என் மடியில் பூத்த மலரே-2
அத்தியாயம்-2
ஆதியை பார்த்து விடனும் என்று சைக்கிளை வேக வேகமாக மிதித்தாள் பாரதி..
ஊருக்கு வெளியில் இருந்தது அந்த குளம். காவிரியில் நீர் வரத்து அதிகமாகும் காலங்களில் அங்கு உள்ள வாய்க்காலில் தண்ணிர் பெருக்கு அதிகரிக்கும். அந்த சமயங்களில் உபரி நீரை அந்த குளத்தில் சேமிப்பர்..
அதோடு மழை நீரும் அந்த குளத்தில் தான் தேங்கும். ஆற்றில் நீர் இல்லாத சமயங்களில் அந்த குளத்திலிருந்து நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி கொள்வர் அந்த ஊர் மக்கள்..ஆனால் இன்று ஆற்றில் நீர் இல்லை. மழையும் பொய்த்ததால், வறண்டு இருந்தது அந்த குளம்.
பாரதி அந்த குளத்தை அடைந்ததும் சைக்கிளை சாலையில் போட்டு விட்டு வேகமாக அந்த குளக்கரைக்கு ஓடினாள்.
அங்கு அவளின் வருகைக்காக காத்து கொண்டிருந்த ஆதியை கண்டதும் அவளின் முகம் தாமரையாக மலர்ந்தது. தன் கவலைகள் எல்லாம் மறந்து தலைவனை கண்ட தலைவியாய் அவளிடம் உற்சாகம் பொங்கியது. அந்த உற்சாகம் அவளின் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பரவியதை உணர்ந்தாள். அதை ரசித்துகொண்டே
“என்ன ஆதி, நான் வருவேனு எனக்காக வெய்ட் பண்ணினியா?
சாரி. எனக்கு இருக்கிற குழப்பத்துல உன்னை மறந்துட்டேன். “
குழப்பம் என்றதும் அவளின் நிலை ஞாபகம் வந்தது. இந்த கிராமத்தில் இன்றே கடைசி நாள் என்பதும் ஞாபகம் வரவும் அவளின் உற்சாகம் எல்லாம் வடிந்தது
“நான் உன்னை விட்டு போறேன். இனிமேல் உன்னை பார்க்காமல் எப்படி இருப்பேன் ஆதி” என்றவள் அவனின் முகமும் வாடுவதை உணர்ந்து தன்னை உடனே சமாளித்து கொண்டாள்.
“என்ன ஆதி சார். ரொம்ப சோகமா ஆகுறீங்க போல. நீங்க வயலின் வாசிச்சா இந்த உலகம் தாங்காது. So Dont worry. Be Happy always “
“ஆனால் நான் இல்லைனு வேற எந்த பொண்ணையாவது ஷைட் அடிச்ச. கொன்னுடுவேன். நீ எனக்கு மட்டும்தான்”
“சரி, நான்தான் உன்னை வந்து பார்க்க முடியாது. ஆனால் நீ என்னை தேடி
வரனும். நான் எங்கிருந்தாலும் என்னை நீ தேடி வந்து பார்க்கனும். என்ன புரிஞ்சுதா “ என்று கை விரலை நீட்டி மிரட்டினாள் பாரதி
அவளின் குறும்பை ரசித்தவாறே,
“கண்டிப்பா. நீ எங்க போனாலும் நான் வந்து உன்னை சந்திப்பேன். நான் இல்லாமல் நீ இல்லை “ என்று ரகசியமாக சிரித்து கொண்டான் ஆதி , பாரதியின் ஆருயிர் காதலன், ஆதவன் இந்த உலகத்தை காக்கும் பகலவன்.
அதிகாலையில் எழுந்து, தன் கிரணங்களை வீசி கம்பீரமாக வரும் அந்த ஆதவனிடம் சின்ன வயதிலிருந்தே பாரதிக்கு மயக்கம். அதுவும் அந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கும் சமயங்களில், சூரியனின் கதிர்கள் குளத்து நீரில் விழுந்து பிரதிபலிப்பது மெய் சிலிர்க்க வைக்கும் பாரதிக்கு.
