என் மடியில் பூத்த மலரே-31



அத்தியாயம்-31

தி தன் இளவரசியிடம் உன் தாத்தா பாட்டி என்று பாரதியின் பெற்றோர்களை அறிமுகப்படுத்த, அதை கேட்டு உறைந்து சிலையாகி நின்றாள் பாரதி இன்ப அதிர்ச்சியில்..

ஆதி இதுவரைக்கும் அவனையும் ஜானகி மற்றும் சுசிலா வை மட்டுமே அவன் குழந்தையிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறான்... பாரதியை பற்றி எதுவும் சொல்லியதில்லை.. ஏன் இதுவரைக்கும் அவளை அவன் குழந்தைக்கு தாயாக அறிமுக படுத்தியதில்லை...

வழக்கமாக ஒரு தாய்தான் தன் குழந்தைக்கு அதன் அப்பாவையும் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அறிமுகபடுத்துவாள்.. இங்கு அந்த கதையே மாறி இருந்தது..

பாரதி தன்னை ஒரு வாடகைத்தாயாக மட்டுமே எண்ணி இருந்ததால் அவள் தன்னை பற்றி எதுவும் அந்த குழந்தையிடம் சொன்னதில்லை... தன்னை அந்த குழந்தையின் தாயாகவும் நினைத்ததும் இல்லை.. இன்று வரைக்கும் தன் வயிற்றில் இருப்பது ஆதியின் குழந்தை , ஜானகி அத்தை வீட்டு வாரிசு என்று மட்டுமே எண்ணி இருந்தாள்..

ஆரம்பத்தில் இருந்தே அந்த குழந்தைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தள்ளி இருந்ததால் அவளும் எதுவும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை..திருமணம் முடிந்து அவள் முறைப்படி ஆதியின் மனைவியான பிறகும் கூட அவன் தன்னை மனதார மனைவியாக ஏற்றுக்கொள்ளாததால் தன்னை பற்றி அந்த குழந்தையிடம் எதுவும் சொல்லியதில்லை...

அவளை பொறுத்தவரை அவள் அந்த குழந்தையை சுமக்கும் ஒரு வாடகைத்தாய்.. பிறந்ததுக்கப்புறம் அவள் ஒரு பேபி சிட்டர்.... அவ்வளவுதான் அவளுக்கும் அந்த குழந்தைக்கும் உள்ள தொடர்பு என்று எண்ணி அதற்கு தகுந்த மாதிரி தன்னை தயார் படுத்தி இருந்தாள்..

ஆனால் இன்று முதல் முதலாக தன் பக்கம் இருக்கும் உறவு முறைகளை ஆதி அவன் மகளுக்கு அறிமுக படுத்தவும், முதல் முறையாக அவளுள் சிலிர்த்தது... அப்ப அவன் என்னை அவன் மனைவியாக ஏற்றுக் கொண்டானா?? என்று மீண்டும் அவளையே கேட்டுக்கொண்டாள்..

“இல்லையே... என்னை ஒரு பேபி சிட்டர்னு தான சொன்னான்.. என் பொருப்பு அது மட்டுமே... ஏன் இதுவரை அவன் மனம் திறந்து என்னை அவன் மனைவியாக ஏற்று கொள்ளவில்லையே...

இப்பொழுது அவன் நடந்து கொள்வது எல்லாம் கூட நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நான் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அவன் மகள் நன்றாக இருப்பாள் என்ற காரணத்துக்காக மட்டும் தான்... “ என்று அவளே முடிவு செய்து மீண்டும் தன் மனதுக்கு கடிவாளம் இட்டு தன் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து அவன் பேசுவதை மீண்டும் கவனித்தாள்..

அவன் வழக்கம் போல தன் இளவரசியுடன் கதை அடித்து கொண்டிருந்தான்..

அப்பொழுது

“மாம்ஸ்.. நீங்க இங்கயா இருக்கீங்க.. “ என்றபடியே பாரத் ஆதியை நோக்கி பின்புறம் வந்தான்... அவனை கண்டதும்

“ஹே .. பிரின்ஸஸ்.. அங்க பார் உன் மாமா வர்ரான்...எப்படி ஒட்டடை குச்சி மாதிரி இருக்கான் பார்... “ என்று ஓரக்கண்ணால் பாரதியை பார்த்து சிரித்தவாறு அவன் மொபைலை பாரத் பக்கம் லேசாக திருப்பி காட்டினான்...

பாரதியும் தன் தம்பி பாரத் நடந்து வருவதை கண்டதும்

“எவ்வளவு வளர்ந்துட்டான் இந்த பய.... அதுவும் அவன் முகத்தில் இருந்த சிரிப்பும் ஆதியை செல்லமாக மாம்ஸ் என்று அழைப்பதும் என்னவோ இரண்டு பேரும் ரொம்ப நாட்கள் பழகியதை போல இருந்தது அவளுக்கு... அதை கண்டதும் கண்கள் நிறைந்து இருந்தது...

அவன் அருகில் வரவும் போனை எடுத்து பாக்கெட்டில் போட்டு கொண்டான்..

அவன் அருகில் வந்ததும் மீண்டும்

“மாம்ஸ்.. இங்க என்ன பண்ணிகிட்டிருக்கீங்க??... உங்கள எங்க எல்லாம் தேடறது.. ஒருவேளை எங்க ஊர பார்த்த உடனே அப்படியே ஓடிட்டீங்களோ னு நினைத்தேன்.. “என்று சிரித்தான்..

“ஹா ஹா ஹா அவ்வளவு சீக்கிரம் உங்க ஊரை விட்டு போக முடியுமா..?? அப்படியான பந்தமா இது?? “ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டவன்

“இங்க இந்த சீனரிஸ் எல்லாம் நல்லா இருக்கு மச்சான்.. அதான் ரசிச்சுகிட்டு இருக்கேன்..” என்றான் ஆதி..

“ஹீ ஹி ஹீ... இதுல என்ன இருக்கு மாம்ஸ்.. பங்சன் முடிஞ்சதும் எங்க ஊரை சுத்தி காட்டறேன்.. அப்ப பாருங்க... அசந்து போயிருவீங்க... ஹ்ம்ம்ம் இந்த வீட்டுக்கு பின்னாடி என்ன இருக்கோ?? ..

எங்க பாரதி அக்காவும் எப்ப பார் இங்கயே வந்து உட்கார்ந்து கிட்டு இந்த மாடு, ஆடு , நாய்னு கொஞ்சி கிட்டே இருப்பா.. அதே மாதிரி நீங்களும் இங்க வந்து நின்னுகிட்டிருக்கீங்க..“ என்று சிரித்தான்..

“ஆமா... உனக்கு பாரதிய புடிக்குமா?? இல்ல மஹாவ புடிக்குமா?? ”என்று அவன வாயை கிழறினான் ஆதி...பாரதியை வெறுப்பேத்த

“ஹ்ம்ம்ம் எனக்கு எங்க வீட்ல இருக்கிற எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் மாம்ஸ்... ஆனால் பாரதி அக்கா ஸ்பெஷல்.. அவ கூட எப்பயும் சண்டை போட்டுகிட்டே இருப்பேன்.. ஆனாலும் எனக்கு ஒன்னுன்னா அவளால தாங்க முடியாது....என்னை எப்பவும் விட்டு கொடுக்க மாட்டா...

எங்க வீட்ல எதுனாலும் அவதான் முன்னாடி இருந்து செய்வா... இந்த பங்சன்க்கு அவ இல்லையேனு வருத்தமா இருக்கு.. ரொம்ப மிஸ் பண்றேன் அவளை.. “ என்று தழுதழுத்தான்...

அதை கேட்டு பாரதியின் கண்களும் கலங்கியது...

“டேய் மச்சான்.. ரொம்ப பீல் பண்ணாத.. அதான் நான் இருக்கேன் இல்ல.. உங்க அக்கா இடத்துல இருந்து என்ன செய்யணுமோ எல்லாம் பண்ணி கலக்கிடலாம்... “ என்று அவனை தட்டி கொடுத்தான்...அவனும் சமாளித்துக் கொண்டு

“ஹ்ம்ம்ம் தேங்க்ஷ் மாம்ஸ்... சரி வாங்க போகலாம்.. எல்லாரும் உங்களுக்காக காத்துகிட்டிருக்காங்க..”

