தவமின்றி கிடைத்த வரமே-33


அத்தியாயம்-33 

ட்டு புடவை சரசரக்க உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள் வட்டமிட, வேகமாக துடிக்கும் தன் இதயத்தின் ஓசை வெளியில் கேட்காதவாறு அடக்கி கொண்டு கன்னம் சிவக்க மெல்ல அடி அடுத்து வைத்து உள்ளே வந்தாள் பனிமலர்...

அன்று மதியம் வரவேற்பில் மித்ரா சொல்லியது எல்லாம் மறந்து விட்டிருந்தது அவள் மூளையில்..ஆனாலும் ஒரு ஓரத்தில் தன் கணவனிடம் கேட்க என்று நிறைய கேள்விகளை வைத்திருந்தாள்.. அதுவும் குறிப்பாக மித்ரா வை பற்றி அவனிடம் கேட்டு தெளிவு படுத்தி கொள்ள எண்ணி இருந்தாள்..

அவனை தனியாக சந்திக்கும் பொழுது கேட்க வேண்டும் என்று பட்டியலிட்டிருந்த லிஸ்ட் நினைவு வர அதற்கான சந்தர்ப்பம் இன்றே கிடைத்து விட்டதால் எதை கேட்பது? எப்படி கேட்பது? என்று மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்து கொண்டே உள்ளே அடி எடுத்து வைத்து வந்தாள் மலர்.

தன் அன்னை கொடுத்திருந்த அந்த பட்டு வேட்டியை கட்டி கொண்டு புது மாப்பிள்ளையாக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவனோ அறை கதவு திறக்கவும் அவசரமாக அவன் பார்வை அங்கு சென்றது...

வெட்க சிவப்புடன் அதை மறைக்க தன் திரண்ட இதழ்களை மடித்து கடித்தவாறு மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே வந்தவளை கண்டதும் பிரீஸ் ஆகி நின்றான் வசீகரன்..

அவனுமே பனிமலரிடம் சில விசயங்கள் தெளிவு படுத்தி கொள்ள எண்ணி இருந்தான்.. எதை கேட்பது?? எப்படி ஆரம்பிப்பது ?? என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்தவாறு நடந்து கொண்டிருந்தவன் உள்ளே வந்தவளை கண்டதும் அவன் எண்ணியிருந்த அத்தனையும் மறந்து அசந்து போய் நின்றான்...

மதியம் விழாவிற்காக மணிக்கணக்காக லட்சம் ரூபாய் வரைக்கும் செலவு பண்ணி அலங்கரித்ததை விட, பத்து நிமிடத்தில் மெல்லிய அலங்காரத்தில் வந்து நின்றவளை கண்டதும் முற்றிலும் கிறங்கி நின்றான்....

அடுத்த நொடி தன்னை மறந்து வேகமாக அவள் அருகில் வந்தவன் அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி அருகில் இருந்த டீபாய் மேல வைத்தவன் அவளை இறுக்கி அணைத்திருந்தான்..

திரைப்படங்களில் வரும் முதல் இரவு காட்சிகளை போல அவள் உள்ளே வந்ததும் தன் கணவன் காலை தொட்டு வணங்கி பாலை ஊற்றி இருவரும் பருகி பின் மெல்ல தன் கேள்விகளை கேட்க எண்ணி இருந்தாள் மலர்...

அவள் பாட்டியுமே இப்படி சில அறிவுரைகளை சொல்லி இருந்தார்..அதை எல்லாம் எதிர்பார்த்து எண்ணிக் கொண்டு வந்தவள் இப்படி அதிரடியாக அவள் எதிர்பாராதவாறு தன் கணவன் தன்னை இறுக்கி அணைத்திருக்க அதில் திகைத்தவள் தன் கண்களை அகல விரித்து அவனை நோக்கினாள் நாணத்துடன் கன்னம் சிவந்தவாறு..

