காதோடுதான் நான் பாடுவேன்-32



அத்தியாயம்-32 

நான்கு நாட்களுக்கு பிறகு:

மிஷ்
ர் அவசரமாக அந்த கூட்டத்தை கூட்டியிருந்தார்... நிகிலன் மற்றும் சில போலிஸ் ஆபிசர்களும் அந்த கூட்டத்தில் இருந்தனர்...

அந்த கூட்டத்தின் முக்கியமான டாபிக் தமிழகத்தை குறிப்பாக சென்னையை புரட்டிப் போட்ட புயலின் சீற்றத்தின் தற்போதைய நிலையை அலசி ஆராய அந்த கூட்டத்தை கூட்டியிருந்தார்....

இது மாதிரி ஏதாவது ஒரு புயல் வருடம் ஒரு முறையோ அல்லது அதற்கு போரடிக்கும் சமயங்களிலோ சென்னையையும் அதன் சுற்றியிருக்கும் பகுதிகளையும் எட்டி பார்த்து, இந்த மானிடர்கள் இயற்கைக்கு எதிராக பண்ணி வைத்திருக்கும் செயலால் சீற்றம் கொண்டு தன் கோர தாண்டவத்தை ஆட ஆரம்பித்து விடுகிறது.....

நம்ம மக்களும் அந்த புயலுக்கு ஏதாவது ஒரு பெயரை வைத்து அது வரும் பொழுதும் வந்த பிறகும் ஏன் வந்தது?? என்னெல்லாம் தற்காப்பு வழிகளை கையாண்டிருக்கலாம்?? , அரசாங்கம் இதெல்லாம் செய்ய வில்லை என்று அலசி ஆராய்வர் வாய் பேச்சிலோ வாட்ஸ்அப் குரூப்பிலோ...

மேலும் நிதி கேட்டு வருபவர்களுக்கு தன் கையில் இருக்கும் பணத்தை நிதியாக கொடுத்து மனதுக்குள் திருப்தி பட்டு கொள்வதோடு கடமை முடிந்து விடுகிறது...

அந்த புயலை பற்றி விரைவில் மறந்து விடுகிறோம்.. மீண்டும் வேறு அவதாரம் எடுத்து வந்து அது நம்மை மிரட்டும் வரை...

அதே போல இந்த முறையும் புயலுக்கான எச்சரிக்கை வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து வந்தபொழுது, நிகிலன் அவசரமாக கமிசனர் மற்றும் அந்த பகுதியின் கலெக்டருன் அலசி ஆராய்ந்து அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை அவசரமாக திட்டமிட்டனர்...

அந்த பகுதியின் கலெக்டரும் நிகிலன் நண்பன் என்பதால் இருவரும் இணைந்து பல மாற்றங்களை அந்த பகுதியில் இரண்டு ஆண்டுக்கு முன்பிருந்தே கொண்டு வந்திருந்தனர்..

குறிப்பாக ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுதல், மழை நீர் சாலையில் தேங்காமல் அது அருகில் இருக்கும் ஏரிக்கு சென்று சேர்வதை போலவும், அது ஏரிக்கு போகும் பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி அந்த பாதையை சரியாக பராமரிக்கவும் , ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பை கட்டாய மாக்கி அந்த நீர் வீணாகாமல் காத்தல் என்று பல திட்டங்களை ஏற்கனவே நிறைவேற்றி இருந்தனர் ...

அதோடு இந்த மாதிரி இயற்கை சீற்றங்கள் வந்தால் அதை கையாள்வது எப்படி என்று விழிப்புணர்வு முகாம் நடத்தி செய்முறை விளக்கம் காண்பித்து மக்களுக்கு மனதில் பதிய வைத்தனர்..

கலெக்டர் புயலை பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக ஒரு குழுவை நியமித்திருக்க அந்த குழு பொதுமக்களுக்கும் , அனைத்து பள்ளிகளுக்கும் சென்று அந்த குழு மாணவர்களுக்கு கற்பிக்க, ஓரளவுக்கு மக்களும் எந்த புயல் வந்தாலும் தாங்குவதற்கு தயாராக இருந்தனர்...

அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே அந்த புயலும் நேற்று முன்தினம் உருவாகி, நேற்று முழுவதும் அதன் தாண்டவத்தை ஆடி இன்று ஓரளவுக்கு அமைதியாகி இருந்தது....

இயற்கையின் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது தான்... ஆனால் அதை எப்படி கையாள்வது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்ட மிட்டு முடுக்கி விட்டிருந்தனர் புயலால் பாதிக்கபட்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும்..

