என் மடியில் பூத்த மலரே-34



அத்தியாயம்-34 

பத்தாவது மாதம்:

ன்று காலை விடியும் பொழுதே ஜானகியின் இல்லத்தில் இருந்த அனைவர் முகத்திலும் ஒரு வித பரபரப்பு இருந்தது....அன்று பாரதிக்கு டெலிவரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்...ஏதோ ஒரு காரணத்தை சொல்லி பாரதிக்கு சிசேரியன் என்று சொல்லவும் தர்மலிங்கமும் லட்சுமியும் இன்று காலையில் விமானத்தில் வந்துவிட்டனர்...

சுசிலா அவருக்கு இன்னோரு ஆபரேசன் இருக்க, முன்னரே கிளம்பி சென்றிருக்க, மற்ற அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல தயாராகினர்... வீட்டில் இருந்த பூஜை அறையில் அந்த முருகனை வணங்கி பின் கிளம்பினர்.. ஆதியே காரை ஓட்ட, பாரதி அவன் அருகில் அமர, மற்றவர்கள் பின்னால் அமர்ந்தனர்..

கார் கொஞ்ச தூரம் சென்றதும் பாரதிக்கு ஒரு வித பயம் மற்றும் பதட்டமாக இருந்தது... ஆதியையே ஏக்கமாக பார்த்து வந்தாள்....அவன் எதுவும் ஆறுதலாக சொல்லுவான் என்று நினைத்து.. ஆனால் அவனோ இவள் பக்கமே திரும்பவில்லை.. சாலையையே நேராக பார்த்து காரை ஓட்டி கொண்டிருந்தான்...

கொஞ்ச நேரம் அவன் முகத்தையே ஏக்கமாக பார்த்தவள் பின் வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்... மனதுக்குள் கந்த சஷ்டி கவசத்தை சொல்லிக் கொண்டாள்...

ஆதிக்கும் அவள் அவனை பார்த்தது தெரிந்தது.. அவனுக்குமே உள்ளே பயமாக இருந்தது.. ஆனாலும் அதை வெளி காட்டி கொள்ளாமல் ஒரு வித இறுக்கத்துடன் இருந்தான்...

இன்று அவன் பிரின்ஸஸ் இந்த உலகத்திற்கு வரப்போறா... இத்தனை நாள் தொட்டு தடவியவளை கையில் ஏந்த போகிறான்.. என்று நினைக்கையில் சந்தோஷமாக இருந்தாலும் ஏதோ ஒரு மூலையில் சின்ன பயம் இருந்தது...

நிறைய திரைப்படங்களில் பார்த்த மாதிரி எதுவும் தப்பாகிடுமோ??.. என்று அவனுக்குள் கலக்கமாக இருந்தது.. அவள் வேற அவனையே ஏக்கமாக பார்க்க, அவனுக்கு இன்னும் கலங்கியது.. அவளை கண்டால் தன்னை மீறி ஏதாவது உளறிவிடுவேன் என்றே அவள் பக்கம் திரும்பாமல் வந்தான் ஆதி....

மருத்துவமனை அடையவும், ஜானகி அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல, ஆதி அங்கு காரை விட்டான்.. அனைவரும் அந்த முருகனை தரிசித்து நல்ல படியா பாரதிக்கு பிரசவம் ஆக வேண்டும் என்று அந்த வேலனை வேண்டிகொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்...

அங்கு இருந்த நர்ஸ் அவர்களை வரவேற்று அமர வைக்க, அடுத்த அரை மணியில் பாரதியின் பிரசவமாக இருந்தது...

சுசிலா காலையிலயே வச்சுக்கலாம் என்று சொன்னதுக்கு ஜானகி மறுத்து நல்ல நாள், நேரம் பார்த்து அந்த முருகன் பிறந்த விசாக நட்சத்திரத்தில தான் குழந்தை பிறக்கனும் என்று சுசிலாவிடம் திட்டு வாங்கி அடம் பிடித்து இந்த நாளையும் நேரத்தையும் குறித்து கொடுத்தார்...

சுசிலாவும் வேற வழி இல்லாமல் ஜானகி சொன்ன நேரத்திலயே பிக்ஷ் பண்ணினார் ஜானகியை திட்டிகொண்டே...

சிறிது நேரம் கழித்து வந்த நர்ஸ், இப்பொழுது பாரதியை உள்ளே அழைக்க, அவளும் எழுந்தாள்.. ஜானகி, தர்மலிங்கம், லட்சுமி அனைவரும் அவள் அருகில் வந்து அவளுக்கு தைரியம் சொல்ல, ஆதி மட்டும் அவள் அருகில் வரவில்லை.... தள்ளி நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தான்...

பாரதியும் திரும்பி பார்க்க அவன் வேறு பக்கம் தன் பார்வையை திருப்பி கொண்டான்..

