என் மடியில் பூத்த மலரே-28



அத்தியாயம்-28 

பாரதி காரின் இருக்கையின் பின்னால் சாய்ந்து நன்றாக உறங்கியதும் இதுவரை அவளை பார்க்காததை போல நடித்து வந்தவன் இப்பொழுது திரும்பி நன்றாக பார்த்தான் ஆதி...

காரில் ஏறி அவள் அருகில் அமர்ந்ததும் அவனுக்கும் என்னவோ போல இருந்தது.. அவளின் மென்மையான உடல் அவனின் மீது மோதும் போதெல்லாம் சிலிர்த்தது அவன் உள்ளே...அவள் தோளோடு தோள் இடித்து அமர்ந்து அவளின் நெருக்கத்தை, அது தந்த சுகத்தை அனுபவித்தான்...

அவள் அடிக்கடி ஓரக்கண்ணால் தன்னை பார்ப்பது தெரிந்தும் அவன் வேண்டும் என்றே தன் நண்பன் நிகிலனிடம் இல்லாத கதை எல்லாம் இழுத்து வைத்து பேசிக் கொண்டிருந்தான் அவளை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே...

இவர்களின் நாடகத்தை கண்ட நிகிலன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்..

ஆதி ஏதோ அவனிடம் பேச முனைய,

“டேய் மச்சான்.. போதும் உன் நடிப்புடா... சிஸ்டர் அப்பயே தூங்கிட்டாங்க... நீ இனிமேலும் நடிக்க வேண்டாம்.. “ என்று சிரித்தான் நிகிலன்..

“ஹீ ஹீ ஹீ.. டேய் நிகில்.. எப்படிடா கண்டுபிடிச்ச?? “ என்று அசடு வழிந்தான் ஆதி...

“டேய்... நான் ஒரு போலிஸ்காரன் டா... என்கிட்டயே உன் நடிப்பை காட்டறியா?? எப்பவும் நாலு வார்த்தைக்கு மேல பேசாதவன் இன்னைக்கு நீ வேணும்னே இவ்வளவு நேரம் பேசறதிலயே தெரிஞ்சிடுச்சு...நீ ட்ராமா பண்றனு.. “ என்று சிரித்தான் நிகிலன்...

“அதான... உன்கிட்ட போய் நான் நடிக்க முடியுமா?? “

“ஹ்ம்ம்ம் பார்த்துடா... சிஸ்டர்க்கு நான் தாய்மாமா ஸ்தானத்துல இருந்து மாலை போட்டு இருக்கேன்... அவங்களுக்கு ஏதாச்சும் ஒன்னுனா அவ்வளவுதான்.. அதனால அவங்களை ரொம்பவும் மிரட்டாம, அவங்க கண்ணுல தண்ணி வராம ஒலுங்கா பார்த்துக்கணும்.. “ என்று மிரட்டி சிரித்தான்

பின் அவர்கள் ஒருவருக்கொருவர் கிண்டலடித்து பேசிக்கொண்டே வர, ஆதியின் வீட்டை அடைந்தது கார்...

அப்பொழுது தான் பாரதியை திரும்பி பார்த்தான் ஆதி.. பாரதி அவன் தோளில் சாய்ந்து நன்றாக உறங்கி இருந்தாள்..அவள் தன் தோளின் மீது உரிமையாக சாய்ந்திருப்பதை ரசித்தவன்

“சரியான தூங்கு மூஞ்சி.. “என்று மனதுக்குள் செல்லமாக திட்டிக்கொண்டே அவளை எப்படி அழைப்பது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தான... இதுவரை அவளை பெயர் சொல்லி அழைத்ததில்லை அவன்...

இன்று நிகிலன் முன்னாடி எப்படி அழைப்பது என்று முழித்துக் கொண்டு நிக்க, நிகிலன் அதை புரிந்து கொண்டவனாய், காரை விட்டு இறங்கி அந்த பக்கம் சென்று நின்று கொண்டான்...

ஆதி அவளின் கன்னத்தை தட்டி,

“ஏய்.. பட்டிக்காடு.. எழுந்திரு.. வீடு வந்திருச்சு பார்... “என்றான்.. அவள் இன்னும் அசையாமல் இருக்கவும்

“சரியான கும்பகர்ணி... “ என்று திட்டியவன் அவள் கையில் நறுக்கென்று கிள்ளினான்..

ஆ வென்று அலறி அவசரமாக கண் விழித்தவள் தான் அவன் தோளில் சாய்ந்திருப்பதை கண்டு பதறி வேகமாக எழுந்து சரியாக அமர்ந்தாள்... அவள் எழுந்து விடவும்

“வீடு வந்திருச்சு இறங்கு.. “என்றான் முகத்தில் அவசரமாக வரவழைத்த கடுப்புடன்..

அவளும் கண்ணை கசக்கி கொண்டே கீழ இறங்கி நின்று தன் முன்னால் இருந்த வீட்டை இல்ல அந்த மாளிகையை பார்த்தாள்... அதை பார்த்ததும் ஆ வென்று வாயை பிளந்தாள்..

அசல் ஒரு அரண்மனை போல இருந்தது அந்த மாளிகை.. அவள் திறந்த வாயை மூடாமல் அந்த வீட்டையையே பார்க்கவும் ஆதி ஏலனமாக உதட்டை சுளித்தான்..

“சே.. இவளுக்கும் இந்த வீட்டின் மேல தான் கண்ணு போல.. இப்படி பார்க்கிறா பார்.. “என்று திட்டிகொண்டான் மனதினுள்.. அவன் உடல் விரைத்து முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டான்..

அதற்குள் ஜானகி வந்த கார் வந்து விட, ஜானகியும் மற்றவர்களும் காரை விட்டு இறங்க, உள்ளே இருந்த தங்கம் ஆரத்தி தட்டை எடுத்து வந்தாள்...

அதை வாங்கியதும் ஆதி, பாரதி, மற்றும் நிகிலனை ஒன்றாக நிற்க வைத்து ஜானகி, சுசிலா, கமலா மூவரும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்...

அவளுடன் இணைந்து செல்ல பிடிக்காததால் அவளை முன்னால் விட்டு, சிறிது பின்னால் சென்றான் ஆதி... ஆதிக்கு முன்னால் சென்ற பாரதி வலது காலை எடுத்து உள்ளே வைக்க, திடீரென்று அவள் தடுமாறவும் பின்னால் வந்த ஆதி அவளை தாங்கி பிடித்தபடி இருவரும் ஜோடியாக வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றனர்...

பின் பாரதியை பூஜை அறையில் விளக்கேற்ற வைத்து அதன் பின் சில சடங்குகளை செய்து பின் அனைவரும் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்தனர்...

அதற்குள் நிகிலன் தனக்கு வேலை இருப்பதாக அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்..பின் பாரதியிடமும் சொல்லி கொண்டு கிளம்ப

பாரதி அவனை பார்த்து

“ரொம்ப தேங்க்ஷ்.. “ என்றாள்..அவளுக்கு என்ன உறவு முறை சொல்லி அழைப்பது என்று தெரியவில்லை

“பரவாயில்லை சிஸ்டர்..நீங்க என்னை அண்ணானே கூப்பிடுங்க... Wish you have a happy married life.. “ என்று தலையில் கை வைத்து ஆசிர்வதித்தான்... பின் ஆதியை கட்டிகொண்டு

“டேய்.. மச்சான்... பழசை எல்லாம் மறந்திட்டு உனக்கான ஒரு புது வாழ்க்கையை ஆரம்பி.. happy married life!! All the best!! “ என்று அவனை கட்டி தழுவி விடைபெற்றான்...ஆதியும் அவனுக்கு நன்றி சொல்லி வழி அனுப்பியவன் பின் மேல தனது அறைக்கு சென்று விட , ஹாலில் மற்ற பெண்கள் உட்கார்ந்து கதை பேசினர்..

