என் மடியில் பூத்த மலரே-14



அத்தியாயம்-14 

ங்கிட்ட மடிப்பிச்சை கேட்குறேன்... என் குலத்தை வாழ வை “ என்று கண் கலங்கி தன் முந்தானையை நீட்டினார் பாரதியின் முன்னே ஜானகி.....

அதை கண்டதும் பதறிய பாரதி,

“ஐயோ !! என்ன அத்தை இது?? ... நீங்க போய் பிச்சை அது இது னு... பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு...

நீங்க எங்களுக்கு செஞ்ச உதவிக்கு ... “ என்று சொல்லும் பொழுதே நேற்று சுசிலாவும் ஜானகியும் அறையில் பேசி கொண்டு இருந்தது ஞாபகம் வந்தது... எவ்வளவு பெரிய உதவியை தங்களுக்கு செய்து இருக்கிறார்.. இவர் மட்டும் அந்த இக்கட்டான நேரத்தில் பணம் கொடுத்து உதவி இருக்காவிட்டால் தன் தந்தை நிலை என்னாவாயிருக்கும்” என்று நினைத்து பார்த்தாள் பாரதி

ஜானகியோ பாரதி உதவி என்றதும் தான் அவர்களை பார்த்து கொண்டதைத்தான் குறிப்பிடுகிறாள் என்று புரிந்துகொண்டு

“அச்சோ!!.. நான் உன் கூட இருந்து பார்த்துகிட்டதை போய் உதவினு சொல்லாத பாரதி.. அதையும் நான் கேட்ட இந்த உதவியையும் முடிச்சு போடாத... நான் அதை ஒரு அண்ணனுக்கு செஞ்சதாகத்தான் நினைக்கிறேன்.. சொல்ல போனால் அப்ப இந்த மாதிரி உங்கிட்ட கேட்கனும் என்ற எண்ணமே இல்லை.. நேற்று உன்னை பற்றி தெரிந்த பிறகுதான் இப்படி ஒரு எண்ணம் வந்தது...

நீ நல்லா யோச்சிச்சு சொல்லுமா... நீ சொல்ல போற வார்த்தையிலதான் எங்க குல வம்சம் அடங்கியிருக்கு... ” என்று தழுதழுத்தார்...

“ஆமா.. இதுக்கு உங்க பையன் ஒத்துகிட்டாரா??? “ என்றாள் பாரதி

“அவன் எங்க அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கிட்டான்... நான் சண்டை போட்டு உண்ணா விரதம் இருந்துதான் சம்மதிக்க வச்சேன்.. இது மாதிரி நான் ஒரு பொண்ணை தேடிகிட்டு இருக்கிறது தெரியும்.. நான் தேடற மாதிரி பொண்ணு கிடைக்காதுன்னு முன்னாடியே தெரியும்னு நினைக்கிறேன்.. அதான் ஜாலியா சுத்திகிட்டிருக்கான்... அவன் எப்படியும் சம்மதிச்சிடுவான்.. உன்னோட முடிவுதான் முக்கியம் இப்போ!!!

நான் கூட அந்த முருகன் கிட்ட கேட்டுட்டுதான் இந்த முடிவுக்கு வந்தேன்.. நீ யோசிச்சு சொல்லுமா” என்றவரின் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு, இயலாமை எல்லாம் தேங்கி இருந்தது...

பாரதி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்...

“நீ இது மாதிரி வந்துட்டா வேலைக்கு போக முடியாதுனு யோசிக்காத பாரதி மா... நானே மாதம் மாதம் உனக்கும் , உன் குடும்பத்துக்கும் தேவையான செலவை கொடுத்துடறேன். அதோடு உங்க அக்கா மஹா கல்யாணத்தையும் நானே ஏத்துக்கறேன்” என்று அவர் முடிக்கும் முன்பே

“என்ன அத்தை?? .. பணத்தை காட்டி என்னை விலைக்கு வாங்குறீங்களா??? “ என்று கோபமாக முறைத்தாள் பாரதி

“ஐயோ!! அப்படி எல்லாம் இல்லை பாரதி... பணம் என்ன மா பணம்.. பணத்தால சந்தோஷத்தையும், நிம்மதியையும் வாங்க முடியாதுனு நான் தான் தெரிஞ்சு கிட்டேனே...இவ்வளவு பணம் இருந்தும் என் ராமை என்னால காப்பாற்ற முடியாமல் கை நழுவ விட்டுட்டேனே...அதுலயே எல்லாம் விட்டு போச்சு பாரதி..

நீ இல்லாமல் உன் குடும்பம் தடுமாறக்கூடாது இல்லையா.. அதான்..

எங்க வீட்டு வாரிசை மட்டும் பெத்து கொடு.. எங்க சொத்தில பாதி என்ன முழுசையுமே கொடுத்திடறோம்” என்றவரின் கண்களில் தெரிந்த அந்த வலி சொல்லியது அவர் எவ்வளவு அடி பட்டு இருக்கிறார் என்று... ஒரு குழந்தைக்காக எப்படி ஏங்கி கொண்டிருக்கிறார் என்று....

அதை கண்டதும் பாரதிக்கு ஏதோ புரிந்தது.. சிறிது நேரம் அமைதியாக யோசித்து கொண்டு இருந்தாள்.. ஜானகி அவளையே தவிப்புடன் பார்த்து கொண்டிருந்தார்..

“ஹ்ம்ம்ம் சரி அத்தை.. அந்த முருகனோட முடிவு இதுதானா அப்படியே நடக்கட்டும்... நீங்க இதுக்கான ஏற்பாட்டை ஆரம்பிங்க” என்று பட்டென்று தன் முடிவை சொன்னாள்...

அதை கேட்டதும் ஜானகியின் உள்ளம் குளிர்ந்தது.. முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது..

“நிஜமாகவா பாரதி!! நீ நல்லா யோசிச்சு சொல்லு... இந்த அத்தைக்காக பார்க்காத “

“இதுல யோசிக்க என்ன இருக்கு அத்தை?? ... இருக்கிறதை இல்லாதவங்களுக்கு கொடுக்கதான் ஆண்டவன் நம்மளை படைச்சிருக்கான்... என்னால உங்களுக்கு, நீங்க இழந்த சந்தோஷம் திரும்ப வரும்னா, கண்டிப்பா செய்வேன்.. நீங்க எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கனும். அழு மூஞ்சி அத்தையா இருக்க கூடாது” என்று சிரித்தாள் பாரதி..

அவளை அப்படியே கட்டி அணைத்து கொண்டார் ஜானகி...

