என் மடியில் பூத்த மலரே-33



அத்தியாயம்-33 

தி மஹா வளைகாப்பை பார்த்து வந்த பிறகு தன் மகளுக்கும் அது மாதிரி விழா வைக்கனும் என்று ஆரம்பிக்க, ஜானகிக்கு திருமணத்தின் பொழுதே பாரதி அவள் பெற்றோர்கள் இல்லாமல் மனம் வாடியது நினைவு வந்தது.. அட்லீஸ்ட் இந்த பங்சனுக்காவது அவள் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார்..

அப்பொழுது உடனே போய் உண்மையை சொல்ல முடியாது.. தர்மலிங்கம் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரியாமல் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிந்து அதை அப்போதைக்கு தள்ளி வைத்தார்...

மீண்டும் ஒன்பதாவது மாதத்தில் ஆதி திரும்பவும் அந்த பேச்சை ஆரம்பிக்க, ஜானகி அவனை தனியாக அழைத்து பாரதி மனதில் இருக்கும் குறையை சொல்ல அவனுமே எப்படியாவது அவளை அவள் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து சுசிலா மற்றும் கமலாவையும் கலந்து என்ன செய்யலாம்?? இதை எப்படி தர்மலிங்கத்திடம் சொல்லுவது என்று கலந்து அலோசித்து ஒரு திட்டத்தை தீட்டினர்...

அதன்படி தர்மலிங்கத்தின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்து அதுக்கு தகுந்த மாதிரி அந்த செய்தியை சொல்ல முடிவு செய்து பாரத்திடம் சொல்லி அவரை செக்கப் பண்ண திருச்சி கமலாவின் மருத்துவமனைக்கு அழைத்து வர செய்தனர்...

ஜானகியும் ஆதியும் பாரதியிடம் சொல்லாமல் அங்கு சென்றிருந்தனர்... அந்த மருத்துவ மனையில் இருந்த ஹார்ட் ஸ்பெஷலிட் இடம் கண்ணன் முன்னாடியே சொல்லி இருக்க அவரும் ஏற்கனவே அவரை பரிசோதித்தவர் என்பதால் தர்மலிங்கத்தை தனியாக ஒரு அறையில் வைத்து அவரிடம் மெதுவாக விசயத்தை சொல்ல ஏற்பாடு செய்தனர்...

அதன்படி அவரை தனியாக சந்தித்த அந்த மருத்துவர் தர்மலிங்கத்தை பரிசோதித்து அவர் முற்றிலும் குணம் ஆகி இருப்பதால் அவரிடம் பேச்சை ஆரம்பித்தார்...

“ஐயா... உங்க இதயத்தை பரிசோதிக்க சில விசயங்கள் சொல்ல போறேன்.. அதை கேட்டு நீங்க அதிர்ச்சியோ இல்லை ரொம்ப மகிழ்ச்சியோ இல்லாமல் சாதாரணமாக எடுத்துக்கணும்.. “ என்று அவரை முன் கூட்டியே தயார் பண்ணினார் அந்த மருத்துவர்... தர்மலிங்கமும் தலை அசைக்க,

“சரி.. நான் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் சொல்ல போறேன்... உங்களுக்கு எது முதல்ல தெரியனும்..”

தர்மலிங்கமும் சிரித்து கொண்டே நல்ல செய்தியை முதல்ல சொல்லுங்க டாக்டர்.. என்றார்... பின் டாக்டர் வெளியில் நின்றிருந்த ஜானகியையும் ஆதியையும் அழைக்க, உள்ளே வந்த அவர்களை கண்டதும் தர்மலிங்கத்தின் முகம் பிரகாசித்தது.. இவங்க எப்படி இங்க என்று யோசித்துக்கொண்டே வழக்கமாக நலம் விசாரிக்க

டாக்டரும்

”இவங்க தான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல போறாங்க... நீங்க சொல்லுங்க மா.. “ என்று ஜானகியை பார்க்க, அவரும் சிரித்து கொண்டே

