காதோடுதான் நான் பாடுவேன்-36



அத்தியாயம்-36

ப்படியும் இப்படியுமாக ஒரு வாரம் ஓடிவிட்டது மதுவந்தினி தன் புகுந்த வீட்டை விட்டு வந்து...

அவள் வந்த இரண்டாவது நாளே சிவகாமி அவளை வீட்டிற்கு வரசொல்லி அழைத்தார்... ஆனால் மதுதான் இன்னும் இரண்டு நாள் தன் அம்மா வீட்டில் தங்கிவிட்டு வருவதாக கொஞ்ச, சிவகாமியும் விட்டுவிட்டார்..

அந்த இரண்டு நாள் மேலும் இரண்டு இரண்டாக கூடி இதோ ஒரு வாரமும் ஆகிவிட்டது....

மதுவுக்கும் தன் புகுந்த வீட்டிற்கு செல்ல ஆசைதான...

தன் மாமியாரை, நாத்தனாரை அதைவிட தன் ஆசை கணவனை விட்டு பிரிந்து இருப்பது கஷ்டமாகத்தான் இருந்தது....

தினமும் இரவில் அவன் புகைபடத்தை அலைபேசியில் பார்த்துகொண்டு அதை மார்போடு அணைத்தவாறுதான் உறங்குகிறாள்...

ஆனால் ஏனோ தானாகவே அங்கு செல்ல தயக்கமாக இருந்தது...அவளுக்கும் தன் தயக்கத்தை விலக்கி சென்றுவிட ஆசைதான்…

ஆனால் அவள் கணவன் சொன்ன சுடு சொற்கள், அவளை அவன் முகத்திலயே முழிக்க கூடாது என்று கூறிய வார்த்தைகள் நினைவு வரும்பொழுதுதான் துடித்து விடுகிறாள்....

அவனாவது என்னை பார்க்காமல் நிம்மதியாக இருக்கட்டும்... என்னை பார்த்தால் மீண்டும் வீட்டில் சாப்பிடமாட்டான்...

வீட்டிற்கும் தாமதமாக திரும்பி வருவான்... நான் ஏன் அவனுக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும்.. “ என்று தன் கணவனுக்காக பார்த்து தன் மனதை கல்லாக்கி கொண்டாள்...

மதுவின் பெற்றோர்களும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை...

சாரதாவும் ஒரு வாரம் விடுப்பு எடுத்து கொண்டு தன் மகளுடன் தங்கி விட்டார்...

இதுவரை பேசாத கதைகள் எல்லாம் பேசி முடித்து அவளுக்கு பிடித்ததெல்லாம் சமைத்து கொடுத்து மாலையில் அவளை அழைத்து கொண்டு வெளியில் செல்வது என்று இதுவரை அவர்கள் அனுபவித்திராத வாழ்க்கையை தன் மகள் வந்த சந்தோசத்தில் அவளை கொண்டாடினர்...

ஆனாலும் மதுவின் பெற்றோர்களுக்கு உள்ளுக்குள் ஒரு நெருடல் இருந்து கொண்டேதான் இருந்தது.... அதை வெளிக்காட்டாமல் மூவரும் வளைய வந்தனர்...

அன்று காலை உணவை முடித்து விட்டு மூவரும் ஏதோ பேசி கொண்டிருக்க, பேச்சு வழக்கில் சுகந்தியை பற்றி பேச்சு வந்தது..

சாரதாதான் ஏதோ சுகந்தியை பற்றி சொல்லிவிட்டு தன் நாக்கை கடித்து கொண்டார்....தன் மகள் அதை கண்டு கொள்ளகூடாது என்று...

ஆனால் மது சுகந்தியின் பெயரை கேட்டதுமே

“மா... நான் சுகந்தி அக்கா வீட்டுக்கு போய்ட்டு வர்ரேன்... அந்த அங்கிள் ஆன்ட்டியை பார்த்து எவ்வளவு நாளாச்சு..” என்று கிளம்பி விட்டாள்..

சாரதாவுக்கு தான் ஏன் அந்த பேச்சை எடுத்தோம் என்றாகிவிட்டது... ஆனாலும் ஒரு பெருமூச்சை விட்டு அவளை அனுப்பி வைத்தார்....

சுகந்தியின் வீடு இப்பொழுது அடுத்த தெருவுக்கு மாறி இருந்தனர்... அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த மதுவை கண்டதும் சுகந்தியின் தாய் ஆசையாக வரவேற்றார்....

“அடடே .. மது குட்டியா.. எப்படா வந்த?? எப்படி இருக்க?? உன் புகுந்த வீட்ல எல்லோரும் சுகமா?? “ என்றவாறு அவளை கட்டி அணைத்து கொண்டார்....

மதுவும் சிரித்து கொண்டே அவருக்கு பதில் அளித்து அவர்களின் நலம் விசாரித்தவள்

“ஆன்ட்டி.. சுகந்தி அக்கா எப்படி இருக்காங்க?? “ என்றாள்....

அதை கேட்டதும் அதுவரை சிரித்து கொண்டிருந்த அந்த தாயின் முகம் வேதனையை அப்பி கொண்டது....

“ஹ்ம்ம்ம் ஏதோ இருக்கா மது ... நீயே போய் பார்...” என்று சுகந்தியின் அறையை காட்டினார்

“ஓ.. சுகந்தி அக்கா வந்திருக்காங்களா?? எனக்கு தெரியாதே... இருங்க நான் போய் பார்க்கறேன்... “ என்று ஆச்சர்யபட்டு சிரித்துகொண்டே சுகந்தியின் அறைக்கு ஓடினாள் மது....

சுகந்தியின் அறை கதவை தட்டிவிட்டு பின் மெதுவாக திறக்க, அங்கு இருந்த சுகந்தியின் கோலத்தை கண்டு மது அதிர்ந்து நின்றாள் ...

கட்டிலில் அமர்ந்து விட்டத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள் சுகந்தி...

அவள் கண்களில் அழுததன் அடையாளமாக நீர் வடிந்திருக்க அதை கூட துடைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்... அதை கண்டதும் மதுவிற்கே மனதை பிசைந்தது....

“சுகந்தி அக்கா.... எப்படி இருக்கீங்க.. “ என்றவாறு உள்ளே சென்றாள் மது...

மதுவின் குரலை கேட்டதும் அவசரமாக தன் கண்ணீரை மது அறியாமல் துடைத்து கொண்டவள் வர வழைத்த சிரிப்புடன்

“ஹே.. மது குட்டி.. வா.. வா... எப்ப வந்த?? “ என்றவாறு எழுந்து வந்து அவளை கட்டி கொண்டாள்...

மதுவும் புன்னகைத்து

“என்னாச்சுக்கா...?? ஏன் இப்படி இருக்கீங்க ?? “ என்று கேட்டதுதான் தாமதம்.. சுகந்தி மதுவை கட்டி கொண்டு ஓ வென்று அழ ஆரம்பித்தாள்....

சுகந்திக்குமே தன் மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்ட வேண்டும் போல இருந்தது.. எப்பவுமே தன் தாயை விட மதுவிடம் தான் தன் மனதில் இருப்பதை கொட்டி ஆறுதல் தேடி இருக்கிறாள்...

இன்று அவளே வரவும் அவளை கட்டி கொண்டு ஒ வென்று அழ, மது புரியாமல் முழித்தாள்..

ஆனாலும் அவள் முதுகை ஆதரவாக தடவி கொடுத்து அவளை கட்டிலுக்கு அழைத்து சென்று அமர வைத்தாள் மது....

கொஞ்ச நேரம் சுந்தரி அழுது முடிக்க காத்திருந்து ஓரளவுக்கு அவள் அழுகை குறையவும் மீண்டும் என்னாச்சு என்று விசாரித்தாள்...

சுகந்தி தன் மனதில் இதுவரை அடைத்து வைத்து புழுங்கி வந்ததை எல்லாம் மதுவிடம் கொட்டினாள்....

சுகந்தி மாமியார் அவளை எப்பொழுதும் தேளாக கொட்டி கொண்டு இருப்பது வழக்கமானது... ஆனாலும் அதெல்லாம் சுகந்தி பொருத்துக் கொள்வாள் தன் கணவனுக்காக.....

ஆரம்பத்தில் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தவள் போக போக கணவனின் அன்பு புரிந்து விட தன் கணவனுக்காக தன் புகுந்த வீட்டு கொடுமைகளை எல்லாம் பொருத்து கொண்டாள்...

இப்பொழுது அவளுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்க, அவளை கொட்டி கொண்டிருக்கும் மாமியாரின் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி ஆயிற்று....

தினமும் சுகந்திக்கு குழந்தை இல்லை என்று சொல்லி அவளை ஜாடை பேசுவதும் குத்திகாட்டி பேசுவதுமாக இருக்க, சுகந்திக்கு வேதனையாக இருந்தது..

