உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-7



அத்தியாயம்-7 

காலையில் மெல்ல கண் விழித்த பவித்ராவுக்கு உடனே நேற்று இரவு சம்பவங்கள் முட்டி கொண்டு முன்னே வந்து நின்றன...

கண்கள் தானாக ஆதித்யாவின் கட்டிலை அடைந்தது...ஆதி அங்கு இல்லை.. முன்பே எழுந்திருந்தான்...

நேற்று இரவு நடந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று எண்ணி கொண்டவள் எழுந்து குளித்து முடித்து கீழே சென்றாள்..

மரகதம் உணவறையில் காலை உணவை எடுத்து வைத்து கொண்டிருப்பதை கண்டு அங்கு சென்றாள்... அவளை கண்டதும் மரகதம் அவளை ஆராயும் பார்வை ஒன்றை செலுத்தி பின் திருப்தியுற்றவராக அவளை அணைத்து

“உட்கார் பவித்ரா... எல்லாரும் சாப்பிடலாம் “ என்று அங்கு இருந்த இருக்கையில் அமர வைத்தார்...

அப்பொழுது தான் அங்கு வந்த ஜனனியும் பவித்ராவுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்..

பவித்ரா குளித்து முடித்து அவளின் ஈரக் கூந்தலை விரித்து விட்டு இரண்டு பக்கமும் முடி எடுத்து நடுவில் க்ளிப் போட்டிருந்தாள்.. நெற்றியில் நடுவில் சிறிய பொட்டும் அதற்கு மேல் சிறிதாக திருநீறும் வைத்து எளிமையாக பளிச்சென்று அழகாக இருந்தாள்...

அவளின் முகத்தை கண்ட மரகதம் பூஜை அறைக்கு சென்று குங்குமச்சிமிலை எடுத்து வந்து அவளின் நெற்றி வகிட்டில் மெலிதாக குங்குமத்தை வைத்து விட்டார்...

“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுல்ல... இனிமேல் எப்பவும் இந்த குங்குமம் உன் நெற்றியில் இருக்கனும் பவித்ரா..மஹாலட்சுமி மாதிரி இருக்க “ என்று நெட்டி முறித்தார்..

“இந்த கல்யாணமே ஒரு நாடகம்னு சொல்றான் உங்க பையன்.. இதுல அவனுக்காக வேண்டிகிட்டு இந்த குங்குமத்தை வைக்காதது தான் குறை” என்று மனதுக்குள் திட்டிகொண்டே அவரை பார்த்து புன்னைகைத்தாள்

எதிர் இருக்கையில் இருந்து பவித்ராவை கண்ட ஜனனி

“வாவ்... சூப்பரா இருக்கிங்க அண்ணி...அதுவும் இவ்வளவு நீள முடியா!!!! எப்படி மேனேஜ் பண்றீங்க.. நான் கூட நேத்தே கேட்கனும்னு நினைத்தேன்....” என்று ஆச்சர்யமாக பவித்ரா முகம் பார்த்தாள்...

“அதெல்லாம் ஒன்னும் கஷ்டமில்லை ஜனனி... எனக்கு நீண்ட முடினா பிடிக்கும். அதான் வெட்ட மனமில்லை.. நீயும் ட்ரை பண்ணி பாரு...” என்று இயல்பாக பேசினாள் தன் கவலையை உள்ளுக்குள் மறைத்து கொண்டு..

“ஐயோடா... எனக்கு இதெல்லாம் ஒத்து வராது அண்ணி.. நமக்கு இந்த ப்ரீ ஹேர்தான் செட்டாகும்.. சீக்கிரம் தலையை சீவனுமா.. போனமா னு இருக்கனும். சில நேரம் தலையே சீவ மாட்டேன்.. நேரா காலேஜ்க்கு போய்ட்டு சீவிக்குவேன்” என்று மெல்ல குனிந்து தன் அன்னைக்கு கேட்காதவாறு சொல்லி சிரித்தவள் பவித்ராவின் உதட்டை கண்டு

“என்ன அண்ணி??? உங்க உதடு வீங்கி இருக்கு.?? அண்ணனோட வேலையா??“ என்று கண்ணடித்தாள்..

