என் மடியில் பூத்த மலரே-7
அத்தியாயம்-7
இப்போதைக்கு அம்மாவை சமாளிச்சாச்சு என்ற நிம்மதியுடன் அலுவலகம் கிளம்பி சென்றான் ஆதித்யா...
தன் மகன் கிளம்பி சென்றதும், ஜானகி போனை எடுத்து சுசிலாவுக்கு போன் பண்ண முயன்றார்.. அதற்குள் சுசிலாவே ஜானகியை அழைத்து இருந்தார்...
ஜானகி அலைப்பை ஏற்றதும் ,
“என்ன ஜானகி...உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா?? என்ற திட்டளோடு தொடங்கினார்...
“இந்த ஆதி அதற்குள் சுசிலாகிட்ட சொல்லிட்டானே... “ என்று மனதுக்குள் திட்டி கொண்டே
“என்ன சுசி?? காலைலயே திட்டற.. நீ என்ன சொல்ற?? “
“நான் என்ன சொல்றேனு உனக்கு நல்லாவே தெரியும்.. தெரியாத மாதிரி நடிக்காத.. ஆதி எல்லாம் எங்கிட்ட சொல்லிட்டான்.. இப்ப எதுக்கு உனக்கு இந்த விபரீத ஆசை... இதுக்கு தான் நேற்று அவ்வளவு ஆர்வமா திரும்ப திரும்ப கேட்டியா??
இப்படி நீ திட்டம் போடுவனு தெரிந்து இருந்தால் உன் கிட்ட சொல்லியே இருக்க மாட்டேன்” என்று பொரிந்து தள்ளினார்..
சுசிலாவின் பேச்சை அமைதியாக கேட்டு கொண்டிருந்தார் ஜானகி..
“பேசி முடிச்சிட்டியா? நானும் எவ்வளவு நாள் காத்திருக்கிறது சுசி.. இவன் இப்பவும் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்குறானே.. இதை தவிர எனக்கு வேற வழி தெரியல.. உன் கிட்ட சொன்னா நீ கண்டிப்பா ஒத்துக்க மாட்ட.. அதான் நானே ஆதிகிட்ட சம்மதம் வாங்கிட்டேன்...”
“நீ யோசிச்சு தான் பேசறியா ஜானகி... இதனால எதுவும் பிரச்சனை ஆயிட்டா??? ஏற்கனவே ஆதி ரொம்ப காயப்பட்டுட்டான்.. இனிமேலும் ஏதாவது ஒன்னுன்னா அவனால தாங்க முடியாது..இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாம் இல்லை.. ”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது சுசி... எல்லாம் அந்த முருகன் பார்த்துப்பான்.. ..இன்னும் எத்தனை நாள் காத்திருந்தாலும் ஆதி மாற மாட்டான்.. அவனை பற்றி தெரியாதா.. பிடிவாதக்காரன் “
“ஹ்ம்ம்ம் நீ மட்டும் என்னவாம்.. நீ நினைச்சது தான் சரினு பிடிவாதம் பிடிக்கிற இல்லை.. அவன் மட்டும் எப்படி இருப்பான் ... சரி இப்ப எங்க போய் அந்த பொண்ணை தேடப்போற???
“தேடப்போற இல்லை... தேடப்போறோம்... நீ தான் எனக்கு உதவி செய்யனும் சுசி.. உனக்கு தான் இது சம்மந்தமா நிறைய தொடர்பு இருக்குமே!!! ப்ளீஸ் சுசி.. நீதான் எனக்கு உதவி செய்யனும்” என்ற கெஞ்சலோடு முடித்தார்
“ஹ்ம்ம்ம் சரி சரி செஞ்சு தொலைக்கிறேன்.. என்ன செய்ய???” என்று சலித்து கொண்டார் சுசிலா
“ரொம்ப நன்றி சுசி... அப்புறம் அந்த வாடகை தாய்.... இல்ல இல்ல நம்ம வீட்டு வாரிசை சுமக்க போற பொண்ணு எப்படி இருக்கனும் தெரியுமா?? ..
