காதோடுதான் நான் பாடுவேன்-21
அத்தியாயம்-21
பெரியவன் போலிஸ் வேலைக்கு போகவும் கௌதம் பயலும் அந்த வேலைக்குத்தான் போவேனு அவனும் ஏதோ படிச்சு இன்ஸ்பெக்டர் ஆய்ட்டான்..
வேலைக்கு சேர்ந்த ஒரு இரண்டு வருடம் நிகிலன் நல்லாதான் இருந்தான்.. எல்லார்கிட்டயும் மகிழன் மாதிரி நல்லா கலகலனு பேசாட்டியும் ஓரளவுக்கு நல்லாதான் பேசுவான்..
ஆனா அதுக்கப்புறம் என்னாச்சோ கொஞ்சம் கொஞ்சமா பேச்சு கொறஞ்சு போச்சு.. எப்ப பார் விரைத்த மாதிரியே இருக்க ஆரம்பித்தான்.. எனக்கு அப்ப ஒன்னும் சரியா தெரியல..
போலிஸ் வேலைக்கு போனதால எல்லா ரவுடிங்களையும் பார்த்து இப்படி ஆய்ட்டானோனு இருந்தேன்..
இந்த நிலையில கௌதம் யாரோ ஒரு பொண்ண லவ் பண்றானு அவன் அம்மாகிட்ட வந்து நின்னான்...
என்னதான் வயித்துல பிறக்கலைனாலும் ரமணிக்கு நிகிலன் தான் மூத்த பையன் மாதிரி.. அவனுக்கு முதல்ல கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் கௌதம் க்கு பண்ணலாம்னு ரமணி என்கிட்ட சொன்னா..
எனக்கு அப்பதான் உரைச்சது என் பையன் கல்யாணம் பண்ற அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளாயிட்டானா?? னு
அப்ப அவனுக்கு 26 வயசு நடந்துகிட்டிருந்தது...
நானும் பெரியவன்கிட்ட கல்யாண பேச்ச ஆரம்பிச்சேன்.. அவன் உடனே இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம் னுட்டான்..
சரி இன்னும் இரண்டு வருசம் போய் பண்ணலாம்னு ரமணி கிட்ட சொல்லி கௌதம் கல்யாணத்தை முதல்ல நடத்தினது...
கல்யாணம் ஆன ஒரு மாசம் நல்லாதான் போய்கிட்டிருந்தது... அதுக்கப்புறம் தான் அங்க பிரச்சனை ஆரம்பிச்சது..
அந்த பொண்ணு வசந்தி ஆரம்பத்துல நல்லாதான் இருந்தா.. அத்தை அத்தைனு ரமணிகிட்டயும் என்கிட்டயுமே நல்லா பாசமாதான் இருந்தா...
அப்புறம் என்னாச்சோ தெரியல.. இரண்டு பேருக்கும் ஒத்து போகல போல இருக்கு.. எல்லார் வீட்லயும் வர்ற மாமியார் மருமக பிரச்சனைதான்....
எல்லாத்துலயும் பக்குவமா எனக்கு கூட புத்தி சொல்ற ரமணி ஏனோ தன் பையன் னு வர்றப்ப அவளுக்கு தான் உரிமை அதிகம் னு மருமக கிட்ட மல்லுக்கு நின்னிருக்கா...
அத பொறுக்காம அந்த பொண்ணு தனி குடித்தனம் போகணும்னு ஆரம்பிக்க, ரமணி அனுப்ப மாட்டேனுட்டா..
இதுல அந்த கௌதம் தான் இரண்டு பக்கமும் மாட்டிகிட்டு முழிச்சான்..
நானும் ரமணிகிட்ட எவ்வளவோ எடுத்து சொன்னேன்.. நீ தனியா வந்திரு.. இல்ல எங்க கூட வந்து இருனு.. அவ கேட்க மாட்டேனுட்டா...
இதுல என்ன கொடுமைனா அவ மனக்குறை எல்லாம் நிகிலன் கிட்டதான் கொட்டுவா... அவன் கிட்ட பேசறப்போ எல்லாம் அந்த வசந்திய பத்தி தப்பாவே சொல்றது...
