காதோடுதான் நான் பாடுவேன்-39



அத்தியாயம்-39 

தோடு ஒரு மாதம் ஆகிவிட்டது மது தன் பிறந்த வீட்டிற்கு சென்று ..

தன் பெற்றோர்களின் பாச மழையில் திக்கு முக்காடி போனாள் மது.. சாரதா வேலைக்கு சென்றாலும் மாலை 4 மணிக்கெல்லாம் ஓடி வந்து விடுவார்... அவள் தந்தையோ அவளை விட்டு நகராமல் அவளுடனே சுற்றி கொண்டிருந்தார்...

இரவு தன் தாயின் மடியில் படுத்துகொண்டு கதை பேசி கொண்டே அவர் உருட்டி கொடுக்கும் சாதத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டே கதை பேசுவாள்...

சண்முகம் தன் பேரக் குழந்தைக்கு நிறைய கதை சொல்வார்.. அதை கேட்கும் பொழுது பாரதி சொன்னது நினைவு வரும்...

“ஆதி அண்ணா பாரதியை எப்படி பார்த்து கொண்டார்...தினமும் ஒரு கதை சொல்லி அவர் மகளை வயிற்றில் இருக்கும் பொழுதே கொஞ்சுவார் என்று... ஆனால் தன் கணவனோ அவளை எதுவும் கண்டு கொள்வதில்லை....

தன்னை கண்டு கொள்ளாவிட்டாலும் கூட பரவாயில்லை... அட்லீஸ்ட் அவன் குழந்தையிடமாவது அன்பாக நடந்து கொண்டிருக்கலாம்.... “என்று உள்ளம் வாடினாள்......

ஆனால் அதே நேரம் பாரதி அப்பொழுது அவள் பெற்றோர்களை பிரிந்து அவர்கள் அன்புக்கு ஏங்கி இருந்தது நினைவு வந்தது...

“ஹ்ம்ம்ம் .. இந்த மாதிரி இருக்கும் நேரத்தில் பாரதிக்கு அவள் பெற்றோர்கள் இல்லாமல் எப்படி இருந்திருக்கும் ?? .. என்னதான் கணவன் தாங்கினாலும் தன் தாய் மடி எப்படியும் தேடியிருந்திருப்பாள்...

அதே மாதிரி தான் எனக்கு...இப்படி அன்பாக தாங்கும் பெற்றோர்கள் இருக்க கணவன் அன்பு கிடைக்கவில்லை..

ஆக மொத்தம் ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு விதத்தில் குறை இருக்கத்தான் செய்கிறது.....” என்று பெருமூச்சு விட்டு தன்னை தேற்றி கொள்வாள்...

இப்பொழுது சுகந்தியும் உண்டாகியிருக்க, சுகந்தி சந்தோசத்தில் மிதந்தாள்..

மதுவிடம் வந்து அவள் மாமியார் இப்பொழுது அவளை அப்படி தாங்குவதாகவும் தன் கணவனும் உள்ளங்கையில் வைத்து தாங்குவதாக கூறி பூரிப்புடன் சொல்லி சென்றாள்....

அவள் முகத்தில் இருந்த சந்தோசத்தை கண்டதும் மதுவுக்கு நிம்மதியாக இருந்தது.. ஆனால் அவள் சென்ற பிறகு அவள் சொன்ன அவள் கணவன் எப்படி தாங்குகிறான் என்பதை கேட்டதும் மதுவுக்கு ஏக்கமாக இருந்தது...

தனக்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று

ஆனாலும் தன் ஏக்கத்தை வெளிகாட்டாமல் உள்ளே போட்டு பூட்டி கொண்டாள்...

இதுவும் கடந்து போகும் என்ற வரிகளை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்வாள்....

“அத்தை சொன்ன மாதிரி இந்த பாப்பா வந்த பிறகாவது அந்த விருமாண்டி மாறுவானா என்று பார்க்கலாம்... “ என்ற நம்பிக்கையோடு தன் மகளின் வருகைக்காக காத்திருந்தாள் மதுவந்தினி.....

அன்று காலை எழுந்ததில் இருந்தே அவள் வலது கண் துடித்து கொண்டிருக்க, மனதுக்கு ஏனோ கஷ்டமாக இருந்தது.....

குளித்து பூஜை முடித்து விட்டு தொலைகாட்சியை ஆன் பண்ணி ந்யூஸ் சேனல் வைக்க, அதில் வந்த செய்தியை கண்டு உறைந்து நின்றாள்...

சென்னையின் ACP நிகிலன் IPS, இன்று காலை நடந்த ஒரு என்கவுண்டரில் துப்பாக்கியால் சுடபட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறார் என்று காட்ட, அதை கண்ட மது அப்பா... என்று அலறினாள்...

அவளின் அலறலை கேட்டு சண்முகம் வேகமாக ஓடி வர, அவளோ மயங்கி சரிந்திருந்தாள்...

அவரும் பதறி சாரதாவை அழைக்க, அவரும் வேகமாக வந்து அருகில் இருந்த நீரை எடுத்து தன் மகளின் முகத்தில் தெளித்து அவளை எழுப்பி அமர வைக்க அவள் உடலோ நடுங்கி கொண்டிருந்தது...

அப்பொழுதுதான் அவர்களும் ப்ளாஸ் நியூசில் வந்து கொண்டிருந்த அந்த செய்தியை பார்க்க, அவர்களும் அதிர்ந்து உடனே சிவகாமிக்கு அழைக்க அவர் எண் அணைக்க பட்டிருந்தது....

மது சுதாரித்து கொண்டு தன் அலைபேசியை எடுத்து கௌதம் எண்ணிற்கு அழைத்தாள்...

அதை ஏற்றவன்

“பயப்படற மாதிரி ஒன்னும் இல்ல டா... இலேசான காயம் தான்... இது பக்காவா ப்ளான் பண்ணின ஆப்ரேசன்தான்.... ஆனால் எப்படியோ லீக் ஆகி அந்த ரவுடி கடைசி நிமிசத்துல உசார் ஆகிட்டான் போல....

