தவமின்றி கிடைத்த வரமே-25



அத்தியாயம்-25 

ரண்மனை போல இருந்த வீடு மிகவும் அமைதியாக இருந்தது...

மீனாட்சியும் சுந்தரும் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றிருக்க, வசீகரன் வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்றிருந்தான்...

அடுத்த நாளில் இருந்து ஆரம்பிக்கும் மாத தேர்வுக்காக தயார் பண்ணுவதற்காக வீட்டில் தனியாக இருந்தாள் வசுந்தரா....

தன் பெற்றோர்கள் மற்றும் அண்ணன் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில், கீழிறங்கி வந்தவள் சமையலறைக்கு சென்று ஒரு நாற்காலியை இழுத்து வந்து போட்டு அதன் மீது மற்றொரு சிறிய ஸ்டூலை வைத்து அதன் மீது ஏறி நின்று கொண்டு மேலே அலமாரியிலிருந்து எதையோ எடுக்க முயன்று கொண்டிருந்தாள்…

கால்களை எக்கி நின்று கொண்டு எடுக்க முயன்றாலும் கண்கள் யாராவது வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சுற்றிலும் பார்த்துக் கொண்டே அவள் தேடியதை தேடிக் கொண்டிருந்தாள்....

மேலே இருந்த ஒவ்வொரு டப்பாவையும் கை நீட்டி எடுக்க முயன்று கொண்டிருந்தாள்... அவள் எண்ணம் தெரிந்துதான் அவள் அன்னை அவள் தேடும் பொருளை அவள் கைக்கு கிடைக்காமல் வேற எங்கோ ஒளித்து வைத்திருந்தார் போல..

அப்படி வசுந்தரா என்ன தேடுகிறாள் என்று பார்க்கிறீர்களா??

ஒரு முறை அவள் தந்தையின் சொந்த கிராமத்திற்கு ஏதோ விசேசத்திற்காக சென்றிருந்தாள் வசுந்தரா...ஏதாவது முக்கியமான விசேச நாட்களில் சுந்தர் தன் குடும்பத்தை அழைத்து கொண்டு ஊருக்கு சென்று வருவது வழக்கமாகும்...

அப்படி செல்லும் பொழுது எல்லாம் அவள் பாட்டி வீட்டின் அருகில் இருக்கும் அவள் வயதை ஒத்த பெண் அவளுக்கு தோழியானாள்...அவளுடன் அரட்டை அடித்து கொண்டே அந்த ஊரை சுற்றிபார்க்க அவளுக்கு ரொம்ப பிடிக்கும்...

அவளுமே வசுந்தரா வந்துவிட்டால் வசுந்தரா அந்த கிராமத்தில் இருந்து கிளம்பும் வரைக்குமே வசுந்தரா உடனே சுற்றி கொண்டிருப்பாள்....

அப்படி ஒருமுறை கிராமத்திற்கு சென்றிருந்த பொழுது, தோழிகள் இருவரும் ஊரை சுற்ற கிளம்பினர்...

அப்பொழுது அவள் தோழி சமையலுக்கு பயன்படுத்தும் புளியுடன் சிறிது உப்பை சேர்த்து பிசைந்து பின் உருண்டையாக உருட்டி அதை ஒரு குச்சியில் குத்தி லாலிபாப் போல செய்து சுவைத்து கொண்டே வசுந்தராவுடன் வந்தாள்...

அதைக் கண்ட வசுந்தராவும் ஆவலாக அது என்ன என்று கேட்க அவள் தோழியும் அவளிடம் இன்னொரு உருண்டையை செய்து கொடுத்து ருசி பார்க்க சொன்னாள்...

எப்படியோ அந்த சுவை வசுந்தராவுக்கு மிகவும் பிடித்துவிட அதிலிருந்து இதுமாதிரி புளியை உப்புடன் சேர்த்து உருட்டி லாலிபாப் போல சாப்பிடும் பழக்கத்தை பிடித்து கொண்டாள்...

