தார்..

உடனேயே கிளம்பி வருவதாக சொல்லி அலைபேசியை வைத்தவர் ஏற்கனவே தன் மகன் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த பட்டு வேஷ்டி , பட்டுபுடவை , தாலி, மறுமகளுக்கான சில நகைகள் என்று தயாராக வைத்திருந்ததை அள்ளி பையில் போட்டு கொண்டு தன் கணவைன இழுத்து கொண்டு வாசலுக்கு வந்தார்..

அப்பொழுது வசுந்தராவும் பயிற்சி வகுப்பில் இருந்து திரும்பி வந்திருக்க, அவளையும் ஆடையை கூட மாற்றாமல் அப்படியே அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்...

வசி தன் நெருங்கிய நண்பர்களான ஆதிக்கும் நிகிலனுக்கும் சொல்ல எண்ணி அவர்களை அழைக்க, ஆதி ஒரு முக்கியமான மீட்டிங் என்பதால் தன் அலைபேசியை அணைத்து வைத்திருந்தான்....அதனால் அவனுக்கு மெசேஜ் அனுப்பினான்....

நிகிலன் அந்த பகுதியில்தான் இருப்பதாக சொல்ல உடனே திருமணத்திற்கு தேவையானவற்றை அவனை பார்த்துக் கொள்ள சொன்னான்....

நிகிலனும் மகிழ்ந்து போய் அப்பயே தன் நண்பனை வாழ்த்தி திருமணம் நடத்துவதற்கான பொருட்கள் , மாலை அதோடு திருமணத்தை அப்பொழுதே பதிவு செய்யும் வகையில் ரிஜிஸ்டரையும் கையோடு அழைத்து கொண்டு வந்து விட்டான்...

வசி டாக்டர் சுசிலாவுக்கு அழைத்து விசயத்தை சொல்ல, அவரும் மகிழ்ந்து போனார்.. பாரதி அன்று சுசிலாவுடன் இருக்க உடனே அவனை வாழ்த்தி பின் இருவரும் கிளம்பி அந்த மருத்துவமனைக்கு வந்தனர்...

மித்ரா , மற்றும் ஷ்யாமை யும் அழைக்க, அவர்கள் இருவருமே ட்யூட்டியில் இருப்பதால் அலைபேசி அணைக்கப் பட்டிருந்தது.... அவர்களுக்கு ஒரு மெசேஜை அனுப்பி விட்டு தன் வேலையை கவனித்தான்....

மீனாட்சி காரும் பாரதி காரும் ஒன்றாக வர, பின் அனைவரும் இறங்கி வேகமாக உள்ளே வந்தனர்

மலர் உறவினர்களும் சில பேர் வந்திருந்தனர்..... அவர்களை ஒரு அறையில் தங்க வைத்திருந்தான் வசி....

மீனாட்சியும் அந்த அறைக்குள் செல்ல, அங்கு கலங்கிய கண்களுடன் நின்று கொண்டிருந்த பனிமலரை கண்டதும் கண்கள் விரிந்தது அவருக்கு...

மலரும் அவரை கண்டு கொண்டு “ஆன்ட்டி... "என்று அழைத்தவாறு ஓடி சென்று அவரை கட்டி கொண்டாள்....

வசிக்கு இன்னும் ஆச்சரியம் தன் அன்னைக்கு எப்படி பனிமலரை தெரியும் என்று....

மீனாட்சியும் அவள் முதுகை ஆதரவாக வருடி கொடுத்தவர்

"என்னாச்சுடா மலர்.?? நீ எங்க இங்க ?? " என்றார் குழப்பமாக...

மலரும் தன்னை சமாளித்து கொண்டவள்

"அ.. அப்... அப்பாக்கு ஹார்ட் அட்டாக் ஆன்ட்டி... கொஞ்சம் சீரியசாக இருக்கார்..... " என்றாள் அழுதவாறு....

அதற்குள் அருகில் வந்தவன்

"மா... பனிமலரை முன்னாடியே தெரியுமா?? இவ அப்பாக்குத் தான் ஹார்ட் அட்டாக்... போன் ல சொன்னேன் இல்ல...அவ இவதான்.... " என்று குறிப்பு காட்டினான் இவள் தான் அவன் மணக்க போகும் பெண் அவர் மருமகள் என்று...

