உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-10
அத்தியாயம்-10
அலுவலகம் செல்ல கிளம்பி சென்று காரை எடுத்த ஆதித்யா, பவித்ராவிற்கு கொடுப்பதற்காக நேற்று வாங்கி வந்திருந்த அலைபேசி காரிலயே இருப்பதை கண்டு அதை அறையில் வைக்க திரும்பி வந்திருந்தான்...
அவள் இன்னும் தூங்கி கொண்டிருப்பாள் என்று நினைத்து கதவை தட்டாமல் திறந்துகொண்டு உள்ளே வந்திருந்தான்
ஆனால் அவளோ , குளித்து முடித்து தன் தலையில் சுற்றி இருந்த துண்டிலிருந்து நீர் சொட்டி கொண்டிருக்க, அப்பொழுதுதான் புடவையை சுத்த ஆரம்பித்து இருந்தாள்..
நேற்று இரவு, இரவு உடையில் கண்ட அவளின் தோற்றத்தில் விழித்து கொண்ட அவனின் ஆண்மை இப்பொழுது அவளின் இந்த நிலையை கண்டு இன்னும் வெகுண்டு எழுந்தது...
அவளின் சவால், அவனின் வாக்கு எல்லாம் மறந்து போனது அந்த நொடியில்...
தன்னை மறந்து ஒரே எட்டில் அவளை அடைந்தவன் அவளை அப்படியே கையில் அள்ளி கொண்டான்...இறுக்கி அணைத்தவாறு கட்டிலை நெருங்கி அவளை கட்டிலில் கிடத்தினான்...
ஆதித்யா திடீரென்று உள்ளே வந்த அதிர்ச்சியிலிருந்து இந்த நொடிவரை என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்து கொண்டிருந்த பவித்ரா அவனின் அந்த இறுகிய அணைப்பில் கொஞ்சம் மயங்கினாலும் அவன் கட்டிலில் கிடத்தும் பொழுது சுய நினைவுக்கு வந்தாள்..
அப்பொழுதுதான் அவளுக்கு அந்த சூழ்நிலை புரிய ஆரம்பித்தது...
உடனே வேகமாக உருண்டு கட்டிலின் மறு பக்கத்தை அடைந்தவள் எட்டி குதித்து புயலென குளியலறைக்குள் புகுந்து கதவை சாத்தி கொண்டாள்..
ஆதித்யாவோ முதலில் திகைத்து நின்றான் அவளின் செயலை கண்டு...பிறகு தான் புரிந்தது அவள் தன்னை நிராகரித்தது...அவளின் செயலுக்கான அர்த்தம் புரிய இப்பொழுது கோபம் வந்து அவன் முகம் இறுகியது
வேகமாக குளியலறையை அடைந்தவன் கதவை வேகமாக தட்டினான்..
ம்ஹூம்.. அவள் திறக்கவில்லை.. சில விநாடிகள் தட்டியவன் அவள் கதவை திறக்காததால் வேகமாக கதவை உதைத்து விட்டு வெளியேறி சென்றான் அந்த அறையை விட்டு...
வெளியில் வந்தவன் அதே வேகத்தில் காரை எடுத்து விரட்டினான்... அவன் மனம் உலைக்கலமாக கொதித்து கொண்டிருந்தது...
“சே!! எத்தனை பொண்ணுங்க என் காலடியில கிடக்கிறாங்க.. நானாக யாரையும் நாடி சென்றதில்லை.. எல்லாம் தானாக தேடி வரது மட்டுமே.. முதல் முதலாக நானே விரும்பி நாடியவள் இவள் மட்டுமே... ஆறு மாதத்திற்கு முன்பும் அவனாகத்தான் நாடி சென்றான் அவளை... இப்பொழுதும் அப்படியே
ஆனால் அவள்.....
இவன் தொடுகையை விரும்ப வில்லை... இவன் ஆண்மையை விரும்பவில்லை...அதுவும் அவளை அணைக்க அத்தனை உரிமை இருந்தும் அவனை அவள் ஏற்று கொள்ளவில்லை என்பது அவனின் ஆண்மைக்கு கிடைத்த அடியாக உணர்ந்தான்...ஒரு பெண்.. அதுவும் அவனின் மனைவி அவனை நிராகரித்ததை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை..
