என் மடியில் பூத்த மலரே-22



அத்தியாயம்-22 

நான்காம் மாதம்:

ன்று காலை வழக்கம்போல அலுவலகம் செல்ல கிளம்பி வந்த ஆதி காலை உணவை உண்டு கொண்டிருந்தான்... ஜானகி அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்...

எதேச்சையாக அவன் முகத்தை கண்டவர் அவன் ஏதோ யோசனையில் இருப்பதும் ஏதோ கேட்க வருவதும் பின் தயங்குவதும் புரிந்தது.. சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் பின் தானாகவே அவனிடம்

“என்னாச்சு கண்ணா?? .. ஏதாவது பிரச்சனையா.. ஒரே யோசைனயா இருக்க ?? “ என்று ஆரம்பித்தார்...

அவர் கேள்வியில் விழித்தவன் அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டு

“ஆமா மா.. ஒரு சின்ன பிரச்சனை.. அதத்தான் எப்படி சமாளிப்பது என்று யோசித்து கொண்டிருந்தேன்.. “ என்று சமாளித்து சிரித்தான்...

“சரி மா... அப்புறம் உங்க பேத்தியை செக்கப் பண்ண இந்த மாதம் போகணும் இல்லையா?? சுசிலா மா எப்ப வரசொல்லி இருக்காங்க ... “என்றான் தெரியாதவனாக...

ஜானகிக்கு அவனின் யோசனைக்கான காரணம் இப்பொழுது புரிந்தது.. அவன் தன்னிடம் நேராக கேட்க தயங்கிதான் இவ்வளவு நேரம் யோசிச்சுகிட்டிருந்திருக்கான்.. என்று சிரித்து கொண்டவர்

“ஆமா.. கண்ணா... இன்னைக்கு மாலை போகனும்... நான் போய் பாரதிய கூட்டிகிட்டு போய்ட்டு வந்திடறேன்.. “ என்றார் அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு....

“ஹ்ம்ம்ம் உங்களுக்கு எதுக்கு சிரமம் மா.. நானே இந்த முறையும் கூட்டிட்டு போய்ட்டு வந்திடறேன்...” என்றான் அவன் ஆர்வத்தை கட்டுபடுத்திகொண்டு...

அவனின் எண்ணத்தை கண்டு கொண்டவர் இன்னும் அவனை தூண்ட எண்ணி

“உனக்கு எதுக்கு சிரமம் கண்ணா.. உனக்கு ஆபிஷில் நிறைய வேலை இருக்கும்... நீ அதை பார்.. நானும் பாரதியை பார்த்து ரொம்ப நாளாச்சு.. அப்படியே போய் பார்த்துட்டு ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு வந்திடறேன்..” என்றார் உள்ளுக்குள் சிரித்தவாறு..

“சிரமம் எதுவும் இல்ல மா... எனக்கு அங்க இருக்கிற ஆபிஸ்லதான் இன்னும் இரண்டு நாளைக்கு வேலை.. அதனால நான் போய் கூட்டிட்டு போய்ட்டு அங்கயே தங்கிக்கறேன்... “ என்றான் முடிவாக...

ஜானகியும் சிறிது நேரம் யோசித்தவர்

“ஹ்ம்ம்ம் சரி கண்ணா.. உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லைனா நீயே கூட்டிகிட்டு போ ...

அப்புறம் மாரி அவ பேரனை பார்க்க போகணும்னு சொன்னா.. நீ இரண்டு நாள் அங்க தங்க முடியும் னா அவளை போய்ட்டு வரச் சொல்லவா?? “ என்றார்..

“ மா ... மாரி இல்லைனா அங்க யார் சமைப்பாங்களாம்?? அவள் செய்யற உப்புமாவை என்னால தினமும் சாப்பிட முடியாது “

“ஹா ஹா ஹா.. பாரதி இந்த ஒரு மாசத்துல நல்லா சமைக்க கத்துகிட்டா கண்ணா.. நம்ம மாரிகிட்ட ஆர்வமா கத்துகிட்டாளாம்... பத்தாதற்கு என்கிட்டயும் எல்லாம் கேட்டு செய்வா...” என்று சிரித்தார்

“ ஹ்ம்ம்ம் அப்ப நல்லா டைம் பாஷாகுது உங்களுக்கு.. “என்று சிரித்தான்..

“பின்ன... பாரதி வந்தப்புறம் தான் ஜாலியா இருக்கு.. நாள் முழுவதும் அவ கதையை கேட்கவே சூப்பரா இருக்கும்.. “ என்று சிரித்தார்

“இருந்தாலும் அவ செய்யறதை நம்பி நான் அங்க போக முடியாது மா “என்று முறுக்கினான்..

“டேய்.. நான் போன வாரம் போயிருந்தப்ப கூட அவள் தான் சமைச்சு இருந்தா.. சூப்பரா இருந்தது தெரியுமா.... “ என்றவர் தன் நாக்கை கடித்து கொண்டார்....

அதை கண்டு கொண்டவன்

“மா..... இப்பதான் யாரோ அந்த பாரதியை பார்த்து ரொம்ப நாளாச்சு னு சொன்னாங்க.. இப்ப அவங்களே போன வாரம் தான் பார்த்தேனு சொல்றாங்க.... “ என்று தன் புருவங்களை உயர்த்தினான் குறும்பாக...

தான் வாய் விட்டு மாட்டிக்கிட்டதை உணர்ந்த ஜானகி

“ஹீ ஹீ ஹீ... இதெல்லாம் அரசியல் ல சாதாரணம் கண்ணா... நீ கண்டுக்காத.. “ என்று கண் சிமிட்டி சிரித்தார்....

“மா... அந்த கேடி கூட சேர்ந்து நீங்களும் பயங்கர கேடி ஆயிட்டீங்க போல.. பெரிய பெரிய விஷயம் எல்லாம் பண்றீங்க... “என்றான் குறும்பாக...

“ஹ்ம்ம்ம்ம்ம் பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் ங்கிர மாதிரி அவள் கூடயே பொழுது போகுது... அதான்... அவள் கேரக்டர் எனக்கும் வந்திருச்சு போல .. “ என்று சிரித்தார்....

தன் அன்னையின் அந்த மலர்ந்த சிரிப்பையே இமைக்க மறந்து ரசித்தான்.. எவ்வளவு நாள் ஆச்சு இந்த அம்மா இப்படி சிரித்து .. “ என்று எண்ணியவன் அதை அவரிடமே சொன்னான்...

“ஹ்ம்ம்ம்ம் இப்படியே எப்பவும் சிரிச்சுகிட்டே இருங்க மா... அப்பதான் நல்லா இருக்கு... அப்பா மட்டும் இப்ப இருந்தா உங்களை இப்படி பார்த்தார்னா... அப்படியே தூக்கி சுத்தி இருப்பார்... “ என்றான்.

“ஹ்ம்ம்ம்ம்.. நீயும் இப்படியே சிரிச்சுகிட்டே ஜாலியா இரு கண்ணா... “என்று அவன் அrருகில் வந்து அவன் கழுத்தை கட்டிகொண்டு அவன் முன் உச்சி நெற்றியில் மெல்ல முத்தமிட்டார்...

“ஹ்ம்ம்ம் உங்க பேத்தி வரட்டும்.. இன்னும் கலக்கலாம்... “ என்று கண்ணடித்தான்..

“ஹ்ம்ம்ம் எல்லாம் என் மறுமகள் வந்த நேரம்... “ என்றார் தன்னை மறந்து

“மறுமகளா??? யாரது?? “என்றான் சந்தேகமாக...அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவர்

“பாரதி தான்டா... அண்ணா பொண்ண மறுமகள்னு தான் சொல்லுவாங்க.. அந்த உரிமையில தான் சொன்னது.. “என்று சமாளித்தார்...

“ஹ்ம்ம் எப்படி இருக்கார் என் மாமா??... “ என்றான் நக்கலாக

“ஹ்ம்ம்ம் நல்லா இருக்கார்... உன்னை அடிக்கடி கேட்பாங்க.. பாரதியை தான் அவங்க எல்லாம் மிஸ் பண்றாங்க... “ என்று பெருமூச்சு விட்டார்..

“எதுக்கும் கொஞ்சம் பார்த்து உஷாரா இருங்க.. யாரையும் சீக்கிரம் நம்பிடாதிங்க.. “ என்றான் கண்கள் இடுங்க

“உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா... “ என்று அவனை முறைத்தார்...

அவனும் எழுந்து சிரித்துகொண்டே அலுவகம் கிளம்பி சென்றான்..

ஜானகியோ “இவன் திருந்திட்டானு நினைச்சா இன்னும் அதே பழைய பல்லவியையே பாடிகிட்டிருக்கானே... அவனை சொல்லியும் குத்தமில்லை.. அவன் பட்ட பாடம் அப்படி..

