தவமின்றி கிடைத்த வரமே-23



அத்தியாயம்-23

டுத்த நாள் ஞாயிற்றுகிழமை...

அழகிய மஞ்சள் நிறத்தை பரப்பியதை போன்று அந்த ஆதவனின் கதிர்கள் பூமியில் பட்டு ஜொலிக்கும் அந்த மாலை வேளையில் தன் தெருவில் இருந்த சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தாள் பனிமலர்....

சிறு வாண்டுகளில் இருந்து கல்லூரி செல்லும் வாலிபர்கள் வரை என அந்த கேங்கில் எல்லாம் பசங்களாக இருக்க, பனிமலர் மட்டும் அந்த கேங்கில் அந்த பசங்களுக்கு இணையாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தாள்....

இரு அணிகளாக பிரிந்து சீரியசாக மேட்ச் விளையாடி கொண்டிருந்தார்கள்.... பனிமலர் பேட் செய்து கொண்டிருந்தாள்...

ஸ்டம்ப் அருகில் தன் பேட்டை வைத்து எதிரில் பந்தை போடுபவனையே கூர்ந்து கவனித்து கொண்டிருந்தாள்... இந்த பந்தில் அவள் சிக்சர் அடித்தால்தான் அவள் அணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கு என்பதால் அவனையே கூர்ந்து கவனித்தாள்.....

அதே நேரம் அவர்களை கடந்து ஒரு கார் சென்றது.... அந்த காரில் இருந்தவனோ தன் கார் கண்ணாடியின் சன்னலை கீழ இறக்கி விட்டு தன்னை நோக்கி வரும் பந்தை எதிர் கொள்ள காத்திருக்கும் பனிமலரையே ரசனையோடு பார்த்திருந்தான்...

வேகமாக வந்த கார் ஐ ஸ்லோ பண்ணி மெது மெதுவாக நகர்த்தி அவள் கிரிக்கெட் ஆடும் அழகையே ரசித்தவாறு காரில் அமர்ந்திருந்தான்....

பனிமலரோ தன்னை நோக்கி வந்த அந்த பந்தை இலாவகமாக கையாண்டு வேகமாக அடிக்க, அதுவும் கரெக்டாக சிக்சருக்கு சென்றது..... உடனே

“ஹே....... “ என்று அவள் துள்ளி குதிக்க, அவள் அணியினர் ஓடி வந்து அவளை கட்டி கொண்டனர்.. பெரிய பசங்கள் அவளுக்கு கை கொடுத்து

“அக்கா.... கலக்கிட்டக்கா....... இன்னும் ஒரே ஒரு ரன் மட்டும்தான் எடுத்துட்டா நாமதான் வின்..... ப்ளீஸ்க்கா... இப்ப மாதிரியே பார்த்து கரெக்ட் ஆ அடிச்சிடு....” என்றான் தவிப்புடன் புது மீசை அரும்பிய அந்த பையன்....

“ஹ்ம்ம்ம்ம் நீ ஒன்னும் கவலை படாதடா தம்பி... இந்த மலர் னா கொக்கா... எப்படி அடிக்கிறேன் பார் இன்னொரு சிக்சர்.... “ என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்....

அந்த காரில் இருந்தவனும் அப்பொழுது தான் அவள் உடையை பார்த்தான்.... ஒரு நீளமான ஸ்கர்ட் ம் அதற்கு மேல் டாப்ஸ் அணிந்து தன் நீண்டமுடியை தூக்கி கொண்டையாக்கி சொருகி இருந்தாள்.....

அவளையே ரசனையோடு பார்த்து கொண்டிருந்தான்... அப்படியே பார்த்து கொண்டிருக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு... ஆனால் அதற்குள் பின்னால் வந்திருந்த கார் ஹார்ன் அடிக்க அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது என்று புரிய மனமே இல்லாமல் தன் காரை நகர்த்தினான்.....

அப்பொழுதும் பின் கண்ணாடி வழியாக அவளை ரசித்து கொண்டே சென்றான்....

அவளோ அடுத்து எதிரணியினர் போட்ட பந்து அவள் காலில் முழங்காலில் பட்டிருக்க, அது LBW என்று எதிர் அணியினர் கூச்சலிட, இவளோ இல்லை என்று மறுத்து அவர்களிடம் வாக்குவாதம் பண்ணி கொண்டிருந்தாள்...

அவள் முகத்தில் தெரிந்த அந்த கோபமும் அவர்களை சமாளிக்க அவர்களுடன் சண்டையிட்டதும் இன்னும் அவன் மனதை அள்ளியது....