வசந்தி தன் பையன கைக்குள்ள போட்டுகிட்டு அம்மா வ பிரிச்சுட்டா ங்கிற மாதிரி சொல்லி சொல்லி நிகிலனுக்கு அது மனசுல பதிஞ்சு போச்சு போல..
அதோட எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கிற ரமணி தினமும் ஏதாவது ஒரு கதையை சொல்லி அழுவறதே வேலையா போச்சு...
இந்த பயனுக்கு அவ அழுதா தாங்காது... உடனே வசந்திய கூப்பிட்டு திட்டியிருக்கான்.. அவ நீ யார் எங்க குடும்ப விசயத்துல தலையிடறது னு சொல்லிட்டா...
அதிலயிருந்து அந்த பொண்ணுகிட்ட எதுவும் கேட்க மாட்டான்.. கௌதம் கிட்ட சொன்னா அவன் காதலிச்சு கட்டிகிட்ட பொண்டாட்டிய விட்டு கொடுக்காம இருந்தான்...
இப்படியே ஒரு வருசம் ஓடிப் போச்சு.. இவங்க சண்டை தீர்ந்த மாதிரி இல்ல..
ஒரு நாள் வாய் சண்டை அதிகமாக, கௌதம் அவன் அம்மாவ அடிக்க கைய ஓங்கிட்டான்.. அதே நேரம் மூர்த்தி அண்ணா வீட்டுக்கு வர, ஆசையா வளர்த்த ஒரே மகன் இப்படி கைய ஓங்கிட்ட்டானெனு அங்கயே நெஞ்சை புடிச்சுகிட்டு சாஞ்சுட்டார்...
அவருக்கு ரமணினா உசிறு.. இங்க நடக்கிறதெல்லாம் மூர்த்தி அண்ணா கிட்ட சொல்லல போல இருக்கு.. திடீர்னு இப்படி பார்க்கவும் அதிர்ச்சியில் அப்படியே சாஞ்சுட்டார்... நிகிலனும் அந்த நேரம் அங்க போயிருக்கான்...
உடனே அவர ஹாஸ்பிட்டல்க்கு கொண்டு போக, பாதி வழியிலயே உயிர் போயிருச்சு...
அத கண்டு ரமணி இன்னும் இடிஞ்சு போய்ட்டா.. அப்புறம் நடை பிணமாதான் இருந்தா..நிகிலன் தான் வேலைக்கு போகிற நேரம் போக மீதி நேரம் அவ கூடவே இருந்தான்...
அவ மருமக வந்து எட்டி கூட பர்க்கல.. கௌதம் அழுதான் தான்.. ஆனா என்ன பண்றது போன உயிர திரும்ப கூட்டி வர முடியுமா??
அவர் காரியம் முடிஞ்சதும் ரமணிய அங்கயே விட மனசில்ல.. நம்ம வீட்டுக்கு கூட்டி வந்தோம்...
நானும் எவ்வளவோ பேச்சு கொடுத்து பார்த்தேன்.. ஆனா அவ பிரம்மை புடிச்ச மாதிரி எப்ப பார் விட்டத்தை வெறுச்சுகிட்டே இருப்பா...
அவ முகத்துல ஜீவனே இல்லாம போச்சு.. கௌதம் மட்டும் அப்பப்ப வந்து பார்த்துட்டு போவான்.. அவன் வர்றப்ப எல்லாம் அவ முகத்துல கொஞ்சம் சந்தோசம் வரும்...
அது கூடவே தன் புருசன் இறந்ததும் நினைவு வரும் போல.. உடனே இறுகி போய்டுவா..
கௌதம் திரும்பவும் விட்டுக்கு கூப்பிடவே இல்ல...எங்க கூடவேதான் கொஞ்ச நாள் இருந்தா.. ஆனா அவ நிலையில ஒரு மாற்றமும் இல்ல..
டாக்டர் கிட்ட காட்டியும் ஒரு குறையும் இல்லைனு சொல்லிட்டாங்க.. மனசுல இருக்கிற குறைய எந்த மருந்தால குணபடுத்த முடியும்??...