“சரி.. நீ போடா.. நான் ஒரு போட்டோ எடுக்கனும்.. எடுத்துகிட்டு வந்திடறேன்.. “என்று அவனை முன்னே அனுப்பி பின் அவன் போனை எடுக்க, அதற்குள் பாரதி தன் கண்ணை துடைத்து கொண்டு தன்னை கட்டு படுத்திக் கொண்டாள்...

“ஏய் பட்டிக்காடு.. என்ன பாசமலர் எபக்ட்க்கு போய்ட்டியா?? சரி..சரி... ரொம்ப பீல் பண்ணாத... சீக்கிரம் உன் அருமை தம்பியை நீ பார்க்கலாம்.. “ என்றான் சிரித்தவாறு..

அவளும் சரி என்று தலை ஆட்ட

“சரி நான் போன வச்சிடறேன்.. பங்சன் ஆரம்பிக்கிறப்போ உனக்கு லைவ் ஆ வாட்ஸ்அப் ல ஷேர் பண்றேன்... நீ போய் இப்ப சாப்டிட்டு மத்த வேலைய பார்... நான் அப்புறம் கால் பண்றேன்.. என் பேபிக்கு ஒரு கிஸ் இப்போ.... “என்று ஒரு ப்ளையிங்க் கிஸ் ஐ பறக்க விட்டு தன் அலைபேசியை அனைத்தான்.. பின் அங்கிருந்து வீட்டுக்குள் வர,

தர்மலிங்கம் ஜானகிக்கும் ஆதிக்கும் தான் எடுத்திருந்த துணியை கொடுக்க, ஜானகி வேண்டாம் என்று மறுத்தார்..

“இந்த அண்ணன் உனக்காக வாங்கியது ஜானகி மா.. மறுக்காமல் வாங்கிக்கோ.. “ என்றார்... அவருக்கான அந்த பட்டு புடவையை எடுக்க அதன் உடன் இன்னொரு புடவையும் சேர்ந்து வர

“அது என்னதுண்ணா.. ?”என்றார் ஆர்வம் மிகுதியில்...

“இது பாரதிக்காக வாங்கியது மா.. அது எப்படியோ உங்க துணியோட சேர்ந்து வந்திருச்சு.. லட்சுமி.. இத கொண்டு போய் உள்ள வை.. பாப்பா வரும்பொழுது கொடுக்கலாம்.. “என்றார்..

“இருக்கட்டும் அண்ணா... அந்த புடவையும் எங்களோடதோடயே இருக்கட்டும்.. நான் யாராவது சிங்கப்பூர் போனா பாரதி கிட்ட கொடுக்க சொல்லி கொடுததிடறேன்.. நான் இத எடுத்துகிட்டு போறேன்.. “என்றார்..

“இதுவும் நல்ல யோசனை தான்... அப்ப நீயே இத பாப்பாகிட்ட கொடுத்துடும்மா... “என்று சிரித்தார்...

பின் ஜானகி தன் அண்ணன் வாங்கி கொடுத்த பட்டுபுடவையை கட்டிக் கொண்டு வர, ஆதியையும் அவன் மாமனார் வாங்கி கொடுத்த வேட்டி சட்டை யை போட சொல்ல, அவனும் அதை வாங்கி கொண்டு உள்ளே சென்று தன் ஆடையை மாற்றி வந்தான்...

வேட்டி சட்டையில் இன்னும் கம்பீரமாக இருந்தான் ஆதி ... அதை கண்டதும் தர்மலிங்கத்தின் கண்கள் நிறைந்து நின்றன..அவனை பார்க்கையில் பாரதியும் அவன் கூடவே இருந்து சிரித்து கொண்டிருப்பதை போலவே இருந்தது அவருக்கு... அது என்ன இவனை பார்க்கையில் மட்டும் அந்த மாதிரி எண்ணம் வருகிறது என்று யோசித்தார்...

அதற்குள் காமாட்சி ஆதியின் அருகில் வந்து

“அப்படியே ராஜகுமாரானாட்டம் இருக்கானே என் பேரன்... என் கண்ணே பட்டுடும் போல இருக்கு... “ என்று அவனுக்கு நெட்டி முறித்து அவனை கட்டிக் கொண்டார்... ஆதியும் அவரின் அன்பில் நெகிழ்ந்து அவரை மெல்ல அணைத்துக் கொண்டான்... அவருக்கு இன்னும் சந்தோஷமாகஇருந்தது..

ஜானகியும் அதை கண்டு கண்கள் பூரித்து போயின.. இருவருக்குமே இது ஒரு புது விதமான பாசமாக இருந்தது..

ஆதி சிறுவயதிலயே ராம் குமாரின் பெற்றோர்கள் இறந்து விட, ஜானகி பக்கமும் நெருங்கிய சொந்தங்கள் என்று எதுவும் இல்லாததால் ஆதிக்கு தாத்தா, பாட்டி, மாமா அத்தை என்று கொஞ்சி மகிழ யாரும் இல்லை..

ராம்குமாரே எல்லாமாக இருந்து அவர்கள் இருவருக்கும் எந்த ஏக்கமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்... ஆனால் முதல் முறையாக இப்படி சொந்தங்களுடன் கலந்து இருக்கும் பொழுது மனம் நிறைந்து நின்றது இருவருக்கும்...

வாழ்வில் எவ்வளவு தான் வசதி இருந்தபொழுதும் இந்த மாதிரி ஒரு இயல்பான சொந்தங்களின் இடையே கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது... என்று புரிந்தது இருவருக்கும்.. இதுக்கெல்லாம் காரணமான பாரதிக்கு நன்றி சொல்லினர் இருவரும் மானசீகமாக..

பின் மஹா இந்திராவுக்கு மேக்கப் பண்ணி விட, ஜானகி மஹாவுக்கு தலை பின்னி, பூ சுற்றி அவளையும் அழகாக அழங்கரித்தார்.. இந்திராவுக்கு தான் வாங்கி வந்திருந்த பட்டு புடவையையே கட்ட வைத்து இதிராவும் மஹாவும் வெளியில் வர, ஈஸ்வர் அப்படியே மயங்கி நின்றான் மஹாவை கண்டு..

“என்ன ப்ரதர்?? ... என் மாமா பொண்ணையே அப்படி பார்க்கிறீங்க..பாத்து.. என்னதான் நீங்க ஹஸ்பன்ட் னாலும் எனக்கு பின்னாடி தான் நீங்க... “என்று ஆதி கிண்டலடித்தான்..

பார்த்த சிறிது நேரத்திலயே ஆதிக்கும் ஈஸ்வருக்கும் நல்ல ஒரு நட்பு உண்டாகியது... அவ்வளவு வசதி இருந்தும் ஆதி ஒரு பந்தாவும் இல்லாமல் இருப்பதை கண்ட ஈஸ்வர் இன்னும் நெருங்கி வந்தான்.. பாரத் சொல்லவே வேண்டாம்.. ஆதி அவனுக்கு ஹீரோவாகி இருந்தான்... அவனுடன் சுத்தி கொண்டிருந்தான் பாரத்...

ஒரு வழியாக அனைவரும் கிளம்பி ஆதி காரிலயே விழா நடைபெரும் அந்த முருகன் கோவிலுக்கு சென்றனர்.. அங்கு இருந்த மண்டபத்திலயே பங்சனும் பின் விருந்திற்கும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது..

பாரதி அலைபேசியிலயே எல்லா ஏற்பாடுகளையும் சொல்லி இருக்க ஈஸ்வரும் பாரத்தும் எல்லா ஏற்பாடுகளை நேற்றே பார்த்து கொண்டனர்..

மண்டபத்தின் ஓரமாக இருந்த மேடையில் எளிதாக பூ அலங்காரம் செய்து அதன் நடுவே பங்சனுக்கான நாற்காலி வைக்க பட்டிருந்தது... முதலில் இந்திராவுக்கான சடங்குகள் என்பதால், நாற்காலியின் முன்னே உறவுக்காரர்கள் மற்றும் பங்காளிகள் ,ஊரில் தெரிந்தவர்கள் என்று எல்லாரும் தங்கள் சீர் வரிசை தட்டுக்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர்..

ஒவ்வொடு தட்டிலும் புடவை, சுடிதார், தாவணி பாவாடை என்று துணிவகைகளும் சில தட்டுக்களில் விதவிதமான பாத்திரங்களும் சீர் வரிசையாக அடுக்கி வைக்க பட்டிருந்தன..

தர்மலிங்கம், ஈஸ்வர் மற்றும் அவன் பெற்றோர்கள் வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்க, ஜானகி எல்லா சடங்குகளுக்கும் தேவையான பொருட்களை எடுத்து வைப்பதில் லட்சுமிக்கு உதவிக் கொண்டிருந்தார்..