எப்படியோ வாக்குவாதத்தில் அவள் வெற்றி பெற்றிருக்க,

“போக்கா... இதுக்குத்தான் உன் கூட ஆட வரக்கூடாது... இப்படி சண்டை போட்டே நீ ஜெயிச்சுடற...” என்று அவளை திட்டியவாறு எதிர் அணியில் இருந்தவன் மீண்டும் பந்தை போட, அவளும் அதை இலாவகமாக அடித்துவிட்டு வேகமாக மறுமுனைக்கு ஓடினாள் ரன் எடுப்பதற்காக.....

மறுமுனையில் இருந்தவன் இந்த பக்கம் வருமுன்னே மின்னல் என ஓடி இருந்தாள் மலர்....

கார் பின்புற கண்ணாடியின் வழியே அதை கண்டவன் இன்னும் அதிசயித்து போனான்.... அவள் ஓடும் அழகையும் ரசித்து தன் மனதினில் பத்திர படுத்தி கொண்டான்.....

ஒரு வழியாக ஆட்டம் முடிய, மலர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்க, அவள் அணியினர் எல்லாரும் துள்ளி குதித்தனர்....

அவள் அணியினர் மீண்டும் அவளுக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்லினர்.....

எதிர் அணியினரோ தோற்று விட்ட கடுப்பில் இருந்தனர்... அதில் ஒரு சிறுவன் மலர் அருகில் வந்து

“அக்கா...உனக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல...இன்னும் ஏன் உன் புருசன் வீட்டுக்கு போகாம இங்கயே உட்கார்ந்து கிட்டிருக்க...?? முதல்ல நீ இடத்தை காலி பண்ணு.. அப்பதான் நாங்க நிம்மதியா கிரிக்கெட் ஆட முடியும்...

நாங்க எப்ப ஆடினாலும் நீயும் கூட வந்து சேர்ந்து கிட்டு சண்டை போட்டே பொய்யாட்டம் ஆடி அவனுங்களையே ஜெயிக்க வச்சுடற... “ என்று முறைத்தான் ஒரு வாண்டு....

“டேய்.... நான் என் புருசன் வீட்டுக்கு போறது உனக்கு அவ்வளவு சந்தோசமம?? இதுக்காகவே நான் அங்க போனாலும் வாரா வாரம் விளையாடறதுக்குன்னே இங்க வருவேண்டா... அப்ப என்ன செய்வ?? அப்ப என்ன செய்வ?? “ என்று அவள் பாடிய படியே ஆடி காட்ட

“அடச்சே.... பேசாம நான் தெருவை மாத்த வேண்டியதுதான்..... “ என்று தன் தலையில் அடித்து கொண்டான்....

அவன் காதை பிடித்து செல்லமாக திருகியவள்

“டோண்ட் வொர்ரி டார்லிங்....நோ பீலிங்க்ஷ்.. அக்கா அடுத்த முறை உன் டீம்ல விளையாடறேன்...உன் டீம் தான் ஜெயிக்குது... டீலா?? ... “ என்று கண் சிமிட்ட, அவனும்

“ஐ .... அப்ப ஜாலி......அப்ப நீ உன் புருசன் வீட்டுக்கு போகாத...இங்கயே இருந்துடு.. அப்பதான் தினமும் விளையாடலாம்.... “ என்று சிரித்தான்....

மலரும் அவர்களுடன் சிரித்தவாறு சிறிது நேரம் அரட்டை அடித்தவள் பின் அனைவரும் கலைந்து செல்ல, தன் வீட்டிற்கு துள்ளி குதித்தபடி ஓடி வந்தாள்.....

வீட்டை அடைந்தவள் வீட்டு வாயிலில் புதியதாக ஒரு கார் நிற்பதை கண்டு

“யாரா இருக்கும்?? “ என்று யோசித்தவாறு உள்ளே ஓடினாள்....

“ஜோ.... யார் வந்திருக்கா நம்ம வீட்டுக்கு ?? வாசல்ல கார் நிக்குது ... “ என்று கத்தி கொண்டே உள்ளே வந்தாள் ...

வரவேற்பறையில் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தான் அந்த நெடியவன்... அவளுடைய அப்பா அம்மா இருவரும் வாயெல்லாம் பல்லாக அவனிடம் சிரித்து பேசி கொண்டிருந்தனர்.....

உள்ளே வந்த தன் மகளின் கோலத்தை கண்டதும் கலவரமான ஜோதி அவளுக்கு கண்ணால் ஜாடை காட்ட, அவளோ அதை கண்டு கொள்ளாமல்,

“யாருமா அது?? கார் வச்சிருக்கிற அந்த கரகாட்டகாரன் ?? மூஞ்சியத்தான் பார்க்கறேனே... “ என்றவாறு வேகமாக அவன் முன்னால் வந்து நின்றாள்.....

