காதோடுதான் நான் பாடுவேன்-8


அத்தியாயம்-8 

றுநாள் அதிகாலையில் கண் விழித்த நிகிலன் எதேச்சையாக சோபாவை பார்க்க அவன் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்... தன் கண்ணை கசக்கி விட்டு மீண்டும் உற்று பார்க்க, அங்கு மது போர்த்தியிருந்த போர்வை விலகி அவள் முகம் மட்டும் வெளியில் தெரிந்தது...

அவள் முகத்தை உற்று பார்த்தவன், அவள் தன் வலது கை கட்டை விரலை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு சூப்பிக் கொண்டே உறங்குவது தெரிந்தது...

அதை கண்டதும் அவனுக்கு தன் தங்கை அகிலாவின் நியாபகம் வந்தது.. அவள் இப்படித்தான் எட்டாம் வகுப்பு வரைக்குமே கை விரலை வாய்க்குள் விட்டுக் கொண்டே தான் தூங்குவாள்....அவளை அதட்டி, உருட்டி, மிரட்டி ரொம்ப கஷ்டபட்டுதான் அந்த பழக்கத்தை மறக்க வைக்க முடிந்தது...

இவளும் அதே மாதிரி இருக்க, ஒரு நிமிடம் நின்று அவளின் அந்த குழந்தைதனமான முகத்தையும் அவள் விரல் சூப்பி தூங்கும் அழகையும் ரசித்தவன் பின் தன் தலையை உலுக்கி கொண்டே

“சே...வர வர இந்த அப்பனுங்க தொல்ல தாங்க முடியல....பொண்ணு பிறந்திட்டா என்னமா வச்சு தாங்கறது... தேவதை, இளவரசி, பிரின்ஸஸ் னு ஓவரா செல்லம் கொடுத்து கொஞ்சி ஒன்னுமே தெரியாம வளர்க்க வேண்டியது...

அப்புறம் அதுங்களும் அப்படியே வளர்ந்து அதற்கு பிறகு யாருக்கும் அடங்காம அவளுங்க போடற ஆட்டத்தை வச்சு சமாளிக்க முடியாம எப்படா 18 வயசு ஆகும் னு பார்த்து கிட்டே இருந்துட்டு 18 வயது முடிஞ்ச உடனே கல்யாணம் ன்ற பேர்ல அடுத்தவன் தலையில கட்டிட்டு அவங்க கடமை முடிஞ்சதுனு கைய கழுவிடறாங்க...

இதுங்கள கட்டிகிட்டு காலம் பூரா வச்சு சமாளிக்கிற அந்த ஹஸ்பன்ட் கள் பாவம்...

இவ அப்பன் இன்னும் மோசம் போல...வாயில விரலை வச்சு சூப்பறத கூட தடுக்காம அப்படியே வளர்த்தி வச்சிருக்கார்....

இப்பதான் தெரியுது ஏன் இவளுக்கு அவசர அவசரமா கல்யாணம் பண்ணி இங்க தள்ளி விட்டார் னு....” என்று மெல்ல சிரித்துக் கொண்டே குளியல் அறைக்குள் சென்றான்...

பின் வெளியில் வந்தவன் கிளம்பி ஜாகிங் சென்று விட, மெல்ல கண் விழித்த மது , தான் வாயில் விரல் வைத்திருப்பதை கண்டு அவசரமாக எடுத்துக் கொண்டாள்...

போர்வை விலகியிருக்கிறதா என்று அவசரமாக ஆராய்ந்தவள் அது விலகி தன் முகம் வெளியில் தெரிந்ததை கண்டு

“ஐயோ!!! அந்த விருமாண்டி பாத்திருக்குமே..!!! . போச்சு.. மானம் போச்சு... இதுக்கு வேற என்ன திட்ட போகுதோ??

எவ்வளவு முயன்றாலும் இந்த பழக்கத்தை விட முடியலையே...

எல்லாம் இந்த அம்மாவால வந்தது.. சின்ன வயசுலயே என்னை மிரட்டி திட்டி இந்த பழக்கத்தை விட வைக்காமல் நான் அழுவறேனு அப்படியே விட்டுட்டாங்களே... இப்ப அதுவே அப்படியே தொத்திகிச்சு...

எல்லாம் உன்னால தான் மா... I hate you மா…” என்று தன் அன்னையை திட்டிகொண்டே குளியல் அறைக்குள் சென்று ரெப்ரெஸ் ஆகி வந்தவள் பின் அகிலா அறைக்கு சென்று தன் துணிகளை எடுத்து வந்து அங்கு காலியாக இருந்த ஒரு அலமாரியில் அடுக்கினாள்...

பின் குளித்து முடித்து ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு கீழ சென்று தன் மாமியார்க்கு உதவி செய்தாள்...

வெளியில் சென்றிருந்த நிகிலன் திரும்பி வந்து பின் தன் ட்யூட்டிக்கு செல்ல கிளம்பி கீழ வந்தவனுக்கு வரவேற்பறையில் மதுவின் சிரிப்பு சத்தம் கேட்டது.... என்றும் இல்லாமல் அவள் குரலில் உற்சாகம் இருக்க, அவனும் மாடியில் இருந்து இறங்கி வரும்பொழுதே வரவேற்பறையை உற்று பார்க்க அங்கு மதுவின் பெற்றோர் அமர்ந்திருந்தனர்...

