தவமின்றி கிடைத்த வரமே-39


அத்தியாயம்-39
றுநாள் கண் விழித்தவள் தலை பாரமாக இருக்க, குளிக்க கூட பிடிக்காமல் தன் மாமியார் கொடுத்த காபியை வாங்கி கொண்டு தோட்டத்திற்கு சென்று விட்டாள்..

அவர் பார்வை வேறு அவளுக்கு கஷ்டமாக இருந்தது.. அவளை ஆராயும் பார்வையை அவளால தாங்க முடியவில்லை..

எல்லாத்தையும் தன் மாமியாரிடம் கதை அடிப்பவள் தங்களுக்குள் இருக்கும் இந்த பிணக்கை பற்றி சொல்ல வாய் வரவில்லை.. அதனால் அவர் பார்வையில் இருந்து தப்பித்து தோட்டத்திற்கு சென்று விட்டாள்..

காபியை பருகியபடி தன் அலைபேசியை எடுத்து பார்க்க, கை தானாக மித்ரா மெசேஜை திறந்தது..

அதில் இன்னும் சில புகைப்படங்களை அனுப்பி இருந்தாள்.. எல்லாவற்றிலுமே இருவரும் நெருக்கமாக இருப்பது போலவும் அதுவும் கடைசியாக இருந்த புகைப்படத்தில் வசி அவள் கட்டிலில் படுத்திருக்க அவன் மீது சாய்ந்த படி அமர்ந்து இருந்தாள் மித்ரா...

அதை கண்டதும் உடல் எல்லாம் பற்றி எரிந்தது மலருக்கு.. அதே நேரம் மித்ரா மலருக்கு அழைக்க, அதை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்து எடுக்காமல் விட்டாள்..

மீண்டும் விடாமல் இரண்டாவது முறை அவள் அலைபேசி அழைக்க வேறு வழியில்லாமல் அதை எடுத்தாள் மலர்..

“ஹாய் மலர்... குட்மார்னிங்... “ என்றாள் மித்ரா உற்சாகமாக

அவள் உற்சாகத்தில் இருந்தே மலருக்கு ஏதோ புரிய அதை உறுதி செய்பவளாக மித்ரா பேசினாள்..

“ஹாய்.. மலர்... தேங்க்ஸ்...ஐ ஹேட் அ வொன்டர்புல் நைட்.. “ என்றாள் வெட்கம் கலந்த குரலில்..

அதை கேட்டு மறுமுனையில் மலர் பல்லை கடித்து கொண்டு அமைதியாக இருந்தாள்..

மித்ரா வாக அவள் கணவனை நாடி வந்திருந்தால் அவளை திட்டலாம்.. அவளிடம் சண்டை போடலாம்.. ஆனால் தன் மனைவியை வெறுத்து அவளை நாடி சென்றது அவள் கணவன் இல்லையா? .. திட்ட வேண்டியதும் சண்டையிட வேண்டியதும் அவனிடம் தான் என பல்லை கடித்தாள் மலர்..

ஆனால் சந்தோஷத்தில் மிதந்த மித்ரா

“மலர்.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. இப் யூ டோண்ட் மைன்ட் இன்னைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாமா? “ என்றாள் ஆர்வத்துடன்..

“இல்லை.. எனக்கு வேலை இருக்கு.. “ என்று அவளை தவிர்க்க நினைத்தாள் மலர்..

“ப்ளீஸ் மலர்.. ஒரு அரை மணி நேரம் தான்.. இது நம்ம வாழ்க்கை சம்பந்தபட்டது.. அவசியம் பேசியாகணும்.. அதனால் சிரமம் பார்க்காமல் ஒரு அரை மணி நேரம் வா.. நீ சீக்கிரம் போய்விடலாம். “ என்று கன்வின்ஸ் பண்ணியவள் சந்திக்க வேண்டிய இடத்தை சொல்லி தன் அலைபேசியை வைத்தாள் மித்ரா...

அன்று அலுவலகம் கிளம்பி சென்றாலும் மலரின் பார்வை கடிகாரத்தையே சுற்றி வந்தது...

“அப்படி என்ன பேச போகிறாள் இந்த மித்ரா ?.. “ என்ற யோசனையுடனே அந்த நாளை கடத்தினாள்..

மாலை மணி ஆறு ஆனதும் தன் லேப்டாப் ஐ மூடியவள் தன் பேக் ஐ எடுத்து கொண்டு மித்ரா சொன்ன இடத்திற்கு சென்றாள்.. செல்லும் வழியெல்லாம் மித்ரா அனுப்பி இருந்த புகைப்படங்களே கண் முன் வந்து கை கொட்டி சிரித்தது..

“அவள் கணவன் அவ்வளவு மோசமானவனா? காதலுக்காக கட்டிய மனைவியை விலக்கி விடுவானா? “ என்று எண்ணினாள்..

ஆனாலும் ஏனோ அவனை கடிந்து கொள்ள முடியவில்லை..அவன் இத்தனை வருடங்களாக காதலித்தவளை கூட மறந்து தன் தந்தையின் உயிரை காக்க என்று அன்று அவசரமாக முடிவு எடுத்து விட்டான்...

“ஆனாலும் இந்த மித்ரா எப்படி இப்படி நடந்து கொள்ளலாம்? அவள் காதலித்து இருந்தாலும் அவனுக்கு திருமணம் ஆகி விட்டதும் அவனை விட்டு பிரிந்துவிட வேண்டியது தானே...