நேற்று இரவு ஆதித்யாவின் முரட்டுதனமான அணைப்பும் , அதே முரட்டுதனமான வேகத்தில் அவன் அழுந்த முத்தமிட்டதால் அவளின் மென்மையான இதழ்கள் தடித்திருந்தன...

அவளின் நினைவுகள் அதை தொடவும் அவளின் கன்னங்கள் தானாக சிவந்தன.. ஆனால் அதை தொடர்ந்த நிகழ்வுகளும் உடனே பின் தொடர்ந்து நினைவு வர அவளின் முகம் வாடிப்போனது... உடனேயே தன்னை சமாளித்து கொண்டு இயல்பாக வைத்து கொண்டாள் தன் முகத்தை...

அவளின் கன்னம் சிவந்ததையும் அதை தொடர்ந்து அவளின் முகமாற்றத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துகொண்டே அருகில் வந்தான் ஆதித்யா..

அவர்களின் அருகில் வந்தவன்

“என்ன?? எல்லாரும் என் பொண்டாட்டிய மிரட்டிகிட்டு இருக்கிங்க?? என்ன பெரியம்மா மாமியார் கொடுமையா ?? “ என்று சிரித்துகொண்டே பவித்ராவின் அருகில் இருந்த இருக்கையில் கேஷுவலாக அமர்ந்து கொண்டு அவளின் தோள்பட்டையை சுற்றி கையை போட்டான் இயல்பாக....

அவனின் கை தன் மீது பட்டதும் பவித்ராவிற்கு கூச்சமாக இருந்தது.. மெல்ல நெளிந்து அவனின் கையை தட்டி விட முயன்றாள்... ஆனால் அவனோ அழுத்தமாக பிடித்திருந்தான் அவளால் நகர முடியாமல்...

அதற்குள் ஜனனி,

“யாரு?? எங்க அம்மா கொடுமை பண்ணுதாக்கும்… நீங்க வேற அண்ணா.. சரோ அண்ணி இருக்காங்களே, அம்மா தான் அவங்களுக்கு பயந்துகிட்டு இருப்பாங்க. இவங்களாவது? மருமகளை கொடுமை பண்றதாவது...? ”

“அதுவும் இல்லாமல் பவித்ரா அண்ணி சோ ஸ்வீட்…!! எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா.. பேசாமல் இந்த அண்ணியை எனக்கு கொடுத்துடுங்க.. எனக்கு அந்த சரோ அண்ணி வேண்டாம்... “ என்றாள் சிரித்தவாறு...

“ஹா ஹா ஹா .. எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்டாட்டி மா ... அவளையும் உங்கிட்ட கொடுத்துட்டு நான் என்ன பண்றதாம்...?? பேசாமல் நீ இங்க வந்திடு வாலு... ” என்றான் அவனும் சிரித்தவாறு..

பவித்ராவிற்கு அவன் பேச்சை நம்ப முடியவில்லை..

“நேற்று இரவு எப்படி பேசினான்..!! இன்று என்னமா நடிக்கிறான்.. !! ” என்று மனதிற்குள் திட்டிகொண்டாள்..

“ஹ்ம்ம்ம் அதான் பண்ண போறேன்.. இந்த வருடம் காலேஜ் முடிச்சதும் வேலை தேடிகிட்டு இங்கயே வந்திட போறேனாக்கும்... “ என்றாள் ஜனனி சிரித்தவாறு..

அவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுது மரகதத்தின் போன் அடித்தது.. பவித்ராவின் அம்மா தான் அழைத்திருந்தார்.. மரகதம் சிறிது நேரம் பேசி விட்டு போனை பவித்ராவிடம் கொடுத்தார்...

