என் மடியில் பூத்த மலரே-8




அத்தியாயம்-8

ன்று கார்த்திகை மாத சஷ்டி திருநாள்... கார்த்திகை மாதம் முருகனுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மாதம். ஆறு கிருத்திகா நட்சத்திரங்களின் பெயரால் முருகன் ஆறு குழந்தைகளாக பிறந்தார் முதலில். பின்னர் பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து ஒரு குழந்தையாக்கினார்.

ஆறு தலையுடன் பிறந்ததால் அவருக்கு ஷண்முகா என்றும் பெயர் வந்ததாம்….முருகன் அவதரித்த மாதம் என்பதால் ஜானகிக்கு இந்த கார்த்திகை மாதம் மிகவும் பிடிக்கும்...ஒவ்வொரு வருடமும் கார்த்திகை விரதத்தை தவறாமல் கடைபிடிப்பார்...

அன்றும் ஜானகி காலையில் சீக்கிரம் எழுந்து , குளித்துவிட்டு தன் பூஜையை ஆரம்பித்தார்.. கந்த சஷ்டி கவசத்தை சொல்லி முடித்து, தீபாரதனை காட்டி வழக்கம் போல தன் குறை மற்றும் கோரிக்கையை அந்த வேலனின் காதில் ஓதி விட்டு மெல்ல தீபாரதனை தட்டுடன் வெளியில் வந்தார்...

ஆதியும் அதே சமயம் அலுவலகம் கிளம்பி கீழே வந்தான்... பூஜை அறையில் இருந்து வரும் தன் அன்னையின் முகத்தை நோக்கினான்..

ஏனோ அவர் முகம் வாடி இருந்தது.. கடந்த ஒரு மாதம் இருந்த உற்சாகம், அந்த துள்ளல் இன்று மிஸ்ஸிங்...

காரணம் அவன் அறிந்ததே...

“ஹ்ம்ம்ம்... ஆதித்யா ஒரு குழந்தையை பெற சம்மதித்ததும் சுசிலாவின் உதவியோடு அந்த பெண்ணை தேட ஆரம்பித்தார் ஜானகி உற்சாகமாக.. ஆரம்பித்தது என்னவோ நன்றாகத்தான் இருந்தது...

ஆனால் ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும் பொழுதுதான் அவருக்கு மனதில் பிடித்தமானதாக இல்லை.. ஒவ்வொன்றிலும் ஒரு குறையை கண்டு பிடித்தார்.. சுசிலாவும் எவ்வளவு சொல்லியும் தான் நினைத்து வைத்து இருந்த மாதிரி பெண்ணாக இல்லைனு ஒவ்வொன்றையும் நிராகரித்து வந்தார்.. இன்னும் தான் நினைத்த மாதிரி பொண்ணு கிடக்கலையே என்ற கவலைதான் இப்பொழுது அவரை வாட்டுகிறது என்று அவனுக்கும் தெரியும்....

ஆனாலும் அவனால் ஒன்றும் செய்ய முடியாதே.. என்று நினைத்து கொண்டே தன் அன்னையின் அருகில் சென்றான்..

அருகில் சென்றதும் ஜானகி நீட்டிய தட்டில் இருந்து திருநீற்றை கொஞ்சமாக எடுத்து நெற்றியில் வைத்து கொண்டே

“என்ன ஆச்சுமா.. ரொம்ப டல்லா இருக்கீங்க... “

“ஒன்னும் இல்லை கண்ணா... நான் எப்பவும் போலதான் இருக்கேன் “

“இல்லையே!!! ஒவ்வொரு சஷ்டி அப்பவும் அந்த முருகனை பார்க்க போறீங்களோ இல்லையோ.. சுசிலாம்மாவை பார்க்க போற சந்தோசத்துல உங்க முகம் டாலடிக்கும்.. இன்னைக்கு ஏன் டல்லடிக்குது” என்று வேனும் என்றே காரணத்தை தெரிந்துகொண்டே கேட்டான்...

“அதெல்லாம் ஒன்னும் இல்லை கண்ணா... நான் நல்லாதான் இருக்கேன்... நீ சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பு” என்று தன் கவலையை மறைத்து கொண்டே சொன்னார்..