“என் வயிற்றில பாலை வார்த்த பாரதி... நீ மஹராசியா இருப்ப.. உன்னோட எதிர்காலத்தை நான் பார்த்துக்குவேன்.. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமச்சு கொடுப்பது என் கடமை.... “

“ஹ்ம்ம் சரி அத்தை... நேரம் ஆயிருச்சு.. அப்பா பார்த்துகிட்டு இருப்பார்.. வாங்க போகலம்.. இந்த விசயம் நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்.. எங்க வீட்டுக்கு இப்போதைக்கு தெரிய வேண்டாம்... அவங்களால இத ஏத்துக்க முடியாது”

“ஹ்ம்ம் புரியுது பாரதி மா... “

என்று பேசிகொண்டே இருவரும் கிளம்பி மருத்துவமனையை அடைந்தனர். பின் ஜானகி தர்மலிங்கத்துடன் கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்து விட்டு சுசிலா அன்று பிசியாக இருந்ததால் பாரதி சம்மதித்து விட்டாள் என்று போனில் சுருக்கமாக சொல்லி விட்டு பிறகு பேசலாம் என்று வீட்டிற்கு திரும்பினார்..

ஜானகி சென்றதும் பாரதிக்கு என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது..

“ஏதோ ஒரு வேகத்தில் நான் பாட்டுக்கு சரி னு சொல்லிட்டேனோ?? நான் எடுத்த முடிவு சரியா??? “ என்று தன்னைதானே கேட்டு கொண்டாள்..

பின் அவள் வீட்டில் இருந்து போன் வரவும் தன் குழப்பத்தை மறைத்து கொண்டு அனைவரிடமும் பேசினாள்.. பின் அலைபேசியை தன் அப்பாவிடம் கொடுத்தாள்.. எல்லாரும் அவரிடம் நலம் விசாரித்து விட்டு சீக்கிரம் அவர்களை வீட்டுக்கு வர சொல்லினர்.. தர்மலிங்கம் பேசி முடித்ததும் பாரதியின் கையில் அலைபேசியை கொடுத்தார்...

அதை கையில் வாங்கிய பாரதி தன் ஆயாவிடம் பேச வேண்டும் என்றாள்.. அவளுக்கு குழப்பமாக இருக்கும் நேரங்களில் முதலில் அந்த வேலனிடமும் பின் தன் ஆயாவிடமும் தான் ஆலோசனை கேட்பாள்.. அதே மாதிரி இப்ப தான் எடுத்த முடிவு சரியா என்று கேட்க வேண்டும் போல இருந்தது...

அலைபேசியை வாங்கிய அவளின் பாட்டி காமாட்சி

"சொல்லு தாயி!!.. உன் மனசுல என்ன குழப்பம்??? " என்றார்.

பாரதிக்கு ஒரே ஆச்சர்யம்.. எப்படி இந்த ஆயாவுக்கு தெரிந்தது என்று.. அதையே ஆயாவிடம் கேட்டாள்..

"எப்படி ஆயா உனக்கு தெரிந்தது??? "

"நீ பிறந்ததில் இருந்து உன்னை தூக்கி வளர்த்தவ இந்த கிழவி.. உன்னை பற்றி எனக்கு தெரியாதா தாயி.. நீ முன்னாடி பேசிய பேச்சிலிருந்தே கண்டு பிடிச்சிட்டேன் நீ ஏதோ மனசுல போட்டு உழற்றிகிட்டு இருக்கனு... அப்படி என்ன தாயி உன் மனசை அறுத்து கிட்டு இருக்கு"

"ஹ்ம்ம்ம் ஒரு யோசனை வேணும் ஆயா… "

"நம்ம வீட்டுக்கு, ஏன் இந்த ஊருக்கே யோசனை சொல்றவ நீ... உனக்கு என்ன குழப்பம் சொல்லு மா.."

"ஹ்ம்ம்ம்ம் நம்மளுக்கு கஷ்டத்துல ஒருத்தர் உதவி செஞ்சுருக்காங்க..இப்ப அவங்களுக்கு ஒரு உதவினு கேட்குறப்போ நாம என்ன செய்யறது???" என்ற தன் குழப்பத்தை மறைமுகமாக கேட்டாள்...

"இதுல குழம்பறதுக்கு என்ன இருக்கு?? .. நமக்கு உதவி செஞ்சவங்களுக்கு நாம திருப்பி பதில் உதவி செய்யனும்...மறுக்காம செய்யனும் தாயி "

"அது எவ்வளவு பெரிய உதவியினாலுமா??? "

"உதவியில சின்னது என்ன பெறுசு என்ன??? அதுவும் நமக்கு நெருக்கடியான சமயத்துல செஞ்ச உதவிக்கு நாம் எப்படி பட்ட உதவினாலும் தயங்காமல் செய்யனும்.. நம்ம உயிரையே கேட்டா கூட கொடுக்கனும்ம்....

மஹாபாரதத்துல துரியோதனன் செஞ்ச உதவிக்கு கைமாறா அந்த கர்ணன், பாரத போர்ல துரியோதனன் பக்கம் தப்பே என்று தெரிந்தும் அவன் தனக்கு செஞ்ச உதவிக்கு நன்றிகடனா கடைசி வரைக்கும் துரியோதனுக்காக நின்றானே...அந்த மாதிரி

ஒருத்தங்க நம்ம கிட்ட உதவினு கேட்கிறப்பவே நம்மலாள முடியும் னு தெரிஞ்சுகிட்டுதான கேட்பாங்க.. அப்படி கேட்ட பிறகு அதை மறுக்க கூடாது.. நம்ம உயிரை கொடுத்து கூட அதை நிறைவேற்றனும் தாயி..

ஆமா.. அப்படி யாரு உங்கிட்ட என்ன உதவி கேட்டா??? "

இதுக்கு என்ன சொல்லுவது என்று முழித்தவள்

“எனக்கு இல்லை ஆயா.. பக்கத்து அறையில இருக்கிறவங்க இப்படி கேட்டாங்க.. அதான் எனக்கு சரியா சொல்ல தெரியல..... உங்கிட்ட கேட்டேன்" என்று ஒருவாறு சமாளித்தாள்...

"ஹ்ம்ம்ம் பட்டணத்துக்கு போயும் உன் யோசன சொல்றதை விடறதில்லை… என் பேத்தி யாரு?? .. மஹாராணி இல்ல.. “என்று பெருமையாக சிரித்தார். பின்

“சரி தாயி.. நீ பத்திரமா இரு. உன் அப்பன நல்லா பார்த்துக்கோ.. சீக்கிரம் திரும்பி வாங்க.. நீங்க ரெண்டு பேரும் இல்லாம வீடே வெறிச்சோடி இருக்கு... சீக்கிரம் வந்து சேருங்க" என்று அலைபேசியை வைத்தார்...