தன் அம்மாவின் குரல் கேட்கவும் அது வரை கட்டுபடுத்தி கொண்டிருந்தவை எல்லாம் மெல்ல வெளி வர ஆரம்பித்தது.. கண்ணோரம் கரித்து நீர் எட்டி பார்த்தது.. எங்கே எல்லார் முன்னாடியும் அழுது விடுவோமோ என்று எழுந்து பக்கத்து அறைக்கு சென்றாள்...

போகும் பொழுதே தன்னை கட்டு படுத்தி கொண்டாள்.. அம்மாவிற்கு எதுவும் தெரியகூடாது.. இதெல்லாம் தெரிந்தால் உடைந்து விடுவார் என்று அவளுக்கு தெரியும்...

அதனால் தன்னை கட்டு படுத்திகொண்டு அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சாதாரணமாகவே பதில் சொன்னாள்..

அவள் அன்னை சிறிது நேரம் பேசி முடித்ததும்,

“பவித்ரா !! மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துக்கிறாரா ? ” என்றதும் ஒரு கணம் நெஞ்சை அடைத்தது அவளுக்கு...

இருந்தாலும் சமாளித்துகொண்டு

“ஹ்ம்ம்ம் நல்லா பார்த்துகிறார் மா.. நீ ஒன்னும் என்னை பத்தி கவலை படாதே. இங்க ஒரு பிரச்சைனையும் இல்லை. நீ நல்லா சாப்பிடு..ரெஸ்ட் எடு.. “ என்று அவரை தேற்றினாள். பேசி முடித்ததும் போனை மாப்பிள்ளையிடம் கொடுக்க சொன்னார்...

“மாப்பிள்ளையாம்... மாப்பிள்ளை... “ என்று திட்டி கொண்டே போனை அவனருகில் வந்து அவனிடத்தில் கொடுத்தாள் அவனை முறைத்து கொண்டே...

அதை வாங்கியவன்

“சொல்லுங்க அத்தை... “ என்று பவ்யமாக கேட்கவும் பவித்ராவிற்கு

“எப்படி நடிக்கிறான் பார்..!! நேற்று அப்படி சொல்லிட்டு இன்று எப்படி இப்படி இளிச்சு பேசறான் !! ” என்றவாறெ அவனை முறைத்தவளை பார்த்து குறும்பாக கண்ணடித்தான் இதெல்லாம் சகஜம் என்பதை போல ...

பின் பேசி முடித்ததும் போனை அவளிடத்தில் கொடுக்கும் பொழுது தான் கவனித்தான் அவளின் உதடுகள் லேசாக வீங்கி இருப்பதை...

ஏற்கனவே ஆரஞ்சு சுளை போல திரண்டிருக்கும் அவளின் இதழ்கள் இன்னும் திரண்டு அவனை சுண்டி இழுத்தன... அவளின் உதடுகளை வருட துடித்த கைகளை கஷ்ட பட்டு கட்டுபடுத்தி கொண்டான்..

எதேச்சையாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனின் பார்வை தன் உதட்டின் மேல் இருப்பதை கண்டு கொண்டவள், நேற்று இரவு நடந்த நிகழ்வுக்கு பிறகு ‘இனிமேல் அவனை பார்த்து மயங்க கூடாது... அவனின் பார்வை எந்த சலனத்தையும் தன்னுள் ஏற்படுத்த கூடாது’ என்று திரும்ப திரும்ப உரு போட்டு தன்னையே உறுதியாக்கி கொண்டதால், அவனின் அந்த மயக்கும் பார்வைக்கு முறைத்து கொண்டே

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை !! ” என்று முனுமுனுத்துவிட்டு அவன் கையில் இருந்த போனை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு போய் மரகதத்தின் கையில் கொடுத்து விட்டு அவர் அருகிலயே அமர்ந்து கொண்டாள்...

