காதோடுதான் நான் பாடுவேன்-40
அத்தியாயம்-40
தன் மகளை கண்டதும் இந்த உலகத்தையே வென்று விட்ட பெருமிதத்தில் நிகிலன் தன் மனைவியை பார்க்க, அவளோ தன் கணவன் தன்னை புரிந்து கொண்டான்... அவன் சொன்ன மாதிரி அவன் குழந்தையை பத்திரமாக கொடுத்தாச்சு என்று நிம்மதியுடன் கண்ணை மூடியிருந்தாள்.....
அதை கண்டதும் ஒரு நொடி அவன் இதயம் நின்று விட்டது....
“டாக்டர்.......................” என்று அலறினான் அவன் உடல் நடுங்க.....
“எதுக்குப்பா இப்படி அலற?? உன் பொண்டாட்டி போட்ட சத்தத்தை விட நீ அலறதுதான் பெருசா இருக்கு.. “ என்று சிரித்தார் அந்த டாக்டர்...
“டாக்டர்..... ம மது மதுவுக்கு என்னாச்சு?? “ என்றான் வார்த்தை வராமல் தொண்டை அடைத்து கொள்ள....
“ஹ்ம்ம்ம் ஒன்னும் இல்ல.. இலேசான மயக்கம் தான்... கஷ்ட பட்டு புள்ளைய பெத்திருக்கா இல்ல.. அதுக்கான சோர்வு தான்.... கொஞ்ச நேரத்துல சரியாய்டுவா...” என்றார் சாதாரணமாக...
அதை கேட்டதும் நிம்மதி மூச்சு விட்டான் அந்த வடிவேலன்....இந்த உலகையே ஆட்டி வைக்கும் அந்த ஈசனின் மகன் ஒரு நொடியே என்றாலும் அவனே அரண்டு போனதை கண்ட அந்த விதியோ
“அது..... அந்த பயம் இருக்கட்டும் வேலா..... “ என்று நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டது...
“இது வெறும் sample தான்... இன்னும் என் ஆட்டம் முடியவில்லையாக்கும்.... என் இறுதி ஆட்டத்தையும் பொருத்திருந்து பார்.... “ என்று சவால் விட்டு சிரித்தது அந்த விதி....
கிட்ட தட்ட 57 வயதை நெருங்கி இருந்தார் அந்த மருத்துவர்....
அவர் அனுபவத்தில் எத்தனை பிரசவங்களை பார்த்திருக்கிறார்.. அவருக்கு தன்னிடம் வரும் பேசன்ட்ஸ்கள் மது மாதிரி சத்தம் போடுவதும் பின் மயங்கி சரிவதும் பழகி போன ஒன்று....
பத்துல பதினொன்று... என்று அலட்டி கொள்ளாமல் மற்ற வேலையை செய்ய, செவிலியர் அதற்குள் குழந்தையை சுத்தம் செய்ய, நிகிலனோ இன்னும் அந்த டாக்டர் சொன்னதை நம்பாமல்
“மது...... “ என்று மெல்ல அழைத்தான் அவள் தலையை வருடியபடி...
“என்ன ACP சார்... இன்னும் நான் சொன்னதை நம்பலையா?? போலிஸ்காரர் னு சரியாதான் காமிக்கிறிங்க.... போய் வெளில உட்காருங்க... உன் பொண்டாட்டி கண்ணை முழிச்சதும் கூப்பிடறோம்.. நீங்களும் டயர்டா இருக்கீங்க...போய் ரெஸ்ட் எடுங்க....
அப்புறம் இப்பயாவது புரிஞ்சுதா ஒரு புள்ளைய பெத்து எடுக்கறது எவ்வளவு கஷ்டம் னு.. இவ்வளவு கஷ்ட பட்டு குழந்தையை பத்து மாசம் சுமந்து பெத்து எடுத்தா நீங்க நோகாம என் பொண்ணு, என் பிரின்ஸஸ், என் தேவதை னு தூக்கி வச்சு கொஞ்சறீங்க....
ஆனா பொண்டாட்டி மாசமா இருக்கிறப்ப அவளை அனுசரனையா பார்த்துக்க முடியலை.... உங்க வாரிசை சுமப்பவளை ஒரு நாள் கூட ஹாஸ்பிட்டல் க்கு அழைச்சுக்கிட்டு வரக்கூட உங்களால முடியலை....
இனிமேலாவது பொண்டாட்டியை பக்கத்துல வச்சு நல்லா பார்த்துக்கங்க...” என்று இன்னும் மீதி இருந்த டோஸ் ஐயும் சேர்த்து கொடுத்தார் அவனுக்கு....
