காதோடுதான் நான் பாடுவேன்-20



அத்தியாயம்-20 

யார் அந்த ரமணி என்று தன் மருமகள் கேட்ட கேள்விக்கு சிறிது நேரம் அமைதியாக இருந்து பின் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கொண்ட சிவகாமி

“ரமணி உன் புருசனோட பிரெண்ட் கௌதம் இருக்கானே அவனோட அம்மா...” என்றார்...

அதை கேட்டதும்

இராவணனால் சிறைபிடிக்க பட்ட சீதையை காண தூது சென்ற அனுமன் இலங்கை சென்று திரும்பி வந்ததும் அவனை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தான் இராமன்...

அனுமன் என்ன செய்தி சொல்லப் போறானோ என்று படபடப்புடனும் கவலையுடனும் இருந்த இராமனின் கவலையை போக்கும் வன்னம்

கண்டேன் சீதையை... என்று ஒரே வரியில் இராமனின் கவலையை போக்கி அவன் மனதை குளிர செய்த அந்த அனுமனை போல,

தன் மாமியார் என்ன சொல்ல போகிறாரோ என்ற படபடப்புடனும் ஒரு வித அச்சத்துடனும் இருந்த மதுவிற்கு சிவகாமியின் சொற்கள் அமுதமாய் காதில் விழுந்தது..

அவள் மனதிற்குள் இருந்து வந்த ஒரு பெரும் பாரம் நீங்கி நிம்மதி வந்து சேர்ந்தது..

ரமணி கௌதமின் அம்மா என்று சிவகாமி சொல்லியதை கேட்டதும் நிம்மதி அடைந்த மது அவரால் இவருக்கு என்ன பிரச்சனை?? என்று இப்பொழுது ஒரு சுவாரஷ்யத்துடன் சிவகாமியின் முகத்தைப் பார்த்தாள் அடுத்து அவர் என்ன சொல்ல போறார் என்று கேட்கும் ஆவலில்..

தன் மருமகளின் முகத்தில் இருந்த கலக்கம் நீங்கி இப்பொழுது நிம்மதி பரவி இருப்பதை கண்டு கொண்ட சிவகாமி உள்ளுக்குள் சிரித்து கொண்டு தன் கதையை தொடர்ந்தார்....

“ஹ்ம்ம்ம் உனக்கு விளக்கமா சொன்னாதான் புரியும் மருமகளே... சரி சொல்றேன் கேள்...

நான் பிறந்து வளர்ந்தது கோயம்புத்தூர் பக்கம் ஒரு சின்ன கிராமம் மது... எங்கப்பா சின்னதா கொஞ்ச நிலத்துல விவசாயம் பார்த்து வந்தார்..

அப்ப எனக்கு 17 வயசு இருக்கும்...பத்தாம் வகுப்பு முடிச்சு மேல படிக்க விருப்பம் இல்லாமல் வீட்டில் இருந்தேன்... அப்பொழுது திடீர்னு என் ஆத்தா ஒரு நாள் ஒரு சேலைய கொடுத்து கட்டிகிட்டு வா, உன்னை பொண்ணு பார்க்க வர்ராங்க.. அப்படீனு சொல்லுச்சு...

எனக்கு அப்ப ஒன்னும் புரியல,, அப்புறம் என் ஆத்தாவே ஒரு சீலைய எடுத்து சுத்தி விட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்ததும் அவங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திடுச்சு...

எனக்கு கையும் ஓடலம் காலும் ஓடல.. கும்பலா வந்ததுல மாப்பிள்ளை யாருனு கூட தெரியல.. நான் கொஞ்ச நேரம் நின்னுட்டு உள்ள ஓடிட்டேன்.. எங்க ஆத்தாதான் உள்ள வந்து சன்னல் வழியா மாப்பிள்ளைய காட்டி பிடிச்சிருக்கானு கேட்டுச்சு..

அப்பதான் முதன் முதலா உன் மாமனார் ஐ பார்த்தேன்..

அவர் மிலிட்டரில இருந்தார்.. மிலிட்டரி ஸ்டைல் ல பார்க்க ஹீரோ மாதிரி இருப்பார்.. ஏனோ பார்த்த உடனே எனக்கு அவர பிடிச்சிருச்சு..

அதே நேரம் உன் மாமனாரும் திரும்பி சன்னல் பக்கம் பார்க்க, அந்த பார்வையிலயே நான் விழுந்தேட்டேன் னு நினைக்கிறேன்... “ என்றவர் இப்பொழுதும் இலேசாக வெக்கபட்டு சிரித்து கொண்டார் தன் பழைய நினைவுகளால்....

