ராசாத்தி!!!






முன்னுரை:

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

இதுவும் ஒரு சிறுகதை போட்டிக்காக எழுதிய கதை..கதையின் ஆரம்பத்தை கொடுத்து கதையை தொடர்ந்து எழுத வேண்டும்... அப்படி எழுதிய இந்த கதையை இப்பொழுது எனக்கு பிடித்த மாதிரி கொஞ்சம் மாற்றி விட்டேன்.....

எனக்கு மிகவும் பிடித்த கதை இது.....Hope you like it... Happy Reading!!!



************

ராசாத்தி.. என் ராசாத்தி.. ஏன்டி இப்படி பண்ணினே? ஏன் இப்படி பண்ணினே? கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆச்சு . இன்னும் உன்னால என்னை நம்ப முடியலையா? என் மனசு ரொம்ப வலிக்குதடி.. “

என்று மனதில் மருகி கொண்டே நடந்தான் ஷிவா.. எவ்வளவு தூரம் நடந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவன் கால்கள் சென்று நின்றது அருகில் இருந்த கடற்கரையில்...

அந்த அலைகலும் அவன் மனதை போலவே பொங்கி கொண்டிருந்தது.

அலைகளில் கால் நனைத்தான். அவன் மனம் தானாக அவன் ராசாத்தியிடம் சென்றது. 


அவளுக்கு அலைகள் என்றால் கொள்ளை பிரியம். எப்படியும் வாரம் ஒரு முறை இந்த கடற்கரைக்கு வந்து விடுவார்கள். அவளுடன் இந்த மணலில் கால் புதைய புதைய கை கோர்த்து அவளை ரசித்துக் கொண்டே நடப்பது அவ்வளவு சுகமானது...

எங்கு சென்றாலும் அவன் மனம் கடைசியில் அவன் ராசாத்தியிடமே சரணடைந்தது.

“சே... நான் ஏன் இப்படி இருக்கேன்... “ என்று தன்னையே கடிந்து கொண்டான். எவ்வளவு தான் அவன் மனதை திசை திருப்ப முயன்றாலும் அவன் மனம் சண்டித்தனம் செய்தது. இதுக்கு மேல் முடியாது எனவும் வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டை அடைந்ததும் அனைவரும் உறங்கி இருந்தனர். சத்தம் எழுப்பாமல் மெதுவாக நடந்து அவன் அறைக்கு சென்றான்...

லாவண்யா- அவன் ராசாத்தி... இரண்டு நாள் முன்புவரை அவன் காதல் மனைவியாக அவன் இதயத்தில் சிம்மாசனம் இட்டு வீற்றிருந்தவள்..... அதுவரை அவனுக்காக விழித்திருந்து அப்பொழுதுதான் உறங்கியிருந்தாள்...

ஷிவாவுக்கும் அவளுக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய போகின்றன. பெரியோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம்தான்.. 

திருமணத்தில் எல்லாம் பெரிய நாட்டம் இருந்ததில்லை லாவண்யாவுக்கு. பெற்றவர்களுக்காக மட்டுமே அவனை மணந்துக்கொண்டு அவனோடு வாழ ஆரம்பித்தாள் லாவண்யா...

ஆனால் இந்த இரண்டு வருடங்களுக்குள் அவனுக்குள் எப்படி உருகி கரைந்து போனாள் என்பது அவளுக்கே புரியாத புதிர்தான்...

ஷிவாவும் அப்படித்தான்... அவளை தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினான்..

‘ராசாத்தி..’ இப்படித்தான் செல்லமாக அழைப்பான் அவளை...

அலுவலக விஷயமாக வெளிநாடு சென்றிருந்தவன் இன்றுதான் திரும்பி இருந்தான்...

ஒரு மாதம் பிரிந்திருந்த தன் ஆசை கணவன் வந்ததும் தன்னை அள்ளி அணைத்துக் கொள்வான் என்று ஆசையாக காத்திருந்த அவன் ராசாத்திக்கோ பெருத்த ஏமாற்றம்....

தன் மேல் கடந்த இரண்டு வருடமாக காதல் மழை பொழிந்தவன் இன்றோ அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை...

“அவன் பார்க்காவிட்டால் என்ன?? என் புருசன்தானே... அவன் அருகில் செல்ல, அவனை கொஞ்ச, அவனை கட்டிக்கொள்ள எனக்கு எல்லா உரிமையும் இருக்கு... “ என்று தன்னை தேற்றிகொண்டு அவன் அருகில் சென்றவளை தீ சுட்டதை போல விலக்கி எரிந்து விழுந்தான்...

அதிர்ந்து போனாள் லாவண்யா.. அவன் வருகைக்காக மலர்ந்து இருந்தவள் அவன் தீயாக பாய்வதை கண்டு மனம் வாடிப் போனாள்....

ஆனாலும் தன் முயற்சியை விடாமல்

“என்ன ஆச்சு?? ஏன் இவன் எப்படி இருக்கிறான்?? என்று தெரிந்து கொள்ள முயல, அவனோ கோபமாக அவளை பார்த்து முறைத்து விட்டு வேகமாக செருப்பை மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்...

அப்பொழுது சென்றவன் இப்பொழுதான் திரும்பி வருகிறான்... திரும்பி வந்தவன் அசந்து உறங்கும் தன் மனைவியையே இமைக்காமல் பார்த்திருந்தான்...

அவளின் பால் வடியும் முகத்தை பார்த்திருந்தவனுக்கு ,

“இவளா என்னிடம் மறைத்தாள். வேறு எதுவும் காரணம் இருக்குமோ ? அதனால் தான் மறைத்தாளோ? பேசாமல் அவளை மன்னித்து விடலாமா ?? “ என்று அவன் மனம் அவனின் ராசாத்திக்காக பரிந்து வந்தது.

இன்னொரு மனமோ அப்படியென்றால்

அவள் அவனை நம்பவில்லை என்று தானே அர்த்தம். எங்கே உண்மை தெரிந்தால் அவளை வெறுத்து விடுவேன் என்று தானே உண்மையை மறைத்திருக்கிறாள். அப்படி என்றால் என்னை இன்னும் நம்பவில்லை....

திருமணம் முடிந்த சில நாட்களிலயே அவளிடம் சொல்லியிருக்கிறானே ....

“கணவன் மனைவிக்குள் எந்த ஒலிவும் மறைவும் இருக்க கூடாது. எதுனாலும் இரண்டு பேரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று. அதுபடியே தான் இதுவரை நடந்தும் இருக்கிறது.

