என் மடியில் பூத்த மலரே-30
அத்தியாயம்-30
ஏழாவது மாதம்:
அப்படியே லெப்ட் ல போய், அப்புறம் ரைட் ல போய் மறுபடியும் லெப்ட் ல போனா ஒரு ரோடு வரும்... அதை எடுத்தா எங்க ஊருக்கு போய்டலாம்.. “ என்று தன் அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தாள் பாரதி...
“ஏய்... கத்தாதடி... எனக்கு காது நல்லா கேட்கும்... மெதுவா பேசித்தொலை... இந்த GPS லயே கண்டுபிடிக்க முடியாத ஊர் உங்க ஊர் தான்..அதுல வராதனால லெட் ,ரைட்,லெப்ட் னு இந்த மார்ச் பாஸ்ல சொல்ற மாதிரி நீ சொல்றதை எல்லாம் நான் பாலோ பண்ண வேண்டியிருக்கு... “ என்று கிண்டலடித்து கொண்டே காரை இலாவகமாக ஓட்டிகொண்டிருந்தான் ஆதி...
அருகில் ஜானகி அமர்ந்து அவர்களின் சண்டையை ரசித்தவாறு சுற்றிலும் வேடிக்கை பார்த்து வந்தார்...
“ஐய.. GPS வரதுக்கு முன்னாடி எல்லாரும் எப்படி வழி கண்டு பிடிச்சாங்களாம்?? எல்லாம் வாயால எந்த ஊருக்கு வேணும்னாலும் வழி கேட்டு போனதில்லை... இப்பதான் இந்த GPS வந்ததுக்கப்புறம் பக்கத்து தெருவுக்கு போறதுன்னா கூட இந்த GPS ஐ போட்டுக்கறாங்க.. இன்னும் கொஞ்ச நாள் போனா பக்கத்து வீட்டு அட்ரஷை கண்டுபிடிக்கறதுக்கு கூட அததான் கேட்க வேண்டி இருக்கும் போல... “ என்று கழுத்தை நொடித்தாள் பாரதி..
“ஹே.. பாத்துடி.. ரொம்ப நொடிக்காத.. கழுத்து சுளிக்கிக்க போகுது.. “என்று சிரித்தான் ஆதி ..
“ஆங்க்... நான் இங்க கழுத்தை திருப்பியது அவனுக்கு எப்படி தெரிந்தது?? ஒரு வேளை எங்கயாவது கேமரா வச்சிருக்கானா??.. “ என்று சுற்றிலும் பார்த்தாள்..
“ஹா ஹா ஹா .. கேமரா எல்லாம் இல்லடி பட்டிக்காடு.. நீ எப்ப என்ன பண்ணுவனு எனக்கு தெரியாதாக்கும்... “ என்று மீண்டும் சிரித்தான்..
“ம்ஹும் ரொம்பத்தான்.. அப்படியே என் கூட ஒரு 30 வருசம் கூடி வாழ்ந்திட்டார்.. என்னை பற்றி அப்படியே சொல்ல.. “ என்று மனதுக்குள் முனகினாலும் அவள் மனம் சந்தோசத்தில் சிறகடித்தது.. ஏதோ இந்த அளவுக்காவது என்னை புரிஞ்சு வச்சிருக்கானே... என்று..
ஆதியின் அந்த சொகுசு கார் பாரதியின் ஊருக்கு சென்று கொண்டிருந்தது... தன் முன்னே இருந்த குறுகிய சாலையில் பாரதி சொன்ன வழியை பின்பற்றி காரை கவனமாக ஓட்டிகொண்டிருந்தான் ஆதி... சிறிது தூரம் சென்றதும் தொலைவில் இரண்டு எருமை மாடுகள் நடு ரோட்டில் படுத்து கிடக்க, தொலைவில் இருந்தே ஹார்ன் பண்ணினான்...
அவர்கள் இவனை சட்டை பண்ணாமல் அவங்க வேலையான அசை போடுவதை தொடர்ந்து கொண்டு இருந்தனர்....அருகில் வந்து காரை நிறுத்தியவன் மீண்டும் ஹார்ன் ஐ அடிக்க, அவர்கள் இன்னும் பயம் இல்லாமல் படுத்து கிடக்க, அதை கண்டு கடுப்பானவன்
“என்னடி உங்க ஊர் எருமை மாடெல்லாம் உன்னை மாதிரியே சொன்ன பேச்சை கேட்காதா?? இல்ல காதுதான் கேட்காதா.. இவ்வளவு ஹார்ன் பண்ணியும் வழி விடாமல் அப்படியே படுத்திருக்குதே... “ என்று கத்தினான்...
“ஹா ஹா ஹா.. அதுங்களுக்கு தெரியுமாக்கும்.. இந்த ஆதித்யா மஹாராஜா அவங்க மாமியார் ஊருக்கு புடை சூழ வர்ரார்னு முன்னாடியே ஒதுங்கி நிக்க...
இன்னும் வேகமா ஹார்ன் அடிங்க.. இல்லைனா பக்கத்துல எதும் குச்சி இருந்தா எடுத்து லேசா அடிங்க.. “ என்று சிரித்தாள் பாரதி
“வாட்?? ... நான் போய் இத அடிக்கிறததா?? .. அதுக்கு பெருசா கொம்பு இருக்கு டி... என்னை முட்டிடுச்சுனா?? நீயே அதுங்க கிட்ட சொல்லி வழி விட சொல்.. “ என்று சிடுசிடுத்தான்...
அதற்குள் அந்த மாட்டின் சொந்தக்காரர் வந்து விட, கார் நின்று கொண்டு இருப்பதை கண்டதும் அவர்களிடம் யாரென்று விசாரித்து விட்டு
“ஓ .. நீங்க பாரதி பொண்ணு வீட்டிற்கு வந்திருக்கறவங்களா?? ரொம்ப சந்தோஷம் தம்பி .. அந்த பொண்ணு இல்லாம ஊரே வெறிச்சினு இருக்கு...என்கிட்ட தாத்தா, தாத்தானு எப்ப பார் வம்பு இழுத்துகிட்டே இருக்கும்.. “ என்று பெருமுச்சு விட்டவர் அந்த மாடுகளை அடித்து விரட்டியபின் அவர்களை பார்த்து
“இந்த பக்கம் அவ்வளவா கார் பஸ் எல்லாம் வர்ரதில்லையா... அதான் இப்படி படுத்துகிச்சுங்க... நான் விரட்டிட்டேன்...நீங்க போங்க தம்பி... “ என்று அவர்களை அனுப்பி வைத்தார்..ஆதியும் அவருக்கு நன்றி சொல்லி காரை.கிளப்பி சிறிது தூரம் சென்றதும்
“மா... உன் மறுமகளுக்கு பயங்கர பேர் தான் போல.. “ என்று ஜானகியை பார்த்து சிரித்து கொண்டவன் பாரதி சொன்ன மாதிரியே லெப்ட், ரைட்,லெப்ட் னு எடுத்து அந்த மண் ரோடை அடைந்தான்..
அதை கண்டதும் இன்னும் அலறினான்.. பாரதி இன்னும் தொடர்பில் இருக்க
“என்னடி இது?? .. இவ்வளவு மோசமா இருக்கு இந்த ரோட்.. .இவ்வளவு கல்லும், குழியுமா இருக்கு.. இதுல போனா என் கார் என்னாவது?? .. “ என்று திரும்ப கத்தினான்...
“ஹ்ம்ம்ம் அது தார் ரோட் தான்... லாஸ்ட் டைம் பேஞ்ச மழையில எல்லாம் அடிச்சுகிட்டு போயிருக்கும்... “என்று முனகினாள்...
“ஹா ஹா ஹா.. என்னது மழையில அடிச்சுகிட்டு போயிருச்சா??... ஏய்... இந்த ஊரை பார்த்தால் மழையை பார்த்தே வருச கணக்காகும் போல இருக்கு..எல்லா இடமும் காஞ்சு கிடக்குது.. நீ மழைல அடிச்சுகிட்டு போயிருச்சுனு கதை சொல்ற...
ஓ... லாஸ்ட் டைம்னு சொன்னது ஒரு 10 வருடத்துக்கு முன்னாடி இருக்குமா?? “ என்று சிரித்துகொண்டே அவளை ஓட்டினான்.... அதில் கடுப்பானவள்
“ஹலோ.... எங்க ஊருக்கும் தார் போட்ட பெரிய மெய்ன் ரோட் இருக்கு... அதுல போனா இன்னும் 5 கிலோ மீட்டர் சுத்தி போகனும் னு இந்த குறுக்கு வழிய சொன்னால், ரொம்பத்தான் பண்றீங்க.. “என்று மீண்டும் முகத்தை நொடித்தாள்..
அவளின் அந்த ஆக்ஷன் அவன் கண் முன்னே தெரிய, அவனும் சிரித்து கொண்டே
“அம்மா தாயே.. நீ எனக்கு குறுக்கு வழி எல்லாம் காட்ட வேண்டாம்... நேரா போற நல்ல வழியே காட்டு... அடுத்து எப்படி போகணும்.??. “ என்று சிரித்தான...
“ஹ்ம்ம்ம் அவ்வளவுதான்.. இந்த ரோட்லயே போய்கிட்டே இருங்க.. எங்க ஊர் எல்லை வரும்.. அங்க ஒரு எல்லை கறுப்பு சாமி இருக்கும்.. அத அப்படியே கும்பிட்டுக்கங்க.. அது ரொம்ப சக்தி வாய்ந்தது...
அப்புறம் சொஞ்ச தூரம் போனா எங்க ஊர் என்ட்ரன்ஸ் வரும்... அதுல முதல் தெருவுல போனா அங்க தான் எங்க வீடு இருக்கு.. “ என்றாள் உற்சாகத்துடன்...
அவளின் குரலில் இருந்த உற்சாகத்தை ரசித்தவன் அந்த மண் ரோட்டில் கவனம் செலுத்தி ஓட்ட, அவன் நினைவுகள் இந்த பயணம் ஆரம்பித்ததற்கான நோக்கத்தையும் கடைசியாக தனக்கு கிடைத்த அந்த திடீர் பரிசையும் நோக்கி அவன் மனம் சென்றது....