“வாவ்.. சூப்பர் அத்தை.. அப்பயே லவ்ஸ் ஆ... ஹ்ம்ம் மேல சொல்லுங்க.. “ என்றாள் மது ஆர்வத்துடன் சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம் அப்புறம் என்ன?? அடுத்த வாரத்துலயே எங்க கல்யாணத்தை முடிச்சிட்டாங்க...

அதுவரைக்கும் கல்யாணம் னா என்னன்னு தெரியாம இருந்த எனக்கு மூத்த மருமகளா என் புருசன் வீட்டுக்கு போனதும் கண்ணை கட்டி காட்டில விட்ட மாதிரி இருந்தது...

உன் மாமனார் குடும்பம் பெருசு... இவர் தான் மூத்தவர்.. இவருக்கு கீழ மூனு தம்பிங்க ஒரு தங்கச்சி.. எப்படியோ இரண்டு தம்பிங்களுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிட்டார்.. இவருக்கு வயசு 30 அப்ப..

இன்னும் ஒரு தம்பியும் தங்கச்சியும் இருக்க, கல்யாணம் வேண்டாம்னு இருந்தவர் அவங்க ஆத்தா கட்டாய படுத்த தான் என்னை பார்க்க வந்தாராம்... பார்த்த உடனே புடுச்சு போச்சாம்.. சரினு சொல்லிட்டாராம்..

எல்லா கதையும் பின்னாடி ஒரு நாள் என்கிட்ட சொன்னார்...

அது ஒரு கூட்டு குடும்பங்கிறதால அதுவும் மூத்த மருமகனு வந்த பிறகு அங்க எல்லாம் நான்தான் முன்னால் நின்னு செய்யனும்னுட்டாங்க..

சமைக்கிறது முதல் கொண்டு.

என் ஆத்தா என்னை அடுப்படி பக்கமே அனுப்பினது இல்ல.. திடீர்னு போய் அத்தனை பேருக்கும் சமைக்கணும்னு சொன்னா?? முதல்ல காலையில எழுந்திருக்கவே முடியாது..

எங்க வீடு இரண்டு தெரு தள்ளி இருந்ததால, என் ஆத்தா தான் சீக்கிரம் வந்து என்னை எழுப்பி விட்டு என் கூடவே ஒத்தாசைக்கு இருந்து முக்கால் வாசி வேலைய அதுவே செஞ்சுடும்...

நான் சும்மா பேருக்கு நிப்பேன்.. ஆனாலும் எத்தன நாளைக்கு என் ஆத்தாவே வந்து செஞ்சு கொடுக்கும் னு நானும் கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டேன்...

இவர் தம்பி பொண்டாட்டிங்க எல்லாரும் என்னை விட பெரியவங்க.. ஆனாலும் மூத்த மருமகனு நான் வந்ததுக்கப்புறம் அவ்வளவா எதுவும் கண்டுக்கறதில்லை..

என் மாமியார் எல்லா பொறுப்பும் என்கிட்டயே கொடுக்க அதில வேற பொறாமை பட்டு இன்னும் ஒதுங்கிகிட்டாளுங்க..

எனக்கு தான் முழி பிதுங்குச்சு.. நான் கஷ்டபடறதை கண்டு அவரால தாங்க முடியல போல இருக்கு...

ஆனா அது கிராமம்.. அதோட பொண்டாட்டிகிட்ட புருசன் தனியா எதுவும் பேச முடியாது.. சப்போர்ட் பண்ணவும் முடியாது..

அனுசரிச்சுக்கோனு வக்கனையா என்கிட்டதான் சொல்லுவார்.. பாவம் அவரும் ஒன்னும் பண்ணமுடியாது..

மூனுமாசம் ஆன உடனே அவருக்கு லீவ் முடிஞ்சு ட்யூட்டியில சேரணும்னு சொன்னப்போ நானும் அடம்புடுச்சு அவர் கூடவே கிளம்பிட்டேன்..அவரும் கூட்டிகிட்டு போய்ட்டார்..

அப்ப வடக்க பஞ்சாப் ல இருந்தார்...

அங்க போனதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது இங்க ஏண்டா வந்தோம்னு.. கம்முனு நம்ம ஊர்லயே இருந்திருக்கலாம்னு இருந்துச்சு...

