காதோடுதான் நான் பாடுவேன்-11
அத்தியாயம்-11
அந்தி சாயும் மாலைப்பொழுதில் தன் மகன் மகள் மற்றும் மருமகளுடன் அந்த வேலன் சன்னதி முன் கண் மூடி நின்றிருந்தார் சிவகாமி...தன் அருகில் ஜோடியாக நின்றிருந்த தன் மூத்த மகனையும் மருமகளையும் காண அவர் மனமெல்லாம் நிறைந்து நின்றது...
31 வயது ஆகியும் திருமணத்தை மறுத்து வேண்டாம் என்று முரண்டு பண்ணிய தன் மூத்த மகன் எங்கே இப்படியே தனிமரமாக இருந்து விடுவானோ?? என்று அஞ்சிய அந்த தாய்க்கு அவனை மணக்கோலத்தில் பார்த்த பொழுதே மனதுக்குள் பெரும் நிம்மதி மற்றும் அளவில்லா மகிழ்ச்சி....
இதை நடத்தி கொடுத்து தன் குறையை போக்கிய அந்த வேலனுக்கு பால் அபிசேகம் பண்ணவே இப்பொழுது அந்த வேலன் முன்னால் நின்று கொண்டிருக்கிறார் சிவகாமி....
மதுவின் வீட்டில் மதியம் சாப்பாடு முடிந்ததும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்த நிகிலன் எப்பவும் போல வெளியில் சென்று விட்டு 5 மணிக்கு திரும்பி வர, சிவகாமி மதுவின் பிறந்த நாளுக்கு முருகன் கோவிலுக்கு சென்று அபிசேகம் செய்யணும் என்று அடம் பிடித்து நிகிலனை இந்த கோவிலுக்கு அழைத்து வந்திருந்தார்...
தன் மாமனார் மாமியார் முன்னால் தன் அன்னை கேட்க, அதற்கு மறுத்து சொல்ல முடியாமல் தன் அன்னையை முறைத்தவாறே அவர்களை இங்கு அழைத்து வந்திருந்தான் நிகிலன்...
மதுவின் பெற்றோர் அவர்களுடைய உறவினர் ஒருவர் ஊரிலிருந்து அவர்கள் வீட்டிற்கு வருவதாக சொல்லி இருந்ததால் அவர்கள் வீட்டிலயே தங்கி விட மற்ற நால்வரும் இங்கு வந்தனர்...
எப்படியோ ஒரு வழியா தன் மகனை கோவிலுக்கு இழுத்து வந்த சந்தோசமும், தான் வேண்டியபடியே அந்த வேலன் அவர் குறையை தீர்த்து வைத்து தன் மனதை குளிர வைத்த அந்த வேலனுக்கு அவன் குளிர குளிர பால் அபிசேகம் செய்தார் சிவகாமி...
“அப்பா முருகா...எப்படியோ இந்த பெரியவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி என் பாதி குறைய தீர்த்துட்ட... அப்படியே அவன் என் மருமக கூட நல்ல படியா குடும்பம் நடத்தி எனக்கு ஒரு பேரனையோ பேத்தியையோ கொடுத்துட்டா என் மீதி குறையும் தீர்ந்து போய்டும்.... சீக்கிரம் அதையும் நிறை வேத்தி வச்சுடுப்பா...” என்று மனதுக்குள் அந்த வேலனிடம் மனம் உருகி வேண்டி கொண்டார்...
அப்பொழுது அந்த ஐயர் அர்ச்சனை பண்ணிய கூடையை கொடுக்க, அதை மதுவை வாங்கி கொள்ள சொன்னார்... மீண்டும் ஒரு முறை தன் அருகில் இருந்த தன் குடும்பத்தை பார்க்க, எப்பவும் நாலு பேராக இந்த கோவிலுக்கு வருபவர்கள்..
ஆனால் இன்று தன் குடும்பத்துக்கு புதியதாக தன் மூத்த மருமகள் வந்திருந்தாலும் தன் இளைய மகன் அங்கு இல்லையே என்ற சின்ன வருத்தம் அவர் மனதின் ஓரத்தில்...
என்னதான் அவன் தங்களை தலைகுனிய வைத்து விட்டு ஓடி போயிருந்தாலும் பெத்த மனது அவனையே தேடியது உள்ளுக்குள்... எத்தன புள்ளைங்க இருந்தாலும் தன் அருகில் இல்லாத புள்ளையையும், எந்த குழந்தை தள்ளாடுதோ அந்த குழந்தைக்கு தான் தாய் கரம் முதலில் நீளும்....
அதே மாதிரி பெரியவன் திருமணம் முடிந்துவிட்டது என்றாலும் தன் இளைய மகன் அங்கு இல்லாததை கண்டு அவர் மனம் வாடியது உள்ளுக்குள்...
“முருகா.. இந்த சின்னவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்.. அவனுக்கு ஒரு குறையும் வரக்கூடாது.. நீ கூடவே இருந்து அவன பார்த்துக்கோ... சீக்கிரம் அவனையும் கூட்டி வந்து எங்களோட சேர்த்துடு.. “ என்று தன் அடுத்த குறையை தன் பட்டியலில் சேர்த்தார் சிவகாமி...
அதை கண்ட வேலன்
“ஹா ஹா ஹா இந்த மானிடர்கள் குறையை மட்டும் யாராலும் தீர்க்க முடியாது போல... முதலில் தன் மூத்த மகனுக்கு திருமணம் ஆகணும் ன்ற குறையோடு வந்த சிவகாமி இப்ப அடுத்து வாரிசு வேணும், அப்புறம் சின்ன மகனையும் கூட சேர்த்திடு.. என்று சிவகாமியின் குறைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறதே....
“இப்பயே கண்ணை கட்டுதே... ஹ்ம்ம்ம் இதை எல்லாம் தீர்த்து வைத்தால் இன்னும் புதிததாக அடுத்த குறை வந்து சேரும்... நல்ல மானிடர்கள்..” என்று சிரித்துக் கொண்டான்...
சிவகாமி மனதுக்குள் வேண்டி கொண்டிருக்க, மதுவோ தன் திருமண விசயத்தில் அந்த வேலன் தன் பக்கம் நிக்காமல் கை விட்டதால் அவனிடம் கோபமாக இருக்கிறவள் அந்த சன்னதி முன்னே நின்று அந்த முருகனை பார்த்து முறைத்து கொண்டு நின்றிருந்தாள்...
“எல்லாம் உன்னால தான் வேல்ஸ்... நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் என்னை கொண்டு போய் இந்த விருமாண்டி கிட்ட மாட்டி விடட இல்ல...உன் கட்சி கா.. நான் உன் கூட பேச மாட்டேன்... . இன்னும் கோபமாதான் இருக்கேன்...