போலிஸ் டிபார்ட்மென்ட்ம் அவர்களுடன் இணைந்து பாதுகாப்பு வழிகளை கையில் எடுத்துக் கொள்ள நேற்று முழுவதுமே சென்னையையும் அதன் சுற்றி இருக்கும் பகுதிகளும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வீட்டுக்குள்ளையே முடங்கினர்...

மின்சார வாரிய குழு , புயலால் சாய்ந்திருந்த மரங்களை நவீன கருவிகளை கொண்டு துரிதமாக அப்புறபடுத்தும் குழு ,மற்றும் போலிஸ் பாதுகாப்பு குழுவினர் அந்த புயலிலும் நகரை சுற்றி வந்து எங்கெல்லாம் தேவையோ உடனே அதை சரி செய்தனர்...

அதை பற்றி விவாதிக்க மற்றும் தற்போதைய நிலையை அறியவும் அடுத்து போலிஸ் டிபார்ட்மென்ட் ல் இருந்து என்னெல்லாம் செய்வது என்பது பற்றியும் கலந்தாலோசிக்க இந்த கூட்டத்தை கூட்டியிருந்தார் கமிசனர்...

அனைவருடன் கலந்தாலோசித்து ஓரளவுக்கு நிலைமை சீராகி இருப்பதை உறுதி செய்து கொண்டார்...

இதில் பாடுபட்ட நிகிலன் மற்றும் பிற ஆபிசர்களுக்கு பாராட்டி நன்றி சொல்லி மேலும் ஆட்சியர் சார்பாக உதவி செய்தவர்களுக்கும் நன்றி சொன்னார்...

ஒரு வழியாக கூட்டம் முடிந்து நிகிலன் மன திருப்தியுடன் வெளியில் வந்தான்...

அதே நேரம் அவனுடைய பெர்சனல் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்தவன் அதன் திரையில் “இம்சை காலிங்.... “ என்று ஒளிர, அவன் உதட்டில் தானாக புன்னகை மலர்ந்தது....

மணியை பார்க்க, அது இரவு 9 என காட்டியது..

“இந்த நேரத்தில எதுக்கு கால் பண்றா??” என்று யோசித்தவாறு அதன் அழைப்பை ஏற்றான்....

அலைபேசியை காதில் வைத்து

“ஹ்ம்ம்ம் சொல்லு.... “ என்றான்

“சா... சார்..... “என்று மெதுவாக இழுத்தாள் மதுவந்தினி மறுபக்கம்..

“ஏய்.. சீக்கிரம் சொல்லு.. எனக்கு நிறைய வேலை இருக்கு... “ என்று சிடுசிடுத்தான்....

“வந்து... சார்.. எப்ப வீட்டுக்கு வருவீங்க?? “ என்றாள் தயங்கியவாறு

“எதுக்கு கேட்கற?? “ என்றான் அதே சிடுசிடுப்புடன்....

“ஹ்ம்ம்ம்ம் உங்களோட ரொமான்ஸ் பண்ணத்தான்... “ என்று மனதுக்குள் நக்கலடித்தவள்

“சார்.... நைட் தனியா இருக்க பயமா இருக்கு.. அதான் நீங்க எப்ப வருவீங்கனு கேட்டேன்... “ என்றாள் தயங்கியவாறு...

“ஏய்.. தனியா இருக்க என்ன பயம்??.. நேற்றெல்லாம் தனியாகத்தான இருந்த... இன்னைக்கு என்ன?? “என்றான் எரிச்சலாக....

ஆம்.. இந்த புயலால் நேற்று காலை வீட்டிலிருந்து கிளம்பி வந்தவன் நேற்று இரவு முழுவதும் ரவுண்ட்ஸ் ல் இருந்ததால் வீட்டிற்கு செல்ல வில்லை... மதுவிடம் கால் பண்ணி அவளை தனியாக இருக்க சொல்லி விட்டான்....

நேற்று சமாளித்தவள் இன்று ஏன் அழைக்கிறாள் என்று யோசித்து கொண்டிருந்தான்...

“சார்... நேற்று கரண்ட் இருந்தது சார்..நைட் முழுவதும் வீடு புல்லா எல்லா லைட் ம் ஆன் பண்ணி வச்சு எப்படியோ சமாளிச்சுட்டேன்.. இன்னைக்கு கரண்ட் ம் ஆப் ஆகிடுச்சு... ஒரே இருட்டா இருக்கு..அதான் தனியா இருக்க பயமா இருக்கு... “ என்றாள் பாவமாக...

