காதோடுதான் நான் பாடுவேன்-26



அத்தியாயம்-26 

ன்று ஞாயிற்றுகிழமை...

இந்த ஒரு நாள் மட்டும் எல்லோரும் நீண்ட நேரம் உறங்கி தாமதமாக எழுந்து சோம்பலாக காலை பணிகளை செய்வது வழக்கம்...

அந்த சோம்பல் ஞாயிற்றுகிழமை மதிய வேளையில் நிகிலன் காரை ஓட்டி கொண்டிருக்க, முன் இருக்கையில் அவன் அருகில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் மது...

அவள் மனமோ மகிழ்ச்சியில் குதித்து கொண்டிருந்தது... பின்ன இருக்காதா?? தன் திருமணத்திற்கு பிறகு தன் கணவனுடன் அதுவும் அபீசியல் விட்டு பெர்சனல் க்காக வெளியில் செல்வது இதுதான் முதல் முறை...

மற்ற நாட்களில் வேறு ஏதாவது அவள் படிப்புக்காகவோ இல்ல ஸ்போர்ட்ஸ் சம்பந்தமாகத்தான் அதுவும் சில முறை மட்டுமே அவளை தன்னுடன் அழைத்து சென்றிருக்கிறான்......

இது மாதிரி சொந்த வேலைக்காக அதுவும் விருந்துக்காக என்று இருவரும் எங்கயும் தனியாக சென்றதில்லை...

திருமணம் முடிந்து மறுவீட்டு அழைப்புக்காக ஒரு முறை தன் தாய் வீட்டுக்கு சென்று வந்ததுதான்.. அதன் பிறகு எத்தனையோ உறவினர்கள் விருந்து கொடுக்க அழைத்தார்கள் தான்..

அப்பொழுது இருவருமே தங்கள் திருமணத்தை வெறுத்து வேறவேற மனநிலையில் இருந்ததால் நிகிலன் வேலை இருப்பதாக சொல்லி மறுத்துவிட மதுவுக்கும் நிம்மதியாக இருந்தது....

இப்பொழுது அதை நினைத்து வருந்துவாள்... எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டமே என்று...

தன் மனதில் தன் கணவன் மீது காதல் வந்த பிறகு இன்றுதான் முதல் முதலாக வெளியில் செல்கிறாள்... இந்த விருந்துக்கு அழைத்த தன் புது உறவான அந்த கௌதம்க்கு மனதுக்குள் பல முறை நன்றி சொல்லி கொண்டு வந்தாள்...

இன்று கௌதம் ன் பிறந்த நாள்...

காலையிலயே நிகிலன் அழைத்து அவனுக்கு வாழ்த்து சொல்ல, கௌதம் அவன் வாழ்த்தை ஏற்று பின் மதியம் அவன் பிறந்த நாளுக்காக கேக் கட்டிங் ஏற்பாடு பண்ணியிருப்பதாகவும் அதோடு நிகிலனுக்கு திருமணத்திற்கு பிறகு விருந்து வைக்கவில்லை என்று அவன் மனைவி அவனை நச்சரிப்பதாகவும் சொல்லி, கண்டிப்பா அவனும் மதுவும் அவன் வீட்டிற்கு மதிய விருந்துக்கு வரவேண்டும்.. “ என்றான் கௌதம்....

அதை கேட்டு நிகிலன் மறுக்க,

“டேய்.. மச்சான்.. நீ மட்டும் இன்னைக்கு வரல, அப்புறம் என் பொண்டாட்டி தினமும் இதை சொல்லியே என்னை திட்டுவா... உன் கூட எங்கயாவது சுத்தவும் விட மாட்டா....

நான் அவகிட்ட இருந்து தப்பிக்க இருக்க ஒரே சான்ஸ் ஏதாவது வேலைய சொல்லிட்டு உன்கூட ஓடி வர்றதுதான்.. அதுலயும் மண்ணை அள்ளிப் போட்டுடாத....

உனக்கு புண்ணியமா போகும்... அதனால தயவு செய்து சிஸ்டரை கூட்டிகிட்டு வந்திடு டா ராசா... என் பொண்டாட்டியே ஆசையா உங்களை விருந்துக்கு அழைக்க சொல்லியிருக்க்கா.... என் பிறந்த நாள் அன்னைக்காவது அவள சாமியாட வச்சிடாத... “ என்று கெஞ்சினான் கௌதம்...

“ஏன்டா... இன்னும் இப்படி இருக்க??.. ஒரு பொண்டாட்டிய அடக்கி வைக்க தெரியல,, நீயெல்லாம் ஒரு போலிஸ்காரன்.. வெளில சொல்லிடாத...காரி துப்புவாங்க... ” என்று அவனை திட்டினான் நிகிலன்

“ஹா ஹா ஹா வெளில புலினாலும் வீட்ல எலியாதான் இருந்தாகணும் மச்சான்.... நீ கொடுத்து வச்சவன்.. பாவம் வாயில்லா புள்ளைய கொண்டுவந்து உன்கிட்ட மாட்டி விட்டுட்டாங்க சிவா ஆன்ட்டி.... என் கஷ்டம் உனக்கெங்க தெரியும்??...