திடீர்னு அவன் மச்சானை மறைந்து நின்று சுட்டுட்டான்... ஆனாலும் மச்சான் அதை கண்டு கொண்டு உடனே கீழ குனிந்து கொண்டதால் புல்லட் தோளை உரசி சென்று விட்டது.. இலேசான சிராய்ப்பு தான்...நீ எதுவும் கவலைப்படாத... சீக்கிரம் சரி ஆகிடும்.... “ என்றான்...

ஆனால் மது கேட்கவில்லை.. எந்த மருத்துவமனையில் இருக்கிறான் என்று கேட்டு தெரிந்து கொண்டு இப்பயே போக வேண்டும் என்று அடம்பிடிக்க, எட்டாவது மாதம் முடிந்திருந்த நிலையில் அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என்று அவள் பெற்றோர்கள் தடுக்க, அவள் கேட்கவில்லை....

“எனக்கு ஒன்னும் ஆகாது பா... நான் அவரை உடனே பார்க்க வேண்டும்... “ என்று அடம்பிடிக்க வேறு வழி இல்லாமல் தன் காரிலயே அழைத்து சென்றார் சண்முகம்....

சாரதா அவள் அருகில் அமர்ந்து கொண்டு அவள் கையை பிடித்து கொண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லிய படி வந்தார்..

“நீ பதட்டபடாத மது கண்ணா.... மாப்பிள்ளைக்கு ஒன்னும் ஆகியிருக்காது.. “என்று வழியெங்கும் அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டே வந்தார்...

மருத்துவமனையை அடைந்ததும் மது வேகமாக இறங்க முயல, சாரதா அவளை பிடித்து நிறுத்தி மெதுவாக இறங்க வைத்து வேகமாக நடக்க வேண்டாம் என்று சொல்லி அவள் கையை பிடித்து அழைத்து சென்றார்...

கௌதம் அங்கயே இருக்க சிவகாமியும் செய்தி கேட்டு அப்பொழுதுதான் வந்திருந்தார்.. உள்ளே சென்று தன் மகனை பார்த்து விட்டு கண்ணீரை துடைத்து கொண்டே வெளியில் வர, வெளியில் தன் மருமகளை பார்த்து அதிர்ந்து நின்றார் சிவகாமி...

“மது..!!! நீ எங்கடா இங்க?? அதுவும் இந்த நிலையில் ?? “ என்றார் அதிர்ச்சியில்...

மதுவுக்கோ எதுவும் சொல்ல முடியாமல் தொண்டை அடைக்க,

“டீவியில் செய்தியை பார்த்துட்டு உடனே மாப்பிள்ளைய பார்க்கணும்னு அடம்பிடிச்சு கிளம்பிட்டா சம்பந்தி....நாங்களும் நீ இரு.... நாங்க போய் பார்த்துட்டு வர்ரோம்னு சொன்னா கேட்கவே இல்லை... அதான் கூட்டிகிட்டு வந்திட்டேன்... “என்றார் சண்முகம்..

“ஹ்ம்ம்ம் உன் புருசனுக்கு ஒன்னும் இல்லடா.... அந்த முருகன் புண்ணியத்துல தலைக்கு வந்தது தலைப்பாகையோட போய்டுச்சு... நல்லா இருக்கான்.. நீ போய் பார்... “ என்று மதுவை மட்டும் உள்ளே அனுப்பினார்...

அவன் படுத்திருந்த அந்த படுக்கைய தாண்டி நீண்டிருந்தது அவன் கால்... உடலில் வெறும் பனியன் மட்டும் அணிந்திருக்க, அவன் தோள்பட்டையில் கொஞ்சம் பெரிய கட்டாகவே இருந்தது ..

வலியில் கண் மூடி படுத்திருந்தவனை காண மதுவுக்கு தாங்க முடியவில்லை....

கடைசியில் முன்பு அவள் கண்ட கனவு உண்மை ஆனதை போல மனம் பதைத்தது....

மெதுவாக அவன் அருகில் சென்றவள் அவனை எழுப்பாமல் இருக்க வாய் பொத்தி கண்ணீர் விட அவள் கண்ணீர் துளிகள் இரண்டு அவன் கைகளி ல் பட, சிலிர்த்தது அவனுக்கு...

உடனே கண்ணை திறந்தவன் அருகில் தன் மனைவியை காண, ஆச்சர்யபட்டு நின்றான்... கிட்டதட்ட ஒன்றரை மாதம் ஆகிறது அவளை பார்த்து...

ஒன்பதாவது மாதம் ஆரம்பத்தில் அவள் முகம் இன்னும் பூரித்திருக்க, அவள் உதடுகள் தடித்து தாய்மையின் முழு பெண்ணாக நின்றிருந்தாள்...

வகிட்டில் அவனுக்காக வைத்திருந்த குங்குமமும் மிளிர, அந்த வலியிலும் அவளை அப்படி பார்க்க திகட்டவில்லை அவனுக்கு....

அவள் மேல் கொண்டிருந்த வெறுப்பு மறந்திருக்க, அவளையே ரசித்து கொண்டிருந்தான் தன்னை மறந்து....

பின் அவள் முகம் நோக்க, அவள் கண்களில் இருந்து வழியும் நீரை கண்டதும் பதறி போனவன்,

“ஏய்... இப்ப எதுக்கு அழுவற??.. எனக்கு ஒன்னும் ஆகலை .. ஜஸ்ட் ஒரு சிராய்ப்புதான் ... “ என்றான் இலேசாக புன்னகைத்தவாறு...

திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டவள் தலை நிமிர்ந்து அவனை பார்க்க, அவன் முகத்தில் தெரிந்த அந்த இலேசான புன்னகையை கண்டதும் தான் நிம்மதியாக இருந்தது.....

ஆனாலும் அவள் பார்வை அவன் தோள்பட்டையில் போட்டிருந்த கட்டிற்கு சென்றது....

அது மிகவும் பெரிதாக இருக்க, அதை கண்டே அது வெறும் சிராய்ப்பு இல்லை... குண்டு அவன் தோள் பட்டையில் பாய்ந்திருக்கிறது என புரிந்து கொண்டாள்.....

அவன் டக்குனு குனியாமல் இருந்திருந்தால், தோளில் பாய்ந்த குண்டு மாரி கொஞ்சம் கீழிறங்கி இருந்தால் என்று எண்ணுகையிலயே அன்று கண்ட கனவு மீண்டும் நினைவு வர, உடல் நடுங்க குலுங்கி அழ ஆரம்பித்தாள்...

