தவமின்றி கிடைத்த வரமே-32


அத்தியாயம்-32
ர கண்ணால் மித்ரா நின்றிருந்த தோற்றத்தை கண்டதும் மலருக்கு கடுப்பாக இருந்தது.. அவனும் அதை தடுக்காமல் தள்ளி நிற்காமல் இளித்து கொண்டு நிற்பதை கண்டதும் இன்னும் பற்றி கொண்டு வந்தது மலருக்கு..

“ஒரு வேளை அவள் சொன்ன மாதிரி என் அப்பாவை காப்பாற்ற எண்ணி  கடமைக்காகத்தான் என்னை மணந்து கொண்டானா?? இவர்கள் இருவரும் தான் ஜோடி பொருத்தம் சரியாக இருக்குமோ? “ என்று மித்ராவை அளவிட்டு பார்க்க, அவளோ பல லட்சங்கள் விலை மிக்க ஒரு டிசைனர் ஸாரியில் அதற்கான ஒப்பனையுடன் பணக்கார மிடுக்குடன் கை ஹீல்ஸ் உடன் நிமிர்ந்து நின்று வசியின் கைபிடித்து கம்பீரமாக நின்றிருந்தாள்..

அவளுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்க, மித்ரா மடமடவென்று மேல ஏறி போனாள்.. மலர் இருந்த தராசு தடாலென்று கீழ விழுந்தது...

அவளின் அந்த மிடுக்கான தோற்றமும் கண்ணில் தெரிந்த ஒரு அலட்சிய பார்வையும் ஒரு பிரமிப்பை கொடுக்க, வசிக்கு இந்த மாதிரி ஒரு மனைவி இருந்தால் தான் அவன் கலந்து கொள்ளும் பல முக்கிய விழாவுக்கு பொருத்தமாக இருக்கும்..

அதை விட்டு பட்டிகாடு மாதிரி இப்படி பட்டு புடவையை சுற்றி கொண்டு நகைகளை அள்ளி பூட்டி கொண்டு நிற்கும் நான் எப்படி பொருந்துவேன்..

என்னால் அவனுக்குத் தான் அசிங்கம்.. “ என்று மனதுக்குள் புலுங்கினாள்.. ஆனாலும் அதை வெளி காட்டாமல் உதட்டில் வரவழைத்த புன்னகையுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தாள் மலர்...

பின் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து முடியவும் மித்ராவின் தந்தை விடை பெற்று மேடையை விட்டு கீழிறங்க மீண்டும் மலர் காதருகில் வந்தவள்

“நான் சொன்னதை நல்லா யோசித்து பார் மலர்.. உனக்கு ஏதாவது சந்தேகமோ உதவியோ வேணும்னா என்னை கான்டாக்ட் பண்ணு.. கண்டிப்பா வசிக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையணும்னு வேண்டிக்கிறேன்..அது உன் கையிலதான் இருக்கு..” என்றவாறு கீழிறங்கி சென்றாள் மித்ரா..

மித்ரா பேசி சென்ற பிறகு மலரின் முகத்தில் வந்திருந்த மாற்றமே மித்ராவின் திட்டத்தை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதாக இருந்தது..அவளின் முகமாற்றத்தை கண்டதும் உள்ளுக்குள் குதித்து கொண்டாள் மித்ரா.

மலரிடம் எப்படியாவது ஒரு தாழ்வு மனப்பான்மையை கொண்டு வந்து அவளாகவே வசியை விட்டு பிரிந்து செல்ல வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறாள் மித்ரா..

அதற்காகவே இந்த பெரிய மண்டபத்தை புக் பண்ணி இருந்தாள். இதன் செல்வ செழிப்பையும் அங்கு வரும் பெரிய மனிதர்களையும் கண்டு மலர் மிரள வேண்டும்.. அதை வைத்தே அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை தூண்ட திட்டமிட்டிருந்தாள்..

அதன் படியே மலரிடம் லேசாக ஊதி விட, அது பற்றி கொண்டது.. மலரின் முகத்தில் வந்து போன அந்த குழப்ப ரேகையே மலர் யோசிக்க ஆரம்பித்து விட்டாள் என புரிய உள்ளுக்குள் மகிழ்ந்து போனாள் மித்ரா..

அதன் பின் மலரின் முகம் பலவிதமான யோசனையுடனே இருந்தது.. வருபர்களிடம் பேருக்கு சிரித்து வைத்தாள்..அவள் முகத்தில் வந்திருந்த குழப்ப ரேகைகளை கண்ட வசி அவள் அருகில் நெருங்கி வந்து

“என்னாச்சு பனிமலர்?? எனி பிராப்ளம்.. ?? “ என்றான்.. அதில் திடுக்கிட்டு விழித்தவள் உடனே தன்னை மறைத்து கொண்டு மெல்ல புன்னகைத்து இல்லை என்று தலை ஆட்டினாள்..

“அப்புறம் ஏன் உன் முகம் என்னவோ போல் உள்ளது?? “ என்றான் வசி விடாமல்..

என்ன சொல்வது என்று அவசரமாக யோசித்தவள் மேடையில் வச்சு எதுவும் அவனிடம் கேட்க முடியாததால்

“வந்து.. கொஞ்சம் டயர்டா இருக்கு .. கால் வலிக்கிறது... “ என்று சொல்லி சமாளிக்க முயன்றாள்...

“ஓ... வேணும் னா நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ..” என்றவன் இனியவனை அழைத்து மலருக்கு ஒரு பிரஸ்ஸான பழச்சாறை கொண்டு வரச் சொன்னான்...

அவளுக்கோ கஷ்டமாக இருந்தாது.. இனியவன் கொண்டு வந்ததை அவள் கையில் கொடுத்து குடிக்க சொல்ல அவள் தயங்க,

“உனக்கு இங்க நின்று கொண்டு தனியாக குடிக்க அன்ஈசியா இருந்தால் நானும் குடிக்கிறேன்.. நீ இதை குடி. கொஞ்சம் பெட்டரா இருக்கும்... “ என்றான் அக்கறையுடன்.. 



