காதோடுதான் நான் பாடுவேன்-23



அத்தியாயம்-23

ந்த இனிய மாலை வேளையில் நிகிலன் காரை ஓட்டி கொண்டிருக்க, காரின் முன் இருக்கையில் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார் சிவகாமி...

பின்ன இருக்காதா?? எந்த பொண்ணை பார்த்ததும் தன் மருமகளாக வேண்டும் என்று வேண்டினாரோ அந்த பொண்ணையே அவருக்கு மருமகளாக்கி கொள்ள நிச்சயம் பண்ண சென்று கொண்டிருந்தவருக்கு அப்பயே பாதி திருமணம் முடிந்து விட்டதை போல இருந்தது...

காரின் இருக்கையின் பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டவர் நேற்று நடந்த சம்பவங்களை மீண்டும் ஒரு முறை மனதில் ஓட்டி பார்த்தார்...

நேற்று காலை மகிழனுடன் பேசியதும் சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்தார் அடுத்து என்ன செய்வது என்று..

மகிழன் மீண்டும் ஒரு முறை தன் அன்னையிடம் வற்புறுத்தி சண்முகத்திடம் பேச சொல்லி விட்டு செல்ல, அவன் அலுவலகம் சென்றதும் தன் அலைபேசியை எடுத்து சண்முகத்தை அழைத்து இருந்தார்...

தன் மகனுக்கு அவர் பொண்ணை பிடித்து இருப்பதாகவும் அவர்களுக்கு பிடித்து இருந்தால் மேல பார்க்கலாம்... “ என்க சண்முகம் உச்சி குளிர்ந்து போனார்...

சிவகாமி தன் மூத்த மகனை பற்றி சொல்லி அவன் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதாகவும் சின்ன மகனுக்குதான் கல்யாணத்திற்கு பார்ப்பதாகவும் கூற சண்முகம் சிறிது யோசித்தார்...

“முதல் பையன் இருக்க இரண்டாவது பையனுக்கு எதற்கு திருமணம் பண்ணுகிறார்கள்?? வேற ஏதாவது பிரச்சனையோ??” என்று யோசித்தவர்

“அப்படி என்றால் என்னிடம் அதை மறைத்திருக்கலாமே... அவர்களே எல்லா விசயத்தையும் ஓபனாக சொல்வதால் நல்லவர்களாக தான் இருக்கும்.. ”என்று யோசித்து கொண்டிருந்தார் சண்முகம்..

அவர் யோசிப்பதை கண்ட சிவகாமி அதற்கான காரணத்தையும் ஓரளவுக்கு புரிந்து கொண்டவர்

“அண்ணா... நீங்க யோசிக்கறது புரியுது.. முதல்ல நம்ம மதுவோட போட்டோவ பார்த்தப்ப எனக்கு அவளை என் மூத்த மருமகளாக்கிக்கணும்னு தான் வந்தேன்..

ஆனா பெரியவன் தனக்கு கல்யாணமே வேண்டாம்னு மறுத்திட்டான்... அதற்கு மேல் வற்புறுத்த வேண்டாம்னு விட்டுட்டு கவலையா இருந்தப்போ தான் சின்னவன் மதுவோட போட்டோ வ பார்த்துட்டு அவனே கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னான்..

அப்பதான் எனக்கே சின்னவனுக்கும் கல்யாண வயசு ஆயிடுச்சுனு மண்டைல உரச்சது.. சரி .. அவனுக்கே பார்க்கலாம் னு தான் உங்களுக்கு போன் பண்ணினேன்..

சின்னவனும் சாப்ட்வேர் எஞ்சினியரா இருக்கான்.. கை நிறைய சம்பளம்.. தனியா ப்ளாட் வாங்கிட்டான்... கல்யாணத்துக்கு பிறகு தனியா போறதுனாலும் போகட்டும்... “ என்று இன்னும் நிறைய லிஸ்ட்டை அடுக்கினார் சண்முகம் எப்படியாவது ஒத்துக் கொள்ள வேண்டுமே என்று..

சண்முகத்திற்கும் சிவகாமியின் வெளிப்படையான பேச்சும் அதோடு உரிமையாக அண்ணா என்று அழைக்கவும் இன்னும் மனம் குளிர்ந்து போனார்... ஓரளவுக்கு நம்பிக்கை வந்த பிறகு

“சரி மா.. அப்ப உங்க பையனோட ஜாதகத்தை கொடுங்க... நான் பார்த்துட்டு அப்புறம் சொல்றேன்... “ என்றார்....

அதை கேட்டதும் திக் என்றது சிவகாமிக்கு....

அவர் கணவனுக்கு ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது...

“தன்னை தன் உழைப்பை நம்பாமல் வெறும் குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பறவங்க மட்டும்தான் ஜாதகம் ஜோசியம் னு அலைவாங்க.. “ என்று சிரிப்பார்...

அதனால் மூன்று பசங்களுக்குமே ஜாதகம் எல்லாம் எழுதி வைக்கவில்லை....

அவர்கள் பக்கம் ஜாதகம் பார்த்து பொருத்தம் பாக்காவிட்டாலும் பொண்ணை பெத்தவர் ஜாதகம் கேட்க கொடுத்துத்தானே ஆகணும்.. இப்ப என்ன சொல்லுவது?? “ என்று முழித்தவர்

“சரி ணா.. நான் தேடி எடுத்துட்டு உங்களுக்கு போன் பண்றேன்..” என்று போனை வைத்தார்...

அவர் பேசி கொண்டிருக்கும் பொழுதே மகிழன் இரண்டு முறை அழைத்திருந்தான்...

“அப்பா... இந்த பையனுக்கு ரொம்பத்தான் அவசரம்... “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே சண்முகத்திடம் பேசிக் கொண்டிருந்தவர் அலைபேசியை வைக்கவும் அடுத்த நொடியே மகிழனின் கால் வந்தது...

“இந்த பய ஆபிஸ்ல போய் வேலையே செய்யறதில்லையா?? இங்கயேதான் நினைச்சு கிட்டிருக்கானா?? “ என்று சிரித்துகொண்டே அவன் அழைப்பை ஏற்க,

“ஹ்ம்ம்ம்ம் சொல்லுமா.. என்ன சொல்றார் உன் சம்மந்தி... “ என்றான் சிரித்தவாறு ஆர்வமாக...

அவன் குரலில் இருந்த ஆர்வத்தை கண்டு கொண்டவர்

“டேய்.. மகிழா... இன்னும் பொண்ணே பார்க்க போகலை..அவங்களும் மாப்பிள்ளைய பார்க்கல... அதுக்குள்ள எப்படிடா சம்மந்தினு சொல்ற?? “ என்றார் சிரித்தவாறு....

“ஹா ஹா ஹா.. அதான் அந்த பொண்ணை நாம ஏற்கனவே பார்த்தாச்சே மா..

அப்புறம் பொண்ணு வீட்டு சைட் ல எதுக்குமா மறுக்க போறாங்க.. உங்க பையன் தான் ராஜகுமாரன் ஆச்சே....அவன பார்த்த உடனே அந்த பொண்ணு மயங்கி விழுந்து கல்யாணத்தை உடனே வச்சுக்கங்க னு சொல்லப் போறா பாருங்க...

அதோட இந்த பொண்ணுதான் நீங்க 6 வேளையும் கும்பிடற அந்த வேலனே பார்த்து உங்க கண்ணுல காமிச்சிருகார் னு சொன்னிங்க... அப்படி இருக்கறப்போ கண்டிப்பா இந்த பொண்ணுதான் உங்க மருமக.. நான் வேணா அடிச்சு சொல்றேன்.. “ என்று சிரித்தான்...

சிவகாமியும் பதிலுக்கு சிரித்தவர்

“சரிடா.. உன் வாய் மூர்த்தம் பலிக்கட்டும்... அப்புறம் அவர் உன்னோட ஜாதகம் வேணும்னு கேட்கறாரே... உங்கப்பாதான் யாருக்குமே ஜாதகம் எழுதி வைக்கலையே... இப்ப என்ன பண்றது?? “ என்றார் கவலையாக...

