தவமின்றி கிடைத்த வரமே-17
அத்தியாயம்-17
அதோடு வீட்டிற்கு வந்திருந்த நெருங்கிய சொந்தக்காரர்கள் சிலரும் விசயம் கேள்வி பட்டு இவர்களை தேடி மருத்துவமனைக்கே அப்பொழுதுதான் வந்திருந்தனர்.....
வந்தவர்கள் சிவசங்கரின் நிலையை கேட்டு அறிந்து கொண்டு அதோடு கல்யாணம் நின்று விட்ட செய்தியும் கேட்டு அதிர்ந்து போயினர்....
மலரை ஒரு பரிதாப பார்வை பார்த்து பின் அவர்களும் ஆப்ரேஸன் வாயிலை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தனர்...
அதில் ஒரு சிலர் மலர் ராசிதான் இப்படி ஆகிவிட்டது.... அவள் பிறந்த நேரம் சரியில்லை... அதனால்தான் அவள் அப்பனுக்கு இத்தனை நாள் அவன் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை...
அதோடு அவளுக்குமே கல்யாணம் நடக்காமல் தள்ளி போனது.. இப்ப கடைசியில் கல்யாணம் நின்னு போய் அவ அப்பனையும் இப்படி படுக்க வச்சுட்டாளே!! கொஞ்ச்ம் கூட ராசி இல்லாதவ... “ என்று தங்களுக்குள் பேசி கொள்ள அதை கேட்டு மலர் முகம் வேதனையில் சுறுங்கியது....
சோமுவோ பல்லை கடித்தார்.....
அப்பொழுது ஆப்ரேஸன் தியேட்டரின் கதவை திறந்து கொண்டு தன் முகத்தில் அணிந்திருந்த மாஸ்க் ஐ கழட்டியவாறு வெளியில் வந்தான் வசி...
அனைவரும் அவனையே அவசரமாக பார்க்க, அனைவரையும் ஒரு முறை பார்த்தவன்
“ஆப்ரேஸன் சக்ஸஸ்.. அபாய கட்டத்தை தாண்டிட்டர்.. இன்னும் ஒரு மணி நேரம் அப்செர்வேசன்ல இருப்பார்... அவர் கண் முழித்ததும் நீங்க போய் அவரை பார்க்கலாம்.. அதுவரை வெளில வெய்ட் பண்ணுங்க.. இங்க கும்பலா நிக்காதிங்க.... ‘ என்றான் ஒரு மருத்துவனாக....
அதை கேட்டு ஒரு எட்டி முன்னால் வந்து வசியின் கைகளை பிடித்து கொண்டாள் மலர்...
“தேங்க்யூ சோ மச்... டாக்டர்.....எங்கள் உயிரையே திருப்பி கொடுத்திட்டிங்க.... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது என்றே தெரியலை.... “ என்றாள் கண் கலங்க தழுதழுத்தவாறு.....
இதுவே வேற ஒரு நேரமாக இருந்திருந்தால் அவள் எப்படி நன்றி சொல்ல வேண்டும் என்று குறும்பாக கேட்டிருப்பான்...
இன்றோ சூழ்நிலை வேறாக அல்லவா இருந்தது....
முன்பு அவள் குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்க, அவர்களை இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் சந்திக்க வைத்த அந்த ஈசனை மனதுக்குள் திட்டி கொண்டான்....
தன் கையை பற்றி இருந்தவளை நோக்க உள்ளுக்குள் இன்னும் அதிர்ந்து போனான்....
மலர் பாதி மணக்கோலத்தில் புது பட்டு புடவையும் தலை நிறைய மல்லிகையும் சூடி கழுத்தில் மின்னிய ஆபரணங்களும் அவளை மணப்பெண்ணாக காட்ட, அதுவரை ஒரு மருத்துவனாக இருந்தவன் இப்பொழுது சாதாரண வசியாக மாற அடுத்த நொடி தன்னவளின் தோற்றம் கண் முன்னே வந்தது....
இதுவரை அவனுக்கு தன் பேசன்ட் ஐ, ஒரு உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற வேகம் மட்டும் தான் இருந்தது.. அதனால் மலரோ அவள் தோற்றமோ அவன் கண்ணுக்கு தெரிய வில்லை..
ஆனால் இப்பொழுது ஆப்ரேஸன் வெற்றிகரமாக முடிந்திருக்க, ஒரு உயிரை காப்பாற்றிய திருப்தியில் மீண்டும் அவன் சாதாரண வசியாக திரும்பி இருக்க தன்னவளின் தோற்றம் கண்டு அதுவரை அவன் இதயத்தை விட்டு விலகி இருந்த வலியும் வேதனையும் மீண்டும் ஓடி வந்து ஒட்டி கொண்டது...
அவள் இன்னொருவன் மனைவியாக ஆக போகிறாள் என்பது நினைவு வர, அவன் இதயம் வேதனையில் துடிக்க ஆரம்பித்தது...
காலையில் அவள் கைகளை வாட்ஸ்அப்பில் பார்த்ததும் அவள் முகம் பார்க்க துடித்த அவன் இதய்ம் இப்பொழுது அவள் அவன் எதிரில் அவன் கைகளை பற்றி கொண்டு இருப்பது தெரிந்தும் சிறு மூலையில் அவளை கண்டு கொண்ட மகிழ்ச்சி இருந்தாலும் அவள் தன்னை விட்டு போக போகிறாள் என்பது நினைவு வர, நெஞ்சை அடைத்தது அவனுக்கு......