திருமணம் ஆனா ஒரு ஆணை தன் அறைக்குள் விட்டதே தப்பு.. அதுவும் இல்லாமல் இவ்வளவு நெருக்கமாக எப்படி அனுமதிக்கலாம்..? “ என்று எண்ணி இருக்க, அதற்கான பதிலை விளக்கினாள் மித்ரா...

மலர் மித்ரா சொன்ன அந்த காபி சாப் ஐ அடைந்ததும் அங்கு முன்னதாகவே அவளுக்காக காத்திருந்த மித்ரா அவளை பார்த்து கை அசைத்தாள்..

அவள் முகத்தில் அப்படி ஒரு உற்சாகம்.. மலர் திருமணத்தன்றும் அதன் பிறகு ஏர்போர்ட்டில் அவளை பார்த்தது.. அப்பொழுது மித்ரா முகத்தில் ஒரு சோகம் குடி கொண்டிருந்தது..

ஆனால் இன்று அது இடம் மாறி மலரை ஆக்ரமித்து கொள்ள மித்ரா படு உற்சாகமாக மலரை வரவேற்றாள்..

தங்களுக்கு பிடித்த காபியை ஆர்டர் பண்ணியதும், பனிமலரை பார்த்த மித்ரா நேரடியாக பேச ஆரம்பித்தாள்..

“சாரி மலர்..என்னை மன்னிச்சிடு... நானும் வசியிடம் எவ்வளவோ எடுத்து சொன்னேன்.. இது தப்புனு.. அவன் கல்யாணம் ஆனவன் னு சொன்னேன்.. ஆனால் அவன் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை..

ரொம்ப டிஸ்டர்ப்ட் ஆ இருந்தான்.. என்னை ரொம்ப மிஸ் பண்றேன் னு பீல் பண்ணான்.. உன்னை தெரியாமல் கல்யாணம் பண்ணிகிட்டதாகவும் இப்ப என்னை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை என்றும் சொன்னான்..

அதுக்கு மேல அவன் மனம் வாட எனக்கு தாங்க வில்லை... நான் ஏற்கனவே சொன்னது தான்.. எனக்கு என் வசி சந்தோஷம் தான் முக்கியம்.. ஏனா அவனை நான் சின்சியரா லவ் பண்றேன்..

உன்கிட்ட அவனுக்கான சந்தோஷம் கிடைக்குதுனு தான் என்னை கல்லாக்கி கிட்டு அவனை உன்கிட்ட விட்டு கொடுத்தேன்.. ஆனால் நீ அதை தக்க வைத்து கொள்ளவில்லை..

என்னாச்சுனு தெரியலை.. உன்னை பார்க்கவே பிடிக்கலை ங்கிறான்.. நான் கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான்..

அவன் சந்தோஷம் என்கிட்ட தான் இருக்குனு சொல்றான்... “ என்று நிறுத்தியவள் மலரின் முகத்தை ஆராய்ந்தாள் ஒர கண்ணால்..

மலர் முகத்தில் வேதனையும் வலியும் பரவி இருக்க உதட்டை கடித்து கொண்டு தன் அழுகையை அடக்கி கொண்டிருந்தாள்..

அதை கண்ட மித்ரா உள்ளம் துள்ளி குதிக்க மேலும் தொடர்ந்தாள் உற்சாகத்துடன்..

“இங்க பார் மலர்.. நான் முன்பு சொன்ன மாதிரி அவன் பேசன்ட் ஐ காப்பாற்றத்தான் உன்னை யோசிக்காம கல்யாணம் பண்ணிகிட்டான்... கல்யாணம் ஆனதோடு கணவனுக்கான கடமையாக உன்னோடு வாழ்ந்து இருக்கிறான்..

ஆனால் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் னு சொல்வாங்களே.. அந்த மாதிரி உன் மேல் இருந்த ஆசை தீர்ந்து போய்டுச்சு போல.. அதான் என்கிட்ட வந்திட்டான்..

இப்பயாவது உனக்கு புரிஞ்சிருக்குமே...நானும் வசியும் எவ்வளவு சின்சியரா லவ் பண்ணினோம்.. இன்னும் பண்றோம் னு.. எனக்கு ஒன்னுனா அவனால் தாங்க முடியாது.. அதே மாதிரி தான் எனக்கும்..

என்ன.. நாங்க இரண்டு பேரும் முறைப்படி இணைந்து இருக்க வேண்டியது.. இடையில் நடந்த குழப்பத்தால் நீ குறுக்க வந்திட்ட.. ஆனாலும் எங்களுக்குள் இருக்கும் காதல் அப்படியே தான் இருக்கு.. அதனால தான் என்னையே தேடி வர்ரான் வசி... “ என்று இன்னும் கொஞ்சம் நயமாக பேசினாள் மித்ரா...

இன்னும் கொஞ்சம் நிகழ்ச்சிகளை எடுத்து கூறி கொஞ்சம் கொஞ்சமாக மலரை தன் பக்கம் இழுத்து கொண்டிருந்தாள் மித்ரா..

அவளும் மித்ராவின் நயமான பேச்சால் அவள் மீது சந்தேக பட முடியாமல் அவள் சொல்வது எல்லாம் உண்மை என்று நம்ப ஆரம்பித்தாள்..