அவளை கண்டதும் அதுவரை குனிந்திருந்தவன் தலையை நிமிர்ந்து அவளை குறும்பாக பார்த்தவனை கண்டதும், அப்படியே ப்ரீஸ் ஆகி நின்றாள் மலர்...

மனதை மயக்கும் வசீகர புன்னகையுடன் அவள் எதிரில் அமர்ந்திருந்தான் வசீகரன்.. அவள் கணவன்....

எப்பொழுதும் பார்மல் ட்ரெஸ் ல் இருப்பவன் இன்று ஜீன்ஸ் ம் டீ சர்ட் ம் அணிந்திருக்க, அவன் உடலை ஒட்டியபடி இருந்த அந்த டீசர்ட் ஐயும் மீறி அவனின் உறுதியான மார்பும் வலிய புஜங்களும் பார்ப்பவர்களை அவனிடம் மயங்க வைக்கும் தோற்றத்தில் இருந்தான்...

அவனை அங்கு எதிர்பார்க்காததால் அப்படியே வேர் பிடித்த மாதிரி நின்று விட்டாள் மலர்....

வசிக்கும் அதே நிலைதான்...

சற்று முன்பு தொலைவில அவள் விளையாண்டதையே ரசித்து பார்த்து வந்தவன் இப்படி அவன் முன்னே க்ளோசப் ல் அதுவும் லாங் ஸ்கர்ட் மேல டாப் மட்டும் அணிந்து துப்பட்டா எதுவும் அணியாமல் வந்திருக்க, கழுத்துக்கு கீழ பார்த்தவனுக்கு மூச்சு முட்டியது….

இத்தனை நாள் அவள் வெறும் பிரண்ட் மட்டும்தான்... அதனால் அவன் காதலித்தாலும் அவன் பார்வை கண்ணியமாகத்தான் இருக்கும்... எல்லை தாண்டி அவள் மீது படர்ந்ததில்லை....

ஆனால் இப்பொழுது அவன் மனைவியாகிவிட்டாள்...

அவளை அனு அனுவாக பார்த்து ரசிக்க அவனுக்கு முழு உரிமையும் இருப்பதால் அவன் பார்வை அவன் கட்டுபாட்டையும் மீறி அவளை கணவன் பார்வையுடன் ரசித்து பார்த்தது.....

அவன் பார்வையை கண்டு கொண்டவளுக்கு அப்பொழுதுதான் அவள் கோலம் புரிய, உடனே கன்னங்கள் சிவக்க, வேகமாக தன் அறைக்கு உள்ளே ஓடி விட்டாள்...

வசிக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டு தன் மாமியார் மாமனாரை பார்க்க, ஜோதிக்கும் தர்ம சங்கடமாக இருந்தது...

“தப்பா எடுத்துக்காதிங்க மாப்பிள்ளை... மலர் இப்படிதான்.. கொஞ்சம் சிறு பிள்ளையாக நடந்துக்கு வா... நாங்களும் எவ்வளவோ திட்டி பார்த்துட்டோம். இப்படி தெரு பசங்க கூட சேந்து ஆடாதனு... ஆனால் அவளை அடக்க முடியலை.. எதையாவது சொல்லி எங்களை அடக்கிடுவா.... “ என்றார் அசடு வழிந்தவாறு...

“ஐயோ.. இருக்கட்டும் அத்தை.... இதுல தப்பா எல்லாம் ஒன்னும் இல்லை.. .அவ ப்ரியா இருக்கட்டும்....நாங்கள் இருக்கும் பகுதியில் இந்த மாதிர் விளையாட வாய்ப்பு இல்லை... நாங்க எல்லாம் இப்படி ஆடினது இல்லை... இதையெல்லாம் பார்க்க சந்தோசமா இருக்கு.... “ என்று சிரித்தான் வசீகரன்...

அதை கேட்டதும் தான் சிவசங்கருக்கும் ஜோதிக்கும் நிம்மதியாக இருந்தது...

“எப்படியோ மாப்பிள்ளை அட்ஜஸ்ட் பண்ணி போகிற டைப் போல... இவளுடைய சேட்டைக்கு இவர் தான் லாயக்கு... “ என்று நிம்மதி வந்து சேர்ந்தது இருவருக்கும்...

தன் அறைக்கு உள்ளே ஓடி சென்றவளுக்கோ இன்னும் இதயம் படபடவென்று அடித்து கொண்டது...

“இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கறானே..!!. நான் வேற இப்படியா ட்ரெஸ் பண்ணிகிட்டு சுத்தறது...சீ... மானம் போச்சு.... “ என்று தன் தலையை கொட்டி கொண்டவள் வேகமாக ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டாள்...

கண்ணாடி முன் நிக்க, ஏனோ சற்றுமுன் அவன் பார்த்த அந்த குறுகுறு பார்வை மீண்டும் கண் முன்னே வர, அவள் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன....