வாயெல்லாம் பல்லாக தன் அப்பாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு அவரிடம் கொஞ்சி கொண்டிருந்தாள் மது... அவள் முகத்தில் அவ்வளவு ஒரு பளிச்சென்று புன்னகை.. இதுவரை பயந்த முகமாவே பார்த்தவன், அவளின்பளீரென்ற சிரிப்பை ரசித்து கொண்டே கீழ இறங்கி சென்றான்...

அவனை கண்டதும் மதுவின் பெற்றோர் எழுந்து வணக்கம் சொல்ல, மதுவும் கூடவே எழுந்து கொண்டாள்.. அவள் முகத்தில் அதுவரை இருந்த அந்த சிரிப்பு உடனே மறைந்தது.... தன் தலையை குனிந்து கொண்டாள்...

அவர்கள் அருகில் வந்தவன்

“வாங்க மாமா... வாங்க அத்தை.. எப்படி இருக்கீங்க ?? .. எப்ப வந்தீங்க..?? “ என்றான் சிரித்த முகமாக...

அதை கண்டு மது மயக்கம் போடாத குறைதான்...தன் கையை கிள்ளி இது கனவா ?? இல்லை நிஜமா?? என்று செக் பண்ணி கொண்டாள்...அகிலாவுக்கு மதுவின் நிலை புரிய தன் தலையை குனிந்து சிரித்து கொண்டாள்...

“இந்த விருமாண்டிக்கு இப்படி எல்லாம் கூட பேச, சிரிக்க தெரியுமா?? “ என்று ஆச்சர்யமாக நிமிர்ந்து அவனை பார்த்தாள் மது...

அவனோ இவளை கண்டு கொள்ளாமல் அவர்களுடம் பேசி கொண்டிருக்க, சிவகாமி வந்து அனைவரையும் சாப்பிட அழைத்தார்...அவருக்குமே தன் மகன் அவர்களிடம் புன்னகைத்து பேச காண, நிம்மதியாக இருந்தது...

டைனிங் டேபிலை அடைந்ததும் எப்பவும் போல மதுவும் அகிலாவும் அருகில் அமர்ந்து கொள்ள மதுவின் அருகில் அவள் அன்னை சாரதாவும் பின் சண்முகம் அவரை தொடர்ந்து நிகிலனும் அமர்ந்து இருக்க, சிவகாமி அனைவருக்கும் பரிமாறினார்....

அதை கண்ட சாரதா மதுவின் காதருகில் குனிந்து

“என்ன மது ?? பெரியவங்க அவங்க பரிமாற நீ வந்து உட்கார்ந்து கிட்ட.... அவங்கள உட்கார வச்சு நீ செய்யறதில்லையா இதெல்லாம்..?? ” என்று மெல்ல முனகினார் குரலில் கொஞசம் கோபமாக....

அதை கேட்டு

“ஆங்க் “ என்று முழித்தாள் மது.. எப்பவும் அத்தை தான் மா செய்வாங்க.. நம்ம வீடலயும் நீதான பரிமாறுவ... இப்ப என்ன புதுசா நான் செய்ய..?? “ என்றவளை சாரதா முறைக்க, அதை கண்டு கொண்ட சிவகாமி

“என்ன சாரதா?? எதுக்கு என் மருமக காதை கடிச்சுகிட்டு இருக்க ?? “ என்று சிரித்தார்... சிவகாமி சாரதாவை விட கொஞ்சம் பெரியவர் என்பதால் உரிமையோடு பெயர் சொல்லி அழைப்பார்...

சாரதாவுக்கும் இந்த திருமண பேச்சை ஆரம்பித்ததில் இருந்தே, சிவகாமி, பையன பெத்தவர், மாமியார் என்ற பந்த இல்லாமல் இயல்பாக பழகியது கண்டு மகிழ்ந்து போயிருந்தார்....அவரின் கலகப்பான பேச்சை கேட்ட பிறகு இவர் தன் பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை வந்த பிறகே இந்த திருமணத்தை முடிவு செய்தது...

ஆனாலும் திருமணத்திற்கு பிறகு எப்படி தன் மகள் இங்கு அட்ஜஸ்ட் பண்ணி போறாளோ என்று பயந்துகொண்டே தினமும் தன் மகளிடம் போன் பண்ணி பேசுவார்..

மது அவரிடம் பேசும் பொழுதெல்லாம் தன் கணவனை விட அவள் மாமியாரை பற்றியும் தன் நாத்தனாரை பற்றியும் தான் அதிகம் பேசுவாள்.. அதிலிருந்தே அவர்கள் அவளை நன்றாக பார்த்து கொள்வது புரிய இன்னும் மகிழ்ந்து போனார்....

தன் நினைவுக்கு வந்தவர்

“இல்ல அண்ணி.... உங்கள உட்கார வச்சு இவ செய்யறத விட்டு.... “என்று இழுத்தவர் “அதான் எடுத்து சொல்லி கிட்டிருக்கேன்... “ என்று இழுத்தார் சாரதா....