“அண்ணா... பாரதியை எங்க வீட்டு மறுமகளாக்கிக்கனும்னு விரும்பறேன்... உங்க மாப்பிள்ளைக்கும் பாரதிய ரொம்ப புடிச்சிருக்கு... நீங்க என்ன சொல்றீங்க.. உங்களுக்கு சம்மதமா?? ... “ என்றார் தயங்கியவாறு

அதை கேட்டு தர்மலிங்கத்திற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை..ஏற்கனவே அவர் மனதில் எழுந்த எண்ணம் தான்...ஏன் அவர் குடும்பத்தில் அனைவருக்கும் இருக்கும் ஆசைதான்... அதையே ஜானகி கேட்க, ஆச்சர்யத்தில் கண்கள் விரிய ஏற்கனவே டாக்டர் அறிவுருத்தியது நினைவு வர தன் சந்தோசத்தை கட்டு படுத்தி கொண்டு,

“இதுக்கு எதுக்குமா இவ்வளவு தயக்கம்??... இந்த அண்ணன் கிட்ட உன் பொண்ணை கொடுனா னு நீ எப்பவும் உரிமையோட கேட்கலாம்... “என்று சிரித்தவர்

“எனக்கு முழு சம்மதம் ஜானகி மா.... ஆனால் இதுக்கு பாப்பா என்ன சொல்லுமோ தெரியலையே?? அவளுக்கு பிடிச்சிருந்தா போதும்.. பாப்பா கிட்ட கேட்டுட்டு நான் சொல்றேனே.. “ என்றார் அவரும் தயங்கியவாறு...

அதை கேட்டு ஆதிக்கு அதிசயமாக இருந்தது... அவர்கள் வசதியை கண்டு உடனே சரி னு சொல்லாமல் எவ்வளவு வசதி இருந்தாலும் தன் பெண்ணின் விருப்பமே பெருசு.. அவளுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே இந்த திருமணம் என்று அவர் பேசியதில் பூரித்து போனான்...

அவர் எவ்வளவு நல்லவர் என்று புரிந்தது.. இவரை புரிந்து கொள்ளாமல் அவரை பற்றி மடத்தனமாக தப்பாக பேசியது நினைவு வர அவனையே திட்டி கொண்டான்...

அவர் சொன்னதை கேட்டு ஜானகிக்கும் ரொம்ப மகிழ்ச்சி...

“ரொம்ப நன்றி னா.. “ என்று அவரை கட்டிகொண்டு டாக்டரை பார்த்து அடுத்த விசயத்தை எப்படி சொல்வது என்று முழித்தார் ஜானகி .. அதை கேட்டு அவர் எப்படி ரியாக்ட் செய்வாரோ?? .குறிப்பா அவருக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்று பயந்தனர் ஆதியும் ஜானகியும்...

டாக்டரும் கண்ணால் ஜானகிக்கு ஜாடை செய்து அமைதி படுத்தி பின் அருகில் வந்தவர்

“ஐயா... அடுத்து உங்க மனதுக்கு ஒரு கஷ்டமான செய்தி சொல்ல போறேன்.. இந்த சந்தோஷமான செய்தியை கேட்டு எப்படி இருந்தீங்களோ அதே மாதிரி இந்த கஷ்டமான கசப்பான செய்தியையும் கேட்டு நீங்க கலங்க கூடாது...

உங்க மனதை கஷ்ட படுத்திக்க கூடாது... எல்லாம் நல்லதுக்கே னு நினைக்கனும்..இதுவும் உங்களை பரிசோதிக்க ஒரு டெஸ்ட் தான்.. “ என்று கொஞ்சம் அவர் மனதை தயார் படுத்திய பின்

“உங்க சின்ன பொண்ணுக்கு நீங்க எப்படி எல்லாம் கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு மனசுல நினச்சிருப்பீங்க... ஆனால் அந்த பொண்ணு உங்க கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிகிட்டா உங்களுக்கு எப்படி இருக்கும்??? “ என்று நிறுத்தியவர் தர்மலிங்கத்தின் முகத்தை பார்க்க முதலில் கொஞ்சம் அதிர்ந்தாலும் பின் சிறிது யோசித்தவர்

“என் பொண்ணு அந்த மாதிரி எங்க கிட்ட சொல்லிக்காமல் கல்யாணம் வரை போக மாட்டா டாக்டர்... நானும் அவளை அப்படி வளர்க்கல... நல்லதோ கெட்டதோ எதுனாலும் எங்ககிட்ட சொல்லிட்டுத்தான் செய்வா...