“ஜாதகம் தானம்மா... கவலைய விடுங்க... நம்ம வீட்டு தெரு முனையில இருக்கிற கம்யூட்டர் சென்டருக்கு போய் என் பிறந்த தேதிய சொல்லுங்க.. உடனே ஜாதகத்தை பிரின்ட் போட்டு கொடுத்துடுவாங்க...

அதை கொண்டு போய் அப்படியே உங்க சம்மந்திகிட்ட கொடுத்துடுங்க....” என்று சிரித்தான்..

அதை கேட்டு அதிசயித்த சிவகாமி

“நிஜமாகவா சின்னவா.. ஜாதகம் கூட கம்யூட்டர் ல வருமா? “என்றார் ஆச்சர்யமாக

“மா... நீயெல்லாம் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியரோட அம்மானு வெளில சொல்லிடாத.. சிரிப்பாங்க... கம்யூட்டர் வழியா என்னென்ன வசதி வந்திருச்சு... நீ இன்னும் அப்கிரேட் ஆகாம இருக்கறியே..

முதல்ல அந்த சீரியல் பார்க்கறத விட்டுட்டு வாட்ஸ்அப் ,பேஸ்புக்,ட்விட்டர்னு லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கு மாறுமா...

நாளையில் இருந்து உனக்கு நான் தினமும் ட்யூசன் எடுக்கறேன்.. என்ன சரியா?? “ என்றான் சிரித்தவாறு...

“அட போடா.. காடு போகிற வயசுல அதை எல்லாம் தெரிஞ்சுகிட்டு நான் என்ன பண்றேன்.. சரி... ஓட்டவாய்.. நீ விட்டா நாள் பூரா பேசிகிட்டே இருப்ப.. நான் போய் அந்த ஜாதகத்தை முதல்ல எடுத்துட்டு அவர் கையில கொடுத்துட்டு வந்திடறேன்...

நீ வாங்கிற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்.. வை டா போனை... “ என்று சிரித்து கொண்டே போனை அனைத்தார்....

பின் மகிழன் சொன்ன மாதிரியே அருகில் இருந்த கம்ப்யூட்டர் சென்டருக்கு போய் ஜாதகத்தை வாங்கி கொண்டு அதே முருகன் கோவிலுக்கு சண்முகத்தை வர சொல்லி தானும் அங்கு சென்றார்...

முதல் முதலாக இருவரும் நேரில் சந்திக்க, இருவருக்குமே பார்த்த உடனே ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது.. பக்கத்து ஊர்க்காரர்கள் என்பது கூடுதல போனசாக இருக்க, இருவரும் தங்கள் குடும்பத்தை பத்தி பொதுவாக பேசினர்..

பின் அந்த முருகன் சன்னதியில் அந்த ஜாதகத்தை வைத்து பூஜை பண்ணி பின் சண்முகத்திடம் கொடுத்துவிட்டு விடைபெற்றார் சிவகாமி...

வீட்டிற்கு வந்த சிவகாமிக்கு ஜாதகம் பார்த்துட்டு என்ன சொல்ல போறாரோ என்றே அடித்து கொண்டது... போன் ஒலிக்கும் பொழுதெல்லாம் சண்முகமாக இருக்கும் என்று ஆவலுடன் எடுத்து பார்ப்பார்....

கடைசியாக அவரை ஏமாற்றாமல் சண்முகம் அழைத்திருக்க, சிவகாமியும் ஆவலாக போனை எடுத்தார்...

இருவர் ஜாதகமும் நன்றாக பொருந்தி வருவதாகவும் 10 பொருத்தமும் இருப்பதாகவும் அதுவும் இது அந்த இராமன் சீதா ஜாதகத்தை ஒத்து இருப்பதாகவும் இந்த ஜென்மத்தில் இவர்கள் இருவரும் தான் கணவன் மனைவியாக வேண்டும் என்பது விதி..

நீங்களே முயன்றாலும் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது... எவ்வளவு தடுத்தாலும் இந்த கல்யாணம் நடக்கும் என்று ஜோசியர் சொல்ல மகிழ்ந்து போன சண்முகம் அதை அப்படியே சிவகாமியிடம் கூறினார்...

கூடவே அவர் பக்கம் இருக்கும் சிக்கலையும் கூறி ஜோசியர் சொன்ன மாதிரி இன்னும் ஒரு மாதத்திற்குள் திருமணத்தை முடித்து விட வேண்டும்...

எல்லாம் நல்லபடியா முடிந்தால், திருமணத்தை சீக்கிரமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று சிவகாமியை கேட்டுக் கொண்டார்...

அதை கேட்டதும் சிவகாமியும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.. ... என்னவோ அப்பவே அந்த பொண்ணுதான் தன் மறுகளாக வந்து விட்ட மாதிரி இருக்க, மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் தன் அலைபேசியை வைத்தார்...

அதே நேரம் மகிழன் மீண்டும் அவரை அழைக்க, உள்ளுக்குள் சிரித்து கொண்டே அவன் போனை அட்டென்ட் பண்ணி சண்முகம் சொன்னதெல்லாம் தன் மகனிடம் ஒப்புவித்தார்...அதை கேட்டவன்

“வாவ்.. சூப்பர் மா... உன் சம்பந்தி உன்னை விட பார்ஸ்ட் ஆ தான் இருக்கார்.. “ என்று சிரித்தான்..

“சரி டா... நாளைக்கே நாள் நல்லா இருக்காம்.. நாளைக்கே பொண்ணு பார்க்க வரச்சொன்னார்.. நாளைக்கு போகலாம் இல்ல.. “ என்றார்...

“ஹ்ம்ம்ம் கண்டிப்பா மா... ஐம் ஆல்வேஸ் ரெடி.. “ என்று வெக்கபட்டு சிரித்தான்

அவனின் வெக்கத்தை கண்டு கொண்டவர் மகிழ்ச்சியுடன்

“சரி டா.. அப்ப நான் ஏற்பாட்டை கவனிக்கறேன்.. “என்றவாறு அலைபேசியை வைத்தார்..

தன் அன்னையிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் உல்லாசமாக விசில் அடித்து கொண்டே

காலையில் பாடிய “எனக்கென் ஏற்கனவே பிறந்தவள் இவளோ... “ என்ற பாடலை பாடியபடி அன்றைய வேலையை பார்க்க ஆரம்பித்தான்...

அன்று இரவே நிகிலனிடம் விசயத்தை சொல்ல, அவனோ யோசனையுடன்

“என்ன மா.. இவ்வளவு அவசரம்.. நல்லா விசாரிச்சீங்களா?? “ என்றான் போலிஸ்காரன் சந்தேக பார்வையில்...

“டேய்... சண்முகம் அண்ணா நல்லா பேசறார்.. அவங்க குடும்பம் நம்ம ஊர் பக்கம் டா.. அதோட இந்த பொண்ணு முகத்தை பார்த்தாலே நல்ல மாதிரியாதான் இருக்கு..

அது மட்டும் இல்லாம, இது நான் கும்பிடற அந்த ஆறுமுகனே எனக்கு காட்டிய பொண்ணு.. அதனால கண்டிப்பா தப்பாக மாட்டா... “ என்றார் உறுதியாக...

“இருந்தாலும்..அவர்களும் அவசரப்படறத பார்த்தால் வேற என்னவோ விசயம் இருக்கும் போல மா... “ என்று நிகிலன் இழுக்க



“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. உன் போலிஸ் மூளைய திருடனை புடிக்க மட்டும் யூஸ் பண்ணு டா.... அதையே எல்லா இடத்துலயும் வச்சு பார்த்தால் எல்லாம் தப்பா தான் தெரியும்.. “ என்று முறைத்தார்..

