காதோடுதான் நான் பாடுவேன்-24



அத்தியாயம்-24

டுத்து வந்த இரண்டு வாரங்களும் இறக்கை கட்டி பறந்தனர் இரு வீட்டிலும்.. அதுவும் சிவகாமிக்கு கால் தரையில் இல்லை.. தனக்கு மருமகள் வரப்போகிற சந்தோசத்தில் மனம் எல்லாம் பூரிப்புடன் திருமண வேலைகளை செய்து வந்தார்....

வீட்டை கட்டிப்பார்... கல்யாணத்தை பண்ணிப் பார் என்று அந்த காலத்தில் சொல்லுவார்கள்...

வேலைகளில் கடினமானது வீடு கட்டுவதும் திருமணத்தை நடத்துவதும் தான் என்ற அர்த்தத்தில்....

வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு தேவையான மணல், கம்பி, சல்லி, மரச்சாமான்கள் என்று ஒவ்வொன்றுக்கும் அலைந்து திரிந்து வாங்க வேண்டும்...

அதைப் போலவே ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்றால் மண்டபம் பார்க்க, பத்திரிக்கை அடிக்க,சமையல் ஆள், மண மேடை அலங்காரம், ஐயர் ,நாதஸ்வரம், தவில் வாசிப்பவர் என்று பலபேரை பிடிக்க வேண்டும்...

இரண்டுக்குமே அலைச்சல் அதிகம் என்பதால் அப்படி சொல்வது,..

ஆனால் இன்றைய தலைமுறையில் இரண்டையுமே outsource பண்ணி விடுகிறார்கள்...

வீடு கட்ட வேண்டுமா?? பிளானை மட்டும் ஒரு எஞ்சினியர் வைத்து தயாரித்ததும் அதை அப்படியே கொண்டு போய் வீடு கட்டி தரும் கான்ட்ராக்டரிடமோ அதற்கான கம்பெனியிடமோ விட்டு விடுகின்றனர்.. அவர்கள் எல்லாம் பார்த்து ஏற்பாடு செய்து வேலையை நடத்துவர்...

வாரம் ஒரு முறை சென்று கட்டிடம் எவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்று பார்ப்பதோடு நம் வேலை முடிந்து விடுகிறது...

அதே போலத்தான் திருமணத்தை நடத்துவதும் இப்பொழுது மிகவும் எளிதாகி விட்டது...

Event Management என்று வந்துள்ள ஏதாவது ஒரு கம்பெனியிடம் பொறுப்பை ஒப்படைத்தால் போதும்.. அவர்களே திருமணத்திற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் பார்த்து கொள்வர். சம்மந்தி வீட்டாரை எப்படி எல்லாம் கவனிக்க வேண்டும் என்பது முதற்கொண்டு..

யார் வீட்டு கல்யாணத்திற்கோ செல்வது போல முதல் நாள் காரில் வந்து மண்டபத்தில் இறங்கினால் போதும்... திருமணத்தை நடத்தி விடலாம்....

அந்த மாதிரி இருக்கும் இன்றைய கால கட்டத்தில் சண்முகம், சிவகாமி இருவருக்குமே அந்த மாதிரி திருமண வேலையை வெளியில் கொடுத்து செய்ய மனமில்லை..

இரு வீட்டிலுமே இது முதல் விசேஷம்... அதுவும் சண்முகத்திற்கு ஒரே பெண்... அவள் திருமணத்தை தானே முன்னின்று நடத்தனும்... என்று ஆசை பட்டார்...

குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்த திருமணம் என்றாலும் எந்த குறையும் இல்லாமல் எல்லா சடங்குகளையும் செய்தே தன் மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எண்ணியதால் அவரே திருமண வேலைகளை கவனித்து வந்தார்....

திருமணம் நடத்த முதல் லெவல் திருமண மண்டபத்தை பிடிப்பது... இப்பொழுதெல்லாம் 6 மாதத்திற்கு முன்பே மண்டபத்தை புக் பண்ணி விடுகிறார்கள் கிடைப்பதில்லை என்பதால்..

அப்படியிருக்க, இரண்டு வாரத்தில் திருமணம் என்றால் எந்த திருமண மண்டபம் கிடைக்குமாம்??

சண்முகம் கவலையாக இருக்க, சுகந்தி அப்பா அவருக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்திருக்க, அதில் தெரிந்த ஒரு திருமண மண்டபத்தில் பதிவு செய்திருந்த திருமணம் என்ன காரணத்தாலோ திடீரென்று நின்று விட, அந்த மண்டபம் காலியாக இருப்பதாக தகவல் கிடைத்தது...

அவரும் மகிழ்ந்து சண்முகத்திடம் அந்த மண்டபத்தையே புக் பண்ணலாம் என்றார்...

அதில் ஏற்பாடு செய்திருந்த திருமணம் நின்று விட்டது என்று கேள்வி படவும் சண்முகத்திற்கு ஏதோ அபச குணமாக இருந்தது... அவர் கொஞ்சம் சென்டிமென்டாக யோசிக்க சுகந்தி அப்பாதான் அவரை கன்வின்ஸ் பண்ணினார்...

ஆனாலும் அரை மனதாகவே அந்த திருமண மண்டபத்தை புக் பண்ணினார்...

மகிழன் பத்திரிக்கை அடிக்கும் வேலையை ஏற்று கொள்ள,மற்ற வேலைகளை சண்முகம் முன்னின்று செய்தார்...

மகிழனுக்கு அப்பொழுது அலுவலகத்தில் அதிக வேலை வந்துவிட, அதையும் பார்த்து கொண்டு தன் திருமண வேலையையும் வைத்துகொண்டு அலைந்து கொண்டிருந்தான்...

அதிக வேலையிருக்கும் நாட்களில் அவன் தன் அன்னையிடம் சொல்லி நிகிலனை கூட்டி கொண்டு போகச் சொன்னான்... நிகிலனும் தன் தம்பியின் திருமணத்திற்கு அவனுக்கு முடிந்த உதவிகளை செய்தான்...

இப்படி ஒவ்வொருவரும் உற்சாகத்துடன் வளைய வர ,அந்த விழாவின் நாயகியோ இன்னும் உள்ளுக்குள் பொருமி கொண்டிருந்தாள்.. அவளால் வாய் விட்டு வெளியிலும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளயே வைத்து புழுங்கிக் கொண்டிருந்தாள்..

தன் தோழி சந்தியாவிடமாவது தன் மனக்குறையை கொட்டி தீர்த்து கொள்ளலாம் என்று அவள் எண்ணிற்கு அழைக்க, அது அவுட் ஆப் நெட்வொர்க் என்று வந்தது...

“சே... எங்க போய்ட்டா இந்த சந்தி??...ஸ்டேட்டஸ் ல கூட எதுவும் போடலையே... இவ கிட்ட கூட பேச முடியாமல் போயிருச்சே... “ என்று புலம்பினாள் மது

அதனால் இந்த திருமண ஏற்பாட்டில் அவள் எந்த ஆர்வமும் காட்டாமல் யாருக்கோ திருமணம் என்பதை போல இருந்தாள்...

திடீரென்று ஏற்பாடு செய்த திருமணம் என்பதல் தன் மகள் இன்னும் ஒரு வேலையும் கத்துக்காமல் இருக்கிறாளே என்று சாரதாவும் புலம்பிக் கொண்டிருந்தார்...