ஷிவா எதையும் அவளிடம் மறைத்ததில்லை.. அவளும் கூட ஆரம்பத்தில் எதுவும் அவனிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் பிறகு அவளுமே அவன் வழியை பின்பற்றி அன்றாடம் நடந்ததை அவனிடம் சொல்லி விடுவாள்.. 

அப்படிதான் அவன் நம்பி இருந்தான். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்து போனதே..

எவ்வளவு பெரிய உண்மையை என்னிடம் மறைத்திருக்கிறாள்.. மறைத்து விட்டாள் என்பதில் அவனுக்கு வருத்தம் இல்லை. ஆனால் அந்த உண்மையை சொல்லும் அளவுக்கு அவனை இன்னும் நம்ப வில்லையே என்பதில் தான் அவன் உடைந்து விட்டான்...

அப்போ இந்த இரண்டு வருட திருமண வாழ்விற்கு அர்த்தம் என்ன ? என்று தான் அவனால் தாங்க முடியவில்லை.

லாவண்யா புரண்டு படுக்கும் அரவம் பார்த்து வேகமாக வந்து ஷோபாவில் படுத்து கொண்டான். படுத்தான் தான். ஆனால் தூக்கம் தான் வந்த பாடில்லை. அவன் மனம் மீண்டும் பொங்கி கொண்டிருந்தது..

இந்த ட்ரிப் முடிஞ்சு வந்ததும் எப்படி எல்லாம் அவனின் ராசாத்தியை கொஞ்சணும் என்று திட்டம் போட்டிருந்தான்.. ஆனால் இன்று எல்லாம் வீணாகிவிட்டது..

“ஒரு வேளை அவனை பார்க்காமல் இருந்திருந்தால் இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காதோ.. ஆமாம் அவனை பார்த்தே இருக்க கூடாது...” என்று புலம்பியவன்

மனம் தானாக பின்னோக்கி சென்றது..

ன்று ஷிவா வெளிநாடு சென்று மூன்றாவது வாரம். சென்ற வேலை ஓரளவுக்கு முடிந்து விட்டதால் அந்த வார கடைசில் ஷாப்பிங் சென்றிருந்தான்.

எல்லாருக்கும் பார்த்து பார்த்து அவங்கவங்களுக்கு தேவையானதை வாங்கி கொண்டிருந்தான்.

அதுவும் அவனின் ராசாத்திக்காக வாங்கும் பொழுது அவளின் முகத்தை கற்பனையில் கொண்டு வந்து ஒவ்வொரு பொருளும் பொருத்தமாக இருக்குமா என்று கற்பனையிலயே அழகு பார்த்து ரசித்து வாங்கினான். ..

இன்னும் ஒரு வாரம் அவளை பார்க்காமல் இருக்கனுமே .. எப்ப இந்த டிரிப் முடிந்து அவளை பார்ப்போம் என்றிருந்தது...

ஷாப்பிங் முடிந்து அருகில் இருந்த ஒரு இந்திய உணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்தான்..

அப்பொழுது தான் அவன் அந்த உணவகத்தில் நுழைந்தான்.. நுழைந்தவன் எங்காவது காலி டேபில் இருக்கிறதா என்று துலாவி கடைசியில் ஷிவாவின் டேபிலை கண்டான்..

நேராக அந்த டேபிலை அடைந்து

“Excuse me, can I share this table? “

ஷிவாவும் “யா ஸ்யூர் “ என்று அவனை பார்த்து புன்னகைத்தான்.

அந்த டேபிலில் அமர்ந்தவன்

“by the way, I’m Vikki.. Viknesh from Tamil Nadu” என்று கை குலுக்கினான். ஷிவாவும் தன்னை அறிமுக படுத்திகொண்டான்.

பின்னர் இருவரும் தங்கள் வேலையை பற்றி பரிமாறி கொண்டனர்..

கொஞ்ச நேரத்திலயெ இருவரும் நல்ல நண்பர்களானார்கள்..

எல்லாம் நன்றாகவெ போய்கொண்டிருந்தது விக்கி ஷிவாவின் அலைபேசியை பார்க்கும் வரை.... அவன் அந்த அலைபேசியை பார்க்காமலே இருந்திருக்கலாம்...

இரண்டு பேரும் பேசி கொண்டே தாங்கள் ஆர்டர் செய்ததை ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

இடையில் ஷிவா எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றான் அலைபேசியை டேபிலில் வைத்து விட்டு..

அதே நேரம் அவனுக்கு வந்த வாட்ஸ்ஆப் மெசேஜால் அவன் அலைபேசி அதிர்ந்தது.. விக்னேஷ் எதேச்சையாக ஷிவாவின் அலைபேசியை நோக்கினான்.

அதில் லாவண்யா அழகாக சிரித்து கொண்டிருந்தாள்..

அதை கண்டதும் விக்கியின் உடல் விரைத்தது.. அவன் உதடுகள் மெல்ல அவள் பெயரை உச்சரித்தது..

லா.. வ..ண் யா...

அவன் கைகள் தானாக அவன் கன்னத்தை தடவியது..

பழைய ஞாபகத்தில் அவன் முகம் கோபத்தில் ஜொலித்தது..

அதற்குள் ஷிவா திரும்பி வரவும் தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு இயல்பாக முகத்தை வைத்து கொண்டான்...

“உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? “ என்று இயல்பாக கேட்பதை போல் கேட்டான் ஷிவாவிடம்.. அவனுக்கு லாவண்யா ஷிவாவுக்கு என்ன உறவு என்று தெரிந்து கொள்ள வெண்டும் என்று துடித்தது...

ஷிவா அவனின் ராசாத்தியை நினைத்து கொண்டு ,மெல்லிய வெட்கத்துடன்

“ஆமாம். இரண்டு வருடம் ஆகிறது “ என்றான்

“ஏன் கேட்கறீங்க “

விக்கி சற்று சுதாரித்து,

“இல்ல பர்சேஸ் எல்லாம் பலமா இருக்கே... “ என்று சமாளித்தான்..

இன்னும் அவன் மனதிற்குள் லாவண்யா தான் அவன் மனைவியா என்று குழப்பம் இருந்தது..அவன் குழப்பம் சில நிமிடங்களிச் தீர்ந்தது..

ஆம் ஷிவா சாப்பிட்டு முடித்ததும், பே பண்றதுக்காக அவனுடைய வாலட் ஐ திறந்தான். அதில் லாவண்யா மட்டும் ஒரு படத்திலும் இன்னொன்றில் லாவண்யாவும் ஷிவாவின் திருமண புகைப்படமும் இருந்தது...

அதை கண்டதும் விக்கியின் முகம் இன்னும் இறுகியது.. இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருவரும் விடை பெற்று சென்றனர்..

வரும் வழியில் விக்கியின் மனம் கனன்று கொண்டிருந்தது..