அன்று வழக்கத்திற்கு மாறாக மகிழன் இரவு தாமதமாக வந்தான்.. அனைவரும் டைனிங் ஹாலில் இருக்க, நேராக அங்கு சென்றான்... அவனை கண்டதும் நிகிலன்

“என்னடா மகி.. உனக்கு பொண்ணை புடிச்சிருக்கு தான.. அம்மா எதுவும் கட்டாய படுத்தினாங்களா?? “என்றான் இடுங்கிய கண்களுடன..

“சே.. சே.. அதெல்லாம் இல்ல னா.. எனக்கும் அந்த பொண்ணை புடிச்சிருக்கு.. “ என்றான் இலேசாக வெக்கபட்டு சிரித்தவாறு..

“வாவ்... மகி அண்ணா.. உனக்கு கல்யாணமா?? சூப்பர்.. அப்ப எனக்கு கம்பெனி கொடுக்க அண்ணி வரப் போறாங்க... இனிமேல் எனக்கு போர் அடிக்காது.. “ என்று துள்ளிக் குதித்தாள் அகிலா..

“போடி...உனக்கு போரடிக்காம இருக்க வா நான் கல்யாணம் பண்ணிக்கறேன்..” என்று அவளிடம் வம்பு இழுக்க, அவர்களின் செல்ல சண்டையை சிவகாமியும் நிகிலனும் ரசித்து இருந்தனர்...

மறுநாள் காலை விடிந்ததும் சிவகாமி மிகவும் பரபரப்பாக இருந்தார்... நிகிலன் தனக்கு வேலையிருப்பதால் தன்னால் வர இயலாது என்று மறுத்து சீக்கிரம் கிளம்பி சென்று விட்டான்..

ஆகிலாவும் கூட வருவதாக சொல்லி அடம்பிடிக்க,அவளுக்கு அன்று முக்கியமான டெஸ்ட் இருப்பதால் அவள் லீவ் எடுக்க கூடாது என்று அவளை முறைத்தான் நிகிலன்..

தன் பெரிய அண்ணனிடம் எதிர்த்து பேசும் தைர்யம் இல்லாததால் மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு பள்ளிக்கு சென்றாள் அகிலா...

எல்லாம் திட்டமிட்ட படி காலையில் பொண்ணு பார்க்க செல்வதாக இருக்க, மகிழனும் சீக்கிரம் ரெடியாகி கீழ வந்திருந்தான்.. அப்பொழுது அவனுக்கு அலுவலகத்தில் அவசர வேலை வந்து விட, அவன் மேனேஜர் அவனை உடனே வர சொல்லி அழைத்தார்...

பெர்சனல் வேலை இருப்பதாக கூறியவன் அதோடு அன்று அவன் லீவ் எடுத்திருப்பதாக கூறி அனுமதி கேட்டான் மகிழன்...

அதில் கடுப்பான அவன் மேனேஜர்

“IT ல இருக்கிறவனுக்கு ஆபிஸ்தான் பர்ஸ்ட்.. பெர்சனல் எல்லாம் செகன்ட் தான் .. உடனே வா.. “ என்றான்...

“பாஸ்.. எனக்கு பொண்ணு பார்க்க போறேன்... இப்ப வர முடியாது.. “ என்றான் மகிழன் கொஞ்சம் கடுப்புடன்..

“ஹா ஹா ஹா நீ பொண்ணு பார்க்கதான போற.. அந்த பொண்ணை ஈவ்னீங் போய் பார் மேன்.. எங்கயும் போய்ட மாட்டாங்க..

அவன் அவன் கல்யாணம் ஆகி பொண்டாட்டி கூட ஹனிமூன் போனாலும் புரடக்சன் இஸ்யூ (production issue) வந்திட்டா, ஹனிமூன விட்டுட்டு இஸ்யூ சால்வ் பண்ணியாகணும்.. அதுதான் IT ல இருக்கிறவன் தலையெழுத்து...

சோ.. நீ என்ன பண்ற.... அந்த பொண்ணு பார்க்கிற புரோகிராமை ஈவ்னிங் தள்ளி வச்சுட்டு நீ deploy பண்ணின உன் புரோகிராமில் இருக்கிற bug ஐ வந்து முதல்ல fix பண்ணு...

க்ளைன்ட் காலையிலயே காச் மூச் னு கத்தறான்... நீ அவசர அவசரமா அடிச்சு deploy பண்ணின உன் buggy code ஆல நான் அவனுங்க கிட்ட வாங்கி கட்டிக்கறேன்...சோ no choice now.. come fast மேன்.. “ என்று புலம்பிய அந்த மேனேஜர் மகிழன் பதில் சொல்லு முன்னே அழைப்பை துண்டித்தான்...

“சே.. இதெல்லாம் ஒரு பொழப்பா... எப்ப, எவன், எந்த நேரத்துல கூப்பிடுவானே தெரிய மாட்டேங்குது.. “ என்று தலையில் அடித்து கொண்டே தன் அன்னையிடம் சென்று பொண்ணு பார்க்கிற புரோகிராமை ஈவ்னிங் க்கு சிப்ட் பண்ண சொல்ல ,அவரோ அவனை எரித்து விடுவதை போல பார்த்தார்...

அவரிடம் கெஞ்சி,கொஞ்சி சண்முகத்திடம் பேசி ஈவ்னிங் வருவதாக சொல்ல வைத்தான்...

“தேங்க்ஸ் மா... என் நிலைய புரிஞ்சு கிட்டதுக்கு.. அப்படியே நீங்க நிகிலன கூட்டிகிட்டு பொண்ணு வீட்டுக்கு வந்திடுங்க..

எங்க ஆபிஸ்லயிருந்து நான் நேரா அங்க வந்திடறேன்..இங்க வந்திட்டு உங்களை கூட்டிகிட்டு திரும்ப அங்க போறதுனா லேட் ஆகிடும்... “ என்றான்...

“டேய் சின்னவா.. இதெல்லாம் நடக்கறதா?? நல்ல நாளையிலயே நான் எங்க கூப்பிட்டாலும் உன் அண்ணன் வரமாட்டான்.. இப்ப பொண்ணு பார்க்க கூப்பிட்டா வருவானா?? கொஞ்சம் கூட மூளையில்லாம பேசறீயே..” என்று முறைத்தார் சிவகாமி...

“மா... உனக்குத்தான் விவரமே இல்ல.. நீ என்ன பண்ற அவனுக்கு போன் பண்ணி அப்பா இல்லாத வீட்ல மூத்தவன் தான் அப்பா ஸ்தானத்துல இருந்து எல்லாம் செய்யனும்.. நீதான் உன் தம்பி கல்யாணத்தை நடத்தனும்.. அட்லீஸ்ட் பொண்ணு வீட்ல பேசறதுக்காகவாது நீ வாடா னு கொஞ்சம் சென்டிமென்ட் ஆ எடுத்து விடு மா...

அந்த போலிஸ்காரன் உடனே இறங்கி வந்திடுவான் பாருங்க... “என்று சிரித்தான்...

“நிஜமாகவா டா சொல்ற?? இப்படி சொன்னா கேட்பானா?? “ என்றார் ஆச்சர்யமாக...

“கண்டிப்பா கேட்பான் மா.. நான் கேரண்டி.. சரி.. நான் கிளம்பறேன் இப்ப.. இல்லைனா அந்த மேனேஜர் சிங்கம் நேரா வீட்டுக்கே வந்தாலும் வந்திடும் கடிச்சு குதற... “ என்று சொல்லி அவசரமாக கிளம்பி சென்றான்...

சிவகாமியும் அந்த வேலனை வேண்டி கொண்டே மதியம் நிகிலனுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்ல, அவன் எரிந்து விழுந்தான்.. பின் மகிழன் சொல்லி கொடுத்த மாதிரி பேச, அதில் இறங்கி வந்தவன் கடைசியாக தான் வருவதாக ஒத்து கொண்டான்...

