தவமின்றி கிடைத்த வரமே-12
அத்தியாயம்-12
மறுநாள் காலை எழும் பொழுதே வசியின் இதயம் தாறுமாறாக எகிறியது.. இது மாதிரி ஒரு நாளும் அடித்து கொண்டது இல்லை...
தன்னவளை பார்த்த பொழுது சுகமாக துடித்த இதயம் இன்று ஏனோ வேற மாதிரி துடித்தது....
என்னதான் சொல்கிறதாம் ?? என்று ஆராய அவன் இதயம் சொல்லும் செய்தி அந்த புகழ் பெற்ற இதய மருத்துவனுக்கு எதுவும் புலப்படவில்லை...
சிறிது நேரம் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தவன் காலையில் எப்பொழுதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்ற தன் கொள்கையை கஷ்ட பட்டு நினைவு படுத்தி தன் உற்சாகத்தை முயன்று வரவழைத்தான்...
குளியல் அறைக்குள் சென்று ரெப்ரெஸ் ஆகி வந்தவன் தன்னுடைய ட்ராக் பாண்ட் ஐ போட அவன் இடது கண் துடித்தது...
ஆண்களுக்கு இடது கண் துடித்தால் ஏதாவது கெட்டது நடக்கும் என்று தன் அன்னை சொல்லுவார்.... இன்று அதே போல இருக்க
“என்னாச்சு?? ஏன் இப்படி இருக்கு?? Whats going to be happened??” என்று யோசித்தவாறு தன் காலை ஓட்டத்தை தொடங்கினான்...
அவன் மனதில் இருந்த குழப்பத்தை போலவே வழியில் பார்ப்பவர்கள் எல்லாம் குழப்பத்துடன் வருவதை போல இருந்தது...
எல்லோர் முகமும் எதையோ இழந்து தவிப்பதை போலவே தெரிந்தது அவன் கண்ணுக்கு... தன் தலையை தட்டி கொண்டு தன் ஓட்டத்தை தொடர்ந்தான்...
ஓடிக் கொண்டிருந்தவன் அந்த பூங்கா பக்கம் வந்த பொழுது அவன் இதயமே நின்று விட்டதை போல இருந்தது..
அவன் வழக்கமாக கொஞ்சி விளையாடும் அந்த ரோஜா செடி அங்கு இல்லை... யாரோ அதை அகற்றி இருந்தார்கள்...
ஏனோ தினமும் அந்த ரோஜா செடியை காணும் பொழுது அவனுக்கு பனிமலர் ஞாபகம் வரும்....
அந்த ரோஜா சிரிக்கும் பொழுது தன்னவளின் மலர்ந்த சிரிப்பே நினைவு வர தினமும் சில நிமிடங்கள் நின்று அதை கொஞ்சி ரசிப்பான்....
ஆனால் இன்று அந்த ரோஜா செடியையே காணவில்லை....
“யார் எடுத்திருப்பார்கள்?? இல்லை வேற எங்கயாவது மாற்றி வைத்து விட்டார்களா?? “ என்று சுற்றிலும் தேடி பார்த்தான்...
அவன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அந்த செடியை காணவில்லை... ஏனோ அதை கண்டு அவன் இதயம் கனத்து போனது...
அதே போல அவன் தென்றல் காதலியும் இன்று அவனை ஏமாற்றி விட்டாள்.. அவன் எவ்வளவு நேரம் காத்திருந்தும் அவள் வரவில்லை..
ஏதோ இதயத்தை பாரம் வைத்து அழுத்த அதே மனநிலையுடன் வீடு திரும்பினான்...
எப்பொழுதும் உற்சாகத்துடன் வீடு திரும்பும் தன் மகன் இன்று வாட்டத்துடன் வருவதை கண்ட மீனாட்சி
“என்னாச்சு வசி?? எனி பிராப்ளம்?? “என்றார் அக்கறையாக அவன் அருகில் காபியை வைத்து...
