என் மடியில் பூத்த மலரே-20



அத்தியாயம்-20 

மாலை ஆறு மணிக்கு பாரதி ரெடியாகி வரவேற்பறையில் அமர்ந்து இருந்தாள்..

அழகான காட்டன் புடவையும், நீண்ட தளர்த்தி பின்னிய பின்னலும், அதில் கொஞ்சமாக மல்லிகை பூவையும் வைத்திருந்தாள்.. வழக்கம் போல சின்ன பொட்டும் அதுக்கு மேல அந்த முருகனின் திருநீற்றையும் வைத்திருந்தாள்... கையில் எப்பவும் அணியும் கண்ணாடி வளையல்களை அணிந்திருந்தாள்...

வரவேற்பறையில் அமர்ந்து இருந்தவள், கையில் நேற்று மாலை படித்து கொண்டிருந்த அதே புத்தகத்தை வைத்துக் கொண்டு இன்றும் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தாள்....

அதை படிக்க படிக்க மிகவும் சுவராஷியமாக இருந்தது.. படித்து கொண்டிருக்கும் பொழுதே அந்த புத்தகத்தை படிக்க காரணமானவரையும் அதற்கான சந்தர்ப்பத்தையும் அசை போட்டாள்...

பாரதி சென்னைக்கு வந்து ட்ரீட்மென்ட் ஆரம்பித்து ஒரு வாரம் கடந்திருக்கும்... முதல் இரண்டு நாட்கள் பாரதியால் எப்படியோ அந்த வீட்டுக்குள்ளயே இருக்க முடிந்தது... முதலில் காலையிலும் மாலையிலும் அருகில் உள்ள கடற்கரைக்கு சென்று விடுவாள்..அங்கு தன் காதலனோடு கதை அடித்தும், அந்த கடலின் அலையில் தன் கால்களை நனைத்து அந்த அலைகளோடு கொஞ்ச நேரம் கொஞ்சி விளையாடுவாள்...

அப்படியும் அந்த மதிய நேரத்தை ஓட்ட முடியவில்லை அவளுக்கு...அவள் கிராமத்தில் எப்பவும் சுற்றி கொண்டே இருப்பாள்..வேலைக்கு செல்லும் பொழுதும் அங்கு தன் வேலையோடு மற்ற வேலையும் இழுத்து போட்டு செய்வதால், ஒரு நிமிடம் கூட அசந்து உட்கார்ந்ததில்லை.. எதையாவது செய்து கொண்டேஇருப்பாள்.. அப்படி இருந்து பழகியவளுக்கு இங்கு வந்து வீட்டுக்குள்ளயே அடைந்து கிடப்பது முடியவில்லை...

இரண்டு நாள் பொறுத்தவள் மூன்றாவது நாள் அந்த வீட்டு தோட்டத்தில் இறங்கிவிட்டாள்.. அங்கு இருந்த செடிகளை மாற்றி வைப்பதும் நீர் பாய்ச்சுவதும் அந்த தோட்டத்தை கூட்டி சுத்தபடுத்தவும் ஆரம்பித்து விட்டாள்...

முத்து எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்கவில்லை... அதோடு நிறுத்தாமல் அங்கு இருந்த கொஞ்சம் காலி நிலத்தை கொத்தி விவசாயம் பண்றேன், கீரை பாத்தி போடறேன் என்று கடப்பாரை, மம்முட்டியுடன் களத்தில் குதிக்கவும் முத்து பயந்து போய் ஜானகிக்கு போன் பண்ணி அவளுடைய ஆட்டத்தை சொல்லி விட்டார்...

அதை கேட்டதும் பயந்த ஜானகி இப்பொழுது இந்த நிலையில் அந்த மாதிரி வேலைகளை எல்லாம் செய்யலாமா என்று தெரியாததால் அவரும் சுசிலாவுக்கு போன் பண்ண, சுசிலா உடனே அலறி அடித்து பாரதிக்கு போன் பண்ணினார்...

பாரதி போனை எடுத்ததும் கணட படி முதலில் திட்டியவர்

“அறிவு இருக்கா.. பாரதி.. இப்பதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிறுக்கோம்.. முதல் மூன்று மாதங்கள் நீ மிகவும் கவனமா இருக்கனும்..வெய்ட் எல்லாம் தூக்க கூடாது “ என்று கத்தினார்

“அதில்லை டாக்டர்.... வந்து... எங்க ஊர்ல கற்பமா இருக்கிற பொண்ணுங்க எல்லாம் வயலுல இறங்கி வேலை செய்வதை பார்த்திருக்கேன்,… அவங்களுக்கெல்லாம் ஒன்னும் ஆகலையே... “ என்று இழுத்தாள்...

“அது இயற்கையா உருவான குழந்தை .. இது வேற பாரதி... உனக்கு சொன்னால் புரியாது.. அஸ் எ டாக்டர் நான் சொல்றதை நீ கேள்... இந்த மாதிரி வேலையோ,, உடலை வறுத்தி செய்யற எந்த வேலையும் நீ செய்ய கூடாது.. நீ பாட்டுக்கு செய்தால் அப்புறம் நாம பட்ட கஷ்டத்துக்கு பலன் இல்லாமல் போய்டும்... என்ன புரிஞ்சுதா?? “

“ஹ்ம்ம்ம்ம் ஆனால் ரொம்ப போர் அடிக்குது டாக்டர்.. நானும் நாலு சுவற்றையே பார்த்துகிட்டு எத்தனை நேரம் தான் இருக்கிறது...

அதோடு எத்தனை நேரம் தான் உங்க பையனயும் சைட் அடிச்சுகிட்டே இருக்கிறது என்பதை மட்டும் மனதுக்குள் முனகிக்கொண்டாள் .....

மாரி அக்காகிட்ட , அவங்க பிறந்து வளர்ந்து, கல்யாண ஆகி, அவங்க பொண்ணு பிறந்து , அது வளர்ந்து அதுக்கு கல்யாணம் பண்ணுன கதை வரைக்கும் எல்லா கதையும் கேட்டுட்டேன்... இனிமேல் என்ன பண்ண??” என்று புலம்பினாள்...

“ஹ்ம்ம்ம்ம் உனக்கு பொழுது போகனும் அவ்வளவுதான..”

“ஹ்ம்ம்ம் அதே!! அதே!! “ என்று சிரித்தாள்..