எல்லாம் அந்த ஷ்வேதாவால் வந்தது.. எனக்கு வெறும் மறுமகள் தான்.. என்னாலயே அவள் ஏமாற்றியதை தாங்க முடியவில்லை.. அவனுக்கு மனைவி.. அதுவும் காதலித்து மணந்த மனைவி..

அவளே பொய்த்து போய்ட்டானா?? அந்த வலி இருக்கும் தான்.. “ என்று தன்னைத்தானே தேற்றிகொண்டார்... அந்த முருகன் தான் சீக்கிரம் அவன் மனதை ஆற்றனும்..” என்று வேண்டிக்கொண்டார்...

அந்த வேலனும்

“யாமிருக்க பயமேன் ஜானகி.. சீக்கிரம் நம்ம சிடுமூஞ்சியை நம்ம வழிக்கு கொண்டு வந்திடலாம்... “என்று சிரித்துக்கொண்டான்...

அன்று மாலை பாரதி தயாராகி அவனுக்காக காத்துகொண்டிருந்தாள்... இந்த முறை வேற எதுவும் செய்யாமல் அவன் வரவையே பார்த்து இருந்தாள்.. எங்க இந்த முறையும் எதையாவது படிக்க போய் அந்த சுவாரஸ்யத்தில் அவன் வந்ததை கவனிக்காமல் போய் இன்றும் திட்டு வாங்கணும்.. “என்று அவன் வரவையே எதிர்பார்த்து இருந்தாள்...

அவள் அப்படி சொல்லி தன்னை தேற்றிக்கொண்டாலும் உண்மை என்னவென்றால் ,

ஆதி சென்ற பின் கடந்த ஒரு மாதமாகவே அவள் அவளாக இல்லை... அவன் இருந்தது என்னவோ இரண்டு நாட்கள் மட்டும்தான்.. ஆனால் அவன் மனதில் பல நாட்கள் கூட இருந்த மாதிரி குடி ஏறி விட்டான்.. அவன் சென்ற பின் உடனே மாரி வந்துவிட்டாள்... ஆனாலும் அவனுடன் சண்டை போட்ட அந்த இனிமையின் ஆனந்த நிகழ்வுகள் அடிக்கடி வந்து தொல்லை செய்தன...

சரி படிக்கலாம் என்று புத்தகத்தை திறந்தாலும் அதில் அவன் முகம் வந்து தொல்லை பண்ணியது.. எங்கு திரும்பினாலும் “ஏய் பட்டிக்காடு... “ என்று அவன் கூப்பிடுவதை போலவே கேட்டது அவளுக்கு...

முதல் ஒரு வாரம் பெரும் கஷ்டப்பட்டு போனாள்... அதிலிருந்து வெளியில் வரணும் என்று சமையல் அறைக்குள் புகுந்தாள்.. மாரியிடம் ஆர்வமாக அவள் சமைப்பதை பார்ப்பதும் அதே மாதிரி அவள் செய்து மாரியை கஷ்டப்படுத்துவதும், பின் ஜானகியிடம் அரட்டை அடிப்பதும் என்று பொழுதை நெட்டி தள்ளினாள்.. ஆனாலும் இரவு வந்திட்டால் இன்னும் கொடுமையாக இருந்தது அவளுக்கு...

இதெல்லாம் புதுவித வலி, சுகமாக இருந்தது அவளுக்கு.....எப்படியோ நாட்களை தள்ளியவள் இன்று காலை ஜானகி போன் பண்ணி ஆதி அங்கு வரப்போகிறான் எனவும் துள்ளி குதித்தாள்...

இந்த சிடுமூஞ்சி எப்ப போகும் என்று இருந்தவளுக்கு இப்ப அவன் எப்ப வருவான் என்று காத்திருக்கும் தன்னை நினைத்து சிரித்துக்கொண்டாள்.. அவளூக்கே அது வெட்கமாக இருந்தது.. இப்படியா தன்னை மாற்றுவான்.. திருடா“ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டாள்...

மதியம் மாரியும் கிளம்பி சென்று விட அப்பயே தயாரகி வாசலை ஒரு ஆயிரம் தடவையாவது சென்று பார்த்து விட்டு வந்து அமர்ந்தாள்...

அப்பொழுது தான் நினைவு வந்தது அவளுக்கு பிடித்த அந்த பாடல்..







அதன் பொருள் உண்மை அந்த பாடலை கேட்கும்பொழுது புரியவில்லை.. அதையே தான் அனுபவிக்கும் பொழுது எவ்வளவு சத்தியமானது அந்த வரிகள் என்று மெச்சிக்கொண்டாள்....

அவளை ஏமாற்றாமல் சீக்கிரமே ஆதி வந்து அழைப்பு மணியை அழுத்தவும் முதல் அழைப்பிலயே ஓடிப்போய் கதவை திறந்தாள்..

வெளியே நின்று கொண்டிருந்த அவனை கண்டதும் அவள் முகத்தில் அத்தனை மலர்ச்சி... முகம் பூரித்து அவனையே ஆவலாக பார்த்து நின்றிருந்தாள்... அப்படியே அவனை காட்டிக்கொள்ள துடித்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள்.....

ஆதிக்கும் அதே நிலைதான்... ஒரு மாதமாக அவனுக்கும் அதே நிலைதான்.. பகல் முழுவதும் வேலையில் கவனம் சென்று விடுவதால் தெரியாத கஷ்டம் இரவு படுக்கையில் விழும்பொழுது அவள் நினைவுகள் அவன் முன்னே வந்து குதிக்கும்... ஆனால் அவன் அதை எல்லாம் பின்னுக்கு தள்ளி தன் பிரின்ஸஸ் மட்டும் தான் என்று மனதை அடக்கி விடுவான்...

ஆனால் இன்று அவளை நேரில் பார்க்கும் பொழுது அவனை அறியாமலயே அவன் மனம் அவளிடம் தாவியது... அதுவும் இன்று அவள் மலர்ந்த முகத்துடன் அவனை ஆவலாக நோக்கவும் அவனுக்கு பெரும் சத்தியசோதையாக இருந்தது.. அவளை அப்படியே தூக்கி சுற்ற துடித்த தன் கைகளை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்....

பின் சுதாரித்துகொண்டவன் எதுவும் பேசாமல் உள்ளே வந்து வேகமாக தன் அறைக்கு சென்றான்....

பாரதிக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது...அவள் உற்சாகம் எல்லாம் வடிந்து போனது.. “ நல்லா இருக்கியானு ஒரு வார்த்தை கேட்ட என்னவாம் அவனுக்கு?? “ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டவளின் முகம் வாடியது அவனின் பாராமுகத்தை எண்ணி ...

அப்பொழுது தான் அவள் நிலை அவளுக்கு உறைத்தது.. தான் வந்திருப்பது ஒரு வாடகைத்தாயாக... அவன் குழந்தையை சுமக்க மட்டுமே.. அதை தவிர வேற எந்த உரிமையும் இல்லாதப்போ அவன் தன்னிடம் பேச வேண்டும் கொஞ்சவேண்டும் என்று எதிர்பார்த்தது தப்புதான்....

“சே.. நானா இப்படி மாறியது... “ என்று தன்னைத் தானே திட்டி கொண்டவள் சமையல் அறைக்குள் சென்று முகத்தில் நீரை அடித்து கழுவினாள்... ஆனாலும் அவள் கண்ணில் இருந்து நீர் நிக்காமல் வழிந்து கொண்டிருந்தது..

“சே என்ன மாதிரியான் வேதனை இது?? ... அவன் தன்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை என்பதற்காக இப்படியா அழுவது.. “ என்று மீண்டும் தன் தலையில் கொட்டி கொண்டவள் மனதுக்குள் கந்த சஷ்டி கவசததை சொல்லிகொண்டாள்.. அவன் முன்னாடி எதுவும் தன்னை காட்டிக் கொள்ள கூடாது என்று தன் மனதை அறைந்து மூடினாள்..

பின் கொஞ்சம் தெளியவும் அவன் சாப்பிட சிற்றுண்டியை எடுத்து வைத்து விட்டு ஷோபாவில் அமர்ந்து தன் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்....

தன் அறைக்கு சென்ற ஆதிக்கும் மனம் ஏனோ பாரமாக இருந்தது.. அவளிடம் எதுவும் பேசி இருக்கவேண்டுமோ?? ... அவன் பேசாமல் வந்ததும் அவள் முகம் வாடியது அவன் கண்ணில் பட்டது தான்...

ஏனோ .. அவளை திட்டுவதற்கு ஓடி வரும் வார்த்தைகள் அவளிடம்ச சாதாரணமாக பேச வர மாட்டேங்குதே!! அவளை திட்டலாம் என்றாலும் அதற்கு இடம் கொடுக்காமல் எல்லாம் சரியாக செய்திருந்தாள்...

“சே என்ன இம்சை டா இது??.. “ என்று நொந்துகொண்டவன் வழக்கம் போல ரிப்ரெஸ் ஆகி ஜீன்ஸ்ம் டீ ஷர்ட் ம் அணிந்து கொண்டு கீழ இரண்டு இரண்டு படிகளாக தாவி இறந்கி வந்தான்...