அதை காணவே காலையில் சீக்கிரம் எழுந்து எல்லா வேலைகளையும் சீக்கிரம் முடித்து வேகமாக இங்கு வந்து விடுவாள். ஆதவன் எழுந்து மேலே வரும் வரை ரசித்திருப்பாள். அதன் பிறகே தன் வேலைக்கு கிளம்பி செல்வாள்.
இன்றும் அந்த ஆதவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள். தினமும் நாள் முழுவதும் அந்த ஆதவனை பார்ப்பதுதான் என்றாலும், இந்த அதிகாலையில் காண்பது அவ்வளவு மகிழ்ச்சி. அதிலும் இன்று ஏனோ இன்னும் அழகாக இருந்தான்.
“நீ மட்டும் நேர்ல வந்த, உன்னை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ஆதி. ஆனால் எங்க, அதுதான் நடக்காதே “ என்று பெருமூச்சு விட்டாள்.
“நானே வருவேன் உன்னை மணக்க , ரதி “ என்று அந்த ஆதவன் ரகசியமாக கூறியது அவளின் செவிகளில் விழவில்லை.
அவனையே ரசித்து கொண்டிருந்தவளின் செவிகளில் அருகில் இருந்த கோயில் மணியோசை விழுந்தது. நேரம் ஆவதை உணர்ந்து
“சரி ஆதி டார்லிங். நான் அப்ப கிளம்பறேன். இன்னும் என் ப்ரென்ட் வேற போய் பார்க்கனும். நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் என்று பிரியா விடைபெற்றாள் தன் காதலனிடமிருந்து. ஆதவனும் அவள் போவதையே பார்த்திருந்தான்.
“விரைவில் உன்னை சந்திப்பேன்” என்று கூறி தன் கடமையை தொடர்ந்தான்.
பாரதி அங்கு இருந்த அனைத்து கோயில்களுக்கும் சென்று தான் எடுத்த முடிவு சரியானதா இருக்கனும் என்று மனம் உருகி வணங்கி எழுந்தாள். கடைசியாக தன் நண்பனான வேலனின் கோயிலை அடைந்தாள்.
கோயிலில் கால் எடுத்து வைக்கும் பொழுதே, பாரதியின் மனம் கனத்தது. இந்த கோயில்தான் அவளுக்கு பிறந்த வீடு மாதிரி. பிறந்ததிலிருந்தே தன் வீட்டை விட இங்குதான் அவள் அதிகம் இருந்தது, வளர்ந்தது. துன்பமோ, சந்தோஷமோ அனைத்தையும் தன் நண்பனான இந்த வேலனிடம் தான் பகிர்ந்து கொள்வாள்.
இன்று இந்த கோயிலையும் விட்டு பிரியவேண்டுமே என்று மனம் மீண்டும் துவண்டது.
கோயில் சன்னதியை அடைந்தவள் , அன்று முருகன் ராஜ அலங்காரத்தில் கம்பீரமாக நின்றதை கண்டு மெய் மறந்து நின்றாள்.
பின் கண் மூடி தன் உரையாடலை தொடர்ந்தாள்.
“என்ன வேல்ஸ், ரொம்ப கலக்கலா இருக்க. என்ன நான் உன்னை விட்டு போகறது அவ்வளவு சந்தோஷமா இருக்கா ? அதுவும் சரிதான். இனிமேல் என் தொல்லை உனக்கு இருக்காது இல்ல.”
“ஆனால் நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் வேல்ஸ். பேசாம நீயும் என்கூடவே வந்திடு.”
எனக்கு இன்னும் நான் எடுத்த முடிவு சரியா தப்பானே தெரியல. எனக்கு தெரியாது. உன்கிட்டயும் கேட்டுட்டுதான் முடிவு பண்ணினேன். அதனால எனக்கு எது வந்தாலும் நீதான் பொறுப்பு.
என்கூடவே இருந்து எதையும் தாங்கும் சக்தியை எனக்கு கொடு வேலா “ என்று மனம் உருகி வேண்டிய நேரம் ,
“அந்த வேலன் எப்பவும் உன் கூடவே இருந்து, உனக்கு வேண்டிய சக்தியை கொடுப்பான் பாரதி மா” என்று அவளின் தலையில் கை வைத்து ஆசிர் வதித்தார் அந்த கோயிலின் பூசாரி.