அனைவரிடமும் விடை பெற்று ஆதியை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே முன்னே சென்றாள் பாரதி... ஆதிக்குமே கஷ்டமாக இருந்தது.. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல அவன் கைகள் துடித்தன.. ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது அவனுக்கு...

அந்த பிரசவ அறையின் உள்ளே கால் எடுத்து வைத்தவள் என்ன நினைத்தாளோ, திரும்பி

“ஆதி... “ என்று அழைத்தவாறு அவனை நோக்கி வேகமாக ஓடி வந்து அவனை இறுக்கி கட்டி கொண்டாள் கண்ணில் நீருடன்....

அவ்வளவுதான்.. ஆதியும் தனக்குள் போட்டிருந்த விலங்கை உடைத்து அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.... சிறிது நேரம் அவன் மார்பில் முகம் புதைத்து விசும்ப, அவனோ அவள் முதுகை ஆறுதலாக தடவி கொடுத்தான்... சிறிது நேரத்தில் தன்னை சமாளித்து கொண்டவன்

“ஹே.. பட்டிக்காடு.. எல்லாரும் பார்க்கிறாங்க பார்... எதுவும் ஆகாது.. சுசிலா மா தான பார்க்கிறாங்க... தைரியமா போய்ட்டு வா...நான் இருக்கிறேன்.. “என்று அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் கண்ணீரை துடைத்து அவள் முன் உச்சியில் மெல்ல முத்தமிட்டான்....

அவன் முத்தத்தில் பாரதிக்கு சிலிர்த்தது.... இதுக்காகத்தான்.. அவனின் இந்த முத்ததிற்காக எத்தனை நாள் ஏங்கி இருக்கிறாள்.. கடைசியில் அது கிடைத்து விட்டது...

பிரசவத்தில் தனக்கு எதுவும் ஆகி விட்டால், கடைசி வரைக்கும் அவன் மனம் தெரியாமல் போகிடும்.. அவன் கிட்ட இருந்து ஒரு சின்ன முத்தமாவது தனக்கு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தான் அவனை காலையில் இருந்து ஏக்கத்துடன் பார்த்து வந்தாள்...

அவள் ஏங்கியது கிடைத்து விட, மனதில் இப்பொழுது புது தெம்பு வந்தது... அவளின் இதழ்கள் மெல்ல விரிந்து முகத்தில் புன்னகை அரும்பியது....

அவளின் அந்த புன்னகையில் அப்படியே மயங்கி நின்றான் சில விநாடிகள்...

“கேடி.. ஒரு நிமிடத்துல என்னை எப்படி பயமுறுத்திட்ட... , முன்னாடியே இப்படி இளிச்சா என்ன.. “ என்று அவள் தலையில் செல்லமாக அவன் தலையால் முட்டி மெல்ல அணைத்து கொண்டான்... அவன் அணைப்பு இன்னும் சுகமாக இருக்க, இப்பொழுது கொஞ்சம் இருந்த கலக்கமும் மறைந்து முகம் தாமரையாக மலர்ந்தது அவளுக்கு..

“ரொம்ப தேங்க்ஷ் மாமா... “ என்று கண்ணடித்தாள் சிரித்தவாறு...

“கேடி... “ என்ரு அவனும் சிரித்தவாறு அவளை அணைத்தவாறே மெல்ல அவள் கூட நடந்து வந்தான...

அந்த அறை வாசலை அடைந்ததும் இப்பொழுது பாரதி திரும்பி அனைவரையும் பார்த்து தலையை ஆட்டி மெல்லிய வெக்கத்துடன் சிரித்து கொண்டே பிரசவ அறைக்குள் சென்றாள்... பாரதியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கண்டு அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது...

தர்மலிங்கம் லட்சுமியுமே ரொம்ப மனம் நிறைந்து இருந்தது... தன் மகளும் மறுமகனும் இப்படி அன்னியோன்யமாக இருக்கிறாங்களே என்று...

லட்சுமி அதையே வாய் விட்டு சொன்னார்..

“பார்த்தீங்களா அண்ணி இந்த பொண்ணை.. அப்பா அப்பானு அவ அப்பா பின்னாடியே சுத்திகிட்டு இருந்தவ, பிரசவத்துக்கு போறப்போ அவ புருசனைத்தான ஓடி வந்து கட்டிகிட்டா... அவ புருஷன்தான் பெருசா போய்ட்டார்... நாமளாம் இரண்டாவதா ஆயிட்டோம்... இந்த பொண்ணுங்களையே நம்ப முடியாதுப்பா... “ என்று சிரித்துகொண்டே குறை பட்டார்...

தர்மலிங்கமும் சிரித்து கொண்டே

“நீ மட்டும் என்னவாம்... உன் பிரசவத்திற்கு உன் அப்பா அம்மா அவ்வளவு தூரம் கூப்பிட்டப்போ என்னை விட்டு பி ரிய முடியாதுனு நீ நம்ப வீட்லயே தங்கிடலை அப்பயே... உன் பொண்ணு மட்டும் எப்படி இருப்பாளாம்?? “என்று சிரித்தார்...