அதையும் மீறி எங்ககிட்ட சொல்லாம ஏதாவது செய்திருந்தால் கண்டிப்பா அதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கும்... இல்ல அவ சூழ்நிலை அந்த மாதிரி அவளை செய்ய வச்சிருக்கும்... அவ மனசறிந்து எங்க கிட்ட எதையும் மறைக்கனும் னு எப்பவும் ஒரு காரியத்தை பண்ண மாட்டா... “ என்று பெருமிதமாக சொன்னார்..

அதை கேட்டு அங்கு இருந்த அனைவருமே ஆச்சர்ய பட்டு நின்றனர்...

தன் மகளோ, மகனோ வீட்டுக்கு தெரியாமல் யாரையாவது விரும்பி இருந்தாலோ இல்லை ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டாலொ தன் மகள்/மகன் என்று கூட பார்க்காமல் அவர்களை தேடி பிடித்து வெட்டி கௌரவ கொலை பண்ற வெறித்தனமான பெற்றோர்கள் வாழும் இதே சமுதாயத்தில் தங்கள் மகளை இந்த அளவு புரிந்து வைத்திருக்கிறாரே என்று ஆச்சர்யமாக இருந்தது..

உண்மையிலயே அவர் பெரிய மனிதர் தான் என்று அனைவரும் எண்ணிகொண்டனர்...

அவரின் பதிலை கேட்டு அந்த மருத்துவர்

“சபாஸ் ஐயா.. இந்த மாதிரி ஒரு பதிலை நீங்க சொல்லுவீங்கனு எதிர்பார்க்கல.. நீங்க எங்க உணர்ச்சி வசப்பட்டு கோபப்படுவீங்களோனு பயந்தோம்... நீங்க உங்க பொண்ணு மேல வச்சிருக்கிற பாசத்தையும் நம்பிக்கையையும் கண்டு உண்மையிலயே அதிசயமா இருக்கு....

சரி... நீங்க சொன்ன மாதிரியே ஒரு வேளை உங்க பொண்ணு உங்களுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணியிருந்தால் அவளை மன்னித்து ஏத்துப்பீங்களா?? .. “ என்று மீண்டும் அவரின் மனதை தயார் படுத்த கேட்டார்...

டாக்டர் திரும்ப திரும்ப இந்த கேள்வியை கேட்பதிலயே தர்மலிங்கத்திற்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது... சிறிது யோசித்தவர்

“ஹ்ம்ம்ம்ம் அப்படி எதுவும் நடந்திருந்தால் கண்டிப்பா அதுல எதுவும் ஒரு காரணம் இருக்கும் டாக்டர்.... எப்பவும் என் பாப்பா தப்பு பண்ணமாட்டா... கண்டிப்பா அவளை மன்னிச்சு ஏத்துக்குவேன்.. நான் பெத்த பொண்ணை நானே எப்படி விளக்கி வைக்க முடியும்?? ..

புள்ளைங்க தப்பு பண்ணினா அத மன்னிச்சு ஏத்துக்கத்தான் வேணும்.. “ என்று கண்கள் கலங்க அவர் சொல்லி முடிக்க, ஜானகி ஓடி வந்து அவரை கட்டி கொண்டார்.

“ரொம்ப நன்றி அண்ணா.. நீங்க இவ்வளவு பெருந்தன்மையா எடுத்துகிட்டதுக்கு... எங்க நீங்க கோபப்படுவீங்களோனு நினைச்சு பயந்துகிட்டிருந்தேன்... இப்பதான் நிம்மதியா இருக்கு..

