காந்தமடி நான் உனக்கு !!-1

 


அத்தியாயம்-1

பெங்களூர்!!!

மனதை மயக்கும் அந்தி மாலை நேரம் அது!

தன்னுடைய அன்றைய கடமை முடிந்ததென திருப்தியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தான் ஆதவன்.

மாலை நேரம் மணி ஆறை  தொட்டிருக்க  அதுவரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த கார்மென்ட் தொழிற்சாலை வேலை முடிந்ததற்கான அறிகுறியாய் சங்கை ஊதி அலறிக் கொண்டிருந்தது.  

அதுவரை கடுப்புடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மனதில் அந்த மணியோசை தேவகானமாய் ஒலித்தது.

அப்பாடா இன்றைய வேலை முடிந்தது என்று எல்லோர் முகத்திலும் ஒரு பெரும் நிம்மதி பரவியது. நிற்கக்கூட நேரமில்லாமல் வேலை செய்ததன்  அறிகுறியாய் அனைவர் முகத்திலும் பெரும் சோர்வு பரவி கிடந்தது.

சங்கு ஊதியதும் அனைவரும் முகம் பளிச்சிட தங்கள் வேலையை அப்படியே நிறுத்தி விட்டு,  வேகமாய் அருகிலிருந்த தங்களுடைய கைப்பையை எடுத்துக் கொண்டு தொழிற்சாலையின் வெளியேறும் பகுதியை நோக்கி விரைந்தனர்.

பெங்களூரில் இன்டஸ்ட்ரியல் ஏரியா என்று அழைக்கப்படும் முக்கியமான பகுதியில் இருந்தது அந்த கர்மெண்ட் ஃபேக்டரி. நடுத்தர வர்க்கத்தினருக்கு சற்றாய் கீழ இருக்கும் பல குடும்பங்களுக்கு அந்த தொழிற்சாலை தான் வரப்பிரசாதம்.

பெரிய பெரிய ஆடைகள் என்றில்லாமல் சாதாரணமாக வீடுகளில் பயன்படுத்தும் திரைச்சீலைகள், தலையணை உறைகள் போன்ற எளிமையான ஆடைகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது.

அதனாலயே பெரிதாக தையல் பற்றி தெரியாத பொழுதும் அடிப்படை நாலெட்ஜ் மட்டுமே போதுமானதாய் இருந்தது இங்கு பணிபுரிய. அதனாலயே நிறைய பேர் குறிப்பாக பெண்களே இங்கு அதிகம் பணி புரிந்தனர்.

இன்றைய விலை வாசியில் ஒருவர் சம்பாத்தியம் பத்தாது என்ற நிலையில் வீட்டு பெண்களும் வேலைக்கு போயாக வேண்டிய கட்டாயம்.

அதிலும் பெரிதாக படிக்காமல் வெளி மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக இங்கு வந்திருந்த குடும்பங்களில் இருந்த பெண்களுக்கு இன்னுமே உறுதுணையாக இருந்தது அந்த தொழிற்சாலை...

இங்கு வேலை செய்வதற்கு பெரிய படிப்பு எதுவும் தேவையில்லை. தையல் கலை தெரிந்திருந்தாலே போதும். எதுவும் படிக்கவில்லை என்று வருந்தி வீட்டிலேயே அமர்ந்து கொண்டு ஏதோ ஒரு வீணாப்போன சீரியலை  பார்ப்பதற்கு தாங்களும் பொருளீட்ட வேண்டும் என்று அருகில் இருக்கும் அந்த தொழிற்சாலைக்கு நிறையவே வந்திருந்தனர் பெண்கள்.

காலை ஒன்பதிலிருந்து மாலை ஆறுமணி வரை பணி நேரம். இங்கு இருக்கும் நல்ல விசயங்களில் ஒன்று ஆறு மணி சங்கு ஊதியதற்கு பிறகு ஒரு நிமிடம் கூட கூடுதலாக வேலை செய்ய தேவையில்லை.

என்ன வேலையாக இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு சென்று விடலாம். அதே போல இன்றும் அந்த தொழிற்சாலையில் இருந்து எல்லாரும் கும்பல் கும்பலாய் சிரித்த முகத்துடன் வெளியேற அந்த கும்பலில் ஒருத்தியாய் வெளிவந்தாள் சத்யா. நம் கதையின் நாயகி.

மற்ற எல்லார் முகமும் வாடிப்போன மலராய் சோர்ந்து போய் இருக்க அவள் முகத்தில் மட்டும் அன்றலர்ந்த மலர் போல் எப்பவும் பிரஷ் ஆக இருந்தாள் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் பளிச்சென்று இருந்தது அவள் முகம்.