சொன்ன மாதிரியே மாலை 4 மணிக்கு திரும்பி வந்த நிகிலன் தன் அன்னை தயாராகி அவனுக்காக காத்து கொண்டிருப்பதை கண்டு இலேசாக புன்னகைத்தவாறு தன் அறைக்கு சென்று ரெப்ரெஸ் ஆகி மீண்டும் கீழ வந்தான்..

அவன் வந்ததும் சிவகாமி கிளம்ப எத்தனிக்க அப்பொழுது தான் அவர் கையில் இருந்த ஐட்டங்களை பார்த்தான்..

ஒரு தாம்பாளத்தில் தேங்காய், பழம்,வெத்திலை, பூ வைத்து அதன் மேல் ஒரு நகை பெட்டியையும் வைத்திருந்தார்..

அதை எடுத்து பார்த்தவன் அதில் உள்ளே ஒரு நெக்லஸ் இருக்க,

“என்ன மா இதெல்லாம்?? நாம இப்ப பொண்ணு பார்க்கத்தான போறோம்.. இதெல்லாம் எதுக்கு?? “ என்றான் யோசனையாக....

“ஹீ ஹீ ஹீ அது வந்து பெரியவா...உன் தம்பிதான் பொண்ணை பார்த்ததும் புடிச்சிருக்குனு சொல்லிட்டானே.. அதனால நம்ம பக்கம் யோசிக்க ஒன்னும் இல்ல...

பொண்ணுக்கும் மகிழனை புடிச்சிரும்..சண்முகம் அண்ணா ஏற்கனவே பொண்ணுகிட்ட பேசிட்டாராம்.. அவ அப்பா அம்மா காட்டற பையன கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டாளாம்..

அதனால பொண்ணு பார்க்கிறது ஒரு பார்மாலிட்டிக்காகத்தான்.. அவங்க சரினு சொல்லிட்டா இன்னைக்கே நிச்சயம் பண்ணிக்கலாம் னு தான் எதுக்கும் இருக்கட்டும் னு இதெல்லாம் எடுத்து வச்சேன்.. “என்று அசடு வழிந்தார்....

தன் அன்னையின் வேகத்தை கண்டு வியந்தவன்

“ராக்கெட் ஐ விட ரொம்ப பாஸ்ட் ஆ தான் இருக்க மா... ஆமா .. இதெல்லாம் எப்ப போய் வாங்கினீங்க?? “ என்றான் இன்னும் ஆச்சர்யம் விலகாமல்...

“இந்த நகையெல்லம் முன்னாடியே வாங்கி வச்சுட்டேன் பெரியவா.. நகை,புடவைனு என் கண்ணுல படற எல்லாமே ஏற்கனவே என் மருமகளுக்காக வாங்கி வச்சுட்டேன்...

என்ன.. எல்லாம் என் மூத்த மருமகளுக்காக வாங்கியது....இப்ப சின்ன மருமகளுக்கு கொடுக்க வேண்டியதா போச்சு... “ என்று பெருமூச்சு விட்டார் ஆதங்கத்துடன்.....

“டேய்... பெரியவா... இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை.. நீ மட்டும் சரினு சொல்... இந்த பொண்ணை உனக்கே முடிச்சிடலாம்... நீ வேணாம்னு மறுத்திட்டனாலதான் சின்னவன் நான் வருத்த படக்கூடாது னு அவன் கட்டிக்கறதா சொன்னான்..

இப்பவும் நீ கட்டிக்கிறதா சொன்னா உடனே அவன் சரி னு சொல்லிடுவான்... நீ சரி னு சொல்லுடா... “ என்றார் கண்ணில் ஒரு வித ஏக்கத்துடன்..

அவர் சொல்லியதை கேட்டதும் இதுவரை ஒருவாறு இலகி இருந்தவன் உடனே இறுகி போனான்...

“மா... உனக்கு எத்தன தடவை திரும்ப திரும்ப சொல்றது... நான் தான்... “ என்று நிகிலன் அதே பல்லவியை பாட, அதை கேட்க பிடிக்காமல்

“சரி சரி.. நீ உன் பாட்டை பாடாத.. வா போகலாம்.. “ என்று அவனை முறைத்தவாறு முன்னே நடந்தார் சிவகாமி...

நிகிலனும் தன் தோளை குலுக்கியவாறு அவருடன் நடந்தவன் காரை எடுத்து கிளப்ப இருவரும் இதோ சென்று கொண்டிருக்கின்றனர் மதுவின் வீட்டை நோக்கி ....

மது வீட்டிலோ நேற்று இரவு சண்முகம் சாரதாவிடம் விசயத்தை சொல்ல அவரோ அதிர்ந்து போனார்..

“இன்று ஜாதகம் பார்த்து நாளைக்கே பொண்ணு பார்க்க வர்ராங்களே..அவ்வளவு அவசரம் எதுக்கு?? ஏதோ தப்பா இருக்கே... " என்று தன் கணவனிடம் நாசுக்காக சொல்ல, அவரோ

“அதெல்லாம் ஒன்னும் இல்ல...நாமதான் அவசர பட வேண்டியதா இருக்கு... இது நல்ல இடம்தான் .. நாமளே தேடியிருந்தால் கூட இந்த மாதிரி ஒரு இடம் அமைஞ்சிருக்காது... எல்லாம் அந்த முருகனோட கருணை...

நானும் சுகந்தி அப்பாவும் மாப்பிள்ளை வேலை செய்யற இடத்துலயே போய் விசாரிச்சுட்டோம்.. எவ்வளவு பெரிய கம்பெனி அது.. கை நிறைய சம்பாதிக்கிறாரம்.. தனியா வீடும் இருக்கு..

அப்புறம் நம்ம ஊர் பக்கம் சொல்லி அவங்க குடும்பத்தை பத்தி விசாரிக்க சொன்னேன்.. ஊர்லயும் நிலம் எல்லாம் இருக்காம்.. எல்லாரும் நல்ல குடும்பம்.. நம்பி பொண்ண கொடுக்கலாம்னு சொன்ன பிறகுதான் அவங்கள பொண்ணு பார்க்க வரச் சொன்னது...

நானும் நம்ப பொண்ணுக்கு கெடுதல் செஞ்சுட மாட்டேன் சாரதா.. நல்லா விசாரிச்சு அப்புறம் அந்த ஜோசியர் சொன்னதையும் யோசித்து தான் இத ஆரம்பிச்சிருக்கேன்.. நம்ம பொண்ணு நல்லா இருப்பானு நம்பு.. “ என்று தன் மனைவியை கன்வின்ஸ் பண்ணினார்...

சாரதாவுக்கு இரண்டு மனமாகவே இருந்தது.. மதுவுக்கோ தன் தந்தையிடம் சென்று எதுவும் எதிர்த்து பேச முடியாததால் உள்ளுக்குள்ளயே மருகினாள்...

தன் குறையெல்லாம் அந்த வேலனிடம் முறையிட்டு கடைசி வாய்ப்பாக, “நாளைக்கு வரப்போகிற மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்க கூடாது.. “ என்று நொடிக் கொருதரம் வேண்டி கொண்டாள்...

சண்முகம் கொடுத்த முகவரியை கூகுல் மேப்பில் போட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த நிகிலன் கடைசியாக அது ஒரு வீட்டின் முன்னே சென்று நிக்க, அங்கு மகிழன் காரை தேடினான்..

அவன் இன்னும் வராததால் காரில் இருந்தவாறே மகிழனுக்கு அழைக்க, அவன் ஆபிஸில் இருந்து கிளம்பிவிட்டதாகவும் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்து விடுவதாக கூற, நிகிலன் அவனை முறைத்தவாறே தன் செல்போனை அனைத்தான்...

திரும்பி தன் அன்னையையும் முறைத்தவாறு அமர்ந்திருக்க, அதற்குள் காரின் சத்தம் கேட்டு சண்முகம் வாசலுக்கு வந்திருந்தார்....

நிகிலனின் காரை கண்டதும் அருகில் வந்தவர் அவர்களை காருக்கு வெளியில் இருந்தவாறே வரவேற்று வீட்டிற்குள் அழைத்துவிட்டு உள்ளே வேகமாக சென்றார் உள்ளே இருக்கிறவர்களுக்கு தகவல் சொல்ல...