“அதுக்கு போய் தோட்டத்துல வேலை செஞ்சாதான் ஆச்சா??? “ என்று முறைத்தார் சுசிலா

“ஹி ஹி ஹி.. எனக்கு தெரிஞ்சது அது மட்டும் தான் டாக்டர்....இந்த பட்டணத்துல அதுவும் இந்த தனி வீட்ல நான் என்ன செய்யறதாம் “ என்று சலித்துக்கொண்டாள்.. அதை கேட்டு சற்று நேரம் யோசித்த சுசிலா

“சரி.. .சரி... நீ என்ன படிச்சிருக்க??? “

“+ 2 டாக்டர்”

“வாட்.. +2 வா?? ஏன் பாரதி?. இப்ப இருக்கிற பொண்ணுங்க குறைந்தது ஒரு டிகிரியாவது படிக்கிறாங்க.. நீ இவ்வளவு புத்திசாலியா இருக்க.. ஏன் மேல படிக்கலை...ஏன் உங்க அப்பா அனுப்ப மாட்டேனுட்டாரா?? ” என்றார் ஆதங்கமாக

“ஹ்ம்ம்ம் அதெல்லாம் இல்ல டாக்டர்... எங்கப்பா கல்லூரிக்கு போகச் சொன்னார்.. நான் தான் மறுத்துட்டேன் “

ஒன்பது வருடங்களுக்கு முன் பாரதி பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம் தர்மலிங்கம் விசாயத்தில் மும்முரமாக இருந்த காலம் அது.. காவிரியில் நீர் வரத்து நிரம்பி வழிந்த காலம்.. அவரிடமிருந்த பல ஏக்கர் நிலத்தில் நெல், வாழை, கரும்பு என்று பயிரிட்டு இருந்தார்... அப்பொழுது எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருக்கும் அந்த கிராமத்தில்...

அவர் காலை எழுந்த உடனே ஒரு முறை தன் வயல்களை சென்று சுற்றி பார்த்து விட்டு காவிரி ஆற்றிலிருந்து வாய்க்கால் வழியாக ஊருக்குள் வரும் தண்ணியை அந்தந்த வயலுக்கு திருப்பி விட்டு வந்த பின்பே காலை உணவை உண்பார்...

இந்த நிலையில் தான் அரசாங்கம் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது(Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, 2005 (MGNREGA)) ..வேலை இல்லாமல் வறுமையில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக கொண்டு வந்த திட்டம்....

அதோடு இந்த திட்டத்தின் மூலமாக புதிய குளங்களை உருவாக்குதல், தற்போதுள்ள குளங்கள், குட்டைகள், ஊரணிகள் மற்றும் கோவில் குளங்கள் ஆகியவற்றை மேம்படுத்துதல், புதிய சாலைகள் அமைத்தல். நீர் பாதுகாப்பு / மண் பாதுகாப்பு நடவடிக்கைகள் / வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் (water conservation/soil conservation measures/flood protection measure) போன்ற பல நல்ல திட்டங்கள் இந்த வேலை வாய்ப்பின் வழியாக நிறைவேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டது...

(இந்த திட்டம் மட்டும் நல்ல படியாக நிறைவேறி இருந்தால் இந்த வருடம் திரண்டு வந்த வெள்ள நீர் வீணாகி இருக்காது... அதை நல்ல படியாக சேமித்து இன்னும் விவசாயத்தை பெருக்கி இருந்திருக்கலாம்.... )

திட்டம் என்னவோ நல்லதாகத் தான் இருந்தது.. ஆனால் இந்த வேலை வாய்ப்பிற்காக சென்ற மக்கள் முழுவதுமாக வேலை செய்வதில்லை.. தினமும் ஒரு மணிநேரம் பேருக்கு வேலை செய்து விட்டு அங்கு உட்கார்ந்து கதை அடித்துவிட்டு திரும்பினர்....



இதை கண்ட மற்ற விவசாயத்திற்கு உதவிய தொழிலாளர்களும்

“இங்கு விவசாயத்தில் ஒரு நாள் முழுவதும் உடலை வறுத்தி வேலை செய்யனும்.. அங்கு போனால் உழைக்காமல் காசு வந்து விடுகிறது” என்று எண்ணி, விவசாயத்தை விட்டு

அந்த திட்டதில் சுலபமாக காசு கிடைக்கிறது என்று அங்கு சென்று விட்டனர்...

நாற்று நட, களை பறிக்க, வாழை மரங்களுக்கு உரம் வைக்க என்று முக்கியமான வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் தடுமாற ஆரம்பித்தனர் விவசாயம் செய்தவர்கள்...

தர்மலிங்கமும் தன் வயலுக்கு வேலை செய்ய ஆட்கள் இல்லாததால் என்ன செய்வது என்று முழித்த நேரம் பாரதி தான் தங்கள் குடும்பம் அனைவரையுமே வயலில் இறங்கி வேலை செய்ய வைத்தாள் அப்போதைய நிலைய சமாளிக்க என்று....

ஏற்கனவே அவர்கள் எல்லாரும் சிறு சிறு வேலை செய்து வந்ததால் ஓரளவுக்கு உதவ முடிந்தது... அதோடு பக்கத்து வயலுக்கு சொந்தக்காரர்களும் ஒருவருக்கொருவர் மாற்றி உதவி செய்தனர்..

இந்த நிலையில் பாரதி பள்ளி படிப்பை முடித்து +2 ல் நல்ல மதிப்பெண்கள் பெற்றே தேறி இருந்தாள்... விடுமுறை நட்களில் முழுவதும் தோட்டத்தில் உழன்றவளுக்கு அதற்கு மேல படிக்க விருப்பமில்லை.. விருப்பமில்லை என்பதை விட தான் கல்லூரிக்கு போய் விட்டால் இங்கு ஒரு ஆள் குறையும்.. அப்பா எப்படி சமாளிப்பார் என்றே மறுத்து விட்டாள்

தர்மலிங்கம் எவ்வளவோ வற்புருத்தியும்

“அப்பா... நான் போய் படித்து ஒரு டிகிரி வாங்கினாலும் இங்க இருக்கிற குப்பனையோ சுப்பனையோ கட்டிகிட்டு விவசாயத்தை தான் பார்க்கனும்.. அதுக்கு போய் நான் ஏன் டிகிரி படிக்கனும்.. அந்த ஏட்டு சுரக்காய் நம்ம கறிக்கு உதவாது.. அந்த மூன்று வருடத்தில் நம்ம விவசாயத்துல எதுவும் புதுசா செய்யலாமா, குறைந்த ஆட்களை வைத்து எப்படி சமாளிப்பது என்று பார்க்கலாம் பா...

நான் படிக்காட்ட என்ன?? .. என் தம்பி தங்கையை நல்லா படிக்க வைக்கலாம்.. இந்த பேச்சை இதோடு விடுங்க” என்று முடித்து விட்டாள்..

அவள் ஒன்றை பிடித்து விட்டாள் அவளை மாற்ற முடியாது என்று தெரிந்ததால் தர்மலிங்கமும் அதோடு விட்டு விட்டார்...

பாரதிக்கு மட்டும் தன் வயது பெண்கள் காலையில் விதவிதமான உடை அணிந்து, கையில் புத்தகத்தை தூக்கிக்கொண்டு கல்லூரிக்கு ஸ்டைலாக செல்லும் பொழுது தான் மட்டும் சேற்றில் நின்று கொண்டிருப்பது கொஞ்சம் மனது வலிக்கும்...