அதை கேட்டு லட்சுமியின் முகம் சிவந்தது..

“சீ போங்க.. மாப்பிள்ளை முன்னாடி என்ன பேசறதுனு விவஸ்தை இல்ல... “ என்று வெக்கபட்டு சிரித்தார்...

ஆதிக்கு அவர்களை பார்த்து வியப்பாக இருந்தது... திருமணம் ஆகி இவ்வளவு நாள் ஆகியும், 4 குழந்தைங்க பிறந்தும் எவ்வளவு ஒத்துமையா இருக்காங்க... ஏன் என் அம்மாவும் அப்படித்தானெ தன் அப்பா மீது எவ்வளவு உயிரா இருந்தாங்க னு சொல்லவா வேணும்.. அவர் இறந்த பிறகு பெத்த பையனை கூட மறந்து அவர் கணவரை நினைத்து கொண்டு நடை பிணமா இருந்தாரே..

“நாங்களும் அப்படிதான் இருக்கணும்..அந்த பெரியவர்களை போல ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கையை வாழனும் “என்று நினைத்தவனுக்கு சற்று முன் பாரதி ஓடிவந்து அவனை கட்டி கொண்டது நினைவு வர அதோடு லட்சுமி அவளை பற்றி சொல்லியதும் நினைவு வர, அவனுக்கு கர்வமாக இrருந்தது...

“என் மனைவி என்னைத்தான் முதலாவதாக நினைக்கிறாள்.. அவள் பெற்றோர்களை விட நான் தான் ஃபர்ஸ்ட்..அவள் மனதில் நான்தான் இருக்கிறேன்.. ” என்று எண்ணியவனுக்கு இந்த உலகத்தையே வென்று விட்டதை போல இருந்தது...

தன் மனைவியின் மனதில் இடம் பிடித்து அவள் பெற்றோர்களை விட கணவன் தான் பெரிது என்று எண்ண வைப்பது அந்த கணவனுக்கு எவ்வளவு பெரிய வெற்றி, சந்தோஷம்.... அதை , அந்த மகிழ்ச்சியை இப்பொழுது ஆதி அனுபவித்தான் முகத்தில் புன்னகையுடன்...

தன் மனைவியின் மனதை வென்று விட்ட மகிழ்ச்சியில் தன் இளவரசியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்...

பாரதி உள்ளே சென்றதும் அனைவரும் மீண்டும் கொஞ்ச பதட்டத்துடன் அந்த அறை வாயிலயே பார்த்து இருக்க, சிறிது நேரத்தில் சுசிலா தன் பேத்தியை கையில் ஏந்தி இருந்தார்.... அந்த சிசுவை வெளியில் எடுத்ததும் கையில் தூக்கியவருக்கு ஆதியை கையில் சுமந்த பொழுது எப்படி உடல் சிலிர்த்ததோ அதே மாதிரி இப்பவும் அச்சு பிசகாமல் உடல் சிலிர்த்து உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சி பொங்கியது....

அதே புன்னகையுடன் அந்த குழந்தையை உயர தூக்கி

“Welcome to our home dear Princess… “ என்று அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட்டு சிரித்தார்... பின் அருகில் இருந்த சிஸ்டரிடம் கொடுத்து விட்டு தன் வேலையை தொடர்ந்தார் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன்... அந்த நர்ஸ்ம் குழந்தையை சுத்தம் பண்ணி, வெளியில் எடுத்து வந்து ,

“Congratulations ஆதி சார்... உங்க இளவரசி இந்த உலகத்துக்கு வந்துட்டா... “ என்று அவனை நோக்கி வர, அவனோ மகிழ்ச்சியின் உச்ச கட்டத்திற்கு சென்றவன் அவசரமாக “ Thank you so much .. சிஸ்டர்... முதல்ல அம்மா கிட்ட கொடுங்க..அவங்கதான் இவளுக்காக ரொம்ப கஷ்டபட்டிருக்காங்க.. “என்றான்..

அந்த நர்ஸ்ம் சிரித்துகொண்டே ஜானகியிடம் சென்று

“இந்தாங்கம்மா உங்க பேத்தி... “ என்று கொடுக்க, ஜானகி லட்சுமியிடம் தர்மலிங்கத்திடமும், நீங்களும் வாங்குங்கண்ணா அண்ணி என்று அவர்களையும் சேர்த்து மூன்று பேருமே இணைந்து அந்த குழந்தையை கையில் வாங்கினர்...

அந்த குழந்தையை பார்க்க, ஜானகிக்கு கண்ணில் நீர் வந்தது.. அப்படியே ஆதியை ஜெராக்ஷ் எடுத்தமாதிரி இருந்தாள்... மனம் கொள்ளா பூரிப்பு ஜானகிக்கு ..