“ஹ்ம்ம்ம்ம் எனக்கு தெரியும் மா... நீங்க தேடுற மாதிரி பொண்ணு இன்னும் கிடைக்கலைனு தான இவ்வளவு வருத்தம்ம்... இப்ப என்ன ஒரு மாதம் தான முடிந்து இருக்கு.. அதுக்குள்ள நம்பிக்கையை விடறிங்க..

கண்டிப்பா நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு சீக்கிரம் கிடைப்பா.. கவலையை விடுங்க... “ என்று தன்னை அறியாமல் தன் அன்னைக்கு ஆதரவாக பேச வேண்டுமே என்று சொல்லி இருந்தான்...

அதை கேட்டதும் ஜானகியின் முகம் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது...இதுவரை இந்த விஷயத்தில் கண்டு கொள்ளாமல் இருந்த ஆதியே இன்று தனக்கு ஆதரவாக பேசவும் கொஞ்சம் இழந்து இருந்த நம்பிக்கை மீண்டும் அவர் முகத்தில் திரும்பியது...

“இது போதும் கண்ணா... எனக்கு அந்த முருகனே வந்து சொன்ன மாதிரி இருக்கு. உன் வாய் முகூர்த்தம் சீக்கிரம் பலிக்கட்டும்” என்று புன்னகைத்தார்...

“இப்பதான் என் செல்ல அம்மா “ என்று அவர் கன்ன்த்தை இரண்டு கைகளாலும் பிடித்து ஆட்டினான்....” அவரின் புன்னகை மேலும் விரிந்தது...

அதை ரசித்து கொண்டாலும் அவனுள்ளே

“முருகா... நான் பாட்டுக்கு அவசரப்பட்டு ‘சீக்கிரம் கிடைக்கட்டும்’ என்று வாய் தவறி உளறிட்டேன்.. நான் சொன்னதை டெலீட் பண்ணிடு... எங்க அம்மா... உன் பக்தை ரொம்ப உருகறாங்க என்று நீ பாட்டுக்கு மனசு மாறி எந்த பொண்ணையும் அனுப்பி வச்சிடாத... உனக்கு புண்ணியமா இருக்கும்... அடுத்த தை பூசத்துக்கு உனக்கு நான் காவடி எடுக்கிறேன் “ என்று அவசரமாக அந்த வேலனை வேண்டி கொண்டான் ஆதித்யா...

“உன்னை உளற வைத்ததே நான் தானப்பா!!! “ என்று அந்த வேலன் நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டான்...

ஆதி காலை உணவை முடித்த பிறகு அலுவலகம் கிளம்பி சென்றதும் ஜானகி கிளம்பி முருகன் கோயிலுக்கு சென்றார்...

அன்று விஷேச நாள் என்பதால் கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.. மெல்ல படிகளில் ஏறி சந்நதியை அடைந்தவர் முருகனின் ராஜ அலங்காரத்தை கண்டு கண் மூடி மெய் மறந்து நின்றார்...

“இந்த மாதிரி ஒரு கோலம் என் புள்ளைக்கும் அமையாதா??? ஏதோ ஒரு வழியை காண்பிச்சனு பார்த்தா அதையும் பாதியிலயே அடைச்சிடுவ போல இருக்கே முருகா... சீக்கிரம் அந்த பொண்ணை எனக்கு காட்டு பா “ என்று உணர்ச்சி பொங்க அந்த வேலனிடம் வேண்டியவர் மெல்ல அந்த கோயிலை சுற்றி வர ஆரம்பித்தார்..

ஒரு சுற்று முடிந்ததும் சந்நதியின் வாயிலுக்கு வந்தவர் அடுத்த சுற்றுக்கு காலை எடுத்து வைக்க முயன்றவரின் கால்கள் தள்ளாட ஆரம்பித்தது..கண்கள் மெல்ல சொருகி தலை சுற்றவும் மெல்ல சரிய ஆரம்பித்தார்.....

அவரின் கண்களில் தான் ஏறி வந்திருந்த அந்த கோயிலின் படிகள் தெரிந்தன.... இதில் விழுந்தால் கிழே தான் உருள வேண்டும் என்று நினைத்தவர்

“முருகா.. என் புள்ளைக்கு ஒரு நல்லது நடக்கிற வரைக்கும் என்னை விட்டு வை” என்று வேண்டி கொண்டே கீழே சரிந்தார்...