வேறு வழியில்லாமல் சிவகாமியும் நிகிலனும் காரில் இருந்து இறங்கி வீட்டைநோக்கி நடந்தனர்....சிவகாமி மறக்காமல் தான் கொண்டு வந்த தாம்பாளத்தையும் எடுத்து கொண்டு வந்தார்...

சிவகாமி சிரித்த முகமாக உள்ளே சென்று அனைவருக்கும் வணக்கம் சொல்ல, அவர் பின்னே வந்த நிகிலன் நிலை வாயில் இடித்துவிடாமல் இருக்க தன் தலையை குனிந்த படியே உள்ளே வந்தான்...

ஆறடிக்கும் மேலான உயரத்தில் கட்டுக் கோப்பான உடலுடன் பார்மல் ட்ரெஸ்ஸில் ராஜகுமாரனை போன்று கம்பீரமான தோற்றத்துடன் உள்ளே வந்தவனை கண்டதும் அனைவரும் அதிசயித்து நின்றனர்...

சண்முகம் அவனை கண்டதுமே அப்பயே விழுந்து விட்டார் மகிழ்ச்சியில்.. இப்படி ஒரு மாப்பிள்ளையா என்று..

சுகந்தியின் பெற்றோர்களும் உதவ என்று வந்திருக்க அவர்களுக்கும் அவனை கண்டதுமே பிடித்து விட்டது.. சாரதாவிற்கோ சொல்லவே வேண்டாம்...

சினிமா ஹீரோவையும் விட ஹேன்ட்சம் ஆக இருப்பவனை கண்டதும் இதை விட நல்ல மாப்பிள்ளை கிடச்சிட முடியாது... என்று உடனே தன் கணவன் கட்சிக்கு தாவியவர்

“இவனே.. இல்ல .. இல்ல.. இவரே என் மாப்பிள்ளையா வரணும் முருகா.. “ என்று மனதுக்குள் அந்த முருகனை வேண்டிகொண்டார்...

சிவகாமி ஹாலில் அமர்ந்து அங்கிருந்தவர்களிடம் சகஜமாக கதை அடிக்க, நிகிலன் உள்ளுக்குள் பல்லை கடித்தவாறு வெளியில் இயல்பாக இருக்க முயன்று கொண்டிருந்தான்...

சுகந்தியின் அப்பா அவனுடன் உரையாடி கொண்டிருக்க, அவனும் வேற வழியில்லாமல் அவர் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி கொண்டிருந்தான்...

அப்பொழுது உள்ளே மதுவுக்கு அலங்காரம் செய்து முடித்து அவளுக்கு துணையாக அறையின் உள்ளே இருந்த சுகந்தி சன்னல் வழியாக ஹாலை எட்டி பார்க்க, அந்த ஹாலையே சின்னதாக காட்டி அமர்ந்திருந்த நெடியவனை, நிகிலனை கண்டதும் ஆச்சர்யபட்டாள்...

பின் மதுவிடம் சென்றவள்

“மது குட்டி... மாப்பிள்ளை செமயா இருக்கார்...நம்ம அஜித், சூர்யா, விஜய்..” என்று ஒவ்வொருவராக சொல்லி

“ம்ஹூ.ம் .. எல்லாரையும் விட சூப்பரா இருக்கார்.... உனக்கு பெர்பெக்ட் மேட்ச்.. நீ ரொம்ப கொடுத்து வச்சவ.. “ என்று தன் கையால் அவளுக்கு திருஷ்டி சுத்தி நெட்டி முறித்தாள்...

மதுவோ

“ஆமாம்.. பெரிய மன்மதன்.. யாராயிருந்தாலும் எனக்கு வேண்டாம்... எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்.... “ என்று மனதுக்குள் பொருமி கொண்டிருந்தாள்..

அப்பொழுது உள்ளே வந்த சாரதா

“மது கண்ணா... மாப்பிள்ளை சூப்பரா இருக்கார்.. உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கார்.. உன் அப்பா உனக்கு நல்ல மாப்பிள்ளையைத்தான் பார்த்திருக்கார்.. நான்தான் அத புரிஞ்சுக்காம அவர்கிட்ட ஆர்க்யூ பண்ணிட்டிருந்தேன் போல...

நீ இப்ப என்ன பண்ற.. இந்த ஸ்னாக்ஸ் ஐ கொண்டு போய் எல்லார்கிட்டயும் கொடுத்துட்டு அப்படியே மாப்பிள்ளையை நல்லா பார்த்துட்டு வந்திடு... “ என்றார் சிரித்தவாறு..

அதை கேட்டு அதிர்ந்து போனாள் மது.. 



துவரை அவள் கட்சியில் அவளுக்கு சப்போர்ட் பண்ணிகிட்டு இருந்த அவள் அம்மா அவனை பார்த்ததும் திடீரென்று எதிர்கட்சிக்கு தாவியதை கண்டு அவரை பார்த்து முறைக்க, அதை கண்டு கொண்ட சாரதா

“ஹீ ஹீ ஹீ.. அப்படியெல்லாம் முறைக்காத மது கண்ணா...அப்புறம் மாப்பிள்ளை பயந்து ஓடிட போறார்... மாப்பிள்ளைக்கு எப்படியாவது உன்னை புடிச்சி போய்டனும்..

அதனால கொஞ்சம் சிரிச்ச முகத்தோடவே போய் அவர் முன் நில்லுடா.. என் செல்லம் இல்ல.. “ என்று கெஞ்சி கொஞ்சி அவளை ஸ்னாக்ஸ் இருந்த ட்ரேயுடன் ஹாலுக்கு அனுப்பி வைத்தார்....

மதுவும் மீண்டும் தன் அன்னையை முறைத்து கொண்டே தலையை குனிந்தவாறு தன் அன்னையும் கை விட்டுவிட மனதுக்குள் அந்த வேலனை மட்டுமே வேண்டி கொண்டே முன்னே நடந்தாள் தயங்கியவாறு..

அதுவரை கதை அடித்து கொண்டிருந்த சிவகாமி மதுவை கண்டதும் போட்டோவில் பார்த்ததை விட இன்னும் அழகாக ,குழந்தைதனமான, வெகுளியான முகத்தையும் கண்ணில் ஒரு வித பயத்துடன் அடியெடுத்து வைத்து வந்தவளையே ரசித்து பார்த்தார்...

பார்த்த உடனே அவளை பிடித்துவிட்டது அவருக்கு...மது தன் முன்னே நீட்டிய தட்டை எடுத்து கொண்டார் சிரித்த முகத்துடன்....

அடுத்து தட்டை அவர் அருகில் அமர்ந்திருந்த நிகிலன் முன்னே நீட்ட அவனும் ஒரு தட்டை எடுத்து கொண்டு எதேச்சையாக பார்க்க, அவளோ தலையை குனிந்த படியே இருந்தாள்...

பின் வேகமாக நகர்ந்து மற்றவர்களுக்கும் கொடுத்த பின் உள்ளே ஓடி விட்டாள்.. , நிகிலனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது மகிழன் இன்னும் வரவில்லை என்று...

தன் அன்னையின் அருகில் குனிந்தவன்

“எங்க மா அந்த மகிய இன்னும் காணோம்..?? “ என்று முறைத்தான் மற்றவர்கள் அறியாதவன்னம்...

சிவகாமிக்கும் அப்பொழுதுதான் உரைத்தது... இதுவரைக்கும் சின்ன மகனுக்குத் தான் பொண்ணு பார்க்க வந்தோம் என்பதயே மறந்து இருந்தார்...ஆனாலும் சமாளித்து கொண்டு

“டேய்... பெரியவா.. அவன் இப்ப வந்திடுவான் டா.. நீ வேணா இன்னொரு தரம் போன் பண்ணி பார்...” என்றவர் பின் எழுந்து மது இருந்த அறைக்குள் சென்றார்...