கமலா டாக்டர் வந்திருக்க, அவரை கண்டதும் ஆதி வாசலுக்கு சென்று வரவேற்றான்.. அவனை கண்ட கமலாவும்

“என்ன மாப்பிள்ளை?? எப்படி இருக்கீங்க.. எங்க பொண்ணு நல்லா இருக்காளா?? உங்களை நல்லா கவனிச்சுக்கறா போல?? கொஞ்சம் வெய்ட் போட்ட மாதிரி தெரியுதே.. “ என்று சிரித்துக் கொண்டே ஆதியை கிண்டல் செய்தார்.....

“ஹா ஹா ஹா.. அவளுக்கு என்ன?? நல்லா இருக்கா அத்தை.. இங்க வர முடியலையேனு தான் அவளுக்கு வருத்தம்.... “ என்று சிரித்தான்..

அதற்குள் தர்மலிங்கம் அருகில் வர, அதோடு தங்கள் பேச்சை நிறுத்தினர்.. அவரும் கமலாவை வரவேற்று ஜானகியிடம் அனுப்பி வைத்தார்..

அப்பொழுது இந்திராவுக்கு சடங்கு செய்பவர் திருச்சியில் ஒரு விஷேசத்துக்கு சென்று விட்டு இங்கு வருவதாக இருந்தவர் வழியில் மாட்டி கொண்டதாகவும் அடுத்த பஸ் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு தான்.. யாரும் இந்த பக்கம் வருபவர்கள் இல்லை என்பதாக கையை பிசைந்தார்..

அதோடு இன்னும் சில உறவினர்களும் பஸ் ஐ விட்டு விட்டதாக தர்மலிங்கம் வறுத்தப்பட, ஆதி தானே சென்று அவர்களை அழைத்து வருவதாக கூறி பாரத் ஐயும் உடன் அழைத்து கொண்டு தன் காரை எடுத்து கொண்டு சென்றான்...

அதே மாதிரி இரண்டு முறை மீண்டும் அலைய வேண்டியதாயிருந்தது...ஆதியும் சளைக்காமல் சென்று கூட்டி வர, தர்மலிங்கம் இன்னும் பூரித்து போனார்...

ஒரு வழியாக எல்லாரும் வந்து விட இந்திராவுக்கான சடங்குகள் ஆரம்பமாகின....

பாரதியும் ஜானகியும் சேர்ந்து தேர்வு செய்திருந்த பட்டு புடவையில் பெரிய பெண்ணாக இருந்தாள் இந்திரா...

“தாய் மாமா யாருங்க??.. பாப்பாவுக்கு மாலையை போட்டு இந்த சந்தனத்தை பூசுங்க.. “ என்று சொல்லவும் அருகில் நின்று கொண்டிருந்த ஆதி முன்னால் வந்தான்...

பின் மாலையை எடுத்து இந்திராவின் கழுத்தில் போட்டு, சந்தனத்தை பூச, இந்திரா கொஞ்சமாக வெக்கபட்டு சிரித்தாள் அவனை பார்த்து...

ஆதிக்குமே இந்த சடங்குகள் எல்லாம் புதிது என்பதால் அவனுமே கொஞ்சமாக வெக்கத்துடன் சிரித்தான்..

ஆதி பாரதியின் வாட்ஸ்அப்பில் அவளுடைய கேமராவை ம்யூட் செய்து, அவள் முகம் தெரியாமல், இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்குமாறு பாரதியிடம் விளக்கியிருக்க, அவளும் அதே மாதிரி பாரத்திற்கு வீடியோ கால் பண்ண, பாரத் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பாரதிக்கு காட்டி கொண்டிருந்தான்...

ஆதி இந்திராவுக்கு மாலை போட்ட சீனை கண்டு பாரதிக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி... .தன் குட்டி தங்கை இவ்வளவு வளர்ந்து விட்டாளே என்றும் வாய் ஓயாமல் வாயடிப்பவள் இவ்வளவு அடக்க ஒடுக்கமாக அழகா வெட்க படறாளே .. என்று மனம் பூரித்தது...

அதை விட தன் கணவனின் முகத்தை கண்டவள் அவன் கொஞ்சமாக வெக்க பட்டு சிரிக்கவும் அப்படியே சொக்கி போனாள் பாரதி..

இதுவரை அவன் சிரித்ததைவிட அவன் முறைத்ததைத்தான் அதிகம் பார்த்திருக்கிறாள்.. ஏதோ அவன் அம்மாக்கள் முன்னாடி வாய் விட்டு சிரித்திருக்கிறான்.. மற்றபடி இப்பொழுது தான் மெல்ல அவளிடம் சிரிக்க ஆரம்பித்திருக்கிறான்..

அதுவும் முக்கால் வாசி அவளை கிண்டல் செய்தே சிரித்திருக்கிறான்.. முதல் முறையாக அவன் வெக்க பட்டு சிரிப்பதை கண்டவளுக்கு அந்த அழகில் அப்படியே மயங்கி நின்றாள்..

“வேட்டி சட்டையில் கலக்கற டா என் ராசா... அழகன் டா நீ ... “ என்று அவனுக்கு நெட்டி முறித்தாள் இங்கிருந்த படியே

பின் இந்திராவுக்கு தலை சுத்தி எல்லா சடங்குகளும் முடிய

“ தாய் மாமா விட்டு சீரை எடுத்து பொண்ணு கிட்ட கொடுங்க “என்று சொல்ல, ஜானகி குனிந்து ஒரு தட்டை எடுத்தார்.. அதில் ஒரு பட்டுபுடவையும், இந்திராவுக்கான சோப், சீப், கண்ணாடி, பவுடர், பொட்டு மற்றும் அவளுக்கு மேக்கப்பில் விருப்பம் இருப்பதால் அவளுக்கு பிடித்த லிப்ச்டிக், கண் மை என்று இன்னும் சில மேக்கப் ஐட்டங்களையும் பாரதி வாங்கி அனுப்பி இருந்தாள்..

அதை எல்லாம் தட்டில் வைத்து அதன் மேல் ஒரு பாக்கெட் நிறைய சாக்லெட்டும் பின் ஜானகி வாங்கி வந்திருந்த டாலர் செயினையும் வைத்து ஆதியும் ஜானகியும் சேர்ந்து அந்த தட்டை இந்திராவிடம் கொடுக்க, அவளும் மெல்ல வெக்கபட்டு சிரித்து கொண்டே அதை வாங்கி கொண்டு இருவர் காலிலும் விழுந்து வணங்கினாள்...

பின் இன்னொரு தட்டில் அதே மாதிரி அடுக்கி அதன் மீது ஒரு நெக்லசை வைத்து இருந்த தட்டையும் ஜானகி எடுத்து கொடுக்க, அருகில் இருந்த லட்சுமி பதறி

“எதற்கு இரண்டு தட்டு அண்ணி?? “ என்று மறுக்க, ஒன்னு தாய்மாமன் சீர்.. இன்னொன்னு இந்த அத்தயோட தனி பட்ட சீர்...நீங்க எதுவும் சொல்லாமல் சும்மா இருங்க அண்ணி.. “ என்று லட்சுமியை அடக்கினார் ஜானகி சிரித்தவாறு....

பாரதிக்கு இப்பொழுது திருமணம் ஆகி இருப்பதால் அவள் சார்பாக அக்கா முறைக்கு சீர் செய்ய வேண்டும் என்பது முறை.. அதனாலயே தாய் மாமன் சீர் ஒன்றும் அக்காவின் சீர் ஒன்றும் என்று இரண்டு தட்டுக்களை வைத்திருந்தார் ஜானகி... ஆனால் அதை இப்பொழுது சொல்ல முடியாததால் ஏதோ காரணத்தை சொல்லி சமாளித்தார்...

அதை கண்ட பாரதி அவரின் எண்ணம் புரிந்து இன்னும் நெகிழ்ந்து போனாள்..

பின் மஹா, ஈஸ்வர் அவன் பெற்றோர்கள் சேர்ந்து பெரிய அக்கா வீட்டு சீராக அவளுக்கு ப்ரேஸ்லெட் ம் மோதிரமும் பரிசளிக்க,, இந்திராவுக்கு ரொம்ப குஷியாகி போனது...

இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த பாரத்திற்கோ காதில் புகை வந்தது..