“ஏன் UPS என்னாச்சு?? “ என்றான் இன்னும் அதே எரிச்சலுடன்

“சார்.. நேற்றிலயிருந்து UPS லதான் ஓடியிருக்கும் போல...நான் வேற எல்லா லைட் ம் ஆன் பண்ணி வைக்க, அதுவும் கீகீனு சத்தம் போட்டு இப்ப முழுவதும் ஆப் ஆகியிடுச்சு சார்... கேண்டில் கூட இல்ல சார்...அதான் பயமா இருக்கு... “ என்றாள் மேலும் தயங்கியவாறு

“ கேண்டில் இல்லைனா உன் மொபைல் இருக்கு இல்ல.. அதில் இருக்கிற லைட் ஐ யூஸ் பண்ணு.. “

“பெரிய விஞ்ஞானி... கரண்ட் இல்லாம எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு பாடம் எடுக்கிறான்..” என்று மீண்டும் தன் கணவனை அர்ச்சனை பண்ணியவள்

“சார்... அதுலயும் சார்ஜ் கம்மியா இருக்கு.. சீக்கிரம் அதுவும் ஆப் ஆகிடும்... அப்புறம் ஒரு எமர்ஜென்சிக்கு உங்களை அழைக்க கூட முடியாது... அதான் அதை யூஸ் பண்ணலை... “என்றாள் அவளும் இலேசான எரிச்சலுடன்....

“ஹ்ம்ம் சரியான இம்ச டீ உன்னோட...பேசாம நீயும் அவங்களோடவே போய் தொலஞ்சிருக்க வேண்டியதுதான...” என்று திட்டியவன்

“சரி... பயந்துக்காத.. அதான் வெளில செக்யூரிட்டி இருக்காரே... அப்புறம் என்ன பயம்??. “ என்று அவளை சமாளிக்க முயன்றான்...

“சார்... அவரையும் அவர் பெரிய மீசையையும் பார்த்தா தான் இன்னும் பயமா இருக்கு சார்....நான் வேற தனியா இவ்வளவு பெரிய வீட்ல இருக்கேன்.. ப்ளீஸ் சார்...

இன்னைக்கு மட்டும் வாங்களேன்.. நான் தூங்கற வரைக்குமாவது கூட இருங்க.. அதுக்கு பிறகு நீங்க போய்டலாம்... ப்ளீஸ் சார்.... “ என்று கெஞ்ச அதில் கொஞ்சம் மனம் இலகினான் நிகிலன்....

வெளியில் பார்க்க, இன்னும் மழை கொட்டி கொண்டிருந்தது...

“சரி... சரி.. புலம்பாத.. வர்ரேன்... அதுக்குள்ள போன் பண்ணி அம்மாகிட்ட எதுவும் சொல்லிடாத.. அவங்க இரண்டு பேரும் சேர்ந்து என்னை புடிச்சு காச்சுவாங்க... “ என்று சொல்லி போனை வைத்தான்...

அவன் வீடு இருக்கும் பகுதியில் இன்னும் மின்சாரம் வராமல் இருப்பதால் அந்த மின்சார வாரிய குழுவிடம் தன் இடத்தை சொல்லி வந்து பார்க்குமாறு சொல்லி விட்டு தன் குழுவிடமும் அடுத்து செய்ய வேண்டிய பணிகளை ஒரு முறை விளக்கி விட்டு தன் காரை எடுத்து கிளப்பிச் சென்றான்....

வீட்டை அடைந்ததும் காரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் செல்லும் பொழுதே கொட்டிய மழையில் நன்றாக நனைந்திருந்தான்... அவனை கண்டதும் முகம் மலர சோபாவில் இருந்து எழுந்து வந்தவள் அவன் நனைந்திருப்பதை கண்டு அருகில் இருந்த டவலை எடுத்து கொடுக்க, அவனோ அவளை முறைத்தவாறு அதை வாங்காமல் உள்ளே வந்தான்...

பின் தன் அறைக்கு செல்ல, மது

“சார்.. இந்தாங்க மொபைல்.. இதில் இருக்கிற லைட் யூஸ் பண்ணுங்க... மேல இருட்டா இருக்கு... “ என்றாள் அவன் வழியில் இருட்டில் தடுமாறுவான் என்ற அக்கறையில் ...

“ஹ்ம்ம்ம் அதெல்லாம் உன்னை மாதிரி பயங்தாங் கொள்ளிக்குத்தான்... எனக்கு எவ்வளவு பெரிய இருட்டும் பழக்கமாக்கும்... “ என்று நக்கலடித்து வேகமாக மாடி ஏறிச் சென்றான் அந்த இருட்டிலும் தடுமாறாமல்....

தன் அறைக்கு சென்றவன் அந்த குளிரிலும் குளிர்ந்த நீரில் குளித்து முடித்து தலையை துவட்டியவாறு கீழ இறங்கி வந்தான்...

முழங்காளுக்கு சற்று கீழ் வரையான ட்ராயரும் கை யில்லாத ஒரு டீ சர்ட்ம் அணிந்து தலையை துவட்டியவாறு இலாவகமாக கீழிறங்கி வந்தான்...