ஏனேன்றால் அவள் கணவன் இன்னும் அவளிடம் மனம் திறந்து பேசி இருக்கவில்லை.. அவளை காதலிப்பதாக வாய் திறந்து சொல்ல வில்லை.. அவன் கண்களில் காதல் இருந்தது தான்.. அதுகூட காதலா இல்லை ஆசையா என்ற சந்தேகம் எழுந்தது மலருக்கு இப்பொழுது..

“அவன் இதுவரை நடந்து கொண்டதை எல்லாம் வைத்து பார்க்க அவள் மீது வெறும் ஆசை மட்டும் தான்.. அந்த ஆசை இப்பொழுது தீர்ந்து போய் விட, அவன் மனம் பழைய காதலை காதலியை தேடி படர்ந்துவிட்டது.. “ என்று நம்பினாள் மலர்...

அவள் உள்ளே முன்பு இருந்த அந்த சந்தேக விதை விஷ செடியாக வளர்ந்து மரமாகி மித்ராவின் நயமான நஞ்சு உரத்தால் இன்னும் வேகமாக வளர்ந்து இப்பொழுது விஷ பழங்களை அறுவடை செய்தது..

அதை சாப்பிட்ட மலருக்கோ அதன் விளைவு விபரீதமாக போவதை உணரவில்லை..

மித்ராவின் பேச்சால் கடைசியில் அவர்கள் இருவரும் காதலர்கள். தன் கணவனுக்கு மித்ராவைத் தான் பிடித்திருக்கிறது என்று மனதில் இருத்தி கொண்டாள் மலர்...

நீண்ட நேரம் பேசி முடித்த மித்ரா

“சோ.. இதனால் மலர். நான் என்ன சொல்றேனா வசிக்கு பிடிக்காத வாழ்க்கையை அவன் ஏன் வாழணும்? நீயும் தான் எத்தனை நாளைக்கு அவனுக்காக காத்து கொண்டிருப்ப? . இதுக்கு ஒரே தீர்வு நீங்கள் இருவரும் சட்டபடி பிரிந்து விடுவது தான்.

அப்பொழுதுதான் நாங்க மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும்.. எங்களுக்கு பிடித்த காதல் கலந்த வாழ்க்கையை வாழ முடியும்.. ப்ளீஸ் மலர். யோசிச்சு பார்..

ஒரு வேளை வசிக்கு உன்னை பிடித்திருந்தால் நான் குறுக்கயே வந்திருக்க மாட்டேன்.. காலம் முழுவதும் அவனை நினைத்து கொண்டே வாழ்ந்து முடித்திருப்பேன்.. ஆனால் இப்பொழுது அவனுக்கு உன்னை பிடிக்கவில்லை.

அப்படி இருக்க, ஏன் நம்ம மூன்று பேரோட வாழ்க்கையும் வீணாகனும்... வசியிடம் இருந்து விலகி நீயும் வேற ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம்..

மூன்று பேருமே சந்தோஷமா இருக்கலாம்.. என்ன சொல்ற? “ என்றாள் மித்ரா

மலருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. தன் கணவன் மீது கோபமும் வரவில்லை... மித்ரா சொல்வதை போல அவன் கடமைக்காக என்னை கல்யாணம் செய்து கொண்டான்.. கடமைக்காக கணவனாக என்னுடன் வாழ்ந்தான்..

இப்பொழுது காதலுக்காக அவன் வேற ஒருத்தியை நாடி செல்கிறான்.. எத்தனை நாள் இந்த கடமைக்காக வாழும் வாழ்வு நிலைக்கும்?.. மித்ரா சொல்ற மாதிரி அவனை பிரிந்து விடலாமா? என்று யோசிக்க இதயத்தை கசக்கி பிழிந்தது..

“அவன் என்னை காதலிக்க வில்லை என்றாலும் நான் அவனை காதலிக்கிறேனே.. “ என்றவள் திடுக்கிட்டாள்..

“நான் அவனை காதலிக்கிறேனா? “ என்று அவசரமாக ஆராய சென்ற வாரம் அவள் உணர்ந்து கொண்ட அவள் காதல் நினைவு வந்தது..

“ஆனாலும் என் காதலுக்கு ஆயுட் காலம் கம்மி.. அது நிலைத்து நிற்க நான் கொடுத்து வைக்கவில்லை..இருக்கட்டும்.. நான் உயிராக விரும்பும் அவன் காதலாவது வெற்றி பெறட்டும்..

எனக்கு இப்பொழுது இருக்கும் இதே வலி வேதனையும் தானே மித்ராவுக்கும் இருந்திருக்கும் அவன் என்னை மணந்த பொழுது..

ஆனால் அவள் எவ்வளவு பெருந்தன்மையாக அவன் சந்தோஷத்துக்காக அவனை விட்டு கொடுத்தாள்..

இன்று தன் கணவனின் சந்தோஷம் இந்த மித்ராவிடம் எனும்பொழுது அவனை அவளுக்கு விட்டு கொடுத்துத் தான் ஆகணும்.. அதுதான் நான் அவனுக்கு செய்யும் நன்றி கடனாகும்.. “ என்று முடிவு செய்தாள்..