அதை கேட்ட நிகிலன்

”ஹ்ம்ம்ம் அப்படி சொல்லுங்க அத்தை...இந்த அம்மா அவளுக்கு ரொம்பவும் செல்லம் கொடுக்கறாங்க... இவள எந்த வேலையும் செய்ய விடாம இந்த அம்மாவே எல்லாம் இழுத்து போட்டுகிட்டு செய்யறதோட இல்லாம உட்கார வச்சு ஊட்டி வேற விடறாங்க.. அவ எப்ப இதெல்லாம் கத்துக்கிறது?? “ என்றான் முகத்தை இயல்பாக வைத்து கொண்டு...

“டேய்.. அவ சின்னு பொண்ணுடா... எல்லாம் இப்பயே கத்துகாட்டி என்ன... கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறா... “ என்று மருமகளுக்கு சப்போர்ட் பண்ண, மதுவின் பெற்றோர்களுக்கு உச்சி குளிர்ந்து போனது...

எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படி ஒரு மாமியார். ??.. கல்யாணம் ஆன உடனே வீட்டிற்கு வந்த மருமகளை பற்றி குற்ற பத்திரிக்கை வாசிக்கும் மாமியார்கள் நடுவில் தங்கள் சம்மந்தி அவர் மருமகளை விட்டு கொடுக்காமல் பேச , மனம் நிறைந்து போனது இருவருக்கும்...

மது தினமும் தன் அன்னையிடம் பேசும் பொழுதும் தன் மாமியாரை பற்றி நிறைய சொல்லுவாள்.. அவள் பேச்சிலிருந்தே தங்கள் மகள் புகுந்த வீட்டில் பொருந்தி விட்டாள் என்று புரிந்ததுதான்.. ஆனாலும் இன்று நேரில் காண்கையில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது இருவருக்கும்...

பின் அனைவரும் பேசி கொண்டே சாப்பிட, அப்பொழுது சண்முகத்திற்கு மது தனியாக ஆட்டோவில் சென்றது நினைவு வர, தன் மருமகனிடம் திரும்பியவர்

“மாப்பிள்ளை... மது கொஞ்சம் செல்லமா வளர்ந்துட்டா... வெளில எங்கயும் தனியா போனதில்லை... அவ கொஞ்சம் நல்லா பழகற வரைக்கும் அவளை தனியா எங்கயும் அனுப்பாதிங்க.... நீங்க பிசியா இருந்தா சொல்லுங்க.. நானே வந்து கூட்டிட்டு போறேன்.. “என்றார் தயங்கியவாறு...

அதை கேட்ட மது

“ஐயோ... இந்த அப்பா சும்மா இல்லாம இந்த சிடுமூஞ்சி விருமாண்டி கிட்ட போய் இத சொல்லி வைக்கிறாரே... போச்சு.. எனக்கு நல்லா மண்ட கபடி கிடைக்க போகுது....” என்று மனதுக்குள் புலம்பியவள் தன் தந்தையிடம் கண்ணால் ஜாடை காட்டினாள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று...

அவரோ மதுவை கவனிக்காமல் மாப்பிள்ளையை பார்த்து கொண்டிருந்தார்..

தன் மாமனார் சொன்னதை கேட்ட நிகிலன்,

“ஹ்ம்ம்ம் நீங்க பொண்ணை செல்லமா வளர்த்தி வச்சிருக்கிற லட்சணம் தான் தெரியுதே.... இன்னும் வாயில் விரலை வச்சுகிட்டு இருக்கா...” என்று மனதுக்குள் திட்டியவன், தன் கோபத்தை மட்டுபடுத்தி கொண்டு மெதுவாக

“மாமா...உங்க வீட்ல அவ எப்படி வேணாலும் வளர்ந்திருக்கலாம்... ஆனா இங்க வந்ததுக்கப்புறம் சிலதெல்லாம் எங்க நடைமுறைப் படி இருக்கணும்...

அவள நீங்க கைக்குள்ளயே வச்சு வளர்த்ததால அவளுக்கு உலகமே தெரியாம வளர்ந்திருக்கா.. இப்படி இருந்தால் பின்னால் கஷ்டம்.. பின்னாடி எதுக்கும் யாரையாவது டிபன்ட் பண்ணியே இருக்கணும்..

அவளுக்கு தைர்யம் வரட்டும் னு தான் தனியா அனுப்பினது.. அதோட எல்லா இடத்துலயும் எங்க டிபார்ட்மென்ட் ஆளுங்க இருக்காங்க.. நீங்க பயப்படற மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது....

அவ்வளவு ஏன் அகிலாவையே இரண்டு வருடம் முன்னாடியே தனியாதான் அனுப்பினேன்.. இப்ப அவ எவ்வளவு தைர்யமா எல்லா இடத்துக்கும் போய்ட்டு வர்றா.. அது மாதிரி இவளும் மாறிடுவா... ஆரம்பத்துல கொஞ்சம் கக்ஷ்டமா இருக்கும்... அப்புறம் எlல்லாம் சரியாகிடும்..

நீங்க எதுக்கும் கவலை படாதிங்க... நாங்க அவள பத்திரமா பார்த்துக்கறோம்.. “ என்று குட்டி லெக்சர் அடித்தான்..