“எல்லாரும் இப்படி பையை தூக்கிட்டு போய்ட்டா அப்புறம் அவங்க சாப்பிட யாரு சாப்பாடு போடுவாங்களாம்” என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டு தன் வேலையை கவனிப்பாள்...

அடுத்த இரண்டு வருடம் ஒரு வழியாக சமாளிக்க முடிந்தது..சின்ன சின்ன கருவிகள் வர ஆரம்பித்தன.. அதை வைத்துக்கொண்டு கொஞ்சம் சமாளிக்க முடிந்தது.. எல்லாம் ஓரளவு நல்லா போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென்று காவிரியில் நீர் வரத்து குறைந்தது மழை இல்லாததால்..

அந்த வருடம் பயிரிட்டிருந்த பயிர்களை காப்பாற்றவே பெரும் பாடாக இருந்தது.. ஆள் துழை கிணற்றை அமைத்து கொஞ்சம் சமாளித்தனர்.. அதுவும் இலவச மின்சாரம் இல்லாததால் டீசல் விலைக்கு வாங்கி ஊற்றி சமாளிக்க வேண்டியதாயிருந்தது.

இந்த நிலையும் அந்த தானே புயலால் ஒரு வருடமாக வளர்ந்து வந்த வாழை மரங்கள் கடைசி நிலையில் வேரோடு சாய்ந்தன.. அதில் பலத்த அடி வாங்கியது விவசாயம்.. அதை சரி பண்ணி மீண்டும் விவசாயத்தை தொடர கையில் பணம் இல்லாததால் அவ்வளவு ஏக்கரிலும் பயிரிட முடியாமல் கொஞ்சமாக சுருங்கியது அவர்கள் விவசாயம்.. அதுவும் கடைசியில் நீர் இல்லாததால் வறண்டு போனது....

இந்த நிலையில் தான் பாரதி தன் குடும்ப நிலையை சமாளிக்க ஏதாவது வேலைக்கு செல்வது என்று முடிவு செய்தாள்.. அப்பொழுது திருச்சியில் ஒரு மருத்துவமனைக்கு ரிஸப்னிஷ்ட் வேலை இருப்பதாக தெரியவும் பாரதி சென்று டாக்டர் கமலாவை பார்த்தாள்..

முதலில் அவள் +2 தான் படித்திருக்கிறாள் என்று தயங்கியவர் பின் பாரதியின் கலகல பேச்சும் யாரிடமும் இயல்பாக பழகும் குணத்தையும் கண்டு அவளை ரிஸப்ஷனில் நியமித்தார்... பாரதிக்கும் அந்த வேலை மிகவும் பிடித்துவிட்டதால் சீக்கிரம் ரிஸப்ஷ்னையும் தாண்டி மற்ற டாக்டர்கள் நர்ஸ்களுக்கு உதவுவது, துணை இல்லாத நோயாளிகள் யாராவது அட்மிட் ஆனால் அவங்க கூட இருந்து பார்த்துக்கறது என்று அங்கு ஆள் இன் ஆள் ஆகிப்போனாள்...

தன் கடந்த காலத்தையும் தான் படிக்க முடியாமல் போன கதையையும் சுசிலாவிடம் சொல்லி பெருமூச்சு விட்டாள் பாரதி..

“எந்த விவசாயத்திற்காக நான் என் படிப்பை தொடராமல் விட்டேனோ, அந்த விவசாயமே எங்களை கை விட்டு விட்டது டாக்டர்” என்று கண் கலங்கினாள்...

அவளின் அந்த நிலையை கண்டு சுசிலாவின் கண்களும் கலங்கியது... இதுதான் இன்றைய பல விவசாய குடும்பங்களின் நிலை போல.. அதனால் தான் யாரும் விவசாயத்தை விரும்பி செய்ய முன் வர மாட்டேங்குறாங்க.. எல்லாரும் ஏசி அறையில் உட்கார்ந்து வேலை செய்யும் வேலையை மட்டுமே பெரிதாக கருதுகின்றனர்” என்று அவரும் வருந்தியவர் பின் பாரதியிடம்

“நீ கவலைப்படாத பாரதி.. எப்படியும் ஒரு நல்ல வழி கிடைக்கும்... உங்க விவசாயம் திரும்பவும் தழைக்கும் “என்று ஆறுதல் கூறினார்...

“ஹ்ம்ம்ம் பார்க்கலாம் டாக்டர்... உங்க ஆறுதலுக்கு ரொம்ப நன்றி டாக்டர் “ என்றாள் தன்னை சமாளித்துக்கொண்டு

“ஹ்ம்ம்ம் சரி பாரதி....நாம இப்ப கதையை பார்க்கலாம்... உனக்கு படிக்கிறதுல ஆர்வம் இருக்கிறதால ஒன்னு செய்.. நீ வீடல இருந்துகிட்டே தொலை தூர கல்வி முறையில் ஏதாவது ஒரு டிகிரி பண்ணு... “ என்றார்

அதை கேட்டதும் அவள் மகிழ்ந்து போய்

“ஹ்ம்ம் சரி டாக்டர்..இது நல்ல ஐடியா... அப்ப என்ன படிக்கலாம்னு நீங்களே சொல்லுங்க” என்றாள் ஆர்வமாக..

சுசிலா சிறிது நேரம் யோசித்தவர்.

“ஹ்ம்ம்ம் நீ B.A Psychology எடுத்து படி.. இப்ப இருக்கிற தலைமுறையில் IT நிறுவனங்களில் வேலை செய்பவர்கலுக்கு தான் மனம் அழுத்தம் அதிகம் என்று இருந்த நிலை மாறி L.K.G படிக்கிற குழந்தைக்கு கூட மனம் அழுத்தம் என்று வந்து நிக்கிறாங்க...

நிறைய பேர் பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிலிருந்து எப்படி வெளியில் வருவது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர்...இந்த மாதிரி இருப்பவர்களுக்கு நல்ல கவுன்ஸ்லிங் தேவைப்படுது... இனி வரும் காலங்களில் இந்த துறைக்கு நிறைய வேலை வாய்ப்பும் இருக்கு...

உன் எதிர்காலத்துக்கும் நல்லது.. அதோடு உனக்கு இயல்பாகவே அடுத்தவங்ககிட்ட ஈஷியா அனுகற குணம் இருக்கு.. அதனால இந்த படிப்பு உனக்கு சுலபமாகவும், உதவியாகவும் இருக்கும்... இனிமேல் இந்த மம்முட்டி, கடப்பாறையை தூக்கிட்டு சுத்தாம, உட்கார்ந்து படி” என்று திட்டி அவர் சொன்ன மாதிரியே அவளை சென்னை பல்கலை கலகத்தில் தொலை தூர கல்வி முறையில் சேர்த்துவிட்டார்...

அந்த Psychology சம்பந்தமான புத்தகத்தைத்தான் சுவராஷியமாக படித்துக் கொண்டிருந்தாள் பாரதி...