ஏற்கனவே கிறங்கி இருந்தவன் அவளின் அந்த அகன்ற விழியில் இன்னும் தன்னை தொலைத்திருக்க, நொடியும் தாமதிக்காமல் குனிந்து அவளின் அகன்ற விழிகளின் இமைகளை மூடினான் தன் முரட்டு இதழ்களால்....

தன் கணவனின் திடீர் முத்தத்தால் பெண்ணவளுமே கிறங்கி உருகி அவன் மார்பில் மையலுடன் சாய, அதில் இன்னும் சூடேறியவன் அவளை அணைத்திருந்த பிடியை தளர்த்தி தன் கைகளை எடுத்து அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் முகம் எங்கும் முத்தம் மழை பொழிய ஆரம்பித்தான்...

அவன் மனையாளும் கிறங்கி போய் இதழ் துடிக்க, இமை மூடி உருகி நிற்க, அவளின் துடிக்கும் இதழ்களின் மீது பார்வை சென்றது...

அவைகள் அவனை போதை ஏற்றி அவள் பக்கம் இன்னுமே சுண்டி இழுக்க இப்பொழுது அவள் இதழ் நோக்கி குனிந்தான் தேன் பருக துடிக்கும் மது உண்ட வண்டாக.

அவன் குனிந்த அதே நேரம் அருகில் இருந்த அவன் அலைபேசி அபாய சங்கை ஊதியது.... நல்ல ஒரு ரொமாண்டிக் சிட்சுவேசனில் கணவன் மனைவி இருவரும் கிறங்கி இருக்க, அதை பிடிக்காமல் அருகில் இருந்த அலைபேசி அலறியது...

முதலில் அதை தவிர்த்தவன் மீண்டும் மீண்டும் அது ஒலிக்க தன் மயக்கத்தில் இருந்து வெளிவந்த மலர் அவனிடம் இருந்து விலகி நின்று கொண்டாள்..

அவனும் தன்னை சமாளித்து கொண்டு சற்று பின் நகர்ந்து எரிச்சலுடன் அந்த அலைபேசியை எடுத்து அதன் திரையை பார்க்க அதில் ஒளிர்ந்த பெயரை கண்டதும் எரிச்சல் மறைந்து அவன் முகம் உடனே இலகிவிட்டது..

அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் “ஆங் சொல்லு மிது.” என்றான்...

மிது என்ற பெயரை கேட்டதும் அதுவரை ஏதோ ஒரு மாய உலகில் சஞ்சரித்து வந்தவள் திடீரென்று யாரோ தன்னை பிடித்து கீழ தள்ளிவிட்டதை போல திடுக்கிட்டு விழித்தாள் பனிமலர்..

அவசரமாக அவன் பேசுவதை கூர்ந்து நோக்க, அவனோ அவள் சொல்லிய செய்தியை கேட்டதும் கலவரமானான்....

"நீ கவலை படாத.. நான் இப்பவே வர்ரேன்.. " என்றவன் அழைப்பை அணைத்தவன் மலரிடம் திரும்பி

"சாரி பனிமலர்.. ஒரு அவசர வேலை.. நான் உடனே போயாகணும்.. போய்ட்டு வந்திடறேன்... சாரி அகெய்ன்.. " என்று தரையை பார்த்து சொல்லியவாறு அவசரமாக வேற உடைக்கு மாறியவன் தன் கார் சாவியை எடுத்து கொண்டு கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியேறினான்...

மலரோ தான் நின்ற அதே இடத்திலயே வேர் பிடித்ததை போல திகைத்து நின்றாள்.. என்ன நடந்தது ? என்ன நடக்குது ? என்று புரிந்து கொள்ள சில நிமிடங்கள் ஆனது...