“சே... ஏன் என்னை அப்படி பார்த்து வச்சான்...?? “ என்று திட்டியவாறு ஓரளவுக்கு தன்னை சமாளித்து கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்.....

பின் ஹாலுக்கு வந்தவள்

“வாங்க.... அத்தை, மாமா, வசு... எல்லாம் நல்லா இருக்காங்களா?? “ என்றாள் தரையை பார்த்தவாறு...

அதற்குள் ஜோதி அவன் குடிக்க குளிர்பானம் கொடுத்திருந்தார்...

அதை கையில் வைத்து குடித்து கொண்டிருந்தவன்

“ஹ்ம்ம்ம்ம் எல்லாரும் நல்லா இருக்காங்க.... இங்க ஒரு வேலையா வந்தேன்... அப்படியே மாமா வை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.... “ என்றான்.....

“அப்ப அவன், அப்பாவை பார்க்கத்தான் வந்தானா?? என்னை பார்க்க வரலையா?? “ என்று சுணங்கியது ஒரு மூலையில்...

அவள் மனதில் இருந்தது ஒரு நொடி அவள் முகத்தில் வந்து செல்ல, அதை புரிந்து கொண்டவன்

“உன்னைத்தான் பார்க்க வந்தேன் ஜில்லு பேபி... ஆனால் அதை எப்படி நான் நேரடியா சொல்றதாம்.... “ என்று மனதுக்குள் பேசி கொண்டான்...

பின் வசி சிறிது நேரம் அவர்களுடன் பொதுவாக பேசி கொண்டிருக்க, வாய் அவர்களுடன் பேசி கொண்டிருந்தாலும் கண்கள் என்னவோ அவளிடமே அடிக்கடி சென்று நின்றது.....

அதை கண்டு கொண்ட சிவசங்கரும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே

“மலர்... நீ மாப்பிள்ளையை உன் ரூம்க்கு அழைச்சிட்டு போய் பேசிகிட்டு இருங்க... “ என்றார்..

அதை கேட்ட உடன் தன் மாமனார்க்கு மனதில் கோவில் கட்டி கும்பாபிஷேகமே நடத்தி முடித்தான் அவசரமாக...

“இப்படி என் மனதை படிக்க தெரிந்த மாமனார் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ ?? “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான்...

“தேங்க்ஷ் மாமா..... “ என்று எழுந்து அவளுக்கு முன்னே நடந்தான்....

அதை கண்ட ஜோதியும் சிரித்து கொண்டே சமையல் அறைக்குள் சென்றார்...

மலருக்குத்தான் வெக்கமாகி போனது.... ஆனாலும் தன்னை மறைத்து கொண்டு அவள் அறைக்கு நடந்தாள்.... அவனும் அவள் பின்னே வந்தான்...

அறை ரொம்பவும் விசாலமாக இருந்தது… டபுல் காட் போட பட்டு மறுபக்கத்தில் அவள் படிப்பதற்கான ஸ்டடி டேபில் அதன் மீது அவள் படித்து கொண்டிருக்கும் MBA சம்பந்தமான புத்தகங்களும் ஒரு சில Computer சம்பந்தமான புத்தகங்களும் அடுக்கி வைக்க பட்டிருந்தன...

அறையின் சுவற்றை பார்த்தவன் திகைத்து நின்றான்.. அறை முழுவதும் மலரின் புகைபடங்கள் ஒவ்வொரு விதத்தில் இருந்தன....

அப்துல் கலாம் புகைபடமும், பாரதியார் புகைபடங்களும் இருந்தன... அப்புறம் வழக்கமான பெண்கள் அறையில் இருக்கும் மற்ற பொருட்களும் பெரிய டெடியும் இருந்தன....

அதையெல்லாம் ரசித்தவன் பார்வை டேபிலின் மீது இருந்த அவள் குடும்பம் புகைபடத்தின் மீது படிந்தது.....அவள் வாட்ஸ்அப்பில் இருக்கும் அதே புகைபடம் பிரேம் இட்டு டேபிலின் மீது வைத்திருந்தாள்...

அதன் அருகில் அவள் மட்டும் அவள் அலுவலகத்தில் அவள் க்யூபிக் ல் தன் கணினி முன்னால் அமர்ந்து சிரித்தவாறு இருந்த புகைபடம் இருந்தது.....அந்த புகைபடங்களையே இமைக்க மறந்து ரசித்து பார்த்து கொண்டிருந்தான் வசி....

“ம்ஹூம்...” என்று தொண்டையை செருமினாள் மலர்....

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவன்

“அறையை நீட்டா வச்சிருக்க பனிமலர்... “ என்றான் அவளை பார்த்து புன்னகைத்தவாறு..