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த பிறகும் அதே பழக்கத்தை தொடர்ந்தாள் வசுந்தரா....

அதை அதிகமாக சாப்பிட்டால் ஒத்துக்காது என்று மீனாட்சி எவ்வளவு முறை சொல்லி பார்த்து அவள் கேட்கவில்லை...

அவள் வளர்ந்த பிறகும் அதே பழக்கம் தொற்றிக் கொள்ள அதை மாற்ற எண்ணி மீனாட்சி புளியை அவள் கண்ணில் படாதவாறு ஒளித்து வைத்து விடுவார்...

இன்று அனைவரும் வெளியில் சென்றிருக்க, வசுந்தரா மட்டும் தன் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்...

திடீரென்று அவளுக்கு பழைய ஞாபகம் வரவும் உடனே கிளம்பி சமையல் அறைக்கு வந்துவிட்டாள்... கீழே முழுவதும் அந்த புளியை தேடி முடித்ததும் எங்கும் இல்லாமல் போக, ஒருவேளை மேலே ஒளித்து வைத்திருக்கிறாரோ என்று எண்ணி மேல தேடி கொண்டிருந்தாள்...

மேலயும் எட்டாமல் போக, ஒரு நாற்காலியை இழுத்து வந்து போட்டு அதன் மீது மற்றொரு சிறிய ஸ்டூலை வைத்து அதன் மீது ஏறி தேடி கொண்டிருந்தாள்...

அவள் மும்முரமாக தேடிக்கொண்டிருந்த வேளையில் வீட்டிற்கு வெளியிலிருந்து யாரோ சத்தம் போட்டு அழைப்பது அவள் காதில் விழவில்லை...

வெளியில் நின்றிருந்தவனும் அழைப்பு மணியை அழுத்த, அது வேலை செய்யாமல் போக, வீட்டில் யாராவது இருக்கிறீர்களா?? என்று அழைத்து பார்த்து பதில் எதுவும் இல்லாமல் போக திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே வந்தான் அந்த நெடியவன்....

உள்ளே வந்தவன் சுற்றிலும் நோட்டமிட யாரும் இல்லாமல் போக மீண்டும் ஒருமுறை அழைத்துப் பார்த்தான்... அப்பவும் பதில் இல்லாமல் போனது....

அப்பொழுது சமையல் அறையில் யாரோ உருட்டும் சத்தம் கேட்க மெல்ல தயங்கியபடி சமையலறைக்கு உள்ளே வந்தான்...

அதே நேரம் அவள் தேடியதை கண்டுபிடித்த வசுந்தரா அது கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்க, அதை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் இன்னும் கொஞ்சம் காலை எக்கி நுனி காலில் நின்று கொண்டு அதை எட்டி எடுக்க முயல, அந்த நேரம் பார்த்து எக்ஸ்க்யூஸ் மீ என்றான் அந்த நெடியவன்....

திடீரென்று அதுவும் அவள் அருகில் கேட்ட குரலால் திடுக்கிட்டு பயந்து போனவள் கால் இடறி அப்படியே கீழே சரிய ஆரம்பித்தாள்...

சமையல் அறைக்கு அருகில் வந்தவன் உள்ளே ஒரு பெண் நாற்காலி மீது இருந்த ஸ்டூலில் நின்று கொண்டிருந்ததையே அதிசயமாக பார்த்து கொண்டு நின்றிருந்தவன் திடீரென்று அவள் சரியவும் அனிச்சை செயலாக கையை நீட்டி கீழ சரிபவளை தன் இரண்டு கைகளாலும் தாங்கி கொண்டான்....

அவள் கீழ விழுந்து விடக்கூடாதே என்ற பதற்றத்தில் அவசரமாக கையை நீட்டி இருக்க, அவன் கைகளில் விழுந்தவளை இடையோடு சேர்த்து தாங்கிப் பிடித்து இருந்தான்..

கீழ விழ போகிறேன் என்று கண்ணை இறுக்க மூடி இருந்தவள் பின் தான் கீழ விழாமல் போனதை உணர்ந்து, சில வினாடிகள் கழித்து மெதுவாக கண்ணை திறந்து பார்த்தாள்...