“வாங்க தாத்தா. நான் அந்த வேலனிடம் கேட்டது உங்களுக்கு எப்படி தெரிந்தது தாத்தா ? மனசிலே பேசறெனு சத்தமா சொல்லிட்டனா?”
“உன்னை பிறந்ததிலிருந்து பார்ப்பவன் மா நான். என் குழந்தை என்ன கேட்பானு எனக்கு தெரியாதா ?” என்றவர் பாரதியின் எழில் கொஞ்சும் முகத்தை கண்டு
“இந்த குழந்தைக்கு ஏன் இந்த சோதனை” .
அவள் பிறந்த பொழுது அவள் ஜாதகத்தை கணித்தவர் அதிர்ந்தார். அவள் ஜாதகம் அவ்வளவு நன்றாக இல்லை. அவளின் முதல் பாதி , உலகின் அனைத்து சந்தோஷத்தையும் அனுபவிப்பாள். ராஜகுமாரியாக இருப்பாள் என்றும் பின் பாதி அதற்கு நேர்மாறாக வாழ்வின் அத்தனை துன்பங்களையும் அடைவாள் என்று காட்டியது.
ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்த போதும் அதுவே சொல்லியது. அதை யாரிடமும் அவர் பகிந்து கொள்ளவில்லை. போகட்டும் முதல் பாதியாவது அந்த குழந்தை மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
இந்த ஜாதக பலனை இப்பவே சொல்லி அந்த சந்தோஷத்தை களைப்பானேன்” என்று மறைத்துவிட்டார்.
இதோ அவளின் முன் பாதி முடிந்து அவளின் பின் பகுதி ஆரம்பமாகி விட்டது. அதன் முதல் கட்டமாகவே பாரதி இன்று பிரிந்து போகிறாள்.
அவளின் ஜாதகம் தெரிந்ததாலோ , இல்லை பாரதியின் இயற்கயான குணமோ, இந்த ஊரில் அனைவரையும் விட பாரதியின் மேல் தனி பிரியம் அவருக்கு.
பாரதிக்கும் அதே போல் அவரின் மேல் தனி அக்கறை. கோயிலில் அவருக்கு வேண்டிய அத்தனை வேலைகளையும் தனக்கு நேரம் இருக்கும் பொழுது எல்லாம் செய்து கொடுப்பாள்.
பாரதி தன்னையே கவலையோடு பார்த்து கொண்டிருந்த அந்த முதியவரை நோக்கி,
“என்ன ஓல்ட் மேன். ரொம்ப ஃபீலிங்ஷ் ஆ. ஓ எங்க உன் வேலனை நான் கையோடு கூட்டி போய்டுவேனு கவலையா?” என்று தலையை சாய்த்து யோசித்தவள்
“சரி ,போனா போகட்டும் , உனக்காக என் நண்பனை இங்கயே விட்டுட்டு போறேன்.”
“வேல்ஸ், இந்த ஓல்ட் மேன். ரொம்ப ஃபீல் பண்றார். அதனால நீ இங்கயே இருந்து இவரையும், இந்த ஊர் மக்களையும் நல்லா பாத்துக்கோ. நான் தனியாகவே சமாளிச்சுப்பேன்” என்று சிரித்தாள்.
“வாயாடி. நீ இல்லாமல் இந்த கோயிலே வெறிச்சோடி இருக்கும் பாரதிமா. நீ பத்திரமா போய்ட்டு வா “ என்றார்.
“இதுதான் நல்ல தாத்தா. சரி தாத்தா. நான் கிளம்பறேன். இந்நேரம் அந்த லட்சு வீட்டுக்கும் வாசலுக்கும் நூறு தடவையாவது நடந்திருக்கும் இன்னும் காணோமேனு. நீங்களும் உடம்பை பாத்துக்கோங்க என்று துள்ளி ஓடினாள்.
“ஆறுபடையானே, இந்த குழந்தையை ரொம்ப சோதிச்சிடாத. பாவம் அவள் தாங்க மாட்டாள்” என்று வேண்டிகொண்டார்.