கடந்த வியாழக்கிழமை இரவு உணவு முடித்து அனைவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்க தர்மலிங்கம் ஜானகியை அழைத்து இருந்தார்...
இந்திரா ஆளாகி இருப்பதாக நல்ல செய்தியை கூறினார்.. அவளுக்கு சடங்கு வரும் ஞாயிற்றுகிழமை செய்வதாகவும் அதோடு மஹா வளைகாப்பையும் சேர்த்து இரண்டு விழாவையும் ஒரே நாளில் வைத்திருப்பதாகவும் ஜானகியையும், மாப்பிள்ளையையும் கண்டிப்பா வரணும் என்று வேண்டிக் கொண்டார்...
அதை கேட்டு மகிழ்ந்த ஜானகி
“கண்டிப்பா அண்ணா... இந்திராவுக்கு தாய் மாமன் சீர் நாங்க தான் செய்வோம்.... என் பையன் தான் எல்லாம் மாமன் ஸ்தானத்துல இருந்து செய்வான்..” என்று சந்தோஷமாக கூற, அவரோ பதறி,
“அதெல்லாம் வேண்டாம் ஜானகி... நீ மஹா கல்யாணத்துக்கு செஞ்சதே நாங்க இன்னும் திருப்பி செய்ய முடியாம இருக்கோம்.. இதுல இப்ப வேறயா.. நீ எதுவும் செய்ய வேண்டாம்.. நீயும் மாப்பிள்ளையும் வந்தா போதும்..” என்றார்..
“என்ன அண்ணா இது?? ஒரு அண்ணன் தங்கச்சிக்கு செய்யறதெல்லாம் எப்படி கணக்குல சேர்த்துக்க கூடாதோ அதே மாதிரிதான் தங்கச்சி அண்ணனுக்கு செய்யறதயும் கணக்குல வச்சுக்க கூடாது... நான் உங்க கூட பிறந்த தங்கச்சியா நினைச்சா, நான் செய்யறத எதுவும் நீங்க மறுக்க கூடாது.. “ என்று சொல்லி அவர் வாயை அடைத்துவிட்டார் ஜானகி....
பின் தர்மலிங்கம் சுசிலாவையும் அழைத்தார்...
“பாரதி கிட்ட சொல்லிட்டீங்களானா?? “என்று பாரதியை ஓரக் கண்ணால் பார்த்து கொண்டே ஜானகி கேட்க
“இன்னும் இல்ல மா... இந்திரா இன்னைக்கு காலைல தான் வந்தது.. சின்ன பாப்பா அப்ப வேலைக்கு போயிருக்கும்னு காலைலயே தொந்தரவு பண்ணலை.. நைட் வேலை முடிச்சு வந்த பிறகு சொல்லிக்கலாம்னு இருந்திட்டோம்.. இப்ப அது போன் பண்ணும் நேரம் தான்...இனிமேல் தான் சொல்லணும் “ என்று மேலும் சிறிது நேரம் பேசி போனை வைத்தார்...
அதை கேட்டதும் பாரதியின் கண்கள் கலங்கியது.. தான் சொன்ன பொய்யை எப்படி எல்லாம் நம்பிகிட்டு இருக்காங்க என்று மனம் கனத்தது.. அதை புரிந்து கொண்ட ஜானகி அவள் கையை அழுத்தி,
“நீ கவலைப்படாத பாரதி மா... சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்.. “ என்று அவளை சமாதானப் படுத்தினார்....
ஆதிக்குமே அவளின் கஷ்டம் புரிந்தது..அவளின் வேதனையுடன் வாடிய முகத்தை கண்டவன்
“எல்லாம் என்னால் தான்...சீக்கிரம் இவ வேதனையை போக்கணும்..” என்று எண்ணிக் கொண்டான்..
பின் அனைவரும் கலந்து பேசி, ஜானகியும் ஆதியும் ஊருக்கு போவதாக முடிவு செய்தனர்...ஆதியே பாரதி இடத்துல இருந்து எல்லா பார்த்துக் கொள்வதாக கூறினான்... அவன் எங்க போக மாட்டேனு மறுத்து விடுவானோ என்று பயந்து இருந்தவளுக்கு அவன் போக சம்மதிக்கவும் துள்ளி குதித்தாள் பாரதி மனதுக்குள்..
இவ்வளவு பக்கத்தில் இருந்தும் தான் போக முடியலையே என்ற வருத்தம் இருந்தாலும் தன் சார்பா அவள் கணவன் போவதாக கூறவும் சந்தோஷமாக இருந்தது
சுசிலா தனக்கு முக்கியமான ஆபரேசன் இருப்பதால் வர முடியாது என சொல்ல
“என்னது இது சுசி அத்தை??.. சன்டே ல கூட என்ன வேலை உங்களுக்கு??... அன்னைக்கு ஒரு நாளாவது நீங்க ப்ரியா இருக்கலாம் இல்லை.. எப்ப பார் வேலை வேலைனு அதுலயே சுத்திகிட்டு இருக்கீங்க.. நீங்களும் ஜானகி அத்தை கூட எங்க ஊருக்கு போய்ட்டு வரலாம் இல்லை.. ஜாலியா இருக்கும்.. “ என்று கண்டித்தாள் அவர் மேல் உள்ள அக்கறையுடன்...
“ஹ்ம்ம்ம் நீ வேற பாரதி... இந்த சன்டே நல்ல முகூர்த்த நாளாம்... இந்த நாள்ல குழந்தை பிறந்தா நல்லா இருக்கும் னு மூனு பேசன்ட்ஸ் அன்னைக்கே டேட் பிக்ஸ் பண்ணி இருக்காங்க சிசேரியனுக்கு... “ என்றார்...
“ஆங்க்... இதுக்கெல்லாம் கூடவா நல்ல நாள் பார்ப்பாங்க.. “ என்று வாயை பிளந்தாள் பாரதி
“ஹா ஹா ஹா.. நல்ல நாள் பார்த்தா கூட பரவாயில்லை.. அந்த நாள்ல எந்த நேரத்துல குழந்தை பிறந்தா நல்லா இருக்கும் னு முன்னாடியே ஜோஷியம் பார்த்து, பிறக்காத அந்த குழந்தைக்கு ஒரு கட்டத்தை போட்டு அந்த நேரத்துல தான் குழந்தைய வெளில எடுக்கனும் னு வேற ஆர்டர் போடறாங்க... அதுவும் மில்லி செகன்ட்ஸ் கூட மாறக்கூடாதாம்..
இத போய் நான் எங்க சொல்ல.. எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் இந்த மாதிரியும் சில பேர் இருக்கத்தான் செய்யறாங்க... இதோ இந்த உன் ஜானகி மாமியாரையும் சேர்த்துதான்.. “ என்று ஜானகியை பார்த்து சிரித்தார் சுசிலா..
அதை கேட்டு ஜானகி சுசிலாவை செல்லமாக முறைத்தார்...
“ஹ்ம்ம்ம் அப்படீனா இனிமேல் முகூர்த்த நாள் னா ஐயருங்க எல்லாம் பிசியா இருக்கிற மாதிரி இனிமேல் உங்கள மாதிரி டாக்டர் ஸ் ம் பிசியாயிடுவாங்கனு சொல்லுங்க..” என்று சிரித்தாள் பாரதி..
“ஹ்ம்ம் அப்படிதான் ஆகும் போல.. “ என்று சுசிலாவும் இணைந்து சிரிக்க, ஜானகியும் ஆதியும் கூட இணைந்து சிரித்தனர்.. பின் பாரதி ஏதோ நினைவு வந்தவளாக,
“சரி அத்தைஸ்... நீங்க பேசிகிட்டிருங்க.. நான் போய் ஊருக்கு பேசிட்டு வந்திடறேன்.. “ என்று எழுந்து பக்கத்து அறைக்கு நடந்தாள் துள்ளலுடன்... அவளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டவன்
“அவ வீட்டுக்கு பேசறது னா எப்படிதான் இப்படி ஒரு பல்ப் எரியுதோ..பார் எப்படி குதிச்சுகிட்டு ஓடறா அவ வயித்துல குழந்தை இருக்கிறதயும் மறந்து.. “ என்று புலம்பினான் ஆதி ..
அறைக்குள் சென்று தன் அலைபேசியை எடுத்து வாட்ஸ்அப்ல் பார்க்க அதில் பாரத் ஏற்கனவே மெசேஜ் அனுப்பி இருந்தான்..அதை கண்டு மகிழ்ச்சியுடன் அவனுக்கு கால் பண்ண, எல்லாரும் ஆவலுடன் அவளிடம் பேசினர்...பின் போனை இந்திராவிடம் கொடுக்க
“இந்திரா குட்டி.. நீ இனிமேல் சமத்தா இருக்கணும்..” என்று சில அறிவுரைகளை கூறி பின் தன் தம்பியை பார்த்து
“பாரத்.. நீ இனிமேல் அவ கிட்ட சண்டை போடக்கூடாது...அவ கேட்கறதை எல்லாம் செஞ்சுகொடு.. “ என்று அவனுக்கு அட்வைஸ் பண்ண
“ஐயோ பாரதி.. இத முதல்ல அவ கிட்ட சொல்லு.. இனிமேலாவது அந்த எட்டப்பிய பெரியவளா அடக்க ஒடுக்கமா இருக்க சொல்...எனக்கு முதல்ல அண்ணன் னு மரியாதை கொடுக்க சொல்...” என்று வம்பு இழுத்தான்..
அதை கேட்ட இந்திரா அவனுக்கு அழகு காட்ட,
“பாரதி.. இப்ப கூட என்னை பழிச்சு காட்டறா பார்...” என்று புலம்பினான்... அவர்களின் சண்டையை சிறிது நேரம் ரசித்தவள் பின் எப்படி விழாவை நடத்துவது என்று அவர்களுக்கு சில அறிவுரைகளை கூறினாள்.. எல்லா ஏற்பாட்டையும் பாரத் ஐ பார்த்து கொள்ள சொல்ல அவனும் சரி என்றான்..