“ஹ்ம்ம்ம் அப்படி சொல்லுங்க மாப்பிள்ளை... நானும் இவர்கிட்ட சொல்லி சலிச்சு போச்சு... தனியா அனுப்பி பழக்க வைங்கனு.. இவர்தான் பயந்துகிட்டு எங்க போனாலும் இவரும் கூடவே கூட்டிகிட்டு சுத்தியே இப்படி வளர்ந்துட்டா.. “ என்று தன் குறையை சமயதிதில் தீர்த்து கொண்டார் சாரதா...

தன் மனைவியை பார்த்து முறைத்த சண்முகம்,

“ஹ்ம்ம்ம் நீ மட்டும் என்னவாம்?? .. அவ க்ளாஸ்ல் யாருக்காவது உடம்பு சரியில்லைனா அந்த வாரம் முழுவதுமே அவள ஸ்கூலுக்கு அனுப்பாம வச்சுக்கல?? அனுப்பினா அவளுக்கும் ஏதாவது வந்திடுமுனு... ஏன் பக்கத்துல இருக்கிற கிரவுண்ட்க்கு கூட விட்டதில்லை கீழ விழுந்திடுவா னு...

இப்ப என்னை மட்டும் குறை சொல்ற.... ” என்று தன் பங்கிற்கு குற்ற பத்திரிக்கை வாசித்தார் சண்முகம்..

இரண்டு பேரும் மாறி மாறி குற்றம் சொல்ல,

“நல்ல குடும்பம் டா சாமி... “ என்று முனகிய நிகிலன் தன் தலையில் அடித்துக் கொண்டான் மானசீகமாக....

சிவகாமி அவர்கள் இருவரையும் சமாதானபடுத்தி வைத்தார் சிரித்து கொண்டே...

“சரி விடுங்க.. என் மருமக பயங்கர கெட்டிகாரிதான்.. சீக்கிரம் எல்லாம் கத்துக்குவா...” என்று முடித்தார்...

மதுவுக்கு நிகிலன் பேச்சை கேட்டு இன்னும் ஆச்சரியம்...

பொதுவா பெற்றவர்கள் தங்கள் பொண்ணை பத்திரமா பார்த்துக்கங்க னு சொன்னா எல்லாரும் சரி மாமா.. பார்த்துக்கறோம்னு வாய் வார்த்தைக்காவது சொல்லி சும்மா சமாளிப்பாங்க..

இவன் என்னடான்னா மாமனார் னு கூட பார்க்காமல் அப்படி செய்ய முடியாதுனு ஸ்ட்ரிக்டா சொல்றானே..

சரியான ஸ்ட்ரிக்ட் போலிஸ் போல.. “ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்...

பின் சாரதா

“மாப்பிள்ளை நாளைக்கு நீங்களும் மதுவும் மறுவீட்டுக்கு வரணும்... அண்ணி, நீங்களும் அகிலாவும் கூட வரணும்.. இந்த சம்பிரதாயம் மட்டும் தள்ளி போச்சு.. அதான் இந்த வாரம் சன்டே விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம்....அதுக்கு கூப்பிட்டு அப்படியே மதுவை பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்..” என்று அவர்கள் வந்ததிற்கான காரணத்தை சொன்னார்

“மாப்பிள்ளை…. மதுவை கூட்டிகிட்டு காலையிலயே சீக்கிரம் வந்திடுங்க.. “ என்றார்...

அதை கேட்டு நிகிலன் தன் அன்னையை பார்த்து முறைக்க, அவரோ மறுக்கவேண்டாம் என்று கண்ணால் ஜாடை செய்து கெஞ்சி கொண்டிருந்தார்....மீண்டும் அவரை காரமாக முறைத்து விட்டு,

“சரிங்க அத்தை.. “ என்றான்...

அதற்குள் அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வர, அதை அட்டென்ட் பண்ணியவன் பின் அவர்களை பார்த்து

“நான் இப்ப கொஞ்சம் அவசரமா வெளில போகணும் மாமா.. நீங்க மதியம் இருந்து சாப்டிட்டு போங்க.. சாரி.. “ என்றவாறு எழுந்து கை கழுவ சென்றான்...

மதுவும் சாப்பிட்டு முடித்திருக்க, சாரதா மதுவிடம்

“மது.. நீ போய் மாப்பிள்ளையை அனுப்பி வச்சிட்டு வா... “ என்று மீண்டும் அவள் காதை கடித்தார்...

தன் அன்னைக்கு மறுத்து சொல்ல முடியாமல் அவளும் எழுந்து கை கழுவி விட்டு அவன் பின்னால் செல்ல, அதுவரை அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த அகிலா மதுவை பார்த்து “All the best அண்ணி.” என்று மெல்ல முனகி கண்ணடித்து சிரித்தாள்...

மது அவளை முறைத்தபடியே தயங்கியவாறு நிகிலன் பின்னால் செல்ல, அவன் இவளை கவனிக்காமல் காரை அடைந்ததும் எதேச்சையாக திரும்பியவன் மது தன் பின்னால் நின்று கொண்டிருப்பதை கண்டு

“ஏய்... நீ ஏன் இங்க வந்த ??? “என்று சிடுசிடுத்தான்...

“வந்து..... அம்மாதான் உங்கள அனுப்பி வைக்க சொன்னாங்க.... “என்று மென்று முழுங்கினாள்...