பாஷை தெரியாத ஊர்.. பார்க்க எல்லாமே பயமா இருக்கும்.. உன் மாமனார் பாட்டுக்கு காலையில ட்யூட்டிக்கு கிளம்பி போய்ட்டார்னா அந்த நாள் புல்லா தனியாவே மொட்டு மொட்டு னு கதவ சாத்திகிட்டு உட்கார்ந்து இருக்கணும்...

இப்ப மாதிரி அப்ப டீவி வசதியும் இல்ல.. இவர் எப்படா வருவார்னு காத்துகிட்டே இருக்கணும்..

இந்த இலட்சணத்துல அங்க போன இரண்டாவது வாரத்துலயே மாசமா வேற ஆயிட்டேன்.. அந்த வாரத்துலயே வாந்தி தல சுத்தல்னு எல்லா தொல்லையும் ஆரம்பிச்சது..

அப்பதான் புரிஞ்சுது நம்ம சொந்தகாரங்க அருமை.. எத்தனதான் அடிச்சுகிட்டாலும், எதாவது ஒன்னுன்னா எல்லாரும் உதவிக்கு வந்திடுவாங்க இல்ல..

அந்த ஊர்ல போய் நான் யார புடிக்க... இப்ப மாதிரி செல்போன் வசதியும் அப்ப இல்ல.. வாரம் ஒரு தரம் ஊருக்கு பேச மட்டும் அழைச்சுகிட்டு போவார்..

ஒவ்வொரு இதுக்கும் அப்படி பயமா இருக்கும்.. உன் மாமனார் ஒரு வாரம் லீவ் போட்டுட்டு கூடவே இருந்தார்..

ஆனா அவரும் பாவம் எத்தனை நாளைக்கு என்னை பார்த்துகிட்டே இருக்க முடியும்...

அப்பதான் ரமணியோட நட்பு கிடைச்சது... அவ புருசனும் மிலிட்டரில வேலை செஞ்சதால அப்பதான் மாற்றலாகி அந்த பக்கம் அந்த வாரம்தான் வந்தாங்க ..

அவங்களும் தமிழ்காரங்கனு தெரிந்ஞ்சதும், என் புருசன் அவங்க வீட்டுகாரர்கிட்ட என்னை பத்தி ஏதோ புலம்பியிருப்பார் போல.. அத கேட்டு அந்த ரமணி என்னை தேடி வந்தா...

என்னை விட ஒரு மூனு வயசு அதிகம்தான்.. ஆனா பார்க்க ரொம்ப சின்ன பொண்ணா எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருப்பா..

எனக்கு உன்னை முதல்ல பார்த்தப்போ அப்படியே அந்த ரமணியை பார்த்த மாதிரியே இருந்தது..

அதனாலயே உன்னை பார்த்ததும் அப்பயே பிடிச்சு போய்டுச்சு..

நான் பேர் சொல்லிதான் கூப்பிடுவேன்.. அவளுக்கு கல்யாணம் ஆகி மூனு வருசம் ஆகியும் குழந்தை இல்லையாம்.. நான் உண்டாகிருப்பது தெரியவும் ரொம்ப சந்தோசபட்டு என் கூடயே எப்பவும் துணைக்கு இருக்க ஆரம்பிச்சுட்டா...

அவ புருசன் மூர்த்தி அண்ணா ரொம்ப நல்ல டைப்.. அவர் காலையில கிளம்பி சென்றதும் இவ என்னை பாக்க என் வீட்டுக்கு வந்திட்டா என் கூடவே தான் இருப்பா..

நான் சாப்பிட முடியாம படுத்தப்ப எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா என்ன மிரட்டி சாப்பிட வச்சிடுவா.. எனக்கும் அவளோட கள்ளம் கபடமற்ற பேச்சும் சிரிப்பும் ரொம்ப பிடிச்சு போச்சு..

இரண்டு பேருமே நல்ல பிரண்ட்ஸ் மாதிரி இல்ல நல்ல சகோதரி மாதிரி தான் பழகினோம்..

5 மாசம் முடிஞ்ச உடனே உன் புருசன் முதல் முதல்ல உதைக்க ஆரம்பிச்சதும் பயந்து போய் ரமணிய உடனே வரசொல்லி விசயத்த சொன்னா அவளும் சிரிச்சுகிட்டே இதெல்லாம் அப்படிதான் இருக்கும் அப்படீனு சொல்லி புரிய வச்சா..

அவ குழந்தை பெத்துக்கலைனாலும் அவ அக்கா மாசமா இருந்தப்போ கூடவே இருந்து பார்த்துகிட்டாளாம்.. அதனால எல்லாம் தெரிஞ்சவ மாதிரி எனக்கு எடுத்துச் சொல்லுவா..