அதே சுவராஷியத்தில் இன்றும் வாயில் அழைப்பு மணி அடித்ததை கவனிக்க வில்லை... மீண்டும் வேகமாக அடிக்கவும் நினைவு வந்தவள் வேகமாக எழுந்து வாசலுக்கு விரைந்தாள்..

“ஐயோ!! இந்த சிடு மூஞ்சியாதான் இருக்கும்... இப்ப என்ன கத்தப் போகுதோ!! என்று பயந்தவாறே கதவை திறந்தாள்..

கதவை திறந்ததும் உள்ளே வேகமாக வந்தவன்

“ஏய்... உனக்கு காது என்ன செவுடா?? எத்தனை தடவை பெல் அடிக்கிறது .. “ என்று கத்தியவன் பேந்த முழித்து கொண்டு நின்று கொண்டிருந்தவளின் அந்த அகன்ற பெரிய கண்களை கண்டான்... அதோடு இதுவரை சுடிதாரில் சின்ன பெண்ணாக இருந்தவள் இன்று புடவையில் நெடு நெடு வென்று வளர்ந்து அவன் தோளுக்கு மேலே தெரிந்தாள்...

அதுவும் அவளின் எளிமையான, எந்த ஒரு ஒப்பனையும் இல்லாத முகமும் அவள் நெற்றியில் அணிந்திருந்த திருநீறும் அவனுக்குள் எதையோ சாந்த படுத்தியது... அவளையே சிறிது நேரம் பார்த்தவன் பின் சமாளித்துக்கொண்டு

“என்ன?? நாம ஹாஸ்பிட்டலுக்கு தான போறோம். எதுக்கு இப்படி மினுக்கிக்கிட்டு நிக்கற?? .. என்ன என்னை மயக்கவா?? “ என்றான் அதே கடுப்போடு...

“ஆமாம்.. நீங்க பெரிய மன்மதன்.. நான் ரதி.. உஙளை மயக்கறேனாக்கும்” என்று முகத்தை நொடித்தவள் அவனை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றாள்.. கிச்சனுக்குள் சென்று அவள் செய்து வைத்திருந்த சிற்றுண்டியை எடுத்து வந்து டைனிங் டேபிலில் வைத்து விட்டு

“சீக்கிரம் போய் ரிப்ரெஸ் ஆகிட்டு வாங்க.. இதை சாப்பிட்டுட்டு கிளம்பலாம்” என்று அவனை பார்த்து நேராக சொன்னவள் பின் ஷோபாவில் அமர்ந்து தன் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்......

அவளின் இந்த செயலை கண்டு அசந்து நின்றான் சில விநாடிகள்...காலையில் கத்திவிட்டு சென்றதுக்கு அவள் பயந்து கொண்டு இருப்பாள் என்று நினைத்தவனுக்கு அவள் கொஞ்சம் கூட அலட்டிக்காமல் இருந்தது அவனை கொஞ்சம் அசைத்தது... அதற்குள் சுதாரித்துக் கொண்டு

“ஏய்.. நீ என்ன எனக்கு ஆர்டர் போடற?? என் வேலையை பார்க்க எனக்கு தெரியும்” என்றவன் பின் மேல சென்று ரிப்ரெஸ் ஆகி வந்தான்.. முன்பு பார்மல் ட்ரெஸ்ஷில் இருந்தவன் இப்பொழுது ஜீன்ஸ்ம் டீ ஷர்ட் ம் அணிந்திருந்தான்.. அவன் டைனிங் டேபிலுக்கு வரவும் ஹாட் பாக்ஷில் இருந்த வாழைக்காய் பஜ்ஜியை தட்டில் எடுத்து வைத்து அவனிடம் கொடுத்தாள்...

இது அவனுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி..

“எப்படி இவளுக்கு தெரிந்தது என்று யோசித்தவன் எல்லாம் இந்த அம்மாவோட வேலையாதான் இருக்கும் என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டே அந்த பஜ்ஜியை ருசித்து சாப்பிட்டான்.. பின் அவள் கொண்டு வந்து வைத்த இஞ்ஜி டீயும் சுவையாக இருக்க குடித்து முடித்தவன்

“சரி போகலாம் வா” என்று வெளியில் நடந்தான்.. 



வளும் அவசரமாக எல்லாம் எடுத்து வைத்து விட்டு அவனுடன் நடந்தாள்.. காரை அடைந்ததும், அதை எப்படி திறக்க என்று தெரியாமல் முழித்து கொண்டு நின்றாள்... பின் அவனே கார் கதவை திறந்து விட்டவன்

“என்ன மகாராணிக்கு கதவு திறந்து விட்டால் தான் ஏறுவீங்களா?” என்றான் நக்கலாக..

அவள் பதில் எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்தவள் வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்... காரை ஓட்ட ஆரம்பித்தவன்

அப்பொழுதுதான் அவள் சேலை கட்டி இருப்பது நினைவு வந்தவனாக அவன் பார்வை அவளின் இடுப்பிற்கு சென்றது அவன் குழந்தையை காண....

ஆனால் அவள் அவனுக்கு இடபக்கம் அமர்ந்து இருந்ததாலும் அவளின் வயிறு மறுபக்கம் இருந்ததால் அவனுக்கு பார்க்க முடியவில்லை.....

“சே!! இதுக்குதான் U.S ல ஓட்டற மாதிரி இங்கயும் இடதுபக்கம் ஓட்டற மாதிரி இருந்திருக்கனும்” என்று புலம்பியவன் தன் காரில் கவனத்தை செலுத்தினான்...

ஆனாலும் அவள் அமைதியாக வருவது அவனுக்கு என்னவோ போல் இருந்தது.. ஒரு வேளை காலையில ஓவரா சத்தம் போட்டதால அமைதியா ஆயிட்டாளா?? “என்று யோசித்தான்..

பின் அவனே பேச்சை ஆரம்பித்தான்..

“ஆமா நீ எந்த ஊர் ?? “ என்றான்

“நான் எந்த ஊரா இருந்தா என்ன ?? “என்றவள் தன் நாக்கை கடித்து கொண்டாள்.. அவனுடன் எதுவும் சண்டை போடக்கூடாது என்று நினைத்தால் வேணும்னே வம்பு இழுக்கறானே என்று திட்ட ஆரம்பித்தாள்..

“ஆஹா...தூங்கின சிங்கம் எழுந்திருச்சிருச்சு .. “ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டவன்

“ஹ்ம்ம்ம் நீ பாட்டுக்கு எஸ்கேப் ஆகிட்டனா.. அதுக்குத் தான் உன் ஊர் பேரெல்லம் தெரிஞ்சுக்கனும் இல்ல “என்றான் நக்கலாக...

“ஹ்ம்ம்ம் உங்க குழந்தையை வச்சு கிட்டு நான் எஸ்கேப் ஆகி என்ன பண்றதாம்.. இதுக்கு யாரு சோறு போடறதாம்?? ”..