“இல்லை... உன்னை விட மாட்டேன்.. என்னையே நிராகரித்தாள் இல்லை.. அவளுக்கு நான் யாரென்று காட்டறேன்” என்று உறுமியவன் அதே ஆத்திரத்தோடு அலுவலகம் அடைந்தான்...
அவன் முகத்தில் இருந்த கடுமை அனைவருக்கும் புதிதாக இருந்தது... எவ்வளவு பிரச்சனை வந்தபோதும் எந்த உணர்ச்சியையும் அவன் முகத்தில் காண்பித்தது இல்லை இதுவரைக்கும்....அலுவலகம் வந்துவிட்டால் அவனுக்கு மற்ற பிரச்சனை எதுவா இருந்தாலும் மறந்துவிடும். தன் வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துவான்
ஆனால் இன்று அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.. அதே கோபத்தை அனைவரிடமும் காட்டினான்..
ஒரு வேலையும் செய்ய முடிய வில்லை... எந்த பைலை திறந்தாலும் அவனுக்கு அவள் நின்ற கோலமும் பின் தன்னை நிராகரித்ததுமே கண் முன்னே வந்தது....
அன்று இருந்த அத்தனை மீட்டிங்கையும் கேன்சல் செய்தான்... மாலை வரையுமே அடங்கவில்லை அவனின் கோபம்...
“சே!! இந்த குட்ட ராட்சசி என்னை இப்படி ஆட்டி வைக்கிறாளே...என்னையே கன்ட்ரோல் பண்ணமுடியலையே “ என்று மீண்டும் அவன் கோபத்தை அவள் புறம் திருப்பினான்...
இங்கு பவித்ராவோ உறைந்து போய் அதிர்ச்சியிலிருந்து விலகாமல் குளியலறைக்குள்ளேயே நின்றிருந்தாள் நீண்ட நேரமாக... அவள் உடல் நடுங்கி கொண்டிருந்தது...
அறையினில் எந்த அரவமும் கேட்காததால் மெல்ல கதவை திறந்து வெளியில் எட்டி பார்த்தாள்.. ஆதி அங்கு இல்லை என்று தெரிந்ததும் வெளியில் வந்தவள் வேகமாக சென்று அறை கதவை தாழிட்டாள்...
பின் கோயிலுக்கு செல்லும் மனநிலை இல்லாததால் வேகமாக சென்று ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு ஷோபாவில் தொப்பென்று விழுந்தாள்... அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..
“இப்படி கட்டிய கணவன் கிட்ட இருந்தே தப்பிக்குமாறு வைத்து விட்டாயே இறைவா” என்று புலம்பியது அவள் மனம்...
சிறிது நேரம் அப்படியே இருந்தவள் பின் தன் கண்களில் இன்னும் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை உணர்ந்து
“இல்லை... இது கூடாது.. ‘கண்ணீர் பெண்ணை பலவீனப் படுத்தும் ஆயுதம்’ என்று படித்தது ஞாபகம் வந்தது ....
“இல்லை... நான் அழக்கூடாது... நான் ஏன் அழவேண்டும்?? ... தப்பு செய்ய முயன்றவன் அவன்...அவனே திமிராக கதவை உதைத்துவிட்டு போறான்.. நான் ஏன் அவனுக்காக அழ வேண்டும்?? நான் அழமாட்டேன் “ என்று உறுதி செய்தவள்
அவசரமாக எழுந்து சென்று முகத்தை தண்ணீர் அடித்து கழுவினாள்...முகமும் ,மனமும் ஓரளவுக்கு தெளிவானது..
பின் வெளியில் வந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள் டீபாய் மேல் இருந்த அந்த புது அலைபேசி I-phone X..
முதலில் சிறிது தயங்கியவள் பின் அதை எடுத்து பார்த்தாள்...தனக்காகத்தான் வாங்கியிருக்கான் போல... இதை கொண்டு வந்து கொடுக்கத்தான் வந்தானோ?
அப்புறம் ஏன் அப்படி செய்தான் என்று நினைத்தவளுக்கு தான் நின்றிருந்த கோலம் நினைவு வந்தது..
அப்போ ஒரு கணவனாகத்தான் என்னை நாடினானா???