ஏதோ அவளிடம் குறை இருப்பதை போல பேச, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் போய் தன்னை டெஸ்ட் பண்ணி பார்த்தாள் ஒருவேளை தன்னிடம் எதுவும் குறை இருக்குமோ என்று அஞ்சி....

ஆனால் அவளிடம் எந்த குறையும் இல்லை.. அவள் தாயாக எல்லா தகுதியும் இருக்கு என்று டாக்டர் சொல்லிவிட, அவள் கணவனையும் இந்த மாதிரி டெஸ்ட் பண்ணி பார்க்க அழைத்து வர சொன்னார்....

ஆனால் ஏனோ அவள் கணவனிடம் போய் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை... அவனிடமே குறை இருந்தாலும் இருந்துட்டு போகட்டும்.. எனக்கு குழந்தையை விட என் கணவன்தான் முக்கியம் என்று அவனிடம் எதுவும் சொல்லாமல் விட்டு விட்டாள் சுகந்தி...

ஆனால் இது அவள் மாமியார்க்கு தெரியாதே... எப்பவும் போல அவர் குத்தல் பேச்சு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது...

“பொறுத்தார் பூமி ஆள்வார்... “ என்று தன் அன்னை அப்பப்ப சொல்லி கொடுத்த பாடத்தை வலுகட்டாயமாக மனதில் கொண்டு வந்து பல்லை கடித்து கொண்டு அவர் சொல்வதை எல்லாம் காதில் வாங்காமல் விட்டு விடுவாள்..

ஒருநாள் அவர்கள் பக்கம் விருந்தினர் ஒருவர் வந்திருக்க, அவர் வேற சுகந்தியை பார்த்து இன்னும் குழந்தை இல்லையா என்று கேட்க போக, உடனே அவர் சென்றதும் அவள் மாமியார் தன் பாட்டை ஆரம்பித்து விட்டார்..

இந்த முறை ஜாடை பேச்சு இல்லாமல் நேராகவே அவளிடம் சொல்ல, அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் பொங்கிவிட்டாள் சுகந்தி....

“என்னிடம் எந்த குறையும் இல்ல... நான் டெஸ்ட் பண்ணி பார்த்துட்டேன்... வேணும்னா உங்க பையனை கூட்டிகிட்டு போய் டெஸ்ட் பண்ணுங்க.. அவர்கிட்டதான் ஏதும் குறை இருக்கும்..

சும்மா என்னைய மட்டுமே குறை சொல்லாதிங்க... “ என்று கோபமாக சொல்ல, அப்பொழு பார்த்து அவள் கணவன் ஏதோ ஒரு வேலையாக வீட்டிற்கு சீக்கிரம் திரும்பி இருந்தான்...

திரும்பியவன் சுகந்தியின் பேச்சையும் அதுவும் அவள் தன் தாயை எதிர்த்து சண்டை போடுவதையும் கண்டு அதிர்ந்து நின்றான்...

அவனுக்கு வீட்டில் நடப்பது தெரியாது...சுகந்தி அவனிடம் எதுவும் சொல்லி இருக்கவில்லை...

அதனால் தன் மனைவிதான் தன் அன்னையை மதிக்கவில்லை.. இப்படி எதிர்த்து பேசுகிறாள் என்று புரிந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தவன் கோபத்தில் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்து விட்டான்....

அவன் உள்ளே வந்ததை கண்டு திகைத்து நின்ற சுகந்தி தன்னிடம் என்ன நடந்தது என்று கேட்காமல் அவன் உடனே தன் கன்னத்தில் அறையவும் அதிர்ந்து போனாள்....

இதுவரை தன்னை கை நீட்டிடாத தன் கணவன் இன்று அடித்து விட்டானே.. அதுவும் தன் மாமியார் முன்னால் அடித்திருக்க அது அவளுக்கு பெரும் அவமானமாக போயிற்று...

தங்கள் அறையில் கூப்பிட்டு அவளை கண்டித்திருக்கலாம். அதை விட்டு அடுத்தவர் முன்னால் அடி வாங்கவும் அவளுக்கு அவமானமாக போய் விட, அதைவிட பிறந்த வீட்டில் இது மாதிரி யாரும் அவளை கண்டித்தது இல்லை...

அப்படி இருக்க திடீர் என்று கணவன் அடிக்கவும் உடனே கோபம் தலைக்கேற, விறுவிறுவென்று தங்கள் அறைக்கு வந்தவள் பெட்டியை எடுத்து அதில் தன் உடைகள் சிலவற்றை எடுத்து வைத்து கொண்டு தன் பிறந்த வீட்டிற்கு கிளம்பி விட்டாள்...

சோபாவில் அமர்ந்திருந்த அவள் கணவனோ அவளை தடுக்காமல் வெறித்து பார்க்க, அதை கண்டவள் இன்னும் வீம்புடன் அழுது கொண்டே வெளியேறி விட்டாள்....

அருகில் நின்று இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அவள் மாமியார்க்கு வயிறு குளிர்ந்து போனது.. எப்படியோ தான் நினைச்சது நடந்து விட்டது என்று உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டார்....

பெட்டியுடன் தன் மகள் அழுது கொண்டே வீட்டிற்கு வரவும் சுகந்தியின் பெற்றோர் பயந்து விட்டனர்....

என்னாச்சு என்று விசாரிக்க அவள் எதுவும் சொல்லாமல் தன் அறைக்கு சென்று படுக்கையில் படுத்து குலுங்கி அழ ஆரம்பித்தாள்....

அதை கண்ட சுகந்தியின் தந்தை உடனே தன் மாப்பிள்ளையை போனில் அழைக்க, அவனோ அவர் போனை எடுக்காமல் கட் பண்ணினான்...

உடனே கிளம்பி சம்பந்தி வீட்டிற்கு சென்றார்... அங்கு அவர் மாப்பிள்ளை வெளியில் சென்றிருப்பதாக சொல்லி அவர் மகளின் மேல் குற்ற பத்திரிக்கை வாசித்தார் சுகந்தி மாமியார்....

பெண்ணை பெத்த தகப்பனாக அவரும் எதுவும் சொல்லாமல் அவர் சம்பந்தி அம்மா சொல்லியதை எல்லாம் கேட்டு கொண்டிருக்க, கடைசியாக அவள் தங்கள் வீட்டு வாரிசை பெத்து கொடுக்க லாயக்கில்லாதவள் .. “ என்ற குறையை சொல்ல அவருக்கு வேதனையாகி போய் விட்டது...

பல்லை கடித்து கொண்டு எதுவும் பேசாமல் எழுந்து வந்து விட்டார்...

என்ன இருந்தாலும் தன் மகள் வாழுகிற வாழப்போகிற வீடு இது...

நாம் ஆத்திரத்தில் எதுவும் வார்த்தையை விட்டு விடக்கூடாது என்று பொறுத்து கொண்டு அவர் சொல்லிய கதையெல்லாம் கேட்டு முடித்து எழுந்து வந்து விட்டார்....

அடுத்த நாள் தன் மாப்பிள்ளை வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்று அவனை சந்திக்க முயல அவனோ வந்திருப்பவர் யாரென்று தெரிந்து கொண்டு சந்திக்க மறுத்து விட்டான்....

அவரை யாரென்று தெரியாது என்று சொல்லி விட, சுகந்தியின் அப்பாவுக்குத் தான் இன்னும் வேதனையாகி போனது....

தன் மகளிடம் வந்து கேட்டாள் அவள் எதுவும் சொல்லாமல் கண்ணீர் வடித்தாள்... அவரும் கொஞ்ச நாள் முயன்று பார்த்து பின் விதிப்படி நடக்கறது நடக்கட்டும் என்று விட்டு விட்டார்..

இந்த நிலையில் சென்றவாரம் அவள் கணவனிடம் இருந்து டைவர்ஸ் நோட்டிஸ் வந்திருந்தது.. அதை கண்டதும் அந்த வீட்டில் அனைவருமே அதிர்ந்து போயினர்...

விவாகரத்து போகும் அளவுக்கு என்ன பிரச்சனை ஆனது என்று தெரியாமல் பெரியவர்கள் இருவரும் முழிக்க சுகந்தியுமே அதிர்ந்து விட்டாள்....

என்னதான் தன் தாயிடம் தனக்காக பரிந்து பேசவிட்டாலும் தங்கள் அறையில் இருக்கும் பொழுது அவளிடம் அன்பாகத்தான் நடந்து கொண்டான் அவள் கணவன்...

அவளை கொஞ்சி அன்பால் குளிப்பாட்டினான்தான்.. இந்த மூன்று வருடங்களில் ஒரு நாளும் அவளை பிரிந்து இருந்ததில்லை...

சுகந்தி தன் தாய் வீட்டுக்கு வந்தாலும் மாலையே வந்து அவளை அழைத்து சென்று விடுவான்...