மஹாவுக்கு போட வேண்டிய வளையலை நான் வாங்கி கொடுத்திடறேன் என்கவும்
“நீ எப்படி வாங்குவ?? என்று அவர்கள் கேட்க, தன் நாக்கை கடித்துக் கொண்டவள்
“நான் ஜானகி அத்தை கிட்ட சொல்லி நல்ல டிசைனா வாங்கி கொண்டு வர சொல்றேன்.. “என்று சமாளித்தாள்..
“அவளுக்கு எதுக்கு சிரமம் மா.. “என்று தர்மலிங்கம் மறுக்க, இதுல ஒரு சிரமமும் இல்லப்பா.. அத்தை அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க.. எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீங்க மத்த வேலை எல்லாம் பாருங்க... “ என்று முடித்து விட்டாள்..
பின் பாரத்திடம் மெதுவாக
“பாரத்.. இதுக்கெல்லாம் காசு இருக்காடா?? “ என்று மெல்ல கேட்டாள் பாரதி..
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல பாரதி.. அதான் நீ மாசா மாசம் பணம் அனுப்பிச்சுடறியே... நீ இந்த மாதம் அனுப்பினது கூட நேத்தே வந்திருச்சே.. பெருசா எதுவும் செலவு இல்லாததால் நீ அனுப்பினது எல்லாம் முக்கால் வாசி அப்படியே தான் இருக்கு..
அதோட ஈஸ்வர் மாமா சொன்ன டிப்ஸ் வச்சு நம்ம வீட்டு பக்கத்துலயே கொஞ்சமா விவசாயம் பண்றோம். அதுவும் நல்லா வந்திருக்கு.. அதனால பணத்தை பத்தி நீ கவலைப்படாத... நீ இல்லயேன்ற குறைதான்.. “ என்று தழுதழுத்தான்...
அப்பொழுது தான் உறைத்தது.. இவ்வளவு நாளா தன் வீட்டு பிரச்சனையை மறந்து தன் கவலையிலயே சுழண்று கொண்டிருந்தது.. இந்த அத்தை பார் எதையும் மறக்காமல் அவளுக்காக பணம் அனுப்பி வச்சிருக்காங்களே..!!!
அதுவும் அவள் இந்த வீட்டு மறுமகள் ஆன பிறகும் கூட இந்த குழந்தையை சுமக்க என்று ஆரம்பித்த அந்த பழக்கத்தை விடாமல் தொடர்ந்து செய்யறாங்களே.. “என்று உருகி நின்றாள்..
“ஹே என்னடி தூங்கிட்டியா?? “ என்று பாரத் கத்த, பின் நினைவு வந்தவளாக,
“ஹ்ம்ம்ம் சரி டா... நீயே எல்லாம் பொறுப்பா பார்த்துக்கோ.. எந்த குறையும் வரக்கூடாது.. அப்புறம் அங்க நடக்கிறதை எல்லாம் நான் நேரடியா பார்க்கிற மாதிரி ஏற்பாடு செய்... “
“ஹ்ம்ம்ம் நீ நேரா பார்க்கிறதுனா எப்படி செய்யறதுனு தெரியலயே..” என்று முழித்தான் பாரத்
“நம்ம மாம்ஸ் கிட்ட கேளுடா?? “
“ஐய அவரா.. அவருக்கு செடிய வச்சு இத எப்படி சீக்கிரம் பெருசாக்கிறதுனு தான் ஆராய்ச்சி பண்ண தெரியும்.. இத பத்தி எல்லாம் தெரியாது கா.. “ என்று சிரித்தான்
“ஹ்ம்ம் அப்பனா இன்னொரு மாமா வருவார்... அவர் கிட்ட சொல்லு... அவர் இதில் எல்லாம் எக்ஷ்பர்ட்.” என்றாள் சிரித்தவாறு..
“இன்னொரு மாமா வா?? அது யார் பாரதி..” என்றான் ஆவலுடன்
“ஹா ஹா ஹா அது சஸ்பென்ஸ்... “ என்று கண் சிமிட்டினாள்
“எனக்கு மட்டும் அந்த சஸ்பென்ஸ் ஐ சொல்லு பாரதி.. நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.. “ என்று செல்லமாக கெஞ்சினான்..
“டேய்... மக்கு... சஸ்பென்ஸ் னா யாருக்கும் சொல்லகூடாது னு அர்த்தம்.. அதுக்கு பேர் தான் சஸ்பென்ஸ்.. “என்று சிரித்தாள்...
“போடி.. நானும் உனக்கு நிறைய சஸ்பென்ஸ் வச்சிருக்கேன். உனக்கு சொல்லமாட்டேன்..” என்று முறுக்கினான்..
“ஹே.. என்னடா அது?? எனக்கு தெரியாமல் சஸ்பென்ஸ்?? ப்ளீஸ் எனக்கு மட்டும் சொல்லுடா “என்றாள் ஆர்வமாக
“ஹா ஹா ஹா இப்பதான் நீ சஸ்பென்ஸ் னா என்ன அர்த்தம் னு அப்படி லெக்சர் அடிச்ச.. அதுக்குள்ள மறந்திட்டியா என் மக்கு அக்கா... “ என்று அவளை மடக்கினான்...
“டேய்.. உன்னை... “ என்று செல்லமாக திட்டினாள்..
பின் சிறிது நேரம் அவனிடம் பேசி விட்டு போனை வைத்தவளுக்கு மனம் நிறைந்து இருந்தது....அவள் இல்லாமல் அவள் குடும்பத்தில் நடக்கும் முதல் விஷேசம் இது... எப்படியோ தங்கள் வீட்டில் நடக்கும் இரண்டு விழாவும் நல்ல படியா நடக்கணும் என்று வேண்டிக்கொண்டாள்
ஞாயிற்றுகிழமை அன்று அதிகாலையிலயே ஆதியை எழுப்பினாள் பாரதி... அவளுக்கு அன்று இரவு முழுவதுமே தூக்கமில்லை... படுத்தாலும் தூங்க முடிய வில்லை.. மனமெல்லாம் அவள் ஊரை சுற்றியே இருந்தது....அவள் தொல்லை தாங்காமல் எழுந்தவன் மணியை பார்க்க அது 3 என காட்ட,
“ஏய்.. மணி மூனுதான் ஆகுது.. இப்பயே எதுக்குடி தொல்லை பண்ற... “ என்று சிடுசிடுத்தான்..
“இப்பயே எழுந்து கிளம்பினாதான் அங்க சீக்கிரம் போக முடியும் .. தூங்கினது போதும் எழுந்து கிளம்புங்க.. “ என்று நச்சரித்தாள்..
“5 மணிக்கு கிளம்பினால் போதும் டீ. 10 மணிக்கு எல்லாம் உங்க ஊருக்கு போய்டலாம்.. என் கார் என்ன உங்க ஊர் கட்ட வண்டியா?? மெதுவா போக... அதோட பங்சன் மதியம் தான்.. அதுக்குள்ள போய்டலாம்.. இப்பயே ஏன் இப்படி படுத்தற?? “ என்று மீண்டும் சிடுசிடுத்தான...
“சரியான தூங்கு மூஞ்சி... எப்ப பார் தூங்கி கிட்டேஇருக்கறது..இந்த லட்சணத்துல என் இடத்துல இருந்து எல்லாம் பொறுப்பா செய்யறேனு வீர வசனம் வேற....இப்படி தூங்கி லேட்டா அங்க போனா, வேலையெல்லாம் எப்படி செய்யறதாம்... “ என்று முனகினாள்..
“சரி சரி புலம்பாத டி .. 4 மணிக்கு எழுப்பி விடு... இப்ப வா.. நீ வந்து கொஞ்ச நேரமாவது தூங்கு... “ என்று அவளை அழைக்க, அவளும் அதற்கு மேல் நிக்க முடியாமல் அவன் அருகில் வந்து படுத்து கொண்டாள்...
அவனும் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.. இப்பொழுது அவன் அருகாமை அவளுக்கு பழகி இருந்தது... கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் இருந்த கூச்சமும் விலகி தன் கணவன் என்று ஏற்றுக்கொள்ள பழகியிருந்தாள்... அவன் அருகில் படுத்தும் அவள் இன்னும் ரெஸ்ட்லெஸ் ஆக இருப்பதை உணர்ந்தவன்
“கொஞ்ச நேரமாவது தூங்கு டி .. அதான் அலாரம் வச்சிருக்க இல்ல..அது கரெக்ட்டா எழுப்பி விடும்... நீ ஒன்னும் முழிச்சு இருந்து என்னை எழுப்ப வேண்டாம் “ என்று மீண்டும் அவளை கட்டிக்கொள்ள அவளும் அவன் மார்பில் முகம் புதைத்து உறங்க முயன்றாள்..
பின் சிறிது நேரம் கழித்து மெல்ல கண் அயர்ந்தாள்.. அதற்குள் அலாரம் அலற, வேகமாக பதறி எழுந்தாள்.. எழுந்தவள் முகம் கழுவி, பின் அவனை எழுப்ப, அதற்கு மேல இவள் தூங்க விடமாட்டாள் என்று அவனும் எழுந்து அவளை முறைத்துக் கொண்டே குளித்து ரெடியாகி கீழ வர, ஜானகி ஏற்கனவே தயாராகி கீழ காத்து கொண்டிருந்தார்...அதை கண்ட பாரதி
“பாருங்க.. அத்தை தான் பெர்பெக்ட்.. எவ்வளவு சீக்கிரம் எழுந்து ரெடியாயிட்டாங்க.. நீங்களும் இருக்கீங்களே.. சரியான தூக்கு மூஞ்சி.. “ என்று அவனை பார்த்து திட்டினாள்..
“ஹா ஹா ஹா... நீயாவது பரவாயில்லை .. கொஞ்ச நேரமாவது தூங்கின.. உன் மாமியார் இருக்காங்களே, அவங்க அண்ணனை பார்க்க போற குஷியில நைட் எல்லாம் தூங்காமல் அப்பயே ரெடியாகி நைட்ல இருந்தே இங்க தான் உட்கார்ந்து இருக்காங்க..மேலயே பார்த்துகிட்டு “ என்று சிரித்தான் ஆதி ..