ஜானகி பாரதியை அழைத்துக் கொண்டு சென்று அந்த வீட்டை சுற்றிக் காட்டினார்..

பழைய காலத்து ராஜாவின் மாளிகை மாதிரி இருந்தது..எல்லாம் தேக்கு மரத்தால் ஆன வேலைப்பாடு நிறைந்து ஒரு ராயல் லுக் ஐ கொடுத்தது... அவள் அடிக்கடி விளையாட்டுக்கு அவனை ஓட்ட “லவகுஷ ராஜ குமாரன்.. “ னு சொன்னா உண்மையிலயே ராஜகுமாரன் போலதான் இருந்திருக்கான்.. “ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

ஜானகி ஒவ்வொரு அறையாக காண்பித்துக் கொண்டே வர, அதன் வேலைப்பாட்டையும் அதில் இருந்த வசதிகளையும் பார்த்து வியந்து கொண்டே வந்தாள் பாரதி..

பின் ஒரு அறைக்குள் நுழையவும் அது ஒரு நர்ஸரி ஸ்கூலுக்கு வந்த மாதிரி இருந்தது.. அங்கு எல்லாம் குழந்தைகள் விளையாடுவதற்கு என்று அனைத்து பொருட்களும் இருந்தன.. அதுவும் தவழ ஆரம்பித்ததில் இருந்து 15 வயது வரைக்குமேயான அனைத்து விளையாட்டு பொருட்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அந்த அறையின் சுவற்றில் முழுவதும் கார்ட்டூன் கேரக்டர்களும் இன்னும் சில குழந்தைகளுக்கான ஓவியங்களும் இன்னும் புதியது போல இருந்தது... அதை கண்டு வியந்த பாரதி,

“என்னது இது அத்தை?? .. ஒரு கிண்டர் கார்டன் ஸ்கூல் மாதிரி இருக்கு... நீங்க எதுவும் ஸ்கூல் வச்சு நடத்தினீங்களா?? “ என்றாள்.. அதை கேட்டு சிரித்த ஜானகி,

“இது எல்லாம் என் பையன்... “ என்று சொல்ல வந்து பாதியில் நிறுத்திக் கொண்டார்...

ஷ்வேதா திருமணம் முடித்து வந்த பொழுது இது மாதிரி ஏதோ பேச்சு வழக்கில் என் பையன் என்று சொல்ல அதற்கு ஷ்வேதா

“இதுவரைக்கும் அவர் உங்க பையனா இருக்கலாம்... அதான் இப்ப அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சில்ல.. இனிமேல் அவர் என் புருஷன்.. “ என்றாள் கோபமாக..

அதிலிருந்து அவள் முன்னாடி என் பையன் என்றே சொன்னதில்லை... அதை நினைத்து இப்பொழுது என் பையன் என்று சொல்ல வந்து பின் நிறுத்திக் கொண்டு,

“இது எல்லாம் உன் புருஷன் விளையாண்டது பாரதி... அதை எல்லாம் தூக்கி போட மனசே இல்லை.. இப்பவும் போரடித்தால் இங்கு வந்து உட்கார்ந்துக்குவேன்.. அப்படியே அவன் சிறு வயதில் விளையாண்டது எல்லாம் நினைவு வரும்... “ என்று கண்கள் மின்ன சொன்னார்...

அவர் முதலில் என் பையன் என்று சொல்ல வந்து பின் மாற்றி சொன்னதை கண்டு கொண்ட பாரதி அவர் அருகில் வந்து

“அத்தை... அவர் என்னைக்குமே உங்க பையன் தான்.. அதுக்கு பின்னாடி தான் எனக்கு புருஷனாக்கும்... நீங்க உங்க லவகுஷ ராஜகுமாரனை எப்பவும் போலவே கூப்பிடுங்க... இல்ல கொஞ்சுங்க... உங்களுக்கு தான் எப்பவும் முதல் உரிமை.. அதுக்கு பின்தான் நான்... “ என்று அவரை கட்டிக் கொண்டாள்..

அதை கேட்டு மனம் நெகிழ்ந்து போனார் ஜானகி... சிவகாமி சொன்ன மாதிரி இப்படி ஒரு மறுமகள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. “ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே பாரதியின் தலையை தடவி

“நீ எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே சந்தோஷமா இருக்கணும்.. பாரதி.. “என்று அவள் நெற்றியில் முத்தமிட்டார்...

பாரதியும் சிரித்துக்கொண்டே அந்த அறை முழுவதையும் சுத்தி பார்த்து விட்டு இன்னொரு நாள் வந்து நல்லா பார்க்கணும்.” என்று மனதில் குறித்துக் கொண்டே வெளியில் வந்தாள்..

பின் அருகில் இருந்த அடுத்த பெரிய அறையை கடந்து செல்கையில்

“அத்தை.. இங்க ஒரு ரூம் இருக்கு... இத காட்டாம போறீங்களே.. “ என்றாள்..

“ஹா ஹா ஹா.. அது உன் புருஷன் உனக்கு தனியா ஸ்பெஷலா காமிப்பானாக்கும்... “என்று கண் சிமிட்டி சிரித்தார்...

அப்பொழுது தான் புரிந்தது அது ஆதியின் அறை என்று.. அவன் உள்ளேதான் இருக்கிறான் என்று தெரியவும் அவள் கன்னம் சிவந்து வேகமாக அந்த அறையை தாண்டி சென்றாள்.. அவள் கன்னத்தில் வந்து போன அந்த வெட்க ரேகைகளை கண்டு சிரித்துக் கொண்டார் ஜானகி...

பின் இருவரும் கீழ இறங்கி வர, அங்கு சுசிலாவும் கமலாவும் சீரியஷாக தங்கள் மருத்துவ துறையை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்... கண்ணன் அவருக்கு போன் வரவும் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்..

அவர்கள் அருகில் வந்த பாரதி

“என்ன டாக்டர்?? .. இங்க வந்துகூட உங்க ஸ்டெதஸையும் அந்த மருத்து மாத்திரையும் பற்றிதான் பேசணுமா?? .. இன்னைக்கு ஒரு நாள் லீவ் விடுங்க... பாவம் அதுங்களும் உங்க கிட்ட மாட்டி கிட்டு முழிக்கிறாங்க... “ என்று சுசிலாவை பார்த்து சிரித்தாள் பாரதி....

“ஹா ஹா ஹா.. “ .என்று சிரித்த சுசிலா

“ஹே வாயாடி... என்ன?? நான் உனக்கு இன்னும் டாக்டரா?? ...இனிமேல் நான் உனக்கு மாமியாரக்கும்.. அதுவும் கொடுமைக்கார மாமியார்... மத்தவங்களுக்கெல்லாம் ஒரு மாமியார் னா உனக்கு நாங்க ரெண்டு மாமியார்...

நீ ஜானகியை ஐஸ் வச்சு ஏமாத்திடலாம்... ஆனால் என்கிட்ட வாலாட்ட முடியாது.. ஜாக்கிரதையா இருந்துக்க... “ என்று மிரட்டினார்.. மிரட்டுவதை போல நடித்தார் தன் சிரிப்பை அடக்கிகொண்டு முகத்தை சீரியஷாக வைத்துக்கொண்டு...

