உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-2



அத்தியாயம்-2


ணமேடையில் அமர்ந்து இருந்த பவித்ரா தன் அருகில் மணமகனாக அமர்ந்து இருந்தவனை கண்டதும் அதிர்ந்து போய் “இவனா என் அருகில் அமர்ந்து இருப்பது.? இவன் எப்படி இங்கே” என்ற கேள்வியுடன் ஆதியை பார்க்க

அவனோ இவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவனாக

“நானே தான் பேபி“ என்று குறும்பாக கண்ணடித்தான் தாலியை கையில் பிடித்தபடி...

பவித்ராவுக்கு இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று உரைக்கவும் அவசரமாக மணமேடையில் இருந்து எழுந்திருக்க முயன்றாள்..

ஏற்கனவே ஆதி மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து இருந்ததால் அவளால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவன் அவள் எழுந்திருக்க விடாமல் அதற்குள் அவசரமாக அந்த பொன் தாலியை பவித்ராவின் கழுத்தில் அணிவித்திருந்தான்..

ஆதி இரண்டு முடிச்சுகளிட அவன் பெரியம்மாவின் மகள் ஜனனி நாத்தனார் முறைக்காக மூன்றாவது முடிச்சை போட்டு பவித்ராவை தன் மனைவியாக்கி இருந்தான் ஆதித்யா ...

நடந்த நிகழ்வுகள் புரிய சில விநாடிகள் ஆனது பவித்ராவிற்கு.. அவள் இப்பொழுது ஆதித்யாவின் மனைவி...

எல்லாம் தன் கையை மீறிவிட்டது..இனிமேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து அதிர்ந்து அமர்ந்திருந்தாள் பவித்ரா...

ஆனால் இதுவரை தன் மனதை அழுத்தி வந்த ஏதோ ஒன்று விலகி மனம் அமைதியடைவதை போலிருந்தது..

தன் அம்மாவிற்காக இந்த திருமணத்திற்கு சம்மதித்தாலும் அவளால் மனதால் இந்த திருமணத்தை முழுமையாக ஏற்க முடிய வில்லை... அதனாலயே அவள் அவளின் கணவனாக போகிறவனை பற்றி தெரிந்து கொள்ளவோ, இல்லை பார்க்கவோ தோன்றவில்லை அவளுக்கு..

ஏதாவது நடந்து இந்த கல்யாணம் நின்று விடாதா என்றுதான் எப்பவும் உள்ளுக்குள் தோன்றி கொண்டே இருக்கும்...

அதனாலயே இந்த திருமண சடங்குகளில் கூட மனம் ஒன்ற முடியாமல் அவள் அருகில் அமர்ந்திருப்பவன் யார் என்று பார்க்கும் எண்ணம் கூட இல்லாமல் அமர்ந்திருந்தாள் பவித்ரா..

அவளை பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு அட்ஜஸ்ட்மென்ட் வாழ்க்கை.. பிடிக்கிறதோ இல்லையோ திருமணத்திற்கு பிறகு யாராக இருந்தாலும் அவனோடு குப்பை கொட்டியாகனும் இந்த சமுதாயத்திற்காக என்பது அவளின் எண்ணம்.

அது தன்னால் முடியாது என்பதால் தான் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று திருமணத்தை மறுத்து வந்தாள்...ஆனால் பவித்ராவின் அம்மா இந்த முறை அவளை விடாமல் வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்..

அம்மாவிற்காக சம்மதித்தாலும், அவளால் விரும்பி எதிலும் ஈடுபட முடியவில்லை.. திருமண நாள் நெருங்க நெருங்க எதுவோ தன் கையை விட்டு போகிறது... எதையோ இழப்பதை போன்ற உணர்வு நெஞ்சுக்குள் அழுத்தி கொண்டேதான் இருந்தது..

ஒரு வேளை அம்மாவை பிரிய போகிறதால் இந்த மாதிரி தோன்றுகிறது என்று தன்னையே சமாதானம் செய்து கொள்வாள்.. இதுக்கெல்லாம் காரணமான, தன்னை மணக்கபோகும் அந்த முகம் தெரியாதவன் மேல் திரும்பும் அவள் கோபம் எல்லாம்..