குழப்பத்தில் ஆழ்ந்து யோசிக்க, ஒன்று மட்டும் புரிந்தது அவளுக்கு.. தன் கணவனுக்கு மித்ரா மிகவும் நெருங்கியவள் வேண்டப்பட்டவள் என்று. அவளுக்காக தன் ஆசையை கூட மறந்து ஓடுகிறான் என்றால் அவள் மிகவும் நெருங்கியவளாகத்தான் இருக்க வேண்டும்..

ஆனால் எவ்வளவு நெருக்கமானவள் எந்த முறையில், உறவில் நெருக்கமானவள் என்பதுதான் தெரியவில்லை..அப்பொழுதுதான் மித்ரா இன்று மதியம் அவளிடம் பேசியது நினைவு வந்தது..

மித்ரா சொன்ன மாதிரி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள எண்ணி இருந்த அளவுக்கு நெருக்கமானவர்களோ? தன் தந்தையை காக்க எண்ணி கடமைக்காக தன்னை மணந்தானோ? என்று எண்ண ஆரம்பித்தவள் இன்று விழாவில் மித்ராவின் பேச்சுக்களை மீண்டும் ஒரு முறை மனதில் ஓட்டி பார்த்தாள்..

ஏற்கனவே குழம்பி கொண்டிருந்த அவள் மனதில் மீண்டும் குழப்ப மேகங்கள் சூழ ஆரம்பித்தன..

இப்ப என்ன செய்வது ?? என்று யோசிக்க ஒன்றும் புரியாமல் போக அருகில் இருந்த சோபாவில் பொத்தென்று அமர்ந்தவள் தன் இருபக்கமும் நெற்றியை கைகளால் அழுத்தி பிடித்தவாறு ஏதேதோ யோசிக்க, சிறிது நேரத்தில் அப்படியே உறங்கி போனாள்....

மறுநாள் கண் விழிந்த மலர் அவசரமாக அந்த அறையை ஆராய, தன் கணவன் திரும்பி வந்ததற்கான் எந்த அடையாளமும் இல்லை....எதிரில் இருந்த படுக்கையை பார்க்க, மலர்களால் அலங்கரிக்கபட்டிருந்த அந்த படுக்கையில் இருந்த மலர்கள் வாடி வாசம் இழந்து கிடக்க, அந்த மலர்களை போலவே அவள் மனமும் வாடி விட்டது...

ஆனாலும் தன்னை தேற்றி கொண்டவள் மணியை பார்த்தவள் விடிந்து ரொம்ப நேரம் ஆகி விட்டதை உணர்ந்து எழுந்தவள் நேற்றே தன் பெட்டியை கொண்டு வந்து இங்கு வைத்திருக்க, அதை திறந்து அதில் இருந்த ஒடு புடவையை எடுத்து வைத்து விட்டு குளியல் அறையை நோக்கி சென்றாள்...

காலை கடன்களை முடித்து குளித்து அந்த புடவையை கட்டி கொண்டு தலையை வாரி கொண்டு அவசரமாக கீழிறங்கி சென்றாள்...

தன் மன குழப்பத்தையோ வாட்டத்தையோ வெளியில் காட்டாமல் வரவழைத்த புன்னகையுடன் கீழிறங்கி செல்ல, மீனாட்சி மட்டும் சமையல் அறையில் இருந்தார்.. மற்றவர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை போலும் என்று எண்ணியவாறு நேராக சமையல் அறைக்கு சென்றவள்

“குட்மார்னிங் அத்தை.. “ என்றாள் வரவழைத்த உற்சாகத்துடன்..

அவள் குரல் கேட்டு திரும்பியவர் தன் மருமகளை ஆராய்ச்சி பார்வை எதுவும் பார்க்காமல், இயல்பாக

“வெரி குட் மார்னிங் மருமகளே... “ என்றார் சிரித்தவாறு..

அவரும் கிண்டல் கேலி எதுவும் செய்யாமல் நேற்று இரவு எல்லாம் நல்லபடியாக நடந்ததா என்று நோண்டாமல் இயல்பாக அவளிடம் உரையாட மலருக்கும் நிம்மதியாக இருந்தது...