வேணும்னா நம்ம கமிஸ்னரையே கேளு.. அவரும் வீட்ல மீனாட்சி ராட்சியம் தானாம்... “ என்று சிரித்தான்..

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது டா... “ என்று தலையில் அடித்து கொண்டான் நிகிலன்..

அதை கண்டு கொள்ளாத கௌதம் மீண்டும் ஒரு முறை அவனை வற்புறுத்தி வர சொல்லிவிட்டு மதுவிடம் போனை கொடுக்க சொல்லி மதியம் விருந்துக்கு அவளையும் அழைக்க, மதுவோ மகிழ்ந்து போய்

“கண்டிப்பா அண்ணா... உங்களை பற்றி அத்தை நிறைய சொல்லியிருக்காங்க...எனக்கும் ரொம்ப நாளாவே உங்களை பார்க்கணும் போல இருந்தது... விருந்துக்காக இல்லைனாலும் உங்க பிறந்த நாளுக்காக உங்கள வாழ்த்தவாது நாங்க வர்ரோம்... “ என்று சிரித்தாள்...

அவள் அண்ணா என்று உரிமையாக அழைக்க அதில் நெகிழ்ந்து போனான் கௌதம்...

பின் சிறிது நேரம் பேசி வைத்துவிட, மது வேகமாக சென்று தன் மாமியாரிடம் விசயத்தை சொல்ல அவருமே தன் மகனிடம் கெஞ்சி மதுவை அழைத்துக் கொண்டு கௌதம் வீட்டிற்கு செல்ல ஒத்துக்க வைத்தார்....

காலை உணவை முடித்த உடனே தன் அறைக்கு சென்றவள் கதைவ மூடிவிட்டு குளித்து முடித்து

“என்ன ட்ரெஸ் போடலாம்?? “என்று யோசித்தவள் சென்றமுறை

இனிமேல் என்கூட வர்றப்போ சேலையை கட்டு என்று அவள் கண்வன் சொல்லியது நினைவு வர, ஒரு புடவையை எடுத்து கட்டி கொண்டாள்...

தன் நீண்ட கூந்தலை தளர பின்னி பின் இலேசாக ஒப்பனை செய்து கொண்டு கீழ இறங்கி வந்தாள்...

இதுவரை சுடிதாரில் வளைய வந்தவளை நீண்ட நாட்களுக்கு பிறகு சேலையில் பார்க்க சிவகாமியும் அவளை ரசித்தவாறு சமையல் அறைக்கு சென்று முன்தினம் தோட்டத்தில் இருந்து பறித்து கட்டி வைத்திருந்த குண்டு மல்லியை கொண்டு வந்து அவள் தலையில் சூட்டினார்....

பின் அவள் முகத்தை ஆராய்ந்தவர்

“இன்னும் என்னமோ குறையுதே.. “என்று யோசித்து பின் தன் அறைக்கு சென்று அவள் சேலைக்கு பொருத்தமாக அவர் வாங்கி வைத்திருந்த ஒரு நெக்லசை கொண்டு வந்து அவளுக்கு அணிவித்தார்....

மது மறுக்க,

“இதெல்லாம் உனக்காகத்தான் வாங்கினது மருமகளே....என்ன இதையெல்லாம் போட்டு பார்க்க சந்தர்ப்பம் இல்லாம போச்சு... இப்ப உனக்கு இதையெல்லாம் போட்டு அழகு பார்க்காம பெட்டியில் வைத்திருந்தால் எப்படி??

அதோடு அந்த கௌதம் பொண்டாட்டி வசந்திக்குத் தான் தான் அழகினு பெருமை.... அவகிட்ட என் மருமக அவளை விட எவ்வளவு அழகுனு காட்டவேண்டாம்... அதுக்கும் தான்... “ என்று சிரித்தவாறு அவள் முகத்தை பார்க்க, அவ்வளவு அம்சமாக இருந்தாள் மது...

“அப்படியே அந்த மஹாலட்சுமி மாதிரி இருக்க மது மா... என் கண்ணே பட்டுடும் “ என்று தன் மருமகளுக்கு திருஷ்டி கழித்தார் சிவகாமி...

ஏற்கனவே தன் தம்பியின் அறைக்கு சென்று குளித்து ரெடியாகி வந்து வரவேற்பறையில் அமர்ந்து தன் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த நிகிலன் காதில் மாமியார் மருமகள் கொஞ்சல்ஸ் எல்லாம் காதில் விழுந்தது...