ஆதியும் அவளின் அந்த முறைப்பை ரசித்து கொண்டே கூடவே அவள் சாதுர்த்தியமாக தன் அருகில் இருந்து எழுந்து மறுபக்கம் அமர்ந்து கொண்டதை கண்டவன்

“இப்ப தப்பிச்சிட்ட டி.. மீண்டும் என்கிட்ட தான வரணும்..!! அப்ப பார்த்துக்கறேன் !! ” என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே காலை உணவை முடித்தவன் வேலை இருப்பதாக கூறி வெளியில் கிளம்பினான்..

அதற்குள் மரகதம்

“நிஷாந்த்.. நாங்க இன்று ஊருக்கு போலாம் னு இருக்கோம்.. ” என்றார் தயக்கத்துடன்..

அதை கேட்டதும் பவித்ரா பதறி

“ஐயோ !! அத்தை.. என்ன இது?? அதுக்குள்ள கிளம்பறீங்க...? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.. இங்க நான் மட்டும் இருந்தால் போர் அடிக்கும் “ என்று அவசரமாக அவரை தடுத்தாள்...

“ஓ.. இந்த ஜான்சி ராணிக்கு என் கூட இருக்க அவ்வளவு பயமா..? இருக்கட்டும் கவனிச்சுக்கறேன்.. ! ” என்று மனதினில் கருவி கொண்டான்

அதற்குள் மரகதம்

“இல்லை பவித்ரா... பேரன் பிறந்து ரெண்டு நாள் ஆகுது.. கல்யாண வேலையினால நான் போக முடியலை.. இனிமேலும் போய் பார்க்காம இருந்தால் நல்லா இருக்காது.. ஜனனிக்கும் பரிட்சை ஆரம்பிக்க போகுது... நான் போய்ட்டு அடுத்த மாதம் வர்றேன்... நீங்களும் ஒரு தரம் அங்க வாங்க...”

“இல்லை அத்தை.. நான் மட்டும் தனியா எப்படி?? .... “ என்று மீண்டும் இழுத்தாள் பவித்ரா...

“தனியா என்ன மா??. அதான் நிஷாந்த் இருக்கிறான் இல்லை... அவன் உன்னை நல்லா பார்த்துக்குவான்.. ”

“ஆமாம்.. ஆமாம்... நல்லாலாலா பார்த்துக்குவான்” என்று மனதுக்குள் திட்டினாள் பவித்ரா...

“சரி பெரிமா.. அப்ப நைட் உங்களுக்கு டிக்கெட் போட சொல்லிடறேன்.. நான் அதுக்குள்ள வந்திடறேன்.. ” என்று கிளம்பினான்....

தித்யா கிளம்பி சென்றதும் மூன்று பெண்களும் தங்கள் கதையை தொடர்ந்தனர்..

அப்பொழுதுதான் சரோ ங்கிறது யார் என்று கேட்டாள் பவித்ரா..

“சரோ.. சரோஜா என்னோட மருமகள் மா.. எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு

பையன் சரவணன்.. படிப்பு முடிச்சுட்டு எங்க ஊர்லயே விவசாயம் பண்றான்.. அவனோட மனைவிதான் சரோ... அவள் நிறை மாதமா இருந்ததால் கல்யாணத்துக்கு வர முடியலை... நேற்றுதான் குழந்தை பிறந்திருக்கு.. பேரன் ... அவளுக்கு துனையா இருந்ததால் சரவணனும் கல்யாணத்திற்கு வர முடியல...

அது தான். இப்ப போய் பேரனை பார்க்கனும் மா... முதல் பேரன் இல்லையா... அதான் மனசு எல்லாம் அங்கயே இருக்கு...”

“ஹ்ம்ம்ம் வாழ்த்துக்கள் அத்தை.. அப்ப பாட்டி ஆயிட்டீங்க.. “என்று அவரை கிண்டல் செய்தாள் பவித்ரா..

உடனே ஜனனியும் “ ஆமாம். நானும் அத்தை ஆயிட்டேன் அண்ணி” என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்...