அவர் சொன்னது உண்மைதான்... என்று இருந்தது....
ஒரு குழந்தையை பெத்து எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று நேரில் பார்த்த பிறகுதான் அவனுக்கு உறைத்தது....
“நான் அவளை என் குழந்தைக்காகவாது அனுசரனையாக பார்த்திருக்க வேண்டும்...எவ்வளவு ஏங்கி இருப்பாள் என் பாசம் அன்பிற்காக...” என்று எண்ணி வருந்தினான்...
அதோடு சற்று முன் பிறந்த குழந்தையை சுத்தம் கூட செய்யாமல் இரத்தத்துடன் அப்படியே அவனிடம் காட்ட, அதை பார்க்க தலை சுற்றியது அவனுக்கு....
எத்தனையோ என்கவுண்டர்களை சலைக்காமல் செய்திருக்கிறான்... எத்தனையோ முறை இரத்தத்தை பார்த்திருக்கிறான்....
ஆனால் ஒரு பிறந்த குழந்தையை அப்படி பார்க்க, அதுவும் அதை பெற்றெடுக்க அவன் மனைவி பட்ட கஷ்டத்தை பார்க்கவும் பெண்கள் மீதான மதிப்பு கூடியது அவனுக்கு...
அதனால்தான் பிரசவம் என்பது ஒரு பெண்ணிற்கு மறுபிறப்பு என்று சொல்கிறார்கள் போல என்று எண்ணியவன் தன் மனைவியை இப்பொழுது பாசத்துடன் நோக்கினான்....
அவளோ இன்னும் கண் மூடிய படியே இருந்தாள்...எப்பவும் சிரித்த முகமாக வளைய வருபவள் இப்பொழுது கண் மூடி அமைதியாக படுத்திருப்பதை காணவும் அவனுக்கு தாங்க முடியவில்லை....
தன் குழந்தைக்காக என்று தன் ஈகோவை விட்டு இறங்கி வந்தவன் இன்று அந்த குழந்தையை கூட பார்க்காமல் அவளையே, தன் மனைவியையே பயத்துடன் பார்த்து கொண்டிருந்தான்....
அவள் எப்படியாவது எழுந்து வந்து விட வேண்டும் என்று மனதுக்குள் வேண்டி கொண்டவன் மீண்டும் ஒரு முறை அவளை திரும்பி பார்த்தவன் அதற்கு மேல் அவளை அப்படி பார்க்க முடியாமல் மெல்ல நடந்து வெளியில் வர, மற்றவர்கள் ஆர்வமாக அவனை பார்க்க, இருண்டு போயிருந்த அவன் முகத்தை கண்டு எல்லோரும் பயந்து போயினர்....
அவன் முகம் களைத்து போய் எதையோ கண்டு பயந்த மாதிரி என்னவோ நடந்ததை போல இருக்க, அனைவரும் மதுவுக்குத்தான் என்னாச்சோ என்று பயந்து போய் உள்ளே பார்த்தனர்... ‘
அதற்குள் ஒரு செவிலியர் அந்த இளவரசியை கொண்டு வந்து
“பெண் குழந்தை பிறந்திருக்கா... தாயும் சேயும் நலம்.. “என்று சொல்லி சிவகாமியிடம் அந்த குழந்தையை கொடுக்க, எல்லாருக்கும் நெஞ்சில் பாலை வார்த்த மாதிரி இருந்தது....
நிகிலனை மறந்து தங்கள் பேத்தியை எல்லோரும் வாங்கி கொஞ்ச ஆரம்பித்தனர்....
நிகிலன் மட்டும் இன்னும் பேயறைந்த மாதிரி முழித்து கொண்டு நிக்க, சிவகாமி அவன் அருகில் வந்து என்னாச்சு நிகிலா?? என்று கேட்க, யாருக்கும் பதில் சொல்லாமல் மெல்ல நகர்ந்து சிறிது தொலைவில் இருந்த பென்சில் சென்று அமர்ந்து கொண்டான்...
அவன் உடல் இன்னும் இலேசாக நடுங்கி கொண்டிருந்தது...
அவளின் அந்த பிரசவ வலியும் அதன் பின் அமைதியான கண்ணை மூடி இருக்கும் நிலை மீண்டும் கண் முன்னே வர அவன் இதயம் மீண்டும் நின்று துடித்தது....
அவன் உடல் மீண்டும் நடுங்க, அதற்குள் விசயம் கேள்வி பட்டு ஆதியும் பாரதியும் விரைந்து வந்திருந்தனர்...