விளக்கேற்றுவது, வீடு கூட்டுவது, கேஸ் ஸ்டவ்வை எப்படி பற்ற வைப்பது,பாத்திரம் கழுவறது, சாதத்தை குக்கரில் எப்படி வைப்பது, முக்கியமாக புடவை கட்டுவது என்று சின்ன சின்னை வேலையாக தன் மகளுக்கு பயிற்சி கொடுத்தார்...

மதுவோ இதெல்லாம் எனக்கு வராது என்று ஒவ்வொன்றையும் மறுக்க, சாரதா கெஞ்சி கொஞ்சி, சில நேரம் உருட்டி மிரட்டி தன் மகளுக்கு மண்டையில் எல்லாத்தையும் குறுகிய காலத்தில் புகுத்திக் கொண்டிருந்தார்...

அதே போல திருமண புடவை எடுக்க கிளம்பும் பொழுதும் மது தான் வரவில்லை என்று மறுக்க, சாரதா தான்

“மாப்பிள்ளை வர்ரார்... அட்லீஸ்ட் அவரை பார்க்கவாது வாடி... இல்ல அவர் உன்னை பாக்காவாது அங்க வந்து நில்...பாவம் பொண்ணு பார்க்கிற அன்னைக்கே நீ அவர் முன்னாடி வந்து நிக்க மாட்டேனுட்ட...

அவருக்கும் வேலை அதிகம் இருப்பதால் அதற்கு பிறகு இங்கு வரவும் முடியல.. அதனால நீ இன்னைக்கு என் கூட வர்ற... “ என்று அவளை கட்டாய படுத்தி அழைத்து சென்றார்...

அன்னைக்குனு பார்த்து புரடக்சன் இஸ்யூ வந்து விட, கடைசி நேரத்தில் மகிழனை பிடித்து வைத்துக் கொண்டார் அவன் மேனேஜர்...

வழக்கம் போல நிகிலனிடம் கெஞ்ச, அவனோ இவனை திட்டி கொண்டே தன் அன்னையை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றான்...

மதுவும் வந்திருக்க, அவனோ அவளிடம் திரும்ப கூட இல்லாமல் சண்முகம், சாரதாவிடம் சுறுக்கமாக பேசிவிட்டு வேறுபக்கம் சென்றிருந்தான்...

மதுவும் நிமிரிந்தும் யார் வந்திருக்கிறார்கள் என்று கூட பார்க்கவில்லை.. சிவகாமி மட்டும் எப்பவும் போல தனக்கு மருமகள் ஆகப் போறவளை கொஞ்சி பின் புடவை செக்சனுக்கு சென்றனர்....

சாரதாவும் சிவகாமியும் சில டிசைன்கனை எடுத்து காட்ட, மதுவோ எல்லாத்துக்கும் பிடித்திருப்பதாக தலை ஆட்டினாள்...அதை கண்ட சாரதா

“நீ இதுக்கெல்லாம் லாயக்கு இல்லை மது.. சரி இரு பெரிய மாப்பிள்ளைக்கிட்டயே கேட்கலாம்... “என்ற சாரதா நிகிலனை அழைக்க, அவனோ இதில் எல்லாம் தனக்கு எதுவும் தெரியாது... வேணா மகிழனை அழைத்து டிசைனை வாட்ஸ்அப்பில் காட்டு மாறு கேட்க அதன்படி சாரதா மகிழனை அழைத்தார்..

அவனோ “ உங்க பொண்ணுக்கு எது பிடிக்கிறதோ அதை எடுங்க அத்தை.. அவ தான கட்டப்போற...எனக்கு இதெல்லாம் அவ்வளவா தெரியாது “ என்று சொல்ல சாரதாவுக்கு மனம் குளிர்ந்து போனது...

தன் பெண்ணின் விருப்பத்த மதித்து நடக்கும் குடும்பம் என்பதால் தன் பெண்ணை நன்றாக பார்த்து கொள்வர் என்ற நம்பிக்கை வந்தது...

மகிழன் தன் அண்ணனிடம் அவனுக்கான ஆடைகளையும் நிகிலனயே செலக்ட் பண்ண சொல்ல, நிகிலன் கடுப்பானான்...

“டேய்..மங்கி.. கல்யாணம் உனக்கா?? இல்லை எனக்கா?? எல்லாத்துக்கும் என்னையே கோத்து விடற... உன் கல்யாண ட்ரெஸ் நீதான் செலக்ட் பண்ணனும்.. என்னை ஆள விடு... “ என்று சிடுசிடுத்தான்...

“நிகிலா.. ப்ளீஸ் டா... இங்க ஆபிஸ்ல பயங்கர வேலை...என் மேனேஜர் கிட்ட பர்மிஷன் கேட்டா, அந்த சிங்கம்

“டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்திருக்கு... நீ ஆபிஸ் ல இருந்தே ஆன்லைன் ல ஆர்டர் பண்ணுடா... நீ எதுக்கு நேர்ல போகணும் னு விட மாட்டேங்கிறான்... இப்ப எனக்கு நேரம் இல்லை...

இதுல நான் வந்து, பார்த்து செலக்ட் பண்ணி தைக்கிறதெல்லாம் ஆகாத வேலை.. நீயே உனக்கு பிடிச்சத செலக்ட் பண்ணிடு ணா... “ என்று கெஞ்ச அவனை திட்டி கொண்டே ஆண்கள் பிரிவிற்கு சென்றான்..

சண்முகமும் அவனுடன் செல்ல, அண்ணன் தம்பி இருவரும் கிட்ட தட்ட ஒரே உயரம் என்பதால் நிகிலன் அவன் அளவுக்கே தேர்வு செய்தான்...

சண்முகமும் தனக்கு தெரிந்ததை சொல்ல அவர் சொல்வதையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்து முடித்தான்...

ஒரு வழியாக எல்லா பர்சேஸ் முடிய, சண்முகம் பே பண்ண வர, நிகிலன் அதை மறுத்து நிகிலனே தன் கார்டை எடுத்து பே பணி முடித்து வீட்டிற்கு கிளம்பினர்..

அழைப்பிதல் கொடுக்கவும் சிவகாமி நிகிலனையே அழைத்துச் சென்றார்... சில இடங்களில் எல்லாரும் அவன் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஆராய்ச்சியுடனும் சிலர் அவன் மேல் பரிதாபபட்டும் கேட்க, நிகிலனுக்கு கடுப்பாக இருந்தது..

அதனால் ஒரு ட்ரைவரை அரேஞ்ச் பண்ணி சிவகாமி போக வேண்டிய இடங்களுக்கு அவரையே அழைத்துச் செல்ல சொல்லி விட்டு நழுவினான்...

அதே போல சிவகாமி தன் சொந்த ஊருக்கு போய் எல்லா சொந்தக் காரர்களையும் நேரில் அழைக்கவேண்டும் அதுவும் அவர் கணவன் தம்பி தங்கச்சி எல்லாரையும் அழைக்க வேண்டும் என்க, நிகிலன் தன் தந்தை இறந்த பிறகு யாரும் கணடு கொள்ளாமல் கை விட்டு சென்ற உறவு நமக்கு வேண்டாம் என்று மறுத்தான்...

“டேய்...நிகிலா... அவர்கள் விட்டு சென்றதால தான் வைராக்கியத்தோட நாமும் முன்னேற முடிஞ்சது.. நீயும் உன் தம்பியும் பொறுப்பா படிச்சு இப்ப நல்ல நிலையில இருக்கீங்க...

அதனால் எல்லாம் நல்லதுக்கேனு நினை....

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்...

