காதோடுதான் நான் பாடுவேன்-1



அத்தியாயம்-1 

மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா….


என்று அந்த வீட்டின் முன்னே மைக் செட் அலறியிருக்கும் அந்த காலமாக இருந்திருந்தால்...

மைக் செட் மட்டுமா?? திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே பந்தகால் நடும் விழா னு ஊரே திரண்டு திருமண வீட்டிற்கு வந்து அங்காளி பங்காளிகள் எல்லாம் ஒருவரை ஒருவர் கலாய்த்துகொண்டு ப்ரெஸ்ஸாக வெட்டிய தென்னை மட்டையில் கீத்து முடைந்து வீட்டின் முன்னே ஒரு பெரிய பந்தலை போட்டிருப்பர்....

அதற்கு முத்தாய்ப்பாக அந்த கல்யாண வீட்டு பந்தலை சுற்றி சீரியல் பல்புகள் எரிய பந்தலின் நுழை வாயிலில் “நல்வரவு” என்று பெயர் பலகை அழகான வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து அனைவரையும் வரவேற்று கொண்டிருக்கும்...

அதோடு வாயிலின் இரண்டு பக்கமும் வாழை மரங்கள் கம்பீரமாக நின்றிருக்க, பந்தலில் வேப்பிலை மாவிலை தோரணம் கட்டி யாராவது புதியவர்கள் பார்த்தாலே இது கல்யாண வீடு என்று தெரியுமாறு இருந்திருக்கும் முன்பு...

பெண்களும் ஒருவருக்கொருவர் சீண்டி பேசி அந்த கல்யாண வீடே கலகலப்பாக அந்த நாள் மட்டும் இல்லாமல் கிட்ட தட்ட ஒரு வாரமே கல்யாண கலையும் கலகலப்பு நிறைந்து இருக்கும் திருமண வீட்டில்...

இன்றைய அவசர கால கட்டத்தில் அதெல்லாம் மிஸ்ஸிங்.. எல்லாத்துக்கும் அவசர படும் தலைமுறை இன்றைய தலைமுறை..

அதனால் தான் கோவிலில் சாமியை அவசரமாக தரிசிக்க சிறப்பு வழி, ட்ரெயினில் அவசரமாக டிக்கட் புக் பண்ண தட்கால் முறை என்று எல்லாத்துலயும் அவசர முறைகளை கொண்டு வந்து விட்டனர் இன்றைய தலைமுறையினர்...

எந்த விசேஷம் ஆனாலும் உறவினர்கள் கூடி நின்று பந்தல் போடும் வழக்கம் மறைந்து இப்பொழுது ரெடிமேடாக இருக்கும் சாமியானா பந்தலாக மாறிவிட்டது....

அதுமட்டுமா?? உண்ணும் உணவில் கூட அவசரத்தை கொண்டு வந்து விட்டனர்.. இரண்டு மணிநேரம் சமையல் அறையில் போராடி தன் அன்பையும் பாசத்தையும் கொட்டி விதவிதமாக சமைத்து தன் குடுப்பத்தாருக்கு பரிமாறி அதில் வயிறும் மனமும் நிறைந்து பூரித்து நிக்கும் வீட்டு அம்மாக்களின் நிலைமாறி,

பசிக்கிறதா?? உடனே செருப்பை மாட்டி கொண்டு தெருக்கோடிக்கு நடந்தால் பல ஃபாஸ்ட் புட் கடைகள் அவர்களை வரவேற்கும்... அவர்களின் அவசரத்திற்கு அவர்களும் அவசரமாக அந்த உணவை சரியாக வெந்தும் வேகாமலும் எடுத்து கொடுக்க அதையும் அவசரமாக நின்று கொண்டே வயிற்றுக்குள் கடனே என்று தள்ளும் நிலைதான்...

சமீபத்தில் அதையும் தாண்டி தெருக்கோடி வரைக்கும் நாம எதுக்கு நடக்கணும்?? அவர்களே நம்மளை தேடி வரட்டும் என்று வெளியில் நடக்க கூட அவசியமில்லாமல் மக்களை சோம்பேறிகளாக்கி பல புட் டெலிவரி ஆப் வந்துவிட இந்த அவசரகாரர்களுக்கு இன்னும் வசதியாகி விட்டது...

பசிக்கிறதா?? விதவிதமா சாப்பிட வேண்டுமா?? இரண்டு மணி நேரம் அடுப்படியில் போராட வேண்டாம்... நம்முடன் எப்பவுமே ஒட்டி கொண்டிருக்கும் உடன் பிறவா சகோதரி/சகோதரனான அந்த அலைபேசியை எடுத்து அதில் இருக்கும் விதவிதமான ஆப் களில் எதில் அதிக டிஸ்கவுண்ட் தர்ரான் என்று ஒரு அவசர ஆராய்ச்சி பண்ணி உடனேயே தனக்கு வேண்டியதை ஆர்டர் பண்ண, அடுத்த பத்தாவது நிமிடம் அத்தனையும் அவர்கள் வீட்டின் டைனிங் டேபிலில் அமர்ந்து இருக்கும்...

அதோடு முன்பு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களின் முதல் கவலை டிபன் பாக்ஷ் கொடுப்பதே.. என்ன செய்வது என்று இரவே தீர்மானித்து அதுக்கு எல்லாம் இரவே தயாராக ரெடி பண்ணி காலையில் எழுந்து பள்ளி வேன் வருமுன்னே டிபன் பாக்சையும் ரெடி பண்ணி பிள்ளைகளையும் ரெடி பண்ணி வேனில் கொண்டு தள்ளிய பிறகே மூச்சு விட முடியும்...