“என்னை அவமான படுத்திவிட்டு எப்படி அவள் இவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம்?” என்று கொதித்தது அவனுள்ளே

விக்கியும் லாவண்யாவும் ஒரே கல்லூரியில் படிததனர். விக்கி அப்போ கல்லூரியின் ஹீரோ. எல்லா பெண்களும் அவனையே சுத்தி வந்தனர்.. அதோடு அவன் நண்பர்களின் ஜால்ரா வேறு அவனை மிதக்க வைத்தது...

லாவண்யா மட்டும் விலகி இருந்தாள்.. ஒரு நாள் அவனுடைய நண்பர்கள் அவனை உசுப்பி விட்டனர்.

“மச்சான், நீயும் எத்தனையோ பொண்ணுங்களை மடக்கி இருக்க... ஆனால் இந்த லாவண்யா மட்டும் உன்கிட்ட மாட்டவே இல்லயே.. எப்படியாவது அவளை உன்கிட்ட வந்து ஐ லவ் யூ சொல்ல வைடா பார்க்கலாம் என்று ஏத்தி விட்டனர்..

அதை கேட்டதும் விக்கிக்கு ரோஷம் வந்தது..

அவ்வளவு தானே, இன்னும் ஒரே வாரத்தில் அவளை மடக்கி காட்டறேன் என்று சவால் விட்டு சென்றான்..

அதன்பின் அவனும் எத்தனையோ வழிகளில் லாவண்யாவை நெருங்க முயன்றான். அவளோ, இவன் இருந்த பக்கம் திரும்ப கூட இல்லை..

அந்த வார கடைசி வெள்ளிகிழமை. இன்று ஒரு முடிவு தெரியனும் என்று முன்னரே வந்து அவளுக்காக காத்து கொண்டிருந்தான். அவன் நண்பர்களும் மறைந்து இருந்து நடக்க போவதை சுவராஷியமாக பார்க்க காத்து கொண்டிருந்தனர்...

அவனை ஏமாற்றாமல் அவளும் சரியான நேரத்தில் வந்திருந்தாள்..

உடனே அவளிடம் சென்று “லாவண்யா, ஐ லவ் யூ “ என்று ஒரு ரோஜாவை நீட்டினான்..

அவளோ பயந்து நடுங்கி அவனை தாண்டி செல்ல முயன்றாள்.. அதற்குல் விக்கி அவளின் கையை பிடித்து எனக்கு பதில் சொல்லி விட்டு போ என்று வழி மறித்தான்..

அவளோ, எல்லாரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து,

“ப்ளீஸ் கைய விடுங்க, எல்லாரும் பார்க்கிறாங்க “ என்றாள் வெளிறிய முகத்துடன்...

ஆனால் வெறி கொண்டிருந்த அவனுக்கோ மற்றவர்கள் தெரியவில்லை.. அவளிடமிருந்து எப்படியாவது பதில் வேண்டும் என்று இன்னும் அவளின் கையை இறுக்கி பிடித்தான்...

அவளோ வலி தாங்காமல் அதை விட எல்லாரும் தங்களையே வேடிக்கை பார்ப்பது உணர்ந்து, அவனிடம் இருந்து விடுவிக்க, மறு கையால் ஓங்கி அறைந்திருந்தாள்..

அவள் அறைந்த பின்தான் அவளுக்கே உரைத்தது.. தான் செய்த செயல்..

விக்கிக்கோ பெரும் அவமானமாக இருந்தது.. அத்தனை பேர் முன்னாலும் அவனை அடித்தது.. அவன் கோபமாக திரும்பி அவளை பார்க்கும் முன் அவள் சிட்டாக பறந்திருந்தாள்..

அவளை எப்படியாவது பலி வாங்க வேண்டும் என்று அவன் மனம் கர்ஜித்தது..

ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை அவனுக்கு கொடுக்காமல் அடுத்த வாரமே அவள் அப்பாவின் வேலை மாறுதல் காரணமாக வேறு இடம் சென்று விட்டாள்.. எவ்வளவு முயன்றும் விக்கியால் அவளின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை..

இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த பழைய நெருப்பு கனன்று கொண்டிருந்தது.

“பலி வாங்க வேண்டும்... எப்படியாவது அவளை பலி வாங்க வேண்டும். என்னை அத்தனை பேர் முன்னிலையிலும் அவமான படுத்தியவளை கொஞ்சமாவது காய படுத்தவேண்டும்” சூளுரைத்தது அவன் மனம்.

என்ன செய்யல்லாம் என்று யோசித்து கொண்டே அவனின் அலைபேசியை குடைந்து கொண்டிருந்தான்.. டக்குனு அவனுக்கு ஒரு ஐடியா கிடைத்தது..

அதன் பலனைத்தான் இன்று லாவண்யா அனுபவித்து கொண்டிருக்கிறாள்....

சாப்பிட்டுவிட்டு தன் இருப்பிடத்திற்கு திரும்பி இருந்த ஷிவா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.. இந்த நாள் முழுவதுமே அவனுக்கு எல்லாம் பிடித்ததாக இருந்தது.

அதுவும் அவனுடைய ஷாப்பிங் அனுபவம்... அவன் ராசாத்திக்காக பார்த்து பார்த்து வாங்கியது எல்லாம் ஏனொ அவளிடம் இப்பவே சொல்லனும் போல இருந்தது..

மணியை பார்த்தான்... இந்தியாவில் இன்னும் விடிந்திருக்க வில்லை.

“அச்சோ அவள் இன்னும் தூங்கி கொண்டிருப்பாளே .. இப்ப எழுப்ப வேண்டாம். இன்னும் 2 மணி நேரம் தானே வெய்ட் பண்ணலாம்

அதுவரை என்ன செய்வது?? “ என்று யோசித்து கொண்டே அவனுடைய பேஸ்புக் ஐ திறந்து அப்டேட்ஸ் பார்த்து கொண்டிருந்தான்..

அப்பொழுது தான் கவனித்தான் விக்கியிடம் இருந்து ப்ரென்ட் ரெகுவஸ்ட் வந்திருந்தது..

“ரொம்ப பாஸ்ட் ஆ தான் இருக்கான். இப்பதான் ஹோடெல் ல பார்த்தோம். அதுக்குள்ள என் பேஸ்புக் அட்ரெஸ் கண்டுபுடிச்சுட்டானே” என்று சிரித்து கொண்டே அவன் ரெகுவஸ்ட் ஐ அக்செப்ட் பண்ணினான்...

அவன் அதோடு நின்றிருக்கலாம். ஆனால் ஒரு ஆர்வத்தில் விக்கியுடைய புரபைலை ஓபன் பண்ணினான்.