என்று உங்கப்பா அடிக்கடி என்கிட்ட சொல்லுவார்.. அதனால யாரையும் தள்ள வேண்டாம்... எல்லாரையும் அழைக்க வேண்டும் என்று அடம் பிடித்து அவனையே அழைத்து செல்ல வைத்தார்....

சிவகாமி சொன்னதை போல நிகிலன் தந்தையின் தம்பி தங்கைகளும் இப்பொழுது உறவுகளின் அருமை புரிந்திருக்க, அவர்களும் சிவகாமியிடம் மன்னிப்பு வேண்டி திருமணத்தை தாங்களே வந்து நடத்தி கொடுப்பதாக சொல்ல ரொம்ப மகிழ்ச்சியாகி போனார் சிவகாமி..

ஒரு வழியாக இரு பக்கமும் பரபரப்பாக வேலை நடக்க, அந்த திருமண நாளும் வந்தது...

முதல் நாளே சிவகாமி சொந்தக்காரர்கள் எல்லாம் வருவதற்கு ஊரிலிருந்து இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்திருந்தார்...

இருவர் பக்கமும் திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையையும் பொண்ணையும் ஒன்றாக நிக்க வைக்க கூடாது என்பதால் திருமணத்திற்கு முதல் நாள் ரிசப்சன் வைக்காமல் நேராக திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர்..

ஊரிலிருந்து வந்தவர்கள் எல்லாம் நேராக மண்டபத்திற்கு சென்றுவிட, அன்று நழுங்கு வைக்கும் சடங்கு என்பதால் நெருங்கிய உறவினர்கள் வீட்டிற்கு வந்து மகிழனுக்கு நழுங்கு வைக்க, அவனும் உற்சாகமாக வளைய வந்தான்....

திருமணம் தங்கள் ஊர் முறைப்படி நடக்கணும் என்று ஒரு நடுத்தர வயது பெண்மணி யை அழைத்து வந்திருந்தார் சிவகாமி.. அவர் ஒவ்வொன்றாக சொல்ல, அதன் படி எல்லா சடங்குகளும் நடந்தது...

இறுதியாக அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பி செல்ல தயாராகி இருக்க, பூஜை அறைக்கு சென்று அந்த வேலனை வணங்கி ,பின் சிவகாமியை சாதம் பிசைந்து மகிழனுக்கு கொடுக்க சொன்னார் அந்த நடுத்தர வயது பெண்மணி....

“தாயின் கடமை இன்றோடு முடிகிறது.. நாளையில் இருந்து அவன் இன்னொருத்திக்கு சொந்தமாக போகின்றான்...”என்பதை உணர்த்துவதற்காக அந்த சடங்கு..

அந்த பெண்மணியே தயிர் சாதத்தை கொண்டு வந்து சிவகாமியின் கையில் கொடுக்க, மகிழனை கீழ அமர வைத்து சிவகாமி கையில் அந்த சாதத்தை எடுத்தார்....

எத்தனையோ முறை தன் சின்ன மகனுக்கு ஊட்டி விட்டிருக்கார்.. ஆனால் இன்றோடு தன் உரிமையெல்லாம் வேற ஒருத்திக்கு போகப் போவதும் தன் முந்தானையை பிடித்துக் கொண்டு சுத்தி வந்த பையன் இனி அவனுக்கு என்று ஒரு குடும்பத்தை சுமக்க தயாராகி விட்டதையும், இனி தன்னை விட அவன் மனைவிக்குதான் முதல் உரிமை என்று நினைக்கையில் அதுவரை சிரித்துக் கொண்டிருந்த சிவகாமியின் கண்கள் கலங்க ஆரம்பித்தன...

நெஞ்சை அடைக்க சாதத்தை உருட்டி மகிழன் கையில் கொடுத்தார் கைகள் நடுங்க... மகிழனுக்குமே என்னவோ போல இருந்தது.. இந்த மாதிரி இனி தன் அன்னையின் கையால் வாங்கி சாப்பிட முடியுமா??

அவரை விட்டு பிரிய போகிறனே..” என்று எண்ணியோ என்னவோ அவரையே ஏக்கமாக பார்த்துக் கொண்டே அவன் கையில் இருந்த சாதத்தை உண்டான்...

அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று சிவகாமிக்கு வலிக்க, திடீரென்று குலுங்கி அழ ஆரம்பித்தார்... அதை கண்ட அந்த நடுத்தர வயது பெண்மனி

”அடடா?? என்ன இது சிவகாமி... சின்ன புள்ளை மாதிரி அழற... உன் மவன் எங்க போய்ட போறான்.. கல்யாணம் பண்ணிகிட்டு இங்கயே தான இருக்க போறான் .. அப்படியே தனியா போனாலும் இந்த ஊர்ல தான இருக்கப் போறான்.. அடிக்கடி பார்க்கத்தான போற.. அதுக்கு போய் அழலாமா?? ... “என்று அதட்டியவர் மகிழன் பக்கம் பார்த்து

“சின்னவா... உன் பொண்டாட்டி வந்துட்டானு அம்மாவ கண்டுக்காம விட்டுடாத... அவளையும் நல்லா பார்த்துக்கோ.. “ என்றார் சிரித்தவாறு...

“ஹ்ம்ம் கண்டிப்பா பாட்டி... என் அம்மாவுக்காகத்தான இந்த கல்யாணமே.. அவங்க சந்தோசம் தான் என் சந்தோசம்... அவங்கள எப்பவும் சந்தோசமா பார்த்துப்பேன்..” என்றான் கலங்கிய கண்களுடன்...

இதையெல்லாம் கண்ட நிகிலனுக்கு

“இதெல்லாம் தேவையா.?? இப்படி ஒரு கல்யாணம் அவசியமா?? “ என்று மனதுக்குள் ஏளனமாக சிரித்து கொண்டான்...

பின் அனைவரும் கிளம்பி திருமண மண்டபத்திற்கு சென்றனர்...

மது வீட்டிலும் இதே போல சம்பிரதாயம் நடக்க, அவளோ ஓ வென்று தன் அன்னையின் கழுத்தை கட்டி கொண்டு அழுதாள் அவர்களை விட்டு பிரியப் போகிறோமே என்று...

சாரதா மற்றும் சண்முகத்துக்குமே தாங்க முடியவில்லை.. இதுவரை கைக்குள்ளயே வைத்து வளர்த்த பொண்ணை அதுவும் இரண்டே வாரத்தில் திருமணம் ஏற்பாடு செய்து அடுத்த வீட்டிற்கு அனுப்ப போறமே என்று நினைக்கையில் அவர்களுக்குமே கண்கள் கலங்கியது...

தங்கள் வருத்தத்தை உள்ளுக்குள் மறைத்து கொண்டு மதுவுக்கு ஆறுதல் சொல்லி அவளை தேற்ற முயன்றனர்.. அவளோ அதெல்லாம் கேட்காமல் தேம்பி கொண்டே பூஜை அறையில் இருந்து வெளி வந்தாள்...

வரும்பொழுது மீண்டும் திரும்பி தன் நண்பனை பார்த்து

“வேல்ஸ்... கடைசியா உன்னைத்தான் நம்பி இருக்கேன்... கடைசி வாய்ப்பா இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடு.. ப்ளீஸ் ... நீ எது கேட்டாலும் நான் செய்யறேன்... “ என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டே வெளியில் வந்து காரில் அமர்ந்தாள்....

பெண் வீட்டாரும் மண்டபத்தை அடைந்தனர்...