இல்லையே... அவன் தான் நான் அவன் மனைவி இல்லை. இந்த திருமணமே ஒரு நாடகம் என்று சொல்லி இருக்கிறானே...
மனதால் என்னை மனைவியாக ஏற்கும் வரை அவனிடம் நெருங்க மாட்டேன்... அவனையும் அனுமதிக்க மாட்டேன்....அப்படி செய்தால் மற்ற பெண்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும்.. அந்த மாதிரி ஒரு கேவலத்தை இந்த பவித்ரா எப்பவும் செய்ய மாட்டா...” என்று உறுதி கொண்டவள்
அந்த ஐபோனை எடுத்து ஆன் பண்ணினாள்...
அதில் ஆதித்யாவின் பெர்சனல் நம்பரை சேவ் பண்ணி இருந்தான் Hubby என்று..
“ஆமாம்.. பெரிய ஹபி...” என்று திட்டியவள் இன்னும் அதை நோண்டி பார்த்தாள்..
WhatsApp புரபைலும் கிரியேட் ஆகி இருந்தது..
அதை திறந்து பார்த்தவள் ஆதியிடம் இருந்து முதல் மெஷேஜ் வந்திருந்தது நேற்றைய தேதியில்..
“Hi baby… this is my 2nd marriage gift for you. Hope you remember my first gift on the marriage day!!” என்று ஸ்மைலி அனுப்பி இருந்தான்... நேற்றே எல்லாம் செட் பண்ணி வைத்திருந்தான் போல என்று எண்ணியவள்
“நேற்றே கொடுத்து தொலைய வேண்டியதுதான... இந்த போனை கொடுப்பதற்காகத்தான் திரும்பவும் வந்திருக்கான் போல ” என்று திட்டியவள்
நேற்று அவன் தாமதமாக வந்ததையும் நினைத்து கொண்டாள்... ..
“எல்லாம் என் கவன குறைவு.. இனிமே இந்த கதவை சாத்தி வைப்பதுதான் முதல் வேலை” என்று நினைத்தவளின் மனம் மீண்டும் கனத்து இருந்தது...
மொபைலை எடுத்து சரண்யா எண்ணிற்கு அழைத்தாள்...
புது நம்பரை கண்டதும் முதலில் யோசித்து பின் பவித்ரா தான் அழைத்தது என்று தெரிந்து கொண்டு உற்சாகமானாள் சரண்யா...
“ஹே!! ஜான்சி ராணி.. என்ன அதுக்குள்ள என் ஞாபகம் எல்லாம் வந்திருச்சு... எப்படி விட்டார் உன் ஹீரோ உன்னை தனியா” என்று ஆரம்பித்தாள்...
அவளின் குரலை கேட்கவும் அதுவரை நெஞ்சை அடைத்து வந்த பாரம் இப்பொழுது தொண்டையை அடைத்து கொண்டது பவித்ராவிற்கு... கண்கள் மீண்டும் அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது...
அதை உணர்ந்ததும் நானா இது என்று வியந்தாள் பவித்ரா..
“எப்படி தான் இந்த பொண்ணுங்களுக்கு இம்முனா கண்ணுல தண்ணி வந்திடுதோ “ என்று மற்ற பெண்களை கிண்டல் செய்தவள் இன்று தானே அந்த நிலையில் இருப்பதை உணர்ந்து திடுக்கிட்டாள்..
“இல்ல்ல்லை... இது சரியில்லை.. இனிமேல் என் கண்ணுல இருந்து தண்ணீர் வரக்கூடாது.. எதுவானாலும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளனும்... இப்படி கோழை மாதிரி கலங்கி நிற்க கூடாது” என்று மீண்டும் உறுதி கொண்டவள் தன் உணர்ச்சிகளை அவசரமாக துடைத்தாள்.. சரண்யா மறுமுனையில் இன்னும் கத்தி கொண்டிருப்பதை உணர்ந்து மீண்டும் பேச ஆரம்பித்தாள்...
“சாரி டீ.. லைன் சரியா கிடைக்கல. அதான் நீ பேசறது கேட்கலை.. என்று சமாளித்து தொடர்ந்தாள்...
“ஹ்ம்ம்ம்ம் எவ்வளவு நேரம் டீ நான் பாட்டுக்கு கத்திகிட்டிருக்கேன்... சரி அதை விடு.. எப்படி இருக்க?? அங்க உனக்கு எல்லாம் செட் ஆகியிருச்சா.?? “ என்று அக்கறையாக விசாரித்தாள்...