அவனால் தான் இந்த திருமணம், வலி, வேதனை எல்லாம். அவனை யார் என்னை பார்த்து, எங்க அம்மா கிட்ட வந்து பேச சொன்னது? என்று தினமும் மனதிற்குள் அவனை திட்டி திட்டியே வெறுப்பை வளர்த்து வந்தாள்...

ஆனால் இப்பொழுது தன் அருகில் அமர்ந்திருப்பவன், தான் ஆறு மாதம் முன்பு சந்தித்த ஆதித்யா.. அதுவும் இன்று அவளின் கணவன் எனவும் இதுவரை அவளின் மனதை அழுத்தி வந்த ஏதோ ஒரு பாரம் விலகுவதை போல இருந்தது...

காடெல்லாம் அலைந்து திரிந்து ஒரு பத்திரமான இடத்திற்கு வந்து சேர்ந்த நிம்மதி பரவியது அவளுள்..

ஆனால் ஏன்?? என்ன அந்த பாரம்??? என்றுதான் அவளுக்கு புரியவில்லை.. கொஞ்சம் ஆழ்ந்து யோசித்திருந்தாள் அவளுக்கு புரிந்திருக்கும் அதற்கான உண்மை...

அதற்குள் ஐயர் அவளை மேலே யோசிக்க விடாமல் மற்ற சடங்குகளை தொடர்ந்து இருந்தார். இதுவரை மனதில் ஒன்றாமல் இருந்தவளுக்கு இப்பொழுது அந்த சடங்குகளை ரசித்து செய்ய ஆரம்பித்திருந்தாள் அவளை அறியாமலயே!!!

இப்பொழுது ஐயர் ஆதியிடம் குங்குமத்தை எடுத்து பவித்ராவின் வகிட்டில் வைக்க சொன்னார்..

ஆதியும் அவர் சொன்னபடியே குங்குமத்தை எடுத்து பவித்ராவின் கழுத்தை பின்னால் இருந்து சுற்றி வந்தான்.. ஏற்கனவே மிக நெருக்கத்தில் அமர்ந்து இருந்ததால் அவன் கை சுற்றி வரவும் அவன் மார்பில் அவள் தலை மோதியபடி மிக நெருக்கமாக இருந்தாள்...

இதுவரை தெரியாத, கண்டுகொள்ளாத அவனின் நெருக்கம் இப்பொழுது அவளுக்குள் ஒரு வித உணர்வை உண்டாக்கியது.. அவன் மார்பில் மோதியதால் உணர்ந்த அவனின் ஆண்மை அவளின் பெண்மையை தாக்கியது.. அவள் உள்ளே ஒளிந்திருந்த பெண்மை விழித்து கொண்டு அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது...

(அதாங்க வெட்க படறது... )

ஆதியின் விரல் அவளின் முன் உச்சி நெற்றியில் பட்டதும் அவளின் உடல் சிலிர்த்தது.. இதுவரை வெட்கம் என்றால் என்ன என்று அறியாத அவளின் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன.. பெண்மைக்கே உரித்தான நாணம் அவளை எங்கிருந்தோ வந்து ஒட்டி கொண்டது..

ஆதியும் அதே உணர்வில் தான் இருந்தான். அவன் விரல் அவள் நெற்றியில் படவும் மின்சாரம் பாய்ந்ததை போல் இருந்தது.. ஆறு மாதங்களுக்கு முன் அவளின் மெல்லிய இடையை பிடித்த பொழுது ஏற்பட்ட அதே உணர்வு அச்சு பிசகாமல் அவனுள்ளே இப்பொழுதும்..

அதே மயக்கத்துடன் அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மாங்கல்யத்திற்கும் திலகத்தை வைத்தவாறு தலை நிமிர்ந்து அவன் மனைவியை நோக்கினான் மையலுடன்....

ஏற்கனவே சிலிர்த்து அமர்ந்து இருந்தவள் ஆதியின் இந்த பார்வை வீச்சை தாங்க இயலாமல் இன்னும் சிவந்தாள்..

அதை கண்ட ஆதி இன்னும் கிறங்கி போனான்... நான் முன்பு பார்த்தவளா இவள் என்ற ஆச்சர்யமும் கூடவே சேர்ந்தது..

இருவருமே ஒரு மோன நிலையில் இருந்தனர் சில விநாடிகள்...

அதற்குள் ஐயர் மாலை மாற்ற என்று இருவரையும் எழுந்து நிற்க சொன்னார்..