மெதுவாக கண் விழித்தார் ஜானகி... கண் விழித்ததும் ஒரு அழகிய பெண்ணின் முகம் தான் தெரிந்தது.. தன் வாழ்க்கை முடிந்தது என்று விழுந்தவர் விழிக்கையில் அந்த பெண்ணின் மங்களகரமான முகத்தை காணவும் தான் இன்னும் ஆதியை விட்டு போகலை என்ற நிம்மதி வந்தது.. மெல்ல தன்னை சுற்றிப் பார்த்தார்....

அப்பொழுதுதான் தெரிந்தது தான் அந்த பெண்ணின் மடியில் படுத்து இருப்பதும் அவள் ஜானகியின் முந்தானையை எடுத்து அவருக்கு விசிறி கொண்டிருந்தாள்...

மெல்ல எழுந்திருக்க முயன்றார் ஜானகி..

“பாத்து மா.. ஒன்னும் அவசரமில்லை.. நீங்க இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே இருங்க.. மெதுவாக எழுந்திருக்கலாம்” என்ற இனிமையான குரல் வந்தது அந்த பெண்ணிடம் இருந்து...

அதை ரசித்துகொண்டே மெல்ல எழுந்து அருகில் இருந்த மண்டபத்தில் அமர்ந்தார்.... பின் அந்த பெண்ணை பார்த்து

“எனக்கு என்னாச்சு மா??? நான் எப்படி??? “ என்று மெல்ல உளறினார்..

அதற்குள் கோயிலை சுற்றி வந்து கொண்டிருந்த பெண் ஒருத்தி

“என்ன ஜானகிம்மா... காலையில சாப்பிடலையா??? திடீர்னு மயக்க மாயிட்டீங்க.. நல்ல வேளை படியில ஏறி வந்து கொண்டிருந்த இந்த பொண்ணுதான் நீங்க மயங்கி சரிவதை பார்த்து வேகமா முன்னாடி ஓடி வந்து உங்களை கீழ விழாமல் தாங்கி பிடித்தாள்... இல்லைனா நீங்க அந்த படியிலயே உருண்டிருப்பீங்க... இனிமேலாவது பாத்து இருங்க” என்று சொல்லி நகர்ந்தாள்....

அப்பொழுது தான் ஜானகிக்கு ஞாபகம் வந்தது தான் சரியும் பொழுது கண்ட அந்த படிகள்....அதில் உருண்டிருந்தால என்ன ஆகியிருக்கும்???? நினைக்கையிலயே அவரின் உடல் மீண்டும் ஒரு முறை நடுங்கியது...

அந்த பெண்ணை பார்த்து

“ரொம்ப நன்றி மா... நல்ல நேரத்துல வந்து என்னை காப்பாத்திட்ட.. இல்லைனா இந்நேரம் என் பையனை அநாதையாக்கிட்டு போயிருப்பேன்” என்று கண் கலங்கினார்...

“அப்படி எல்லாம் அந்த முருகன் உங்களை அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவானா ஜானகிம்ம்மா.... நீங்க இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டி இருக்கு.. உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி, பேரன் பேத்திகளை கொஞ்சி, அதுங்களுக்கு கல்யாணம் பண்ணினு எவ்வளவு பாக்கியிருக்கு... அதுக்குள்ள எப்படி போயிட முடியும் ஜானகிம்ம்மா “ என்றாள் அந்த பெண்..

அதை கேட்டதும் ஜானகிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது... அவளின் வார்த்தைகளை கேட்கும் பொழுதே அந்த முருகனோட வாக்கு போல இருந்தது.. அதை விட அந்த பெண் தன்னை ஜானகிம்ம்மா என்று இழுத்து அழைத்தது... ஆதிதான் இப்படி அவரை இழுத்து கூப்பிடுவான்.. அதே மாதிரி அந்த பெண்ணும் இழுத்து கூறவும் அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது...

“உன் வாக்கு பலிக்கட்டும் மா ” என்று கூறியவர் அப்பொழுது தான் அந்த பெண்ணை உற்று கவனித்தார்..

முகம் மாநிறமாக இருந்தாலும் களையாக இருந்தது. எளிமையான சுடிதார் அணிந்து இரண்டு பக்கமும் துப்பட்டாவை பின் பண்ணி நீண்ட ஜடையில் சிறிது மல்லிகை சரத்தை வைத்து, நெற்றியின் நடுவில் சின்ன பொட்டும் அதற்கு மேல சிறிதாக திறுநீற்றை வைத்து கண்களில் குறும்பும் முகத்தில் சிரிப்புமாக அவரை பார்த்து சிரித்த படி அவளும் எழுந்து ஜானகியின் அருகில் அமர்ந்தாள்...