அவளிடம் எதுவும் கூறாமல் பொதுவாக பேசி விட்டு போனை அனைத்தாள்..பின் தன் அன்னையிடமும் தன் புது நம்பரை கொடுத்து சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள்...
சரண்யாவின் செய்தி WhatsApp ல் வந்தது.. அதை படித்த பிறகு எதேச்சையாக ஆதித்யாவின் நம்பரையும் பார்த்தாள்.. அவன் செய்தியை மீண்டும் படித்தவள் “இதுக்கும் ஒன்னும் குறைச்சல் இல்லை “ என்று திட்டி கொண்டே அவனுடைய ஸ்டேட்டஸ் ஐ பார்த்தாள்.
அது ஆப் லைன் ல் இருந்தது..இப்ப ஏன் ஆப் ல இருக்கு? ஒரு வேளை இது அவனுடைய சொந்த எண்ணாக இருக்கும் என்று எண்ணியவள்.. அவன் கோபமாக சென்றிருப்பான்.. பத்திரமாக போய் சேர்ந்தானோ இல்லையோ என்று எண்ணியவள் திடுக்கிட்டாள்...
“நான் ஏன் அவனுக்காக நினைக்கனும்??? எப்படியோ போய் தொலையறான்” என்று திட்டி கொண்டே கீழ இறங்கி சென்றாள்..
அவளை கண்டதும் வள்ளி சினேகமாக புன்னகைத்தாள்.. அவள் மதியம் சாப்பிடுவதற்காக எடுத்து வைத்தாள்.. மதிய உணவை உண்டவள் தோட்டத்திற்கு செல்ல நடந்தாள்..
அப்பொழுது வீட்டிற்கு வெளியில் அந்த வீட்டின் மேனேஜர் சுரேஷ் யாரோ இருவருடன் வாக்குவாதம் செய்வது தெரிந்தது... நேராக அங்கு சென்றாள் பவித்ரா...
“என்ன ஆச்சு அங்கிள்.. ஏன் சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க??? யார் இவங்க “
“ஒன்னும் இல்லை மேடம்.. ஆதித்யா சார் நேற்று காலையில உங்களுக்கு தனியா ஒரு அறையை ஏற்பாடு செய்ய சொல்லி இருந்தார்...அந்த அறைக்குள் சில வசதிகளை செய்ய சொல்லி இருந்தார்.. அதுக்குத்தான் இவங்களை இன்று வர சொல்லி இருந்தேன்..
\சார் திடீரென்று காலையில் இப்போதைக்கு எதுவும் வேண்டம் என்று சொல்லிவிட்டார்.. நான் இவங்களுக்கு சொல்ல மறந்துட்டேன்.. இவங்க கிளம்பி வேலைக்கு வந்திட்டாங்க.. இப்ப வேண்டாம் என்று சொன்னால் அவங்க ஒரு நாள் வேலை போச்சு என்று புலம்புகிறார்கள்... அதான் எடுத்து சொல்லிகிட்டிருக்கேன்..” என்றார்..
அதை கேட்டதும் பவித்ராவிற்கு குழம்பியது..
“நேற்று காலையிலயே தனக்கு தனி அறை ஏற்பாடு செய்ய சொன்னவன் இரவில் தான் தனி அறை கேட்டதும் கொடுக்கமுடியாது என்று ஏன் சொன்னான்?? “ என்று யோசித்தாள்..
“மேடம்... இனிமேல் நாங்க வேற ஒரு இடத்துக்கு வேலைக்கு போக முடியாது.. எங்களுக்கு ஒருநாள் கூலி போய்டும்... அதான் “ என்று தலையை சொரிந்தனர் அந்த இருவரும்...
“ஹ்ம்ம்ம்ம் அந்த அறையில் செய்யவேண்டிய டிசைன் இன்னும் பைனலைஸ் பண்ணலை.. அதனால தான் இன்று வேண்டாம் என்று சொன்னார்.. பைனலைஸ் பண்ணி முடிச்சதுக்கப்புறம் உங்ககிட்ட சொல்றோம்.. எங்களால உங்களுக்கு நஷ்டம் ஆக வேண்டாம்..