“ஹ்ம்ம் இந்த குழந்தையை வச்சு எங்களை மிரட்டினா?? .. எங்க அம்மா இருக்காங்களே, இந்த குழந்தைக்காக சொத்து முழுவதும் கேட்டால் கூட கொடுத்துடுவாங்க... “

“ஐ!! இது நல்ல ஐடியாவாதான் இருக்கு... பேசாம நீங்களே ஒரு கொள்ளை கூட்டத்துக்கு தலைவனா ஆயிடலாம்.. இது மாதிரி நிறைய ஐடியா அவங்களுக்குத்தான் தேவையா இருக்கும்ம்.... நான் வந்தது என் அத்தைக்காக மட்டும்தான்.. உங்க ஐடியா ஒன்னும் எனக்கு தேவை இல்லை... ” என்று முறைத்தாள்

“ஹ்ம்ம்ம் நம்பிட்டேன்... நம்பிட்டேன்.. சரி சரி உன் ஊர் பேர சொல்லு.. “

விடமாட்டான் போல என்று திட்டியவள்

“திருச்சி பக்கத்துல ஒரு கிராமம்” என்று முனகினாள்..

“என்னது?? கிராமமா?? அப்ப நீ பட்டிக்காடா?? “என்று சிரித்தான்..

“ஹலோ!! எங்க ஊர் ஒன்னும் பட்டிக்காடு இல்லை.. “

“பின்ன என்ன மெட்ரோ பொலிடன் சிட்டியா?? ஆமா எத்தன மால் இருக்கு உங்க ஊர்ல?? “

“மால் னா ?? “என்று புரியாமல் அவனை பார்த்தாள்..

“என்னது ?? மால் னா தெரியாதா?? சுத்தம் “என்றவன் அருகில் தெரிந்த ஒரு மால் ஐ காட்டி

“அங்க பார். உயரமா ஒரு பில்டிங் தெரியுது இல்லை... அது தான் மால்.. எல்லா கடைகளும் ஒரே இடத்தில இருக்கும்... ட்ரெஸ், க்ரோசரிஸ், தியேட்டர்னு எல்லாமே இங்க இருக்கும் “ என்றான்..

“ஆங்.. நம்ம கடை வீதி.. அதெல்லாம் திருச்சியில் தான் இருக்கு “

“என்னது?? கடை வீதியா... சரிதான்.. சரி எத்தனை தியேட்டர் இருக்கு உங்க ஊர்ல?? “

“தியேட்டர் எல்லாம் எங்க ஊருக்கு எதுக்கு?? எங்க மக்களே நாள் முழுவதும் வயல்ல வேலை செய்றவங்க.. அதுலயே பொழுது போய்டும்... அதெல்லாம் பொழுது போகாமல் வெட்டியா சுத்தற உங்கள மாதிரி அளுங்களுக்குத்தான் தேவை”

“ஹ்ம்ம்ம் சரி சரி... நீங்களாம் ரொம்பவும் பிஷியான ஆளுங்கதான்... ஆமா ஹாஸ்பிட்டலாவது இருக்கா..?? “

“ம்ஹும்ம்.. அதுக்கும் திருச்சிக்குத்தான் போகனும்” என்றாள் கொஞ்சம் வருத்தமாக.. தன் அப்பாவிற்கு முதல் அட்டாக் வந்த பொழுது அங்கு சரியான மருத்துவ வசதி இல்லாததால் அவசர அவசரமாக அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு கார் வச்சிருந்தவர்களிடம் கெஞ்சி அவரை அவசர அவசரமாக திருச்சி கொண்டு சென்றது நினைவு வந்தது..

அதுவும் கொஞ்சம் நேரம் தாமதம் ஆகியிருந்தாலும் அவர் உயிரை காப்பாற்றியிருக்க முடியாது என்று சொன்ன பொழுது உடல் நடுங்கியது அவளுக்கு...

“எப்படியாவது ஒரு சின்ன ஹாஸ்பிட்டலாவது எங்க ஊருக்கு வரணும்.. அட்லீஸ்ட் ஆம்புலன்ஸ் ஆ வது அங்க இருக்கிற எல்லா கிராமங்களுக்கும் சீக்கிரம் ரீச் ஆகற மாதிரி செய்யனும்... கமலா மேடம் கிட்ட இதைப்பத்தி பேசணும் “ என்று நினைத்துக் கொண்டாள்..

அவள் அமைதியாக இருப்பதைக் கண்டவன் அவளை மேலும் சீண்ட எண்ணி

“ஹலோ... என்ன ஒரு மால் இல்லை, தியேட்டர் இல்ல ஏன் ஒரு ஹாஸ்பிட்டல், பள்ளிக்கூடம் கூட இல்லை.. இந்த ஊரை பட்டிக்காடு னு சொல்லாமல் என்ன சொல்லுவாங்களாம்... பட்டிக்காடு... பட்டிக்காடு “என்று சிரித்தான்..

“ஹலோ... உங்க மாலும், தியேட்டரும் மூனு வேளையும் நீங்க கொட்டிக்க சோறு போடாது. மூனு வேளையும் சாப்பிடறீங்க இல்ல அது எங்க ஊர் மாதிரி கிராமத்துல இருந்து வர்ரது தான் ஞாபகம் இருக்கட்டும்” என்று முறைத்தாள்..

“ஓகே .. ஓகெ... ஒத்துக்கறேன்... உங்க ஊர் பெரிய சிட்டிதான்... அத விடு.. என்ன படிச்சிருக்க?? “ என்றான்

“ஐயோ! ஊரை சொன்னதுக்கே இப்படி ஓட்டறான்.. இதுல நான் +2 தான் சொன்னா இன்னும் ஓட்டுவானே... இப்ப என்ன பண்ண? “ என்று யோசித்தாள்...

“என்ன நீ என்ன படிச்சேனு மறந்து போச்சா?? .. அவ்வளவு பெரிய படிப்பா படிச்சிருக்க” என்றான் நக்கலாக

“நான் என்ன படிச்சா உங்களுக்கு என்ன??...” என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்..

“ஆஹா... அப்ப நீ மூனாங் கிளாஸ் பெயில்.. “என்று சிரித்தான்...

“ஹலோ!!! நான் ஒன்னும் மூனாங்கிளாஸ் பெயில் இல்லை.. +2 பாஸாக்கும்... “ என்று சொன்னவள் நாக்கை கடித்துக் கொண்டாள்..

“சே!! இவன் நம்ம கிட்டயே போட்டு வாங்கிட்டானே... இவன் கிட்ட இனிமேல் பாத்துதான் பேசனும்” என்று நினைத்தாள்

“ஹா ஹா ஹா எப்படி உன் வாயாலயே சொல்ல வச்சேன்... “என்று உல்லாசமாக சிரித்தான்..

அவனின் சிரிப்பை கண்டவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது..