மகிழனோ தன் வேலை பிசியில் பொண்ணு பார்த்த பிறகு மதுவை மீண்டும் பார்க்கவில்லை... இப்பொழுது பார்க்கலாம் என்றால் அவளோ மணமகள் அறைக்கு சென்றவள் வெளியில் வரவே இல்லை...

அவனாக சென்று பார்க்கவும் வெக்கமாக இருந்தது...

“எப்படியும் நாளை பார்க்கத்தானே போகிறேன்.. அதற்குள் என்ன அவசரம்??” என்று தன் ஆசையை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டான்...

அதிகாலை முகூர்த்தம் என்பதால் அனைவரையும் சீக்கிரம் உறங்க செல்லுமாறு அனுப்பி வைக்க, மதுவுக்கும் மகிழனுக்கும் பொட்டு தூக்கமில்லை அன்று...

மறுநாள் காலை சாரதா மதுவை சீக்கிரம் கொஞ்சி, எழுப்பி அவளை குளித்து தயராக வைக்க, திருமண சடங்குகள் ஆரம்பித்தன..

மதுவை முதலில் அழைத்து வந்து மணமேடையில் அமர வைத்து மணப்பெண்ணிற்கான சடங்குளை செய்து கொண்டிருந்தனர்...

நிகிழன் மற்றும் அவன் சித்தப்பாக்கள் வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தனர்...

அப்பொழுது அவன் நண்பன் ஆதியும் பாரதியும் வந்திருந்தனர்... அதிகாலை முகூர்த்தம் என்பதால் தங்கள் இளவரசியை விட்டுவிட்டு அவளுக்கு துணையாக ஜானகியையும் இருக்க சொல்லி இருவர் மட்டுமே வந்திருந்தனர்...

பட்டு வேஷ்டியும் மெரூன் கலர் சில்க் சட்டையும் அணிந்து வாயிலில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த நிகிலனை கண்டதும் பாரதி

“என்ன மாம்ஸ்...மாப்பிள்ளை நீங்களா?? இல்ல உங்க தம்பியா?? நீங்க தான் மாப்பிள்ளை மாதிர் ஜொலிக்கறீங்க... “ என்று கன்னம் குழிய சிரித்தாள் பாரதி...

ஆதியும் அவனுக்கு கை குலுக்க, நிகிலன் அவர்களை சிரித்தவாறே வரவேற்றான்...

“ஹ்ம்ம்ம் எப்படியோ தம்பிய மாட்ட வச்சுட்டு நீங்க எஸ் ஆகிட்டீங்க மாம்ஸ்... ம்ஹூம்.. .இந்த சிவா அத்தை சரியில்லை.. காதை பிடிச்சு திருகி இதுதான் பொண்ணு.. கட்டுடா தாலியனு சொல்லாம நீங்க எப்ப கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வீங்கனு உங்க வாய பார்த்துகிட்டிருக்காங்களே...சுத்த வேஸ்ட்...

பார்க்கத்தான் டெரர் அத்தை மாதிரி இருக்காங்க... ஆனா அவங்க பையன வழிக்கு கொண்டு வர தெரியலை...எங்க ஜானகி அத்தை கிட்ட வந்து ட்யூசன் எடுத்துக்க சொல்லணும் .. “என்று சிரித்தாள்....

“ஹா ஹா ஹா பார்த்து சிஸ்டர்... எங்கம்மா காதுல விழுந்திட போகுது... அப்புறம் இப்பயே மனசு மாறினாலும் மாறிடுவாங்க.. “என்றான் சிரித்தவாறு...

“ரதி... அவனாவது நிம்மதியா இன்னும் கொஞ்ச நாள் சுதந்திரமா இருக்கட்டும்... நான் பட்ட, படற கஷ்டம் அவனும் படணுமா?? “ என்றான் ஆதி சிரித்தவாறு அவளை சீண்ட எண்ணி...

“ஹீ ஹீ ஹீ மாமா... உங்களுக்கு விவரமே இல்ல.. என் மாம்ஸ் க்கு கல்யாணம் ஆனா உங்களுக்கு தான் நல்லது… “என்றாள் கண் சிமிட்டி...

“என்னடி குழப்பற??.. அவனுக்கு கல்யாணம் ஆனா எனக்கெப்படி நல்லது?? “என்றான் புரியாதவனாக..

“ அது வந்து மாமா.... உங்க செட்ல நீங்க மட்டும் தான் கல்யாணம் ஆகி இருக்கீங்க... மாம்ஸ் ம் அப்புறம் வசி அண்ணாவும் இன்னும் கல்யாணம் ஆகாம சும்மா சுத்திகிட்டிருக்காங்க...

அவங்களுக்கும் கல்யாணம் ஆச்சுனா அவங்கவங்க பொண்டாட்டிய சமாளிக்க புது புதுசா ஐடியா யோசிப்பாங்க இல்ல.. அதுல கொஞ்சம் உங்களுக்கும் சேர் பண்ணுவாங்க இல்லை.... அதான்.. உங்களுக்கும் நல்லது னு சொன்னேன்.. எப்பூடி??” என்று தன் காலரை தூக்கி விட்டு கொண்டாள் பாரதி...

அதை கேட்டு வாய் விட்டு சிரித்தவன்

“என் ரதி டார்லிங் சொன்னா கரெக்டா தான் இருக்கும்.. ஆமா நிகில்.. சீக்கிரம் நீயும் இந்த கல்யாணம் ஆனவர்கள் சங்கத்துல சேர்ந்துடு டா.. இவளை சமாளைக்க முடியல..,, நீதான் எப்பவும் கிரியேட்டிவ் ஐடியா வா சொல்லுவியே.. அதுல ஒன்னு இரண்டு எனக்கும் யூஸ் ஆகும்... “ என்று சிரித்தான் ஆதி ....

“டேய்... உனக்கு ஐடியா கொடுக்கறதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?? இது நல்லா இருக்கே.. வேணும்னா வசி ய புடி... டாக்டர் சார் என்னை விட பயங்கரமா யோசிப்பான்... “ என்று சிரித்தான் நிகிலன்....

“அட போடா... நீயாவது பிடிவாதக்காரன்... ஆனா வசி இருக்கானே அவன் சரியான அழுத்தக்காரன்.. ஏண்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்கலைனு கேட்டா, அந்த வசீகர சிரிப்பை சிரிச்சே ஆளை மயக்கிடறான்..

வாய திறந்து ஒன்னும் சொல்ல மாட்டான்... அவனாவது என் சங்கத்துல சேர்ரதாவது... “ என்று புலம்பினான் ஆதி

நிகிலனும் அவனை செல்லமாக முறைத்து பின் சிரித்துக் கொண்டே மற்றவர்கள் வர அவர்களை கவனிக்கும் சாக்கில் ஆதியை உள்ளே சென்று அமருமாறு சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவினான்..

“கல்யாணம் னா எப்படி நழுவி ஓடறார் பார்... பார்க்கலாம்.. எத்தனை நாளைக்கு ஓடுவார்னு.. திடீர்னு ஒரு நாள் நல்லா மாட்ட வைக்கணும்.. “ என்று சிரித்து கொண்டாள் பாரதி....

பாரதி அறியவில்லை... அவள் வாய் மூகூர்த்தம் அன்றே பலிக்க போகிறது என்று...