இருவரும் மெதுவாக எழுந்து நின்றனர்...

தன் முன்னே நாணத்துடன் குனிந்து இருக்கும் தன் மனைவியையே ரசித்து பார்த்து இருந்தான் கண்கள் விலகாமல்.. அதே காதலுடன் அவளுக்கு மாலையை அணிவித்தான்...

இப்பொழுது பவித்ராவின் முறையானது..

மாலையை கையில் வாங்கியவள் முதன் முறையாக தன் அருகில் நின்று கொண்டிருக்கும் தன் மணாளனை நோக்கினாள்..

ஆறு அடிக்கும் மேலான உயரத்தில் மணமகனுக்கான வேட்டி சட்டையில் கழுத்தில் மாலை அணிந்து கண்களில் மையலுடன் அவளையே பார்த்துகொண்டு கம்பீரமாக நிற்கும் அவனின் ஆண்மை அவளை இன்னும் மெய் சிலிர்க்க வைத்தது...

முன்பு அலுவலக உடையிலயே அசத்தலாக இருப்பவன் இன்று மாப்பிள்ளை தோற்றத்தில் இன்னும் வசீகரித்தான்…

அவனையே வைத்த கண வாங்காமல் பார்த்திருந்தாள் பெண்ணவள். அவளின் அந்த பார்வை ஆதியை இன்னும் ஆட்டி வைத்தது...

அவளை அப்படியே அள்ளிக்கொள்ள கைகள் பரபரத்தது... தன்னை முயன்று கட்டு படுத்தி கொண்டிருந்தான்...

அதற்குள் சரண்யா தன் தோழியிடம் குனிந்து

“அம்மா தாயே!! சீக்கிரம் மாலையை போடு.. உங்க ரொமான்ஸை எல்லாம் தனியா ரூம்ல வச்சுக்கங்க.. இது பொது இடம். எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்க பாரு.. “ என்று மெதுவாக பவித்ராவின் காதில் கிசுகிசுத்தாள்....

அப்பொழுது தான் சுற்றுபுறம் நினைவு வந்தது பவித்ராவுக்கு!!! அவளுக்கு அவமானமாகவும் வெட்கமாகவும் இருந்தது..

“சே!! இப்படியா இவனை பார்த்துட்டு இருப்பது? “ என்று தன்னை தானே மானசீகமாக கொட்டி கொண்டு கைகளை உயர்த்தினாள் மாலையை போட ...

அவனின் ஆறடிக்கும் மேலான உயரத்திற்கு இவளின் ஐந்தடிக்கும் கொஞ்சம் குறைவான உயரத்திற்கு அவள் கையில் இருந்த மாலை அவனின் முகம் வரைக்கும் கூட எட்டவில்லை..

மாலையை எப்படி போடுவது என்று மெல்ல நிமிர்ந்து அவனை நோக்கினாள்..

அவனோ தன் தலையை குனியாமல்

“என் அருகில் உட்காரவே யோசிச்சா இல்ல.. இப்ப எப்படி இந்த மாலையை போடுகிறாள் என்று பார்க்கலாம்.. ” என்று உள்ளுக்குள் குறும்பாக சிரித்து கொண்டிருந்தான் தன் தலையை குனியாமல்..

பெண்ணவளுக்கோ இன்னும் வெட்கமாகி போனது.. கண்களால் அவனை குனிய சொல்லி கெஞ்சினாள் பவித்ரா..

ம்ஹும் என்று தலையை மெலிதாக இடவலமாக ஆட்டினான் உதட்டில் குறும்பு மின்ன!!!

“இதற்கு மேல் இவனிடம் கெஞ்சமுடியாது. என்ன செய்ய? “ என்று அவள் புரியாமல் ஐயரை பார்க்க

அவரும் மெதுவாக சிரித்து கொண்டே

“தம்பி.. நீங்க கொஞ்சம் குனிங்க.. அவங்களுக்கு கை எட்டலை பாருங்க.. அதுவும் இல்லாமல் மாலை போடும் பொழுது குனிந்து தான் வாங்க வேண்டும்... அதனால் நீங்க கொஞ்சம் இல்ல அதிகமாகவே குனியுங்கள். அப்பதான் அவங்களுக்கு எட்டும்” என்று சொல்லி சிரித்தார்...