அப்படிபட்ட அவன் அனபை கண்டுதான் அவளும் அந்த திருமணத்தை முழுமையாக ஏற்று கொண்டு தன் மாமியார் கொடுமை படுத்தினாலும் தன் கணவனுக்காக அவன் அன்பிற்காக பொறுத்து கொண்டாள்.... ..

ஆனால் இன்று அவனே தன்னை அவனிடமிருந்து விலக்க நினைத்து விவாகரத்து நோட்டிஸ் விட்டிருக்க சுகந்தி இடிந்து போய்விட்டாள்....

ஒருவேளை தான் அவசரபட்டு விட்டோமோ?? புகுந்த வீட்டை விட்டு வந்திருக்க கூடாதோ?? என்று யோசிக்க, ஆனாலும் தனக்காக அவன் ஒரு வார்த்தை கூட பேச வில்லையே..

அதோடு என்ன நடந்தது என்று கேக்காமல் தன்னை அறைந்து விட்டானே.. அப்ப என் மேல் அவனுக்கு பாசம் இல்லை ....

வெறும் உடல் சுகத்துக்காகத்தான் என்னுடன் வாழ்ந்தானா?? “ என்ற ரேஞ்சில் அவள் ஈகோ தடுக்க, அவளுக்குமே எது சரி எது தவறு என்று புரியாமல் குழம்பி தவித்து கொண்டிருக்கிறாள்...

ஆனால் எது எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் அவள் கணவனை முழுமையாக பிரிய வேண்டும் என்பது அவள் மனதை கசக்கியது....

தன் மனதில் இருந்ததையெல்லாம் மதுவிடம் கொட்டி தீர்த்தாள் சுகந்தி.....

மதுவுக்கும் வேதனையாக இருந்தது...

கணவனை பிரிந்து இருப்பது என்பது எவ்வளவு வேதனையானது என்று அவளுக்கும் தெரியும் தான்.. அவளும் அதே வேதனையைத்தானே கடந்த ஒரு வாரமாக அனுபவித்து வருகிறாள்....

“தன் பிரச்சனை வேறு.... இங்கு யாரும் தன்னை விலக்கி வைக்க வில்லை..அவளாகத்தான் பிரிந்து இருக்கிறாள் தன் கணவனுக்காக... “ என்று யோசித்தவள் அவசரமாக தன் கவலையை பின்னுக்கு தள்ளி சுகந்திக்கு ஆறுதல் சொன்னாள்...

“ஹ்ம்ம்ம் உனக்கே தெரியும் தான மது குட்டி.. நான் என் மாமாவை எவ்வளவு லவ் பண்றேனு.. .அவரும் அப்படித்தான் என் மேல உயிரையே வச்சிருந்தார்... அப்படிதான் சொல்லி கொண்டார்...

ஆனால் பார் அதுக்கு அர்த்தமே இல்லாத மாதிரி ஒரு சின்ன சண்டைக்கு இப்படி டைவர்ஸ் நோட்டிஸ் விட்டிருக்கார்.... “ என்று மதுவை கட்டி கொண்டு மீண்டும் ஒப்பாரி வைத்தாள் சுகந்தி....

மது ஏதேதோ சமாதானம் சொல்லி அவளை தேற்ற, சுகந்தியும் ஓரளவுக்கு அழுது முடித்திருந்தாள்...

“சாரி டா மதுகுட்டி... ரொம்ப நாள் கழிச்சு வந்த உன்கிட்ட போய் நான் பாட்டுக்கு என் பிரச்சனையை கொட்டி கிட்டிருக்கேன்... எனக்கு அறிவே இல்லை... இரு நான் போய் முகம் கழுவிட்டு வர்ரேன்.... “ என்று எழுந்து குளியலறைக்குள் சென்றாள்....

மது சுகந்தியின் அலைபேசியை எடுத்து ஏதோ நோண்டி கொண்டிருந்தாள்.. பின் சுகந்தி வரவும் அதை அவசரமாக வைத்து விட்டு அவளை பார்த்து புன்னகைத்தாள்...

சுகந்தியும் வரவழைத்த புன்னகையோடு வந்து மதுவின் அருகில் அமர்ந்தவள் மதுவின் கையை பிடித்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டு

“நீ எப்படிடா இருக்க?? உன் மாமியார், மாப்பிள்ளை எல்லாம் நல்லா பார்த்துக்கிறாங்களா?? “ என்றாள் அக்கறையாக...

அதை கேட்டதும் மதுவுக்கும் கண்ணை கரித்தது.. ஆனால் உடனே தன்னை கட்டு படுத்த் கொண்டவள்

“ஹ்ம்ம்ம் எல்லாரும் என்னை சூப்பரா பார்த்துக்கறாங்க கா... “ என்று சமாளித்தாள் சிரித்தவாறு...

மது எப்பவும் தன் மனதில் இருப்பதை யாரிடமும் சொல்லி பழகாதவள்.. ஏன் பெற்றோரிடமும் கூட எதுவும் சொல்ல மாட்டாள்..

எல்லாத்தையும் தன் மனதிற்குள் போட்டு பூட்டி கொள்வாள்.. அதே மாதிரி தன் கணவனை பற்றியோ அவன் அவள் கழுத்தை நெறித்ததும் அவளை சுடு சொற்களால் சுட்டது என எதையும் யாரிடமும் மூச்சு விடாமல் தன் மனதுக்குள்ளே போட்டு பூட்டி வைத்து கொண்டாள்....

சிறிது நேரம் சுகந்தியிடம் பேசி கொண்டிருந்து விட்டு மது தன் வீட்டிற்கு கிளம்பினாள்...

“எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் அக்கா... உங்க மாமா அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டுட மாட்டார்.. இது ஏதோ அவசரத்துல எடுத்த முடிவா இருக்கும்.. நீங்க மனசை தளரவிடாதிங்க...

உங்களை புரிஞ்சுகிட்டு சீக்கிரம் உங்களை ஏத்துக்குவார்...” என்று மீண்டும் அவளை கட்டி அணைத்து அவளுக்கு கன்னத்தில் முத்தமிட்டு கிளம்பி சென்றாள் மது...

சுகந்திக்கும் கொஞ்சம் மனம் பாரம் விலகியதை போல இருந்தது ....

மாலை ஹாலில் அமர்ந்து மது அன்று துவைத்திருந்த துணிகளை மடித்து கொண்டிருக்க, வாயில் கதவை திறந்து கொண்டு சுகந்தி வேகமாக உள்ளே வந்தாள்...

அவளை கண்டதும் மது ஆச்சர்யத்தில் விழி விரித்தாள்.. காலையில் விட்டத்தை வெறித்து பார்த்து அழுது கொண்டிருந்த அந்த சுகந்தியா இந்த சுகந்தி என்று...

நல்ல ஒரு சேலை கட்டி தலை நிறைய பூ வைத்து முகத்தில் பூரிப்பு மற்றும் சிரிப்புடன் உள்ளே வந்தவள் மதுவை கையை பிடித்து எழுப்பி அவள் கைகளை பிடித்து கொண்டு தட்டாமலை சுத்தினாள்....

மதுவுக்கு இன்னும் ஆச்சர்யமாகி போனது... அவளும் இணைந்து சுத்திவிட்டு நிற்க, மூச்சு வாங்கிய பின்

“என்னாச்சு கா?? ஏன் இவ்வளவு சந்தோசமா இருக்கீங்க?? “ என்றாள் இன்னும் ஆச்சர்யமாக

“ஹ்ம்ம்ம்ம் தேங்க் யூ சோ மச்... மது குட்டி... “ என்று அவளை இறுக்கி கட்டி கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் சுகந்தி....

மதுவும் சிரித்து கொண்டே மீண்டும் என்னாச்சு என்று கேட்க

“போடி.. கள்ளி.. எல்லாத்தையும் பண்ணிட்டு தெரியாத மாதிரி கேட்கறதை பார்...” என்று மதுவின் குண்டு கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி ஆட்டினாள்...

“ப்ளீஸ் கா.. என்னாச்சுனு சொல்லுங்களேன்... எனக்கு ஒன்னும் புரியலை.. “ என்றாள் வேண்டும் என்றே சுகந்தியை சீண்ட எண்ணி .....

“ஹ்ம்ம்.. நீ வர வர பேட் கேர்ள் ஆகிட்ட... என் வாயால சொல்ல வைக்கணும்னு பார்க்கிற.. திருடி.... “ என்று சிரித்தவாறு

“என் மாமா... என்னை தேடி வந்திட்டார் மது குட்டி...

என்னை மன்னிச்சு என் புகுந்த வீட்டுக்கு கூட்டிகிட்டு போக வந்திட்டார்.. அதோட அவர் அடிச்சதுக்கும் என் கிட்ட சாரி கேட்டுட்டார்....

