உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-4



அத்தியாயம்-4 

ந்த பிரம்மாண்டமான கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தது மணமக்களின் கார்....

பவித்ரா இன்னும் தன் கணவனின் தோளில் சாய்ந்து சுகமாக உறங்கி கொண்டிருந்தாள் கார் நின்றது கூட தெரியாமல்....

அவளின் அந்த உறக்கத்தை கலைக்க மனமே இல்லாமல் அவளை அப்படியே விடவும் முடியாமல் மெல்ல அவளின் அருகில் குனிந்து

“நம்ம வீடு வந்திருச்சு பேபி!! கெட் அப் “ என்று மெல்ல முனகினான்

ம்ஹூம்.. அவள் அசைந்த பாடில்லை

“என்ன?? இப்படி தூங்கறா..” என்று எண்ணியவாறே

“பேபி.. கெட் அப் “ என்று மெல்ல அவளின் கன்னத்தை தட்டினான்..

அவனின் கை பட்டதும் மெல்ல இமைகளை பிரித்தவள் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் மலங்க விழித்தாள்...

மெல்ல தலையை நிமிர்த்தியவள் வெகு நெருக்கத்தில் ஆதியின் முகத்தையும் தான் அவனின் தோளில் சாய்ந்து இருப்பதையும் அப்பொழுதுதான் உணர்ந்தாள்..

மெல்ல அவளின் நிலை புரியவும் அவசரமாக அவனிடமிருந்து விலகினாள்...

“என்ன பவித்ரா?? இப்படியா தூங்கறது?? அதுவும் அவன் மேல சாய்ஞ்சுகிட்டு.... போச்சு!! மானம் போச்சு!! என்று தன்னை தானே திட்டிகொண்டே மெல்ல இறங்கினாள்..

அதற்குள் மற்ற கார்களும் வந்து சேர மரகதம் அவசரமாக உள்ளே சென்று ஆரத்தி தட்டை எடுத்து வந்தார்..

மணமக்களை ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார்...

“இனி தன் வாழ்நாளின் பந்தம் இந்த வீட்டோடு தான்” என்று மனம் நெகிழ, மெல்ல அவளின் வலது காலை எடுத்து வைத்தாள் மனதில் ஒருவித பரவசத்துடன்....

என்ன தோன்றியதோ!! உடனே ஆதியும் அவளின் கையை பற்றி கொள்ள இருவரும் கை கோர்த்து ஒரே நேரத்தில் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தனர்...

அதை கண்ட பார்வதி மற்றும் மரகதத்தின் கண்கள் மற்றும் மனம் நிறைந்தன...

“இருவரும் எவ்வளவு பொருத்தமான ஜோடி...!! இவங்க எப்பவும் இப்படியே இணை பிரியாமல் இருக்கணும்” என்று மனம் நிறைந்து வாழ்த்தினர் மனதிற்குள்..

பின் பவித்ராவை பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி வைக்க சொன்னார் மரகதம்.. அங்கு உள்ள தெய்வங்களை விழுந்து வணங்கியவளை மீண்டும் ஹாலுக்கு அழைத்து வந்து இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தார் மரகதம்..

அவர் கையில் இருந்த பாலை கண்டதும் அலறினாள் பவித்ரா..

“அத்தை.. வந்து.. வந்து.. எனக்கு பால் பிடிக்காது.. ப்ளீஸ் இது வேணாமே” என்று கெஞ்சினாள்..

அவளுக்கு பால் பிடிக்காது என்பதை மனதினில் குறித்து கொண்டான் ஆதித்யா....

“இல்லை பவி மா... இது ஒரு சம்பிரதாயத்துக்காக கொடுக்கிறது.. .. நீ சும்மா லைட் ஆ வாயில ஊத்திக்கோ!! என்று ஒரு துளி எடுத்து அவளின் வாயில் ஊற்றினார்.... அந்த ஒரு துளியுமே குமட்டி கொண்டு வந்தது அவளுக்கு..

மெல்ல விழுங்கி சமாளித்துக் கொண்டாள்...

“பூனை மாதிரி இருந்துகிட்டு பாலை பார்த்தால் அலறாளே!!! நம்ம கிட்ட வந்திட்டா இல்லை... பால் என்ன பீரே குடிக்க வச்சிடலாம்... “ என்று மனதிற்குள் சிரித்து கொண்டான் ஆதித்யா...