பெரியவன் தான் ரொம்ப கஷ்ட பட்டான் அவள மாத்த.. எல்லா முயற்சியும் வீணாதான் போச்சு...
அப்பதான் ரமணி மாதிரி இன்னும் இரண்டு பேர நிகிலன் எங்கயோ பஸ் ஸ்டாண்ட் ல பார்த்திருக்கான்..
அவங்களும் இந்த மாதிரி அவங்க பசங்க கல்யாணத்துக்கு பின்னாடி பொண்டாட்டி பேச்ச கேட்டு கிட்டு அவங்களை துரத்தி விட்டதா கதை சொல்லியிருக்காங்க...
அதை கேட்டு இந்த பையன் இன்னும் இறுகி போய்ட்டான்..
அப்பதான் இந்த மாதிரி பிள்ளைகளால் கைவிட படற பெரியவங்களுக்கு அடைக்கலம் தரணும் னு முடிவு பண்ணி சின்னதா ஒரு வீட்டை புடிச்சு அதில அவங்கள குடி வச்சு அவங்கள பார்த்துக்க னு ஒரு ஆள் போட்டான்...
ரமணியும் அவங்களோட பழகினா கொஞ்சம் மாறுவா னு அவள கூட்டிகிட்டு போய் அங்க இருக்கிறவங்களை பார்த்துக்கணும்னு பொறுப்ப கொடுத்தான்...
முதல்ல கொஞ்சம் அப்படியே தான் இருந்தா.. போக போக, அங்க இருக்கிறவங்க கூட பழக, கொஞ்சம் கொஞ்சமா சகஜ நிலைக்கு திரும்பி வந்தா..
ஆனாலும் அவ முகத்துல அந்த பழைய சிரிப்பும் சந்தோசமும் இல்ல.. பேருக்கு பேசினாலும் உள்ளுக்குள்ள தன் பையன நினச்சு ஏக்கத்தோடதான் இருந்தா...
நிகிலன் திட்டி கௌதம் மட்டும் பொண்டாட்டிக்கு தெரியாம அப்பப்ப வந்து பார்த்துட்டு போவான்..
இந்த நிலையில பெரியவன் ஆரம்பிச்ச அந்த முதியோர் இல்லம் இன்னும் பெரிய அளவுல வளர்ந்தது.. அவனோட பிரண்ட்ஸ் ஆதி , அப்புறம் வசி, வசந்த் னு நிறைய பேர் அவனுக்கு சப்போர்ட் பண்ண, இன்னும் கொஞ்சம் பெரிய இடத்துல மாத்தினான்...
அவன் வேலைக்கு போகிற நேரம் போக,மீதி நேரம் எல்லாம் அங்கயே தான் இருப்பான்... அதுவும் ரமணிக்கு அவன பார்க்காம இருக்க முடியாது.. அதனால காலையிலயும் நைட் ம் ஒரு முறை போய் அவள பார்த்துட்டு வந்தாதான் அவனுக்கு நிம்மதியா இருக்கும்...
ரம்ணி கதை இப்படி போக, பெரியவனுக்கு 28 வயசு முடியறப்போ மீண்டும் அவன் கல்யாண பேச்ச ஆரம்பிச்சேன்... இப்பவும் முடியாதுன்னுட்டான்..
நானும் தரகர் கிட்ட சொல்லி பொண்ணு பார்க்க ஆரம்பிச்சேன்.. நிறைய போட்டோ காட்டினா எதையுமே திரும்பியும் பார்க்கல..
எனக்கு கல்யாணமே வேண்டாம் னு சொல்லிட்டான்.. அப்பதான் எனக்கு திக் னு ஆச்சு...
எந்த பொண்ணையாவது விரும்பறானு கௌதம் கிட்ட விசாரிச்சா அவன் சிரிக்கிறான்..
இவனாவது பொண்ணுங்கள பார்க்கறதாவது னு..
நானும் பெரியவன் கிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.. இவன் கேட்கவே இல்ல..
சரி ரமணி கிட்டயாவது சொல்லி அவனுக்கு புத்தி சொல்ல சொல்லலாம் னு அவள பார்க்க போயிருந்தேன்..