எனக்கும் அப்ப வீட்ல யாரும் பெரியவங்க அங்க வர முடியாததால அவள நம்பிதான் இருந்தேன்...

எனக்கு வளைகாப்பு நடத்துனதுல இருந்து எனக்கு பிரசவம் ஆகி உன் புருசனை கையில வாங்கிற வரைக்குமே என் கூடவே தான் இருந்து பார்த்துகிட்டா...

அவ இல்லைனா நான் எப்படி அந்த ஊர்ல புள்ளைய பெத்து வளத்தியிருப்பேனே தெரியாது.. அந்த விசயத்துல அவளுக்கு எப்பவும் நான் நன்றி கடன் பட்டிருக்கேன்...

18 வயசுலயே ஒரு குழந்தைக்கு தாயானாலும் எனக்கு குழந்தைய எப்படி தூக்கி வச்சுகனும்னு எதுவும் புரிபடல.. ஆனா ரமணி தயங்காம தூக்கி வச்சுக்குவா...

இந்த பையனும் அவ தூக்கினா அழாம இருப்பான்.. அவ நேரத்துக்கு இல்லைனா தேட ஆரம்பிச்சிடுவான்.. அதில இருந்து அவளே முழு நேரமும் பார்த்துக்குவா.. பால் குடிக்க மட்டும் தான் என்கிட இருப்பான்..

நிகிலன் னு பேர் வச்சது கூட அவதான்...

நிகிலன தூக்கின நேரமோ என்னமோ அவனுக்கு 6 மாசம் ஆனப்போ ரமணியும் மாசமாயிட்டா...அதுவரை குழந்தை இல்லாம இருந்தவ நிகிலன் வந்த பிறகு தான் அவளுக்கு ஒரு வாரிசு வரவும் நிகிலன் மேல இன்னும் பாசமாயிட்டா...

அவன பார்க்காம ஒரு நாள் கூட இருக்க மாட்டா.. அவ வயித்துலயும் சுமந்துகிட்டு நிகிலனையும் விடாம பார்த்துகிட்டா...

அப்பதான் கௌதம் பிறந்தான்.. அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி..

அவளுக்கு குழந்தை பிறந்த பிறகு நானே நிகிலன பார்த்துக்க ஆரம்பிச்சேன்.. ஆனா இந்த பய என்கிட்ட இருக்கவே மாட்டேனுட்டான்.. ரமணியும் அவன பார்க்காம இருக்க முடியாது னு அடம் பிடிக்கவும் தினமும் காலையில கொண்டு போய் அங்க விட்டுட்டு நானும் அவ வீட்லயே கொஞ்ச நேரம் இருந்துட்டு வருவேன்..

இரட்டை குழந்தை மாதிரிதான் இரண்டு பேரையுமே பார்த்துகிட்டா...

இந்த நிலையில எனக்கு அடுத்து சின்னவன் மகிழன் வயித்துல வந்ததும் பெரியவன பாத்துக்கற அந்த கொஞ்ச நேரமும் குறஞ்சு போச்சு..

திரும்பவும் அதே வாந்தி மயக்கம் அதிகமாக, நான் வீட்லயே இருந்துக்குவேன்..

உன் மாமனார் மட்டும் நிகிலன கொண்டு போய் ரமணி வீட்ல விட்டுட்டு போய்டுவார்.. அப்புறம் வர்றப்ப தான் கூட்டிகிட்டு வருவார்...

அப்ப நான் இருந்த நிலையில அத சரியா கண்டுக்காம விட்டுட்டேன்.. நிகிலன் வளர வளர என்னவிட ரமணியதான் ரொம்பவும் தேட ஆரம்பிச்சான்....

அவ வீட்டுக்காரர் அவளை பேர் சொல்லி கூப்பிடற மாதிரி அவனும் ரமணி னு தான் கூப்பிடுவான்.. அதுவும் அவன் மழலையில அவள் பேர் சொல்லி கூப்பிடறத கேட்க அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்..

அதனாலயே அப்படியே விட்டுட்டா.. கொஞ்சம் விவரம் தெரிய வளர்ந்ததுக்கப்புறம் ரமணி மா னு கூப்பிடுவான்..

அடுத்து சின்னவனும் பிறக்க, நான் முழு நேரமும் அவனோடதான் இருக்க வேண்டியதா போச்சு... 