“ஹ்ம்ம்ம் தெரியல மா... மனசெல்லாம் திடீர்னு பாரமா இருக்கிற மாதிரி தெரியுது.. ஆனால் ஏன்னு காரணம் தெரியலை...என்னவோ கெட்டது நடக்க போகிற மாதிரி இருக்கு “ என்றான் யோசனையாக....
“ஹ்ம்ம்ம் ஒன்னும் ஆகாதுப்பா... தைர்யமா இரு.. அந்த ஈசன் எப்பவும் உன் கூட துனை இருப்பான்... இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்... “ என்று சிரித்தார்...
வசியும் புன்னகைத்தவாறு காபியை குடித்து தன் அறைக்கு எழுந்து சென்று பின் கிளம்பி கீழ வந்தான்..
அவன் அன்னை கொடுத்த காலை உணவை சாப்பிட்டு விட்டு கிளம்பி சென்றான்...
சிறிது தூரம் சென்றதும் ஏனோ இன்னும் இதயம் பாரமாக இருக்க, அதிலிருந்து எப்படி வெளி வருவது என்று யோசித்தான்...
உடனே பனிமலரின் நினைவு வர, அவள் முகத்தை பார்க்க எண்ணி தன்னுடய அலைபேசியை எடுத்து அதில் இருந்த அவளின் வாட்ஸ்அப் டிபி ஐ பார்த்தான்...
அவளின் சிரித்த முகத்தை காணவும் ஏனோ மன பாரம் கொஞ்சம் விலகியதை போல இருந்தது...
அவள் செல்லமாக அழைக்கும்
“ஹலோ டாக்டர்... “ என்ற குரல் அவன் காதுகளில் ஒலிக்க, மெல்லிய புன்னகை அவன் இதழ்களில் தவழ்ந்தது...
மனதுக்குள் இதம் பரவ, ரேடியோவை ஒலிக்க விட்டான்...
அவன் மனதை புரிந்து கொண்டதை போல அவனுக்கான அவனுக்கு பிடித்த பாடல் அந்த FM ல் ஒலி பரப்பானது...
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்...
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்…
சேலை மூடும் இளஞ்சோலை..
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்……
அதை கேட்டதும் அவன் மனம் மீண்டும் இலேசானது...
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அது அவனுக்கு.. . அதன் ஒவ்வொரு வரியும் அவனுள்ளே ஊருவி கலந்தது....
பாடல் முடிந்திருக்க, மீண்டும் அதன் பல்லவியை பாடினான் தாளமிட்டபடி...
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்...
“யெஸ்... ஜில்லு பேபி.. உன் பார்வை கிடைப்பதே எனக்கு பெரிய வரம்தான்... உன் வாய் ஓயாத பேச்சை கேட்பது அதை விட பெரிய வரமாக்கும்...
அதை விட, நீ எப்பொழுதும் என் பக்கத்தில் என்னவளாக இருப்பது இந்த பிறவியில் எனக்கு கிடைக்க போகும் மிகப் பெரிய வரமாகும்....
அப்படிபட்ட வரம் எனக்கு கிடைக்குமா?? “ என்று பெருமூச்சு விட்டான் வசீகரன்...
“கிடைக்குமா இல்லை.. கிடைக்கும்... கிடைக்கணும்...நான் வேண்டும் வரம் சீக்கிரம் எனக்கு கிடைக்கணும் ஈசனே...” என்று அந்த ஈசனுக்கு தன் கோரிக்கையை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தினான் அந்த புகழ்பெற்ற மருத்துவன்....
காலையில் எழுந்த பொழுது இன்று எப்படியாவது தன் காதலை அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று எண்ணி இருந்ததை மீண்டும் ஒரு முறை உறுதி படுத்தி கொண்டான் வசி....