பெண்களின் சராசரி உயரத்திற்கு சற்று குறைவான் உயரம் தான். உடலுமே சற்று பூசினார் போன்ற தேகம். நிறத்திலும் ஆளை சுண்டி இழுக்கும் வெள்ளை நிறமல்ல. மாநிறத்திற்கும் சற்று அதிகமான நிறம்.

கருநாகம் போன்ற நீண்ட ஜடையும் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கும் அவளின் கண்கள் மற்றும் அவளின் உதட்டிற்கு மேலே திரண்டிருக்கும் மெலகு சைஸ் மச்சம் தான் அவளின் தனிச்சிறப்பாகும்.

மொத்தத்தில் முதலில் பார்த்தவுடன் மற்றவர்களை சுண்டி இழுக்கும் நிறமோ  முகமும் இல்லை என்றாலும் ஒரு சில முறை பார்த்த பிறகு மனதில் பதிந்து போகும் முகம் தான் சத்யா உடையது.

அதுவும் அவளுடன் கொஞ்ச நேரம் பேசினாலே போதும். அவளின் புன்னகையை அப்படியே மற்றவருக்கு டிரான்ஸ்பர் பண்ணி விடுவாள்.

எவ்வளவு பெரிய கவலையுடன் இருந்தாலும் அவளிடம் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தாலே போதும். கவலையெல்லாம் மறந்து புது தெளிவு கிடைத்துவிடும்.

அன்று வேலை முடிந்ததும் மற்றவர்களெல்லாம் அசதியுடன் தங்கள் வீட்டை நோக்கி செல்ல சத்யாவும் துள்ளலுடன் தன் கையிலிருந்த ஹேண்ட் பேக்கை சுழற்றியவாறு அருகில் இருந்த தன் தோழி சுகன்யாவுடன் ஏதோ வளவளத்துக் கொண்டே வெளியில் வந்தாள்.

அதே நேரம் அவளை கடந்து செல்ல முயன்றாள் ஒரு நடுத்தர வயது பெண்மணி. அதைக் கண்ட சத்தியா எட்டி அவள் கையை பிடித்து நிறுத்தியவள்  

“என்ன சரோஜா அக்கா!  கண்டுக்காம கூட போறீங்க!  எதுக்கு இவ்வளவு வேகம்?  ஏதோ ஏரோபிளேன் ஐ பிடிக்க போற மாதிரி...”  என்று கன்னம் குழிய சிரித்தாள் சத்யா.

“ம்கூம்...நம்ம பொழப்புக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியைக் காணோமாம். இதுல நான் போய் ஏரோபிளேனை பிடிக்கிறேனாக்கும்.  வீட்டுக்கு மேலே பறக்கிறத பார்த்துக்க வேண்டியது தான்... “  என்று சலித்துக் கொண்டாள் சரோஜா.  

“அடடா என்னக்கா.  அதுக்குள்ள இப்படி சலிச்சிக்கிறீங்க. ஒருநாள் அதுலயும் போய் பார்ப்போம் என்று நினைச்சுக்கோங்க. கண்டிப்பா நடக்கும்..”  என்றாள் மீண்டும் கன்னம் குழிய சிரித்தவாறு.

“அட நீ வேற சத்யா... நானே பையன காய்ச்சலோடு விட்டுட்டு வந்துட்டேன். என்ன பண்ணிக்கிட்டு இருக்கானோ என்று பதட்டத்தில் வேகமாக போய்கிட்டு இருக்கேன். சரி...நான் அப்புறமா பேசுகிறேன்...” என்று நழுவ பார்த்தாள் சரோஜா.

சத்யா ஒரு நொடி அந்த சரோஜா வின் முகத்தை ஆராய்ந்தவள்  

“என்னக்கா... உங்க முகத்தில் பையனுக்குக் காய்ச்சல் என்பதைவிட வேறு ஏதும் சோகம் இருக்கே...என்னாச்சு?  காசு ஏதும் வேணுமா? என்றாள் சரோஜா முகத்தை ஆழ்ந்து பார்த்தவாறு.

அதைக்கேட்ட சரோஜாவின் முகம் பளிச்சென்று மின்னியது.

இன்று காலையிலிருந்தே கைமாத்தாக யார் யாரிடமோ பணம் கேட்டுப் பார்த்தாள் சரோஜா. மாச கடைசி என்பதால் எல்லோருமே இல்லை என்று கையை விரித்து விட்டார்கள்.