அவள் சிரிப்பது கள்ளம் கபடம் இல்லாமல் வெகுளித்தனமாக இருந்தது... பார்க்கும் பொழுதே அவள் சென்னையை சேர்ந்தவள் இல்லை என்பது தெரிந்தது..

எழுந்து அமர்ந்து இருந்தவர் மெல்ல நகர்ந்து அங்குள்ள தூணில் சாய்ந்து கொண்டு

“நீ யாருமா?? உன்னை இங்கு முன்பு பார்த்ததில்லையே !! “

“என்னை நல்லா உத்து பாருங்க!!! என்னை பார்த்ததில்லை??? . எங்கிட்ட தினமும் உங்க குறைகளை சொல்லி புலம்பலை????... என்னை கொஞ்சம் நல்லா பாருங்க.....

ஹ ஹ ஹ.... நான் தான் உங்க முருகன் ஜானகிம்ம்மா. உங்க புலம்பலை தினமும் கேட்டு சகிக்க முடியாமல் உங்க குறையை தீர்க்க ஓடோடி வந்திருக்கேன் “ என்று கண்களை உருட்டி கைகளை முருகனைபோல வைத்து காட்டினாள் அந்த பெண்...

“முருகா... நீயா!!! .. என் குறையை தீர்க்க நேர்லயே வந்திட்டியா!!!! ரொம்ப சந்தோஷம் பா.... ஆமாம் ... அது ஏன் பா நீ ஆணாக வராமல் பெண்ணாக வந்திருக்க??? “ என்று சிரித்தார் ஜானகி...

“அது .. வந்து... வந்து .. அவசரத்துல இந்த காஸ்ட்யூம் தான் கிடைச்சது ஜானகி...நீங்க வேற திடீர்னு மயங்கி விழ ஆரம்பிச்சுடீங்களா.... அதான் என் பக்தையை காப்பாற்ற எந்த உடையா இருந்தா என்ன இன்று இந்த பெண் உடையில் வந்திட்டேன்” என்று மீண்டும் சிரித்தாள் அந்த பெண்..

அவளின் பேச்சையும் அந்த நடிப்பையும் கண்டு விழுந்து விழுந்து சிரித்தார் ஜானகி...

அதை ரசனையுடன் பார்த்து இருந்தாள் அந்த பெண்..

சிரித்து முடித்ததும்

“ ரொம்ப நன்றிம்மா!! இப்படி சிரித்து எத்தனை நாள் ஆயிற்று “ என்று அந்த பெண்ணின் கையை பிடித்து கொண்டார் ஜானகி...

“இப்ப எப்படி இருக்குமா.. நீங்க எதுவும் காலையில சாப்பிடலையா??? நான் வேணா சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?? “ என்று இதுவரை குழந்தை தனமாக விளையாடியவள் இப்பொழுது அக்கறையாக விசாரித்தாள்..

அதை கண்டதும் ஜானகியின் மனம் நெகிழ்ந்தது.. தான் யாருனே தெரியாத போதும் இந்த சின்ன பெண் இவ்வளவு பாசமா இருக்காளே என்று நெகிழ்ந்து போனார்..

“அதெல்லாம் வேண்டாம் மா.. நான் இன்று விரதம்... ஆமா நீ யாரு. உன் பெயர் என்ன?? உன்னை பார்த்தா இந்த ஊரு மாதிரி இல்லையே”..

“ஹ்ம்ம்ம் என் பெயர் பாரதி மா .. நான் திருச்சி பக்கம் இருக்கிற ஒரு கிராமத்துல இருக்கேன்....இங்க சென்னைக்கு வந்து ரெண்டு நாளாச்சு... ரொம்ப போரடிச்சுதா.. அதான் இந்த முருகனை பார்க்கலாம்னு வந்தேன்” ..

“ஓ !!! நீயும் முருக பக்தையா?? “ என்று ஆச்சர்யமாக கேட்டார்..

“பக்தை எல்லாம் இல்லை ஜானகிம்ம்மா...என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்.... இவன் இல்லை.. எங்க ஊர்ல இருக்கிற அந்த முருகன்.. இந்த முருகன் அவனோட ப்ரெண்ட் ஆ.. அதான் என் ப்ரெண்ட் ஓட ப்ரெண்ட் ஐ பார்க்க வந்தேன்... என்று மீண்டும் கன்னம் குழிய சிரித்தாள்..