சிறிது நேரம் வழக்கமாக கதை அடித்த பின் மலர் தன் பெற்றோர்கள் எங்கே என்று கேட்க அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நேற்று இரவே கிளம்பி சென்று விட்டதாக கூறினார் மீனாட்சி..

அதை மேட்டு முகம் வாடினாலும் அதை வெளிக்காட்டாமல் சமாளித்து கொண்டவள் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா அத்தை என்றாள்..

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மலர்.. இந்த காபியை முதல்ல குடி.. “ என்றவர் ஒரு கப் காபியை அவள் கையில் கொடுத்தார்...

பின் மலரின் முகம் பார்த்தவர்

“சாரி டா மலர்... என் பையன் சார்பா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்..” என்க மலர் புரியாமல் தன் புருவத்தை உயர்த்தி எதற்கு என்ற பார்வை பார்த்தாள்.

“நேற்று இரவு வசி திடீர்னு கிளம்பி போய்ட்டானே அதுக்குத்தான்...நல்ல வேளை அண்ணாவும் ஜோதியும் அப்ப உள்ள இருந்தாங்க.. இல்லைனா அவங்களுக்கு கஷ்டமா இருந்திருக்கும்.... நான் சமையல் அறையில் இருந்ததால் என்கிட்ட வந்து அவசர வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி போய்ட்டான்....

என்னால அவனை தடுத்து நிறுத்த முடியலை.. அதான் கஷ்டமா இருந்தது... அவன் எப்பவுமே இப்படித்தான்.. ஏதாவது எமர்ஜென்சி கேஸ் வந்தால் இரவு நேரம்னு கூட பார்க்காமல் விழுந்தடித்து ஓடுவான் .. ஒரு உயிரை காப்பாற்றனும் என்று ...

நேற்றைக்குனு பார்த்தா இப்படி ஆகணும்?... எல்லாம் அந்த ஈசனோட விளையாட்டு போல ..நீதான் கொஞ்சம் அவனை அனுசரித்து போகணும்.. ” என்று பெருமூச்சு விட்டார் மீனாட்சி...

அதை கேட்ட மலருக்கு வியப்பாக இருந்தது.. இப்படி தன் மகனுக்காக தன் மருமகளிடமே மன்னிப்பு கேட்கும் மாமியார் எத்தனை பேருக்கு வாய்க்கும் என்று.

தன் மகன் தப்பே செய்தாலும் அதை மறைத்து மருமகள் மேல பலி சுமத்தும் இந்த சீரியல் மாமியார்கள் போல இல்லாமல் இவர் தனக்காக பார்க்கிறாரே..! இப்படி ஒரு மாமியார் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்..

மாமியார் மட்டுமா?? அன்பான மாமியார், தோழி போன்ற நாத்தனார், எப்பொழுதுமே புன்னகை மாறாமல் கனிவுடன் இருக்கும் மாமனார் என்று அந்த குடும்பத்தில் அனைவருமே அவளுக்கு பிடித்து போய்விட

“இந்த மாதிரி ஒரு குடும்பத்தில் என்னை கொண்டு வந்து சேர்த்தற்கு ரொம்ப நன்றி ஈஸ்.. நீ எது செய்தாலும் சும்மா செய்ய மாட்ட.. கூட ஏதாவது உன் திருவிளையாடலும் வைத்திருப்பாய்...

என்னை வைத்து என்ன திருவிளையாடல் ஆடப் போகிறாயோ?... நீ உன் ஆட்டத்தை ஆடு... நீ சொல்ற மாதிரி நான் ஆடுகிறேன்.. ஆனால் யார் மனதையும் புண் படுத்தாமல் உன் ஆட்டத்தை ஆடி முடி... “ என்று உள்ளுக்குள் வேண்டி கொண்டாள்...