அதை கண்டு ஹீ ஹீ ஹீ.. என்று சிரித்துக்கொண்டே சுசிலா அமர்ந்திருந்த ஷோபாவின் அருகில் வந்து அதன் கைப்பிடி மேல அமர்ந்து கொண்டு அவர் கழுத்தை கட்டிக்கொண்டாள் பாரதி..

“அப்படியா மாமியாரே!! உங்களை பார்த்தாலெ எனக்கு பயமா இருக்கே .. ரொம்ப மிரட்டுவீங்களா?? .. எங்க ஒரு சாம்பிள் காட்டுங்க பார்க்கலாம்.. நீங்க எப்படி என்னை கொடுமை பண்ணுவீங்கனு.. “ என்று கன்னம் குழிய சிரித்தாள் பாரதி ..

அதை கேட்டு சுசிலா முழித்தார்.. என்ன சொல்லி மிரட்டுவது என்று புரியாமல் ..

“ ஹா ஹா ஹா.. என்ன சுசி அத்தை ?? எப்படி மறுமகள மிரட்டறதுனு உங்களுக்கு ட்யூசன் எடுக்கணும் போல.. நீங்க என்ன மிரட்டறீங்களாக்கும்?? .. நீங்க ரெண்டு பேருமே அதுக்கு செட் ஆக மாட்டீங்க அத்தை ஸ்.. ...

வேணா கோயில் ல பார்த்தமே அந்த சிவகாமி அத்தை .. அவங்கள வேணும்னா மாமியார் னு ஒத்துக்கலாம்... என்னையே எப்படி மிரட்டினாங்க தெரியுமா?? பாவம் அவங்க மறுமகள்.. “ என்று சிரித்தார்..

அதை கேட்டு

“வாயாடி.. உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?? ... “ என்று சிரித்தார் சுசிலா...

ஜானகியும் சிரித்து கொண்டே அப்பொழுது தான் பாரதி அமர்ந்து இருந்த பொசிசனை கண்டு பயந்து

“ஹே .. பாரதி மா .. இப்படி வந்து நல்லா உட்காரு.. எதுக்கு இப்படி அந்த ஷோபா கைப்பிடி மேல உட்கார்ந்து இருக்க... குழந்தைக்கு ஏதாவது ஆகிடப் போகுது.. “ என்று பதறினார்..

“ஹீ ஹீ ஹீ. அத்த.. உங்க பேத்திக்கு அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. அவள் நல்லா வசதியா இருக்கிற இடத்துல தான் உட்கார்ந்து இருப்பா... அதான் என் டாக்டர் அத்தை கூடவே இருக்காங்களே.. அப்படி எதுனா உடனே என்னை பார்த்துக்குவாங்க அத்தை... டோன்ட் வொர்ரி.. “ என்று சுசிலாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் பாரதி...

சுசிலாவிற்கு மனம் நிறைந்து இருந்தது... பாரதி எப்பவும் ஜானகியிடம் அதிகம் ஒட்டிக்கொள்வாள்.. சுசிலாவிடம் டாக்டர் என்ற மரியாதையுடன் எப்பவுமே தள்ளி நிப்பாள்... அவரே தன்னை மாமியார் என்கவும் பாரதிக்கு அவரையும் இனிமேல் ஜானகி அத்தை மாதிரியே பார்த்துக்கணும்.. அதுவும் அவர் தனக்கு எந்த சொந்தமும் இல்லாமல் ஆதிக்காகவே இருக்கிறார் என்று தெரியவும் அவர் மேல இன்னும் மதிப்பு + அன்பு அதிகமானது...

அவரும் எப்பவும் எல்லார் கூடயும் இது மாதிரி ஜாலியா சிரிச்சு பேசணும்.. என்று அவரை இழுத்து வம்பு பண்ணிக் கொண்டிருந்தாள் பாரதி...

ஜானகிக்கும் மனம் நிறைந்து இருந்தது..

“எப்படியோ இந்த வீட்டில் காணாமல் போயிருந்த இந்த சிரிப்பு சத்தம் மீண்டும் கேட்க ஆரம்பித்ததே.. நாங்கள் இழந்த சந்தோஷத்தை திரும்ப கொடுத்திட்டியே முருகா...உனக்கு ரொம்ப நன்றி.. நான் சீக்கிரம் என் நேர்த்தி கடனை செஞ்சுடறேன்.. “ என்று அவசரமாக வேண்டிக்கொண்டார்..

கமலாவும் அவர்களுடன் இணைந்து கொள்ள, பின் நான்கு பெண்களும் கதை அடித்துகொண்டே இருக்க கண்ணன் வெளியில் இருந்த தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்...

சிறிது நேரத்தில் கீழ வந்த ஆதி அவர்கள் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டவன் அதுவும் சுசிலாவும் பாரதிக்கு சமமாக வம்பு இழுத்துக் கொண்டிருப்பதை கண்டதும் மனம் நிறைந்து இருந்தது..

அவரும் எப்பவும் கலகவென்று பேசுபவர் தான்... ராம் இருக்கும்பொழுது அவர்கள் நால்வரும் உடகார்ந்து எல்லா கதையையும் பேசி சிரிப்பர்... அவர் மறைந்த பிறகு ஆதி கூட்டுக்குள் அடைந்த மாதிரி ஜானகியும் சுசிலாவுமே ஒடுங்கி இருந்தனர்...

தன் இரண்டு அம்மாக்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியே அவனுக்கு மனம் நிறைந்து இருந்தது... அவர்களை பார்த்து சிரித்து கொண்டெ வெளியில் நடந்தான்.. மறந்தும் பாரதியின் பக்கம் திரும்பவில்லை அவன்..

வெளியில் சென்றவன் கண்ணனிடம் சென்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்,, அவர் மட்டும் தனியாக இருப்பதை மேல மாடியில் இருந்து பார்த்தவன் அவருக்கு கம்பெனி கொடுக்கவே கீழ இறங்கி வந்தான்..

அவரிடம் தான் கட்டி கொண்டிருக்கும் மருத்துவமனையை பற்றி விளக்கியவன் அதில் என்னென்ன வசதிகள் செய்யலாம்.. என்று அவரிடம் அலோசனை கேட்க, கண்ணனும் இந்த சிறு வயதில் இப்படி ஒரு உதவும் குணமா என்று வியந்து அவனுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்..

தானும் வந்து இலவசமாக பணி புரிவதாக கேட்டுகொண்டார்... ஆதியும் மகிழ்ந்து அவருடன் உரையாடி கொண்டிருந்தான்..

பின் மதியம் நேரம் ஆகவும் தங்கம் அனைவரையும் சாப்பிட அழைத்தாள்.. ஜானகி வெளியில் சாப்பாடு ஏற்பாடு செய்யலாம் என்றதுக்கு அவள் மறுத்து விட்டு

“சின்ன ஐயா கல்யாண சாப்பாடு நான் தான் செய்வேன்... “ என்று அடம் பிடித்து தன்னுடன் இன்னும் சில பெண்களை துணைக்கு வைத்துக் கொண்டு ஒரு பெரிய கல்யாண விருந்தை ஏற்பாடு பண்ணி இருந்தாள் தங்கம்...