டைனிங் டேபிலில் மது இரவு உணவை எடுத்து வைத்து கொண்டே மாடியில் இருந்து இறங்கி வரும் தன் கணவனையே இமைக்க மறந்து ரசித்து கொண்டிருந்தாள்...

கட்டான உடலும் உருண்டு திரண்டிருந்த புஜங்களும் பரந்து விரிந்த மார்பும் ஆறடிக்கும் மேலான அவன் உயரமும் அவளை கட்டி இழுக்க அவன் மார்பில் சாய்ந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியவாறு அவனையே ரசித்துக் கொண்டிருக்க அதற்குள் அவன் இந்த பக்கம் திரும்பவும் தன் பார்வையை உடனே மாற்றி கொண்டாள்....

டைனிங் டேபிலுக்கு வந்தவன் ஒரு நாற்காலியில் அமர, மது முன்பே செய்து ஹாட்பாக்சில் போட்டு வைத்திருந்த சப்பாத்தியை எடுத்து அவன் தட்டில் வைத்து அதற்கான சப்ஜியையும் தட்டில் வைத்தாள்...

ஒரு வாய் எடுத்து வாயில் வைத்தவன் எதேச்சையாக நிமிர, அவளின் தோற்றத்தை கண்டு அசந்து நின்றான்...

எப்பொழுதும் சுடிதாரில் இருப்பவள் இன்று தழைய தழைய சேலை கட்டி, தன் நீண்ட சடையில் மல்லிகை சரத்தை வைத்திருக்க அது அவளின் இருபக்கமும் சரிந்து முன்னாள் தொங்கி கொண்டிருந்தது.....

நெற்றியில் புடவைக்கு மேட்சான அழகான பொட்டு வைத்து அதற்கு மேல் திருநீற்றையும் வகிட்டில் கொஞ்சமாக குங்குமத்தையும் வைத்திருக்க, மேஜையில் ஏற்றி வைத்திருந்த மெலுகுவர்த்தியின் மெல்லிய வெளிச்சத்தில் அவள் முகம் இன்னும் ஜொலித்தது...

அவள் எதற்கோ புன்னகைக்க கன்னத்தில் தோன்றிய அழகான குழி இன்னும் ஆளை கவிழ்த்தது...

சில நொடிகள் அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்...

அவனின் பார்வையை கண்டவளுக்கு உள்ளுக்குள் சில்லிட கன்னங்கள் தானாக சிவந்தன...

வெக்கபட்டு கீழ குனிந்து கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தாள்... அதற்குள் தன்னை சுதாரித்து கொண்டவன் அப்பொழுது தான் மேஜையில் இருந்த மெலுகுவர்த்தியை கவனித்தான்....

“ஏய்... கேண்டில் இல்லைன?இது எப்படி வந்தது?? “ என்றான் சந்தேகமாக....

“வந்து... செக்யூரிட்டி அங்கிள் தான்... “ என்று முடிக்கு முன்னே

“ஏய்.. எத்தனை தரம் சொல்லியிருக்கேன்... அவர் அரசாங்கத்தால் பாதுகாப்பிற்காக மட்டும்தான் இங்கு அப்பாயின்ட் பண்ணி இருக்காங்க.. அவர் கிட்ட வீட்டு வேலை எதுவும் கொடுக்க கூடாதுனு.. அறிவு இல்லை... “ என்று எரிந்து விழுந்தான் காரணமே இல்லாமல்....

“சார்... நான் ஒன்னும் அவர் கிட்ட போய் வாங்கி வர சொல்லி கேட்கலை... வீடு இருட்டா இருக்கிறதை பார்த்து நான் பயந்துக்குவேனு இப்பதான் அவராகவே கொண்டு வந்து இதை கொடுத்தார்...

வேணும்னா நீங்க அவர்கிட்டயே கேட்டுக்கங்க..” என்றாள் சற்று விடைத்தவாறு ...

“ஹ்ம்ம் தட்ஸ் குட்... ஆமா இப்ப எதுக்கு இப்படி மினுக்கி கிட்டு இருக்க?? “ என்றான் அவளை பார்வையால் சுட்டி காட்டி...

”அடப்பாவி.. பொண்டாட்டி இவ்வளவு அழகா ட்ரெஸ் பண்ணிகிட்டு இருக்கிறத பிடிக்காமல் மினுக்கிகிட்டு இருக்கிற னு சொன்ன முதல் புருசன் நீயா தான் இருப்ப...

கொஞ்சம் கூட ரசனையே இல்ல...... சிடுமூஞ்சி... விருமாண்டி.. சரியான சாமியார்... “ என்று மனதுக்குள் எல்லா பெயர்களையும் வைத்து அர்ச்சனை பண்ணியவள்

“இன்னைக்கு சஷ்டி சார்... அதான் கோவிலுக்கு போயிருந்தேன்....” என்றாள் மெல்ல இழுத்தவாறு...