அவனும் போனால் போகட்டும் என்று மெல்ல குனிந்தான் இன்னும் அதே குறும்பு சிரிப்பு உதட்டில் உறைந்து இருக்க ...

“அவன் தான் என்னை பழி வாங்கறானா இந்த ஐயரும் ரொம்பவே ஓட்டறாரே !! இந்த ஐயருக்கு இருக்கு.. “ என்று அந்த ஐயருக்கு ஒரு அவசர அர்ச்சனையை வழங்கினாள் பவித்ரா...

உடனே ஆதியை பார்த்தவள்

“இருடா...என்கிட்டயா குனிய மாட்டேனு சொன்ன!!!. இப்படியே குனிந்து கொண்டே இரு கொஞ்ச நேரம்” என்று மனதில் சிரித்து கொண்டே மாலை இடாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தாள் பவித்ரா...

இவர்களின் நாடகத்தை புரிந்து கொண்ட ஐயர்

“அம்மா.. அது தான் மாப்பிள்ளை குனிஞ்சுட்டார் இல்ல.. மாலையை போடுங்க.. இது மாதிரி ரொம்ப நேரம் குனிய வைக்கவும் கூடாது” என்று சிரித்து கொண்டார்..

“சரி பிழைத்து போகட்டும் “ என்று இப்பொழுது தன் முன்னே குனிந்து இருக்கும் தன் மணாளனுக்கு மாலை இட்டாள் மங்கை....

மாலை மாற்றுதல் முடிந்ததும் அடுத்து ஐயர் இருவர் கைகளையும் கோர்த்து சுற்றி வர வேண்டும். உங்கள் கைகளை கொடுங்கள் என்றார்...

ஆதியின் கைகள் உடனே நீண்டது..

ஆனால் பவித்ராவின் கைகளோ தயங்கின... இவன் கையை எப்படி பிடிப்பது என்று யோசித்து கொண்டே அசையாமல் இருந்தாள்..

“அம்மா... உங்க கையை கொடுங்க “ என்று ஐயர் மீண்டும் கூறவும் வேறு வழி இல்லாமல் கைகளை நீட்டினாள்..

ஐயர் அவளின் சுண்டு விரலை எடுத்து ஆதியின் விரலுடன் இணைத்து மேல ஒரு கை குட்டையால் கட்டினார்.

இணைந்த இந்த கைகள் எப்பொழுதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக...

அவளின் அந்த பிஞ்சு கையின் விரலை பிடித்தவன் முன்னே நடக்க பெண்ணானவள் பின்னே தொடர்ந்தாள்...இருவரும் மணமேடையை சுற்ற ஆரம்பித்த சில விநாடிகளில் ஆதித்யாவின் விரல்கள் பவித்ரா வின் மீதி விரல்களுடன் இணைந்தன.. அவளின் கையை இறுக பற்றி கொண்டவன் மெதுவாக கிள்ளினான் கை குட்டையின் மறைவில்...

அதை உணர்ந்த பவித்ரா வோ இன்னும் சிவந்து போனாள்..

“இவன் ஏன் இப்படி பண்றான்? “ என்று மனதினில் திட்டி கொண்டே அதே நேரம் அதை ரசிக்கவும் ஆரம்பித்து இருந்தாள்..

“எப்பொழுதும் இணை பிரியாமல் இதே மாதிரி இவன் கையை பிடித்து கொண்டு இவனுடன் வாழ வேண்டும் இறைவா !! ” என்று அவள் மனம் முதன் முறையாக இறைவனிடம் வேண்டியது...

அதே சமயம் அவனை பற்றி ஏற்கனவே கொஞ்சம் தெரிந்து இருந்ததால் “இவன் கடைசி வரை என் கூட வருவானா??” என்ற கேள்வியும் தொக்கி நின்றது பவித்ராவுக்கு...

கால்கள் சுற்றி வந்தாலும் கைகள் அவளின் கைகளுடன் விளையாடிய படியே அவளையே பார்த்து இருந்தான் ஆதித்யா. அவளின் முகத்தில் வந்து போன கலவையான தோற்றத்தில் இன்னும் கிறங்கினான்..

அவனின் பார்வையை தாங்க முடியாமல் மெல்ல முறைத்தவாறே தலையை குனிந்து கொண்டாள் வெட்கத்துடன்..