வழக்கமாக தன்னிடம் வரும் ஒவ்வொரு பேசன்ட் இடமும் இந்த ஹார்ட் அட்டாக் வந்ததற்கான காரணத்தை முதலில் கேட்பான்..ஆனால் அந்த ஈசனின் திருவிளையாடளால் ஏனோ அவசரத்தில் மலர் தந்தைக்கு அட்டாக் வந்த காரணத்தை பற்றி கேட்க மறந்து விட்டான்..
அதனால் மலர் திருமணம் நின்று விட்ட செய்தி அவனுக்கு தெரிய வில்லை...
தன்னுள் எழுந்த வலி வேதனையை மறைத்து கொண்டவன் அவனுக்கு நன்றி சொல்லி இன்னும் தன் கையை பற்றி கொண்டிருந்த மலரின் கையை மெல்ல அழுத்தி
“இட்ஸ் மை ட்யூட்டி பனிமலர்.... உன் அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது... இன்னும் கொஞ்ச நேரத்துல நீ அவரை பார்க்கலாம்.... டோன்ட் வொர்ரி.... டேக் கேர்... “ என்றவாறு அவள் கையை விலக்கி அருகில் இருந்த அறையை நோக்கி நடந்தான்....
அந்த அறை மருத்துவர்களுக்கான ஓய்வு அறை மற்றும் சர்ஜரிக்கு செல்லுமுன் உடையை மாற்றி கொள்ள என்று அமைக்கபட்டிருந்த அறை அது...
அங்கு சென்றவன் ஹேங்கரில் மாட்டியிருந்த தன் சட்டையை எடுக்க, அதில் முன்பகுதியில் மருதாணியின் துகள்கள் பட்டு இலேசாக ஆங்காங்கே சிவந்திருந்தன....
அப்பொழுதுதான் நினைவு வந்தது...
தன்னை கண்டதும் அவள் வசி.... என்று அழைத்தவாறு ஓடி வந்து தன்னை கட்டி கொண்டதும் தன் மார்பில் தஞ்சம் புகுந்ததும்.....
அப்பொழுது இருந்த பதற்றத்தில் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை... ஆனால் இப்பொழுது அவன் ஒரு டாக்டர் வசியாக இல்லாமல் சாதாரண வசியாக நின்றிருக்க, அவளின் செய்கையை நினைத்து இப்பொழுது சிலிர்த்தது அவன் உள்ளே....
அதோடு அவளின் வேதனையான முகமும் அவள் கண்ணில் தெரிந்த அவள் தந்தையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற துடிப்பும் நினைவு வர,
தன் மீது சாய்ந்தவளை அப்படியே இறுக்க கட்டி அணைத்து அவள் வேதனையை போக்க துடித்தது அவன் உள்ளம்....
அதே நேரம் அவளின் மணப்பெண் கோலம் கண் முன்னே வர, உடனே வலி வேதனையும் ஒரு விரக்தி புன்னகையும் அவன் உள்ளே...
அவனை மேலும் எதையாவது நினைத்து வருத்தாமல் அந்த அறைகதவை தட்டி விட்டு மற்ற மருத்துவர்கள் உள்ளே வர, அவர்களை கண்டவன் உடனே தன்னை கட்டு படுத்தி கொண்டான்...
அவன் அருகில் வந்தவர்கள்,
“கன்கிராட்ஸ் டாக்டர்...இந்த மிகவும் கிரிட்டிகலான கேஸ் ஐயும் காப்பாற்றிட்டிங்களே !! .. கண்டிப்பா வேற யாராவது அட்டென்ட் பண்ணி இருந்தால் சக்ஸஸ் பெர்சென்டேஜ் கம்மியாதான் இருந்திருக்கும்...
அதனாலதான் உங்களை உடனே கூப்பிட்டது... உங்க கையில ஏதோ ஒரு மேஜிக் இருக்கு வசி... அதான் நீங்க கை வைக்கிற எல்லா கேசும் சக்ஸஸ் ஆகிறது... “ என்று சிரித்தனர்...
அவனும் இலேசாக புன்னகைத்து அவர்களின் பாராட்டை ஏற்று கொண்டவன்
“நான் உங்களுக்குத் தான் நன்றி சொல்லணும்..காலம் தவறாமல் உடனே என்னை அழைத்ததற்கு.. எப்படியோ ஒரு உயிரை காப்பாற்றிய திருப்தி... “ என்றான் நிம்மதியான புன்னகையுடன்...
அவர் வெறும் சாதாரண உயிர் மட்டும் அல்லவே... அவன் உயிரின் உயிரானவர் அல்லவா... அவருக்கு மட்டும் எதுவும் ஆகியிருந்தால் அவன் உயிராய் இருப்பவள் படும் வேதனையை அவனால் கண்டிப்பாக தாங்கி இருக்க முடியாது...
அவரை காப்பாற்றி விட்டோம் என்று சொன்னதும் அவள் முகத்தில் வந்த அத்தனை மகிழ்ச்சிக்கும் ஓடி வந்து அவன் கையை பிடித்த்து குலுக்கியதுக்கும் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது அந்த நிம்மதி சந்தோசம் அவனுக்கு...
அவள் தொட்ட இடம் இப்பொழுது குறுகுறுத்தது...
அந்த மருத்துவர்கள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து பெசி கொண்டிருக்க, வசியும் தன் உடையை மாற்றி கொண்டு வந்து அவர்கள் உடன் அமர்ந்து உரையாடினான்...