ஜானகிக்கு தலை மீண்டும் சுற்றியது.. இருந்தாலும் சமாளித்து கொண்டு

“ஆமா என் பெயர் உனக்கு எப்படி தெரியும்??”

“அதெல்லாம் எனக்கு எல்லாம் தெரியுமாக்கும்... என் ப்ரெண்ட் ஓட ப்ரெண்ட் எங்கிட்ட எல்லாம் சொல்லிடுவான்” என்று சிரித்தவள் அவர் மீண்டும் மயங்கி சரியும் முன்

“நீங்க மயங்கி விழும் பொழுது நான் ஓடி வந்து உங்களை பிடிச்சனா... அப்பொழுது அருகில் இருந்தவங்க உங்களை “ஜானகிம்மா “ னு கூப்பிட்டாங்களா... நான் கூட என்னோட பேவரட் பாடகி ஜானகியைத்தான் நான் தாங்கி பிடிச்சேனு ஒரு நிமிசம் குதிச்சிட்டேன் சந்தோஷத்துல... அப்புறம் உங்கள உற்று பார்க்கிறப்போ தான் தெரிந்தது நீங்க பாடகி ஜானகி இல்லை இந்த முருகனோட பக்தை ஜானகி என்று...

“ஆமா.. நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க.... உங்க ராமர் எங்க போய்ட்டார்... நீங்க தேடச் சொன்ன மானை இன்னுமா கண்டு பிடிக்கிறார்” என்று கிண்டல் அடித்தவள் அதை கேட்டதும் ஜானகியின் முகம் கவலையுறவும்

“ஐயோ!!! நான் பாட்டுக்கு ஏதும் தப்பா சொல்லிட்டேனா?? என்னாச்சுமா ” என்று அக்கறையுடன் விசாரித்தாள்..

“அதெல்லாம் ஒன்னும் இல்லைமா.. அந்த ராமருடன் வாழ இந்த ஜானகிக்கு குடுத்து வைக்கலை”

“அவ்வளவு தான .. உங்க கவலையை விடுங்க... இந்த பாரதி உங்களை பார்த்துக்குவா.. யாம் இருக்க பயமேன்” என்று முருகன் பாணியில் தன் கையை மீண்டும் விரித்து வைக்கவும் தன் கவலையை மறந்து மீண்டும் சிரித்தார் ஜானகி...

“அப்பாடா.. ஜானகிம்மா சிரிச்சுட்டாங்க... முருகா.. உன் பக்தை ஹேப்பி. நீயும் ஹேப்பியா?? ” என்று அந்த முருகனை பார்த்து கண்ணடித்தாள்...

பின் ஜானகியை பார்த்து “ஆமா உங்க லவகுஷன் எங்க போய்ட்டாங்க.. அவங்களாவது உங்க கூட வந்திருக்கலாம் இல்லை.. உங்களை தனியா விட்டுட்டு அவங்க எந்த காட்டை சுத்திகிட்டு இருக்காங்க”

“லவகுஷனா??? யாரை பாரதி சொல்ற?” என்று புரியாமல் பார்த்தார்...

“ நீங்களே கண்டு பிடிங்க பார்க்கலாம் நான் யாரை சொன்னேனு” என்று இழுத் து பேசினாள்..

“ஹ்ம்ஹூம் நான் ரொம்ப மக்கு... யோசிக்கல்லாம் தெரியாது.. நீயே சொல்லிடு”

“ஹ்ம்ம்ம்ம் நீங்க ராமர் ஜானகின்னா, லவகுஷன் யாரு ?? “ என்று தன் புருவங்களை தூக்கி கேள்வியாக நடித்து காட்டினாள்..

அதை கண்டதும் ஜானகிக்கு சிரிப்பு வந்தது...

“ஹ்ம்ம்ம்ம் இப்ப புரிஞ்சிருச்சு.. லவன்... குஷன்.. ரெண்டு பேருக்கு எனக்கு பாக்கியம் இல்லை பாரதி.. லவன் மட்டும் தான்..” என்று சிரித்தார்...