ஒரு வழியாக மணமேடையை சுற்றி வந்ததும் ஐயர் இருவரின் கைகளையும் பிடித்து கைகுட்டையை அகற்றினார்..

இணைய தயங்கிய பவித்ராவின் கைகள் இப்போ அவனிடமிருந்து பிரியவும் தயங்கின... ஏனோ அவன் கைகளுக்குள்ளே எப்பவும் இருக்க வேண்டும் என்று இருந்தது..

ஆதிக்கும் அதே நிலைதான்... அவள் கையை விட மனமில்லாமல் இறுக்கி பிடித்து இருந்தான்..

ஐயர் “இரண்டு பேரும் கைகளை எடுத்துக்கோங்க.. இப்படி வந்து உட்காருங்க.. இன்னும் கொஞ்சம் நேரம்தான்.. எல்லா சடங்குகளும் முடிந்து விடும் “ என்றார் அவர்களின் மனதை அறிந்தவராக..

ஐயரின் பேச்சால், சுய நினைவுக்கு வந்த உடனே கைகளை அவனிடம் இருந்து பிடுங்கி கொண்டு வேகமாக கிழே அமர்ந்தாள் பவித்ரா...

அதற்கு பிறகு சில சடங்குகள் முடிப்பதற்குள் கண்ணை கட்டியது ஐயருக்கு.. ஒவ்வொன்றிலும் இருவரும் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொண்டனர்...

“ஷ்ஷ் அப்பா... நானும் எத்தனையோ கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கேன்.. ஒவ்வொரு கல்யாணத்திலும் மணப்பெண் வெட்க படுவதும் மணமகன் அதை ரசிப்பதும் வழக்கமே...

அதுவும் காதல் திருமணம் என்றால், அங்கு ஐயர் ஒருவர் இருப்பதும் அவர் என்ன சொல்கிறார் என்று தெரியாமலே மெய் மறந்து தங்கள் உலகத்தில் இருப்பவர்கள் நிறைய..

இந்த கல்யாணத்தில் தான் இப்படி எதுக்கு எடுத்தாலும் இருவறும் முறுக்கி கொண்டு இருப்பதை கண்டார். ஒவ்வொரு சடங்கிலும் இருவரையும் ஒத்து செய்ய வைக்க படாத பாடு பட வேண்டிருந்தது அவருக்கு

“இப்பவே இப்படி எதிரும் புதிருமாக இருக்காங்க.. இவங்க எப்படி சேர்ந்து வாழ போறாங்களோ???? இறைவா இவங்க ஒன்னா எப்பவும் இதே சந்தோஷத்துடன் வாழனும்” என்று வேண்டிகொண்டார்..

எல்லா சடங்குகளும் ஒரு வழியாக முடிந்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர் மணமக்கள்.. மணமக்களை கண்டதும் பவித்ரா அம்மாவின் கண்கள் கலங்கின... தன் மாப்பிள்ளை பொண்ணும் மணக்கோலத்தை கண்டு பூரித்து போனார்...

எங்கே பவித்ராவிற்கு விருப்பம் இல்லாமல் வற்புறுத்தி ஏற்பாடு செய்த இந்த திருமணத்தை எப்படி ஏற்று கொள்ள போகிறாளோ என்று பயந்து இருந்தவருக்கு பவித்ராவின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் நிம்மதியை தந்தது...

மற்ற சிலரும் வந்து வாழ்த்தி விட்டு செல்ல, திருமணம் முடிந்து மணமகன் அறைக்கு அழைத்து வந்தனர் இருவரையும்..

மாப்பிள்ளை தோழனாக ப்ரேமும் மணப்பெண் தோழியாக சரண்யாவும் மணமகன் அறையை அடைந்தனர்..

உள்ளே வந்த ஆதித்யாவை கட்டி அணைத்த ப்ரேம்,

“கங்கிராட்ஸ் மச்சான்!!! . கலக்கிட்ட!!! விஸ் யூ போத் ஹேவ் எ ஹேப்பி மேரீட் லைப்..” என்று ஆதித்யாவின் கைகளை பிடித்து குலுக்கினான் ப்ரேம்..

ஆதியும் மகிழ்ச்சியுடன் புன்னகைக்க,

“சரி டா மச்சான்.. நான் போய் பந்தி பருமாறுவதை பார்க்கிறேன்.. நீங்க கொஞ்சம் நேரம் ஓய்வு எடுங்க. நான் பிறகு வர்றேன்” என்று சொல்லி விடைபெற்று கிளம்பினான் ப்ரேம்...