அவனும் எத்தனையோ முறை தன் காதலை சொல்ல முயன்று விட்டான்... ஆனால் அவள் அதை கண்டு கொள்ளவே இல்லையோ?? இல்லை அவனுக்கு சரியாக சொல்ல தெரியலையோ??
அந்த மூன்று வார்த்தையை சொல்வது அவனுக்கு அவ்வளவு கடினமாக இருந்தது...
“அவள் இதயத்தில் என்ன இருக்கிறது?? என்னை பிடித்திருக்கிறதா ?? இல்லையா?? என்னை, என் காதலை ஏற்று கொள்வாளா?? இல்லையென்றால் ???” என்று நினைக்கும் பொழுதே அவனுக்கு காலையில் வந்த அதே வலி மீண்டும் வந்தது...
“நோ... நோ.. என் காதலை எப்படியும் அவள் ஏற்றுக் கொள்வாள்... மறுக்க எதுவும் காரணம் இல்லையே... நன்றாகத்தன் பேசுகிறாள்... ஒரு வேளை என் காதலை நான் அவளை பார்த்த அன்றே சொல்லியிருக்க வேண்டுமோ?? “ என்று ஏதேதோ யோசித்தவன் தலை வலிக்க ஆரம்பித்தது...
“சே... காதல் சொல்வது இவ்வளவு கஷ்டமா?? என் இதயத்தை திறந்து ஒரு பெண்ணின் இதயத்தை கேட்பது எவ்வளவு கஷ்டமானது என்று இப்பொழுது தான் தெரிகிறது...இன்பமான அவஷ்தை போல...!!! “ என்று அலுத்து கொண்டவன் மீண்டும் தன் நிலையை நினைத்து தானாக சிரித்து கொண்டான்...
மீண்டும் எதை எதையோ யோசிக்க, அவனுக்கு தலைவலி மேலும் அதிகமானது...
எவ்வளவோ முயன்றும் முடியாமல் தன் அலைபேசியை எடுத்து பனிமலரின் எண்ணிற்கு அழைத்தான்....
அவன் அழைத்த அடுத்த நொடியே அவன் அழைப்பை ஏற்றவள்
“ஐயோ டாக்டர் !!!.. உங்களுக்கு 100 ஆயுசு.. இப்பதான் நானே உங்களை கூப்பிடணும்னு என் மொபைலை எடுத்தேன்....சரியா நீங்களே கூப்டிட்டீங்க... “ என்று சிரித்தாள்....
அவளின் மலர்ந்த சிரிப்பையும் உற்சாகமான குரலையும் கேட்டதும் அதுவரை இதயத்தை அழுத்தி வந்த பாரம், தலைவலி எல்லாம் போயே போச்சு அவனுக்கு.... மனதுக்குள் மெல்லிய இதம் பரவ,
“ஹா ஹா ஹா 100 ஆயுசு வாழும் அளவுக்கு பேராசை எல்லாம் எனக்கு இல்ல ஜில்லு.... “ என்றான் சிரித்தவாறு....
“ ஹீ ஹீ ஹீ உங்களுக்கு இல்லைனாலும் எனக்கு இருக்கே அந்த பேராசை... நீங்க 100 வயசுக்கும் மேல வாழணும் டாக்டர்... நிறைய உயிர்களை காப்பாற்றனும்...
நேற்று நீங்க அந்த பேசன்ட் சேப் னு மெசேஜ் பண்ணினதுக்கு பிறகுதான் நிம்மதியா இருந்தது....
எப்படித்தான் அந்த மாதிரி கிரிடிக்கல் பேசன்ட்ஸ் ஐ எல்லாம் கூலா கேண்டில் பண்றிங்களோ?? எனக்கு நினைச்சாலே பிபி ஏறுது....நீங்க எப்பவும் கூல் கை (cool guy) தான் “ என்று சிரித்தாள்...