“தேங்க்ஷ்.... “ என்று அவளும் புன்னகைத்து தலையை குனிந்து கொண்டாள்...

பின் அவன் அருகில் இருந்த கட்டிலில் சென்று அமர, அவள் நின்று கொண்டிருந்தாள்....

இருவருக்குமே என்ன பேச என்று தெரியவில்லை....

முன்பு அவனை கண்டாலே சரளமாக வந்து விழுந்த வார்த்தைகள் எல்லாம் இன்று எங்கோ ஓடி ஒளிந்து கொண்டன மலருக்கு...

வசியும் சிறிது நேரம் தன் கை விரல்களை ஆராய்ந்தவன் மெல்ல அவளை பார்த்து

“மாமா இப்ப எப்படி இருக்கார்?? நல்லா பேசறாரா?? எதுவும் வித்தியாசமா இல்லை இல்ல? “ என்றான் அவள் தந்தையின் உடல் நலனை முன் நிறுத்தி...

அதை கேட்டதும் பழைய நினைவுகள் வந்து போக, அவள் முகத்தில் சிறு வேதனை வந்து போனது....

“ஹ்ம்ம்ம்ம் ஒன்னும் பிரச்சனை இல்லை.... டாக்..... “ டாக்டர் என்று முன்பு போல சொல்ல வந்தவள் இப்பொழுது எப்படி அவனை அழைப்பது என்று குழம்பி பாதியிலயே நிறுத்தி கொண்டாள்...

அதை கண்டு கொண்டவனுக்கும் வேதனையாக இருந்தது..

“எவ்வளவு கலகலப்பாக இருப்பவள்.. இப்படி மாறி விட்டாளே.... ஒரு வேளை அந்த கூஜா இல்ல ராஜாவை நினைத்து தான் இப்படி வேதனை படுகிறாளா?? “ என்று அவசரமாக யோசித்தான்....

ஆனாலும் அவளை பழைய படி பேச வைக்க எண்ணி

“இப்படி வந்து உட்கார் பனிமலர்.... “ என்றான் தன் அருகில் காட்டி...

“இல்ல.... இருக்கட்டும்... நான் இப்படியே நிக்கறேன்... “ என்றாள் தயக்கத்துடன்...

“அவன் அருகில் போய் எப்படி உட்காருவதாம்..??. இப்படி தள்ளி நிற்கையிலயே என் இதயம் எகிறி குதிக்குது.... “ என்று உள்ளுக்குள் புலம்பினாள்...

வசியோ உரிமையோடு “என்கிட்ட வாடி...” என்று அவள் கை பிடித்து இழுத்து தன் மடியில் போட்டு கொள்ள துடித்த தன் இதயத்தை கஷ்டபட்டு அடக்கியவன்

“அடடா.. நான் என்ன உன் அப்பா மாதிரி ஸ்கூல் வாத்தியாரா?? வர்றவங்களை நிக்க வச்சு பேச... நான் டாக்டர் மா.... பேசன்ட்ஸ் மட்டும் னு இல்ல கூட வர்றவங்களை கூட உட்கார வச்சு பேசித்தான் பழக்கம்...

அதனால நீ நின்னா எனக்கு கால் வலிக்கும்... இப்படி வந்து உட்கார்... “ என்றான் குறும்பாக சிரித்தவாறு.....

அதற்கு மேல் வேறு வழி இல்லாமல் அவன் அருகில் வந்து கொஞ்சம் இல்ல ரொம்பவே இடைவெளி விட்டு அமர்ந்தாள் தரையை பார்த்தவாறு....

இந்த மலரை பார்க்க புதிதாக இருந்தது அவனுக்கு...

ஏனோ அவனுக்கு வாய் ஓயாமல் பேசி அவனிடம் வம்பு இழுக்கும் அந்த பழைய மலரைத்தான் பிடித்து இருந்தது..

அவளை எப்படி பேச வைப்பது என்று யோசித்தான்...

அதற்குள் வெளியில் ஜோதி அவள் அறை கதவை இலேசாக தட்ட, மலர் எழுந்து சென்று கதவை திறக்க, ஜோதி கையில் பலகார தட்டுடன் நின்றிருந்தார்....

“மலர்... இதை மாப்பிள்ளைக்கு கொடு.. நானே பர்ஸ்ட் டைம் செய்தது.. புது ரெசிபி... “ என்று சிரித்தவாறு தட்டை அவள் கையில் கொடுத்து விட்டு சிரித்த படி நகர்ந்தார்.....

மலரும் அதை கொண்டு வந்து அவன் முன்னே வைத்து

“எடுத்துக்கங்க..... “ என்று வைத்தாள்...

பக்கத்தில் வாட்டர் பாட்டிலையும் எடுத்து வைத்தாள்...