அதை கண்டவள் கண் ஓரம் கரித்தது.. இப்படி அக்கறையுடன் இருப்பவனுக்கு நான் பொருத்தம் இல்லாமல் போய் விட்டனே என்று மனம் வாடியது. ஆனால் அடுத்து நிறைய பேர் இவர்களை சந்திக்க வரிசையில் நின்றிருக்க, அவர்களை காக்க வைக்காமல் வேகமாக அந்த பழச்சாற்றை பருகியவள் அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு

“எது எப்படியோ... என்ன நடந்தாலும் அதை இந்த மேடையில் காட்டக் கூடாது..பிறகு மெதுவாக யோசித்து கொள்ளலாம்..“ என்று முடிவு செய்தவள் அதற்கு பிறகு கொஞ்சம் தெளிந்த முகத்துடன் அனைவருக்கும் புன்னகைத்து பேசினாள்..

அவள் முகத்தில் வந்திருந்த உற்சாகத்தை கண்டதும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது..அடுத்து அவன் நண்பன் ஷ்யாம் தன் குடும்பத்துடன் வந்து மணமக்களை வாழ்த்த, மலருக்கு ஷ்யாம் முன்பே அறிமுகம் என்பதால் அவனிடம் சிரித்து பேசினாள்..

மேடை விட்டு கீழிறங்கிய ஷ்யாமின் விழிகளோ அந்த மண்டபத்தையே அவசரமாக ஆராய்ந்தது.. அந்த மண்டபத்திற்குள் வந்ததில் இருந்தே சல்லடை போட்டு சலித்து வருகிறான்.. ஆனால் அவன் தேடியது மட்டும் கிடைக்கவில்லை..

மீண்டும் அவன் பார்வை சுற்றி வர, அவன் முகம் இப்பொழுது பிரகாசித்தது.. தொலைவில் நின்று யாருடனோ சிரித்து பேசி கொண்டிருந்தாள் மித்ரா.. அவளையே இமைக்க மறந்து பார்த்து ரசித்தான் ஷ்யாம்..

அவள் சிரித்து பேசினாலும் அவள் பார்வை அடிக்கடி மேடைக்கு செல்வதும் அங்கு நின்றிருந்த வசியை ஒரு மாதிரி பார்ப்பதும் புரிந்தது.. அது வேதனையா, ஏக்கமா என்று புரியவில்லை...

ஆனாலும் அவள் பார்வை வசியிடமே சென்று நிற்பதை கண்டதும் அவனுக்கு வேதனையாக இருந்தது..

இந்த பெண் இன்னும் அவனையே நினைத்து கொண்டு இருக்கிறாளே என்று மனம் வாட, அதற்கு பிறகு அங்கு நிற்க முடியாமல் தன் பெற்றோர்களை அழைத்து கொண்டு உணவு கூடத்தை நோக்கி சென்றான்..

ஒரு வழியாக வந்திருந்தவர்கள் எல்லாம் மணமக்களை வாழ்த்தி பரிசை கொடுத்து உணவு கூடத்திற்கு சென்றிருக்க, மேடையில் இப்பொழுது மணமக்கள் மட்டுமே இருக்க இருவரும் சிறிது நேரம் இருக்கையில் அமர்ந்தனர்..

பின் மலர் எழுந்து கீழிறங்கி ரெஸ்ட் ரூம் சென்று வர, வெகு அருகில் யாரோ தன்னை பற்றி பேசுவது கேட்டது..

“ஹ்ம்ம் பாவம் வசி, மித்ரா.. இப்படி அவசரபட்டு ஒரு பேசன்ட் ஐ காப்பாற்றணும் னு அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டாரே.. கொஞ்சம் கூட அவ வசிக்கு பொருத்தமே இல்லை..நான் கூட நீதான் வசியை மேரேஜ் பண்ணிக்க போறேனு எதிர்பார்த்து இருந்தேன்..

கடைசியில இப்படி ஆய்டுச்சே..அந்த மேடையில் நீ இருந்தால் எவ்வளவு பொருத்தமா வெய்ட் ஆ இருக்கும்.. இன்னைக்கு வந்த கும்பலை விட, இன்னும் பல மடங்கு ஏன் இந்த சென்னையின் அனைத்து பெரும் புள்ளிகளுமே வந்திருப்பாங்க.. அதனால் வசிக்கு எவ்வளவு பெருமையா இருந்திருக்கும்..

எல்லாத்தையும் தொலைச்சுட்டு இப்படி ஒரு மிடில் கிளாஸ் ஐ போய் கல்யாணம் பண்ணிகிட்டாரே.. புவர் அன்ட் அன்லக்கி பெல்லோ.. சோ பிட்டி.. “ என்று பெருமூச்சு விட்டாள்..

அதை கேட்ட மலர் உள்ளுக்குள் மீண்டும் நொறுங்கி போனாள்.. ஏற்கனவே மித்ரா பேச்சினால் குழம்பி இருந்தவள் இப்பொழுது இன்னொரு பெண்ணும் அதே மாதிரி சொல்ல அதுவரை உறங்கி கொண்டிருந்த அவள் குழப்பங்கள் எல்லாம் மீண்டும் தலை தூக்கின..

முகத்தில் அதே குழப்பத்துடன் மெல்ல நடந்து மேடையை நோக்கி சென்றாள்.. இதுவரை மகிழ்ச்சியாக இருந்தவள் இப்பொழுது முகம் வாடி செல்வதை கண்ட மித்ரா உள்ளுக்குள் துள்ளி குதித்தவாறு அருகில் இருந்த பெண்ணிடம் கட்டை விரலை உயர்த்தி காட்டி “சக்ஸஸ். “ என்று உதடு அசைத்து சிரித்தாள் மித்ரா..

அவள் சொல்லியபடி பேசிய அந்த பெண்ணும் மித்ரா கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்..

மித்ராவுக்கோ மலரின் மகிழ்ச்சியை கெடுத்த சந்தோஷம்.. அவள் நிற்க வேண்டிய இடத்திம் அந்த மலர் நின்று கொண்டிருப்பதும் அதுவும் அவள் சிரிச்சு சிரிச்சு பேசுவதும் மித்ராவின் உள்ளுக்குள் இருந்த தீயை தூண்டி விட்டது...

மலரின் மகிழ்ச்சியை அழிக்கவேண்டும் என்று அவசரமாக யோசித்து இந்த பெண்ணை அழைத்து இப்படி பேச வைத்தாள்.. அவள் திட்டம் வெற்றி பெற , மது குழம்பிய வாடிய முகத்துடனே மேடைக்கு ஏறி சென்றாள்..