அங்கிள், அவங்களுக்கு ஒரு நாள் சம்பளம் கொடுத்து வேற ஏதாவது சின்ன சின்ன வேலை இருந்தால் செய்ய சொல்லுங்க..... நான் அவர்கிட்ட சொல்லிக்கிறேன்” என்றாள்
“சரிங்க மேடம்..” என்று அவர்களை அழைத்து கொண்டு சென்றார் மேனேஜர்..
பின் தோட்டத்திற்குள் சென்றவள் மீண்டும் அந்த மோனேஜர் சொன்னதையே யோசித்தாள்..
“நேற்று காலையிலயே தனக்கு தனி அறை ஏற்பாடு செய்ய சொன்னவன் இரவில் ஏன் தன் முடிவை மாற்றினான்???” என்று திரும்ப திரும்ப யோசித்தவளுக்கு ஏதோ புரிவதை போல இருந்தது..
“நான் நேற்று இரவு தனி அறை வேண்டும் என்று கேட்டதால் உடனே இல்லை என்று விட்டான்.. நான் கேட்காமல் இருந்திருந்தால் கொடுத்திருப்பானோ??
கொடுத்திருப்பானோ இல்லை.. கொடுத்திருப்பான்.. அதுதான் காலையிலயே ஏற்பாடு செய்ய சொல்லி இருந்தானே...
அவள் திருமணநாள் அன்றும் அடுத்த நாளும் நடந்தவைகளையும் நினைத்து பார்த்தாள்..
அவள் எதெல்லாம் பிடிக்கவில்லை என்கிறாளோ அதை வலுக்கட்டாயமாக அவளை செய்ய வைத்திருந்தான்.. திருமணத்தன்று சாப்பிடும்பொழுது ஊட்டி விடுகிறமாதிரி புகைப்படம் வேண்டாம் என்ற பொழுதும், அடுத்த நாள் அவளுக்கு பால் பிடிக்காது என்று தெரிந்தும் அந்த பாலை வலுக்கட்டாயமாக அவளை குடிக்க வைத்ததில் இருந்தும் தெரிந்தது...
“சோ .. எனக்கு எது பிடிக்கிறதோ அது பிடிக்க கூடாது....அதாவது நான் வேணும் என்றால் அவனுக்கு அது வேண்டாம்.. வேண்டாம் என்றால் அவனுக்கு அது வேணும்... “
“சே!! சரியான சைக்கோ போல... என்னை கஷ்டபடுத்தி பார்க்கிறதுல அவனுக்கு என்ன சந்தோஷம்?? ஓ.. இதுனால பயந்து அவன் காலடியில விழுந்துடுவேனாக்கும்...இந்த பவித்ரா பத்தி அவனுக்கு இன்னும் சரியா தெரியலை.... “ என்று நக்கலாக மனதுக்குள் சிரித்துகொண்டாள்...
“டேய்ய்... இப்படி ஒரு மொக்க லாஜிக் ஐ வச்சுகிட்டு தான் என்னை படுத்திகிட்டு இருக்கியா... இரு இரு உன் லாஜிக் ஐ வச்சே உன்னை மடக்கறேன்” என்று சூளூறைத்தவள் தோட்டத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்...
மீண்டும் காலையில் நடந்தது நினைவு வந்தது...எத்தனை நாள் இவனை இப்படி சமாளிப்பது?? பேசாமல் தாலியை கழட்டி எறிந்துவிட்டு அவனை விட்டு தூர போய்டலாமா என்று யோசித்தாள்.. ஆனால் அவள் அம்மா பார்வதியின் முகம் ஞாபகம் வந்தது.. தன் மகள் நல்ல படியாக குடும்பம் நடத்துகிறாள் என்று நிம்மதியாக இருக்கும் அவரை வறுத்த விரும்ப வில்லை... அதோடு அப்படி சென்றாலும் இவன் இன்னும் வேற ஏதாவது தொல்லை கொடுப்பான்....
மேலும் ,கட்டியவன் நல்லவனோ, கெட்டவனோ அவனோடதான் கடைசி வரைக்கும் காலத்தை ஓட்டனும் என்ற அவளின் கொள்கை நினைவு வந்தது..அவன் தங்களுக்கு நடந்தது உண்மையான திருமணம் என்று ஒத்துகொள்ளாவிட்டாலும் அவளை பொறுத்தவரை அது அவளின் திருமணமே...கெட்டவனா இருந்தாலும் அவன் தான் தன் கணவன் என்று முடிவு செய்திருந்தாள்..