“திருமணம் ஆகாத பொண்ணா, லட்சணமா, குடும்பத்துக்கு ஏத்தவளா, பணத்துக்காக இதை செய்யாமல் ஒரு சேவையா செய்யறவளா இருக்கனும்” என்று அடிக்கி கொண்டே போனார் ஜானகி
“ஹே ... நிறுத்து... நிறுத்து ... என்னடி நீ!!! வாடகை தாயை தேடுறியா?? இல்லை உன் வீட்டுக்கு மறுமகளை தேடுறீயா??? இத்தனை கன்டிசன் போடற... இப்படியெல்லாம் பார்த்தா உனக்கு இந்த ஜென்மத்துல யாரும் கிடைக்க மாட்டாங்க...”
“ஹ்ம்ம்ம்ம் எனக்கு மறுமகளா கூட்டிட்டு வரணும்னு தான் ஆசை.. ஆனால் இந்த ஆதி ஒத்துக்க மாட்டேங்குறானே” என்று மனதுக்குள் புலம்பியவர்..
“நீ தான சொன்ன சுசி.. அந்த பொண்ணோட குணமும் அந்த குழந்தைக்கு வரும்னு.. அப்ப நல்ல குணமுல்ல பொண்ணா இருந்தாதான நம்ம வாரிசும் நல்ல படியா இருக்கும்...
ப்ளீஸ் சுசி.. நீ தான் உதவி செய்யனும்.. எப்படியாவது நான் சொன்ன மாதிரி பொண்ணா கண்டுபிடி.. எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை”
“சரி ஜானு... முயற்சி செய்து பார்க்கலாம்.. நான் இப்ப ஹாஸ்பிட்டல் கிளம்பனும்.. அப்புறம் பார்க்கலாம்” என்று போனை வைத்தார்...
“முருகா!! எப்படியாவது நான் நினைக்கிற மாதிரி பொண்ணை காட்டு.. அப்பதான் நான் நினைத்திருக்கிற திட்டம் நிறைவேறும்” என்று வேண்டி கொண்டார்...
பேருந்து நிறுத்தத்தில் பாரதியின் குடும்பம் பேருந்து வருகைக்காக காத்துகொண்டிருந்தனர்.. அப்பொழுது ஈஸ்வர்
“பாரதி.. நீ மட்டும் எப்படி தனியா அவ்வளவு தூரம் போவ... நானும் கூட வர்ரேன்.. உன்னை கொண்டு வந்து விமான நிலையத்தில் விட்டுட்டு வர்ரேன்” என்று கூறி பாரதிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தான்...
அதை கேட்டதும் பாரதி அதிர்ந்து போய்
“ஐயோ!! இது என்ன இவர் புது பிரச்சனையை ஆரம்பிக்கிறாரே.. இவர் கூட வந்தால் நான் சிங்கப்பூர் போகலைனு தெரிஞ்சுடுமே!!.. எப்படி இவரை தடுப்பது “ என்று அவசரமாக யோசித்தாள்...
பின் அவரை பார்த்து
“பரவாயில்லை மாம்ஸ். நானே போயிக்கிறேன். கோயம்பேடு போனால் அங்கிருந்து என்னை கூட்டிட்டு போய்டுவங்க.. “
மாப்பிள்ளை கூறியதை கேட்டதும் பாரதியின் அப்பாவும்
“இல்லை பாப்பா.. மாப்பிள்ளை சொல்றதுதான் சரி.. நீ அவ்வளவு தூரம் தனியா போக வேண்டாம்.. அவரும் கூட வரட்டும்”
“என்னப்பா.. நான் என்ன சின்ன குழந்தையா... நான் இரண்டு முறை தனியா தான சென்னைக்கு போய் வந்திருக்கேன்.. திருச்சியில் ஏறினா நேரா சென்னையில தான் நிறுத்துவாங்க..