அத்தைக்காக தான் உன்னை பார்க்க வந்தேன்.. இல்லைனா உன் மூஞ்சியிலயே முழிச்சிருக்க மாட்டேன்.. “ என்று மனதுக்குள் திட்டி கொண்டாள் அவனை பார்த்து முறைத்தவாறே....
பின் நால்வரும் அந்த சன்னதியை சுற்றி வந்து முன்பு இருந்த அந்த மண்டபத்தில் அமர வர , அந்த நேரம் நிகிலனுக்கு அழைப்பு வந்தது...அதை அட்டென்ட் பண்ணியவன் சிவகாமியை பார்த்து
“மா... நீங்க இங்கயே இருங்க.. எனக்கு பக்கத்துல ஒரு சின்ன வேலை இருக்கு... நான் முடிச்சிட்டு வந்து கூட்டிட்டு போறேன்... “ என்று சொன்னவன் அவர் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேகமாக நடந்து சென்றான்...
“சே... இந்த பாழா போன போலிஸ் வேலைய விட்டு தொலைடானா கேட்கவே மாட்டேங்கிறானே.. இப்படி ஒரு நல்ல நாள், லீவ் நாள் னு ஏதாவது இருக்கா.. எப்ப பார் வேலை வேலை னு ஓடி போய்டறான்... “ என்று புலம்பி கொண்டே அங்கு ஓரமாக அமர்ந்தார்...
பின் மதுவும் அகிலாவும் அவர் அருகில் அமர மூன்று பெண்களும் தங்கள் கதையை தொடர்ந்தனர்...
சிறிது நேரம் கடந்ததும் மதுவிடம் பேசிக் கொண்டிருந்த அகிலா சற்று தொலைவில் வருபவர்களை கண்டு கண்களை அகல விரித்தாள்....
அவள் பார்வையை தொடர்ந்து சிவகாமியும் அங்கு பார்க்க,
ஜானகியின் விரலை பிடித்து கொண்டு மெல்ல அடி எடுத்து வைத்து தளிர் நடையுடன் அந்த குட்டி தேவதை கார்த்தியாயினி அழகாக நடந்து வர, அருகில் அர்ச்சனை கூடையை கையில் பிடித்து கொண்டு தன் மாமியாருடன் சிரித்து பேசி கொண்டு நடந்து வந்தாள் பாரதி...
(என் மடியில் பூத்த மலரே கதையை படிக்காதவர்களுக்கு ஒரு சின்ன குறிப்பு...
பாரதி-ஆதி என் மடியில் பூத்த மலரே கதையின் நாயகன் நாயகி... ஆதி நிகிலனின் பள்ளித்தோழன்... )
பாரதி அகிலாவையும் அங்கு அமர்ந்திருந்தவர்களையும் கண்டு கொண்டு கை அசைத்து புன்னகைத்தாள்... ஜானகியும் அவர்களை காண, அவரும் சிரித்துக் கொண்டே சிவகாமியின் அருகில் வந்தனர்...
அகிலா வேகமாக எழுந்து போய் அந்த குட்டியை தூக்கி கொண்டு
“வாடி... என் மருமகளே... எப்படி இருக்க?? நடக்கிற அளவுக்கு நீ வளர்ந்திட்டியா?? “ என்று அவள் கன்னதில் முத்தமிட, அந்த குட்டி தேவதையும் சிரித்து கொண்டே அகிலாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்...
பின் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொள்ள, பாரதி மதுவை பார்த்து
“என்னமா?? புதுபொண்ணு.. எப்படி இருக்க?? மேரேஜ் லைப் எப்படி இருக்கு?? எல்லாம் செட்ஆகியிருச்சா?? “ என்றாள் சிரித்தவாறு.... பாரதியின் சிரித்த முகமும் அவள் பேசும் தோரணையும் மதுவுக்கு பிடித்து விட,அவளும் சிரித்துகொண்டே
“நல்லா இருக்கேன் கா.. நீங்க எப்படி இருக்கீங்க?? “ என்றாள்
“ஹோய்...என்னது அக்காவா?? என்னை அக்கானு சொல்லி எனக்கு வயசு அதிகமான மாதிரி தெரியனும்.. நீ மட்டும் சின்ன பொண்ணா இருக்கணும்னு திட்டமா?? உன் திட்டம் என்கிட்ட பழிக்காது... அதனால நீ என்ன பாரதினே கூப்பிடு...என்ன புரிஞ்சுதா?? “ என்று சிரித்து கொண்டே மதுவை மிரட்டினாள் பாரதி...
அவளின் மிரட்டும் தோரணையில் கொஞ்சம் மிரண்டவள்
“ஹ்ம்ம்ம்ம் சரி.. அக்... பாரதி..” என்றாள்...
“ஹ்ம்ம்ம் அது... “ என்று மதுவை கட்டிகொண்டு சிரித்தாள் பாரதி...பெரியவர்கள் இருவரும் அவர்களின் உரையாடலை கேட்டு சிரிக்க,
ஜானகி சிவகாமியை பார்த்து
“என்ன சிவா.. மருமக வந்த சந்தோசத்துல ஒரு சுத்து பெருத்துட்ட போல .. “ என்று சிரித்தார்....
“ஹா ஹா ஹா நானாவது ஒரு சுத்துதான் பெருத்திருக்கேன் ஜானு.. நீ இருக்கியே.. மருமக கூடவே பேத்தியும் வந்த சந்தோசத்துல இரண்டு சுத்து இல்ல பெருத்துட்ட... “ என்று ஜானகியை வாரினார் சிவகாமி...
“ஆங்.. அப்படியா?? பாரதி மா... நான் அவ்வளவு குண்டாவா இருக்கேன்?? “என்று பாரதியிடம் நியாயம் கேட்டார் ஜானகி...
“சே.. சே... நீங்க எப்பவும் போல ஸ்லிம் ஆ தான் இருக்கீங்க அத்தை....சிவா அத்தைக்கு தான் உங்களை பார்த்து பொறாமை... அதான் மாத்தி சொல்றாங்க... “ என்று சிவகாமியை பார்த்து கண்ணடித்தாள் பாரதி...
“என்ன மருமகளே?? .. உன் மாமியார்க்கு நல்லா ஐஸ் வைக்கிற போல இருக்கு... நான் மாத்தி சொல்றனா?? உன்ன?? “ என்று சிரித்து கொண்டே பாரதியின் காதை பிடித்து திருகினார்.....
”ஐயோ... வலிக்குது.. விடுங்க அத்தை.. “ என்று பாரதி வலிப்பதை போல நடிக்க, சிவகாமியும் தன் கையை எடுத்து கொண்டே
“உனக்கெல்லாம் இந்த மாதிரி காதை பிடித்து திருகற மாமியார் வந்திருக்கனும்..பாவம் வாயில்லாத ஜானகி வந்து மாட்டிகிட்டா “ என்று சிரித்தார்...