அதுக்காக தன் சுயமரியாதையை விட்டுகொடுத்து அவன் காலடியில் எல்லாம் விழ முடியாது.... அவனே மனதால் என்னை மனைவியாக ஏற்கும் வரை அவன் யாரோ தான்...என்னிடம் அவன் நெறுங்க முடியாது” என்று உறுதியானாள்..
அவனை விட்டு விலகி, வெளியில் சென்று போராடுவதை விட அவன்கிட்ட இருந்தே அவனை ஜெயிக்கனும்... பார்க்கலாம்.. அப்படி என்னதான் செய்திடுவான்??..
முதலில் என் ஆயுதத்தை எடுத்து கூடவே வச்சுக்கனும்.. அப்படி எதுவும் வாலாட்டினா நம்ம கை வரிசைய காட்ட வேண்டியதுதான்... இந்த பவித்ரா பத்தி அவனுக்கு இன்னும் சரியா தெரியலை...ஏதாவது அத்து மீறினான் நான் யாருனு அவனுக்கு காட்ட வேண்டியதுதான்” என்று உறுதி செய்தாள்..
பின் சிறிது நேரம் நடந்தவள் அடுத்து என்ன செய்வது?? என்று யோசிக்க ஆரம்பித்தாள்.. முதலில் என் வேலையை தொடரவேண்டும்.. அவளின் விடுமுறை இன்னும் ஒரு வாரம் இருந்தது.. அதை கேன்சல் செய்து விட்டு வரும் வாரத்திலயே சேரனும் என்று எண்ணி கொண்டாள்...
ஓரளவுக்கு அடுத்து என்ன செய்வது என்று திட்டமிட்டதால், தன் கணவனின் செயலால் காலையில் இருந்து அவள் மனதை அழுத்தி வந்த பாரம் இறங்கி மீண்டும் பழைய நிலைக்கு வந்தாள்.... உற்சாகமாக அந்த தோட்டத்தை சுற்றி வந்தாள் வழக்கம் போல..
இரவு வெகுநேரம் ஆகியும் ஆதி திரும்பி வரவில்லை.. முதலில் எப்படியோ போய் தொலையட்டும் என்று இருந்தவளுக்கு நேரம் ஆக ஆக கொஞ்சம் பயமாக இருந்தது.. காலையில் கோபமாக கிளம்பி சென்றிருப்பான்.. என்ன ஆச்சோ?? என்று உறுத்த ஆரம்பித்தது...
சிறிது நேரம் அவன் காரையே எதிர்பார்த்து காத்திருந்தாள்..அவன் திரும்பாததால் பின் அலைபேசியை எடுத்து அவன் பதிவு பண்ணி வைத்திருந்த அவனின் எண்ணிற்கு அழைத்தாள்.. அது அனைக்க பட்டிருந்தது...
வேற எந்த எண்ணும் அவளிடம் இல்லை... என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை... யோசித்து கொண்டே ஷோபாவில் படுத்தவள் யாரோ அறையை நோக்கி வருவது தெரிந்தது.. ஆதி தான் அது என்று தெரிந்ததும்..
“ஐயோ!!! காலைல நடந்துகிட்டதுக்கு இப்ப என்ன செய்ய போறானோ!! “ என்று கொஞ்சம் பயந்தவள் போர்வையை இழுத்து மூடிவிட்டு கண்களை இறுக மூடி கொண்டு தூங்குவதை போல நடித்தாள்...கையில் தன் ஆயுதத்தை தயாராக வைத்திருந்தாள்...
காதை மட்டும் திறந்து வைத்து கொண்டு அவன் என்ன செய்கிறான் என்று உற்று கவனிக்க ஆரம்பித்தாள்...
உள்ளே வந்தவன் நேராக அவளிடம் சென்றான்.. அவள் உறங்குவதை கண்டவன் ஒரு சில விநாடிகள் நின்று அவளையே உற்று பார்த்துகொண்டிருந்தான்... பின் அவளின் காலின் அருகில் குனிந்து அவளின் மெட்டிக்கு மெல்ல முத்தமிட்டான்....