அதை கேட்டவர் அந்த நிலையிலும் அகம் மகிழ்ந்து போனார்... ஆனாலும் அங்கு இருந்த சூழ்நிலையை கருதி தன்னை கட்டுபடுத்தி கொண்டவர்

"வசி கண்ணா.... நான் கோவில்ல அடிக்கடி பார்ப்பேனு சொல்வேனே.... அது இவதான் பா... மலரை எனக்கு ரொம்ப பிடிக்கும்... அவளை பிடித்து போய் தான் உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு உன்கிட்ட கேட்டேன்...

நீ வேண்டாம்னு மறுத்துட்ட...எப்படியோ நான் எனக்கு மருமகளா வரணும்னு ஆசைபட்டவளை தான் இப்ப நீயும் கை காமிச்சிருக்க.. எனக்கு ரொம்ப சந்தோசம்...

மலர் கண்ணா.. நீ ஒன்னும் கவலை படாத.... உன் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது... என் பையன் காப்பாத்திடுவான்... " என்று அவளை கட்டி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார்.....

அதை கேட்டதும் அதிசயித்தவன்

“ஆஹா.... அந்த ஈஸ்வரன் என்னவளை அம்மா வழியாக என்கிட்ட சேர்க்கத்தான் முயன்றிருக்கிறான்.... நான்தான் என் கண்ணையும் காதையும் இறுக்க மூடிகிட்டு அம்மா சொன்னதை காதுல போட்டுக்காம விட்டுட்டேன் போல...

அப்பயே அம்மாக்கு சரினு சொல்லி இவளை பார்த்திருந்தால் இத்தனை வலி வேதனை இருந்திருக்காது... நேரடியாக மூக்கை தொட்டிருக்கலாம்... இப்ப தலையை சுத்தி மூக்கை தொட்ட மாதிரி ஆய்டுச்சு என் கதை,,, “ என்று தன்னையே நொந்து கொண்டான் வசீகரன்...

மீனாட்சி மலரை கட்டி கொண்டு ஆறுதல் சொல்லியதை கண்டு ஜோதிக்கும் சோமுவுக்கும் மனம் நிறைந்து நின்றது... என்னதான் டாக்டர் திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிறேனு சொன்னாலும் அவர் வீட்டில் இதை எப்படி எடுத்து கொள்வார்களோ என்று கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது இருவருக்கும்...

மீனாட்சியையும் வசியின் குடும்பத்தையும் கண்டதும் அவர்களுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது....பார்க்கும் பொழுதே ஒரு கனிவுடன் நல்லவர்களாக தெரிந்தனர்....

அதுவும் மலரை அந்த குடும்பத்துக்கு முன்னரே தெரியும் என அறிய,

“எப்படியோ ... கடைசியில் அந்த ஈஸ்வரன் மலருக்கு ஒரு நல்ல சரியான இடத்தைதான் காண்பித்து இருக்கிறான்.... “ என்று நினைத்து கொண்டனர் இருவரும்....

கயல் விசயத்தை கேள்வி பட்டு மலரை கட்டி கொண்டு வாழ்த்தி சொன்னாள் புன்னகையுடன்..... பின் மலர் பக்கத்துலயே இருந்து அவளுக்கு ஆறுதல் சொன்னாள்....

மலருக்கு ஒரு புறம் என்ன வென்று சொல்ல முடியாத உணர்வு இருந்த போதிலும் மீனாட்சி சொன்ன அவன் முன்பு தன்னை மணக்க மறுத்து விட்டான்.. என்பது மட்டும் அவள் ஆழ் மனதில் பதிந்து அவள் மனதில் போட்டிருந்த அந்த விதைக்கு இன்னும் நீரை ஊற்றி உரம் இடம் செய்தது...

அதன் பிறகு வேலைகள் கடகட வென்று நடந்தது....

மலரை சென்று முகம் கழுவி வர சொல்லி, மீனாட்சி கையோடு கொண்டு வந்திருந்த பட்டு புடவையை பாரதியிடம் கொடுத்து மலருக்கு கட்டி விட சொன்னார்.....