தன் ஆயாவிடம் பேசிய பிறகு பாரதிக்கு ஓரளவு தெளிவானது... சிறிது நேரத்தில் சுசிலா பாரதியை தன் அறைக்கு அழைத்தார்...

அவர் எதற்காக கூப்பிடுகிறார் என்று தெரிந்து கொண்டேதான் அவரின் அறைக்கு சென்றாள் பாரதி..உள்ளே சென்றதும்

"சொல்லுங்க டாக்டர்.. வர சொன்னீங்களா?? "

"உனக்கு அறிவு இருக்கா பாரதி.. ஜானகி தான் வயசான காலத்துல ஏதோ உளறிக்கிட்டு இருக்கானா நீயும் அதுக்கு சம்மதம் னு சொன்னியாமில்லை.. உனக்கு என்ன பைத்தியமா??? " என்று கோபமாக கத்தினார் சுசிலா

"இல்லை டாக்டர்.. எனக்கு பிடிச்சுதான் சம்மதம் சொன்னேன்" என்று இழுத்தாள்

"உளறாத பாரதி... என்ன பிடிச்சது?? இதுனால உன் எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியுமா?? இது மற்ற தானம் மாதிரி இல்லை பாரதி.. ஒரு குழந்தையை சுமக்கனும்.. அதை சுமக்கும் பொழுது உன் உடலிலும் மனதிலும் என்னென்ன மாற்றங்கள் ஆகும் னு தெரியுமா உனக்கு?? “

“தெரியும் டாக்டர்.. நானும் இதை பற்றி படிச்சிருக்கேன்”

“தெரிந்துமா இதுக்கு சம்மதிக்கிற??? இதனால உன்னோட எதிர்காலம் பாதிக்கபடும் பாரதி”

“இனிமேல் என்னோட எதிர்காலமே என் குடும்பம்தான் டாக்டர்.. அப்பாவால முன்ன மாதிரி இனிமேல் முடியாது.. மஹா, என் தம்பி, தங்கச்சி எல்லாரையும் முன்னேற்றது தான் என் எதிர்காலம்.. இதில எனக்குனு என்ன இருக்க போகுது.. ஏதோ என்னால ஒரு குடும்பம் நிம்மதியா சந்தோஷமா இருக்கும்னா அதுக்காக இத செய்யறது தப்பே இல்லை... “ என்று தன் பக்கத்து விளக்கத்தை சொன்னாள்..

அதை கேட்டதும் கொஞ்சம் தணிந்த சுசிலா சிறிது நேரம் யோசித்தார். பின் பாரதியை பார்த்து

“பாரதி.. வந்து... ஜானகி உன்னை எதுவும் பணம் கேட்டு மிரட்டினாளா??... “ என்று தயங்கி கேட்டார்..

“பணம்??? “ என்று தெரியாதவளை போல கேள்வியாக சுசிலாவை பார்த்தாள் பாரதி

“அது வந்து... உங்க அப்பா ஆபரேசனுக்கு ஜானகிதான் பணம் கொடுத்தாள்.. அதை வைத்து எதுவும் உன்னை மிரட்டி இதுக்கு சம்மதிக்க வைத்தாளா??? “

அதை கேட்டதும் பாரதி சிரித்தாள்

“என் மேல நீங்க வச்சிருக்கிற பாசத்துக்கு ரொம்ப நன்றி டாக்டர்... எனக்காக நீங்க இவ்வளவு நாளா பழகின உங்க ப்ரெண்ட் ஐ புரிஞ்சுக்கலையே “ னு கொஞ்சம் வருத்தமும் கோபமும் வருது... ஜானகி அத்தை குழந்தை மாதிரி... அவங்களுக்கு போய் என்னை மிரட்டற அளவுக்கு யோசிக்க முடியுமா.. எனக்காக அவங்களை கூட விட்டு கொடுக்கறீங்களே...அவங்க பணம் கொடுத்த விபரம் நேற்று நீங்க பேசிகிட்டிருக்கும் பொழுதே எனக்கு தெரியும்...”

“அதில்லை பாரதி.. நீ சொன்னியே அந்த ஜானகி குழந்தைக்கு, தான் எதுக்கு அடம் பிடிக்கிறோம் னு தெரியாது.. ஒரு இத பிடிச்சிட்டானா அதுலயேதான் நிப்பா..இவளை சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும் னு ஆகிடறது.. அதான் அந்த குழந்தை இப்படி எதுவும் கேட்டுச்சோனு ஒரு சந்தேகம்”

“அப்படி எல்லாம் இல்லை டாக்டர்.. அவங்களுக்கு இன்னும் எனக்கு அவங்கதான் பணம் கொடுத்தாங்க என்று தெரிந்தது தெரியாது.. அதில்லாம ஒரு பொண்ணால அந்த குடும்பம் பட்ட கஷ்டத்தை கேட்டு, அவங்க மகிழ்ச்சி திரும்பவும் அந்த வீட்டில நிலைக்கனும்னு நானே சம்மதிச்சு செய்யறதுதான்...

நீங்க, கமலா மேடம், ஜானகி அத்தை மாதிரி நல்லவங்க என்னை சுற்றி இருக்கும் பொழுது எனக்கு என்ன கஷ்டம் வந்திட போகுது..

அப்படி எதுவும் வந்தாலும் என் முருகன் பார்த்துப்பான்.. இனிமேல் இத பற்றி பேச வேண்டாம் டாக்டர்.. அடுத்து என்ன செய்யனுமோ அதை பாருங்க... “ என்று அந்த பேச்சை அதோடு முடிக்க முயன்றாள்..

“நீயும் சரியான முருகன் பைத்தியமா??.. அப்ப ரெண்டு பேரும் ஒரே குட்டையில விழுந்த மட்டைங்கதான்.. உங்கள திருத்தவே முடியாது.. என்னவோ செஞ்சு தொலைங்க “ என்று தலையில் அடித்து கொண்டார்...

“ஓகே டாக்டர்.. அப்புறம் பார்க்கலாம்” என்று சிரித்து கொண்டே வெளியேறினாள் பாரதி..