“ஐயோ முருகா... சரியான டெரர் மாமியாரா இருக்கீங்க... இப்படி திருகறீங்க... என்னையே இந்த பாடு படுத்தறீங்க.. பாவம் என் தங்கச்சி இந்த வாயில்லா பூச்சிய என்ன பாடு படுத்தறீங்களோ?? “
என்ன மது?? உன் மாமியார் எதுவும் மிரட்டறாங்களா?? பயப்படாம சொல்..நான் இருக்கேன்.. “ என்க மது வேகமாக தலையை இல்லை என்று இரு பக்கமும் ஆட்டினாள்...
“ம்ம்ம்ம் வாயாடி... எப்படி தான் இந்த ஆதி உன்னை வச்சு சமாளிக்கறானோ?? ஆமா கல்யாணத்தப்ப அப்படி முறச்சுகிட்டு இருந்த பையன எப்படி உன்னையே சுத்தி வர வச்ச...
இப்பல்லாம் ஆதி உன்ன விட்டு நகறரதில்லையாம்?? என்ன சொக்கு பொடி போட்ட.?? அந்த சொக்கு பொடியோ இல்ல தலையண மந்திரமோ என் மருமகளுக்கும் சொல்லி கொடேன்... இந்த நிகிலன் இன்னும் வீட்டுக்கு அடங்காம வெளிலயே சுத்திகிட்டிருக்கான்.. “ என்று சிரித்தார் சிவகாமி....
“ஹீ ஹீ ஹீ... அதெல்லாம் எப்பயோ என் தங்கச்சிக்கு சொல்லி கொடுத்திட்டேன் அத்தை.. அததான் அவ தினமும் பாலோ பண்ணிகிட்டிருக்கா... “ என்று குறும்பாக கண் சிமிட்டினாள் பாரதி....
“என்னது?? ஏற்கனவே தெரியுமா?? என்னது அது?? “ என்றார் சிவகாமி ஆர்வமாக
“ம்ஹூம் அது ரகசியம் அத்தை.. அதெல்லாம் வெளில சொல்ல கூடாது.. அதுவும் குறிப்பா உங்ககிட்ட சொல்லவே கூடாது... “ என்று பொடி வைத்து இழுத்தாள்
அவள் கூறியதை கேட்டு ஜானகியும் ஆர்வமாகி
“அப்படி என்ன மந்திரம் பாரதி மா?? எனக்கே இது மாதிரி இருக்கு னு தெரியாதே?? “ என்றார் ஆர்வமாக...
“ஹா ஹா ஹா.. உங்களுக்கும் சொல்லலையே அத்தை.... “ என்று சிரித்தாள்...
“ஆஹா.. நீ கொடுக்கிற பில்டப் ஐ பார்த்தால் விசயம் பெருசா இருக்கும் போல இருக்கே... அது என்னனு சொல்லு மருமகளே.. ஆர்வம் தாங்க முடியல?? “ என்று சிவகாமி அடம்பிடிக்க,
“சரி.. போனா போகுது.. இரண்டு மாமியாரும் ரொம்ப கெஞ்சறதால சொல்லிடறேன்... “ என்று சிரித்தவள்
“ஹ்ம்ம்ம் புருசனை கைக்குள்ள போட்டுக்கனும்னா முதல்ல அந்த புருசனை பெத்த ஆத்தாவ மயக்குனா போதும்... அவங்க பெத்த பையனும் தானா நம்ம வழிக்கு வந்திடுவாங்க...
அதைதான் என் தங்கச்சிகிட்ட சொன்னேன்... அவளும் அவ புருசனை விட உங்க பின்னாடி தான சுத்திகிட்டு இருக்கா?? எல்லாம் எதுக்காம்?? முதல்ல உங்கள வழிக்கு கொண்டு வரத்தான்...
ஓரளவுக்கு அவ போட்ட மந்திரம் நல்லாவே வேலை செய்யுது போல.. நீங்களும் அவள ரொம்ப தாங்கறதா அகிலா சொன்னா.... எப்படி அத்தை இருக்கு என் மந்திரம்?? “ என்று தன் புருவங்களை உயர்த்தினாள் பாரதி கேலியாக சிரித்தவாறு...
“அடிப்பாவி.. இப்படி எல்லாம் கூட இருக்கா..??. அப்ப அத வச்சுதான் ஜானகிய மயக்கினியா?? “
“ஹீ ஹீ ஹீ பின்ன என்னவாம்??.. அதனாலதான் என் செல்ல அத்தை எப்பவும் எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க...எப்பவும் பண்ணுவாங்க “ என்று ஜானகியின் கழுத்தை கட்டி கொண்டாள் பாரதி...
“ஹ்ம்ம்ம்ம் என்ன மது?? பாரதி சொல்றது எல்லாம் உண்மையா?? “ என்றார் சிவகாமி மதுவை முறைத்தவாறு...
அதை கண்டு பயந்த மது
“ஐயோ!! அத்தை அதெல்லாம் இல்லை... அவங்க எனக்கு எதுவும் சொல்லி தரலை.. சும்மா விளையாடறாங்க... நான் அப்படி எல்லாம் எதுவும் செய்யலை.. “ என்றாள் வெளிறிய முகத்துடன....
“ஹா ஹா ஹா ... ஹோய் மது குட்டி... எதுக்கு இப்படி பயந்து நடுங்கற?? ஆமானு சொல்ல வேண்டியது தான...
ம்ஹூம.. உனக்கு நிறைய டிரெய்னிங் கொடுக்கணும் போல இருக்கு... இப்படி எல்லாம் பயந்து நடுங்கினா இந்த சிவா அத்தை கிட்ட காலம் தள்ள முடியாது... தைரியமா எதிர்த்து நில்.. “ என்று சிரிக்க
“அதெல்லாம் வேணாம் கா... “ என்று சொல்ல வந்து “வேணாம் பாரதி... எங்க அத்தை ரொம்ப நல்லவங்க... எந்த மந்திரமும் அவங்களுக்கு தேவை இல்லை... “ என்றாள் கொஞ்சம் தெளிந்து...
“ஹ்ம்ம்ம் அப்படி சொல்லுடி என் ராஜாத்தி...என் மருமகள என்னானு நினைச்ச பாரதி?? “ என்று பெருமையாக மதுவை கட்டிகொண்டார் சிவகாமி
“சே... இப்படி கவுத்திட்டியே தங்கச்சி... நீயும் கொஞ்சம் என் கூட சேர்ந்து இந்த சிவா அத்தைக்கு கொஞ்சம் பிபி ஏத்தி விடலாம்னு பார்த்தா.. இப்படி பட்டுனு அவங்க பக்கம் சாஞ்சுட்டியே... பேட் கேர்ள்... “ என்று முகத்தை நொடித்தாள் பாரதி...