இப்பொழுது அதுக்கும் விடிவு காலமாக, பள்ளி குழந்தைகளுக்கு டிபன் பாக்ஷ் ஐ அவர்கள் வகுப்பறைக்கே சென்று கொடுப்பதற்கென்றே பல ஆப் கள் (App) வந்துவிட்டன... ஒரு 10 மணிக்கு அலைபேசியை எடுத்து தன் குழந்தைக்கு என்ன வேணுமோ, அதை ஆர்டர் பண்ணி விட்டால் போதும்.. பள்ளியை தேடி அவர்கள் வகுப்பறையில் சுடச்சுட உணவு டெலிவரி செய்யபடும் நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள் இன்றைய தலைமுறையினர்...

இப்படி எல்லாமே அவசரமாக சுருங்கிவிட்ட நிலையில் திருமணத்தை மட்டுமா விட்டு வைக்க போகிறார்கள்?? ... 7 நாள் கல்யாணம் மூன்று நாளாக சுறுங்கி இப்பொழுது அதுவும் அரை நாள் கல்யாணம் ஆக மாறிவிட்டது.. பாதி பேருக்கு பக்கத்து வீட்டில் கல்யாணம் என்பதே அறிந்திருக்க மாட்டார்கள்..

காலையில் ஒரு கோவிலிலோ இல்லை கோவிலில் பண்ணினால் அதை ரெஜிஸ்டர் பண்ண வேறு அலையணும் என்று நேரடியாக ரெஜிஸ்டர் ஆபிஸ்லயே திருமணத்தை அவசரமாக முடித்து மதியம் ஒரு ஹோட்டலில் வரவேற்பை முடித்து தங்கள் மணவாழ்க்கையையும் அவசரமாக ஆரம்பித்து விடுகின்றனர்.. அதனால் தான் என்னவோ அந்த திருமணமும் அவசரமாக முடிந்து விடுகிறது சில நேரங்களில்....

இப்படி பட்ட அவசர உலகத்தில் கொஞ்சமே கொஞ்சம் விதிவிலக்காக இருந்தது அந்த திருமண வீடு... வீட்டின் முன்னே கொஞ்சம் பெரியதாக மாக்கோலம் இட்டு வீட்டின் வாயிலில் பெயருக்காக சோம்பியிருந்த இரண்டு வாழை மரங்களை கட்டி இருக்க மாவிலை தோரணும் கடனே என்று தொங்கி கொண்டிருக்க, வீட்டின் அருகில் இருந்த மணமக்களின் வரவேற்பு பெயர் பலகையையும் என்ன காரணத்தாலோ அவசரமாக அகற்றி இருந்தனர் சற்று முன்னால்...

அப்பொழுது தான் அங்கு வந்திருந்த பூக்களால் அலங்கரிக்க பட்டிருந்த அந்த கார் அது மணமக்கள் அந்த வீட்டிற்கு வந்துவிட்டதை உணர்த்த அதில் இருந்த மணமக்களும் காரிலிருந்து கீழ இறங்கி வீட்டின் உள்ளே சென்றனர்...

வீட்டின் வாயிலை அடைந்ததும்

“வலது காலை எடுத்து வைத்து உள்ள வாம்மா “ என்றார் ஒரு நடுத்தர வயது பெண்மணி...

“அப்படியே வரும்பொழுது இந்த நிலை வாசலில் இருக்கும் இந்த அரிசி படியையும் தட்டி விட்டுட்டு வாம்மா... “ என்று இன்ஸ்ட்ரக்சன்ஸ் ( instructions ) கொடுத்து கொண்டிருந்தார்...

அவர் சொன்னபடியே அந்த வீட்டின் நிலை வாசலில் இருந்த அரிசி படியை தட்டிவிட்டு தன் வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டின் உள்ளே வந்தாள் மணக்கோலத்தில் நின்றிருந்த மதுவந்தினி....

மதுவந்தினி – பெயருக்கேற்ற மாதிரி மிகவும் இனிமையானவள்.. இனிமையோடு மென்மையும் இணைந்தவள்.. யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டாள்... தன் பெற்றோருக்கு ஒரே பெண்ணாய் நின்று விட்டதால், அவள் பெற்றோர் அவள் மீது தங்கள் பாசத்தை கொட்டி அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துகொண்டதாலோ என்னவோ அவளும் மனதில் சிறு பிள்ளையாகவே வளர்ந்து விட்டாள்..

யாராவது வெள்ளை காக்கா பறந்துச்சு னு சொன்னால் அப்படியே நம்பும் வெகுளித்தனமானவள்... 21 வயது முடியும் தருவாயில் நிற்பவள்..

மனதில் குழந்தைதனமாக இருந்தாலும் தோற்றத்தில் அந்த வயதிற்கே உரிய அழகும், மெல்லிய இடையும், அடர்ந்து நீண்டு இடைக்கு கீழ தொங்கும் ஜடையும், குண்டு கன்னமும், உதட்டில் எப்பொழுதும் மிளிரும் குழந்தைதனமான சிரிப்பும், சிரிக்கும் பொழுது கன்னத்தில் விழும் அவள் குழியும் என்று பெண்களுக்கே உரித்தான அத்தனை அம்சங்களும் நிறைந்தவள்...

சென்னையில் புகழ் பெற்ற மகளிர் கலைக்கல்லூரியில் B.A History பயின்று வந்தவள் சென்ற மாதம் தான் தேர்வுகள் முடிவு பெற்றன..

மூன்று நாட்கள் முன்பு வரை குட்டை பாவாடையும் சட்டையும் போட்டு கொண்டு அவள் தெருவில் இருக்கும் எல்லா குட்டீஸ்களுடன் ஓடி பிடித்து கண்ணாமூச்சி விளையாண்டு கொண்டிருந்தவளுக்கு அவள் மேனியின் எடையை விட கனமான அந்த பட்டுபுடவைய சுற்றி, அதை விட கனமான அந்த தாலி கயிற்றையும் கட்டி அவளை மணமகளாக்கி இந்த வீட்டின் பொறுப்புகளை சுமக்கும் மூத்த மருமகளாக்கி, சம்சார கடலில் தள்ளி விட்டிருந்தனர் அவளை சுற்றி இருந்தவர்கள்..