அவளும் மலரை அழைத்து கொண்டு சென்று அவளை அலங்கரித்து மீனாட்சி கொண்டு வந்திருந்த நகைகளையும் மலர் மறுக்க மறுக்க பாரதி அவளுக்கு போட்டு விட்டாள்....

நிகிலன் மாலை வாங்கும் பொழுதே மல்லிகை பூவையும் வாங்கி வர சொல்லி இருந்தாள் பாரதி.... அதை மடித்து தலை நிறைய பூவை வைத்து பின் திருஷ்டி பொட்டும் வைத்தாள்...

கொஞ்ச நேரத்திலயே அவளை ரெடி பண்ணி அழைத்து வர, அந்த எளிய அலங்காரத்திலும் தேவதையாக மிளிர்ந்தாள் பனிமலர்.....

தலையை குனிந்த படியே வந்து நின்றாள்....

வசியும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளையாக வர, சோமு வசிக்கு மாலை அணிவிக்க நிகிலனே மலருக்கு தாய் மாமா ஸ்தானத்தில் இருந்து மாலையை அணிவித்தான்...

அருகில் நின்ற பாரதி

"அது எப்படி மாம்ஸ் ??.. எங்க கல்யாணம் நடந்தாலும் நீங்களே கேர் ஆப் தாய் மாம்ஸ் ஆய்டறீங்க..!!! உங்க ராசி அப்படி போல.. " என்று கண் சிமிட்டி சிரித்தாள்..

அவளை செல்லமாக முறைத்தவன் அனைவரையும் அழைத்து கொண்டு மலர் அப்பா இருந்த அறைக்கு சென்றனர்....

மற்ற அறையில் இருக்கும் பேசன்ட்ஸ் க்கு தொந்தரவு இல்லாமல் அனைவரும் அந்த அறையில் இருந்தனர்..

கும்பல் சேருவதால் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என வசி முன்னரே உறுதி படுத்தி கொண்டு மலர் பக்கம் இருந்தும் ரொம்ப முக்கியமானவர்களை மட்டும் வர சொல்லி இருந்தான் வசி...

பாரதி தன் அலைபேசியில் இருந்து மங்கல வாத்தியத்தை ஒலிக்க விட, அதிலயே ஐயர் திருமணத்திற்கான மந்திரங்களையும் ஒலிக்க வைக்க, அது சிவசங்கரின் காதில் விழும்படி வைத்தான் வசி....

பின் அவர் அருகில் சென்றவன்

“சார்.. உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகலைனு தான கவலைபட்டீங்க.. உங்க பொண்ணுக்கு இப்ப கல்யாணம் நடக்க போகுது.. நீங்க கண்ணை திறந்து பாருங்க...

நீங்க கண்ணை திறந்து பார்த்தால் தான் உங்க பொண்ணு தாலி கட்டிக்குவேனு பிடிவாதமா இருக்கா.... கண் முழிச்சு அவளை ஆசிர்வாதம் பண்ணுங்க... “ என்றான் அவர் மனதில் படியும் வகையில்....

உடனே அருகில் இருந்த சோமு அவர் அருகில் வந்து

“டேய்.. சிவா... உனக்கு எப்படி பட்ட மாப்பிள்ளை கிடைச்சிருக்கார் தெரியுமா...??. பெரிய ஃபேமஸ் கார்டியாலஜிஸ்ட் தான் உனக்கு மாப்பிள்ளை... இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்.... உன் பொண்ணு கல்யாணம் நடக்க போகுது இப்ப...

நீ கண் முழிச்சாதான் உன் பொண்ணு கல்யாணம் நடக்கும்.. இல்லைனா அவ கல்யாணம் வேண்டாங்கிறா.... உன் பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்க நீ எவ்வளவு ஆசை பட்ட.. அந்த ஆசை இப்ப நிறைவேற போகுது.. மாப்பிள்ளையை கண் திறந்து பார்... “ என்றார் தன் வருத்தத்தை மறைத்து கொண்டு...

ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.... அதை கண்ட ஜோதியும் பதறி அருகில் வந்து

“என்னங்க….. நம்ம பொண்ணு வாழ்க்கையை நீங்களே கெடுத்துடாதிங்க... கண் முழிச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க.. “ என்று அதற்கு மேல் தொண்டை அடைத்து கொள்ள வாயில் புடவையை வைத்த படியே கண்ணீருடன் நகர்ந்து விட்டார்....

மீனாட்சியும் அவர் அருகில் வந்து

“அண்ணா... நான் தான் உங்க சம்பந்தி... நானும் தமிழ் டீச்சர்தான்.. உங்க பொண்ணை எங்க வீட்டுக்கு மருமகளாக்கிக்க ரொம்ப சந்தோசம்.. நீங்க எழுந்து இந்த கல்யாணத்தை நல்ல படியா நடத்தி கொடுங்க... இத்தனை பேரும் உங்களுக்காகத்தான் காத்துகிட்டிருக்க்கோம்... கண் முழிச்சுக்கங்க..ணா. “ என்றார்

சுந்தரும் அருகில் வந்து

“ஆமாம் சம்பந்தி.... நீங்க முழுமனதோட சம்மதித்து ஆசிர்வாதம் பண்ணினால் நம்ம பசங்க நல்லா இருப்பாங்க.. உங்களுக்காக , உங்க பொண்ணுக்காக, இத்தனை பேர் இருக்கறோம்...

எங்களை எல்லாம் விட்டுட்டு நீங்க மட்டும் வாழ பிடிக்கலைனு போனா எப்படி ??... இன்னும் ரொம்ப நாள் நீங்க இருக்கணும்.. உங்க பேரபுள்ளைங்களை எல்லாம் பார்க்கணும்.....அதனால கண் முழிச்சு எங்களை பாருங்க....” என்றார்...

அத்தனை பேர் சொல்லியும் அவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை..

அதை கண்டு கொஞ்சம் மனம் தளர்ந்த வசி மீண்டும் அருகில் இருந்த ஸ்டெதஸ் ஐ எடுத்து அவர் இதய துடிப்பை சரி பார்த்து மீண்டும் சில பரிசோதனைகளை செய்தவன் மீண்டும் தன் நம்பிக்கையை கூட்டி கொண்டு,

“கடைசி முயற்சியாக பனிமலர்... நீ வந்து அவர் கிட்ட பேசு.. அவர் மனதில் படுகிற மாதிரி ஆழ்ந்து பேசணும்... “ என்றான் வசி....

அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, மலரும் மனதுக்குள் அந்த ஈசனிடம் வேண்டி கொண்டு தன் தந்தையின் அருகில் வந்தாள்....

“அப்பா...........” என்றாள் ஆழ்ந்த குரலில்...

“உங்க பொண்ணு கல்யாணம் உங்களால இப்ப நின்னு போக போகுது.. நீங்க ஆசிர்வாதம் பண்ணாமல் நான் தாலி கட்டிக்க மாட்டேன்.. சொல்லிட்டேன்... இப்ப உங்களுக்கு திருப்தியா??

நீங்க மட்டும் இப்ப கண் முழிக்கலைனா இந்த ஜென்மத்துல உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்காது.. காலம் பூரா உங்க பொண்ணாதான் இருக்க போறேன்.. இப்ப திருப்தியா ??...

என்னை, அம்மாவை , தம்பியை இப்படி விட்டுட்டு நீங்க மட்டும் மேல போகணும் னா போங்க... நாங்க எப்படியோ போறோம்... “ என்று கோபமாக பேச முயன்று அதற்குள் கண்ணை கரித்து கொண்டு வர, தொண்டை அடைத்தது...

அவள் கண்ணில் இருந்த நீர் துளிகள அருகில் இருந்த அவர் கை மீது விழுந்தன...

அந்த துளிகளின் ஈரம் அவர் ஆழ் மனம் வரை பாய்ந்து சென்று அவரை தட்டி எழுப்பியது....

ஆழ் மனதில் விழித்து கொண்டவர் செவிகளில் மங்கல வாத்தியங்கள் முழங்குவதும் ஐயரின் மந்திரங்கள் ஒலிப்பதும் கேட்க, அவசரமாக எதையோ யோசிக்க ஆரம்பித்தார் மனதில்..