வீட்டை அடைந்த பாரதி வெளியில் நின்ற புல்லட் ஐ கண்டு குதித்து ஓடினாள். உள்ளே சென்றவளின் கண்களில் தன் அருமை அக்கா மஹாலட்சுமியும் அவளின் கணவனும் அமர்ந்து இருந்ததை கண்டாள்.
மஹா வின் கலுத்தில் சென்ற வாரம் ஏறிய தாலிச்சரடு பளபளவென்று மின்னியது. அதைவிட அக்காவின் முகம் புதுப்பொண்ணுக்கான களையில் இன்னும் ஜொலித்தது. பாரதியால் நம்பவே முடியவில்லை. தன் அக்காவா இவ்வளவு அழகாக மாறிவிட்டாள். அதுவும் ஒரே வாரத்தில் என்ற ஆச்சர்யத்துடன்,
“என்ன மாம்ஸ், ஒரே வாரத்தில் எங்க மஹாவை இப்படி மாத்திட்டீங்க. என்ன மந்திரம் போட்டீங்க “ என்று கேட்டவாறே உள்ளே நுழைந்து கையில் உள்ள பிரசாதத்தை அனைவருக்கும் கொடுத்தாள்.
“வாம்மா மச்சினிச்சி. உன்னை காணோம்னு இப்பதான் அத்தை கிட்ட கேட்டு கிட்டிருந்தேன்”
”எம்மேல உங்களுக்கு எவ்ளோ பாசம் மாம்ஸ். வந்த உடனே தேடறீங்க. புல்லறிக்குது போங்க”.
“வேற என்ன செய்ய. நீ எப்ப வருவனு தெரிஞ்சா அதுக்குள்ள நல்லா மூச்சு விட்டுக்கலாம் னு தான். காதும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கும். நீ வந்துட்டா அதெல்லாம் முடியாதே “ என்று கலாய்த்தார் அந்த வீட்டின் புது மாப்பிள்ளை ஈஸ்வர்.
“அப்படி சொல்லுங்க மாமா “ என்று ஹை பை கொடுத்தான் பாரதியின் தம்பி பாரத்.
“மாம்ஸ், நீங்களுமா. இருங்க. நான் இங்கிருந்து கிளம்பு முன் என் டிப்ஷ் அன்ட் ட்ரிக்ஷ் எல்லாம் மஹாகிட்ட சொல்லி கொடுக்கறேன். அப்புறம் பாருங்க உங்க கதையை “ என்று முகத்தை தூக்கினாள் பாரதி.
“அம்மா தாயே! , அப்படி எதுவும் செய்திடாதம்மா. கல்யாணம் ஆகி இந்த ஒரு வாரத்தில இன்னைக்குதான் உங்க அக்கா என் முகம் பார்த்து பேச ஆரம்பிச்சிருக்கா. நீ எதயாவது சொல்லி அதயும் கெடுத்திடாத. நான் உன் கட்சியிலயே சேர்ந்துடறேன்” என்று பயந்த மாதிரி நடித்தான் ஈஸ்வர்
“அது. அந்த பயம் இருக்கட்டும் மாம்ஸ்” என்று கை நீட்டி பத்திரம் காட்டினாள் பாரதி
“ஐயோ மாமா. இப்படி கவுத்திட்டிங்களே. “ என்று தலையில் அடித்து கொண்டான் தம்பி.
தன் தம்பியிடம் நாக்கை நீட்டி பலிப்பு காட்டினாள் பாரதி.
“போடி எனக்கும் நேரம் வரும். அம்மா இவள சீக்கிரம் பேக் பண்ணி அனுப்பு. இவள் தொல்லை தாங்க முடியல “ என்று தன் தாயிடம் முறையிட்டான்.
அதற்குள் லட்சுமியும் அங்கு வந்து
“என்ன பாரதி. இப்படியா மாப்பிள்ளை கிட்ட வாயாடறது. கொஞ்சம் அடக்கமா பேசு” என்று கண்டித்தார்.
“அப்படி சொல்லுமா. அப்பவாது அவளுக்கு உறைக்கட்டும் “ என்று இந்த முறை திருப்பி பலிப்பு காட்டினான் பாரதியின் தம்பி
“இருக்கட்டும் அத்தை. சின்ன பொண்ணுதான. எங்கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேச போறா. அதுவும் இன்னைக்கு ஒரு நாள் தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்ப போறா. போற வரைக்கும் ஜாலியா இருக்கட்டும் “ என்று பாரதிக்காக பரிந்து பேசினான் ஈஸ்வர்.