மணமேடையில் மதுவிற்கு மணப்பெண்ணிற்கான சடங்குகள் நடந்து கொண்டிருக்க, அவளோ வெளிறிய முகத்துடன் இன்னும் உள்ளுக்குள் குமுறியவளாக தலையை குனிந்து கொண்டு அந்த ஐயர் சொல்வதை செய்து கொண்டிருந்தாள்....

அவள் மனம் இன்னுமே இந்த கல்யாணம் எப்படியாவது நின்று விடவேண்டும் என்று வேண்டி கொண்டே இருந்தது..

மணப்பெண்ணிற்கான சடங்கு முடிய, அடுத்து மாப்பிள்ளையை அழைத்து வரச் சொன்னார் ஐயர்...

அதுவரை மணமேடையின் அருகில் நின்று கொண்டு தன் மருமகளையே ரசித்து கொண்டிருந்த சிவகாமியும் சிரிப்புடனே மணமகன் என்ற பெயரிட்டிருந்த அந்த அறைக்கு விரைந்து சென்று கதவை தட்டினார்...

பதில் எதுவும் இல்லாமல் போக, மீண்டும் தட்டியவர் பின் மெதுவாக கதவை திறந்து உள்ளே சென்றார்...

அங்கு மணமகனுக்கான பட்டு வேஷ்டியும் சட்டையும் அப்படியே இருக்க, மகிழனை காணவில்லை...

“மூனு மணிக்கே எழுப்பி விட்டனே.. இன்னும் ரெடியாகாம எங்க போய்ட்டான்..?? என்று மனதுக்குள் கேட்டவாறு மகிழா என்று அழைத்தவாறு அறையை முழுக்க தேடினார்...

குளியல் அறை கதவையும் திறந்து பார்க்க அங்கயும் காணவில்லை அவனை...

எங்க போய்ட்டான் என்று யோசித்தவாறு அறையை மீண்டும் கண்களால் துழாவியவர்க்கு அங்கு இருந்த சிறு மேஜையின் மீதிருந்த பேப்பர் படபடத்தது தெரிந்தது...

அருகில் சென்று அதை எடுத்து படித்தவர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து அருகில் இருந்த கட்டிலில் பொத்தென்று விழுந்தார்....

ஐயர் மீண்டும் மாப்பிள்ளையை அழைக்க, வாயிலில் நின்றிருந்த நிகிலன் ஏதோ சரியில்லை என தோன்ற வேகமாக தன் தாயை தேடி அறைக்கு வந்தான்...

உள்ளே வந்தவன் அறையில் அதிர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த சிவகாமியிடம் சென்று

"என்னாச்சு மா?? "என்று அவர் தோளை தொட்டான்....

அவனை கணடதும் மேலும் அதிர்ந்து விழித்தவர் அந்த பேப்பரை அவனிடம் நீட்ட, அதை வாங்கி, அதில் இருந்ததை படித்தான்....

“வெளியில் சொல்ல முடியாத சில காரணங்களால் என்னால் இந்த திருமணத்தை ஏற்று கொள்ள முடியவில்லை... அனைவரும் என்னை மன்னித்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுங்கள்...எனக்கு இதை விட்டால் வேறு வழியில்லை... சாரி.. " என்று சுறுக்கமாக அவசரமாக கிறுக்கியிருந்தான்..

அதை மீண்டும் ஒரு முறை படி த்தவன் அவனும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்...

"சே.. கடைசியில் காலை வாரிட்டானே.. "என்றவன் அவசரமக தன் அலைபேசியை எடுத்து மகிழனுக்கு அழைக்க, அது அனைக்க பட்டிருந்தது..

"ராஸ்கல்.... மா... உன்கிட்ட ஏதாவது சொன்னானா?? இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு எதுவும் சொன்னானா?? " என்றான் கோபமாக

“அப்படி எதுவும் சொல்லலையே டா... அவனே தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னான்.. ஒவ்வொன்றையும் அவனை கேட்டுத்தானே பண்ணினோம்... கடைசியில் இப்படி கழுத்தறுத்திட்டானே... " என்று புலம்பினார்...

"மா... சந்தேகம் வர்ற மாதிரி யாராவது அவனை பார்க்க வந்தாங்களா?? " என்று ஒரு போலிஸ்காரனாக குறுக்கு விசாரணை செய்தான் .

அப்பொழுது தான் நினைவு வந்தது சிவகாமிக்கு.. காலை 3.30 மணி அளவில் அவன் நண்பன் ஒருவன் அவனை சந்திக்க என்று அவசரமாக வந்திருந்தான்.. சிவகாமி தான் அவனை அழைத்து கொண்டு சென்று மகிழன் இருந்த அறையில் விட்டார்..

அப்பொழுது மகிழனுமே கொஞ்சம் டென்சனாக இருந்த மாதிரி இருந்தது... அப்பொழுது அதை கவனிக்காமல் அவன் நண்பனை விட்டு விட்டு மற்ற வேலை இருக்க வெளியேறி இருந்தார்..

“ஒருவேளை அவன் பிரண்ட் வந்த பிறகுதான் அவன் மனசு மாறினானோ?? என்ன காரணமா இருக்கும்?? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லியிருக்கலாமே... இப்படி செஞ்சுட்டானே... “என்று யோசித்து கொண்டிருக்கும் பொழுதே

சண்முகமும் சுகந்தி அப்பாவும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர்...

மாப்பிள்ளை இன்னும் வரவில்லையே என்று பார்ப்பதற்காக அங்கு வந்தவர்கள் சிவகாமி மற்றும் நிகிலன் முகத்தில் தெரிந்த கவலை மற்றும் அதிர்ச்சியை கண்டவர்கள் ஏதோ சரியில்லை என தோன்ற,

“என்னாச்சு சம்மந்தி?? மாப்பிள்ளை எங்க?? ஏன் இரண்டு பேரும் கவலையா இருக்கீங்க? “ என்றார் சண்முகம் கொஞ்சம் பதற்றத்துடன்..

அவர்கள் குரலை கேட்டதும் திடுக்கிட்ட சிவகாமி

“ஐயோ.. இப்ப இவங்களுக்கு என்ன பதில் சொல்வது?? “ என்ற கவலையுடன் மெதுவாக எழுந்து தலை குனிந்து நின்றார்....

தன் அன்னையின் நிலையை கண்ட நிகிலனுக்கு தன் தம்பியின் மேல் கொலை செய்யும் அளவுக்கு கோபம் ஏறியது..

“இப்படி தலை குனிய வச்சுட்டானே... எங்கடா போய் தொலஞ்ச??“ என்று மனதுக்குள் தன் தம்பியை திட்டியவாறு ஒரு அடி எடுத்து வைத்து முன்னே வந்தவன்..

“வந்து.. ஒரு சின்ன பிராப்ளம் சார்... என் தம்பி ரூம்ல இல்ல... எங்கயோ பக்கத்துலதான் போயிருப்பான்.. போன் போட்டாலும் ஸ்விட்ச் ஆப் னு வருது.. அதான் தேடி கிட்டிருக்கோம்...சீக்கிரம் வந்திடுவான் “ என்றான் இறங்கிய குரலில் தயக்கத்துடன்...

அதை கேட்டு மற்ற இருவரும் அதிர்ந்தனர்... சுகந்தியின் அப்பாதான் முதலில் சுதாரித்து கொண்டு

“என்ன தம்பி சொல்றீங்க?? மாப்பிள்ளையை காணோமா?? “ என்றார் மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொள்ள....