ஓபன் பண்ணியவன் விக்கியுடைய கவர் போட்டோ வை பார்த்து ஷாக் ஆகி நின்றான்...

ஆம் விக்கியின் கவர் போடொவில் விக்கியின் அருகில் வெகு நெருக்கமாக சிரித்து கொண்டிருந்தாள் லாவண்யா...

அவன் கண்களையே நம்ப முடியவில்லை.. இது அவள் தானா என்று மேலும் உற்று பார்த்தான்.

அவன் தினமும் சொக்கி விழும் அவள் கன்ன குழியும், அவன் ரசித்து சுவைக்கும் இதழ்கள், அதற்கு கீழே உள்ள மச்சம் எல்லாம் இது அவனின் ராசாத்தியே தான் என்று பறை சாற்றின ..

“ஆனால் இது எப்படி .... ? அவள் இதுவரை இந்த விக்கியை பற்றி ஒன்றுமே சொல்லலையெ.. ஒரு வேளை வேறு எதும் சொந்தமோ ? “ ஆனால் அவர்களின் நெருக்கத்தை கண்டவனுக்கு அது
சாதாரணமான சொந்தமாக இருக்க முடியாது என்று குழம்பியது.. 



எப்படி அறிந்து கொள்வது என்று யோசித்து கொண்டிருந்தவனுக்கு தானாகவே விடை கிடைத்தது....

பேஸ்புக் பிச்சருக்கு எந்த பதிலும் கிடைக்காததால், ஷிவாவின் வாட்ஸ்அப் க்கு மெசேஜ் பண்ணி இருந்தான் விக்கி

"Hi Shiva, this is Vikki. have you reached your place ? "

அவனுடைய மெஷெஜ் ஐ பார்த்த ஷிவா,

“என் நம்பர் எப்படி கிடைத்திருக்கும் “ என்று யோசித்தவன் அப்பொழுது தான் தன்னுடைய விசிட்டிங் கார்டை விக்கி இடம் கொடுத்தது நினைவு வந்தது...

ஷிவாவிடம் இருந்து பதில் வராததால், மீண்டும் டைப் பண்ணினான்

“sorry Siva to disturb you.. no one there in India at this time. So thought of chatting with you “ என்று அவன் எதேச்சையாக மெஷெஜ் செய்வதை போல் காட்டி கொண்டான்.

ஷிவா அதற்கு பதில் டைப் பண்ணிக் கொண்டே விக்கியின் வாட்ஸ்அப் டிபி ஐ பார்த்தான். அதிலும் அதே புகைப்படம்..

எப்படி தெரிந்து கொள்வது அந்த படத்தில் இருப்பவளை பற்றி என்று குழம்பி கொண்டே விக்கி கேட்கும் கேள்விக் கெல்லாம் பதில் டைப் பண்ணி கொண்டிருந்தான் ஷிவா..

ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், அவனே கேட்டிருந்தான். அந்த புகைப்படத்தில் இருப்பது யாரென்று...

இதை பார்த்ததும் துள்ளி குதித்தான் விக்கி. இதற்காக தானே இவ்வளவு பிளான்..

எங்கடா ஷிவா இன்னும் லாவண்யா பற்றி கேட்க வில்லையே, அவன் கேட்கவில்லை என்றால் எப்படி தன் திட்டம் நிறைவேறும் என்ற வனுக்கு ஷிவாவின் இந்த கேள்வி துள்ளி குதிக்க வைத்தது..

உடனே அவன் ஷிவா வுக்கு வாட்ஸ்அப் கால் பண்ணினான்.

“ஐயோ ! இப்படியா அடுத்தவன் பெர்சனல் பத்தி கேட்கறது?? “ என்று நொந்து கொண்டே அவன் காலை அட்டென்ட் பண்ணினான் ஷிவா..

“சாரி விக்கி... “ என்று ஏதோ சொல்லு முன்னே விக்கியே முந்தி கொண்டான்..

“ஹே , இட்ஸ் ஒகே ஷிவா.. எனக்கும் யார் கிட்டயாவது என் மனசில் இருக்கறதை சொல்லனும் னு இருந்தது... நீயே கேட்டுட்ட...” என்று இழுத்தான்..

ஷிவா வோ மனதிற்குள் “இது என் ராசாத்தியாக இருக்க கூடாது கடவுளே!!” என்று ஒரு அவசர விண்ணப்பத்தை வைத்தான்...

ஆனால் விக்கி எடுத்த உடனே

“She is my sweet heart, angel, my love லா வ ண் யா .... “ என்று மெதுவாக நிறுத்தி சொன்னான்.

அதை கேட்டதும், கொஞ்சமிருந்த நம்பிக்கையும் போனது.. இது அவனோட ராசாத்தியே தான்.. ஆனால் விக்கியோட எப்படி என்று மீண்டும் அதே கேள்வி தொக்கி நின்றது.. அவன் தன்னை கட்டுபடுத்தி கொண்டு, விக்கி சொல்வதை கவனித்தான்...

“நானும் என் லாவண்யாவும் காலேஜில் படிக்கும் பொழுது லவ் பன்ணினோம். நான் என்றால் அவளுக்கு உயிர். எனக்கும் அப்படி தான்..

எங்கள் காதல் எப்படியோ அவங்க வீட்டிற்கு தெரிஞ்சிருச்சு. அப்போ தான் நான் காலேஜ் முடிச்சு வேலை தேடிக்கிட்டிருந்தேன்.. எனக்கு வேலை இல்லை என்பதற்காக அவர் அவசர அவசரமாக லாவண்யாவிற்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பர்த்துட்டார்..

லாவண்யாவையும் அவர்கள் ஏதோ ப்ரைன் வாஷ் பண்ணி அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிட்டாங்க... எனக்கு சரியான சப்போர்ட் இல்லாததால், என்னால் ஒண்ணும் பண்ண முடியலை...

ஆனால் லாவண்யா எப்படியும் எங்கிட்ட வந்திடுவா என்று நம்பிக்கையோடு இருந்தேன்.. ஆனால் அவள் கடைசி வரைக்கும் வரவே இல்லை...

அப்பதான் தெரிந்தது அவள் என்னை ஏமாத்திட்டா என்று...

அதுக்கப்புறம் ஒரு கன்ஷல்டன்சி வழியா இங்கு வந்தேன்..

I have more money now. But my Lavanya?? ….

என்னால இன்னும் அவளை மறக்க முடியவில்லை.. பொண்ணுங்களுக்கு எப்படி தான் தான்காதலித்தவனை சுலபமாக தூக்கி போட்டுட்டு போறாங்களோ ?? ..