பாவம் அவள் அறியவில்லை.. அவளே அவள் மீது உயிராக இருக்கும் தன் ஆசை கணவனின் மனதை புண்படுத்தி நோக வருந்த வைக்க போகிறாள் என்று

தன் மகனை பற்றி சொன்னதும் தன் மருமகளின் முகத்தில் தெரிந்த யோசனை ரேகைகளை கண்ட மீனாட்சி

“என்ன மருமகளே ? ... இப்படி பொறுப்பில்லாமல் திரியும் ஒரு சாமியாரிடம் வந்து மாட்டிகிட்டோமே என்று கவலையா இருக்கா ? .. “ என்றார் குறும்பாக சிரித்தவாறு...

அவர் தன் கணவனை சாமியார் என்றதும் நேற்று இரவு அவள் அறைக்கு உள்ளே வந்த அடுத்த நொடி அவன் அவளை இறுக்கி அணைத்ததும் முகம் எங்கும் தாபத்துடன் முத்தமிட்டதும் நினைவு வர, தானாக கன்னம் சிவக்க,

“என்னது? என் புருசன் சாமியாரா? ஹீ ஹீ ஹீ அவர் இந்த குறும்புக்கார மீனாட்சி அத்தை பெத்த அதிரடி ரொமாண்டிக் ஹீரோ அத்தை. “ என்று பதிலுக்கு அவர் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி கண் சிமிட்டி சிரித்தவள் வேகமாக காபி கப் உடன் நழுவி தோட்டத்திற்குள் சென்றாள்...

தன் மருமகளின் கன்னத்தில் தோன்றிய வெட்கமும் அவள் முகத்தில் தோன்றிய மலர்ச்சியும் அவருக்கு ஏதோ புரிவது போல இருக்க ஆனாலும் மனதில் ஒரு மூலையில் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்க

“ஈஸ்வரா... எப்படியாவது இந்த இரண்டு குழந்தைகளையும் எப்பவும் சந்தோஷமாக வாழ வை... “ என்று வேண்டி கொண்டார்....

அதை கேட்டு அந்த ஈஸ்வரனும் கள்ள சிரிப்பை சிரித்து கொண்டான்...

சமையல் அறையில் இருந்து நழுவியவள் தோட்டத்திற்கு செல்ல, அங்கு நடைபயிற்சி செய்து கொண்டிருந்த தன் மாமனாரிடம் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தவள் இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி சென்றாள்..

அந்த புத்தம் புது காலையில் பனியில் நனைந்து மலர்ந்த ஒரு மஞ்சள் ரோஜா அழகாக மலர்ந்து அவளை பார்த்து சிரிக்க, அதை கண்டதும் அவள் மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் மறைந்து முகத்தில் மலர்ச்சி வந்தது..

இந்த ரோஜாவை போல எப்பவும் சிரித்து கொண்டே இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் அந்த இடத்தை சுற்றிலும் பார்க்க எல்லாமே மஞ்சள் வண்ணத்தில் விதவிதமான ரோஜாக்கள் பூத்து குலுங்கின....

அதை கண்டதும் இந்த வீட்டில் யாருக்கு மஞ்சள் ரோஜா பிடிக்கும்?? இப்படி எல்லாமே மஞ்சள் ரோஜாவாக இருக்கே ? என்று யோசித்தவாறு தலை நிமிர்த்தி பார்க்க, அருகில் இருந்த கார் செட்டில் தன் காரை நிறுத்திவிட்டு கீழறங்கி வீட்டின் வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தான் அவள் நாயகன்...

கலைந்த கேசமும் களைத்த முகமுமாக நடந்து சென்றவனை காண மலருக்கு கஷ்டமாக இருந்தது..

“நடு இரவில் திடீரென்று கிளம்பி செல்லும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்? அந்த மித்ரா ஏதாவது சதி செய்கிறாளோ ? இவன் ஏன் என்னிடம் எதுவும் சொல்லிவிட்டு செல்லவில்லை? “ என்று யோசித்தவாறு அவன் கண்ணில் படாதவாறு கொஞ்சம் மறைந்து நின்று கொண்டாள் மலர்..