நிகிலன் தனியாக ஒரு பென்சில் அமர்ந்து இருப்பதை கண்ட ஆதி அங்கு சென்று அவன் அருகில் அமர, அவனை கண்டதும் வேகமாக தன் நண்பனை இறுக்கி அணைத்து கதறிவிட்டான் நிகிலன்.....
“எப்பவும் இறுகி இருப்பவன் உள்ளே இப்படி ஒரு மென்மையா ?? “ என்று ஆச்சர்யமாக இருந்தது ஆதிக்கும்...
தன் நண்பனின் வலி புரிந்தது ஆதிக்கு..அவனும் அதை தாண்டி வந்தவன் தானே!!! மெல்ல நிகிலனின் முதுகை ஆதரவாக வருடி கொடுத்தான்... அவர்களை தனியாக விட்டு விட்டு பாரதி முன்னால் நகர்ந்து சென்றாள்...
சிறிது நேரம் கழித்தே நிகிலன் தன் நிலைக்கு வர, ஆதி அவனை அழைத்து சென்று சூடாக டீயை வாங்கி கொடுக்க அவன் மறுத்தும் அவனை கட்டாய படுத்தி குடிக்க வைத்தான்.... அதை குடித்த பிறகு தான் கொஞ்சம் தெம்பே வந்தது நிகிலனுக்கு.....
மீண்டும் லேபர் வார்ட் ல் அவன் பார்த்த காட்சிகள் கண் முன்னே வர,
“ஆதி... மது....வலி... “ என்று ஏதோ சொல்ல வர, அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்ட ஆதி,
“டேய்.. உன்னை யார் டெலிவரியை பார்க்க சொன்னா?? ஏன் டா எத்தன என்கவுண்டர் போட்டு தள்ளி இருக்க.!!
நீயா இந்த பிரசவத்தை பார்த்து இப்படி நடுங்கற..?? நீயெல்லாம் ஒரு ACP னு வெளில சொல்லிடாத... “ என்று சிரித்தான் ஆதி...
அதற்குள் கொஞ்சம் தெளிந்தவன் ஆதி சொன்னதை கண்டு கொள்ளாமல்
“டேய்.... ஆதி... அவளுக்கு ஒன்னும் ஆயிருக்காது இல்ல.. ?? “ என்றான் இன்னும் தன் பயம் முழுவதும் விலகாமல்...
“டேய் நிகில்.... மதுவுக்கு ஒன்னும் ஆகலை.... மது கண்ணை முழிச்சிட்டாளாம் .. இப்பதான் ரதி போன் பண்ணி சொன்னா... அவ கண் முழிச்சதும் உன்னைத் தான் தேடினாளாம்... நல்ல புருசன் பொண்டாட்டி டா சாமி.. “ என்றான் சிரித்தவாறு...
அதை கேட்டதும் தான் நிகிலனுக்கு போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்தது....
ஆதியை பார்த்து மெல்ல புன்னகைக்க அப்பொழுதுதான் அவன் ஆதியை கட்டி பிடித்து அழுதது நினைவு வர
“டேய்...மச்சான்... நான் உன்கிட்ட அழுதது வேற யாரும் பார்க்கலை இல்ல ?? “ . என்றான் சிறு வெக்கத்துடன்..
“ஹா ஹா ஹா யாரும் பார்க்கல டா என் பொண்டாட்டியை தவிர.. அது போதும்... இந்நேரம் இந்த ACP சார் பொண்டாட்டி பிரசவத்தை பார்த்து அழுதார் னு BBC நியூஸ் ஏ போட்டிருப்பா... “ என்றான் ஆதி சிரித்தவாறு...
நிகிலனும் வெக்க பட்டு சிரித்தவாறு ஓரளவுக்கு சகஜ நிலைக்கு வந்திருந்தான்..
பின் இருவரும் எழுந்து மது இருந்த அறைக்கு சென்றனர் ..
மதுவை இப்பொழுது நார்மல் அறைக்கு மாற்றியிருக்க படுக்கையில் இருந்தவள் துவண்ட கொடியாக களைத்து போயிருந்தாள்....
ஆனாலும் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி அவளுக்கு...
தன் மகள் பிறந்த சந்தோசத்தை விட, தன் கணவன் தன்னை புரிந்து கொண்டான் என்ற மகிழ்ச்சியில் பூரித்திருந்தாள்....அவளை சுற்றி எல்லோரும் நின்று கொண்டு அந்த குட்டியை கொஞ்சி கொண்டிருந்தனர்...
