உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-5



அத்தியாயம்-5 

வித்ராவின் சம்மதத்தை கேட்டதும் இரு பெண்களின் முகமும் மலர்ந்தது...

“ரொம்ப சந்தோசம் பவித்ரா.. என் வயித்தில பாலை வார்த்த.. சீக்கிரம் நல்ல முகூர்த்தம் பார்த்துடலாம்” என்று எழுந்து அவள் அருகில் வந்து அவர் கொண்டு வந்திருந்த மல்லிகை பூவை தலையில் வைத்தார் மரகதம்..

“ஐயோ!! என்ன இது?? .. சம்மதம்னு ஒரு வார்த்தை சொன்னதே முகூர்த்தம் வரைக்கும் போயிட்டாங்க.. இந்த அம்மாவும் பல்லை இளிச்சுட்டு அவங்க சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்டிகிட்டு இருக்கே... இப்ப என்ன பண்றது? ” என்று அவள் யோசிக்கும் பொழுது

“அப்ப மாப்பிள்ளையும் ஒரு முறை வந்து பார்த்துட்டு போக சொல்லுங்க அண்ணி.. அப்பதான் எங்களுக்கு திருப்தியாக இருக்கும்.. “ என்றார் பார்வதி..

“அப்பாடா.. இப்பதான் இந்த அம்மா விவரமா பேசியிருக்காங்க.. அவன் வரட்டும் நேரடியாக அவனிடமே உன்னை பிடிக்கலைனு சொல்லிடலாம்” என்று தன் திட்டத்தை அவசரமாக தீட்டினாள் பவித்ரா..

இப்பொழுது நினைத்து பார்த்தால் அன்று மரகதம் மட்டும் வந்தது “தெரிஞ்சே செய்த திட்டமா? , இல்லை எதேச்சையாக அமைந்ததா ??? “என்று குழப்பமாக இருந்தது

அடுத்து அவன் பார்க்க வருவதாக இருந்த நாளை நினைத்து பார்த்தாள்..

ஒரு நாள் வெள்ளிகிழமை மாலை 5 மணிக்கு அவன் வந்து பார்ப்பதாக இருந்தது.. இவள் அம்மா ஆயிரம் அறிவுரைகள் கூறி சீக்கிரம் வரசொல்லி அனுப்பி வைத்தாள்..

அவளும் அவனை பார்க்கும் ஆர்வம் இல்லை என்றாலும் அவனிடம் உன்னை பிடிக்க வில்லை என்று சொல்லனும் இல்ல என்ற ஆர்வத்தில் வேகமாக வேலையை முடித்து பார்க்கிங் ஏரியா வந்து தன் ஸ்கூட்டியை எடுத்தவள் அதிர்ந்தாள்..

ஸ்கூட்டியில் காற்று சுத்தமாக இறங்கி, நகர மறுத்தது அது..

“காலையில நல்லாதானே இருந்தது.. எப்படி இப்படி ஆகியிருக்கும்??? இப்ப என்ன செய்யறது ?? பேசாமல் ஆட்டோ பிடித்து போயிடலாம் “ என்று யோசிக்கையில் அங்கு இருந்த செக்யூரிட்டி அவளருகில் வந்து

“என்ன ஆச்சு மேடம்?? “ என்றான்..

“வண்டியில காத்து இல்ல.. ஏதாவது தெரிஞ்ச ஆட்டோ இருந்தால் கூட்டி வர்றீங்களா?? .. நான் நாளைக்கு வந்து இதை சரி பண்ணிக்கிறேன்” என்றதும் அவன் அவசரமாக அதை மறுத்து

“இருங்க மேடம் ... எனக்கு தெரிந்த ஒரு மெக்கானிக் இருக்கான்.அவன வர சொன்னா உடனே வந்து காத்து அடிச்சு கொடுத்திடுவான்... நீங்க சீக்கிரம் போய்டலாம் “ என்று இவளின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக போன் பண்ணினான் அந்த மெக்கானிக்கு..

பேசி முடித்ததும்..” இதோ 5 நிமிடம் தான் மேடம்.. சீக்கிரம் வந்திருவான்” என்றான்..

ஆனால் அந்த ஐந்து நிமிடம் ஒரு பத்து முறை ஐந்து நிமிடமாக மாறி ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து தான் அந்த மெக்கானிக் வந்து சேர்ந்தான்

“சாரி மேடம்... ஒரு அவசர வேலை வந்திருச்சு.. அதை முடிக்காமல் விட மாட்டேனுட்டாங்க” என்று அவசரமாக அவள் ஸ்கூட்டியை செக் பன்னி

“வெறும் காற்றுதான் போயிருக்கு “ என்று அவசரமாக காத்தடித்து கொடுத்தான்

அப்பொழுது தான் ஞாபகம் வந்தவளாக தன் மொபைலை எடுத்து பார்த்தாள்..