“வாட்?? நான் என்ன ஸ்கூல் போற பையனா?? என்னை நீ வழி அனுப்பி வைக்க... எனக்கு போகத் தெரியும்.. நீ உள்ள போ.. “ என்று அதட்டினான்...

அவன் அதட்டலுக்கு பயந்து திரும்பி ஓடி விட்டாள் மது...

“சே.. எப்படிதான் இப்படி நிமிசத்துல மாறுவானோ?? அப்பா முன்னாடி அவ்வளவு அமைதியா பேசினான்..இப்ப திடீர்னு மீண்டும் அந்த விருமாண்டியா மாறிட்டானே... சிடுமூஞ்சி.. “ என்று திட்டி கொண்டே வாயிலை அடைந்தவள் அங்கயே தயங்கி நின்றாள்..

“இப்பயே உள்ள போனா இந்த அம்மா வேற ஆயிரம் கேள்வி கேட்பாங்க.. கொஞ்சம் நேரம் இங்கயே நின்னுட்டு போகலாம்.... “ என்று அங்கயே நின்று கொண்டிருந்தாள்....

காரை ஷெட்டில் இருந்து எடுத்து வந்தவன் மது இன்னும் வெளியில் நின்று கொண்டிருப்பதை கண்டு காரை நிறுத்தி, கார் கண்ணாடியை இறக்கி

“ஏய்... இன்னும் ஏன் வெளில நிக்கற... உள்ள போ.. “ என்று அதட்டினான்

“ஐயோ.. இந்த விருமாண்டி இன்னும் போகலையா..?? “ என்று புலம்பி கொண்டெ உள்ளே ஓடிவிட்டாள்... அவள் சென்ற பின் அவனும் தன் காரை கிளப்பி சென்றான்...

மது வேகமாக உள்ளே சென்றதும் அகிலா அவளை பார்த்து

“ என்ன அண்ணி?? வாங்கி கட்டினீங்களா?? “ என்று சிரித்தாள்....

“ஹ்ம்ம்ம்ம் சும்மா பின்னாடி போனதுக்கே திட்டுது அந்த விருமாண்டி.. “என்றவள் நாக்கை கடித்துக் கொண்டாள்.. தன் மனதுக்குள் திட்டும் பெயரை வெளியில் சொல்லி விட்டமே என்று... அகிலாவும் அதை கண்டு கொண்டு

“ஹா ஹா ஹா.. என்னது விருமாண்டியா?? சூப்பர் பேர்தான் அண்ணி... சரியாதான் வச்சிருக்கீங்க.. “ என்று கண்ணடித்து சிரிக்க, மதுவும் அசடு வழிந்து சிரித்தாள்....

மகள் அவள் நாத்தனாருடன் ரகசியமாக் பேசி சிரிப்பதை கண்ட அவள் பெற்றோர்

“பரவாயில்லை.. மது இங்க சந்தோஷமா தான் இருக்கா.. நம்ம வீட்டை விட மாமியார் வீட்ல ப்ரியா இருக்கற மாதிரி தான் இருக்கு... என்ன மாப்பிள்ளைதான் கொஞ்சம் மிரட்டுவார் போல இருக்கு.. “என்று மெதுவாக தன் மனைவியிடம் முனகினார் சண்முகம்...

“ஹ்ம்ம் நாமதான் அவளை செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கோம்... மாப்பிள்ளையாவது அவள நல்லா மிரட்டட்டும்.. அப்பதான் அவளும் நாலும் தெரிஞ்சுக்குவா...

அதோட மாப்பிள்ளை உரிமையோட மதுவை அவ னு சொல்றதுல இருந்தே தெரியுது அவர் பொண்டாட்டிய நல்லா கொண்டு வரணும்னு நினைக்கிறார் போல.... அதோட போலிஸ்காரர் வேறயா.. அதான் கொஞ்சம் மிரட்டுவார் போல இருக்கு...

இனிமேல் நம்ம பொண்ணை பத்தி கவலை இல்லங்க... மப்பிள்ளையும் சம்மந்தியும் நல்லா பார்த்துக்குவாங்க...” என்று தன் கணவனை சமாதான படுத்தினார் சாரதா....

“ஹ்ம்ம்ம் நீ சொல்றதும் சரிதான் சாரதா... ஏதோ அந்த முருகன் நல்ல இடமாதான் நம்ம பொண்ணுக்கு பார்த்து கொடுத்திருக்கான்...இல்லைனா எத்தனையோ பிரச்சனைக்கு நடுவுல கல்யாணம் நிக்காமல் நல்ல படியா முடிஞ்சுதே....

ரொம்ப நன்றி முருகா... அப்படியே அவள் நல்லா வாழ வச்சிடு.. “ என்று வேண்டிக் கொண்டார் சண்முகம்....

பின் இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு திருப்தியுடன் கிளம்பி சென்றனர்...

அன்று இரவு சீக்கிரம் வீடு திரும்பிய நிகிலன் தன் அறைக்கு வர அங்கு மது கீழ அமர்ந்து ஏதோ புத்தகத்தை படித்து பின் சில குறிப்புகளை அருகில் இருந்த நோட்டில் எழுதி கொண்டிருந்தாள்...