அதை கண்டவன் மனம் இலகி, மெதுவாக எழுந்து சாய்ந்து படுத்தவாறு அமர்ந்து கொண்டு அந்த கட்டிலின் மீதிருந்த அவளை கையை காயம் பட்டிராத அவனுடைய மறு கையால் அழுத்தி தனக்கு ஒன்றும் இல்லை என்று சமாதானம் செய்ய முயல அவளோ இன்னும் தேம்பி அழுதாள்...

“ஏய்... அழுவாத டீ... இப்படி அழுது ஒப்பாரி வச்ச, இப்பயே உன்னை கூட்டிகிட்டு போய்ட சொல்லிடுவேன்...” என்று செல்லமாக மிரட்ட, அவன் எதிர்பார்த்த மாதிரியே உடனே தன் அழுகையை அடக்கி கொண்டாள் மது...

அவனும் உள்ளுக்குள் சிரித்தவாறு

“ஆமா... உனக்கு எப்படி தெரிந்தது?? அம்மாகிட்ட யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தேனே..” என்றான் சந்தேகமாக ...

“டீ.... டீவியில பார்த்தேன்... “ என்றாள் மெல்லிய குரலில்....

“ஹ்ம்ம்ம் ஒன்னும் பெருசா இல்லை..சீக்கிரம் சரியாகிடும்... “ என்றான்..

“ரொம்ப வலிக்குதா?? “ என்றாள் மெதுவாக முகத்தில் வலி வேதனையுடன்..... அவள் கேட்ட விதத்திலயே அவனுக்கு வலி எல்லாம் மறைந்து விட்டதை போல இருந்தது..

இல்லை என்று கண்ணால் ஜாடை காட்டியவன் பார்வை அவள் வயிற்றுக்கு செல்ல, அவள் வயிறு இப்பொழுது நன்றாக பெரிதாகியிருந்தது..

புடவை கட்டியிருக்க, அதையும் மீறி அவள் வயிறு இலேசாக வெளியில் தெரிய, அவன் பார்வை அங்கயே ஏக்கமாக பார்த்திருந்தான்....

அவன் பார்வையை கண்டு கொண்டவள், தன் தயக்கத்தை விடுத்து மெல்ல அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்தாள்....

தன் தந்தையின் முதல் தீண்டலை உணர்ந்ததாலோ என்னவோ அதுவரை உறங்கி கொண்டிருந்த அவன் வாரிசு எழுந்து குதிக்க ஆரம்பித்தாள்.... அதை தன் கையில் உணர்ந்தவன் மெய் சிலிர்த்து போனான்...

எத்தனை நாள் ஏங்கி இருக்கிறான் இந்த சுகத்திற்காக...

அன்று அகிலா தொட்டு பார்க்க சொல்லி அழைக்க அப்பொழுதே தன் குழந்தையை தொட்டு பார்க்க ஆசைதான் அவனுக்கு... ஆனால் அவன் ஈகோ அவனை விட்டு கொடுக்கவில்லை...

இன்று கூட அவனாக கேட்கவில்லை.. அவன் பார்வையை புரிந்து கொண்டு அவளாகத்தான் கையை எடுத்து வைத்தது..

தன் மகளின் அசைவை கண் மூடி ரசித்திருக்க, அதற்குள் டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வரும் ஓசை கேட்க தன் கையை எடுத்து கொண்டான்.. அவளும் தன் புடவையை சரி செய்து கொள்ள, வந்தவர் நிகிலனை பரிசோதித்து நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிடலாம்.. இன்னும் ஒரு வாரத்துக்கு ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி சென்றார்....

சாரதாவும் சண்முகம் ம் மாப்பிள்ளையை பார்த்து நலம் விசாரிக்க பின் சிறிது நேரம் அங்கயே இருந்தவளை சிவகாமிதான் கட்டாய படுத்தி அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லி அனுப்பி வைத்தார்....

அவளும் தன் கணவனை விட்டு பிரிந்து செல்ல மனமே இல்லாமல் அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறு வெளியேறி சென்றாள்....

அடுத்த நாள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்று விட்டான் நிகிலன்... எப்பொழுதும் சுறுசுறுப்பாக சுற்றி கொண்டிருப்பவன் வீட்டில் அதுவும் அவன் அறையில் தனியாக இருக்க வைக்க, பயங்கர போர் அடித்தது...

அகிலா இருக்கும் நேரங்களில் தன் அண்ணனுடன் கதை அடிப்பாள்... அவள் இல்லாத நேரங்களில் அவன் மனம் தன் மனைவியிடம் சென்று நிக்கும்...

அவள் அன்று தனக்காக கண்ணீர் விட்டு அழுது நின்றதும் அதை தொடர்ந்து அவள் வயிற்றில் அவன் உணர்ந்த அவன் குழந்தையின் அசைவும் நினைவு வந்து இம்சிக்கும்....

மீண்டும் அவளை பார்க்க வேண்டும்... தன் குழந்தையை தொட்டு பார்க்கவேண்டும் என்று துடித்த தன் மனதை வழக்கம் போல கட்டி போட்டான் நிகிலன்...

இரண்டு நாள் கடந்திருக்க, மதுவுக்கும் அவனிடம் பேச வேண்டும் போல இருந்தது... மணிக்கு ஒரு முறை தன் மாமியாரை போனில் அழைத்து அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை நினைவு படுத்தி அவனுக்கு நேரத்துக்கு சாப்பிட கொடுக்க சொல்லி அவரை படுத்தி கொண்டிருந்தாள்....

சிவகாமியும் தன் மருமகளை நினைத்து பெருமை பட்டு கொண்டே அவளிடம் வம்பு இழுத்தவாறு தன் மகனை கவனித்து கொண்டார்... ஆனாலும் அவளுக்கு மனம் கேட்காமல் தன் கணவன் குரலை கேட்க வேண்டும் போல இருந்தது....