“அண்ணி.. நீங்களும் அண்ணாவும் ஒரு நாளைக்கு எங்க ஊருக்கு வரனும். சூப்பரா இருக்கும்..ரொம்ப நாள்... இல்லை வருசமாச்சு நிஷா அண்ணா எங்க ஊருக்கு வந்து... சின்ன வயசுல நிஷாண்ணா வரும் பொழுதெல்லாம் பயங்கர ஜாலியா இருக்கும்”

என்று அவளின் பழைய நினைவுகளையும், அவளின் ஊரை பற்றியும் கதை அளந்தாள் ஜனனி..

அதை கேட்டதும் பவித்ராவிற்கும் அந்த ஊரை பார்க்க வேண்டும் போல இருந்தது...

அப்புறம் மரகதம் அந்த விட்டு பழக்க வழக்கங்களை பவித்ராவிற்கு சொல்லி கொடுத்தார்...ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வேலையாட்கள் இருந்தனர்...

பவித்ராவும் “ என்னையே அவன் மனைவியா ஏற்றுக்கலை.. நான் எதுக்கு இதெல்லாம் தெரிஞ்சுக்கனும் “ என்று வேண்டா வெறுப்பாக கேட்டு கொண்டாள்..

இப்படியாக கதை பேசி இரவு வந்ததும் மரகதமும் ஜனனியும் விடைபெற்று சென்றனர்... ஆதித்யா வே காரை எடுத்துகொண்டு அவர்களை பஸ் ஸ்டாண்ட் ல் விட சென்றிருந்தான்...

வ்வளவு பெரிய வீடு வெறிச்சோடி இருந்தது... ஜனனி இருக்கும் வரை கலகலப்பாக இருந்தது..

“இனி இங்கு எப்படி சமாளிப்பது?? ..” கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது பவித்ராவுக்கு

கூடவே அடுத்து என்ன செய்யறது? என்ற கேள்வி முன்னே வந்தது...

“ஹ்ம்ம் நடக்கிறது நடக்கட்டும்... “ என்று மனதை தேற்றி கொண்டாள்...

அவளின் ஆழ்ந்த சிந்தனையில், வரவேற்பறையில் அமர்ந்திருந்த பவித்ரா , ஆதியின் கார் திரும்ப வந்ததையும் உள்ளே வந்த அவன் நின்று தன்னை உற்று பார்த்ததையும் அறிய வில்லை...

நேராக தனது அறைக்கு சென்றவன் வேலையாளை அழைத்து பவித்ராவை பால் எடுத்து கொண்டு மேல வர சொன்னான்..

வேலையாள் வந்து சொல்லவும் தட்ட முடியாமல்

‘எனக்கு தெரியாமல் இவன் எப்ப மேல போனான் ? ’ என்று முனகிகொண்டே சமையல் அறைக்கு சென்றவள் அடுத்து

“பால் எப்படி காய்ச்சுவது.. அவனுக்கு எப்படி காய்ச்சினால் புடிக்குமோ ? “ என்று முழித்தாள்..

அவள் முழித்து கொண்டு நிற்பதை கண்டதும் அங்கு இருந்த சமையல்கார பெண்மணி தானாக முன்வந்து சிரித்தவாறு பாலை காய்ச்சி அவளிடம் கொடுத்தாள்.. எவ்வளவு சர்க்கரை போடனும் என்ற விவரத்தையும் கூறினாள்..

அதை எடுத்து கொண்டு மெல்ல மாடி ஏறினாள் பவித்ரா..

“இன்னைக்கு மட்டும் என்கிட்ட எதுவும் வாலாட்டட்டும். அவனுக்கு இருக்கு !! ” என்று ஒரு முடிவோடு அவனின் அறையை அடைந்தவள் மெல்ல கதவை தட்டினாள்..

“யெஸ். கம் இன் பேபி.... ” என்றான் குரலில் குறும்புடன்...

கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தவள் நேராக அவனிடம் சென்றவள்

“ஹலோ !! இனிமேல் இந்த பால் எடுக்கிறது.. தண்ணி எடுக்கிறது னு எதுவும் என்கிட்ட சொன்ன அவ்வளவுதான்...