“அம்மா இந்நேரம் கால் பண்ணியிருப்பங்களே.. “ என்று

அவள் மொபைலும் பேட்டரி இல்லாமல் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது..

“சே !! இதுவும் இப்படியா... சரி நேரா வீட்டுக்கு போயே சொல்லிக்கலாம்.. “ என்று ஸ்கூட்டியை எடுத்து வேகமாக விரட்டினாள்..

அவள் வீட்டை அடையவும் மாப்பிள்ளை வீட்டின் கார் கிளம்பி செல்லவும் சரியாக இருந்தது...

உள்ளே நுழைந்த பவித்ரா நன்றாக வாங்கி கட்டிக் கொண்டாள் தன் அம்மாவிடம்

“என்ன பவி..? இப்படிதான் லேட் ஆ வர்றதா..? அவங்க இவ்வளவு நேரம் காத்திருந்து இப்பதான் போறாங்க.. நீ என் இப்படி பொறுப்பு இல்லாம இருக்க??? ”

“சாரி மா .. வண்டில காத்து இறங்கிடுச்சி.. “

“ஏன் ஒரு போன் பண்ணி இருக்கலாம் இல்ல??? ”

“போன் ல சார்ஜ் இல்ல “

“ஹ்ம்ம்ம் ஒரு நல்ல நாள் னா தான் உனக்கு எல்லாமே வேலை நிறுத்தம் செஞ்சிடும்.. ஆமா... எல்லாம் தானா நடந்ததா.. இல்லை நீயா வரவச்சுகிட்டியா ? என்று பவித்ராவை நம்பாமல் பார்த்தாள் அவளின் அன்னை...

“என்னமா நீங்க.. இதிலெல்லாம விளையாடுவேன்.. எல்லாம தானா தான் ஆச்சு” என்றவள்

“அப்பாடா ஒரு வழியா என்னை பிடிக்கலைனு போயிருப்பான்.. லேட்டா வந்ததும் நல்லதுக்குதான்... நான் தப்பிச்சேன்” என்று மனதுக்குள் குதித்தாள்..

ஆனால் அவளின் மகிழ்ச்சிக்கு ஆயுள் காலம் ஒரு சில விநாடிகளே!!!

“ஆனாலும் மாப்பிள்ளை தங்கம் டீ ... நீ இவ்வளவு லேட் ஆனதும், பரவாயில்லை அத்தை... அவளுக்கு ஏதாவது வேலை வந்திருக்கும்.. அவளை திட்டாதிங்க.. நான் தான் ஏற்கனவே அவளை பார்த்துட்டனே..

வேணும் னா நான் அவ ஆபிஸில் போய் ஒரு நாள் பார்க்கறேன். அவ என்னை பார்க்கட்டும் “ என்று எவ்வளவு பெருந்தன்மையாக சொன்னார் தெரியுமா??? .. அதுவும் இல்லாம மாப்பிள்ளை சூப்பரா இருக்கார் பவி... ஹ்ம்ம்ம் உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்....

எனக்கு ரொம்ப புடிச்சிடுச்சு.. வசதியானவங்கனாலும் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் பேசினார்... இப்பவே என்னை அத்தைனு கூப்பிட்டார் னா பாரேன்” என்று அவனை புகழ்ந்து தள்ளினார் பார்வதி...

“ஐயோ!!! இப்படி கோட்டை விட்டுட்டியே பவித்ரா...இனிமேல் எப்ப பார்த்து அவனை பிடிக்கலைனு சொல்லுவ ??? “ என்று இடித்தது அவளின் மனசாட்சி..

“சரி .. அதான் வந்து ஆபிஸில் பார்க்கறேன் னு சொல்லியிருக்கான் இல்லை.. அப்ப வச்சுக்கலாம் கச்சேரியை” என்று அப்போதைக்கு தள்ளி போட்டாள்

ஆனால் அவன் சொன்ன ஆபிஸில் வந்து பார்க்கும் அந்த நாள் மட்டும் கடைசி வரைக்கும் வரவே இல்லை.. இவளும் அதை கண்டு கொள்ள வில்லை...அதற்குள் திருமண நிச்சயம் வரைக்கும் வேகமாக முன்னேறி விட்டார் பார்வதி எங்க தன் மகள் திரும்பவும் முறுக்கி கொள்வாளோ என்று

அன்று மட்டும் அவனை வந்து பார்த்து இருந்தால் அப்பவே நிறுத்தி இருப்பாள் இந்த திருமணத்தை... ஒருவேளை அந்த ஸ்கூட்டி காற்று போனது கூட அவனோட ஏற்பாடோ??? அவள் அவனை பார்க்க கூடாது என்று அவனே அது மாதிரி செய்திருப்பானோ என்று இப்பொழுது தோன்றியது...