அதற்குள் அவன் மொபைல் அழைக்கவும் முக்கியமான க்ளைன்ட் எண்ணாக இருந்ததால் தான் கொஞ்ச நேரத்தில் வருவதாக கூறி எழுந்து சென்றான்..

பின் மரகதம் ஜனனியைப பார்த்து எல்லாருக்கும் வீட்டை சுத்தி காட்டு ஜனனி என்றார்

“நான் அப்புறம் பார்த்துக்கறேன் அத்தை .. எனக்கு முதல்ல இந்த புடவையை மாத்தனும். ரொம்ப கனமா இருக்கு “ என்று மெல்ல முனகினாள் பவித்ரா..

“சரி ஜனனி. நீ அண்ணியை கீழே உள்ள அறைக்கு கூட்டிட்டு போ.. நான் இவங்களுக்கு வீட்டை சுற்றி காட்டறேன்” என்று மரகதம் வந்திருப்பவர்களை அழைத்து சென்றார்..

அந்த வீட்டின் உள்ளே இருந்த அமைப்பையும், அங்குள்ள வசதிகளையும் கண்ட பவித்ரா உறவினர் அனைவரும் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தனர் இவ்வளவு பெரிய வீடா என்று....

அவ்வளவு பெரிய திருமண மண்டபத்தையும் அங்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்களையும் கண்டபொழுதே அவர்களுக்கு வயிறு எரிந்தது.... இப்பொழுது இவ்வளவு பெரிய வீட்டை கண்டதும் அவர்களுக்கு இன்னும் எரியற நெருப்பில் ஊற்றிய எண்ணையாக எல்லாருடைய வயிறும் மனமும் எரிந்தது.. ..

வேறு ஒரு சாதாரண புடவைக்கு மாரிய பவித்ரா அப்பொழுதுதான் கவனித்தாள் அந்த வீட்டை.. பெரிய ஹால், அதில் பெரிய அழகான கம்பளம் விரிக்க பட்டு உயர்வகை ஷோபா செட்டுகள் ஹால் முழுவதும் நிறைந்திருந்தன....

ஹாலில் இருந்து மேலே மாடிக்கு போக என்று இரண்டு பக்கமும் படிகள் வைத்து அதன் கீழே இரு பெரிய வெண்கல பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் மலர்கள் மிதக்க விடப்பட்டிருந்தன...அந்த ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் பணக்கார தோரணை தெரிந்தது...

அந்த ஹாலில் பரவியிருந்த மிதமான AC ம், மெல்லிய நறுமணமும், அங்கு உள்ள பொருட்களின் ஆடம்பரமும் அவளுக்கு என்னவோ ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நுழைந்த மாதிரி இருந்தது....

அவன் உண்மையிலயே பெரியா ஆள்தானா??? .. இவ்வளவு வசதி படைத்தவன் தன்னை ஏன் /எதற்காக தேடிவந்து மணந்தான் என்ற குழப்பம் மீண்டும் வந்தது.. அவனை பற்றி இணையத்தில் பார்க்கலாம் என்றாலும் அவளின் அலைபேசி அவளிடம் இல்லை...

கல்யாண பிசியில் அவளுடைய போன் யாரிடம் இருக்கு என்றே தெரிய வில்லை.. ஜனனி கிட்ட கேட்கவும் தயக்கமாக இருந்தது...

அதற்குள் அவளின் உறவினர்கள் சிலர் வீட்டை சுற்றி பார்த்து விட்டு அவள் இருந்த அறையின் அருகில் வந்தனர்.. உள்ளே பவித்ரா இருப்பதை அறியாமல்

“பார்த்தியா கமலம்.. இந்த பார்வதி மகளுக்கு வந்த வாழ்வை. ! எப்படி தான் பிடிச்சாங்களோ?? இவ்வளவு பெரிய இடத்தை.. நம்மளுதுகளும் இருக்கே.. ஒன்னூம் இல்லாத வெட்டி பசங்களைத்தான் பிடிச்சுட்டு வருதுங்க” என்று புலம்பினார் ஒரு பெண்மணி...