ஏனோ அவனை பார்க்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது.. அதுவும் நேற்று இரவு சம்பவம் கண் முன்னே வர, அவன் முகத்தை பார்க்க முடியாது என தோன்ற மறைந்து நின்று கொண்டாள்.

பின் அந்த தோட்டத்தை ரசித்தவாறு காபியை பருகி முடிக்கவும் அவள் கையில் இருந்த அலைபேசி ஒலித்தது.. அதை எடுத்து பார்க்க அவள் அன்னை ஜோதிதான் அழைத்து இருந்தார்....

தன் குழப்பத்தை மறைத்து உதட்டில் புன்னகை மலர அந்த அழைப்பை ஏற்றவள்

“குட்மார்னீங் ஜோ... என்ன என்னை தனியா விட்டுட்டு உங்க கடமை முடிஞ்சதுனு சொல்லாம கொள்ளாம எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டிங்க.. பேட் பேபிலி...” என்றாள் செல்லமாக முறைத்தவாறு...

“சாரி டா மலர்... உன்கிட்ட சொன்னா நீ விடமாட்டேனுதான் கிளம்பிட்டோம்...” என்றார் ஜோதி அவளை சமாளிக்க..

“ஹ்ம்ம் சரி பொழச்சு போங்க.. ஆமா அந்த ஒட்டடகுச்சி என்ன பண்றான்?? அவனை எழுப்ப ஆள் இல்லாமல் நிம்மதியா இழுத்து போர்த்தி தூங்கறானாக்கும்..நான் அந்த வீட்டை விட்டு வந்ததில் முதல் ஹேப்பியா இருக்கிற ஒரே ஜீவன் அவனாதான் இருக்கும்... “ என்று சிரிக்க, ஜோதியும் இணைந்து சிரித்தார்..

சிறிது நேரம் தன் அன்னையிடம் வம்பிழுத்தவாறு கதை அடிக்க, அவள் பேச்சிலயே அவள் குடும்பத்தை மிஸ் பண்ணுகிறாள் என புரிந்தது ஜோதிக்கு.. அவருக்குமே இத்தனை நாள் ஓடி ஆடிய மகள் இல்லாமல் வீடே வெறுச்சோடி இருப்பதை போல இருந்தது..

தினமும் காலையில் அவளுடன் மல்லுக் கட்டுவதிலயே அவருக்கு பாதி நாள் ஓடி விடும்.. ஆனால் அப்படி இனிமேல் அதட்ட அவள் இல்லையே என தோண்ற , அவருக்குமே தொண்டை அடைத்தது.. ஆனாலும் அதை மறைத்து கொண்டு தன் மகளுடன் உரையாடி கொண்டிருந்தார் ஜோதி...

குறிப்பாக அவள் அங்கு சந்தோஷமாக இருக்கிறாளா ? என்று அவள் பேச்சில் இருந்து தெரிந்து கொள்ள ஆராய்ந்து கொண்டிருந்தார்..

“ஜோ.. ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. எப்ப பார் நீ எனக்கொரு சாபம் கொடுப்பியே ஞாபகம் இருக்கா?? “

“சாபமா?? நான் எப்ப டி உனக்கு சாபம் கொடுத்தேன்?? “ என்று முறைத்தார் ஜோதி

“ஹீ ஹீ ஹீ நோ டென்ஷன் ஜோ.. சாரி சாபம் இல்லை.. காலையிலயே ஒரு பாட்டு பாடுவியே... உனக்கு விளக்கு மாத்தால அடிச்சு எழுப்பற மாமியார் தான் வரப் போறானு?? யூ நோ... உன் சாபம் பலிக்கலை...