I’m happy that your wife is not that category.. Anyway sorry for telling my story and disturbing you Shiva.. “

Have a good evening “ என்று கட் பண்ணியவன்,

“என்னுடைய இந்த வெடி எப்படியும் லாவண்யா வின் வாழ்வில் குழப்பத்தை கொண்டு வரும்.. .. அது போதும் எனக்கு” என்று கன்னத்தை தடவி கொண்டே வில்லன் சிரிப்பை சிரித்தான்

“இட்ஸ் ஓகே விக்கி... “ என்று ஷிவாவும் காலை கட் பண்ணினான்.

ஷிவா வால் நம்ப முடியவில்லை இன்னும்.. லாவண்யா வா இப்படி..??

என்று மெதுவாக பழைய நினைவுகளை நோண்டி பார்த்தான்..

வன் பொண்ணு பார்க்க சென்ற போது அவள் இவன் பக்கம் பார்க்கவே இல்லை..

நிச்சயம் முடிந்தும் ஒருநாள் கூட அவள் இவனை அழைத்ததில்லை.. இவனே தான் கால் பண்ணி பேசுவான்.. ஆனால் அவளிடமிருந்து அதிக ஈடுபாடு தெரியவில்லை.. அப்பொழுது அவள் வெட்க படுகிறாள் என்று அவனும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை..

திருமணம் முடிந்த பிறகும் கூட கொஞ்சம் விலகியே தான் இருந்தாள்.. ஷிவாதான் தன் அன்பால் அவளை மெல்ல மெல்ல பேச வைத்து தன் பக்கம் கொண்டு வந்தான்....அதன் பிறகு அவளும் அவனிடம் உயிராகினாள்..

அப்பொழுது சாதாரணமாக தெரிந்த விஷயம் எல்லாம் , இன்று அவள் விக்கியின் நினைவால் தான் ஆரம்பத்தில் அப்படி ஒதுங்கி இருந்திருக்கிறாள் என்று தப்பு வண்ணம் பூசியது....

திருமணத்திற்கு முன் காதலிப்பதெல்லாம் இப்ப சாதரணமானது தான்.. ஆனால் என்னிடம் அவள் சொல்லி இருக்கலாம் அவளுடைய கதையை...

தான் எத்தனை முறை காலேஜ் அனுபவங்கள் என்று பேசி இருக்கிறான்.. ஆனால் ஒரு முறை கூட அவள் விக்கியை பற்றி சொல்லவில்லையே....

அப்படி என்றால் என்னை இன்னும் நம்ப வில்லையா அவள்

என்று நினைத்து கொண்டெ இருக்கும்பொழுது, அவன் அப்பா வாட்ஸ்அப் கால் பண்ணியிருந்தார்...வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பின் போன் லாவண்யாவிடம் சென்றது...

அதை வாங்கிக் கொண்டு தன் அறைக்கு சென்றவள்

“நல்லா இருக்கீங்களா ?? “ என்றாள் ஆசை +ஏக்கமாக.... அவளின் குரல் கொஞ்சி குலைந்தது அவன் குரலை கேட்கும் ஆர்வத்தில்...

மற்ற நாட்களில் இந்த குரலை கேட்டாலே துள்ளி குதிக்கும் அவன் மனம் இன்று ஏனோ சுரத்தில்லாமல் இருந்தது..

சாதாரணமான உரையாடலுக்கு பின், அவன் நேரடியாகவே கேட்டான்.

“லாவண்யா, நீ யாரையாவது லவ் பண்ணினியா ? “

திடீரென்று ஷிவா அவ்வாறு கேட்கவும், என்ன சொல்வதென்று திகைத்து நின்றாள்.

“உங்களைத்தான் லவ் பண்ணினேன், பண்றேன்.. “ என்று மனதிற்குள் சொல்லி சிரித்து கொண்டே

“இல்லை .. “ என்று மெல்ல கூறினாள்.

அவனோ அவள் யோசிப்பதை பார்த்து, அவள் பழைய காதலை நினைக்கிறாள். ஆனால் ஆமாம் என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தவனுக்கோ, அவள் இல்லை என்று சொன்னதும் கோபம் தலைக்கு ஏறியது..

“என்னிடமே மறைக்கிறாளே.. என்னை நம்ப வில்லையே அவள். இன்னும் என்னெல்லாம் மறைத்திருக்கிறாளோ... “ என்று கொதித்தது..

அன்றிலிருந்து அவளிடம் பேசுவதை தவிர்த்தான்.. இதோ அதே கோபம் இன்னும் தொடர்கிறது.....

லாவண்யா அதிகாலையில் எழுந்து அருகில் உறங்கி கொண்டிருக்கும் தன் கணவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள். எப்படியெல்லாம் தன்னை சந்தோஷமாக வைத்திருந்தான்..

“திடீரென்று என்னவாயிருக்கும் தன்னை இந்த அளவுக்கு வெறுப்பதற்கு?? .. என்று யோசித்து கொண்டே குளியலறைக்கு சென்றாள்..

குளித்து முடித்து, சமயலறைக்கு சென்று காபி கலந்து கொண்டு திரும்பும் பொழுது, சிவாவுக்கும் எடுத்து போமா என்று அவளின் மாமியார் லட்சுமி ஷிவா வின் காபி யையும் கையில் வைத்தார்...

“ஐயோ, நான் எப்படி கொடுப்பது? என்னைத்தான் கண்டாலே வெறுக்கிறானே” என்று பயந்துகொண்டு அவர்கள் அறைக்குள் வந்தாள்..

காபியை டேபிலில் வைத்து விட்டு மெல்ல குனிந்து அவனை எழுப்பினாள்..

ஷிவாவோ இரவு நீண்ட நேரம் உறக்கம் இல்லாமல் அப்பொழுது தான் கண் மூடியிருந்தான்..

அவளின் மெல்லிய ஸ்பரிசத்தால் கண் முழித்தவன் , குளித்துவிட்டு புத்தம் புது மலராக தன் முன்னே நின்றவளை கண்டதும் , அப்படியே இழுத்து தன் மேல் சாய்த்தான்..

அவன் என்ன சொல்வானோ என்று பயந்து கொண்டே வந்தவளுக்கோ, அவனின் இந்த அணைப்பு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.. எத்தனை நாள் ஏங்கியிருக்கிறாள் அவனின் அணைப்புக்காக...

“அவன் என்னை வெறுக்கவில்லை “ என்று பெண்ணவள் சந்தோஷத்தில் கரைய துவங்கினாள்..

ஷிவாவும் தன்னிலை மறந்து அவளின் இதழ்களை நோக்கி குனிந்தான் காதலுடன்...