அவர்கள் இந்த ஆப்ரேஸன் சம்பந்தமாக தங்கள் சந்தேகங்களை கேட்க, அவனும் எதையும் மறைக்காமல் ஈகோ இல்லாமல் அவர்களுக்கு தெரியாத சில விவரங்களையும் விளக்கினான்...
என்னதான் வாய் அவர்களுடன் பேசி கொண்டிருந்தாலும் அவன் மனதில் சிறு நெருடல் இருந்து கொண்டே இருந்தது..’
எப்பவும் சர்ஜரி முடிந்ததும் அவன் மனதில் ஒரு திருப்தியும் நிம்மதியும் இருக்கும்...அதனால் பேசன்ட் கண் முழிக்கும் வரைக்கும் காத்திருக்க மாட்டான்.. தன் ஜூனியர்ஸ் இடம் ஒப்படைத்து விட்டு சென்று விடுவான்..
ஆனால் சிவசங்கரின் சர்ஜரி வெற்றி கரமாக முடிந்தும் அவன் மனதில் அந்த திருப்தி இல்லாமல் ஏதோ ஒன்று தப்பாக இருப்பதாக உள்ளுணர்வு உறுத்தி கொண்டே இருந்தது..
அவன் இதயம் மீண்டும் நிம்மதி இல்லாமல் அடித்து கொள்ள ஆரம்பித்தது...
“என்னவாக இருக்கும்?? “ என்று மீண்டும் யோசிக்க, மீண்டும் அவன் மனம் சிவசங்கரிடமே வந்து நின்றது....
அப்பொழுது தான் நினைவு வந்தது.. அவர் இன்னும் அப்சர்வேசனில் இருப்பதும் அவருக்கு இன்னும் நினைவு திரும்பியிருக்க வில்லை என்றும்...
என்னதான் ஆபரேசன் சக்ஸஸ் ஆனாலும் பேசன்ட் கண் முழித்து இயல்பாக பேசும் வரைக்குமே ஒவ்வொரு மருத்துவருக்கும் டென்சன் தான்....
வசி எப்பொழுதுமே அடுத்த நிலை பற்றி கவலை பட்டதில்லை.. சர்ஜரி முடிந்த உடனேயே அவனுக்கு தெரிந்து விடும் பேசன்ட் இயல்பு நிலைக்கு வந்து விடுவார் என்று..
அதனால் பெரிதாக அலட்டி கொள்ள மாட்டான்.. பல நேரம் சர்ஜரி முடிந்த உடனே கிளம்பி விடுவான்.. மற்ற ஜூனியர்ஸ் மீதி பார்மாலிட்டிஸ் ஐ பார்த்து கொள்வர்...
ஆனால் இன்று ஏனோ ஒரு திருப்தியின்மை அவன் இதயம் முழுதுவதும் பரவி இருந்தது....
அப்பொழுது மற்ற மருத்துவர்கள் மீண்டும் ஒரு முறை அவனை வாழ்த்தி அவனிடம் கை குழுக்கி விடை பெற்றனர்...
உடனே வசியும் எழுந்து சிவசங்கர் இருந்த அறைக்கு சென்றான்... அறையின் வாயிலிலயே பனிமலர், ஜோதி, சோமு என மூவரும் பதற்றத்துடன் நின்றிருந்தனர்....
மற்றவர்களை கும்பலாக நிக்க வேண்டாம் என்று சொல்லி வெளியில் காத்திருக்க சொல்லி இருந்தனர்...கயல் அவர்களுக்கு கேன்டினில் இருந்து ஏதாவது வாங்கி கொடுத்து கொண்டிருந்தாள்....
அவனை கண்டதும் மலர் பதற்றத்துடன் அவன் அருகில் வர, அவன் ஒரு சிறு புன்னகையை சிந்திவிட்டு எதுவும் பேசாமல் அந்த அறையின் உள்ளே சென்று விட்டான்...
அவன் சிரித்தானா என்று கூட தெரியவில்லை.. ஆனால் அவன் முகத்தில் இருந்தே ஏதோ சரியில்லை என புரிந்து கொண்டாள் மலர்...
அதுவரை அடங்கி இருந்த அவள் இதயம் மீண்டும் அடித்து கொண்டது....
“அப்பா க்கு எதுவும் ஆகிவிடக்கூடாது.. நல்லபடியா எழுந்து வரணும்.. “என்று மீண்டும் மனதுக்குள் உருப்போட்டாள்...
சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தவன் முகத்தையே பனிமலர் ஆராய்ச்சியுடன் பார்க்க, அவன் முகத்தில் முன்னை விட இன்னும் ஏதோ ஒன்று பரவி கிடந்தது....
அதை பொருக்காமல்
“டாக்டர்.... அப்பாக்கு எப்படி இருக்கு?? நினைவு வந்திடுச்சா?? ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு..??.” என்றாள் படபடப்புடன்.....
தன் முகத்தில் இருந்தே தன் மனதை படித்தவளை கண்டு ஒரு நொடி ஆச்சர்யத்தில் விழி விரித்தாலும் அடுத்த நொடி ஒரு மருத்துவனாக மாறி இருந்தான்....
“அப்பாக்கு ஒன்னும் இல்லை பனிமலர்.. ஆனால்.......... “ என்று இழுத்தவன்
“சரி வாங்க .. அந்த அறைக்கு போகலாம்... “ என்றவாறு அருகில் இருந்த இன்னொரு கன்சல்ட்டிங் அறைக்குள் நுழைந்தான்...