உடனே தன்னை கல்லாக்கி கொண்டவள்,

“ஓகே.. மித்ரா. உன் வசியை நீங்களே வச்சுக்கங்க.. இப்ப நான் என்ன செய்யணும்? “ என்றாள் வெறித்த பார்வையுடன்

அதை கேட்டு இன்பமாய் அதிர்ந்து போனாள் மித்ரா...

தான் சொன்னதை கேட்டதும் மலர் கோப படுவாள். தன் கணவனை விட்டு கொடுக்க முடியாது என கத்துவாள் என எதிர்பார்த்தவளுக்கு மலர் உடனே அவனை விட்டு கொடுக்க ஒத்து கொண்டதும் துள்ளி குதித்தது அவள் மனம்...

உடனே தன் கைப்பையில் இருந்த ஒரு விண்ணப்பத்தை எடுத்தாள் மித்ரா..

“இது நீங்கள் இருவரும் சட்டப் படி பிரிவதற்கான டைவர்ஸ் அப்ளிகேசன்.. இரண்டு பேருமே ம்யூச்சுவலா பிரிவதற்கு சம்மதித்து இதுல கையெழுத்து இட்டால் சீக்கிரம் டைவர்ஸ் கிடச்சிடும்

அதுக்கு பிறகு நாங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறோம்... நீ இதுல ஒரு சைன் போடு.. “ என்றாள் மித்ரா

அதை கண்ட மலர் உள்ளுக்குள் அதிர்ந்து போனாள்...

மித்ரா வேற ஏதோ சொல்ல போகிறாள் என்று எதிர்பார்த்தவளுக்கு டைவர்ஸ் என்கவும் அதிர்ச்சியாக இருந்தது

“என்ன மலர் யோசிக்கிற ?.. நீதான சொன்ன வசியை விட்டு கொடுக்கறேனு.. .அவன் சந்தோஷம் முக்கியம் னா இதுல கையெழுத்து போடு.. “ என்று ப்ரைன் வாஸ் பண்ணினாள்..

“வந்து .. இதுக்கு அவர் சம்மதிப்பாரா? “ என்றாள் மலர் கொஞ்சம் நப்பாசையுடன்

“கண்டிப்பா.. ஆனால் அவன் கிட்ட நான் சொல்ற மாதிரி நீ பேசு.. உடனே அவனும் கையெழுத்து போட்டு கொடுத்திடுவான்.. அப்புறம் என்ன ?.. நாங்க எங்க மனசுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வோம்..

அதோடு வசிக்கும் அவன் கனவான எங்க மருத்துவமனைக்கே M.D ஆகிடுவான்.. எங்கப்பா அவனுக்காகவே காத்துகிட்டிருக்கிறார் எங்க ஹாஸ்பிட்டலை அவனுக்காக எழுதி வைக்க..உனக்கும் எங்க ஹாஸ்பிட்டல் யே மேனேஜரா வேலை போட்டு தர்ரேன்.. எல்லாருக்கும் ஹேப்பி.. “ என்று சிரித்தாள்..

மலரும் சிறிது யோசித்தவள் தன் சந்தோஷத்தை விட, அவள் விரும்பும் தன் கணவன் சந்தோஷம்தான் முக்கியம்... அவள் விலகிவிட்டால், அவன் விருப்ப படியே ஒரு மருத்துவமனைக்கு உரிமையாளனாக ஆகி விடுவான்.. அதோடு அவனுக்கு பிடித்த காதல் வாழ்க்கையும் அவனுக்கு கிடைத்து விடும்...

“இருக்கட்டும்... அவனாவது சந்தோஷமாக அவனுக்கு பிடித்த வாழ்க்கையை வாழட்டும்.. “ என்று யோசித்தவள் மித்ரா சொல்வதே சரியென்று பட, அந்த விண்ணப்ப படிவத்தில் கைழுத்து இட்டாள் நடுங்கும் விரல்களுடன்..

அதை கண்டு குரூரமாக சிரித்து கொண்டாள் மித்ரா..

மலர் கையெழுத்து இட்ட பிறகு அதை வாங்கி சரி பார்த்தவள் பின் அந்த விண்ணப்பத்தை மலரிடம் கொடுத்தவள் வசியுடன் எப்படி பேசி அதில் கையெழுத்து வாங்குவது என்று விளக்கினாள் மித்ரா..

மலரும் தலையை ஆட்டி விட்டு பின் அவளிடம் விடைபெற்று தன் வீட்டை நோக்கி சென்றாள் கனத்த மனதுடன்..

மித்ரா வோ தன் கையை மடக்கி பின்னுக்கு இழுத்து “யெஸ்.. சக்சஸ்.... “ என்று குதித்து கொண்டாள்...

எப்படியோ.. அவள் எதிர்பார்த்த மாதிரியே அவள் ஆட்டம் போய் கொண்டிருக்கிறது என்று துள்ளி குதித்தாள்.. பைனல் மூவ்.. வசி இந்த டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து இடவேண்டும்..

அவன் மட்டும் கையெழுத்து போட்டுவிட்டால் அதற்கு பிறகு அவர்களை எளிதாக பிரித்து விடலாம் என மனப்பால் குடித்தாள்..

சென்றவாரம் மலர் தன் தங்கையிடம் பேசி கொண்டிருந்ததை கேட்டதும் அவளின் நாடகம் புரிந்த அடுத்த நாளே காலையில் சீக்கிரம் கிளம்பி வசி மருத்துவமனைக்கு வந்துவிட்டான் அவளை பார்க்க பிடிக்காமல்..