“அப்புறம் நிச்சயம் அப்பொழுதும் அவன் ஏன் வரவில்லை?? ..என்னதான் வேலையில் பிஸியாக இருந்தாலும் தன் நிச்சயத்திற்கு கூடவா வரமுடியாது.. இல்லை வேணும்னு திட்டம் போட்டுத்தான் வராமல் இருந்திருக்கான்...” என்றது ஒரு மனம்

“ஹ்ம்ம்ம்ம் இல்ல.. அவன் எவ்வளவு பெரிய பிசினஸ்மேன்.. உண்மையிலயே வேலை இருந்திருக்கும்..”. என்றது இன்னொரு மனம்...

“அப்புறம் அவனுடைய பெயர் கூட ஆதித்யானு சொல்லலையே.. திருமண அழைப்பிதலில் கூட வேறு பெயர் தானே இருந்தது..” என்று நினைவு கூர்ந்தவள் அதில் “நிஷாந்த்” என்று அச்சடித்ததை நினைத்து பார்த்தாள்..

“அப்படீனா அவனுடைய உண்மையான பெயர் என்ன?? வேணும்னே அவன் பெயரை என்னிடம் மறைத்தானா?? இல்லை இந்த அத்தை கூட நிஷாந்த் னு தானே கூப்பிட்டாங்க ... அப்ப இதுதான் அவனுடைய உண்மையான பெயரா??? “

“ சே!! என்ன இது ??? A + B = B + A ங்கிற மாதிரி எப்படி பார்த்தாலும் சரியா வருதே..!! . எல்லா நிகழ்வுகளையும் அவனுடைய சதியாக பார்த்தால் எல்லாம் சதியாகவே பொருந்தி வருகிறது.. அதையே எதேச்சையாக நடந்தது போல பார்த்தாலும் சரியாகவே வருகிறது..

ஐயோ!!! இப்ப எப்படி தெரிந்து கொள்வது ? “ என்று தலையை பிய்த்து கொண்டாள்....

தலைவலி தான் மிச்சம். ஒன்றும் புரியவில்லை..

“சரி விடு பவித்ரா.. கத்தரிக்காய் முத்தினா கடைக்கு வந்து தானே ஆகணும்.. எப்படியும் தெரியத்தான் போகுது.. நடக்கிறது நடக்கட்டும்” என்று மீண்டும் தன்னை சமாதானம் செய்து கொண்டாள்...

கொஞ்ச நேரத்தில் மீண்டும் அவள் மனம் யோசிக்க ஆரம்பித்தது..

“அம்மா, சரண்யா எல்லாரும் சொல்ற மாதிரி உண்மையிலயே என்னை காதலிக்கிறானா?? அப்படினா ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை...”

இன்று காலை திருமண சடங்குகள் ஆரம்பித்ததில் இருந்து அவனின் அத்தனை செயல்களும் ஞாபகம் வந்தது அவளுக்கு.. அதுவும் முகூர்த்தம் முடிந்து மணமகன் அறையில் அவனின் அந்த அணைப்பு... . காதல் இல்லாமல் என்னவாம்..!! இப்பொழுதும் அவள் உடல் சிலிர்தது.. கன்னம் சிவந்தது அவனின் அந்த அணைப்பின் சுகத்தால்...

“திருடா... இரு உன்னை பார்த்துக்கறேன் !! ” என்று மனதுக்குள் மிரட்டியவள் அப்பொழுது பார்வதி அங்கே வரவும் எழுந்து நின்றாள்..

அருகில் வந்த அவளின் அம்மா

“பவித்ரா... நாங்க கிளம்பறமா... வீட்டில எல்லாம் அப்படியே போட்டுட்டு வந்தாச்சு.. போய் எல்லாம் பார்க்கனும்... ”

“என்னமா இது.? . நீ பாட்டுக்கு என்னை இங்க தனியா மாட்டி விட்டுட்டு போறேங்கிற??? அதெல்லாம் இல்ல. நீயும் இங்க தான் இருக்கணும். இல்லைனா நானும் உன்கூடவே வர்றேன்...”