பாரதி அவன் சொன்னது சரியா என சந்தேகமாக ஜானகியை பார்க்க, அவர் இல்லை என்று சிரித்துக்கொண்டே தலை ஆட்ட , அவனை பார்த்து முறைத்தாள்..
“ஆமாண்டா... எனக்கு அப்படிதான் இருக்கு... சீக்கிரம் போய் எல்லாரையும் நேர்ல பார்க்கணும்னு ஆர்வமா இருக்கு....நீ சீக்கிரம் காரை கிளப்பு.. “ என்று அவனை அவசரப் படுத்தினார்...
“மா... நீ அவளை விட மோசம் மா.. “என்று அவனும் சிரித்துக் கொண்டே வாசல் பக்கம் நகர ,
“ஒரு நிமிஷம் அத்தை.. “ என்றவள் பூஜை அறைக்கு ஓடி , அங்கு இருந்த விபூதியை எடுத்து வந்து அவர்கள் இருவருக்கும் வைத்து விட்டாள்...அவள் தொட்டு வைத்ததில் சிலிர்த்து போனான்...
அவனும் ஒரு நிமிஷம் மேல வா என்று பாரதியை மேல அழைத்துச் சென்று , வழக்கம் போல அவன் தன் இளவரசிக்கு முத்தமிட்டு நகர , ஒரு நிமிஷம் என்று அவனை நிறுத்தியவள் அவன் நிக்கவும் எக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்... .
அவளின் அந்த எதிர்பாராத முத்தத்தில் கிறங்கி போனான் சில விநாடிகள்.. பின் சுதாரித்து கொண்டு_
“ஏய்.. என்னடி இது?? ... “ என்றான் குறும்பாக
“ஹ்ம்ம்ம் மாமனார் வீட்டுக்கு போறிங்க இல்ல.. அதோட என் இடத்துல இருந்து அங்க எல்லாம் பார்த்துக்க போறிங்க இல்ல... அதுக்கு என்னோட அட்வான்ஸ் பரிசு.. “ என்று கண்ணடித்தாள்..
“அடிபாவி!! இவ்வளவு நாளா பக்கத்துலயே இருக்கேன்... அப்ப எல்லாம் கண்டுக்காம விட்டுட்டு இப்படி போறப்போ வம்பு பண்றியே..!!! நீ பக்கதுல இருந்தாலே எனக்கு எகிறும்.. இப்படி எல்லாம் என்னை பண்ணினா, நான் இன்னும் தலை சுத்தி போய்டுவேனே...!!! என்னை அப்படி சுத்த விடத்தான் இப்படி ஆரம்பிச்சிருக்காளா இந்த கருவாச்சி.. “ என்று புலம்பியவன் மனமே இல்லாமல்
“சரி .. பத்திரமா இரு... என் பிரின்ஸஸை ஜாக்கிரதையா பார்த்துக்கோ... “.என்று அவள் கன்னம் தட்டி சென்றான்.. அவளும் வெட்கப்பட்டு தலை அசைக்க , அதில் இன்னும் கிறங்கியவன் மனமே இல்லாமல் கீழ இறங்கி சென்றான்...
கார் வரை வந்து அவர்களை வழி அனுப்பி வைத்து கை அசைத்தாள் சிரித்த முகத்துடன்... ஆதி காரின் ஜன்னல் வழியாக வெளியில் எட்டி பார்க்க, மீண்டும் கண் சிமிட்டி அவனை அதிர வைத்தாள் பாரதி
அவன் மனம் அந்த நினைவுகளை மீண்டும் தொட , அவள் கொடுத்த அந்த முத்தம் இன்னும் இனித்தது அவனுக்கு... அதை நினைத்து மெல்ல சிரித்து கொண்டான் ..
அதற்குள் அவன் கார் அந்த சாலையின் முடிவை அடைந்திருக்க அவள் சொன்ன மாதிரி அங்கு இருந்த முதல் தெருவில் நுழைந்தது அந்த சொகுசு கார்...
அந்த கிராமத்திற்குள் நுழையும் பொழுதே அவனுக்கு மனதுக்குள் இனம் புரியாத பரவசம்..
“இங்கு தான் அவன் மனம் கவர்ந்தவள் பிறந்தாள்.. .இங்கெல்லாம் நடந்து இல்ல ஒடியிருப்பாள்... “ என்ற உணர்வுடன் அந்த கிராமத்து தெருவின் அழகை ரசித்தவாறெ காரை ஓட்டினான் அந்த தெருவில்..
பாரதியும் இன்னும் லைன்லயே தான் இருந்தாள்.. அவள் உடல் மட்டும் தான் சென்னையில்... அவள் மனம் முழுவதும் ஆதியுடன் அவள் கிராமத்தை நோக்கியே பயணித்தது..
பாரதி வீடு இருக்கும் தெருவில் நுழைந்ததும் அந்த தெருவே அவன் காரை திரும்பி பார்த்தது..அதை கண்ட ஆதி
“ஹே பட்டிக்காடு... என்ன முன்ன பின்ன உங்க ஊர்ல காரை பார்த்தது இல்லையா... இப்படி ஆ னு பார்க்கிறாங்க... பட்டிக்காடுங்கிறது சரியாதான் இருக்கு... “ என்று சிரித்தான் குறும்பாக.... அதை கேட்டு கடுப்பானவள்
“ஹலோ... எங்க ஊர்லயும் நிறைய பேர் கார் வச்சிருக்காங்க... என்ன உங்க கார் கொஞ்சம் பெருசா இருக்கவும் கொஞ்சம் திரும்பி பார்த்திருப்பாங்க.. அதுக்குனு எங்க ஊர் ஒன்னும் பட்டிக்காடு இல்ல.. “ என்று முறைத்தாள்...
“ஹா ஹா ஹா பாருடா... பட்டிக்காட்ட பட்டிக்காடுனு சொன்னா இந்த பட்டிக்காட்டுக்கு கோபம் வருது.. “ என்று வேண்டும் என்றே வம்பு இழுத்தான...
“அத்தை.. உங்க புள்ளை கிட்ட சொல்லி வைங்க... என்கிட்ட வம்பு இழுக்க வேண்டாம்னு “என்று ஜானகியிடம் பஞ்சாயத்துக்கு வந்தாள் பாரதி
ஜானகியும் அவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்து சிரித்து கொண்டே அமர்ந்து இருந்தார்... அவன் திரும்ப திரும்ப தன் ஊரை பார்த்து பட்டிக்காடு என்றதில் மேலும் கடுப்பானவள்
“ஹலோ... இன்னொரு தரம் எங்க ஊரை பத்தி அப்படி சொன்னீங்க அவ்வளவுதான்.. “என்று கண்ணில் கோபம் கொப்புளிக்க கத்தினாள்... அவளின் கோபம் அவனுக்கு இங்கு இருந்தே தெரிய
“ஹா ஹா ஹா.. என்னடி பண்ணுவ?? என்ன கடிச்சு வைப்பியா?? இப்பதான் நான் அங்க இல்லையே.. உன்னால கடிக்க முடியாதே... “ என்று மேலும் வேண்டும் என்றே வெறுப்பேற்றினான் அவளை...
“ஹீ ஹீ ஹீ... நீங்க இல்லாட்டி என்ன.. உங்க இளவரசி என்னோட தான் இருக்கா...திரும்ப ஏதாவது பேசுனீங்க, உங்க இளவரசி இன்னைக்கு புல்லா பட்டினிதான்... என்ன புரிஞ்சுதா?? “என்று மிரட்டினாள் மனதுக்குள் சிரித்தவாறு... அதை கேட்டு அதிர்ந்தவன்
“அம்மா.. தாயே... அப்படி எதுவும் செஞ்சிடாத... என் பேபி பாவம்.. இனிமேல் நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்.. “ என்று சரண்டர் ஆனான் ஆதி ..
“ஹ்ம்ம்ம்ம் அது... அந்த பயம் இருக்கட்டும்... ஹ்ம்ம்ம் இப்ப சொல்லுங்க எங்க ஊர் எப்படி இருக்கு?? “ என்றாள் குறும்பாக
“வாவ்... சூப்பராராராராரா இருக்கு... இந்த மாதிரி ஒரு ஊரை நான் பார்த்ததே இல்லை.... நம்ம பாரதி ராஜா படத்துல வர்ர மாதிரியே பச்சை பசேல் னு இருக்கு... “ என்று ஐஸ் வைத்தான்...அதை கேட்டு
“ஹா ஹா ஹா... அது... “ என்று சிரித்தாள்...
ஜானகியும் வாய்விட்டு சிரித்தவாறே
“டேய் கண்ணா.. என் மறுமக கிட்ட எதுக்கு வம்பு இழுக்கிற.. எப்பவும் அவ தான் ஜெயிப்பா.. “என்று சிரித்தார்...
“ஹ்ம்ம்ம் அப்படி சொல்லுங்க அத்தை.. நீங்க தான் என் செல்ல அத்தை... உங்களுக்கு ஒரு உம்மா... “ என்று போனிலயே கொஞ்சினாள்...
அவளின் அந்த கொஞ்சல் மொழியில் கிறங்கியவன்
“சரி சரி.. நீங்க அப்புறம் செல்லம் கொஞ்சிக்கங்க... இப்ப எந்த வீடு இந்த ராஜகுமாரியோட அரண்மனை னு சொல்றீங்களா ராஜகுமாரி.. “ என்று முறைத்தான்...
“இதுவரை என்னை பட்டிகாடுனு சொன்னவன் அவன் புள்ளைய காட்டி மிரட்டவும் பட்டிகாடு டக்கு னு ராஜகுமாரி ஆயிட்டனா... ஆகா.. இந்த மந்திரம் முன்னாடியே தெரியாமல் போயிருச்சே... இருக்கட்டும்.. இத வச்சே அவன் கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆட்டனும்... “ என்று சிரித்து கொண்டவள்
“ஹ்ம்ம்ம் அந்த தெருவுலயே எந்த வீட்ல பெருசா கோலம் போட்டிருக்காங்களோ அந்த வீடு தான் இந்த லவகுஷ ராஜகுமாரனோட மாமியார் வீடு... “ என்று சிரித்தாள்..