லட்சுமிக்கு மனம் நிறைந்து இருந்தது. எங்கே பாரதி விளையாட்டா பேசறதை மாப்பிள்ளை தப்பா எடுத்துப்பாரோ என்று இருந்தது. அதற்காகவே அவள் சின்ன மகளை கண்டித்தார்.
ஆனால் மாப்பிள்ளையே சரிங்கவும் சந்தோஷமாஇருந்தது. தன் மூத்த மகளுக்கு நல்ல கணவன் தான் கிடைத்திருக்கிறான் என்று பெருமையாக இருந்தது.
அவரும் சிரித்துகொண்டே “சரி வாங்க. எல்லாம் சாப்பிடலாம். நேரம் ஆகுது. சாப்பிட்டு கிளம்பினா தான் சரியா இருக்கும் “
“நீ எல்லாம் எடுத்து வை மா. நான் அக்காகிட்ட ஒரு சின்ன என்கொய்ரி பண்ணிட்டு வந்திடறேன் “ என்று ஈஸ்வரை பார்த்து கண்ணடிது விட்டு மஹா கையை பிடித்து உள் அறைக்கு இழுத்து சென்றாள் பாரதி
உள்ளே வந்ததும்
“என்ன பாரதி, என்கொய்ரி அது இது னு .அவருக்கு கஷ்டமா இருக்காதா “ என்று தங்கையை முறைத்தாள் மஹா.
“பார்டா. கல்யாணமே வேண்டாம் என்று போன வாரம் வரைக்கும் அழுத என் அழு மூஞ்சி அக்காவா இப்படி பேசறது. என்னால நம்பவே முடியல. இரு எதுக்கும் கிள்ளி பார்த்துக்கறேன் “
“போடி “ என்று செல்லமாக சிணுங்கினாள் மஹா.
பாரதிக்கு சந்தோஷமாக இருந்தது தன் அக்காவை இப்படி பார்க்க.
“என்ன மஹா, எப்படி இருக்க? உனக்கு அங்கு எல்லாம் செட் ஆயிருச்சா?. எல்லாரும் நல்லா பழகறாங்களா? “ என்று திருமணம் முடிந்து முதன் முதலாக பிறந்த வீடு வரும் தன் மகளிடம் , தன் மகள் எப்படி நடந்து கொள்கிறாளோ என்ற ஒரு தாயின் அக்கறையுடன் விசாரித்தாள் பாரதி.
“நான் நல்லா இருக்கேன் பாரதி. அவர் என்னை நல்லா பார்த்துக்கறார். உங்களை எல்லாம் விட்டு போனதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இப்ப ஓரளவுக்கு பழகிடுச்சு “ என்று சின்ன வெட்கத்துடன் கூறினாள் மஹா
அதை கேட்டதும் பாரதிக்கு நிம்மதியாக இருந்தது. தன் அக்காவின் முகத்தை வைத்தே அவள் சந்தோசமாக இருப்பது தெரிந்தாலும் அவள் வாயால் ஒரு முறை கேட்டு திருப்தி அடைந்தாள் பாரதி.
இவளாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று வேண்டிகொண்டாள்.
“ரொம்ப சந்தோஷம் மஹா. நீயும் அங்கு எல்லாரையும் அட்ஜஷ்ட் பண்ணி நடந்துக்கோ “ என்று அட்வைஷ் பண்ணினாள்.
“ஹே .. இரு இரு இங்கு நான் அக்காவா, இல்ல நீ அக்காவா. எனக்கே பெரிய மனுஷி மாறி அட்வைஷ் பண்ற “ என்று செல்லமாக முறைத்தாள் மஹா.
“ஹி ஹி. நீ வயசுல பெரியவனாலும் உலக அனுபவத்துல நீ இன்னும் ஒன்னும் தெரியாத வெகுளி பாப்பாதான் மஹா . அதனால் தான் எனக்கு கவலையா இருந்தது. நீ எப்படி போற இடத்துல சமாளிக்க போறியோனு.