ப்படியே போக, பெரியவன் 6 ஆம் வகுப்பு படிக்கிறப்போ தான் அவருக்கு பதவி உயர்வு வந்தது....வேற இடம் மாத்தனும்னாங்க.. அப்புறம் அடிக்கடி மாத்த வேண்டி இருக்கும்னு அவர்தான் எங்கள கூட்டிகிட்டு வந்து இங்க குடிவச்சுட்டு இரண்டு பசங்களையும் இங்கயே ஸ்கூல் ல சேர்த்துட்டார்.. அவர் மட்டும் அங்க இருந்தார்..

ரமணியும் இங்கயே வந்துட்டா… இரண்டு குடும்பமும் பக்கத்து பக்கத்து வீட்லதான் இருந்தோம்.. மூனு பசங்களும் ஒரே பள்ளிக்கூடம் தான் போனாங்க...

நிகிலன் வழக்கம் போல நம்ம வீட்ட விட ரமணி வீட்லதான் அதிகம் இருப்பான்... அதுவும் கௌதம் பய நிகிலன் கிட்ட அப்படி ஒட்டிக்குவான்...இரண்டு பேரும் ஒன்னாவே சுத்துவானுங்க..

சின்னவன் எப்பவும் என் பின்னாடியே சுத்திகிட்டுருப்பான்...

இங்க வந்த ஒரு வருசம் கழிச்சு அகிலா பொறந்தா.. அவ பொறந்தப்போ உன் மாமனார்க்கு அவ்வளவு சந்தோசம்.. பொண்ணு பொறந்துட்டானு.. அவள் பார்க்க னா மூனு மாசத்துக்கு ஒரு தரம் ஓடி வந்திடுவார்..

மூனு பசங்களுமே அவருக்கு உசிருதான்.. ஆனால் நிகிலன்தான் அவர்கிட்ட ரொம்ப ஒட்டிக்குவான்.. அவர் வர்றப்ப எல்லாம் மிலிட்டரில நடக்கிறதெல்லாம் கதையா சொல்லுவார்...

மூனு பசங்களையும் கூட படுக்க போட்டுகிட்டு அவ்வளவு கதை பேசுவார்.. .. மகிழனுக்கு அவ்வளவு விருப்பம் இருக்காது..அவன் எழுந்து என்கிட்ட ஓடி வந்திடுவான்..

ஆனால் நிகிலன் அப்பயே எல்லாத்தையும் ஆர்வமா கேட்பான்.. அவங்கப்ப கிட்ட அப்பயே அத்தனை கேள்வி கேட்பான்..

அகிலா வாலும் அவர் வந்திட்டா அவர் பின்னாடியே தான் சுத்துவா..

எல்லாம் நல்லா போய் கிட்டிருந்த சமயம் தான் ஏதோ சண்டை னு வந்தது.. அவர் லீவ்க்கு இங்க வந்திருந்தப்போ தான் அவசரமா அவர வரச் சொல்லி போன் வந்தது...

அந்த முறை போறப்போ அவருக்கு போக மனசே வரல.. அகிலா வ அப்படி கொஞ்சுனார்..

மூன்று பசங்களுமே அவர் காலை சுத்திகிட்டு அவர் பின்னாடியே போனாங்க..

எனக்கும் ஏனோ அப்ப கஷ்டமா இருந்தது.. அவர அனுப்ப மனசே வரல.. ஆனாலும் போயாகணும் னு அவசரமா கிளம்பி போனார்

அவர் போன இரண்டு வாரத்துலயே திரும்பி வந்திட்டார்.. ஆனா உயிர் மட்டும் இல்லாமல் வெறும் உடலா...” என்றவர் நிறுத்தி குலுங்கி அழ ஆரம்பித்தார்..

அப்ப அனுபவித்த அதே வேதனை இப்பவும் அவர் முகத்தில் வந்ததை மதுவால் உணர முடிந்தது..அதை கேட்கும் பொழுதே அவளுக்கே கண்ணில் நீர் வர அந்த நிலையில் அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது..

மெதுவாக அவரை அணைத்து கொண்டாள் மது தன் கண்ணை துடைத்தபடியே..

சிவகாமியும் சிறிது நேரம் பழைய நினைப்பில் கண்ணீர் வடித்தவர் பின் தன் முந்தானையால் கண்ணை துடைத்து கொண்டு தன் கதையை தொடர்ந்தார்..

மூனு புள்ளைங்கள வச்சுகிட்டு இந்த பட்டணத்துல எப்படி சமாளிப்பதுனு பயமா இருந்தது.. அப்பதான் படிக்காத என் முட்டாள்தனம் புரிந்தது..