சரண்யாவும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வாயெடுக்கும் முன்.

“ஒரு நிமிஷம் சிஸ்டர்... கொஞ்சம் வெளியே இருக்கீங்களா ?? “ என்று சரண்யாவை பார்த்து சொன்னான் ஆதித்யா...

சரண்யாவும் திடீரென்று ஆதித்யா அவ்வாறு சொல்லவும் ஒன்றும் புரியாமல் முழித்தவாறு திரும்பி பார்த்தவாறு வெளியேறினாள்..

அவள் வெளியேறியதும்

“எதுக்கு அவளை வெளியே அனுப்புனீங்க ? “ என்று கேட்ட பவித்ராவின் வாயிலிருந்து காற்று கூட வரவில்லை...

அவளின் இதழ்கள் அவனால் சிறை பிடிக்க பட்டன... அவளின் மெல்லிய இடை அவனின் இரும்பு பிடியில் சிக்கி இருந்தது..

சரண்யா வெளியேறியதும் கதவை லேசாக சாத்திவிட்டு தன் மனைவியை மெல்லிய இடையை பிடித்து இழுத்து இறுக்கி அணைத்து அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு கொண்டிருந்தான் ஆதித்யா...

தன் கணவனின் அந்த திடீர் செய்கையை கண்ட பவித்ரா முதலில் மிரண்டாலும் மெல்ல மெல்ல அவன் அணைப்பில் இலகி அவன் மார்பில் மையலுடன் சாய்ந்தாள் அவனின் மனைவி!!!!

அந்த இறுகிய அணைப்பில் இருவரும் உருகி போய் ஒரு வித மோனநிலையில் லயித்து இருந்தனர் சில நிமிடங்கள்.. அப்பொழுது யாரோ அறையை நோக்கி வரும் அரவம் கேட்டு பவித்ரா தான் முதலில் சுதாரித்தாள்..

மெல்ல அவனிடமிருந்து விலக முயற்சி செய்தாள்.. ஆனால் ஆதித்யாவின் பிடி இன்னும் இறுகியது..

“இது பொது இடம். ப்ளீஸ் விடுங்க “ என்று முறைக்க ஆரம்பித்து பின் கெஞ்சலாக முடித்தாள் பவித்ரா..

அவளை விட மனமே இல்லாமல் பிடியை தளர்த்தினான் ஆதித்யா.. அவளும் உடனே விலகி அவனிடமிருந்து கொஞ்சம் அடி தள்ளி நின்றாள்..பின் ஆதியை பார்த்து

“என்ன... இப்படித்தான் பண்ணுவீங்களா பொது இடத்தில??? “ என்று முறைத்தாள்..

“ஓ.. சாரி பேபி.... உன்னோட இந்த கெட்டப் ல செமயா இருக்க டீ.. உன்னை பார்த்ததும் அப்படியே மயங்கிட்டேன்...நானும் எவ்வளவு நேரம் தான் என்னை கன்ட்ரோல் பண்றது... என்னால என்னையே கட்டு படுத்த முடியல..அதான் இப்படி.. “ என்று குறும்பாக கண் சிமிட்டி சிரித்தான்

“அதோடு உனக்கு நான் இன்னும் எந்த பரிசும் கொடுக்கலை இல்லையா? கல்யாணம் முடிஞ்ச உடனே உனக்கு ஒரு மறக்க முடியாத பரிசு கொடுக்கனும் னு நினைத்தேன்... எப்படி என்னோட முதல் கல்யாண பரிசு??

இது சும்மா ட்ரையல் தான் டார்லிங். இன்னைக்கு நைட் இருக்கு மீதி “ என்று குறும்பாக கண் சிமிட்டினான்..

“சீ... “ என்று கன்னம் சிவந்தாள் பெண்ணவள்..

அவளின் அந்த சிவந்த கன்னத்தை கண்டதும் இன்னும் கவிழ்ந்தவன் அவளை நோக்கி அடி எடுத்து வைக்கையில்

“பவித்ரா.... “ என்று அழைத்தவாறே மரகதம் அந்த அறைக்கு உள்ளே வந்தார்...