“சே.. பேசாம நாமலும் பொண்ணா பிறந்திருக்கலாம் போல.. எத்தனை கிப்ட் தர்ராங்க.. என்னை யாராவது கண்டுக்கறாங்களா?? .. ஐயோ.. இந்த எட்டப்பி இனிமேல் இதை சொல்லியே என்னை ஓட்டுவாளே.. “ என்று பொறுமிக் கொண்டிருக்க இவன் மனதை அறிந்தவளாக இந்திராவும் அவன் பக்கம் பார்த்து கண்ணால் ஜாடை செய்தாள் அவளுக்கு வந்த பரிசு பொருட்களை காட்டி...

அதை கண்டு பாரத் கடுப்பாகி அவளை முறைக்க, அவனுக்கு அழகு காட்டி சிரித்தாள் அவன் செல்ல தங்கை.. இவர்களின் சண்டையை பாரதி புரிந்து கொண்டு சிரித்து கொண்டாள்...

இந்திராவின் சடங்குகள் எல்லாம் முடிய, அந்த இடத்தை ஒதுக்கி வைத்து அடுத்து மஹாவிற்கான சடங்கு ஆரம்பித்தது...

ஏற்கனவே தயராக வைத்திருந்த வளைகாப்பிற்கான தட்டுக்களை எடுத்து வந்து உறவு பெண்கள் முன்னால் வைக்க, அடுத்து மஹாவை அழைத்து வந்தார் ஈஸ்வர் வீட்டு சைடு சொந்தக்கார பெண்..

புது புடவை கட்டக்கூடாது என்பதால், முன்பு பாரதி தேர்வு செய்திருந்த மஹா திருமண பட்டு புடவையை அணிந்திருந்தாள்... தாய்மையில் இன்னும் அவள் அழகு கூடி இருக்க அப்படியே தன் அக்காவை கட்டி கொள்ள துடித்தன பாரதியின் கைகள்..

மஹா மேடைக்கு வரவும் இப்பொழுது இன்னொரு மாலையை எடுத்து ஆதியின் கைகளில் கொடுத்து தாய் மாமன் சார்பாக போட சொன்னார்.. அவனும் அதே மாதிரி மாலையை போட்டு அருகில் இருந்த விபூதியை எடுத்து மஹாவின் நெற்றியில் வைத்து நல்லா இருமா என்று தலையில் கைவைத்து ஆசிர்வதித்து சிரித்தான்... மஹாவும் தாங்க்ஷ் மாமா என்று சிரித்தாள்..

பின் பொண்ணு வீட்டு சார்பாக பாரதி ஜானகியிடம் வாங்கி கொடுத்திருந்த வளையலை எடுத்து ஒரு வயதில் முதிர்ந்த ஒரு சுமங்கலி பெண் மாஹாவின் கைகளில் போட்டு, அவளுக்கு கன்னத்தில் சந்தனம் பூசி, அட்சதையை தூவி விழாவை ஆரம்பித்து வைக்க, பின் மற்ற அனைவரும் வந்து மஹாவிற்கு வளையல் அடுக்கினர்..

பின் ஜானகி கொண்டு வந்திருந்த வைர வளையலை எடுத்து லட்சுமியிடம் கொடுத்து போட சொல்ல, அதை கண்டு அனைவரும் வியந்தனர்.. லட்சுமி மீண்டும் மறுத்து இது எதுக்கு என்று சொல்ல

“என் வீட்டுக்காரர் எனக்கு வாங்கி கொடுத்தது அண்ணி... என் மறுமகளுக்கு நான் செய்யறேன்.. எனக்கு என்ன பெண் குழந்தைகளா இருக்காங்க?? இருக்கறது ஒரே ஒருத்தன்...

இதை எல்லாம் வச்சு நான் என்ன பண்றேன்.. மஹா.. நீ மறுக்காமல் வாங்கிங்க...என்கிட்ட இருக்கிறதெல்லாம் என் மூன்று மறுமகளும் இனிமேல் போட்டு அழகு பார்க்கட்டும்.. “ என்று முடித்து விட்டார்... 





தை கண்டு அதிசயித்தனர் அனைவரும்.. ஒரு வேளை போன ஜென்மத்து பந்தமோ.. இந்த மாதிரி இரத்த சம்பந்தமே இல்லாத ஜானகி தன் மேல் இப்படி பிரியமாக இருப்பதை நினைக்கையில் மனம் பூரித்தது தர்மலிங்கத்திற்கு....

அதோடு அப்படியே பாரதியின் குணம் ஜானகியிடம் இருப்பதை போல இருந்தது தர்மலிங்கத்திற்கு.. பாரதியும் அப்படி தான் ஒன்றை சொன்னால் அதற்கு மேல் யாரும் மறுத்து சொல்ல முடியாது...

அதையே சொல்லி அங்கலாய்ந்தார் தர்மலிங்கம்.. அதை கேட்டதும் பாரதியின் கண்கள் குளம் கட்டியது..

தன் அப்பா ஒவ்வொரு இதிலும் தன்னை நினைத்து கொள்கிறாரே என்று...

பின் தர்மலிங்கம் ஜானகியையே வளையலை போட சொல்ல அவர் தன் நிலையை எண்ணி மறுக்க

“மனசால என் பொண்ணு நல்லா இருக்கனும்னு நினைக்கிறவ நீ ஜானகி.. அதனால அமங்கலினு நீ சொல்றதெல்லாம் விட்டு தள்ளு..

என்னை கேட்டா நீ இன்னும் மாப்பிள்ளைய மனசுல சுமந்து கிட்டுதான் இருக்க.. அப்ப எப்படி அமங்கலி ஆக முடியும்?? .. அதெல்லாம் முடியாது... நீயே போட்டு விடு.. “ என்று அதட்ட அதற்கு மேல் தயங்காமல் அவரே மஹாவிற்கு வளையலை போட்டு விட்டு ஆசிர்வாதம் பண்ணினார்...

ஆதி மேடையின் ஓரத்தில் நின்று கொண்டு அங்கு நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தான்... அவனுக்கு பாரதியையும் இதே மாதிரி நிறுத்தி பார்த்து மனம் மகிழ்ந்தது.. எதேச்சையாக மஹாவை கண்டவன் அவள் வயிறு பெரிதாக இருப்பதை கண்டு அருகில் நின்றிருந்த தன் அன்னையிடம் குனிந்து

“மா... மஹாவுக்கும் உன் மறுமகளுக்கும் 15 டேஸ் தான டிபரன்ஸ்.. மஹா வயிறு மட்டும் பெருசா இருக்கு... அவளுக்கு இந்த மாதிரி இல்லையே.. “ என்றான் சந்தேகமாக..

ஜானகியும் சிரித்துக் கொண்டே

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி உடல் வாகு இருக்கும் கண்ணா.. மஹா கொஞ்சம் குட்டையா இருக்கிறதால அவளுக்கு வயிறு பெருசா இருக்கிற மாதிரி தெரியும்.. உன் பொண்டாட்டி நெடு நெடுனு வளர்ந்து உன் தோளுக்கு சமமா இல்ல இருக்கா.. அதனால அவளுக்கு வயிறு இன்னும் அவ்வளவா பெருசா தெரியல.. “ என்று விளக்கினார்

“ஓ.. “என்று அசடு வழிந்தான் ஆதி ..

அருகில் நின்றிருந்த ஈஸ்வரோ இந்த உலகத்தையே மறந்து தன் மனைவியின் அழகில் சொக்கி அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்... அதுவும் இன்று பட்டு புடவையில் கை நிறைய வளையல் அணிந்து கன்னத்தில் மிளிர்ந்த சந்தனத்துடன் இன்னும் அழகாக மிளிர்ந்தாள் அவன் கண்ணுக்கு...

எதேச்சையாக தன் கணவனை நிமிர்ந்து பார்த்த மஹா அவன் கண்களில் பொங்கிய காதலையும் தன்னையே இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தவனை கண்டதும் முகத்தில் தானாக புன்னகை ஒளிர்ந்தது..

அவள் ஆசை கணவனின் வாரிசை தான் சுமப்பது பெருமையாக இருக்க அவளும் அவனையே மெய் மறந்து பார்த்தாள்... அவளின் பார்வையை கண்டு கொண்ட ஈஸ்வர் குறும்பாக கண் சிமிட்ட, வெக்கத்தில் சிவந்து தலையை குனிந்து கொண்டாள் மஹா ..