அவள் சொன்ன மாதிரியே ஒரு விட்டின் முன்னால் பெரிய கோலம் போட்டிருப்பதை கண்டவன்
“ஹே... எப்படி டீ?? நீ பார்க்காமலயே அப்படி கரெக்டா சொல்ற?? “ என்றான் ஆச்சர்யமாக..
“ஹா ஹா ஹா.. எங்க வீட்டை பத்தி எனக்கு தெரியாதா?? ... எந்த விஷேம்னாலும் இந்த லட்சு.. அதான் உங்க மாமியார் இருக்காங்களே காலையிலயே எழூந்து பெருசா கோலம் போட்டிருவாங்க... அவங்க எழுந்திருக்கறது இல்லாம என்னையும் காலையிலயே எழுப்பி விட்டிருவாங்க...
சாதாரண விஷேசத்துக்கே அப்படினா எங்க வீட்ல இன்னைக்கு ஒன்னுக்கு இரண்டு விஷேசம்... இந்த லட்சுவ இன்னைக்கு கையிலயே பிடிக்க முடியாது.. நைட்டெல்லாம் தூங்காம இத போட்டிருப்பாங்க... நான் இருந்திருந்தால் அவங்களுக்கு கொஞ்சம் உதவியா இருந்திருக்கும்.. “என்று கொஞ்சம் மனம் வாடினாள்...
அதை புரிந்து கொண்டவன்,
“சரி.. சரி.. ரொம்ப பீலிங்க்ஷ் காட்டாத.. நீ இல்லாம, உன் தொல்லை இல்லாம இங்க எல்லாம் நிம்மதியா இருப்பாங்க... சரி வீடு வந்திருச்சு.. நீ லைன்லயே இரு.. நான் போனை என் பாக்கெட்ல வச்சுக்கறேன்..
இந்த மாப்பிள்ளைக்கு உங்க வீட்டு வரவேற்பை நீயும் கேள்.. “என்று சிரித்துகொண்டே காரை ஒரு ஓரமாக அவர்கள் விட்டின் முன்னாள் நிறுத்தி, அவன் அலைபேசியை எடுத்து அவன் பாக்கெட்டுக்குள் வைத்தான்.. பின் ஜானகியும் அவனும் காரை விட்டு இறங்கினர்...
அதற்குள் காரின் சத்தம் கேட்டு பாரதி வீட்டில் இருந்து அனைவரும் வெளியில் வந்தனர்.. ஜானகி வீட்டிலிருந்து கிளம்பும் பொழுதே போன் பண்ணிச் சொல்லி இருந்ததால் அவர்களாகத்தான் இருக்கும் என்று அனைவரும் ஆர்வத்துடன் வாசலுக்கு வந்தனர்..
தர்மலிங்கத்தை தவிர மற்றவர்கள் யாரும் ஜானகியை பார்த்ததில்லை... வெறும் அலைபேசியில் பேசியதும் சில சமயம் வீடியோ காலில் பார்த்தது மட்டுமே... எனவே ஜானகியை காண அவர்கள் அனைவருமே ஆவலாக இருந்தனர்...
காரை விட்டு இறங்கியதும், அனைவரும் காரின் அருகில் வர, தர்மலிங்கத்தை கண்டதும் சிறு பெண்ணாக அண்ணா என்று அழைத்தவாறு ஓடி சென்று அவரை கட்டிகொண்டார் ஜானகி...
தர்மலிங்கத்துக்கு இது மாதிரி தன்னை அண்ணா என்று அழைத்து கட்டி கொள்ள இதுவரை யாரும் இருந்ததில்லை.. அதனால் ஜானகியின் அழைப்பிலும் அன்பான அணைப்பிலும் உருகி மனம் நிறைந்து முகத்தில் அவ்வளவு பெருமிதமாக ஜானகியின் தலையை தடவியவாறு
“எப்படி இருக்க ஜானகி மா..... “ என்றார் வாஞ்சையுடன்,… அதற்குள் தன்னிலைக்கு வந்திருந்த ஜானகி சிறு வெட்கத்துடன் அவரிடம் இருந்து விலகி
“ஹ்ம்ம் நல்லா இருக்கேன் ணா... “ என்று சிரித்தவாறு மற்றவர்களை பார்க்க, அருகில் இருந்த காமாட்சியையும் அம்மா என்று கட்டி கொண்டார்...
காமாட்சிக்கும் மனம் நிறைந்து இருந்தது.. அவருக்கும் தனக்கு ஒரு பொண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம்.. ஜானகி போனில் ஒவ்வொரு முறையும் அவரை அம்மா என்று அழைக்கும் பொழுதெல்லாம் அவர் மனமும் வயிறும் குளிர்ந்து போகும்..
தான் பெற்ற பெண்ணாகவே நினைப்பார் காமாட்சி... அதே பாசத்துடன் ஜானகியை இறுக்க கட்டிகொண்டு அவர் நெற்றியில் முத்தமிட்டார்... பின் அருகில் இருந்த லட்சுமியையும் கட்டி கொண்டு எப்படி இருக்கீங்க அண்ணி.. என்று நலம் விசாரித்தார் ஜானகி...
அனைவரும் ஜானகியின் அந்த அன்பில் நெஞ்சுருகி நின்றனர்...
ஆதிக்குமே இந்த மாதிரி தன் அன்னை இந்த குடும்பத்தில் ஒன்றி இருப்பது புதிதாக ஆச்சர்யமாக இருந்தது... ஏன் தன் சொந்த அண்ணா குடும்பமாகவே அவர் பாவித்ததும், மேலும் அந்த குடும்பத்தில் இருந்தவர்களின் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் இவர்கள் நல்லவர்கள் தான் என்று பறை சாட்ட அவன் முகத்திலும் புன்னகை அரும்பியது...
ஒரு வழியாக ஜானகி எல்லாரிடமும் செல்லம் கொஞ்சி முடித்த பிறகே தன்னுடன் வந்த அவர் பையன் நினைவு வர, சிரித்து கொண்டே பின்னால் திரும்பி பார்த்தார்...
ஆதி தன் பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு கொண்டு,
“மா... உங்க அண்ணனை பார்த்த சந்தோஷத்தில என்னை மறந்திட்டீங்களே!!! .. “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...
பாரதி குடும்பத்தினரும் அப்பொழுது தான் ஜானகியின் பின்னால் நின்றிருந்த ஆதியை பார்க்க, ஜானகியும் சிரித்துகொண்டே
“இவன் தாண்ணா.. உங்க மாப்பிள்ளை.. “என்று மாப்பிள்ளை என்பதை அழுத்தி சொன்னார்...
அவனின் அந்த ஆறடி உயரமும் சிவந்து கொலுகொலு வென்றிருந்த கன்னமும் , அலை அலையாக காற்றில் ஆடிய கேசமும் முகத்தில் அரும்பிய குறும்பு புன்னகையும் சிரிக்கும் கண்ணும் ஜீன்ஸ் டீசர்ட்ல் அவன் பாக்கெட்டுக்குள் கையை விட்டுகொண்டு ஸ்டைலாக நிற்கும் கம்பீரமும் ஒரு ராஜகுமாரனை போல நின்றிருந்தவனை கண்டு அவனை வியந்து பார்த்தனர் அனைவரும்..
அதுவும் பாரத் அவனை வச்ச கண் வாங்காமல் பார்த்தான்.. பார்த்த முதல் பார்வையிலயே அவனிடம் மயங்கி போனான்...
ஆதியும் சிரித்துகொண்டே முன்னே வந்து தர்மலிங்கத்தின் காலில் விழுந்து
“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா... “ என்று குனிந்தான்.. அவன் உதடுகள் எங்களை என்று மெதுவாக முனுமுனுத்தன..
பாரதியும் அங்கு நடப்பதை எல்லாம் கேட்டு கொண்டிருப்பதால் அவளும் தன் தந்தையின் காலில் மானசிகமாக் விழுந்தாள் ஆதியுடன் தன் தந்தையின் ஆசி வேண்டி..
ஆதியின் குரலை கேட்டதும், இந்த குரலை எங்கயோ கேட்டது நினைவு வர, அதற்கு மேல் ஆராய்ச்சி பண்ணாமல் தன் காலில் விழுந்தவனை குனிந்து பார்க்க, தர்மலிங்கத்திற்கு என்ன தோன்றியதோ.. தன் சின்ன பாப்பாவும் ஆதியும் மணக்கோலத்தில் அவர் காலில் விழுந்ததை போலவே தோன்றியது... அவர்களின் ஜோடி பொருத்தம் அருமையாக இருக்க அவர் கண்கள் நிறைந்து இருந்தது...
தன் காலில் விழுந்திருக்கும் மாப்பிள்ளையை உணர்ந்து தன் நிலைக்கு வந்தவர், அவசரமாக அவனை குனிந்து தூக்கி
“நல்லா இருங்க மாப்பிள்ளை...எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்... அந்த வடிவேலன் எப்பவும் துணை இருப்பான்... “என்று தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்...
தன் தந்தையின் குரலை போனில் கேட்டவளுக்கு மனம் எகிறி குதித்தது... அவரை அப்படியே கட்டி கொண்டாள் மானசீகமாக...
பின் ஆதி “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி.. “ என்று காமாட்சி காலில் விழ அவருக்கும் தன் பெண் வயிற்று பேரன் என்ற பெருமையுடன் அவனை தூக்கி ஆசிர்வாதம் பண்ணினார்...
பின் லட்சுமியிடமும் “ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை... “என்று விழ அவருக்கும் மனம் நிறைந்து போனது...அவர் வீட்டிலும் அவர் ஒரே மகள் என்பதால், அவளை உரிமையுடன் அத்தை என்று அழைக்க யாரும் இருந்ததில்லை..
ஈஸ்வர் அழைத்தாலும் அதில் ஒரு மறுமகன் என்று மரியாதை இருக்கும்.. ஏனோ ஆதியின் அத்தை என்ற அழைப்பில் உருகிபோனார் லட்சுமி
“இப்படி எந்த இரத்த சொந்தமே இல்லாதவன் தன்னை அத்தை என்று அழைக்கவும் அவரும் நெகிழ்ந்து அவனை தூக்கி ஆசிர்வாதம் பண்ணினார் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியுடன்...