அங்க இருந்தவங்கள பார்க்கிறப்போ எனக்கே கஷ்டமா போச்சு.. எல்லாருமே ஒரு 60 வயசுக்கும் மேல இருக்கிறவங்க...
எவ்வளவு ஆசையா புள்ளைய பெத்து வளத்தியிருப்பாங்க.. அந்த பசங்க கடைசியில கொண்டு வந்து இப்படி விட்டுட்டாங்களே னு மனசு அடிச்சுகிட்டது...
ஆனாலும் நம்ம கடமையை செஞ்சுதான ஆகணும்.. ரமணி ய பார்க்கிறப்பயும் கஷ்டமா இருந்தது.... எப்படி வாழ்ந்தவ இப்படி ஒரு அறைக்குள்ள முடங்கிட்டாளே னு...
அவளுக்கு ஆறுதல் சொல்லி மெல்ல பெரியவன் கல்யாண பேச்ச ஆரம்பிச்சேன்.. அவ கிட்ட சொல்லி நிகிலன கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லு னு கேட்டா,
அவ என்னை எரிக்கிற மாதிரி பார்க்கிறா....
“ஏன்.. நீயாவது உன் பையன் பொண்ணுனு கூட சந்தோசமா இருக்கிறது பிடிக்கலயா?? நீயும் என்ன மாதிரி இங்க வந்து உட்கார்ந்துக்க ஆசையானு?? “ நக்கலா வேற சிரிச்சா...
முதல்ல அவ சொல்றது ஒன்னும் புரியலை.. திரும்பவும் கேட்டப்பதான் சொன்னா
“நிகிலனுக்கு கல்யாணம் ஆனா, அவனும் கௌதம் மாதிரி அவன் பொண்டாட்டி பேச்ச கேட்டுகிட்டு நம்மள விட்டு போய்டுவான் சிவா... அதோட அவன் வாழ்க்கையில சந்தோசமே இருக்காது..
பார்த்த இல்ல கௌதமா?? அவன் எவ்வளவு சந்தோசமா எப்பவும் சிரிச்சுகிட்டே இருந்தான்.. எங்க குடும்பமே எப்படி இருந்தது... மருமக னு ஒருத்திய கூட்டிகிட்டு வந்த பிறகு எல்லாம் தரை மட்டமாயிருச்சு....
என் புருசனையும் இழந்து என் பையனையும் இருந்தும் இல்லாம பண்ணிட்டா அந்த ராட்சசி.... கௌதம் என்னதான் வெளில சிரிச்சாலும் உள்ளுக்குள்ள அம்மாவுக்காக ஏங்கிகிட்டிருப்பான்.. ஆனா என்ன பொண்டாட்டிய மீறி அவனால வர முடியல...
அதனால தான் சொல்றேன்.. என் மூத்த பையனாவது எப்பவும் சந்தோசமா நம்ம கூடவே இருக்கட்டும்... கல்யாணத்தை பண்ணி என்னத்த சாதிச்சுட போறான்..
அவனுக்கு அதுல விருப்பம் இல்லாதப்போ அப்படியே விட்டுடு.. அவன வற்புறுத்தாத... “ னு எனக்கு அட்வைஸ் பண்ணினா...
எனக்கு வந்த கோபத்துக்கு ஓங்கி ஒரு அறை விட்டிருப்பேன்.. எனக்கு ஒரு காலத்துல உதவி செஞ்சுருக்காளே னு பல்ல கடிச்சுகிட்டு திரும்பி வந்திட்டேன்...
ஏதோ அவ சொன்னாளாவது கொஞ்சம் கேட்பானு நம்பிக்கையோட இருந்தா அவளும் அவன் பக்கம் நிக்க, இந்த பய அவன் பிடிச்ச பிடிவாதத்துல இருந்து இறங்கவே மாட்டேனுட்டான்...
நானும் என்னென்னவோ பண்ணி பார்த்தேன்.. ம்ஹும் எதுக்கும் இறங்கல..
இவன் கூட வேலை செய்யற பொண்ணு ஒன்னு கூட இவன் மேல இஷ்ட பட்டு எவ்வளவோ கெஞ்சி கேட்டா.. நானும் அவன்கிட்ட கெஞ்சி பார்த்தேன்.. அந்த பொண்ண ஒரு அறை விட்டு ஒழுங்கா இருனு சொல்லிட்டானாம்...