அவன் வருவது தெரிந்ததும் அங்கு குதித்து ஓடிய தன் கண்ணையும் மனதையும் இழுத்து வைத்துகொண்டு தன் புத்தகத்தில் கவனத்தை செலுத்தினாள்... இல்லை செலுத்துவது மாதிரி நடித்தாள்....

அவனோ அவளை கண்டு கொள்ளாமல் டைனிங் டேபிலுக்கு சென்றவன் அவள் எல்லாம் எடுத்து வைத்திருப்பதை கண்டவன்

“ஏய்.. பட்டிக்காடு.. நீ பாட்டுக்கு வச்சுட்டு போய்ட்டா யார் எடுத்து வைப்பாங்களாம்?? .. “ என்று ஆரம்பித்தான் மனதுக்குள் சிரித்தவாறு...

இதுவரை மௌன விரதம் இருந்தவன் வாயை திறக்கவும் துள்ளி குதித்து எழுந்து வந்தாள்... அவளின் அந்த மகிழ்ச்சியை ஒரக்கண்ணால் கண்டுகொண்டான்...

அவன் அருகில் வந்தவள் தட்டை எடுத்து அவனுக்கு உண்ண எடுத்து வைத்தாள்...

பின் மெதுவாக

“அத்தை நல்லா இருக்காங்களா?? ” என்று முனகினாள்... அவள் வார்த்தை அதற்கு மேல் வராமல் தந்தியடித்தது...

அதை கேட்டதும் அவளை பார்த்து முறைத்தான்...

“அதான் 24 மணி நேரம் உங்க அத்தை கூட தான பேசிக்கிட்டு இருக்க... உனக்கு தெரியாது நல்லா இருக்காங்களா இல்லையானு?? .. “ என்று முறைத்தான்.. இல்லை முறைப்பதை போல நடித்தான்...

“ஹி ஹி ஹி.. “என்று அசட்டு சிரிப்பை சிரித்தவள் சமையல் அறைக்குள் ஓடி விட்டாள்..

வழக்கம் போல இஞ்சி டீ யை எடுத்து வந்து அவன் அருகில் வைத்தாள்.. அதை குடித்து முடிக்கவும் பின் இருவரும் கிளம்பி சென்றனர்..

வரும் வழியில் காரில் இருவரும்அமைதியாக வந்தனர்.. கொஞ்ச நேரம் ஆனதும்

“ஆமா.. உங்க வீட்டுக்கு பேசினியா?? “என்று ஆரம்பித்தான் ஆதி..

“ஹ்ம்ம்ம் வாரா வாராம் வாட்ஸ்அப் ல பேசறேன்.. “ என்றாள் வாயெல்லாம் பல்லாக

“சரி.. உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கா... “ என்றான்.. ஆர்வம் இல்லாதவனாக வெளியில் காட்டி கொண்டாலும் அவனுக்கும் அவளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது...

அவ்வளவு தான் பாரதி தன் வாயில் இருந்த பூட்டை கழட்டி வைத்து விட்டு தன் குடும்பத்தை பற்றி பெருமை அடிக்க ஆரம்பித்தாள்.. அதோடு அவங்க ஊரை பற்றியும் அங்கு உள்ள குளம், குட்டை,கோயில் என அனைத்தையும் பெருமை பீற்றினாள்...

அவள் கண்ணில் ஒரு வித ஆர்வம் கலந்து அந்த கிராமத்து பாணியில் இழுத்து பேசுவதும் அதை ஆக்ஷனோடு கை அசைத்து பேசவும் அவனும் ஆர்வத்தோடு அவளையே பார்த்து வந்தான்..

அவள் சொன்னது பாதி அவனுக்கு புரிய வில்லை என்றாலும் ஏனோ அவள் பேசுவதை கேட்டுகொண்டெ இருக்க வேண்டும் போல இருந்தது..

அதற்குள் மருத்துவமனை வந்து விடவும் அதன் வாயிலில் நிறுத்தி

“நீ அந்த கோயிலிக்கு போகனுமா?? “என்றான்..

அவளுக்கோ தன் காதையே நம்ப முடியவில்லை.. அவனா கேட்பது??... அன்னைக்கு மாட்டேனு சொன்னவன் இன்னைக்கு தானாகவே கூப்பிடறானே!! .. என்று துள்ளி குதித்தாள்...அவளின் துடுக்குத்டனம்வெளிக்காட்ட வெளியில்தலையைநீட்டியும்பின் தன் கையை வெளியில் நீட்டினாள்...அதை கண்ட ஆதி

“ஏய்.. பட்டிக்காடு எதுக்கு இப்ப தலய வெளியில நீட்டற... “

“ஹ்ம்ம்ம்ம் நீங்களே கோயிலுக்கு கூட்டிட்டு போறேனு சொன்னீங்களே... அதான் மழை எதும் வருதானு செக் பண்ணினேன் ... “ என்று இழுத்தாள் முகத்தில் சிரிப்பை அடக்கி கொண்டு..

“ஹ்ம்ம்ம் எல்லாம் என் நேரம்.. அன்னைக்கு என்னவோ அப்படி கெஞ்சினியேனு கேட்டா கிண்டலா அடிக்கிற ... “ என்று முறைத்தான்...

“ஹி ஹி ஹி... டென்ஷன் ஆகாதிங்க...

“இன்னும் ரெண்டு நாள் ல சஷ்டி வருது.. நானும் அத்தையும் அப்ப அந்த கோயிலுக்கு போய்க்கிறோம்... “ என்றாள்...

அவன் கோயிலுக்கு கூப்பிட்டப்போ அவனுடன் செல்ல ஆசைதான் அவளுக்கும்... ஆனாலும் எந்த முறையும் உரிமையும் இல்லாமல் அவனுடன் சேர்ந்து அந்த வேலன் முன்னே நிக்க அவளுக்கு விருப்பமில்லை.. அதனாலயே அவள் மறுத்து விட்டாள்..

ஆதியோ “ஹ்ம்ம்ம் உன் இஷ்டம்.. “என்று தன் தோளை குலுக்கியவன் காரை பார்க்கிங் ல் நிறுத்திவிட்டு இறங்கி கொஞ்சம் மெதுவாகவே நடந்தான் அவளும் வரட்டும் என்று,..

பாரதிக்கு எல்லாமே ஆச்சர்யமாக இருந்தது..

“இந்த சிடுமூஞ்சி மாறி விட்டானா??... அப்படி தான் தெரியுது.. இவ்வளவு அமைதியா இருக்க மாட்டானே.. “ என்று உள்ளுக்குள் புலம்பியவாறு அவனுடன் இணைந்து நடந்தாள்...

சுசிலா அறையை அடைந்ததும் வழக்கம் போல இவர்கள் முறை என்பதால் நேராக உள்ளே சென்றனர்..

சுசிலாவும் இவர்கள் இருவரையும் கண்டதும் எழுந்து வந்து இருவரையும் சேர்த்து கட்டி கொண்டார்...

பின் மூவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு, சுசிலா பாரதியை செக்கப் பண்ண உள்ளே கூட்டி சென்றார்.. இது வழக்கமான செக்கப் என்பதால் சீக்கிரம் முடிந்து எல்லாம் நார்மலாக இருக்கு என்று சொல்லவும் அவரிடம் விடை பெற்று கிளம்பினர்..

வழியில் அந்த நர்ஸ் கண்ணில் படவும் பாரதி நின்று ஒரு நிமிடம் பேசிவிட்டு வந்தாள்... அதே மாதிரி கண்ணில் படற தெரிந்தவங்களுக்கு எல்லாம் புன்னகைத்தாள்...

இதை கண்ட ஆதி

“ஏய்.. நீ என்ன லூசா??... எதுக்கு எல்லார் கிட்டயும் பல்லை காட்டி கிட்டு வர்ர?? .. “என்று முறைத்தான்..

“அவங்க எல்லாம் தெரிஞ்சவங்க.. பார்க்கும் பொழுது எப்படி மூஞ்சியை உம்முனு வச்சிக்கிறதாம்.. “ என்று அவளும் முறைத்தாள்...

“சே .. இந்த பட்டணமே ரொம்ப மோசம்... யாரும் யார் கூடயும் ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு பேசக்கூட நேரம் இல்லாமல் காலுல வெண்ணிய ஊத்திகிட்டு பறக்கிறாங்க... “ என்று புலம்பியபடி அவனுடன் நடந்தாள்..

பின் காரை அடைந்ததும் அதை எடுத்த ஆதி ஒரு கடையின் முன் நிறுத்தினான்..

“எதுக்கு?? “என்று புரியாமல் பார்த்தாள்...

“ஏய்... நீ கொண்டு வந்த ட்ரெஸ் எல்லாம் பழசாயிருச்சாம்.. அதோடு இனிமேல் நீ குண்டாவியாம்.. அதனால் உனக்கு வேற ட்ரெஸ் எடுத்து கொடுக்க சொல்லி உன் அத்தையோட ஆர்டர்... கொஞ்சம் இறங்கறியா?? “என்றான் நக்கலாக

அவளும் இறங்கி பின் இருவரும் கடைக்குள் சென்றனர்..