“ஹ்ம்ம்ம் என்ன மாம்ஸ்.. என்னை கண்டுக்க மாட்டேங்குறீங்களே.. “என்று சிரித்தான் அருகில் நின்றிருந்த பாரத்....
அப்பொழுது தான் அவனை கவனித்தான் ஆதி.. அப்படியே பாரதி ஜாடையில் இருந்தான்... இவன் தான் அவளின் தம்பியாக இருக்கும் என்று புரிந்து கொண்டவன்,
“வாடா மச்சான்.. எப்படி இருக்க??.. “என்று அவனை கட்டி கொண்டான் சிரித்தவாறு...
“வாவ்.. சூப்பர் மாம்ஸ்... என்னை பத்தி தெரியுமா?? ... எப்படி தெரியும்?? “ என்றான் சந்தோஷத்தில்...
“ஹ்ம்ம்ம் அவ.. “ என்று சொல்ல வந்து நிறுத்தி கொண்டு அம்மா சொல்லி இருக்காங்க உங்க எல்லாரையும் பற்றி.. எனக்கு நேரம் இல்லாததால் உங்க கூடபேச முடியலை.. ஆனால் எப்பவும் உங்களை பற்றி பேச்சுதான் எங்க வீட்டில்.. “ என்று பாரதி எப்பவும் தன் குடும்பத்தை பற்றி பேசுவதை மறைமுகமாக சொன்னான்..
“ஓ.. அப்படியா .. தேங்க்ஷ் அத்தை எங்களை பற்றி எல்லாம் சொன்னதுக்கு.. என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்க...” என்று அவர் காலில் விழுந்தான் பாரத்
இதை எதிர்பார்க்காத ஜானகி பதறி தூக்கி
“நல்லா இரு கண்ணா... “ என்று கட்டி கொண்டார்..
“அப்புறம் மாம்ஸ்.. எப்படி இவ்வளவு உயரமா வளர்ந்தீங்க??... என்னாலயே உங்கள பார்க்க முடியல கழுத்து வலிக்குது.. “ என்று தன் குறும்பு பேச்சை ஆரம்பிக்க, அருகில் இருந்த அனைவரும் சிரிக்க, தர்மலிங்கமும் சிரித்து கொண்டே
“சரி.. எல்லாரும் வாங்க உள்ள போய் பேசலாம்.. வந்தவங்களை வாசலிலயே நிக்க வச்சுட்டமே.. “ என்று அனைவரையும் உள்ளே அழைத்து சென்றார்....
அவர்கள் முன்னே செல்ல ஜானகியும் ஆதியும் பின்னால் சென்றனர்.. வீட்டின் வாயிலை அடைந்ததும்
“கண்ணா.. இது தான் உன் மாமியார் வீடு.. இனிமேல் நீ வாழப்போற வீடு... வலது காலை எடுத்து வச்சு உள்ள போ.. “ என்று மெதுவாக அவன் காதில் சொல்லி கண் சிமிட்டினார்...
“மா... “ என்று செல்லமாக அவரை முறைத்துகொண்டே சிரித்தவாறு வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றான்..
பாரதிக்கும் ஜானகியின் குரல் கேட்கவும் அவளும் ஆதியுடன் அவன் கையை பிடித்து அவனுடன் ஒன்றாக வலது காலை எடுத்து வைத்தாள் மானசீகமாக..
ஆதிக்கு யாரோ தன் கையை பிடிப்பதாக தோன்றியது.. உடனே புரிந்தது அவள் தான் என்று.. அவனும் மனதுக்குள் அந்த காட்சியை நினைத்து கொண்டே உள்ளே சென்றான்...
முன்னே சென்ற தர்மலிங்கம் திரும்பி பார்க்க அதே நேரம் ஆதி உள்ளே வர, மீண்டும் அவருக்கு தன் மகளும் மாப்பிள்ளையும் மணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக உள்ளே சிரித்து கொண்டே வருவதை போலவே தோன்றியது.. இப்பொழுதும் அந்த காட்சியை கண்டு மனம் நிறைந்து நின்றார்...
ஏதோ நினைவு வர, உள்ளே வந்தவர்களை பூஜை அறைக்கு அழைத்து சென்று அந்த முருகனை வணங்கினார்..
“முருகா.. என்ன இது?? .. எனக்கு இப்படி ஒரு காட்சியை காமிச்சிருக்க... இது தான் உன் சித்தமா?? .. இவர்தான் என் சின்ன மாப்பிள்ளையா.?? .. பாப்பாவுக்கு பொருத்தமா இருக்கார்... இவரே எனக்கு மாப்பிளையா வரணும்....நீ தான் இரண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்.. “ என்று மனதுக்குள் வேண்டிகொண்டார்...
அந்த பூஜை அறையில் இருந்த சிங்கார வேலனும் நமட்டு சிரிப்பை சிரித்துக் கொண்டான்
பின் திருநீற்றை எடுத்து ஆதியின் நெற்றியில் வைத்துவிட்டார் தர்மலிங்கம்
.அதே மாதிரி ஜானகிக்கும் வைத்து விட ஆதி இன்னும் உருகி போனான் அவர் அன்பில்...
பின் அனைவரும் முற்றத்திற்கு வர, அறையின் உள்ளே இருந்து இந்திராவும் வெளியில் வந்து வெட்கத்துடன் புதியவர்களை நோக்கினாள்..
அப்படியே பாரதியை சிறுவயதில் பார்ப்பதை போல இருந்தது.. ஜானகி அவள் அருகில் சென்று அவர் கொண்டு வந்திருந்த ஸ்வீட் பாக்சை அவள் கையில் கொடுத்து பின் அவர் கொண்டு வந்திருந்த பூவை அவள் தலையில் வைத்து விட்டு அவளுக்கு நெட்டி முறித்தார்..
“அப்படியே உங்க பாரதி அக்கா மாதிரியே இருக்க டா ... அவ மாதிரியே நீயும் எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கணும்.. “ என்று அவளை கட்டி கொண்டார்...
பின் ஆதியையும் அறிமுக படுத்த இந்திராவும் மாமா என்று ஒட்டிக்கொண்டாள்..
அப்பொழுது மஹா வீட்டில் இருந்தும் அனைவரும் வந்தனர்..
அவர்களையும் அறிமுக படுத்தி வைக்க, மஹாவும் ஈஸ்வரும் ஜானகியின் காலில் விழுந்து வணங்கினர்.. பின் ஈஸ்வரை ஆதிக்கு அறிமுக படுத்த,
பாரதி சொன்ன பட்டிக்காட்டு விஞ்ஞானி என்பது நினைவு வர, அவன் முகத்தில் புன்னகை வந்தது... உதட்டை மடித்துகொண்டு சிரிப்பை அடக்கினான் ஆதி...
ஈஸ்வருக்கோ இவன் ஏன் இப்படி என்னை பார்த்து சிரிக்கிறான் என்று முழித்தாலும் ஆதியின் புன்னகை அவனையும் வசீகரிக்க, ஈஸ்வரும் சிரித்து கொண்டே நட்புடன் கை குழுக்கினான் ஆதியிடம்...
பின் மஹா வை அவனுக்கு அறிமுகபடுத்த மஹாவை என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் ஆதி முழிக்க,
“கண்ணா.. இவ உன் மாமா பொண்ணு..வயசுல சின்னவதான்.. அதனால் நீ மஹா னே கூப்பிடு....
மஹா மா.. இவன் உனக்கு மாமா முறை வேணும்.. நீ மாமானு கூப்பிடு..” என்று அறிமுக படுத்த
மஹாவும், “சரிங்க அத்தை.. எப்படி இருக்கீங்க மாமா..?? “ என்றாள் வெட்கத்துடன..
அதை கேட்டு ஆதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.. இதுவரை தன்னை யாரும் இந்த மாதிரி உறவு முறை சொல்லி அழைத்தது இல்லை.. பாரத், மஹா, இந்திரா என எல்லாரும் அவனை மாமா என்று அழைக்க அவனுக்கு என்னவோ புதிதாக பிறந்ததை போல இருந்தது...
திடீரென்று அவனுக்கு பெரிய மனுஷன் ஆன மாதிரியும் இவங்களை எல்லாம் நான் தான் பார்த்துக்கணும் என்ற பொருப்பு வந்த மாதிரியும் மனம் பரவசமாக இருந்தது...
சொந்தங்களின் அருமை அப்பொழுதான் புரிந்தது...
“சே .. இத எல்லாம் மிஸ் பண்ணிட்டோமே.. அதுவும் அந்த பட்டிக்காடு எப்படி இவர்களையெல்லாம் விட்டு வந்தாள்.. என் அம்மா மேல அவ்வளவு பாசமா?? அவங்க சொன்னாங்கனு கொஞ்சம் கூட யோசிக்காமல் எந்த பொண்ணும் செய்யத் துணியாத காரியத்தை பண்ணி இருக்காளே“ என்று யோசித்து நெகிழ்ந்து போனான்..
அப்பொழுது மஹாவின் மாமனார் மாமியார் ம் வந்துவிட, அவர்களும் இணைந்து கொள்ள எல்லாரும் சிறிது நேரம் சிரித்து பேசி கொண்டிருந்தனர்.. நொடிக்கொரு தரம் பாரதி இல்லையே என்ற குறை அனைவர் பேச்சிலும் வந்து விட அதை கேட்டு பாரதியே உருகி போனாள்...
பின் ஜானகி நினைவு வந்தவர் ஆதியிடம் காரில் இருந்த மற்ற ஸ்வீட்ஸ் மற்றும் பழங்களையும் மற்ற எல்லா பைகளையும் எடுத்து வர சொல்ல, பாரத் ம் அவன் உடன் சென்றான்..
பின் அனைவருக்கும் இனிப்பை கொடுக்க அந்த வீடே கலகவென்று ஆகியது...
ஜானகி தான் வாங்கி வந்திருந்த ஆடைகளை ஒவ்வொருக்கும் கொடுக்க, அனைவரும் முதலில் மறுத்தாலும் பின் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டனர்...
மஹா, ஈஸ்வர் மற்றும் அவன் அப்பா அம்மாவுக்கு மே தன் பரிசை கொடுக்கவும், அனைவரும் ஜானகியின் அன்பில் நெகிழ்ந்து நின்றனர்...