“இல்லை பவி.. வந்திருக்கிற நம்ம சொந்தகாரங்களை எல்லாம் அனுப்பி வைக்கனும்.. மரகதம் அண்ணி, ஜனனி எல்லாம் இருக்காங்க இல்லை உனக்கு துணையா... அப்புறம் என்ன கவலை “ என்று சொன்னவரின் முகத்தில் மெல்லிய கவலை ரேகை ஓடியது.. அதை கவனித்த பவித்ரா

”என்னாச்சுமா?? ஏதாவது பிரச்சனையா??? ஏன் உன் முகம் வாடி இருக்கு”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை பவி..”

“எனக்கு தெரியும் மா.. எதையும் மறைக்காமல் சொல்லுங்க”

“அ து .. அது வந்து பவி... எனக்கு மாப்பிள்ளை இவ்வளவு பெரிய பணக்காரர் னு தெரியாது.. சுந்தரம் அண்ணா மாப்பிள்ளை வசதியானவங்க.. உன்னை நல்லா பார்த்துக்குவார்னு சொன்னாங்க..

அதை நம்பி பெருசா எதுவும் விசாரிக்கலை... இப்பதான் தெரியுது இவ்வளவு வசதியானவங்கனு... அதான் கொஞ்சம் பயமா இருக்கு பவித்ரா...

அதில்லாம நம்ம சொந்தகாரங்க வேற என்னென்னெமோ சொல்றாங்க... எதை நம்பறது எதை நம்ப கூடாதுனு ஒன்னும் புரியலை..

ஒரு வேளை கொஞ்சம் அவசர பட்டு உன்னையும் கட்டாய படுத்திட்டனோ னு இருக்கு” என்று தன் கலக்கத்தை கூறினார் பார்வதி

“அம்மா.. வீணா கவலையை விடுங்க.. வசதி என்னம்மா வசதி.. நாம அதையா பார்த்தோம்... உங்க மாப்பிள்ளை என்னை நல்லா பார்த்துக்குவார்... அப்படி இல்லைனா கூட நான் சமாளிச்சுக்குவேன்..

சொந்தகாரங்க என்னைக்குதான் நம்மளை நல்லா இருக்கனும்னு நினைச்சிருக்காங்க... அவங்க சொல்றதையெல்லாம் கண்டுக்காதிங்க... எதையும் போட்டு குழப்பிக்காமல் இருங்க....” என்று ஆறுதல் கூறி தன் தாயை தேற்றினாள் பவித்ரா

“சரி பவித்ரா..இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. மாப்பிள்ளை அப்படியே எதுவும் நடந்து கிட்டாலும் நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!!!” என்று மீண்டும் பல அறிவுரைகளை கூறி விடை பெற்றார்..

“அவன் கிட்ட சொல்லீட்டீங்களா மா... ?? “ என்று தன் மனதுக்குள் ‘அவன்’ னு மரியாதை கொடுத்து திட்டுவதையெ வெளியில் உளறினாள்

“என்ன இது பவித்ரா??... மாப்பிள்ளையை இப்படியா சொல்லுவ... மரியாதை குடுத்து பேசு.. .” என்று தன் மகளை கண்டித்தார்

“ஹ்ம்ம்ம்” என்று தலையை ஆட்டினாள் பவித்ரா

“அப்புறம் மாப்பிள்ளை ஏதோ வேலைய வெளியில் போயிருக்காராம்..வர லேட்டாகுமாம் .. போன் ல பேசிட்டேன்.. கார் ஏற்பாடு பண்ணி கொடுத்திட்டார்.. சரி நாங்க கிளம்பறோம் “ என்று அனைவரிடமும் விடை பெற்று கிளம்பினார்..

பவித்ராவிற்கு கண்ணை கரித்தது.. முதன் முதலாக தன் தாயை பிரிந்து புது இடத்தில்....

“ம்கூம் இது கூடாது... ” என்று தன்னை தனே திட்டி கொண்டவள் மரகதத்தை பார்க்க சென்றாள்..

அவர் சமயலறையில் இரவு உணவிற்கான மெனுவை சொல்லி கொண்டிருந்தார்..

பவித்ராவை பார்த்ததும்..

“வா பவிம்மா.. நீ தூங்கலையா?? “

“இல்லை அத்தை... தூக்கம் வரலை... அதான் உங்களுக்கு எதுவும் உதவி செய்யலாம்னு வந்தேன்....