இல்லை.. அவர்களை அந்த மாதிரி தள்ள வைத்து இருந்தான் அந்த சிங்காரவேலன்....

மற்றவர்கள் தன்னை ஆட்டி வைப்பதை எதிர்க்கும் தைரியம் இல்லாமல் அந்த முருகன் விட்ட வழி என்று அப்பப்ப மனதுக்குள் தன்னை தேற்றி கொண்டாள் மதுவந்தினி ...

வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்கு உள்ளே வந்தவள் முகத்தில் மணப்பெண்ணிற்கான எந்த ஒரு சந்தோசமும் இல்லை.. மாறாக அவள் முகம் துடைத்து வைத்த வெண்கலத்தை போல வெளிறி எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது...

அவளை தொடர்ந்து அவள் அருகில் ஆறடிக்கும் மேலான உயரத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் மணக்கோலத்தில் கம்பீரமாக நின்றிருந்த நிகிலனும் எதேச்சையாக வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றான்... அவன் முகமும் இறுகி தாடைகள் விறைத்து மார்ச்பாஸில் நிற்பவனை போல விறைத்து கொண்டு நின்றிருந்தான்....

(நிகிலன் – நிறைய பேருக்கு நினைவு வந்திருக்கும்... என் மடியில் பூத்த மலரே கதையில் கேர் ஆப் தாய் மாமானு ஆதியால் அழைக்கப்பட்ட , ஆதி பாரதி திருமணத்தில் பாரதிக்கு தாய்மாமா வாக நின்ற அதே நிகிலன்தான் இந்த கதையின் நாயகன்...

அந்த வீடே திருமண கலை கட்டியிருந்தது.. ஆனால் அங்கு இருந்தவர்கள் முகத்தில் அதை துளியும் காணவில்லை.. எல்லார் முகத்திலும் ஒரு சோகம் இழையோடி இருந்தது.. தங்கள் முகத்தில் முயன்று மகிழ்ச்சியை வரவழைத்து இருந்தனர்...

மணமக்கள் இருவரும் உள்ளே வந்ததும் அந்த நடுத்தர வயது பெண்மணி அவர்களை பூஜை அறைக்கு அழைத்து சென்றார்.... பின் மதுவந்தினி யை விளக்கேற்றி வைக்க சொல்ல, இரண்டு நாள் முன்பு வரை தீப்பெட்டியை எப்படி பிடிப்பது?? அதை எப்படி உரசுவது என்று கூட தெரியாமல் இருந்தவள் மது..

அவள் அன்னை சாரதா தான் கடந்த இரண்டு நாளாக அவளுக்கு ட்யூசன் எடுத்து வந்தார்... விளக்கை எப்படி ஏற்றுவது?? என்று தான் கற்று கொண்ட பாடத்தின் பரிட்சை இன்று தான் என்பதை போல பயந்தாள் மது ...

பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள் ஒருவித டென்சனோடு இருப்பதை போல, மதுவும் டென்ஷனாகி அந்த தீப்பெட்டியை கையில் வாங்கினாள் சிறு நடுக்கத்துடன்...

இடது கை பழக்கம் உள்ள மது அந்த தீப்பெட்டியை வலது கையில் பிடித்து தீக்குச்சியை இடது கையில் பிடித்து உரச போக, அதற்குள் அருகில் நின்று கொண்டிருந்த மதுவின் அம்மா சாரதா உள்ளுக்குள் பதறினார்...

“இந்த மக்கு பொண்ணு முதல் அடியே தப்பா எடுத்து வைக்க போறாளே...எத்தனை தரம் சொன்னேன்.. விளக்கை இடது கையில் ஏற்றக்கூடாது வலது கையில்தான் ஏற்றவேண்டும் என்று..

அப்ப தலைய தலைய ஆட்டிட்டு இப்ப அப்படியே இடது கையில் ஏத்தறாளே.. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க?? “ என்று பதற, அதற்குள் தன் அன்னை சொல்லி கொடுத்த பாடத்தை நினைவுக்கு கொண்டு வந்தவள் அவசரமாக அந்த தீப்பெட்டியை இடது கைக்கும் அந்த குச்சியை வலது கைக்கு மாற்றி கொண்டாள்....

அதை கண்டு சாரதாவும் நிம்மதி மூச்சு விட்டார்...

அடுத்த ஸ்டேஜாக இடது கையில் அந்த தீப்பெட்டியை பிடித்துக் கொண்டு அந்த தீக்குச்சியை எடுத்தவள் மீண்டும் ஒரு முறை அதை எப்படி உரசணும் என்று தன் பாடத்தை ரிவைண்ட் பண்ணியவள் அதுவும் முதல் உரசலிலயே பற்றி கொள்ளனும் என்று தன் அன்னை சொன்ன கண்டிசன் நினைவு வர, மனதுக்குள் பயந்து கொண்டே அந்த முருகனை அவசரமாக துணைக்கு அழைத்து, நடுங்கும் விரல்களுடன் பழக்கமேயில்லாத தன் வலது கையில் ரொம்ப கஷ்டபட்டு அதை உரச, அவளை ரொம்பவும் சோதிக்காமல் அந்த தீக்குச்சியும் முதல் உரசலிலயே பற்றி கொண்டது...

அதை கண்டதும் எல்லார் முகத்திலும் ஒரு நிம்மதி பரவியது..

அடுத்த ஸ்டேஜ் அந்த விளக்கை பற்ற வைப்பது... அதற்கும் ஒரு முறை தன் அம்மாவின் பாடத்தை மீண்டும் நினைத்து கொண்டு விளக்கில் இருந்த திரியின் நுனியை தன் பிஞ்சு கைகளால் திரித்து விட்டு மீண்டும் ஒரு பயத்துடன் அந்த குத்து விளக்கை ஏற்ற, அந்த வீட்டின் மருமகள் கை பட ரொம்ப நாளாக ஏங்கி கொண்டிருந்த அந்த விளக்கும் ஆனந்தத்தில் பிரகாசமாக எரிய அனைவர் முகத்திலும் அதுவரை இருந்த டென்ஷன் விலகி புன்னகை பிரசன்னமானது...