நான் இல்லாம என்னை பிரிஞ்சு அவருக்கும் கஷ்டமா இருந்ததாம்... “ என்றவள் சுற்றிலும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டு மதுவின் காதருகில் வந்து

நீண்ட நாள் தன்னை பிரிந்திருந்த அவள் கணவன் அவளை கண்டதும் அவளை இறுக்கி அணைத்ததையும் அவளுக்கு முத்தமிட்டதையும், அவன் பேசிய, கொஞ்சிய காதல் மொழிகளையும் மதுவிடம் வழக்கம் போல அப்படியே கொட்ட மதுவுக்குத் தான் தர்ம சங்கடமாக இருந்தது....

அவள் கன்னம் வெக்கத்தில் சிவந்தது...உடனே கஷ்டபட்டு தன்னை வெளிகாட்டாமல் மறைத்து கொண்டாள் மது...

தன் கணவனை பற்றி பெருமையாக சொல்லி முடித்தவள்

“இதெல்லாம் உன்னால தான் மது குட்டி... நான் தொலைக்க இருந்த என் வாழ்க்கையை எனக்கு மீட்டு குடுத்துட்ட...

நான் உனக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியலை... எல்லாத்துக்கும் காரணம் நீ என் மாமாவுக்கு அனுப்பின மெசேஜ் தான்....

எனக்கு இது தெரியாம போய்டுச்சு... ஒரு இரண்டு வரி மெசேஜ்ல இருண்டு போக இருந்த என் வாழ்க்கையை வசந்தமாக்கிட்டியே மது குட்டி....

ஒரு வேளை உன் மாப்பிள்ளையோட காத்து உனக்கும் அடிச்சு நீயும் கொஞ்சம் புத்திசாலி ஆகிட்ட போல..” என்ரு குறும்பாக சிரித்தாள் சுகந்தி....

அவளை அப்படி பார்க்கவே மதுவுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது...

“ஹ்ம்ம்ம் எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே இருங்க சுகந்தி கா... “ என்றாள் மதுவும் சிரித்தவறு..

“ஹ்ம்ம் கண்டிப்பா டா... வாழ்க்கையை பத்தி நல்லா புரிஞ்சுகிட்டேன் இந்த கொஞ்ச நாள் ல... சரி டா....மாமா காத்துகிட்டிருப்பார்....

என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு அப்புறம் சினிமாவுக்கு கூட்டிட்டு போறதா சொல்லியிருக்கார்.. “ என்றவள் கன்னம் சிவக்க மீண்டும் ஒரு முறை மதுவுக்கு நன்றி சொல்லி அவளை கட்டி அணைத்து முத்தமிட்டு பறந்து சென்றாள்.....

மதுவுக்கும் ரொம்ப சந்தோசமாக இருந்தது...

காலையில் தன் கணவனை திட்டி கொண்டிருந்தவள் மாலையில் அவனை கண்டதும் நொடியில் எல்லாம் மறந்து விட்டு, தன் ஈகோ வை விட்டு அவன் பின்னால் கிளம்பியதும் அதோடு அவனை கண்டதும் சுகந்தியின் முகத்தில் வந்திருந்த உற்சாகத்தையும் கண்டு விடை தெரியாத சில கேள்விகளுக்கு பதில் கிடைத்ததை போல இருந்தது மதுவுக்கு....

அவளும் திருமண வாழ்க்கை என்ற புத்தகத்தில் இருந்து சில பாடங்களை கற்று கொண்டாள்...

அப்படி மது என்ன பண்ணினானு பார்க்கறீங்களா??

காலையில் மது சுகந்தியின் அறையில் அவளிடம் பேசி கொண்டிருக்க, சுகந்தி எழுந்து முகம் கழுவ என்று குளியல் அறைக்குள் சென்றாள்...

அப்பொழுது அவசரமாக எதையோ யோசித்தவள் சுகந்தியின் அலைபேசியை எடுத்து அவள் கணவனுக்கு சுகந்தி அனுப்புவதாக ஒரு மெசேஜை அனுப்பினாள் மது...

" Sorry for everything. உங்களை விட்டு என்னால பிரிந்து இருக்க முடியல .. Miss you.. Love you mama.." என்று அனுப்பி விட்டு சுகந்தி வெளியில் வரவும் அவசரமாக அவள் அலைபேசியை வைத்துவிட்டாள்...

அதை கண்டதும் சுகந்தியின் கணவனுக்கு தலைகால் புரியவில்லை...

அவனுக்குமே தன் மனைவியை பிரிந்து இத்தனை நாட்கள் கஷ்டமாகத்தான் இருந்தது...

அன்று அவன் வீட்டிற்கு வந்த பொழுது சுகந்தி கோபத்தில் தன்னை குறை உள்ளவன் என்று சொல்லவும் அவனுக்கு கோபமாகி தான் அன்று அறைந்து விட்டான்...

எந்த ஒரு ஆண்மகனுக்கும் அவன் தகப்பனாக தகுதி இல்லை என்றால் அது அவன் ஆண்மைக்கே பெருத்த அவமானமாகும் என்ற விதத்தில் புரிந்து கொண்டுதான் அன்று அவளை அடித்தது....

அதற்கு பிறகு தான் அவன் தவறு புரிந்தது...

பின் இணையத்தில் ஆராய, குழந்தை இன்மைக்கு ஆண்களும் காரணமாக இருக்கலாம் என்று தெரிந்து கொண்டான்...

அன்று சுகந்தி சொன்ன மாதிரி அவளுக்கு குறை இல்லை என்றால் தன்னிடம் தான் குறை இருக்குமோ என்ற விதத்தில் தனக்குள்ளயே எதையோ நினைத்து கொண்டு அப்படி இருந்தால் அது அவளுக்குதான் கஷ்டமாகும்..

குழந்தை இல்லை என்றால், எல்லோரும் பெண்களைத் தானே குறை சொல்வார்கள் என்று யோசித்தான்...

அதற்கு தீர்வாக அவள் வேற ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ளட்டும் " என்று தவறாக யோசித்துதான் அவளுக்கு விவாகரத்து நோட்டிஷ் அனுப்பினான் மனமே இல்லாமல்...

அவள் தந்தை பல முறை அவனை சந்திக்க முயன்ற பொழுது, அவரை நேரில் பார்த்தால் தன் மனசு மாறிவிடும் என்று அஞ்சியே அவரை பார்க்க மறுத்து விட்டான்...

வீட்டிலும் அவன் அம்மா சுகந்தியை வருத்துவது தெரிந்தது தான்... ஆனால் இதுவரை தன் அன்னையை பற்றி அவள் குறை எதுவும் அவனிடம் சொல்லியதில்லை...

அதனாலயே சுகந்தியை மிகவும் நேசித்தான்... அவன் பாசத்தையெல்லாம் அவள் மீது பொழிந்தான்... கடைசியில் இப்படி ஒரு பிரச்சனை வந்து நிக்க, என்ன செய்வது என்று யோசித்தவன்

“சரி... அவளுக்காவது நல்ல ஒரு வாழ்க்கை அமையட்டும்... என்னை மறந்து வேற ஒருவனை மணந்து கொள்ளட்டும்.. “ என்று எண்ணிதான் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி இருந்தான்......

ஆனால் ஏனோ அவளை மறப்பது என்பது அவ்வளவு எளிதாக இல்லை அவனுக்கு.....

எப்பவும் அவன் காலை சுத்தி கொண்டிருப்பவள் இன்று இல்லை எனும்பொழுது அவனுக்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது...

ஆனாலும் தன் மனதை கல்லாக்கி கொண்டு வளைய வந்தான்...

இந்த நிலையில் சுகந்தி மாமியாருக்கோ தன் மருமகள் வீட்டை விட்டு போனதும் முதல் இரண்டு நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தது..தன் மகனுக்கு பிடித்ததையெல்லாம் செஞ்சு கொடுத்தார்....

ஆனால் அதற்கு பிறகு வீட்டு வேலை எல்லாம் அவரே செய்ய ஆரம்பிக்கும் பொழுது தான் தன் மருமகளின் அருமை புரிந்தது...

முன்பு வீட்டு வேலைக்கு, துணி துவைக்க, வீட்டை சுத்தம் பண்ண என்று ஒவ்வொன்றுக்கும் ஆட்களை வைத்திருந்தார்..

மகனுக்கு திருமணம் முடிந்து மருமகள் வந்தபிறகு இலவச வேலைக்காரி வந்தததில் மற்ற வேலைக்காரர்களையெலலம் நிறுத்தி விட்டார்...

சுகந்தியும் எதையும் வெளிகாட்டி கொள்ளாமல் அத்தனை வேலைகளையும் அவளேதான் செய்தாள்... அதுவும் தன் மாமனார் மாமியார் துணிகளை துவைப்பது முதற்கொண்டு முகம் சுழிக்காமல் செய்தாள்...