இப்பதான் நிம்மதியா இருக்கு. நீ சமாளிக்கலைனாலும் மாம்ஸ் உன்னை வச்சு சமாளிச்சுக்குவார் “ என்று தன் அக்கவின் கழுத்தை கட்டிகொண்டாள் பாரதி.
சரி வா போலாம். இவ்ளோ நேரம் உன்னை காணாம உன் ஆத்துக்காரர் தவிச்சு போயிருப்பார்” என்றாள் கேலியுடன்.
அதற்குள் லட்சுமியும்
“இன்னும் இரண்டு பேரும் என்ன ரகசியம் பேசுறீங்க. சீக்கிரம் வாங்க “ என்று அழைத்தார்.
இரண்டு பேரும் வெளியில் வரவும், ஈஸ்வரின் கண்கள் ஆவலாக தன் இளம் மனைவியை தழுவியது காதலுடன்.
இதை கண்ட பாரதியும் மஹாவிடம்
“பார்த்தாயா. நான் சொன்னது சரியா “ என்று கண்ணால் ஜாடை செய்தாள்
மஹாவும் தன்னவனின் கண்களில் இருந்த காதலை கண்டும் ,பாரதியின் கேலியும் சேர்ந்து கன்னம் சிவந்தாள். ஈஸ்வரின் கண்களுக்கு அது இன்னும் பைவ் ஷ்டார் ஹோட்டல் விருந்தானது.
அதற்குள் பாரதி அவனின் அருகில் வந்து
“போதும் மாம்ஸ். ரொம்ப வலியுது. துடைச்சுக்கங்க “ என்று ரகசியம் பேசி விட்டு ஓடி விட்டாள்
வெளியில் சென்று இருந்த தர்மலிங்கமும் வந்து விடவே காலை உணவு ஆரம்பித்தது. வந்தவர் காலையில் சீக்கிரம் எழுந்து தன் உடலை வருத்தி அவ்ளோ தூரம் மீன் வாங்க சென்றதுக்காக, பாரதியிடம் நன்றாக வாங்கி கட்டிகொண்டார் .
“என்ன பாப்பா. என் பொண்டாட்டி கூட என்னை இப்படி விரட்டினது இல்லை. நீ இந்த வாங்கு வாங்கற “ என்று கூறி பெருமையாக தன் மகளை பார்த்தார்.
பாரதி என்றால் தனி பிரியம் அவருக்கு. அதுவும் தன் உடம்பு முடியாத பொழுது பாரதிதான் முன்னின்று அனைத்து பொறுப்புகளையும் ஏற்றாள். ஏன் மஹா கல்யாணம்கூட பாரதியோட முயற்சியால் தான் நடந்தது.. தான் சுமக்க வேண்டிய பாரத்தை யெல்லாம் இந்த சின்ன பெண் மேல ஏத்திட்டேனே என்று வருந்தினாலும், என் பெண் எப்படி சமாளிக்கிறாள் என்று பெருமயாக இருந்தது அவருக்கு..
தன்னையே பெருமையாக பார்த்து கொண்டிருக்கும் தந்தையின் முகத்தை கண்டதும் பாரதியின் மனம் இளகியது.. இருந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல்,
“வாயில்லாத பொண்டாட்டி ய கட்டிகிட்ட அப்படிதான். எல்லாம் இந்த அம்மா கொடுக்கிற இடம். உங்களை மிரட்ட ஆள் இல்லாமல் தான் இவ்ளோ தூரம் உடம்பை கெடுத்து வச்சிருக்கீங்க. “
“டாக்டர், உங்களை நல்லா ஓயவு எடுக்க சொன்னாங்களா, இல்லையா? எவ்ளோ பெரிய கண்டத்தில் இருந்து தப்பி வந்திருக்கீங்க.. இனிமேலாவது கவனமா இருங்க. என்ன மாம்ஸ் , நான் சொல்றது கரெக்ட் தானே “ என்று ஈஸ்வரனை துணைக்கு அழைத்தாள்.
யாருக்கு சப்போர்ட் பண்றது என்று தெரியாமல் அந்த விட்டு மாப்பிள்ளை திருதிருனு முழிக்க, அவன் நிலையை கண்டு அனைவரும் குலுங்கி சிரித்தனர்.