“இங்க எல்லாத்துக்கும் ஆட்கள் இருக்காங்க.. நான் சும்மா மெனு தான் சொல்லிகிட்டிருக்கேன்.. எனக்கே இங்க வந்தா போர் அடிக்கும்.. அதனாலயே இங்க வர்றது இல்லை”

அதை கேட்டதும் குழப்பமானது பவித்ராவுக்கு

“அப்ப நீங்க இங்க இல்லையா அத்தை?? “ என்று தன் குழப்பத்தை வெளிப்படையாக கேட்டாள்..

“இல்லை மா... நான் எங்க குடும்பத்தோட கிராமத்துல இருக்கோம்.. ஏதாவது விசேஷம்னா தான் இங்க பட்டணத்துக்கு வர்றது..”

“ஆமாம்.. அவன்... “ என்று வாய் வரை வந்ததை நாக்கை கடித்து கொண்டு

“அ... அவரோட அப்பா அம்மா இல்லையா?? “ என்று மெல்ல கேட்டாள்

“ஓ உனக்கு நிஷாந்தை பற்றி தெரியாதா?? நான் அன்னைக்கே பார்வதி கிட்ட எல்லாமே சொல்லியிருந்தேனே...” என்றவர் “ஒன்றை தவிர “ என்று மனதில் சொல்லி கொண்டார்...

அப்பதான் ஞாபகம் வந்தது.. தினமும் தன் அன்னை அந்த மாப்பிள்ளையை பற்றியே பேசியதும் இவள் சிறிது கூட அதை காதில் வாங்காமல் அசட்டை செய்ததும்...

“சே!! அப்பயே எல்லா விசயங்களையும் தெரிந்து கொண்டிருக்கலாம். இப்படி இவங்க கிட்ட பல்பு வாங்கியிருக்க வந்திருக்காது ” என்று தன்னை தானே மானசீகமாக கொட்டி கொண்டவள் ..

“அது வந்து அத்தை. .. நான் கொஞ்சம் வேலை அதிகமா இருந்ததினால சீக்கிரம் ஆபிஸ் போய்ட்டு திரும்ப வரவும் லேட்டாகிடும்... அதான் அம்மா கிட்ட பேச முடியவில்லை... அம்மாவே எல்லா விசாரிச்சிருப்பாங்கனு விட்டுட்டேன் “.. என்று சமாளித்தாள்..

“நல்ல பொண்ணுமா நீ.... கட்டிக்க போறவனை பற்றி ஒன்னுமே தெரியாமல் அம்மா சொன்னா போதும் என்று மணமேடை வரைக்குமே வந்திருக்கியே!! இந்த காலத்துல உன்னை மாதிரி பார்க்கறது ரொம்ப கஷ்டம் பவித்ரா... உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க எங்க நிஷாந்த் கொடுத்து வச்சிருக்கனும் “ என்று மெச்சி கொண்டவர்

“சரி வா.. நாம அப்படி உட்கார்ந்து பேசலாம் “ என்று அருகில் இருந்த அறைக்கு அழைத்து சென்றார்... இருவரும் உள்ளே சென்று அமர்ந்ததும் அவரே தொடர்ந்தார்...

“ஹ்ம்ம்ம் அவனோட அப்பா அம்மா பத்திதான கேட்ட?? அவன் அம்மா அப்பா அவனுக்கு சிறு வயதா இருக்கும் பொழுது ஒரு விபத்தில் இறந்துட்டாங்க...

அதில் இருந்தே அவன் ஊட்டியில கான்வென்ட் ஹாஸ்ட்டல் ல தங்கி தான் படித்தான்.. நானும் நேரம் கிடைக்கிற பொழுது வந்து பார்த்துட்டு போவேன்... விடுமுறைனா எங்க ஊருக்கு வருவான்.. பின் காலேஜ் முடிச்ச பிறகு மேல் படிப்பு படிக்கனும்னு வெளிநாடு சென்றான்..அப்பதான் இல்லாத பழக்கத்தை எல்லாம் கத்துகிட்டான்..

படிப்பு முடிஞ்சு வந்ததும் அவனுடைய அப்பாவின் தொழிலை அவருடைய ப்ரெண்ட் நடத்தி வந்தார். அவருக்கும் வயதாகி விட்டதால் சரியாக நடத்தாததால் நஷ்டமாகிடுச்சு... நிஷாந்த் தான் அதை எல்லாம் சரி பண்ணி இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கான்...