வீட்டில் வாசிங்மெசின் இருந்தும் அதை பயன்படுத்த விடாமல் கையிலயே துவைக்க வைத்தார்....

ஆனால் இன்று அவள் வீட்டை விட்டு போய் விடவும் அத்தனை வேலைகளும் அவர் தலையில் விழுந்தது...

திடீரென்று வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்கவும் இல்லை... ஒரு வாரம் எப்படியோ பல்லை கடித்து ஓட்டியவர் அடுத்த நாள் முடியாமல காய்ச்சல் வந்து படுத்து விட்டார்....

மற்றவர்களுக்கு சாப்பாடு எப்படியோ ஹோட்டலில் ஏற்பாடு செய்து சமாளித்து விட்டனர்..

ஆனாலும் அவர் காய்ச்சலுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்து கொள்ளவில்லை.. சென்னையிலயே இருந்த தன் மகளை வர சொல்ல அவளோ வந்து இரண்டு நாட்கள் கூட தங்க வில்லை..

என் மாமியாரை பார்க்கணும் என் புருசனை பார்க்கணும்.. என்று புலம்பி கொண்டே வாயில் வைக்க முடியாத அந்த கஞ்சியை செய்து கொடுக்க, அப்பொழுது தான் சுகந்தியை நினைத்து கொண்டார்...

முன்பு ஒருமுறை இந்த மாதிரி அவர் படுத்த பொழுது தன் மருமகள் அவர் பக்கத்தில் இருந்து அக்கறையாக அவரை பார்த்து கொண்டதும் அவருக்கு மட்டும் வாய்க்கு ருசியாக தனியாக சமைச்சு கொடுத்ததும் நினைவு வந்தது...

அதோடு தன் மகனும் இப்பொழுதெல்லாம் கலை இழந்து மனைவியை பிரிந்து வருந்துவதும் புரிய அப்பொழுது தான் தன் தவறு புரிந்தது அவருக்கு.... 



ன்னதான் மகளுக்காக பார்த்து பார்த்து செஞ்சாலும் அவள் எப்பவும் அடுத்த வீட்டிற்கு சொந்தமானவள்...

தன் வீட்டிற்கு வந்திருக்கும் மருமகள் தான் தங்களுக்காக எதையும் செய்வாள்... உரிமையோட அவளிடம் கேட்கலாம் என்று புத்தியில் உறைக்க, மெதுவாக தன் மருமகளை சென்று அழைத்து வர சொல்லி தன் மகனிடம் நச்சரிக்க ஆரம்பித்தார்....

ஆனால் அவனோ மறுத்துவிட்டான்..

“தன் தாய் படுக்கவும் இப்ப போய் அவளை அழைத்தால் அது தங்கள் சுயநலத்திற்காக போய் அவளை அழைத்து வருவதாக ஆகிவிடும்.... அவளாவது இனிமேல் நிம்மதியாக சந்தோசமாக இருக்கட்டும் “ என்று மறுத்துவிட்டன்...

இந்த நிலையில்தான் சுகந்தியிடம் இருந்து காலையில் வந்த செய்தியை பார்த்ததும் அவன் ஈகோ, அவன் விட்டு கொடுத்தல் எல்லாம் பறந்து விட்டது.

எப்படா ஆபிஸ் முடியும் என்று காத்திருந்தவன் உடனே சுகந்தியின் வீட்டிற்கு பறந்து வந்து விட்டான்....

திடீரென்று வந்தவனை கண்டதும் சுகந்தியும் தன்னை மறந்து ஓடி சென்று அவனை இறுக்கி கட்டி கொள்ள, அவனுக்குமே நிம்மதியாக இருந்தது...

அதன் பிறகு அவன் தன் மாமனாரிடம் மன்னிப்பு கேட்டு சுகந்தியை அழைத்து செல்வதாக கூற அவர்களுக்கும் சந்தோசமாகி விட்டது...

சுகந்தியும் உடனே கிளம்பி விட்டாள்....

எதேச்சையாக தன் அலைபேசியை எடுத்தவள் அதில் அவள் அனுப்பியதாக சென்றிருந்த அந்த செய்தியை கண்டதும் உடனே மதுதான் இதை அனுப்பி இருப்பாள் என்று புரிந்து கொண்டு ஓடி வந்து மது க்கு நன்றி சொல்லி அவளை கொஞ்சி விட்டு சென்றாள்...

அதை நினைத்து சிரித்து கொண்டாள் மது....

“எப்படியோ தான் அனுப்பிய ஒரு மெசேஜ் அவர்கள் இருவரின் ஈகோ வை விட்டு வெளி வர உதவி செய்திருக்கு... முருகா... இனிமேலாவது அவர்கள் நன்றாக இருக்கட்டும்... “ என்று மனதுக்குள் வேண்டி கொண்டாள் மதுவந்தினி..

மறுநாள் காலை வாக்கிங் சென்று விட்டு திரும்பி வந்த சண்முகம் தன் மகளை கண்டு திகைத்து நின்றார்...

காலையிலயே குளித்து ரெடியாகி அவள் பெட்டியை எடுத்து வரவேற்பறையில் வைத்து பின் பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்தாள் மது....

இந்த ஒரு வாரமாக இருந்த ஏதோ ஒரு சோகம் மறைந்து அவள் முகத்தில் தெளிவும் கொஞ்சம் சந்தோசமும் திரும்பி இருந்ததை போல இருந்தது....

அவளை கண்டு ரசித்து கொண்டே உள்ளே வந்தவர்,

“என்னடா மது கண்ணா?? ஒரே பரபரப்பா இருக்க. எங்க கிளம்பிட்ட காலையிலயே ?? “ என்றார்....

அவளும் தன் தந்தையை கண்டு புன்னகைத்து

“என் வீட்டுக்குப் பா.... “ என்றாள்...

அவள் என் வீடு என்று சொன்னதும் சண்முகத்திற்கு நிம்மதியாக இருந்தது....

“ஏன்டா.. அதுக்குள்ள கிளம்பிட்ட.. இன்னும் ஒரு இரண்டு நாள் இருக்கலாம் இல்ல.... “ என்றார் ஒரு பார்மாலிட்டிக்காக....

“இல்லப்பா.. அத்தை அங்க தனியா இருக்காங்க... அதோட எனக்கும் க்ளாஸ் நாளையில் இருந்து ஸ்டார்ட் ஆகுது... இங்க இருந்து போவது ரொம்ப கஷ்டமா இருக்கும்... அதான் அங்க போய்டலாம்னு கிளம்பிட்டேன்...” என்று சிரித்தாள்..

தன் மகளின் முகத்தில் வந்திருந்த புன்னகையை கண்டதும் இன்னும் நிம்மதியாக இருந்தது அந்த தந்தைக்கு...

“சரிடா... நீ ரெடியா இரு.. சிங்கப்பூர் போனப்ப, நம்ம வேல் கடையில் இருந்து ஒரு ஷ்வீட் வாங்கிட்டு போயிருந்தேன்.. அது ரொம்ப நலல இருக்குனு விரும்பி சாப்பிட்டா அகிலா குட்டி...

நான் போய் அத வாங்கிட்டு வர்ரேன்.. அவளுக்கு கொண்டு போய் கொடு.. “ என்றவாறு செருப்பை மாட்டி கொண்டு வேகமாக வெளியில் சென்றார்....

மது மீண்டும் தன் அறைக்குள் வந்து இன்னும் சில ஆடைகளை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்...

வெளியில் சென்றிருந்த அவள் தந்தை யாருடனோ பேசி கொண்டே உள்ளே வருவது கேட்கவும் தன் அறையில் இருந்து வெளியில் வந்தாள் மது...

தன் தந்தை உடன் உள்ளே வந்தவனை கண்டதும் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள்....

அவர் உடன் அவரை குள்ளமாக்கி கொண்டு அருகில் நின்றிருந்தான் அவள் கணவன் நிகிலன்...

அவனை கண்டதும் பழசெல்லாம் மறந்திருக்க, ஓடி சென்று அவனை கட்டி கொள்ள துடித்தன அவள் கரங்களும் கால்களும்...

அவள் பார்வை ஆசையோடு அவன் மீது படிய அதே நேரம் அவனும் இவளிடம் திரும்ப , அவனுமே ஒரு நொடி தடுமாறித்தான் போனான் இவளை கண்டு...

ஆனால் அடுத்த நொடியே தன் பார்வையை மாற்றி கொண்டான்.... மதுவுக்கும் அவனின் அந்த ஒரு நொடி பார்வையே போதுமானதாக இருந்தது.... அவள் மனம் துள்ளி குதித்தது...

மதுவை கண்ட சண்முகம்

“என்ன மா.. உன்னை கூட்டி போக மாப்பிள்ளை வருவார் னு சொல்லவே இல்லை... நல்ல பொண்ணு மா... “ என்று சிரித்தார் சண்முகம்...