கண்ணை திறந்து பார்த்ததும் ஒரு நெடியவன் அவளை தன் கைகளால் தாங்கிக் கொண்டு இருந்தது புரிந்தது...

அவனின் வலிய கரங்கள் அவளின் மெல்லிய இடையை சுற்றி இருக்க, மெல்ல கண் விழித்தவள் அவன் முகத்தை வெகு அருகில் பார்க்க, ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றியது வசுந்தராவுக்கு...

முதல் முதலாக அவள் தந்தை மற்றும் அண்ணனை தவிர்த்து புதிதாக ஒரு ஆடவனின் கை அவள் மேல் பட்டதும் உள்ளுக்குள் சிலிர்த்துப் போனது அவளுக்கு...

திடீரென ஒரு புதியவனை மிக நெருக்கமாக பார்க்கவும் படபடப்பாக இருந்தது அவளுக்கு... உள்ளுக்குள் ஏதோ புரழ்வதை போல இருந்தது..

அவனுக்கும் அதே போல் தான் இருந்திருக்கும் போல... இமைக்க மறந்து அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்...

சில வினாடிகள் இருவரும் ஒருவரை மறந்து ஒருவர் கண்ணோடு கண் நோக்க உள்ளுக்குள் தொலைந்து போனதை போல இருந்தது இருவருக்குமே....

பின் சில நொடிகளில் சுதாரித்துக் கொண்ட அந்த நெடியவன் அவசரமாக தன் கையில் விழுந்திருந்தவளை கீழ இறக்கி விட்டான்...

“சாரி.... “ என்றான் லேசாக வெட்கப்பட்டு தரையை பார்த்தவாறு..

அதற்குள் தன் நிலைக்கு வந்திருந்த வசுந்தராவுக்கும் வெட்கமாகி போனது...அவள் கன்னங்கள் அழகாக ரோஜாக்களை பூக்க வைத்தன...

அவளுமே தலையை குனிந்து கொண்டு தரையை பார்த்தாள் சில நொடிகள்....

இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அதற்குள் முழுவதும் சுதாரித்துக் கொண்டவள் அப்பொழுதுதான் அவனை உற்று பார்த்தாள்....

அவனை முன்ன பின்ன பார்த்ததாக ஞாபகம் இல்லை அவளுக்கு.......

அதுவும் திறந்திருந்த வீட்டிற்குள் இவ்வளவு தூரம் உரிமையாக வந்திருக்கிறானே !! யாராயிருக்கும் ?? என்று தன் மூளையை கசக்கி யோசிக்க, எதுவும் புரியவில்லை அவளுக்கு...

அப்பொழுதுதான் அவள் மடத்தனம் புரிந்தது....

முன்ன பின்ன தெரியாத ஒருவன் வீட்டிற்குள் வரும் வரை கவனிக்காமல் இருந்திருக்கிறாளே என்று... தன் பெற்றோர்களும் அண்ணனும் எத்தனை முறை சொல்லி இருக்கிறாரகள்..

“பெண்கள் எப்பொழுதும் விழிப்போடு இருக்கவேண்டும்... வீட்டில் இருக்கும் பொழுது கதவை தாளிட்டு கொள்ள வேண்டும்..பகலில் அதுவும் தனியாக இருக்கும் நேரங்களில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.. “ என்று எத்தனை முறை அறிவுறுத்தி இருக்கிறார்கள்..

“அதை மறந்து இப்படி கதவை திறந்து வைத்துவிட்டேனே..!! அப்படியே திறந்திருந்தாலும் இவன் எப்படி நேராக உள்ள வரலாம்??...வெளியிலயே நின்று அழைப்பு மணியை அழுத்த வேண்டியதுதானே ?? “ என்று எண்ணியவளுக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று...

“அதுக்காக அப்படியே உள்ள வந்திடுவானா?? “ என்று மனதுக்குள் அர்ச்சனை பண்ணியவள் அவனை பார்த்து முறைத்தாள்....