ஒரு மருத்துவனாக அவரை, அவர் இதய துடிப்பை, அவரின் உடல் நிலையை அங்கிருந்த கருவிகளின் வழியாக கண்கானித்து கொண்டே இருந்தான் வசீகரன்.. கூடவே அவனுக்கு உதவ ஜூனியர் டாக்டர்ஸ் இரண்டு பேரும் அங்கயே அவர் அருகிலயே இருந்தனர்....

அந்த கண்காணிப்பு கருவியில் சில மாற்றங்கள் வர, உடனே முகம் பிரகாசமாகியது வசிக்கு....

“பனிமலர்.... அவர் கிட்ட கொஞ்சம் மாற்றம் தெரியுது... நீ பேசறதை கன்டினியூ பண்ணு... கீப் இட் அப்... “ என்றான் உற்சாகமாக....

மலரும் உடனே பரபரப்பாகி அவரிடம் இன்னும் அருகில் சென்று அவர் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.. தன் தந்தையை எழுப்பி விடும் வகையில் கொஞ்சம் கோபத்துடன் பேச பேச, மெதுவாக அவர் கை அசைந்தது..

அதை கண்டதுமே துள்ளி குதித்தாள் மலர்... ஆனாலும் கட்டுபடுத்தி கொண்டு தொடர்ந்து பேசியவள் அவர் கையை ஆதரவாக அழுத்தியபடி இன்னும் பேச அவள் திருமணம் அவரால் தான் நின்று விட போகிறது என்று அவர் மனதில் பதியும் படி திரும்ப திரும்ப சொல்ல, அது மீண்டும் அவரை அசைத்து பார்த்தது.....

நீண்ட போராட்டத்திற்கு பிறகு மெல்ல கண் விழித்தார் சிவசங்கர்.....

கண் விழித்ததும் எதிரில் மணக்கோலத்தில் நின்று கொண்டிருந்த தன் மகளை கண்டதும் அவர் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன....

இந்த கோலத்தை காணத்தானே இவ்வளவு நாளாக காத்து கொண்டிருக்கிறார்.... மலரும் இன்னும் அவர் அருகில் வந்து அவர் கையை எடுத்து அவள் கன்னத்தில் வைத்து கொண்டு

“அப்பா... எனக்கு கல்யாணம் பா.. நீங்க ஆசைபட்ட மாதிரியே எனக்கு கல்யாணம் ஆக போகுது.... “ என்று கண்கள் மிளிர சந்தோசத்தில் ஆர்பரித்தாள்....

அதை கண்டு மெல்ல புன்னகை தவழ்ந்தது அவர் உதட்டில்....

பின் கண்களை சுழற்றி யாரையோ தேட, அவர் தன்னைத்தான் தேடுகிறார் என புரிந்து கொண்டவன் தன் கலுத்தின் மீது போட்டிருந்த ஸ்டெதஸ் உடனேயே அவர் பார்வைக்கு வந்து மலரின் அருகில் ஒட்டி நின்றான் வசி....

ஆறடிக்கும் மேலான உயரத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் இன்னும் கம்பீரமாகவும் உதட்டில் சிரிக்கும் அந்த வசீகர புன்னகையுடன் நின்றிருந்த வசி அவரை பார்த்து புன்னகைத்தவாறு

“மாமா... நான் தான் உங்க மாப்பிள்ளை... உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போகிறவன்.. அவளை கண் கலங்காமல் நீங்க எப்படி பார்த்துகிட்டிங்களோ அதைவிட மேலாக பார்த்துக்கறேன்...

நீங்க எங்க கூட இருந்து பார்த்து மகிழணும்... “ என்றான் சிரித்தவாறு...

அவனின் கம்பீரத்தையும் அவன் குரலில் இருந்த ஆளுமையும் கழுத்தில் தொங்கிய ஸ்டெதஸ் ஐயும் கண்டவர் சில நொடிகள் ஆழ்ந்து யோசிக்க, அவன் தான் ஃபேமஸ் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் வசீகரன் என நினைவு வந்தது அவருக்கு......