தன் அருகில் வந்தவளின் முகம் பார்க்க அவள் முகத்தில் மீண்டும் சூழ்ந்திருந்த குழப்பத்தை கண்டவன் என்னவென்று விசாரிக்க அவள் அருகில் வர, அதே நேரம் ஆதி அன்ட் நிகிலன் குடும்பத்தினர் மேடை ஏறினர்..

அவர்களை கண்டதும் மலரும் தன்னை மறைத்து கொண்டு இயல்பாகி விட்டாள்.. வசி மீண்டும் அவள் முகத்தை காண முன்பு தான் கண்டது பொய்யோ என்ற மாதிரி இருந்தது..

அவள் முகத்தில் ஏன் இந்த குழப்ப ரேகை வந்து போகிறது என்று எண்ணியவன் அதற்குள் மேடை ஏறி வருபவர்களின் பக்கம் கவனம் செலுத்த அப்போதைக்கு அதை மறந்து போனான்..

பாரதி மற்றும் மதுவந்தினி இருவரும் சொல்லி வைத்து ஒரே டிசைனில் புடவை எடுத்திருக்க, இருவருக்குமே அது வெகு அழகாக இருந்தது...

அதோடு ஆதியும் நிகிலனுமே ஒரே வண்ணத்தில் சேர்வானி அணிந்து வந்திருக்க, அவர்கள் இருவரையும் கண்டதும் வசியின் முகத்தில் புன்னகை பெரிதாக அரும்பியது..

முதலில் அவன் அருகில் வந்த பெண்கள்

“வாழ்த்துக்கள் அண்ணா.. வாழ்த்துக்கள் மலர்... வெல்கம் டு அவர் குடும்பஸ்தர்கள் சங்கம்.. “ என்று கை குலுக்கினர் பாரதியும் மதுவும்...

“ரொம்ப நன்றி சிஸ்டர்ஸ்.. “ என்று அழகாக புன்னகைத்தான்..பின் தன் நண்பர்களை பார்த்த வசி

“ஏன் டா.. இதுதான் நீங்க வர்ற நேரமா ? “ என்று முறைத்தான் வசி..

“ஹே மச்சான்..நாங்க நேற்று நைட் வரைக்கும் இங்கதான் இருந்தோம்..நீ பாட்டுக்கு எல்லா பொறுப்பையும் எங்க தலையில கட்டிட்டு ஜாலியா லண்டன் போய்ட்ட...நாங்க எவ்வளவு சின்சியரா ப்ளான் போட்டு அதை எக்சிக்யுட் பண்ணினோம் தெரியுமா??

எங்க கல்யாணத்துக்கு கூட நாங்க இவ்வளவு அலையலை டா.. உன் ரிசப்சனுக்கு எப்படி எல்லாம் அலைஞ்சு திரிஞ்சு சும்மா டெகரேசன் எல்லாம் புகுந்து கலக்கிட்டோம் பார்...

இப்பவும் லேட் ஆ வந்ததுக்கு காரணம் உன் தங்கச்சிங்களை கேளு டா... காலையில் எழுந்ததில் இருந்து கிளம்பறோம்னு உள்ள போனவங்கதான்.. வெளில வர்ற இவ்வளவு நேரம் ஆச்சு..

எப்படியோ உன் ரிசப்சன் முடியறதுக்குள்ளயாவது வந்திட்டமே.. அத நினைச்சு பெருமை பட்டுக்கோ.. “ என்று இருவரும் சிரிக்க, பாரதியும் மதுவும் அவர்களை பார்த்து முறைத்தனர்...

“ம்கூம்... நாங்க அழகா ட்ரெஸ் பண்ணிட்டு வந்து நின்னா வாயை ஆ னு பார்க்க தெரியுது இல்லை.. அப்படி அழகா ட்ரெஸ் பண்ண எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா?

நீங்க போன உடனே எடுத்து மாட்டிகிட்டு வந்திடுவீங்க..நாங்க அப்படியா “என்று வழக்கமான மனைவிமார்களின் பாட்டை பாரதி பாட, மதுவும் ஆம் என்று தலை அசைத்தாள்...

வசியும் மலரும் சிரித்து கொண்டே அவர்களை ரசித்தனர்..

பின்னர் மணமக்கள் இருவரும் ஜானகி, சுசிலா, சிவகாமி என்று பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்க, அவர்களும் அவர்களை தூக்கி ஆசிர்வதித்து மகிழ்ந்தனர்...

அனைவரும் குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்த பின் பெரியவர்கள் மேடை விட்டு இறங்க மீனாட்சியும் ஜோதியும் சிரித்தவாறு  வந்து வரவேற்று அவர்களை அழைத்து சென்றனர்...

இளையவர்கள் இன்னும் மேடையில் இருக்க, ஒவ்வொரு ஜோடியும் விதவிதமாக நின்று போட்டோ எடுத்து கொண்டனர்..

அந்த புகைப்படக்காரரையும் வீடியோ கிராபரையும் பார்த்த பாரதி

“ஹலோ ப்ரோ.. மணிக்கணக்கா நின்னு மேக்கப் போட்டு வந்திருக்கோம்.. அதனால போட்டோல நாங்க பளிச்சுனு தெரியணும். அதுவும் இந்த ஜோடியை விட , நாங்கதான் எடுப்பா இருக்கணும்.. அதுக்கு தகுந்த மாதிரி போகஸ் பண்ணி எடுங்க.. “ என்று மிரட்டினாள்.. அவர்களும் சிரித்து கொண்டே எடுத்தனர்..

ஆதியின் இளவரசி கார்த்தியாயினியும் நிகிலன் இளவரசி நித்திலா வும் அழகாக பட்டு பாவாடை சட்டை அணிந்து குட்டி தேவதைகளாக வசியை பார்த்து சிரிக்க, அவர்களை கண்டதுமே வசி அவர்களை இரு கைகளிலும் தூக்கி கொண்டான்...

கார்த்தி குட்டி அவனுக்கு கிலுக்கி சிரித்து முத்தமிட, நித்திலா குட்டி தன் மழலை சிரிப்புடன் அவனையே ஆர்வமாக பார்த்து இருந்தாள்...

மலருக்கோ அந்த காட்சியை கண்டு கண்கள் பூரித்திருந்தன...இரு குட்டீஸ்களையும் லாவகமாக அவன் தூக்கி கொண்டு ஆசையுடன் அவர்களை ரசித்ததை கண்டவள் அவனை தங்கள் குழந்தைகளுடன் கற்பனை பண்ணி பார்க்க, உள்ளுக்குள் சிலிர்த்தது..