வீட்டை அடைந்த ஜானகியோ சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தார்.. அந்த முருகன் கண்ணை திறந்துட்டான்.. நல்ல வழியை காட்டிட்டான்.. இனிமேல் எந்த கஷ்டமும் இருக்காது “என்று குதூகாலித்து கொண்டே தன் மகனின் வருகைக்காக காத்துகொண்டிருந்தார்...

வாசலுக்கும் வீட்டிற்கும் ஒரு நூறு முறையாவது நடந்திருப்பார்...

ஆதியின் காரின் சத்தம் கேட்கவும் அவசரமாக வாசலுக்கு சென்று அவனை வரவேற்றார்..

“என்னமா??? இன்னைக்கு வரவேற்பு எல்லாம் பலமா இருக்கு?? “ என்று சிரித்துகொண்டே உள்ளே வந்தான் ஆதி

“அதெல்லாம் ஒன்னும் இல்லை கண்ணா... நீ சீக்கிரம் போய் ரிப்ரெஸ் ஆகிட்டு வா.. இன்னைக்கு உனக்கு பிடித்ததெல்லாம் பண்ணியிருக்கேன் “என்று சிரித்து கொண்டே உள்ளே சென்று அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்தார்...

தன் அன்னையின் முகத்தில் தெரிந்த ஒளி வட்டம் ஆதியின் வயிற்றில் புளியை கரைத்தது

“ஐயோ!!! இவங்க இருக்கிற சந்தோஷத்தை பார்த்தால் ஏதோ விஷயம் பெருசா இருக்கும் போல... அந்த மாபியா கும்பல் வேற என்ன பண்ணி வச்சிருக்கோ??? என்ன பிரச்சனயை இழுத்து விட போறாங்களோ?? ” என்று பயந்தாலும் எதுனாலும் தன் அன்னையின் சந்தோஷத்தை கெடுக்க கூடாது.. அவர் முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷம் ஆதிக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுத்தது..

அவரின் இந்த மகிழ்ச்சி நிலைக்க எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கலாம் என்று எண்ணியவாறு கீழே வந்தான்..

அவன் சாப்பிட அமர்ந்ததும் ஜானகி அவனுக்கு சாப்பிட எடுத்து வைத்தார்... அன்று எல்லாம் அவனுக்கு பிடித்ததாக அவரே சமைத்து இருந்தார்..

நீண்ட நாட்களுக்கு பிறகு தன் அன்னையின் கை வண்ணத்தில் செய்ததை அவனும் ரசித்து சாப்பிட்டான்...ஜானகி தன் மகன் ரசித்து சாப்பிடுவதையே மனம் நிறைந்து ரசித்து கொண்டிருந்தார்.. அதோடு இவனிடம் எப்படி சொல்வது என்ற யோசனையும் கூடவே தேங்கி இருந்தது அவர் முகத்தில்...

ஆதி பாதி சாப்பிட்டதும், தன்னையே ரசித்து பார்த்து கொண்டிருக்கும் தன் அன்னையை பார்த்து

“ஹ்ம்ம்ம்ம் சொல்லுங்கம்மா.. என்ன விஷயம்??? என்னமோ சொல்லனும் னு நினச்சு கிட்டிருக்கீங்களே... சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கும் சஸ்பென்ஸ் தாங்க முடியலை” என்று சிரித்தான்...

அவனின் அந்த சிரிப்பையும் ரசித்தவர்

“இந்த பய எப்படி தான் கண்டுபிடிப்பானோ என் மனசுல இருப்பத” என்று செல்லமாக திட்டிகொண்டே

“அது வந்து கண்ணா... நம்ம வீட்டு வாரிசை சுமக்க நாம ஒரு பொண்ணை தேடி கிட்டிருந்தோம் இல்லை... நீ சொன்ன மாதிரியே குணங்களோட அந்த பொண்ணு கிடைச்சிட்டா..” என்று மகிழ்ச்சி பொங்க சிரித்தார்...

அதை கேட்டதும் ஆதித்யா ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான்.. 



“சே!!! இவங்க கண்டு பிடிக்ககூடாதுனுதானே அத்தனை கன்டிசன் போட்டேன்.. அதையும் மீறி எப்படி??? இல்லையே... நான் சொன்ன மாதிரி திருமணம் ஆகாத நல்ல குடும்பத்து பொண்ணு, திருமணத்திற்கு முன்னாடியே ஒரு குழந்தையை சுமக்க அந்த பொண்ணு ரெடியா இருக்கனும்னா அவள் எப்படி நல்லவளா இருக்கமுடியும்?? கண்டிப்பா அந்த பொண்ணுக்கு வேற ஏதோ ஒரு திட்டம் இருக்கனும்... “ என்று மனதுக்குள் புகைந்தவாறெ

“அம்மா.. நல்லா விசாரிச்சீங்களா??? நான் சொன்ன கன்டிசனுக்கு ஒத்துகணும்னா எப்படி அவ நல்ல பொண்ணா இருக்க முடியும்.. கண்டிப்பா இதுல ஏதோ சதி இருக்கனும்” என்று அவன் முடிக்குமுன்னே

“போதும் நிறுத்துடா... சதியும் இல்ல.. ஒரு மண்ணும் இல்லை... நானே அவ கையில காலுல விழுந்து இதுக்கு சம்மதம் வாங்கியிருக்கேன்.. நீ வேற??? “ என்று கோபமாக முறைத்தார்..

“இப்ப இருக்கிற பொண்ணுங்க எப்ப, எப்படி மாறுவாங்கனு தெரியாது மா .. நீங்க பாட்டுக்கு ஏதாவது செய்ய போய் இன்னும் பெரிய பிர்ச்சனைய கொண்டு வந்திடும். இதெல்லாம் வேண்டாம்..ஒரு தரம் பட்டது போதும்.. தயவு செய்து விட்டுடுங்க. “

‘ஆதி... இவ ஒன்னும் நிமிஷத்துக்கு மாறுகிற பொண்ணு இல்லை... வெகுளியான கிராமத்து பொண்ணு.. அதுவும் நம்ம குடும்பம் நல்லா இருக்கனும்னு நல்ல எண்ணத்துல தான் ஒத்துகிட்டா... நீ பாட்டுக்கு வாயில வந்தது எல்லாம் பேசாத” என்று கடுமையாக முறைத்தார் அவனை மீண்டும்...