அவனை முன்பே பார்த்திருக்கிறார்... அதோடு அவனை பற்றியும் அவருக்கு முன்பே தெரியும் என்பதால் அப்படி பட்ட ஃபேமஸ் டாக்டர் தனக்கு மாப்பிள்ளை யா !! என பூரிப்பு அவர் உள்ளே......

அதுவே அவர் முகத்தில் பளிச்சிட, அனைவருக்கும் பெரும் நிம்மதியாக இருந்தது....

“மாமா... உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி தர சம்மதமா?? அப்படீனா இந்த அட்சதையை போட்டு எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க... “ என்றான் அதே வசீகரிக்கும் புன்னகையோடு...

அவன் குரலிலயே அவனுடைய ஆளுமையும் கம்பீரமும் தெரிய அவனை அந்த நொடியே அவருக்கு பிடித்து விட, சம்மதம் என்று தலை அசைத்தவர் அருகில் அட்சதை தட்டுடன் நின்றிருந்த பாரதியை பார்த்தார்...

அவளும் வேகமாக அவர் அருகில் வந்து

“அப்பா.... நான் உங்க மாப்பிள்ளைக்கு தங்கச்சி முறைதான்... இனிமேல் உங்களுக்கு எந்த குறையும் இல்லை.. ஜம்முனு எழுந்து உட்கார போறீங்க பாருங்க..

இத்தனை பேர் உங்களுக்காக இருக்கோம்... கவலையை விட்டுட்டு எங்களோட மகிழ்ச்சியா இருங்க.. “என்று சிரித்தவாறு கொஞ்சம் அட்சதையை எடுத்து அவர் கையில் கொடுத்தார்...

பின் அருகில் இருந்த மலரின் ஒன்னுவிட்ட பாட்டி கனகம்

“எப்படியோ போக இருந்த என் பையன் உயிரை புடிச்சு கொண்டு வந்திட்டார் மாப்பிள்ளை.... இனிமேல் ஒன்னும் பயம் இல்லை... மாப்பிள்ளை, நீங்க தாலியை கட்டுங்க.. அதான் மாமனார் சம்மதம் சொல்லிட்டார் இல்ல... “ என்றார் சிரித்தவாறு....

ஓரளவுக்கு எல்லாரும் டென்சனை விட்டு இயல்பு நிலைக்கு வந்திருந்தனர்....

வசியும் பாரதி வைத்திருந்த தட்டில் இருந்த அந்த மங்கல நாணை, மஞ்சள் கயிற்றில் கோர்த்திருந்த தாலி ஜொலிஜொலிக்க அதை கையில் எடுத்தான்....

அவள் அப்பா கண் விழித்து விடவும் அதன் சந்தோசமும் தன்னவள் தனக்கானவள் ஆக போகிறாள் என்ற நிம்மதி சந்தோசம் எல்லாம் ஒன்று கூட அந்த மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தின் அருகில் கொண்டு வந்தான்....

மலரோ தலையை குனிந்து கொண்டிருந்தாள்.. ஏனோ அவள் உள்ளேயும் படபடப்பாக இருந்தது....

அருகில் வந்தவன் அவள் சம்மதத்திற்காக அவளையே பார்த்து இருக்க, கீழ குனிந்திருந்தவள் அவன் மனதை புரிந்து கொண்டு மெல்ல பார்வையை மட்டும் உயர்த்தி அவனை பார்க்க, அவளின் சம்மதம் வேண்டி அவன் நிற்பது தெரிந்தது...

அவளுள் சில்லிட்டது அவனின் பார்வை....

பின் இலேசாக தலையை அசைத்து கண்ணை மூடி கண்களால் சம்மதம் சொல்ல அவனும் மனம் நிறைந்த பூரிப்பும் மகிழ்ச்சியுடன் அந்த மாங்கல்யத்தை அவள் கலுத்தில் கட்டி அவளை முறைப்படி தன்னவளாக்கி கொண்டான்....

அந்த பாட்டி முன்பே சொல்லி இருந்த மாதிரி வசி இரண்டு முடிச்சிட, அவன் தங்கை வசுந்தரா மூன்றாவது முடிச்சிட்டு அவளை, தன் இதயத்தில் வீற்றிருப்பவளை தன் மனையாள் ஆக்கி கொண்டான் அந்த வசீகர மருத்துவன்....