அவனும் அதை எடுத்து சாப்பிட்டவன்

“வாவ்... டிபரன்ட் டேஸ்ட் ஆ இருக்கு... என்ன இது?? “ என்றான் மலரை பார்த்து.....

“யாருக்கு தெரியும்... “ என்று சிரித்து கொண்டவள்

“இது ஜோ.....” என்று சொல்ல வந்து பாதியில் நிறுத்தி கொண்டவள்

“அம்மா புதுசா கண்டு பிடிச்ச ரெசிபியாம்... உங்களுக்கு முதல்ல கொடுத்தாங்க... “ என்றாள் தன் சிரிப்பை கஷ்டபட்டு அடக்கி கொண்டு...

அவள் எதையோ மனசில வச்சுகிட்டு முழுங்கி கிட்டு இருக்கா என புரிய, இவளை எப்படி பேச வைப்பது ?? என்று யோசித்தவன்

“ஓ... அப்ப என் மாமியார்க்கு இன்னைக்கு நான் தான் டெஸ்ட் எலியா?? நம்பி சாப்பிடலாம் இல்லை... “ என்றான் அவளை குறும்பாக பார்த்து சிரித்தவாறு....

அவளும் புன்னகைத்து தலையை மட்டும் ஆட்டினாள்....

“ஆமா.... அத்தை சமையல் ல எக்ஷ்பர்ட் னு சொல்லி இருக்க இல்ல....இது மாதிரி புதுசு புதுசா நிறைய செய்வாங்களா?? “ என்றான்....

அதற்கு மேல் தன்னை சமாளிக்க முடியாதவள் தன் வாயில் இருந்த பூட்டை கழற்றி வைத்து விட்டு

“செய்வாங்களா வா?? டாக்டர்.... நீங்க வேற... தினமும் எதையாவது போட்டு மிக்ஷ் பண்ணி சேம்பில் செய்வாங்க பாருங்க.. அதை டெஸ்ட் பண்ண நாங்கதான் மாட்டுவோம்...

நாங்க சாப்பிட்டுட்டு எங்களுக்கு ஒன்னும் ஆகலைனு தெரிஞ்ச உடனே அவங்களோட cooking blog ல அந்த ரெசிபியை அப்டேட் பண்ணினாதான் அவங்களுக்கு தூக்கம் வரும்....

ஒரு நாளைக்கு ஒன்னு செஞ்சா கூட பரவாயில்லை டாக்டர்... இரண்டு மூனு கூட சில நேரம் செஞ்சு வச்சு எங்களை டெஸ்ட் பண்ண சொல்வாங்க.....

எப்படியோ இன்னைக்கு நானும் வாத்தியாரும் தப்பிச்சுகிட்டோம்..... நீங்க மாட்டினீங்க... இன்சூரன்ஸ் எல்லாம் பண்ணி வச்சிருக்கீங்க இல்ல... “ என்றாள் குறும்பாக சிரித்தவாறு.....

அவளின் படபடக்கும் பட்டாசாய் வந்து விழுந்த வார்த்தைகளை கேட்டதும் தான் வசிக்கு நிம்மதியாக இருந்தது....

“இது.. இது... இது தான் அவன் ஜில்லு..... எப்படியோ அவளை வாயில் இருந்த பூட்டை கழட்ட வச்சாச்சு... “ என்று துள்ளி குதித்தவன்

“ஹா ஹா ஹா..” என வாய் விட்டு சிரித்தவன்

“இன்சூரன்ஸ் இல்லைனாலும் என் பொண்டாட்டி கழுத்துல தொங்கற தாலி ரொம்ப பவர்புல் ஆனது.... அதனால எனக்கு ஒன்னும் ஆகாது.. நம்பி சாப்பிடலாம்.... “ என்றான் அவளை குறும்பாக பார்த்து சிரித்தவாறு....

அவன் தன்னை அவன் பொண்டாட்டி என்கவும் அதுவரை விலகி இருந்த படபடப்பு மீண்டும் வந்து ஒட்டி கொண்டது மலருக்கு...

கன்னங்கள் சிவக்க, அதை மறைக்க தன் தலையை குனிந்து கொண்டாள்...

அதுவரை பேசி கொண்டிருந்தவள் இப்பொழுது தலையை குனிந்து கொண்டவளை கண்டதும்

“ஒரு வேளை அவளை அவன் மனைவி என்று சொன்னதும் அவளுக்கு அவள் திருமணம் நின்று போனதை நினைவு படுத்தி விட்டனோ?? அந்த வேதனையில் தான் தலையை குனிந்து கொண்டு அமைதியாகி விட்டாளா?? “ என்று யோசித்தவன்

“இனிமேல் அந்த உறவை சொல்லி பேசக்கூடாது...அவளுக்கும் கொஞ்சம் டைம் வேணும்... அதுக்குள்ள அவசர படக்கூடாது.. “என்று தீர்மானித்தவன்

“என்ன பனிமலர் அமைதியாகிட்ட... “ என்றான்

தன்னை மறைத்து கொண்டு தலையை நிமிர்ந்து கடனே என்று புன்னகைக்க, அவளின் மாற்றம் புரிந்தது அவனுக்கு.....