“இது மாதிரி செய்ய எனக்கு யாரும் நெருங்கிய சொந்தம் இல்லை... பாரதி மூலமா இப்பத்தான் எனக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு... இப்படியாவது என் ஆசையை தீர்த்து கொள்கிறேன்.. “ என்று ஜானகி கூறவும், லட்சுமி அவரை கட்டி கொண்டார் மகிழ்ச்சியுடன்...
அனைவரிடமும் சிரித்து பேசிய ஆதி மெதுவாக எழுந்து அந்த வீட்டின் பின் பக்கம் சென்றான்..
பின் தன் பாக்கெட்டில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன்
“ஹோய்... பட்டிக்காடு... என்ன இப்ப ஹேப்பியா??? வாயெல்லாம் பல்லா இருக்குமே.. ஆமா.. என்ன மயக்கி வச்சிருக்கியோ?? .. எல்லாரும் உன்னைத்தான் தேடறாங்க.. “ என்று சிரித்தான்... அவளும் இதுவரை அங்கு நடந்தவைகளை கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.. ஜானகியின் அன்பில் அவளும் உருகிதான் இருந்தாள்... பின் ஆதி அவள் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து
“ஹா ஹா ஹா .. இப்பவாது அந்த ராஜகுமாரனுக்கு தெரியுதா இந்த ராஜகுமாரியோட அருமை... எத்தன பேர் எனக்காக இருக்காங்கனு பாருங்க.. இது சும்மா ட்ரெய்லர் தான்.. இன்னும் எங்க ஊருக்குள்ள போய் பாருங்க மெயின் பிச்சரை....ஆடிப்போயிருவீங்க... எல்லாரும் பாரதி எப்ப வருவா எப்ப வருவா னு வழிமேல விழி வைத்து காத்துகிட்டிருக்காங்க.. “ என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்...
“ஹா ஹா ஹா ரொம்பத்தான் பெருமை அடிச்சிக்காத.. “ என்று முறைத்தான்
“அதான.. என்னை பத்தி பெருமையா பேச கேட்ட உங்களுக்கு காதுல புகை வருமே.. “என்று முகத்தை நொடித்தாள்.. பின்
“சரி.. இப்ப எங்க இருக்கீங்க??.. “என்றாள் ஆர்வமுடன்..
“ஹ்ம்ம்ம் இந்த ராஜகுமாரியின் அரண்மனையின் அந்தபுரத்தில இருக்கேன்.. “ என்று நக்கலடித்தவன்
“இருக்கிறதே ஒரு ஹால், 3 ரூம்... இதுல நான் எங்க போறது.. உன் வீட்டுக்கு பின்னாடி தான் இருக்கிறேன்.. “ என்றான் அவளை வம்பு இழுக்க..
அதை கண்டு கொள்ளாமல்
“வாவ்.. அப்ப என் மல்லிகா அங்க இருக்காளா?? “என்றாள் சந்தோஷத்தில்..
சுற்றிலும் தேடி பார்த்தவன்
“மல்லிகாவா?? .. அப்படி யாரும் இங்க இல்லையே.. ஆனால் உன் ப்ரென்ட் ஒன்னுதான் இங்க புல்லு சாப்பிட்டுகிட்டிருக்கு.. “ என்றான் நக்கலாக சிரித்தவாறு..
“ஆங்க்.. அவளேதான்... அவ தான் மல்லிகா.. “ என்று குதித்தாள் பாரதி..அதை கேட்டு
“ஐய.. ஏன் டி மாட்டுக்கு பேரா மல்லிகா.. “ என்று சிரித்தான்..
“ஆமா.. ஏன் மாட்டுக்கு பேர் வைக்க கூடாதா என்ன?? என் மல்லி என்கிட்ட தான் அவ்வளவு பாசமா இருப்பா தெரியுமா.. மத்த யார் கிட்ட போனாலும் அவளுக்கு பிடிக்காது.. இப்பதான் பாரத் கிட்ட ஒட்டி இருக்கா.. “ என்றாள் பெருமையாக..
அதை கேட்டு தலையில் அடித்து கொண்டான் ஆதி..
“எதுக்கெல்லாம் உனக்கு பெருமை டீ.. “ என்று..
“சரி... சரி .. கொஞ்சம் அவ கிட்ட போங்களேன்.. “ என்றாள் அதே உற்சாகத்துடன்..
அதை கேட்டு அதிர்ந்தவன்
“என்னது?? அது கிட்டயா?? எதுக்கு? என்னை முட்டறதுக்கா ?? கிராமத்து மாடெல்லாம் ரொம்ப violent ஆ இருக்குமாம்.. நான் மாட்டேன்.. “ என்று அலறினான்
“ஹா ஹா ஹா அவ ஒன்னும் செய்ய மாட்டா.. நீங்க கிட்ட போங்க.. “
“எதுக்குனு முதல்ல சொல்... .நான் கிட்ட போறதா இல்ல வேண்டா மா னு முடிவு பண்றேன்..” என்று முறைத்தான்..
“இவ பாட்டுக்கு நான் அவளை முன்பு படுத்தினதை எல்லாம் மனசுல வச்சு இன்னைக்கு நம்மள வச்சு ஏதாவது செஞ்சுட்டா?? “என்று முன்னெச்சரிக்கையாக விழித்து கொண்டான் ஆதி...
““ஹ்ம்ம் நான் அவகிட்ட பேசனும்.. ஒரு நிமிசம் இருங்க.. நான் வீடியோ கால் பண்றேன்.. அவகிட்ட காட்டுங்க.. “ என்று குதித்தாள் பாரதி..
“ஹ்ம்ம்ம் உனக்கெல்லாம் வாட்ஸ்அப் சொல்லி கொடுத்தது தப்பா போச்சுடி... எதுக்கெடுத்தாலும் அதுக்கு போய்டற.. “ என்று புலம்பி கொண்டிருக்கையிலயே அவன் அழைப்பை கட் பண்ணி வீடியோ கால் பண்ணி இருந்தாள் பாரதி...
அதை அட்டென்ட் பண்ணியவன் அப்படியே ஷாக் ஆகி நின்றான்..
ஆதியும் ஜானகியும் அதிகாலையில் பாரதியின் ஊருக்கு கிளம்பிய பின் பாரதி தன் அறைக்கு வந்து தூக்கத்தை தொடர முயல, அவன் அருகில் இல்லாமல் தூக்கமும் அருகில் வராமல் அடம்பிடிக்க சிறிது நேரம் புரண்டு புரண்டு படுத்தவள் வெகுநேரம் ஆகியே உறங்கினாள்..
பின் தாமதமாக எழுந்து வேகமாக குளியல் அறைக்குள் சென்று குளித்து வரவும் ஆதியிடம் இருந்து போன் வர அவசரத்தில் கப்போர்டில் முன்னால் இருந்த நைட்டியை எடுத்து மாட்டி கொண்டு அவனிடன் பேசினாள்..
அந்த போன் கால் அப்படியே தொடர, தன் ஊரையும் வீட்டையும் பார்த்த சந்தோசத்தில் போனை வைக்காமல் பேசி கொண்டிருக்க அவள் அணிந்திருந்த ஆடை மறந்து போயிருந்தது... அதே குஷியில் வீடியோ கால் பண்ண, ஆதி அவளின் அந்த கோலத்தை பார்த்து அசந்து நின்றான்..
இதுவரை அவன் முன்னே நைட்டி அணிந்தது இல்லை... முதல் முதலில் அவளை இரவு உடையில் க்லோசப்பில் பார்க்கவும் இமைக்க மறந்து அவளையே வச்ச கண் வாங்காமல் பார்த்தான்..
தான் அழைத்தற்கு அவனிடம் இருந்து பதில் வராமல் போகவும் அவனை பார்த்தவள் அவன் பார்வையில் இருந்த மாற்றத்தை கண்டு கொண்டவள் குனிந்து தன்னை பார்க்க அப்பொழுது தான் அவளின் கோலம் உறைத்தது...
“சீ.. “ என்று ஒரு கையால் பின்னால் இருந்த கேமராவை மூடிக்கொண்டவள் அவசரமாக தேடி அருகில் கிடந்த துப்பட்டாவை எடுத்து மேல போட்டு கொண்டு மீண்டும் கேமராவில் இருந்து கையை எடுத்தாள்...
அவன் இன்னும் அவளையே மையலுடன் பார்க்க, அவள் கன்னம் தானாக சிவக்க, இருந்தாலும் சமாளித்து கொண்டு.
“ம்ஹூம்...போதும் என்னை சைட் அடிச்சது.. நீங்க போனை மல்லி பக்கத்துல திருப்புங்க..” என்று முறைத்தாள்..
அவனும் அதற்குள் சமாளித்துகொண்டு குறும்பாக சிரித்தவாறு போனை திருப்பி கொஞ்சமாக அந்த மல்லியின் முன்னால் சென்றான்...
கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு அதன் முன்னே போனை காமிக்க, அதில் இருந்த பாரதி,
“ஹாய் மல்லி..” என்று கை ஆட்டி சிரித்தாள்..
புதியவனான அந்த நெடியவனை கண்டதும் முதலில் தன் கொம்பை ஆட்டிய மல்லி, பாரதியின் குரலை கேட்டதும் அப்படியே அடங்கி போனது.. போனையே சிறிது நேரம் உத்து பார்க்க, பின் தன் தோழியை கண்டு கொண்டு தலையை மேலும் கீழும் ஆட்டியது... காலை கீழ பரித்து அதன் சந்தோசத்தை காட்டியது... அதற்கு தகுந்தாற்போல அதன் கழுத்தில் தொங்கிய மணியும் ஆடியது...
அவளும் சிரித்து கொண்டே அதை கொஞ்ச , அதை தாங்க முடியாமல் போரடித்த ஆதி மெல்ல நிமிர்ந்தவன் அங்கே ஒரு நாய் நின்று கொண்டு அவனையே முறைச்சு பார்க்க, நடுங்கி போனான்....