“இந்த அம்மா எப்பதான் மாறுவாங்களோ?? ..இவள் வேசம் எப்ப களையுமோ??...எல்லாம் பட்டால் தான் தெளியும் ” என்று உதட்டை ஏளனமாக சுழித்தவனுக்கு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி கண் முன்னே வந்தது..

நான்கு நாட்கள் முன்பு அந்த முதியோர் இல்லத்தில் இருந்த பெரியவர்களிடம் தோட்டத்தில் காலாட நடந்த படியே பேசி கொண்டிருந்தான் நிகிலன்..

அவனுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இங்கு வந்து விடுவான்... அவர்களிடம் எதையாவது பேச வைப்பதால் உள்ளுக்குள்ளயே புழுங்கிக் கொண்டிருக்கும் அந்த முதியவர்களுக்கும் மனம் விட்டு பேச, கொஞ்சம் மனம் அமைதியாக இருக்கும்..

அதனால் நிகிலன் வரவை எல்லோருமே ஆவலாக எதிர்பார்ப்பர்...

அதே போல அன்று பேசிக்கொண்டிருக்க, அப்பொழுது அந்த இல்லத்தின் வாயிலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது... அதில் இருந்து ஒரு வயதான பெண்மணி இறங்கி அந்த ஆட்டோ ட்ரைவருக்கு பணத்தை கொடுத்து நன்றி சொல்லி அனுப்பிவிட்டு பின் தள்ளாடியபடி அந்த இல்லத்தை நோக்கி வந்தார்...

அவர் தள்ளாடுவதை கண்ட நிகிலன் ஓடிசென்று அவரை பிடித்து மெல்ல அணைத்தவாறு உள்ளே அழைத்து வந்தான்....

அவரை காண மிகவும் களைப்பாக இருக்க, உள்ளே அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமர வைத்து அங்கிருந்த மின் விசிறியை ஓடவிட்டு அவருக்கு குடிக்க நீர் கொண்டு வந்து குடிக்க வைத்து மெல்ல அவர் அருகில் அமர்ந்து அவர் கையை ஆதரவாக பற்றி கொண்டான்...

அவன் செய்கையெல்லாம் கண்டதும் அந்த பெண்மணிக்கு கண்கள் கரித்துக் கொண்டு வர, தன் முந்தானையை எடுத்து முகத்தை மூடி கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தார்...

ரமணியும் வேகமாக வந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்லி அவரை பற்றி கேட்க, அந்த பெண்மணி தன் கதையை கூறினார்...

“நான் மதுரை பக்கம் ஒரு சின்ன கிராமம் மா... எனக்கு ஒரே பையன்.. கல்யாணம் பண்ணி வச்சு 5 வருசமாகுது.. ஆண் ஒன்னு பொண் ஒன்னுனு இரண்டு பேர புள்ளைங்க...

என் புருசன் 4 வருசம் முன்னாடி என்னை தனியா தவிக்க விட்டுட்டு நிம்மதியா போய் சேர்ந்துட்டார்....” என்று நிறுத்தியவர் தன் கண்ணை துடைத்து கொண்டு மேலும் தொடர்ந்தார்...

நான் என் பையன் கூட ஒன்னாதான் இருந்தேன்.. என் மருமகளும் இந்த 5 வருசமா என்னை நல்லா தான் பார்த்துக்கிட்டா...

யார் கண்ணு பட்டுதோ...போன மாசம் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாயிட்ட்டேன்.. என்னை பார்க்க வந்த என் மருமக பக்கம் சொந்தக்காரரால் வந்தது வினை...

அவர் பாட்டுக்கு வாய் இருக்காமல்

“உங்களுக்கு வயசாயிடுச்சே...உங்களுக்கு எதுவும் ஆகும் முன்னாடி சொத்தை எல்லாம் உங்க பையன் பேருக்கு மாத்தி எழுதி வச்சிடுங்க.. இல்லைனா பின்னாடி மாத்தறது கஷ்டம்.. “ என்று சொன்னார்...

எனக்கும் அதுதான் சரினு பட்டுச்சு...

அதனால கொஞ்சம் உடம்பு தேறி எழுந்ததும் என் பையன் கிட்ட விசயத்தை சொல்லி சொத்தை மாற்றி எழுத ஏற்பாடு பண்ண சொன்னேன்...

என் மருமக முதல்ல வேண்டாம்னுதான் சொன்னா... நான்தான் சும்மா இல்லாம அடம்பிடிச்சு அடுத்த வாரத்துலயே சொத்து எல்லாம் என் பையன் பேர்லயும் மருமக பேர்லயும் எழுதி வச்சுட்டேன்....

அதுக்கப்புறம் தான் எனக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சது... அதுவரைக்கும் என்னை நல்லா பார்த்துகிட்டு வந்த என் மருமக போக்குல மாற்றம் வந்தது... நானும் பெருசா கண்டுக்கலை... கொஞ்சம் கொஞ்சமா ஏதோ ஜாடை சொல்லி பேச ஆரம்பிச்சா..