“ஆமாம் சார்... ஆனா இங்கதான் இருப்பான்... கண்டுபிடிச்சிடலாம்.. “ என்று நிகிலன் மென்று முழுங்க, அதற்குள் அவன் கையில் இருந்த பேப்பரை பிடுங்கியவர் அதை படித்து பார்த்த பின்

“ஹ்ம்ம்ம்ம் அதான் தெளிவா எழுதியிருக்கானே.. இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு.. அப்புறம் எங்க இருந்து தேடி கண்டுபிடிப்பீங்களாம் ?? அப்படியே கண்டுபிடிச்சாலும் எங்க பொண்ண வேண்டாம்னு விட்டுட்டு ஓடிப்போனவனை வற்புறுத்தி கட்டி வச்சாலும் அவன் எங்க பொண்ணை சந்தோசமா வச்சுப்பானு எப்படி சொல்லமுடியும்?? “ என்றார் சற்று கோபத்துடன் மரியாதை எல்லாம் மறந்து...

“அப்படீனா என்ன சார் செய்யறது?? பேசாம அவன் சொன்ன மாதிரி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்... “ என்றான் நிகிலன் தயக்கத்துடன்...

அதை கேட்டு மற்ற மூவரும் மேலும் அதிர்ந்தனர்...

சிவகாமிக்கோ தான் பார்த்து தனக்கு மருமகளாக வர வேண்டும் என்று ஆசைபட்ட பொண்ணு கை நழுவி போகுதே என்ற வருத்தம் இருக்க, சண்முகத்திற்கோ அந்த ஜோசியர் சொன்ன மாதிரி இந்த ஒரு மாதத்திற்குள் கல்யாணம் நடக்கவில்லையென்றால் அதன் பிறகு அவளுக்கு திருமணமே ஆகாதே..

அதுக்கு உதாரணமாக இப்ப மணமேடை வரை வந்து இந்த கல்யாணம் நிக்க போகுதே....இனிமேல் யார் என் பொண்ணை கட்ட முன் வருவா??... அப்படியும் எப்படி இன்னும் ஒரு வாரத்துக்குள் வேற மாப்பிள்ளையை தேடி பிடிப்பது?? “ என்று உள்ளுக்குள் அதிர்ந்து போனார்..

சுந்தரி அப்பா தான் அதை கேட்டு கோபமாகி

“என்ன தம்பி சொல்றீங்க... கல்யாணத்தை நிறுத்திடுங்கனு அவ்வளவு ஈசியா சொல்றீங்க?? இது ஒரு பொண்ணோட வாழ்க்கை பிரச்சனை... நீங்க உங்க தம்பிக்கு அடுத்த முகூர்த்தத்துல கூட வேற பொண்ணை தேடி கல்யாணம் பண்ணி வைக்கலாம்...

ஆனா மணமேடை வரைக்கும் வந்திட்டு அதுவும் மணமேடையில் உட்கார்து மணப் பெண்ணிற்கான சடங்கெல்லாம் முடிந்த பிறகு அந்த கல்யாணம் நின்னு போனா, பின்னாடி எங்க பொண்ணுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்??...

பின்னாடி கட்டிக்க வர்றவங்களுக்கு இதுவே உறுத்தலா இருக்காது??.. என்னதான் உங்க பையன் தான் ஓடிப்போனாலும் பழி வந்து சேரது எங்க பொண்ணுக்குத்தான்....

அதனால இந்த கல்யாணம் எப்படியாவது நடக்கணும்.. “என்றார் கரார் குரலில் கொஞ்சம் கோபமாக...

அதை கேட்டு நிகிலனுக்கும் கோபம் வந்தது...

“மாப்பிள்ளையே இல்லாமல் கல்யாணம் நடக்கனும்னா எப்படி சார்??.. என்ன உளறிகிட்டிருக்கீங்க.. “என்றான் கோபமாக....

அவனின் கோபத்தை கண்ட சிவகாமி மெல்ல நிமிர்ந்து அவன் கையை பிடித்து கண்ணால் ஜாடை காட்டி அவன் கோபத்தை தணித்தார்...பின் அவர்களை பார்த்து

“நீங்க சொல்றதும் வாஸ்தவம் தாங்க.... இந்த பய இப்படி பண்ணுவானு தெரியாது.. இவன் கிட்ட கேட்டு கேட்டுத்தான் எல்லா ஏற்பாடும் பண்ணியது.. இப்படி கடைசி நேரத்துல கழுத்தை அறுப்பானு நினைச்சு கூட பார்க்கலை...

மது கல்யாணம் நிக்க கூடாது... உங்க சொந்தத்துல யாராவது தெரிஞ்ச பையன் இருந்தா அவங்க கிட்ட பேசி பாருங்களேன்...” என்றார் வருத்தமாக

“ஹ்ம்ம்ம்ம் அப்படி சொந்தத்துல யாராவது இருந்தால் நான் ஏன் மா உங்க வீட்டுக்கு வர்ரேன்... அப்படி யாரும் இல்லை.. எல்லாம் என் பொண்ணை விட சின்ன வயது பசங்கதான் நிறைய இருக்காங்க.. “என்றார் அதுவரை அமைதியாக உள்ளுக்குள் புலம்பி கொண்டிருந்த சண்முகம்....

“அப்படீனா மண்டபத்துல வேற யாராவது தெரிஞ்ச பசங்க மதுவை கல்யாணம் பண்ணிக்க முன் வந்தா அவங்களுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுங்களேன்... நாங்களும் எடுத்து சொல்றோம்..எங்களால் முடிந்த உதவி செய்யறோம்... --. “என்றார் சிவகாமி இயலாமையுடன்...


தை கேட்டு இன்னும் கோபமானார் சுகந்தியின் தந்தை..

“என்ன பேசறீங்க மா?? அது எப்படி முன்ன பின்ன தெரியாத ஒருத்தங்களுக்கு உடனே எங்க பொண்ணை பிடிச்சு கொடுக்கறதாம்?? முதல்ல யார் இப்படி திடீர் கல்யாணத்துக்கு ஒத்துக்குவா?? அப்படியே ஒத்துகிட்டாலும் அந்த பையன், அவன் குடும்பம் எல்லாம் நல்லவங்களானு எப்படி தெரியும்??

நல்லா விசாரிச்சு முடிவு பண்ணின உங்க பையனே தாலி கட்ட முன்னாடியே விட்டுட்டு ஓடி போய்ட்டான்.. இதுல தெரியாத யாரோ ஒருத்தருக்கு எப்படி நம்பி எங்க பொண்ணை கொடுக்கறதாம்?? அதெல்லாம் நடக்கற கதையில்லை.. “ என்றார் கோபமாக...

“அப்படீனா நீங்களே ஒரு வழி சொல்லுங்க.. அடுத்து என்ன செய்யலாம் னு.. எங்களால முடிஞ்ச வரைக்கும் நாங்க துணையா இருக்கோம்.. எங்களால உங்க பொண்ணு கல்யாணம் நிக்க வேண்டாம்... “ என்றான் நிகிலன் கொஞ்சம் இறங்கி வந்து...

அதை கேட்டதும் அவரின் மூளையில் மின்னல் வெட்டியது... சண்முகத்தை

“ஒரு நிமிசம் வெளில வாங்க.. “ என்று கூறி அவரை வெளியில் அழைத்து சென்று ஏதோ கூற சண்முகத்தின் முகம் பிரகாசமானது....

அவரும் சரியென்று தலையாட்ட, மீண்டும் இருவரும் அறைக்கு உள்ளே வந்தனர்...