உடனே கொஞ்சம் சீரியஸ் ஆனவன்

“லுக் பனிமலர்... நம்ம கல்யாணம் நடந்தது உங்க அப்பாவுக்காகத்தான்...இந்த கல்யாணத்தை மனதார ஏத்துக்க கொஞ்ச நாள் ஆகலாம்...அதுவரைக்கும் காத்திருக்கலாம்....

அதுக்கு முன்னாடியே நீயும் நானும் பிரண்ட் ஆ தான இருந்தோம்.. அதே மாதிரி இருக்கலாம்.... நீ என்கிட்ட எந்த தயக்கமும் காட்டவேண்டாம்...என்னை எப்படி அழைப்பது என்று குழம்ப வேண்டாம்.. நான் உனக்கு முதல்ல ஒரு நல்ல பிரண்ட்...

அதனால உனக்கு எப்படி தோணுதோ அப்படியே என்னை கூப்பிடு.. உன்னுடைய ஒரிஜினாலிட்டிய தொலைச்சிடாத... நீ நீயா இரு...என்ன புரிஞ்சுதா ?? ” என்றான் அவளை பார்த்தவாறு...

அவனோ அவளுக்கு டைம் வேணும் என்ற வகையில் சொல்லி இருக்க, அவளோ அவனுக்குத்தான் டைம் வேணும்னு கேட்கறான் என்ற வகையில் புரிந்து கொண்டாள்...

“அப்ப அவள் சந்தேகபட்ட மாதிரி அவள் அப்பாவுக்காகத்தான் தன்னை மணந்துள்ளான்...அவனே அதை ஒத்து கொண்டானே... “ என்று மனதில் பதிந்து கொண்டாள்....

அவள் இன்னும் அமைதியாக அமர்ந்திருப்பதை கண்டவன் பேச்சை மாற்ற எண்ணி,

“சரி...நீ வேலைக்கு போறதை பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க?? உனக்கு பிடிச்சிருந்தா போ.. இல்லைனா வீட்ல இரு.. ஹாஸ்பிட்டல் மேனேஜ் பண்றதனாலும் சுசிலா ம்மாகிட்டயும் பாரதி கிட்டயும் ட்ரெயினிங் எடுத்துக்கோ....

RJS ல்லயே கூட வேலை வாங்கி தர்ரேன்.. “ என்றான் அவளை பார்த்தவாறு.....

“இல்ல... நான் MBA முடிக்கிற வரைக்கும் இப்ப இருக்கிற வேலையையே தொடரலாம்னு இருக்கேன்... ரிசைன் பண்ணினதை வித்ட்ரா பண்ணிட்டேன்.. நாளையில் இருந்து வேலைக்கு போறேன்...” என்றவளுக்கு அப்பொழுதுதான் நினைவு வந்தது அவனிடம் சொல்லாதது... உடனே

“வந்து..... அத்தை மாமாகிட்ட முன்னாடியே பர்மிசன் கேட்டுட்டேன்.. அவங்களும் சரினு சொல்லி வேலைக்கு போக சொன்னதால் தான் நான் நாளையில் இருந்து போறேன்... “ என்றாள் இன்னும் தலையை குனிந்தவாறு....

“அடிப்பாவி.... கட்டின புருசன் என்கிட்ட கேட்க தோணலை...நேரா உன் மாமனார் மாமியார் கிட்ட பர்மிசன் வாங்கிட்டேனு சொல்றியே ... அவங்களும் ஒரு வார்த்தை கூட என்கிட்ட இதை பற்றி சொல்லலை பார்...

என் பொண்டாட்டி என்ன செய்யறானு என்னை தவிர எல்லாருக்கும் தெரியும் போல... “ என்று நொந்து கொண்டான் தன்னுள்ளே.....

ஆனாலும் அதை மறைத்து கொண்டு

“குட்... உனக்கு அதுதான் பிடிக்குதுனா அப்படியே செய்... “ என்றான்...

பின் அடுத்து என்ன பேசுவது என்று யோசித்தவன் அவள் டேபிலின் மீதிருந்த ஒரு சிறு வயது புகைபடத்தை காட்டி

“அது நீயா?? “ என்றான் அது அவள் தான் என்று தெரிந்து கொண்டே....