அது இருக்கட்டும் அக்கா.. எனக்கு என்னவோ ரெண்டு பேருக்கும் முன்னமே பழக்கம் இருந்திருக்கும் னு தோனுது... ஏதாவது கசமுசா நடந்திருக்கும்... அதை வச்சு இந்த மாப்பிள்ளையை மிரட்டி ஒத்துக்க வச்சிருப்பாங்க.. இல்லைனா இவ்வளவு பெரிய இடம் எப்படி மாட்டியிருக்கும் பார்வதிக்கு...

அவ பொண்ணும் அப்படி ஒன்னும் ரதி இல்லையே.. அப்ப எப்படி இந்த மாப்பிள்ளை மயங்கியிருப்பான்??? மேடையிலயே பார்த்த இல்ல இரண்டு பேரும் என்னமா ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டிருந்தாங்கனு...

பார்வதி என்னமோ.. வெளி சம்மந்தம்.. முன்ன பின்ன தெரியாது... இப்பதான் பார்த்தோம் ங்கற மாதிரி மெச்சி கொண்டாள்.. உள்ள பார்த்தாதான தெரியுது.” என்று தன் ஆதங்கத்தை வேற மாதிரி தீர்த்து கொண்டாள் அடுத்தவள்...

“சரி வா. நமக்கு என்ன?? இதெல்லாம் பெரிய இடத்துல சகஜமா இருக்கும். நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான் “ என்று பெருமூச்சு விட்டு இருவரும் நகர்ந்தனர்..

அவர்கள் பேச்சை கேட்ட பவித்ராவிற்கு

“சே!! என்ன இப்படி எல்லாம் பேசறாங்க... “ என்று கசப்பாக இருந்தது..

“நாங்க என்ன இவன் பணத்தை பார்த்தா ஒத்துகிட்டோம்.. இவன் இவ்வளவு வசதி என்று தெரிந்து இருந்தால் இவன் இருக்கிற பக்கம் கூட நான் திரும்பி இருக்க மாட்டேன்... எல்லாம் இந்த அம்மாவால வந்தது...

இதுக்கெல்லாம் நானும் தான் காரணம்.. மணமேடையில் அவனை அப்படி பார்க்காமல் இருந்திருந்தால் இப்படி பேசியிருப்பாங்களா?? “ என்று தன்னை தானே திட்டிகொண்டு அவர்கள் பேசியதை மீண்டும் நினைத்து பார்த்தாள்..

“அம்மாவும் அவனின் பெரியம்மாவும் சொல்லுவதை பார்த்தாள் அவன் அவளை விரும்பிதான் திருமணம் செய்து கொண்டானோ??? .. அப்படி விரும்பியிருந்தால் ஏன் அவளிடம் சொல்ல வில்லை..

ஏன் நேரில் வந்து அவளை பார்க்கவில்லை.. அவனுக்கு நேரம் இல்லையென்றால் அட்லீஸ்ட் ஒரு போன் பண்ணியிருக்கலாம்... ஆனால் போனும் இல்லை.. நேரிலும் பார்க்கலை.. எங்கயோ இடிப்பதை போல இருந்தது பவித்ராவிற்கு..

அவள் மனதில் ஏதோ ஒன்று தப்பாக காட்டியது... அந்த நேரம் பார்த்து, விடைபெறும் பொழுது சரண்யாவின் வார்த்தைகள் நினைவு வந்தன..

“சந்தோஷமா இரு ன்னு சொன்னா.. ஆனால் ஜாக்கிரதையா இருன்னு ஏன் சொன்னா” என்று யோசித்தாள்..

அதே நேரம் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த சரண்யாவும் பவித்ராவை பற்றிதான் யோசித்து கொண்டிருந்தாள்.. நான் ஏன் ஜாக்கிரதையா இரு என்று சொன்னேன்..” என்ற குழப்பம் அவளுள்ளே...

ஆதித்யாவின் முகம் அப்பப்ப மாறியது அவள் கண் முன்னே வந்தது.. அவள் மனதிலும் ஏதோ ஒன்று தப்பாக காட்டியது... ஆனால் என்ன என்றுதான் சரியாக கனிக்க முடியவில்லை..

நமக்கு மிகவும் நெருக்கமானவங்களுக்கு ஒரு துன்பம் என்றால், அது முன் கூட்டியே நமக்கு தெரியுமாம.. அதே போல் பவித்ராவுக்கு ஏதோ தப்பாக நடக்க போவதைப் போல மனது அடித்து கொண்டது சரண்யாவிற்கு...