உனக்கு வேணும்னா நீயே போய் எடுத்துக்கோ.. இல்லையா அதான் அத்தன வேலை ஆளுங்களை வச்சிருக்கியே.. அவங்களை கொண்டு வந்து கொடுக்க சொல்... என்னால உனக்கு இதெல்லாம் செய்ய முடியாது” என்று பொரிந்து தள்ளினாள் பவித்ரா....

அவளின் படபடப்பான பேச்சை இமை தட்டாமல் பார்த்து ரசித்தவன்

“கூல் டவுன் பேபி..!!. எதுக்கு இவ்வளவு டென்சன்..? ஏன் இதெல்லாம் செய்யும் பொழுது என்னை அடிக்கடி பார்க்கனும்.. அப்படி பார்க்கும் பொழுது என்கிட்ட மயங்கிடுவியோனு பயமா இருக்கா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு..

“ஹலோ மிஸ்டர்!! பயமா..?? எனக்கா..?? அதுவும் உன்னை பார்த்து மயங்க...? ” என்று உன்னை என்பதை அழுத்தி சொன்னாள்...

“ஹ்ம்ம்ம்ம் அப்புறம் ஏன் எடுத்துகிட்டு வர மாட்டேங்குற... இனிமேல் எனக்கு தேவையானது எல்லாம் நீதான் எனக்கு செய்யற !! “ என்று இதுவரை குறும்பாக பேசி கொண்டிருந்தவன் திடீரென்று தன் குரலை மாற்றி கொண்டு கட்டளை இடும் தொனியில் கூறினான் ஆதித்யா..

அந்த குரலை கேட்டதும் அவளுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது...

“சரி .. இப்ப கொண்டு வந்த பால் எங்க??? “ என்றான் தன் புருவத்தை உயர்த்தி...

அவள் பாலை எடுத்து கொடுக்கவும் அவன் இன்னொரு டம்ளரை எடுத்து அதில் பாதியை ஊற்றினான்....

“ஹ்ம்ம்ம். குடி” என்றான் அவளிடம் அதை நீட்டி..

அவன் நீட்டிய பாலை கண்டதும் மிரண்டு இரண்டு அடி தள்ளி நின்றாள் பவித்ரா...

அதை பார்த்து மனதிற்குள் சிரித்து கொண்டே..

“ஹே!! நான் என்ன பீரா குடிக்க சொல்றேன்..? இது மில்க் தான்.. ஹ்ம்ம்ம் சும்மா குடி பேபி.” என்றான் மிண்டும் அதே குறும்பு புன்னகையுடன்..

“எனக்கு வேண்டாம்... இது பிடிக்காது... “ என்றாள் தாழ்ந்த குரலில்...

“ஆனால் ஆதித்யாவிற்கு பிடிக்குமே...!! எனக்கு பிடிக்கிறது எல்லாம் உனக்கும் பிடிக்கனும்.. !! ” என்றான் மீண்டும் அதே மிரட்டும் தொனியில்...

“அதெல்லாம் முடியாது... அதுவும் உனக்கு பிடிக்கிறதையா?? உனக்கு பிடிக்கிறது தான் நான் முதல்ல வெறுப்பேனாக்கும்... ” என்று அவளும் திருப்பி கொடுத்தாள் அவனுக்கு முறைத்தவாறு..

“ஹ்ம்ம்ம் நம்ம கல்ச்சர் படி புருஷன் சொன்னா பொண்டாட்டி கேட்கனுமாம்... நீ தான் நம்ம கல்ச்சர் ல ஊறினவள் ஆச்சே!! அப்ப நான் சொன்னா தட்ட கூடாதாம்...அதனால இப்ப நான் சொல்ற மாதிரி இதை குடிக்கிற...” என்றான் மீண்டும் குறும்பாக சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம் அது ஆதர்ஷ தம்பதிகளுக்கு...உன்னை மாதிரி, சவால் ல ஜெயிக்கனும் னு பொய் சொல்லி ஏமாத்தி பேருக்காக கல்யாணம் பண்ணிகிட்டவங்களுக்கு பொருந்தாது.. நீ சொல்றதை எல்லாம் கேட்க நான் ஒன்னும் உன்னோட காதல் மனைவி இல்லை” என்று கோபமாக வார்த்தைகளை வீசினாள் பவித்ரா...