அவளின் பேச்சை கண்டு ஜானகியும் சிவகாமியும் சிரித்துக் கொண்டனர்...
“ஹ்ம்ம்ம் எனக்கு ஒரு சின்ன வருத்தம் சிவா அத்தை.... என் கல்யாணத்தப்போ என்னை எப்படி மிரட்டினிங்க.. உங்க குரலை கேட்டு நானே பயந்துட்டேன்... இப்படி வாயடிக்கிற உங்களுக்கு நல்ல வாயாடி மருமகளா உங்க கிட்ட மல்லு கட்டற மருமகளா வரணும்னு அந்த முருகன் கிட்ட வேண்டி கிட்டேன்...
பார்த்தா அந்த முருகன் இப்படி ஒரு வாயில்லாத புள்ளைய கொண்டு வந்து உங்க கிட்ட சேர்த்திருக்கான்...
ஹ்ம்ம்ம்ம் நீங்க மருமக கூட சண்டை கட்டறத பார்க்கணும் ங்கிற என் ஆசை நிறைவேறாம போச்சே... “ என்று பெருமூச்சு விட்டாள் பாரதி...
“நீ ஒன்னும் கவலைபடாத பாரதி... இப்ப என்ன பெரியவனுக்கு தான வாயில்லாத பொண்ணா அமைஞ்சுட்டா... அடுத்து சின்னவன் மகிழன் இருக்கான் இல்ல....
கண்டிப்பா அவனுக்கு நல்ல வாயாடி பொண்ணா வந்து வாய்க்க போறா பார்... சிவா கூட நல்லா சண்டை போட போறா... உன் ஆசை நிறைவேற இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு... “ என்று சிரித்தார் ஜானகி...
“ஆமா இல்ல... நீங்கதான் என் செல்ல அத்தை... சரியான பாய்ன்ட் ஐ எடுத்து தர்ரிங்க... தேங்க்ஸ் அத்தை... “ என்று ஜானகிக்கு ஹை-பை கொடுத்தாள் பாரதி..
அதை கண்டு ரசித்த சிவகாமி
“ஹ்ம்ம்ம் இந்த தங்கத்தை கண்டுபிடிக்கவே 31 வருசம் அச்சு... இன்னும் சின்னவனுக்கு வரப்போறவ எங்க இருக்காளோ?? நீ சொன்ன மாதிரியே நல்ல சண்டக்காரியா வே வரட்டும் பாரதி.. அப்பதான் எனக்கும் டைம் பாசாகும்...
ஒருத்தி நான் கொஞ்சறதுக்கும் இன்னொருத்தி சண்டை போடறதுக்கும் என லைப் நல்லா ஜாலியாதான் இருக்கும்... இன்னும் அவ எங்க இருக்காளோ?? எப்ப வரப் போறாளோ ?? “ என்று பெருமுச்சு விட்டார்...
அதே நேரம் தன் அலுவலக கேண்டினில் தன் நண்பர்களுடன் அமர்ந்து கதை அடித்து கொண்டிருந்த மதுவின் தோழி சந்தியாவுக்கு புரை ஏறியது...
தன் தலையை தட்டியவள்
“இந்த நேரத்துல யார் நம்மள நினைக்க போறா?? இந்த அப்பா அம்மாவும் நான் எப்படா ஆபிஸ் போவேனு பிடிச்சு தள்ளறவங்க... சொந்தக்காரங்களும் யாரும் இல்ல... இந்த மந்தி.... ம்ஹும்ம்ம் அவ க .மு (கல்யாணத்துக்கு முன்னால்... ) வே என்ன கண்டுக்க மாட்டா... க.பி ம்ஹும் சுத்தம்...
வேற யாரா இருக்கும்?? “ என்று தன் ஆட்காட்டி விரலை தன் கன்னத்தில் வைத்து யோசித்தவள்
“ஒரு வேளை என் வருங்கால மாமியாரா இருக்குமோ?? அவங்க கூட சண்டை போட ஆள் இல்லாம என்னை தேடறாங்களோ??
ஹ்ம்ம்ம்ம் எனக்கும் அந்த மந்தி மாதிரி இந்நேரம் கல்யாணம் ஆகியிருந்தால் நான் பாட்டுக்கு என் மாமியார மிரட்டிகிட்டு ஜாலியா பொழுதை போக்கி கிட்டு இருந்திருப்பேன்...
இப்ப பார்.. இந்த லேப்டாப் ஐ கட்டிகிட்டு அழ வேண்டியதா இருக்கு...5 மணி ஆனாலும் வீட்டுக்கு விட மாட்டேங்கிறானுங்க...
இந்த அப்பா... எனக்கு இன்னும் பருப்பு, பொறுப்பு வரணும்... ஒரு குடும்பத்தை பார்த்துக்கற அளவுக்கு பொறுப்பு வரலை... அதை பர்ஸ்ட் டெவலப் பண்ணு.. நான் படற கஷ்டம் என் மாப்பிள்ளை படக்கூடாது.. உனக்கு 25 வயசுலதான் கல்யாணம் னு தடா போட்டுட்டார்...
அந்த மந்தியோட அப்பா, அவளுக்கு எப்படா 21 வயது ஆகும் னு பார்த்துகிட்டு இருந்துட்டு சீக்கிரம் கல்யாணத்தை பண்ணி அவர் கடமைய முடிச்சிட்டார்... அவர் ஸ்மார்ட் அப்பா... என் அப்பா வேஸ்ட் அப்பா... பேட் டாடி... “என்று தன் தந்தைக்கு மனதுக்குள் அர்ச்சனை பண்ணினாள் சந்தியா...
“ஹ்ம்ம் டோன்ட் வொர்ரி மாமியாரே... சீக்கிரம் உங்கள பார்க்க வர்ரேன்...யூ வெய்ட்டிங் .. மீ கமிங்..” என்று மனதுக்குள் சிரித்து கொண்டவள்
“ஆமா என் மாமியார் எப்படி இருப்பாங்க?? “என்று அவள் பார்த்த சீரியலில் வரும் எல்லா மாமியார்களையும் ஒருமுறை மனதில் ஓட்டி பார்த்து ஒவ்வொருத்தராக ரிஜக்ட் பண்ணி கொண்டிருந்தாள்...
“சே!! அவ அவ தன் வருங்கால கணவன் எப்படி இருப்பானு கற்பனை பண்ணி டிரீம் அடிச்சிகிட்டு இருப்பாளுங்க... இந்த லூசு தன் வருங்கால மாமியாரை பத்தி கனவு காணுதே... என்ன கொடுமை சார் இது..?? இது கிட்ட போய் என்ன மாட்ட வச்சிருக்காங்களே... “ என்று தன் தலையில் அடித்து கொண்டது அவள் மனசாட்சி...