“ராட்சசி... “ என்று ஏதோ முனகியவன் தன் கட்டிலுக்கு சென்று பொத்தென்று விழுந்தான்..
பவித்ராவிற்கு அவனின் முத்தத்தால் உடல் சிலிர்த்தது.... இருந்தாலும் நெஞ்சுக்குள் மெல்லிய பயம் அடுத்து என்ன செய்வானோ?? “ என்று. சிறிது நேரம் அவன் அசைவுகளை உற்று கவனித்தவள் எந்த சத்தமும் வராமல் போகவும் மெல்ல போர்வையை விலக்கி அவன் கட்டிலை பார்த்தாள்...
ஆதித்யா தன் ட்ரெஸ்ஷை கூட கழட்டாமல் காலில் ஷூவுடன் அப்படியே கட்டிலில் விழுந்து தூங்கி இருந்தான்....
அவன் தூங்கிவிட்டான் என்ற நிம்மதியுடன் எழுந்தவள் அவன் கட்டிலின் அருகில் மெல்ல நட்ந்து சென்று அவனை உற்று பார்த்தாள்.. அவன் நன்றாக உறங்குவது தெரிந்ததும் அவன் காலில் இருந்த ஷூவை கழற்றினாள்.. அப்பொழுதுதான் கவனித்தாள் அவனிடமிருந்து வந்த அந்த மதுவின் வாடையை..
“கருமம்.. கருமம்.. இந்த பழக்கம் வேறயா...ஏதாவது ஒரு நல்ல பழக்கம் இருக்கா இவன்கிட்ட... “ என்று திட்டிகொண்டே போர்வையை எடுத்து அவனுக்கு போர்த்தி விட்டு தானும் ஷோபாவில் படுத்து கண்களை மூடினாள்... வழக்கம் போல அவளுக்கு தூக்கம் வர மறுத்தது... மீண்டும் ஏதேதோ நினைவுகள்... நீண்ட நேரம் கழித்தே உறங்கினாள்...
அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் கொஞ்சம் தாமதமாக கண் விழித்தான் ஆதித்யா... எழுந்தவன் தன் மேல் இருந்த போர்வையும், காலில் இருந்த ஷூ கழட்டி இருப்பதும் கண்டு உற்சாகமாக விசில் அடித்து கொண்டே குளியலறைக்கு சென்றான்..
காலை கடன்களை முடித்து வெளியில் வந்தவன் அங்கு ஏற்கனவே வைத்திருந்த பிளாஸ்கில் இருந்த காபியை ஒரு கப்பில் ஊற்றி கொண்டு சன்னல் அருகே சென்றான்...
அங்கிருந்து தோட்டம் நன்றாக தெரியும்.. எப்பவும் அவனுக்கு அதிகாலையில் பனி சொட்டும் அந்த தோட்டத்தை பார்ப்பது பிடிக்கும்... பொதுவாக விடுமுறை நாட்களில் இது மாதிரி நின்று பச்சை பசேல் என்று இருக்கும் அந்த தோட்டத்தை ரசிப்பான்..
இன்றும் அதே மாதிரி நின்று கொண்டு சூடான காபியை ருசித்துகொண்டே அந்த பசுமையை ரசித்து கொண்டிருந்தான்.. அப்பொழுது அங்கு பவித்ரா தோட்டத்தில் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருப்பதை கண்டான்... கூடவே அந்த வீராவும் அவளுடன் உதவி கொண்டிருந்தார்... அவரிடம் ஏதோ சிரித்து பேசி கொண்டிருந்தாள்...
அதிகாலையில், அந்த பனிவேளையில் தோட்டத்தின் நடுவே நின்று கன்னம் குழிய சிரித்து கொண்டிருக்கும் அவளின் சிரிப்பையே தூரத்தில் இருந்து ரசித்தவனுக்கு நேற்று மாலை நடந்த நிகழ்வுகள் கண் முன்னே வந்தன..
“குட்டச்சி.... மை க்யூட் அன்ட் ஸ்வீட் ராட்சசி...” என்று மெல்ல சிரித்து கொண்டான்... என்றும் இல்லாத உற்சாகமும் புதுவித சுகமும் நிரம்பி வழிந்தது அவன் மனமெல்லாம்......
Comments
Post a Comment