ஆதியும் நிகிலனும் அங்கு செல்ல அவனை கண்டதும்
“உன் மகளை கூட பார்க்காம அப்படி எங்கடா போன?? “ என்றார் சிவகாமி அவனை முறைத்தவாறு...
“ஹா ஹா ஹா மாமியாரே ... அந்த கதை உங்களுக்கு தெரியாதா?? என்ன மாம்ஸ் சொல்லிட வா ?? “ என்று பாரதி நிகிலனை பார்த்து கண் சிமிட்ட, நிகிலனோ கண்ணால் அவளுக்கு ஜாடை சொல்லி, சொல்ல வேண்டாம் என்று கெஞ்ச, இது ஒன்று போதாதா நம்ம பாரதிக்கு..
நிகிலன் ஆதியை கட்டி புடிச்சு அழுததை சொல்லி சொல்லி சிரித்தாள் பாரதி..
நிகிலன் அவளை பார்த்து முறைக்க, மதுவுக்கோ பாரதி சொல்வதை நம்ப முடியவில்லை...தனக்காக தன் கணவன் அழுதிருக்கிறான் என்று எண்ணுகையிலயே இந்த பிறவியின் பயனை அடைந்து விட்டதை போல ஆனந்தமாக இருந்தது மதுவுக்கு.....
ஆசையாக தன் கணவனை காண அவனோ அவ்வளவு நேரம் கண்டு கொள்ளாமல் இருந்த தன் மகளை கையில் அள்ளி கொஞ்சி கொண்டிருந்தான்...
அப்படியே அவனை உரித்து வைத்து பிறந்திருந்தாள் அவன் மகள்...அவன் அந்த குழந்தையை கொஞ்சுவதை ஆசையாக கண்ட மது
“பாரேன்... அவன் புள்ளை வந்ததும் என்னை கண்டுக்கவே இல்லை... “ என்று உள்ளுக்குள் செல்லமாக அவனை திட்டி கொண்டிருந்தாள் மது ..
நிகிலன் அருகில் சென்ற பாரதி அந்த குட்டி இளவரசியை ஆசையாக தொட்டு பார்த்தவள்
“அது எப்படி மாம்ஸ் ??.. நீங்களும் உங்க பிரண்ட் ம் சொல்லி வச்ச மாதிரியே பொட்ட புள்ளையை பெத்துருக்கீங்க.... அதுவும் இரண்டு பேருமே அவங்க அப்பனை உரிச்சு வச்சு பிறந்திருக்காளுங்க...” என்றாள் சிரித்தவாறு
“ஹா ஹா ஹா நண்பேன் டா...” என்று நிகிலனை அணைத்து கொண்டான் ஆதி சிரித்தவாறு...
“ஐய.. ரொம்பத்தான்... “ என்று கழுத்தை நொடித்தவள்
“அப்ப நம்ம டாக்டர் வசி அண்ணாவுக்கும் என்ன புள்ளைனு இப்பவே அடிச்சு சொல்லிடலாம்.. .அவருக்கும் இதே தானா...??” என்று சிரித்தாள் பாரதி...
அதே நேரம் வசியும் அங்கு வர , அவனை கண்டவள்,
“வாவ்..!! வாங்க புது மாப்பிள்ளை சார்...!! உங்களுக்கு 100 ஆயுசு.. இப்பதான் உங்களை பத்தி சொன்னேன்... உடனே வந்து நிக்கறீங்க... “ என்று சிரித்தாள்..
வசீகரனும் தன் வழக்கமான வசீகர புன்னகையுடன் தன் நண்பனின் கையை பிடித்து குலுக்கி
“Congrats டா... நீயும் கடைசியில ஒரு பொருப்பான அப்பாவா ஆகிட்ட.... ரொம்ப சந்தோசம்....” என்று வாழ்த்தியவன் பின் மது பக்கம் திரும்பி
“சாமியாரா சுத்திகிட்டிருந்த இந்த விருமாண்டியையும் என் தங்கச்சி திருத்தி சம்சாரியாக்கிட்டா இல்ல.. வாழ்த்துக்கள் சிஸ்டர்..!!! “ என்றான் மதுவை பார்த்து சிரித்தவாறு...
அதை கேட்டு நிகிலன் தன் நண்பனை முறைக்க, மது அவனுக்கு நன்றி சொல்லி புன்னகைத்தாள்....
பின் பாரதியை பார்த்த வசி
“அப்படி என்ன பாரதி... என்னை பற்றி கலாய்ச்சுகிட்டிருந்த?? “ என்றான் ஆர்வத்துடன் சிரித்தவாறு...