அவன் வந்தது அவளுக்குமே ஆச்சர்யம்தான்... அவன் வருவான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை....ஒரு வாரம் கழித்து தனக்கு காட்சி அளித்த தன் கணவனையே கண் குளிர பார்த்து ரசித்தாள்...

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு அவன் அருகில் வந்தவள்

“வாங்க....” என்று தலையை குனிந்தவாறு அழைத்து விட்டு சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்....

தன் மகள் இங்கு வந்து ஒரு வாரம் கழித்து மாப்பிள்ளை வந்திருக்கிற சந்தோசத்தில் சாரதாவும் சமையல் அறையில் இருந்து வேகமாக வெளி வந்து அவனை வரவேற்று உபசரிக்க அவனும் இலேசாக புன்னகைத்தவாறு சோபாவில் அமர்ந்தான்...

“நீங்க வருவீங்கனு தான் மது நேற்று நைட் புல்லா தூங்கவே இல்லை போல மாப்பிள்ளை.. காலையிலயே எழுந்து முதல் ஆளா கிளம்பிட்டா... “

என்று சாரதா புகழ, அவனுமே பதில் ஒன்றும் சொல்லாமல் மெல்ல புன்னகைத்து மற்ற விசயங்களை சிறிது நேரம் பேசி விட்டு பின் காலை உணவை முடித்து கிளம்பினர்...

சண்முகம் முன்பே மதுவின் பெட்டியை கொண்டு போய் காரில் வைத்திருக்க, மதுவும் தன் பெற்றோர்களை கட்டி தழுவி விடை பெற்றாள்...

கார் வரை வந்தவர்கள் கார் கிளம்பவும் கை அசைத்து விடை கொடுத்து தன் மகளை அனுப்பி வைத்தனர் நிம்மதி மற்றும் சந்தோசத்துடன்....

திருமணம் ஆகி இத்தனை நாளில் ஒரு நாள் கூட வந்து தங்கியிருக்காத தங்கள் மகள் இங்கு வந்து ஒரு வாரம் தங்கி விடவும் இருவருக்குமே கவலையாக இருந்தது...

என்னதான் செல்லமாக வளர்த்தாலும், மகள் தங்களுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு அவள் புகுந்த வீட்டில் இருப்பது தான் பொண்ணை பெத்தவர்களுக்கு சந்தோசமும் நிம்மதியும்...

அப்படி இருக்க, அவள் வந்து இங்கு தங்கிவிட, மாப்பிள்ளையும் கண்டுக்காமல் இருக்க அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது...

சம்மந்தி தினமும் அவளை அழைத்து பேசுவார் தான்... ஆனாலும் உடையவன் எதுவும் கண்டு கொள்ள வில்லையே ?? இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனை என்று புரிந்தது..

ஆனால் அதை அவளாக சொல்லாமல் தாங்களாக கேட்டு அதற்கு தீர்வு சொல்கிறோம் என்று மேலும் குழப்ப வேண்டாம் .. அவர்கள் பிரச்சனையை அவர்களே தீர்த்து கொள்ளட்டும்.. “என்று தான் அவளை எதுவும் கேட்கவில்லை....

அவளும் வாயை திறந்து எதுவும் சொல்ல வில்லை..

அதுவும் காலையில் அவள் புகுந்த வீடு செல்கிறேன் எனும்பொழுது சம்மந்தி வீட்டில் இருந்து யாரும் வராமல் தன் மகளை தனியாக அனுப்ப கஷ்டமாகத்தான் இருந்தது சண்முகத்திற்கு...

ஆனாலும் அதற்காக ஈகோ பார்த்து கொண்டு பொண்ணை இங்கயே தங்க சொல்வதிலும் அவருக்கு விருப்பமில்லை...

“ அவள் வீடு அது.. அவள் அங்கு போவதற்கு யாரை எதிர் பார்க்க வேண்டும்..” என்று சமாதானம் பண்ணி கொண்டே அமைதியாக இருந்து விட்டார்...

ஆனால் அவர் மாப்பிள்ளையே தன் மனைவியை அழைத்து செல்ல வந்து விடவும் அவருக்கு நெஞ்சில் பால் வார்த்த மாதிரி ஆகிவிட்டது...

“எப்படியோ.. மாப்பிள்ளைக்கும் அவர் பொண்டாட்டி மீது அன்பு இருக்கு தான்.. என்ன கொஞ்சம் முரட்டுத்தனமா பிடிவாதமா வெளில காமிச்சுக்க மாட்டார் போல... எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகி விடும்.. “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டார் சண்முகம்...

காரில் அமர்ந்திருந்த மதுவந்தினிக்கோ இன்னுமே நம்ப முடியவில்லை... தன் கணவனே தன்னை அழைக்க வந்திருப்பதை...

நேற்று மாலை சுகந்தி வந்து விட்டு சென்ற பிறகு அன்று இரவு மது ஏதோ யோசித்து கொண்டிருந்தாள்...

ஏதோ ஒரு வேகத்தில் பெட்டியை தூக்கி கொண்டு தன் பிறந்த வீட்டிற்கு வந்திருந்தாலும் அவளால் இங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை..

தன் பெற்றோர்களுக்காகத்தான் வரவழைத்த புன்னகையுடன் வளைய வந்தது... அவர்களுமே வெளியில் சிரித்தாலும் தன்னை பற்றி கவலை படுவது புரிந்தது...

அதோடு அங்கு தன் கணவன் தன்னை ஏற்று கொள்ளாத போதும் அது தன் வீடு என்று உரிமையுடன் நிம்மதியாக வலம் வந்தவளுக்கு என்னதான் தன் பெற்றோர்கள் அவளை தாங்கினாலும் ஏனோ அவளால் இங்கு ஒட்ட முடியவில்லை..

கடந்த ஒரு வாரமாகவே அவளுக்கு நிம்மதியான தூக்கம் இல்லை....

அவன் மூச்சு காற்றாவது தங்கள் அறையில் சுத்திகொண்டிக்கும் சுகத்தில் உறங்கியவளுக்கு இங்கு கஷ்டமாக இருந்தது....ஏன் என்று ஆராய்ந்தால் மீண்டும் அவளின் காதம் மனம் புரிந்தது....

அந்த காதலால் தான் அவன் தன்னை எத்தனை முறை திட்டியும் கேவலமாக பேசியும் அவனையே சுற்றி வருவது புரிந்தது...

அதற்கு மேல் தாய் விட்டில் அவளால் இருக்க முடியவில்லை.. சுகந்தி செய்த அதே தப்பைத் தானே நானும் செய்திருக்கிறேன்....

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் புகுந்த வீட்டை விட்டு வரக்கூடாது என்று சாரதா திருமணத்திற்கு முன்னே சொல்லிதான் அனுப்பி இருந்தார்...

ஆனால் அன்று இருந்த மன நிலையில் அவளால் அங்கு இருக்க முடியவில்லை.. அதுவும் அவனுக்காகத்தான்.. அவன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக....

இப்பொழுது தான் தன் தவறு புரிய உடனே அவள் புகுந்த வீட்டிற்கு சென்று விடுவது என்று நேற்று இரவே முடிவு செய்து விட்டாள்...

ஆனால் தானாக எப்படி செல்வது?? என்று ஒரு பக்கம் ஈகோ தடுக்க,

“அதுதான் என் வீடு... என் வீட்டிற்கு செல்வதற்கு நான் ஏன் ஒருத்தரை எதிர்பார்க்கணும்..

அதோடு அவர்கள் யாரும் என்னை அனுப்பவில்லையே.. நானாகத்தான் வந்தேன்... நானே போகிறேன்... “ என்று முடிவு செய்து காலையிலயே கிளம்பி விட்டாள்...

“எப்படியோ என் புருசனும் என்னை காணாமல் தவித்திருப்பான்.. அதான் என்னை தேடி வந்து விட்டான்..” என்று மகிழ்ந்தவள் ஓரக் கண்ணால் அவனை பார்க்க, அதிர்ந்து போனாள்...

இந்த ஒரு வாரத்தில் நன்றாக இளைத்திருந்தான்...

முகத்தில் இலேசான தாடியுடன் கண்களில் கீழாக கரு வளையம் வந்திருக்க , அவனை அப்படி பார்க்கவே அவளுக்கு அழுகையாக வந்தது.... எப்படி கம்பீரமாக இருந்தவன் இப்படி ஒரே வாரத்தில் இப்படி ஆகிட்டானே....

“சே.. எல்லாம் என் முட்டாள் தனத்தால்... நான் பாட்டுக்கு என் வீட்டுக்கு வராமல் இருந்திருக்கணும்.. “ என்று தன்னையே நொந்து கொண்டிருந்தாள் மது....

