உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-8



அத்தியாயம்-8 

றுநாள் காலை நீண்ட நேரம் கழித்தே கண் விழித்தாள் பவித்ரா...

அவள் விழிக்கும் பொழுது ஆதி அங்கு இல்லை.. இவள் குளித்து விட்டு கீழே வரவும் தன் அம்மாவின் போன் வந்திருப்பதாக கூறினார் சமையல்கார பெண்மனி..

ஓடிப்போய் போனை எடுத்தவள் தன் அன்னையிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டாள்..

“என்ன இது பவித்ரா.?? .. இவ்வளவு நேரமா தூங்குவ?? இங்க இருக்கும் பொழுது காலையில ஆறு மணிக்கு எல்லாம் எழுந்திடுவ.. அங்க போய் ரொம்ப சோம்பேறி ஆயிட்ட” என்று தாளித்தார் அவளை.....

“இங்க ஒரு வேலையும் இல்லை மா..காலைலயே எழுந்து என்ன பண்ண?? அதில்லாமல் நைட் தூங்க ரொம்ப லேட் ஆகிடுச்சு அதான்... “ என்று இழுத்தாள்..

தூங்க நேரம் ஆனது என்று பவித்ரா சொன்னதை தப்பாக அர்த்தம் எடுத்து கொண்ட பார்வதி.

“தன் மகள் மாப்பிள்ளையுடன் சந்தோஷமாகத் தான் இருக்கிறாள்.. நான் தான் வீணா பயந்துகிட்டு இருக்கேன்”.. என்று எண்ணி நிம்மதியுற்றார்..

“மாப்பிள்ளையும் உன்னோடு தூங்காமல் தான இருந்திருப்பார்.. அவர் நேரத்திற்கு எழுந்து கிளம்பி வேலையை பார்க்க போகலை... உனக்கும் மட்டும் என்ன பவித்ரா தூக்கம்... மாப்பிள்ளைக்கு முன்னாடியே எழுந்து அவருக்கு வேண்டியத செஞ்சு கொடு..

இப்பதான் மாப்பிள்ளை கிட்ட பேசினேன்.. அவர் முக்கியமான வேலைனு வெளில கிளம்பிட்டாராம். அதான் வீட்டு போனுக்கு போன் பண்ண சொன்னார்.. சீக்கிரம் நீ ஒரு போன் வாங்கிக்கோ பவி... ஏதாவது அவசரம்னா போன் பண்ண வசதியா இருக்கும் பார்..”

“ஹ்ம்ம்ம் சரி மா... “..

“அப்புறம் பவித்ரா... இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ மாப்பிள்ளை கூட சந்தோஷமா இருக்கிறதை பார்க்க... இப்படியே இருமா.. எதுனாலும் அனுசரித்து போ.. நேர்மை, நியாயம்னு போர்க்கொடியை தூக்கி கிட்டு நிக்காத.

கல்யாணத்திற்கு முன்னாடி எல்லார்கிட்டயும் சரிக்கு சரியா எதற்கும் எதுத்துக்கிட்டு நிற்கற மாதிரி இப்பவும் அதேமாதிரி இருக்காத... எதற்கும் வளைந்து கொடுத்து போகணும்... ” என்று தன் மகளின் குணத்தை அறிந்து, வழக்கமான அறிவுரைகளை கூறி போனை வைத்தார்...

பிறகு தான் புரிந்தது தான் ‘தாமதமாக தூங்கினேன்’ என்று கூறியதுக்கு தன் அம்மா தப்பாக அர்த்தம் எடுத்து கொண்டது..

இருக்கட்டும். அவங்களாவது நான் சந்தோஷமாக இருக்கேன் என்று சந்தோஷமா இருக்கட்டும்... “

என்று நினைத்தவள் சமையலறைக்கு சென்றாள்...

அங்கு நேற்று அவளுக்கு உதவிய பெண்மணி அவளை பார்த்து சிரித்தாள்...

“என் பெயர் வள்ளி சின்னமா... பெரிய ஐயாவும் அம்மாவும் இருக்கும் பொழுது இங்கு வேலைக்கு சேர்ந்தேன்... அப்ப இருந்து இங்க தான்.. சமையல் என் பொறுப்பு... உங்களுக்கு எது வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க “ என்றாள்..

“சரி ங்க “ என்று பவித்ராவும் அவளை பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள்..

பின் வள்ளி கொடுத்த காபியை எடுத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்...