“ஏய்... என்னடி இது??.. உங்க வீட்ல நாய் எல்லாம் ப்ரியா சுத்துது... கட்டி போட மாட்டீங்களா??.. அது வேற என்னையே முறைச்சுகிட்டு இருக்கு.. எப்ப மேல பாய்றது னு யோசிச்சுகிட்டிருக்கும் போல.. “ என்று அலறினான்...
அதை கேட்டு
“ஹா ஹா ஹா ... எங்க அத்தை என்னடான்ன என் பையன் எட்டு ஊரையும் கட்டி ஆள்ற ராஜகுமாரன் னு பீத்திக்கிறாங்க.. அந்த ராஜகுமாரன் என்னடான்னா ஒரு மாட்டு பக்கத்துல போறதுக்கும் ஒரு நாயை பார்த்தும் இப்படி பயந்து நடுங்கறீங்க.. “ என்று விழுந்து விழுந்து சிரித்தாள்..
“ஏய்.. உனக்கு என்ன விளையாட்டா இருக்கா??... நாய் கடிச்சா எத்தனை ஊசி போடனும் தெரியுமா... முதல்ல அத என்னான்னு கேள்... அப்புறம் நீ உன் மல்லிய கொஞ்சலாம்.. “என்று முறைத்தான்..
“சரி சரி.. ரொம்ப நடுங்காதிங்க பயந்தாங்கொள்ளி ராஜா வே .. அவன் என் மணியாதான் இருப்பான்.. நீங்க போனை அவன் கிட்ட காமிங்க.. “ என்று சிரித்தாள்...
அவனும் கொஞ்சம் பயந்து கொண்டே போனை திருப்ப, அதில் தெரிந்த தன் எஜமானியை கண்டு கொண்ட மணி வேகமாக பாய்ந்து வந்து போனை முத்தமிட்டான்.. இதை எதிர்பாராத ஆதி பயந்து போய் ஒரு எட்டி பின்னால் நகர்ந்து தன் ஐபோனை கெட்டியாக பிடித்துக்கொண்டான்…
அந்த மணியோ நாக்கால் நக்கி கொண்டிருந்தான் அவன் போனை...
“டேய் மணி.. எப்படி டா இருக்க?? “என்று பாரதி அவனை பார்த்து கத்தவும் அவன் இன்னும் குஷியாக வாலை வேகமாக ஆட்டினான்...
ஆதியோ இன்னும் பயந்து கொண்டு போனை கையில் இறுக்கி பிடித்தவாறு இருக்க, கொஞ்ச நேரம் அதை கொஞ்சி முடித்தவள்
“ஹே மணி.. அவர் நம்ம மாமா தான்.. அவரை ஒன்னும் பண்ணாத.. “ என்று ஆதியை அறிமுக படுத்தினாள்..
“அடிப்பாவி... இந்த நாய்க்கெல்லாம் போய் என்ன மாமாவாக்கிட்டாளே.. “ என்று மனதுக்குள் புலம்பினான்..
“சரி டா மணி .. எங்க மாமாவுக்கு ஷேக் ஹான்ட் கொடு.. “ என்கவும் அவன் தன் முன்னங்காலை தூக்கி கொண்டு அவனை பார்த்து வர அவன் அலறி பின்னால் நகர அதை கண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் பாரதி...
ஆதி அவளை முறைக்க தன் சிரிப்பை அடக்கி கொண்டு
“அவன் ஒன்னும் பண்ண மாட்டான்.. நீங்க குனிஞ்சு உங்க கையை நீட்டுங்க.. “என்று அவனுக்கு கைட் பண்ணினாள் இன்னும் சிரிப்பை அடக்கி கொண்டு.....
அவனும் அதே மாதிரி குனிந்து கையை நீட்டவும் மணி குஷியில் அவன் கையில் தன் முன்னங்காலை வைத்து வாலை ஆட்டினான்...
ஆதி முதலில் பயந்தாலும் மணியின் அந்த பாசம் அவனை ஈர்க்க மெல்ல துணிச்சல் வந்து அவன் கையால் அதன் கழுத்தை தடவ அதுக்கு இன்னும் குஷியாகி இங்கும் அங்கும் ஓடினான்..
அதை கண்டு சிரித்த பாரதி
“பார்த்தீங்களா.. உங்க கிட்ட ப்ரென்ட் ஆகிட்டான்.. “ என்று சிரிக்க அவன் தலையில் அடித்து கொண்டான்.. இன்னும் என்னென்ன எல்லாம் வளர்த்து வச்சிருக்கனு முன்னாடியே சொல்லிடு தாயே ... நான் எதுக்கும் தயாரா இருந்துக்கறேன்.. “ என்று சிரித்தான்...
“ஹ்ம்ம்ம் என் இன்னொரு தம்பி கொம்பன்... என் ஆட்டுக்கடா.. அவன்தான் எந்த ஊர்ல போட்டி வச்சாலும் அவனுக்குத்தான் முதல் பரிசு.. அவ்வளவு சூப்பரா சண்டைபோடுவான்...”
“இதுல என்ன டி அதிசயம்?? ..அவனுக்கு ட்ரெயினிங் கொடுக்கிறது நீயில்லையா... அப்புறம் எப்படி ஜெயிக்காமல் இருப்பான்... நீ தான் சண்டைனா முதல் ஆளாச்சே.. “ என்று சிரிக்க அவள் முறைத்தாள்....
“சரி சரி.. அந்த கெடா மாதிரி சிலுத்துக்காத.. மேல சொல்லு.. “
“ஹ்ம்ம்ம் அப்புறம் என் பாப்பு.. அதான் எங்க வீட்டு கோழி.. இப்போதைக்கு அவ்வளவுதான்.. கொம்பனும் பாப்புவும் வெளில போயிருப்பாங்க... நான் அப்புறம் அவங்களை பார்த்துக்கறேன்.. “ என்று நிறுத்தினாள்...
“ஸ்ஸ் அப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே... இதை எல்லாம் வச்சு நான் எப்படி சமாளிக்க போறேனோ?? “என்று சிரித்துகொண்டே புலம்பியவன் பார்வை வீட்டின் பின்னால் செல்ல அங்கு கண்ட காட்சியில் மெய் சிலிர்த்து நின்றான்...
எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற வயல்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும்.. முன்பு அங்கு நெல்,வாழை, கரும்பு என்று வளர்ந்து நின்ற பயிர்கள் குறுகி இப்பொழுது எல்லாம் குறுகிய காலத்தில் பயன் தரும் குறுஞ்செடிகளாக மாறி இருந்தன...
பாத்தி பாத்தியாக விதவிதமான கீரைகள் பயிரிடப் பட்டிருந்தன.. அதுவும் அருகில் இருந்த கொத்தமல்லி பாத்தியில் இருந்து வந்த வாசம் மனதை மயக்கியது.. கீரை பாத்தியை தாண்டி பூந்தோட்டங்களாக காட்சி அளித்தன..
செவ்வந்தி, சாமந்தி, சம்மங்கி என்று விதவிதமான பூக்கள் பூத்து குழுங்கின.. அதிலும் சம்மங்கி செடியில் இருந்த வெள்ளை வெலேரென்ற நீண்ட பூக்களும் அதிலிருந்து வந்த மணமும் அந்த இடத்தை ரம்மியமாக்கி காட்டியது...
அதை கண்டு வியந்து நின்றான் ஆதி .. இப்படி எல்லாம் இதுவரை அவன் பார்த்ததில்லை....
“வாவ்.. சூப்பரா இருக்கு டீ உங்க தோட்டம்.... “ என்று வியந்தான்..
“ஏன் டி இப்படி எல்லாம் இருக்கும் னு சொல்லவே இல்லை.. எப்ப பார் உங்க குடும்பத்தைப் பற்றியே கதை அடிச்சியே..இந்த மாதிரி சீனரிஸ் இருக்குனு சொன்னியா “ என்றான்..
அவளுமே அறிந்திருக்கவில்லை இந்த மாதிரி தன் வீட்டு தோட்டம் செழித்து வளர்ந்திருக்கும் என்று..
முன்பு தண்ணி இல்லாததால் வறண்டு கிடந்த நிலம் அது.. தர்மலிங்கம் ஆபரேசனுக்கு பிறகு வயலுக்குள் இறங்க கூடாது என்று சொல்லி இருந்தாள் பாரதி.. அப்பவும் பொழுது போகாததால் ஏதோ ஈஸ்வர் சொல்லி சின்னதாக தோட்டம் போட்டிருப்பதாக சொன்னார்... ஆனால் இந்த அளவுக்கு கொண்டு வந்திருப்பாங்க என்று அவள் நினைக்க வில்லை.. அவளிடம் யாரும் சொல்ல வில்லை.. சொன்னால் அவள் தடுத்து விடுவாள் என்று தெரிந்ததால்..
அவன் சொன்னதை கேட்டு,
”எங்க போன அந்த பக்கம் திருப்புங்க..” என்றாள்.. அவனும் திருப்பி காட்ட, அந்த தோட்டத்தின் அழகில் மயங்கி போனாள்.. அப்படியே அந்த தோட்டத்தின் நடுவில் குதித்து ஓட வேண்டும் போல கால்கள் பரபரத்தன..
இப்பயே இங்கு பறந்து வர வேண்டும் போல இருந்தது அவளுக்கு.. அவளின் கண்களில் தெரிந்த அந்த பளபளப்பையும் அவளின் ஏக்கத்தையும் கண்டவன் அதை மாற்ற எண்ணி,
“ஹே... இரு டி .. இந்த தோட்டத்தை என் பிரின்ஸஸ்க்கு காட்டறேன்.. “என்றவன் தன் ஐபோனை இன்னும் சூம் பண்ணி அங்கு தெரிந்த பூந்தோட்டத்தை காட்டி
“ஹே.. பிரின்ஸஸ்... பார்த்தியா... உன் பட்டிக்காட்டு தாத்தா பாட்டியோட தோட்டம் எவ்வளவு சூப்பரா இருக்குனு... நீ பிறந்ததுக்கப்புறம் இங்க வந்து ஜாலியா ஓடி விளையடலாம்...நான் உன் கையை புடிச்சுகிட்டே நடந்து வருவேனாம்.... ” என்று அவன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, பாரதியோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்...
அருமையான பதிவு
ReplyDeleteAyyo yarachum parthutangalo
ReplyDelete