திருமணம் முடித்து வரும் ஒவ்வொரு மணப்பெண்ணிற்கும் முதல் சோதனை இந்த விளக்கேற்றுவது தான்... அதில் பாசாகணுமே என்று ஒரு பயம் + டென்சன் இருக்கும் எல்லா பெண்களுக்கும்..

இதில் தடுமாறினால் சுத்தி இருக்கிற பெருசுங்க எல்லாம் எதையாவது அபசகுணமா பேச ஆரம்பிச்சுடுவாங்க... அதற்கு பயந்து கொண்டே தன் மகளுக்கு விழுந்து விழுந்து ட்ரெயினிங்க் கொடுத்திருந்தார் சாரதா..

மதுவும் ஒரு வழியாக அந்த டெஸ்டில் பாசாகி விட அனைவரும் ஒரு நிம்மதி மூச்சு விட்டு சிரிக்க, அந்த பெண்மணியோ

“ஆஹா... மருமகள் ஏற்றி வச்ச விளக்கு சூப்பரா எரியுதே.. இனிமேல் இந்த வீட்டிற்கு நல்ல காலம் தான்.. “ என்று சிரித்தார்... பின் அருகில் இருந்த கற்பூர தட்டை எடுத்து அவர் கையில் வைத்து கொண்டு

“மருமகளே... உன் கையால இந்த கற்பூரத்தை பற்ற வைத்து அந்த முருகனுக்கு காட்டு மா.. “ என்று மதுவிற்கு அடுத்த பரிட்சை வைக்க

“ஐயயோ.. மறுபடியுமா?? “ என்று பயந்தவள் வேறு வழி இல்லாமல் மீண்டும் ஒரு முறை அந்த தீப்பெட்டியில் இருந்த தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்து அந்த தட்டில் இருந்த கற்பூரத்தை பற்ற வைக்க, அந்த பெண்மணியும் அந்த தட்டை மதுவின் கையில் கொடுக்க, அதில் எரிந்த தீயை கண்டு மிரண்டவள் நடுக்கத்துடன் அதை வாங்கி அந்த பூஜை அறையின் நடுவில் ராஜ அலங்காரத்தில் கம்பீரமாக வீற்றிருந்த அந்த வடிவேலனுக்கு காட்ட , அவனோ இவளை பார்த்து

“உன்னை எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தியா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...

அவனின் குறும்பு சிரிப்பை கண்டு எப்பவும் மயங்கி நிக்கும் மது இன்று அவன் மேல் இருக்கும் கோபத்தால் அவனை முறைத்து

“உன் கச்சி கா.. என்னை இப்படி மாட்ட வச்ச உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன்.. “ என்று தன் விரலை நீட்டி மனதுக்குள் அவனை மிரட்ட, அந்த வடிவேலனும் தன் பக்தையின் மிரட்டலை அசால்ட்டாக ஏற்று மீண்டும் குறும்பாக சிரித்தான்...

ஒரு வழியக அவள் சுற்றி முடித்து அந்த தட்டில் இருந்த திருநீற்றை எடுத்து தன் நெற்றியில் வைத்து கொண்டு, அருகில் நின்றிருந்த தன் இன்ஸ்ட்ரக்டரிடம் நீட்ட அந்த அம்மாவோ

“உன் புருஷனுக்கு முதல்ல கொடும்மா... “ என்றார்..

மூன்று மணி நேரம் முன்பு தன் கழுத்தில் தாலி கட்டி மூன்று முடிச்சிட்டு தன் கணவனாக பதவி ஏற்ற அந்த நெடியவன் முகத்தை கூட பாராமல் காலையில் இருந்தே தலையை குனிந்து கொண்டிருந்தவள் இப்பொழுதும் குனிந்தபடியே எதிரில் நின்று கொண்டிருந்தவனின் முன்னே தட்டை நீட்ட, அவனும் அவளை பார்த்து முறைத்தவாறு பல்லை கடித்து கொண்டு தன் நீண்ட கையை முன்னே நீட்டி தட்டில் இருந்த விபூதியை கொஞ்சமாக எடுத்து தன் பரந்த நெற்றியில் வைத்துக் கொண்டான்... 


குனிந்திருந்த மது பொண்ணுக்கு அவன் தன் முன்னே நீட்டிய கையில் தெரிந்த வலிமையும் அவன் உடலில் இருந்த இறுக்கம் கைகளிலும் பரவி இறுகி இருந்த கைகளை கண்டதும் அவன் முகத்தை பாராமலே அவன் எப்படி கோபமாக, எரிமலையாக இருக்கிறான் என்று புரிய அவள் வயிற்றில் கிலி பரவியது...

அவள் கைகள் தானாக நடுங்க ஆரம்பித்தன...அவளின் நடுக்கத்தை கண்ட அருகில் இருந்த அந்த பெண் அவசரமாக அந்த தட்டை வாங்கி கொண்டு

“இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் என்னத்தை சாப்பிடுதுகளோ?? .. ஒரு விபூதி தட்டை கூட பிடிக்க முடியல.. “ என்று சிரித்து கொண்டே மற்றவர்களுக்கு அந்த தட்டை நீட்ட மற்றவர்களும் சிரித்து கொண்டே அந்த வேலனின் திருநீற்றை எடுத்து தங்கள் நெற்றியில் வைத்து கொண்டனர்...

“அப்பாடா... “ என்று மது நிம்மதி மூச்சு விட்டாள்..