“சரி..சரி. சுசிலம்மாவுக்கு தெரியுமா??.. “

“ஹ்ம்ம்ம் தெரியும்... அவளும் நல்ல பொண்ணுன்னு தான் சொன்னா “

“எனக்கு என்னவோ மனசு ஒத்துக்க மாட்டேங்குது இந்த மாதிரி செய்ய மா “

“எனக்கு மட்டும் என்ன ஆசையா??? நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லு... இந்த திட்டத்தை இப்படியே விட்டுடலாம்.. அந்த பொண்ணையே கூட உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுடறோம்... என்ன சொல்ற கண்ணா??? ” என்று கண்ணில் ஆர்வத்தோடு தன் மகனை பார்த்தார்...

கல்யாணம் என்றதும் ஆதியின் உடல் விரைத்தது..அந்த ஷ்வேதா ஆடிய ஆட்டமும் அவளின் கடைசி பேச்சும் கண் முன்னே வந்து போனது .... உடல் விரைத்து கண்கள் சிவக்க ஆரம்பித்தது.. தன்னை கட்டு படுத்தி கொண்டவன் தன் அன்னையை பார்த்து

“வேண்டாம் மா.. அந்த பேச்சை விடுங்க”

“அப்படீனா நீ இதுக்கு ஒத்துக்கோ “ என்று அவனுக்கு செக் வைத்தார்...

“ஏதோ பண்ணி தொலைங்க” என்று வேகமாக பாதியில் எழுந்து கை கழுவி விட்டு மாடிக்கு சென்றான்..

தன் மகன் சாப்பாட்டில் பாதியில் எழுந்தது மனம் வலித்தாலும் எல்லாம் அவனோட நல்லதுக்குதான்.. போகட்டும்... ஒரு நாள் அறை வயிறோடு இருக்கட்டும்” என்று திட்டி கொண்டே பாத்திரங்களை எடுத்து வைத்தார்

தன் அறைக்கு சென்ற ஆதி மனது பொறுக்காமல் சுசிலாவுக்கு போன் செய்தான்

“என்ன சுசிலாம்மா... நீங்களும் இப்படி பண்ணிட்டீங்க??? “ என்று கோபத்தோடு ஆரம்பித்தான்.. அவன் எதை குறிப்பிடுகிறான் என்று அறிந்தவர்

“நான் என்னடா பண்றது கண்ணா... நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் .. ஜானகி கேட்க மாட்டேங்குறா..அவள் உன்னை நினைத்தே சீக்கிரம் பைத்தியம் ஆகிடுவா போல ... போன வாரம் கோயில்ல என்ன ஆச்சு தெரியுமா??? என்று ஆரம்பித்தவர் பின் இதை ஆதியிடம் சொல்லக்கூடாது என்று ஜானகி சொன்னது நினைவு வரவும் அதோடு நிறுத்தினார்..

ஆனால் ஆதி அதை கண்டுகொண்டு,

“கோயில்ல என்னாச்சு மா?? சொல்லுங்க “

“ஒன்னும் இல்லை கண்ணா” .. என்று மறைக்க முயன்றார்... ஆனால் ஆதி வற்புறுத்தி கேட்கவும் கோயிலில் ஜானகி மயங்கி விழ இருந்ததையும் பாரதி காப்பாற்றியதையும் சுறுக்கமாக சொன்னார்.. நீ மட்டும் இதுக்கு சம்மதிக்கலைனா இதை நினைத்தே அவள் மனதால் பாதிக்க வாய்ப்பு இருக்கு... ஏற்கனவே ராம் அண்ணாவை இழந்தாச்சு.. இப்ப ஜானகியையும் இழக்கனுமா?? ...

நீ கொஞ்சம் உன் பிடிவாதத்தை விட்டு கொடுடா... உனக்காக இல்லைனாலும் ஜானகிக்காகவாது இதுக்கு ஒத்துக்கோ.. “ என்று சமாதானம் செய்ய முயன்றார்...

அதை கேட்டதும் கொஞ்சம் இளகியவன்

“ஆமா அந்த பொண்ணு எப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு குழந்தையை சுமக்க ஒத்துகிட்டா??? இது அவள் எதிர்காலத்தை பாதிக்காதா ??? “ என்று தன் மனதை உறுத்தி கொண்டிருந்ததை கேட்டான்.

அதை கேட்டதும் சுசிலாவின் உள்ளம் குளிர்ந்து போனது..

“தன்னை மாதிரியே அந்த பொண்ணுக்காக பார்க்கிறானே.. நான் வளர்த்த பையன் அல்லவா ” என்று பூரித்து போனார்..

“ஹ்ம்ம்ம் நீ சொல்றது சரிதான் கண்ணா... நானும் அந்த பொண்ணுகிட்ட சொல்லி பார்த்துட்டேன்.. ஆனால் அவளும் கேட்க மாட்டேங்குறா… “

“என்னது??? அந்த பொண்ணுகிட்ட பேசுனீங்களா??? இதை வேண்டாம்னு சொன்னீங்களா மா?? “ என்று ஒரு வித ஆராயும் நோக்கோடு கேட்டான்..

அது தெரியாமல் சுசிலா

“ஆமா கண்ணா.. உனக்கு இது நல்லது இல்லை.. உன் எதிர்காலம் பாதிக்க படும்னு அந்த பொண்ணுகிட்ட சொன்னா அவளும் கேட்பதாக இல்லை.. நான் என்ன செய்ய??

ஆனால் பாரதி ரொம்ப நல்ல பொண்ணு கண்ணா... அவள் ஜானகி மேல வச்ச பாசத்துல தான் இதுக்கு ஒத்துகிட்டா “ என்று பாரதியை பற்றி நல்ல விதமாக சொல்லியது எதுவும் ஆதித்யாவின் காதை எட்டவில்லை... அவர் பாரதியை பற்றி சொல்லு முன்னே அலைபேசியை அனைத்து இருந்தான்...

“ஒரு டாக்டரே வேண்டாம் என்று சொல்லியும் அந்த பெண் ஒத்துக்கொள்கிறாள் என்றால் இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது.. கண்டிப்பா அந்த பெண் நல்லவளா இருக்க மாட்டாள் “ என்று ஒரு தப்பான முத்திரையை குத்தினான் ஆதித்யா... அவனின் இந்த தப்பான பார்வையால் அந்த பெண் எவ்வளவு கஷ்ட பட போகிறாள் என்று அறிந்திருக்கவில்லை ஆதித்யா அப்பொழுது...

மறுநாள் காலையில் அவன் ரெடியாகி வருவதற்காக காத்து கொண்டிருந்தார் ஜானகி... ஆதித்யா வந்ததும்

”கண்ணா.. நீ ஆபிஸ் போகறதுக்கு முன்னாடி சுசி உன்னை ஹாஸ்பிட்டலுக்கு வர சொன்னா.. ஏதோ சில டெஸ்ட் எடுக்கனுமாம் உனக்கும் பாரதிக்கும்... எல்லாம் பொருந்தி வந்தாதான் மேல தொடர முடியுமாம்..