அந்த நேரத்தில், சரியாக அந்த நேரத்தில் , விக்கியும் லாவண்யாவும் நெருங்கி இருந்த அந்த புகைப்படம் கண் முன்னே வந்தது..

அவவளவு தான்... நெருப்பை தொட்டவனாக துள்ளி குதித்து, அவளை தூர விலக்கி நிறுத்தினான்.. வேகமாக எழுந்து குளியலறைக்கு சென்று கதவை சாத்தி கொண்டான்..

லாவண்யா வோ உறைந்து நின்றாள்...

“என்னாயிற்று இவனுக்கு ?? .. என்னை ஏதோ தீண்ட தகாதவளை போல விலக்குகிறான்.. அப்படி என்னதான் தப்பு செய்தேன் ?? “ என்று நினக்கும் பொழுதே கண்ணை கரித்தது.. தன்னை சமாளித்துகொண்டு வேகமாக வெளியேறினாள்..

மறுமகள் போனவுடனே வெளியே வந்ததும் அவளின் முகம் வாடி இருப்பதும் கண்ட அவளின் மாமியாருக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது..

எதுவும் கேட்காமல் அவர்களை கவனிக்கலானார்..

காலை உணவில் அனைவரும் டேபிலில் அமர்ந்து இருந்தனர்.. லாவண்யா எல்லாருக்கும் பரிமாறி விட்டு, அவளும் உண்ண ஆரம்பித்தாள்.. மறந்தும் ஷிவா இருந்த பக்கம் திரும்பவில்லை... அவனும் தலையை குனிந்து இருந்தான்

இதை கவனித்த லட்சுமிக்கு ஏதோ அவர்களுக்குள் சரியில்லை என்[பது உறுதியானது... என்ன செய்யலாம் என்று நினைத்தவர்,,

“லாவண்யா, எங்க உன் காலில் இருந்த கொலுசை காணோம்? “

இதை கேட்டதும் லாவண்யாவின் பார்வை ஷிவாவிடம் சென்றது..

அவனோ இதை எதுவும் கண்டு கொள்ளாமல் சாப்பாட்டில் கவனமாக இருந்தான்.. இல்லை கவனமாக இருப்பதாக காட்டி கொண்டான்..

அவளுக்கு கொலுசு என்றால் கொள்ளை பிரியம்... ஷிவாவுக்குமே அவள் காலில் இருக்கும் கொலுசின் மேல் அலாதி காதல்...

ஆனால் அவள் மேல் இருக்கும் கோபத்தில் அவனை மயக்கிய அதே கொலுசொலி இப்பொழுது நாராசமாக ஒலிக்க, நேற்று அவன் திரும்பி வந்ததும் அவளை அந்த கொலுசை கழட்டி வைக்க சொல்லிவிட்டான்...

இன்று அந்த கொலுசை பற்றி தன் மாமியார் திடீரென்று இப்படி கேட்கவும் என்ன சொல்ல என்று முழித்தாள் லாவண்யா....

“அது.. அது.. வந்து.. . திருகாணி தொலைஞ்சு போ ச்சு அத்தை, அதான் கழட்டி வச்சிருக்கேன்” என்று உளறினாள்..

இதை கேட்டதும் ஷிவாவின் முகம் இறுகியது..

“பாவி.. எப்படி வாய் கூசாமல் பொய் சொல்கிறாள்.. இன்னும் எதெல்லாம் பொய் சொல்லி சமாளித்திருக்கிறாளோ? இவளை போய் நம்பினேனே.. “ என்று குமைந்தான்...

“அதுக்கு என்னமா, என்கிட்ட குடு.. கோயிலுக்கு போறப்போ நான் போட்டுட்டு வர்ரேன்.. உனக்கு கொலுசு போட்டாதான் நல்லா இருக்கும்” என்று ஷிவா வை பார்த்து கொண்டே சொன்னார்..

அவருக்கும் தெரியும் அவர்களின் கொலுசு ரொமான்ஸ்.. ஆனால் இப்போ என்ன ஆயிற்று இவர்களுக்கு என்று தான் புரியவில்லை...

லாவண்யாவுக்கோ “தானா இப்படி மாற்றி கூறியது?? .. ஒரு நாளும் எதையும் மாற்றி, மறைத்து யாரிடமும் கூறியதில்லையே.. இன்று அத்தையிடமே பொய் சொல்ல வச்சுட்டானே” என்று அவன் மேல் கோபத்தை திருப்பினாள்.

“இதை இப்படியே விடக்கூடாது.. என்னதான் நடந்தது என்று தெரியனும்.. “ என்று ஒரு முடிவோடு தங்கள் அறைக்குள் சென்றாள்..

அங்கே ஷிவா ரெடியாகி வெளியில் செல்ல கிளம்பினான்..

எங்கிருந்து தான் அவளுக்கு தைரியம் வந்ததோ..

“நில்லுங்க.. உங்க கிட்ட பேசனும் “ என்றாள்

அவனோ அவளை பார்த்து முறைத்து “என்ன பேசனும்? ” என்றான்

“நான் என்ன தப்பு செய்தேன்?? .. என்னை ஏன் வெறுக்குறிங்க? “

“நீயே யோசி உனக்கே தெரியும்” என்று ஒரு அடி எடுத்து வைத்தான் வெளியில் செல்ல...

அவனின் குறுக்கே வந்து நின்று,

“ நான் எவ்வளவோ யோசித்து பார்த்துட்டேன்.. எனக்கு எதுவும் தெரியல.. நான் என்ன தப்பு செய்தேன் என்று சொல்லிட்டு கோபமா இருங்க.. என்னனே தெரியாம ..... கஷ்டமா இருக்கு ... ரொம்ப கஷ்டமா இருக்கு.... ரொம்ப வலிக்குது....நீங்க இப்படி இருப்பது....” என்றவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தன...

அதை கண்டவனுக்கும் மனது வலித்தது..

“உன்னை கண் கலங்காமல் வைத்து கொள்வேன் என்று கை பிடித்தேன்.. ஆனால் நானே உன்னை கஷ்டபடுத்த வச்சுட்டியே டீ ராசாத்தி “ என்று புலம்பினான்...

ஆனாலும் அந்த புகைப்படம் அவன் நினைவில் வரவும் மீண்டும் இறுகினான்...

அவனின் பதிலுக்காக அவள் இன்னும் அவனையே பார்த்திருந்தாள்..

“இப்ப என்ன , உனக்கு காரணம் தான தெரியனும்..

“நான் நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியானு கேட்டதற்கு நீ ஏன் இல்லைனு பொய் சொன்ன?

நீ உண்மையை சொல்லி இருக்கலாம்... எத்தனை தரம் சொல்லி இருக்கேன் நமக்குள் எந்த ஒழிவும் மறைவும் இருக்க கூடாது என்று..