“ஹீ ஹீ ஹீ... அதுவா அண்ணா... இந்த த்ரீ இடியட்ஸ் மாதிரி நீங்க நண்பர்கள் மூனு பேர்ல இரண்டு பேருக்குமே அவங்கள மாதிரியே உரிச்சு வச்சு பொண்ணா பொறந்திருச்சா....
அப்ப உங்களுக்கும் கண்டிப்பா பொண்ணுதான் பிறக்கும் னு சொல்லி கிட்டிருந்தேன்... கரெக்ட் ஆ நீங்களும் அதே நேரம் என்ட்ரி கொடுத்தீங்க.... வாட் அ டைமிங்...!! “ என்று சிரித்தாள் பாரதி....
அதை கேட்டு வழக்கம் போல சிரித்தவன் நிகிலன் கையில் இருந்த அந்த குட்டி தேவதையை அழகாக தன் கையில் வாங்கியவன் அதன் குட்டி பாதங்களையும் சின்னஞ் சிறு விரல்களையும் ஆசையாக வருடினான்....
பின் அந்த குட்டி தேவதையின் முகத்தை நோக்க, பாரதி சொன்ன மாதிரி அப்படியே நிகிலன் மாதிரி இருந்தாள்... அந்த குட்டி ரோஜாவை கண்டதும் அவனுக்கு தானாக அவன் மனைவி பனிமலர் நினைவு வந்தாள்...
உடனே அவளுக்கு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்க்க அவனை போல் இல்லாமல் மலரை போல குண்டு கன்னத்துடன் சிரிக்கும் கன்ன குழியுடன் மலரையே குழந்தையாக கற்பனை பண்ணி பார்க்க உள்ளுக்குள் சிலிர்த்தது வசிக்கு....
அதை கண்டு கொண்ட பாரதி அவன் அருகில் வந்தவள்
“என்ன ப்ரதர்... அதுக்குள்ள கற்பனையிலயே உங்க இளவரசியும் பிறந்திட்டாளா??
முதல்ல உங்க பொண்டாட்டி கிட்ட லவ் ஐ சொல்லுங்க... அதுக்கு பிறகு மத்ததை எல்லாம் பார்க்கலாம்.... என்ன சொல்லிட்டிங்களா?? இல்லையா?? ‘ என்றாள் அவன் காதருகில் ரகசியமாக....
அதை கேட்டவன் மற்றவர்களை கண்ணால் ஜாடை காட்டி அவளை செல்லமாக முறைத்தான் வசி....
சிறிது நேரம் அனைவரும் அந்த குட்டி இளவரசியை கொஞ்சி முடிக்க பின் அனைவரும் அந்த அறையை விட்டு வெளியில் வந்தனர்.....
நிகிலன் அனைவரையும் கேன்டின் க்கு அழைத்து சென்று சிற்றுண்டி வாங்கி கொடுத்து, பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி சொல்லி பூரித்து இருந்தான் மகிழ்ச்சியில்....
சிறிது நேரம் அங்கு பேசி கொண்டிருந்து விட்டு அனைவரும் மீண்டும் நிகிலனுக்கு வாழ்த்து சொல்லி விடை பெற்று சென்றனர்....
பின் நிகிலன் மது இருந்த அறைக்கு திரும்பி வந்தான்....
சண்முகமும் சாரதாவும் வெளியில் சென்றிருக்க, அறையில் சிவகாமி யும் மதுவும் மட்டும் இருந்தனர்.....
மது படுத்திருந்த படுக்கையின் அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு, தன் பேத்தியை கையில் வைத்து கொண்டு அவளை கொஞ்சி கொண்டிருந்தார் சிவகாமி....
“அப்பாடா..!!! ஒரு வழியா இந்த குட்டி தங்கத்தை என் வீட்டுக்கு கூட்டி வந்தாச்சு... இந்த தங்கத்தை கூட்டி வர்றதுக்குள்ள என்ன பாடு படவேண்டியதாயிடுச்சு...
“டேய் குட்டி தங்கம்...!!! .உன்னை இந்த உலகத்துக்கு கொண்டு வர, இந்த பாட்டி எவ்வளவு கஷ்டபட்டேன் தெரியுமா?? உன் ஆத்தாளை நாடகம் ஆட வச்சு உன் அப்பனை மயக்கி வழிக்கு கொண்டு வந்து அப்புறம் தான் நீ வந்த ராஜாத்தி....