“என்னவோ பண்ணித் தொலை.. “ என்றவாறு தன் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான் நிகிலன்...

அந்த கொட்டும் மழைக்கும் அவள் செய்திருந்த சூடான சப்பாத்தியும் அதற்கான காரமான கறியும் சுவையாக இருக்க, அவளை மனதிற்குள் மெச்சிக் கொண்டே ரசித்து சாப்பிட்டான்....

நேற்றிலிருந்து நல்ல சாப்பாடு சாப்பிடாமல் இருந்தவனுக்கு அது தேனாமிர்தமாக இருந்தது...

சாப்பிட்டு முடித்து எழுந்து கை கழுவி தன் அறைக்கு சென்றான்.. மதுவும் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை ஒழுங்கு பண்ணி வைத்துவிட்டு பின் பாலை சூடுபண்ணி அவனுக்கு எடுத்து கொண்டு மாடிக்கு சென்றாள்...

கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, ஒரு கையில் மெலுகுவர்த்தியும் மறு கையில் பால் டம்ளருடன் உள்ளே வந்தவளை கண்டதும் கட்டிலில் அமர்ந்திருந்தவன் மனம் எகிறி குதித்தது....

இதுவரை அமைதியாக இருந்த சூறாவளி வீறுக் கொண்டு எழுந்தது அவன் உள்ளே...

அவள் அருகில் வந்ததும் அவன் முன்னே குனிந்து பாலை நீட்ட, அந்த மல்லிகை சரம் இருபக்கமும் சரிந்து முன்னால் வந்து விழ அதன் வாசம் அவன் நாசியை நிறைத்து இன்னும் அவனை சூடேற்றியது...

அவன் முன்னே குனிந்து பாலை நீட்டியவள் அவன் இன்னும் வாங்கி கொள்ளாமல் அமைதியாக இருக்க, தன் விழிகளை மட்டும் நிமிர்த்தி அவனை பார்க்க, அந்த அகன்ற விழிகளில் அப்பொழுதே தொலைந்து தான் போனான்....

அவளையே விழுங்கி விடும் பார்வை பார்க்க, அவனின் அந்த புதிதான பார்வை அவளுள் சிலிர்க்க வைத்தது.. அவள் கன்னம் மீண்டும் வெக்கத்தில் சிவக்க,

“சார்... பால்... “ என்றாள் மெதுவாக.... வார்த்தை ஏனோ வரவில்லை..

அவளின் குரலை கேட்டதும் தன்னை சமாளித்து தலையை உலுக்கி கொண்டவன் அவள் கையில் இருந்த பாலை வாங்கி பருகியபின் அவளிடம் நீட்ட அதை கொண்டு போய் டேபிலில் வைத்தாள்...

பின் அருகில் இருந்த அலமாரிக்கு சென்றவள் அதன் மேல் தளத்தில் வைத்திருந்த குளிருக்காக போர்த்தி கொள்ளும் அந்த பெரிய போர்வையை எடுக்க முயன்றாள்..

அது மேல் தளத்தில் இருந்ததால் அவளால் எடுக்க முடியவில்லை.... நுனிக்காலில் நின்று கொண்டு தன் இரண்டு கையையும் மேல தூக்கி எட்டி அதை எடுக்க முயன்று கொண்டிருந்தாள்...

கட்டிலில் அமர்ந்து இருந்த நிகிலன் எவ்வளவு முயன்றும் அடங்காத அவன் பார்வை அவளிடம் செல்ல, அப்பொழுதான் கையை மேல தூக்கி எடுக்க முயன்று கொண்டிருந்தாள்...

அப்பொழுது அவள் புடவை நன்றாக விலகி அவளின் வழுவழு வென்றிருந்த இடையும் அதற்கு மேல அவளின் பெண்மையும் என ஒரு கவர்ச்சிகரமான பொசிசனில் நின்று கொண்டிருந்தவளை கண்டதும் அது வரை உறங்கி கொண்டிருந்த அவன் ஆண்மை விழித்து கொண்டது....

என்னதான் தன் உணர்ச்சிகளை கட்டு படுத்தினாலும் அடிப்படையில் அவன் ஒரு ஆண்மகன்... எப்பேர்பட்ட விஸ்வாமித்திர முனிவரையே மயக்கி தவத்தை கழைத்து அவரையும் சம்சாரியாக்கியவள் ஒரு பெண்....