இந்த சிடு மூஞ்சி கூட சிரிக்குதே.. இவன் சிரிக்கும் பொழுது எவ்வளவு நல்லா இருக்கு.. அந்த போட்டோவில் இருப்பதை விட இன்னும் வசீகரமாக இருந்தது அவனின் சிரிப்பு... அவனையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

“ஏய் பட்டிக்காடு... என்ன இப்படி நேரடியாகவே என்னை சைட் அடிக்கிற?? ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம் தான்.. என்ன சூப்பரா இருக்கேனா?? “என்றான் குறும்பாக...

“ஆமா.. ஏதோ கொஞ்சம் சுமார் மூஞ்சி குமார் மாதிரி இருக்கீங்க “ என்றாள் அவளும் நக்கலாக..

“ஹ்ம்ம்ம் என்ன.. சுமார் மூஞ்சி குமாரா?? எல்லாம் என் நேரம்... இந்த பட்டிக்காட்டு படிக்காத மேதையை போய் தேடி பிடிச்சிருக்காங்களே எங்க அம்மா... ”

“ஆமாம்.. நீங்க மட்டும் என்னவாம்... என் ஜானகி அத்தை எவ்வளவு தங்கமானவங்க.. அவங்க போய் தவமா தவம் இருந்து இந்த மாதிரி ஒரு சிடு மூஞ்சியை பெத்து வச்சிருக்காங்களே.. எல்லாம் என் நேரம் ” என்று திருப்பினாள்..

“ஏய்... யாரை பார்த்து சிடு மூஞ்சிங்கிற... “

“ஏன் உங்களை பார்த்துதான்.. உங்க மூஞ்சிய கண்ணாடியில நல்லா பாருங்க.. அப்படியே சிடு மூஞ்சி அய்யனார் மாரியே இருப்பீங்க... “

“இரு இரு.. நான் சிடு மூஞ்சியா... விட்டுக்கு போய் உன்ன வச்சுக்கறேன் “ என்று முறைத்தான்...

"வவ்வே... பாருங்க பாருங்க..." என்று பலிப்பு காட்டினாள்..

இருவரும் மாறி மாறி சண்டை போட்டு கொண்டே வர ஒரு வழியாக ஹாஸ்பிட்டல் வந்தது..அதை கண்டதும் திடுக்கிட்ட பாரதி

"என்ன அதுக்குள்ள ஹாஸ்பிட்டல் வந்துட்டமா?? " என்றாள்

"ஏன்.. இது என்ன உங்க ஊர் மாட்டு வண்டினு நினைச்சியா... கார் மா கார்... ஃபாஸ்டா ஓடும்" என்றான் நக்கலாக...

“ஆமா.. நாங்க கார் ஐ பார்த்ததே இல்லை பாரு..” என்று முகத்தை நொடித்தாள்

பின் பார்க்கிங்கை அடைந்தவன் காரை ஒரு இடத்தில் பார்க் பண்ணி விட்டு

"ஹ்ம்ம்ம் இறங்கு.. ” என்றான் அவளை பார்த்து

அதைக்கேட்டு கொஞ்சம் தயங்கியவள்

"வந்து... வந்து.. நாம பக்கத்துல இருக்கிற முருகன் கோயிலுக்கு போய்ட்டு வந்திடலாமா??? " என்றாள் தயங்கியவாறு

"எதுக்கு?? " என்று புருவங்களை உயர்த்தினான்

"இல்ல.. நானும் அத்தையும் வரும்பொழுது ஒவ்வொரு முறையும் அந்த கோயிலுக்கு போய்ட்டு தான் இங்க வருவோம்" என்று இழுத்தாள்

"ஏய்.. நீ என்ன என் பொண்டாட்டியா.. ஊரெல்லாம் உன்னை கூட்டி கிட்டு சுத்த.. அதெல்லாம் முடியாது இறங்கு " என்றான்

"இல்லை.. நான் மட்டுமாவது போய்ட்டு சீக்கிரம் வந்திடறேன்.. " என்றாள் கெஞ்சும் குரலில்...

"அப்படி என்ன இருக்கு அங்க?? ” என்றான்

"ஹ்ம்ம்ம்ம் வந்து முதல் முறையா குழந்தையை ஸ்கேன் பண்ணப்போறாங்க... எல்லாம் நல்ல படியா இருக்கனும்... அதான் கொஞ்சம் பயமா இருக்கு... கோயிலுக்கு போய்ட்டு வந்திட்டா தைரியமா இருக்கும் " என்று கெஞ்சினாள்..

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. சுசிலாம்மா எல்லாம் பார்த்துப்பாங்க... நீ வேணா இங்க இருந்தே வேண்டிக்கோ... அதான் ஏற்கனவே வேண்டி கிட்டு பெருசா பட்டைய போட்டிருக்க இல்லை.. அப்புறம் என்ன..

அந்த முருகன் உன் கூடவே இருப்பான்.. அங்க போய் தான் பார்க்கனும்னு இல்ல.. சீக்கிரம் இறங்கு.. நேரம் ஆகுது" என்று அதட்டினான்..

"சிடுமூஞ்சி... இவனை போய் இந்த அத்தை அனுப்பி வச்சிருக்காங்களே.. கொஞ்சம் கூட அடுத்தவங்களோட பீலிங்சை புரிஞ்சுக்காதவன்... நான் பட்டையா போட்டிருக்கேன்?? அந்த முருகனையே பலிச்ச இல்ல.. அவனோடவேலை வச்சே உன் கண்ணை குத்த சொல்றேன்... " என்று திட்டிக்கொண்டே காரை விட்டு இறங்கியவள் அவன் முன்னே நடக்க அவனின் வேக நடைக்கு ஈடு கொடுக்க அவனோடு ஓட வேண்டியதாயிருந்தது அவளுக்கு...

ஒரு வழியாக சுசிலாவின் அறையை அடைந்து அங்கு மற்ற பேசன்ட்ஸ் யாரும் இல்லாததால் இவர்களது கடைசி அப்பாயின்ட்மென்ட் என்பதால் இவர்களை உடனே உள்ளே விட்டாள் அங்கு இருந்த அட்டென்டர்...

பின் கதவை திறந்து கொண்டு இருவரும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்தனர்..

ஏதோ ஒரு பேசன்ட் பைலை ஆராய்ந்து கொண்டிருந்த சுசிலா கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பவும் இருவரும் ஜோடியாக உள்ளே வருவதை கண்டு கண்கள் குளிர்ந்து போனது அவருக்கு...

“என்ன ஒரு பொருத்தம் இருவருக்கும்.. ஜானகி மட்டும் இந்த கோலத்தை பார்த்து இருந்தால் துள்ளி குதித்திருப்பாள் “என்று சிரித்துக் கொண்டார்.. தன் மகனின் முகத்தில் தெரிந்த சிரிப்பும் கண்ணில் மின்னிய அந்த குறும்பும் அவருக்கு பழைய ஆதியை நினைவு படுத்த வேகமாக எழுந்து வந்து அவனைக் கட்டிக்கொண்டார்....