ஆனால் நீ .... நம்பலை.. என்னை இன்னும் நீ நம்பலை இல்லை.. எங்க உண்மையை சொன்னா உன்னை வெறுத்து விடுவேன் என்றுதானே? ... அப்ப இந்த ரெண்டு வருட கல்யாண வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் “ என்று கோபமாக கர்ஜித்தான்..

இதை கேட்டதும் லாவண்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை..

“என்ன பொய்.?? ... யாரை லவ் பண்ணினேன்?? ... என்ன சொல்றீங்க?? .... எனக்கு ஒன்றும் புரியலை.. “ என்றாள் குழப்பமாக

“நடிக்காத டி.. உனக்கு தான் பொய் சொல்றது, மறைப்பது எல்லாம் சர்வ சாதாரணமாயிற்றே.. அம்மாகிட்டயே திருகாணி தொலைஞ்சு போச்சுனு பொய் சொன்னவள் தானே நீ.. “

“அது... அத்தைக்கு நம்ப விஷயம் தெரிய வேண்டாம் னு தான்.. “ என்றாள் தயக்கமாக

“போதும் டீ... இது மாதிரி எத்தனை ய மாற்றி சொன்னியோ ? “ என்றான் ஏளனமாக உதட்டை சுழித்து

“ப்ளீஸ்ங்க... நான் வேற எதையும் மறைத்ததில்லை.. மறைக்கனும் னு அவசியமும் இல்லை.. “

“அப்படியா.. அப்ப இதுக்கு என்ன அர்த்தம்?? “ என்று அவன் வாட்ஸ்ஆப் ல் இருந்த விக்கியின் டீபி படத்தை காண்பித்தான்..

“இப்ப சொல்லு டீ.. இதுவும் நீ இல்லைனு பொய் சொல்லாத “ என்று உருமினான்...

லாவண்யாவோ அந்த புகைபடத்தை கண்டு உறைந்து நின்றாள்..

“இது எப்படி?.. அது அவளேதான்.. அந்த படம் எடுத்ததும் ஞாபகம் இருந்தது. ஆனால் பக்கத்தில் இருப்பது முதலில் யாரென்றெ தெரியவில்லை.. கொஞ்சம் யோசித்ததும் தான் அது விக்கி என்றும் தான் அவனை அறைந்ததும் நினைவு வந்தது...”

“அப்படி என்றால் இது அவனோட வேலையா ?? .. நான் அடித்ததை இன்னுமா ஞாபகம் வைத்து இருக்கிறான் ?? .. நான் அப்பயே மறந்துட்டேனே..

பாவி.. எப்பயோ நடந்ததை நினைத்து என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டானே “ என்று புலம்பினாள் மனதுக்குள்...

அவள் அந்த புகைபடத்தையே வெறித்து பார்த்து கொண்டிருப்பதை கண்டதும்

“என்ன பேச்சை காணோம் .. இப்ப என்ன கதை சொல்றதுனு யோசிச்சிட்டிருக்கியா” என்றவன் முடிக்கும் முன்னெ அவனை வெடுக்கென்று திரும்பி பார்த்தாள்.. அவளின் பார்வையில் அனல் கக்கியது..

“ஷோ , என்னை நம்பலை?? ... கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆச்சு . இன்னும் உங்களால என்னை நம்ப முடியலை... ஆனால் இந்த நிழல்படத்தை நம்புறீங்க.. இது தான் நீங்க என் மேல் வைத்த காதலா??... இந்த இரண்டு வருட வாழ்க்கை எல்லாம் பொய்யா ??.. “

“சே.. உங்கள மாதிரி நல்ல கணவன் கிடைத்தாரே என்று பெருமை பட்டேனே ஆனால் எல்லாம் பொய் ஆக்கிட்டீங்களே .... நீங்களும் ஒரு சராசரி ஆண் தான் என்று காமிச்சுட்டீங்க.. உங்க மூஞ்சியில முழிக்கவே எனக்கு பிடிக்கலை” என்று வேகமாக வெளியேறினாள்..

அதிர்ந்து நின்றான் ஷிவா... இதை எதிர்பார்க்கலை அவன்.. உண்மை தெரிந்ததும் அவள் வேறு எதும் கதை சொல்வாள் என்று நினைத்தவனுக்கு அவளின் பேச்சும் அவளின் சுட்டு எரிக்கும் பார்வையும்....

அந்த பார்வையில் பொய் இல்லை... குற்றம் செய்துவிட்ட எந்த உணர்வும் இல்லை...


“அப்படியென்றால் என் ராசாத்தி உண்மையானவள்.. அவள் எதையும் மறைக்கவில்லை.. ஏதோ தப்பு நடந்திருக்கிறது ... “ என்று புலம்பியவன்

பின் சற்று ஆழ்ந்து யோசித்தவனுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது..

வேகமாக அவன் பேஸ்புக்கை திறந்து அதில் விக்கியின் புரபைலை ஆராய்ந்தான்.... அது சமீபத்தில்தான் உருவாக்கப்பட்டு இருந்தது.. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் ஷிவா மட்டுமே....

அப்படியென்றால் இந்த புரபைல் ஷிவா வுக்காகவே உருவாக்கப்பட்டது..

ஏன்.. ஏன்.. என்று அந்த புரபைலின் கவர் போட்டாவை மீண்டும் உற்று பார்த்தான்..

அதில் இருந்த லாவண்யாவின் படமும்.. அந்த பேக்ரவுன்ட் ..... எங்கேயோ இடித்தது ..

அவசரமாக தன்னுடய புரபைலில் இருந்த போடோஸ் களை பார்வையிட்டான்...

ஒரு புகைபடத்தை உற்று பார்த்ததும்

“டாமிட்.... நல்லா என்னை ஏமாத்திட்டானே.. என்னோட போட்டோவையே எடுத்து , எடிட் பண்ணி என்னை முட்டாளாக்கிட்டானே.... “ என்று பல்லை கடித்தான் ஷிவா...

ஆம்.. அந்த போட்டோ லாவண்யா வும் ஷிவா வும் ஹனிமூன் சென்ற பொழுது எடுத்தது.. அதில் அவர்கள் இருவரையும் நெருக்கமாக நிற்க வைத்து அருகில் இருந்தவர் எடுத்தது..

அதைதான் விக்கி எடிட் பண்ணி ஷிவாவுக்கு பதிலாக அவன் படத்தை சேர்த்திருந்தான்.. பார்ப்பதற்கு லாவண்யா அவனிடம் நெருக்கமாக இருப்பதை போல் இருந்தது.. இதைதான் ஷிவா நம்பிவிட்டான்..