என் மாமியார் சோ ஸ்வீட்... நான் எவ்வளவு நேரம் தூங்கினாலும் என்னை எழுப்பவே இல்லை.. நானே போனா போகுதுனு எழுந்து வந்தா உன்னை மாதிரி திட்டாம சிரிச்சுகிட்டே கையில சூடான காபியை கொடுத்து ஆர அமர உட்கார்ந்து குடி மா னு எவ்வளவு பாசமா சொல்றாங்க தெரியுமா...

நீயும்தான் இருக்கியே.. ஒரு 5 நிமிசம் தூங்கினா வீட்டையே அதிர வைப்ப... யூ ஆர் பேட் மம்மி... என் மாமியார் குட் அன்ட் ஸ்வீட் மாமியார்... “ என்று சிரிக்க, அதை கேட்டு ஜோதிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது...

எப்படியோ மகள் புகுந்த வீட்டில் ஓரளவுக்கு ஒன்ற ஆரம்பித்து விட்டாள் என புரிந்தது....அப்படியே மாப்பிள்ளையுடனும் இணக்கமாக இருந்து விட்டால் போதும்... அதற்கு பிறகு அவள் வாழ்க்கையை அவள் பார்த்துக்குவாள் என்று எண்ணிக்கொண்டார்...

“மாமியார் பற்றி வாயடிக்கிறவள் தன் புருசனை பற்றி வாயை திறக்க மாட்டேங்கிறாளே.. எப்படி கேட்பது? “ என்று தயங்கியவர்

“வந்து... மலர்... மாப்பிள்ளை...நேற்று இரவு.... “ என்று ஏதோ கேட்க வந்து தயங்கி நிற்க அவர் என்ன கேட்க வருகிறார் என்று புரிந்து கொண்ட மலர்

“என்ன ஜோ?? என் பர்ஸ்ட் நைட் எப்படி போச்சுனு கேட்க வர்ரியா?? அது சூப்பரா இருந்தது .. இதை கேட்க ஏன் இப்படி நெழியற ?? “என்று சிரிக்க, மறுமுனையில் இருந்த ஜோதிக்கு மூர்ச்சையாகி விழாத குறைதான்...

அவசரமாக ஸ்பீக்கரில் போட்டிருந்த தன் அலைபேசியை ஸ்பீக்கர் மோட் ஆப் பண்ணினார்...

தன் மகளின் உற்சாக குரலை இதுவரை ரசித்து கேட்டு கொண்டிருந்த ஜோதி அருகில் நின்றிருந்த சிவசங்கரும் வாய் விட்டு சிரிக்க, ஜோதி அசடு வழிந்து தன் கணவனை பார்த்து வெட்க பட்டு சிரித்து கொண்டே சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்....

தன் அன்னையிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக

“ஹலோ ஜோ..லைன்ல இருக்கியா?? என் பர்ஸ்ட் நைட் பற்றி சொன்னா நீ ஏன் சைலன்ட் ஆய்ட்ட?? ஓ.. உன்னோட பர்ஸ்ட் நைட் ஞாபகம் வந்திருச்சாக்கும்.. அப்படியே உன் புருசனோட டூயட் பாட போய்ருப்பியே.. “ என்று சிரித்தாள் மலர்...

“அடியேய்.. கொஞ்சம் நிறுத்தறியா.. கருமம்.. கருமம்.. உன்னை பற்றி தெரியாம உன்கிட்ட போய் எதையோ கேட்க வந்தேன் பார்.. என்னை அடிச்சுக்கணும்.. ஏன் டி இப்படியா பப்ளிக் ஆ பேசுவ?? “ என்று செல்லமாக கடிந்து கொண்டார் ஜோதி..

“பப்ளிக் ஆ வா,,, நான் உன்கிட்ட தான சொல்லிகிட்டிருக்கேன் ..அது எப்படி பப்ளிக் ஆகும் ?? “ என்றாள் மலர் சந்தேகமாக

“வந்து.. நான் போனை ஸ்பீக்கரில் போட்டிருந்தேன் டீ.. அப்பாவும் பக்கத்துல இருந்தார்... அவரும் நீ பேசினதை எல்லாம் கேட்டுட்டார்.. “ என்றார் நமட்டு சிர்ப்புடன்..