பின் அனைவரும் உணவு மேஜைக்கு வர, அது ஒரு பெரிய ஹால்... ஒரு இருபது பேர்க்கு மேல உட்கார்ந்து சாப்பிட அளவுக்கு வசதியாக இருந்தது அதில் போடப்பட்டிருந்த உணவு மேஜை.. ராம் எப்பவும் தன் தொழில் சம்பந்தமானவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தால் அவர்களை சாப்பிட வைத்து அனுப்புவது தான் வழக்கம்...

அதில் அனைவரும் அமர, பாரதி எங்க அமருவது என்று தயங்கி நிற்க, ஜானகி அவளை அழைத்து ஆதியின் அருகில் அமர வைத்தார்.. ஒரு வித படபடப்புடன் அவன் அருகில் அமர அவனோ இவளை முறைத்தான் யாரும் அறியாமல்...

பின் தங்கம் அனைவருக்கும் சாப்பாடு பரிமாற அனைத்து ஐட்டங்களும் ருசியாக செய்து இருந்தார்.. அனைவரும் அவளை பாராட்டி சாப்பிட்டு முடித்தனர்..

ஆதி மட்டும் மற்றவர்களிடம் பேசியவன் பாரதியின் பக்கம் திரும்பவே இல்லை.. அவளுடன் பேசவும் இல்லை...யாரும் அறியாமல் அவளை அவ்வபொழுது முறைத்ததை ஜானகி கண்டு கொண்டார்...

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த பின் கமலாவும் கண்ணனும் நாங்கள் கிளம்பறோம் என்று சொல்லவும் பாரதியின் முகம் வாடியது..

“மேடம்... இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் இல்ல..” என்றாள்..

“பாரதி... நீ என்னை இனிமேல அம்மானு தான் கூப்பிடனும்...” என்று அவளை திருத்தியவர்,

“வேலை இருக்கு டா. நாங்க இரண்டு பேருமே அங்க இல்லைனா ஏதாவது எமர்ஜென்சினா கஷ்டமா இருக்கும்.. நாங்க போய்ட்டு இன்னொடு நாள் வர்ரோம்..” என்றார்...

“ஹ்ம்ம்ம் இனிமேல் அடிக்கடி வாங்க மா...இப்போதைக்கு எனக்கு னு இருக்கிறது நீங்க மட்டும் தான்... “ என்று தழுதழுத்தாள் பாரதி.. அதை கேட்டு இருவரும் உருகி அவளை கட்டி அணைத்து அவள் தலையை தடவினார் கமலா.. பின் ஆதியிடம் திரும்பி

“மாப்பிள்ளை.. எங்க பொண்ணை நல்லா பார்த்துக்கங்க.. “ என்றார்.

“கண்டிப்பா அத்தை.. நீங்களும் மாமாவும அடிக்கடி வாங்க... “ என்றான் உரிமையாக...

பின் அவர்கள் இருவரும் விடை பெற்று சென்றனர்... அதன் பின் பாரதிக்கு அருகில் இருந்த அறையை காட்டி

“பாரதி... நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு... காலையில சீக்கிரமே எழுந்திருச்ச இல்ல.. “ என்று அவளை அறையில் படுக்க வைத்தார் ஜானகி.. பின் அவர்கள் இருவரும் அடுத்த அறைக்கு சென்று தங்கள் கதையை தொடர்ந்தனர்.

மாலை கண் விழித்த பாரதி வேகமாக எழுந்து மணியை பார்த்தாள்.. மணி ஆறு நெருங்குவதை காட்டவும் பதறி வேகமாக எழுந்து முகம் கழுவி அடுத்த அறைக்கு சென்றாள்..

அங்கு ஜானகியும் சுசிலாவும் இன்னும் பேசிக் கொண்டிருந்தனர்..அவர்களிடம் சென்றவள்

“சாரி... அத்தை ஸ்.. ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல.. “ என்றாள் தயங்கியவாறு..

“ஹே.. அதெல்லாம் ஒன்னும் இல்லை பாரதி மா .. இனிமேல் இது உன் வீடு.. நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் தூங்கலாம்.. எப்ப வேணாலும் எழுந்திருக்கலாம்... அங்க கெஸ்ட் ஹவுஸ்ல எப்படி இருந்தியோ அப்படியே ப்ரீயா இரு... “ என்று சிரித்தார் ஜானகி..

“சோ ஸ்வீட் அத்தை... உங்களை மாதிரி மாமியார் இருந்தா போதும்.. யாரும் மாமியார் கூட சண்டை போட்டுகிட்டு தனிக்குடித்தனம் னு தனியா பிரிஞ்சு போக மாட்டாங்க.. “என்று கிண்டலடித்து சிரித்தாள்...

ஜானகியும் சிரித்துகொண்டே பாரதியை அருகில் அழைத்து அவளுக்கு தலை வாரி, பின்னலிட, சுசிலா சென்று ப்ரிட்ஜ் ல் இருந்த மல்லிகை பூவை எடுத்து வந்து அதை எட்டாக மடித்து அவள் தலையில் தலை நிறைய வைத்து விட்டார்... 




பின் அவர்கள் இருவரும் முகம் கழுவி, பாரதியை விளக்கேற்ற வைத்து அந்த முருகனை வணங்கினர்.. சுசிலாவுக்கு தெய்வ நம்பிகை இல்லை என்றாலும் இங்கு வரும் பொழுது அவரும் ஜானகியுடன் அந்த பூஜை அறைக்கு வந்து வணங்குவார் .ஒரு அமைதி கிடைப்பதை போல இருக்கும்...

பின் மூவரும் ஹாலுக்கு வர, தங்கம் அவர்களுக்கு சிற்றுண்டியை எடுத்து வ்நதார்... அதை வாங்கிய ஜானகி,

“பாரதி... ஆதி தோட்டத்தில இருப்பான்.. நீ இதை கொண்டு போய் அவன் கிட்ட கொடுத்துட்டு வா... “ என்றார்...

“ஐயோ!! நான் போய் எப்படி அவனை தனியா பார்ப்பது??... “ என்று தயங்கியவள்,

“அத்தை... அவர் எங்க இருக்கார்னு தெரியல.. நீங்களே கொடுத்துடுங்களேன்.. “ என்றாள்...

“ஹா ஹா.. அந்த தோட்டத்துல அவனை கண்டு பிடிக்கறது ஒன்னும் கஷ்டம் இல்ல மறுமகளே...

அதில்லாம, இன்னையிலருந்து எங்க பையனை உன் கையில பிடிச்சு கொடுத்துட்டோம்.. இனிமேல் அவன நீதான் பார்த்துக்கணும்... அவனுக்கு எல்லாம் நீதான் செய்யணும்...என்ன புரிஞ்சுதா?? “ என்று சிரித்தார்...

“ஹ்ம்ம் அவன் என்னடான்னா அவன் புள்ளைக்கு என்னை பேபி சிட்டர்ங்கிறான்.. இவங்க என்னடான்னா வளர்ந்து 31 வயதான அவங்க குழந்தைக்கு என்னை பேபிசிட்டர் ங்கிறாங்க... என்னை பார்த்தா என்னவா இருக்காம் இவங்களுக்கு?? .. ஒரு வேளை ரெண்டு பேரும் என்ன வச்சு காமெடி பண்றாங்களோ?? இல்லை நம்ம வேல்ஸ்தான் என்னை வச்சு காயை நகர்த்தி கிட்டு இருக்கானா??