அது ஒரு கர்ப்பினிகளுக்கான எல்லாம் பொருட்களும் கிடைக்கும் கடை.. கற்பத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே தேவையான ட்ரெஸ், மற்றும் அனைத்து பொருட்களும் அங்கு இருந்தன.. அதோடு குழந்தைக்கு தேவையான அனைத்து பொருட்களும் அங்கு ஒரே இடத்தில் இருந்தது...

முதலில் ட்ரெஸ் செக்ஷனுக்கு சென்றனர்.. அங்கு இலகுவான சல்வார்களும் மற்றும் வயிறு பெரிதாக ஆகும் பொழுது அணிவதற்கான ஆடைகளும் இருந்தன...

“உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ... “என்றான் அவளை பார்த்து..

அங்கு இருந்த வகைகளை பார்த்து பேந்த முழித்து கொண்டிருந்தாள்.. இதுவரை அவள் தனியாக எங்கும் ஷாப்பிங் சென்றதில்ல.. கூட வேலை செய்பவர்களோ இல்லை தன் அம்மாவோ அக்கா மஹாவோ தான் அவளுக்கு எப்பவும் தேர்வு செய்வர்.. அவர்கள் எதை எடுத்து கொடுத்தாலும் அதை அப்படியே வாங்கி கொள்வாள்..

இன்று தானே தேர்வு செய்யனும் என்றதும் எதை தேர்வு செய்வது என்று முழித்து கொண்டிருந்தாள்... பின் அங்கு இருந்த ஒவ்வொரு ஆடையையும் எடுத்து அதன் விலையை பார்த்து பின் வேண்டாம் என்று நகர்த்தி வைத்தாள்..

அவளையே சிறிது நேரம் பார்த்தவன் அவள் எதையும் தேர்வு செய்யாமல் முழித்துகொண்டு இருக்கவும் அருகில் வந்தவன்

“ஏய்.. பட்டிக்காடு... என்ன முன்ன பின்ன இந்த மாதிரி ட்ரெஸ் எடுத்து இருக்கியா இல்லையா?? “ என்றான் நக்கலாக...

“ஹ்ம்ம்ம் நான் எடுத்ததில்லை.. எப்பவும் எங்க அம்மா இல்ல அக்காதான் எடுத்து தருவாங்க... எனக்கு எதை எடுக்கறதுனு தெரியல.. நீங்களே ஏதாவது எடுத்து தாங்க.”. என்றாள்..

“சரி நகரு.. “என்றவன் கட கடவென்று அவள் நிறத்துக்கு பொருத்தமாக சில சல்வார்களை எடுத்து கொடுத்தான.. அதன் விலையை பார்த்து அதிர்ந்தவள்

“ஐயோ!! இவ்வளவு விலையா... இவ்வளவு விலையில் வேண்டாம்.. “என்றாள் அவசரமாக...

“ஏய்.. இது என்ன உங்க ஊர் செட்டியார் கடையா?? ...கம்மி விலைக்கு வாங்க.. . இங்கெல்லாம் அப்படிதான் இருக்கும் எடுத்துக்கோ... “ என்று அதட்டினான்..

பின் சில இரவு உடையும் எடுத்து கொடுத்தான்.. பின் இன்னும் சில பொருட்களை வாங்கியவன் அவற்றை எல்லாம் பில் போட கொடுத்தான்..

பாரதி ஒரு பிரிவில் தயங்கி தயங்கி நின்றாள்.. அது பெண்களுக்கான உள்ளாடை பிரிவு...

“சே!! அத்தை கூட வந்திருக்கலாம்.. இவன் முன்னாடி எப்படி இத வாங்குவது... “ என்று தயங்கி அங்கயே நின்று கொண்டிருந்தாள்..

அவன் மறுபக்கம் வேறு ஏதொ வாங்கி கொண்டு இருக்கவும் அவனுக்கு தெரியாமல் சில உடைகளை எடுத்து அந்த பில் கவுண்டரில் மற்ற ஆடைகளுடன் வைத்து விட்டாள்...

பின் ஆதி வரவும் கவுண்டரில் பில் போட்டு முடித்து தன் கிரெடிட் கார்டை எடுத்து கொடுத்தான்.. பின் அந்த பில்லை சரி பார்த்தவன் அதில் அவன் வாங்காத சில ஐட்டங்களும் இருக்கவும் அதை காட்டி

“இது நான் வாங்கலையே.. இது எப்படி இதுல இருக்கு.. “ என்று முறைத்தான்..

“ஐயோ.. மானம் போச்சு.. இப்படியா பில்லை சரி பார்ப்பான்.. “என்று நொந்து கொண்டாள் பாரதி..

அந்த கவுண்டரில் இருந்தவரோ,

“இதெல்லாம் உங்க வொய்ப் தான் வாங்கினாங்க சார் “ என்று பாரதியை கை காட்டினான்...

அவள் முழித்து கொண்டு நிற்பதை கண்டவன் அவளை பார்த்து முறைத்து விட்டு அதையும் எடுத்து வைத்து கொண்டு வெளியில் சென்றான்..

பாரதியும் வேகமாக ஓடி வந்து அவனுடன் இணைந்து கொண்டாள்.. ஏனோ அவன் முகத்தை பார்க்க அவளுக்கு வெக்கமாக இருந்தது...

பின் ஆதி அருகில் இருந்த ஒரு உயர்தர உணவகதிற்கு சென்று காரை நிறுத்தினான்...

அதை கண்டதும்

“இங்க எதுக்கு?? “என்றாள் புரியாதவாறு.

“ஏய் இறங்கு... நாம் வீட்டுக்கு போறதுக்குள்ள நீ தூங்கினாலும் தூங்கிடுவ.. .அதனால் இங்கயே சாப்பிட்டு போகலாம் வா.. “என்று அவன் இறங்கினான்...

பின் அவளும் இறங்கி அவனுடன் இணைந்து நடந்தாள்...

காலியாக இருந்த ஒரு மேஜையில் சென்று அமர்ந்தனர்... பின் அருகில் இருந்த மெனு கார்டை எடுத்து

“என்ன சாப்பிடற?? நீயே செலக்ட் பண்ணு “ என்று அவள் முன்னே வைத்தான்..

அதில் இருந்த பெயர்களை பார்த்து முழித்தவள்

“நீங்களே ஏதாவது ஆர்டர் பண்ணுங்க.. எனக்கு ஒன்னும் தெரியல “ என்று அவன் முன்னே வைத்தாள்

பின் ஆதியும் சில புது வகையான உணவு வகைகளை ஆர்டர் செய்து விட்டு காத்து இருந்தனர்.. அவன் எதோ சொல்ல பாரதி குலுக்கி சிரித்தாள்.. இவர்கள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை இரு கண்கள் கண்டு பொறாமையில் வெந்தது...

அதற்குள் அவர்கள் உணவு வரவும் பாரதி அதை ஆர்வமாக சுவைத்து சாப்பிட்டள்.. ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து எழுந்து கை கழுவி வந்து அமர்ந்தாள்...

அவளின் பார்வை எதேச்சையாக அருகில் இருந்த ஒரு குழந்தை கையில் வைத்து சாப்பிட்டு கொண்டிருந்த ஐஸ்கிரீமில் சென்று நின்றது...

உடனே அவளுக்கு திருச்சி ஞாபகம் வந்தது.. அவள் மருத்துவமனையில் வேலை செய்யும் பொழுது வேலை முடிந்ததும் வார வாரம் சனிக்கிழமை திருச்சி மலைக்கோட்டைக்கு சென்று விடுவர் அடுத்த நாள் விடுமுறை என்பதால்...

அங்கு வேலை செய்யும் மற்ற நண்பிகளுடன் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டே அந்த மலைக்கோட்டையில் ஏறி உச்சிபிள்ளையாரை தரிசித்து விட்டு அந்த மலையில் காலை நீட்டி அமர்ந்து கொண்டு அங்கு வீசும் காற்றை இழுத்து சுவாசிப்பாள்.. பின் அரை மணி நேரம் எல்லா கதையும் பேசி கிண்டல் அடித்துகொண்டு இருந்து விட்டு பின் கீழ இறங்குவர்...

இறங்கும் பொழுது யார் முதலில் இறங்குவது என்று அவர்களுக்குள் போட்டி இருக்கும்... பாரதி தான் எப்பவும் ஜெயிப்பாள்.. இரண்டு இரண்டு படியாக தாவி வேகமாக ஓடி கீழ வந்து விடுவாள்...