“வாட்?? “ என அதிர்ந்தவள் சில நொடிகளில் அவள் என்ன பேசினாள் என்று ரிவைன்ட் பண்ணி பார்த்தவள்

“ஐயயோ... என் மானம் போச்சு... லூசு ஜோ.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்க ?. இப்படியா பப்ளிக் ல ஸ்பீக்கர்ல போட்டு பேசுவ?? நான் பாட்டுக்கு எதை எதையோ உளறி வச்சேனே... “ என்றாள் செல்லமாக முறைத்தவாறு

“ஹீ ஹீ ஹீ.. அதுக்குத்தான் பகல் ல பக்கம் பார்த்து பேசுங்கிறது.. கூட யார் இருக்காங்கனு கேட்டுட்டுதான் இந்த மாதிரி ரகசியத்தை பேசணும் டி என் மக்கு பொண்ணே.. “ என்று சிரித்தார் ஜோ..

“ஆமா.. நீ மட்டும் கூட யார் இருக்காங்கனு பார்த்தா இந்த டாபிக் ஐ ஆரம்பிச்ச.. அப்புறம் இதுல அப்படி என்ன ரகசியம் இருக்கோ... சரி அதை விடு.. அப்பா எப்படி இருக்கார்?? “ என்றாள் ஆர்வமாக

“ஹ்ம்ம்ம் நீ பேசினதையெல்லாம் கேட்டதும் வாய் விட்டு சிரிச்சு கிட்டே போய்ட்டார்.. உங்கப்பா இப்படி சிரிச்சு இன்னைக்குத்தான் பார்க்கிறேன் டி... இதுக்காகவாது நீ பேசறதை ரெக்கார்ட் பண்ணியாவது அவருக்கு போட்டு காமிக்கணும்.. அப்படியாவது என் புருசன் சிரிக்கிற அழகை பார்க்கணும்.. “ என்று சிரித்தார் ஜோதி..

“ஹலோ ஜோ.. இது உனக்கே ஓவரா இல்லை.. உன் புருசன் சிரிக்கிறதுக்கு என்னை காமெடி பீசாக்கறீயா.. தட்ஸ் நாட் பேர்... “ என்று வம்பு இழுக்க ஜோதியும் சிரித்துக் கொண்டே சிறிது நேரம் பேசிய பின் அலைபேசியை வைத்தார்...

மலருக்கும் மனம் லேசானதை போன்று இருந்தது...

“எப்படியோ நான் இங்கு சந்தோஷமாக இருப்பதாக அவர்கள் எண்ணி கொள்ளட்டும்.. அதுவும் அப்பாக்கு அது ரொம்ப முக்கியம்..எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமா என்று எப்பவுமே என்னை ஒரு சந்தேக கண்ணோடுதான் பார்த்து கொண்டிருக்கிறார்...

எப்படியும் அவள் அன்னை தன் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டிருப்பார் என்று தெரிந்தே தான் மலர் அப்படி பேசியது 




அவள் நினைத்த மாதிரியே தன் மகளின் உற்சாக குரலை கேட்டும் அவள் சொன்ன செய்தியைக் கேட்டும் சிவசங்கர் முகம் மலர மனம் நிறைந்து போனார்...

அதே நிம்மதி மலர் மனதையும் ஆக்கிரமிக்க, உல்லாசமாக தனக்கு பிடித்த பாடலை ஹம் செய்தவாறு அந்த தோட்டத்தை சுற்றி வந்தாள்.. அவளின் நிம்மதி ஒரு நிமிடம் கூட நீடிக்க விடாமல் செய்தது அடுத்து வந்த அலைபேசி அழைப்பு...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!