என் அண்ணன் எப்பவும் பெரிய மனுசன்தானு நிரூபிச்சிட்டீங்க... இந்த மாதிரி ஒரு அண்ணன் கூட பிறக்கலையேனு வருத்தமா இருக்கு... “ என்று சொல்ல தர்மலிங்கம் ஒன்றும் புரியாமல் முழிக்க, அதை கண்டு தன்னை சுதாரித்து கொண்ட ஜானகி

“உங்க பொண்ணை மன்னிச்ச மாதிரி இந்த தங்கச்சியையும் மன்னிச்சிடுங்க அண்ணா... நான் சொல்றதை கேட்டு நீங்க என்னை வெறுத்து விடக் கூடாது.. “ என்று சொல்லி நிறுத்தியவர், ஒரு நீண்ட மூச்சை ஆழமாக எடுத்து விட்டு

“டாக்டர் சொன்ன மாதிரி பாரதிக்கும் என் பையன் ஆதிக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு னா.... சந்தர்ப்ப சூழ்நிலையால இந்த கல்யாணம் நடக்கிறமாதிரி ஆகிடுச்சு.. இப்போதைக்கு என்னால காரணத்தை விளக்க முடியலை..அப்ப உங்க உடல் நிலை சரியில்லாததால் உங்க கிட்ட சொல்ல முடியாமல் போயிருச்சு...

ஆனால் உங்க பொண்ணு எந்த தப்பும் பண்ணலை... எல்லாம் என்னல தான் இப்படி ஆனது...

ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு இருக்கு... பாரதி இப்ப என் மறுமகள்....உங்ககிட்ட சொல்லாம இப்படி ஆனதுக்கு தினமும் மனசுக்குள்ள புழுங்கி கிட்டு இருக்கா..

உங்க உடல் நிலை கருதியே உங்க கிட்ட சொல்ல வேண்டாம் னு சொல்லிட்டோம்... ஆனாலும் அவள் வெளில சிரிச்சாலும் உள்ள தினமும் அழுதுகிட்டேஇருக்கா.. நீங்க அவளை மன்னிச்சுடனும்.. எங்களையும் மன்னிச்சிடனும்.. “என்று அவர் கைகளை பிடித்து கொள்ள, ஆதியும் அருகில் வந்து

“என்னையும் மன்னிச்சிடுங்க மாமா.... இதுக்கெல்லாம் நானும் ஒரு வகையில் காரணம்..“ என்று அவர் காலில் விழுந்து எழ, அவரோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் இருந்தார்....

அவர்கள் சொன்ன செய்தி எல்லாம் கேட்டு அவராலயே நம்ப முடியவில்லை... கண்டிப்பா இதை முதல்லயே சொல்லி இருந்தால் அவருக்கு அதிர்ச்சியாகி விழுந்திருப்பார்... ஏற்கனவே சொல்லி இருந்ததால் ஏதோ பரிசோதனைக்கு தான் அப்படி கேட்கிறார் என்றும் தன் பொண்ணு அப்படி எதுவும் செய்து இருக்க மாட்டா என்று கொஞ்சம் நம்பிக்கை அவருள் ஒட்டி கொண்டிருந்தது...

ஆனால் ஜானகி சொன்னதை கேட்ட பிறகு அவருக்கு பலத்த அதிர்ச்சியாக இருந்தது...

பிரியமாக வளர்த்த செல்ல பொண்ணு வீட்டுக்கு தெரியாமல் இப்படி ஒரு காரியம் பண்ணியிருந்தால் யாராலும் ஏற்று கொள்ள முடியாதுதான்... ஆனாலும் அவர் முன்பு சொன்ன மாதிரி அவள் அப்படி செய்திருக்கிறாள் என்றால் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.. என்று கண் மூடி யோசித்தவர் தன்னை கட்டுபடுத்தி கொண்டு

“அப்ப பாப்பா சிங்கப்பூர் போகலையா?? “ என்றார் இன்னும் குழப்பத்துடன்.. இதை கேட்டு ஜானகிக்கும் ஆதிக்கும் மனம் வலித்தது... இவரை எப்படி எல்லாம் எல்லாரும் சேர்ந்து ஏமாற்றி இருக்கிறோம்.. என்று வலித்தது அவர்களுக்கு...