பின் அனைவரும் அருகில் இருக்கும் மைக்கேல் ஐஸ்க்ரீம் கடைக்கு சென்று அங்கு ஆளுக்கொரு வெண்ணிலா கோன் ஐஸ்கிரீமை வாங்கி அதை சுவைத்துகொண்டே சத்திரம் பேருந்து நிறுத்தம் வரைக்கும் சாப்பிட்டு கொண்டே வருவர். பின் அவங்கவங்க ஊர் பேருந்தை பிடிச்சு வீடு வந்து சேர மணி பத்தாகும்...

அதே நினைவில் இன்று அவள் கண்கள் பளபளத்தது அந்த ஐஸ்கிரீமை கண்டு...

கை கழுவிவிட்டு வந்த ஆதி அவள் அநத குழந்தை கையில் இருந்த ஐஸ்கிரீமையே உற்று பார்த்திருப்ப்தை கண்டு அவள் அருகில் அமர்ந்தவன்

“ஏய்.. பட்டிக்காடுங்கிறது சரியாதான் இருக்கு.. இப்படியா அந்த குழந்தை கையில் இருக்கிறதை பிடுங்கி சாப்பிடற மாதிரி பார்ப்ப.. “என்று காதை கடித்தான்..அதை கண்டு கொள்ளாமல்

“ஹ்ம்ம்ம் எனக்கும் அதே மாதிரி ஐஸ்கிரீம் வேணும் ... “ என்று சிணுங்கினாள்..



“ஏய்.. அதெல்லாம் நீ சாப்பிடக்கூடாது.. “என்று அவசரமாக மறுத்தான் ஆதி

“ஏன்?? “

“ஹ்ம்ம்ம் என் பிரின்ஸஸ்க்கு சளி பிடிக்கும்... “ என்றான்

“ஆங்... “ என்று முழித்தவள் அதை எப்படியாவது சாப்பிட வேணும் என்ற ஆவலில் யோசித்து

“அதெல்லாம் ஒன்னும் பிடிக்காது... உங்க இளவரசி தான் ஐஸ் கிரீம் வேணும்னு கேக்குறா... “ என்று அவனுக்கு ஐஸ் வைத்தாள்..

“ம்ஹும்.. அதெல்லாம் அவ ஒன்னும் கேக்கலை.. அவ பேரை சொல்லி நீ தான் கேக்கற..கேடி... எல்லாம் எனக்கு தெரியும்.. “என்று அதட்டினான்..

“ஐயோ... கண்டுபிடிச்சிட்டானே.. இப்ப என்ன செய்யறது... “என்று மீண்டும் யோசித்தவள்.

“எனக்கென்னப்பா... உங்க புள்ளைதான் கேட்கிறா... புள்ளை வயிற்றில இருக்கிறப்போ அவ கேட்டு எதுவும் வாங்கி கொடுக்கலைனா குழந்தை பிறக்கும் பொழுது காதுல சீல் வருமாம்.... இப்ப மட்டும் இந்த ஐஸ்கிரீமை நீங்க வாங்கி கொடுக்கல னா உங்க பாப்பா பிறக்கும் பொழுது காதுல சீல் ஓட தான் பிறப்பா... “என்று பயமுறுத்தினாள் அவனை...

அதை கேட்டதும் கொஞ்சம் பயந்துதான் போனான்.. அவனை ஓரக்கண்ணால் பார்த்தவள்

“ஆஹா.. நம்ம வார்த்தை வேலை செய்யுது.. “ என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.. சிறிது நேரம் யோசித்தவன்

“ஆமா ... உனக்கு யார் சொன்னா இதெல்லாம்.. “என்றான் அவளை நம்பாதவனாக...

“ஹ்ம்ம்ம் எங்க ஆயா சொல்லி இருக்கு... “

“ஏய்.. உங்க ஆயா என்ன Gynagologist ஆ?? “ என்றான் நக்கலாக அவளின் திருட்டுதனத்தை கண்டு கொண்டவனாக

“ஹ்ம்ம்ம்ம் ஐஸ்கிரீம் சாப்பிட்டா குழந்தைக்கு சளி பிடிக்கும்னு உங்களுக்கு யார் சொன்னாங்களாம் ?? “ என்று அவனை மடக்கினாள்...

“ஆங்.. அது வந்து... நான் தான்.. “

“நீங்கம் மட்டும் என்ன Gynagologist ஆ ?? “என்றாள் அவனை மதிரியே நக்கலாக

“ஹ்ம்ம்ம் எங்க அம்மா ஒரு டாக்டர்.. அtதனால எனக்கும் எல்லாம் தெரியுமாக்கும்... “என்று சமாளித்தான்...

“ஆங்... உங்க அம்மா டாக்டர் னா அவங்களுக்கு தான் தெரியும்.. நீங்க படிக்காமலயே எப்படி டாக்டர் ஆக முடியும்.. ஆங் இது செல்லாது செல்லாது.. “ என்றாள் கை தட்டி சிரித்தவாறு

“பட்டிகாடா இருந்தாலும் பாயிண்ட் ஐ புடிச்சிட்டாளே.. இப்ப எப்படி சமாளிக்கிறது?? “என்று மனதுக்குள் புலம்பியவன்

“ஏய்.. நீ என்னதான் சொன்னாலும் உனக்கு ஐஸ்கிரீம் கிடையாது.. “என்றான் முகத்தை கடுமையாக வைத்துகொண்டு.. அப்பவாது அவள் அடங்குவாள் என்று...

அவன் முகம் கடுகடு வென்று ஆகவும்

“ஆஹா அந்த சிடுமூஞ்சி அந்நியன் மறுபடியும் வந்திட்டானே...இனிமேல் நான் எது சொன்னாலும் கேட்கமாட்டான்.. “என்று திட்டிகொண்டே வேகமாக எழுந்தவள் அவனை முறைத்தவாறு காருக்குள் சென்று அமர்ந்து கொண்டு மறுபக்கம் திரும்பி கொண்டாள்..

அவள் கோபமாக எழுந்து செல்லவும் கொஞ்சம் இறங்கியவன் தன் அலைபேசியை எடுத்து சுசிலாவை அழைத்தான்... அவர் அழைப்பை ஏற்றதும்

“மா... ஒரு சந்தேகம்... குழந்தை வயிற்றில இருக்கும் பொழுது அவங்க அம்மா ஏதாவது கேட்டு அது செய்யலைனா காதுல சீல் வருமா?? “ என்றான் சந்தேகமாக...

அதை கேட்ட சுசிலா சிரித்தார்...

“யார் சொன்னா கண்ணா?? “

“நீங்க சொல்லுங்க.. வருமா?? .. “

“அதெல்லாம் சும்மா கண்ணா.. அப்படியாவது அந்த தாய் ஆசைப்படறதை எல்லாம் மத்தவங்க நிறைவேற்றி வைக்கனும்னு நம்ம முன்னோர்கள் இப்படி சொல்லி வச்சாங்க..

ஆமா .. அப்படி என்ன பாரதி உன்கிட்ட கேட்டா?? “

“எப்படி மா கண்டு பிடிச்சிங்க ??” என்றான் ஆச்சர்யமாக

“ஹா ஹா ஹா... நான் உன்னை வளர்த்தவ கண்ணா... உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் எனக்கு அர்த்தம் தெரியுமாக்கும்...” என்றார் பெருமையாக

“நீ ஒரு சந்தேகம் கேட்டா அது எப்பவும் உன்னை சுத்தி இருப்பதை தான் கேட்ப.. சரி சொல்லு பாரதி என்ன கேட்டா?? “ என்றார் சிரித்தவாறு

“ஐஸ்கிரீம் கேட்கறாமா... இப்ப சாப்பிட்டா பேபிக்கு சளி பிடிக்கும் தான.. சொன்னா கேட்க மாட்டேங்குறா... ” என்று சலித்துக்கொண்டான்

அதை கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தார் சுசிலா,..சிரித்து முடித்ததும்

“இது யார் கண்ணா சொன்னது ஐஸ்கிரீம் சாப்பிட்டா குழந்தைக்கு சளி பிடிக்கும் னு “ என்றார் இன்னும் சிரித்தவாறு

“நீங்க தான மா சொன்னீங்க.. அவ சாப்பிடறது எல்லாம் குழந்தைக்கு போகும் னு .. அப்ப இவ பாட்டுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடா அதுவும் பேபிக்கும் போய் சளி பிடிக்காது.. ” என்றான்

அதை கேட்டு மீண்டும் சிரித்தவர்..

“அதெல்லாம் ஒன்னும் இல்லை கண்ணா... நீ வாங்கி கொடு.. ஒன்னும் ஆகாது.. அதோடு அவளுக்கு இன்னும் என்னெல்லாம் வேணும்னு கேட்டு வாங்கி கொடு.. அவள் மனசுல எந்த குறையும் இருக்க கூடாது.. அப்பதான் குழந்தையும் மகிழ்ச்சியா பிறக்கும்.. “என்று சிரித்துக்கொண்டே போனை வைத்தார்...