அவள் குறிப்பு எழுதுவதில் கவனமாக இருந்ததால் நிகிலன் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்ததை கவனிக்க வில்லை

யாரும் அங்கு இல்லை என்ற நினைப்பில தான் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை சோபாவில் போட்டு விட்டு கீழ அமர்ந்து குனிந்து குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்க, அவள் அமர்ந்து இருந்த கோலத்தை கண்டு ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டான்... ,

அவன் கட்டிய தாலி சுடிதாரின் வெளியில் வந்து ஆடிக்கொண்டிருக்க, அது அவள் அவனின் உரிமையானவள் என்று பறை சாற்றி அவனை இன்னும் அவள் பக்கம் இழுக்க, இமைக்க மறந்திருந்தான் சில விநாடிகள்...

தன்னை யாரோ உற்று பார்ப்பது போல இருக்க எதேச்சையாக நிமிர்ந்தவள் அங்கு நின்று கொண்டிருந்தவனை கண்டு அதிர்ந்து போனாள் மது ..

விநாடியில் தான் அமர்ந்திருக்கும் கோலம் உணர்ந்து அவசரமாக எழுந்து துப்பட்டாவை எடுத்து மேல போட்டு கொண்டு தலையை குனிந்து கொண்டாள் வெளிறிய முகத்துடன்...

அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவன் தன்னை கண்டு மிரண்டவளை கண்டதும் மேலும் தன்னை அவள் பக்கம் இழுக்க பார்க்கிறாள் என்று உணர்ந்து நொடியில் எரிமலையானான்....

அவள் அருகில் வந்தவன்

“அறிவிருக்கா?? இப்படிதான் அரைகுறையா உட்கார்ந்து இருப்பியா?? ஒருத்தன் வந்து நிக்கறது கூட தெரியாம எந்த உலகத்துல இருந்த?? ...

பொண்ணுங்க எப்பவும் விழிப்போட இருக்கணும்... அது அவங்க வீடா இருந்தாலுமே... கதைவை மூடாமல் இப்படிதான் உட்கார்ந்து இருப்பியா??...ஒருவேளை இப்படி எல்லாம் போஸ் கொடுத்து என்னை மயக்கலாம்னு திட்டமா?? ” என்று தன் லெக்சரை ஆரம்பித்து பொரிந்து கொண்டிருந்தான்..

அவன் திட்ட ஆரம்பித்ததும், முதல் ஒரு சில விநாடிகள் அவன் திட்டியதற்கு வருந்தியவள் அவன் மேலும் திட்டிகொண்டே போக, உடனே அகிலா சொல்லி கொடுத்த டிப்ஸ் நினைவு வந்தது...

அதன்படி மானசீகமாக ஒரு பஞ்சை எடுத்து காதில் வைத்துக் கொண்டாள்....

அதன்பிறகு அவன் திட்டுவது எதுவும் அவள் காதில் விழவில்லை... அவன் கையை நீட்டி ஆக்சனுடன் எதையோ சொல்லிக் கொண்டிருக்க, அகிலா சொன்ன மாதிரி பார்க்க காமெடியாக இருந்தது....

தன் சிரிப்பை கஷ்டபட்டு கட்டு படுத்திக் கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்...

அவன் ஒரு இரண்டு நிமிடம் கத்தி முடிக்க, அவள் தலையை குனிந்தவாறே உள்ளுக்குள் சிரித்து கொண்டிருந்தாள்....

அவன் கத்தி முடிச்சதும் கடைசியாக

“என்ன புரிஞ்சுதா?? “ என்று அதட்ட, அப்பொழுதுதான் தன் காதில் இருந்த பஞ்சை அவசரமாக எடுத்தாள் மானசீகமாக....

அவன் “என்ன புரிஞ்சுதா?? “ என்று திரும்பவும் அதட்ட,

“ஐயோ!! இந்த அகிலா பேச்சை கேட்டது தப்பா போச்சே.... இப்ப என்ன சொன்னானு தெரியலையே.. இப்ப நான் என்ன பதில் சொல்ல?? “ என்று திருதிருவென்று முழித்தவள்,

“சரி .. எதையாவது சொல்லி சமாளிக்கலாம்... “ என்று அவசரமாக யோசித்தவள்

“ஹ்ம்ம்ம் புரிஞ்சுது சார்..... “ என்றாள் தலையை குனிந்தவாறு...

அவள் முழித்ததில் இருந்தே அவளை தெரிந்து கொண்டவன்

“என்ன புரிஞ்சுது?? “ என்றான் கண்கள் இடுங்க...

“ஐயோ... விட மாட்டேங்குது இந்த சிடுமூஞ்சி... “என்று மனதுக்குள் திட்டியவள் மீண்டும் முழித்துக் கொண்டு நிக்க,

“என்ன?? நான் இவ்வளவு நேரம் கத்தினது எல்லாம் காதுல வாங்கினியா?? இல்ல அந்த அகிலா மாதிரி நீயும் காதுல பஞ்ச வச்சுகிட்டியா?? “ என்றான் மீண்டும் கூரிய பார்வையுடன்...

“சே!! போலிஸ்காரன்ங்கிறது கரெக்டா தான் இருக்கு.. நம்ம பண்ணினதை எல்லாம் கரெக்டா கண்டு பிடிச்சுட்டானே.. “ என்று மீண்டும் திட்டியவள்

“இல்ல சார்... எல்லாம் புரிஞ்சுது... இனிமேல் கவனமா இருப்பேன்.. “ என்றாள் பொதுவாக....