நிகிலன் ஒரு சாதாரண ஆண் மகன்... அவன் முன்னே அவனுக்கு உரிமையானவள் இப்படி ஒரு கோலத்தில் நின்று கொண்டிருக்க, அவனால் தன்னுள் வீசும் சூறாவளியை கட்டுபடுத்த முடியாமல் இன்னும் பல மடங்கு வீச ஆரம்பித்தது....

தன்னை கட்டுபடுத்தி கொள்ள எழுந்து பால்கனிக்கு செல்லவும் முடியாமல் வெளியில் இன்னும் மழைக் கொட்டி கொண்டிருந்தது....

தலையை குனிந்தவாறு தன்னை கட்டு படுத்திக் கொண்டிருக்க, அவனை மேலும் சோதிக்க என்று

“சா.... சார்.....இந்த போர்வையை கொஞ்சம் எடுத்து தர்ரீங்களா?? என்னால் எட்டி எடுக்க முடியவில்லை... ரொம்ப குளிருது... “ என்றாள் மது தயங்கியவாறு.....

நிகிலன் தன் தலையை நிமிர்த்த இப்பொழுது நேராக நின்று கொண்டு அவனையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்....

“சரியான இம்சை டீ உன்னால.. பேசாம நீயும் போய்த் தொலஞ்சிருக்க வேண்டியது தான.. இப்படி மனுசனை போட்டு படுத்தற... “என்று தன் இயலாமை ஆத்திரமாக மாற, அவளை திட்டி கொண்டே எழுந்து அவள் அருகில் வந்தான்...

அவன் உயரத்திற்கு அது எளிதாக எட்ட, அதை எடுத்தான்...

அவன் அருகில் ஒட்டி நின்ற அவளின் மேனியில் இருந்து வீசிய நறுமணமும் சற்று முன் பார்த்த அவளின் இடையும் வெகு அருகில் இருக்க, அவளை அப்படியே இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ளத் துடித்தன அவன் கரங்கள்....

ஆனால் ஏதோ ஒன்று அவனுக்குள் தடுத்தது...டாக்டர் மைதிலி சொன்ன அறிவுரைகள் நினைவு வந்தன...

ஆனாலும் தன் உரிமையை தானாக முன் வந்து எடுத்து கொள்ளத் தயக்கமாக இருந்தது அவனுக்கு... அவள் அருகில் நிற்க முடியாமல் அந்த போர்வையை அவள் கையில் திணித்து விட்டு மீண்டும் வேகமாக வந்து தன் கட்டிலில் அமர்ந்து கொண்டான்...

தலையணையை எடுத்து முதுக்கு வைத்தவாறு அமர்ந்து இருக்க,அவளோ தன் கணவன் மனதில் இருக்கும் போராட்டத்தை அறியாமல் தன் இடத்திற்கு சென்று வழக்கம் போல படுத்து அந்த போர்வையை தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு கண்ணை மூடி கொண்டாள்...

ஆனால் நிகிலனோ உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்தான்...

“பிசாசு... பார்.. இப்படி என்னை உசுப்பேத்தி விட்டு ஜாலியா தூங்கறா.... சே... ஏன்டா வீட்டுக்கு வந்தோம் னு இருக்கு... பேசாம வெளியிலயே இருந்திருக்கலாம் .. “என்று தன்னையே நொந்து கொண்டிருந்தான்....

அப்பொழுது திடீரென்று வெளியில் இடி இடிக்க, அவனுக்கு அவன் பார்த்த திரைப்படங்கள் நினைவு வந்தன...

இடி இடித்த உடன் நாயகி ஓடிவந்து நாயகனை கட்டி அணைப்பதாக காட்டி இருப்பார்கள்..

அதோடு மது அவளின் பிறந்த நாள் அன்று சிறு பலூன் வெடித்ததுக்கே பயந்து போய் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தது நினைவு வர, இந்த இடிக்கு எப்படியும் தன்னிடம் வருவாள் என்று ஆவலாக அவளை பார்க்க, அவளோ அசையாமல் அப்படியே படுத்திருந்தாள்....

“இராட்சசி.... இவ்வளவு இடியிலும் எப்படி தூங்கறா பார்... “ என்று மீண்டும் அவளை அர்ச்சனை பண்ணியவன் படுத்து பார்த்தான்..

“ ம்ஹூம்... அவனால் முடியவில்லை... இது ஒரு புதுவித அவஸ்தையாக இருந்தது...எத்தனையோ தருணங்களில் தன்னை கட்டு படுத்தி பிரம்மச்சர்யத்தை காத்து வந்தவனுக்கு இன்று பெரும் சவாலாக இருந்தது...

ஆனால் தானாக தன் பிரம்மச்சர்யத்தை கழைத்து கணவன் என்ற உரிமையை நிலை நாட்ட அவன் ஈகோ தடுத்தது...

அதனால் அவனுக்குள்ளயே அவனுடன் போராடி கொண்டிருந்தான்...