நீ மறக்காமல் ஹாஸ்பிட்டல் போய்ட்டு ஆபிஸ் போ கண்ணா” என்று கெஞ்சும் குரலில் நிறுத்தினார்.. ஏதோ சொல்ல வந்தவன் அவர் முகத்தை கண்டதும் நேற்று சுசிலா சொன்னது நினைவு வரவும் தன் வார்த்தைகளை முழுங்கி கொண்டு

“ஹ்ம்ம்ம்ம்..” என்று அவரை முறைத்தவாரே தலையை ஆட்டிவிட்டு வேகமாக வெளியே சென்று காரை எடுத்து விரட்டினான்...

“பாரதி...”என்று அவளின் பெயரை சொல்லும் பொழுது அவனுக்கு மனது கசந்து வழிந்தது

“பெயரை பார் பாரதியாம்ம்ம்ம் பாரதி.... பாரதீதீதீ னு வச்சிருக்கனும்.. என் நிம்மதியை அழிக்க வந்த தீ அவள்... பாரதியார் கண்ட புதுமை பெண்ணுனு நினைப்பு ... ஏதோ தியாகம் செய்யறதா மற்றவங்களுக்கு காட்டி கிட்டு எந்த உள் நோக்கோட இருக்கிறாளோ??? அவளின் திட்டம் எதுவும் இந்த ஆதித்யா கிட்ட பழிக்காது... இவளை சும்மா விட மாட்டேன்.. “என்று உறுமி கொண்டே சுசிலாவின் மருத்துவமனையை அடைந்தான்..

அங்கு சுசிலாவை சந்தித்து அவரிடமும் தன் கோபத்தை காட்டி விட்டு பரிசோதனைக்கு தேவையானவற்றை கொடுத்து விட்டு வேகமாக கிளம்பி அலுவலகம் சென்றான்..

சுசிலா பாரதியிடமும் சில டெஸ்ட்களை செய்தார்...

ஜானகி டெஸ்டின் முடிவு என்ன ஆகுமோ என்று பூஜை அறையில் அமர்ந்து அந்த முருகனை வேண்டி கொண்டிருந்தார் சுசிலாவின் அழைப்பை எதிர்பார்த்து...

மாலை நேரம் தான் ஜானகியின் அலைபேசி அடித்தது

ஆவலுடனும் ஒரு வித பயத்துடனும் அதை எடுத்தவர் ஒரு வித அச்சத்துடனே சுசிலாவின் பதிலுக்காக காத்து கொண்டிருந்தார்...

சுசிலாவும் ஜானகியை ஏமாற்றாமல் நல்ல பதிலையே தந்தார்...

“ரெண்டு பேருக்குமே எந்த பிரச்சனையும் இல்லை ஜானு..ரெண்டு பேரோடதும் நல்லா பொருந்தி இருக்கு” என்று நல்ல செய்தியை சொன்னார்...

அதை கேட்டதும் ஜானகியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது...முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது... அந்த முருகனுக்கு மனதார நன்றி சொன்னார்...

அதற்கப்புறம் கடகடவென திட்டமிட்டனர்

அதன்படி பாரதி குழந்தையை சுமக்கும் பத்து மாதம் சென்னையிலயே தங்கியிருக்க வேண்டும். அதுவும் அவள் குடும்பம் கண்ணில் படாமல்.. என்ன செய்வது என்று யோசித்த பொழுதுதான் அந்த சிங்கப்பூர் ஐடியா தோன்றியது..

பாரதிக்கு சிங்கப்பூர்ல ஒரு ஹாஸ்பிட்டல சுசிலா மூலமாக வேலை கிடைத்திருக்கிறது ஒரு வருட கான்ட்ராக்ட்.. இதனால அவள் குடும்ப செலவை பாத்துக்க வேண்டி பாரதி போய் தான் ஆகனும் என்று அவள் குடும்பத்திடம் சம்மதம் வாங்கினர்..

பாரதி ஊருக்கு சென்று தன் அக்காவின் திருமணத்தை நடத்தி விட்டு அடுத்த ஒரு மாதத்தில் சென்னை வருமாறும் பிறகு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம் என்று மூன்று பெண்களும் திட்டமிட்டனர்...

கமலாவிடமும் சுசிலா தங்கள் திட்டத்தை கூறினார்... அவரும் முதலில் மறுத்தாலும் ஜானகி சொன்ன பாரதியின் எதிர்காலத்திற்கான திட்டம் பாரதிக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுப்பதால் அவரும் ஒத்துகொண்டார்..

தர்மலிங்கம் டிஸ்சார்ஜ் ஆகவும் ஜானகியே தன் காரில் அவரை வீடுவரைக்கும் கொண்டு சென்று விட்டு வருமாறு ஏற்பாடு செய்தார்.. தன்னால் அவ்வளவு தூரம் பயணிக்க முடியாததால் இன்னொரு முறை அவர்கள் ஊருக்கு வருவதாக கூறி அனுப்பி வைத்தார்..

கூடவே மஹா கல்யாணத்துக்கு என்று பணமும் கொஞ்சம் நகைகளையும் வாங்கி கொடுத்தார் ஜானகி...

பாரதியும் தர்மலிங்கமும் எவ்வளவோ மறுத்தும்

“என் அண்ணா பொண்ணு, என் பெரிய மறுமகளுக்கு இதை கூட செய்ய கூடாதா.. அதுக்கு எனக்கு உரிமை இல்லையா” என்று அவர்கள் வாயை அடைத்து விட்டார்...

தர்மலிங்கம் குடும்பத்திற்கு ஆச்சர்யம். இப்படி எல்லாம் கூட பட்டணத்துல இருப்பாங்களா?? என்று

“நாம யாருக்கும் கெடுதல் நினைச்சதில்லை.. அதுதான் அந்த ஆண்டவன் நல்ல மனுஷங்களை கூட வச்சிருக்கார்... இல்லைனா என் பேத்தி இவ்வளவு பெரிய ஆபரேசனை தனி ஆளா நின்னு செஞ்சு அவள் அப்பனை திருப்பி கொண்டு வந்திட்டாளே!!” என்று பெருமை பொங்க பாராட்டினார் காமாட்சி பாட்டி

தர்மலிங்கம் திரும்பி வந்ததும், ஈஸ்வர் அவரை நலம் விசாரிக்க என்று வீட்டிற்கு வந்திருந்தான்...அவன் மஹாவை பெண் கேட்ட அடுத்த வாரத்திலயே அவருக்கு உடம்பு முடியாமல் போகவும் அந்த பேச்சு அதோடு நின்று போனது...இப்பொழுது அவர் உடல் இன்னும் சரியாகாத நிலையில் எப்படி அந்த பேச்சை ஆரம்பிப்பது என்ற தயக்கத்துடன் வந்தவன் அவரை விசாரித்து விட்டு எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தான்..