“இறைவா... அவள் வாழ்க்கை நல்லா இருக்கணும். எந்த குழப்பத்தையும் கொடுத்திடாத” என்று வேண்டிகொண்டாள்..

அதே நேரம் பவித்ராவும் அதையே தான் நினைத்து கொண்டிருந்தாள்..

இன்னும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை அவளின் திருமணத்தை...

இது எப்படி ஆரம்பித்தது என்று மெல்ல தன் கல்யாணம் பேச்சு எப்படி ஆரம்பித்தது என்று நினைத்து பார்த்தாள்... எங்கயாவது தப்பாக தெரிந்ததா? என்று ரிவைன்ட் பண்ணி பார்த்தாள்...

அன்று அவசரமாக அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தாள் பவித்ரா.. ஊதா கலர் சுடிதார் அணிந்து அவளின் நீண்ட கூந்தலை இறுக்கமாக பின்னி அதில் கொஞ்சம் மல்லிகை சரத்தை வைத்து கொண்டு கிளம்ப தயாராகி கொண்டிருந்தாள்..

அதற்குள் அவள் அம்மா பார்வதி அவளின் அருகில் வந்து

“பவித்ரா... இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துடு மா “ என்றார்..

“என்னமா விசேஷம்!! எனக்கு ஆபிஸில் கொஞ்சம் வேலை இருக்கே!!”

“அதெல்லாம் நீ நாளைக்கு போய் செஞ்சுக்கோ.. எங்க ஓடிட போகுது உன் வேலை” என்று அலுத்து கொண்டார்

“ஹ்ம்ம்ம் சரி என்ன விஷயம் னு சொல்லுங்க.. “

“உன்னை ஈவ்னிங் பொண்ணு பார்க்க வர்றாங்க”

“வாட்??? “என்று அதிர்ந்தாள் பவித்ரா..

“என்னமா சொல்றீங்க..? இப்ப என்ன அவசரம் என் கல்யாணத்துக்கு?? “

“ஆமான் டி.. இதையே தான் சொன்ன மூணு வருஷம் முன்னாடி.. இப்பவே உனக்கு வயது 25 ஆகிடுச்சு.. இன்னும் உனக்கு கல்யாணம் பண்ணலைனா என்னைதான் தப்பா பேசுவாங்க.. பொண்ணு சம்பளத்துல உட்கார்ந்து சாப்பிடறானு. அதானால் தான் இந்த வருஷம் எப்படியாவது உன் திருமணத்தை முடிச்சிடனும்னு முடிவு பண்ணிட்டேன்...”

“நீங்க முடிவு பண்ணா போதுமா?? நான் சம்மதிக்க வேண்டாமா ? ” என்று முறைத்தாள் தன் அன்னையை பார்த்து...

“இது நல்ல சம்மந்தம் பவிம்மா.. உன் அப்பாவோட ஃப்ரெண்ட் சுந்தரம் அங்கிளுக்கு தெரிஞ்சவங்களாம்.. பையனுக்கும் அப்பா அம்மா என்று யாரும் இல்லையம். சொந்தமா தொழில் பண்றாராம்.. ரொம்ப திறமையான பையனாம்.. அவரே அப்படி புகழ்ந்து சொன்னார்.. உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது மா...

அதனால தான் இந்த ஜாதகத்த விட முடியலை.. நானே பொண்ணு பார்க்க வர சொல்லிட்டேன்.. “

“அம்மா.. சொன்னா புரிஞ்சுக்கோ.. எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்” என்றாள்..

“ஏன் பவித்ரா?? நீ யாரையாவது விரும்பறியா?? அப்படினா கூட சொல்லு அந்த பையனுக்கே முடிச்சிடலாம்”

பவித்ராவுக்கு ஏனோ “அவனின்” குறும்பு சிரிப்பும் அந்த மந்தகாச புன்னகையும் நினைவில் வந்தது.. இல்லை இது தப்பு” என்று தன்னையே கொட்டி கொண்டவள்

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மா.. கல்யாணம் ஆகிட்டா உங்கள விட்டு போயிடனும்.. நீங்க மட்டும் தனியா இருப்பிங்க.. அதான்”

“என்னை விடு பவித்ரா.. நான் சமாளிச்சுக்குவேன்... உனக்கு என்று ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுத்தால் தான் எனக்கு சந்தோஷம்”

“இருந்தாலும் இன்னும் ஒரு ஆறு மாசம் போகட்டும்மா “ என்று அப்பொழுது தள்ளி போட முயன்றாள் பவித்ரா..