சுகந்தியின் தந்தை நிகிலன் சிவகாமி இருவரையும் ஒரு முறை பார்த்து விட்டு

“இந்த கல்யாணம் நிக்காமல் நடக்கனும்னா, கையில வெண்ணெய் ஐ வச்சுகிட்டு நெய்க்கு அலைந்த மாதிரி , வேற யாரையோ தேடறதுக்கு பதிலா, பெரிய மாப்பிள்ளயே எங்க பொண்ணை ஏத்துக்கட்டும்....

தம்பி ஓடிப்போனதுக்கு பிராயச்சித்தம் பண்ணின மாதிரியும் இருக்கும்.. அதோட நாங்க முன்னாடியே பெரிய மாப்பிள்ளையை பற்றியும் விசாரிச்சிட்டோம்..

அதுவும் இல்லாமல் பொண்ணு பார்க்க வந்தப்போ இவரைத்தான் முதல்ல மாப்பிள்ளைனு எல்லாரும் நினைச்சுட்டோம்.. அந்த முருகனே இவர்தான் மாப்பிள்ளையாகணும் னு எழுதி வச்சுட்டானோ என்னவோ.. அதனாலதான் அன்று கூட இவர் முன்னாடி வரும்படி ஆயிற்று...

அதனால தம்பி... நீங்க தான் பெரிய மனசு பண்ணி எங்க பொண்ணு கல்யாணம் நிக்காமல் பார்த்துக்கணும்.. “என்று அவன் கைகளை பிடித்து கொண்டார்.....

“ஆமாம் மாப்பிள்ளை.... அவர் சொல்றது தான் சரி.. எப்படியாவது எங்க பொண்ணுக்கு வாழ்வு கொடுங்க...இப்ப அவ கல்யாணம் நின்னா எப்பவுமே நடக்காது னு ஜோசியர் ஏற்கனவே சொல்லியிருக்கார்...

அதனால இந்த கல்யாணம் எப்படியும் நடக்கணும்.... நீங்க தான் மனசு வச்சு இந்த கல்யாணம் நிக்காமல் தடுக்கணும்... “என்று சண்முகமும் முன்னே வந்து அவன் கையை பிடித்து கொண்டார்....

அதை கேட்டதும் சிவகாமியும் நிகிலனும் அதிர்ந்து போயினர்...

“அதெல்லாம் முடியாது சார்... எனக்கு கல்யாணத்துல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை.. எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் எதுவும் இல்லை....”என்று மறுத்தான் நிகிலன்...

“இருக்கட்டும் மாப்பிள்ளை.. இப்ப அப்படிதான் இருக்கும்.. எத்தனை பேர் கல்யாணம் வேண்டாம் னு இருந்தவங்க கல்யாணம் ஆனதும் மனசு மாறி ஒன்னா சந்தோசமா வாழறாங்க... அதனால நீங்க உங்க பிடிவாதத்தை கொஞ்சம் விட்டு இறங்கி வரணும்..

உங்களுக்கும் ஒரு தங்கச்சி இருக்கா.. நாளைக்கு அவளுக்கும் இது மாதிரி ஒரு நிலை வந்தா ஒரு அண்ணனா உங்க மனசு எவ்வளவு பதை பதைக்கும்..

அதே நிலையில் தான் நாங்க இருக்கோம்... தயவு செய்து எதுவும் யோசிக்காம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கங்க... “ என்றார் சுகந்தியின் தந்தை...

அதை கேட்டதும் அதுவும் பெண் விட்டார் இவ்வளவு தூரம் கெஞ்சி கேட்க சிவகாமி அவசரமாக எதையோ யோசித்தார்...

ஏதோ முடிவு பண்ணியவராக,

“நீங்க கொஞ்சம் நேரம் வெளில இருங்க.. என் பையன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பான்.. அவனை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு... “ என்க அவர்களும் கொஞ்சம் நிம்மதியுடன் வெளியேறினர்....

நிகிலனோ தன் அன்னையிடம் திரும்பியவன் எரித்து விடும் பார்வை பார்த்து

“என்னமா உளறீங்க.. நான்தான் எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிகிட்டிருக்கேன்... நீங்க பாட்டுக்கு அவங்ககிட்ட் சம்மதம் னு சொல்றீங்க..” என்று எரிந்து விழுந்தான்...

“பெரியவா.... பார்த்த இல்ல அவங்க எப்படி கெஞ்சறாங்கனு.. அதோட நம்ம வீட்லயும் ஒரு பொண்ணு இருக்குடா... இப்ப இந்த பொண்ணோட கல்யாணம் நிக்க நாம காரணமாயிட்டா, அதோட சாபம், வயிறு எரிச்சல் நம்ம குடும்பத்தை தான் பாதிக்கும்... அந்த பாவம் நமக்கு வேண்டாம்....

அந்த பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்தவாவது நீ தாலி கட்டுடா.. “ என்றார் சிவகாமி கெஞ்சலுடன்...

“அவங்கதான் ஏதோ தெரியாம முட்டாள் தனமா உளறாங்கனா நீங்களும் ஏம்மா அதயே புடிச்சிக்கிறீங்க.. இந்த கல்யாணம் நின்னா இன்னொரு நாள் கல்யாணம் பண்ணிட்டு போறாங்க.. அது ஏன் இன்னைக்கே கல்யாணம் நடக்கனும் னு பிடிவாதமா இருக்கறாங்க.. “ என்றான் எரிச்சலாக....

“ஹ்ம்ம்ம் நீ நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுலபமில்லை நிகிலா... என்னதான் நவீன காலமாக மாறியிருந்தாலும் இன்னும் நிறைய பேர் இந்த மதிரி சென்டிமென்ட் பார்க்கிறவங்கதான் அதிகம்...

ஒரு பொண்ணுக்கு மேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னு போனா அவ்வளவு சுலபத்துல திரும்பவும் கல்யாணம் கூடி வராது.. நானும் கண் கூட நிறைய பேர பார்த்திருக்கேன்...

அதோட ஊர்ல இருந்து எல்லாம் நம்ம சொந்தக்காரங்க வந்திருக்காங்க.. அவங்க கிட்டப் போய் நம்ம பையன் ஓடி போய்ட்டான்.. இந்த கல்யாணம் நின்னு போச்சுனா அது நமக்கு தான் அவமானம்...

அதோட உன் அப்பா இருந்தா இப்படி ஆயிருக்குமா?? பொட்டச்சி வளர்த்த பசங்க இப்படி தப்பாயிடடங்கனு என்னைதான் குத்தம் சொல்லுவாங்க...

அது கூட பரவாயில்லை.. என்னை தான திட்டுவாங்க..திட்டிட்டு போகட்டும் ஆனால் உங்கப்பாவுக்கு ஒரு கெட்ட பேர் வந்திடக்கூடது பெரியவா...அவர் இருந்தவரைக்கும் எல்லாருக்கும் நல்லது தான் செய்தார்..

அவர் பையன் இந்த மாதிரி ஒரு கல்யாணத்தை நிறுத்திட்டானு அவ பெயர் நமக்கு வேண்டாம்.. “ என்றார் கண்ணில் நீர் மல்க....