தொழில் ல இவனை அடிச்சிக்க ஆளே இல்லை.. என்ன... இந்த பொண்ணுங்க விஷயத்துல மட்டும் தப்பான வழிக்கு போகாமல் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்” என்றவர் அப்பொழுது தான் தான் என்ன பேசினோம் என்று உணர்ந்து நாக்கை கடித்து கொண்டார்...அதற்கு மேல மறைக்க முடியாது என்று உணர்ந்து

“என்னை மன்னிச்சுடு பவிமா... நிஷாந்த் பொண்ணுங்க விஷயத்துல கொஞ்சம் வீக்.. அவனை சொல்லியும் குத்தமில்லை..சின்ன வயதிலிருந்தே அவன் யாரும் இல்லாமல் தனியா வளர்ந்திருக்கான்..

நல்லது கெட்டது எடுத்து சொல்ல யாரும் அவன் பக்கத்தில் இல்லை... அதுவும் ரெண்டும் கெட்டான் வயதில வெளிநாட்டு பழக்க வழக்கம் வேற அந்த வயதில்... கொஞ்சம் தடம் மாறிட்டான்..

இங்க இந்தியா வந்த பிறகாவது மாறி இருக்கலாம்..ஆனால் இந்த பொண்ணுங்க எங்க மாற விட்டாங்க...

“நீ தான் பார்த்த இல்ல.. அவனோட வசதியை பார்த்துட்டு இந்த பொண்ணுங்களும் இவன் போற பக்கம் எல்லாம் தேடி வருவாங்க... அதான் எப்படியோ இந்த பழக்கம் வந்திருச்சு.. ஆனாலும் அது வெளியில் தெரியாது..அப்படி நடந்துப்பான்...

என்னாலயும் கண்டிக்க முடியல. நாம் பெற்ற பிள்ளைகளே நம்ம பேச்சை கேட்கிறது இல்லை.. இவ்வளவு பெரிய தொழிலை எடுத்து நடத்தறவன். இவனை போய் எப்படி நாம கேட்கிறது என்று நானும் விட்டுட்டேன்..

எங்க அந்த பொண்ணுங்களில் ஏதாவது ஒன்னை கூட்டிட்டு வந்திடுவானோ என்று பயமா இருந்தது..அப்படி எதுவும் ஆகியிருந்தால அவன் வாழ்க்கை நாசமாகியிருக்கும்.. நல்ல வேளை உன்னை பார்த்த பிறகு தான் எனக்கு நிம்மதியானது...

நீ எப்படியும் அவனை மாத்திடுவ.. அதுவும் இல்லாம உன்னை விரும்பி கல்யாணம் பண்ணியிருக்கான். இனிமேல் அந்த மாதிரி தப்பான வழிக்கு போக மாட்டான்

அவனுடைய பழசை எல்லாம் மறந்துட்டு நீ தான் கடைசி வரைக்கும் அவனை பார்த்துக்கனும்” என்று பேசி முடித்தார்...

அதை கேட்டதும் அவனுடைய சிறுவயது இழப்பிற்காக வருந்தியது ஒருமனம்... அதே நேரம் அவனை பற்றி தெரிந்ததும் பவித்ராவிற்கு அதிர்ச்சியாக இருந்தது....

அவனை பற்றி ஓரளவுக்கு ஏற்கனவே தெரிந்தது தான்.. ஆனால் அவனுடைய பெரியம்மாவே அவனை பற்றி தப்பாக சொல்லும் பொழுது..... மனதிற்குள் ஏதோ பயம் முளைத்தது அவளுக்கு..

“ஏதோ தப்பாக நடக்க போகிற மாதிரியே இருக்கே” என்று தோன்றியது.. ஆனாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல்

“நீங்க கவலை படாதிங்க அத்தை.. நான் பார்த்துக்கறேன்” என்றாள்

“இது போதும் பவிமா.. எங்க நான் வாய் தவறி உளறினதை வச்சு நீ எதுவும் தப்பா முடிவு எடுத்துடுவியோணு பயமா இருந்தது...

இது போதும்... நீ எப்படியும் அவனை நல்ல வழிக்கு கொண்டு வந்திடுவ... இதை முன்னாடியே உங்கிட்ட சொல்லி இருந்தால் நீ எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டியோனு தான் சொல்லலை...

நீ ரொம்ப தைரியமான பொண்ணுனு உங்க அம்மா சொன்னதுக்கப்புறம் தான் நீ எப்படியும் அவனை மாத்திடுவனு தோணுச்சு.. அதான் எதுவும் முன்னாடியே சொல்லலை.. என்னை மன்னிச்சிடு மா...”

“பரவாலை அத்தை... விடுங்க....அவர் மேல இருந்த அக்கறையினால தான மறச்சீங்க... அப்படி அக்கறை காட்ட நீங்க ஒருத்தராவது இருக்கீங்களே..