அதை கண்ட அன்றே மித்ரா மனதில் ஏதோ ஒன்று அவர்களுக்குள் சரியில்லை என்று புரிந்தது..

வசியிடம் கேட்க அவன் எதுவும் இல்லை என்று மழுப்பிவிட்டான்.. அன்று இரவும் வீட்டிற்கு தாமதமாகவே கிளம்பி சென்றான் கேட்டால் அவன் ஆராய்ச்சியில் தீவிரமாக இருப்பதாக கூறி சமாளித்தான்..

ஆனால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மித்ரா மலரிடம் வசி தன்னுடன் இருப்பதாக திரித்து கூறினாள்..

அதே போல மலரிடம் சண்டை இட்டு நடு இரவில் வெளியேறிய வசி தன் காரை இலக்கின்றி ஓட்டி கொண்டிருக்க, அதே நேரம் மித்ரா எதேச்சையாக அவனை அழைத்தாள்..

அழைப்பை ஏற்றதும் அவன் குரலில் இருந்தும் வெளியில் இருந்த சில வாகனங்களின் சத்தத்திலும் அவன் வெளியில் இருக்கிறான் என புரிந்து கொண்டவள் அவனுக்கு ஏதோ பிரச்சனை இருப்பதாக தன் உள்ளுணர்வு சொல்லியதால் அவனை அழைத்ததாக கூற, வசி உருகி போனான்..

“இவளுக்குத் தான் என் மீது எத்தனை பாசம்.. சதா என்னையே நினைத்து கொண்டிருக்கிறாளே.!! அப்படி என்ன நான் அவளுக்கு செய்து விட்டேன்.. என் மீது இப்படி பைத்தியமாக இருக்கிறாள்..ஆனால் எனக்கு வந்தவள் எவ்வளவு வேசக்காரி.. நாடகக்காரி..

ஆனாலும் என் மனம் அவளிடம் தானே படர்ந்து தொலைக்கிறது.. அவளை தவிர வேற யாரையும் பிடித்து தொலைக்க மாட்டேங்குதே.. “ என்று உள்ளுக்குள் புலம்பியவாறு மித்ராவிடம் பேசி கொண்டிருந்தான்..

மித்ரா அவனை அவள் வீட்டிற்கு அழைக்க, அவன் அந்த நேரத்தில் செல்ல தயங்கினான்.. ஆனாலும் அவனை வற்புறுத்தி தன் வீட்டிற்கு அழைத்தாள்..

அவனும் அவன் அணிந்திருந்த உடையை கூட கவனிக்கவில்லை.. கோபத்தில் வெளியில் கிளம்பி இருந்தவன் சிறிது நேரம் காரை ஓட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பலாம் என்று திட்டமிட்டு வந்திருந்ததால் தன் ஆடையை கூட மாற்றவில்லை..

இப்பொழுது மித்ரா கட்டாயபடுத்தி அவனை அழைக்க, வேற வழியில்லாமல் அங்கு சென்றான்... அவன் கார் உள்ளே வந்ததை கண்டதும் மித்ரா உடனே ஓடி வந்து அவனை கை பிடித்து தன் அறைக்கு வலு கட்டாயமாக அழைத்து சென்றாள்.

அவள் தந்தை உறங்கி இருக்க, வீட்டில் மற்றவர்களும் யாரும் இல்லை..

அவள் அறைக்கு அவன் பலமுறை வந்திருக்கிறான் வசி.. கல்லூரி காலத்தில் சில நேரம் அவளுக்கு பாடத்தில் விளக்கம் சொல்ல மணிக்கணக்காக அவள் அறையில் தங்கி படித்திருக்கிறார்கள்.. ஆனால் இரவில் இதுவரை வந்ததில்லை..

அதுவும் அவன் இப்பொழுது திருமணம் ஆனவன்.. அதனால் மற்றொரு பெண்ணின் அறைக்கு அந்த நேரத்தில் வருவது தவறு என அவன் அறிவு எடுத்து சொன்னாலும் மித்ராவின் கெஞ்சலான பார்வைக்கு முன்னால் அறிவால் ஒன்றும் செய்ய முடியவில்லை..

அவள் இழுத்த இழுப்புக்கு கட்டுண்டவனை போல அவள் உடன் சென்றான்...

அவனை கண்டதும் மித்ராவும் வாயெல்லாம் பல்லாக மகிழ்ந்து சிரித்தபடி அவனை தன் அறைக்கு அழைத்து சென்றவள் அவனை அமர வைத்து அவனுக்கு குடிக்க கொடுத்தாள்...

பின் அவனுக்கு பிடித்த விசயங்களை பேச, சில நிமிடங்களில் அவன் உள்ளே இருந்த தயக்கம் மறைந்து அவளுடன் இயல்பாக பேச ஆரம்பித்தான்..

இருவரும் தங்கள் கல்லூரி நாட்களை பற்றி பேசி சிரிக்க அதை மித்ரா அவனுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து கொண்டாள்..

எதேச்சையாக அமர்பவள் போல அவனுடன் நெருங்கியும் அமர்ந்து கொண்டாள்.. வசி அவளை இயல்பாக எடுத்து கொள்ள அந்த புகைப் படத்தை தான் மலர் க்கு அனுப்பி வைத்தாள் மித்ரா..