காரில் உட்கார்ந்திருந்த பாரதி ஜன்னல் வழியாக அவன் சிரித்து பேசி கொண்டிருப்பதை கண்டாள்.. அவன் மனம் விட்டு சிரித்தது அந்த போட்டோவில் இருப்பதை விட இன்னும் வசீகரமாக இருந்தது...அவனையே சிறிது நேரம் ரசித்து பார்த்தவள் பின்

“யார் கிட்ட இப்படி சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கான்..?? வேற யாரா இருக்கும் எல்லாம் அவனோட அம்மாங்கள் யாராவதான் இருக்கும். வேற யார் கிட்ட இந்த சிடுமூஞ்சி சிரிக்குதாக்கும்..” என்று திட்டிகொண்டே மீண்டும் ஜன்னலின் மறுபக்கம் திரும்பிக்கொண்டாள்..

அவள் மனம் இன்னும் ஆறவில்லை.. தான் ஒரு ஐஸ்கிரீம் கேட்டு அவன் வாங்கி கொடுக்கலைனு...

“இதே ஜானகி அத்தையா இருந்தா நான் கேட்ட உடனே வாங்கி கொடுத்திருப்பாங்க... ஹ்ம்ம் சளி பிடிக்குமாம் அவன் இளவரசிக்கு...இருக்கட்டும் ஜானகி அத்தை வர்ரப்போ டஜன் டஜனா ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு அவன் இளவரசிய ஐஸ் மழை ல நனைய வைக்கிறேன்... “ என்று கருவிக்கொண்டிருந்தாள்...

சுசிலாவிடம் பேசியவன் பின் ஒரு கோன் ஐஸ்கிரீம் மை வாங்கிகொண்டு காரின் அருகில் வந்தவன் அவன் இருக்கையின் வழியாக உள்ளே வந்தான்..

பாரதி இன்னும் முகத்தை உர்ரென்ரு வைத்துக்கொண்டு வெளியில் பார்த்துக் கொண்டிருந்தாள்... அவள் பக்கம் பார்த்தவன்

“ஏய் பட்டிக்காடு.. இந்தா நீ கேட்ட ஐஸ்கிரீம்.. “என்று அவள் முன்னே நீட்டினான்...

அவள் திரும்பாமல் இன்னும் முறுக்கி கொண்டு நல்லா அந்த பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டாள்...

“ஏய்.. இத பிடிக்கறியா இல்லையா?? நீ கேட்டனு தான வாங்கினேன்... “ என்று அதட்டினான்...

“எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்று முறைத்தாள்.. ஓரக்கண்ணால அந்த ஐஸ்கிரீமை பார்த்துக்கொண்டே

“வேண்டாமா.??? இப்ப வாங்கலைனா நானே உன் வாயை பிடித்து ஊட்டி விட்டுடுவேன்.. என்ன ஓகே வா?? “ என்றான் குறும்பாக..

“ஐயோ!! இவன் செஞ்சாலும் செய்வான். ஐஸ்கிரீம் வேற கரைந்து கொண்டிருக்க இதுக்கு மேல பிகு பண்ண வேண்டாம் .. “ என்று யோசித்து வேகமாக அவனிடம் இருந்து பிடுங்கி சுவைக்க ஆரம்பித்தாள்..

அந்த ஐஸ்கிரீம் அவள் தொண்டையில் இறங்கவும் அவள் உதட்டில் படிந்த அந்த கிரீம் அவனை சுண்டி இழுத்தது.. அவள் உதட்டின் மேலெயே படிந்தது அவன் பார்வை...

அவன் அவளையே பார்த்து கொண்டிருப்பதை கண்டவள்..

“கண்ணு வைக்காதிங்க.. அப்புறம் எனக்கு வயிறு வலிக்கும்... உங்களுக்கு வேணும்னா இன்னொன்னு வாங்கிக்க வேண்டியது தான.. என்னோடதயே அப்படி ஏன் பார்க்கறீங்க” என்று முறைத்தாள்....பின்

“வேணும்னா ஒரு வாய் எடுத்துக்கோங்க “ என்று தன் தம்பி தங்கையிடம் பகிர்ந்து கொள்ளும் நினைப்பில் அவனிடம் நீட்டினாள்...

அவனோ.. “இந்த கப்பில் இருக்கும் ஐஸ்கிரீம் வேண்டாம்.. உன் உதட்டில் இருக்கும் ஐஸ்கிரீம் தான் வேணும்” என்று மனதுக்குள் சொல்லி கொண்டவன் பின் அவள் நீட்டி இருந்த கோனில் இருந்து ஒரு வாய் லிக் பண்ணி சாப்பிட்டான்..

அவள் சாப்பிட்டதாளொ என்னவோ அந்த ஒரு வாய் ஐஸ்கிரீம் என்றும் இல்லாமல் புதிய சுவையாக இருந்தது அவனுக்கு.... பாரதியும் அவன் கடித்த அதே இடத்தில் கடிக்கையில் வித்தியாசமாக உணர்ந்தாள்.. அப்பொழுது தான், தான் செய்தது ஞாபகம் வந்தது..

“சீ.. என்ன நினைப்பான் என்னை பற்றி” என்று மானசீகமாக தலையில் கொட்டி கொண்டவள் அதை முழுவதும் ரசித்து சாப்பிட்டாள்...

அவனின் பார்வையோ அடிக்கடி அவளின் உதட்டில் மேலே படிந்து மீண்டது...

“ஸ்ஸ் அப்பா... கண்ணுதான் ஆளை இழுக்குற கண்ணுனா அவள் உதடு கூட ஆளை கவிழ்க்கற உதடா இருக்கே.. இவளிடம் கொஞ்சம்.. இல்லை ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கனும் போல... “ என்று நினைத்து கொண்டு காரை ஓட்டினான்..

சிறிது தூரம் சென்றதும் சுசிலா சொன்னது நினைவு வர அவளிடம் திரும்பி

“வேற ஏதாவது ஆசை இருக்கா உனக்கு?? வேற எதுவும் வேணுமா?? “ என்றான்.. அதை கேட்டு அதிசயித்தவள்

“ஆங் ... இவன் நிஜமாலுமே நான் சொன்ன கதையை நம்பிட்டானா?? “என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.. பின் அவனை பார்த்து

“ஏன்.?? வேற எதுவும் எனக்கு வேணும்னா வாங்கி தருவீங்களா?? “ என்றாள் குறும்பாக

“ம்ம்ம்ம். அப்பதான் என் பிரின்ஸஸ் ஹேப்பியா இருப்பாளாம்... சொல்லு என்ன வேணும்?? “

“ஹ்ம்ம்ம் நான் என்ன கேட்டாலும் வாங்கி தருவீங்களா?? “என்றாள் நக்கலாக

“ம்ம்ம்ம்”

“எவ்வளவு பெருசாலுமா?? “ என்று பீடிகை போட்டாள்...

“ஆமாம்... சொல்லு” என்றவனுக்கு அந்த ஷ்வேதாவின் நினைவு வந்தது....

அவளிடம் தலை சுற்றியிருந்த பொழுது இதையே அவன் சொன்ன பொழுது அவள் உடனே அவனை ஒரு நகை கடைக்கு கூட்டி சென்று வைர நெக்லஸ் ஐ எடுத்துக்கொண்டது நினைவு வரவும் அவன் உடல் இறுகியது... அதே கசப்பில்

“இவள் மட்டும் என்ன கேட்க போறா?? அவள் வைர நெக்லஸ் கேட்டா.. இவ வைர ஒட்டியானம் கேட்பா.. அதுவும் ஏழு இல்லைனா ஒன்பது மாசத்தில்.. அப்பதான் இன்னும் பெருசா வாங்க முடியும்...”என்று ஏளனமாக பார்த்தான் அவளை..

“என்ன?? நான் பெருசா கேட்டிருவேனு ஆப் ஆகிட்டீங்க.. “ என்றாள் ஓரக்கண்ணால் பார்த்தவாறு

“ஏய்.. நீ என்ன கேட்பனு எனக்கு தெரியாதா??... கேளு.. அது எவ்வளவு பெருசானாலும் வாங்கி தர்ரேன்.. “ என்று முறைத்தான்...

“ஒகே..ஒகே... நீங்களே இவ்வளவு தூரம் கேட்கறதால.... எனக்கு என்ன வேணும்னா...... “என்று இழுத்தாள் அவனை வெறுப்பேத்த...

அவன் அவளையே பார்க்க, அவள் வேண்டும் என்றே..

“என்ன வேணும்னா.. “என்று மீண்டும் இழுத்தாள் முடிக்காமல். அவள் எதிர்பார்த்தவாறே அவன் கடுப்பாகி

“ஏய்.. பட்டிக்காடு... சொல்லித்தொலை.. ஏன் இவ்வளவு இழுக்கிற?? “ என்று முறைத்தான்...