அவர் கண்ணில் நீரையும் முகத்தில் வேதனையும் கண்டவன் மீண்டும் ஒரு முறை தன் தம்பியை அர்ச்சனை பண்ணியவன்

“மா... நீங்க எதுக்கு அழுவறீங்க..அழாதிங்க... ”என்று அவர் கண்ணை துடைத்தவன் சிறிது நேரம் ஏதோ யோசித்தான்.. பின் தன் அன்னையை பார்த்து

“சரி மா... நீங்க சொல்ற மாதிரியே செஞ்சாலும் எனக்கும் அந்த பொண்ணுக்கும் எப்படி மா பொருந்தும்?? எனக்கும் அந்த பொண்ணுக்கும் வயது வித்தியாசம் ரொம்பவே... அதெல்லாம் செட் ஆகாது.. “ என்று தன் ஆயுதத்தை பயன்படுத்தினான் இதிலிருந்து தப்பித்துக் கொள்ள..

“பெரியவா... வயது வித்தியாசம் தான் உன் பிரச்சனையா.. அப்படி பார்த்தால் எனக்கும் உங்கப்பாவுக்கும் எத்தன வருசம் வித்தியாசம் தெரியுமா?? எனக்கு கல்யாணம் ஆகிறப்போ வயது 17... உங்கப்பாவுக்கு 29 ஓ 30 ஓ.. அவ்வளவு வயது வித்தியாசம் னு எல்லாம் நாங்க பார்க்கலை..

நாங்க சந்தோசமா குடும்பம் நடத்தி மூனு புள்ளைங்களை பெத்துக்களையா??... உங்கப்பா என் மேல உயிரா இருந்தார்... “ என்று மீண்டும் கண் கலங்கியவர், அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை ப்பா... நீ சரினு சொல்.. “ என்று அவன் வீசிய ஆயுதத்தை எதிர் கொண்டார் சிவகாமி...

“மா.. நீங்க என்னதான் சொன்னாலும் ... “ என்று ஏதோ சொல்ல வர அதற்குள் அறை கதவை தட்டிவிட்டு ஆதியும் பாரதியும் உள்ளே வந்தனர்...

மாப்பிள்ளையை கூட்டி வர என்று உள்ளே வந்த சிவகாமியும் நிகிலனும் இன்னும் திரும்பாததை கண்டு ஏதோ பிரச்சனை என தோன்ற, ஆதியை அழைத்துக் கொண்டு மணமகன் அறைக்கு வந்திருந்தாள் பாரதி...

உள்ளே வந்ததும்,

“என்னாச்சு அத்தை... மகிழன் எங்க? “ என்றாள் தயக்கத்துடன்...

சிவகாமி அவர்களிடம் நடந்ததை சொல்லி இப்பொழுது பெண் வீட்டார் நிகிலனை மாப்பிள்ளையாக சொல்வதையும் சொல்லி

“பாரதி.. நீயாவது அவனுக்கு எடுத்து சொல்லேன்...கல்யாணம் வேண்டாம்னு பிடிவாதமாகவே இருக்கான்... “ என்றார் கவலையுடன்...

“மாம்ஸ்... அத்தை தான் இவ்வளவு தூரம் கெஞ்சி கேட்கறாங்க இல்லை.. இன்னும் எதுக்கு யோசிக்கிறீங்க.. அந்த பொண்ணும் பார்க்க வெகுளியா இலட்சணமா இருக்கா... இந்த மாதிரி பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்.. அதனால யோசிக்காம ஓகே சொல்லுங்க.. “என்றாள்...

“வயசு வித்தியாசம் அதிகம் னு யோசிக்கறான் பாரதி.. “ என்றார் சிவகாமி...

நிகிலன் அவரை முறைத்து பார்க்க

“என்ன மாம்ஸ்.. இதெல்லாம் ஒரு மேட்டரா??... எனக்கும் என் புருசனுக்கும் கூடத்தான் 8 வயசு வித்தியாசம்...நாங்க இப்ப சந்தோசமா குடும்பம் நடத்தல.. மது என்னை விட இரண்டு வயது சின்னவ...

என்ன சரியா சாப்பிடாம உடம்பு கொஞ்சம் ஒல்லியா இருக்கா... எல்லாம் கல்யாணம் ஆகி நம்ம வீட்டுக்கு வந்தா, சிவா அத்தை கவனிக்கற கவனிப்புல சீக்கிரம் அத்தை மாதிரி ஆயிடுவா.. இதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதிங்க...” என்று சிரித்தாள் அந்த சூழ்நிலையை இலகுவாக்க...

“பொண்ணு வீட்டுக்காரங்க சொல்ற மாதிரி இது ஒரு பொண்ணோட வாழ்க்கை... உங்க பிடிவாதத்தை தள்ளி வச்சுட்டு நிக்க இருக்கிற இந்த கல்யாணத்தை நடத்துங்க மாம்ஸ்... எல்லாம் நல்லதுக்குத்தான்... அந்த முருகன் இருக்கான் எல்லாம் பார்த்துக்க " என்றாள்

ஆதியும் நிகிலனுக்கு எடுத்து சொல்ல, அவனுக்கோ என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது.. அதை விட இவர்களை எப்படி சமாளிப்பது என்றுதான் யோசித்து கொண்டிருந்தான்...

சிறிது நேரம் யோசிக்கவும் ஒரு வழி கிடைத்தது.. உடனே மூளையில் மின்னல் வெட்ட , நிமிர்ந்து அனைவரையும் பார்த்து

"சரி மா...நீங்க எல்லாம் சொல்றதுக்காக நான் சம்மதிக்கறேன்.. ஆனா அந்த பொண்ணுகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுடுங்க.. அந்த பொண்ணுக்கு பிடிச்சா மட்டும்தான் இந்த கல்யாணம்.. அந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டா அப்படியே விட்டுடனும்.. அதுக்கு மேல பேசக்கூடாது.. " என்றான் இன்னும் தன் அன்னையை முறைத்தவாறு...

“எப்படியும் அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்காது... என் தம்பியைத் தானே தன் வருங்கால கணவனாக நினைத்திருப்பாள்... அதுவும் மகிழனுக்கு நிச்சயம் ஆனபிறகு சில நேரம் இரவு தாமதமாக வந்த நாட்களில் பால்கனிக்கு செல்ல, அங்கு மகிழன் அந்த லேட் நைட்டில் யாருடனோ சிரித்து பேசி கொண்டிருந்தான் ...

யாரென்று சந்தேகமாக பார்க்க, மது என்று ஜாடை காண்பித்து தன் பேச்சை தொடர்ந்திருக்கான்... அப்படி இருவரும் மனம் விரும்பி பேசியிருக்க, அவன் ஓடி போய்ட்டான் என்ற உடனே எந்த பெண்ணிற்கும் உடனே தன் மனதை அழித்துவிட்டு அடுத்தவனை ஏற்று கொள்ள முடியாது..

எப்படியும் இந்த திருமணத்தை மறுத்து விடுவாள்.. தானும் தப்பித்துக் கொள்ளலாம்.. "என்று எண்ணியே தன் காயை நகர்த்தினான்...

நிகிலன் சம்மதம் என்று சொன்னதை கேட்டதும் சிவகாமியின் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது....

“ ரொம்ப தேங்க்ஸ் பா... போக இருந்த நம்ம குடும்ப மானத்தை நீ காப்பாத்திட்ட.." என்று உணர்ச்சி பொங்க கூற, பாரதி அவரை சமாதான படுத்தினாள்.. பின் நிகிலனிடம்

“சூப்பர் மாம்ஸ்.. கலக்கிட்டீங்க... “ என்று கைகுலுக்கி நானே போய் பெண் வீட்டாரிடம் பேசிட்டு வர்ரேன்.. நீங்க இருங்க.. " என்று மணமகள் அறையை நோக்கி சென்றாள் பாரதி...



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!