“அப்பா முருகா.. என்ன வச்சு எது செய்யறதா இருந்தாலும் முன்னாடியே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்... நீ எப்ப எத எப்படி செய்யறேன் னு தெரிய மாட்டேங்குது.. “ என்று புலம்பி கொண்டே ஒரு கையில் அந்த சிற்றுண்டி தட்டையும் டீ இருந்த அந்த சின்ன ப்ளாஸ்க் மற்றும் டீ கப் எல்லாம் இருந்த அந்த பெரிய ட்ரேயை எடுத்து கொண்டு நடந்தாள் தோட்டத்தை நோக்கி...

“உன்கிட்ட சொல்லிட்டு செய்தால் அதுல ஒரு சுவாரஸ்யம் இருக்காது பாரதி.. அதான் என் ஆட்டமாக்கும்.. “ என்று சிரித்துக் கொண்டான் அந்த வேலன்...

தோட்டத்திற்கு வந்தவள் ஆதி எங்கே என்று கண்களால் தேடினாள்.. அவன் ஒரு மூளையில் ஒரு நாற்காலியில் அமர்ந்து காதில் கெட் போன மாட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதை கண்டவள்,

“ஐயோ... சாதாரணமாகவே என்னை பார்த்தால் முறைப்பான்.. இதுல நான் வேற அவன பிடிக்கலைனு சொல்லி ஏதேதோ உளறி வச்சிருக்கேன்.. இப்ப நேர்ல பார்த்தா என்ன கடிக்க போறானோ?? “ என்று பயந்தவாறே மெல்ல அடி எடுத்து வைத்து அவன் அருகில் சென்றாள்...

அவள் தோட்டத்தில் நுழையும் பொழுதே அவளை கண்டு கொண்டவன் ,அவள் தலை நிறைய வைத்திருந்த மல்லிகையும், நெற்றியில் வகிட்டில் வைத்திருந்த குங்குமமும், கழுத்தில் மின்னிய புதிய தாலிக்கொடியும் அதை சுற்றியிருந்த மஞ்சள் கயிறும் அவனை கட்டி இழுத்தது...

அவள் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து நடந்து வரும் அழகில் கிறங்கி போயிருந்தான்... அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் ஓரக் கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தான்.....

அவள் அருகில் வரவும் திடீரென்ரு அன்று பாரதி சொன்ன எனக்கு உன்னை பிடிக்க வில்லை... என்ற குரல் அவன் காதுகளில் ஒலிக்க, அதுவரை இருந்த இளகிய தன்மை மறைந்து அவன் உடல் விரைத்தது.. அவன் முகம் கடுப்பானது... கை முஷ்டிகள் இறுக கண்களை இறுக மூடிக்கொண்டான்..

அவன் அருகில் வந்தவள்,அவன் கண்ணை மூடி இருக்கவும் தொண்டையை செருமினாள்...மெதுவாக கண்ணை திறந்தவன், அவளை கண்டு

“உன்னை யார் இதெல்லாம் எடுத்துகிட்டு வரச் சொன்னா?? அம்மா எங்க... போய்ட்டாங்க.. “ என்று கத்த ஆரம்பித்தவன் பார்வை அவள் வயிற்றுக்கு தாவ, அப்பொழுது தான் அவன் இளவரசி ஞாபகத்திற்கு வர,

“அம்மா எங்க போய்ட்டாங்க?? .” என்று ரகசியம் போல மெதுவாக பேசினான் முகத்தை மட்டும் கடுமையாக வைத்துக் கொண்டு... அவனின் விநாடியில் மாறிய செயலை கண்டு வியந்தவள்,

“அடப்பாவி... பொறக்காத புள்ளைகிட்ட இவ்வளவு பயம்.. ஆனா பொறந்து 23 வருஷம் வளர்ந்து நிக்கற என்கிட்ட நீ எகிறுர... எல்லாம் என் நேரம்.. “ என்று சிரித்துக் கொண்டாள் மனதுக்குள்..

“ஹ்ம்ம்ம் அத்தை தான் இத கொடுக்க சொன்னாங்க.. “என்று முனகினாள்...

அப்பொழுது தான் தன் அன்னையின் திட்டம் புரிந்தது... காலையில் இருந்து அவன் செய்த தவறும் புரிந்தது..

“நான் பாட்டுக்கு இவள பார்த்து முறைச்சுகிட்டுருந்தா அம்மாவுக்கு என் மேல சந்தேகம் வந்திடும்.. அப்புறம் மறுபடியும் வேற ஏதாவது ட்ராமாவை ஆரம்பிப்பாங்க... இனிமேல் அவங்க முன்னாடி எதுவும் காட்டிக்க கூடாது “என்று முடிவு செய்தவன், பாரதிய பார்த்து,

“சரி... சரி.. நீயே இனிமேல் எடுத்துகிட்டு வா.. “ என்றான்..

அதை கேட்டு அவள் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை..

“அப்பனா என் மேல இருந்த கோபம் போயிருச்சா.?? “என்று மகிழ்ந்து அவனை பார்த்து கேட்க நினைக்கையில் அவனே தொடந்தான்..

“அம்மா இப்பலாம் ரொம்ப சார்ப் ஆயிட்டாங்க.. அவங்க முன்னாடி நீ என் மனைவியா நடிக்கணும்.. அவங்களுக்கு எந்த சந்தேகமும் வந்திடக்கூடாது.. என்ன புரிஞ்சுதா?? “ என்றான்..அதை கேட்டு முகம் வாடிய பாரதி

“அடப்பாவி.. கட்டின பொண்டாட்டி கிட்டயே பொண்டாட்டியா நடிக்க சொல்லி கேட்குற புருசன் உலகத்துல நீ ஒருத்தன் மட்டும் தான்.. “ என்று தலையில் அடித்துக் கொண்டாள் மானசீகமாக...

அவன் சொன்னதுக்கு சரியென்று தலையை ஆட்டினாள்.. .அவள் தலைய ஆட்டும் பொழுது அவள் காதில் அணிந்திருந்த சிமிக்கியும் அளுடன் அசைந்தாடியது... அதை ரசித்தவன் பார்வை மீண்டும் அவள் வயிற்றுக்கு தாவ, அவன் பிரின்ஸஸை தொட்டு பார்க்க துடித்தன அவன் கைகள்..

“சே! இந்த கருவாச்சி படுத்தினதுல இந்த நான்கு நாட்களும் என் பிரின்ஸஸ் கூட பேச முடியாமல் போயிருச்சே... அதுக்கெல்லாம் இருக்கு அவளுக்கு… “ என்று மனதுக்குள் திட்டியவன் தன் கடிகாரத்தை பார்த்து இன்னும் நான்கு மணி நேரம் காத்திருக்கனும்.. என்று பெருமூச்சு விட்டான்..

“இவன் எதுக்கு இப்ப மணிய பார்க்கறான்.. “ என்று யோசித்தாள் பாரதி

“ஆமா.. என் பிரின்ஸஸ் நல்லா இருக்கா இல்ல.. மூவ்மென்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கா?? “ என்றான் அவள் வயிற்றை பார்த்தவாறே...

அப்பொழுதுதான் நினைவு வந்தது.. காலையில் அவன் மாங்கல்யத்தை அவள் கழுத்தில் அணிவிக்கும்பொழுது அவள் வயிற்றில் அந்த குட்டி வேகமாக உதைத்தது.. அவளுக்கு தன் தந்தையின் திருமணத்தை காணும்பொழுது குஷி போல என்று அப்பொழுது நினைத்து கொண்டாள்...அதற்கு பிறகு எந்த அசைவும் இல்லையே என்று உணர்ந்தவள்,

“இத போய் நான் இப்ப இவன் கிட்ட சொன்னா, உடனே இப்பயே வயிற்றில கைய வச்சு பார்த்தாலும் பார்ப்பான்... “ என்றவளின் நினைவுகள் கடைசியாக அவன் தன் வயிற்றை தொட்ட அந்த நொடிகளும் அடுத்து அவனின் அந்த முரட்டுத்தனமான முத்தமும் நினைவு வர, அவள் கன்னம் சிவந்தது... உதடுகள் துடித்தன..அவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்க தன் உதடுகளை பற்களால் கடித்துகொண்டாள்..