ஆனால் பார்வதி விடுவதாக இல்லை.

“இல்லை பவி.. இந்த ஜாதகம் நல்லா பொருந்தி இருக்கு.. ஜோசியரே ஆச்சரிய பட்டார். இப்படி ஒரு ஜாதகம் அமையாது என்று...

இப்ப என்ன பொண்ணு பார்க்க தான வர்ராங்க.. அதுக்கப்புறம் அவங்களுக்கு பிடித்தால் தான் மேல பேசப் போறோம்.. அதனால் நீ கொஞ்சம் சீக்கிரம் வா. அவ்வளவுதான்” என்று அந்த பேச்சை முடித்தார்...

“சே !! இந்த அம்மாவை எப்படி சமாளிப்பது? ” என்று புலம்பி கொண்டே தன் ஸ்கூட்டியை எடுத்து விரட்டினாள்.. ஏனோ அவனின் அந்த முகம் மீண்டும் நினைவு வந்தது... இப்ப எங்கிருப்பான்?? “ என்று யோசித்து கொண்டே அலுவலகத்தை அடைந்தவள் வேகமாக தன் வேலையில் மூழ்கியதால் மற்றதை எல்லாம் மறந்து போனாள்..

மாலை 4 மணிக்கு தன் அம்மா மீண்டும் ஒரு முறை போனில் அழைத்து அவளை சீக்கிரம் வர சொல்லி ஞாபகம் படுத்தவும் வேற வழி இல்லாமல் வீட்டிற்கு கிளம்பி சென்றாள்...

வீட்டில் பெரிய கும்பலை எதிர் பார்த்தவளுக்கு ஒரு வயதான அம்மா மட்டும் அமர்ந்து இருக்கவும் நிம்மதியாக இருந்தது..

“அப்பாடா.. எப்படியோ போய்ட்டாங்க..” என்ற நிம்மதி அடைந்தாள்..

பவித்ரா உள்ளே நுழையவும் பார்வதி அருகில் வந்து

“ஏன் பவித்ரா?? இவ்வளவு லேட்டாவா வருவ.. அவங்க எவ்வளவு நேரம் உனக்காக காத்திருக்காங்க பார். சீக்கிரம் போய் புடவையை கட்டிகிட்டு, முகம் கழுவிட்டு வா “ என்று விரட்டினார்..

“இருக்கட்டும் பார்வதி.. அவளே ஆபிஸில் இருந்து களைத்து போய் வந்திருக்கா.. விரட்டாத.. நீ போய் முகம் மட்டும் கழுவிட்டு வாமா “ என்று அவளுக்காக பரிந்து வந்தார் அந்த முதியவர்...

அவருக்கு நன்றி சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.. சொன்ன மாதிரியே முகம் கழுவி கொஞ்சமாக பவுடர் போட்டு தலை முடியை ஒதுக்கி கொண்டு வரவேற்பறைக்கு வந்தவளை அந்த பெண்மணி தன் அருகில் அமர்த்தி கொண்டாள்...

“மஹாலட்சுமி மாதிரி இருக்க மா... நல்ல பொண்ணாதான் செலக்ட் பண்ணியிருக்கான் எங்க நிஷாந்த்.. “ என்று நெட்டி முறித்தார்..

“என்னது?? செலக்ட் பண்ணியிருக்கானா?? அப்ப என்னை முன்னாடியே பார்த்துட்டானா ?? “ என்று அவளுக்கு ஒன்றும் புரியாமல் தன் அன்னையை பார்த்து கண்களால் ஜாடை செய்தாள் என்ன சொல்றாங்க என்று ??

அதை கண்ட அந்த அம்மா சிரித்துகொண்டெ..