மலருக்கும் அதுவரை நென்சில் ஒரு மூலையில் அழுத்தி வந்த அந்த இனம் புரியாத உணர்வு, பெரிய பாரம் விலகி ஏதோ பெரும் நிம்மதி வந்து சேர்ந்ததை போல இருந்தது....

ஏனோ தன் உரிய இடத்திற்கு வந்து சேர்ந்த நிம்மதி, மன நிறைவு , மகிழ்ச்சி பூரிப்பு என அத்தனை சந்தோச உணர்வுகளும் அவள் உள்ளே குமிழிட்டன....

அனைவரும் மனம் நிறைந்து அட்சதையை தூவி அவர்களை வாழ்த்த, சிவசங்கரும் அட்சதையை தூவினார் இருவர் மீதும்....

பெரும் நிம்மதி அவர் உள்ளே... தன் மகள் வாழ்க்கை என்னாகுமோ என்று அஞ்சி இருந்தவருக்கு இப்படி ஒரு ராஜகுமாரன் மாதிரி மாப்பிள்ளை தவமின்றி கிடைத்த வரமாக அவருக்கு கிடைத்திருக்க, அதை நினைத்து பூரித்து போனார்...

அருகில் இருந்த அந்த ஜூனியர் மருத்துவர்கள் அவரை உணர்ச்சி வசப்படாமல் இருக்க சொல்லி அறிவுறுத்தினர்....

பின் மீனாட்சி கையோடு கொண்டு வந்திருந்த குங்கமச்சிமிலை நீட்ட, அந்த பாட்டி சொன்ன மாதிரி வசியும் அதில் இருந்த குங்குமத்தை எடுத்து தன்னவள் முன் உச்சி நெற்றியில் வைத்தான்....

அவன் கைவிரல் பட்ட அந்த முதல் தீண்டலில் இருவர் உள்ளேயும் சிலிர்த்தது அந்த நொடி..

இதுவரை தன் தந்தைக்காக அவரின் நிலையை கண்டு அவர் நல்ல படியாக எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஓடி கொண்டிருந்ததால் தனக்கு திருமணம் என்பதே மலரின் மனதில் ஒட்டவில்லை...

அவள் தந்தை இப்பொழுது விழித்து கொள்ள, அதுவும் அவர் முகத்தில் தெரிந்த பூரிப்பை கண்டதும் பெரும் நிம்மதி வந்து சேர்ந்திருக்க, அப்பொழுது தான் தன்னை பற்றி நினைவு வந்தது மலருக்கு....

தனக்கு திருமணம்... அதுவும் அவள் எப்பொழுதும் ப்ரியாக வாயடித்து வம்பிழுத்து ஓட்டும் புகழ் பெற்ற அவளுக்கு மிகவும் பிடித்த அந்த இதயத்தை காக்கும் வசீகர இதய நல மருத்துவனே கணவனாக வந்ததை எண்ணும்பொழுது எப்படி உணரவேண்டும் என்றே புரியவில்லை...

ஆனால் ஏனோ பெரும் நிம்மதியாக இருந்தது அவள் உள்ளே...!!

அதோடு அவன் தாலி கட்டும் பொழுது தெரிந்த அவன் பார்வையும் தன் கழுத்தில் முடிச்சிடும் பொழுது பட்ட அவன் விரல்களின் மெல்லிய ஸ்பரிசமும் ஏதோ ஒரு புது வித உணர்வை உண்டாக்கியது பனிமலருக்கு...

இப்பொழுது எல்லார் முன்னாடியும் உரிமையுடன் குங்குமத்தை அவள் நெற்றியில் அவன் வைக்க இன்னுமே சிலிர்த்து போனாள் பெண்ணவள்...

பின் அதே குங்குமத்தை எடுத்து முன்னால் அவள் மார்பில தொங்கி கொண்டிருந்த அவன் அடையாளமாகிய அந்த தாலியை ஒரு கையால் எடுத்து அதற்கு குங்குமம் வைக்க, அதுவரை தெரியாத அவன் நெருக்கம் அவளுக்குள் படபடப்பை கொண்டு வந்து சேர்த்தது........