பாரதியும் இவர்களின் ஜாடையை கண்டு

“சே!! நான் பக்கத்துல இல்லாம போய்ட்டனே இந்த மாம்ஷை ஓட்டியே ஒரு வழி ஆக்கியிருக்கலாம்..” என்று குறை பட்டாலும் தன் அக்காவின் முகத்தில் தெரிந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அவளுக்கு மன நிறைவை கொடுத்தது...

பின் இன்னும் சிலர் வந்து வளையல் அடுக்க, சாப்பாட்டு பந்தி ஆரம்பிக்க, தர்மலிங்கம் வந்து ஆதியை அழைத்து சென்றார்..

சிறிது நேரம் அந்த மேடைய பார்த்து கொண்டிருந்த பாரதியின் கண்கள் தன்னவனை தேட அவன் அங்கு இல்லை... எங்க போயிருப்பான்?? என்று யோசித்தவள்

பாரத் இடம் அந்த மண்டபத்தின் மற்ற பக்கத்தை காட்ட சொன்னாள்.. பாரத் ம் தன் மொபைலை திருப்பி காட்ட, ஆதி சாப்பாட்டு கூடத்தில் வேட்டியை மடித்து கட்டி கொண்டு எல்லாரும் சாப்பிடுவதை மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தான்..

ஒருவர் சாம்பார் வேண்டும் என்று கேட்க அருகில் இருந்த சாம்பார் வாளியை தூக்கி கொண்டு செல்ல , அவனின் வேட்டியை மடித்து கட்டியிருந்த அழகை கண்டவளுக்கு அவனின் அந்த அழகில் அப்படியே மயங்கி நின்றாள் பாரதி..

“ஹே .. போதும் பாரதி.. என் ஹீரோவை சைட் அடிச்சது.. வேற பக்கம் திருப்பவா?? .. “ என்றான் பாரத் சிரித்தவாறே..

“ஹி ஹி ஹி அவரை போய் யார் சைட் அடிக்கிறா?? .. சாப்பாடு எல்லாம் சரியா போடறாங்களானு பார்த்தேன் டா.. “ என்று சமாளித்தாள்..

“ஹ்ம்ம்ம் நம்பிட்டேன்...நம்பிட்டேன்... ஆமா அவருக்கு என்ன குறைச்சல்?? .. உனக்கு தெரியுமா??.. நம்ம ஊர் பொண்ணுங்க எல்லாம் இந்த ஆதி மாம்ஸ் ஐ தான் சைட் அடிச்சுகிட்டிருக்காங்க.. அதை விட இந்த கல்யாணம் ஆன டிக்கெட் லாம் கூட வாய ஆனு பார்க்குதுங்க.. எனக்கு கடுப்பா இருக்கு தெரியுமா? “ என்று பொரிந்தான்..

அதை கேட்டு

“எவ அவ என் புருஷனை சைட் அடிக்கிறது??.... இந்த பாரதி மட்டும் அங்க வந்தா எல்லார் கண்ணுலயும் மிளகாய வச்சு தேய்ச்சுருவேன்.. கொள்ளி கண்ணு.. வாட்ட சாட்டமா இருக்கிறவரை கண்டதும் எல்லார் கண்ணும் என் புருஷனைத்தான் சுத்தி கிட்டிருக்கும்... அவர் வந்த உடனே சுத்தி போடணும்... “என்று பொருமினாள் மனதுக்குள்..

இன்னும் பாரதி அவன் நடக்கும் அழகையே ரசித்து கொண்டிருக்க, ஆதி தன்னை யாரோ பார்ப்பது போல இருக்க, திரும்பியவன் பாரத் போனை தன் பக்கம் பிடிச்சு கிட்டிருப்பதை பார்த்து

“இந்த கேடி தான் என்னை சைட் அடிக்கிறாளா?? “ என்று நினைத்தவன் கண் சிமிட்டி உதட்டை குவித்தான் அவளுக்காக...

அதை கண்டு கொண்டவள் கன்னம் சிவக்க, சீ என்று கண்ணை மூடி கொண்டாள்... அவனும் சிரித்து கொண்டே தன் வேலையை தொடர, பாரத் மற்ற நிகழ்ச்சிகளை காட்டினான்...

பின் எல்லாரும் நின்று குடும்ப புகைப்படம் எடுக்க, பாரதியும் ஓடிப்போய் ஆதியின் அருகில் நின்று கொண்டாள் மானசீகமாக...

விழா நல்ல படியாக முடிந்து வீட்டிற்கு அனைவரும் வரவும், மஹாவையும் இந்திராவையும் ஆரத்தி எடுத்து வரவேற்க

தர்மலிங்கம் லட்சுமியிடம்

“நீ போய் இரண்டு மாப்பிள்ளகளுக்கும் சுத்தி போடு லட்சுமி... அவங்க பம்பரமா வேலை செஞ்சத கண்டு இந்த ஊர் கண்ணு பூரா அவங்க மேலதான் பட்டிருக்கும்....” என்று சிரிக்க, லட்சுமியும் போய் உப்பு மிளகாயும் எடுத்து வந்து அவர்களை சுத்த

“எனக்கும் சுத்துங்க... “ என்று பாரத் ம் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, மூவரையும் அமர வைத்து சுத்தி போட்டார் லட்சுமி.. பின் அனைவரும் முற்றத்தில் அமர்ந்து கதை அடிக்க, இந்திராவும் உள்ளே சென்று மஹா வாங்கி கொடுத்த புது சுடிதாரை அணிந்து கொண்டு வந்து அனைவருடனும் அமர்ந்து பேசி கொண்டிருக்க பாதி நேரம் அவள் தன் அண்ணனிடம் வம்பு இழுத்து கொண்டிருந்தாள்...

அதை கண்ட ஆதிக்கு ஆச்சர்யமாக இருந்தது.. கிராமங்களில் இது மாதிரி பெண்கள் பெரியவர்கள் ஆகி விட்டால் அதிகம் பேசக் கூடாது.. வெளியில் வரக் கூடாது என்று கட்டுபாடிருக்கும் என்று கேள்வி பட்டிருந்தவனுக்கு இந்திராவை பார்க்கையில் அவள் இயல்பாக இன்னும் விளையாட்டு பிள்ளையாக இருப்பதை கண்டு ஆச்சர்யமாக இருந்தது..

ஈஸ்வரிடம் தன் சந்தேகத்தை கேட்க ,

“நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட் தான் ப்ரதர்... இன்னும் அந்த மாதிரி கட்டுபாடெல்லாம் அப்படியே தான் இருக்கு.. ஆனால் தர்மலிங்கம் மாமா முற்போக்கானவர்... ஆண் பெண் என்று பிரித்து பார்க்க மாட்டார்.. பொண்ணுங்க னா அடங்கி இருக்கணும் னு சொல்றவங்களை எதிர்த்து சண்டை போடுவார்...

கொஞ்சம் பாரதியார் பற்று அதிகம்.. அதுதான் பாரதிக்கு அந்த பெயரை வைத்தது.. பெயரோடு இல்லாமல் அவளை தைரியமாகவும் வளர்த்தார்...அதே மாதிரிதான் மற்றவங்களுக்கும் அதட்டி மிரட்டாமல் அன்பால் அவர்களை வளர்த்தவர்...

இந்த ஊரு னு இல்ல சுத்தி இருக்கிற கிராமங்களுக்கு எல்லாம் அவர்னா ரொம்ப பிடிக்கும்...அவர் எப்பவும் நேர்மை வழியில் செல்வதோடு மற்றவர்கள் குறைகளை தீர்க்க முன்னாடி வருவார் “ என்று புகழ்ந்து தள்ள, ஆதிக்கு அப்படியே தன் அப்பாவை பார்ப்பதை போல இருந்தது...

அவரும் அவனை இதுவரை எதற்கும் அதட்டியதில்லை.. எல்லாம் அவனாகவே அறிந்து கொள்ளும் படிதான் வளர்த்தார்.. ஏன் அந்த ஷ்வேதாவை பிடித்திருப்பதாக கூறிய பொழுது கூட மறு பேச்சு பேசாமல் சம்மதித்தார்.. அதே அவள் தவறு செய்த பொழுதும் ஒரு முறை கூட என்னால் தான் தங்கள் குடும்பத்துக்கு இப்படி ஆகிருச்சுனு அவனை கடிந்ததில்லை..

அந்த தப்பை எப்படி சரி பண்றது என்றுதான் யோசித்தார்... அதே மாதிரி தன் மாமானாரும் இருக்க,

“பரவாலை...நல்ல குடும்பத்துல தான் வாழ்க்கை பட்டிருக்கேன்.. “என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான்...