“ஹோய்.. என்ன மலர் .. அதுக்குள்ள வசி அண்ணா உடைய இளவரசியை எப்ப பெத்துக்கறதுனு கற்பனையாக்கும்... நாங்க இரண்டு பேரும் பண்ணின தப்பை நீயும் பண்ணாத..

ஒரு வருசத்துக்கு குழந்தை பெத்துக்கறதை தள்ளி போடு. உங்க இரண்டு பேருக்குமான நேரத்தை நல்லா என்ஜாய் பண்ணு.. “ என்று கண் சிமிட்டினாள் பாரதி...

அதை கேட்டு கன்னம் சிவந்த மலர் அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள்... மதுவோ அவள் சிரிப்பையே ஆர்வமாக ரசித்தவள்

“ஹே பாரதி...மலர் அப்படியே நம்ம இரண்டு பேர் மாதிரியும் இருக்கா இல்லை... சிரிப்பு சூப்பரா இருக்கு.. இப்ப தெரியுது வசி அண்ணா ஏன் சொக்கி போய் அப்பயே தாளி கட்டிட்டார் னு.. “ என்று சிரித்தாள் மது...

“ஹா ஹா ஹா சொக்கி மட்டுமா போனார் ?. “ என்று இழுத்தவாறு பாரதி வசியை ஓர கண்ணால் பார்க்க, அவனோ தன் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தாலும் காது பெண்கள் பக்கம் இருக்க, பாரதி அடுத்து என்ன சொல்ல வருகிறாள் என புரிய, அவசரமாக கண்ணால் ஜாடை காட்டி தன் காதலை பற்றி சொல்ல வேண்டாம் என பார்வையால் கெஞ்சினான்....

அதை கண்டு நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டாள் பாரதி..

பார்த்த நொடியில் உரிமையுடன் பேசும் அந்த இரு பெண்களையும் கண்டு ஆச்சர்யமாக இருந்தது மலருக்கு. பாரதியை முன்பே அவள் திருமணத்தில் பார்த்து இருந்தாலும் அப்ப இருந்த மன நிலையில் அவளால் பாரதியுடன் நன்றாக பேச முடியவில்லை..

ஆனால் இன்று தள்ளி நின்று அவர்களை பார்க்க, மதுவந்தினியின் குழந்தைதனமான முகமும் கள்ளமில்லாத சிரிப்பும் பாரதியின் வாய் ஓயாத பேச்சும் தன் பேச்சினால் மற்றவர்களை எப்பொழுதுமே சிரிக்க வைக்கும் அவளின் இனிய குணமும் கண்டு அவர்கள் இருவரையும் மலருக்கு உடனே பிடித்து விட்டது..

வசி முன்பே அவன் நண்பர்களை பற்றி மலரிடம் புகழ்ந்து கூறி இருக்கிறான். இன்று அனைவரையும் குடும்பத்தோடு பார்க்க, அவளுக்கும் இந்த தானா சேர்ந்த கூட்டத்தில் ஒரு மெம்பராகி அவர்களுடன் இணைந்து மகிழ ரொம்ப பிடித்தது...

பின் நண்பர்கள் மூவரும் மட்டும் இணைந்து புகைப்படம் எடுக்க, மற்ற இரு பெண்களின் காதில் புகை வந்தது... உடனே வசியை ஓரம் கட்டி மலரை இழுத்து கொண்டு சற்று தள்ளி நின்று கொண்டு பெண்கள் மூவர் மட்டும் விதவிதமாக நேராக நின்றும் பக்கவாட்டில் நின்றும் புகைப்படம் எடுக்க, இப்பொழுது ஆண்கள் காதில் புகை வந்தது..

இவர்கள் தனியாக புகைப்படம் எடுப்பதை கண்ட வசுந்தராவும் அகிலாவும் வேகமாக மேடை ஏறி வந்து அவர்களும் கலந்து கொள்ள, கூடவே கயலும் ஓடி வந்து விட, இப்பொழு ஆறு பெண்களும் நின்று பலவிதமான போஸ்களில் போட்டோ எடுத்து தள்ளினர்..

அந்த புகைப்படக்காரரோ நொந்து போய்

“மேடம்.. இதுக்கு மேல எடுக்க வேற எதுவும் போஸ் இல்லை...“ என்று கலங்க சரி போனால் போகட்டும் என்று விட்டு விட்டனர்.. நல்ல வேளையாக இவர்கள் கடைசியாக வந்தால் அவர்களுக்கு பின்னால் யாரும் மணமக்களை காண என காத்து கொண்டிருக்க வில்லை..

பின் மணமக்கள் குடும்பத்து பெரியவர்களையும் வைத்து மீண்டும் குடும்ப புகைப்படம் எடுக்க, கடைசியாக நண்பர்கள் மூவரும் தங்கள் குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து பெரிய குடும்பமாக காட்சி அளித்த தானா சேர்ந்த கூட்டத்தின் அனைவரும் அழகாக புன்னைகைக்க, அது அந்த புகைப்படத்தில் இன்னும் அழகாக பதிந்தது..

அதை கண்ட மித்ராவுக்கு உள்ளே கொதித்தது... அவளுக்கு ஏனோ வசியின் நண்பர்களை கண்டால் அவ்வளவாக பிடிக்காது..

வசி தன்னை விடுத்து அவர்களுக்குத்தான் பர்ஸ்ட் பிரையாரிட்டி கொடுப்பதாக தோன்றும்.. அதனால் அவனை அவர்களிடம் இருந்தும் பிரித்து தன் உடன் மட்டுமே வைத்து கொள்ளவேண்டும் என தோன்றும் அவளுக்கு.. அதனால் இன்று அனைவரையும் ஒன்றாக பார்க்க முகத்தை திருப்பி கொண்டாள்..

பின் மேடையை விட்டு கிழிறங்கியவர்கள், பாரதி ஆதியிடம் கண்ணால் ஜாடை காட்ட, அவனும் அவசரமாக அங்கிருந்த மெல்லிசை குழுவினரிடம் சென்று ஏதொ சொல்ல, அடுத்த நிமிடம் அழகாக பாடல் ஒலிக்க ஆரம்பித்தது...

கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு

பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு..

பாருங்கடி.. பொண்ண பாருங்கடி

வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு..