சாப்பாடு நேரத்துக்கு செய்யறதில்லை... அப்படியே செஞ்சாலும் அளவை குறைச்சு செய்ய ஆரம்பிச்சா...

ஏதாவது என் பையன் சாப்பிட வாங்கி வந்தாலும் அவங்களே சாப்பிடுவாங்க.. என்னை கண்டுக்கறதில்லை.. முன்னாடியெல்லாம் எது வாங்கி வந்தாலும் என்கிட்ட கொடுத்துட்டு தான் அவங்க சாப்பிடுவாங்க.. அப்படி இருந்தவ அப்படியே தலைகீழா மாறிட்டா இரண்டு வாரத்துக்குள்ள...

எனக்கு என்ன காரணம்னு புரியல.. எப்படி போய் நேரடியா அவகிட்ட கேட்கறது னு தயக்கமா இருந்தது... என் பையன் கிட்டயும் இதை பத்தி எதுவும் சொல்லலை....

அப்பதான் ஒருநாள் எதேச்சையா அவ ஆத்தாகிட்ட பேசிகிட்டிருந்ததை கேட்டேன்...

இந்த சொத்துக்காகத்தான் என்கிட்ட இந்த 5 வருசமா பாசமா இருக்கற மாதிரி நடிச்சா னு புரிஞ்சுது...

அப்பயே மனசு விட்டு போச்சு... அப்பயும் என் புருசன் சாகிறப்போ சொன்னார்..

"சொத்தையெல்லாம் கடைசி மூச்சு இருக்கிறவரைக்கும் யாருக்கும் எழுதி வச்சுடாத.. நம்ம பையனே ஆனாலும் நம்ப முடியாது.. உனக்குனு கைல காசு வச்சுக்க...யாரையும் நம்பாத நீ.. எப்பவும் உன் கால்ல நில்... அப்படீனு சொல்லிட்டுதான் செத்தார்....

நான் தான் இந்த சண்டாளி விரிச்ச வலைனு தெரியாம 5 வருசமா ஏமாந்து போய்ட்டேன்... “ என்று மீண்டும் கண் கலங்கினார்...

“நேத்து என் பையன் வேலை விசயமா வெளி ஊருக்கு போய்ட்டான்.. அத சாக்கா வச்சுகிட்டு என்கிட்ட சண்டைக்கு வந்தா.. நானும் பொருத்து பார்த்து கடைசியில முடியாம

“சொத்தையெல்லாம் புடுங்கிட்டியே டி.. நீ நல்லா இருப்பியானு ஏதோ பேச, அது பெரிய சண்டையில போய் நிக்க, என்னை அடிச்சு வெளில இழுத்து விட்டுட்டா..." என்றவர் மீண்டு குழுங்கி அழுதார்....

ரமணி ஆதரவாக அவரை அணைத்துக் கொள்ள அவர் கண்ணிலும் நீர் வழிந்தது அந்த பெண்மணியின் வேதனையை புரிந்து.....

அவரும் இதையெல்லாம் அனுபவித்தவர் தானே.. அதன் வலி எப்படி இருக்கும் என்று புரிந்ததால் அந்த பெண்மணி மீது இரக்கம் வந்தது... பின் அந்த பெண்மணியே சமாளித்து கொண்டு தன் கதையை தொடர்ந்தார்

"என் புருசன் இருக்கிறவரைக்கும் என்னை ராணி மாதிரி பார்த்துகிட்டார்.... அப்படி ராணி மாதிரி இருந்த நான் இப்படி தெருவுல நிக்கற நிலை வந்துடுச்சேனு மனசே உடஞ்சு போச்சு...

அப்பயே முடுவு பண்ணிட்டேன்.. இனிமேல் அந்த வீட்ல இருக்க கூடாது னு.. எங்காவது ஆறு குளம் னு போய் விழுந்திடலாம் னு பார்த்தா அதுக்கும் துணிச்சல் வரலை....

அதான் என் துணியெல்லாம் எடுத்துகிட்டு மதுரை வந்து அங்கு இருந்த ஏதோ ஒரு பஸ்ல ஏறிட்டேன்.. பார்த்தா அது இந்த ஊர்க்கு வந்திருக்கு...

பஸ் ஸ்டாண்ட்ல இறங்கினதும் கண்ணை கட்டி காட்ல விட்ட மாதிரியிருந்தது.. எங்க போறதுனு தெரியாம முழிச்சுகிட்டிருந்தேன்... அப்பதான் அந்த ஆட்டோ ட்ரைவர் மகராசனா வந்து என்கிட்ட எங்க போகணும்னு விசாரிச்சார்..

எனக்கு என்ன சொல்றதுனு தெரியல.. நான் முழிப்பதை பார்த்து என் நிலையை புரிஞ்சுகிட்டு அப்பதான் இந்த இடத்தை பத்தி சொல்லி இங்க போறீங்களா னு கேட்டார்...