சிறிது நேரம் பேசி கொண்டிருந்த பின் ஆதி பாரத் ஐ அழைத்து கொண்டு அந்த ஊரை சுற்றி பார்க்க சென்றான்..

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தவர்கள் தர்மலிங்கமும் ஈஸ்வரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து உரையாடினான்..பேச்சு ஈஸ்வரின் கல்யாணத்துக்கு வர

“பாரதி மட்டும் இல்லைனா எங்க கல்யாணம் நடந்திருக்காது... மாமா அப்படி இருந்த நிலையிலும் துணிச்சலா நின்னு எங்க கல்யாணத்தை நடத்தி வச்சா..” என்று ஈஸ்வர் பாரதியை புகழ்ந்து பேசினான்..

ஈஸ்வர் எப்பவும் அந்த வீட்டில் ஒரு அங்கமாகத்தான் இருப்பான்.. அதே உரிமையில் பாரதியை ஒருமையில் பேச, அதை கேட்டு ஆதியும் இளகுவாக எடுத்து கொண்டான்

ஆதியின் நடவடிக்கைகளை கவனித்து வந்த ஜானகிக்கே ஆச்சரியம்.. தன் பையன் இப்படி எல்லாம் இங்கு அட்ஜஸ்ட் பண்ணி போவதையும், எல்லார் கூடயும் அமர்ந்து சகஜமாக பேசுவதையும் கண்டு அதிசயபட்டார்..

“ஹ்ம்ம்ம் எல்லாம் என் மறுமக அப்படி மாத்தி வச்சிருக்கா.. “ என்று சிரித்துகொண்டார்..

பின் பாரத் மஹா கல்யாண ஆல்பத்தை எடுத்து வர, ஆதி அதில் பாரதி இருந்த புகைப்படங்களை மட்டும் நீண்ட நேரம் ரசித்து பார்த்தான்.. பின் ஈஸ்வரிடம் பாரதியை பற்றி நிறைய கேள்வி கேட்க, ஈஸ்வருக்கு லேசாக சந்தேகம் வர ஆரம்பித்தது... ஏன் இவன் பாரதியை பற்றி அதிகம் விசாரிக்கிறான் என்று....

“ப்ரதர்.. உங்களுக்கு பாரதியை தெரியுமா..”எனக் கேட்க, அதற்கு ஆதி

“தெரியுமாவா?? இப்ப என்னில் சரி பாதி அவ.... என் பொண்டாட்டி Mr பட்டிகாட்டு விஞ்ஞானி.. “ என்று மனதுக்குள் சிரித்து கொண்டவன்.. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்

“ஹ்ம்ம்ம் தெரியும்... “ என்று சிரித்தவன் பின் பேச்சை மஹா கல்யாணத்தை பற்றி மாற்ற ஈஸ்வர் வாயெல்லாம் பல்லாக அவன் மஹாவை பார்த்த நாளை வர்ணிக்க,

“ஆஹா.. எப்படியோ தப்பிச்சேன்.. “ என்று சிரித்து கொண்டான் ஆதி..

மாலை நேரம் ஆகவும் ஜானகியும் ஆதியும் அனைவரிடமும் விடைபெற்று கிளம்ப, தர்மலிங்கம் அவர்கள் தோட்டத்திவ் விளைந்த அத்தனை கீரையையும் மற்ற காய் கறிகள், தேங்காய் எல்லாம் எடுத்து வைத்து அவன் கார் டிக்கி முழுவதும் நிரப்பி இருந்தார்.. அதை கண்டவன்

“எதுக்கு மாமா இவ்வளவு?? .. இத வச்சு நான் ஒரு காய்கரி மார்க்கெட்டே ஆரம்பிக்கலாம் போல.. “ என்று சிரிக்க,

“இருக்கட்டும் மாப்பிள்ளை.. நம்ம வீட்ல விளைஞ்சது.. இதோட ருசியே தனி தான்.. இன்னும் ஒரு வாரத்துக்கு நம்ம வீட்டு காய்கறிகள் மட் டும் தான் நீங்க சாப்பிடணும்.. “ என்று சிரித்து கொண்டார்...

கிளம்பும் நேரம் மீண்டும் ஒரு முறை பின்பக்கம் சென்று அந்த தோட்டம், மல்லிகா அவள் வளர்த்த ஆடு, கோழி என்று எல்லாம் ஒரு முறை பார்த்து பின் காரை நோக்கி செல்ல, மணி ஓடி வந்து விடாமல் அவன் காலை சுத்தி கொண்டான்...

ஆதியும் குனிந்து சிரித்துக்கொண்டே அதன் தலையை தடவி, பின் அவனிடமிருந்து விடை பெற்று காரில் ஏறி காரை கிளப்ப, வழக்கம் போல கூடவே ஓடி வந்தான் மணி.. அனைவரும் கை அசைத்து வழி அனுப்ப, ஜானகிக்கும் ஆதிக்கும் அங்கு இருந்து பிரிய மனமே இல்லாமல் விடைபெற்றனர்... இருவருக்கும் இது ஒரு புது வித அனுபவமாக இருந்தது...

கார் கிளம்பிய சிறிது நேரத்தில், ஜானகி உறங்கி விட, ஆதி அந்த நாளை அசை போட்டவாறு காரை ஓட்டினான்..

ஆதியின் கார் கிளம்பி சென்றதும் அனைவரும் மீண்டும் வீட்டிற்குள்ளே வர பாரத் பாரதிக்கு கால் பண்ணி ஆதியை பற்றி புக்ழ்ந்து தள்ளினான்..

“சூப்பர் மாம்ஸ் பாரதி... இனிமேல் எனக்கு அவர் தான் ஹீரோ... என் ரோல் மாடல்.. அவரை மாதிரியே தினமும் எக்சைர்ஸ் பண்ணி அவர மாதிரியே உடம்பை கொண்டு வரப் போறேன்... “ என்று அளந்தான்...

“டேய்... உன் புராணத்தை நிறுத்து.. உன் ஹீரோ அங்க என்னெல்லாம் செஞ்சார்?? .. அத சொல்லு முதல்ல.. “ என்று கடுப்பானாள் பாரதி தன் கணவனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்..

“ஹ்ம்ம்ம் பங்சன் முடிஞ்சதுக்கப்புறம் நம்ம ஊரை சுத்தி பாக்கணும்னார்... சரி எங்க மாம்ஸ் போகலாம்னு கேட்டா, நம்ம அய்யனார முதல்ல பார்க்கணும்னார்... நானும் சிரிச்சுகிகிட்டே அங்க கூட்டிட்டு போனேனா.. அந்த அய்யனாரை பார்த்த உடனே தானா சிரிச்சார்... அப்புறம் பக்கத்துல போய் செல்பி எடுத்துகிட்டார்... நானே எதுக்கு மாம்ஸ் னு கேட்டா சும்மாதான் னு சிரித்தார்...

ஏன் பாரதி… நீ நம்ம அய்யனாரை பற்றி எதுவும் சொன்னியா?? எதுக்கு அந்த கோவிலுக்கு போனப்போ அவர் பாட்டுக்கு சிரிச்சார்?? “ என்றான் சந்தேகமாக... அதை கேட்டதும் பாரதிக்கு சிரிப்பு வந்தது..

“நான் அவனை சிடுமூஞ்சி அய்யனார் னு சொன்னதுக்கு அந்த அய்யனாரை பார்க்க போய்ட்டாரக்கும்... “ என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்... ஆனாலும் அடக்கி கொண்டு

“நான் எல்லாம் ஒன்னும் சொல்லலைப்பா.. “ என்று மழுப்பினாள்..

“சரி.... அப்புறம் எங்க எல்லாம் போனீங்க.??. “என்றாள் ஆர்வமாக

“ஹ்ம்ம்ம் இதயே நான் கேட்டதுக்கு உங்க பாரதி அக்கா எங்கெல்லாம் போவாளோ அங்கெல்லாம் கூட்டிகிட்டு போ னு சொன்னார்... நீ என்ன ஒன்னு இரண்டு இடமா சுத்தியிருக்க... இந்த ஊர் பூரா சுத்தினவ இல்ல.. அதனால நம்ம ஊர் முழுவதையும் சுத்தி காமிச்சேன்.. அங்கங்க நின்னு செல்பி எடுத்துகிட்டார்...சரியான செல்பி மாம்ஸ்.. “ என்று சிரித்தான்...