மது தன் பிறந்த வீட்டிற்கு சென்ற முதல் இரண்டு நாட்கள் அவள் நிகிலன் கண்ணிலயே படவில்லை... அவனை அறியாமல் அவன் கண்கள் அவளை தேடின...

ஆனால் அவள் எங்கும் இல்லாமல் போக, அவனுக்கும் தன் ஈகோ வை விட்டு அவளை பற்றி விசாரிக்க ஈகோ தடுத்தது... காலையில் சரியாக சாப்பிட முடியவில்லை...

இரவிலும் தன் அறைக்கு வந்த உடன் திரும்ப திரும்ப அவள் முகமே மனதில் வந்து போனது.... தன் மனதை கட்டுபடுத்த எவ்வளவோ முயன்றாலும் அவனால் முடியவில்லை

“சே... இராட்சசி.... எப்படி என்னை இப்படி மாற்றிவிட்டாள்??.. வேசக்காரி என்று தெரிந்தும் என் மனம் ஏன் அவளிடமே சென்று நிக்குதோ... “ என்று தன்னையே திட்டி கொண்டான்...

படுத்தால் உறக்கம் வராமல், இரவு வெகு நேரம் பால்கனியில் நடந்து கால் வலிக்க ஆரம்பித்த பிறகே படுக்கையில் விழுவான்.....

தன் மகனின் இந்த நிலை சிவகாமியின் கண்ணில் இருந்தும் தப்பவில்லை...

மது சென்ற மூன்றாவது நாள் தன் மகனிடம் அவளை போய் அழைத்து வர சொல்லி மெதுவாக கேட்க அப்பொழுது தான் அவனுக்கே தெரிய வந்தது அவள் வீட்டில் இல்லை என்று...

“யாரை கேட்டு போனா?? “ என்றான் கோபமாக....

“ஆமான்டா... பொண்டாட்டி வீட்டில இருக்கிறாளா இல்லையானு மூனு நாளைக்கு பிறகு தெரிஞ்சுக்கிற நீ.... இந்த லட்சணத்துல உன் கிட்ட அவ சொல்லாம போனதுதான் குறைச்சல்...

நான் தான் அவளை அனுப்பி வச்சேன்.. இப்ப போய் அவளை கூட்டி வர முடியுமா முடியாதா?? “ என்றார் சிவகாமி கோபமாக

“மா... அவளா தான போனா.. அக்கறை இருந்தால் அவளே வரட்டும்.. என்னால எல்லாம் அவ வீட்டுக்கு போக முடியாது... “ என்று எழுந்து கோபமாக சென்று விட்டான்...

சிவகாமியும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த வாறே தன் மருமகளை வர சொல்லி தினமும் அழைக்க, அவளோ நாளை, நாளை என்று ஒரு வாரம் ஓட்டி விட்டாள்...

இன்று காலைதான் சிவகாமிக்கும் இனிமேலும் இதை இப்படியே விடக்கூடாது என தோன்ற தன் மகனை காலையில் பிடித்து கொண்டார்....

“டேய் நிகிலா... நம்ம வீட்டு மகாலட்சுமி அடுத்த வீட்ல இருந்தா அது நமக்குதான் அசிங்கம்... போய் கூட்டிட்டு வாடா... “ என்றார் பாவமாக...

அவன் மாட்டேன் என்று திரும்ப அதே பாட்டை பாட

“டேய்.. பொண்டாட்டி கோவிச்சுகிட்டு போறதெல்லாம் காலம் காலமா நடக்கறதுதான் டா.. அவ்வளவு ஏன்... உங்கப்பா கிட்ட சண்டை போட்டுகிட்டு எத்தனை நாள் நான் என் ஆத்தா வீட்டுக்கு போயிருக்கேன் தெரியுமா ?? ..

கல்யாணம் முடிஞ்சு பம்பாய் போறதுக்கு முன்னாடி ஒரு மூனு மாசம் உன் அப்பா ஊர்லதான் இருந்தோம்.. அந்த மூனு மாசத்துல ஒரு 40 நாளாவது நான் சண்டை போட்டுகிட்டு என் ஆத்தா வீட்டுக்கு போய்டுவேன்...

நான் போன இரண்டாவது நாளே உங்கப்பா வந்து என் கைல கால் ல விழுந்து... “ என்று அவர் இழுக்க, அவரை முறைத்தான் நிகிலன்...

அவனுக்கு தெரியும் தன் தந்தை அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார் என்று..

நிகிலன் அவரின் மறுபதிப்பு... அன்பு இருந்தாலும் பொண்டாட்டி காலை பிடிக்கிற அளவுக்கெல்லாம் தன் தந்தை போயிருக்க மாட்டார் என புரிய தன் அனனை சொல்லும் கதையை நம்பாமல் அவரை பார்த்து முறைத்தான்...

“திருடன்... கண்டுபிடிச்சுட்டானே..” என்று மனதுக்குள் அவனை திட்டியவர்

“ஹீ ஹீ ஹீ... என் புருசன் என் கைல கால் ல விழற அளவுக்கு நான் விடமாட்டேன் னு சொல்ல வந்தேன் டா... இரண்டாவது நாள் என்னை தேடி என் ஆத்தா வீட்டுக்கு வருவார்...

அவர் புல்லட் சத்தம் கேட்டதுமே நான் பொட்டியை எடுத்து ரெடியா வச்சுக்குவேன்.. அவர் வந்த உடனே கிளம்பி அவர் பின்னாடியே வந்திடுவேன்...

என் ஆத்தாவும் என்னை திட்டும் இதெல்லாம் ஒரு பொழப்பானு...

அது திட்டறதுல இனிமேல் என் ஆத்தா வீட்டுக்கே திரும்ப கூடாதுனு வைராக்கியத்தோட தான் போவேன்.. ஆனாலும் உன் சித்தப்பனுங்க, அத்தைங்கனு ஏதாவது ஒரு பிரச்சனை வரும்....

இவரும் அவங்க பக்கம் தான் நிப்பார்.. எனக்காக சுண்டு விரலை கூட அசைக்க மாட்டார்... உடனே மறுபடியும் கோவிச்சுகிட்டு வந்திடுவேன்... " என்று நிறுத்தினார்...

“ஆமா... மும்பை போனதுக்கப்புறம் உங்க ஆத்தா வீடு பக்கமா இருந்திருக்காதே... அப்ப என்ன பண்ணினீங்களாம்?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு....

"ஹ்ம்ம்ம் அங்கயும் போய்தான் ரமணி வீடு இருக்கே... அப்பவும் அடிக்கடி கோவிச்சுகிட்டு ரமணி வீட்டுக்கு போய்டுவேன்.. என்னை பார்த்ததும் என் புருசன் கிட்ட கோவிச்சுகிட்டு வந்திருக்கேனு தெரிஞ்சுடும்....

மூர்த்தி அண்ணாவும் சிரிச்சுகிட்டே போய்டுவார்.. நீ குழந்தையா இருந்தப்போ கூட ஒரு நாள் உன்னை விட்டுட்டு கோவிச்சுகிட்டு ரமணி வீட்டுக்கு போய்ட்டேன்...

நைட் உன்னை வச்சு சமாளிக்க முடியாமல் காலையிலயே என்னை தேடி வந்திட்டார் உங்கப்பா...

அப்புறம் மகிழன் ம் பிறந்து விட, உங்களை பார்த்துக்கவே நேரம் சரியா போச்சு.. இதுல எங்க என் புருசன் கூட சண்டை போடறதாம்...

பாவி மனுசன்... நான் அப்படி அடிக்கடி கோவிச்சுகிட்டு அவரை விட்டு போகவும் தான் அவரும் என் கிட்ட கோவிச்சுகிட்டு ஒரேடியா என்னை விட்டு பிரிஞ்சு போய்ட்டார் போல...

எப்படிதான் என்னை விட்டு போக மனசு வந்ததோ?? " என்று கண் கலங்க நிகிலனுக்குமே கஷ்டமாக இருந்தது..

எழுந்து வந்து தன் அன்னையை அணைத்து கொண்டான்...

அந்த அணைப்பில் என்ன கண்டாரோ.. பழைய ஞாபகம் வந்துவிட இன்னும் குலுங்கி அழுதார் தன் மகனிடம்...

அவரின் இந்த அழுகை அவனுக்கு புதிதாக இருந்தது...

தன் தந்தை இறந்த பிறகு கூட இந்த மாதிரி அவர் மனம் விட்டு அழுதது இல்லை..

தன்னை கல்லாக்கி கொண்டு சின்ன சிறுசுகளாக மூன்று பிள்ளைகள் எப்படி வளர்க்க போகிறோம் என்று தளர்ந்து விடாமல் தனித்து நின்று போராடியவர்....

அப்பொழுது அவனுக்கு விவரம் புரியவில்லை என்றாலும் இப்பொழுது அவர் பட்ட கஷ்டம் அவனுக்கு புரிந்தது...