அப்படியே இழுத்து அவனுக்கு 31 வயசும் ஆயிருச்சு...அவன் பிரண்ட் ஆதி இரண்டாவது கல்யாணம் கூட பண்ணிகிட்டான்...அதை சொல்லியும் இந்த பயன கெஞ்சுனா என்கிட்ட திருப்பி கத்தினான்...
கடைசியா எந்த வழியும் இல்லாம போக, அந்த முருகன் கால் ல தான் போய் விழுந்தேன்....
அவன் பார்த்து மனசு வச்சாதான் உண்டுனு வேண்டாத நாள் இல்ல.. பண்ணாத பூஜை இல்ல...
ஒரு நாள் மனசு ரொம்ப விட்டு போச்சு...நேரா அவன் கிட்ட போய்
“அப்பா.. முருகா.. உனக்கு நான் என்ன குறை வச்சேன்.. சின்ன வயசுல இருந்தே நீ மட்டுமே எனக்கு கதினு உன்னையே நினைத்து வளர்ந்தவ நான்.. தும்மினால் கூட உன் பேரை சொல்லித்தான் தும்முவேன்... அப்படி பட்ட உன் பக்தையான என் குறையை தீர்த்து வைக்க மாட்டியா??
நானும் அந்த ஜானகியும் ஒன்னாதான எப்பவும் உன்னை பார்க்க வருவோம்.. அவ பண்ணின அதே பூஜையைத்தான் நானும் உனக்கு பண்ணினேன்... இன்னும் பண்ணிகிட்டிருக்கேன்.. ஆனால் அவ குறைய மட்டும் தீர்த்து வச்சுட்ட.. என்னை அம்போனு விட்டுட்டியே?? இது நியாயமா??
ஒரு கண்ணுல வெண்ணெயும் மறு கண்ணுல சுண்ணாம்பும் வைக்கலாமா??.. இது உனக்கே அடுக்குமா?? என் குறையை எப்ப தீர்த்து வைக்க போற?? .. “ னு
அந்த வேலன் முன்னாடி நின்னு புலம்பி கிட்டு இருந்துட்டு கோயில்ல சுத்தி வர்றப்போ ஒரு போட்டோ வந்து என் கால்ல விழுந்தது...
அதை எடுத்து பார்த்தா அது ஒரு பொண்ணோட போட்டோ...அத திருப்பி பார்த்தா அதிலயே போன் நம்பர் ம் எழுதியிருந்துச்சு...
எனக்கு என்னவோ அந்த முருகனே நேர்ல வந்து அந்த பொண்ணை காட்டின மாதிரி இருந்தது..
அங்கயே கோயில்ல உட்கார்ந்து கிட்டு அதில இருந்த நம்பருக்கு போன் பண்ணினேன்..
உங்கப்பா தான் போன எடுத்தார்... இந்த மாதிரி போட்டோ விழுந்ததுனு விவரம் கேட்க, அப்பதான் உனக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டிருக்கிறதா சொன்னார்...
அதை கேட்டதும் எனக்கு என்னவோ நீதான் என் வீட்டு மருமக னு அப்பயே தோணிருச்சு..
அந்த போட்டோ வ திருப்பி பார்த்தா உன்னோட அந்த வெகுளியான சிரிச்ச முகமும் எனக்கு அப்படியே ரமணிய பார்க்கிற மாதிரியே இருந்தது.. கண்டிப்பா பெரியவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்னு எனக்கு ஒரே சந்தோசம்..
அப்பயே அந்த முருகன் கிட்ட வேண்டிகிட்டேதான் வந்தேன் நீதான் என் வீட்டு மருமகளா வரணும்னு... “ என்று நிறுத்தினார்....
மதுவுக்கும் அந்த நாள் நினைவில் வந்தது...
அப்பொழுதுதான் அவள் கல்லூரியின் கடைசி ஆண்டின் இறுதி தேர்வை முடித்து வீட்டில் இருந்தாள்..