மூன்று வருடங்களுக்கு பிறகு அவன் கண்ணில் இந்த ஒளியை பார்க்கிறார் இல்லையா.. .அவருக்கே நம்ப முடியவில்லை...

அவரின் நிலை ஆதிக்கும் புரிந்தது... அவனுக்கே ஆச்சர்யம் எப்படி தன்னால் இப்படி சிரித்து பேச முடிந்தது இதுவரை என்று.. காரில் வரும்பொழுது பாரதியிடம் வம்பு இழுத்துக்கொண்டே சிரித்துக் கொண்டே வந்தவன் அதே புன்னகையுடன் சுசிலா முன் நிற்கவும் அவர் உணர்ச்சி வசப்படுகிறார் என்று புரிந்தது...

அவரின் கண்கள் கலங்கி இருப்பதை கண்டவன் , அவரின் முதுகை ஆதரவாக தடவி விட்டான்...

“என்னாச்சுமா??? “ என்றான் மெல்லிய குரலில்.. அவன் குரலுமே தழுதழுத்தது...

“ஒன்னும் இல்லை கண்ணா... எங்க பையன் திரும்ப கிடைச்சிட்டான்... உன்னை இப்படி பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு....அதான் சந்தோஷத்துல என் கண்ணு கொஞ்சம் வேர்க்குது “ என்று மீண்டும் அவனை இறுக்கி கட்டிக்கொண்டு அவன் மார்பு வரைக்குமே இருந்தவர் அவன் மார்பில் முத்தமிட்டு சிரித்தார் ஆனந்தத்தில்...

அவனும் சிரித்துக்கொண்டே குனிந்து அவரின் முன் உச்சி நெற்றியில் முத்தமிட்டு மீண்டும் அவரை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.. இருவருக்குமே ஒருவித நிம்மதியாக, சந்தோஷமாக, மனம் நிறைந்து இருந்தது....அப்படியே நின்று இருந்தனர் சில விநாடிகள்

இதை கண்ட பாரதிக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருந்தது..அந்த மோன நிலையை கலைக்க எண்ணியவள்

“ம்ஹும்ம்.. “ என்று தொண்டையை செருமி

“என்ன நடக்குது டாக்டர் இங்க?? .. ஏதோ டீவி சீரியல் பார்க்கற மாதிரி இருக்கு...ஆனா கதை தான் எனக்கு புரியல “ என்று சிரித்தாள்..

அவளின் சிரிப்பைக் கண்டு தன் நிலைக்கு வந்தவர் அப்பொழுதுதான் பாரதியை கவனித்தவர்

“ஹே!! பாரதி... வா வா வா . .. என் பையனை சிரிச்சு பார்த்த சந்தோசத்துல உன்னை மறந்துட்டேன்... நீ எப்படி இருக்க” என்று அவளையும் கட்டிக்கொண்டார்...

“ஸ் அப்பாடா.. ஒரு வழியா நான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சனா.?? எங்க என்னை பார்த்து நீ யார் என்று கேட்டுவீங்களோனு நினைச்சேன்” என்று கன்னம் குழிய சிரித்தாள்...

அவளின் அந்த சிரிப்பையே இமைக்காமல் பார்த்தான் ஆதி சில விநாடிகள்.. இதுவரை அவன் முன்னே அவள் சிரித்ததில்லை என்று அப்பொழுதுதான் உறைத்தது அவனுக்கு.. அவனின் பார்வை அவளின் கன்னக்குழியில் சென்று மயங்கி நின்றது...

அவனின் அந்த பார்வையை சுசிலாவும் கண்டு கொண்டார்..

“ஆகா.. ஜானகியோட ப்ளான் வொர்க் அவுட் ஆக ஆரம்பிச்சிருச்சு போல... பையன் இப்பவே ப்ளாட் ஆகிட்டானே... ஜானு.. உன் மூளையே மூளை “ என்று அவசரமாக மனதுக்குள் தன் தோழியிடம் பேசி சிரித்துக் கொண்டார்...

பின் மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு

“சரி வாங்க.. ஸ்கேன் பண்ணலாம்” என்று எழுந்தார் சுசிலா... அதை கேட்டதும் அதுவரை கல கல னு சிரித்துக்கொண்டிருந்த பாரதியின் முகம் கொஞ்சம் வெளிறியது...

அதை கண்ட சுசிலா

“என்னாச்சு பாரதி?? “என்றார் கலக்கமாக

“ஒன்னுமில்லை டாக்டர்.. கொஞ்சம் பயமா இருக்கு... எல்லாம் சரியா இருக்கும் இல்லை “என்றாள்

ஆதிக்குமே அவள் பயப்படுவதை கண்டு கொஞ்சம் பயமாக இருந்தது...

“ஹே லூசு.. அதெல்லாம் ஒன்னும் பயப்படற மாதிரி இருக்காது.. இது சும்மா நார்மல் ஸ்கேன் தான்.. நீ ஒன்னும் பயந்துக்காத “ என்று அவளை அனைத்து உள்ளே இருந்த அறைக்கு அழைத்து சென்றார்..

ஆதி தயங்கி நின்றான்..அவனுக்கும் அவன் குழந்தையை காண ஆவலாக இருந்தது... ஆனால் எப்படி சொல்வது என்று முழித்தான்..

அதை புரிந்து கொண்ட சுசிலா,

“நீ கொஞ்ச நேரம் இங்க இரு கண்ணா.. நான் எல்லாம் ரெடி பண்ணிட்டு உன்னை கூப்பிடறேன்.. நீயும் பார் உன் பேபி எப்படி பார்ம் ஆகியிருக்குனு “ என்று சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார்...

உள்ளே சென்றவர் ஸ்கேன் பண்ணுவதற்கான கருவிகளை தயார் செய்து பாரதியின் புடவையை சிறிது இறக்கி வயிற்றில் அந்த ஜெல்லை தடவினார்..

பாரதி இன்னும் பயந்து கொண்டு இருந்தாள்... கண்களை மூடிக்கொண்டு ,மனதுக்குள் கந்த சஷ்டி கவசத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்...

பின் அவள் அருகில் அமர்ந்தவர் ஆதியையும் அழைத்து அங்கு தெரிந்த மானிட்டரை பார்க்க சொன்னார்...

பின் பாரதியின் வயிற்றில் அந்த ஸ்கேன் பண்ணும் கருவியை வைத்து இங்கும் அங்கும் நகர வைத்தார்...

பின் ஒரு சின்ன புள்ளியை போல இருந்ததை காட்டி

“டேய் கண்ணா.. இதுதான் உன் பேபி... உன் பேபியும் உன்னை மாதிரியே ஒரு இடத்துல நிக்கவே மாட்டேங்கறா...நகர்ந்து கிட்டே இருக்கா பாரேன்... என்னால பாய்ன்ட் அவுட் பண்ணவே முடியல ஸ்கேன் பண்ண.... சரியான வாலா வரும் போல “ என்று சிரித்தார் ஆனந்தத்தில்...