மற்றவர்களும் சிறு அச்சத்துடன் அவனை பின் தொடர்ந்தனர்....
அங்கு இருந்த மருத்துவர்க்கான நாற்காலியில் அமர்ந்தவன் எதிரில் இருந்த நாற்காலியில் அவர்களை அமர சொல்ல, மற்ற மூவரும் ஒரு வித பயத்துடனும் படபடப்புடனும் எதிரில் அமர்ந்தனர்...
தன் கண்ணை மூடி தன்னை தயார் படுத்தி கொண்டவன் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு
“நான் சொல்றதை கவனமா கேளுங்க.... “ என்று ஆரம்பிக்க, மலருக்கோ இதயம் எகிறி குதித்தது....
“ஐயோ!! இப்ப என்ன குண்டை தூக்கி போடப்போறாரோ ?? “ என்று நாற்காலியின் நுனியில் அமர்ந்து டென்சனோடு அவனையே பார்த்து இருந்தாள்.. மற்ற இருவருக்குமே அதே நிலைதான்...
அவர்களை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவன்
“வெல்.... மிஸ்டர் சிவசங்கர் க்கு இது இரண்டாவது அட்டாக்.... முதல் அட்டாக் எப்படி எப்ப வந்தது?? “ என்றான் மூவரையும் பொதுவாக பார்த்து..
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள பின் மலர்தான் ஆரம்பித்தாள்....
“ஒரு 5 வருசம் முன்னாடி டாக்டர்.. “
“ஹ்ம்ம் எதனால வந்தது?? “
மலரும் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு
“அப்பா ஒரு தமிழ் டீச்சர் டாக்டர்.. பி எட்(B.Ed) முடிச்சிட்டு ஒரு பிரைவேட் ஸ்கூல் ல டீச்சராக வொர்க் பண்ணிகிட்டிருந்தார்... அவருக்கு எப்படியாவது கவர்ன்மென்ட் ஜாப்க்கு போய்டணும் னு ரொம்ப ஆசை கனவு....
சீனியாரிட்டி யில் எப்படியும் அந்த வருசம் அவருக்கு போஸ்டிங் கிடைச்சிரும் னு உறுதியா நம்பிகிட்டிருந்தார்... அவர் பி எட் முடித்த அந்த வருசத்துலயே இவருக்கு முன்னால் பதிவு செய்திருந்தவர்களுக்கு எல்லாம் போஸ்டிங் வந்திருச்சு... அடுத்து இவரோட பேட்ச் தான்....
அதனால எப்படியும் அந்த வருடம் வேலை கிடைச்சிடும் னு நம்பிக்கையா இருந்தார்....
ஆனால் திடீர் னு கவர்ன்மென்ட் ல டீச்சர் போஸ்டிங் போடுவதில் மாற்றம் கொண்டு வந்தாங்க...
சீனியாரிட்டி இல்லாமல் TET (Teacher Eligibility Test) என்ற ஆசிரியர் தகுதி தேர்வை அறிமுக படுத்தி அதில் அதிக மதிப்பெண் வாங்குபர்வகள் ரேங்க் அடிப்படையிலயே போஸ்டிங் போடப்படும் என்று அறிவிக்க, அதை கேட்டு அதிர்ந்து போனார் அப்பா....
கிடைச்சிடுச்சு.. என்று நம்பி இருந்த வேலை கிடைக்காமல் போகவும் ரொம்ப மனசு உடைந்து போய்ட்டார்... ஆனாலும் மனதை தளர விடாமல் அந்த தேர்வுக்கும் பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சார்... நான் அப்ப காலேஜ் படிச்சுகிட்டிருந்தேன்.. நான் கூட அவரை ஓட்டுவேன்...
பொண்ணு வேலைக்கு போகப் போற நேரத்துல அப்பா வேலைக்காக படிச்சுகிட்டிருக்காரே னு..ஆனால் அதெல்லாம் அவர் கண்டுக்கவே இல்லை… ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணி படிச்சார்... ஆனாலும் அவரால் அந்த தேர்வை க்ளியர் பண்ண முடியலை....
அப்பொழுது தான் படித்து முடித்து வெளிவந்த இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு அந்த தேர்வு ஈசியாகிவிட நிறைய பேர் படித்த உடனே வேலைக்கு போய்விட்டனர்.. அப்பா கூட ஸ்கூல் ல வேலை செய்த சில பேர் கூட கவர்ன்ட்மென்ட் டீச்சர் வேலை கிடைத்து போய்விட்டனர்..
அந்த தேர்வில் தோழ்வி அடைந்தது வேறு அவர் மனதை பாதித்தது...ஆசிரியர் தகுதி தேர்வில் பெயில் ஆனதால் தான் ஒரு ஆசிரியராக இருக்க தகுதி இல்லை என்ற விதத்தில் அவருக்குள்ளயே புலுங்க ஆரம்பித்தார்....
நானும் அம்மாவும் தான் அவருக்கு எடுத்து சொன்னோம்..கவுன்சிலிங் கூட கூட்டி போனோம்.... அதில் கொஞ்சம் மனம் தேறியவர் மீண்டும் அடுத்த வருடம் தேர்வுக்கு இன்னும் வெறியோடு படிக்க ஆரம்பித்தார்...
எப்பொழுதுமே அவர் வேலை செய்யும் பள்ளிக்கு விடுப்பு எடுக்காதவர் மூன்று மாதம் விடுப்பு எடுத்து கொண்டு ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணி படிச்சார்....