ஏதாவது படிச்சிருந்தாலாவது அத வச்சு ஏதாவது வேலைக்கு போய் ஓரளவுக்கு சமாளிச்சிருக்கலாம்.. அதுக்கும் வழி இல்லாம போச்சு..

அவர் உயிரோடஇருக்கிறவரைக்கும் அவரையே சுத்தி வந்த அவரோட கூட பிறந்தவங்களும் அவர் காரியம் முடிஞ்சதும் நைசா நழுவிட்டாங்க.. அவங்களுக்கெல்லாம் எவ்வளவு செஞ்சிருப்பார்.. எங்க கல்யாணத்துக்கு பிறகு கூட கடைசி தம்பி தங்கச்சிக்கு அவர்தான் கல்யாணம் பண்ணி வச்சார்...

மாசம் மாசம் பணம் அனுப்பி வச்சார்..

ஆனா யாருமே அத நினச்சு பார்க்கல.. என்ன செய்யறதுனு முழிச்சிகிட்டிருந்தப்பதான் அந்த முருகனே அனுப்பி வச்ச மாதிரி அந்த மூர்த்தி அண்ணா தான் எனக்கு உதவி செஞ்சார்...

யார் யாரையோ புடிச்சு எனக்கு சத்துணவு டீச்சர் வேலைக்கு ஏற்பாடு செய்து தந்தார்.. அதோட அவருடய பென்சனும் வர, அத வச்சு கொஞ்சம் சமாளிக்க முடிந்தது..

இந்த நிலையில பசங்களோட படிப்ப பத்தி எல்லாம் என்னால கவனிக்க முடியல.. எல்லாம் அவனுங்களே படிச்சுகிட்டது தான்..

அதுவும் அவர் இறப்புக்கு வந்த வங்க எல்லாம் பெரியவன்கிட்ட நீதான் இந்த குடும்பத்தை பார்த்துக்கணும்னு அட்வைஸ் பண்ணப் போக அது வேற அவன் மனசுல பதிஞ்சு போச்சு போல..

விடலை பருவத்தில் அவன் படிப்பை வாழ்க்கையை அவனே தீர்மானிக்கும் அளவுக்கு மெச்சூர்டாக இருந்தான் பெரியவன்.. அதுக்கு காரணம் உன் மாமனார் முன்னாடியே அவனுக்கு அதெல்லாம் சொல்லி கொடுத்திருந்தார்...

அவன் படிக்கிறதோட சின்னவனுக்கும் சொல்லி கொடுப்பான்.. இந்த அகிலாவையும் இரண்டு பசங்களுமே தான் பார்த்துகிட்டாங்க..

பெரியவன் 12 ஆம் வகுப்பு முடிஞ்சதும் அவனாவே மிலிட்டரி ஸ்கூல் ல போய் சேர்ந்துட்டான்... அங்கயே என்னவோ படிச்சு பெரிய வேலைக்கும் போய்ட்டான்...

அவன் வேலைக்கு போன பிறகு தான் என்னால கொஞ்சம் மூச்சுவிட முடிஞ்சது... ஆனா நான் பண்ணின அடுத்த முட்டாள் தனம் அவன் என்ன வேலை செய்யறான் னு கண்டுக்காம விட்டது தான்...

வெளி ஊர்ல வேலைனு சொல்லிட்டு தான் சேர்ந்தான்... நானும் பையன் தான வேலையை தேடி கிட்டானேனு சந்தோசமா இருந்தேன்...

ஒரு வருடத்திற்கு பிறகு சின்னவன் கடைசி வருடம் காலேஜ் முடிக்கிற நேரம் காலையில திடீர்னு போன் வந்தது.. எடுத்து பேசினால் பெரியவனுக்கு ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிட்டல் சேர்த்திருக்கறதா போன் வந்தது....

எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.. விழுந்தடிச்சு ஏரோ பிளான புடிச்சு டெல்லி போய் பார்த்தா என் பையன எனக்கே அடையாளம் தெரியல.. உடம்பு பூரா கட்டுதான் போட்டு வச்சிருந்தாங்க.

இரண்டு நாளாச்சு என் பையனுக்கு சுய நினைவு வர்றதுக்கு.. அப்பதான் அவன் எங்க வேலை செய்யறான் னு தெரிஞ்சுது..