“ஓ நான் ஒருத்தி...எங்களை பத்தி சொல்லாம உன்னை குழப்பிகிட்டிருக்கேன்... என் பேரு மரகதம்.. என்னுடைய தங்கச்சி பையன்தான் நிஷாந்த்.. சொந்தமா தொழில் செய்யறான்.. உன்னை எங்கயோ ஒரு பங்சன் ல பார்த்தானாம்.. உடனே உன்னை பிடிச்சிருக்கு பெரிம்மா என்று உங்க வீட்டில வந்து கல்யாணத்துக்கு பேச சொன்னான்...

உங்க அம்மாவும் ஜாதகம் பார்த்து எல்லாம் சரியா இருக்குனு சொல்லிட்டாங்க.. எனக்கு ரொம்ப சந்தோஷம்.. அதான் வந்து உன்னை பார்த்துட்டு போய்டலாம்னு வந்தேன்“ என்று முடித்தார் சிரித்து கொண்டே..

“என்ன இது?? சரியான லூசு குடும்பமா இருக்கும் போல.. பொண்ணு பார்க்க பையன் வராம அம்மா வந்திருக்காங்க??” என்று மனதிற்குள் திட்டி கொண்டாள்...

அவளின் என்னம் புரிந்தவராக

“நாங்க ரெண்டு பேரும் தான் வரதா இருந்தது பவித்ரா. அதற்குள் அவனுக்கு வேலை வரவும் என்னை மட்டும் அனுப்பிட்டான்.. அவன் தான் ஏற்கனவே உன்னை பார்த்துட்டானாம். நான் பார்க்க என்ன இருக்கு.. நீங்க பார்த்து பேசிட்டு வாங்கனு என்னை மட்டும் அனுப்பி வைச்சுட்டான் ” என்று சிரித்தார்...

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குமா... உனக்கும் பிடிக்கும் எங்க நிஷாந்தை..

வர்ற அவசரத்துல அவன் போட்டோ எதுவும் எடுத்து வர மறந்துட்டேன்.. போட்டோ எதுவும் பார்க்கனும்னா சொல்லு அவனை மொபைலில் அனுப்ப சொல்றேன்.. “ என்றார்.

அவனே என்னை பார்க்க நேர்ல வரலை. நான் மட்டும் எதுக்கு அவன் போட்டோவை பார்க்கனுமாம்.. “ என்று திட்டி கொண்டவள்

“பரவாலமா “என்று மெல்ல புன்னகைத்தாள்..

நீங்க நல்லா விசாரிக்கனும்னாலும் சுந்தரம் கிட்ட கேளுங்க”

“அதெல்லாம் எதுக்கு அண்ணி.. சுந்தரம் அண்ணா அப்பவே சொல்லிட்டார். நல்ல பையனு.. இதுக்கு மேல விசாரிக்க வேண்டி என்ன இருக்கு?? “

“அப்ப உங்களுக்கு சம்மதமா.. இப்பவே பூ வச்சிடலாம்” என்றார் மரகதம்

“இதுல சொல்ல என்ன இருக்கு அண்ணி.. உங்களை பார்த்தாலும் நல்ல மாதிரி தெரியறிங்க.. பவிக்கு பிடிக்காமல் போகுமா..அவளுக்கும் சம்மதம்.“

நான் சொல்றதை எப்பவும் தட்ட மாட்டா என் பொண்ணு” என்று பவித்ராவிற்கு சென்டி மெண்டாக செக் வைத்தார் பார்வதி..

“ஐயோ!! அவங்களை லூசு குடும்பம்னு நினைத்தால் இந்த அம்மா அவங்களுக்கு மேல லூசு அம்மா வா இருக்கே!! என்ன இந்த அம்மா டக்குனு இப்படி சரினு சொல்லிட்டாங்க.. நான் எப்படி மறுத்து சொல்றது “ என்று தாயின் முகம் பார்த்தாள்..

ஆனால் பார்வதியோ சரினு சொல் என்று பார்வையாலயே கெஞ்சினார்...

“என்ன பவித்ரா.. உனக்கு சம்மதமா ? “ என்று மீண்டும் இவளை கேட்டார் மரகதம்..

“ஆமாம் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட மாதிரி எங்க அம்மா கிட்ட உங்க அருமை பையனை பற்றி இவ்ளோ பில்டப் குடுத்துட்டு இப்ப என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றதாம்? ” என்று முனகியவள் தன் அன்னையின் கெஞ்சல் பார்வைக்கு அடங்க

“சம்மதம்மா “என்று மெல்ல சொன்னாள்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!