மெல்ல தைர்யத்தை வரவழைத்து கொண்டு அவனிடம் அலைபேசியில் அழைக்க, அவள் எண்ணை கண்டதும் நிகிலனுமே துள்ளி குதித்தான் உள்ளுக்குள்... ஆனாலும் வெளி காட்டி கொள்ளாமல், முகத்தை திருப்பாமல் அவளிடம் நலம் விசாரித்து சிறிது நேரம் பேசி விட்டு வைத்தான்...

ஒரு வாரம் கடந்திருக்க, கை ஓரளவுக்கு சரியாகி இருந்தது... அதற்கு மேல் வீட்டில் இருக்க முடியாமல் காலையில் எழுந்ததும் தன் காரை எடுத்து கிளப்பி வலது கையில் காரை ஓட்ட ஆரம்பித்தான் நிகிலன்...

அலுவலகம் செல்ல என்று கிளம்பியவன் கார் தானாக மதுவின் வீட்டில் சென்று நின்றது...

காரை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல, அங்கு வரவேற்பறையில் இருந்த சோபாவில் கால் நீட்டி, தன் தந்தையின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டு தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தாள் மதுவந்தினி....

“ஹோய் குட்டி பாப்பா..!!! நீ அப்பாவாட்டம் இருப்பியாம்... யாருக்கும் பயந்துக்க கூடாதாம்.. தைர்யமா எதிர்த்து நிக்கணும்.. “ என்று தன் வயிற்றில் கை வைத்து கதை சொல்லி கொண்டிருக்க, அதை கண்டு அப்படியே நின்று விட்டான் நிகிலன்...

தாய்மை காலத்தில் அணியும் இலகுவான ஆடையில் தன் தந்தையின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டிருந்த அவள் கோலம் கண்டு மலைத்து நின்றான் சில நொடிகள்.....

உள்ளே வந்தவனை கண்டதும் சண்முகம் முகம் மலர்ந்து அவசரமாக எழ முயல,

“இருக்கட்டும் மாமா..... அப்படியே உட்காருங்க.. “ என்றவாறு உள்ளே வந்தான்..

அவன் குரலை கேட்டதும் தலையை வாயில் பக்கம் திருப்பி பார்க்க, அங்கு தன் கணவனை கண்டதும் மதுவும் வேகமாக எழுந்து அமர்ந்தாள்...

பின் அதே வேகத்தில் அவள் எழுந்து நின்று கொள்ள, அவன் குரல் கேட்டு சாரதாவும் வெளியில் வந்து அவனை வரவேற்றார்...

உடனே சமையல் அறைக்குள் சென்று குடிக்க நீர் கொண்டு வந்து கொடுக்க, மதுவோ அந்த உடையில் அவன் முன்னால் நிக்க வெக்க பட்டு நெளிந்து கொண்டிருந்தவள் பின் உள்ளே நழுவி சென்று ஒரு புடவையை கட்டி கொண்டு வந்தாள்.....

பின் இருவரும் அவனின் நலம் விசாரிக்க, அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாலும் அவன் பார்வை என்னவோ மதுவின் வயிற்றிலயே சென்று நின்றது..

அதை கண்டு கொண்ட அவள் பெற்றோர்

“மது.. மாப்பிள்ளையை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ டா.. “ என்றனர் அவர்களுக்கு தனிமை கொடுக்கும் விதத்தில்...

மதுவும் தலையை ஆட்டி அவள் அறைக்கு செல்ல, நிகிலனும் அவளை பின் தொடர்ந்தான்.... 



ன் அறைக்கு உள்ளே சென்றவள் அங்கிருந்த நாற்காலியை நகர்த்தி போட்டு அவனை அமரும்படி சொன்னாள்..... அவன் பார்வை அந்த அறையை சுற்ரிலும் வட்டமிட்டது. இதுவரை அவள் அறைக்கு வந்ததில்லை அவன் ... அவள் வீட்டில் ஒரு நாளாவது தங்கியிருந்தால் இங்க வந்திருக்கலாம்...

எப்பொழுதும் வந்த உடனே கிளம்பி விடுவதால் அந்த வீட்டின் வரவேற்பறையை தாண்டி வந்ததில்லை...

அந்த அறையில் சுவற்றில் நிறைய குழந்தைகளின் படங்கள், அவள் சிறு வயது போட்டோக்கள் மற்றும் சில அவளுக்கு பிடித்த பெண் செலபரிட்டிஸ்களான இந்திரா காந்தி, அன்னை தெரசா, பென்சீர் பூட்டோ போன்ற பல பெண்களின் போட்டோக்கள் நிறைந்து இருந்தன....

அங்கிருந்த டேபிளின் மிது அவர்களின் திருமண புகைப்படம் ஒன்றை அழகாக ப்ரேம் இட்டு வைத்திருந்தாள்....

அவள் படுக்கைக்கு எதிர்புறம் பார்க்க அப்படியே திகைத்து நின்றான்.. அவனின் புகைப்படம் ஒன்று பெரிதாக பிரேம் போட்டு அவன் இலேசாக புன்னகைத்தவாறு மாட்ட பட்டிருந்தது...

அவன் பார்வை அதில் சென்று நிக்க, அதை கண்டவள் கன்னம் சிவந்து போனது....

“வந்து..... அத்தை தான் .. இந்த போட்டோவை பார்த்து கொண்டிருந்தால் பாப்பா உங்களை மாதிரி இருக்கும் னு இதை கொண்டு வந்தாங்க... “ என்றாள் மெல்லிய குரலில் தயக்கமும் வெக்கமும் கலந்த குரலில்...

உண்மை என்னவென்றால், அவளாகத்தான் தன் தந்தையிடம் சொல்லி இந்த போட்டோவை ரெடி பண்ணி இருந்தாள்...

ஆனாலும் அதை வெளிப்படையாக சொல்ல தயக்கமாக இருக்க குனிந்து கொண்டே தன் மாமியார்தான் இதை ஏற்பாடு செய்தது என்று மாற்றி சொன்னாள்....

ஆனால் அவள் குரலில் இருந்தே அவனுக்கு புரிந்து விட்டது...

உள்ளுக்குள் பெருமையாக இருக்க, மெல்ல புன்னகைத்து கொண்டான்...