அதை கேட்டு அவனும் சிரித்தவன், பின் தான் அழைத்ததற்கான காரணம் நினைவு வர
“சரி.. ஜில்லு .. இன்னைக்கு மாலை 7 மணிக்கு மீட் பண்ணலாமா?? ஒரு முக்கியமான விசயம் பேசணும்.. நீ ப்ரியா?? “ என்றான் ஆர்வமாக
“ஐயோ !!!....சேம் பின்ச் டாக்டர்... நல்ல வேளை நீங்க நேர்ல இல்லை..
நேர்ல இருந்திருங்கனா நறுக்குனு என் கிட்ட கிள்ளு வாங்கி இருப்பீங்க...” என்று சிரித்தாள்...
அதை கேட்டு வசி புரியாமல் முழிக்க, அதை கண்டு கொண்டவள்
“ஹீ ஹீ ஹீ புரியலையா டாக்டர்??.... நானும் உங்களை ஈவ்னிங் மீட் பண்றதுக்குத்தான் கூப்பிடலாம்னு இருந்தேன்... ஒரு முக்கியமான விசயம் உங்க கிட்ட பேசணும்... பார்த்தா நீங்களும் அதே சொல்றீங்க... அதுதான் சேம் பின்ச்.... ” என்று சிரித்தாள் உற்சாகமாக..
அவளின் பேச்சையும் அவள் பேசிய விதத்தையும் கண்டு வாய் விட்டு சிரித்தவன்
“சரி... அது என்ன முக்கியமான விசயம்?? “ என்றான் ஆர்வமாக
“ஐ.. ஆசை தோசை அப்பள வடை.. அதை இப்பயே சொல்லிட்டா அப்புறம் அது எப்படி சஸ்பென்ஸ் ஆ இருக்குமாம்...
நான் என்ன சொல்ல போறேனு நீங்க மண்டைய போட்டு குடைஞ்சுகிட்டே இருங்க...
ஈவ்னிங் மீட் பண்றப்போ சொல்றேன்.. “ என்று சிரித்தாள்...
“ஆமாம் ... நீங்க என்ன முக்கியமான விசயம் னு சொன்னீங்க?? “ என்றாள் அவளும் ஆர்வமாக
“ஹா ஹா ஹா.. நீ சொன்ன அதே ஆசை தோசை அப்பள வடை கதை தான்.. நான் மட்டும் எப்படி இப்பயே சொல்வேணாம்?? ... உனக்கும் அதே சஸ்பென்ஸ் தான்.....
நான் என்ன சொல்ல போறேனு நீ மண்டைய போட்டு குடைஞ்சுகிட்டே இரு ... ஈவ்னிங் மீட் பண்றப்போ சொல்றேன்.. “ என்று அவள் வார்த்தையை அவளுக்கே திருப்பி வாய் விட்டு சிரித்தான்...
“போங்க மெக்கானிக்.. வர வர ரொம்ப பேட் மெக்கானிக் ஆயிட்டிங்க.. இப்படி சஸ்பென்ஸ் எல்லாம் வச்சா என்னுடைய இந்த குட்டியூண்டு இதயம் தாங்குமா?? ப்ளீஸ்... ப்ளீஸ்... இப்பயே சொல்லிடுங்களேன்... “ என்று கெஞ்சி கொஞ்சினாள்...
“ஹா ஹா ஹா.. நீ என்னதான் கெஞ்சினாலும் இப்ப நோ... ஈவ்னிங் மீட் பண்றப்போ சொல்றேன்...இப்ப பை... ஹேவ் எ குட் டே... “ என்று சிரித்து கொண்டே போனை வைத்தான்...
அவளும் இவனை திட்டி கொண்டே அலைபேசியை அனைத்தாள்...
அந்த நாளை தள்ளுவது இருவருக்குமே மிகவும் கஷ்டமாக இருந்தது.. எப்ப 7 மணி ஆகும் என்று இருந்தது...