நானும் யோசிக்காம சரினு சொல்லிட்டேன்..

ஆட்டோல வர்றப்போ அந்த ட்ரைவர் இந்த இடத்தை பற்றியும் அதை நடத்திகிட்டு வர்றவரை பற்றியும் பெருமையா சொன்னார்...

அநேகமா அது நீங்களாதான் இருக்கும்னு நினைக்கிறேன் தம்பி... நான் தடுமாறி நடக்கிறப்ப நீங்க என்னை ஓடி வந்து பிடிச்சதுலயே தெரிஞ்சது நீங்கதான் அவரா இருக்கும்னு...

என் புருசன் என் பேர்ல பணம் போட்டு வச்சிருக்கார் தம்பி.... அது அந்த ராட்சசிக்கு தெரியாது போல... இல்லைனா அதையும் பிடுங்கிகிட்டிருப்பா.. அதோட பத்திரம் எல்லாம் இதுல இருக்கு... இதையெல்லாம் வச்சுகிட்டு எனக்கு இங்க தங்க இடம் கொடுக்கணும்... “ என்று கையெடுத்து கும்பிட்டார் நிகிலனை பார்த்து...

அதை கண்டு பதறியவன்

“ஐயோ... அம்மா.. நீங்க பெரியவங்க.. என்னைப் போய் கையெடுத்து கும்பிடலாமா??... நீங்க பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்... எத்தனை நாள் வேணாலும் இங்கயே தங்கிக்கங்க..

இவங்க என்னோட அம்மா தான்... அவங்களும் இங்கதான் இருக்காங்க.. உங்களுக்கு தேவையானது எல்லாம் அவங்க செஞ்சு தருவாங்க... “ என்று ரமணியை காட்டி சொன்னவன் மெல்ல அவரை அணைத்துக் கொண்டான்...

அந்த மெல்லிய அணைப்பில் என்ன உணர்ந்தாரோ அந்த தாய்.... மிகவும் உருகிப் போனார்... இதுவரை பட்ட க்ஷ்டம் எல்லாம் மறைந்த மாதிரி இருந்தது....

சிறிது நேரம் யோசித்த நிகிலன்

“உங்க சொத்தெல்லாம் உங்க கணவர் சொந்தமா சம்பாதிச்சதா?? இல்லை பரம்பரை சொத்தா??..” என்றான்...

“எல்லாம் என் புருசன் கஷ்டபட்டு சம்பாதிச்சது தான் தம்பி..” என்றார்...

“அப்பனா நாம கேஸ் போடலாம்... ஏமாத்தி வாங்கிகிட்டு பெற்றோர்களை சும்மா அனுப்பறது சட்டப்படி தப்பு மா... நாம கேஸ் போட்டோம்னா நீங்க போட்ட கையெழுத்து செல்லாததாகும்.. அந்த சொத்தையெல்லாம் நீங்க திரும்பி வாங்கிக்கலாம்..

உங்க பையனையும் மருமகளையும் தண்டிச்ச மாதிரியும் இருக்கும்.. என்ன மா சொல்றீங்க.. “என்றான்....

“ம்ச்.... இனிமேல் அந்த சொத்து எனக்கு இருந்தால் என்ன?? இல்லாட்டி என்ன தம்பி... அதோட நான் பெத்த புள்ளை மேல போய் கேஸ் போட்டு அவன கோர்ட்டுக்கு இழுக்க மனசு வருமா எனக்கு??

அப்படியே கேஸ் போட்டு அந்த சொத்தை வாங்கினாலும் சொத்துக்காக வர்ற அந்த அன்போ, பாசமோ எனக்கு வேண்டாம் தம்பி...

அது ரொம்ப நாளைக்கு நிலைக்காது னு நல்லா புரிஞ்சுகிட்டேன்... அதனால அந்த சொத்து சுகத்தையெல்லாம் என் பையனும் அவன் பொண்டாட்டி அவன் புள்ளைங்களே அனுபவிச்சுட்டு போகட்டும்....

உன்ன மாதிரி நாலு நல்ல மகராசன் என்னை மாதிரி வீட்டை துறந்து வர்றவங்களுக்கு அடைக்கலம் தர்ரதுக்காக இப்படி ஒரு இடத்தை கட்டி வச்சிருக்கறது போதும் தம்பி...

இங்கயே மீதி காலத்தை தள்ளிடலாம்...இனிமேல் அந்த காசு பணத்தை எல்லாம் வச்சுகிட்டு நான் என்ன பண்ண போறேன்.... தங்க ஒரு இடம், குடிக்க கொஞ்சம் கஞ்சி இருந்தா போதும்.. .

அதனால கேஸ் எல்லாம் வேண்டாம் தம்பி.. என் கடைசி காலம் வரைக்கும் நான் இங்கயே தங்கிக்க நீங்க அனுமதி கொடுக்கணும்.. “ என்று வேண்டினார்....