ஏ இடிச்ச பச்சரிசி.. புடிச்ச மாவிளக்கு

அரைச்ச சந்தனமும் மணக்க

மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ

செவந்த குங்குமப்பூ மயக்க..



என்ற பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, மேடையின் கீழ இருபக்கமும் இருந்த மேல ஏறி செல்லும் படிகளின் அருகில் இருந்து பாரதியும் மதுவந்தினியும் அழகாக ஓடி வந்து அந்த பாடலுக்கு முதல் சில வரிகளுக்கு நடனம் ஆடினர்...

மது ஒரு கிளாசிக்கல் டான்சர் என்பதால் அவளுக்கு எல்லா அசைவுகளுமே மிக அழகாக வந்தன.. ஒல்லியாக இருந்த தன் இடையை வளைத்து அழகாக ஆடினாள்.. அதை கண்ட நிகிலன் அசந்து போய் ரசித்து நின்றான்..

அவன் அருகில் நின்றிருந்த ஆதியோ அவன் மனைவி பாரதியின் ஆட்டத்தை கண்டு அதிசயித்து நின்றான்..பாரதிக்கு அவ்வளவாக நடனம் ஆட வராது... வசி பங்சனுக்காக பாரதியும் மதுவும் இணைந்து நடனம் ஆட திட்டமிட்டு சில பாடல்களை தேர்வு செய்து ப்ராக்டிஸ் பண்ணி வந்தனர்..

மதுதான் பாரதிக்கு டான்ஸ் டீச்சர்.. கடந்த ஒரு வாரமாக தினமும் மாலை மது வீட்டிற்கு சென்று விடுவாள் பாரதி..இருவரும் மதுவின் அறைக்கு சென்று டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்..

பத்தாததற்கு இரவு தங்கள் அறையில் ஆதியை பிடித்து கொண்டாள் பாரதி.. அவள் ஆடி காட்ட, ஆதி கரெக்சன்ஸ் சொல்ல வேண்டும்.. அவன் கொஞ்சம் அவசரபட்டு அவள் ஆடுவது நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டால் அன்றைக்கு தொலைந்தான் ஆதி..

இடையிடையே அவனையும் சேர்த்து ஆட வைக்க, இவர்கள் கலேபரத்தில் அவர்கள் மகளுக்குத்தான் நல்ல ஒரு என்டர்டெய்ன்மென்ட்டாக இருந்தது..

தன் அன்னை ஆட ஆரம்பித்தால் அந்த குட்டியும் ஓடி வந்து பாரதியுடன் இணைந்து ஆட, ஆதியும் சிரித்து கொண்டே தன் பிரின்ஸஸையும் ஆட வைப்பான்..

எப்படியோ ஒரு வாரமாக கஷ்டப்பட்டதுக்கு நல்ல பலன் இன்று கிடைத்தது.. பாரதி மதுவுக்கு இணையாக நன்றாகவே ஆடினாள்.. அதை கண்டுதான் அசந்து அதிசயித்து ஆசையாக பார்த்த படி நின்றான் ஆதி..

பாரதியும் அவன் பார்வையை கண்டு கொண்டு வெட்க பட்டு சிரித்தவாறே ஆட, அடுத்து வரும் ஆண்கள் பகுதிக்கு இருவரும் தங்கள் கணவனையும் வந்து இழுத்து செல்ல, அவர்களும் தங்கள் இணையுடன் இணைந்து ஆடினர்...

அந்த மண்டபத்தில் இருந்த அனைவரும் அவர்கள் ஆட்டத்தை ரசித்து பார்த்தனர்.. அடுத்த பாடலாக

கற்பூர கன்னிகையே வாராய்

அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்

நீ வாங்கள மகராணியே... வலது காலையெடுத்து வாராய் நீயே

நீ வந்த இடம் வளமாக, சென்ற இடம் வளமாக

சேர்ந்த இடம் சுகமாக வாழப்போற...



ஒலிக்க, அதற்கும் அந்த இரு பெண்களும் ஆட வசுந்தரா, அகிலா, கயல் என மற்ற பெண்களும் இணைந்து கொள்ள, அந்த ஆட்டமும் கலை கட்டியது...

அப்பொழுது சாப்பிட்டு முடித்து வந்த மலர் அலுவலக நண்பர்கள் இணைந்து அந்த இடத்தையே இன்னும் கலக்கினர்..

அடுத்து இனியவனும் ஒரு வெஸ்டர்ன் பாடலுக்கு ஆட, அதை கண்டு வசுந்தரா சொக்கி நின்றாள்..

“இவனுக்கு இப்படி எல்லாம் கூட ஆட தெரியுமா? நான் கூட வெறும் படிப்ஸ் மாத்திரம்தானே என்று நினைச்சேன்.. பரவாயில்லை சூப்பரா ஆடறான்.. “ என்று உள்ளுக்குள் சொல்லி வியந்தவள் வாயை பிளந்து பார்த்தாள்..

அவன் ஆடுவதை கண்டு அகிலா நானும் அவன் கூட ஆடுவேன் என்று ஓடி வந்து ஆட, இப்பொழுது வசுந்தரா காதில் புகை வந்தது..

அவளும் அவனுடன் இணைந்து ஆட முன்வர, அவர்களுக்கு பொருத்தமாக சிம்புவின் அம்மாடி ஆத்தாடி பாடல் ஒலிக்க, இனியவன் இரு பக்கமும் வசுந்தராவும் அகிலாவும் நின்று ஆட, அனைவரும் கை தட்டி ஆரவரித்து சிரித்தனர்..

வசுந்தரா மட்டும் அப்பப்ப அகிலாவை முறைக்க, அவர்களுக்குள் ஓடுல் காதல் ட்ராக் ஐ புரிந்து கொண்ட அகிலா வசுந்தராவை வம்பு இழுக்க என்றே இனியவன் உடன் நெருங்கி ஆட, வசுந்தரா இனியவனை முறைத்தவாறு ஆடி கொண்டிருந்தாள்..

மலருக்குமே அதிசயமாக இருந்தது. தன் தம்பி இப்படி எல்லாம் கூட ஆடுவானா என்று..

மேடையில் இருந்து இதையெல்லாம் கண்ட வசி மற்றும் மலரின் மனம் நிறைந்து இருந்தது..மலரின் கால்களும் பாடலுக்கு ஆட துடிக்க கஷ்டபட்டு அடக்கி கொண்டிருந்தாள்..