“இல்லையே.. நம்ம இதிகாசம் தப்பாகாதே!! “ என்று தன் ஆட்காட்டி விரலை கன்னத்தில் வைத்து யோசித்தவள்

“அப்படீனா உங்க லவனே குஷனாகவும் இருந்து உங்களை பார்த்துக்கறார் தானே... அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பையனா உங்களுக்கு பிறந்திருப்பாங்க... அது தான் சரியா இருக்கும்...இல்லைனா எங்க ஆயா சொன்ன கதை தப்பாயிடும் ” என்று சிரித்தாள்

அதை கண்டதும் ஜானகியும் வயிறு குழுங்க சிரித்தார்..

“வாயாடி...என் பையனையா கிண்டல் பன்ற..அவனை மட்டும் பார்த்த நீ மயங்கி போய்டுவ!! அவன் ராஜகுமாரனாக்கும்” என்று தன் பையனை பற்றி சொல்லையில் அவர் கண்கள் மிலிர்ந்தது...

“ஸ்ஸ் அப்பா.. இந்த அம்மாங்களுக்கு எல்லாம் தன் பையன் எப்பவும் ராஜ குமாரன் தான்” என்று இடித்து காட்டினாள்..

அவளின் அந்த கிராமத்து வெகுளியை ரசித்தவர்

“உன்னை பற்றி சொல்லு மா.... உங்க வீட்ல யார் யார் இருக்கா... “

“ஹ்ம்ம்ம் எங்க வீடல எங்க அப்பா, அம்மா, ஆயா, எங்க அக்கா மஹா, தம்பி பாரத் தங்கை இந்திரா , நான் பாரதி அப்புறம் எங்க வீட்டு நாய் குட்டி மணி. மொத்தம் 8 பேர் “என்று விரல் விட்டு எண்ணி காண்பித்தாள்..

அதை கேட்டதும்

“பரவால்ல உங்க அம்மாக்கு 4 பசங்களா!! கொடுத்து வச்சவங்க...”

“நீங்க வேற ஜானகிம்மா... எங்க அப்பாவுக்கு பிள்ளைங்கனா ரொம்ப இஷ்டம்.. எங்கம்மா இரண்டோட போதும்னு சொன்னப்ப ஒவ்வொரு பிள்ளையும் கடவுள் கொடுத்த வரம்னு மறுத்துட்டாராம்..

இப்படியே நாலு பிள்ளைங்க ஆயிருச்சு... இதுக்கு மேலயும் பிள்ளைங்க பிறந்தா எங்க வீடே ஒரு ஊர் ஆகிடும் னு எங்கம்மா அப்பாவுக்கு தெரியாமல் போய் குடும்ப கட்டுபாட்டு ஆபரேசன் பண்ணிகிட்டாங்களாம்.. இல்லைனா இன்னும் நாலு வந்திருக்கும்” என்று அவரின் அருகில் நெருங்கி அமர்ந்து காதில் மெல்ல ரகசியமாக சொன்னாள்..

இதை கேட்டு மீண்டும் விழுந்து சிரித்தார் ஜானகி...

“ஆமாம் அது என்ன உங்க வீட்டு பேரெல்லாம் வித்தியாசமா இருக்கு.. “

“ஹ்ம்ம்ம் அந்த கதையை ஏன் கேட்கறீங்க.. எங்கப்பா கொஞ்சம் நாட்டுபற்றும் கூட தமிழ் பற்றும் முத்தி போனவர்.. அவர் அப்பவே பி ஏ தமிழ் படித்தவர்.. அப்ப கிடைத்த அரசாங்க வேலைக்கு போகாமல் விவசாயம் தான் பண்ணுவேனு வயலில் இறங்கிட்டார்...

“அப்புறம் அவரோட பற்றை , பிள்ளைங்களுக்கு பெயர் வைக்கறதிலயும் இழுத்து விட்டுட்டார்.. அதான் பாரதி, பாரத், இந்திரானு ஒரு தேசத்தை எங்க வீட்டில கொண்டு வந்திட்டார்.. எங்க அக்கா மட்டும் தப்பிச்சிட்டா..

எங்க பாட்டி முதல் குழந்தைக்கு மஹாலட்சுமினு தான் பெயர் வைக்கனும் னு அடம் பிடிக்கவும் தப்பிச்சிட்டா.. இல்லைனா அவளுக்கும் ஒளவையார்னு வச்சிருப்பார்.. அவளும் பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா னு பாடிட்டு திருஞ்சிருப்பா” என்று முகத்தை சீரியஷாக வைத்து கொண்டு சொல்லவும் இன்னும் சிரிப்பு வந்தது ஜானகிக்கு...