“கண்டிப்பா மா.. நீ எங்க கூடவே தங்கிக்கலாம்... எல்லா கவலையையும் விட்டுட்டு இங்க இருக்கிறவங்க கூட நீங்களும் ஒரு குடும்பமா நிம்மதியா சந்தோசமா இருக்கலாம்...

எல்லாம் உங்க சொந்தக்காரங்க மாதிரிதான்... என்னை உங்க பையனா நினைச்சுக்கங்க.. “ என்று மீண்டும் அவரை கட்டிகொண்டு சிரித்தான்....

அதில் குளிர்ந்து போன அந்த தாய்

“நீங்க ரொம்ப நல்லாயிருக்கனும் தம்பி...என் மருமக மவன் கைவிட்டாலும் அந்த ஆண்டவனா பார்த்துத்தான் என்னை இங்க அனுப்பி வச்சிருக்கான் போல... உங்க பொண்டாட்டி புள்ளை கூட சந்தோசமா இன்னும் பல நூறு வருசம் வாழணும்.. “என்று வாழ்த்தினார் தன்னை கட்டி கொண்டிருந்தவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து...

அவர் வாழ்த்தியது அவன் மனதில் பதியவில்லை.. ஆனால் அவரை இப்படி வெளியேற்றிய அந்த முகம் தெரியாத அவர் பையன் மீதும் அதுக்கு காரணமான அவர் மருமகள் மீதும் அவன் கோபம் திரும்பியது...

“எப்படி 5 வருசமா நடிச்சு இப்படி ஏமாத்தியிருக்காளே அந்த ராட்சசி.. எல்லா பிசாசுங்களும் காசுக்காத்தான் நடிப்பாளுங்க போல.. “என்றவன் நினைவு தனக்கு வந்தவளிடம் சென்று நிக்க,

“இவளும் அப்படித்தான் ஏதோ திட்டத்தோட தான் வந்திருக்கா.. இந்த அம்மவுக்கு 5 வருசம் கழிச்சு தெரிஞ்ச மாதிரி அவ வந்து 5 மாசம் தான ஆகுது... இன்னும் தன் திட்டத்தை நிறைவேற்ற காத்துகிட்டு இருக்கா போல..

அவள் எண்ணம் என்றும் நிறைவேறாது.. இந்த நிகிலன் இப்படி ஒரு நிலையை என் அம்மாக்கு என் குடும்பத்துக்கு கொண்டு வர விட மாட்டான்“ என்று உள்ளுக்குள் பல்லை கடித்து மேலும் இறுகி போனான்...

அதிலிருந்தே மதுவின் முகத்தை பார்க்க பிடிக்காமலயே சீக்கிரம் வேலை முடிந்தும் இரவு தாமதமாக வீடு திரும்பினான்.. அவன் நினைத்த மாதிரியே அவன் வரும்பொழுது மது போர்வையை இழுத்து மூடிக் கொண்டு தூங்கியிருப்பாள்....

அதை நினைத்து பார்த்தவன் உடல் விரைக்க, எழுந்து வாசலை நோக்கி நடந்தான்... மதுவும் தன் மாமியாரிடம் கை அசைத்து விடை பெற்று அவன் பின்னே வேகமாக ஓடி சென்றாள்...

அதே நினைவு இப்பொழுதும் நினைவு வர, அவன் உடல் விரைத்து முகம் இறுக, அவள் பக்கம் திரும்பாமல் சாலையை வெறித்தவாறே தன் காரை செலுத்தி கொண்டிருந்தான் நிகிலன்...

வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாலும் ஓரக் கண்ணால் தன் கணவனையே பார்த்து வந்தவள் அவன் இவள் பக்கம் திரும்பாமல் விரைத்து கொண்டு வர,

“என்னாச்சு இந்த விருமாண்டிக்கு?? முன்பாவது காரில் வரும்பொழுது அவள் படிப்பை பற்றியோ இல்ல விளையாட்டு பயிற்சியை பற்றியோ விசாரித்து கொண்டு வருவான்...

இன்னைக்கு ஏன் இப்படி உர் னு வர்ரான்... சரியான சிடு மூஞ்சிதான்... “ என்று மனதிற்குள் திட்டி கொண்டே தன் வேடிக்கையை தொடர்ந்தாள்...

சிறிது தூரம் சென்றதும் ஏதோ நினைவு வர

“சார்... சார்... சார்... காரை நிறுத்துங்க... “ என்றாள் அவசரமாக...

அவள் கத்தலில் திடுக்கிடடவன் காரை மெதுவாக ஸ்லோ பண்ணி ஓரமாக நிறுத்தியவன் அவளிடம் திரும்பி

“ஏய்... எத்தனை தரம் உனக்கு சொல்றது.. இப்படி கார் ஓட்டும் பொழுது கத்தாதனு?? “ என்று சிடுசிடுத்தான்...