ஆமாம் அத்தை.. அவர் உண்மையான பேர் என்ன?? நீங்க ஒன்னு சொல்றீங்க.. மத்தவங்க வேற மாதிரி சொல்றாங்க” என்று தன்னை குழப்பி கொண்டிருந்த அந்த பெயர் விசயத்தை தெளிவு படுத்த எண்ணி கேட்டாள்...

மரகதம் சிரித்துகொண்டே

அவனுடைய முழுபெயர் ஆதித்யா நிஷாந்த்... இவன் பிறந்த பொழுது பெயர் வைப்பதில் என் தங்கச்சிக்கும் அவன் அப்பாவுக்கும் சண்டையே வந்தது... என் தங்கச்சி நிஷாந்த் னு வைக்கனும்னா... அவங்க அப்பாவோ ஆதித்யா தான் நல்லாருக்கு னாங்க... அவனோட தாத்தா தான் அப்ப ரெண்டு பேரையும் சேர்த்தே வச்சிடலாம்னு ஆதித்யா நிஷாந்த் னு வச்சாங்க.. ஆனா என் தங்கச்சி நிஷாந்த் னு தான் கூப்பிடுவா...

எங்க ஊருக்கு அடிக்கடி வருவா... அவள் நிஷாந்த் னு கூப்பிடறதால எங்களுக்கும் அதுவே பழகிடுச்சு.. எங்க ஊர்லயும் எல்லாம் நிஷாந்த் னு தான் கூப்பிடுவாங்க... ஆனால் இங்க எல்லாம் ஆதித்யா னு சொல்லு வாங்க போல....” என்று அவளுக்கான விளக்கத்தை கொடுத்தார்...

“சரி பவிமா... நீ கொஞ்சம் நேரம் படுத்து ஓய்வு எடு .. நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருப்பேன்.. அப்புறம் நிறைய பேசலாம் “ என்று வெளியேறினார்..

அவர் சென்றதும் மெல்ல கட்டிலில் படுத்தாள் பவித்ரா... மீண்டும் அவளுடைய குழப்பங்கள் வந்து குடைந்தன அவளை... கண்ணை மூடியவளுக்கு ஏதேதோ கனவுகள் வந்து பயமுறுத்தின...

ஒரு வழியாக இரவு வரவும் இரவு உணவுக்காக பவித்ராவை அழைத்தார் மரகதம்...

அவளும் எழுந்து முகம் கழுவிக்கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்றாள்..ஏற்கனவே அங்கு அமர்ந்து இருந்த ஜனனியை பார்த்து புன்னகைத்தவளின் கண்கள் இங்கும் அங்கும் அலை பாய்ந்தன தன்னை மணந்தவனின் முகம் தேடி...

அதை கவனித்த ஜனனி

“என்ன அண்ணி தேடுறீங்க??? “என்றாள் குறும்பாக...

“ஆங்.... ஒன்னுமில்லை ... “ என்று மெல்ல முனகினாள்...

அவளின் எண்ணம் புரிந்தவராக

“நிஷாந்த் முன்னாடியே பசிக்குதுனு சாப்பிட்டுட்டு மேல போய்ட்டான் பவித்ரா..நீ தூங்கிட்டு இருக்கவும் எழுப்ப வேண்டாம் னு சொல்லிட்டான்.. சரி நீ வா. நாம சாப்பிடலாம்” என்று அவளை அமர வைத்து பரிமாறினார் மரகதம்...

மூன்று பெண்களும் கதை பேசிகொண்டே சாப்பிட்டனர்.. அதிலும் ஜனனியின் கலகலப்பான, வெகுளித்தனமான பேச்சு பவித்ராவிற்கு மிகவும் பிடித்து போனது.. கொஞ்ச நேரத்திலயே இருவரும் நல்ல தோழிகளாயினர்...அந்த கலகலப்பான பேச்சால் பவித்ராவின் மனதை அறித்து வந்த இறுக்கம் குறைய அவளும் மெல்ல இயல்பானாள்....

இரவு உணவை முடித்ததும் பவித்ராவை முதலிரவுக்கென அலங்கரித்தனர் மரகதமும் ஜனனியும்..பவித்ரா எவ்வளவு மறுத்தும் மரகதம் விடுவதாக இல்லை..

“இதுவும் நம்ம திருமண சடங்குகளில் ஒன்று பவிமா.. இந்த சடங்கோட தான் நம்ம திருமண விழா முடியறதே!! அதனால மறுக்க கூடாது “ என்று அவள் வாயை அடைத்தார்...