ஆதியின் நினைவுகளும் அந்த நிமிடங்களை தொட, அவன் உள்ளும் அதிர்வலைகள்.. அவன் இதழ்கள் அவள் இதழ்களை குறும்பாக பார்க்க, அதற்கு மேல் அங்கு நிக்க முடியாமல் திரும்பி வேகமக நடந்து இல்ல ஓடி விட்டாள் அந்த இடத்த்தை விட்டு....

ஆதியும் அவள் ஓடியதற்கான காரணத்தை புரிந்து கொண்டு மெல்ல சிரித்துக் கொண்டான்...

இரவு உணவிற்காக ஜானகி, சுசிலா, பாரதி மூவரும் முன்னரே வந்து அமர்ந்திருக்க, அங்கு வந்த ஆதி வேணும் என்றே பாரதியின் அருகில் அமர்ந்து கொண்டான்...பின் சாப்பிடும் பொழுது மீண்டும் அத எடு இத எடு னு பாரதியிடம் பேசிக் கொண்டிருந்தான்..

அதை கண்ட ஜானகி,

“காலையில் இருந்து அவளிடம் பேசாமல் மூஞ்சியை தூக்கி வைத்திருந்தவன் திடீர்னு அந்தர் பல்டி அடிக்கிறானே... ம்ஹூம்.. இவனை நம்ப கூடாது.. என்கிட்ட ட்ராமா பண்ணாலும் பண்ணுவான்.. இவனை இன்னும் க்லோசா வாட்ச் பண்ணனும்.. “என்று சிரித்துக் கொண்டவர் அவனை கண்டு கொள்ளாமல் மற்ற கதைகளை பேச, நால்வரும் சிரித்தபடியே உணவை முடித்தனர்..

பின் சுசிலாவும் ஜானகியும், ஜானகி அறைக்கு சென்று தங்கள் கதையை தொடர்ந்தனர்... பாரதி தங்கத்திற்கு உதவி செய்து எல்லாம் ஒதுங்க வைத்து விட்டு ஜானகியின் அறைக்கு செல்ல அவர்கள் இன்னும் கதை பேசிக் கொண்டிருப்பதை கண்டு,

“அத்தைஸ்... அப்படி என்னதான் பேசுறீங்க.. மதியத்தில் இருந்தே பேசிக்கிட்டே இருக்கீங்க..இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியலை.. “ என்று சிரித்தாள்..

“ஹ ஹா ஹா... நாங்க இந்த மாதிரி மனம் விட்டு பேசி 4 வருடம் ஆச்சு பாரதி... ராம் அண்ணா இருக்கிற வரைக்கும் கலகலனு இருக்கும்... அவர் போனதுக்கப்புறம் நாங்க மூன்று பேருமே ஒவ்வொரு கூட்டுகுள்ள போயாச்சு.. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு..

நாங்க இழந்த சந்தோஷம் எல்லாம் திரும்ப வந்த மாதிரி.. அதான் உட்கார்ந்து பழைய கதை எல்லாம் பேசி கிட்டிருக்கோம்.. “ என்று சிரித்தார் சுசிலா...

பாரதிக்கு தெரியும் சுசிலாவும் ஜானகியும் சிறு வயதில் இருந்தே பள்ளி தோழிகள் என்று... அதே நட்பு பள்ளி காலத்தையும் தாண்டி இன்னும் இந்த 55 வயதுக்கு மேலயும் தொடர்வதை நினைத்து அவளுக்கு ஆச்சர்யம்... ஏதோ நினைவு வந்தவளாக,

“சுசி அத்தை.. நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே.. “ என்று பீடிகை போட்டாள் பாரதி..

“அதெல்லாம் இல்ல டா.. கேளு என்ன னு “ என்று சிரித்தார் சுசிலா

“வந்து... நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?? ஏதாவது லவ் பெய்லியரா?? “ என்றாள் தயங்கியவாறு..

அதை கேட்டு சிரித்தார் சுசிலா...

“கல்யாணம் வேண்டாம்னா லவ் பெய்லியர் தான் அப்படீங்கிற ஒரு எழுதபடாத விதி போல இருக்கு... “என்று சிரித்தவர்

“அப்படி எல்லாம் இல்ல டா... ஏனோ எனக்கு இந்த கல்யாணம், குடும்பம், குழந்தைனு அதுல இன்ட்ரெஸ்ட் இல்லை... எனக்குனு ஒரு வட்டத்தை உருவாக்கிட்டு அவங்களுக்காகவே வாழறது.. அப்படி இருக்க பிடிக்கலை... என்ன நம்பி வர்ர எல்லா பேசன்ட்ஸ் மே எனக்கு குழந்தைங்க மாதிரிதான்..

ஒவ்வொருத்தரும் ஒரு குறையோட வரும் பொழுது, அவங்க குறைய தீர்த்து வைத்து அவங்க முகத்துல ஒரு மகிழ்ச்சிய பார்க்கும்பொழுது ஒரு ஆத்ம திருப்தி,சந்தோஷம் கிடைக்கும் பாரு.. அதுல இருக்கிற சுகமே தனி...

அதுவே நமக்குனு ஒரு குடும்பம் வந்திட்டா நேரத்துக்கு ஓடனும், புருஷன பார்க்கணும் குழந்தைகள பார்க்கனும்.அப்படி னு ஒரு ரெஸ்பான்ஸிபிலிட்டி வந்திடும்.. அதனால என்னால மற்ற இதுல கவனம் செலுத்த முடியாது... எனக்கு அந்த மாதிரி வாழ்க்கையும் பிடிக்கலை..

அப்புறம் ஆதி பிறந்ததுக்கப்புறம் அவனை கையில தூக்கிய நிமிடத்தில் இருந்தே என் குழந்தையாவே ஆயிட்டான்... அப்படியும் எனக்கே எனக்கான குழந்தைய பார்க்கணும்னா என் ஆதி இருக்கான்.. எனக்கான குடும்பம் னு ஏக்கம் வரும்பொழுது எல்லாம் இங்க வந்திடுவேன்.. ராம் அண்ணா வும் ஜானுவுமே எனக்கு நல்ல ஒரு குடும்ப சூழலை கொடுத்தாங்க..

இது போதும் மீதி நேரத்தை இவங்களோட ஓட்டிடுவேன்.. என்ன பொறுத்தவரை என் பையன், ஜானு, என் பேசன்ட்ஸ், இப்ப நீ, அடுத்து என் பேத்தி.. இதுவே என் உலகம்...இப்படியே இருந்திட்டா போதும்.. என்ன?? போதுமா விளக்கம் மருமகளே.. “ என்று சிரித்தார்...