அப்பவும் மனம் ஆறாமல்

“ஹலோ மிஸ்டர்... யார் நீங்க ?? தொறந்த வீட்டுக்குள்ள எதுவோ புகுந்த மாதிரி இப்படித்தான் ஆளில்லாத வீட்டுக்குள்ள அனுமதி இல்லாமல் வருவீங்களா ??

அப்படியே வந்தாலும் ஹால் லயே காத்திருக்க வேண்டியது தானே...கிச்சன் வரைக்கும் எதுக்கு வந்தீங்க?? பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கீங்க.. கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல?? “ என்று அவனை முறைத்தவாறு படபடவென்று பொரிந்தாள் வசுந்தரா.....

ஏற்கனவே அனுமதி இல்லாமல் உள்ள வந்து விட்டமே என்ற குற்ற உணர்வில் இருந்தவன் வசுந்தரா போட்ட அதட்டலில் இன்னும் மிரண்டு போய் திறுதிறுவென்று முழித்தான்....

அவன் முழிப்பதை கண்டவளுக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி கொண்டு

“ஹ்ம்ம் கேட்டு கிட்டே இருக்கேன் இல்ல.. கல்லு பிள்ளையார் மாதிரி முழிக்கறீங்க ?? இல்ல வாயில கொழுக்கட்டையை எதுவும் முழுங்கிட்டு வந்திட்டிங்களா?? வாய திறந்து சொல்லுங்க.. யார் நீங்க?? “ என்று மேலும் அதட்டினாள் கெத்தாக....

அவள் போட்ட அதட்டலில் மேலும் அரண்டவன் மெல்ல சுதாரித்து கொண்டு

“வந்து.....சாரிங்க... என் பெயர் இனியவன்... மாமாவை பார்க்க வந்தேன்.. மாமா இருக்காரா ?? “ என்றான் தயக்கத்துடன்...

அவன் மாமா என்றதும் அவளுக்கு யோசனையாக இருந்தது...

“இவன் மாமானு யாரை சொல்கிறான் ?? நமக்கு தெரியாமல் நம்ம வீட்ல இந்த ஒட்டட குச்சி மாமா னு சொல்ற மாதிரி யார் இருக்கா?? “ என புரியாமல் அவனை பார்க்க, அவள் பார்வையில் இருந்தே அவளுக்கு தான் யாரென்று புரியவில்லை என புரிந்து கொண்டவன்

“சாரி.... நான் மலர்.. பனிமலர் உடைய தம்பி... இனியவன்.. பாம்பே ல இருந்து இன்னைக்கு காலைல தான் வந்தேன்...

அக்கா மேரேஜ் அப்போ என்னால வர முடியல... அதனால இப்ப வந்து மாமாவை நேர்ல பார்த்துட்டு போகலாம் என்று வந்தேன்...வசீகரன் மாமா இருக்காரா ?? “ என்றான் கொஞ்சம் தெளிந்தவனாக......

அதை கேட்டு அதிர்ந்து போனாள் வசுந்தரா...அப்பொழுதுதான் அவனை நன்றாக உற்று பார்த்தாள்...

நெடுநெடுவென்று நல்ல உயரமாக வளர்ந்திருந்தான்... ஆள் வளர்ந்த அளவுக்கு சதை பிடிக்காமல் கொஞ்சம் ஒல்லியாக இருந்தான்.. ஆனால் போன்(bone) வெயிட் என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒல்லியாக இருந்தாலும் திடகாத்திரமாக உடலை உறுதியாக வைத்திருந்தான்...

அவளை தாங்கி பிடித்ததிலயே அவன் கையின் வலிமை அவளுக்கு புரிந்தது...

அவன் முகத்தை ஓர கண்ணால் பார்க்க கொஞ்சமாக அவளுடைய ரோல் மாடல், கனவு நாயகன் சுந்தர் பிச்சை போல இருந்தான்....