“ஹ்ம்ம்ம் சரி.. நீங்க ரொம்ப டென்ஷன் ஆகறிங்க.. அதனால சொல்லிடறேன்.. “என்றவள் மீண்டும் நிறுத்த அவன் மீண்டும் முறைக்கவும்

“எனக்கு.. எங்க ஊர் கடலை மிட்டாயும் முறுக்கும் வேணும்... “ என்றாள்

அதை கேட்டு

“வாட்?? “ என்று அதிர்ந்தவன் வேகமாக ப்ரேக் போட்டான்.. அதை கண்டு பயந்த பாரதி

“நான் என்ன அவ்வளவு பெருசாவா கேட்டேன்.. எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகறீங்க.. “என்று முறைத்தாள்...

“ஏய்.. என்ன கேட்ட?? “ என்று திருப்பி கேட்டான் அவன் காதை நம்பாதவனாக...

“ம்ம்ம்ம் எங்க ஊர் கடலை மிட்டாயும் முறுக்கும் வேணும் னு கேட்டேன்.. அதுக்கு போய் எதுக்கு காரை வேகமாக நிறுத்தினீங்க?? “ என்று மீண்டும் முறைத்தாள்

அதை கேட்டு சிரித்தவன்

“நான் என்னவோ நீ பெரிய வைர நெக்லஸ் இல்லைனா ஒட்டியானம் கேட்கப் போறனு நினைச்சா இவ்வளவு பட்டிக்காடாட்டம் கடலை மிட்டாய கேக்கற... ஏன் வைர நெக்லஸ் வேண்டாமா?? எவ்வளவு பெரிய சான்ஸ் கொடுத்தேன்.. மிஸ் பண்ணிட்டியே பட்டிக்காடு.. “ என்று கிண்டலடித்தான்...

“ஐய... உங்க வைரத்த வச்சுகிட்டு நான் என்ன பண்ண முடியும்?? அதை தினமும் போட முடியுமா??? வாங்கி அப்படியே பொட்டியில வச்சு பூட்டிகிட்டு அதை யாரும் திருடி கிட்டு போய்டக்கூடாதுனு எந்நேரமும் முழிச்சுகிட்டேஇருக்கனும்.... அந்த தொல்லை எனக்கு வேணாம்பா...

இதே எங்க ஊர் கடலை மிட்டாய் வாங்கி வாயில போட்டு சப்பி சாப்பிட்டா.... “என்று ஆர்மபித்து அந்த கடலை மிட்டாய் முறுக்கின் சுவையையும் அதை அவங்கப்பா எப்பல்லாம் வாங்கி தந்தார் என்று கதை அடிக்க ஆரம்பித்தாள்..

ஆதிக்கோ பயங்கர ஆச்சர்யம்... இவள் கொஞ்சம் வித்தியாசமானவளா இருப்பா போல இருக்கே... “ என்று முதல் முறையாக நல்ல படியாக எண்ணிக்கொண்டான்..

அவள் மேல் கொஞ்சமே வந்திருந்த சாப்ட் கார்னர் வளர்ந்து சாப்ட் ஸ்குயர் (square) ஆனது....

அவளின் பேச்சை ரசித்து கொண்டு வந்தான் ஆதி... பாரதியோ திறந்த வாயை மூடாமல் வேறு ஏதேதோ கதை பேசிக்கொண்டு வந்தாள்...

கார் வீட்டை அடைந்ததும் இருவரும் இறங்கி அவர்கள் வாங்கி வந்திருந்த பொருட்களை உள்ளே எடுத்து சென்றனர்... பின் ஒரு பையில் தேடி ஒரு டப்பாவை எடுத்தான்... பின் அதை பாரதியிடம் கொடுத்து

“இது குங்குமப் பூ.. இதை தினமும் பாலில் போட்டு குடி... “ என்றான்

“இது எதுக்கு?? எனக்கு வேண்டாம்” என்று மறுத்தாள்

“ஏய்.. இது ஒன்னும் உனக்கு இல்லை.. என் பிரின்ஸஸ்க்கு... “ என்று முறைத்தான்

“பிரின்ஸஸ்க்கா?? “என்று புரியாமல் பார்த்தாள்..

“ஆமா.. இதை குடித்தால் மை பேபி சிவப்பா என்ன மாதிரியே பிறக்குமாம்... இல்லைனா உன்னை மாதிரி கருப்பாதான் இருக்குமாம். அந்த கடைல என்னை தனியா கூப்பிட்டு சொன்னாங்க... அதான் வாங்கி வந்தேன்.. இதை தினமும் இரண்டு நேரமும் மறக்காமல் பால் ல போட்டு குடி “ என்றான் அதட்டலாக...

அவன் தன்னை கருப்பு என்று சொன்னதில் காரமான பாரதி

“ஹலோ... நான் ஒன்னும் கருப்பில்லை.. கொஞ்சம் நிறம் கம்மி... மாநிறமாக்கும்” என்றாள் முறைத்தவாரு

“என்னது?? நீ கருப்பு இல்லையா ?? “ என்றவன் அவள் கையை எடுத்து அவன் கையின் அருகில் வைத்து

“இப்ப சொல்லு.. நீ கருப்பா இல்லையா?? “ என்றான் குறும்பாக

“ம்ஹூம்.. நீங்க ஏசியிலயே இருக்கிறதால் சிவப்பா தெரியுது.. எங்க ஊர் லயே நான் தான் சிவப்பாககும்” என்றாள் அவளும் விடாமல்

“ஹா ஹா ஹா .. நீயே சிவப்புனா அப்ப உங்க ஊர் ல எல்லாம் ஆப்பிரிகா காரங்க மாதிரி தான் இருப்பாங்க போல.. சரியான பட்டிக்காட்டு கருவாச்சி “ என்று சிரித்தான் நக்கலாக

“நான் ஒன்ணும் கருவாச்சி இல்லை” என்று மீண்டும் முறைத்தாள்

“நீ கருத்தம்மா... கருவாச்சி தான்... “என்று வம்பிழுத்தான் அவளிடம்

அதை கேட்டதும் அவள் கோபம் தலைக்கேறியது.. முகம் சிவந்து மூக்கு விடைத்தது...

“டேய்... வேண்டாம் ஆதி.. என்னை கோபமாக்காத.. இந்த பாரதிய பத்தி உனக்கு தெரியாது “ என்றாள் கோபமாக

அவளின் கோபத்தை ரசித்தவன்

“என்னடி பண்ணுவ?? கருவாச்சி ... “ என்று மீண்டும் சிரித்தான்

“இப்ப பார்...நான் என்ன பண்றேனு... “ என்று அவன் கையை எடுத்து நறுக்கென்று கடிக்க ஆரம்பித்தாள்...

இதை எதிர்பார்த்திராதவன் அவள் கடித்ததால் வலி தாங்க முடியாமல்

“ஆ “ வென்று அலறினான்...

அவன் அலறலில் அவன் கையை மெதுவாக விட்டவள்

“இப்ப தெரியுதா.. நான் யாருனு.. அதுக்குத்தான் என்கிட்ட வச்சுக்காதேனு சொன்னேன் “ என்றாள் கண்ணில் கோபம் மின்ன...

“ராட்சஷி... ரத்தம் வருது டி... சரியான வாம்பயர் போல... ஜூவுல இருக்கிறத எல்லாம் இங்க கொண்டு வந்து வச்சிருக்காங்க இந்த அம்மா...காட்டேறி “ என்று திட்ட ஆரம்பித்தான் வலி தாங்காமல்...

அப்பதான் பாரதிக்கு உரைத்தது அவள் செய்த செயல்...

“ஐயயோ!! என்ன பண்ணி வச்சிருக்கேன்..இந்த கோபம் வந்தால் எனக்கே தெரிய மாட்டேங்குது நான் என்ன பண்றேன் என்று.. “ என்று தன்னை தானே திட்டி கொண்டு

மெல்ல அவன் அருகில் வந்து சாரி என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு

“போடி ராட்சஷி.. இப்படியா கடிப்ப.. பார் உன் பல்லு அப்படியே என் கையில இருக்கு..” என்று கத்தினான் வலியில்.... அதை பார்த்தவள் அவன் சொன்ன மாதிரியே அவளின் பல் பதிந்து இருந்தது அவன் கையில்...

“நாய் கடிச்சாலே தொப்புல சுத்தி ஊசி போடனுமாம்.. நீ கடிச்சதுக்கு எத்தன ஊசி போடனுமோ?? சுசிலா அம்மா கிட்டதான் கேட்கனும்... “ என்று புலம்பினான் தன் கையை பார்த்துக்கொண்டே..

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நான் என் தம்பிய நிறைய தரம் இது மாதிரி கடிச்சிரிக்கேன்.. அவனுக்கு ஒன்னும் ஆகலை.... “ என்று மெல்ல முனகினாள்..

“என்னது??? நிறைய தரம் கடிச்சிருக்கியா??... அடிப்பாவி.. இத முன்னாடியே சொல்லி தொலைக்க வேண்டியது தான.. உன் பக்கமே வந்திருக்க மாட்டேனே... ராட்சஷி.. இரத்த காட்டேறி.. பாவம் உன் கூட பொறந்தவங்க.. என்ன பாடு படுத்தினியோ அவங்கள??...” என்று திட்டினான்...