“அப்ப டாக்டர் ஸ் எல்லாமே இப்படித்தான் இருக்கணுமா?? “என்றாள் இன்னும் அவர் பதிலில் முழுவதும் முழுவதும் சமாதானம் அடையாமல்

“ஹ்ம்ம்ம் அப்படி சொல்லல. ஒவ்வொருத்தருக்கு ஒரு வித டேஸ்ட் இருக்கும்... நம்ம பெண்களிலயே ஒரு சிலருக்கு ஹவுஸ் வைப் ஆ இருக்க பிடிக்கும், ஒரு சிலருக்கு வேலைக்கு போய் வெளில நாலு பேரோட பழகினாதான் பிடிக்கும்...அது மாதிரி தான் இதுவும்..

சமீபத்துல ஒரு ஷோ பார்த்தேன்.. அதுல ஒருத்தர் தனக்கு Pets வளர்க்கிறதுல இன்டெரெஸ்ட்... அதுங்களை கவனிச்சுக்கறதுக்காகவே கல்யாணம் பண்ணிக்கலைனார்...இதுமாதிரி நிறைய.. அவங்கவங்க வாழ்க்கை அவங்கவங்களுக்கு எப்படி பிடிக்குதோ அப்படி வாழ்ந்திட்டு போகனும்.. “ என்று சிரித்தார்...

“சே!! போங்க அத்தை.. நான் கூட இன்டெரெஸ்ட்டிங்கா ஏதாவது லவ் ஸ்டோரி இருக்கும் னு பார்த்தா இப்படி மொக்கையா லெக்சர் அடிச்சிட்டீங்களே.. “ என்று சிரித்தாள் பாரதி..

“ஹே பாரதி.. லவ் ஸ்டோரியும் இருக்கு.. சுசி.. அந்த பாலா லவ் லெட்டர் கொடுத்ததை சொல்லலயே... அத சொல்லுடி.. “ என்று ஆரம்பித்தார் ஜானகி..

“வாவ்.. சூப்பர் அத்தை... சொல்லுங்க.. சொல்லுங்க... அது என்ன கதை?? “என்றாள் ஆர்வமாக

“ஏய் ஜானு.. சும்மா இரு டி.. “என்று வெட்கப்பட்டார் சுசிலா .. இந்த 55 வயதிலும் அவர் வெட்கபடுவது அவ்வளவு அழகாக இருந்தது... பாரதி அவரையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

“பரவால அத்த.. நாங்க தான இருக்கோம்.. வெக்கப்படாம சொல்லுங்க .. “ என்று மீண்டும் சிரித்தாள்.. அவள் விட மாட்ட போல என் தோன்ற

“அது ஒன்னும் இல்ல பாரதி...நான் மெடிசின்ஸ் படிக்கும்பொழுது பாலாங்கிற சீனியர் ஒரு லவ் லெட்டரை கொண்டு வந்து கொடுத்தார்... நான் அத வாங்கி படிச்சிட்டு, தங்க்ஷ்.. அண்ணா...நல்லா கவிதை எழுதி இருக்கீங்க.. இத பத்திரமா வச்சிருந்து உங்களுக்கு வரப் போற வைப், என் அண்ணி கிட்ட கொடுத்துடுங்கனு திருப்பி கொடுத்திட்டேன்.. அத தான் இவ அப்ப அப்ப ஓட்டிகிட்டு இருப்பா..” என்று சிரித்தார்..

“வாவ்... சூப்பர் அத்த.. .. ஆமா.. அந்த பாலா மாமாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?? .. “என்றாள் ஆர்வமாக..

“ஹே.. நீ அடி வாங்கபோற... ஏன்.. அவருக்கு கல்யாணம் ஆகலைனா, எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க போறியா?? எல்லாம் இந்த சினிமா பார்த்து அதே மாதிரி ட்ரை பண்ணுதுங்க... “என்று சிரித்தார்...

“ஹீ ஹீ ஹீ... எப்படி அத்தை அப்படியே சொல்றீங்க... சரி சொல்லுங்க.. அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா?? இல்லையா?? “என்றாள் மார்பின் குறுக்கே கைகளை கட்டிகொண்டு தன் புருவங்களை உயர்த்தி அவரை மிரட்டும் விதமாக...

அவளின் அந்த குழந்தைதனமான செய்கையை ரசித்தவர்

“ஹ்ம்ம்ம் அவருக்கு கல்யாணம் ஆகி, பேரன் பேத்தி எல்லாம் கூட இருக்காங்க... He is neurologist now .. இப்பவும் சில கான்ப்ரென்ஸ் ல பார்ப்போம்.. He is good friend of me.. “ என்று சிரித்தார்...

“ஐயோ!! மிஸ் பண்ணிட்டாரே அந்த பாலா மாமா.. நீங்க லெட்டரை திருப்பி கொடுத்ததும் அவரும் வாங்கிகிட்டு போய்ட்டாராக்கும்.. இப்படி ஒரு க்யூட் ப்யூட்டிய மிஸ் பண்ணிட்டாரே.. “ என்று அவர் கன்னத்தை இரண்டு பக்கமும் பிடித்துசெல்லமாக ஆட்டினாள்...

அதை கண்டு” ஹே வாலு... “ என்று சிரித்தனர் சுசிலாவும் ஜானகியும்

“எனிவே சூப்பர் அத்தை... உங்க கதைய கேட்கும் பொழுது எனக்கும் உங்கள மாதிரி ஒரு லட்சியத்தோட இருக்கணும் போல இருக்கு .. “என்றாள் பாரதி முகத்தை சீரியஷாக வைத்துக் கொண்டு..

அதை கண்டு அதிர்ந்த ஜானகி,

“ஹே... பாரதி.. அவ ஒரு வீணா போனவ.. கல்யாணம் பண்ணிக்காததுக்கு ஆயிரம் கதை சொல்லி கிட்டிருக்கா.. அவ கதைய எல்லாம் கேட்டு நீயும் அவ மாதிரி சந்நியாசி ஆகிடறேனு கிளம்பிடாத தாயே!! ... இப்பதான் என் பையன் வாழ்க்கையில் விளக்கு லேசா எரிய ஆரம்பிச்சிருக்கு... அத அதுக்குள்ள அணைச்சிடாத..

நீயும் அவனும் ஒன்னா சந்தோஷமா வாழ்ந்து இன்னும் நாலு பேரன் பேத்திய பெத்து கொடுக்கணும்...இனிமேல் கதை கேட்கணும்னா என்கிட்ட வா... நானும் உன் மாமாவும் எப்படி வாழ்ந்தோம் ன்ற கதை சொல்றேன்.. “ என்று சிரித்தார்...

அதை கேட்டு சுசிலா ஜானகியை முறைத்து

“அதான.. உனக்கு ராம் அண்ணாவை பற்றி பேசலனா தூக்கம் வராதே.. எங்கட இன்னும் ஆரம்பிக்க காணோமேனு பார்த்தேன்.. ஆரம்பிச்சுட்ட டீ .. இன்னைக்கு நைட் புல்லா அதையே பேசி அறுக்க போற.. “ என்று சிரித்தார்...

ஜானகியும் சிரித்து கொண்டே பின் மணியை பார்த்தவர்

“சரி பாரதி.. டைம் ஆச்சு.. நீ வா.. நான் பாலை சூடு பண்ணி தர்ரேன்.. நீ எடுத்துகிட்டு ஆதி ரூம்க்கு போ.. “ என்றார்..

அதை கேட்டு இதுவரை கலகல னு சிரிச்சு பேசிகிட்டிருந்த பாரதி திடுக்கிட்டாள்...

“அத்தை.. நானும் உங்க கூடவே இங்கயே இருந்துக்கறேனே..இன்னும் நிறைய கதை கேட்கணும் “ என்றாள் கொஞ்சலுடன்..