தனக்கே இப்படி இருக்கிறது என்றால் அவருக்கு எப்படியிருக்கும்?? என்று புரிந்தவர் கண்களில் கண்ணீர் வழிய வார்த்தை வராமல் தலை மட்டும் ஆட்டி இல்லை என்று சொன்னார் ஜானகி....உடனேயே சமாளித்துகொண்டு

“இது எல்லாம் என்னோட ஏற்பாடுதான் அண்ணா.. பாரதிக்கு இதில் எதுவும் சம்பந்தம் இல்லை... நிறைய தடவை உண்மையை சொல்லி விடலாம்னு சொன்னா ....நான்தான் இதை கேட்டு உங்களுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது னு சொல்ல வேண்டாம் னு சொல்லிட்டேன்.. அவள் மேல எந்த தப்பும் இல்லை.. எல்லாம் என்னால தான்....

கண்டிப்பா உங்களை ஏமாத்தனும் னு நாங்க செய்யலை... முன்பு சொன்ன மாதிரி சந்தர்ப்பம் சூழ்நிலை அப்படி ஆகிடுச்சு... அவளை வெறுத்திடாதிங்க... நீங்க எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன்.. “ என்று அவர் கையை பிடித்து கொண்டு கண்ணீர் வழிய சொல்ல தர்மலிங்கத்துக்குமே ஒரு மாதிரி ஆகிவிட்டது... அவரும் பதறி

“அழாத ஜானகி... இனிமேல் அழுது என்ன செய்ய?? .. என் பொண்ணுக்கு இப்படிதான் ஆகும் னு விதி இருந்தால் அப்படி நடந்திடுச்சு.. எல்லாம் அந்த முருகன் எப்படி எழுதி வச்சிருக்கானோ அப்படி தான் நடக்கும்... இதுல யாரை குறை சொல்லி என்ன செய்ய??

என்ன வறுத்தம் னா பக்கத்துலயே இருந்துகிட்டு அவளை பார்க்க முடியலையே... அவ கல்யாணத்தை பர்க்கக முடியலையே னு தான் .. “என்று அவரும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்க, டாக்டர் வேகமாக அவர் அருகில் வந்து

“நீங்க உணர்ச்சி வசப்படக்கூடாது ஐயா... இதுவரை எதுக்கும் எப்படி தைரியமா இருந்தீங்களோ, அப்படியே இருங்க... ஜானகி மா சொன்ன மாதிரி எல்லாம் காலத்தின் தீர்ப்பு...

எது எப்படி நடக்குமோ அப்படி தான் நடக்கும்.. விதிய நாம யாரும் மாத்த முடியாது.. நீங்க உங்க மனதை போட்டு அலட்டிக்காதிங்க... உங்க பொண்ணு எப்பவும் தப்பு பண்ணல னு நினைத்து தைரியமா இருங்க...” என்று சமாதான படுத்தினார்...

அதற்குள் ஓரளவுக்கு தன் நிலைக்கு வந்திருந்த தர்மலிங்கமும் சரி என்று தலை ஆட்ட

“இப்ப எங்க மா இருக்கா பாரதி?? ... அவளை பார்க்கணுமே... “ என்றார் இன்னும் தழுதழுத்த குரலில். ..

“சென்னைலா தான் இருக்கா அண்ணா... இப்ப மாசமா இருக்கா... ஒன்பதாவது மாதம்.. அதனால தான் இப்ப வர முடியலை... மஹா வளைகாப்புக்கும் வர முடியலை.. இப்ப மஹாவுக்கு பண்ணின மாதிரியே பாரதிக்கும் சிம்பிளா வளைகாப்பு செய்ய ஆசை... அதான் உங்ககிட்ட உண்மையை சொல்லி உங்களை எல்லாம் கூட்டிகிட்டு போகலாம் னு வந்தோம்...

நீங்க இல்லாம கல்யாணத்துக்கே பாரதி சிரிக்கலை... இந்த பங்சனாவது உங்க முன்னாடி நடக்கணும்னு ஆசைபட்டோம்... அதன் டாக்டர் கிட்ட கேட்டுடுட்டு உங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டோம்.... திரும்பவும் சொல்றேன்... பாரதி எந்த தப்பும் பண்ணலை... எல்லாம் என்னாலதான்... என்னை மன்னிச்சிடுங்க.. என்னை வெறுத்திடாமல் நீங்க எல்லாம் அங்க வரணும்.. “ என்று மீண்டும் தழுதழுக்க

தர்மலிங்கத்திற்கோ இன்னும் அதிர்ச்சியாக இருந்தது... “அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா இருக்கே... தனக்கு தெரியாமல் இவ்வளவு நடந்திருக்கே... “என்று அடிபட்ட பாவத்துடன் ஜானகியை பார்க்க, அவருக்கோ இன்னும் கஷ்டமாகி போனது..