பிறகு இருவரையும் வரவேற்பறைக்கு அழைத்து சென்று சோபாவில் அமர வைக்க,

“இது என்ன அடுத்த சோதனை?? முருகா...ஆனாலும் நீ என்னை இப்படி மாட்டி விட்டு படுத்த கூடாது.. “ என்று மனதுக்குள் புலம்பியவாறு அந்த நெடியவன் ஏற்கனவே சென்று அந்த சோபாவில் அமர்ந்து இருக்க இவளோ அவன் அருகில் எப்படி அமருவது என்று தயங்கியபடி அருகில் செல்ல அதுக்கும் மற்றவர்கள் கேலி பேச மெல்ல நீண்ட இடைவெளி விட்டு அந்த சோபாவில் ஓரமாக அமர்ந்தாள் மது...

மற்றொரு பெண் இருவருக்கும் பாலும் பழமும் எடுத்து வர, நிகிலன் அதை வாங்கி வேகமாக குடித்து விட பின் மதுவிட நீட்டினர்... தன் முன்னே நீட்டிய பாலை கண்டதும் மனதுக்குள் அலறி அருகில் நின்று கொண்டிருந்த தன் அன்னையை பார்த்தாள் மது...

சாரதாவோ

“ஐயோ!! இந்த சம்பிரதாயத்தை எப்படி மறந்தேன்?? இவ வேற பால கண்டாலே சூடுபட்ட பூனை மாதிரி ஓடுவாளே.. முன்னாடியே தெரிந்திருந்தால் இதுக்கும் கொஞ்சமா ட்ரெயினிங் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க பழக்கியிருக்கலாம்.. இப்ப என்ன செய்ய?? “ என்று பதறியவாறு தன் மகளை காண அவளும் தன் அன்னையிடம் இது வேண்டாம் என்று கெஞ்சி கொண்டிருந்தாள்...

சாரதாவும் “எப்படியாவது பொறுத்துக்கோடா “ என்று கண்ணால் சமாதானம் செய்ய, மதுவோ அவரை முறைத்து கொண்டே அந்த பாலை வாங்கி கண்ணை இறுக்க மூடிகொண்டு மனதுக்குள் அந்த முருகனை திட்டிகொண்டே கடகடவென்று குடித்து முடித்தாள்..

சாரதாவுக்கு இப்பதான் நிம்மதியாக இருந்தது.. ஹ்ம்ம்ம்ம் இன்னும் என்னெல்லாம் பாக்கி இருக்கோ என்று அம்மாவும் பொண்ணும் பயந்தவாறே பதட்டத்துடன் இருந்தனர்..

நிகலனுக்கோ முள்ளின் மேல் நிற்பதை போல இருந்தது... இதெல்லாம் எப்ப முடியும்?? .. இந்த வேஷத்தை எல்லாம் கலைத்து விட்டு எங்காவது ஓடி விட வேண்டும் போல இருந்தது.... இருந்தாலும் பல்லை கடித்து கொண்டு பொறுத்து கொண்டிருந்தான் தன் அன்னைக்காக....

அந்த பெண்மணி மணமக்களின் மனஓட்டத்தை அறியாமல் அவர் தன் கடமையை செய்து கொண்டிருந்தார்... அடுத்து பழத்தை எடுத்து

“நிகிலா... இந்த பழத்தை அப்படியே மருமகளுக்கு கொடுப்பா.. “ என்றார்.. அதை கேட்டவன் இதுவரை இழுத்து பிடித்த பொறுமை காற்றில் பறக்க வேகமாக எழப் போக, அவனின் கோபத்தை புரிந்து கொண்ட இன்னொரு பெண்,

“விடுங்க அக்கா... பார் பையன் வெக்க படறான்... எல்லாம் கொஞ்ச நாள் போனா அவனே அவன் பொண்டாட்டிக்கு ஊட்டி விடப் போறான்.. இப்படி பப்ளிக் ஆ கேட்டா அவனுக்கு கோபம் வராதா?? “ என்று சிரிக்க மற்றவர்களும் சிரித்தனர் கொஞ்சம் அந்த சூழ்நிலையை இலகுவாக்க.. எழுந்தவனும் மீண்டும் அமர்ந்தான் முறைத்து கொண்டே..

பின் அந்த பெண்மணி இன்னும் விடாமல் ஒரு குடத்தில் நீரை கொண்டு வர செய்து அதில் தன் கையில் இருந்த தங்க மோதிரத்தையும் காலில் அணிந்திருந்த மெட்டியையும் கழட்டி குடத்திற்குள் போட்டு மதுவை அழைத்தார்...

“மருமகளே.. உள்ள கையை விட்டு ஏதாவது ஒன்றை எடு “ என்றார்...

மதுவும் ஒன்றும் புரியாமல் கொஞ்சம் பயத்துடன் எழுந்து வந்து குடத்திற்கு உள்ளே கையை விட்டு ஒன்றை எடுத்தாள்.. அதை வாங்கி பார்த்ததும்

“மருமகள் தங்க மோதிரத்தை எடுத்துட்டா... முதல் வாரிசா அந்த மஹாலட்சுமியே வரப்போறா சிவகாமி... “ என்று அருகில் நின்றிருந்த இன்னொரு அம்மாவை பார்த்து சிரித்தார்...

அதை கேட்டதும் அதுவரை சோகத்தில் இருந்த அந்த சிவகாமி அம்மாவின் மனம் குளிர்ந்து போனது...எப்படியோ 31 வயது ஆகியும் தன் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று ஏங்கி கொண்டிருந்த அந்த தாய் க்கு இதை கேட்டதும் வயிறு இன்னும் குளிர்ந்து போனது.. தன் மனதிற்குள் இருக்கும் கவலையை பின்னுக்கு தள்ளி புன்னகைத்தார் சந்தோசத்தில்..

அதை கண்டதும் அந்த பெண்மணியும் விடாமல்,

“பேத்தி வரப்போறா னதும் சிவகாமி முகத்தில சந்தோசத்தை பாருங்க... உன் ஆசை சீக்கிரம் நிறைவேறும் தாயி.. நீ கலங்காதா... “ என்றார்....