அதோடு சிறிது நேரம் பேசிவிட்டு அவன் உறக்கம் வருவதாக சொல்லி கிளம்ப முயல, இந்த நேரத்தில் அதுவும் தூக்க கலக்கத்தில் கார் ஓட்ட வேண்டாம் என்று சொல்லி, அவனை கட்டாயப்டுத்தி அங்கயே தங்க வைத்தாள்..

அவன் உயரத்திற்கு சோபாவில் படுக்க முடியாது என சொல்லி அவனை அவள் பெட் லயே படுக்க சொல்லி அவள் சோபாவில் படுத்து கொள்வதாக கட்டாய படுத்தினாள்..

அவனும் மறுக்க முடியாமல் கட்டிலில் படுக்க, ஓடி வந்து அவன் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டு மீண்டும் சில நிமிடங்கள் பேசி விட்டு அவனுக்கு இரவு வணக்கத்தை சொல்லி தன் சோபாவிற்கு சென்று விட்டாள்..

ஆனால் அப்படி அவன் மீது சாய்ந்து இருந்த பொழுதும் அதை தன் அலைபேசியில் பதிவு செய்து கொண்டாள்..

இதையெல்லாம் தான் மலருக்கு அனுப்பி வைத்தாள் மித்ரா.. அந்த புகைப்படங்களை வைத்து அவளே ஒரு கதையை பில்டப் பண்ணி சொல்ல மலரும் அதை நம்பி அவர்கள் இருவரும் உண்மையான காதலர்கள் என்று நம்பி விட்டாள்..

அதோடு அவர்கள் இருவரும் சேர்ந்து வாழட்டும்.. தான் விலகி விடுவதுதான் நல்லது.. என்று முடிவு செய்து அந்த விடுதலை பத்திரத்தில் கையெழுத்தும் இட்டாள்..

எப்படியோ தன் திட்டம் வெற்றி பெற போகிறது என தெரியவும் உள்ளுக்குள் துள்ளி குதித்த மித்ரா,

“சரியான முட்டாள் பெண்தான்... நான் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பிட்டாளே!!.. எப்படியோ அவள் வசியிடம் இருந்து விலகி விட்டால் , இனி வசி எனக்குத் தான்.. ஆமாம் எனக்கு மட்டும் தான்.. “ என்று மனதினில் சொல்லி கொண்டு குரூரமாக சிரித்து கொண்டாள்.

மித்ராவின் ஆட்டத்தை அறிந்து கொள்ளாத மலர், கனத்த மனதுடன் வீடு திரும்ப, மலர் சோர்ந்த முகத்துடன் வர, மீனாட்சி அவளின் முக வாட்டத்தை கண்டு கொண்டார்

“என்னாச்சு மலர்?.. ஒரு வாரமாகவே ரொம்ப டல்லா இருக்க. “ என்று அக்கறையாக விசாரித்தார்..

அவர் குரலில் இருந்த கனிவை கண்டதும்

“இப்படி ஒரு மாமியார் யார்க்கு கிடைக்கும்.. தன்னை ஒரு வேலை செய்ய விடாமல் உள்ளங்கையில் வைத்து தாங்கும் அன்பான மாமியார், பாசமான மாமனார், நட்புடன் பழகும் வசு..

அப்புறம்... தன் ஆசை கணவன்.. ஆம் அவன் ஆசை கணவன் மட்டும் தான். காதல் கணவன் அல்ல.. அவன் காதல் தான் அந்த மித்ராவிடம் இருக்கிறதே...

இப்படி எல்லாரையும் விட்டு பிரிந்து மீண்டும் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும்.. அந்த மித்ரா இங்கு வரப் போகிறாள். இல்லை வசியே அங்கு சென்று விடுவான். அவள் வீடுதான் அரண்மனை போல இருக்கிறதே... “ என்று ஏதேதோ யோசித்து கொண்டிருக்க அவள் தோளை பற்றி குலுக்கினார் மீனாட்சி

“என்னாச்சு மலர் ? .. ஏன் என்னவோ போல இருக்க? வசி ஏதாவது சொன்னானா ? “ என்றார் மீண்டும் யோசனையுடன்..

“ஆங்... ஒன்னும் இல்ல அத்தை.. கொஞ்சம் வேலை அதிகம்.. ஆபிஸ் வொர்க், ப்ராஜெக்ட் வொர்க் அப்புறம் RJS ல கொஞ்சம் வேலை எல்லாம் சேர்ந்ததால் கொஞ்சம் டயர்ட் ஆ இருக்கு.. “ என்றாள் சமாளித்தவாறு..

ஆனால் அவள் பேச்சில் நம்பிக்கை இல்லை மீனாட்சிக்கு.. அவள் எதையோ மறைக்கிறாள் என்று புரிந்தது.. ஆனாலும் அவளே சொல்ல பிரிய படாத விசயத்தை நோண்டி கேட்கவும் அவருக்கு தயக்கமாக இருந்தது..

எல்லா விசயத்தையும் தன்னிடம் பகிர்ந்து கொள்பவள் எதையோ மறைக்கிறாள் என்றால் அதை தன்னிடம் சொல்ல பிடிக்கவில்லை.. அதை மீண்டும் வற்புறுத்தி கேட்க மனம் வராததால்

“அப்படி முடியலைனா உன் வேலையை விட்டு டா மலர்.. நம்ம ஹெல்த் தான் முக்கியம்.. எப்ப வேணாலும் வேலைக்கு போய்க்கலாம்.. “ என்றார் அவர் தலையை ஆதரவாக வருடியபடி..