உள்ளே இருந்த சுகந்தி மதுவிடம் ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டிருக்க, மது இன்னும் தலையை குனிந்த படியே இருந்தாள்...

உள்ளே வந்த சிவகாமியை கண்டதும் சுகந்தி எழுந்து

“வாங்க... ஆன்ட்டி... “ என்று சிரித்தவாறு எழுந்து நிக்க, மதுவும் திடுக்கிட்டு எழுந்து நிற்க முயன்றாள்...

“அடடா... பரவாயில்ல மது... நீ உட்கார்ந்துக்கோ..” என்றவர் அவள் அருகில் வந்து மீண்டும் ஒரு முறை மதுவை ரசித்து பார்த்தவர்

“அப்படியே எங்க ஊர் அம்மன் சிலையாட்டம் இருக்கா என் மருமக.. அதான் என் பையன் போட்டோவ பார்த்த உடனே மயங்கிட்டான் போல...

மது கண்ணா... உன்னை எனக்கும் என் பையனுக்கும் ரொம்ப பிடிச்சிருச்சு...அவன் முன்னாடியே சொல்லிட்டான் நீதான் எங்க வீட்டு மருமகனு.. உனக்கும் என் பையன பிடிக்கும் னு நினைக்கிறேன்..

அதனால உங்கப்பா அம்மா மாப்பிள்ளைய பிடிச்சிருக்கானு கேட்டா, தயங்காம கண்ணை மூடிகிட்டு பிடிச்சிருக்குனு சொல்லிடு..

உன்னை நான் நல்லா பார்த்துக்கறேன்... நீ இங்க எப்படி இருக்கறியோ அதே மாதிரி இன்னும் ப்ரியா இருக்கலாம்.. எங்க அகிலா இருக்கா.... இன்னும் ஜாலியா இருக்கும்..

நீ இங்க தனியா போரடிச்சு இருக்கிறதுக்கு பதிலா நம்ம வீட்டுக்கு வந்திடு.. இன்னும் ஜாலியா இருக்கும்.. “ என்று கண் சிமிட்டி சிரிக்க அதை கண்டு சுகந்தி மயங்கி விழாத குறைதான்...

கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் எளிமையாக வெகுளியாக கிராமத்து பாணியில் இழுத்து பேசும் சிவகாமியை கண்டு வியந்து

“இப்படி கூட மாமியார் பேசுவாங்களா?? “ என்று அதிசயமாக பார்த்தாள் சுகந்தி.....

அவள் மாமியார் எப்ப பார் மாமியார் என்கிற கெத்துடன் அவளை எப்பவும் குறை சொல்லி கொண்டே இருப்பார்.. மருந்துக்கும் அவளிடம் சிரித்து பேசியது இல்லை...

சுகந்தி ஏதாவது பேச முயன்றால் கூட அதை கண்டுக்காமல் மாமியார் மருமகள் என்ற டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணி தள்ளி சென்று விடுவார்.. அப்படி பார்த்து பழகியவளுக்கு சிவகாமியின் சகஜமான ஜாலியான பேச்சு ரொம்ப பிடித்து விட்டது...

மதுவுக்கும் ஆச்சர்யம் தான்.. முன்ன பின்ன தெரியாதவர் வந்து தன்னிடம் இவ்வளவு சகஜமாக பேசுகிறாரே.. என்று..

அதை புரிந்து கொண்ட சிவகாமி

“அடடா.. முன்ன பின்ன தெரியாதவ வந்து எப்படி இப்படி பேசறானு யோசிக்கறியா?? எனக்கென்னவோ உன்னை போட்டோல பார்த்தப்பயே ரொம்ப நாள் பழகின மாதிரி தான் தோணிச்சு மருமகளே.. அப்பயே முடிவு பண்ணிட்டேன் நீதான் என் மருமகள் னு...

அதனால நீ எதுக்கும் பயந்துக்காத... உன் புருசன் உனனை நல்லா பார்த்துக்குவான்...உனக்கு ஒரு குறையும் வராது.. “என்று அவள் முகத்தை சுத்தி அவர் கையால் நெட்டி முறித்தவர்

“ நீயே என் வீட்டுக்கு மருமகளா வந்திடு மது கண்ணா...” என்று சிரித்தார்..

“சரி.. நாம அப்புறம் பேசலாம்... “ என்றவாறு மீண்டும் ஹாலுக்கு வந்தார்...

அவர் சென்றதும் சுகந்தி மதுவிடம் அவரை பற்றி புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தாள்..

ஹாலுக்கு வந்தவர் நேராக சண்முகத்திடம் சென்று

“எங்களுக்கு என் மருமகளை ரொம்ப பிடிச்சிருச்சு அண்ணா... இவளை எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க.. நாங்க நல்லா பார்த்துக்குவோம்.. “என்று சிரித்தார்...

சிவகாமி உள்ளே சென்ற நேரம் சண்முகம் சாரதாவிடம் நிகிலனை காட்டி கண்ணால் ஜாடை காட்டி கேட்க அவரும் சம்மதம் சொல்லியிருந்தார்...அதனால் மகிழ்ச்சியோடு சிவகாமியை பார்த்த சண்முகம்

“ஹ்ம்ம்ம் எங்களுக்கும் மாப்பிள்ளைய ரொம்ப பிடிச்சிருச்சு மா...எங்க பொண்ணு இப்படி கலகலனு பேசற உங்க வீட்டுக்கு வர நாங்க கொடுத்து வச்சிருக்கணும்.. “ என்று சிரித்தார்...

இதை கேட்ட நிகிலனுக்கு திக் என்றது..

“மகிழன் இன்னும் வரவேயில்லையே.. அதுக்குள்ள மாப்பிள்ளையை பிடிச்சிருக்குனு சொல்றாரே.. “ என்று குழப்பமாக தன் அன்னையை பார்க்க, அவரோ சண்முகம் சம்மதம் சொன்ன மகிழ்ச்சியில் இந்த உலகத்திலயே இல்லை...

அதற்குள் அவன் அலைபேசிக்கு அழைப்பு வர, அதை எடுத்தவன் மகிழன் தான் அழைக்கிறான் என்று தெரிய, ஒரு நிமிடம்.. என்று சொல்லி எழுந்து வெளியில் வந்தான்...

போனை எடுத்ததும்

“டேய் நாயே.. எங்கடா இருக்க?? “ என்றான் கோபமாக...

‘இதோ வந்திட்டேன் நிகிலா... இன்னும் ஒரு 5 நிமிசம் தான்.. இங்க வீட்டுக்கு பக்கத்துலதான் இருக்கேன்.. பயங்கர டிராபிக்.. நகரவே முடியல.. “என்றான் அவசரமாக...

“சரி சரி.. சீக்கிரம் வந்து தொலை.. “ என்று எரிச்சலுடன் போனை வைத்தவன் மீண்டும் வெளியில் நிக்க, அதற்குள் வெளியில் வந்த சண்முகம்

“உள்ள வாங்க மாப்பிள்ளை.. காபி சாப்பிடுங்க.. “ என்றார் சிரித்தவாறு..

“ஐயோ.. இவர் வேற.... என்னைப் போய் மாப்பிள்ளைங்கிறாரே... எல்லாம் இந்த மகி நாயால வந்தது.. சீக்கிரம் வந்து தொலைய வேண்டியது தான.. “என்று மனதுக்குள் அர்ச்சனை பண்ணியவாறு உள்ளே வந்தான்...

சாரதா அவனுக்கு காபியை எடுத்து கொடுக்க அவனும் இலேசாக புன்னகைத்தவாறு நன்றி சொல்லி காபியை எடுத்து பருகியவன் மீண்டும் சண்முகம் அவனை மாப்பிள்ளை என்று அழைக்க

“மன்னிக்கனும் சார்... மாப்பிள்ளை நான் இல்ல... என் தம்பிதான் மாப்பிள்ளை... ஆபிஸ்லயிருந்து வந்துகிட்டிருக்கான்...அவன் தான் போன் பண்ணினான்.. பக்கத்துலதான் இருக்கானாம்.. இன்னும் 5 நிமிசத்துல வந்திடுவான்.... “ என்றான்....