திடீரென்று ஒரு நாள் சுகந்தியின் அப்பா சுகந்தியின் ஜாதகத்தை பார்க்க செல்ல, அவருடன் சென்ற சண்முகம் மது பிறந்த தேதி நட்சத்திரம் சொல்லி அவள் ஜாதகத்தையும் பார்க்க சொல்ல, அங்கு ஆரம்பித்தது அந்த வேலனின் ஆட்டம் ...
மதுவின் ஜாதகத்தை கணித்த அந்த ஜோசியர்
“இந்த ஜாதகக்கார பெண்ணிற்கு ஏற்கனவே குருபலன் கூடி விட்டது.. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பெண்ணிற்கு 21 வயது முடிந்து விடும்.. அtதற்குள் இவளுக்கு திருமணத்தை முடிக்க வேண்டும்..
தவறினாள் அடுத்து 27 ஆவது வயதில் தான் மீண்டும் திருமணம் நடக்க வாய்ப்பிருக்கு.. அதுவும் கொஞ்சம் கஷ்டம்தான்..
அதனால் இந்த ஒரு மாதத்திற்குள் திருமணத்தை முடித்து விடுங்கள்... அதுவும் இந்த பெண்ணிற்கு வரும் முதல் வரனையே முடித்து விடுங்கள்... “ என்று கூறி சண்முகத்திற்கு அதிர்ச்சியை கொடுத்தார்....
அதோடு சுகந்தி அப்பா வேறு சுகந்திக்கு சரியான நேரத்தில் திருமணம் நடத்தாமல் விட,பின் வந்த ஒவ்வொரு வரனும் தள்ளிப்போய் கிட்ட தட்ட மூன்று நான்கு வருடம் கழித்து தான் திருமணம் நடத்த முடிந்தது..
அதனால் ஜோசியர் சொல்ற மாதிரி இந்த ஒரு மாதத்திற்குள்ளயே திருமணத்தை முடித்து விடுங்கள்.. “என்று கூறி அவர் வயிற்றில் புளியை கரைத்தார்...
சண்முகத்திற்கு இந்த ஜோசியத்தில் அலாதி நம்பிக்கை.. அதனாலயே வருடம் ஒரு முறை பார்த்து விடுவார்.. இந்த முறை வேற அலைச்சலில் மறந்து விட,அதை இப்பொழுது பார்க்க, இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்றால் எப்படி?? என்று முழித்தார்...
“கவலைப்படாதிங்க.. எனக்கு தெரிந்த புரோக்கர் இருக்கார்.. அவர்கிட்ட சொன்னா, கைவசம் இருக்கிற எல்லா வரனையும் காட்டுவர்.. அதுல ஏதாவது பிடித்திருந்தால் உடனே முடிச்சிடலாம்...
நீங்க நாளைக்கு அந்த புரோக்கர பார்த்து மது குட்டியோட போட்டோவும் ஜாதகமும் கொடுங்க...எல்லாம் நல்ல படியா முடியும்... “என்று தேற்றினார்...
வீட்டிற்கு வந்த சண்முகம் சாரதாவிடம் விசயத்தை சொல்ல, அவரோ இன்னும் அதிர்ந்து போனார்...
“மது இன்னும் சின்ன பொண்ணுங்க.. வாயில் ல விரல வச்சுகிட்டுதான் தூங்கறா.. அவள போய் இப்பயே கல்யாணம் பண்ணனும் னா எப்படி??..
ஒரு குடும்பத்தை பார்த்துக்கிற அளவுக்கு அவளுக்கு பக்குவமும் பொறுப்பும் இல்ல... “ என்று ஏதோ சொல்லி தன் கணவனை சமாதான படுத்த முயன்றார்...
“ஆமா... நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்டு வர்றப்போ எல்லாம் கத்துகிட்டா வந்தா... ஒரு சுடு தண்ணி கூட வைக்க தெரியாது.. எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு கத்துக்கல..
அந்த மாதிரி என் பொண்ணும் எல்லாம் சீக்கிரம் கத்துக்குவா.. இதெல்லாம் ஒரு மேட்டர் கிடையாது.. அந்த ஜோசியர் சொன்ன மாதிரி இன்னும் ஒரு மாசத்துக்குள்ள மது கல்யாணத்தை நடத்தியாகணும்.. நீ ஒன்னும் பேசாத.. “என்று அதட்டி தன் மனைவியின் வாயை அடைத்து விட்டார்....