கோவிலில் ஒருவருக்கொருவர் கிண்டலடித்து கலகலப்பாக பேசி கொண்டிருக்க, சிறிது நேரத்தில் ஆதியும் நிகிலனும் சிரித்து பேசி கொண்டே கோவிலுக்கு உள்ளே வந்து தங்கள் குடும்பத்தை கண்டு கொண்டு அவர்கள் அருகில் வந்தனர்...
ஆதி ஆறடி உயரத்தில் நிகிலனின் உயரத்துக்கு கொஞ்சம் குறைவாக, அடர்ந்த கேசமும் நேர்த்தியான கூரான நாசியும் கொலுகொலுவென்ற கன்னமும் கடந்த ஒரு வருடமாக சிரித்து கொண்டிருக்கும் கண்களுடன் பார்ப்பவர்களை உடனேயே வசியம் செய்யும் தோற்றத்தில் இருந்தான்....
நிகிலன் விரைத்த உடலும் இடுங்கிய கண்களுடன் எப்பவும் ஒருவித இறுக்கத்துடன் வலைய வருபவன்...அவனுக்கு நேர் மாறாக இருந்தான் ஆதி
பாரதி அவன் வாழ்விள் வந்த பிறகு கொஞ்ச காலமாக சிரிக்க மறந்திருந்த அவன் கண்களில் மீண்டும் அந்த குறும்பு சிரிப்பும் உதட்டில் எப்பவும் வீற்றிருக்கும் புன்னகையும் ஒட்டிகொண்டது...
சற்று தொலைவில் வருகையிலையே , அவன் உதடுகள் நிகிலனிடம் பேசி கொண்டிருந்தாலும் அவன் கண்கள் தானாக அவன் ரதியை தேடியது...
சிவகாமியுடன் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் பாரதியை கண்டதும் அவன் முகத்தில் தானாக புன்னகை அரும்பியது.. அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான் ஆதி....
“டேய்.. மச்சான் போதும்டா சிஸ்டரை சைட் அடிச்சது.. என்னவோ பார்த்து பல வருசம் ஆன மாதிரி அப்படி லுக் விடற.. இப்பதான் கொஞ்சநேரம் முன்னாடி கூட வந்து விட்டுட்டு போன... அதுக்குள்ள என்ன அப்படி ஒரு லுக்?? “ என்று நிகிலன் சிரித்துக் கொண்டே ஆதியை ஓட்டினான்..
அதை கேட்டு ஆதியின் முகத்தில் மெல்லிய வெக்கம் படற
“ஹீ ஹீ ஹீ... “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தான் ஆதி ..
“டேய் மச்சான்.. உன்னை இப்படி பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா…இப்படியே எப்பவும் இருடா .. ” என்று மனம் நிறைந்து அவனை வாழ்த்தினான் நிகிலன்....பின் ஆதியை பார்த்து
“டேய் மச்சான்.. எனக்கு ஒரு சந்தேகம்... உன் கல்யாணத்தப்ப என்னமா சிஸ்டரை முறைச்சுகிட்டிருருந்த.. இப்ப எப்படிடா இப்படி பொட்டி பாம்பா அடங்கி போன?? What is the secret? “ என்று சிரித்தான் நிகிலன்....
“ஹா ஹா ஹா... உனக்கு இப்பதான கல்யாணம் ஆகியிருக்கு... போக போக அந்த secret என்னானு உனக்கே தெரியும் மச்சி... “ என்று கண் சிமிட்டி சிரித்தான் ஆதி...
“ஹ்ம்ம்ம் என்னமோ போடா... நீயும் அந்த கௌதவும் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்கதான்... பொண்டாட்டி கிட்ட அடங்கி அவங்க முந்தானைய புடிச்சுகிட்டே சுத்தறதுல.. “ என்றான் நக்கலாக
“டேய் மச்சான்.. பொண்டாட்டி கிட்ட அடங்கறதுலயும் ஒரு சுகம் இருக்குடா... இதெல்லாம் உனக்கு இப்ப புரியாது... அனுபவிச்சு பார்.. அப்ப புரியும்.. “ என்று குறும்பாக சிரித்தான் ஆதி....
“நானெல்லாம் உன்ன மாதிரி இருக்க மாட்டேன் பா.. “ என்று தன் தோளை குலுக்கியவன் முன்னே நடந்தான்...
இவர்கள் வருவதை கண்டு கொண்ட பாரதியும் கம்பீரமாக சிரித்து கொண்டே நடந்து வரும் தன் கணவனையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருக்க, அருகில் நின்ற சிவகாமி
“ஹ்ம்ம்ம் போதும் டீ மருமகளே.. இப்படி முறச்சு பார்க்காத.. எங்க பையனுக்கு ஏதாவது ஆகிடும்.. “ என்று சிரிக்க, அதை கேட்டு பாரதியின் கன்னம் சிவக்க அசட்டு சிரிப்பை உதிர்த்து தன் பார்வையை மாற்றி கொண்டாள் பாரதி..
பின் இருவரும் அவர்கள் அருகில் சென்றனர்...மது நிகிலனை கண்டதும் அதுவரை சிரித்து பேசி கொண்டிருந்தவள் அப்படியே ஆப் ஆகி தலையை குனிந்து கொண்டாள்... ஆதி சிவகாமியின் நலம் விசாரித்து பின் மதுவை பார்த்து
“எப்படி இருக்க மது?? மச்சான் உன்னை நல்லா பார்த்துக்கறானா?? “ என்றான் சிரித்த முகமாக..
அவனின் உரிமையான பேச்சும் அவர்கள் பழகுவதை இது வரை கண்டு வந்தவளுக்கு மகிழ்ச்சியாக இருக்க,
“ஹ்ம்ம்ம் நல்லா இருக்கேன் ணா... நீங்க எப்படி இருக்கீங்க ?? அகிலா உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கா... “ என்று புன்னகைத்தாள் மது ...
அவளின் மெல்லிய இனிமையான குரலும் குழந்தை தனமான முகமும் அவள் தன்னை அண்ணா என்று அழைத்ததில் கொஞ்சம் நெகிழ்ந்து போனான் ஆதி...
அதற்குள் பாரதி நிகிலனிடம்
“என்ன மாம்ஸ்?? ..புது மாப்பிள்ளை வேற... எப்படி இருக்கீங்க??.. மேரேஜ் லைப் எப்படி போகுது?? “ என்று வம்பு இழுத்தாள்....