“”ஹ்ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..” என்று அவன் உள்ளே வர, அவள் விட்டால் போதும் என்று தன் புத்தகத்தை எடுத்து ஷோபாவில் வைத்து விட்டு கீழ ஓடி விட்டாள்....


குளியல் அறைக்குள் சென்றவன் குளித்து விட்டு இலகுவான உடையை அணிந்து கொண்டு தன் தலையை துவட்டியவாறே வெளியில் வந்தவன் அவளைத் தேட, அவள் அங்கு இல்லை...

பின் திரும்பி கண்ணாடியில் பார்த்து கொண்டே தன் தலையை துவட்டியவன் கதவை திறந்து கொண்டு மது மூச்சிறைக்க ஓடி வந்தது திரும்பாமலயே கண்ணாடியில் தெரிந்தது அவனுக்கு...

அறைக்கு உள்ளே வந்தவள் நின்று மூச்சு வாங்க, அவளை கண்ணாடியில் பார்த்தவாறே

“ஏய்... எதுக்கு இப்படி மூச்சு வாங்க ஓடி வர்ற?? என்ன வேணும்... “ என்றான்...

“வந்து... ஆங்... அத்தை நீங்க சாப்பிட வர்ரீங்களானு கேட்டுட்டு வரச் சொன்னாங்க.. “ என்றாள் தரையை பார்த்தவாறு

“சாப்பாடு வேண்டாம். பால் மட்டும் எடுத்துட்டு வா... “ என்க, அடுத்த நொடி மறைந்திருந்தாள்...

அவளின் அந்த பாவமான முகம் மீண்டும் கண்ணாடியில் தெரிவதை போல இருக்க, மெல்ல சிரித்து கொண்டான்...

கீழ சென்றவள் வேகமாக பாலை எடுத்துக் கொண்டு மேல வர, அதற்குள் அவன் கட்டிலில் அமர்ந்து கொண்டு அவள் புத்தகத்தை எடுத்து புரட்டி கொண்டிருந்தான்..

உள்ளே வந்தவள் அவன் அருகில் வந்து பால் டம்ளரை நீட்ட, பயத்தில் அவள் கைகள் நடுங்க ஆரம்பித்தன....

அவளின் நடுக்கத்தை கண்டவன் நிமிர்ந்து அவளை நேருக்கு நேராக பார்த்து

“எதுக்கு இப்படி கை நடுங்குது?? “என்றான் கண்கள் இடுங்க...

“ஐயோ.. கை நடுங்கறதுக்கெல்லாமா காரணம் சொல்ல முடியும்.. இந்த விருமாண்டிய பார்த்தாலே கை கால் எல்லாம் தானா உதறுது... “ என்று புலம்பியவள் தன் மற்றொரு கையால் நடுங்கும் கையை பிடித்து கொள்ள, அது அடங்காமல் இன்னும் ஆடியது...

“தப்பு செய்தவங்க கை தான் இப்படி நடுங்கும்.. நீ என்ன தப்பு செஞ்ச?? “ என்றான் மீண்டும் கண்கள் இடுங்க..

“ஹ்ம்ம்ம் பயத்துலயும் கை நடுங்கும்.. “ என்று அவனுக்கு கேட்காமல் முனகியவள்

“வந்து.... சாரி சார்... உங்கள பார்த்தாலே பயமா இருக்கு.. அதான் நடுங்குது .. “ என்ற உண்மையை மறைக்காமல் சொன்னாள்...

அவளின் அந்த பயந்த முகத்தை கண்டவன் கொஞ்சம் இறங்கி வந்து

“ஏன்?? என்னை பார்த்தால் புள்ள பிடிக்கிறவன் மாதிரி இருக்கா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு அவள் கையில் இருந்த பாலை வாங்கி கொண்டு ...

அவன் குரலில் இருந்த இலக்கத்தை கண்டு கொஞ்சம் தைர்யம் வந்தது மதுவுக்கு...

பாலை குடித்து கொண்டே அவள் புத்தகத்தை புரட்டியவன்

“ஆமா... நிஜமாகவே உனக்கு IAS ஆகணும்ன் னு ஆசையா?? “ என்றான் அவளை பார்த்தவாறு...

“ஆமா சார்... அது என் சின்ன வயது கனவு... “ என்றாள் கண்கள் மின்ன....

ஹ்ம்ம்ம் சரி.. அப்ப நான் கேட்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்...பார்க்கலாம்.. “ என்று அந்த புத்தகத்தில் அவள் மார்க் பண்ணி வைத்திருந்த பக்கங்களை புரட்டினான்...

அதை கண்டு பள்ளி ஆசிரியரை கண்டு மிரளும் மாணவியை போல ஒரு அடி பின்னால் சென்றாள் பயத்துடன்...அதை கண்டு

“என்ன கேட்கவா?? “ என்றான் நக்கல் சிரிப்புடன்....

“ஹ்ம்ம்ம் எனக்கு தெரிஞ்சதுல இருந்து கேளுங்க சார்... அப்புறம் நான் எதுவும் தப்பா சொன்னா அடிக்க கூடாது... “ என்றாள் இன்னும் வெளிறிய முகத்துடன்....