இதை கேள்வி பட்டதும் மதுவுக்கும் திக் என்றது...
அந்த சுகந்தி சொன்ன கதை, அப்புறம் திருமணத்தை பற்றி தன் மனதில் பதிந்து போயிருந்தது எல்லாம் வந்து அவளை மிரட்ட, தன் தந்தையிடம் கெஞ்சி பார்த்தாள் திருமணம் வேண்டாம் என்று
எல்லா விசயத்துலயும் தன் பொண்ணு பேச்சை கேட்டு அவள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தவர் இந்த விசயத்தில் மட்டும் பிடி கொடுக்கவில்லை...
மாறாக தன் மகளுக்கு புத்தி சொல்லி திருமணத்திற்கு ஒத்துக்க வைக்க முயன்றார்...
அந்த நாள் முழுவதும் மது தன் அறைக்குள்ளே அடைந்து கிடக்க, அதை கண்ட சாரதா
“மது கண்ணா... இப்ப எதுக்கு நீ கவலைபடற.. இப்பதான உங்கப்பா கல்யாண பேச்ச ஆரம்பிச்சிருக்கார்... இன்னும் சரியான ஜாதகம் பார்த்து எல்லாம் பொருத்தம் கூடி வந்து அப்புறம் பொண்ணு பார்க்க வந்து மாப்பிள்ளைக்கு உன்னை பிடித்து அப்புறம் தான் திருமணம் நடக்கும்..
அதுக்குள்ள எப்படியும் ஒரு மாதம் ஓடி விடும்... நீ எதுக்கு இப்பயே கவலை பட்டுகிட்டிருக்க.. “ என்று தேற்றினார்...
அப்பொழுதுதான் மதுவுக்கு நிம்மதியானது.. எப்படியும் மாப்பிள்ளையை தேட கொஞ்ச நாள் ஆகும்..
அப்படியே யாராவது வந்தாலும் அவனுக்கு என்னை பிடிக்காம போய்டணும்... அம்மா சொன்ன மாதிரி எப்படியும் ஒரு மாசம் ஆகிட்டா அபபுறம் அந்த ஜோசியர் சொன்ன மாதிரி கல்யாணம் நடக்காது... அப்ப ஜாலியா இருக்கலாம்.. “ என்று மனதுக்குள் திட்ட மிட்டவள் பின் சிரித்த முகத்துடன் வளைய வந்தாள்...
மறுநாள் காலையில் சீக்கிரம் கிளம்பி அந்த முருகன் சன்னதிக்கு குடும்பத்துடன் வந்து நின்றார் சண்முகம்...
மதுவின் ஜாதகத்தை அந்த வேலனின் பாத்தில் வைத்து பூஜை பண்ண சொல்ல, ஐயரும் அதே மாதிரி பண்ணினார்...
“முருகா.. என்னை இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திட்டியே.. இன்னும் ஒரு மாசத்துக்குள் நான் எப்படி மாப்பிள்ளைய தேடி கண்டுபிடிச்சு இந்த கல்யாணத்தை நடத்துவேன்??
நீதான் எனக்கு உதவி செய்யணும்.. அந்த மாப்பிள்ளைய சீக்கிரம் என் கண்ணுல காட்டு.. நல்லபடியா என் பொண்ணு கல்யாணத்தை நடத்தி கொடு...” என்று மனம் உருகி வேண்டி கொண்டார் சண்முகம்...
அவர் அருகில் நின்றிருந்த மதுவோ, தன் கண்ணை மூடி,
“வேல்ஸ்.. நீ என் பிரெண்ட் தான.. எப்படியாவது எந்த மாப்பிள்ளையையும் எங்கப்பா கண்ணுல காட்டிடாத.. அப்படியே காட்டினாலும் அந்த ஆளுக்கு என்னை பிடிக்க கூடாது.. இந்த கல்யாணம் நடக்க கூடாது... எப்படியாவது இந்த இக்கட்டுல இருந்து என்னை காப்பாத்து... “ என்று வேண்டிக் கொண்டாள்...