இடி இடித்த பொழுது மதுவுக்கும் பயமாகத்தான் இருந்தது..

எழுந்து வந்து தன் கணவனை கட்டி கொள்ள கால்களும் கைகளும் துடித்தன..

ஆனால் அப்படி செய்தால் அவன் திட்டுவானே என்று அஞ்சியவள் “ முருகா.. முருகா... “ என்று முனகிகொண்டே நடுங்கியவாறு கண்களை இறுக்க மூடி கொண்டாள்...

அதே பயத்திலயே சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்...

சிறிது நேரம் தனக்குள்ளயே போராடியவன் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்றவன் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்திருக்க, திடீரென்று வீல் என்று அலறினாள் மது....

அதில் திடுக்கிட்டு எழுந்தவன் அவள் அருகில் செல்ல, மீண்டும் அலறியவாறு தன் மேல் இருந்த போர்வையை விலக்கி வேகமாக எழுந்தவள் அருகில் தன் கணவனை காணவும் பாய்ந்து வந்து அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்...

அவள் உடல் நடுங்கி கொண்டிருந்தது... எதையோ நினைத்து பயந்திருக்கிறாள் என்று புரிய அவனும் மெல்ல அணைத்தவாறு அவள் முதுகை வருடிக் கொடுத்தான்....

அவள் நடுக்கம் கொஞ்சம் குறைய

“என்னாச்சு மது?? “ என்றான் அக்கறையாக....

முதன் முதலாக தன்னை பெயரிட்டு அழைத்த தன் கணவனின் குரலை கேட்டதும் சற்று முன் அவள் கண்ட கனவு மீண்டும் நினைவு வர, மீண்டும் உடல் சிலிர்த்து நடுக்கத்துடன் அவனை இன்னும் இறுக்கிக் கொண்டாள்...

அவனுள் புதைந்து விட அவனை யாரிடமும் விட்டு கொடுக்காமல் தன்னுள் பத்திர படுத்தி கொள்ளும் வேகம் இருந்தது அந்த அணைப்பில்....

அவள் உடல் மேலும் நடுங்க ஆரம்பிக்க, அவனும் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டு அவள் முதுகை மீண்டும் தடவி கொடுத்தவாறு

“பயந்துக்காத... ஒன்னுமில்லை... நான் இருக்கேன் இல்ல.. எதுக்கு பயம்?? என்னாச்சு?? “என்று சமாதான படுத்த முயன்றான்...

நான் இருக்கேன் இல்ல என்றதை கேட்டதும் மீண்டும் அவளுக்கு தன் கனவு நினைவு வர,

“நீ... நீங்க.... உ உங்களை யாரோ.... சூட் பண்ணி.... இரத்தம்....... “என்று தான் கண்ட கனவை முழுவதும் விவரிக்க முடியாமல் நாக்கு குழற, அவனை இன்னும் இறுக்கிக் கொண்டு மார்பில் முகம் புதைத்து குலுங்கினாள்...

அவள் ஏதோ கனவு கண்டுதான் பயந்திருக்கிறாள் என்று புரிய

“ஹே... லூசு... எனக்கு ஒன்னும் ஆகலை.. எனக்கு எதுவும் ஆகாது... நீ கண்டது வெறும் கனவாதான் இருக்கும்...என்னையெல்லாம் யாரும் சூட் பண்ண முடியாது... டோன்ட் வொர்ரி... கூல் டவுன்... “ என்று சிரித்து கொண்டே அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்...

ஆனால் அவள் இன்னும் சமாதானம் ஆகாமல் தேம்பிக் கொண்டிருக்க, தன் மேல் அவள் வைத்திருக்கும் பாசம் புரிந்தது அவனுக்கு...

கனவில் தனக்கு ஒன்று என்ற உடனே துடித்த அவளின் மென்மையான மனமும் அவன் மேல் அவள் வைத்திருக்கும் அன்பும் பாசமும் புரிய,

“தேங்க்ஸ்.... “ என்றவாறு அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டான்....

எதிர்பாராத அவன் முத்தத்தில் திகைத்தவள் விழி உயர்த்தி அவனை கேள்வியாக பார்க்க, அந்த பார்வையில் விழுந்தவன் அவளின் அகன்ற விழிகளை தன் இதழால் மூடினான்...

பின் அவள் முகம் எங்கும் முத்தம் மழை பொழிய, அவன் மனையாளும் தன் பயம் விலகி நாணம் வந்து ஒட்டி கொள்ள மையலுடன் தன் கணவனின் முத்தத்தை ரசித்தாள்...

நீண்ட நாட்களாக தன்னை சீண்டி வந்த அவளின் செவ்விதழை தன் முரட்டு இதழ்களால் சிறை பிடித்து அதை ருசிக்க, அவளோ இன்னும் கிறங்கி, குழைந்து, உருகி நின்றாள்...