அவள் இதுவரை தோட்டத்தை பார்த்ததில்லை.. இப்பொழுது பார்ப்பதற்கு பறந்து விரிந்து இருந்தது. நிறைய பூ வகைகளும் அழகு செடிகளும் அழகாக அடுக்கி வைக்கபட்டிருந்தன... அதுவும் தூரத்தில் தெரிந்த ரோஜா செடிகளில் இருந்த மலர்கள் அவளை அழைத்தன...

மெல்ல நடந்து அதன் அருகே சென்றாள்.. பல வண்ணங்களில் விதவிதமான ரோஜாக்கள் இருந்தன...அதன் மேல் விழுந்திருந்த பனித்துளிகளினிடையே அனைத்தும் அவளை பார்த்து புன்னகைத்தன...

அவளும் புன்னகைத்தவாறு, மெல்ல அதை தடவி பார்த்தாள்...உள்ளுக்குள் சிலிர்த்தது...

அதற்குள் ஒரு வயதானவர் அங்கு வந்து

“வணக்கம்மா.. பூ வேணுங்களா ? ” என்று தன் காவி பற்களை காட்டி சிரித்தார்..

திடீரென்று கேட்ட குரலில் ஒரு நிமிடம் பயந்து பின் நிமிர்ந்து யாரென்று புரியாமல் பார்த்தாள்.. அவளின் பார்வையை புரிந்து கொண்டவர்.

“நான் இந்த வீட்டு தோட்டக்காரன் வீரா சின்னமா.. நான் தான் இந்த தோட்டத்தை பாத்துக்கறேன்” என்று சிரித்தார்...

“பெரியம்மா இருக்கிறவரைக்கும் இந்த தோட்டம்னா அவங்களுக்கு உசுடு.. இங்கயே ஏதாவது புதுசு புதுசா செடி வைப்பாங்க... அவங்க போனதுக்கு அப்புறம் இந்த தோட்டம் அனாதை மாதிரி ஆயிருச்சு...” என்று தன் வருத்தத்தை தெரிவித்தார்...

“ஏன்?? .. அவர், உங்க சின்னய்யா இங்க வரமாட்டாரா தாத்தா?? “ என்று கேட்டதும் அவர் கண்கள் கலங்கியது...

“என்னாச்சு தாத்தா??? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?? “

“இல்லைமா... இதுவரை என்னை யாரும் தாத்தானு சொன்னது இல்லை... முதன் முதலா தாத்தா னு கேட்கவும் கண் கலங்கிடுச்சு...

சின்ன அய்யா எப்பயாவது இதுக்குள்ள ஓடிகிட்டிருப்பார்... அவருக்கு இதை எல்லாம் பார்க்க எங்கம்மா நேரம்.. “

“பூ வேணுங்களா... பறிச்சு தரவா?? “

“வேணாம் தாத்தா.. இதெல்லாம செடியில் இருந்தாதான் அழகு.. பறிக்காதிங்க.. “என்று தடுத்தாள்...

“ஹ்ம்ம்ம்ம் ஆனால் இங்க வந்த பொண்ணுங்களாம் எப்ப பார் அந்த புதுவிதமான ரோஜாவையே கேட்டு பறிச்சிட்டு போய்டுவாங்க. ஒன்னு கூட செடியில இருக்க விட மாட்டாங்க..” என்றார்...

“பொண்ணுங்களா ?? யாரா இருக்கும்?? “ என்று யோசித்தவள் பின் தோட்டத்தை சுற்றி பார்த்தாள்

அந்த தோட்டத்தை முழுவதும் சுற்றி பார்த்தவள் வியந்துதான் போனாள் !

“இவ்வளவு பெரிய தோட்டமா!!! சென்னையில் 600 சதுர அடில சொந்தமா நிலம் வாங்கி வீடு கட்டவே வாழ்க்கை முழுவதும் லோன் கட்ட வேண்டி இருக்கு... இவனெல்லாம் இவ்வளவு பெரிய இடத்தை சும்மா தோட்டம் னு வச்சிருக்கானே...!! இது தான் பணக்கார வாழ்க்கை போல...

அப்பொழுது தான் அனில் அம்பானி பற்றி படித்தது நினைவு வந்தது..