ஆம்.. வசுந்தராவுக்கு சுந்தர் பிச்சை என்றால் கொள்ளை பிரியம்...

அவள் வகுப்பு பெண்கள் இன்றைய நடிகர்களை கனவு நாயகனாக எண்ணி பெருமை அடித்து கொள்ள, வசுந்தராவோ சுந்தர் பிச்சையின் விசிறி ஆகி போனாள்..

அவள் அறை முழுவதும் அவருடையை புகைபடங்கள் நிறைந்திருக்கும்...ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான போஸ்களில் இருக்கும்....

அதுவும் அவர் பேசின மேடை பேச்சுகளை எல்லாம் யூட்யூப் ல் தேடி பிடித்து பலமுறை பார்த்து ரசித்து இருக்கிறாள்..

சில conference ல் அவர் நடந்து கொண்டே பேசியதை காணும் பொழுதெல்லாம் துள்ளி குதிப்பாள்....

ஒரு நாள் பேச்சு வாக்கில் சுந்தர் பிச்சை யை பற்றி அவள் அண்ணன் வசீகரன் விளக்கி சொன்னதில் இருந்தே அவளுக்கு தானாக ஆர்வம் வந்து அவரை பற்றி நிறைய விசயங்களை சேகரித்தாள்...

எவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு அவர் CEO ஆக இருக்கிறார் என வியந்தவள் அவரை மாதிரியே தானும் கணிப்பொறி துறையில் சிறந்து விளங்க வேண்டும்..

சொந்தமாக ஒரு ஸ்டார்ட் அப் ஐ ஆரம்பிக்க வேண்டும்.. “ என்று குறிக்கோளோடு இருப்பவள்...

அவரை மாதிரியே அந்த நெடியவன் இருக்க, அவளையும் அறியாமல் சில நொடிகள் அவனை ரசித்து பார்த்தாள்... பின்னர் தான் அவன் தான் யாரென்று சொன்னதும் அவனை யாரென்று அறியாமல் சற்றுமுன் அவள் செய்த தவறு நினைவு வந்தது... ,

“ஐயோ !! இந்த நெட்டை..இல்ல.. ஒட்டடை குச்சி அண்ணியோட தம்பியா ?? அண்ணிக்கு இப்படி ஒரு தம்பி இருக்கிறது தெரியாம போச்சே... நான் பாட்டுக்கு ஏதேதோ சொல்லி திட்டிட்டேனே...

மானம் போச்சு!!... இத்தனை நாள் இல்லாமல் இப்ப எதுக்கு வந்தானாம் இந்த நெட்டை?? “ என்று மனதுக்குள் திட்டி கொண்டவள் அவன் இன்னும் அவளையே பார்த்து கொண்டிருக்க,

“அண்ணா ஹாஸ்பிட்டல் போயிருக்கான்... அப்பாவும் அம்மாவும் வேலைக்கு போயிருக்காங்க... “என்று தரையை பார்த்தவாறு பதில் அளித்தாள் குரலில் சுருதி இறங்கி..

“ஓ... சாரி.. அப்ப நான் ஈவ்னிங் வர்ரேன்..” என்று திரும்ப முயல,

“சாரி... நீங்க யாருனு தெரியாம ஏதோ சொல்லிட்டேன்... தப்பா எடுத்துக்காதிங்க.. “ என்றாள் மெல்ல வெக்கபட்டு...

“இட்ஸ் ஓகே... நானும் கொஞ்சம் வெளியிலயே நின்று இருக்கணும்... ஆனாலும் உள்ள வந்ததும் நல்லதா போச்சு... அதனாலதான் நீங்க கீழ விழாம காப்பாத்த முடிஞ்சுது... “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...

“அடப்பாவி... நான் விழுந்ததே நீ வந்ததாலயும் உன் குரலை கேட்டதாலயும் தான்...” என்று செல்லமாக திட்டி கொண்டவளுக்கு மீண்டும் சற்று முன் நிகழ்ந்த விபத்தும் அந்த நெட்டை அவளை தாங்கிப் பிடித்ததும் கண் முன்னே வந்தது...