அதில் இன்னும் உருகியவள்

“ஹ்ம்ம் இல்ல அத்தை.. இந்த வாரம் மட்டும் தான் வேலை அதிகம்.. அடுத்த வாரத்துல இருந்து எல்லாம் சரியாகிடும்.. “ என்று சமாளித்தாள்..

“ஹ்ம்ம்ம் என்னவோ டா.. உன் உடம்பை பார்த்துக்க.. நீ எப்பவும் கலகலனு சிரிச்சுகிட்டே இருக்கணும்... “ என்று சிரித்து கொண்டே அவள் கன்னத்தை வருடி சென்றார் மீனாட்சி...

அன்று இரவு உணவை முடித்தவள் அன்றும் தன் கணவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்..

“அவனிடம் இந்த பேப்பரில் கையெழுத்து வாங்கிவிடவேண்டும்.. அவனாவது நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழட்டும். எனக்கு பயந்து கொண்டு, எனக்கு பதில் செல்ல வேண்டுமே என்று தினமும் தாமதமாக வருகிறான்..

நான் சென்று விட்டால் அவன் எப்பவும் போல வீட்டிற்கு வந்து விடுவான்... என் அப்பா உயிரை காப்பாற்றிய அவனுக்கு நன்றி கடனா அவன் ஆசை பட்ட மருத்துவமனையும் அவன் காதலையும் திருப்பி தருவது தான் என் கடமை.. “ என்று தன் முடிவை மீண்டும் உறுதியாக்கி கொண்டாள்...

தாமதமாக வந்த வசி கதவை மெல்ல திறந்து கொண்டு உள்ளே வர, இன்றும் மலர் உறங்காமல் விழித்திருக்க, அவள் முகத்தை கண்டவன் அதிர்ந்து போனான்..

எப்பொழுதும் சிரிக்கும் அவள் கண்கள் சிரிக்க மறந்து ஒளி இழுந்து இந்த ஒரு வாரத்தில் மெலிந்து கலை இழந்து காணபட்டாள்..

அவளை பார்த்தாலே அவனுள் வந்து ஒட்டி கொள்ளும் உற்சாகம் அப்படி பட்ட மலர்ந்த மலரை போல எப்பவும் சிரித்த புன்னகையுடன் வளைய வருபவள் இன்று வாடிய மலராக கண்களில் வலி வேதனையுடன் இருந்ததை கண்டவனுக்கு இதயத்தை பிசைந்தது..

அவளை அப்படியே அணைத்து அவள் வலி வேதனையெல்லாம் போக்கிட துடித்தது அவன் இதயம்..

ஆனாலும் பழசெல்லாம் ஞாபகம் வர, அவன் உடல் இறுக அவளை கண்டு கொள்ளாமல் குளியல் அறைக்கு சென்றவன் குளித்து உடை மாற்றி கட்டிலில் படுக்க வந்தவனை நிறுத்தினாள் மலர்..

“ஒரு நிமிடம்... “ என்றாள் வெறித்த பார்வையுடன்

அவனும் ஒரு வெறித்த பார்வையை அவள் மீது செலுத்தி என்ன என்று புருவங்களை உயர்த்தினான் வாயை திறக்காமல்..

அவன் அருகில் வந்தவள்,

“வந்து.... இ.... இது டைவர்ஸ் அப்ளிகேசன்.. நான் கையெழுத்து போட்டு விட்டேன்.. நீங்களும் போட்டால் இருவரும் ம்யூச்சுவல் ஆகி விடும் சீக்கிரம் பிரிந்து விடலாம்.. அவங்க அவங்களுக்கு பிடித்த சந்தோஷமான வாழ்க்கையை வாழலாம்..

இப்படி காதல் இல்லாமல் கடமைக்காக கணவன் மனைவியாக வாழ வேண்டாம்..பிரிந்து விடலாம்.. “ என்றாள் தன் மனதை கல்லாக்கி கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக தேடி பிடித்து கோர்த்தாள் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு..

அவள் சொல்லியதை கேட்டவன் பலமாக அதிர்ந்து போனான் வசீகரன்..

“அவன் அவளை தள்ளி வைத்தால் அவள் தன் தவறை புரிந்து கொண்டு திருத்தி கொள்வாள் என பார்த்தால் இப்படி டைவர்ஸ் வரைக்கும் வந்து நிக்கறாளே.. “என்று கோபம் ஆத்திரம் தலைக் கேறியது அந்த மருத்துவனுக்கு...

ஆத்திரத்தில், கோபத்தில் தன்னை மறந்தவன்

“ஓ.. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் ங்கிற மாதிரி என் மேல் உனக்கிருந்த ஆசை எல்லாம் தீர்ந்து போச்சா ?

ஒரு நாள் நீ தேடி வந்ததுக்கு நான் உன்னை அணைக்க வில்லை என்ற உடனே என்னை விலக்கி விட்டு வேற ஒருத்தனை தேட இந்த அப்ளிகேசனா? அவ்வளவு சீக்கிரம் நான் உனக்கு சலித்து விட்டனா ? " என்று இன்னும் ஏதேதோ சொல்லி ஏளனமாக பேச,

அதை கேட்டு தன் காதை பொத்தி கொண்டவள்

"வில் யூ ப்ளீஸ் ஷட் அப்.. " என்று கத்தினாள் மலர்..