ஆதி-பாரதி திருமணத்தின் பொழுது அவளுக்கு தாய் மாமன் இடத்தில் இருந்து அவளுக்கு மாலையிட்டு மற்ற சடங்குகளை நிகிலன் செய்ததால், அடுத்து வந்த சந்திப்புகளில் பாரதி அவனை மாம்ஸ் என்று செல்லமாக அழைத்து அவனை வம்பிழுப்பாள்....
அவனும் முதலில் சிஸ்டர் என்றே அழைக்க பாரதி அவனை வற்புருத்தி பாரதி என்று பெயர் சொல்லி அழைக்க வைத்திருந்தாள்...நிகிலனும் பாரதியிடம் மட்டும் சிரித்து பிரியாக பழகுவான்...
பாரதியின் கேள்விக்கு
“பைன் பாரதி... “ என்று சுருக்கமாக முடித்தான் சிரித்து கொண்டே...
அவன் பாரதியிடம் சிரித்து பேசுவதை கண்ட மது விழி விரிய அவனை நிமிர்ந்து பார்த்து மீண்டும் குனிந்து கொண்டாள்...
“ஹ்ம்ம்ம் பார்த்தா அப்படி தெரியலையே...என்ன போலிஸ்காரர் ன என் தங்கச்சிய ரொம்ப மிரட்டுவீங்க போல... உங்கள பார்த்ததும் இதுவரை சிரிச்சுகிட்டு இருந்தவ அப்படியே ஆப் ஆகிட்டா?? என்ன கேட்க யாரும் இல்லைனு அவள ரொம்ப மிரட்டறீங்களா?? நான் இருக்கேன் மறந்திடாதிங்க... “ என்று விரல் நீட்டி மிரட்டினாள் பாரதி சிரித்து கொண்டே...
நிகிலன் எதுவும் சொல்லாமல் சிரிக்க,
“ஹ்ம்ம்ம் சிரிச்சு மழுப்பாமல் உண்மையை சொல்லுங்க மாம்ஸ்.. “ என்றவள் மதுவிடம் திரும்பி
“என்ன மது குட்டி?? போலிஸ்காரர் ரொம்ப மிரட்டறாரா?? “ என்றாள் குறும்பாக சிரித்து கொண்டே
அதுவரை குனிந்து இருந்த மது பாரதி தன் பெயரை சொல்லவும் வேகமாக தலையை நிமிர்ந்தவள் பாரதியின் கேள்விக்கு
“ஆமா .. இன்று தலையை ஆட்ட அதை கண்டு நிகிலன் அவளை முறைக்க, உடனே இல்லை என்று தலையை இருபக்கமும் ஆட்டினாள் மெல்ல பயந்து கொண்டே...
அவளின் செய்கையை கண்டு சிரித்த பாரதி
“என்ன ஆமாவா?? இல்லையா?? இப்படி இரண்டு பக்கமும் ஆட்டினா எப்படி?? “ என்றவள் மீண்டும் நிகிலனிடம் திரும்பி
“மாம்ஸ்... பச்ச புள்ளைய உண்மைய சொல்ல கூடாதுனு வேற மிரட்டி வச்சிருக்கீங்க போல... இது நல்லால்ல... என் தங்கச்சிய ஒழுங்கா நல்லா பார்த்துக்கங்க.. “ என்று மீண்டும் கை நீட்டி மிரட்டினாள்...
“ஹ்ம்ம்ம் உத்தரவு.. மஹாராணி.. நீங்க சொல்லீட்டீங்க இல்ல... அத மீற முடியுமா?? “ என்று தன் தலையை குனிந்து அவன் கையால் வாயை பொத்தி நடிக்க, அனைவரும் சிரித்தனர்...
“ஹ்ம்ம் அது... அந்த பயம் இருக்கட்டும்.. “ என்று பாரதியும் சிரித்தாள்..
அதற்குள் கார்த்தியை தூக்கி கொண்டு கோவிலை சுற்றி வேடிக்கை காட்டி வந்த அகிலா தன் ஹேன்ட் பேக்கை திறந்து அதில் இருந்த கேக்கை எடுத்து ஆதி மற்றும் பாரதியிடம் நீட்டியவள்
“ஆதி அண்ணா... இன்னைக்கு மது அண்ணியோட பர்த்டே.. கேக் எடுத்துக்கங்க...” என்று சிரிக்க, அனைவரும் மதுவிற்கு வாழ்த்து சொல்லி கேக்கை எடுத்து கொண்டனர்..
மதுவும் சிரித்து கொண்டே நன்றி சொல்லி அவர்கள் வாழ்த்தை ஏற்று கொண்டாள்...
பின் பாரதி நிகிலனிடம்
“என்ன மாம்ஸ்... பொண்டாட்டியோட முதல் பர்த் டே... எங்களுக்கெல்லாம் ட்ரீட் இல்லையா?? “ என்றாள் தலையை சரித்து
“ஹே ரதி... நேற்று தான ஹோட்டலுக்கு கூட்டிகிட்டு போனேன்.. அதுக்குள்ள என்னடி?? “ என்றான் ஆதி ..
“ஹீ ஹீ ஹீ... மாமா... என்னதான் நம்ம சொந்த காசு போட்டு வாங்கி சாப்பிட்டாலும் ஓசியில் இந்த மாதிரி அடுத்தவங்க கொடுக்கிற ட்ரீட் ல புல் கட்டு கட்டறதுல இருக்கிற சுகமே தனி மாமா... அதெல்லாம் உங்களுக்கு தெரியாது.. நீங்க சும்மா இருங்க.. “ என்று ஆதியை பார்த்து கண்ணடித்தவள்.
“ஹ்ம்ம் சொல்லுங்க மாம்ஸ்.. எங்க போகலாம்?? “ என்றாள் விடாமல்..
அவள் பிடித்தால் விட மாட்டாள் என்று தெரிந்ததால் நிகிலனும் வேற வழி இல்லாமல்
“சரி பாரதி.. நீயே செலக்ட் பண்ணு...எங்க போறதுனு?? ஆமா என்ன மாதிரி புட் வேணும்.. ?? “ என்றான் நிகிலன்..
“எனக்கு சாய்ஸ் எல்லாம் இல்ல மாம்ஸ்.. நீங்க எத வாங்கி கொடுத்தாலும் எனக்கு ஓகே... ஆனா ஐஸ்கிரீம் மட்டும் வெண்ணிலா இரண்டு கப் வேணும் எனக்கும் என் புள்ளைக்கும்... இப்பயே சொல்லிட்டேன்.. “ என்றாள் சிரித்து கொண்டே...
பாரதி சொன்ன ஐஸ்கிரீம் என்றதை கேட்டதும் அகிலா கையை பிடித்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அந்த கார்த்தி குட்டி அகிலாவின் கையை உதறிவிட்டு வேகமாக நடந்து வந்து பாரதியின் காலை கட்டி கொண்டு
“ஐஸ்... ஐஸ்.... “ என்று குதித்தாள்....