அவன் கை மீது விழுந்த அவள் நிலையும் அவன் கரங்கள் அவள் இடையை அழுத்தி பிடித்ததும் நினைவு வர, மீண்டும் படபடப்பாக இருந்தது அவள் உள்ளே...

உடல் எல்லாம் இனம் புரியாத உணர்வு ஒவ்வொரு அனுவிலும் பரவ, திடீரென்று ஆ என்று அலறினாள் வசுந்தரா...

இதுவரை சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று அலறவும் திடுக்கிட்டவன் அவளை பார்க்க, அவளோ அடி வயிற்றில் கையை வைத்துக் கொண்டு சுருண்டு தரையில் அமர்ந்தாள்...

அவளை அப்படி கண்டதும் சில வினாடிகள் இனியவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை... ஒரு சில விநாடிகள் கண் மூடி யோசித்தவன் அடுத்த நொடி தயங்காமல் அப்படியே அவளை கைகளில் அள்ளிக் கொண்டு ஹால் க்கு வந்தவன் அவளை அங்கிருந்த சோபாவில் படுக்க வைத்தான்...

அவளோ வலியாள் துடித்து கொண்டிருந்தாள்...

இது வரை குறும்பு முகத்துடன் தன்னை அதட்டி கொண்டிருந்தவள் முகத்தில் வந்திருந்த வேதனையை கண்டவனுக்கும் மனம் கஷ்டமாக இருந்தது.. அவள் வேதனை ஏனோ அவன் இதயத்தை தாக்கியது...

அவள் வேதனையை தான் வாங்கி கொண்டு அவள் வேதனையை போக்கி முன்பு மாதிரி அவளை இயல்பாக்கி விட துடித்தது அவன் இதயம்....

எதற்கோ தன் கையை எடுத்து பார்த்தவன் அவன் கைகளில் சிவப்பாக இருக்க, ஒரு நொடி அதிர்ந்து போனான்....

எப்படி ஆச்சு என யோசிக்க, அப்பொழுது தான் உரைத்தது..

அவன் வசுந்தராவை தூக்கி கொண்டு வந்த பொழுதுதான் இது கையில் பட்டிருக்கவேண்டும் என்று அவசரமாக யோசிக்க, அதற்குள் அவன் கையில் இருந்த சிவப்பை பார்த்ததும் வசுந்தராவும் ஓரளவுக்கு தனக்கு என்ன நடந்தது என புரிந்து கொண்டாள்...

அவள் அன்னையும் அண்ணனும் அவளுக்கு முன்பே ஒரு பெண் பூவாக மலரும் பொழுது என்னென்ன மாற்றங்கள் வரும், அதை எப்படி அவள் எதிர் கொள்ள வேண்டும் என விளக்கி கூறி இருந்தார்கள்....

அதோடு பள்ளியிலும் அவள் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே பெண்களுக்கு என தனி session வைத்து பருவம் அடையும் பொழுது அவர்கள் உடலில் வரும் மாற்றங்களை பற்றி விளக்கி சொல்லி இருந்தார்கள்....

மேலும் அந்த மாதிரி நடக்கும் பொழுது, அவள் அதை கண்டு பயந்து கொள்ள கூடாது என்றும் கூறி இன்னும் சில அறிவுரைகளை அவள் அன்னை கூறி இருக்க, அவர்கள் சொன்ன மாதிரி தான் தனக்கு நடந்து இருக்கிறது என புரிந்தது....

இத்தனை நாள் இல்லாமல் இப்ப போய், அதுவும் போயும் போயும் இவன் முன்னாடி இப்படி ஆகி விட்டதே என கன்னம் சிவக்க, உதட்டை கடித்து கொண்டு தலையை குனிந்து கொண்டாள்....

இனியவனுக்கும் அவளுக்கு என்ன ஆனது என புரிந்தது... அவன் அக்கா பனிமலர் க்கு இந்த மாதிரி நடந்த பொழுது அவன்தான் உடன் இருந்தான்...