“சாரி சார்... ஏதோ ஒரு வேகத்துல கத்திட்டேன்.. இனிமேல் இப்படி சொல்ல மாட்டேன்... “ என்றாள் பாவமாக....

“சரி.. சொல்லு.. என்னாச்சு?? “ என்றான் இன்னும் முறைத்தவாறு...

அப்பொழுதுதான் அங்கு அவள் ஒரு கிப்ட் கடையை கண்டதும் கௌதம்க்கு கிப்ட் வாங்க எண்ணிதான் அவள் காரை நிறுத்த சொல்லி கத்தியது.. ஆனால் அதன் பிறகுதான் கவனித்தாள் அங்கு பார்க்கிங் இல்லை என்று..

ஏற்கனவே ஒரு தரம் காரை வழியில் நிறுத்த சொல்லி அதுக்கு அவனிடம் அவள் வாங்கி கட்டிகொண்டது நினைவு வர

“சார்... எங்காவது காரை நிறுத்திட்டு கிப்ட் வாங்கிற மாதிரி கடை இருந்தால் காரை நிறுத்தறீங்களா.. ஒரு கிப்ட் வாங்கணும்... “ என்றாள் தயங்கியவாறு...

“கிப்ட் ஆ எதுக்கு?? யாருக்கு?? “ என்றான் இடுங்கிய கண்களுடன்....

“கௌதம் அண்ணாக்குத்தான் சார்... பர்த் டே பார்ட்டிக்கு போறோம் இல்ல.. கிப்ட் இல்லாமல் போனா நல்லா இருக்காது....அதான்... “ என்று இழுத்தாள்

“என்னது பார்ட்டியா?? அவன் பொண்டாட்டி இத்தனூன்டு கேக் ஐ வாங்கி வச்சுகிட்டு அவனை வெட்ட சொல்றா.. அத போய் பார்ட்டிங்கிற.. அதெல்லாம் ஒன்னும் இல்ல...

சும்மா நாம் இரண்டு பேர் மட்டும்தான் கெஸ்ட்....அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.... “ என்று முறைத்தான்....

“சரியான கஞ்ச போலிஸ் போல.. ஒரு பிரண்ட்க்கு கிப்ட் வாங்கி கொடுக்க இப்படி யோசிக்கறானே... கஞ்சூஸ் ... “ என்று திட்டிக் கொண்டவள்

“ஹீ ஹீ ஹீ.. பார்ட்டி இருந்தா என்ன இல்லைனா என்ன சார்... கௌதம் அண்ணாவுக்கு இன்னைக்குத் தான பிறந்த நாள்.. பிறந்த நாள் அன்று யாராவது வாழ்த்தி ஒரு சின்ன கிப்ட் கொடுத்தா கூட அது அவ்வளவு சந்தோசமா இருக்குமாம்.. எங்கப்பா அடிக்கடி சொல்வார்...

அதே மாதிரி ஒருத்தங்க வீட்டுக்கு போறப்ப அதுவும் முதல் முதலா போறப்போ வெறும் கையை வீசிகிட்டு போக கூடாதாம்.. ஏதாவது ஸ்வீட்டோ, பழங்களோ வாங்கிகிட்டு போகணுமாம்...

இது எங்க அத்தை....உங்க அம்மா சொன்னது... அதனால் வழியில எங்கயாவது கிப்ட் ஷாப் ம் ஸ்வீட் கடையும் இருந்தா காரை நிறுத்துங்க சார்... ப்ளீஸ்... “ என்றாள் கெஞ்சலாக.....

“சரியான இம்ச டீ உன்னோட.... இந்த தொல்லைக்குத் தான் நான் வரலைனு அந்த கௌதம் கிட்ட சொன்னேன்.... கேட்க மாட்டேனுட்டான்... “ என்று அவளை திட்டியவாறு காரை ஸ்டார்ட் பண்ணி அவள் கேட்ட மாதிரி ஒரு கடையை கண்டு பிடித்து காரை நிறுத்திவிட்டு அவளை இறங்க சொல்ல, அவளோ அவனையே மீண்டும் பாவமாக பார்த்தாள்...

அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் அவளை முறைத்து கொண்டே அவனும் இறங்கி கூலரை மாட்டி கொண்டு சாலையை நோக்கி நடக்க, மதுவும் ஓடி வந்து அவனுடன் ஒட்டி நடந்தாள்....

ரெட் சிக்னல் க்கு காத்திருந்து நிகிலன் அந்த சாலையை கடக்க முயல பழக்க தோசத்தில் பயந்து கொண்டே தன் அருகில் நடந்து கொண்டிருந்த தன் கணவனின் கையை இறுக பற்றி கொண்டாள் மது ....