அதில்லாம மாமா அங்க வந்திட்டா மஹா இங்கு தனியா இருப்பா” என்று சமாளிக்க முயன்றாள்..
“அப்படீனா நீ பாரத்தையாவது கூட்டிட்டு போ “
“அவன் சென்னைக்கு புதுசு பா... அவன் எப்படி திரும்ப வருவான்.. அதில்லாமல் அவன் உங்களை பார்த்துக்க இங்க இருக்கனும்.. டாக்டர் உங்களை பத்திரமா இருக்க சொல்லி இருக்காங்க.. ஏதாவது ஒன்னுன்னா அம்மா தனியா எப்படி சமாளிப்பாங்க..
நான் தனியாவே போய்க்கிறேன் .. நீங்க யாரும் வர வேண்டாம்” என்று ஒரு வழியாக அனைவரையும் அடக்கினாள்....
“மாமா.. உங்களை நம்பிதான் இவங்கள விட்டுட்டு போறேன்.. ஏதாவது அவசரம் னா உடனே வந்து உதவி பண்ணுங்க..”
“கண்டிப்பா பாரதி.. நீ சொல்லனுமா.. நான் பாத்துக்கறேன்..
ஆமா, சிங்கப்பூர்ல எங்க தங்க போற.. என் ப்ரெண்ட் ஒருத்தன் அங்கு இருக்கான்.. உன்னை வந்து பார்க்க சொல்றேன் “ என்று அடுத்த அதிர்ச்சியை கொடுத்தான்..
“ஐயோ !!! இந்த மாமா என்னை மாட்டிவிடாமல் விட மாட்டார் போல இருக்கே.. முருகா இவர்கிட்ட இருந்து என்னை காப்பாத்து” என்று வேண்டிகொண்டே
“எனக்கு இன்னும் எந்த இடம் ங்கிற விவரம் தெரியலை மாமா.. நான் போய் செட்டில் ஆனதுக்கப்புறம் எல்லா டீடெயுலும் அனுப்பறேன்” என்று ஒருவாறு சமாளித்தாள்..
அதற்குள் பேருந்து வரவும்
“அப்பாடா .. தப்பிச்சேன்” என்று மனதினுல் சொல்லிகொண்டே தன் பெட்டிகளை எடுத்தாள்.. மீண்டும் ஒருமுறை அனைவரும் அவளுக்கு ஆசி வழங்கி அறிவுரைகள வழங்கி கை அசைத்து விடைபெற்றாள்..
மணியும் பேருந்தின் பின்னாலே சிறிது தூரம் ஓடி வந்தான். பேருந்து நகர்ந்ததும் மெதுவாக கை அசைத்தவள் தன் குடும்பம் சிறு புள்ளியாக மறையும் வரை கை அசைத்து கொண்டே இருந்தாள் கண்களில் நீருடன்...
பேறுந்து வேகமாக நகர்ந்ததும் மெல்ல சன்னலில் இருந்து தலையை திருப்பி தன் அருகில் இருந்தவரை பார்த்தாள்..
பார்த்ததும் அதிர்ந்து தான் போனாள்.. பாரத் தான் அவளருகில் அமர்ந்து சிரித்து கொண்டிருந்தான்..
“இவன் எப்ப பஸ்ல ஏறினான் “ என்று புரியாமல் அவனை பார்த்தாள்..
“நீ எங்கடா?? எப்படா ஏறின??? ” என்று உளறினாள்..
“ஹீ ஹீ ஹீ நீ பாட்டுக்கு இந்த ஊரை பிரிய முடியாது, குடும்பத்தை பிரிய முடியாதுனு மனசு மாறி பாதில இறங்கி வந்துட்டீனா.. அப்புறம் என்னோட சிங்கப்பூர் லிஸ்ட் என்னாகறது??? ..