“என் ராமே எனக்கு பேத்தியா வந்து பிறந்திருக்கார்..” என்று சந்தோச பட்டார்.. பின் மற்றவர்களும் அந்த குழந்தையை பார்த்த பிறகு ஆதியிடம் கொடுத்தார் ஜானகி ...

கைகள் மெல்ல நடுங்க, பிறந்த குழந்தையின் தலையை எப்படி பிடிப்பது, உடலை எப்படி வைப்பது என்ற எந்த தயக்கமும் இல்லாமல் இலாவகமாக கைகளில் அள்ளிக்கொண்டான் அவன் இளவரசியை....

அவன் குழந்தையை வாங்கியதும் அதை இலாவகமாக பிடித்திருப்பதையும் கண்டவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்... மஹாவே குழந்தையை தூக்க பயந்ததும் அதை விட ஈஸ்வர் குழந்தையை கண்டு பத்தடி தள்ளி நின்றதயும் கண்டவர்களுக்கு தன் சின்ன மறுமகன் எந்த தயக்கமும் இல்லாமல் ரொம்ப நாள் அந்த குழந்தையை தூக்கியதை போல அழகாக வாங்கியது கண்டு வாயில் விரலை வைத்தனர்...

ஆதிக்கோ தன் மகளை கையில் ஏந்தியதும் இனம் புரியாத பரவசம்... உடலெல்லாம் புதுசுகம் பரவியது... மெல்ல குனிந்து பார்த்தான்.. ரோஜா குவியலாக அதே மென்மையாக சிவந்து அப்படியே அவனையே பார்ப்பதை போல இருந்தாள்...

ஒரு கையால அவன் மார்போடு அணைத்து பிடித்து கொண்டு மறுகையால் மெல்ல அதன் கன்னத்தை தொட்டான்.. இன்னும் அதிர்வலைகள் அவன் உள்ளே...

மெல்ல அவள் அருகில் குனிந்து

“Welcome to this world my dear sweet princess… “ என்று குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான் மெல்ல சிரித்துகொண்டே..

அவனின் குரலை கேட்டதும் அதுவரை தன் கண்களை மூடிக்கொண்டிருந்த அவன் இளவரசி மெல்ல தன் கண்களை சுறுக்கி உடலை நெலித்து மெல்ல அசைய ஆரம்பித்தாள்.. பின் மீண்டும் கண்களை சுறுக்கி சோம்பல் முறித்து விழிப்பவளை போல தன் இமைகளை மெல்ல திறந்தாள் அந்த குட்டி தேவதை...

அதற்குள் மற்றவர்களும் ஆதியின் அருகில் வந்திருக்க, அந்த தேவதையின் கண் விழிக்கும் அழகில் அனைவரும் மயங்கி நின்றனர்...

தன் இமைகளை பிரித்தவள் முதல் முதலாக தன் தந்தையை கண்டு அவள் புன்னகைத்ததை போல இருந்தது... ஆதிக்கோ எட்டிக்குதித்து அந்த வானத்தையே தொட்டு விட்டு வந்ததை போல இருந்தது அந்த அழகை கண்டு...

அவன் மகளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்.. பின் அந்த சிஸ்டர் வந்து

“சார்.. உங்க வொய்ப்பை அறைக்கு மாற்றியாச்சு.. நீங்க போய் பாருங்க.. “ என்று சொல்ல,

ஜானகியும்

“கண்ணா... நீ போய் முதல்ல பார்.. நாங்க அப்புறம் வர்ரோம்.. “என்று குழந்தையை வாங்கி கொண்டார்...

ஆதியும் அவரிடம் கொடுத்துவிட்டு மெல்ல அந்த அறைக்குள் சென்றான்....

மயக்க மருந்தின் தாக்கம் மறைந்து மெல்ல கண் விழித்தவள் எதிரில் தன் கணவனை கண்டு மெல்ல புன்னகைத்தாள்...

அவனும் சிரித்து கொண்டே அவள் அருகில் சென்றான்... பின் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன்

“Thank you so much..!!! thanks for everything.. “ என்று உணர்ச்சி பொங்க முறுவலித்தான்...

அவனின் அந்த முத்தம் தந்த ஸ்பரிசத்தில் அவள் உடல் சிலிர்த்தது,… அவளுக்கும் இந்த வானத்தையே தன் வசப்படுத்தியதை போல இருந்தது...

“இது போதும்.. இந்த ஜென்மத்திற்கு இந்த ஒரு முத்தம் போதும்..” என்று பரவசமடைந்தாள்...தன் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை விட தன் கணவனின் முத்தத்திற்கு பூரித்து நின்றாள் அந்த பேதை கன்னித்தாய்...

பிறகு தான் தன் குழந்தையின் நினைவு வந்தது பாரதிக்கு...

“எப்படி இருக்கா உங்க இளவரசி ?? இளவரசிதான?? “ என்றாள் அவனை பார்த்து குறும்பாக சிரித்தவாறு...