நாற்காலியில் அமர்ந்து அந்த அறையை சுற்றி பார்வை இட்டவன் பார்வை அருகில் நின்று கொண்டிருந்தவளின் வயிற்றுக்கு சென்றது...

அவன் பார்வையை கண்டு கொண்டவள் அவன் அங்கு வந்ததற்கான காரணம் இப்பொழுது புரிந்து விட,

“திருடன் ... அவன் புள்ளைய பார்க்கத்தான் வந்திருக்கான்.. நான் கூட என்னை பார்க்கத்தான் வந்திருக்கான் னு நினைச்சிட்டேன்... “ என்று உள்ளுக்குள் பொருமியவாறு அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.....

அவனும் எதுவும் பேசாமல் தன் பார்வையையும் அவள் வயிற்றில் இருந்து விலக்காமல் இருந்தான்...

“சரியான அழுத்தகாரன்... விருமாண்டி... வாயை திறந்து அவன் மனதில் இருப்பதை சொல்கிறானா பார்.... “ என்று முனகி கொண்டே அவன் அருகில் சென்றவள் அவள் புடவையை விலக்கி அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்தாள்....

அவள் தன்னை, தன் மனதை புரிந்து கொண்டு தானாகவே அவன் விரும்பியதை செய்ய அவனுக்கு இன்னும் பெருமையாக இருந்தது .. அதோடு தன் குழந்தையின் ஆட்டத்தை கையால் தொட்டு பார்க்க அவன் உள்ளே சிலிர்த்து போனது....

தன் மகளின் ஒவ்வொரு அசைவையும் கையில் உணர, அதை அனு அனுவாக ரசித்தான்....தன் கையை சிறிது நேரம் அப்படியே வைத்து கொண்டிருந்தான்....

அவள் வயிற்றில் இருந்து கையை எடுக்க மனமே வரவில்லை.. அவளுக்கு கால் வலிக்க ஆரம்பித்தது.... காலை மாற்றி வைத்து கொண்டு நின்று கொண்டிருந்தாள் அவனையே ஓர கண்ணால் ரசித்தவாறு.....

அவள் நெலிவதை கண்டவன்,

“If you dont mind, shall I kiss my பேபி... " என்றான் தயக்கமாக...அதை கேட்டு

“ஆங்.... " என்று முழித்தாள் மது...

அவளின் அந்த ரியாக்சனை பார்த்தவன்,

"அடிப்பாவி.... என்னமோ அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட கிஸ் பண்றேன் னு சொன்ன மாதிரி இப்படி ஒரு ரியாக்சன் கொடுக்கறா பார்....என் பொண்டாட்டி, என் புள்ளையை கிஸ் பண்ண கேட்டதுக்கு இந்த முழி முழிக்கிறா !!! " என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டு அவளையே ஏக்கமாக பார்த்திருக்க

அவளோ கன்னம் சிவக்க ம்ம்ம்ம் என்று தலையை ஆட்டினாள்...

அவள் புடவையை விலக்கி வெள்ளை வெளேறென்று மேடிட்டிருந்த அவள் வயிற்றில் மெதுவாக இதழ் பதித்தான் அவன் குழந்தைக்கு வலித்து விடுமோ என்ற அளவில்...!!!

அவன் முத்தம் அவன் குழந்தைக்கு தான் என்றாலும் அவள் உள்ளேயும் சிலிர்த்தது...

அன்று இரவு அவள் கனவு கண்டு அவனை கட்டி அணைத்து நடுங்கிய பொழுது அவளை மெல்ல அணைத்து அவளின் முன் உச்சி நெற்றியில் அவன் முத்தமிட்டது ஞாபகம் வர, அவளுக்கான அந்த முத்தத்தை எதிர் பார்த்து அவனை ஏக்கமாக பார்க்க அவன் நினைவுகளும் அங்கயே சென்று நின்றது....

அவளை தன்னோடு சேர்த்து அணைத்து அவளுக்கும் முத்தமிட துடித்தன அவன் கரங்களும் இதழ்களும்....

ஆனால் அன்று அவள் அலைபேசியில் பேசியது இன்னும் மறக்காமல் அப்படியே இருக்க, அவளை மன்னிக்க, மனதார ஏற்று கொள்ள இன்னும் அவனால் முடியவில்லை...

அவள் கெட்டவள் என்ற அவள் மீதான முத்திரை மற்றும் அவன் மனதை விட்டு மறையாமல் இருந்தது....

அவள் கெட்டவளே ஆனாலும் அவள் வயிற்றில் வளர்வது என் குழந்தை...என் குழந்தையை நல்ல படியாக பார்த்து கொள்வது என் கடமை...அதோடு தன் குழந்தையை தொட்டு உணர்ந்த நாளில் இருந்தே அவன் மனம் அந்த தீண்டலுக்காக மீண்டும் மீண்டும் ஏங்கியது...

அவன் எண்ணத்தை எப்படி மாற்ற முயன்றாலும் கடைசியில் அவன் மனம் அடங்காமல் தன் குழந்தையிடம் வந்து நிக்க அதை அடக்க முடியாமல் தான் தன் ஈகோவை விட்டு இன்று இங்கு வந்து நின்றது....

அவன் குழந்தைக்காக, பிறக்காத தன் மகளுக்காக தன் ஈகோவை விட்டு வந்தவன் தன் மனைவிக்காக, அவள் செய்த தவறை மன்னித்து அவளை ஏற்று கொள்ள தடுக்கும் தன் ஈகோவை விட்டு வெளி வர முடியவில்லை அவனால்...

அவள் அவனையே ஏக்கமாக பார்ப்பது தெரிந்தும் அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் தன் மகளுக்கு ஒரு முத்தத்தை கொடுத்து

"டாடி போய்ட்டு நாளைக்கு வர்ரேன் பேபி... நீ பத்திரமா இரு...பை.... " என்று மீண்டும் அவள் வயிற்றில் கை வைத்து சொல்லி விட்டு அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பி சென்றான்...

தன் ஏக்கத்தை, ஏமாற்றத்தை மறைத்து கொண்டாள் மது...

அவளும் வாயில் வரை வந்து கை அசைத்து வழி அனுப்பி வைத்தாள்....