தன் மகளை கண்டதும் வேகமாக குனிந்து அவளை தன் கையில் அள்ளி கொண்ட ஆதி அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட, அவளும் மலர்ந்து சிரித்து தன் தந்தையின் கன்னத்தில் அவள் பிஞ்சு இதழ்களால் ஒற்றினாள்....
அதில் சிலிர்த்தவன்
“எத்தன ஐஸ்கிரீம் வேணும் டா பிரின்ஸ்ஸ்.... டாடி வாங்கி தர்ரேன்... “ என்று சிரிக்க, அதன் பிஞ்சு கையை நீட்டி 10 விரலையும் விரித்து காட்டினாள் சிரித்து கொண்டே...
அவளின் அந்த செய்கையை கண்டு அனைவரும் ரசித்து சிரித்தனர்..
சிவகாமியும் அந்த குட்டியின் கன்னத்தை வருடி
“என்ன மருமகளே... புள்ளைக்கு ஐஸ்கிரீம்னா புடிக்குமா?? .. இப்பயே விவரமா கேட்கறா?? “ என்றார் சிரித்து கொண்டே...
“அட போங்க அத்தை.. புடிக்குமாவா?? 11 மாசம் ஆரம்பிச்சதுமே முதல்ல “பா..” னு அவ அப்பாவை தான் சொன்னா... நானும் சரி அடுத்தாவது என் பேரை சொல்லுவானு டெய்லியும் அம்மா சொல்லு அம்மா சொல்லு இல்ல பாட்டி தாத்தா மாமானு எதையாவது சொல்லு னு டிரெய்னிங் கொடுத்தா அடுத்த வார்த்தை ஐஸ் னு தான் வருது... அவ்வளவு பிரியம் இந்த ஐஸ்கிரீம் மேல.. “ என்று சிரித்தாள் பாரதி...
“ஹா ஹா ஹா .. அப்ப அவ வயித்துக்குள்ள இருந்தப்ப நீ நிறைய ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டிருப்ப?? அதான் உள்ள இருக்கையிலயே அவளுக்கு அந்த டேஸ்ட் புடிச்சிடுச்சு.. என்ன நான் சொல்றது சரிதான?? ... “ என்றார் சிவகாமி...
அவர் சொன்னதை கேட்டதும் பழைய நினைவுகள் கண் முன்னே வந்தன ஆதிக்கும் பாரதிக்கும்....
முதலில் பாரதி ஐஸ்கிரீம் கேட்டு ஆதி வாங்கி கொடுக்காமல் மறுக்க அவள் கோவிச்சுகிட்டு காரில் விடைத்து கொண்டு அமர்ந்ததும், திருமணத்திற்கு பிறகு அவன் ஐஸ்கிரீமை கொடுத்து அவளை மடக்கியதும் நினைவு வர, இருவருமே அந்த நினைவுகளில் மூழ்கி சிரித்துக் கொண்டனர் ஒருவரை ஒருவர் பார்த்து...
சிவகாமி இன்னும் பாரதியை பார்த்து கொண்டிருக்க, ஆதி அவரை பார்த்து
“கரெக்டா சொன்னீங்க ஆன்ட்டி... அவ பிரக்னென்ட் ஆ இருந்தப்போ தினமும் ஒரு ஐஸ்கிரீம் மொக்குவா.. இவளுக்குனே என் ரூம்ல பெரிய பிரிட்ஜ் ஆ வாங்கி வச்சேன்...
அதோட இவ கிட்ட எதுவும் காரியம் ஆகணும்னா ஐஸ்கிரீம் ஐ கொடுத்தா போதும்.. அப்படியே மயங்கிடுவா.. “ என்று பாரதியை பார்த்து கொண்டே கண் சிமிட்டி சிரித்தான் ஆதி...
“ஹா ஹா ஹா ... இது நல்லா இருக்கே... அப்படி என்ன காரியத்தப்பா சாதிச்ச என் மருமக கிட்ட.?? “ என்று சிவகாமி இயல்பாக கேட்க
அதை கேட்டு ஆதிக்கு புரை ஏறியது... அவர்களின் முதல் இரவு சம்பவம் நினைவு வர, பாரதி கன்னம் சிவக்க, நமட்டு சிரிப்புடன் தலையை குனிந்து கொண்டாள் தன் வெக்கத்தை மறைக்க...
ஆதிக்கோ என்ன சொல்லுவது என்று புரியாமல் அசட்டுச் சிரிப்பை சிரித்து வைத்தான்... அவர்கள் இருவரின் தோற்றத்தை வைத்தே இந்த ஐஸ்கிரீமை வைத்து ஏதோ கேம் ஆடியிருக்காங்க இரண்டு பேரும் என்று புரிந்து விட, சிவகாமியும் ஜானகியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்...
“அதை விட இவள மாதிரியே என் பொண்ணும் இருக்கா ஆன்ட்டி.. ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கலைனா கோவிச்சுகிட்டு போய்டறா ஆன்ட்டி… வயித்துக்குள்ள இருக்கிறப்பயே என் ப்ரின்ஸஸை கெடுத்து வச்சிருக்கா இவ ... “ என்று பாரதியை பார்த்து சிரித்தான் ஆதி..
“யார்?? நான் கெடுத்தனா?? நீங்கதான் பிரின்ஸஸ் பிரின்ஸஸ் னு செல்லம் கொஞ்சிகிட்டு அவ கேட்கிறப்ப எல்லால் எடுத்து கொடுத்தது.... இப்ப என்னைய குத்தம் சொல்றீங்களா?? .. ” என்று சண்டை கோழியாக விடைத்து கொண்டு ஆதியை முறைத்தாள் பாரதி
“ஆஹா... இங்கயும் மா?? “ என்று தலையில் அடித்து கொண்டான் நிகிலன்..
ஆதி வந்ததில் இருந்தே சிரித்து கொண்டிருப்பதை கண்டு அதுவரை அமைதியாக இருந்த அகிலா
“ஆதி அண்ணா.... எப்படி நீங்க இப்படி மாறினீங்க?? எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கீங்க...இப்படியே இருந்தால் உங்களை MS லயிருந்து நீக்க வேண்டியிருக்கும்..” என்றாள் அகிலா சிரித்து கொண்டே..