அவர் காட்டிய அந்த சின்ன பந்து போல இருந்ததை ஆசையாக பார்த்தான்..

“இது தான் என் பிரின்ஸஸா??? .. இவ்வளவு குட்டியா இருக்கே “ என்று நினைத்தவன்

“மா.. கை கால் எல்லாம் வந்திருச்சா ??.. ஒன்னும் தெரியலையே .. “என்றான் ஆர்வமாக

“ஹா ஹா ஹ.. இந்த ஸ்கேன்ல நீ போட்டோல பார்க்கிற மாதிரி கை கால் எல்லாம் அப்படியே தெரியாது கண்ணா .. இது பேபியோட பார்ட்ஸ் ஐ ஸ்கேன் பண்ணி எல்லாம் நார்மலா இருக்கானு காட்டும்.. இது தான் உன் பேபியோட ஹார்ட் பிட்.. என்று எதையோ காட்டினார்.. அதை கண்டதும் அவன் ஹார்ட் பிட் எகிறியது சந்தோஷத்தில்...

அவனுக்குள் ஆனந்த வெள்ளம் பாய்ந்தது.... அந்த குழந்தையை மானிட்டரிலயே தொட்டு பார்த்தவன் வெட்கப் பட்டு சிரித்தான்... அதை பார்க்கும் பொழுது சுசிலாவுக்கும் அவனின் அந்த வெட்க புன்னகை ஆனந்த கண்ணிரை வரவழைத்தது... தன்னை கட்டு படுத்தி கொண்டவர்..

பின் எல்லாம் சரி பார்த்து

“எல்லாம் நல்லா இருக்கு.. ஒரு பிரச்சனையும் இல்லை” என்று சிரித்தார்..அப்பொழுது தான் பாரதி நிம்மதியானாள்.. அதுவரை கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு இருந்தவள் மெல்ல கண்ணை திறந்தாள்... அவள் முகம் தெளிவானது இப்பொழுது...மனதுக்குள் அந்த முருகனுக்கு நன்றி சொல்லிக்கொண்டாள்..

அதுவரை மானிட்டரை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தவன் எதேச்சையாக பாரதியை பார்த்தான்.. அவன் பார்வை உடனே அவள் வயிற்றுக்கு தாவியது அவன் குழந்தையை காண ..

சரியாக அந்த நேரம் பாரதி அவள் புடவையை இழுத்து விட்டுக் கொண்டாள்...

சிறிது ஏமாற்றமடைந்தவன் பின் எழுந்து வெளியில் வந்தான்..

பாரதியும் எழுந்து அவள் புடவையை சரி பண்ணிக்கொண்டு வெளியில் வந்து சுசிலாவின் முன்னால் அமர்ந்தாள்..

“இப்ப திருப்தியா பாரதி??.. ஒன்னும் பயந்துக்காத... ஆமா வேற எதுவும் தொந்தரவு இருக்கா?? “என்றார்..

“ வேற எதுவும் பிரச்சனை இல்ல டாக்டர்..”

“வாமிட் எதுவும் இருக்கா” என்றார்.

“ம்ஹூம் அதெல்லாம் எதுவும் இல்லை டாக்டர்.. “

“ஹ்ம்ம்ம் ஆதி வயிற்றில் இருந்தப்போ ஜானகிக்கு 7 மாதம் வரைக்குமே வாமிட் நிக்கலை.. அவன் பிறக்கும் பொழுது அவ்வளவு முடி.. அவன் குழந்தைக்கும் முடி நிறைய இருக்கும்னு நினைக்கிறேன்.. “

அதை கேட்டதும் பாரதியின் கண்கள் அவனின் தலையை நோக்கியது இப்ப எப்படி இருக்கு என்று பார்க்கும் ஆவலில்.. இப்பவும் அதே கறுத்து அடர்ந்த கேசம் மேலும் அழகாக அதை முன்னால் ஒதுக்கி விட்டிருந்தான்.. அவள் அவனை பார்க்க அதே நேரம் அவள் பார்வையை கண்டு கொண்டவன்...

“கேடி.. என்னமோ தெரியாமல் என்னை பார்க்கறாளாம்” என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.. இவர்கள் இருவரின் பார்வையையும் சுசிலாவும் கண்டு கொண்டார்...

“ரெண்டும் சரியாதான் இருக்குங்க “ என்று சிரித்துக்கொண்டார்..

“சரி பாரதி.. .இந்த மாத்திரை எல்லாம் மறக்காமல் சாப்பிடு.. இது வாமிட் வந்தால் மட்டும் போடறது...” என்று சில மாத்திரைகளை எப்பொழுது சாப்பிடனும் என்று விளக்கினார்.. பின் ஆதியை பார்த்து

“கண்ணா, நீ பக்கத்துல இருக்கிற மெடிக்கல்லயே இதை எல்லாம் வாங்கிக்க..

“அப்புறம் கண்ணா.. சூப்பரா வெட்கப்படுற டா... என் பையன இப்படி பார்த்து ரெம்ப நாளாச்சு.. என் கண்ணே பட்டுடும் உனக்கு.. அம்மா கண்ணுதான் கொள்ளிக் கண்ணாம்.. அதனால, பாரதி, போன உடனே என் பையனுக்கு சுத்தி போடு “என்று . சிரித்தார்....

“ஆமா... இந்த சிடுமூஞ்சிக்கு சுத்திப்போடறு ஒன்னுதான் குறைச்சல்... “ என்று மனதுக்குள் முனகியவள்

“ஹ்ம்ம் ஓகே டாக்டர்.. “ என்று வெளியில் சிரித்தாள்..

பின் இருவரும் அவரிடம் விடை பெற்று வெளியில் வந்தனர்...

“ஏய்.. நீ இங்கயே இரு. நான் போய் இந்த மெடிசின்ஸ் வாங்கிட்டு வர்ரேன் “ என்று வெளியில் சென்றான்.. சென்றவன் திரும்ப வரவும் அவன் விட்டு சென்ற இடத்தில் பாரதி இல்லை...

“எங்க போய்ட்டா இந்த பட்டிக்காடு?? “என்று சுத்திலும் தேடினான்..

“ஒரு வேளை நான் பண்ணின டார்ச்சர்ல இனிமேல் தாங்க முடியாது என்று எஸ்கேப் ஆகிட்டாளா ??? அப்ப என் குழந்தை?? “ .ஒரு நிமிடம் திக் என்றது அவனுக்கு..பின் நாலா பக்கமும் தேட ஆரம்பித்தான் பதற்றத்துடன் ....

Comments

  1. அடேய் பேசறது எல்லாம்
    பேசிட்டு

    ReplyDelete
  2. Ivanellam konjam suthala vida um evan enna design ne therilayeah perumaleeee

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!