அவள் முகத்தில், உடலில் வந்து போன தனக்கான கிரீன் சிக்னலை கண்டவன், அவளை அப்படியே கையில் அள்ளி கொண்டு தன் கட்டிலை நோக்கி சென்றான்....

அவளோ வெக்க பட்டு தன் கையால் முகத்தை மூடிக் கொள்ள, அதில் இன்னும் கிறங்கியவன் தான் இதுவரை இழுத்து பிடித்து வாழ்ந்து வந்த தன் துறவற வாழ்க்கையை துறந்து அன்று மைதிலி அறிவுறுத்திய இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தான் அவன் மனையாளுடன்...

இதுவரை வெறும் தாலிக் கயிற்றை கட்டிவிட்டு கணவன் மனைவியாக பேருக்கு வாழ்ந்தவர்கள் இன்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறி அவர்களின் திருமண பந்தத்தை முழுமையாக்கினான் ஒரு நல்ல கணவனாக.....



“ஹப்பாடா....!!! ஒரு வழியா இந்த சாமியாரையும் சம்சாரியாக்கியாச்சு... எப்படியோ இந்த சிவா ஆசையை நிறைவேற்றி வச்சாச்சு...இதோடு என் ஆட்டத்தை முடித்து விட வேண்டியதுதான்... “ என்று வெற்றி சிரிப்பை சிரித்துக் கொண்டான் அந்த வேலன்...

அவன் சிரித்து முடிக்கவும் அவன் சிரிப்புக்கு எதிர் சிரிப்பாக இடியென் எழுந்தது மற்றொரு சிரிப்பு...

“ஹா ஹா ஹா... என்ன வேலா... அதுக்குள்ள உன் ஆட்டம் முடிஞ்சிருச்சுனு பெருமை கொள்ளாதே... உன் ஆட்டத்தில் நீ வெற்றி பெற்றதாக பெருமை கொண்டாலும் என் ஆட்டத்தில் நீ தோற்க போகிறாய்.....

இதுவரை உன் ஆட்டத்தை கண்ட நீ இனிமேல் என் ஆட்டத்தை காண போகிறாய்... அதோடு நீ தோற்க போவதையும் தான்... “ என்று மீண்டு ஒரு கொடூர சிரிப்பை சிரித்தது அந்த குரல்....

அதற்கு அஞ்சாமல்

“ யார் நீ?? என் முன்னே வராமல் ஏன் மறைந்து நிற்கிறாய் கோழை ?? “ என்றான் அந்த வேலனும் அசராமல்....

“ஹா ஹா ஹா.. நான் கோழையா ??... என்னை நன்றாக பார்.. நான் யாரென்று தெரிகிறதா?? “ என்று அவன் முன்னே வந்து நின்றது ஒரு உருவம்....

அதை கண்டவன் குழ்ம்பி

“யார் நீ...?? “ என்று மீண்டும் கேட்க

“ஹா ஹா ஹா நீ ஒரு பொடிப்பயல்.. அதான் உனக்கு என்னை தெரியவில்லை.. இந்த மானிடர்களை கேட்டுப் பார்... எல்லோருக்கும் என்னைத் தெரிந்திருக்கும்....

என் பெயர் தான் விதி...” என்று கூறி மீண்டும் கடகடவென்று சிரித்தது அந்த உருவம்....

“இந்த பூலோகத்தில் வாழும் ஒவ்வொரு மானிடரின் வாழ்க்கையை நிர்ணயிப்பது நானே...

நான் கட்டம் போட்டு கொடுத்து காயை நகர்த்த சொல்கிற மாதிரி தான் இந்த மானிடர்கள் ஆடுவார்கள்... இது என்னுடைய ஆட்டமாக்கும்....

அதே மாதிரி இந்த தம்பதிகள் இருவரும் போன பிறவியின் கர்மா படி இந்த பிறவியில் இருவரும் மகிழ்ச்சியாக இல்லாமல் கஷ்ட பட வேண்டும் என்பது நான் இவர்களுக்கு விதித்த விதியாகும்...

இவர்களை வைத்து நான் ஆடப்போகும் ஆட்டத்தை நீயும் பொருத்திருந்து பார்... நீ எதற்காக உன் ஆட்டத்தை ஆரம்பித்தாயோ அது நடக்க போவதில்லை.... என் ஆட்டம் தான் வெற்றி பெறப் போகிறது... சோ... வெய்ட் அன்ட் சீ... “ என்று மீண்டும் ஒரு கொடூர சிரிப்பை சிரித்து மறைந்து சென்றது அந்த விதி என்கிற உருவம்.....



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!