“அது என்ன அகி MS ??” என்றான் ஆதி ஆர்வமாக
பாரதி அகிலாவை பார்த்து “ சொல்லாத .. சொல்லாத... “ என்று கண்ணால் ஜாடை காட்ட அதை கண்டு கொண்டவன்
“ஹே அகி குட்டி.. நீ என் செல்லம் இல்ல... சொல்லுடா என்ன அதுனு .. “ என்று ஆதி ஐஸ் வைக்க அதில் உருகியவள்
“MS னா... முறைப்பவர் சங்கம். ஆதி அண்ணா... முன்னாடி எல்லாம் நீங்க அண்ணிய முறச்சுகிட்டே இருப்பீங்க இல்ல... அதான் நானும் அண்ணியும் சேர்ந்து MS ஸ்டார்ட் பண்ணி அதில உங்களதான் தலைவரா ரெகமண்ட் பண்ணினாங்க பாரதி அண்ணி... நிக்கி அண்ணா செயலாளர்.. “ என்று சிரித்தாள் அகிலா...
அதை கேட்டு நிகிலன் அகிலாவை முறைத்தான்....ஆதியோ வாய் விட்டு சிரித்தான்..
“பாருங்கண்ணா.. நீங்க எவ்வளவு ஜாலியா எடுத்துக்கறீங்க... நிக்கி அண்ணா மட்டும் முறைக்கிறான்.. கொஞ்சம் சொல்லி வைங்க... உங்க பிரெண்ட் கிட்ட.. “ என்று புகார் செய்தாள்...
அவர்களின் பேச்சை ரசித்து பார்த்து கொண்டிருந்த மது ஆதியை பார்த்து
“அண்ணா... நீங்க பாரதிய திட்டுவீங்களா?? “ என்றாள் நம்பாமல்
“ஹோய்...மது குட்டி.. என்ன அப்படி கேட்டுட்ட?? ... இப்ப இருக்கிற கெட்டப்பை பார்த்து உன் அண்ணனை நல்லவன் னு நினைச்சிடாத... என்னை போட்டு எப்படி வாட்டி எடுத்தார் தெரியுமா?? அப்பப்பா ... அப்ப அவர பார்த்தாலெ கை கால் எல்லாம் உதறும்...
இப்ப நினச்சாலும் எனக்கு நடுங்குது... அந்த முருகன் புண்ணியத்துல இப்பதான் கொஞ்சம் எல்லாம் அடங்கியிருக்கார்... “ என்று சிரித்தாள் பாரதி....
“ஹே ரதி... பழசை எல்லாம் பேசி பாவம் சின்ன பொண்ண பயமுறுத்தாதா....
நீ அதெல்லாம் கண்டுக்காத மது... அப்ப கிடைத்த ஒரே ஒரு சான்ஸ்... அத கொஞ்சம் யூஸ் பண்ணிகிட்டேன்... அவ்வளவுதான்..
இப்பதான் இந்த பட்டிகாட்டு மஹாராணி எங்க வீட்டை அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாளே... இப்பெல்லாம் முறைக்கிறது திட்டறது எப்படி னு யூட்யூப் ல பார்த்து தெரிஞ்சுகிட்டாதான் உண்டு...
மனசுக்குள்ள கூட அவளை திட்ட முடியலை... ஹ்ம்ம்ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம்... “ என்று பெருமூச்சு விட்டான்..
ஆதி தன்னை பட்டிகாடு என்பதில் கடுப்பான பாரதி,
“யார் பட்டிக்காடு?? அந்த பாட்டிக்காட்டுக்கு வாரம் தவறாமல் ஏன் நீங்களும் உங்க பிரின்ஸஸ்ம் ஓடறீங்களாம்.. “ என்று முகத்தை நொடித்தாள்...
தன் மகள் தன்னைப் போலவே தனியாக வளராமல் உறவுகளுடன் கூடி மகிழ்ந்து வளர வேண்டும் என்பதலாயே முக்கால்வாசி வார விடுமுறைகளில் பாரதியின் ஊருக்கு சென்று விடுவார்கள்.. நேரம் இல்லாத சமயங்களில் மாதம் ஒரு முறையாவது செல்வது வாடிக்கை ஆகி இருந்தது...ஜானகியும் அப்பப்ப அவர்களுடன் சேர்ந்து அங்கு சென்று வருவார்....அதைதான் பாரதி இப்பொழுது சொல்லி காட்ட, அதை கேட்ட ஆதி
“ஹா ஹா ஹா உங்க ஊரை பார்க்க யார் போறா?? எல்லாம் என் மாமனார் மாமியார் மச்சினிச்சி அப்புறம் என் மாமா பொண்ணு மஹா எல்லாரையும் பார்க்கத்தான் போறோம்.. “ என்று சிரித்தான்....
“ஏன் எங்க மணி...மல்லிகா.. அதையும் சேர்த்துக்க வேண்டியது தான?? “என்று மீண்டும் முறைக்க,
“ஓ.. யெஸ்..தேங்க்ஸ் டார்லிங் ஞாபக படுத்தினதுக்கு... அவங்களும் தான்.. இந்த ஆதியையும் அவன் பிரின்சசையும் பார்க்க எவ்வளவு ஆசையா காத்துகிட்டு இருக்காங்க தெரியுமா?? “ என்று மீண்டும் அவளை வெறுப்பேத்தினான்
“ஹ்ம்ம்ம் அப்ப இனிமேல் நீங்க மட்டும் போங்க.. நான் வரலை.. “ என்று விடைத்துக் கொண்டு நின்றாள்...
ஜானகி சிரித்து கொண்டே இருவருக்கும் சமாதானம் செய்து வைத்தார்.. பின் அனைவரும் கிளம்பி கோவிலுக்கு வெளியில் நடக்க, பாரதி ஆதியை முறைத்து கொண்டே முன்னே நடந்தாள்..
தன் பிரின்ஸஸை கையில் தூக்கி கொண்டு அவள் அருகில் வந்தவன்
“ஹேய்.. ரதி.. இப்ப எதுக்கு இப்படி சிலுத்துக்கற?? சும்மா ஜாலிக்காகத்தான சொன்னது.. சரி போனா போகுது... இன்னைக்கு நைட் இரண்டு ஐஸ்கிரீம் உனக்கு... என்ன டீலா?? “ என்றான் குறும்பாக கண் சிமிட்டி...
அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த கோபம் காற்றில் கரைந்த கற்பூரத்தை போல ஓடி மறைய வாயெல்லாம் பல்லாக
“ப்ராமிஸ்?? அப்புறம் மாற மாட்டீங்களே?? “என்றாள் பாரதி கண்கள் மின்ன
“ப்ராமிஸ்..” என்று சிரித்து கொண்டே அவள் கையை பிடித்துக் கொள்ள, பின் இருவரும் சிரித்து பேசிக் கொண்டே காரை அடைந்தனர்...
இரு குடும்பமும் அவர்கள் வந்த காரில் ஏறிக் கொள்ள, நிகிலன் அவர்களை அருகில் இருந்த ஒரு நட்சத்திர உணவகத்திற்கு அழைத்து சென்றான்...
அருமையான பதிவு
ReplyDelete