அதுவரை அமைதியாக இருந்த ஆதியும் முன்னால் வந்து

“இதுக்கு எல்லாம் நான் தான் முக்கிய காரணம் மாமா... என்னை மன்னிச்சிடுங்க... என்னால தான் அம்மாவும் இந்த மாதிரி .... “என்று நிறுத்தியவன்

“உங்க பொண்ணை நல்லா பார்த்துக்குவேன் மாமா... ஏதோ கெட்ட நேரம் இப்படி ஆகிருச்சு... நீங்க எனக்கு என்ன தண்டனை வேணா கொடுங்க.. அம்மாவையும் உங்க பொண்ணையும் மன்னிச்சிடுங்க.. “என்று கண்கலங்கி அவர் கையை பிடித்து கொள்ள, அப்பொழுதுதான்

“எது எப்படி ஆனாலும் இப்பொழுது அவன் தன் மறுமகன்.. தன் மாப்பிள்ளை வந்து அவர் கையை பிடித்து கொள்வதை தாங்க முடியாமல் பதறியவர்

“இருக்கட்டும் மாப்பிள்ளை... இதுல நான் மன்னிக்க என்ன இருக்கு... அதான் எல்லா அந்த வடிவேலனே நடத்தி முடிச்சிட்டானே.. யாரை குறை சொல்லி என்ன ஆகப்போகுது... “ என்று அவன் கையை பிடித்து கொண்டார்...

அவர் தன்னை மாப்பிள்ளை என்று சொன்னதே அவர் தன்னை மன்னித்து விட்டார் என்று புரிய

“ரொம்ப நன்றி மாமா... உங்களுக்கு தெரியாமல் மறைக்கிறமே என்று மனதை உறுத்தி கொண்டிருந்தது... இப்பதான் நிம்மதியா இருக்கு...Thank you so much!! “ என்று அவரை அணைத்துக் கொண்டான்...

ஒரு வழியாக அவரும் கொஞ்சம் தெளிந்து நடந்ததை சீரணித்து கொண்டு

“எதுக்காக இப்படி அவசரமா கல்யாணம் நடந்தது னு தெரிஞ்சுக்கலாமா?? “ என்று கேட்க

ஜானகி இப்பயே இவ்வளவு அதிர்ச்சியை அவருக்கு கொடுத்தாச்சு... இன்னும் பாரதி, கல்யாணத்துக்கு முன்னரே தாயானதையும் அதுவும் ஒரு வாடகைத் தாயாக ஆரம்பித்த உண்மையான காரணத்தை சொன்னால் அது இதை விட பெரிய அதிர்ச்சியாக இருக்கும் அவருக்கு...

அதனால இப்போதைக்கு சொல்ல வேண்டாம்..குழந்தை பிறந்ததும் அவரும் குழந்தையை கண்டு கொஞ்சம் நாள் போனதும் சொல்லிக்கலாம்... “ என்று முடிவு செய்தவர்

“இப்போதைக்கு என்னால அதை சொல்ல முடியலை னா... கண்டிப்பா சீக்கிரம் அதுக்கான காரணத்தை சொல்லிடறோம்.. இப்ப எதுவும் கேட்காதிங்க...பாரதி கிட்டயும் இதை பத்தி எதுவும் கேட்டுடாதிங்க.. “ என்று கை எடுத்து கும்பிட அதுக்கு மேல அதை அவர் துருவி கேட்க வில்லை...

“காரணம் என்ன இருந்தா என்ன... அதான் எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சே.. இனிமேல் மாற்றவா முடியும்?? .. “என்று நொந்தவர் சரி என்று தலை அசைத்தார்...