அவன்தான் அவளை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தது...

அதன் பிறகும் அவன் கொஞ்சம் வளர்ந்ததும் பெண்களுக்கு வரும் இந்த மாற்றங்களை பற்றி பனிமலரே அவனுக்கு விளக்கி சொல்லி இருக்கிறாள்...

அதனால் வசுந்தராவை அந்த நிலையில் பார்க்க, முகத்தை சுழிக்காமல் அதை அவன் இயல்பாக எடுத்து கொண்டு அருகில் இருந்த குளியல் அறைக்கு சென்று தன் கைகளை கழுவி கொண்டு வந்தவன்

“வசு.. அத்தை நம்பர் இருந்தா கொடு... அவங்களுக்கு போன் பண்ணி சொல்றேன்... நீ எதுவும் பயந்துக்காத...இந்த மாதிரி நேரத்துல இப்படிதான் வலி இருக்கும்...” என்றான் கனிவாக கூட அக்கறையுடன்...

அதை கண்டவள் திகைத்து போனாள் தன்னையும் மீறி..

அதோடு அவன் உரிமையாக அவளை வசு என அழைப்பதை கண்டவளுக்கு கோபம் வராமல் ஏதோ ஒரு மூலையில் பிடித்து இருந்தது அவளையும் அறியாமல்.....

ஆனால் கூடவே அவனை நிமிர்ந்து பார்க்க வெக்கமாக இருக்க, அவனை நேராக பார்க்க தயங்கி தலையை குனிந்தவாறே தன் அன்னையின் எண்ணை சொல்ல அவன் தன் அலைபேசியில் இருந்து அழைத்தான்..

ஆனால் அது ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது...

“ஸ்விட்ச் ஆப் ஆகி இருக்கே... சரி.. மாமா நம்பரை கொடு... “ என்றான்...

வசியின் எண்ணை சொல்ல, அதுவும் அணைக்கபட்டிருந்தது...

“ஹ்ம்ம்ம் எல்லாருடைய எண்ணும் ரீச் ஆகலை... “ என்று யோசித்தவன்

“சரி இரு.. மலர்க்கு போன் பண்றேன்... “ என்றவன் பனிமலரின் எண்ணை அழுத்தியவாறு அவ்விடத்தில் இருந்து நகர்ந்து சென்றான்...

மலரிடம் சுருக்கமாக வசுந்தராவை பற்றி சொல்ல, அவளுக்கோ மிகவும் சந்தோஷமாக இருந்தது......

வசுந்தரா வயது வந்தும் இன்னும் பருவம் அடையாமல் இருப்பதை எண்ணி மீனாட்சி கோவிலில் சந்திக்கும் பொழுது மலரிடம் பலமுறை முன்பே சொல்லி புழம்பி இருக்கிறார்.. அப்பொழுதெல்லாம் மலர்தான் அவருக்கு ஆறுதல் சொல்லி அவரை சமாதானம் படுத்துவாள்....

நீண்ட நாட்களாக அவரை அறித்து வந்த கவலை தீர்ந்து விட்டது என உள்ளம் மகிழ, உடனே தன் தம்பியிடம் போனை வசுந்தராவிடம் கொடுக்க சொன்னாள் மலர்...

அவனும் வசுந்தரா அருகில் வந்தவன்

“மலர் லைன்ல இருக்கா... நீ பேசு... “ என்றவன் அலைபேசியை அவள் கையில் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்...

“வசு.... “ என்ற மலரின் மகிழ்ச்சியான குரலை கேட்டதும் அதுவரை தான் தைர்யமாக இருப்பதாக காட்டி கொண்டவள் அதற்கு மேல் தாள முடியாமல் அவள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவளையும் மீறி திரண்டு வேகமாக வெளியில் வந்தது வசுக்கு.....

“அண்ணீ..............” என்று அழைத்து அழ ஆரம்பித்தாள்...