அதான் உன்னை கொண்டு போய் சென்னை பஸ் ல ஏத்தி விட்டாதான் எனக்கு நிம்மதி.. அதான் நானும் கூடவே ஏறிட்டேன் “ என்று சிரித்தான் ..
“அதான பார்த்தேன்.. எங்கடா அக்கா பாசத்தால தான் நீ கூட வர்ர்ர்ர்ரீயோனு “ என்று இழுத்தாள்
“ஹ ஹ ஹா பாசமா?? .. அப்பாடா.. இப்பதான் நான் நிம்மதியா இருப்பேன்.. இனிமேல என்னை யாரும் திட்ட மாட்டாங்க...அப்பாகிட்ட மாட்டிவிட மாட்டாங்க.. இனிமேல் நான் தான் இங்கு ராஜா...”.என்று தன் சட்டையின் காலரை தூக்கிவிட்டு கொண்டான்
“ ராட்சசி... எத்தனை தடவை காலைல எழுந்து படிக்கலைனு என் மேல தண்ணிய கொட்டி என்னை எழுப்பி இருப்ப... இனிமேல் உன் தொல்லை இல்லாமல் நான் ஜாலியா இருப்பேனே!!! “ என்றவன் முடிக்கும் முன்பே அவனின் கண்கள் கலங்கியது...
அதை கண்டு கொண்ட பாரதி
“ஆஹா... ஜாலியா இருப்பவன் கண்ணு மட்டும் ஏப்பா கலங்குது இப்படி?? விரல் சூப்பி பாரத் இப்போ அழு மூஞ்சி பாரத் ஆகிட்டான்.. “ என்று அவனை கிண்டல் செய்தாள்..
“நான் ஒன்ணும் அழலை... அது.... என் கண்ணு வேர்க்குது!! “ என்றவாறே கண்ணை துடைத்து கொண்டவன்
“நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் பாரதி.. இவ்ளோ நேரம் நான் பேசினது எல்லாம் சும்மா... வீட்டில இருக்கிறவங்களை சமாதானம் செய்யத்தான்..இல்லைனா ஒரே அழுகாச்சி காவியமா இருந்திருக்கும்.... அவங்களை சமாளிக்க தான் அப்படி பேசினேன். But .. really I will miss you Bharathi… ” என்று தன் அக்காவின் தோழில் சாய்ந்து கொண்டான் ..
“டேய்.. எனக்கு தெரியாதா… நான் வளர்த்த என் தம்பியை பற்றி!!! .. நீ வேணும்னுதான் அப்படி ஓட்டிகிட்டு இருக்கிறனு எனக்கும் தெரியும்.. “
“ஹ்ம்ம்ம் பேசாமல் நான் உனக்கு முன்பே பிறந்திருக்கலாம்.. உன் இடத்தில் இருந்து நம்ம குடும்பத்தை நான் தாங்கி இருப்பேன் இல்ல.. நீ இப்படி தனியா சிங்கப்பூர் வரைக்கும் வேலைக்காக போக வேண்டியது இருக்காது இல்லை.. “
“இல்லைடா.. இப்பல்லாம் வேலைக்காக, படிப்புக்காக னு எத்தனை பொண்ணுங்க தனியா வெளிநாடு போறாங்க தெரியுமா??? நம்மள மாதிரி கிராமத்துல தான் பொண்ணுங்களை ஊரை தாண்டி அனுப்பறதுனா பயந்துக்கறாங்க...
உன் அக்கா யாரு?? தைரியமான பொண்ணாக்கும்...சிங்கப்பூர் எல்லாம் ஒரு தூசிடா!! இப்ப என்ன ஒரு வருஷம்தான.. சீக்கிரம் ஓடிடும்.. அதுக்கப்புறம் நான் வந்து இங்கயே இருக்க போறேன்..
நீ அதெல்லாம் யோசிச்சு குழப்பிக்காத. நல்லா படி. அப்பதான் நல்ல காலேஜ் சேர முடியும்.. நல்ல காலேஜ் கிடைத்தால் தான் சீக்கிரம் வேலை கிடைக்கும்,..