அதை கேட்டு அங்கு இருந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

முதலில் வந்த நிகிலனைத்தான் எல்லாரும் மாப்பிள்ளை என்று நினைத்து கொண்டிருக்க, இப்பொழுது அவன் நான் இல்லை என்ற ரேஞ்சில் மாப்பிள்ளை நான் இல்லை என்று நிகிலன் சொல்ல, அனைவரும் முழித்தனர்..

அதை கண்ட சிவகாமியும்

“ஓ.. சாரிங்க.. இவன் என் மூத்த மகன்... சின்னவன் மகிழனுக்கு தான் மதுவ பார்க்க வந்திருக்கோம்... எல்லாரையும் பார்த்த சந்தோசத்துல முதல்ல இத சொல்ல மறந்துட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க.. “ என்றார் கொஞ்சம் வருத்தமாக...

அதற்குள் தன்னை சுதாரித்து கொண்ட சண்முகம்

“இருக்கட்டும் மா... சில நேரம் இது மாதிரி குழப்பம் நேறுவது சகஜம்தான்... எப்படியோ மப்பிள்ளை... “என்று சொல்ல வந்த சண்முகம், பெரிய தம்பி விளக்கிட்டார் இல்ல... “ என்று சொல்லி சமாளித்தார்....

நிகிலனும் தன் தம்பி தாமதமாக வருவதற்கு அவன் சார்பாக மன்னிப்பு வேண்ட, அனைவரும் சகஜ நிலைக்கு வந்தனர்...

ஆனால் சுகந்தி அப்பா மட்டும் கொஞ்சம் சந்தேக கண்ணுடன் நிகிலனை ஆராய்ந்தார்...

“ஆமா.. தம்பி... நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல?? “ என்றார் சந்தேகமாக...

நிகிலனுக்கு வந்த ஆத்திரத்துக்கு அப்பயே எழுந்து சென்று விட வேண்டும் போல இருந்தது... உள்ளுக்குள்ளயே பல்லை கடித்துக் கொண்டவன்

“எனக்கு மேரேஜ் ல இன்ட்ரெஸ்ட் இல்ல சார்... “ என்று சொல்லி சமாளித்தான்..

அவர் மீண்டும் ஏதோ கேட்க வர, அதற்குள் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, சாரதா போய் கதைவை திறந்தார்...

மகிழன்தான் இப்பொழுது உள்ளே வந்தான்...

நிகிலன் உயரம் இல்லை என்றாலும் அவனுமே ஆறடி உயரத்தில் சிரித்த கண்களும், இலகிய முகமும், பார்ப்பவர்களை எளிதில் வசீகரிக்கும் தோற்றத்தில் கம்பீரமாக இருந்தவனையே இப்பொழுது அனைவரும் ஆழ்ந்து பார்த்தனர்.....

உள்ளே வந்தவன்

“எல்லாரும் என்னை மன்னிக்கனும்.. ஆபிஸ் ல யிருந்து கிளம்பி வர டிராபிக்ல மாட்டிகிட்டேன்.. அதான் டைம்க்கு வர முடியல.. “ என்று கை குவித்தான் உண்மையான வருத்தத்துடன்...

அவனின் அடக்கத்தையும் அவனின் தோற்றத்தையும் கண்டு பெரியவனுக்கு சின்னவனும் சலைத்தவன் இல்லை என தோன்ற, அனைவருக்கும் மகிழனையும் பிடித்து விட, அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது...சுகந்தி அப்பா முன்னே வந்து

“பரவாயில்ல தம்பி.. நம்ம சென்னையிலதான் எப்ப, எங்க டிராபிக் ஆகும்னே சொல்ல முடியாதே.. திடீர் திடீர் னு ரோட் அ பிளாக் பண்ணிடறாங்க.. முதல் நாள் டூ வேயா இருக்கிற ரோட் அடுத்த நாள் ஒன் வே யா மாத்திடறாங்க..

இல்லையா ஏதாவது திடீர் னு குழி வந்திருக்கும்... அதில மாட்டி ஒரு வண்டி நின்னா பின்னால வர்ற எல்லா வண்டியும் அப்படியே நின்னு போய்டும்.. “என்றார் சிரித்தவாறு..

“நீங்க ஒழுங்கா ட்ராபிக் ரூல்ச பாலோ பண்ணினா நின்ன வண்டிய கூட சீக்கிரம் சரி பண்ணி டிராபிக் ஐ கிளியர் பண்ணிடலாம்.. அதுக்குள்ள எங்கெல்லாம் குறுக்க புகுந்து சீக்கிரம் போகலாம் னு முண்டி அடித்து எல்லாரும் போறதால்தான் இன்னும் ஜாம் ஆகிறது..

கடைசியில டிராபிக் போலிஸ் ஐ குறை சொல்ல வேண்டியது... “என்று மனதுக்குள் அவரை திட்டி கொண்டிருந்தான் நிகிலன்...

மற்றவர்களிடம் சிரித்து பேசிய மகிழன் இலேசாக திரும்பி தன் அண்ணனை பார்க்க, அவனை கண்ட நிகிலன் மகிழனை எரித்து விடும் பார்வை பார்த்தான்... அவன் முறைப்பதை கண்டு அதன் பிறகு அவன் பக்கமே திரும்பவில்லை மகிழன்...

சண்முகம் சாரதாவிடம் சொல்லி மதுவை அழைத்துக் கொண்டு வர சொன்னார்..

சாரதா மதுவை அழைக்க, அவளோ ஹாலுக்கு மீண்டும் வர மறுத்து விட்டாள்....அதை கண்டு கொண்ட மகிழன்

“இருக்கட்டும் மாமா.. நான் ஏற்கனவே போட்டொல பார்த்துட்டேன்.. அப்பயே பிடிச்சிருக்குனு அம்மா கிட்ட சொல்லிட்டேன்....அதோட எங்கம்மாவுக்கு பிடிச்சா எனக்கு பிடிச்ச மாதிரி தான்.. அதனால இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாம்...“ என்றான்..

அவன் தன்னை மாமா என்று உரிமையோட அழைத்ததை கண்டு உச்சி குளிர்ந்து போனார் சண்முகம்... பார்க்கையிலயே சிரித்த முகமாக எல்லாரிடமும் கலகல வென்று பேசுபவனாக தெரிந்தான் மகிழன்

நிகிலன் அவ்வளவாக பேசாமல் அவர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி கொண்டிருக்க, அடுத்து வந்தவனின் வெகுளியான இயல்பான பேச்சு எல்லாருக்கும் பிடித்து விட்டது...

“பெரியவனுக்கு சின்ன மாப்பிள்ளையே பரவாயில்லை.. “ என்று தோன்றியது..

சிறிது நேரம் அவனுடன் பேசி கொண்டிருக்க, நிகிலன் மெதுவாக எழுந்து வெளியில் சென்று விட்டான்..

அதன் பிறகு மகிழன் எல்லாரிடமும் இயல்பாக கதை அடித்து கொண்டிருக்க, சாரதாவே அவனுக்கு சிற்றுண்டியை கொண்டு வந்து வைத்தார்....

அதையும் கொறித்து கொண்டே வெகு இயல்பாக கதை அடித்தவனை கண்டவர்

“சம்மந்தியின் குணம் போல.. “என்று எண்ணி சிரித்துக் கொண்டார் சண்முகம்..

ஒரு வழியாக எல்லா கதையும் முடிய, இரு பக்கமும் பிடித்துவிட, அப்பயே நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்றனர்...

“மாமா.. எதுக்கும் உங்க பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கங்க.. அவங்களுக்கு வேணும்னா என்னை பார்த்துக்கட்டும். “ என்றான் மகிழன்...