விமானப்படையாம் ( Air Force).... அதுலதான் வேலையில சேர்ந்திருந்தானாம்... அவன் அப்பாவ பார்த்து அவனுக்கும் மிலிட்டரில சேரணும்னு ஆசை.. ஆனா நான் விடமாட்டேனு தெரிஞ்சு என்கிட்ட சொல்லாமலயே மறச்சு அந்த வேலையில சேர்ந்துட்டான்

பயிற்சி செய்யறப்போ அந்த விமானத்துல ஏதோ கோளாறு ஆகி இவன் போன விமானம் வெடிச்சு இவன் மட்டும் குதிச்சுட்டானாம்.. அப்படினு ஏதோ சமாளிச்சாங்க..

ஆனா எனக்கு என்னவோ எங்கயோ சண்டைக்கு போய்தான் இப்படி ஆச்சுனுதான் தோணுச்சு.. ஆனா அது இராணுவம் ரகசியம் வெளில சொல்ல மாட்டாங்கனு மூர்த்தி அண்ணாதான் சொன்னார்....

அப்பதான் அவன் வேலை செய்யறதுல இருக்கிற ஆபத்து புரிஞ்சுது.. ஏற்கனவே என் புருசனை இழந்துட்டேன்.. இப்ப என் புள்ளையும் நான் இழக்க விரும்பல...

அப்பயே நான் முடிவு பண்ணிட்டேன்.. இனிமேல் இவன இந்த வேலைக்கு அனுப்ப கூடாது னு.. “ என்று நிறுத்தினார்...

“ஏன் அத்தை.. நாட்டுக்கு சேவை செய்யறது நல்லது னு தான சொல்லுவாங்க.. நீங்க ஏன் ஒத்துக்கல..?? “ என்றாள் மது

“ஹ்ம்ம்ம்.. அவர் இறந்த பிறகு என் குடும்பம் தான் தெருவுல நின்னது.. மற்றவங்க எல்லாம் அவர் தியாகி னு ஒரு இரண்டு நாள் பேசிட்டு போய்ட்டாங்க.. ஆனா மீதி வாழ்க்கை பூராவும் வலி வேதனையுடன் அனுபவிச்சது நானும் என் பசங்களும் தான்..

என் பொண்ணு அகிலா அவ அப்பா முகத்த கூட சரியா பார்க்கல.. அந்த நிலையில் அவ அப்பாவ இழந்துட்டு எவ்வளவு கஷ்டமா இருக்கும்...

புருசன் போர்ல மாண்டாலும் புள்ளையையும் போருக்கு அனுப்பி வைச்சு வீரத்தாய் னு பதக்கத்த வாங்கி குத்திகிட்டு வெளில சிரிச்சுகிட்டு உள்ளுக்குள்ள அழுவற அந்த பட்டமும் பதக்கமும் எனக்கு வேண்டாம் மா..

நான் பட்ட கஷ்டம் என் புள்ளைய கட்டிக்க போறவளும் பட வேண்டாம்னுதான் அவன தடுத்தது,.. நான் ஒரு நாட்டை காக்கற தாய் இல்லை தான்..என் குடும்பம் நல்லா இருந்தா போதும்னு நினைக்கிற சுய நல தாய்தான் நான்..

ஏனா அந்த அளவுக்கு என் மனம் ரணம் ஆயிருச்சு... அதனால தான் என்னால அவன மறுபடியும் அனுப்பிட்டு எப்ப எவன் போன் பண்ணுவான் என்ன சொல்ல போறானோ னு வயித்துல நெருப்ப கட்டிகிட்டு இருக்க முடியாது...” என்று மீண்டும் வேதனையுடன் கண்ணை மூடிக் கொண்டார்....

மதுவுக்கு அவர் சொல்வதன் உண்மை புரிந்தது... சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனம் அழிந்து அதில் பயணித்த வீரர்கள் மாண்டதும், காஷ்மீர் எல்லையில் பனி சறுக்களில் மாட்டி உயிரிழந்த இராணுவ வீரர்கள் இப்படி அடிக்கடி எத்தனை செய்திகள் படித்திருக்கிறாள்...

ஏன் சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய விமான தாக்குதலில்( Air Strike) ஒரு விமானம் பழுதாகி பாகிஸ்தானில் தரை இறங்கிய தமிழ்நாட்டை சேர்ந்த கமாண்டர் அபிநந்தன் அவள் கண்முன்னே வந்தான்...

சரியான நேரத்தில் தரை இறங்காமல் இருந்திருந்தாலோ இல்லை பாகிஸ்தான் இராணுவத்தால் வேற ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் அவர் கதி என்னவாகியிருக்கும்??