“நீ வேலைக்கு போய்ட்டீன்னா நான் ப்ரீ ஆகிடுவேன்.. அப்புறம் இந்த அக்காவை நல்லா பார்த்துக்கலாம்.. பாத்துப்ப இல்ல?? ? என்று சிறித்தாள்..
“கண்டிப்பா பாரதி..உன்னை மட்டும் இல்லை.. இந்திரா, அம்மா, அப்பா, ஆயா எல்லாரையும் நல்லா பார்த்துப்பேன்.. அதுக்காவது நான் நல்லா படிப்பேன்..”
“ஹ்ம்ம்ம் இது போதும் டா எனக்கு” என்று நெட்டி முறித்தாள் தன் தம்பியை..
பேருந்து இப்பொழுது அடுத்த நிறுத்தத்தில் நிற்கவும் ஒரு வயதான பாட்டி ஏறி உள்ளே வந்தார்..
அவரை கண்டதும் பாரத் எழுந்து அவர் அமர இடம் கொடுத்தான்..
“ரொம்ப நன்றி ப்பா” என்றவாறெ பாரதியின் அருகில் அமர்ந்தவர் கண்களை சுருக்கி தன் அருகில் இருந்த பாரதியை பார்த்தார்..
“யாரு.. பாரதி பொண்ணா ?? நல்லா இருக்கியா பாரதி “ என்றார்..
“நல்லா இருக்கேன் ஆயா.. நீ எப்படி இருக்க?? .. உன் கால்வலி எப்படி இருக்கு??? ”
“எனக்கென்னடீ மா.. காடு வா வாங்குது.. வீடு போ போங்குது... இன்னும் அதுக்கான நேரம் தான் வரமாட்டேங்குது..
கால் வலி இப்ப பரவாலை.. நீ வாங்கி குடுத்தியே ஒரு தைலம் அதை போட்டதுக்கப்புறம் வலி குறைந்சிடுச்சு.. மஹராஷியா இருப்ப “
“அது இருக்கட்டும் ஆயா. இப்ப எங்க தனியா கிளம்பிட்ட?? .. “ என்று அக்கறையாக விசாரித்தாள்
“தனியா போகாம என்ன பண்றது.. என்னை இப்படி தனியா விட்டுட்டு அந்த மனுஷன் முன்னாடியே போய்ட்டாரே..” என்று கண்களை கசக்கினார்
“அதுக்குதான் தாத்தாவை ரொம்ப படுத்த கூடாதுங்கறது. பார். உன்னை இப்படி அம்போனு விட்டுட்டு அவர் ஜாலியா வேற ஆளோட டூயட் பாட மேல போய்ட்டார்ர்.. “ என்று சிரித்து அவரை இயல்பாக்க முயன்றாள்
“வாயாடி ... உங்கிட்ட யாரு வந்து மாட்ட போறானோ??? “
“டவுன் ஆஸ்பத்திரியில கண்ணுக்கு பார்க்கறாங்களாம்.. அதான் இந்த கண்ணை கொண்டு போய் காட்டிட்டு வந்திடலாம்னு போறேன்...கொஞ்ச நாளாவே இந்த கண்ணு சரியாவே தெரிய மாட்டேங்குது பாரதி “
“எங்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லை. நான் கூட்டிட்டு போயிருப்பேன் இல்லை ஆயா.”
“நீதான் என்கயோ சீமைக்கு போறதா சொன்னாங்களே.. உன்னை எதுக்கு தொந்தரவு பண்ணனும் னுதான் உன்னை பார்க்க வரலை..”
“நீ என் தாயி அவ்வளவு தூரம் போகணும். நம்ம ஊர்ல இல்லாத வேலையா?? “
“அதில்ல ஆயா.. அங்க போனா நம்ம ஊர்ல மூனு வருசம் சம்பாதிக்கிறத ஒரே வருசத்தில சம்பாதிச்சிடலாம். அதுக்கப்புறம் இங்க வந்து ஏதாவது ஒரு வேலை பார்த்துக்கலாம்..