தன் அறைக்கு திரும்பி வந்தவள் தன் கணவன் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று வருத்தமாக இருந்த போதும் அட்லீஸ்ட் அவன் புள்ளைக்காகவாது வர்ரானே.... !! அதுவே போதும் என்று தன்னைதானே தேற்றி கொண்டாள்...

அடுத்து வந்த ஒரு வாரமும் தன் மாமியார் வீட்டிற்கு தினமும் காலையில் வந்து விடுவான் நிகிலன்..... தன் மகளிடம் சிறிது நேரம் கொஞ்சியவன் பின் முத்தம் இட்டு தன் வேலையை பார்க்க சென்று விடுவான்....

மதுவும் கண்டு கொள்வதில்லை....அவன், தன் கணவன், அந்த விருமாண்டியும் இறங்கி வந்து அவன் மகளை கொஞ்சுவதே அவளுக்கு வேடிக்கையாக இருக்கும்...

அதனால் உள்ளுக்குள் சிரித்து கொண்டே தினமும் அவன் வருகைக்காக காத்திருப்பாள்....

நிகிலன் அன்று மதியம் ரவுண்ட்ஸ் ல் இருக்க, அவன் பெர்சனல் அலைபேசி அலறியது.. அதை எடுத்து பார்க்க சிவகாமிதான் அழைத்திருந்தார்...

அந்த அழைப்பை ஏற்றவன் காதில் வைத்து

“என்னமா?? “ என்றான் அவசரமாக

"நிகிலா.... உன் பொண்டாட்டிக்கு பெய்ன் வந்திருச்சு பா.. ஹாஸ்பிட்டல் கூட்டிகிட்டு போய்கிட்டிருக்காங்க...நானும் அங்க தான் போய்கிட்டிருக்கேன்... “ என்றார் பதற்றத்துடன்...

“மா... டாக்டர் சொன்ன டேட் படி இன்னும் ஒரு வாரம் இருக்கு இல்ல.. அதுக்குள்ள எப்படி??? “ என்றான் குழப்பமாக....

“வந்து.... மது தனியா பாத் ரூம் போய்ருக்கா போல... எப்படியோ பாத் ரூம்ல கால் வலுக்கி விழுந்திட்டா போல.. உடனே வலி ஆரம்பிச்சிடுச்சு...." என்றார் மெல்ல தயங்கியவாறு...

"டேமிட்.. என்னத்த பார்த்துக்கறாங்களாம் அவ அப்பன் வீட்ல.....இதுக்குத்தான் அவளை அங்க கூட்டிகிட்டு போனாங்களா?? ..இப்படி கேர்லெஸ் ஆ இருப்பாங்கனு தெரிந்திருந்தால் அவளை அங்க அனுப்பி இருக்கவே மாட்டேன்... என் குழந்தைக்கு மட்டும் எதாவது ஆகட்டும்... தொலச்சுடுவேன் அவங்களை.. " என்று பல்லை கடித்தான் நிகிலன்..

"டேய்.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. அந்த முருகன் இருக்கான்..... நீ சீக்கிரம் கிளம்பி வா... உன் பொண்டாட்டிஉன்னை உடனே பார்க்கணும்னு துடிக்கிறா.. " என்றார் தன் கவலையை மறைத்து கொண்டு..

“இதோ வர்ரேன் மா.." என்றவன் காரை அந்த மருத்துவமனையை நோக்கி விரட்டினான்..

அடுத்த 10 வது நிமிடம் சிவகாமி மீண்டும் அழைத்து

“நிகிலா.. எங்க இருக்க ?? “ என்றார் பதற்றமாக...

அவர் குரலில் இருந்த பதற்றத்தை கண்டவன் இன்னும் பதறி

"வந்துகிட்டே இருக்கேன் மா... என்னாச்சு ?? “ என்றான் பதற்றமாக...

"வந்து.. மது நீ வந்தா தான், உன்னை பார்த்த பிறகு தான் லேபர் வார்ட்க்குள்ள போவேனு அடம் பிடிக்கிறா.. கொஞ்சம் சீக்கிரம் வாடா... " என்றார் பதற்றத்துடன்...

"என்ன ?? அவ அப்பன் மாதிரியே லூசாமா அவ ??... நான் வர்றதுக்கும் அவ உள்ள போறதுக்கும் என்ன இருக்கு?? ... போன அவகிட்ட கொடுங்க... “ என்றான் கடுப்புடன் காரை வேகமாக ஓட்டி கொண்டே...

"கொடுத்திட்டேன்.. பேசு டா.. " என்றார் சிவகாமி...

"என்ன லூசாடி.. நீ ?? .. நான் தான் வந்துக்கிட்டிருக்கேன் இல்ல....ஒழுங்கா உள்ள போ... என் குழந்தைக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு .உன்னையும் உன் அப்பனையும் தொலச்சுடுவேன்... முதல்ல உள்ள போ.. அவங்க டிரீட்மென்ட் ஆரம்பிக்கும் முன் நான் வந்திடுவேன்... " என்று கத்தினான்.....

“கண்டிப்பா வந்திடுவீங்க இல்ல ??... " என்றாள் ஏக்கத்துடன் தன் வலியை மறைத்து கொண்டு...

“வந்திடுவேன் டீ.... நீ முதல்ல உள்ள போ.. " என்று பல்லை கடித்தான்..

“ப்ராமிஸ்..?? “ என்றாள் அந்த நிலையிலும்....

“டீ டீ டீ. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.....” என்று பல்லை கடித்தவன் தன்னை கட்டு படுத்தி கொண்டு,

"ப்ராமிஸ்....நான் வந்திடுவேன்... நீ முதல்ல உள்ள போய் டாக்டர் சொல்ற படி டிரீட்மென்ட் ஆரம்பி.. நான் அதுக்குள்ள வந்திடுவேன்... " என்று தன் அலைபேசியை வைத்தான்...

அவளும் அதன் பின் ஒத்து கொள்ள அவளை லேபர் வார்ட் உள்ளே அழைத்து சென்றனர்.....

நிகிலன் எப்படி கார் அவ்வளவு வேகமாக ஓட்டினான் என்று அவனுக்கே தெரியாது..எப்பவும் ஸ்பீட் லிமிட் ஐ தாண்டி காரை ஓட்டக்கூடாது என்று அட்வைஸ் பண்ணுபவன் இன்று அவனே அந்த விதியை மீறி இருந்தான்....