இதே மாதிரி கிண்டலும் சிரிப்புமாக காலை உணவு முடிந்தது. பாரதிக்கு சந்தோஷமாக இருந்தது. இதுதான் அவர்களின் வீடு. ஒரு மாதம் முன்புவரை கிண்டலும் கேலியுமாக எப்பவும் சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டே இருக்கும். ஆனால் யார் கண் பட்டதோ. கடந்த ஒரு மாதமாக அனைவர் முகத்திலும் சிரிப்பு தொலைந்து வீடே வெறுச்சோடி இருந்தது.
ஏதோ மஹா கல்யாணத்தை முன்னிட்டு கொஞ்சம் உற்சாகம் மீண்டது. உற்சாகம் இல்லைனாலும் மற்றவர்களுக்காக உற்சாகத்தை வரவழைத்து கொண்டனர் அந்த குடும்பத்தினர்.
இதோ இப்போ ஓரளவுக்கு சரியாகி மீண்டும் பழய நிலைக்கு தங்கள் வீடு திரும்புவதை போல இருந்தது.
“முருகா. இதே மகிழ்ச்சி எப்பவும் நிலைத்து இருக்கனும்” என்று வேண்டிகொண்டாள்.
“பாரதி கண்ணு சீக்கிரம் ரெடியாகு. நேரம் ஆகுது பார். நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டை விட்டு கிளம்பனும் “ என்று காமாட்சி பாட்டி விரட்டினார்.
பாரதியும் வேகமாக சென்று உடை மாற்றி ரெடியாகி வரவும், அவளின் தம்பியும் தங்கையும் அவளின் பெட்டி, பை எல்லாம் எடுத்து கூடத்தில் வைத்தனர். அதை கண்டதும் , இவ்வளவு நேரம் மறந்து இருந்த அவளின் கவலை மீண்டும் தலை தூக்கியது. ஏனோ இந்த வீட்டை முழுவதுமாக பிரிந்து செல்வது போன்று மனம் கனத்தது.
பாரதி வேகமாக பின்புறம் சென்று தான் ஆசையாக வளர்த்த மாடு, கன்னுகுட்டி, ரோஜாசெடி என்று அனைத்தையும் தொட்டு தடவி பிரியா விடை பெற்றாள்.
பாட்டி அனவரையும் பூஜை அறைக்கு அழைத்து ,பாரதியை அவள் கையாள் விளக்கு ஏற்ற சொன்னார்.
பாரதியும் பாட்டி சொன்னதை செய்து, அங்கு இருந்த அனைத்து தெய்வங்களையும் நமஷ்கரித்து, பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றாள்.
அவளை தூக்கி, “மஹராஷியா போய்ட்டு வா கண்ணு “ என்று அவள் நெற்றியில் விபூதி வைத்தார். வைக்கும்பொழுதெ அவர் கைகள் நடுங்கி, குரல் தழுதழுத்தது. அவரின் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.
இதை கண்ட தர்மலிங்கம், லட்சுமியின் கண்களும் கலங்கியது. அவர்களிடமும் ஆசி பெறும்பொழுது எல்லார் கண்களிலும் கண்ணீர் தேங்கி இருந்தது.
“இப்ப என்ன, பாரதி அக்கா கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கா போறா. எல்லாரும் இப்படி emotional ஆறிங்க.
இதோ போன வாரம் மஹா அக்கா கல்யாணம் ஆகி போரப்போ யாருமே இப்படி கண் கலங்கலயே. அவளும் இந்த வீட்டை விட்டு போனா போதும்னு சிரிச்சுகிட்டே ஓடிட்டா.” என்று அந்த சூழ்நிலையை இலகுவாக்க பாரத் வம்பிழுத்தான்.
“கல்யாணம் ஆகியா போறா” என்றதும் பாரதிக்கு சுருக் கென்றது. ஒரு வேளை நான் செய்ய போகும் செயலும் கல்யாணம் ஆகிறதை போலதானோ? அப்போ நான் போறதும் என் புகுந்த வீட்டை போன்றா” என்று அவளின் மனம் கேள்வி கேட்டது...
Paavam la bharathi
ReplyDeleteEna pana pora
ReplyDeleteEna pana pora
ReplyDeleteEna pana pora
ReplyDelete