“என்னமோ போ!! ..எல்லாரும் சீக்கிரம் காசு சேர்க்கனும்னு ஓடி ஓடி வாழ்க்கையில சந்தோஷத்தை தொலைச்சுடறாங்க!! பாரு.. நம்ம ஊரே இப்ப வெறிச்சோடி போச்சு...எல்லாரும் சீக்கிரம் காசு சேர்க்கனும்னு பட்டணத்து போய்ட்டாங்க..என்னத்த சொல்ல...
“சரி டி மா பாத்து போய்ட்டு வா.. ஜாக்கிறதையா இரு.. அப்புறம் அங்கயே மாப்பிள்ளையை எதுவும் பிடிச்சிட்டு வந்திராத.. .. பாவம்.. நம்ம உள்ளூரு பயலுங்க” என்று தன் பொக்கை வாயில் சிரித்தார்..
“ஐ!!! இது நல்ல ஐடியா ஆயா.. பேசாமல் அங்கயே ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறேன்.. நம்ம ஊர்ல எனக்கு பொருத்தமா யார் இருக்கா. எல்லா வத்தலும் தொத்தலுமா இருக்கானுங்க. நான் சொல்றது சரிதான? “ என்று கண்ணடித்தாள்..
“நீ செஞ்சாலும் செய்வ டீ..வாயாடி .. ஆமா உன் அப்பன் எப்படி உன்னை விட்டுட்டு இருக்க போறான்.. நீனா அவனுக்கு உசிராச்சே “
“அதெல்லாம் இருந்திடுவார் ஆயா.. ஒரு வருசம்தான” என்று வாய் சொன்னாலும் மனம் கனத்தது அவளுக்கு..
“ஹ்ம்ம்ம் நீ இல்லாம இந்த ஊரே வெறிச்சினு இருக்கும்.. நீ உன் அப்பாயி (அப்பவின் அம்மா)மாதிரி.. நீ இருக்கிற இடம் கலகலப்பா இருக்கும்
உன் அப்பாயிம் அப்படிதான்.. அவ இருந்தா சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.. நானும் அவளும் எப்பவும் ஒன்னாவே சுத்திகிட்டு இருப்போம் “ என்று பாட்டி தன் பழைய கதைகளை பேச பாரதி அதை சுவராசியமாக கேட்டு கொண்டெ திருச்சி பேருந்து நிறுத்தத்தை அடைந்தனர்..
“சரி ஆயா. நீ இந்த பஸ் லயே இரு.. தம்பிய என்னை பஸ் ல ஏற்றி விட்டுட்டு வந்து உன்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக சொல்றேன்.. நீ தனியா போகாத..” என்றாள் பாரதி
அப்பொழுது தான் தன் அருகில் நின்று கொண்டிருந்த பாரத்தை கவனித்தார் அந்த பாட்டி..
”யாரு இது உன் பொறந்தவனா.. இவ்வளவு உசரமா வளர்ந்துட்டான்.. சின்ன வயசில பார்த்தது”
“ஆளு தான் வளத்தி ஆயா.. ஆனால் இன்னும் கை சூப்பறான்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லி சிரித்தாள்
“போதும் டீ ... நான் கை சூப்பறது இந்த ஊர் முழுக்க டமாரம் அடிச்சு சொல்லுவ போல இருக்கு.. இதுக்காகவே இந்த பழக்கத்தை விட்டு தொலைக்கிறேன்” என்று புலம்பி கொண்டே பையை கையில் எடுத்தான்
“பார்க்கலாம்.. பார்க்கலாம்.. நான் தினமும் போன் பண்ணி கேட்பேன்.. நீ விட்டுட்டியானு” என்று தன் தம்பியை வம்பு இழுத்து கொண்டெ சென்னை பேருந்து நிற்கும் இடத்தை அடைந்தனர்..