அதை கண்டதும் மலருக்கும் என்னவோ போல ஆகி விட,

“ஹே... வசு... குட்டி.... எவ்வளவு சந்தோஷமான விசயம்.. இதுக்கு போய் யாராவது அழுவாங்களா?? ஹேப்பியா இருக்கணும்... கண்ணை துடைச்சுக்கோ... ரொம்ப வலிக்குதா?? “ என்றாள் அக்கறையாக...

“ஹ்ம்ம்ம்ம் ..” என்று முனகினாள் வசு...

“கொஞ்சம் பொறுத்துக்கோடா.... சீக்கிரம் சரியாகிடும்... “ என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி சில அறிவுரைகளையும் சொன்னாள்...

வசுந்தராவும் அதை கேட்டு கொண்டவள் பேசி முடித்து பின் அலைபேசியை இனியவனிடம் கொடுத்தாள்...

அவனும் வாங்கி

“ஹ்ம்ம் சொல்லுக்கா.... “ என்றவாறு மீண்டும் அங்கிருந்து நகர்ந்து சென்றான்...

மலர் அவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல, அவனும் அவள் சொல்லியதை எல்லாம் கவனமாக கேட்டு கொண்டு பின் அலைபேசியை வைத்தான்...

மீண்டும் வசுந்தராவிடம் வந்தவன்

“வசு... நீ இங்கயே இரு.. நான் கொஞ்சம் வெளியில போய்ட்டு வந்திடறேன்... “ என்று நகர முயல எட்டி அவன் கையை பிடித்து கொண்டாள் வசுந்தரா...

அவளை தனியாக விட்டு விட்டு போக வேண்டாம் என்ற தவிப்பு அவள் கண்களில் தெரிய, அதில் அப்படியே கரைந்து போனான் இனியவன்...


பின் மெதுவாக தன் கையை பற்றி இருந்த அவள் கையை தன் மறு கையால் தட்டி கொடுத்தவன்

“இங்க தான் வசு.. பக்கத்து கடைக்கு போய்ட்டு வந்திடறேன்.. அக்கா சில திங்க்ஸ் வாங்கிட்டு வர சொன்னா.. போன உடனே வந்திடறேன்... அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு தனியா இரு... நான் போன உடனே வந்திடறேன்...“ என்று ஒரு குழந்தைக்கு சொல்வதை போல பொறுமையாக விளக்கினான்...

அந்த நொடியில் அவள் அண்ணன் வசீகரனை பார்த்த மாதிர்யே இருந்தது அவளுக்கு...

அவனும் இப்படிதான் அவளை திட்டவோ கடிந்து கொள்ளவோ இல்லாமல் அவள் எத்தனை சேட்டை பண்ணினாலும் பொறுமையாக அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பான்....

அதே மாதிரி இவனும் அக்கறையோடு அதே நேரம் பொறுமையாக விளக்கி சொல்ல ஒரு நொடி கண்ணை கரித்து கொண்டு வந்தது அவளுக்கு....

அதை கண்டவன் அவள் வலியில் தான் அழுகிறாள் என புரிந்து கொண்டவன்

“ரொம்ப வலிக்குதா ?? .... நான் வேணா வயித்தை அழுத்தி விடவா...?? அக்காவுக்கு இப்படி பெய்ன் வர்றப்போ நான் தான் அவள் வயிற்றை பிடித்து விடுவேன்... பண்ணவா?? “ என்றான் கனிவுடன்...

அதை கேட்டு விழி விரித்தவள் கன்னம் சிவக்க ஆம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் இரண்டு பக்கமும் தலையை ஆட்ட அடுத்த நொடி அவளே எதிர்பார்க்காமல் அவள் வயிற்றை லேசாக அழுத்தி கொடுத்தான்....

அவளின் அந்த வலிக்கு அவனின் அக்கறையுடனான அந்த அழுத்தம் தேவையாக இருந்தது...

அவனின் வலிய கரங்கள் அவள் வயிற்றில் பட, உள்ளுக்குள் மீண்டும் பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.. இதயம் வேகமாக அடித்து கொண்டது...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!