நீ தான் உன் அப்பனை நிக்க வச்சு கேள்வி கேட்கணும்....அவனை அடக்கி ஒடுக்கி வழிக்கு கொண்டு வரணும்.... “ என்று தன் பேத்தியின் பட்டு கன்னத்தில் முத்தமிட்டார் சிவகாமி பெருமையுடன்....
அவர் தன் பேத்தியை கொஞ்சி கொண்டிருந்த நேரம் நிகிலன் அந்த அறைக்குள்ளே வர, அவர் பேசிய வார்த்தைகள் அவன் காதில் தவறாமல் விழுந்தன....
அதுவும் மயக்கி, நாடகம், வழிக்கு கொண்டு வர என்ற வார்த்தையை கேட்டதும் அன்று மது இதையேதான் போனில் சொன்னாள் என்பது நினைவு வர அவன் மூளையில் மின்னல் வெட்டியது...
வேகமாக தன் தாயிடம் சென்றவன்
“மா... இப்ப நீ என்ன சொன்ன?? “ என்றான் இடுங்கிய கண்களுடன்...
திடீரென்று கேட்ட தன் மகனின் குரலில் திடுக்கிட்டவர் தான் பேசியதை கேட்டு விட்டானோ என்று கலவரத்துடன் தன் பயத்தை மறைத்து கொண்டு
“நான் என்னடா சொன்னேன். ?? ஒன்னும் சொல்லலையே....என் பேத்தியைத்தான் கொஞ்சி கிட்டிருந்தேன்... ” என்றார் சமாளித்தவாறு...
“இல்ல... நான் உள்ள வரும் பொழுது மயக்கி, நாடகம் னு ஏதோ சொல்லி கிட்டிருந்தியே... என்ன அது?? “ என்றான் அவனும் விடாமல்...
“ஆகா.... இதையா கேட்டு தொலைச்சான்..”. என்று அவசரமாக தன் மருமகளை பார்க்க அவளோ சொல்ல வேண்டாம் என்று கண்ணால் ஜாடை காட்டினாள்...
இருவரின் பார்வை பரிமாற்றத்தை கண்டு கொண்டவன்
“இரண்டு பேரும் எனக்கு தெரியாமல் ஏதோ நாடகம் அடறீங்க.. இப்ப என்ன அது னு உண்மையை சொல்ல போறீங்களா ?? இல்லையா... ?? “ என்று இருவரையும் பார்த்து கத்தினான் முறைத்தவாறு.......
“டேய்.. சொல்லிடறேன்.. அதுக்கு போய் ஏன் டா இப்படி கத்தற ?? ... உன் புள்ளை பயந்துக்கறா பார்.... “ என்கவும் கோபத்தில் சிவந்திருந்த அவன் முகம் உடனே இலகி விட்டது...
அவன் போட்ட சத்தத்திற்கு அந்த குட்டி கண்ணை விழித்து உருட்ட, தன் அன்னையின் கையில் இருந்தவளை அள்ளி கொண்டு கனிவாக பார்த்தவன்,
“நீ தூங்குடா ப்ரின்ஸஸ் ... உன் டாட் ரொம்ப மோசமானவன் இல்லை... கொஞ்சம் நல்லவன் தான்.. “ என்று புன்னகைத்தான்...
அவளும் அமைதியாக கண் அயர, பின் தன் அன்னையை பார்த்து என்ன அந்த மேட்டர் என்று ஜாடையில் கேட்டான் நிகிலன்...
“ஆகா.. விட மாட்டேங்கிறானே...!! சிவா.. உன் வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம இப்படியா உளறுவ? “ என்று மனதுக்குள் தன்னைத்தானே திட்டி கொண்டவர்
“சரி டா.. நான் சொன்னா நீ என்னை திட்ட கூடாது..?? “ என்றார் பாவமாக
“ஹ்ம்ம் திட்டலை.. சொல்லுங்க... “ என்றான்
“ப்ராமிஸ்..?? “ என்று கையை நீட்ட அவனும் முறைத்து கொண்டே அவர் கை மேல் வைத்தான்....
அவரும் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கொண்டு,
“நீதான் கல்யாணம் ஆகியும் பொண்டாட்டி ஒருத்தி இருக்கறதையே கண்டுக்காமல் சாமியாரா சுத்தி கிட்டு இருந்த இல்ல.... உன்னை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுனு யோசிச்சேன்....