அவளின் அந்த குறும்பு சிரிப்பையே ரசித்தவன்

“ஆமாம்.. “ என்று தன் கண்களால் பதில் அளித்தான் முகத்தில் ஒரு கர்வமான புன்னகையுடன்... அவனின் அந்த புன்னகையும் முகத்தில் தெரிந்த கர்வத்தையும் கண்டவளுக்கு இமைக்க மறந்து அவனையே பார்த்தாள்..

இருவரும் எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்து ரசித்து கொண்டு இருக்க, அவங்க மோன நிலையை கழைக்க, மற்ற அனைவரும் உள்ளே வந்தனர்... 




ஜானகி கையில் குழந்தையை சுமந்து வந்து பாரதியின் அருகில் வைத்து

“பாரதி மா... பார் என் பேத்திய.. அப்படியே உன் மாமா மாதிரியும் உன் புருஷன் மாதிரியும் அச்சு அசலா இருக்கா.... “ என்று அவள் அருகில் காண்பித்தார்...அவர் பின்னால் வந்த சுசிலாவும்

“என்ன மறுமகளே... 24 மணி நேரமும் எங்க பையனையே சைட் அடிச்சிரிப்ப போல இருக்கே.!!! ஆறு வித்தியாசம் என்ன ஒரு வித்தியாசம் கூட கண்டு பிடிக்க முடியாது போல இருக்கு.. அப்படியே குட்டி ஆதியே மீண்டும் என் கைல வந்த மாதிரி இருக்கா... ரொம்ப தேங்க்ஷ் டா... “ என்று குனிந்து பாரதியின் நெற்றியில் முத்த மிட்டார் சுசிலா...

அவர் சொன்னதை கேட்டு கன்னம் சிவந்தாள் பாரதி அந்த நிலையிலும்...

பின் அனைவரும் அவளை கொஞ்ச, தர்மலிங்கம் வந்து பாரதியின் கையை பிடித்து கொண்டார்.அவருக்கும் பெருமையாக இருந்தது.. தன் கையில் குழந்தையாக இருந்தவள் இப்போ அவளே ஒரு குழந்தைக்கு தாயாக ஆகி விட்டாளே..” எனறு .. பாரதியும் அவர் கையை பிடித்து கொண்டு உணர்ச்சி வசப்பட வேண்டாம்.. என்று தலைய ஆட்டினாள் சிரித்தவாறு ...

சிறிது நேரத்தில் ஒரு வயது முதிர்ந்த நர்ஸ் உள்ளே வந்து

“சரி .. எல்லாரும் கொஞ்சம் வெளில இருங்க.. குழநதைக்கு பால் கொடுக்கணும்.. “என்று சொல்ல லட்சுமி மட்டும் அங்கு இருக்க அனைவரும் வெளியில் சென்றனர்..

சிசேரியன் பண்ணி இருப்பதால் எழுந்து உட்கார முடியாமல் தடுமாற அந்த நர்ஸ் அவளை சாய்த்து படுக்க வைத்து பால் ஊட்டும் முறையை விளக்க, பாரதியோ கூச்சத்தில் நெளிந்தாள்..

“என்ன மா.. கல்யாணம் ஆகி புருஷன் கூட ஒன்னா வாழ்ந்து ஒரு புள்ளையும் பெத்துட்ட..இன்னும். இப்படி கூச்சப்படற.. “ என்று சிரித்தார்... அந்த நர்ஸ் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர்.. அவருக்கு பாரதி ஒரு கன்னித்தாய் என்பது தெரியாது... அவர் அவளை தொட, பாரதி முகத்தை சுளித்து நெளிய, அதை கண்ட லட்சுமி,

“நீங்க போங்க சிஸ்டர்.. நான் பார்த்துக்கறேன்.. “என்று சொல்லி அவரை வெளியேற்றி பின் தன் மகளுக்கு உதவ, அவர் சொல்லி கொடுத்த மாதிரி தன் மகளை நெஞ்சோடு அணைக்க, அவள் உள்ளே அப்படி ஒரு பரவசம்.. தாய்மைக்கே உரித்தான அந்த தாய்ப்பாசம் பொங்கி வழிந்தது அவள் உள்ளே..

தாயின் அணைப்பை உணர்ந்த அந்த சிசு தன் பசியாற இடம் தேட திறந்திருந்த அவளின் சின்னஞ்சிறிய செப்பு வாயை கண்டதும் பாரதிக்கு அவள் தங்கள் மரத்தில் கூட்டில் பார்த்த அந்த குருவி குஞ்சு நினைவு வர, இன்னும் பரவசமாகி அதற்கு பாலூட்டினாள்...

தன் கணவனின் ஸ்பரிசத்தை உணராத அந்த தாய்க்கு தன் மகளின் முதல் ஸ்பரிசம் உணர்ந்து சொர்க்கத்திற்கே சென்றதை போல இருந்தது...தன் மகளின் ஒவ்வொரு அசைவும் அவளுக்கு புது சுகமாக இருந்தது...