பனிமலருக்கோ ஒரு லைன் கோடிங் கூட அடிக்க முடியவில்லை... அவளுடைய ப்ராஜெக்ட் லீட் அவள் வொர்க் பண்ணியிருந்த module ல் வந்திருந்த CR (Change Request)பற்றி விளக்கி அதை நாளைக்கே முடித்து தர சொல்லி கேட்க அவன் சொன்னது எதுவுமே அவள் மண்டைக்குள் நுழையவில்லை....
சும்மா தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்...
அவனிடம் இருந்து விட்டால் போதும் என்று தப்பித்து தன் இருக்கைக்கு வந்தவள் தன் லேப்டாப் ஐ திறந்து ஆன் பண்ண அதன் திரை பிளாங்க் ஆக தெரிந்தது....
மனம் எல்லாம் அந்த மெக்கானிக் என்ன சொல்ல போறானோ என்று அங்கயே சுத்தி கொண்டிருக்க, லேப்டாப் ன் திரையில் எதுவும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை...
“சே.. பேசாம இப்பயே போய் அந்த மெக்கானிக் ஐ பார்த்துடலாமா?? “ என்று யோசித்தவள்
“நோ..நோ... அவன் ரொம்ப பிசியா இருப்பான்... சும்மா தொந்தரவு பண்ண கூடாது...” என்று தன்னை சமாளித்து கொண்டாள்..
அங்கு வசியின் நிலையும் அதே தான்...
“என்ன சொல்ல போறாளாம் அந்த வாயாடி?? ஒருவேளை என்னைப் போலவே அவளும் தன் காதலை சொல்லத்தான் காத்திருக்கிறாளா??
சே.. இப்படி டென்சன் பண்றாளே... பேசாம இப்பயே அவளை பார்க்க கிளம்பிடலாமா?? “ என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டிருந்தான்....
கை ஏதோ வேலை செய்தாலும் அவன் மனம் அங்கு இல்லை...
ஒரு வழியாக மாலை 7 மணிக்கு முன்னரே இருவரும் அங்கு வந்து சேர்ந்திருக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அசடு வழிய புன்னகைத்தனர்...
வழக்கமான தங்கள் இடத்திற்கு சென்று அமர்ந்ததும் அவளுக்கு பிடித்த காபியும் இன்னும் சில சிற்றுண்டியை ஆர்டர் பண்ணி விட்டு நேரடியாக விசயத்துக்கு வந்தான் வசி
“ஹ்ம்ம்ம் லேடிஸ் பர்ஸ்ட்... சொல்லு ஜில்லு... என்ன அது முக்கியமான விசயம்?? “ என்றான் ஆர்வமாக...
“ஒரு வேளை தன்னைப் போலவே அவளும் தன் காதலை சொல்லப் போறாளா??....அப்படி என்றால் அவளே முதலில் சொல்லட்டும்..” என்று எண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்....
“ஹ்ம்ம்ம் இதில் எல்லாம் பர்ஸ்ட் னு விட்டு குடுத்துடுங்க... ஆனா விட்டு கொடுக்கிற இடத்துல விட்டு கொடுக்காதிங்க... “ என்று அவளும் சிரித்து கொண்டே தன் ஹேன்ட் பேக்கை எடுத்தாள்....
அதை திறந்து அதில் இருந்த ஏதோ ஒரு கவர் போன்றதை வெளியில் எடுத்து அவன் முன்னே நீட்டி
“எனக்கு அடுத்த வாரம் மேரேஜ் டாக்டர்.... நீங்க உங்க குடும்பத்துடன் அவசியம் வந்து என் மேரேஜ் ல கலந்து கிட்டு என்னை ஆசிர்வதிக்க வேண்டும்... “ என்று தன் திருமண அழைப்பிதழை அவன் முன்னே நீட்டினாள் மலர்ந்த சிரிப்புடன்............
Comments
Post a Comment