அவரை பார்த்து எங்களுக்கே ஆச்சரியம்.. இந்த வயதில் கூட இப்படி உடம்பு வளைஞ்சு படிக்கிறாரே என்று....அப்பொழுது என் தம்பி டென்த் படிச்சான்.. அவன் படிக்கிற நேரத்தை விட இவர் அதிகம் படிச்சார்....
அந்த தேர்வை நன்றாகவும் எழுதி இருந்தார்.... வீட்டிற்கு வந்ததும் அவ்வளவு சந்தோசம் அவருக்கு... எப்படியும் இந்த முறை வேலை கிடைத்து விடும் என்று...தேர்வு முடிவும் நன்றாகவே வந்தது.. நல்ல மதிப்பென் வாங்கி இருந்தார்...
Certificate verification க்கெல்லாம் போய்ட்டு வந்து அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டருக்காக வெய்ட் பண்ணி கொண்டிருக்க, திடீர் என்று அந்த வருடம் போஸ்டிங் போடுவதில் மீண்டும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார்கள்..
TET தேர்வின் மதிப்பெண்களோடு அவர்களுடைய அகடமிக் பள்ளி, கல்லூரி மதிப்பெண்களையும் சேர்த்து தான் ரேங்க் தயாரிக்க படும் என்றனர்...
அந்த காலத்தில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது கடினம்.. இப்பொழுது இருக்கும் மாணவர்கள் பத்தாவது , பனிரண்டாவது வகுப்புகளில் சர்வ சாதாரணமாக நூற்றுக்கு நூறு எல்லா பாடங்களில் வங்கி விடுகின்றனர்... கிட்டதட்ட எல்லாருமே 90க்கு மேலதான் வாங்குகிறார்கள்...
ஆனால் அப்பா காலத்தில் மதிப்பெண்கள வாங்குவது கடினம்.. அதனால் அந்த மதிப்பெண்ணை கன்சிடர் பண்ணும்பொழுது அப்பாவுக்கு ரேங்க் பின்னால் போய் விட்டது...
அதனால் கடைசி நேரத்தில் அவருக்கு போஸ்டிங் கிடைக்காமல் போய்விட்டது...
இந்த முறையை எதிர்த்து நிறைய பேர் அப்பொழுது போராடினார்கள்.. பழைய ஆட்களுக்கு அவர்களுடைய அகடமிக் மதிப்பெண்களை இப்பொழுது மாற்ற முடியாது..
எத்தனை முறை இந்த தகுதி தேர்வு எழுதினாலும் பள்ளி, கல்லூரி மதிப்பெண்களை உடன் சேர்க்கும் பொழுது இந்த தகுதி தேர்வில் ரொம்ப அதிகம் மதிப்பெண் வாங்கினால் மட்டுமே ரேங்க் முன்னால் வரும்....
அதை உணர்ந்ததும் அப்பாக்கு ரொம்பவுமே மனசு உடைந்து போய்ட்டார்..
இனிமேல் கவர்ன்மென்ட் ஜாப் கிடைக்காது... தன் கனவு என்றுமே நிறை வேறாது... “என்று உள்ளுக்குள் போட்டு அழுத்தி புழுங்கி கொண்டிருக்க, வகுப்பில் பாடம் எடுத்து கொண்டிருக்கும் பொழுதே நெஞ்சை பிடித்து கொண்டு சாஞ்சிட்டார்....
அதுதான் முதல் அட்டாக் டாக்டர்..... நல்ல வேளையா கூட வேலை செய்தவர்கள் உடனே ஹாஸ்பிட்டலில் சேர்க்க எப்படியோ அவரை அப்ப காப்பாத்திட்டோம்..” என்றாள் வேதனையுடன்...
அதை கேட்டு வசிக்கும் கஷ்டமாக இருந்தது..
இந்த தேர்வு முறை வந்தபொழுது இந்த தேர்வை பற்றி அவன் வீட்டிலும் அவன் அம்மாவும் அப்பாவும் ஒரு முறை விவாதித்தார்கள் .. அப்பொழுது இவனும் அவர்களுடன் இருந்தான்..
இந்த தேர்வு மூலமாக இளைய தலைமுறைக்கு உடனே வேலை கிடைத்து விட்டாலும் மலர் அப்பா மாதிரி அந்த காலத்தில் பி எட் முடித்து ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த தேர்வு பெரும் கஷ்டம்.. என்ற வகையில் இருவரும் இந்த தேர்வின் ப்ளஸ் அன்ட் மைனஸ் பற்றி விவாதித்தனர்..
அப்பொழுது அவனுக்கு இதை பற்றி ஒன்றும் புரியாமல் அவர்களை பார்த்து முழிக்க உடனே அந்த டாபிக் ஐ நிறுத்தி விட்டு வேற டாபிக் போயினர் அன்று...
அந்த விவாதம் இப்பொழுது ஞாபகம் வர, அந்த தேர்வு முறையால் இப்படி எத்தனை பேர் பாதிக்க பட்டிருப்பார்களோ.. “ என்று வருத்தமாக இருந்தது....
பின் தன்னை சமாளித்து கொண்டவன்
“சரி... இப்ப என்னாச்சு அவருக்கு ??.. ஏன் திடீர்னு அட்டாக் வந்திச்சு ?? கல்யாண வேலையில ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணினாரா?? “ என்றான்
அதை கேட்டு மலர் தலையை குனிந்து கொள்ள, ஜோதியும் ஒன்றும் புரியாமல் சோமுவை பார்த்தார்.....