பால் குடிக்கும் தன் மகளின் தலையையே ஆசையாக தடவினாள் பாரதி.. பின் அவளின் பட்டுமேனியை மெல்ல தொட்டு பார்த்தாள்.. ஒவ்வொரு தீண்டலும் பாரதிக்குள் புது சுகமாய் பரவியது...

லட்சுமியும், எதுக்கெடுத்தாலும் வாயடிக்கும் விளையாட்டுத் தனமாக இருந்த தன் செல்ல மகள் இப்படி அடங்கி ஒரு குழந்தைக்கு தாயாகி மலர்ந்து நிற்பதை கண்டு அவருக்கும் பெருமையாக இருந்தது. மெல்ல அவள் தலையை தடவி விட்டார் வாஞ்சையுடன்... அவளும் தன் அன்னையின் இடுப்பை கட்டிக்கொண்டு சிரித்தாள் பாரதி..

அறைக்கு வெளியில் வந்த ஆதி தன் அலைபேசியை எடுத்து அனைவருக்கும் தன் மகள் பிறந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டான்.. நிகிலனும் வசியும் அவனை அழைத்து வாழ்த்து சொல்லினர்..

பின் மேனஜர் சுந்தரத்தை அழைத்து தன் அனைத்து அலுவலகங்களிலும் உள்ள எல்லாருக்கும் முன்னரே ஏற்பாது செய்திருந்த மாதிரி பெரிய ஸ்வீட் பாக்சை கொடுக்க சொன்னான்... அவருக்கும் ரொம்ப சந்தோஷமாகி அவன் சொன்ன மாதிரியே இனிப்பை வழங்கினார்...

அன்று மாலையே அனைவரும் வந்து விட்டனர் அந்த குட்டி தேவதையை காண...

எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி நிலவியது அந்த தேவதையை பார்த்து...

நானகு நாட்களுக்கு பிறகு பாரதியை டிஸ்சார்ஜ் செய்தனர்... வீட்டிற்கு வந்ததும் ஆதியையும் பாரதி மற்றும் தன் பேத்தி மூவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தார் ஜானகி...பின் பூஜை அறைக்கு சென்று அந்த முருகனை அனைவரும் வணங்கி நன்றி சொல்லினர்...

பாரதி மாடி ஏற முடியாது என்பதால் ஜானகி அறையிலயே தங்க வைத்தார் ஜானகி... லட்சுமியே பாரதிக்கு எல்லாம் பார்த்து கொண்டார்.

கிராமத்து வழக்கப்படி சில பத்திய உணவு வகைகளும் ஆயில் மசாஜும் செய்தார் தன் மகளுக்கும் பேத்திக்கும்... ஐந்தாவது நாள் ஆதி குழந்தையை தோட்டத்தில் வைத்திருக்க பாரதி மட்டும் அறையில் இருக்க தர்மலிங்கமும் லட்சுமியும் உள்ளே வந்தனர்...

தர்மலிங்கம் கிளம்புவதாக சொல்ல,

“எதுககுப்பா அதுக்குள்ள கிளம்பறீங்க.. இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம் இல்ல... “ என்று சிணுங்கினாள் பாரதி

“இல்லடா.. அங்க வேல இருக்கு.. அதான் அம்மா இருந்து உன்னையும் பாப்பாவையும் பாத்துக்கு வா.. “என்று சிரித்தவர் எதையோ கேட்க நினைத்து பின் தயங்கி நிறுத்தி கொண்டார்... தன் தந்தையின் முகத்தில் வந்து வந்து போகும் அந்த மாற்றத்தை கண்டு கொண்ட பாரதி

“என்னப்பா.. என்கிட்ட எதுவும் கேட்கனுமா?? .. ஏதோ தயங்கி நிக்கிற மாதிரி இருக்கு.. எதுனாலும் சொல்லுங்கப்பா.. நான் உங்க பொண்ணுதான்.. “என்றாள் சிரித்தவாறு...

அவள் அருகில் வந்தவர் அவள் கையை எடுத்து இரண்டு கண்ணிலும் ஒற்றி கொண்டார்...

“எப்படி மா இப்படி ஒரு காரியம் பண்ண உனக்கு துணிச்சல் வந்தது?? இந்த அப்பாவுக்காக எந்த பொண்ணும் செய்ய துணியாத காரியத்தை நீ பண்ணி இருக்கியே... எப்படி டா உன்னால மட்டும் அப்படி முடிந்தது... என் குல சாமி நீ.. உன்னை பொண்ணா பெத்ததுக்கு நான் ரொம்ப பெருமை படறேன்.. “ என்று தழுதழுத்தார்...

“அப்பா... உங்களுக்கு..?? “ என்று இழுத்தாள் பாரதி

“ஹ்ம்ம்ம் எல்லாம் தெரியும் மா.. ஜானகி நேற்று தான் எல்லாம் சொன்னா... நான் வருத்தப் படக்கூடாதுனு இப்படி ஒரு தியாகத்தை பண்ணி இருக்கியே.. உன் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதா முடிஞ்சது..