முதலில் திகைத்தவன் பின் அவள் கையில் தெரிந்த நடுக்கத்தை உணர்ந்து அமைதியாக வந்தான்... அந்த சாலையை கடந்ததும்

“ஏய்.. இது சாலையை கடக்கும் பாதைதான.. ரெட் சிக்னல் ல தான நடக்கிற.. அப்புறம் எதுக்கு பயம்?? “என்று சிடுசிடுத்தான்....

அப்பதான் அவளுக்கு ஞாபாகம் வந்தது.... ரெட் சிக்னல் இருக்கிறப்போ வண்டி எதுவும் வராது என்று... ஆனாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல்

“ஹீ ஹீ ஹீ .. சார்.. நம்ம ஊர்ல யார் சார் ரூல்சை மதிக்கிறா... ரெட் சிக்னல்ல கூட டிராபிக் போலிஸ் இல்லைனு தெரிஞ்சா வேகமா வண்டி ஓட்டிகிட்டு வருவாங்க சார்.... அதான் பயம்.. “ என்று ஏதோ சொல்லி சமாளிக்க, அவனும் அவளை முறைத்துக் கொண்டே அவள் இன்னும் பற்றியிருந்த தன் கையை இழுத்துக் கொண்டு முன்னே நடந்தான்...

மதுவுக்கு அப்பொழுதுதான் உரைத்தது தான் அவன் கையை பற்றியது...அதை நினைத்து இலேசாக கன்னம் சிவந்தாள்...

அவன் முன்னே நடக்க, வழியில் தெரிந்தவர்கள் அவனை அடையாளம் கண்டு கொண்டு அவனுக்கு சல்யூட் வைத்து விஷ் பண்ண, மதுவும் அவனுடன் இணைந்து நடக்க, ஏனோ எல்லோரும் அவளுக்கும் விஷ் பண்ணுவதைப் போல பெருமையாக இருந்தது..

அவனுடன் இணைந்து நடப்பதே அவளுக்கு மகிழ்ச்சியாக, இந்த சிட்டியோட Assistance Commisionar of Police உடைய வைப் நான்தான் என்று பெருமையாக இருக்க, அதை உள்ளுக்குள் ரசித்தபடியே அவனுடன் இணைந்து வேகமாக நடந்தாள்...

ஒரு கிப்ட் ஷாப்பிற்குள் சென்றவன்

“நீயே போய் ஏதாவது வாங்கு.. “ என்று அவளை விட்டுவிட்டு வெளியில் நின்று கொண்டான்..

கடை முழுவதும் தேடியவள் அங்கு குழந்தைகளுக்கான பரிசு பொருட்கள் அதிகமாக இருக்க எதையும் வாங்க தோன்றாமல் திரும்பி வந்தவள்

“சார்.. பெரியவங்களுக்காக எதுவும் இல்லை சார்... வேற ஏதாவது ஐடியா கொடுங்களேன்.. உங்க பிரண்ட் தான....அவருக்கு என்ன பிடிக்கும் னு சொல்லுங்க.... “என்று அவன் முகம் பார்த்தாள்....

அவனும் அவளை முறைத்தவாறே யோசிக்க டக்கென்று ஒன்று தோன்றியது...

நிகிலன் எப்பொழுதாவது ரவுண்ட்ஸ் வரும்பொழுது கௌதம் இருக்கும் ஸ்டேசனுக்கு செல்லும் பொழுது அன்றைக்குனு பார்த்து கௌதம் லேட் ஆ வருவான்...

கேட்டா

“என் வாட்ச் ல இப்பதான் மணி 10 மச்சான்.. “என்று சிரித்து கொண்டே அவனுடைய ஓடாத வாட்சை காமிப்பான்...

அது நினைவு வரவும் ஒரு வாட்ச் வாங்களாம் என்று நினைக்க,

மதுவும் பக்கத்தில் இருந்த வாட்ச் கடையை கண்டு

“சார்... நாம வேணா ஒரு வாட்ச் வாங்கி தரலாமா?? “என்றாள் ஆர்வமாக

ஒரு நொடி அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.. தான் மனதில் நினைத்ததை அப்படியே சொல்றாளே.. “என்று....

அவனும் சரியென்று தலையாட்டி அந்த கடைக்குள் செல்ல, சொல்லி வைத்த மாதிரி இருவரும் ஒரே வாட்சை தேர்வு செய்ய அதையே பேக் பண்ணி கொண்டும் அருகில் இருந்த ஸ்வீட்ஸ் ஸ்டாலில் கௌதம்க்கு பிடித்த ஸ்வீட் ஐ யும் வாங்கி கொண்டு மீண்டும் காருக்கு வந்து கிளம்பினர்....

“தேங்க்ஸ் சார்.. “என்றாள் அவனை நேராக பார்த்தவாறு..

அவனோ மீண்டும் சாலையை பார்க்க,

“போச்சுடா... மீண்டும் இந்த சிடுமூஞ்சி வந்திட்டானா?? “என்று மீண்டும் அவனை திட்டிக் கொண்டே வந்தாள் மது....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!