இதை எல்லாம் கேட்ட மதுவின் முகமோ இன்னும் வெளிறியது... அதை விட நிகிலனின் முகம் இன்னும் இறுகியது... தன் கைகளை கஷ்டபட்டு கட்டு படுத்தி கொண்டான்...

பிறகு மது எடுத்த மோதிரத்தை மீண்டும் குடத்திற்குள் போட்டு இன்னோரு தரம் எடுக்க சொன்னார்..

அவளும் வேற வழி இல்லாமல் மீண்டும் கையை விட்டு எடுக்கவும் இந்த முறை வெள்ளி மோதிரம் வந்திருந்தது...

“ஹ்ம்ம்ம் அடுத்த வாரிசு பேரன் சிவகாமி...இப்ப உனக்கு இன்னும் சந்தோசம் தானே..” என்றார் அந்த சிவகாமியை பார்த்து..

“ரொம்பவும் சந்தோசம் அத்தை... உங்க வாக்கு சீக்கிரம் பழிக்கட்டும்... அந்த முருகனுக்கு பால் அபிஷேகம் பண்ணிடறேன்... “ என்று சிரித்தார்.. இதை கண்ட நிகிலன் தன் அன்னையை பார்த்து முறைத்தான்.. அவன் முறைப்பதை ஓரக் கண்ணால் கண்டு கொண்ட சிவகாமி அதன் பிறகு அவன் இருந்த பக்கம் மீண்டும் திரும்ப வில்லை...

அவர் மீண்டும் இன்னொரு தரம் அதே மாதிரி எடுக்க சொல்லவும் அருகில் இருந்த மற்றொரு பெண்,

“போதும் அக்கா.. இப்ப யாரு ரெண்டுக்கு மேல பெத்துக்குறா... அதுவும் ஒன்னோடயே நிறுத்திக்கிறாங்க... நம்ம நிகிலனுக்கு பொண்ணு ஒன்னு ஆண் ஒன்னுமா ரெண்டு புள்ளைங்களே போதும் கா.. நீங்க பாட்டுக்கு அந்த காலம் மாதிரி மூனு புள்ளை வரைக்கும் பார்க்க வேண்டாம்....

பாவம் மருமகளை விடு.. எத்தன தரம் அதுவும் குனிஞ்சு குனிஞ்சு நிமிரும்… ” என்று சொல்லி சிரித்தார்...

மனதிற்குள்ளே அந்த அம்மாவிற்கு 1000 தடவை நன்றி சொன்னாள் மது... அவளுக்கு இதெல்லாம் எப்ப முடிஞ்சு தன்னை நிம்மதியா விடுவாங்கனு இருந்தது...

“ஹ்ம்ம்ம் சரி டீ அம்மா... இப்ப இருக்கிறது எல்லாம் நம்ம சடங்கு சம்பிரதாயம் எல்லாம் எங்க மதிக்கிறாங்க... “என்று புலம்பினார்...

மற்றொரு பெண்ணும் விடாமல்

“ஹ்ம்ம்ம் உங்க காலத்துல கல்யாணம் முடிந்து இரண்டு நாளைக்கு அப்புறம் தான் என் மாமனையே பார்த்து இருப்பீங்க... அப்பல்லாம் கட்டிக்க போற புருஷனை முன்ன பின்ன பார்த்ததில்லை என்பதால் இந்த மாதிரி விளையாட்டுக்கள் வச்சாங்க ஒருத்தருக்கொருத்தர் பார்த்து பழகிக்கட்டும்னு..

இப்ப இருக்கிற பசங்க அப்படியா இருக்கிறாங்க?? பொண்ணு பார்க்கிற வர்றதுக்கு முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் தனியா சந்திச்சு பேசிக்கிறாங்க.. அவங்களுக்குள்ள ஒத்து வந்தால் தான் நிச்சயமே பண்றாங்க..நிச்சயம் பண்ணினதுக்கு பிறகு ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கலைனு கலயாணத்துக்கு முன்னாடியே முடிச்சிக்கிறாங்க சில பேர்..

அதுவும் தாண்டி கல்யாணம் ஆனாலும் சில நாட்கள் லயே டைவர்ஸ்னு வந்து நிக்குதுங்க.. அதனால இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் இனிமேல் செல்லாதுனு நினைக்கிறேன்.. நீங்க அடுத்த வேலைய பாருங்க.. “ என்று சிரித்தார்..

“என்னடியோ.. மா.. நீ சொல்றதும் சரியாதான் இருக்கு “ என்று பெருமூச்சு விட்டவர்

மீண்டும் மதுவிடம் திரும்பி

“எப்படியோ மா .. சின்ன மருமகளா வரவேண்டியவ.. உன் அதிர்ஷ்டம் இந்த வீட்டிற்கு மூத்த மருமகளாவே ஆயிட்ட... இனிமேல் நீதான் இந்த குடும்பத்தை பார்த்துக்கணும்.. அந்த வடிவேலன் உனக்கு துணை இருப்பான்... எல்லாம் உனக்கு நல்லதா நடக்கும்... “ என்று அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்...

அதை கேட்டதும் மதுவின் முகம் இன்னும் கறுத்தது...முகம் வெளிற, தன் கீழ் உதட்டை கடித்துக் கொண்டாள்... அவளின் முகத்தில் வந்து போன வேதனையான பாவத்தையும் கண்ணில் தெரிந்த வலியையும் கண்டு கொண்ட சிவகாமிக்கும் மனம் வலித்தது..

எப்படி கலகலனு சிரிச்சுகிட்டு மனம் நிறைந்த பூரிப்புடன் காலடி எடுத்து வச்சு வந்திருக்க வேண்டிய என் வீட்டு மஹாலட்சுமி இப்படி மனதில் மருகி கொண்டே அவள் மனதில் ஒரு குறையோட வருமாறு வச்சுட்டியே முருகா... இது உனக்கு நியாயமா?? இத பார்க்கவா நான் இவ்வளவு நாளா காத்துகிட்டிருந்தேன்??..