அப்படி நடக்காமல் இருந்திருந்தால்?? ... ,மாப்பிள்ளை உன்னை ஏத்துக்காமல் இருந்திருந்தால் உன் எதிர் காலம் என்னாகும்னு கொஞ்சமாவது யோசிச்சியா??

நான் வாழ்ந்து முடிச்சவன்.. என் உயிரை காப்பாத்துனதுக்கு நன்றி கடனா உன் எதிர்காலத்தை அழிச்சுக்க இருந்தியே... நான் என்ன சொல்ல.?? இப்படி ஒரு காரியத்தை யாருக்கும் தெரியாம பண்ணி இருக்கியே... “ என்று மீண்டும் தழுதழுத்தார் கண்ணில் நீருடன்...

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பா... அதான் நீங்களே சொன்னீங்களே.. நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராதுனு.. நாம யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்லை பா... அதனால்தான் இதுக்கு துணிஞ்சு சம்மதிச்சேன்..

அதோட ஜானகி அத்தைக்கு உதவனும்னு தோணிச்சு... அதுவும் ஒரு காரணம் தான்.. இதுக்காக என்னை தியாகி அது இது னு எல்லாம் சொல்லாதிங்க...

அத்தை எந்த சுயநலமும் இல்லாமல் நமக்கு உதவினாங்க.. அவங்க கஷ்ட படற நிலையில் நம்மலால் முடிஞ்ச உதவினுதான் இதை செய்தேன்.. உங்ககிட்ட சொன்னா நீங்க ஒத்துக்க மாட்டீங்கனு தெரியும்..

அப்புறம் உங்களை மீறி எனக்கு செய்யவும் முடியாது... அதோட உங்க உடல்நிலையும் அப்ப இந்த செய்திய ஏத்துக்குமானு தெரியலை... அதனால தான் மறைக்க வேண்டியதா ஆயிருச்சு.. நீங்க என்னை மன்னீச்சிடுங்க பா..

அந்த முருகன் என்னை கைவிட மாட்டானு தெரிஞ்சுதான் இப்படி துணிஞ்சேன்.. அதோட நீங்க இருக்கீங்க இல்ல.. அந்த தைரியம் போதும் பா.. வாழ்க்கையில எதயும் தாங்குவேன்...

உங்க மாப்பிள்ளை ஏற்றுக்கலைனாலும் உங்க மகளா உங்க முகத்தை பார்த்து கிட்டே இருந்திருப்பேன்.. “ என்று கண்கலங்கினாள் பாரதி...

“அடடா... அப்பாவும் பொண்ணும் சந்தோஷமா பேசி கிட்டிருப்பீங்கனு விட்டுட்டு போனா இப்படி அழுது வடிஞ்சுகிட்டு இருக்கீங்க... பாரதி மா நீ பச்ச உடம்பு.. எதுவும் பீல் பண்ணக் கூடாது.. உடம்புக்கு ஒத்துக்காது..பீவர் வரும்.. கண்ணை துடைச்சுகிட்டு சிரி பார்க்கலாம்... “ என்று அதட்டியாவாறு உள்ளே வந்தார் ஜானகி...

அதை கண்டதும் பாரதி அவள் முன்பு நினைத்த அவள் மனம் வாடினால் அவருக்கு மூக்கு வேர்க்குமே என்று சொல்லியது நினைவு வர, அதே மாதிரியே இப்பவும் அவள் கலங்க ஆரம்பித்ததும் ஜானகி வந்து நிக்க, அதை நினைத்து சிரித்து கொண்டாள் பாரதி..

“ஹ்ம்ம் இப்படி சிரிச்சா எவ்வளவு நல்லா இருக்கு.. அண்ணா நீங்களும் தான்.. முதல்ல கண்ணை துடைங்க... உங்க கிட்ட எதுவும் மறைக்க கூடாதுனு தான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. இப்பதான் என் மனசுல இருந்த பாரம் எல்லாம் இறங்கிடுச்சு..

என் மறுமகள ராணி மாதிரி பார்த்துக்கறது எங்க பொறுப்பு... நீங்க எதுவும் கண் கலங்க கூடாது.. “ என்று அவரையும் அதட்டினார் ஜானகி...

“சரிமா... நீயும் உன் மறுமக மாதிரி என்னை மிரட்ட ஆரம்பிச்சுட்ட... அடுத்து என் பேத்தியும் வர போற இந்த தாத்தாவ மிரட்டறதுக்கு... “ என்று சிரித்தார்

“சரி பாப்பா... நீ உடம்பை பார்த்துக்க.. நான் போய்ட்டு அடுத்த மாசம் வர்ரேன்.. “என்று விடை பெற்று சென்றார்...ஆதி வழக்கம் போல அவரை வழி அனுப்பி வைத்தான்..