“இங்கதான் இருக்கீங்களா இரண்டு பேரும்.. நான் கதவு சாத்தி இருக்கவும் வேற எங்கயோ இருக்கீங்க என்று தேடிட்டு இருந்தேன்...

சரி .. வாங்க ரெண்டு பேரும் சாப்பிட போகலாம்” என்று அழைத்தார்...

“சரிங்க அத்தை “ என்று கூரியவாறு விட்டால் போதும் என்று தன் மாமியார் உடன் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினாள் பவித்ரா..

அதை கண்டு மனதில் சிரித்து கொண்டே

“இப்ப தப்பிச்சுட்ட...என்கிட்டதான் மறுபடியும் வரணும். அப்ப கவனிச்சுக்கறேன் “ என்று மனதினில் சொல்லி கொண்டே அவனும் அவர்களை தொடர்ந்து டைனிங் ஹாலுக்கு சென்றான்..

ப்ரேம் ம் மற்ற நண்பர்களும் சாப்பிடுபவர்களை கவனித்து கொண்டனர்..ஏற்கனவே ஒவ்வொரு வேலைக்கு தனித் தனியாக ஆட்களை அமர்த்தி வருபவர்களை கவனித்து கொள்ள ஏற்பாடு செய்ததால் கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆக இருந்தான் ஆதித்யா ..

மரகதம் இருவரையும் அருகில் அமர்த்தி சாப்பாடு பரிமாற ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்...

அதற்குள் ப்ரேம் ஒரு முக்கிய பிரமுகர் அவசரமாக கிளம்புவதால் ஆதித்யாவை பார்க்கவேண்டும் என்று சொல்லவும் ஆதித்யா கிளம்பி சென்றான் அவரை சந்திக்க..

பவித்ரா மட்டும் தனியாக அமர்ந்து இருந்தாள்..

அப்பொழுதுதான் கவனித்தாள் சரண்யா இல்லை என்று..

“அத்தை சரண்யா எங்கே?? “ என்று மரகதத்திடம் கேட்டாள்..

“உன் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க பவி மா. அவங்களை கவனிச்சிட்டிருக்கா.. நான் வேனா ஜனனியை உன் பக்கதில் இருக்க சொல்றேன் “ என்றார் அவள் தனியாக இருக்க வெட்க படுகிறாள் என்று...

அதற்குள் ஜனனியே துள்ளி குதித்தபடி அங்கே வந்தாள்

“ஹாய் அண்ணி... நான் தான் உங்க நாத்தனார் ஜனனி “ என்று அவளிடம் கை கொடுத்து சிரித்தாள்..

பவித்ராவும் ஹாய் சொல்லி மெல்ல புன்னகைத்தாள்..

“வாவ்... நீங்க சிரிக்கிறப்ப ரொம்பவும் சூப்பரா இருக்கீங்க...அதுவும் அந்த கன்னத்து குழி... சான்ஸே இல்ல!!!.

இப்பதான் தெரியுது ஏன் நிஷா அண்ணா உங்களிடம் தலை குப்புற விழுந்தார் என்று.. அவருக்கு பெர்பெக்ட் மேட்ச் நீங்க...

என்ன? உயரம் தான் கொஞ்சசசம் கம்மியாயிட்டீங்க.. பரவால அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..” என்று கொஞ்சம் என்பதை இழுத்து கிண்டல் செய்தாள் ஜனனி..

பவித்ராவிற்கு அவளின் இந்த உரிமையான பேச்சு மிகவும் பிடித்திருந்தது... தன்னை போலவே வாயை திறந்தால் மூட மாட்டாள் போல என்று சிரித்து கொண்டாள்..

“அப்பாடா... நம்ம பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சிடுச்சு” என்று நிம்மதியானாள்..

அப்பொழுது அவளின் முதுகில் யாரோ அடித்தார்கள்..

திரும்பி பார்த்தாள் பவித்ரா..சரண்யா தான் நின்று கொண்டிருந்தாள் ..

“எங்கடி போன ?? என்னை தனியா விட்டுட்டு?” என்று சரண்யாவை முறைத்தாள் பவித்ரா...

“என்னது??? நான் விட்டுட்டு போனே னா ???? அடிப்பாவி.. கொஞ்சம் நல்லா யோசிச்சு பார் டீ ...

என் கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையா ரெண்டு பேரும் அந்த ரூம்க்குள்ள இருந்து என்னை துரத்தி விட்டுட்டு இப்ப எங்க போனேனு கேட்குற? ...” என்று முறைத்தாள் சரண்யா.. அதை கேட்டதும் கன்னம் சிவந்தவள்

“ஹீ ஹீ ஹீ சாரி டீ .... “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள் பவித்ரா..

“அத விடு... என்னடி நடக்குது இங்க ???? “ என்றாள் பவித்ராவை குறும்பாக பார்த்தவாறு..

“எனக்கே என்ன நடக்குதுனு தெரியாமல் குழம்பிட்டிருக்கேன். இதில உனக்கு எங்க நான் விளக்க ? ” என்று மனதுக்குள்ளே முனுமுனுத்தாள் பவித்ரா..

இன்னும் ஆதித்யா எப்படி , ஏன் அவளை மணந்தான் என்று புரியாமல் குழம்பி கொண்டிருந்தாள்.. அவனிடம் நேரடியாக கேட்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதற்காக தான் காத்து கொண்டிருந்தாள்..

தன் தோழியின் மனதில் யோசித்து கொண்டிருப்பதை கவனியாமல் சரண்யாவே தொடர்ந்தாள்..

“கல்யாணம் ஆன கொஞ்ச நாள் ல பொண்ணுங்க மாறிடுவாங்கனு கேள்வி பட்டிருக்கேன் டீ..

நீ என்னடான்னா கல்யாணமே வேண்டாம், இந்த கல்யாணமே என் அம்மாவுக்காகத்தான் என்று சொல்லிகிட்டிருந்தவ, தாலி ஏறின அடுத்த விநாடியே இப்படி தலைகீழா மாறிட்ட..

என்னடி நடக்குது இங்க???? “ என்று மீண்டும் குறும்பாக பார்த்தாள் சரண்யா..

“அதெல்லாம் ஒன்னும் இல்லை சரண்” என்று மெல்ல முனகினாள் பவித்ரா...

“ஒன்னும் இல்லாமலயா அப்படி ஒரு ரொமான்ஸ் மணமேடையிலயே.. சினிமா தோத்திடுச்சு போ..ஆமா... நம்ம ஹீரோவ முன்னாடியே உனக்கு தெரியுமா??? “ என்றாள் யோசனையாக

பவித்ரா ஏதொ சொல்ல வாயெடுக்க

“என் பொண்டாட்டிய என்ன மிரட்டிட்டு இருக்கீங்க சிஸ்டர் “ என்று சிரித்து கொண்டே அங்கு வந்தான் ஆதித்யா...

“வாங்க ப்ரதர்... நீங்க என்னை அந்த ரூம் ல இருந்து விரட்டி விட்ட ஸ்பீடை பார்த்து நீங்க இன்னும் ஒரு வருடத்திற்கு பவித்ராவை விட்டு நகர மாட்டீங்கனு நினைச்சேன்.. இப்பவே இப்படி தனியா விட்டுட்டு போயிட்டீங்க???

அப்புறம் என்ன சொன்னீங்க... நான் இவளை மிரட்டறதா??

காலேஜ்ல இவ தான் எல்லாரையும் மிரட்டிட்டு இருப்பா… எங்க பிரின்ஸி யே இவள பார்த்து அரண்டுடுவார்

காலேஜ் ரௌடி இவ... எல்லாரும் ஜான்சி ராணி னு தான் கூப்பிடுவோம்..நான் போய் இவள மிரட்டறதா??? “ என்று சிரித்தாள் சரண்யா

“சும்மா இருடி “ என்று சரண்யாவை முறைத்தாள் பவித்ரா

“ஆஹா... மச்சான்.. நீ சரியான ஆள் கிட்ட தான் மாட்டியிருக்க... அப்பவே சிஸ்டர் ரௌடியாம்.. இனிமேல் உன் சுதந்திரம் அவ்வளவுதான் “ என்று மெல்ல முனுமுனுத்தான் ஆதித்யா அருகில் நின்ற ப்ரேம் ...

“எந்த ஜான்சி ராணியா இருந்தாலும் அடக்கி காட்டறவன் தான் இந்த ஆதித்யா...இவள் எம்மாத்திரம்?? ... இவளை எப்படி அடக்கி காட்டறேன் பார் “ என்று மனதினில் சூளுரைத்தான் ஆதித்யா...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!