அவனை மானசீகமாக முறைத்தவள் “சரி... மேல சொல்லு.. .”என்று ஊக்கினாள்

“ஹ்ம்ம்ம் அப்புறம் மேல என்ன?? “ என்று யோசித்தவன்

“ஆங்... இன்னொரு முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேனே .. “என்று இழுத்தான்

“ஹே... என்னடா அது?? சொல்லு சொல்லு “ என்றாள் ஆர்வமாக

“ஹ்ம்ம்ம் இத சொன்னா நீ எனக்கு என்ன வாங்கி தருவ?? “என்று டீல் பேசினான்..

“எல்லாம் என் நேரம் டா .. “ என்றவள் நீ கேட்கறதெல்லாம் வாங்கி தர்ரேன்.. “ என்றாள்

“ஹ்ம்ம் பேச்ச மாத்த மாட்டியே என்று மீண்டும் ஒரு முறை தன் டீலை உறுதி செய்து கொண்டு தொடர்ந்தான்...

“நாங்க இரண்டு பேரும் ஊர் பூரா சுத்திட்டு வந்தபின் அப்பா கூடபேசிகிட்டு இருந்தாரா... அப்ப அப்பா இநத ஊருக்கு ஒரு ஆம்புலன்ஸ் இல்ல.. சுத்தி இருக்கிற கிராமங்களுக்கு எதுவும் அவசரம்னா திருச்சியில் இருந்து வர வேண்டியிருக்கு.. “என்று வருத்தமாக சொன்னாரா…. உடனே என் ஹீரோ

“கவலைப்படாதிங்க மாமா... நானே அத ஏற்பாடு பண்ணித் தர்ரேன்” னு சொல்லிட்டு நம்ம கமலா மேடம் கிட்ட உடனே போன் பண்ணி எவ்வளவு செலவு ஆகும் னு கேட்டுட்டு உடனே ஒரு செக் எழுதி என் கிட்ட கொடுத்துட்டார்... நாளைக்கு கொண்டு போய் மேடம் கிட்ட கொடுக்க சொல்லி...

அப்புறம் அப்பாகிட்ட யாராவது வேலை இல்லாமல் இருக்கிறவரை ட்ரைவரா போடுங்க.. நானே மாசா மாசம் சம்பளம் கொடுத்திடறேனு சொல்லிட்டார்..

மேடம்க்கு ரொம்ப சந்தோஷம்.. அப்பாக்கு அதைவிட சந்தோஷம்....முதல்ல அப்பா மறுத்தார்..

“ஆனாலும் இருக்கட்டும் மாமா... எங்கப்பாவை தான் என்னால காப்பாற்ற முடியாமல் போயிருச்சு... அது மாதிரி நிலைமை யாருக்கும் வரவேண்டாம்..” என்று சொல்லி அப்பா வாயை அடைச்சுட்டார்...

எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம்... அவ்வளவு பெரிய தொகையை ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் தூக்கி கொடுத்தாரேனு.. அதே மாதிரி தான்.. அத்தையும்... மஹா அக்காவுக்கு வைர வளையல் போட்டாங்க தெரியுமா...?? நம்ம ஊரே அவங்களை பத்திதான் பேசுது.. “ என்று அங்கலாய்ந்தான்_..

“இனிமேல் நானும் நல்லா படிச்சு மாம்ஸ் மாதிரி பெரிய கம்பெனி ஆரம்பிச்சு இது மாதிரி நாலு பேருக்கு நல்லது செய்யணும் பாரதி..” “ என்று தொடர்ந்தான்...

பாரதிக்கு இன்னும் நம்பவே முடியவில்லை தன் கணவன் செய்த செயலை.. அவளுக்கு தங்கள் ஊரில் ஒரு ஆம்புலன்ஸ் இல்லை என்பது குறையாக இருந்தது.. தான் சம்பாதித்து ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யனும் என்று நினைத்திருந்தாள்.. அவள் அப்படி சம்பாதித்து சேர்த்து வச்சிருந்தால் இன்னும் ஐந்து வருடமாவது ஆகியிருக்கும் அதை முழுவதும் சேர்த்து முடிக்க...

“ஆனால் இவன் ஒரு நிமிடத்தில் தன் ஆசையை நிறைவேற்றி வைத்து விட்டானே..!!! என் ஆசை கூட இல்லை.. என் அப்பா வருத்தபட்டார் என்று உடனேயே ஏற்பாடு செஞ்சுட்டானே... பெரிய ஆள்தான்.. “ என்று மாய்ந்து போனாள்...

பாரத் இன்னும் நிறுத்தாமல் ஆதியை புகழ,

“டேய்.. நம்ம வீட்ல எல்லாருக்கும் அவரை பிடிச்சு இருக்கா...?? அப்பா, அம்மா, ஆயா எல்லாரும் என்ன சொன்னாங்க..?? “ என்றாள் மீண்டும் ஆர்வமாக

“ஹ்ம்ம்ம் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு பாரதி.. அதுவும் நம்ம ஆயாவுக்கு அவர் பொண்ணு சைடு பேரனாம்.. ஒரே பெருமை அடிச்சுக்குது.. “ என்றான்..பின் சிறிது யோசித்தவன்

“பாரதி... நீ ஏன் அந்த மாம்ஸ் ஐ கல்யாணம் பண்ணிக்க கூடாது?? “என்று கேட்க அவளுக்கு புரை ஏறியது இங்கு...

“அடப்பாவி.. என் புருஷனையே மீண்டும் கல்யாணம் பண்ணிக்க சொல்றியேடா.. எத்தனை முறை நான் தாலி கட்டிக்கிறதாம்?? “ என்று சிரித்தாள் உள்ளுக்குள்..

அவன் பாரதியிடம் பேசி கொண்டிருப்பதை கண்டு அனைவரும் அவன் அருகில் வர அவன் ஸ்பீக்கரில் போட்டு தன் கேள்வியை மீண்டும் கேட்டான்

“பாரதி.. நீ அந்த மாமாவையே கல்யாணம் பண்ணிக்க.. சூப்பர் மாமா.. அந்த அத்தையும் ரொம்ப நல்லவங்க.. “ என்று பேச தர்மலிங்கம் வாயடைத்து நின்றார்,.. தன் மனதில் தோண்றியதையே இவன் நேரடியாக கேட்கறானே.. “என்று..

எல்லாருக்குமே ஆதியை ரொம்பவும் பிடித்து விட்டது... எல்லார் மனதிலும் இப்படி ஒரு எண்ணம் இருந்தது உண்மையே.. யாரும் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை... முதலில் பாரதி வரட்டும்... அப்புறம் பார்க்கலாம்.. அதோடு அவர்கள் பெரிய இடம்... அவங்க வசதிக்கு சமமா இல்ல பொண்ணு பார்ப்பாங்க.. “ என்று யோசித்தனர்...

தன் கேள்விக்கு பாரதி இன்னும் பதில் சொல்லாமல் இருக்கவும்

“சொல்லு பாரதி ... உனக்கு அந்த மாமாவை பிடிச்சிருக்கா?? “ என்றான்... .அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள்

“டேய்... நீ சின்ன பையன்... இது மாதிரி எல்லாம் பேசக்கூடாது... எது நடக்குமோ அதுதான் நடககும்.. நீ இப்ப போய் மீதி வேலைய பார்.. “ என்று தன் வெக்கத்தை மறைத்து கொண்டு அவனை அடக்கினாள்..

அவள் குரலில் இருந்தே தன் மகளுக்கு இதில் விருப்பம் என்றே புரிந்தது தர்மலிங்கத்திற்கு...

ஜானகிக்கும் பாரதியை ரொம்ப பிடிக்கும் என்று தெரியும்.. அப்படி பிடித்திருந்தால் அவங்களே பேச்சை ஆரம்பிக்கட்டும்... எல்லாம் அந்த முருகன் எப்படி எழுதி இருக்கானோ அப்படியே நடக்கட்டும்.. “ என்று எண்ணிக்கொண்டார்...

பாரத்திடம் பேசி முடித்ததும் அவன் சொன்ன செய்திகளை எல்லாம் திரும்ப திரும்ப ரிவைன்ட் பண்ணி பார்த்ததும் அவள் மனதில் தன் கணவன் மீது இருந்த காதல் இன்னும் பல மடங்கு பெருகியது...