டாக்டரும் அவரை புகழ்ந்து

“இனிமேல் உங்களுக்கு உடலில் எந்த குறையும் இல்லை ஐயா.. நீங்க எல்லா கவலையும் மறந்து உங்க பேர புள்ளைகளை கொஞ்சி அவங்களோட விளையாடுங்க... ப்ரியா இருங்க.. “ என்று சிரிக்க தர்மலிங்கமும் சரி என்று தலை ஆட்டினார் தன் வறுத்தத்தை மறைத்து கொண்டு...

பின் பாரதி தனியாக இருப்பதால் சீக்கிரம் போக வேண்டும் என்று அனைவரையும் வளைகாப்பிற்கு அழைத்து விட்டு அவசரமாக சென்னைக்கு கிளம்பினர் ஆதியும் ஜானகியும்...

ஜானகி, கமலா மற்றும் கண்ணனுக்கும் நன்றி சொல்லி அவர்களையும் விழாவிற்கு அழைத்து விட்டு சென்றார்.....

அதன் பின் வீட்டிற்கு வந்த தர்மலிங்கம் நடந்தவைகளை சொல்ல, அனைவரும் முதலில் அதிர்ந்தாலும் பின் ஆதிதான் மாப்பிள்ளை என்று தெரிய மகிழ்ந்து போயினர்... ஆனால் இந்த பொண்ணு வீடல சொல்லாம இவ்வளவும் செஞ்சு இருக்கே.. “ என்று வருத்தம் எல்லார் மனதிலும் இருந்தாலும் யாரும் அதை வெளிகாட்டி கொள்ளவில்லை...

தர்மலிங்கமும் பாரதியிடம் யாரும் எதையும் மறந்தும் சொல்லி விடக்கூடாது..என்று எச்சரித்தார்...

பாரத் தான் துள்ளி குதித்தான்... தான் நினைத்த மாதிரியே தன் ஹீரோவே தன் வீட்டு மாப்பிள்ளையாக வந்ததை நினைத்து..

காரில் ஏறியதும் ஆதி தன் அன்னையின் கையை பிடித்து கொண்டு

“சாரி மா ... என்னால தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்... இதுவரை நீங்க யார்கிட்டயும் எதயும் இது மாதிரி இறங்கி வந்து கேட்டதில்லை... மாமா கிட்ட இப்படி கெஞ்சி கேட்கற மாதிரி ஆகிடுச்சே.. “ என்றான் வருத்தத்துடன்...

அவரும் சிரித்துகொண்டே

“இதுல என்ன இருக்கு கண்ணா... என் பையன் வாழ்வு சந்தோஷமா இருக்கனும்.. அதுக்காக என்ன வேணாலும் செய்வேன்... என் அண்ணா கிட்டதான கேட்டேன்.. இது ல என்ன இருக்கு.. “ என்று சிரிக்க ஆதி அவரை அணைத்து கொண்டு அவரை முத்தமிட்டான்...

“Thank you so much... மா.. உங்களுக்கு மகனா பிறக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்... I’m so lucky..” என்று சிரித்தான்...

நடந்த கதையை பாரதியிடம் சொல்லி முடித்த ஜானகி

“என்ன மறுமகளே.. எப்படி இருந்தது எங்களோட சர்ப்ரைஸ் கிப்ட்??...ஆதிதான் உன்கிட்ட முன்னாடியே சொல்ல வேண்டாம்... சர்ப்ரைஸ் ஆ இருக்கட்டும் என்று சொல்லி என்னை தடுத்து விட்டான்.. “ என்று சிரிக்க, அவளும் கன்னத்தில் நீர் வழிய அவரை கட்டி கொண்டு

“Thank you so much...அத்தை.. உங்களுக்கு மறுமகளா வர நான் கொடுத்து வச்சிருக்கனும்... I’m so lucky..” என்று சிரித்தாள் பாரதி...

“ஆகா... எப்படி புருஷனும் பொண்டாட்டியும் சொல்லி வச்ச மாதிரி ஒரே டயலாக்கை சொல்றீங்க.. உங்க ரெண்டு பேரையும் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கனும்... நான் தான் soooooooo lucky “ என்று மனம் நிறைந்து சிரித்தார் ஜானகி…

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!