அதை கண்ட மலர்

“டாக்டர்....... ரொம்ப ஓவராதான் போய்கிட்டிருக்கீங்க.. நான் தான் அது னு தெரிஞ்சுகிட்டே நானா னு கேட்கறீங்களே...சரியான டுபாக்கூர் டாக்டர் தான்...“ என்று மனதினில் சொல்லி சிரித்து கொண்டவள் தன் சிரிப்பை அடக்கி கொண்டு

“ஹ்ம்ம்ம்ம்ம்ம்” என்று தலையை ஆட்டினாள்....

“உன்னோட ஆல்பம் இருந்தால் பார்க்கலாமா?? “ என்றான் ஆர்வமாக....

அவளும் எழுந்து சென்று அந்த அலமாரியில் இருந்த மூன்று ஆல்பங்களை தூக்கி வந்தாள்.... முதலில் இருந்தது அவள் சிறு வயது புகைபடங்கள்...

ஜோதி தன் இரு பிள்ளைகளுக்குமே அவர்கள் சிறு வயதில் இருந்து எடுத்த புகைபடங்களை சேகரித்து தனித்தனி ஆல்பம் ஆக்கி வைத்திருந்தார்....

முதல் ஆல்பத்தில் ஜோதி கருவுற்றிருந்த நிலையில் இருந்து இருந்தது.... மலர் அவர் வயிற்றில் இருந்ததை கூட அவர் படம் எடுத்து மலரின் ஆல்பத்தில் வைத்திருந்தார்.....

சிறுவயதில் ஜோதியை பார்க்க ஓரளவுக்கு மலரின் ஜாடையில் இருந்தார்... அவர் வயிற்றை பார்க்கும் பொழுது அவனுக்கே பரவசமாக இருந்தது...

தன்னவள் சிறு உயிராக தன் அன்னையின் வயிற்றில் பத்திரமாக இருந்ததை பார்க்கும் பொழுது மெய் சிலிர்த்தது அவனுக்கு...

அதன் பிறகு அவள் பிறந்து, தவழ்ந்து அடி எடுத்து வைத்து, நடந்து, ஓடி, விளையாண்டது என பல புகைபடங்கள் அதில் இருந்தன.....குண்டு கன்னத்துடன் கொலு கொலு வென்றிருந்த அவளை அப்படியே கையில் அள்ளி கொள்ள துடித்தது அவனுக்கு...

தனக்கு மகள் பிறந்தாலும் இப்படித்தான் இருப்பாளோ.. ?? “ என்று கற்பனை பண்ணி பார்த்தான்....

பின் ஒவ்வொரு படத்தையும் சுட்டி காட்டி மலர் அதுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொல்ல, தன்னை அறியாமல் மீண்டும் இயல்பாகி இருந்தாள் மலர்...

அவள் விவரித்து சொல்லும் கதையை கேட்க கேட்க அவனுக்கு இனித்தது...

பள்ளி பருவத்து புகைபடங்களுடன் அவள் ஆளான பொழுது சடங்கு செய்த புகைபடங்களும் இருக்க வேகமாக அதன் பக்கங்களை புரட்டினாள் அவன் பார்த்து விடக் கூடாது என்று....

ஆனால் அவன் விடுவதாக இல்லை...

அந்த பக்கத்தை மீண்டும் திருப்பி புது மலராக இருந்த அந்த பனிமலரை பார்க்க அவனுக்கு அந்த பூங்காவில் மலர துடித்த அந்த பட்டு ரோஜாவே நினைவு வந்தது...

அவ்வளவு அழகாக இருந்தாள் அதில்...


அந்த புகைபடத்தை பற்றி ஏதோ கேட்க அவளோ வெக்க பட்டு ,

“அந்த கதையெல்லாம் எனக்கு தெரியாது டாக்டர்.... நீங்க வேற பக்கத்துக்கு வாங்க.... “ என்று வேகமாக அடுத்த பக்கத்தை புரட்டினாள் சிறு வெக்கத்துடன்...

அவனும் அவள் வெக்கபடும் அழகை ரசித்து கொண்டே அடுத்த பக்கத்தை பார்க்க, அவள் மேல்நிலை பள்ளியிலும் பிறகு கல்லூரி புகைபடங்கள் மற்றும் அலுவலகத்தில் எடுத்தது கூட இருந்தது...

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சேட்டையுடன் இருந்தாள்... ஒவ்வொன்றையும் பார்க்கவே பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு...

அலுவலகத்தில் அவள் டீம் உடன் எடுத்த புகைபடத்தில் இன்னும் அதிகமாக சேட்டை பண்ணி கொண்டிருந்தது தெரிந்தது... அதை பார்த்து புன்னகைத்தவாறு கடைசி பக்கத்தை திருப்பியவன் ஷாக் ஆகி நின்றான்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!