அவளின் அந்த முக பாவத்தை கண்டவனுக்கு மேலும் சிரிப்பு வந்தது... ஆனாலும் அடக்கி கொண்டு

“ஹ்ம்ம்ம் அடிக்க மாட்டேன்... “ என்றான்

“பிராமிஸ்?? “என்று தன் கையை முன்னால் நீட்ட அவளை பார்த்து அவன் முறைக்கவும் தன் கையை பின்னால் இழுத்து கொண்டாள்....

அவன் திறந்து வைத்திருந்த current affairs பக்கத்தில் இருந்து சில கேள்விகள் கேட்க அவள் கண்கள் மின்ன உற்சாகத்துடன் பதில் சொன்னாள்....

அதை கண்டு வியந்தவன்,

“ஹ்ம்ம்ம் பரவாயில்லயே.. ஓரளவுக்கு நாட்டு நடப்பை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க... “ என்று பாராட்டினான்..

முதன் முதலாக அவன் வாயை திறந்து தன்னை பாராட்டவும் துள்ளி குதித்தாள் மது... அதே மகிழ்ச்சியுடன்,

“Thanks சார்....அப்ப நான் IAS பாஸ் பண்ணிடுவேனா சார்?? “என்றாள் கண்களில் அதே ஆர்வத்துடன்...

“ஹ்ம்ம்ம் அதுக்கு இன்னும் நிறைய படிக்கணும்... “ என்றவன் தன் கையில் இருந்த பால் டம்ளரை அவளிடம் நீட்ட, மதுவும் அதை வாங்கி கையில் வைத்துக் கொண்டாள்...

பின் ஏதோ நினைத்தவன் எழுந்து சென்று அந்த அறையில் ஒரு மூலையில் இருந்த ஒரு அலமாரியை திறக்க அதில் உள்ளே பல வகையான புத்தகங்கள் இருந்தன...

மதுவும் தூரத்தில் இருந்து ஆச்சர்யத்துடன் அந்த புத்தகங்களை பார்வையிட்டாள்....

நிகிலன் அதில் தேடி சில புத்தகங்களை எடுத்து வந்து

“இந்தா... இந்த புத்தகங்கள் உனக்கு யூஸ்புல் ஆ இருக்கும்... இதை எல்லாம் நல்லா படி... “ என்று கொடுத்தான்...

அவை எல்லாம் UPSC exam சம்பந்தமான புத்தகங்கள்.... அதை கண்டதும் அவள் கண்கள் விரிந்தன....அவளின் அந்த அகன்ற கண்ணையே சிறிது நேரம் பார்த்திருந்தான்..

அதற்குள் மது இன்னும் கொஞ்சம் தைர்யம் வந்து

“ரொம்ப தேங்க்ஸ் சார்.. இதெல்லாம் உங்க கிட்ட எப்படி?? .. வந்து... நீங்களும் UPSC exam எழுதினீங்களா?? “என்றாள் மீண்டும் கண்கள் மின்ன...

“ஹ்ம்ம்ம்ம் “என்றான் குறும்பாக சிரித்தவாறு....

“அப்புறம் ஏன் சார் இந்த போலிஸ் வேலைக்கு வந்தீங்க?? ஓ.. பெயில் ஆயீட்டீங்களா?? இந்த பரிட்சையில ஒரே அட்டெம்ப்ட் ல பாஸ் பண்ண முடியாதாம்... திரும்ப திரும்ப எழுதனுமாம்...

நீங்க பெய்ல் ஆனாலும் உங்க மனச தளர விடாதிங்க சார்.... திரும்பவும் எழுதுங்க..

நான் உங்களுக்கு சொல்லி தர்ரேன்... நாம இரண்டு பேருமே சேர்ந்து இந்த வருடம் எழுதலாம்.... “ என்று பேசிகொண்டே போனவள் அவன் முறைப்பில் அப்படியே நிறுத்திக் கொண்டாள்...

அதே நேரம் அவன் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்துகொண்டு பால்கனிக்கு சென்றான் நிகிலன்....

அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்த மது ,

“ரொம்ப ஓவரா பேசிட்டமோ?? பின்ன ஏன் அப்படி முறைச்சான் இந்த விருமாண்டி ?? நான் நல்லது தான சொன்னேன்... பாதியில விட்டத படிக்க சொல்லி....

ஹ்ம்ம்ம்ம் படிக்கிறதுனா பயப்படற கேஸ் போல... அதான் தொடர்ந்து பரிட்சை எழுதாம பாதியிலயே நிறுத்திட்டு இந்த போலிஸ் வேலைக்கு போய்ட்டார் போல...

ஹ்ம்ம்ம் படிப்பு ஏறாதவங்கள மிஸ் என்ன சொல்லுவாங்க?? “ என்று தன் கன்னத்தில் ஆட்காட்டி விரலை வைத்து யோசித்தவள்,

“ஆங்... முட்டாள் முனியான்டி னு திட்டுவாங்க... அப்ப இவனும் முட்டாள் விருமாண்டி... ஹா ஹா ஹா ... “என்று தனக்குள் சிரித்து கொண்டவள் அவன் கொடுத்த புத்தகங்களை எடுத்து கொண்டு, தன் இடத்திற்கு சென்று சோபாவில் அமர்ந்து கொண்டு புரட்ட ஆரம்பித்தாள்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!