அதை புரிந்து கொண்ட பாரதி மேல பார்த்து மணமக்களையும் கீழ வர சொல்லி அழைக்க, அவ்வளவுதான்.. வசியை கூட மறந்து விட்டு மலர் கீழ ஓடி விட்டாள்..

மலரும் அந்த இரு பெண்களுடன் சேர்ந்து ஆட, அடுத்து மூன்று ஜோடிகளும் இணைந்து ஆட ஆரம்பித்தனர்..இடையில் பெரியவர்களும் வந்து சேர்ந்து கொள்ள, அந்த இடமே மேலும் கலை கட்டி அதிர்ந்தது..

ஆனால் இதையெல்லாம் காண பொறுக்காமல் மித்ரா மட்டும் தலை வலிப்பதாக கூறி தன் தந்தையை அழைத்து கொண்டு சென்று விட்டாள்..

வசி மற்றும் மலருக்குமே தங்களுக்குள் இருந்த ஒரு திரை விலகி இருவருமே இயல்பாக அந்த நடனத்தில் லயித்து மற்றவருடன் இணைந்து ஆட ஆரம்பித்து இருந்தனர்...

அதிலும் வசியின் அந்த வசீகர மயக்கும் பார்வை அவ்வபொழுது மலரை தீண்டி செல்ல , அந்த பார்வையை சந்திக்கும் பொழுதெல்லாம் அவளுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு உள்ளுக்குள்..

அடுத்து பாரதி மற்றும் மதுவின் பேவரைட் பாடலுக்கு ஆதியையும் நிகிலனையும் ஆட சொல்ல, அவர்கள் மறுக்க பின் வற்புறுத்தி அவர்களை ஒத்து கொள்ள வைத்தனர்..

வசி மற்றும் மலரை நடுவில் நிற்க வைத்து மற்ற பெண்கள் சேலை முந்தானையை சுழற்றியபடி ஆடினர்..

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா

இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா

ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு

அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு

லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது

சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது

மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது

சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது...



என்று ஆடி முடித்து ஓரமாக நின்று கொள்ள, ஆதியும் நிகிலனும் அடுத்து வந்த பாடல் வரிகளுக்கு வரிந்து கட்டி ஆடினர்..



அதாரு அதாரு அதாரு அதாரு

உதாறு உதாறு காட்டாதே உதாறு..



எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்

பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்..



என்று தங்கள் நண்பன் வசீகரனை பார்த்து பாடிய படியே ஆட, இடையில் வசியையும் இழுத்து விட, அந்த நெட்டை நண்பர்கள் மூவரும் இணைந்து ஆடி அந்த அரங்கத்தையே அதிர வைத்தனர்....

பாரதி மற்றும் மது தங்கள் கணவன்களின் நடனத்தை ஏற்கனவே பார்த்து இருந்ததால் ஆச்சர்யம் இல்லாமல் ரசித்து பார்க்க, மலருக்கு பயங்கர ஆச்சர்யமாக இருந்தது வசி நடனம் ஆடி பார்க்க..

அவள் பார்த்த டாக்டர் வசீகரன் ரொம்ப மென்மையானவன். அதிர்ந்து பேச மாட்டான்... அவன் போய் இப்படி குத்தாட்டம் ஆடுவான் என்று எதிர்பார்த்திராததால் வாயை பிளந்து சிரித்தவாறு ரசித்து பார்த்தாள்..

பாடலின் இறுதியில் மூன்று ஜோடிகளுமே இணைந்து ஆடி கலக்கினர்..

அந்த கச்சேரியின் இறுதியாக கார்த்தி குட்டி அழகாக மது சொல்லி கொடுத்திருந்த அபிநயத்தை செய்து காட்டி தன் குட்டி உடலை வளைத்து அவளும் அழகாக ஆடி அந்த ஆட்டத்தை முடிக்க, அனைவரும் கை தட்டி ஆரவரித்து மகிழ்ந்தனர்..

எல்லா கொண்டாட்டங்களும் முடிய மாலை ஆகிவிட்டது.... உறவினர்கள் நண்பர்கள் என எல்லாரும் விடை பெற்று சென்றிருக்க, மணமக்களும் வசியின் இல்லத்திற்கு செல்ல தயாராயினர்..

அழகாக வண்ண மலர்களால அலங்கரிக்கபட்டிருந்த காரில் மணமக்கள் பின்னால் அமர்ந்திருக்க ஆதி காரை ஓட்ட நிகிலன் அருகில் அமர்ந்து கொள்ள இருவரும் கதை அடித்தபடியே வந்தனர்..

இடையில் வசியும் சேர்ந்து கொள்ள மலர் மட்டும் வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்..

வசியின் இல்லத்தை அடைந்ததும் மீண்டும் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து முறைப்படி அவளை அந்த வீட்டிற்குள் அழைத்து சென்றனர்...

கொஞ்சம் இருந்த நெருங்கிய மற்ற உறவினர்களும் விடை பெற்று சென்றிருக்க, மலர் ஐ கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க சொல்லி வசுந்தரா அறையில் இருக்க சொனனார் மீனாட்சி...

மலரும் விட்டால் போதும் என்று உள்ளே வந்தவள் தன் புடவையை மாற்றி கொண்டு கட்டிலில் விழ, பல மன குழப்பங்களுடனே அசதியால் உடனே உறங்கி விட்டாள்...

அசந்து உறங்குபவளை யாரோ தட்டி எழுப்ப

“ப்ளீஸ் ஜோ... இன்னும் கொஞ்ச நேரம் என்னை தூங்க விடு... என் மாமியார் விளக்குமாத்தால அடித்தாலும் நான் வாங்கிக்கறேன்.. இந்த தூக்கத்தை மட்டும் கெடுக்காத..என் செல்லம் இல்ல.. “

என்று காற்றில் கை வீசி துளாவி கைக்கு கிடைத்த கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தமிட, அதை கண்டு வாய் விட்டு சிரித்தார் மீனாட்சி...

அவள் கொஞ்சிய நேரத்துத்துக்கு அவள் அன்னை ஜோதியாக இருந்தால் இந்நேரம் முதுகில் நாலு வைத்திருப்பாரே .. இன்னும் அடிக்க காணோமே என்று அதிசயபட்டு அவசரமாக கண் விழித்து பார்க்க எதிரில் மீனாட்சி சிரித்து கொண்டு நிற்க வேகமாக எழுந்து அமர்ந்தவள் கண்ணை தேய்த்து விட்டுக் கொண்டு சுற்றிலும் பார்த்தாள் மலர்..