அப்பதான் நாங்க சிங்கப்பூர் போயிருந்தோம் இல்லையா... அப்ப உன்னை மடக்கி வழிக்கு கொண்டு வர்றதுக்காக உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி கொஞ்சம் உன்னை மயக்கிற மாதிரி ட்ரெஸ் பண்ணி அப்படி இப்படி இரு னு திட்டம் போட்டு கொடுத்தேன்...
இவ என்னடான்னா அதெல்லாம் முடியாது ... என்னால் அப்படி எல்லாம் நடிக்க முடியாது... அவருக்கு எப்ப என்னை புடிக்குதோ அப்ப எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கறோம்னு அரிச்சந்திரனுக்கு தங்கச்சி மாதிரி மறுத்துட்டா..
அவ கிட்ட கெஞ்சி, கொஞ்சி, கூத்தாடி அவ சின்ன பொண்ணு, அவளால எதையும் சாதிக்க முடியாது அது இதுனு கொஞ்சம் அவளை சீண்டி விட்டு ஒரு மாமியார் என்னவெல்லாம் சொல்ல கூடாதோ அதையெல்லாம் சொல்லி கொடுத்து இவளை ஒத்துக்க வைக்க வேண்டியதா போச்சு...
எப்படியோ அதுல தான் நீ கொஞ்சம் இறங்கி வந்த.. அதைதான் இப்ப சொல்லிகிட்டிருந்தேன்.. “ என்றார் தயங்கியவாறு...
அதை கேட்டு அதிர்ந்த நிகிலன்
“அப்ப அன்று அடுத்த நாள் காலையில் அவ உங்ககிட்டதான் பேசி கிட்டிருந்தாளா??” என்றான் அதிர்ச்சியுடன்...
“ஹ்ம்ம் ஆமான்டா... நான் போட்ட திட்டம் என்னாச்சுனு அடுத்த நாள் காலையில கூப்பிட்டு விசாரிச்சேன்... அப்பதான் அவ சாதிச்சு விட்டேன் னு பெருமையா என்கிட்ட போன் ல சொல்லி கிட்டிருந்தா... அப்ப திடீர்னு பாதியில போன் ஆப் ஆகிடுச்சு.....
“ஆமா.... நீ ஏன் அந்த மேட்டரை இவ்வளவு நோண்டி நோண்டி கேட்கற?? என்றார் சந்தேகமாக
தன் அன்னை சொல்லியதை கேட்டதும் அவனுக்கு வந்த ஆத்திரத்துக்கு அவரை அப்படியே கழுத்தை நெறிக்க வேண்டும் போல இருந்தது.. அம்மாவாகிட்டதால பொறுத்து கொண்டு தன் பல்லை கடித்தான்..
பின் தன் அன்னையை பார்த்து
“நீ பண்ணின வேலைக்கு இவளை போய் நான் தப்பா நினைச்சு அவளையும் கஷ்டபடுத்தி நானும் கஷ்டபட்டு......... “ என்றவன் தொண்டை அடைத்து கொள்ள
“என்கிட்ட சொல்லி தொலைய வேண்டியது தான... “ என்றான் எரிச்சலின் உச்சத்திற்கு சென்றவன்....
அவன் சொல்லியதை வைத்து சிவகாமி அவசரமாக யோசிக்க, அன்று மது அவரிடம் பேசியது நினைவு வந்தது... அவள் பேசியதை பாதியில் கேட்டிருந்தால் யாருக்கும் அது வேற மாதிரிதான் தோண்றியிருக்கும்...
இந்த பய அதையவா கேட்டுட்டு தப்பா புரிஞ்சுகிட்டு தன் மருமகளை போட்டு வறுத்து எடுத்திருக்கான் என உறைக்க, தன் மகன் மீது கோபமாக வந்தது அவருக்கு...
அவனை பார்த்து முறைத்தவர்,
“ஏன் டா !!! இவ்வளவு பெரிய போலிஸ்காரன்.. இந்த சிட்டியே உன் கன்ட்ரோல் இருக்கிற மாதிரி நாள் பூரா சுத்தற... வீட்ல நடக்கிற தம்மாதுண்டு விசயத்தை உன்னால கண்டு பிடிக்க முடியலையா??
நீயெல்லாம் என்னடா போலிஸ்காரன்?? ..... அவ போனுக்கு அன்னைக்கு யார் பேசினா னு செக் பண்ணி இருந்தால் அவ யார்கிட்ட பேசினானு தெரிஞ்சிருக்க போகுது..
அத விட்டுட்டு இவனா எதையோ நினைச்சுகிட்டு என் மருமகளை போட்டு இவ்வளவு கஷ்டபடுத்தி இருக்கியே... இப்ப கூட பார் என் மேல எகிறான்....” என்றார் முகத்தை நொடித்தவாறு.....