“காதல் மனைவி??? ... ஹ்ம்ம்ம் மனைவி இங்க இருக்க .. காதல் மட்டும் மிஸ்ஸிங்.... அப்ப காதல் பண்ணிடலாமா..?? அப்புறம் நான் சொன்னதை கேட்ப இல்லை “ என்று எழுந்து ஒரு அடி முன்னே வைத்தான் அவளை நோக்கி, ஒரு மாதிரி கிறக்கத்துடன் பார்த்து கொண்டு...

“ஐயோ!!! இவன் சும்மா இருக்க மாட்டான் போல..!! இவன் கிட்ட இப்ப வம்பு வேண்டாம் “ என்று நினைத்தவள்

“கிட்ட வராத... நானே குடிச்சிடறேன் “ என்று அவன் கையில் இருந்த பாலை வேகமாக வாங்கியவள் அதை அப்படியே அவன் மூஞ்சியில் ஊற்றனும் போல இருந்த தன் கோபத்தை கட்டுபடுத்தி கொண்டு, மூக்கை ஒரு கையால் மூடி கொண்டு கடகட வென குடித்து முடித்தாள்...

அதன் வாசம் அவளுக்கு குமட்டி கொண்டு வர, ஆனாலும் முயன்று அதை உள்ளே தள்ளி சமாளித்தாள்...

இதுவரை பால் குடித்து பழக்கம் இல்லாததால், குடித்த பிறகு வாயை துடைக்க மறந்து இருந்தாள் பவித்ரா...அவளின் உதட்டிற்கு மேலே அழகாக மீசையாக வந்திருந்தது..

அதை கண்டவன்

“இந்த குட்டச்சி இப்ப பார்க்கும் பொழுது அசல் பூனை குட்டி போலவே இருக்கா...!! வால் ஒன்னுதான் இல்லை” என்று உள்ளுக்குள் சிரித்துகொண்டான்.

அவளை அப்படியே அள்ளி அணைத்து அவளின் மீசையை தன் இதழால் ஒத்தி எடுக்க துடித்தது அவன் மனம்... ஆனால் மற்றொரு மனமோ

“பொறு ஆதித்யா...அவள் உன் கிட்ட சவால் விட்டிருக்கா... அவளா உன்னை தேடி வரும் வரை பொறு... அவளை நீ ஜெயிக்கனும் “ என்று அவனுக்கு அவனுடைய சவாலை நினைவு படுத்தவும் உடனே தன்னை கட்டுபடுத்தி கொண்டவன், அவள் பாலை குடித்து முடித்ததை சுட்டி காட்டி

“அது....!! ஆதித்யா நினைச்சா அது நடக்கனும் அவனுக்கு...!! இப்ப புரிஞ்சிருக்குமே நான் யாருனு !! “ என்று பேசி கொண்டெ அவனும் பாலை பருகி டம்ளரை அவளிடம் கொடுத்தான்...

அவளும் அவனை முறைத்து கொண்டே இரண்டு டம்ளர்களையும் கழுவி வைத்து விட்டு நேற்றை போலவே தலையணையும் போர்வையையும் எடுத்து கொண்டு சோபாவில் படுத்தாள்....

கண்ணை மூடியவளுக்கு தூக்கம் தான் வரவில்லை...

“எத்தனை நாள் இவனை இப்படி சமாளிப்பது?? இதற்கு என்ன தான் முடிவு?? “ என்று குழம்பியவள் நீண்ட நேரம் கழித்தே கண் அயர்ந்தாள்...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!