இதுக்கெல்லாம் காரணமான அவன் மட்டும் என் கையில கிடைச்சான் ..?? என்ன செய்வேனு எனக்கே தெரியாது...

அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு அவனை என் கண்ணுல காட்டிடாத... சொல்லிட்டேன்.... “ என்று அந்த வேலனை திட்டி முடித்து அவனுக்கு அவசர நிபந்தனையை வேறு வைத்தார் சிவகாமி...

அந்த பெண் சொன்னதை கேட்ட நிகிலனோ அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வேகமாக எழுந்து கடகடவென்று மாடியில் ஏறி தன் அறைக்கு சென்று விட்டான்...

அறைக்கு உள்ளே வேகமாக சென்றவன் அதே வேகத்தில் அறைக் கதவை அறைந்து சாத்தினான்... பின் காலில் இடறிய மணமகனுக்கான அந்த பட்டு வேஷ்டியை கழட்டி வீசி எறிந்தான்.. வேகமாக சாதாரண உடைக்கு மாறியவன் அருகில் இருந்த படுக்கையில் பொத்தென்று விழுந்தான்....

“எது எனக்கு விருப்பமில்லையோ, எதை இவ்வளவு நாள் வெறுத்து வந்தேனோ அது நடந்து விட்டது... அதுவும் வலுக்கட்டாயமாக அவன் விருப்பமில்லாமல் அவன் மேல் திணிக்க பட்டு விட்டது..

சூழ்நிலை கைதியாக நின்ற நேரம் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே... ஏதாவது செய்து இதிலிருந்து தன்னை விடுவிக்க முடியாமல் போய் விட்டதே...

கடைசியில் எல்லாரும் விழும் அதே குட்டையில் நானும் விழ வேண்டிய நிலை வந்திருச்சே.. “ என்று மனதுக்குள் புலம்பினான்...

“இதற்கெல்லாம் காரணமான அவன்... “ என்று நினைக்கையிலயே அவன் உடல் இறுகியது...அவன் கைகள் விரைத்து உடல் எல்லாம் கோபம் பரவியது ...

“அவன் மட்டும் என் கையில கிடச்சான்.. உடனே என்கவுண்டர் தான்.. “ என்று பல்லை கடித்தான் நிகிலன்...

அங்கு மதுவந்தினியோ, அவனை விட கடுப்பில் இருந்தாள்.. ஒரு வழியாக எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து அனைவரும் விடை பெற்று சென்றுவிட ஒரு சில நெருங்கிய சொந்தம் மட்டும் வரவேற்பறையில் அமர்ந்து கதை பேசி கொண்டிருந்தனர்..

அதில் முக்கிய டாபிக் கே காலையில் திருமணத்தில் நடந்த கூத்துதான்..

மதுவை ஓய்வு எடுக்க சொல்லி ஒரு அறையில் தங்க வைத்திருந்தனர்... அங்கு உள்ள கட்டிலில் அமர்ந்தவள் காலையில் நடந்த நிகழ்வுகளை திரும்ப மனதில் ஓட்டி பார்த்தாள்...

அதுவும் கடைசியாக அந்த அம்மா சொன்ன “சின்ன மருமகளாக வரவேண்டியவள்... ” என்ற வார்த்தையே திரும்ப திரும்ப ஒலித்தது அவள் செவியில்...

எவ்வளவு முயன்றும் தன்னை கட்டு படுத்தமுடியவில்லை..

“காலையில் இருந்து எத்தனை பேர் இதை சொல்லிவிட்டாங்க...என்னவோ நான் தான் குற்றம் செய்தவள் போல கூனி குறுக வேண்டியதாயிற்று..

அதுவும் மாப்பிள்ளை பொண்ணை பிடிக்காமல் தான் ஓடிட்டான் என்றனர் சில பேர்... இன்னும் சிலரோ பொண்ணுக்கு வேற ஏதோ காதல் போல...அது மாப்பிள்ளைக்கு தெரிஞ்சு ஓடிட்டான் என்றனர்.. சிலர் அவள் வாழ்வே முடிந்து விட்டதை போல அவளை ஏதோ பாவமாக பார்த்தனர்...

அது என்னவோ திருமணம் பிடிக்கலைனு மாப்பிள்ளை ஓடிட்டாலும் பழி வந்து சேருவது என்னவோ அந்த மணப்பெண்ணிற்குதான்...

ஏற்கனவே திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தன் பெற்றோரின் எமோஷனல் ப்ளாக் மெயில்க்காக இந்த திருமணத்திற்கு சம்மதித்து இருந்தவளுக்கு காலையில் திருமண மண்டபத்தில் இருந்து மாப்பிள்ளை ஓடிட்டான் என்று கேள்வி பட்ட உடனே துள்ளி குதிக்கதான் செய்தாள் மது...

“அப்பாடா.. இந்த கல்யாணத்திலிருந்து தப்பிச்சிடலாம்.. நான் அந்த முருகனை வேண்டியது வீண் போகலை.. கடைசியில் எனக்கு கை கொடுத்து இந்த கல்யாணத்தை நிறுத்திட்டான் என் வேலன்... “ என்று நிம்மதியாக இருந்தாள்...

ஆனால் என்ன ஆச்சோ... திடீர்னு அந்த மாப்பிள்ளையோட அண்ணனை இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை ஆக்கி விடவும் அவள் முகம் தொங்கிவிட்டது...அதோடு விடாமல் எல்லாரும் அவளையே பாவமாக வேற பார்க்கவும் பற்றி கொண்டு வந்தது அவளுக்கு...