“அது வந்து .... “ என அசடு வழிந்தவன் தன் அன்னை சொன்ன மாதிரி ஏன் செய்யவில்லை என்று யோசிக்க உண்மை புரிந்தது....
அவன் அது மாதிரி விசாரித்து அவளை கெட்டவள் என்று கண்டுபிடித்து உறுதி செய்ய மனம் ஒப்பவில்லை....
அட்லீஸ்ட் அவளை பற்றி எதுவும் விசாரிக்காமல் அவள் நல்லவளாகத்தான் இருப்பாள் என்று மூலையில் இருக்கும் கொஞ்சூன்டு நம்பிக்கையுடனே இருந்து விடலாம் என்றே விசாரிக்காமல் விட்டு விட்டான்....
அத்தோடு அவள் ஏன் நல்லவளாக இருக்க வேண்டும் என்று அவன் வேண்டியது அவன் ஆழ் மனதில் இருக்கும் அவன் மட்டுமே அறிந்த ரகசியம்...
அதனால்தான் அவள் பேசியதை பெரிதாக விசாரிக்காமல் ஆனால் அவளை பார்க்கும் பொழுதெல்லாம் அவள் வார்த்தைகளே காதில் ஒலிக்க, இறுகி போய் அவளை பழி வாங்க என்று எண்ணி ஏதேதோ செய்ய துணிந்து எப்படியோ போய்விட்டது....
அதையெல்லாம் நினைத்து பார்த்தவன், ஒரு பெருமூச்சை எடுத்து விட்டவன் படுக்கையில் துவண்டு கிடந்த மதுவை பார்த்து,
“ஏன்டி... நீயாவது உண்மையை சொல்லி இருக்கலாம் இல்லை...உன் மாமியார் கிட்டதான் பேசி கிட்டிருந்தனு... “ என்று முறைத்தான் ....
“நீங்க என்கிட்ட கேட்கவே இல்லையே...!! அதோட அத்தைய எப்படி காட்டி கொடுக்கறதாம். ??... “ என்றாள் பாவமாக..
“ஹ்ம்ம்ம் எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு மாமியார் மருமகள் இரண்டு பேரையும் உள்ள தூக்கி போடணும்.. “ என்று கோபமாக கத்தி, பல்லை கடிக்க, அதை கேட்டு அவன் கையில் இருந்த அவன் மகள் தன் குட்டி உடலை வளைத்து முகத்தை சுழித்தாள் அவன் சத்தம் பிடிக்காமல்....
அதை கண்டதும் பொட்டி பாம்பாக அடங்கியவன் உடனே கோபத்தை விட்டு தன் குரலை தாழ்த்தி கொண்டு
“ஒன்னும் இல்லடா ப்ரின்ஸஸ் ... நீ தூங்கு ... இனிமேல் அப்பா சத்தம் போட மாட்டேன்....” என்று மெதுவாக தன் மகளை கொஞ்ச, மாமியார் மருமகள் இரண்டு பேரும் சற்று முன் அப்படி கத்தியவன் நொடியில் எப்படி அடங்கிட்டான் பார் என கண்ணால் ஜாடை சொல்லி நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டனர்....
தன் அன்னை சொன்னதை கேட்ட நிகிலனுக்கோ பெரும் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி வந்து சேர்ந்தது...
எங்கே அவள் தப்பானவளாக இருப்பாளோ என்ற அவன் மனதில் இருந்த பயம் இப்பொழுது முழுவதும் விலகி இருக்க, தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் அவள் வைத்திருக்கும் பாசம் புரிந்தது....
அதோடு அவன் நண்பர்களின் மனைவிகளான பாரதி மற்றும் பனிமலரை கண்டதில் இருந்தே பெண்கள் மீதான அவன் தப்பான பார்வையும் மாறி விட்டது...
மேலும் பெண்களை பற்றிய தன் தப்பான எண்ணத்திற்கு காரணமான வசந்தியின் தற்போதைய நிலை அவனை முற்றிலுமே மாற்றிவிட்டது...
தான் தன் மனைவிக்கு செய்த கொடுமையெல்லாம் பொறுத்து கொண்டு தன் மீது பாசத்தை மட்டுமே காட்டி வந்த தன் மனைவியை பாசத்துடன் ஓரக் கண்ணால் நோக்கினான் நிகிலன்.... ஆனாலும் வாய் திறந்து அவளிடம் எதுவும் பேசவில்லை இதுவரை....
Comments
Post a Comment