அங்கு பேருந்தில் அனைவரும் ஏறி அமர்ந்து இருக்க, முன் பதிவு செய்ததால் இவளுக்காக மட்டும் காத்து கொண்டிருந்தது...
அதை கவனித்தவர்கள் வேகமாக பேருந்து அருகில் ஓடினர்..
கண்டக்டர் தெரிந்தவர் என்பதால் அவளுக்காக பேருந்தை நிறுத்தி வைத்திருந்தார்..
“என்ன பாரதி. இவ்வளவு லேட்டா வா வரது?? “
“சாரி ணா.. எங்க ஊர் பஸ் கொஞ்சம் லேட்டாயிடுச்சு... “
“சரி சரி.சீக்கிரம் ஏறு “
என்றதும் பாரதியும் தம்பியும் அவசரமாக ஏறி பெட்டி பைகளை வைத்தனர்..
அதற்குல் பாரத் இறங்கி
“அண்ணா ஒரு நிமிடம் நிறுத்தி இருங்க . இதோ வந்திடறேன்” என்று அவசரமாக இறங்கி ஓடினான்..
இவன் எதுக்காக ஓடறான் என்று புரியாமல் பார்த்த வாறெ தன் உடைமைகளை சரியாக அடுக்கி வைத்துகொண்டிருந்தாள்..
திரும்பி வந்தவன் “பாரதி இத வச்சுக்கோ” என்று கடல மிட்டாய், முறுக்கு பாக்கெட்களை பேருந்தின் சன்னல் வழியாக கொடுத்தான்..
கடல மிட்டாய், முறுக்கு என்றால் அவளுக்கு கொள்ளை பிரியம்.. அவள் அப்பா எங்கு சென்றாலும் அவளுக்கு என்று தனியாக வாங்கி வருவார்.. அவள் வெளியூர் போகும் சமயங்களில் இது மாதிரி தான் நிறய வாங்கி பேருந்தில் சாப்பிட்டு போக சொல்லி கொடுப்பார்.
பாரத் அதை ஞாபகம் வைத்து வாங்கி தரவும் அவளுக்கு கண்ணை கரித்தது...
அதற்குள் பேருந்து நகரவும் தம்பிக்கு கை அசைத்து பிரியா விடை பெற்றாள்..
பேருந்து வேகமாக நகரவும் அந்த ஊர் மெல்ல மெல்ல அவளை விட்டு பின்னோக்கி சென்றது.. ஒவ்வொரு இடம் கடந்து போகவும் அவள் மனம் கனத்து போனது... மெல்ல தலையை இருக்கையின் பின்னால் சாய்த்து கண்களை மூடி கொண்டாள்..அந்த ஊரின் காற்றை மெல்ல இழுத்து தன்னுள்ளே வைத்துகொண்டாள்..
“இனிமேல் இங்க திரும்ப வரமுடியுமா??? இந்த காற்றை சுவாசிக்க முடியுமா.. இந்த ஊர், இந்த மண், இந்த மக்களை மறுபடியும் பார்க்க முடியுமா???
எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம்?? .. ஏன் அப்பாவுக்கு இப்படி ஆகணும்?? .. ஏன் நான் அன்று கோயிலுக்கு போகனும்??? ஏன் அந்த அம்மாவை பார்க்கனும் ??? ஏன் அவங்க கேட்டதுக்கு ஒத்துக்கிட்டேன் “ என்று விடை தெரியாத பல ‘ஏன்’ கள் அவள் முன்னே வந்து நின்றன...
எதற்கும் விடை தெரியாமல் குழம்பியவளின் நினைவுகள் தானாக பின்னோக்கி சென்றன....
அருமையான நகர்வு
ReplyDeletePala yean galuku vedi therinja dhan nalla irukum.yenga
ReplyDelete