சோமுவும் இனிமேல் மறைக்க முடியாது என புரிய, ஜோதியை பார்த்தவர்
“ஜோதி.... நான் சொல்ல போறதை கேட்டு நீ அதிர்ந்து போய்டக்கூடாது.... தைர்யமா இருக்கணும்...” என்று அவரை தயார் படுத்த, ஜோதிக்கு இன்னும் பயம் ஆகி போனது....
பயம் மற்றும் வேதனையுடன் தன் கணவனின் நண்பனை பார்க்க சோமுதான் ஆரம்பித்தார்....
“வந்து..... நாளன்னைகு நடக்க இருந்த மலர் கல்யாணம் நின்னு போச்சு டாக்டர்... “ என்றார் வருத்தமாக....
அதை கேட்டவன்
“What?? “ என்று பலமாக அதிர்ந்தான் வசி....
ஜோதியும் “ என்ன அண்ணா சொல்றீங்க?? “ என்றார் அதிர்ந்து போய்...
“ஆமாம் டாக்டர்..ஆமாம் ஜோதி... உன்கிட்ட சொன்னால் நீ எப்படி எடுத்துக்குவியோனு தான் இதுவரை சொல்லலை...” என்றார் வேதனையாக...
வசிக்கும் அவர் வேதனை புரிய,
“என்னாச்சு சார்??.... ஏன் கல்யாணம் நின்னு போச்சு?? “ என்றான் பதற்றமாக....
அவரும் ஒரு பெரு மூச்சை எடுத்து விட்டவர்,
“மாப்பிள்ளை வீடு சரியில்லை டாக்டர்.... இன்னும் இரண்டு நாள் ல கல்யாணத்தை வச்சுகிட்டு திடீர்னு வந்து இன்னும் 10 பவுன் நகை அதிகமா போடணும்.. போட்டால் தான் இந்த கல்யாணம் நடக்கும்... னு சொல்லிட்டாங்க டாக்டர்... “ என்றார் வேதனையாக
“What nonsense this?? ஒரு 10 பவுனுக்காக கல்யாணத்தை நிறுத்துவாங்களா?? அப்படி காசுதான் வேணும்னா நீ என்கிட்ட கேட்டிருக்கலாம் இல்ல பனிமலர்... நான் உடனேயே கொடுத்திடிருப்பேனே...
அப்பாவுக்கு இந்த அளவுக்கு ஆகிறவரைக்கும் இழுத்து விட்டுருக்க வேண்டாம்... “ என்றான் அவள் மீதான உண்மையான அக்கறையுடன்...
அதை கேட்டு அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரை புரண்டு வந்தது மலருக்கு ..... தலையை இன்னும் கீழ குனிந்து கொண்டாள் தன் கண்ணீரை மறைக்க....
“இல்ல டாக்டர்... மலருக்கும் ஜோதிக்கும் இதை பற்றி தெரியாது... ஏன் என்கிட்டயே கூட சிவா மாப்பிள்ளை வீட்ல இருந்து இந்த மாதிரி வரதட்சணை கேட்டிருக்காங்கனு சொல்லலை...... நான் இன்னைக்கு அவன் கூட போயிருந்தப்பதான் தெரிஞ்சது....
அந்த அம்மா கேட்ட மாதிரி 10 பவுன் கூடுதலா போட்டாலும் இன்னும் வேற எதுவும் காரணம் சொல்லி மலரை தட்டி கழிக்கத்தான் பார்த்திருப்பாங்க.. எனக்கு என்னவோ வேற ஒரு பெரிய இடத்துல வேற பொண்ணை பார்த்துட்டாங்கனு நினைக்கிறேன்..
அதனால ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தத்தான் இந்த மாதிரி ஒரு காரணத்தை சொல்லி இருக்காங்க..
அந்த அம்மா பேசும்பொழுதே தெரிந்தது.. அவ்வளவு ஒரு திமிரா பேசினாங்க...
நான் வேற அவர் கூட பேசும்பொழுது போனை ஸ்பீக்கர் ல போட்டுட்டேன்... சிவா எல்லாத்தையும் கேட்டுட்டான்.. அதை கேட்டபிறகுதான் அவனுக்கு நெஞ்சு வலி வந்தது....” என்றார் வேதனையாக
அதை கேட்டு வசிக்கு எப்படி உணர்வது என்று குழம்பியது... அவள் .. அவனவள் வேற ஒருவனுக்கு சொந்தமாக போகிறாள் என்று வேதனை பட்டதற்கு அவள் வேற ஒருவனிடம் சொந்தமாகாமல் இருக்க போகிறாள்... அவள் திருமணம் நின்று விட்டது என்று சந்தோச படுவதா??
இல்லை இந்த திருமணம் நின்றதால் அவள் தந்தைக்கு முடியாமல் போய் விட்டதே.. அதை கண்டு அவள் குடும்பமே இப்படி வலி வேதனையுடன் இருக்கிறார்களே.... அதை நினைத்து வேதனை படுவதா?? “ என்று குழப்பமாக இருந்தது....
உடனே தன் குழப்பத்தை பின்னுக்கு தள்ளியவன் மீண்டும் ஒரு மருத்துவனாக இப்போதைக்கு தன் பேசன்ட் ஐ காப்பாற்றியாக வேண்டும் என்று மட்டும் மனதில் இருத்தி கொண்டான்....மீண்டும் அவர்களை பார்த்தவன்
“அப்ப இந்த கல்யாணம் நின்னு போனது தான் அவர் இதயத்தை மனதை பாதித்து இருக்கிறது... அதனால் தான்.... “ என்று ஏதோ சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்தி கொண்டான்....