“ஹ்ம்ம்ம் அவன் எல்லாம் இப்படி கத்தியது இல்லை.. நீங்க தான் வீக் பாடி.. சும்மா லைட்டா கடிச்சதுக்கே ஊரை கூட்டறீங்க.. இது ஐஸ் வச்சா சரியா போகும்.. இருங்க நான் போய் எடுத்துட்டு வர்ரேன் ” என்று உள்ளே ஓடி சென்று பிரிட்ஜ் ல் இருந்த ஐஸ் கட்டியை எடுத்து வந்தாள்..

“எங்க கைய நீட்டுங்க” என்று அவன் கையை இழுத்து அதன் மேல் ஐஸ் கட்டியை வைத்தாள்...பின் அவன் கையை உற்று பார்த்தவள்

கை வீங்கி இருப்பதை கண்டு கொஞ்சம் கலவரம் அடைந்தவள் கண்ணில் நீர் கட்டி நின்றது

“சாரி.. “ என்றாள் மீண்டும் தலையை குனிந்தவாறு

அவளின் அந்த முகம் அவனுக்கு கஷ்டமாக இருக்க

“சரி விடு.. இனிமேல் கடிக்கிறதா இருந்தா சொல்லிட்டு கடி. நான் தள்ளி நின்னுக்கறேன்.. “ என்றவன் முனகியவாறு மேலெ தன் அறைக்கு சென்றான்...

பாரதிக்கு கஷ்டமாக இருந்தது

“சே... கோபம் வந்தால் என்ன பண்றேனு தெரிய மாட்டேங்குது.. இவ்வளவு நாள் இந்த கோபம் வராமல் இருந்தது.. இனிமேல் எதுக்கும் கோபப் படக்கூடாது” என்று சொல்லிக்கொண்டவள் சமையல் அறைக்கு சென்று பாலை காய்ச்சினாள்..

பின் அவன் கொடுத்த குங்குமப் பூ அருகில் இருக்கவும்

“எல்லாம் இதால வந்தது... என்னவோ அவன் இளவரசி சிவப்பா இருக்கனுமாம்...

முருகா... இதுக்குனே அவன் புள்ளை நல்லா கருகருனு பிறக்கனும்... “ என்று வேண்டிக் கொண்டாள்...

அதை கேட்ட வேலனும்

“ஹ்ம்ம்ம் அப்படியே ஆகட்டும் பாரதி.. ஒருவருடைய நிறத்தை பழித்தவனுக்கு தண்டனையாக நீ சொன்னதையே நிறை வேற்றிடறேன்.. “ என்று சிரித்தான்...

அதற்குள் எதையோ யோசித்த பாரதி அவசரமாக

“முருகா... நான் சொன்னதை டெலிட் பண்ணிடு...நான் ஏதோ அவசரப்பட்டு உன்கிட்ட அப்படி வேண்டிகிட்டேன்... அவன் பண்ணின தப்புக்கு பாவம் அந்த பாப்பா என்ன பண்ணும்?? நீ அந்த பாப்பாவை நல்லா சிவப்பாவே படைச்சிடு... “ என்று வேண்டிக்கொண்டாள்...

“சே!! இந்த மானிடர்களையே நம்பக்கூடாது... நிமிடத்திற்கு ஒன்று மாற்றி மாற்றி கேட்கிறாங்க... இவங்களை நம்பி இவங்க வேண்டியதை கொடுத்தால் அவ்வளவுதான் போல... இனிமேல் நாமே அனலைஸ் பண்ணி தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும்...” என்று தலையில் அடித்துக் கொண்டான் அந்த வடிவேலன்..

பாரதியோ ஆதி சொன்ன மாதிரியே பாலை காய்ச்சி அந்த குங்கும பூவை போட்டு குடித்து விட்டு ஆதிக்கும் அந்த மசாலா பாலை கலந்து எடுத்து சென்றாள்...

அவன் அறைக்குள் சென்றவள் அவன் இன்னும் வலியில் முனகி கொண்டிருப்பதை கண்டு அவன் அருகில் சென்றாள்..

அவனோ சுசிலாவிடம் போன் பண்ணி நடந்ததை சொல்ல அவர் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தார்...பின்

“அதெல்ல்லாம் ஒன்னும் ஆகாது கண்ணா.. கொஞ்ச நேரத்துல சரியாகிடும்.. அவ கிட்ட எதுக்கு வம்பு பண்ற.. “ என்று சிரித்துகொண்டே போனை வைத்தார்...

பின் அவனின் முனகலை கண்டவள் அருகில் சென்று

“இன்னும் வலிக்குதா?? “என்றாள் பரிதாபமாக

“இல்லை ஜில்லுனு இருக்கு போதுமா “என்று எரிந்து விழுந்தான்..

“நான் ஒரு மருந்து போடவா ?? “ என்றவள் அவன் எதிர்பார்க்காத நேரம் அவன் கையை எடுத்து தான் கடித்த இடத்தில் அழுந்த முத்தமிட்டாள்...

இதை எதிர்பார்க்காதவன் கொஞ்சம் ஆடிப்போனான்...அவளின் மென்மையான இதழின் முத்தம் அதுவரை இருந்த வலியை போக்கி மனதுக்கு இதத்தை கொடுத்தது...

கொஞ்ச நேரம் அப்படியே தன் உதட்டால் அழுத்தி இருந்தவள் பின் மெதுவாக நிமிர்ந்தாள்...

“இப்ப வலி பரவாலையா ?? “ என்றாள் பாவமாக....

“ஹ்ம்ம்ம்... இப்படி ஒரு மருந்து கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தால் வேற இடத்துல கடி வாங்கியிருப்பேன்.. “ என்றான் குறும்பாக சிரித்தவாறு அவன் உதட்டை காட்டி..

அவன் சொன்னதின் அர்த்தம் புரிய சில விநாடிகள் ஆனது அவளுக்கு... அது புரிந்ததும்

கன்னம் சிவந்தாள்..

“சீ.. ஆசையைப் பார்... பாலை குடிச்சிட்டு தூங்குங்க.. குட் நைட் “ என்று ஓடி விட்டாள்..

அவனும் அதை ரசித்துக்கொண்டே பாலை எடுத்து பருகினான்....

அதே நேரம் ஜானகியும் அவனை அழைத்து இருந்தார்... அவர் எதற்காக கூப்பிடுகிறார் என்று தெரிந்ததால்..

“ஐயோ!! இந்த சுசிலாம்மா அதுக்குள்ள அங்க பத்த வச்சுட்டாங்களா?? மானம் போச்சு... “என்று புலம்பியவாறு சின்ன வெட்கத்துடன் அந்த போனை அட்டென்ட் பண்ணியவன்

“ஹ்ம்ம் சொல்லுங்கம்மா... “ என்றான் அதே வெட்கத்துடன்...

அவன் குரலில் தெரிந்த வெட்கத்தை கண்டவர் எதுவும் பேசாமல் சிரித்தார் மறுமுனையில்... அதை புரிந்து கொண்டவன்

“மா... கடி வாங்கியது நான்.. உங்களுக்கு சிரிப்பா இருக்கா... “என்று செல்லமாக முறைத்தான்..

“ஹா ஹா ஹா என்று மீண்டும் சிரித்தவர் தன் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிகொண்டு

“என் மறுமகள் சரியான தண்டனை தான் கொடுத்திருக்கா... நீ ஏதாவது அவகிட்ட வம்பு பண்ணி இருப்ப.. அதான்.. ”என்று மீண்டு சிரித்தார்....

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மா... பால் ல குங்குமப்பூ போட்டு குடிக்க சொன்னேன்.. அவ மாட்டேனா அதுக்கு அதட்டியதுக்கு தான் கடிச்சி வச்சிட்டா ... “ என்றான் புலம்பியவாறு...

“ஹ்ம்ம்ம் வலிக்குதா கண்ணா?? “என்றார் குரலில் வருத்தத்துடன்..

“ஹ்ம்ம்ம் இப்ப பரவாயில்ல மா.. உன் மறுமகள் ஒரு மருந்து போட்டா.. இப்ப சரி ஆயிடுச்சு “ என்றான் சிரித்தவாறு..

“அப்படி என்னடா மருந்து அது ?? “ என்றார் ஆர்வமாக

அதை கேட்டதும் புரை ஏறியது அவனுக்கு..

“ஹ்ம்ம் அதை அவகிட்டயே கேளுங்க. இப்ப தூங்குங்க. அல்ரெடி லேட் ஆகியிருச்சு.. குட் நைட் “ என்று சொல்லி போனை வைத்தவனுக்கு கண்கள் சொக்கியது..

அன்றைய மாலை நேரத்தில் அவளுடனான் அந்த இனிய நிகழ்ச்சிகளை அசை போட்டவாறு அவள் தந்த முத்தத்தின் இனிமையோடு நிம்மதியாக தூங்கினான் ஆதி...

Comments

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. Adhane trichy karanganave different different ha yosichu dhandana kudupom

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!