அடுத்த 10 ஆவது நிமிடத்தில் அந்த மருத்துவமனையில் இருந்தான்..

காரை நிறுத்தியவன் சிவகாமியை அழைத்து மது இருக்கும் அறையை கேட்டு கொண்டு அந்த தளத்திற்கு படிகள் வழியாக தாவி ஓடினான் அந்த அறைக்கு...

வெளியில் அனைவரும் பதற்றமாக நின்று கொண்டிருக்க, தன் மாமனாரை பார்த்து முறைத்து விட்டு நேராக லேபர் வார்ட் உள்ளே சென்றான்...

அங்கு அப்பொழுது தான் மதுவுக்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்து இருந்தனர்..... அவளோ வலியால் கத்தி கொண்டிருந்தாள்...

இவனை கண்டதும் அந்த வலியிலும் அவளின் முகம் மலர்ந்தது... இதை கண்ட அந்த வயது முதிர்ந்த கைனிக் டாக்டர்

“வாப்பா.. நீதான் இந்த பொண்ணோட புருசனா?? இப்படித்தான் உன் பொண்டாட்டியை பார்த்துக்குவியா?? " என்றார் கோபமாக

"இவ அப்பன் வீட்ல .. “ என்று சொல்ல வந்து டாக்டர் அவனை பார்த்து முறைக்க

“சாரி டாக்டர்.. என் மாமனார் வீட்ல இருந்தா... அவங்க சரியா பார்த்துக்காம விட்டுட்டாங்க... " என்றான் பதற்றம் குறையாமல்

"சரி.. நீ உன் வீட்ல இருக்கிறப்ப எத்தனை தரம் உன் பொண்டாட்டியை செக்கப்புக்காக கூட்டிகிட்டு வந்திருக்க?? " என்று முறைத்து மேலும் அவனை நன்றாக திட்டினார்...

ஒரு முறை கூட நிகிலன் தன் மனைவியை அழைத்து செல்ல வில்லை...அவன்தான் அந்த குழந்தைமீது எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் இருந்தானே....

ஓரளவுக்கு அவள் வளர்ந்த பிறகுதான் என் குழந்தை என மண்டையில் உரைக்க, அன்றிலிருந்து தான் கொஞ்சமாக இலக ஆரம்பித்தான்....

அதனால் எல்லா செக்கப் க்கும் சிவகாமி தான் தன் மருமகளை அழைத்து செல்வார்.... டாக்டர் மதுவிடம் அவள் கணவனை பற்றி கேட்டால் அவனை விட்டு கொடுக்காமல் ஏதாவது சொல்லி சமாளித்து விடுவாள மது.....

தன் பிறந்த வீட்டிற்கு சென்ற பிறகு அவள் பெற்றோர்களே அவளை கூட்டி கொண்டு வர அந்த குழந்தையின் தந்தை ஒரு முறை கூட வராத பொறுப்பற்ற குணத்தை கண்டு முன்பே கடுப்பில் இருந்தவர் அந்த கோபத்தில் இப்பொழுது திட்டி தீர்த்தார் நிகிலனை...

அதையெல்லாம் அமைதியாக கேட்டு கொண்டவனுக்கு அவன் தவறு புரிந்தது...

“சே... எப்படி ஒரு முட்டாளா இருந்திருக்கிறேன் ... “ என்று தன்னையே திட்டி கொண்டவன் அந்த வருத்தத்துடனே

“சாரி... டாக்டர்.. என் தப்புதான்.... இனிமேல் இப்படி பொறுப்பில்லாமல் இருக்க மாட்டேன்.... இவளுக்கு இப்ப எப்படி இருக்கு? இவ ஏன் இப்படி கத்தறா??.. பேசாம சிசேரியன் பண்ணிடுங்களேன்.. " என்றான் பதற்றமாக

"ஹ்ம்ம்ம் புள்ளைய பெத்துக்கறதுனா சும்மா கிடையாது ACP சார்.. இந்த மாதிரி வலி அனுபவிச்சாதான் முடியும்... அதோட வலி வந்த பிறகு இனிமேல் ஆப்ரேசன் பண்ணினால் இன்னும் சிக்கலாகும்....

கொஞ்சம் வலியை பொருத்துக்க சொல்லுங்க... உங்களை பார்க்கணும்னுதான் இவ்வளவு நேரமா துடிச்சுகிட்டிருக்கா உங்க பொண்டாட்டி... " என்றார்...

அவள் நிலையை கண்டு அவன் எதுவும் பேச முடியாமல் தவித்து வாயடைத்து கண் கலங்கி நிக்க, மதுவோ இன்னும் துடித்து கொண்டிருந்தாள்....

“என்னப்பா.. அப்படியே நின்னுகிட்டு இருக்க ??... சரி.. நீ சரி பட்டு வரமாட்ட.. உன் பொண்டாட்டியை விட நீ அழுவ போல இருக்கு... அதான் அவளை பார்த்துட்ட இல்ல .. நீ போய் பெரியவங்க இருந்தால் யாரையாவது வரச் சொல்... " என்றார்..

அதை கேட்டு நிகிலன் நகர முயல, மது எட்டி அவன் கையை பிடித்து கொண்டாள்....

அதை கண்ட டாக்டர்.

"என்ன மா வேணும் உனக்கு?? .. பெரியவங்க வேண்டாம் உன் புருசன் பக்கதுல இருந்தா போதுமா.?? " என்றார் அந்த டாக்டர் அவளை முறைத்தவாறு...

அவள் ஆமாம் என்று தலையாட்ட

"ஹ்ம்ம் நல்ல பொண்ணுமா நீ..!! இப்படியா புருசன் மேல உயிரா இருப்ப!! ... சரிப்பா..உன் பொண்டாட்டி பக்கத்துலயே நில் .. அவளுக்கு வலியை பொறுத்துக்க சொல்லி தைர்யம் சொல்.. நாங்க எங்க வேலையை பார்க்கறோம்.. " என்றவர் மதுவிடம் சில முறைகளை விளக்கி அவளை பின்பற்ற சொல்ல,

நிகிலன் அவள் கையை பிடித்து கொண்டு

"ஒன்னும் ஆகாது.. தைர்யமா இரு... நான் இருக்கேன்.. உனக்கு எதுவும் ஆகாது.. உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்... எப்பவும் நான் இருப்பேன் உன் கூட.. " என்றான் கண்ணில் வலியுடன்......