ஆனால் அவன் கண்களோ தன் மனம் கவர்ந்த அவளையே தேடியது... அவனை ஏமாற்றாமல், அவனுக்கு குடிக்க மோர் கொண்டு வந்தாள் மஹா தலையை குனிந்தபடியே... அவளையே இமைக்காமல் பார்த்து இருந்தான் ஈஸ்வர்.. மெல்ல நிமிர்ந்தவள் அவனின் பார்வையை கண்டதும் அவளின் முகத்திலும் வெக்க பூக்கள்...பின் வேகமாக உள்ளே ஓடி விட்டாள் மெல்ல சிரித்தபடியே...

இவர்களின் இந்த நாடகத்தை கண்டு கொண்டாள் பாரதி...பின் ஈஸ்வர் எதுவும் பேசாமல் எழுந்து அவரிடம் விடைபெற்று பாரதியிடம் சென்றான்.... அவள்தான் இப்பொழுது இந்த குடும்ப பொறுப்பை எடுத்து நடத்துகிறாள் என்று தெரியும்... அவளிடம் சென்றவன்

“எந்த உதவி வேணும் என்றாலும் என்னிடம் தயங்காமல் கேளு மா“ என்றான் தயங்கியபடியே..

“சரிங்க மாம்ஸ்... அப்புறம் சீக்கிரம் உங்க ஆளை பேக் பண்ணி அனுப்பிச்சிடறோம்... அதுவரைக்கும் காத்திருங்க “ என்று கண்ணடித்தாள் குறும்பாக...

அதை கேட்டதும் அவன் முகம் பிரகாசமானது...

“ஸ்ஸ் அப்பா... மாம்ஸ்... உங்க மூஞ்சியில 1000 வாட்ஸ் பல்ப் எரியுது.. நீங்க மட்டும் நைட் எங்க வீட்டுக்கு வந்திருந்தீங்க, எங்க வீட்ல லைட்டே போட வேண்டி இருந்திருக்காது” என்றாள் சிரித்தவாறு…

“ஹி ஹி ஹி ரொம்ப நன்றி பாரதி!! நானே மாமா இந்த நிலையில் இருக்கும் பொழுது இந்த பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று யோசிச்சுகிட்டிருந்தேன்... நீயே அதை ஆரம்பிச்சுட்டா...உங்களுக்கு எதுவும் சிரமம் இல்லைனா நான் எங்க வீட்டில சொல்லி சீக்கிரம் கல்யாண வேலையை ஆரம்பிக்க சொல்லவா” என்றான் ஆவலுடன்...

“பாருடா... நாங்க இன்னும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்குனு சொல்லவே இல்லை... அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போய்ட்டீங்க... ரொம்பவும் பாஸ்ட் தான் மாம்ஸ் நீங்க” என்று சிரித்தாள்..

“அதான் உன் வாயாலயே என்னை மாமானு கூப்பிட்டுட்டியே... அதுலயே தெரிஞ்சிடுச்சு உங்க முடிவு” என்று பாரதியை மடக்கினான் அவனும் சிரித்தவாறு

“ஹ ஹ ஹா... பரவாலை மாம்ஸ்...நீங்க பொளச்சுக்குவீங்க... எங்க இந்த மக்கு மஹாகிட்ட மயங்கி, அவளை போய் கல்யாணம் பண்ணிக்கிறேனு வந்த நீங்களும் அவளை மாதிரியே அரை லூசோனு நினைச்சேன்... நீங்க கொஞ்சம் புத்திசாலியாதான் இருக்கீங்க... எப்படியும் மஹாவை வச்சு குப்பை கொட்டிடுவீங்கனு நம்பிக்கை வந்திருச்சு “ என்று மீண்டும் சிரித்தாள்...

அதை கேட்டதும் தன் கைகள் இரண்டையும் மேல தூக்கியவன்

“அம்மா... மச்சினிச்சி.. நான் சரண்டர்.. என்னால உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது.. கொஞ்சம் பார்த்து ஏற்பாடு பண்ணி என் பொண்டாட்டியை சீக்கிரம் எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடு... உன்னைத்தான் தெய்வமா நம்பி இருக்கேன்” என்றான் ஈஸ்வர்...

““ஹ ஹ ஹா. இந்த பாரதியை நம்பினோர் கை விட படார்.. நீ கவலைப்படாமல் சென்று வா மகனே.. உன் வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்” என்று அந்த முருகன் பாணியில் கையை விரித்து வைத்து ஆசிர்வாதம் பண்ணினாள்...

ஈஸ்வரும் சிரித்து கொண்டே விட்டால் போதும் என்று கிளம்பி சென்றான்...

பின் பாரதி தன் குடும்பத்தாரிடம் மஹா கல்யாண பேச்சை ஆரம்பித்தாள்... தர்மலிங்கம் தான் இப்படி இருக்கும் நிலையில் எப்படி திருமண வேலைகளை செய்வது.. கொஞ்சநாள் போகட்டும் என்றார்..

“அதெல்லாம் நானும் பாரத்தும் பார்த்துக்குவோம் பா.. நம்ம ஊர்ல உதவி செய்ய ஆளா இல்லை.. மாமா நல்லவரா தெரியறார்.. அதில்லாமல் நீங்க ஆசை பட்ட மாப்பிள்ளை... நம்ம பக்கத்து ஊர்லயே வேற இருக்கார்.. மஹாவும் நம்ம பக்கத்துலயே இருப்பா...அதனால யோசிக்காம சரினு சொல்லுங்க “ என்று அவரை சம்மதிக்க வைத்தாள்..

காமாட்சிக்கும் வயசு பொண்ணை எத்தனை நாளைக்கு இப்படியே வச்சிருப்பது...காலா காலத்துல கல்யாணம் பண்ணி அனுப்பி வைப்பதுதான் சரி என பட்டதால் அவரும் சம்மதித்தார்

ஆனால் மஹா “அப்பா இப்படி இருக்கும்பொழுது எனக்கு திருமணம் வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்” என்று அதே பாட்டை பாடினாள்” ...