குங்குமம் வைத்து முடிக்கவும் அதோடு விடாமல் இருவரையும் மாலை மாற்ற வைக்க, ஓரளவுக்கு எல்லாரும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்க அந்த அவசர கல்யாணத்திலயும் பொண்ணு மாப்பிள்ளையை சீண்டி எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியை கொண்டு வந்திருந்தாள் பாரதி.....

மாலை மாற்றும் பொழுது அவன் உயரத்துக்கு கொஞ்சம் எக்கிதான் அவள் மாலை போட வேண்டியதாயிருந்தது....

பின் மீனாட்சி கொண்டு வந்திருந்த மெட்டியை எடுத்து அவன் கையில் கொடுத்து போட சொல்ல அவனுக்கே ஆச்சர்யம்... இதெல்லாம் எப்ப அவன் அம்மா வாங்கினார் என்று...

“என்னடா பார்க்கிற கண்ணா.... ?? நான் தான் இதெல்லாம் 3 வருசம் முன்னாடியே வாங்கி வச்சுட்டேன்.. என்ன... மருமகளுக்காகத்தான் வெயிட்டிங்... “ என்று சிரித்தார் மீனாட்சி...

அவனும் சிரித்தவாறு அந்த மெட்டியை எப்படி போடுவது என்று யோசிக்க, உடனே கொஞ்சமும் யோசிக்காமல் மண்டியிட்டு அமர்ந்து அவள் பாதத்தை கையில் ஏந்தி தன் மடி மீது வைத்து அவள் காலுக்கு அந்த மெட்டியை போட்டு விட்டான்....

அவனின் அந்த திடீர் செய்கையில் அனைவரும் சிரிக்க, மலருக்கோ வெக்கமாகி போனது.. மெல்ல கன்னம் சிவந்தாள்...

அவனோ யாரையும் கண்டுகொள்ளாமல் அவளின் சிவந்திருந்த பாதத்தின் அழகை ரசித்தவாறு மற்றொரு காலுக்கும் மெட்டி அணிவித்து அதற்கு ஒரு முத்தத்தை பரிசாக கொடுக்க துடித்த தன் இதயத்தை அடக்கியவன் மனமே இல்லாமல் அவள் பாதத்தை கீழ வைத்தான்...

“வசி அண்ணா....இப்பயே பொண்டாட்டி காலை புடிச்சிட்டிங்களே..!! இனி காலம் முழுவதும் கால் புடிக்க வேண்டியது தான்.. “ என்று ஓட்டினாள் பாரதி..

அதை கேட்டு அனைவரும் சிரிக்க வசியும் எதுவும் சொல்லாமல் மெல்ல வெக்கபட்டு புன்னகைத்தான்...

அதை கண்டு சிவசங்கருக்கு மனம் நிறைந்து இருந்தது... பின் இருவரும் அவர் பாதம் தொட்டு வணங்க, அவர் எழுந்திருக்க முடியாமல் படுத்தபடியே அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தார்..

பின் மீனாட்சி, சுந்தர் , ஜோதி, சோமு, பாட்டி கனகம், சுசிலா என்று அனைத்து பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்..

பின் அங்கு இருந்த ரிஜிஸ்டர் முன்னிலையில் இருவரும் தங்கள் திருமணத்தை ரிஜிஸ்டர் பண்ண, சோமு மற்றும் நிகிலன் சாட்சி கையெழுத்திட்டனர்....

அதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த சிவசங்கர் க்கு மனம் நிம்மதியானது... அவரை கண்கானித்து கொண்டிருந்த ஜூனியர் டாக்டர்ஸ் ம் இனி எந்த பயமும் இல்லை என்க,

மீண்டும் அவர் அருகில் வந்தவன்

“சரி மாமா.. நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க... நாங்க வெளில இருக்கோம்.. “ என்று சொல்லியவன் அங்கு இருந்த ட்யூட்டி நர்சிடம் சில இன்ஸ்ட்ரக்சனை கொடுத்து அங்கயே இருக்க சொல்லி, மற்ற அனைவரையும் அழைத்து கொண்டு வெளியேறினான் வசி மன நிறைவுடன்........

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!