அவன் ஏதோ சொல்ல வருவதை கேட்டு மலரும் தன் கண்ணீரை அவசரமாக குனிந்தவாறே துடைத்து கொண்டு நிமிர்ந்து வசியை நேராக பார்த்து
“சொல்லுங்க டாக்டர்.. அப்பாவுக்கு என்னாச்சு?? “ என்றாள் பதற்றமாக பயத்துடன்...
“ஹ்ம்ம்ம்ம் ஓபனாகவே சொல்லிடறேன்... நீங்க கொஞ்சம் தைர்யமாக இருக்கணும்.. “ என்று அவர்களை தயார் படுத்தி விட்டு
“மிஸ்டர் சிவசங்கருக்கு சர்ஜரி சக்ஸஸ்புல்லா முடிஞ்சிருச்சு.. அவர் இதயத்தை, அந்த உறுப்பை நான் காப்பாத்திட்டேன்..அது பழைய மாதிரி துடித்து கொண்டுதான் இருக்கிறது.....
ஆனால் அதற்குள் இருக்கும் மனம் என்பதை என்னால் அடைய முடியவில்லை...
தெளிவா சொல்லணும்னா பனிமலர் அப்பா வாழணும் னு முயற்சி செய்ய மாட்டேங்குறார்.. அவர் மனதில் இருக்கும் கவலை அவரை வாழ்க்கையையே வெறுக்க வச்சிருக்கு....
இனிமேல் வாழக்கூடாது என்ற முடிவு எடுத்தவராக வாழ பிடிக்காமல் விரக்தியில் எதிர்த்து போராட மாட்டேங்குறார்....
அதான் சர்ஜரி முடிந்து இவ்வளவு நேரம் ஆகியும் அவருக்கு கான்சியஸ் வரலை... நாங்க என்னதான் ட்ரீட்மென்ட் கொடுத்தாலும் பேசன்ட் ம் எங்களோட ஒத்துழைக்கணும்... அப்பதான் அது வெற்றி அடையும்...
ஆனால் இவர் எங்களுக்கு ஒத்துழைக்க மாட்டேங்கிறார்.. நானும் எவ்வளவோ பேசிட்டேன்... ஆனால் அவர் மனக்கதவை அறைந்து மூடி இருக்கிறார்....
அவர் மனதில் வாழனும்னு ஒரு நம்பிக்கை வரமேட்டேங்குது... அந்த நிலையில் இருந்து வெளி வர முயற்சி செய்ய மாட்டேங்கிறார்.. இதே நிலை இப்படியே நீடித்தால் அது அவர் உயிர்க்கு ஆபத்தாகும்...
அவர் இந்த நிலையில் இருந்து வெளி வரணும்.... இல்லை வெளி கொண்டு வரணும்... “ என்று நிறுத்தினான்....
அதை கேட்டு மூவரும் அதிர்ந்து போனார்கள்... பனிமலர் தான் முதலில் சுதாரித்து கொண்டு
“டாக்டர்...... இதுக்கு வழியே இல்லையா ??... எனக்கு என் அப்பா வேணும்.. எப்படியாவது அவரை காப்பாத்தி கொடுத்துடுங்க.. . “ என்று மீண்டும் கண் கலங்கினாள்...
“ஹ்ம்ம்ம் எனக்கு புரியுது பனிமலர்.. எனக்கும் அந்த ஆசைதான்.. அவரை எப்படியாவது காப்பாற்றிடணும்னு.. என்னால் முடிந்த வரை போராடிதான் அவர் இதயத்தை நிக்காமல் ஓட வைக்க முடிந்தது....
ஆனால் இது என் கைக்கு மீறியது... ஒவ்வொருவரின் மனம் சம்பந்தபட்டது.. இதை எந்த ஒரு மருத்துவ கருவி கொண்டும் சரி பண்ண முடியாது...
பேசன்ட் ஓட மனதில், நினைவில் வாழணும் னு ஒரு வேகம் இருந்து அவர்களே வெளி வந்தால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்... “
“ஐயோ..... அப்படி சொல்லாதிங்க டாக்டர்..... உங்களால் முடியும்.. எத்தனை பேரை காப்பாற்றி இருக்கிங்க.... ப்ளீஸ் இவரையும் எப்படியாவது காப்பாற்றிடுங்க..
அதோடு இதுவரை நீங்க எந்த ஒரு கேஸ் லயும் தோற்றதில்லை... என் அப்பாவால நீங்க தோற்க கூடாது.. நீங்க ஜெயிக்கணும்.. என் அப்பாவை நீங்க தான் காப்பாற்றணும்.. நீங்க ஜெயிக்கணும்.... “ என்றாள் வேகமாக..
அதை கண்டு மீண்டும் ஆச்சர்யபட்டான் வசி....
“அவள் தந்தையை விட நான் ஜெயிக்கணும் னு இவ்வளவு தூரம் நினைக்கிறாளே... இப்படி பட்ட ஒருத்தியை போய் அந்த மடையன் வேண்டாம் னு சொல்லிட்டு வெறும் காசு பணத்துக்காக பார்க்கிறானே.. “ என்று வருத்தபட்டவன் தன்னை சமாளித்து கொண்டு
“கண்டிப்பா பனிமலர்.. உன் அப்பாவை காப்பாற்றி கொடுக்கிறது என் கடமை.. அப்படி முடியலைனா நான் படிச்சதுக்கும் இத்தனை நாள் இந்த துறையில் இருந்ததும் வேஸ்ட்... “ என்றவன் கண்ணை மூடி சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தான்....