“ஹ்ம்ம்ம் எனக்கும் ஆசை தான்.. உன்னை என் கூடவே வச்சுக்கணும்னு... ஆனா உன் புருஷன் இருக்கானே... பகல்ல எவ்வளவு நேரம் வேணாலும் உங்க மறுமகளை கொஞ்சிக்கங்க... ஆனால் நைட் பத்து மணிக்கு மேல என் பொண்டாட்டிய என் ரூமுக்கு அனுப்பிடுங்க னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டான்...

அதோட இனிமேல் நீ இங்க தான இருக்கபோற... நிறைய கதை பேசலாம்... இப்ப நீ மேல போடா.. “ என்று சிரித்தார்...

“அதெல்லாம் இல்ல.. அவர் அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டார்.. “ என்று அவள் சொல்லி முடிக்கு முன்னே

“மா... அவளை மேல அனுப்புங்க.. “ என்று மாடியில் இருந்து குரல் கொடுத்தான் ஆதி...

அத கேட்டு நமட்டு சிரிப்பை சிரித்த ஜானகி

“பார்த்தியா... இன்னும் கொஞ்சம் நேரம் நீ மேல போகலைனா உன் லவகுஷ ராஜகுமாரன் வந்து இந்த ராணிய தூக்கிட்டு போய்டுவானாக்கும்.. என்ன பரவாயில்லையா?? “என்று கண் சிமிட்டி சிரித்தார்...

“சீ.. போங்க அத்தை.. நீங்க ரொம்ப மோசம்.. “ என்று சினுங்கினாள்..

“சரி வா.. நான் பால் ஐ எடுத்து தர்ரேன்.. “ என்றவர் சமையல் அறைக்குள் சென்று பாலை காய்ச்சி ஒரு டம்ளரில் ஊற்றி அதில் குங்குமப்பூவை போட்டு கலக்கி பாரதியிடம் கொடுத்தார்...

“அத்த.. இது எப்படி இங்க?? “ என்று இழுக்கவும்

“ஹ்ம்ம்ம் உன் புருஷன் தான் வாங்கி வந்தான்.. உனக்கு இதை தினமும் பால் ல போட்டு கொடுக்கனும்னு ஆர்டர்... நேற்றே எல்லாம் வாங்கி வந்து வச்சிட்டான்.. “ என்று சிரித்துக் கொண்டே அடுத்த டம்ளரில் பாலை ஊற்ற அதற்குள் அவர் அலைபேசி அடித்தது...

அழைத்தது ஆதி தான் என தெரியவும்

“சொல்லுடா கண்ணா..” என்றார் அதே நமட்டு சிரிப்புடன்

“மா... இன்னும் என்ன பண்றா அவ.. சீக்கிரம் மேல வர சொல்லுங்க..” என்றான்.

“டேய்...நீ உன் பொண்டாட்டி கிட்ட பேசனும்னா நீயே அவகிட்ட நேரா பேசு.. நடுவுல நான் எதுக்கு மீடியேட்டர்... இந்தா நீயே சொல்லு.. “ என்று அலைபேசியை பாரதியிடம் கொடுத்தார்.

திடீரென்று தன் கையில் மொபைலை கொடுக்கவும் திறுதிறுவென்று முழித்த பாரதி, அதை காதில் வைத்ததும்,

“ஏய்.. சீக்கிரம் மேல வா... “ என்று சிடுசிடுத்தான்..

“ஹ்ம்ம்ம் “என்று மெல்ல முனகியவள், அலைபேசி யை மீண்டும் ஜானகியிடம் கொடுத்து

“அத்தை.. உங்க புள்ளை கிட்ட சொல்லுங்க.. எங்க அப்பா அம்மா, ஊரெல்லாம் கூப்பிட்டு, கெடா வெட்டி, மொட்டை அடிச்சு காது குத்தி அழகா பாரதி னு பேர் வச்சிருக்காங்க.. அவர் பாட்டுக்கு எப்ப பார் ஏய் னு கூப்பிடறார்.. “ என்று பொரிந்தாள்..

அதை கேட்டு சிரித்த ஜானகி,

“அம்மா தாயே.. அவனுக்கு சொன்ன ரூல்ஸ் தான் உனக்கும்... எதுனாலும் உன் புருஷன் கிட்டயே நீயே நேரடியா கேட்டுக்க.. இனிமேல் எங்கள நடுவுல இழுக்காதிங்க.. நீ என்ன பண்ற, நேரா போய் அவன் சட்டைய பிடிச்சு நாலு வாங்கு வாங்கு.. “ என்று கண் சிமிட்டி சிரித்தார் ஜானகி...

“ம்ஹும் நான் எங்க போய் அவர் சட்டை ய பிடிக்கிறதாம்.. அந்த சிடுமூஞ்சிய பார்த்தாலெ நாக்கு ஒட்டிக்கிது.. கை கால் வரமாட்டேங்குது.. “ என்று புலம்பி கொண்டே பால் டம்ளரை எடுத்து கொண்டு மாடி ஏறினாள்..

ஜானகியும் சிரித்து கொண்டே தங்களுக்கான பாலை எடுத்து கொண்டு தங்கள் அறைக்கு சென்றார்..

மாடியில் ஏறிகொண்டிருந்த பாரதிக்கு கால்கள் பின்னின.. அவள் மனமோ படபட வென்று அடித்து கொண்டது..

முதலிரவு அறைக்கு தயங்கி தயங்கி செல்லும் புதுப்பெண்ணை போல அவளும் தயங்கியவாறு நடந்தாள்..

அப்பொழுது தான் நினைவு வந்தது… முறைப்படி திருமணம் நடந்து இருந்தால் அவர்களுக்கும் இன்று முதலிரவு..என்று நினைக்கையில் கன்னம் சிவந்தது அவளுக்கு.. ஆனால் அதற்குள் அவன் தன்னை மிரட்டியது நினைவு வரவும்

“ஹ்ம்ம்ம் அதான் என்னை அவன் மனைவி இல்லனு சொல்லிட்டானே.. அதனால இன்னைக்கு எதுவும் வம்பு பண்ண மாட்டான்..

ஆனா என்ன, கொஞ்சம் திட்டுவான், இல்லைனா முறைப்பான்.. அத சமாளிக்கிறது தான் கஷ்டம்… என்றவளுக்கு மாலை அவன் சத்தம் போட ஆரம்பித்து பின் மெதுவாக பேசியது நினைவு வர,

“ஆகா சூப்பர் ஐடியா... அவன் எதுவும் சத்தம் போட்டால் ஆ னு கத்திட வேண்டியது தான்.. அவன் புள்ள தான் உதைக்கிறா னு அமைதியாயிடுவான்..

வாவ்… நீ கலக்கற பாரதி.. இப்படி எல்லாம் ஐடியா வருதே.. “ என்று தன்னை தானே மெச்சிக் கொண்டாள்..

“எப்படியோ அவன் கிட்ட இருந்து தப்பிக்க ஒரு மாஸ்டர் ப்ளானை போட்டாச்சு.. “ என்று தைரியமாக அடி எடுத்து வைத்தாள் அவன் அறையை நோக்கி…..



ஆதி எதுக்காக பாரதியை மேல வரசொல்லி அவசரப்படுத்தினான்?? பாரதியின் மாஸ்டர் ப்ளான் வொர்க் அவுட் ஆனதா?? பார்க்கலாம்....

Comments

  1. இவ ஒரு திட்டம் போட
    அவன் என்ன திட்டம் வச்சு இருக்கானோ

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!