அப்பொழுதுதான் உரைத்தது இதுவரை தன் பெண்ணிடம் சம்மதம் கேட்க வில்லை என்று... ஆனால் தன் மாப்பிள்ளை அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்க, அதிலயே அவன் குணம் புரிந்து விட, மனதுக்குள் மகிழ்ச்சியாகி போனார்...

சண்முகமும் சாரதாவும் மதுவின் அறைக்கு சென்று மாப்பிள்ளையை பற்றி புகழோ புகழோனு புகழ்ந்து தள்ளி பின் அவளின் சம்மதம் கேட்க,

அவளோ இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள்.. அவள் தந்தையின் கண்களில் வேண்டாம் என்று சொல்லிடாதே என்ற ஏக்கம் பரவி கிடக்க, சாரதாவுக்கும் அதே நிலைதான்...

“ப்ளீஸ் மது கண்ணா.... பிடிச்சிருக்குனு சம்மதம் சொல்லிடு... அவங்க நல்ல குடும்பமா தெரியுது.. இதைவிட நல்ல சம்பந்தமா கிடைக்காது... “ என்றார் சாரதா...சண்முகமும் அதையே சொல்லி தன் மகளை கன்வின்ஸ் பண்ண

அருகில் நின்ற சுகந்தியும்

“மது குட்டி.. உங்கப்பா அந்த ஜோசியர் சொன்னதை கேட்டு எப்படியும் உன்னை இந்த ஒரு மாதத்திற்குள் பேக் பண்ணி அனுப்ப உறுதியாக இருக்கார்.. நீ இந்த மாப்பிள்ளை பிடிக்கலைனு சொன்னா அடுத்த நாளே இன்னொரு மாப்பிள்ளைய கொண்டு வந்து நிறுத்துவார்...

இவங்கள பார்த்தா நல்ல மாதிரிதான் தெரியுது... .எங்கயோ போய் மாட்டி கஷ்ட படறதுக்கு இந்த மாப்பிள்ளைக்கே ஓகே சொல்லிடு.. அதுக்கப்புறம் அங்க போய் எல்லாம் சமாளிச்சுக்கலாம்... “என்று காதை கடித்தாள்...

மதுவுக்கும் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல் தன் பெற்றோர்களையே பார்க்க அவர்களோ இவளையே ஒரு வித எதிர்பார்ப்புடன் பார்த்து கொண்டிருக்க அடுத்த நொடி எதையும் யோசிக்காமல்

“சம்மதம்.... “ என்றாள்..

அதை கேட்டதும் சாரதா வந்து அவளை கட்டி கொண்டார்.. சண்முகமும் தன் மகளை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு பின் வெளியே சென்று தன் பெண்ணின் சம்மதத்தை தெரிவிக்க எல்லாருமே உற்சாகமாயினர்...

சிவகாமி மகிழ்ச்சியுடன் தான் கொண்டு வந்திருந்த பூவை எடுத்து மீண்டும் உள்ளே வந்து அவள் தலையில் வைத்து

“ரொம்ப தேங்க்ஸ் டா மது கண்ணா... நீ சம்மதம் சொன்னதுக்கு... சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்திடு.. “ என்று அவளை கட்டி கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டார் சிவகாமி...

மதுவும் அவரை கண்டு புன்னகைக்க, அதை ரசித்தவர் பின் வெளிவந்து அடுத்து செய்ய வேண்டியதை கலந்து ஆலோசித்தனர் ..

அடுத்த முகூர்த்தம் இரண்டு வாரத்துலயே வருவதால் அதிலயே திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்க, அனைவருமே ஒத்துக் கொண்டனர்_..

அப்பயே சிம்பிளா நிச்சயம் பண்ணிக்கலாம் என்று முடிவு செய்ய, சாரதாவும் அவசரமாக உள்ளே சென்று தட்டில் மங்கள பொருட்களை வைத்து எடுத்து வந்தார்...

சுகந்தி மதுவை இப்பொழுது ஹாலுக்கு அழைத்து வர, போட்டோவில் பார்த்ததை விடநேரில் இன்னும் தேவதையாக ஜொலித்தவளை கண்டு தன் அன்னையின் தேர்வு சூப்பர்தான்.. என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான் மகிழன்...

சிவகாமி வெளியில் சென்று நிகிலனை அழைத்து வர மாப்பிள்ளை வீட்டு சார்பாக நிகிலனே நின்று சண்முகத்திடம் தட்டை மாற்றி கொண்டான்..

அவசரமாக ஏற்பாடு செய்த நிச்சயம் என்பதால் இருபக்கமும் மோதிரம் எதுவும் எடுத்து வரவில்லை என்று மோதிரம் மாற்றாமல் வெறும் தட்டு மாற்றலுடன் முடித்து கொண்டனர்...

பின் சிவகாமி தன் பையில் இருந்து தான் கொண்டு வந்திருந்த நகை பெட்டியை எடுத்து

“இது என் மருமகளுக்காக கொண்டு வந்தது.. நானே போட்டு விடறேன்.. “ என்று எழுந்தவர் அங்கு ஹாலில் தலை குனிந்து நின்று கொண்டிருந்த மதுவி ன் அருகில் சென்று அவளுக்கு அந்த நெக்லஸை அணிவித்தார்...

மதுவும் குனிந்து அவர் காலில் விழுந்து வணங்க, பதறியவர் அவளை தூக்கி ஆசிர்வதித்தார்...

மகிழனோ மற்றவர்களிடம் பேசினாலும் அவன் பார்வை அடிக்கடி தலையை குனிந்தபடியே இருந்தவளிடமே சென்று நின்றது.... ஆனால் மதுவோ மறந்தும் யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் உள்ளுக்குள்ளயே பொருமி கொண்டிருந்தாள்

ஒரு வழியாக எல்லா பார்மாலிட்டிஸ்ம் முடிந்து பின் அனைவரிடமும் விடை பெற்று கிளம்பினர் சிவகாமி குடும்பத்தினர்...

சிவகாமி மீண்டும் ஒரு முறை தன் மருமகளை கண்டு கொஞ்சி விட்டு வர, மகிழனோ

“அவர் மகன் செய்ய வேண்டியதை எல்லாம் இந்த அம்மா செய்யறாங்களே.. “என்று பொறாமையாக பார்த்தவாறு மதுவிடம் சென்ற தன் பார்வையை திருப்பிக் கொண்டு அனைவரிடமும் தலையசைத்து விடை பெற்றான்...

வெளியில் வந்து காரை அடைந்ததும் மகிழன் தனக்கு இன்னும் வேலை இருப்பதால் மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும் என்று சொல்லி அலுவலகம் கிளம்பி சென்றான்...

காரில் திரும்பி வரும்பொழுது சிவகாமி தன் மருமகளை பற்றி நிகிலனிடம் புகழ்ந்து தள்ள தன் அன்னையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது

தன் தந்தையின் மறைவுக்கு பிறகு அவர் இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்து பார்த்ததில்லை.. எல்லாரிடமும் சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் ஒரு சோகம் எப்பவும் இழையோடி இருக்கும்...

முதலில் வேற வேற காரணங்களால் உள்ளுக்குள் மருகி வந்தவர் கடைசி மூன்று வருடமாக தன் திருமணத்தை நினைத்து தான் ஏங்கி வந்தார் என்று இப்பொழுது புரிந்தது நிகிலனுக்கு...

“எப்படியோ... என் தம்பியாவது அவரை புரிந்து கொண்டு அவர் வேண்டியதை, அவர் ஆசையை நிறைவேற்றி வைக்கிறானே... அவனுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்... “ என்று தன் தம்பியை நினைத்து பெருமை கொண்டான் நிகிலன்....

பாவம் .. இதே தம்பிதான் தன் அன்னையை, அண்ணனை தலை குனிய வைக்க போகிறான் என்றும் தன்னை கொண்டு வந்து இக்கட்டில் மாட்ட வைக்க போகிறான் என்றும் அப்பொழுது அறிந்திருக்கவில்லை நிகிலன்......


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!