இது அவள் அறை இல்லவே என்று மண்டையில் உறைக்க அவசரமாக தன் தலையை தட்டி யோசித்தவள் அப்பொழுது தான் புரிந்தது தான் தன் புகுந்த வீட்டில் இருப்பதும் எதிரில் நிற்பவர் ஜோ இல்லை தன் மாமியார் மீனாட்சி என்று

உடனே பதறி எழுந்தவள்

“சாரி அத்தை.. நல்லா அசந்து தூங்கிட்டேன் .. அம்மா னு நினைச்சு ஏதோ உளறிட்டேன்... “ என்று தலையை சொரிந்தவாறு அசடு வழிந்து சிரித்தாள் மலர்..

“ஹா ஹா ஹா பரவாயில்லை மலர்.... நானும் அசந்து தூங்கும் உன்னை எழுப்ப வேண்டாம் என்று தான் இவ்வளவு நேரம் விட்டு விட்டேன்..பாவம் ஜோதி இதோடு பத்து தரம் மாடி ஏறி வந்து விட்டாள் நீ எழுந்து விட்டாயா என்று பார்க்க.

அவள் தான் உன்னை திட்டி கொண்டே இருக்கிறாள்..சரி வா.. இரவு சாப்பாட்டிற்கு.. எல்லாரும் உனக்காக காத்து கொண்டிருக்கிறார்கள்.. “ என்றார் மீண்டும் சிரித்தவாறு...

“ஐயோ.. இப்படியா தூங்குவது?” என்று தலையில் கொட்டிக் கொண்டே அவசரமாக குளியல் அறைக்கு உள்ளே சென்று முகம் கழுவி முடியை திருத்தி கொண்டு வேகமாக கீழிறங்கி வந்தாள்....

வெளியில் ஒரு அவசர கேஸ் விசயமாக சென்றிருந்த வசியும் அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்திருக்க, களைந்த கேசமும், தூக்க கலக்கமும் கலந்த முகத்துடன் இறங்கி வரும் தன் மனைவியை பார்த்ததும் அவன் இதயம் எகிறி குதித்தது..

“இனிமேல் அவள் இங்கு தான் இருக்க போகிறாள்.. இந்த மாடியில் ஓராயிரம் முறை ஏறி இறங்க போகிறாள்... அவளை மணிகணக்காக பார்த்து கொண்டிருக்கலாம்.” என்று துள்ளி குதித்தது அவன் மனம்..

“ம்ம்ஹூம்.. அண்ணா போதும் ஜொல்லு விட்டது... நீ விட்ட ஜொல்லுல நம்ம வீடு மூழ்கிட போகுது.. சீக்கிரம் சாப்பிட வா... உங்க இரண்டு பேருக்காக எவ்வளவு நேரம் எல்லாரும் காத்து கிடக்கிறது.. “ என்று சிரித்தவாறு அவன் அருகில் வந்து அவன் கையை பிடித்து இழுத்து சென்றாள் வசுந்தரா..

மற்றவர்களும் சிரிக்க அவனோ ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவாறு டைனிங் டேபிள் க்கு சென்றான்.. அத்தனை பேரும் அமர்ந்து சாப்பிடும் வகையில் அந்த மேஜை பெரிதாக இருக்க, அவன் அமர்ந்த இருக்கையின் அருகில் மட்டுமே காலியாக இருக்க மலர் அங்கு சென்று அமரும் படி ஆயிற்று...

மீனாட்சியும் ஜோதியும் எல்லாருக்கும் பரிமாற, கலகலப்புடன் கழிந்தது இரவு உணவு...

பின் இரவு உணவை முடித்து வசி மேல தன் அறைக்கு செல்ல முயல, வசுந்தரா அவசரமாக இனியவனுக்கு கண்ணால் ஜாடை செய்ய, உடனே அவனும் புரிந்து கொண்டு வசியை மேல செல்லாமல் தடுத்து தோட்டத்திற்கு அழைத்து சென்றான்...

மலரையும் வசுந்தராவின் அறைக்கு அழைத்து சென்ற ஜோதி அவளை குளிக்க வைத்து மீண்டும் ஒரு மெல்லிய வேலைப்பாடு மிக்க பட்டு புடவையை கட்ட வைத்தார்..

மலர் எதுக்கு என்று விடாமல் தொண தொணக்க, சும்மாதான் என்று சொல்லி மனதுக்குள் சிரித்தவாறு தலையை குனிந்து கொண்டார் ஜோதி..

அவளுக்கு தலை பிண்ணி விட , மீனாட்சி கீழ சென்று மலர்ந்து மணம் வீச ஆரம்பித்திருந்த குண்டு மல்லி சரத்தை கொண்டு வந்து நாலாக மடித்து தன் மருமகளின் தலையில் வைத்தார் சிரித்தவாறு....

“எதுக்கு அத்தை.. நைட் போய் இதெல்லாம் ? “ என்றவளுக்கு அப்பொழுது தான் ஏதோ புரிய ஆரம்பித்தது..

“ஐயோ... சினிமா ல காட்டற மாதிரி பர்ஸ்ட் நைட் ஆ...?? நான் எப்படி தனியா அவன் கூட?? “ என்று எண்ணுகையிலயே அவள் உள்ளே படபடப்பாக இருந்தது...

மீனாட்சி கீழ சென்று இனியவனிடம் வசியை அழைத்து வர சொல்ல, வசியும் இதுவரை இனியவன் தன்னை தோட்டத்தில் பிடித்து வைத்திருந்த காரணம் தெரியாமல் மேல வர, அவன் அறையை திறந்ததும் கும் என்ற மல்லிகை மலர்களின் வாசம் அவன் நாசியை தீண்டி சென்றது...

உள்ளே பார்க்க அவன் படுக்கையின் மலர்களால் அலங்கரிக்கபட்டிருக்க  நடுவில் இரு இதயங்கள் இணைந்த மாதிரி அவனுக்கு பிடித்த இளமஞ்சள் ரோஜாகள் படுக்கை முழுவதும் நிறைந்திருக்க, அவனுக்கும் அப்பொழுது தான் புரிய ஆரம்பித்தது....

மெல்ல வெட்க பட்டு தன் தாயிடம் திரும்பியவன்

“மா... என்ன இதெல்லாம்?? எதுக்கு எப்படி எல்லாம் பண்ணி வச்சிருக்கீங்க ?? “ என்றான் செல்லமாக முறைத்தவாறு..