அதை விட அவரை நம்பி இருக்கும் அவர் குடும்பம், மனைவி, குழந்தை னு எவ்வளவு பெரிய இழப்பாயிருக்கும்?? “ என்று யோசித்தவள் அந்த அபிநந்தன் இடத்தில் தன் கணவனை வைத்து பார்க்க, அவனுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் என்று நினைக்கையிலயே நெஞ்சை அடைத்தது மதுவுக்கு...

முன்பு வெறும் செய்தியாக படித்த பொழுது தோன்றாத உணர்வு அதையே ஆழ்ந்து தன் குடும்பமாக நினைத்து பார்க்கும் பொழுது உடல் சிலிர்த்தது அவளுக்கு...

“ஐயோ... அந்த மாதிரி எதுவும் நேர்ந்து விடக்கூடாது... தன் மாமியார் செய்தது தான் சரி..” என்று தோன்றியது இப்பொழுது...

ஒவ்வொரு வீரரையும் நாட்டிற்காக அனுப்பிவிட்டு அவர்கள் குடும்பம் படும் வேதனையும் வலியும் இப்பொழுது மதுவுக்கு நன்றாக புரிய, அந்த வீரர்களுக்கும் அவர்களை அனுப்பி வைத்து அவர்களுக்காக காத்து கொண்டிருக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் ஒரு ஹேட்ஸ் ஆப்(hats off) பண்ணினாள் மனதுக்குள்...

தன் மருமகளின் சிந்தனையை கவனிக்காமல் தன் கதையை மேலும் தொடர்ந்தார் சிவகாமி

“அதனால அவன் கொஞ்சம் சரியானதும் சென்னைக்கே கூட்டிட்டு வந்துட்டேன்.. ஒரு மாசம் ஆச்சு முழுவதும் குணமாக..

சரியான உடனே திரும்பவும் வேலைக்கு கிளம்ப தயாரானான்.. நான் போகக்கூடாது னு சொன்னா அத காதுலயே கேட்கல இந்த பய.... நானும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து உண்ணாவிரதம் இருந்து எல்லாம் பண்ணியும் அவன் வழிக்கு வரல..

அப்புறம் ரமணி கிட்ட போய் சொல்லி கெஞ்சி கேட்க அப்புறம் அவ என்ன சொன்னாளோ அப்புறம் தான் கொஞ்சம் இறங்கி வந்தான்..

அப்பதான் நீ இப்ப எழுதறியே அந்த கலெக்டர் பரிட்சைக்கு எழுதி போட்டு படிக்க ஆரம்பிச்சான்... நாள் முழுவதும் அவன் ரூமுக்குள்ளயே உட்கார்ந்து படிப்பான்..

எங்க நல்ல நேரம் முதல் தரம் எழுதினதுலயே கலெக்டர்க்கு கிடைச்சிருச்சு.. ஆனா அது புடிக்காம இந்த போலிஸ்க்குதான் போவேனு ஒரே அடம் பிடிச்சான்..

எனக்கு வேற வழி இல்லாம, இந்த தரமும் அந்த ரமணி கிட்ட போய் நின்னா அவ என்னை திட்டி அனுப்பிச்சிட்டா......

அவன் அவனுக்கு புடிச்ச வேலைய செய்யட்டும்.. எல்லாத்தையும் இப்படி குறை சொன்னா அவன் எப்படி சந்தோசமா இருப்பானு சொல்லி அவன் கிட்ட சொல்லமாட்டேனுட்டா..

நானும் சரிதான்போடி னு அவ கிட்ட சண்டை போட்டுட்டு வந்துட்டேன்... அப்புறம் வேற வழியில்லாம ஒத்துக்க வேண்டியதா போச்சு... அதிலயிருந்து இந்த வேலைய விடாம புடிச்சு தொங்கி கிட்டிருக்கான் என்றார் ஆதங்கத்துடன்...

அதை கேட்ட மதுவுக்கு அந்த ரமணியை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது... இன்னொருத்தர் பையன் மேல இவ்வளவு பாசமா இருந்திருக்காங்களே என்று...

“அந்த ரமணி இதுவரைக்கும் நல்லது தான் அத்தை பண்ணியிருக்காங்க.. அவங்கள ஏன் திட்டினீங்க.. “என்றாள் மது இன்னும் தான் நினைத்ததுக்கு விடை கிடைக்காமல்....

“ஹ்ம்ம்ம் இதுவரைக்கும் பட்ட கஷ்டத்தை விட பெரிய க்ஷ்டம் அந்த ரமணியால வந்தது அதுக்கு பிறகு தான்.. “ என்று ஒரு பெருமூச்சு விட்டு மீதி கதையை தொடர்ந்தார் சிவகாமி.....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!