ஜனனியும் அவள் பங்குக்கு

“அண்ணி!! நான் பண்ற மேக்கப்புல உங்களை பார்த்து நிஷா அண்ணா அப்படியே மயங்கிடனும்.. ஏற்கனவே மயக்கத்தில் தான் சுத்தி கிட்டிருக்கார்.. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் எக்ஷ்ட்ரா மயங்கட்டும் “ என்று சிரித்தாள்...

“ஆனாலும் எப்படிதான் ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி செய்யறீங்களோ” எனவும் பவித்ரா புரியாமல் ஜனனியை பார்த்தாள்...

“அதான் அண்ணி!! நீங்க சாப்பிட வந்தப்போ அண்ணாவை காணாமல் தேடுனீங்க இல்லை... அதே மாதிரிதான் நிஷா அண்ணா சாப்பிட வந்தப்பவும் அவரோட கண்கள் இந்த ரதியைத்தான் தேடுச்சு.. உங்களை காணாமல் தவிச்சு போய்ட்டாங்க...

“தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க.. “ னு அந்த மோகன் அமலா வை தேடுன மாதிரி.... இன்னும் கொஞ்ச நேரம் அவரை தவிக்க விட்டிருக்கனும்.. அதுக்குள்ள இந்த அம்மா நீங்க தூங்கறீங்கணு சொல்லிட்டாங்க... “ என்று குறும்பாக சிரித்தாள்..

அதை கேட்டதும் பவித்ராவின் மனதுக்குள் தென்றல் வீசியதை போல இருந்தது...

“என்னை தேடினானா??? .... இவ்வளவு நேரம் என் கண் முன்னால் வராமல் ஒழிந்து இருந்தவன் என்னை தேடினானா??? திருடன்....” என்று மனதுக்குள் ரகசியமாக சிரித்து கொண்டாள்...

ஒரு வழியாக அலங்காரம் முடித்து தலை நிறைய மல்லிகை பூவை வைத்தார் மரகதம்..

“மஹாலட்சுமி மாதிரி இருக்க மா... என் தங்கச்சி மட்டும் இருந்தால் எவ்வளவு பெருமையா இருந்திருப்பா இப்படி ஒரு அழகான மருமகள் கிடைத்ததற்கு” என்று நெட்டி முறித்தார்...

அவரை நமஸ்கரித்த பவித்ராவின் கையில் பால் சொம்பை கொடுத்தார்....

பிறகு மரகதம், ஜனனி இன்னும் ஒரு உறவு பெண்ணும் அவளை அழைத்து கொண்டு மாடி அறையை நோக்கி சென்றனர்...

பவித்ராவுக்கு கால்கள் பின்னின நகர முடியாமல் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தாள்...

“ஐயோ!! இவனை எப்படி தனியாக சந்திப்பது?? ..” என்று அடி வயிற்றில் குளிர் பரவியது அவளுக்கு... அதே நேரம் அவளின் இன்னொரு மனமோ, அவனிடம் கேட்க நிறைய கேள்விகள் இருப்பதால் இது தான் அதற்கான சந்தர்ப்பம் என்று அவளுக்கு நினைவு படுத்தியது.....

ஆதியின் அறையை அடைந்ததும்

“ஆல் தி பெஸ்ட் அண்ணி!! சீக்கிரம் ஒரு குட்டி பையனையோ, பொண்ணையோ பெத்து குடுங்க “ என்று கண்ணடித்து அவளை மேலும் சிவக்க வைத்து அவளை ஆதியின் அறைக்குள் தள்ளி விட்டு ஜனனியும் அவளுடன் வந்தவர்களும் திரும்பி சென்றனர்..

முதலிரவு அறையில் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் பல கனவுகள், எதிர்பார்ப்புகள் இருக்கும்... பவித்ராவிற்கு அது மாதிரி கனவுகள் எதுவும் இல்லை என்றாலும் தன் மனதை அரித்து வரும் பல கேள்விகளுக்கு விடை தெரியனும் என்ற எதிர்பார்ப்பில் மெல்ல அடி எடுத்து வைத்தாள் தன் மனாளனின் அறையினில்.....



அவளின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா.??? .. அப்படி கிடைக்கும் விடைகள் அவளின் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்கி அவளின் வாழ்க்கையை வசந்தமாக்கும் தென்றலாகுமா??? இல்லை அவளின் வாழ்க்கையை புரட்டி போடும் புயலாகுமா.?? பார்க்கலாம்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!