“ஹா ஹா ஹா என்னை கேட்டா? .. இதெல்லாம் உன் தங்கையும் இனியனும் சேர்ந்து பண்ணியது தான்.. நீயே போய் அவங்க இரண்டு பேர் காதையும் பிடித்து திருகி கேளுப்பா.. என்னை ஆள விடு என்று சிரித்தவாறு அவனுடைய அலமாரியை திறந்து அதில் இருந்த ஒரு புது பட்டு வேட்டியை எடுத்தவர்

“வசி கண்ணா. இதை கட்டிகிட்டு இங்கயே இரு.. உன் தவம், வேண்டுதல் இன்னிக்கு பலிக்க போகிறது... உன் பொண்டாட்டி இனிமேல் உன் பக்கத்துலயே இருக்க போகிறா.. நீ ஆசை தீர ரொமான்ஸ் பண்ணிக்கோ... நான் குறுக்க வர மாட்டேன்... “ என்று கண் சிமிட்டி சிரித்தார்....

“மா...” என்று செல்லமாக சிணுங்கியவன் பின் எதோ நினைவு வர

“மா.... பனிமலர் கிட்ட கேட்டிங்களா?? அவளுக்கு இதுக்கு சம்மதமா?? அவள் இன்னும் பழைய கசப்பில் இருந்து வெளிவராமல் இருந்தால் அவசர பட்டு எதுக்கு இதை ஏற்பாடு பண்ணினிங்க?

இன்னும் நாங்க இரண்டு பேரும் நல்லா புரிஞ்சுகிட்டு அதுக்கு பிறகு இதை ஏற்பாடு பண்ணி இருக்கலாம் இல்லை... என்னை கேட்டிருந்தால் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றிருப்பேன்.. இப்படி அவசர பட்டுட்டிங்களே.. “ என்றான் யோசனையாக..

“ஹ்ம்ம் போதும் கண்ணா.. இவ்வளவு நாட்கள் இரண்டு பேரும் பிரிந்து இருந்தது... இனிமேல் உங்கள் திருமண வாழ்க்கையை நல்ல படியா ஆரம்பிங்க... தாம்பத்தியமும் கூட ஒருத்தரை ஒருத்தர் இன்னும் ஆழமா புரிந்து கொள்ள உதவும்...

அதனால் இன்னும் நிறைய காலங்கள் இருக்கின்றன...மெதுவா புரிஞ்சுக்கோங்க. இப்ப எனக்கு சீக்கிரம் ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடுங்க.. டேய் கண்ணா. இதுலயும் நீ லேட் பண்ணிடாத...

அந்த ஜானுவும் சிவா வும் அவங்க பேத்திகளை வச்சுகிட்டு கொஞ்சறத பார்க்க எனக்கு பொறாமையா இருக்கு.. நானும் அவங்களுக்கு போட்டியா என் பேத்தியோடா அவங்க முன்னாடி போய் நின்னு என் பேத்தியை கொஞ்சணும்...

என்ன செய்வியோ தெரியாது.. அடுத்த வருசத்துக்குள்ள எனக்கு ஒரு பேத்தியை பெத்து கொடுத்துடுங்க... “ என்றார் கட்டளை இடும் தொனியில்...

அதை கேட்டவன் மீண்டும் வெட்கபட்டு சிரிக்க

“ஓகே.. டீல் மா.... உங்க ஆசையை நிறைவேற்றது தான் நீ பெத்த மகனின் முதல் வேலை.. “ என்று கண் சிமிட்ட

“போடா நாட்டி... “ என்று சிரித்தவாறு அவன் கன்னத்தை பிடித்து கிள்ளியவர் அவனை கட்டி அணைத்து

“ஆல் தி பெஸ்ட் கண்ணா... என்ஜாய் யுவர் மேரேஜ் லைப்... “ என்று சிரித்து கொண்டே கிழ சென்றார்...

வசிக்குமே அங்கிருந்த செட்டப் ஐ பார்க்க அவன் இதயம் துள்ளி குதித்தது... அதுவும் மலரிடம் தெரிந்த மாற்றம் அவள் கண்டிப்பாக மாறி விட்டாள், தன்னை அவள் கணவனாக ஏற்று கொண்டாள் என புரிய தன்னவளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்...

கீழ சென்ற மீனாட்சி பால் சொம்பை எடுத்து கொண்டு வசுந்தராவின் அறைக்கு வந்தார்..

அதற்குள் மேல வந்திருந்த தன் தந்தை மற்றும் அன்னையின் காலில் விழுந்து மலர் வணங்க, சிவசங்கர் தன் மகளை கட்டி அணைத்து மகிழ்ந்து அவளை வாழ்த்தினார்..மலரின் பாட்டியும் தன் பேத்தியை கட்டி அணைத்து அவளுக்கு ஆசி வழங்கினார்...

பின் மீனாட்சி மற்றும் சுந்தர் காலில் விழ, அவர்களும் அவளை தூக்கி வாழ்த்தினர்..மீனாட்சி தன் மகனுக்கு சொன்ன அதே கன்டிசனை தன் மருமகளுக்கும் சொல்ல, அதை கேட்ட மலரின் கன்னம் சிவந்தது வெட்கத்தில்...

தன் மகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பூரிப்பையும் கண்டு மனம் நிறைந்து இருந்தது அவளை பெற்றவர்களுக்கு..

ஒரு வழியாக ஜோதி அவளை அழைத்து சென்று வசியின் அறையின் முன்னால் விட, கீழிருந்து வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்த வசுந்தரா

“ஆல் தி பெஸ்ட் அண்ணி... “ என்று கண் சிமிட்டி சிரிக்க, மலரோ அவளை முறைத்தவாறு கொன்னுடுவேன் என்று கை நீட்டி மிரட்டி ஆக்சன் பண்ண வசுந்தரா அவளுக்கு பழிப்பு காட்டி சிரிக்க, படபடக்கும் இதயத்துடன் அந்த அறைக்குள் தன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள் பனிமலர்...

இத்தனை பெரியவர்களின் ஆசியுடன் தங்கள் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க காத்திருக்கும் அந்த இரு இதயங்களும் இணைந்திடுமா?? அந்த ஈசன் வேற ஏதாவது கணக்கை வைத்திருக்கிறானா?? பார்க்கலாம்..



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!