“ஹே!! மஹா... மாமாவை பற்றி நல்லா விசாரிச்சுட்டேன்.. இந்த மாதிரி ஒரு இளிச்ச வாய் தான் உனக்கு லாயக்கு... இல்லைனா உன்னால குப்ப கொட்ட முடியாது.. வேற யாராவதா இருந்தால் இரண்டாவது நாளே மூக்கை சிந்திகிட்டு இங்க வந்து நிப்ப.. அப்புறம் நாங்கதான் உன்னை சுமக்கனும்... அதனால பிகு பண்ணாம ஒகே சொல்லிடு..“

“அப்ப நான் இங்க இருக்கிறது உனக்கு பாரமா இருக்கா பாரதி??? “ என்று முறைத்தாள் மஹா

“ஹி ஹி ஹி கண்டு பிடிச்சிட்டியா??? என் அக்கா வர வர புத்திசாலி ஆகிட்டு வர்ரா... ஆமாம் மஹா.. நீ கல்யாணம் ஆகி போய்ட்டா நம்ம வீட்ல ஒரு ஆள் குறைஞ்சிடும் இல்லை. என் பாரமும் கொஞ்சம் குறையும் “ என்று கண்ணடித்தாள் பாரதி...

“போடீ.. அப்படீனா நான் இப்பவே போறேன்.. இனிமேல் இங்க வரவே மாட்டேன்” என்று முகத்தை திருப்பினாள் மஹா...

“பாருடா... கல்யாணம் வேண்டாம்னு சொன்ன பொண்ணு இப்பவே தன் புருஷன் வீட்டுக்கு போறேங்கறா.. அவ்வளவு அவசரமா டீ .. கொஞ்சம் பொறு. நாங்க முறையாகவே அனுப்பி வைக்கிறோம்” என்று தன் அக்காவை கட்டி கொண்டாள் பாரதி...

இப்படி பேசி பேசியே அக்காவின் மனதை மாற்றினாள் பாரதி. பின் ஈஸ்வர் வீட்டிலிருந்து முறையாக வந்து மஹாவை பொண்ணு பார்த்து நிச்சயம் செய்தனர்.. பாரதி சீக்கிரம் சிங்கப்பூர் செல்ல வேண்டி இருப்பதால் (அப்படிதான் எல்லாரிடமும் சொல்லி இருந்தாள் பாரதி) அடுத்த முகூர்த்தத்திலயே திருமண நாளை குறித்தனர்..

கல்யாண ஏற்பாடு எல்லாம் பாரதியும் அவளின் தம்பியுமே முன்னின்று நடத்தினர்.. தர்மலிங்கம் அசந்து போய் தான் பார்த்து கொண்டிருந்த்தார்.. தான் முன்னின்று நடத்தி இருந்தால் கூட இப்படி நடத்தி இருக்க முடியாது... எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை இவ்வளவு அசால்டா இந்த சின்ன பாப்பா செய்யறாளே” என்று பெருமையாக பார்த்து கொண்டார் தன் மகளை...

திருமணம் நல்ல படியாக முடிந்து மஹாவை சந்தோஷமாக அனுப்பி வைத்தனர்..

ஜானகிக்கு அப்பொழுது உடல் நிலை சரியில்லாததால் நேரில் வர முடியவில்லை என்று அலைபேசியில் அழைத்து தன் ஆசிகளை வழங்கினார்...

கல்யாணம் முடிந்து அடுத்த வாரத்தில் பாரதி சிங்கப்பூர் கிளம்புவதாக இருந்தது... இதோ அந்த நாளும் வந்தாகிவிட்டது.. இதுவரை கல்யாண வேலைகளிலும் மற்றதிலும் பிசியாக இருந்ததால் பாரதி எதை பற்றியும் நினைக்க வில்லை... திருமணம் முடிந்ததும் அதுவும் அவள் தனியாக இருக்கும் பொழுதுதான் அவளுள்ளே இந்த கேள்வி வந்து குடையும்

தான் எடுதத முடிவு சரியா என்று.. அதுவும் தன் குடும்பத்துக்கு தெரியாமல் எடுத்த முடிவு அல்லவா... பல நேரம் சரிதான் என்று மனதை தேற்றி கொண்டாலும் சில நேரங்களில் இது தப்போ என்றும் மனம் சுடும் அவளுக்கு....

பேருந்தின் இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடி பழைய நினைவுகளை அசை போட்டவள், மெல்ல பழைய நினைவுகளில் இருந்து கண் விழித்தாள்.. கண் விழித்தவளுக்கு மீண்டும் அதே கேள்வி வந்தது தான் எடுத்த முடிவு சரியா தப்பா என்று...

அதே சமயம் ஜானகியின் அந்த சிரித்த முகம் ஞாபகம் வந்தது..அவர் தன் முன்னே முந்தானையை நீட்டி நின்ற கோலம் நினைவு வரவும்

“அவருக்காகவும் அவர் என் குடும்பத்துக்கு செய்த உதவிக்கு நன்றிக்கடனாகவும் இதை நான் செய்துதான் ஆகனும்...”. அதோடு

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

( ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன், அதனை முடிக்கும் உபாயத்தை நன்றாக எண்ணித் தொடங்குதல் வேண்டும் . தொடங்கிய பின் எண்ணிப்பார்க்கலாம் என்பது குற்றமாகும்.)

என்று தான் படித்த அந்த வள்ளுவரின் குறள் நினைவு வரவும்,

“இனிமேல் நான் எடுத்த முடிவை பற்றி மறு ஆராய்ச்சி பண்ணக்கூடாது... நான் சம்மதித்து தான் இந்த ஆட்டம் ஆரம்பமானது... அதில் இருந்து பின்வாங்க கூடாது... எது நடந்தாலும், என்ன ஆனாலும் ஜானகி அத்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றனும்.. எல்லாம் என் முருகன் பார்த்துக்குவான்.. இனிமேல் டோன்ட் வொர்ரி... பீ ஹேப்பி.....பாரதி “ என்று தன்னை தானே உறுதியாக்கி கொண்டாள்..

அவளின் மன உறுதியை கண்ட அந்த வேலனும் தன் ஆட்டம் இப்பதான் சூடு பிடித்திருக்கிறது..இனி க்ளைமேக்ஷ் வரைக்கும் விறு விறுப்பாக இருக்கட்டும் என்று சிரித்து கொண்டே அடுத்த காயை நகர்த்தினான்...

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!