தன் மகள் வந்த பிறகு ஆதியின் வாழ்க்கை வண்ண மயமாக ஆனது.. அவன் இளவரசியை , அந்த குட்டி தேவதையை பார்க்க பார்க்க திகட்ட வில்லை அவனுக்கு... அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் உள்ளுக்குள் சிலிர்த்து போனான்..

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக கீழ வந்து தன் மகளை தூக்கி கொஞ்சுவான்... அதன் பிறகே அந்த நாளை துவக்குவான்... அலுவலகம் கிளம்பி செல்லும் பொழுதும் தவறாமல் அவள் இருக்கும் அறைக்கு வந்து அவளை தூக்கி கொஞ்சி முத்தமிட்டு செல்வான்...

முதல் முறை அவன் தன் மகளுக்கு முத்தமிட, அருகில் நின்று கொண்டிருந்த பாரதி ஏக்கமாக பார்த்தாள் அவனையே... என்ன நினைத்தானோ குனிந்து அவள் நெற்றியிலும் முத்தமிட்டான் குறும்பாக சிரித்துக் கொண்டே ...

பாரதிக்கு இந்த உலகமே மறந்து போனது.. அவன் முத்தத்தில் மெய் மறந்து நின்றாள் கன்னத்தில் சிவப்புடன்...பின் அதுவே வழக்கம் ஆனது அவனுக்கு... அவளும் காலையில் அவனின் மெல்லிய முத்தத்தை எதிர்பார்த்து இருந்தாள்...

லட்சுமி எதேச்சையாக ஒரு முறை அவன் இருக்கும் பொழுது உள்ளே வர, இந்த காட்சியை கண்டு மனம் நிறைந்து வெளியில் நின்று கொண்டார்... அதிலிருந்து ஆதி அந்த அறைக்கு வந்தால், அவர் நமட்டு சிரிப்புடன் வெளியில் சென்று விடுவார்...

ஆதியும் வெக்க பட்டு சிரித்து கொண்டே தன் மாமியாரை கடந்து செல்வான்...

அலுவலகம் கிளம்பி சென்றாலும் மாலை ஆகும்பொழுது தன் இளவரசியின் முகம் நினைவில் ஆட , 5 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விடுவான்.. வீட்டில் இருக்கும் நேரங்களில் எப்பவும் தன் மகளுடனே கொஞ்சி கொண்டிருப்பான தன் அலுவலக வேலையையும் பார்த்து கொண்டு..

நாட்கள் நகர, அவன் இளவரசி மெல்ல வளர்ந்து வந்தாள்.. அவள் வளர வளர இன்னும் கொள்ளை அழகாக இருந்தது அவனுக்கு... அதோடு தன் மகளின் அம்மாவும் அந்த தேவதையோடு சேர்ந்து ஜொளித்தாள்..

லட்சுமியின் கிராமப்புற பானியில் கவனிப்பாலும் , எண்ணெய் குளியலாலும் பாரதியும் கோவில் சிலையாக மிளிர்ந்தாள்.. அவளின் மேனியில் தெரிந்த மினுமினுப்பும், கன்னத்தில் மிளிரும் ஒளியும் அதோடு அவள் கன்னக்குழியோடு சிரிக்கும் பொழுது விரியும் அவளின் திரண்ட இதழ்களும் ஆதியை புரட்டி போட்டன...

அதுவும் அவள் எண்ணெய் குளியல் குளிக்கும் நாட்களில் ஆதி வரும் மாலை நேரத்தில் தன் நீண்ட கூந்தலை விரித்து விட்டு இரண்டு பக்கமும் முடி எடுத்து நடுவில் முடிந்திருப்பாள்.. அவளின் அந்த விரிந்த கூந்தலின் மணமும் அவள் மேனியில் இருந்து வரும் ஒரு வித வாசமும் சேர்ந்து அவனை இம்சிக்கும்....

அந்த நாட்களில் மட்டும் பாரதியின் அருகில் வராமல் ஒதுங்கி நிற்பான் ... தன் மகளை தூக்கி கொண்டு வேறு பக்கம் சென்று விடுவான்... அப்பொழுது சமாளித்தாலும் இரவில் படுக்கையில் விழும் பொழுது அவள் முகமே மீண்டும் கண் முன்னே வந்து அவனை இம்சிக்கும்.....

“சே.. இந்த கருவாச்சி இப்படி படுத்தறாளே.. “ என்று புலம்பி கொண்டே புரண்டு படுப்பவன் முடியாமல் பால்கனியில் சென்று கால் வலிக்க நடப்பான்...ஒருமுறை அப்படி நடந்து கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக வந்த ஜானகி அவன் முகத்தில் இருந்த அவஷ்தையை கண்டு கொண்டார்...

“சே.. இத எப்படி கவனிக்காமல் விட்டேன்.. பாவம் என் பையன்... சீக்கிரம் அவன் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டணும்... “என்று எண்ணி கொண்டே கீழ இறங்கி சென்றார் ஜானகி...

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!