அவர் வீடே பல மாடிகளை கொண்டதும், பல வகையான விலை உயர்ந்த கார்களும், சொந்தமாக தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் வைத்திருப்பதும்....அவ்வளவு ஏன் அவருடைய மனைவிக்கு சொந்தமாக ஒரு சொகுசு படகையே (Yacht) பரிசளித்ததும் நினைவு வந்தது.......

“ஹ்ம்ம்ம் இந்த பணக்காரங்கள் எல்லாம் சம்பாதிக்கிற பணத்தை செலவு பண்ண வழி யோசிப்பாங்க போல!! “ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டவள் எல்லா பகுதியையும் ஒரு முறை சுற்றி வந்தாள்.. அதன் அழகு மனதை அள்ளியது....

“வாவ்...!! சூப்பரா இருக்கு... நம்ம ரமணி சந்திரன் மேடம் கதைகள் ல வர்ற மாதிரியே இருக்கு இந்த தோட்டம்... ஆனால் என்னவோ மிஸ் ஆகுதே” என்று யோசித்தவள்..

“ஆங் ....அந்த கல்... தோட்டம்னா ஒரு கல்லு இருக்கணுமே...!! நம்ம ஹீரோயின் அதுலதான உட்கார்ந்து இருப்பாங்க ... இங்கு அதை காணோமே...!!

ஒரு வேளை இந்த விட்டுல முன்னாடி இருந்த அந்த “பெரிய” அம்மா தோட்டத்துல வந்து உட்கார்ந்திருக்க மாட்டாங்க போல... இந்த தாத்தா கிட்ட சொல்லி ஒரு கல்லை கொண்டு வந்து போட சொல்லணும்” என்று தனக்குள்ளே நக்கலடித்து சிரித்தவாறு குறித்து கொண்டாள்...

தோட்டதில் கொஞ்ச நேரம் காலார நடந்துவிட்டு வீட்டினுள் சென்றவள் காலை உணவை முடித்து விட்டு பின் மாடிக்கு சென்றாள்..

அப்பொழுது தான் தோன்றியது அவள் மாடியில் உள்ள மற்ற அறைகளை இன்னும் பார்க்க வில்லை.. என்ன இருக்கும்?? என்று ஆவல் பொங்க ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தாள்..

முதலில் ஆதித்யாவோட அலுவலக அறை போல இருந்தது..

மிக நேர்த்தியாக பல பைல்கள் அடுக்கி வைக்க பட்டிருந்தன... அடுத்த அறை நூலகம் போன்று இருந்தது.. ஒரு பெரிய நூலகமே இருந்தது.. எல்லாம் தொழில் சம்மந்தமான புத்தகங்கள்.. முக்கால்வாசி எல்லாம் வெளிநாட்டு புத்தகங்கள்.. தமிழ் புத்தகங்கள் இருக்கின்றதா என்று தேடி பார்த்தாள்.. ஒன்றும் கிட்ட வில்லை..

“பெரிய துரை... இங்க்லீஸ் புக்ஸ் மட்டும்தான் படிப்பாராக்கும் !! ” என்று மனதில் எண்ணியவளுக்கு அங்கு ஓரமாக இருந்த கணினி கண்ணில் பட்டது..

டக்குனு அவளுக்கு ஒரு ஐடியா கிடைத்தது..

அதை ஆன் பண்ணி நெட் கனெக்ஸன் இருக்கிறதா என்று பார்த்தாள்..

நெட் இருக்கவும் அவசரமாக ஆதித்யா வின் புரபைலை தேடினாள்..

“AN Group of Companies" ன் CEO ஆதித்யா நிஷாந்த் கம்பீரமாக சிரித்து கொண்டிருந்தான்..அவனுடைய வரலாற்றை அவசரமாக புரட்ட

கடந்த ஏழு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருந்தது அந்த நிறுவனம்.. அதற்கு காரணம் அவனின் கடின உழைப்புதான் என்று புரிந்தது..

எல்லா துறைகளிலும் அவனுடைய ஆதிக்கம் இருந்தது... சென்ற வருடத்திற்கான சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருதையும் வாங்கி இருந்தான்.

“பரவாயில்லை...தொழில்ல ரொம்பவும் சின்சியர் சிகாமணி போல ... நல்லாதான் முன்னேறி இருக்கான்… இவ்வளவு தொழில் இருக்கிறதால தான் வீட்டில இருக்காம அடிக்கடி வெளியில போய்டறானோ?... ” என்று மெச்சி கொண்டவள் அடுத்து அவனின் ட்விட்டர் பக்கத்தை திறந்தாள்..அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!