அவர்கள் இருவரின் வேண்டுதலையையும் கேட்டு
“இப்ப யார் கோரிக்கையை தீர்ப்பது??? “ என்று அந்த வேலன் குழம்பி போய் நிக்க, அப்பொழுதுதான் சிவகாமியும் அந்த வேலன் முன்னே நின்று கொண்டு தன் மனக்குறையை கொட்டி கொண்டிருந்தார்...
தன் மகனுக்கு எப்படியாவது திருமணத்தை நடத்தி வைக்க சொல்லி வேலனை வேண்டி இல்ல திட்டி கொண்டிருந்தார்...
அதை கேட்ட வேலனின் முகத்தில் பல்ப் எரிந்தது..
வேகமாக ஏதோ கணக்கை போட்டு பார்த்து எல்லாம் சரியாக வர,
“இந்த இரண்டு குடும்பத்தின் குறையையும் தீர்த்து வச்சுட வேண்டியதுதான்.. “ என்று சிரித்து கொண்டான்...
சிவகாமி நீண்டநேரம் அந்த முருகனை திட்டி விட்டு அவன் பிரகாரத்தை சுத்தி வந்தார்..
அப்பொழுது தான் புரோக்கர் இடம் கொடுக்க என்று சண்முகத்தின் கையில் எடுத்து வைத்திருந்த மதுவின் போட்டோவை பறந்து வந்து சிவகாமியிடம் சேர்த்து தன் ஆட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தான் அந்த வடிவேலன்..
சண்முகத்தின் கையில் இருந்த போட்டோ பறந்து விட, அதை ஒரு அபச குணமாக எண்ணி சண்முகம் புலம்ப ஆரம்பித்தார்...
காரில் வீடு திரும்பும் பொழுதும் புலம்பி கொண்டே வர, மதுவோ உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டு கொண்டு தன் சிரிப்பை கஷ்டபட்டு அடக்கி கொண்டு வந்தாள்...
அவளின் மகிழ்ச்சியை கண்ட சாரதா அதற்கான காரணம் புரிய கண்ணால் ஜாடை செய்து தன் மகளை அடக்கினார்...பாவம் மது அறியவில்லை அவள் மகிழ்ச்சியின் ஆயுள் காலம் சில நிமிடங்கள் தான் என்று...
அப்பொழுது தன் சிவகாமி அந்த போட்போவில் இருந்த எண்ணைபார்த்து சண்முகத்தை அழைத்தது..
சண்முகமும் தன் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்ப்பதாக கூற, சிவகாமி துள்ளி குதித்தார் மறுமுனையில்..
உடனே தன் பையனுக்கும் அவர் பெண் தேடுவதாக கூற, மற்ற விசாரிப்புகள் பிறகு இருவருமே பக்கத்து பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் என தெரிய வர, இருவருக்குமே மகிழ்ச்சியாகி போனது...
பின் தன் பையனிடம் போட்டோவை காட்டிவிட்டு நாளை அழைப்பதாக சொல்லி வைத்தார் சிவகாமி..
அதை கேட்டதும் சண்முகத்திற்கு எல்லையில்லா மகிழ்ச்சி... ஏன் அந்த வேலனே தான் அந்த போட்டோவை கொண்டு போய் சேர வேண்டிய இடத்துல சேர்த்திருக்கார்..
அதோட ஜோசியர் முதலில் வரும் வரனே முடியும் என்று கூறியது நினைவு வர, அவருக்கு அப்பயே ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பிக்கை வந்தது..
ஆனால் மதுதான் முகம் வாடிப் போனாள்.. மனதுக்குள்
“எப்படியாவது இந்த மாப்பிள்ள ஒத்துக்க கூடாது.. இந்த மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்க கூடாது.. “என்று மனதுக்குள் உருப்போட்டாள்..
பாவம் அவள் அறியவில்லை... அவள் வேண்டியதை அந்த வேலன் நிறைவேற்றி வைக்க போகிறான்.. ஆனால் அப்பொழுது அவள் அதற்கு மகிழாமல் வருத்தப்பட போகிறாள் என்று...
Comments
Post a Comment