என்னவோ மாப்பிள்ளை ஓடி விட்டதும் அவள் கவலை கொண்டிருப்பதாக நினைத்து ஆளாளுக்கு இவளுக்கு ஆறுதல் சொல்லினர்...அதுவும் மாப்பிள்ளை மாறிவிட அதுக்கு வேற இந்த பொண்ணு எப்படி எடுத்துக்குவாளோ என்று பரிதாபபட்டு எல்லாரும், அவள் தம்பியை மறந்து அந்த அண்ணனை தன் கணவனாக ஏத்துக்கணும் ங்கிற ரேஞ்சில் அட்வைஸ் பண்ண, அதைத்தான் அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை...

திருமணத்தில் விருப்பம் இல்லாதவளுக்கு நான் அந்த தம்பி.. இல்ல தொம்பிக்கு கழுத்தை நீட்டினா என்ன?? இல்லை அண்ணனுக்கு நீட்டினா என்ன...?? என்னை பொறுத்தவரை எல்லாம் ஒன்னுதான்.. ஆனால் இந்த சொந்தக்காரங்க அலப்பறை தான் தாங்க முடியவில்லை.. “ என்று மனதுக்குள் புலம்பினாள்....

எப்பதான் இந்த கூட்டம் கலையுமோ என்று இருந்தது.. அவர்கள் ஒவ்வொன்று சொல்லவும் அவள் முகம் இன்னும் வெளிறி இறுகியது....எல்லாம் அவனால் தான்.. அவன் மட்டும் என் கையில கிடச்சான்..?? கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்டுவேன...” என்று பல்லை கடித்தாள் மது..

இப்படி சிவகாமி, மதுவந்தினி மற்றும் நிகிலன் என மூவரும் திட்டிகொண்டிருந்த அந்த அவனோ விமானத்தில் பறந்து கொண்டிருந்தான் கனடாவை நோக்கி...

விமானத்தில் அமர்ந்து இருந்தவன் தன் முன்னே இருந்த அந்த சின்ன திரையில் இந்திய நேரத்தை பார்த்தவன் அது மணி மதியம் 12 என காட்டவும்

“அப்பாடா... ஒரு வழியா அந்த பெரிய கண்டத்தில இருந்து தப்பிச்சாச்சு.. எப்படியும் அந்த கல்யாணம் நின்னு போயிருக்கும்...” என்று நிம்மதி மூச்சு விட்டான்...

“ஆனால் என்ன?? நான் மட்டும் இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த பக்கமே வர முடியாது..

அந்த நிகிலன் கிட்ட மட்டும் மாட்டினேன்.. அடுத்த நிமிஷம் என்னை என்கவுன்டர்லயே போட்டிருவான்... எப்படியும் அவன் கண்ணில மட்டும் படக்கூடாது “ என்று முடிவு செய்தவன் பின் உல்லாசமாக விசில் அடித்த படி காதில் கெட்போனை போட்டு கொண்டவன் அந்த திரையில் நல்ல தமிழ் படத்தை தேர்வு செய்து பார்க்க தொடங்கினான்...

அவன் எவ்வளவு முயன்று உற்சாகமாக இருப்பதாக காட்டி கொண்டாலும் அவன் கண் முன்னே மது வந்து சிரித்தாள்.. அவளின் அந்த குழந்தை தனமான முகத்தை கண்டவன்

“பாவம் அந்த பொண்ணு.. என்னால அவளுக்குத்தான் கஷ்டம்...” என்று நினைக்க அவன் மனமோ

“அவளுக்கு மட்டுமா கஷ்டம்??... உனக்கு கஷ்டமா இல்லையா?? “ என்று கேள்வி கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவன்

“ஒரு வேளை நான் செய்தது தப்போ?? இப்படி கல்யாணத்தில் பாதியில் அந்த பொண்ணை விட்டுட்டு வந்திருக்க கூடாதோ?? ஆனால் இதெல்லாம் நானே நினைக்காமலயே நடப்பதை போல இருக்கே...

யாரோ என்னை பின்னால் இருந்து ஆட்டி வைப்பதை போல அல்லவா இருக்கு.. எனக்கே தெரியாமல் என் வாழ்வில் என்னென்னவோ நடப்பதை போல இருக்கே.... இதெல்லாம் யாரோட வேலையா இருக்கும்..?? “ என்று யோசித்தான் அவன்...மகிழன்...

அவன் மன ஓட்டத்தை கண்டு கொண்டவன்,

“ஹா ஹா ஹா.. யாரோட வேலையோ இல்லை மகனே.. இது இந்த சிங்கார வேலனோட ஆட்டமாக்கும்... என் ஆட்டத்தின் அதிரடி மூவ் தான் இன்றைய கலாட்டா... நான் ஆட்டி வைக்கிற மாதிரிதான் நீ ஆடி இருக்க.. இன்னும் ஆடப் போற... என் ஆட்டத்தை இன்னும் பொறுத்திருந்து பார்... “ என்று சிரித்துக் கொண்டான் அந்த சிங்கார வேலன்....



நம்ம வேல்ஸ் ன் ப்ளான் என்ன?? வேல்ஸ் ஆட்டத்தின் நாயகனுக்கும் நாயகிக்கும் ஜாதகத்தில் 10 பொருத்தம் இருந்ததோ என்னவோ?? ஆனால் மனபொருத்தம் ஒன்னு கூட கிடையாது... இருவரும் எதிர் எதிர் துருவம் குணத்தில்..

இப்படி எதிர் எதிர் துருவமா இருக்கிற இவங்க இரண்டு பேரையும் எதற்காக இணைத்து முடிச்சி போட்டிருக்கான்?? ஒருவேளை எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்று எல்லாரும் வழக்கமாக சொல்லும் டயலாக்கை நம்பி இந்த ஆட்டத்தில் அவங்களை கோர்த்து விட்டிருக்கானா??

அவன் திட்டம் நிறைவேறுமா?? அவன் எப்பொழுது தன் ஆட்டத்தை தொடங்கினான்?? இதுவரை எப்படி காய் நகர்த்தி இருக்கிறான்?? இனி எப்படி ஆடப்போகிறான்?? என்று பார்க்கலாம்..


Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!