“என் புருஷன் எவ்வளவு நல்லவன்... இவனை கணவனாக அடைய நான் கொடுத்து வச்சிருக்கணும்.. “ என்று எண்ணி பூரித்தாள்.. அவனை இப்பவே பார்க்க வேண்டும் போல இருந்தது.. அதிலிருந்தே வீட்டிற்கும் வாயிலுக்கும் 100 முறையாவது நடந்திருப்ப்பாள்...

இரவு 10 மணிக்கு கார் வீட்டை அடைந்ததும் அவர்களுக்காகவே காத்திருந்த பாரதி ஓடிவந்து ஜானகியை கட்டிகொண்டாள்..

“ரொம்ப தாங்க்ஷ் அத்தை.. “ என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்... ஆதியிடம் அவள் மறந்தும் திரும்பவில்லை..

அதை கண்டவன் ஏக்கமாக பார்க்க அவள் கண்டு கொள்ளாமல் ஜானகியிடம் கதை அடிக்க, ஆதி நேராக மெல சென்று வேற உடைக்கு மாறியவன் ஏதோ அழைப்பு வர, தோட்டத்தில் உலாவிய படியே பேசி கொண்டிருந்தான்... பேசி முடித்தவன் உள்ளே வர

ஜானகி களைப்பாக இருப்பதால் அவர் அறைக்கு சென்றிருக்க, பாரதியும் முன்னரே அவர்கள் அறைக்கு சென்றிருக்க, அவள் காலையில் கொடுத்த பரிசு நினைவு வர, உல்லாசமாக சிரித்துகொண்டே இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறி கொண்டிருந்தான் ஆதி..

மனம் எல்லாம் மகிழ்ந்து இருந்தது.. அவன் அறியவில்லை அவனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்து கொண்டிருப்பதை....

நம்ம வேல்ஸ் சொன்ன மாதிரி அவனை சுத்த விட காய் நகர்த்தி கொண்டிருக்க, அதை அறியாமல் துள்ளலுடன் மாடி ஏறினான் ஆதி....

அறைக்கு உள்ளே சென்றவன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.. பாரதி அவனை இறுக்கி கட்டி கொண்டிருந்தாள்.. இதை எதிர்பார்க்காதவன் அதிர்ச்சியில் திக்கு முக்காடி போனான் சில விநாடிகள்... இறுக்கி கட்டி கொண்டவள் இன்னும் இறுக்கி கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள்...

பின் நிமிர்ந்து அவன் கழுத்தில் கை போட்டு அவனை வளைத்து அவன் இதழோடு தன் இதழை சேர்த்து அழுந்த முத்தமிட்டாள்....

ஆதிக்கு இந்த உலகமே மறந்து போனது.. அவன் கை தானாக அவளை இறு க்கி அணைத்து கொள்ள இருவரும் மோன நிலையில் இருந்தனர் சில நிமிடங்கள்....

பின் சுதாரித்துக் கொண்டவள் அவன் இதழை விடுத்து

“ரொம்ப தாங்க்ஷ் மாமா... “ என்று கன்னம் குழிய மையலுடன் சிரித்து குளியல் அறைக்குள் ஓடி கதவை மூடிக் கொண்டாள்...

ஆதியோ அப்படியே சிலையாக உறைந்து நின்றான் சில நிமிடங்கள்.. பின் அருகில் இருந்த படுக்கையில் பொத்தென்று விழுந்தான..

அவனின் உடலில் இருந்த சக்தி முழுவதும் வடிந்து விண்ணில் பறப்பதை போல இருந்தது அவனுக்கு...அதுவரை உறங்கி கொண்டிருந்த அனைத்து நரம்புகளும் வெகுண்டு எழுந்தன..

அவளின் அந்த இறுகிய அணைப்பும் அவளின் இதழ் முத்தமும் அவன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து அவனுக்குள் பரவசத்தை தந்தது...

அவளை மீண்டும் இழுத்து அணைக்க, அவள் தந்ததை திருப்பி கொடுக்க துடித்தன அவன் ஒவ்வொரு அணுவும்... கண் மூடி அந்த சுகத்தை, ஆனந்தத்தை அனுபவித்தான் சில நிமிடங்கள்...

மெல்ல திரும்பி பார்க்க அவள் இன்னும் குளியல் அறையில் இருந்து வெளி வரவில்லை...

அங்கு செல்ல அடி எடுத்து வைத்தவன் அவளின் தற்போதைய நிலை உணர்ந்தும் தன் இளவரசியின் நினைவு வரவும் அப்படியே முன் வைத்த தன் காலை இழுத்துக் கொண்டான்....

பின் பால்கனிக்கு சென்றவன் அங்கு இருந்த பால் நிலாவும் அந்த குளிர்காற்றும் இன்னும் அவன் உணர்ச்சிகளை தூண்ட தவித்து போனான் ஆதி.. அவளால் தூண்டப்பட்ட உணர்வு தந்த சுகத்தை, அவஷ்தையை அனுபவித்தான்.. அப்பொழுது தான் நினைவு வந்தது அவளுக்கும் முன்பு இது மாதிரி தான இருந்திருக்கும் என்று...

கொஞ்சம் கொஞ்சமாக தன் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அதே நிக்ழ்வு மீண்டும் மீண்டும் கண் முன்னே வந்து அவனை இம்சித்தது...

நீண்ட நேரம் நடந்தான் கால் வலிக்க...

நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்த பாரதிக்கு வெக்கமாக இருந்தது.. அவன் படுக்கையில் இல்லை என்பதை உணர்ந்தவள் மெல்ல படுக்கையில் ஏறி படுத்துகொண்டு பால்கனியை பார்க்க அவன் தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு நடந்து கொண்டிருப்பதை கண்டவள்,

“சே..எல்லாம் என்னாலதான்... நான் ஏன் அப்படி நடந்துகிட்டேன்??.. இப்படி எதுவும் நான் முன்னாடியே நினைக்க வில்லையே.. எப்படி இப்படி ஆச்சு.?? . “ என்று யோசித்தாள்..

மதியம் நடந்த பங்சனில் ஆதியை வித்தியாசமாக பார்த்ததிலும், பாரத் அவனை பற்றி புகழ்ந்து பேசியதை கேட்ட பிறகு அவனை பற்றியே நான் எண்ணி கொண்டிருந்ததால் தான் அவன் வந்ததும் அப்படி கட்டி பிடிச்சுட்டேன் போல...

சீ... என்னை பத்தி என்ன நினைப்பான்.. “ என்று மீண்டும் வெட்கம் வர, அவன் திரும்பி வருவதற்கு முன் தூங்கிடனும்.. என்று எண்ணி போர்வயை இழுத்து தலைவரை மூடி கொண்டு பின் சிறிது நேரத்தில் உறங்கினாள்..

ஆதியோ நீண்ட நேரம் வரை நடந்து களைத்தான்.. பின் ஒரு வழியாக அவன் உள்ளே எழுந்த வெள்ளம் அடங்க தன் அறைக்கு திரும்பி வந்தவன் அவள் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு தூங்கவும்

“பார்.. என்னை தூண்டி விட்டுட்டு இவ பாட்டுக்கு நிம்மதியா தூங்கறாளே... ராட்சசி..!!! என் பிரின்ஸஸ் பிறக்கட்டும்.. இவளுக்கு எல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா திருப்பறேன்... “ என்று புலம்பியவன் ஏதோ நினைவு வர

“அப்பா முருகா... இது என்னவோ உன் விளையாட்டு மாதிரி இருக்கே. !!. போதும் பா .. அவளை சீண்டி விட்டு என்னை சுத்தவிட்டது... இனிமேலும் என்னை ரொம்ப சுத்த விடாத..

நான் ஏதாவது தப்பு செஞ்சிருந்தால், இல்லை தப்பா எதுவும் சொல்லி இருந்தால் தயவு செய்து மன்னிச்சுக்கோ... இன்னும் ஒரு 70 நாளைக்கு என் கற்பை நீதான் காப்பாற்றனும்.. “ என்று அந்த வேலனிடம் சரண்டர் ஆனான் ஆதி...

“ஹா ஹா ஹா ஹ்ம்ம்ம் அது.. அந்த பயம் இருக்கட்டும்.. இப்பயாவது தெரிஞ்சுதா என்னை பற்றி?? இனிமேல் என் ஆட்டத்தை தப்பாட்டம் னு சொன்ன அவ்வளவுதான்... “ என்று சிரித்துக் கொண்டான் அந்த சிங்கார வேலன்...

Comments

  1. நல்லா இருக்கு
    சடங்குகள்
    அருமையான பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!