அதை கேட்டவள் திகைத்து அவன் முகம் நோக்க, அவன் கண்ணில் தனக்கான வலியை கணடதும் அவள் வலி எல்லாம் பறந்து போனதை போல இருந்தது....

“இது போதும்..!! என் கணவனின் இந்த அன்பு போதும் எனக்கு.... எனக்காக அவன் கலங்கும் இந்த நொடிகள் போதும்.. இனிமேல் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.... இந்த குழந்தை, அவன் மகள் நல்லபடியா பிறக்கணும்.. "

என்று அந்த வேலனை வேண்டி கொண்டே தன் வலியை பொறுத்து கொண்டு டாக்டர் சொன்ன அறிவுரையை பின்பற்ற அவள் படும் வேதனையை கண்டு நிகிலனுக்குத்தான் அங்கு நிக்க முடியவில்லை...

அவளை பார்க்க முடியாமல் அந்த அறையை விட்டு வெளியில் வர முயல, அவன் கையை விடவில்லை அவள்.. அவன் கையை இறுக்கி பிடித்திருந்தாள் மது...

அவன் மட்டுமே துணையாக நம்பி அத்தனை வலியையும் தாங்கி கொண்டிருந்தாள் அவன் மகளை பெற்றெடுக்க...

அதை கண்ட நிகிலன் இன்னும் திகைத்து போனான்...

“அவளை தாங்கும் அவள் பெற்றோர்களை விட்டு, அவள் எப்பவும் செல்லம் கொஞ்சும் என் அன்னையை தவிர்த்து, அவளிடம் சரியாக முகம் கொடுத்து கூட பேசாத என் மீது இப்படி உயிராக இருப்பவளா தப்பானவள்??

இல்லை.. ஏதோ தப்பு நடந்திருக்கு.. முதல் முறையாக நான் தாப்பான முடிவு எடுத்து விட்டேனா?? இவள் உண்மையிலயே நல்லவளாகத்தான் இருக்க வேண்டும்... இந்த பாசம் நடிப்பில்லை..!! .அவள் முகத்தில் தெரியும் எனக்கான ஏக்கம் தவிப்பு வேசமில்லை...!! . நான் தான் எங்கயோ அவளை தப்பாக புரிந்து கொண்டிருக்கிறேன்...“ என்று மனம் வருந்த

அவள் தலையை மெல்ல வருடியவன்

மீண்டும் முன்பு சொன்னதை இப்பொழுது வலியுடன் சொன்னான்..

“உனக்கு எதுவும் ஆகாது மது.. நான் ஆக விடமாட்டேன்... நான் இருக்கேன் உனக்காக... “ என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்...

அவன் கண்ணில் அவள் மீது இருந்த அந்த வெறுப்பு மறைந்திருக்க, அவள் நல்லவள் தான் என்று அவள் மீது நம்பிக்கை வந்து விட்டதை கண்டு கொண்டவள் அவன் முகத்தில் தெரிந்த அவளுக்கான வலி அவளுடைய மீதி இருந்த வலியை யும் மறக்க வைக்க, அடுத்த நொடி தன் உதட்டை கடித்து கொண்டு அவன் கையை இறுக்க பற்றினாள் அவன் வாரிசை அவனுக்கு பரிசாக கொடுப்பதற்காக....

அடுத்த நொடி வீல் என்ற அலறலுடன் அவன் குழந்தை இந்த உலகத்தில் அடி எடுத்து வைத்திருந்தாள்...

அங்கு இருந்த டாக்டர் மற்றும் செவிலியர் எல்லோர் முகத்திலும் பெரும் நிம்மதி வந்திருக்க, அந்த டாக்டர் தொப்புல் குடியை கட் பண்ணி இரத்ததுடன் இருந்த சிசுவை தூக்கி அவனிடம் காட்டி

“உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கா பா... “ என்றார் சிரித்தவாறு....

தன் மகளை கண்டதும் பெரும் நிம்மதி மகிழ்ச்சி வந்து சேர்ந்தது அவனுக்கு...

“அவன் மனைவி மது எப்பவும் தன் தந்தையின் தோள் சாய்ந்து கொண்டு அவரிடம் செல்லம் கொஞ்சுவதும் அவன் தந்தை அகிலாவை அணைத்து தன் மேல் போட்டு வளர்த்ததும், ஆதி அவன் இளவரசியை கை பிடித்து அழைத்து கொஞ்சி விளையாண்டதும் நினைவு வர,

“என் கையையும் பிடித்து கொண்டு நடை பயில, என்னிடம் செல்ல கொஞ்ச, எனக்கு ஒரு மகள் வந்துவிட்டாள்...இவள் என் மகள்...!!! என் தேவதை.. !! என் ப்ரின்ஸஸ் .!!! “ என்றவன் இந்த உலகையே வென்று விட்டதை போல பூரித்து போனான்.....

இதற்கு காரணமானவளை குனிந்து பார்க்க அவளோ தன் கணவன் தன்னை புரிந்து கொண்டான்... அவன் சொன்ன மாதிரி அவன் குழந்தையை பத்திரமாக கொடுத்தாச்சு என்று நிம்மதியுடன் கண்ணை மூடியிருந்தாள்.....

அதை கண்டதும் ஒரு நொடி அவன் இதயம் நின்று விட்டது....

“டாக்டர்.......................” என்று அலறினான் அவன் உடல் நடுங்க.....



அதை கண்டு அந்த வேலனும் அதிர்ந்து போனான்...இது அவன் ஆட்டத்தில் இல்லையே என்று அதிர்ந்து போய் அவசரமாக யோசித்தான்....

அந்த விதியோ தன் ஆட்டம் கிட்ட தட்ட முடிவுக்கு வந்ததாக மகிழ்ந்து தான் வெற்றி பெற்றதாக நினைத்து ஆனந்தத்தில் கை கொட்டி சிரித்தது... !!!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!