கொஞ்சம் உற்று கவனித்திருந்தால் தெரிந்திருக்கும்.. ஆனால் அவனோ விக்கி சொன்ன கதையையும் இந்த போட்டோ வையும் பார்க்கும் பொழுது ஏற்கனவே முடிவு செய்து விட்ட மனதில் ஆராய்ச்சி பார்வை வரவில்லை...

அதுதான் விக்கியின் திட்டமே....

உண்மை புரிந்ததும் ஷிவாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது..

“என் ராசாத்தி உண்மையானவள்...

ஆனால் எவனோ ஒருவன் தந்திரத்தால் என் ராசாத்தியை கொன்று விட்டேனே.. மன்னிப்பாளா என்னை ? எப்படியாவது அவளிடம் புரிய வைக்கவேண்டும் அவன் சூழ்நிலையை .. என் ராசாத்தி எனக்கு வேண்டும்” என்று வெளியில் வந்து அவளை தேடினான்..

லாவண்யா தோட்டதில் இருந்த கல்லில் இறுகிப்போய் அமர்ந்து இருந்தாள்..

அவள் அருகில் சென்றவன்

“ரா சா   த் தி... “ என்று மெதுவாக அழைத்தான்....

“தயவு செய்து என்னை அப்படி கூப்பிடாதிங்க .. “ என்று கோபமாக கத்தினாள்...

“சாரி.. ரா.. லாவண்யா.. அந்த விக்கி ஏதேதோ கதையை சொல்லி என்னை நல்லா ஏமாத்திட்டான்.. நான் நம்பி இருக்க கூடாது.. அப்படியே சந்தேகம் என்றாலும் உன்னிடம் கேட்டு இருக்கணும்.. இப்படி நானா முடிவு எடுத்து இருக்க கூடாது..

தப்பு தான்.. நான் செய்தது தப்பு தான்.. ப்ளீஸ் என்னை வெறுத்துடாத..

நீ வேணும்.... என் காலம் முழுவதும் நீ வேணும் டீ... என்னை மன்னிக்க முயற்சி செய் “ என்று கூறி வேகமாக வெளியேறினான்..

லாவண்யாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... அமைதியாக அமர்ந்திருந்தாள்...

இருவரின் நடவடிக்கையும் கவனித்து கொண்டிருந்த லட்சுமி மெதுவாக வந்து லாவண்யா அருகில் அமர்ந்தார்..

“லாவண்யா... “

அருகில் குரல் கேட்கவும் அவசரமாக கண்ணை துடைத்து கொண்டு வேகமாக எழுந்தாள்..

“இப்படி உட்காருமா.. உங்கிட்ட கொஞ்சம் பேசனும் “ என்றதும் லாவண்யா அவர் அருகில் அமர்ந்தாள்...

“உனக்கும் சிவாவுக்கும் என்ன பிரச்சனைனு தெரியல.. ஆனால் எதுவா இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமா..

இப்ப இருக்க பசங்க கல்யாணம் முடிந்தவுடனே ஒருத்தரொக்கொருத்தரை முழுவதும் புரிஞ்சுக்கணும், தெரிஞ்சிருக்கனும் னு நினைக்கிறாங்க..

ஆனால் திருமண பந்தம் என்பது நீண்ட தூர பயணம் மா .. ரொம்ப தூரம் போக போக தான் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க முடியும்..

உங்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடம் தான் ஆகிறது.. இன்னும் நல்லா புரிந்து கொள்வதற்கு கொஞ்ச நாள் ஆகலாம்..

உங்களுக்குள் எதும் மிஸ் அன்டர்ஸ்டான்டிங் இருந்தால் அது உங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பா எடுத்துக்கோ மா... “

“ஷிவா எதும் தப்பா நடந்திருந்தாலோ, பேசியிருந்தாலோ , அவனை மன்னிச்சிடு.. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமாக இருக்கனும்.. “ என்று அவள் தலையை வாஞ்சையுடன் தடவினார் அவள் மாமியார்...

ஷிவாவின் வார்த்தைகள் காதில் மீண்டும் ஒலித்தது

“நீ வேணும். என் காலம் முழுவதும் நீ வேணும் டீ... என்னை மன்னிக்க முயற்சி செய் “

எதுவோ புரிந்தது போல் இருந்தது லாவண்யவிற்கு ...

அதோடு எப்படா சான்ஸ் கிடைக்கும்.. தன் மகனுக்கும் மறுமகளுக்கும் இடையில் குழப்பம் பண்ணி அதில் குளிர் காய நினைக்கும் இன்றைய மாமியார்கள் நடுவில் தங்கள் இருவரின் மன வருத்தத்தை கண்டு அதை சரி செய்ய முயலும் அவரை நினைத்து பெருமையாக இருந்தது...

இப்ப அவர் எடுத்து சொல்லியிருக்கா விட்டால் இன்னும் அவர்களுக்குள் பெரிய விரிசல் வந்திருக்கும் தான்.... ஆனால் அவர் எடுத்து சொல்லி புரிய வைக்கவும் இப்பொழுது தெளிவு வந்தது லாவண்யாவுக்கு....

“இப்படி ஒரு மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. “ என்று நினைத்தவள் தன் மாமியார் சொன்னதுக்கு

“சரி அத்தை “ என்று மெல்ல தலை அசைத்தாள்..

றுநாள் காலையில் வழக்கம் போல எழுந்து குளிக்க சென்றாள்..

அப்பொழுது தான் கவனித்தாள் அவள் கால்களில் இருந்த கொலுசுகளை..

இது எப்படி வந்தது? என்று யோசிக்கும் முன்னரே தெரிந்தது ஷிவா தான் தூங்கும் பொழுது போட்டு விட்டிருப்பான் என்று..

“திருடா... “ என்று மனதில் திட்டி கொண்டே குளித்து விட்டு அவனுக்கும் காபி எடுத்து வந்தாள்....

உள்ளே வந்தவள்

அப்படியே திகைத்து நின்றாள்....

ஷிவாதான் அவளை இறுக்கி அணைத்திருந்தான்...

“சாரி டி ராசாத்தி.. உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்.. என் நெஞ்சில் இருந்த பனி மூட்டம் விலகிடுச்சு.. நீ கலங்கமற்ற நிலவு என்று புரிந்து கொண்டேன்.. இனிமேல் உன்னை கண் கலங்காமல் பார்த்துப்பேன்...ப்ராமிஸ்” என்று அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்...

அவனின் அணைப்பில் நெகிழ்ந்து, அவனை மன்னித்து, அவன் மார்பில் சரணடைந்தாள் அவனின் ராசாத்தி.........

🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!