பின் அவர்களை பார்த்தவன்
“அவரை வெளி கொண்டு வரணும்னா அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு....” என்று நிறுத்தினான்...
“என்ன வழி டாக்டர்...?? “ என்றனர் மூவரும் ஒன்றாக.....
“பனிமலரோட கல்யாணம் இப்பவே இங்கயே நடக்கணும் ...” என்றான்..
அதை கேட்டு மூவரும் அதிர்ந்தனர்.... பின் சோமுதான் சுதாரித்து கொண்டு
“அது எப்படி டாக்டர் ??.. இப்பவே கல்யாணம் நடக்கணும்னா.. அந்த மாப்பிள்ளை..... சே அவன் எல்லாம் மாப்பிள்ளையா?? “ என்று திட்டியவர்
”அவங்க தான் கல்யாணத்தை நிறுத்திட்டாங்களே... இப்ப எப்படி?? “ என்று யோசித்தவர்
“டாக்டர்.. நான் வேணா அந்த அம்மா கைல கால் ல விழுந்து இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க சொல்லட்டு மா?? எப்படியாவது சிவா வை காப்பாத்திடுங்க.... “ என்றார் சோமு....
அதை கேட்டு அந்த நிலையிலும் அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம்.. இரத்தம் சம்பந்தம் கூட கிடையாது அவர்... தன் நண்பனுக்காக இந்த அளவு உதவ முன் வருகிறாரே என்று...
சோமு சொன்னதை கேட்ட வசி,
“இல்ல சார்... நீங்க சொல்றதை வச்சு பார்க்கிறப்போ அவங்க நல்லவங்களா தெரியலை....
பனிமலர் அப்பா உயிரை காப்பாற்றுவதற்காக இவ வாழ்க்கையை பலியாக்கிடாதிங்க... கண்டிப்பா பனிமலர் அங்க போனா நல்லா இருக்க மாட்டா... “ என்றான் வேதனையுடன்..
“அப்ப வேற என்ன செய்வது டாக்டர்....?? “ என்றார் சோமு..
“வேற தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?? சொந்தத்துல எதுவும் பனிமலருக்கு கல்யாணம் பண்ற மாதிரி யாராவது இருக்காங்களா?? “ என்றான்...
சோமு ஜோதியை பார்க்க,
“அப்படி யாரும் இல்லை டாக்டர்...அப்படி இருந்திருந்தால் அங்கதான் முதல்ல மலரை கொடுத்திருப்போம்.. இப்படி இரண்டு வருசமாக தேடிகிட்டிருக்க மாட்டோம்...” என்றார் ஜோதி புடவையால் தன் கண்களை துடைத்தவாறு...
“பனிமலர் க்கு ப்ரண்ட்ஸ், தெரிஞ்சவங்கள் ல யாராவது இருக்காங்களா ?? உடனே திருமணத்துக்கு சம்மதிக்கிற மாதிரி... “ என்றான் இன்னும் யோசனையாக...
அதை கேட்டு மலர் தலையை குனிந்து கொண்டிருக்க, சோமுதான் அவளை பார்த்து விட்டு
“ஹ்ம்ம்ம்ம் எனக்கு தெரிஞ்சு அப்படியும் யாரும் இல்லை டாக்டர்...என்னதான் சுதந்திரமா இருந்தாலும் மலர் யார் கிட்டயும் அதிகமா ப்ரண்ட்ஷிப் வச்சுக்க மாட்டா....
அவள் இதுவரை என்னிடம் பேசியதை வச்சு பார்த்தால் நீங்கதான் அவளுக்கு ரொம்ப தெரிஞ்சவர்..... “ என்று சொல்ல வந்தவர் பாதியில் நிறுத்தி கொண்டார்....
அதை கேட்டு வசிக்கும் அப்பொழுது தான் மின்னல் வெட்டியது...
இதுவரை அவன் ஒரு மருத்துவனாக அந்த குடும்பத்துக்கு உதவ வழிகளை சொல்லி கொண்டிருந்தான்....
இப்பொழுது சோமு அவன் மலருக்கு தெரிந்தவன் என்ற விதத்தில் அவனை மருத்துவன் என்ற முகமூடி அகற்றி சாதாரண வசியை, தன் இதய தேவதைக்காக ஏங்கும் அந்த வசீகரனை நினைவு படுத்த, அப்பொழுது தான் மூளையில் பல்ப் எரிந்தது அந்த மருத்துவனுக்கு.......
அவசரமாக யோசித்து ஒரு திட்டத்தை தீட்டினான்... பின் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன்
“சார்... நீங்க சொன்ன மாதிரி பனிமலர் ஐ எனக்கு ரொம்ப நல்லா தெரியும்.. அவளுக்கும் என்னை தெரியும்... அவளுக்கு இந்த இக்கட்டான் சூழலில் உதவ நான் ரெடி...
நானே பனிமலரை கல்யாணம் பண்ணிக்கிறேன்...இப்பவே இந்த நிமிடமே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அவள் அப்பாவை காப்பாற்ற... “ என்று நிறுத்தி ஒவ்வொரு வார்த்தையாக கோர்த்து தன் உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சியை மறைத்து கொண்டு பேசினான் வசீகரன்.....
Comments
Post a Comment