17 வயதிலயே திருமணம் முடித்து 18 வயதில் குழந்தையை பெத்து கொண்டு அதுக்கு அடுத்தும் 3 குழந்தைகள்... இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கையிலயே தன் தந்தை மறைந்தது....கிட்ட தட்ட அவரும் ஒரு இளம் விதவை மாதிரிதான்...

முப்பது வயதிலயே கணவனை இழந்து மூன்று குழந்தைகளுடன் அதுவும் அகிலா அப்பொழுதுதான் மூன்று வயது... எப்படி எல்லாம் கஷ்ட பட்டிருப்பார் என்று புரிந்தது நிகிலனுக்கு..

ஆனாலும் தன் கவலை எல்லாம் பிள்ளைகளிடம் காட்டியதில்லை....தனக்குள்ளே புதைத்து கொண்டார்...

அவன் வளர்ந்த பிறகும் அவருக்கு தெரியாமல் ஏர்போர்சில் சேர்ந்து அங்கு விபத்துக்குள்ளாகி அதை கண்டு அவர் கதறி அழுததும் அப்புறம் தன் திருமணத்திறகாக வருந்தி கவலை பட்டு அதுவும் சிக்கலாகி இப்பொழுதுதான் கொஞ்ச காலமாக நிம்மதியாக சந்தோசமா இருந்தார் சிவகாமி....

அதுவும் மது வந்த பிறகுதான் அந்த வீட்டிலயே ஒரு கலை வந்திருந்தது.....

அவள் வேசக்காரியா இருந்தாலும் தன் அன்னையிடமும் தங்கையிடமும் நன்றாகத்தான் நடந்து கொண்டாள்..

அவ்வளவு ஏன் ரமணி மா வையே மாற்றி விட்டாள் தான்... இப்படி பட்டவள் நல்லவளாக இருந்திருக்க கூடாதா?? அப்படி என்ன திட்டத்தோட வந்திருப்பா??

யார் அவள் பின்னால் இருந்து ஆட்டி வைப்பது?? கண்டிப்பா அவள் பெற்றோர்களா இருக்காது..

பாவம் அவர்கள் வெகுளி... வேற யாரா இருக்கும்?? என்று யோசிக்க , அதற்குள் சிவகாமி அழுது முடித்து தன் கண்ணீரை புடவை முந்தானையால் துடைத்து கொண்டே

“சாரிடா... கொஞ்சம் உணர்ச்சி வசபட்டுட்டேன்... நிகிலா... இப்பயாவது புரிஞ்சுதா.. நீ போய் உன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு வாடா... என்ன பிரச்சனை னாலும் அவ நம்ம வீட்ல இருக்கிறதுதான் சரி.. நீ போய்.. " என்றார் மூக்கை உறிஞ்சியவாறே...

அவர் முடிக்கும் முன்னே

"அதெல்லாம் என்னால முடியாது மா... அவளாதான போனா.. அவளே வரட்டும்... " என்றவன் வேகமாக எழுந்து வெளியில் சென்றான்....

காரை கிளப்பி சிறிது தூரம் சென்றவன் தன் அன்னையின் பாவமான முகமும் அவர் ஏக்கமும் அவனிடம் கெஞ்சி கேட்டதும் கண் முன்னே வர, காரை தன் மாமனார் வீட்டை நோக்கி செலுத்தினான்.....

அங்கே அவளும் தயாராகி இருக்க ஒரு நொடி அவனுக்கும் ஆச்சர்யம் தான்...

தன் அன்னை சொன்ன கதை நினைவு வந்தது... அவளை கண்டதும் அவனுக்குமே அவளை கட்டி அணைத்து கொள்ள துடித்தது தான்....

ஆனாலும் தன்னை மறைத்து கொண்டு எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டான்.....

நிகிலன் காரை ஓட்டி கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருந்தவள் தன்னையே ஓரகண்ணால் பார்ப்பதும் பார்த்த உடன் அவள் முகத்தில் வந்து போன வேதனையையும் கவனித்து கொண்டுதான் வந்தான்..

அவனுக்குமே தெரிந்தது தன்னிடம் வந்திருந்த மாற்றம்...

தன் தோற்றம்தான் அவளை வருத்துகிறது என்று புரிய அவனுமே மெல்ல அவளை திரும்பி பார்க்க அவனும் அதிர்ச்சியாகி போனான்.... அவளுமே நன்றாக இளைத்திருந்தாள்....

தன்னை போலத்தான் அவளும் கஷ்ட பட்டிருக்கிறாளோ?? படட்டும் .. என்னை ஏமாற்றினாள் இல்லை... அனுபவிக்கட்டும்.. " என்று மீண்டும் இறுகி போனான்...

பின் அவளிடம் திரும்பி

"ஏய்.. இங்க பார்... அம்மா கெஞ்சி கேட்ட தால் தான் உன்னை அழைத்து செல்ல நான் வந்தேன்.. அவங்களுக்கு இன்னும் உன் வேசம் தெரியலை... எனக்கும் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லை..

அவங்களாவே உன்னை பத்தி புரிஞ்சு கிட்டாதான் உண்டு... அதுவரைக்குமே நீ என் வீட்ல இரு.. எனக்கு அவங்க சந்தோசம் தான் முக்கியம்....

உன் திட்டம் எதுவும் என்கிட்ட பலிக்காது.. அதனால் இனிமேலாவது உன் கெட்ட புத்திய விட்டு அவங்க நம்பிக்கையாவது காப்பாத்து... மீறி ஏதாவது வாலாட்டின தொலச்சிடுவேன்.. ஜாக்கிரதை.. " என்று உருமினான்.....

அதை கேட்டு அதுவரை பொங்கிய சந்தோசமும் உற்சாகமும் தொலைந்து போனது மதுவுக்கு...

தன் கணவன் தன்னை அழைத்து செல்ல வந்து விட்டான் என்று துள்ளி குதித்தவள் அவன் தன் அன்னைக்காகத்தான் வந்திருக்கிறான் என்று தெரிய உள்ளுக்குள் உடைந்து போனாள்...

“என்னை இன்னும் நம்பவில்லையே... எப்பதான் என்னை புரிந்து கொள்வானோ ?? "என்று மருகியவள்

“எது எப்படியோ.. இனி என் வாழ்வு அங்கதான்.. " என்று பெருமூச்சு விட்டு சன்னல் பக்கம் திரும்பி வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்..

கார் வீட்டை அடையவும் அவளை இறக்கி விட்டு மீண்டும் கிளம்பி சென்றான் நிகிலன்...

காரில் இருந்து இறங்கியவள் வீட்டு வாயிலை அடைந்து தன் வலது காலை எடுத்து வைத்து

“இனி இந்த வீட்டை தாண்டி போகமாட்டேன்...” என்று மனதுக்குள் சொல்லி கொண்டே வீட்டிற்கு உள்ளே வந்தாள்...

தான் எவ்வளவு சொல்லியும் தன் மகன் மருமகளை அழைத்து வர மறுத்துவிட்டதால், சோபாவில் சோகமாக அமர்ந்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார் சிவகாமி....

எதேச்சையாக திரும்பியவர் உள்ளே வந்து கொண்டிருந்த தன் மருமகளை கண்டதும் வேகமாக எழுந்து வர, மதுவும் ஓடி சென்று சிவகாமியை கட்டி கொண்டாள்..

"சாரி அத்தை... " என்று ஏதோ சொல்ல வர,

"இருக்கட்டும் மருமகளே... குடும்ப அரசியல் ல இதெல்லாம் சாதாரணம்...நீ ஒன்னும் வருத்தபடாத... ஏதோ கெட்ட காலம்.. இதோட முடிஞ்சிருச்சுனு நினச்சுக்கோ....

அப்புறம் மருமகளே !! இனிமேல் உன் ஆத்தா வீட்டுக்கு போவதா இருந்தால் என்னையும் சேர்த்து கூட்டிகிட்டு போய்டு.... உன் புருசனை வச்சு என்னால சமாளிக்க முடியாது... "

என்று சொல்லி கண் சிமிட்டி சிரிக்க, தன் கவலையெல்லாம் பின்னுக்கு தள்ளி நிம்மதியுடன் புன்னகைத்தாள் மதுவந்தினி.....



“அப்பாடா !!! ஒரு வழியா இந்த வீட்டை விட்டு போன மகாலட்சுமியை திரும்பவும் கூட்டிகிட்டு வந்தாச்சு... இனி இன்னும் முறுக்கி கிட்டு திரியற இந்த விருமாண்டியை எப்படி மடக்கறது??” என்று தன் மூளையை கசக்கி யோசித்தான் அந்த வேலன்....

அந்த விதியோ இன்னும் அந்த விருமாண்டியை எப்படி முறுக்கி விடுவது?? என்று அந்த வேலனுக்கு மேலாக தீவிரமாக யோசித்து கொண்டிருந்தது...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!