அதோடு விட்டாரா ??? எங்க அக்காவ , நல்லா படிச்சுட்டு இந்த மாதிரி பட்டணத்துல வேலை செய்யறவங்க நிறைய பேர் கல்யாணம் பண்ணிக்கறேனு கேட்டப்போ மறுத்துட்டார்... ஏன் அமெரிக்காவுல இருக்கற வரன் கூட வந்தது.. எல்லாத்தையும் வேண்டாம்னு விட்டுட்டு போன வாரம் ஏதோ விவசாயம் படிச்சுட்டு

“நான் விவசாயம் பண்றேன்.. உங்க பொண்ணை கொடுங்கனு ஒருத்தன் வந்தான்... எங்க அப்பா இந்த காலத்துலயும் விவசாயம் பன்றானா னு ஒரே குஷியாகி உடனே , எங்க அக்காவை கட்டி கொடுக்க சம்மதிச்சுட்டார்...எங்க அக்காவும் ‘தந்தை சொல் மிக்க மந்திர மில்லை’ னு தலையை ஆட்டிட்டாள்...

அவள் பட்டணத்து பக்கம் கல்யாணம் ஆகி போயிடுவா!!! .. அவளை பார்க்கிற சாக்கில நாமும் இந்த பட்டணத்தை எல்லாம் சுத்தி பார்க்கலாம் னா கடைசியா எங்க ஊருக்கு பக்கத்துலயே போய்டுவா போலருக்கு ஜானகிம்மா “ என்றாள் சீரியசாக....

“உன் அக்கா வராட்டி என்ன??? நீ இந்த ஊர் மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம்பண்ணிகிட்டு இந்த பக்கம் வந்திடு.. தினமும் எல்லாஇடமும்சுத்திபார்க்கலாம் “ என்று சிரித்தார்...

“ஐ!!! இது நல்ல ஐடியா வா இருக்கே... பார்க்கலாம்.... “ என்று பெருமூச்சு விட்டாள்..

அவளை பார்த்து சிரித்துகொண்டே

“நான் இப்படி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு.. உன் பேச்சை கேட்டு கிட்டே இருக்கனும் போல இருக்கு பாரதி “

“ஹ்ம்ம்ம்ம் நான் நல்லா பேசறெனு சொல்றீங்க... எங்க ஊர்ல என்னை வாயாடினு தான் சொல்லுவாங்க.. ஆமாம் இந்த ஊர்ல ஏன் எல்லாரும் சிரிக்கவே கூலி கேட்கறாங்க ஜானகிம்மா... நாம சிரிச்சா கூட ஒரு வித்தியாசமா பார்க்கறாங்க.. யாரும் யார் கூடயும் நின்னு ஒரு நிமிடம் கூட பேச மாட்டேங்குறாங்க..

எங்க ஊர்ல யாரை பார்த்தாலும் நின்னு நலம் விசாரிச்சுட்டு ஒரு ஐந்து நிமிடமாவது பேசி விட்டுதான் போவோம்.. இங்க என்னடான்னா காலுல வெண்ணியை கொட்டி கிட்ட மாதிரி பறக்குறாங்க.. கோயிலுக்கு வர்ரவங்க கூட ஏதோ பேருக்கு சாமிய பார்த்துட்டு அவசர அவசரமா கன்னத்துல போட்டுகிட்டு ஓடிடறாங்க... “

“ஹ்ம்ம்ம் இது தான் நகர வாழ்க்கை.. நீ சொல்ற மாதிரி எல்லாம உங்க ஊர்லதான் பார்க்க முடியும்.. ஆமா உங்க ஊர் எப்படி இருக்கும்”

அவ்வளவுதான்... இந்த சென்னைக்கு வந்து கடந்த ரெண்டு நாளாக யாரிடமும் பேச முடியாமல் ஏதொ கட்டி போட்ட மாதிரி இருந்த பாரதிக்கு தன் பேச்சை கேட்க ஆள் கிடைக்கவும் தன் கிராமத்தை பற்றி பெருமையாக பேச ஆராம்பித்தாள்...

“எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் னு மின்னும் நெற்பயிர்களும், குலை குலையாக காய்த்து குழுங்கும் வாழை தோட்டங்களும், ரோடு இரண்டு பக்கமும் தென்னை மரங்கலும் ......... “ என்று கண்களில் ஒருவித ஒளி மின்ன பெருமிதத்துடன் தன் கிராமத்தை பற்றி விவரித்து கொண்டிருந்தாள் பாரதி

அவளின் அந்த வெகுளித்தனமான பேச்சும் கையை ஆட்டி ஆட்டி பேசிய விதமும் ஜானகிகு அவளை ரொம்பவும் பிடித்து போயிற்று.. அவளையே கண் இமைக்காமல் பார்த்து இருந்தார்.. ஒரு வழியாக பாரதி தன் கிராமத்தை பற்றி அள்ளி விட்டு முடித்ததும்

“இப்ப சொல்லுங்க எங்க ஊர் பெருசா.. இந்த ஊர் பெருசா?? ” என்று புருவத்தை உயர்த்தினாள்

அவரும் சிரித்து கொண்டே

“ உங்க ஊர் தான் பெரிசு பாரதி.. எனக்கும் இந்த மாதிரி கிராமத்தை எல்லாம் பார்ககனும். கிராமத்து மக்களோடு பழகனும்னு ரொம்ப ஆசை.. நான் இங்கயே பிறந்து வழந்ததுனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்காம போயிடுச்சு” என்று வருத்தமாக கூறினார்..

அவ்வளவு தான ஜானகிம்ம்மா.. கவலையை விடுங்க.. நான் உங்களை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். எங்க கிராமத்தை எல்லாம் சுத்தி காமிக்கிறேன்”

“ஹ்ம்ம்ம் எனக்கு ஒரு கடமை இருக்கு மா... . அதை முடிச்சுட்டு உன்னோட வந்திடறேன்” என்று சிரித்தார்...

அப்பொழுது தான் மணியை பார்த்த பாரதி நேரம் ஆகவும்.

“சரி ஜானகிம்மா நேரம் ஆகிடுச்சு.. அப்புறம் பார்க்கலாம். உடம்பை பார்த்துக்கங்க “ என்று விரைந்தாள் பாரதி...

காரில் திரும்ப மருத்துவமனைக்கு வரும் பொழுது ஜானகிக்கு பாரதியின் நினைப்பே... கல கல னு எவ்வளவு பேச்சு.. என்ன சிரிப்பு...அப்பா... கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல” என்று நினைத்தவர் அறிந்திருக்கவில்லை அவளுடைய கல கல பேச்சும் , அவளின் சிரிப்பும் தன்னாலயே அழிய போகிறது என்று....

பாரதியின் பேச்சையே நினைவு கூர்ந்தவர்க்கு அப்பொழுது தான் ஞாபகம் வந்தது

“ஐயோ!!! அந்த பொண்ணோட போன் நம்பரை வாங்க மறந்துட்டேனே !! மறுபடியும் பார்க்கறதுன்னா எப்படி??? இதுக்குதான் கவன குறைவா இருக்ககூடாதுங்கறது” என்று தன்னை தானே திட்டி கொண்டே மருத்துவ மனையை அடைந்தார்...

பின் சுசிலாவின் அறைக்கு சென்றவர் வழக்கம்போல உள்ளே சென்று அவரின் எதிரில் அமர்ந்தார் மலர்ந்த முகத்துடன்

தன் தோழியின் முகத்தில் இருந்த சிரிப்பை கண்ட சுசிலா

“என்ன ஜானு??? உன் முகத்தில 1000 வாட்ஸ் பல்ப் எரியுது. என்ன விஷேசம்... நீ தேடிகிட்டிருந்த பொண்ணு கிடைச்சிட்டாளா ??? “ என்றார்..

அப்பொழுது தான் ஜானகியின் தேடலும் அவரின் கவலையும் ஞாபகம் வந்தது... உடனே அவர் முகம் வாடியது

“ஹே !! ஜானு என்னாச்சு..? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா” என்று பதறினார் சுசிலா...

“இல்லை சுசி.. இன்னும் அந்த முருகன் கண்ணை திறக்கலை” என்றார் வருத்தத்துடன்...

“கவலையை விடு.. சீக்கிரம் உன் முருகன் அந்த பொண்ணை கண்ணுல காட்டுவான் என்று முடிக்கும் முன்னே

“எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர் “ என்று அந்த அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த பெண்ணை பார்த்ததும் ஜானகியின் கண்கள் வியப்பில் விரிந்தன..

Comments

  1. அவள் இங்கயும் வந்துட்டாளா

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!