“ஓ.. உண்மையை சொன்னா கோபம் வருதா...

லுக் பனிமலர்..நீ வேணும் னா சேர்ந்துக்கறதுக்கும் வேண்டாம் னா பிரிஞ்சு போறதுக்கும் கல்யாணம் ங்கிறது ஒன்னும் விளையாட்டு இல்லை..

இந்த கல்யாணம் நம்ம இருவரையும் மட்டும் இணைத்தது இல்லை.. நம் இரு குடும்பங்கள் அதுக்கும் மேல இப்ப வசு, இனியவன் என்று நம்மளை சுற்றி இருப்பவர்களும் அதற்குள் பின்னி இருக்கிறாங்க..

நீ இப்படி டைவர்ஸ் வாங்கிட்டு உனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ போய்ட்டா, உன்னை சுற்றி இருப்பவர்களை நினைத்து பார்த்தியா? உனக்கு அதெல்லாம் எங்க தெரிய போகுது. உனக்கு உன் சுகம் மட்டும்தான் பெருசு.. அடுத்தவங்களோட மனசு எப்படி புரியும்..

அதனால் நீ என்கிட்ட இருந்து இந்த ஜென்மத்துல பிரிந்து போக முடியாது.. எனக்கு பொண்டாட்டினா அது நீ மட்டும் தான்.. பிடிக்குதோ பிடிக்கலையோ நீ என் கூடத்தான் வாழ்ந்து ஆகணும்.. நோ சாய்ஸ்.. “ என்றவன் அவள் நீட்டிய அந்த டைவர்ஸ் பேப்பரை வாங்கி கிழித்து அருகில் இருந்த குப்பை தொட்டியில் போட்டான்...

மலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.. அவள் நீட்டிய உடனே அவன் சந்தோஷத்துடன் கையெழுத்து இடுவான் என்ற வேதனையுடன் அவள் நீட்டி இருக்க, அவனோ வேற கதை சொன்னான்..

அதில் குழம்பி போனவள் பின் சில நொடிகளில் சமாளித்து கொண்டவள்

“அப்புறம் ஏன் என்னை விலக்கி வைக்கறீங்க? “ என்றாள் வேதனையுடன்

“ஹ்ம்ம்ம் அது நீ செஞ்ச தப்புக்கு.. “

“தப்பா? நான் அப்படி என்ன தப்பு செய்தேன்.. ? “ என்றாள் புரியாதவளாக

“ஹ்ம்ம்ம் அது உனக்குத் தான் தெரியும்.. நீ என்ன தப்பு செய்தேனு தெரியாம மண்டைய குடைஞ்சுகிட்டு நீ இதுவரை செய்த தப்பையெல்லாம் பட்டியல் இட்டு அதில் எதை நான் சொல்லுகிறேன் என்று மண்டையை குடைந்து கொள்வாய் இல்லையா.. அது தான் உன் தப்புக்கான தண்டனை..

உன் தப்பை உணர்ந்து திருத்தி கொள்வாய் என்று எதிர் பார்க்கிறேன்... உன்னையே ஆராய்ந்து பார்.. உன் தவறு புரியும்... “ என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் இன்றும் வேகமாக வெளியேறி சென்றான்..

மலரோ தன் தலையின் இருபக்கமும் கையை வைத்து கொண்டு தொப்பென்று கட்டிலில் விழுந்தாள்..

“அவன் வெறுக்கும் அளவுக்கு அப்படி என்ன தப்பு செய்தேன்? என்னை அறியாமல் என்ன தப்பு செய்திருக்க முடியும் ? .. அதுவும் சமீபத்தில் தான் எதுவாக இருக்கணும்..

வசு மேட்டர் என்றால் அது எப்படி தப்பாகும். அவளை நன்றாக படிக்கத்தானே வைத்திருக்கிறேன்.. ஒரு வேளை அதை அவனிடம் சொல்லாமல் மறைத்தது தவறா ? அதுக்கு இந்த அளவுக்கு கோப பட அவசியமில்லையே...

வேற என்னவாக இருக்கும் ? “ என்று எல்லா நிகழ்ச்சிகளையும் ஆராய்ந்து பார்க்க, எங்கு எப்படி எவ்வளவு ஆராய்ந்து பார்த்தாலும் அவள் செய்த தவறு என்னவென்று புரியவில்லை..

“ஐயோ ஈஸ்... என்னை ரொம்ப சோதிக்காத.. என்ன தப்புனு தெரிந்தாலாவது அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.. தப்பு என்ன என்றே தெரியாமல் எதை சரி செய்வது?..

கொஞ்சம் கருணை காட்டி என் பிரச்சனைக்கு ஒரு தீர்வை கொடேன்.. இந்த சோதனையை தாண்டி வர எனக்கு உதவி செய்.... “ என்று உள்ளுக்குள் அந்த ஈசனிடம் மன்றாடினாள் மலர்

“ஹா ஹா ஹா.. சோதிப்பவனே நான் தான்.. நானே அதுக்கு உதவியும் செய்ய வேண்டுமா? இது நல்லா இருக்கே...!! “ என்று சிரித்து கொண்டான் அந்த நெற்றி கண்ணன்...



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!