இப்பொழுது வீட்டிற்கு சென்று பையனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதுவும் சாதாரணமாக கன்சல்ட்டிங் என்று சென்றாலே சில நூறுகளை கொடுக்க வேண்டியதாகிறது.

இதுக்கும் அந்த டாக்டர் வெறும் முப்பது ரூபாய்க்கோ அல்லது ஐம்பது ரூபாய்க்கு ஒரு சிரப் ஐ எழுதி கொடுப்பார். தொடர்ந்து மூன்று நாளைக்கு கொடுங்க. மெதுவா தான் குறையும் என்று ஒரு இன்ஜெக்சன் கூட போடாமல் சுளையா சில நூறுகளை வாங்கி கொள்வார்..

ஆனால் என்ன செய்ய? அடுத்த முறை காய்ச்சல் வரும்பொழுது முன்னெச்சரிக்கையாக அதே சிரப் ஐ வாங்கி கொடுத்தால்.. ம்கூம் அந்த ப்ஆழாய்ப்போன காய்ச்சல் விடாது.. இரண்டு நாட்கள் பொறுத்து பார்த்து மீண்டும் அந்த டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போனால் அவரோ அதே சிரப் ஐத்தான் திரும்பவும் எழுதி கொடுப்பார்...

ஆனால் அதிசயமாய் வீட்டிற்கு வந்து அதை கொடுத்தால் இப்பொழுது சரியாகிவிடும்.. இது என்ன அதிசயம் என்று சரோஜா பலமுறை ய்ஓசித்திருக்கிறாள்...

அந்த டாக்டர் கையில் என்னவோ இருக்கு... அவர்கிட்ட போய் மொய் வைத்துவிட்டு வந்தால்தான் காய்ச்சல் சரியாகும் என்ற அதிசய உண்மையை கண்டுபிடித்தபிறகு இப்பொழுதெல்லாம் தன் மகனுக்கு ம்உடியவில்லை என்றால் யோசிக்காமல் அந்த டாக்டரை போய் பார்த்து மொய்யை மறக்காமல் வைத்துவிட்டு வந்து விடுவது வழக்கம்.

அதன்படி இன்றொடு இரண்டு நாட்கள் காய்ச்சல் குறையவே இல்லை.. அதனால்தான் இன்று மாலை அழைத்து செல்லலாம் என்று இருந்தாள் சரோஜா.. அதுக்கு கொஞ்சம் காசு கையை கடிக்க, எல்லாரிடமும் கேட்டாயிற்று..

சத்யா வேற பிரிவு என்பதால் அவளின் நியாபகம் வரவில்லை சரோஜாவிற்கு...பணம் கிடைக்காததால் என்ன செய்வது என்று பதட்டத்துடன் சென்று கொண்டிருந்தாள் சரோஜா.

அதை சரியாக கணித்த சத்யா வின் பெரிய மனசை கண்டு ஒரு நொடி ஆச்சரியப்பட்டாள் சரோஜா.. அடுத்த நொடி தன் நிலையை எண்ணி வருந்தியவள்  

“ஆமாம்... சத்யா...  கொஞ்சம் பணம் குறையுது...யார் யார் கிட்டயோ கேட்டுப் பார்த்துட்டேன். எதுவும் தேறல...”  என்றாள் வேதனையுடன்.

அதைக்கேட்ட சத்யா உடனே தன் கைப்பையை திறந்து அதில் உள்ளே இருந்த ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து நீட்டினாள்.

அதை கண்டதும் சரோஜாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சத்யாவும் கஷ்டபடுவபர்களுக்கு வாரி வழண்க்கும் வள்ளல் குடும்பத்தை சார்ந்தவள் அல்ல...

அவள் வீட்டிலுமே இழுத்துக்கோ புடிச்சுக்கோ கதைதான்... அப்படி இருக்க தானாக முன் வந்து அதுவும் மாச கடைசியில் பணம் தருகிறாள் என்றதும் ரொம்பவுமே வருத்தமாகவும் பெருமையாகவும் இருந்தது.

தனக்கு பணம் கிடைத்து விட்டதே என்று உடனே வாங்கி கொள்ளாமல் முதலில் அதை மறுத்தாள் சரோஜா.

“என்ன இது சத்யா?  நீயே ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க என்று தெரியும்.  நீ எனக்கு...  இந்த காசு...  எப்படி? என்று இழுத்தாள் சரோஜா.

“இருக்கட்டும் அக்கா... நான் எப்பொழுதுமே இந்த மாதிரி மெடிக்கல் எமர்ஜென்சிக்காக எங்க வீட்டிற்காக கொஞ்சம் பணம் எடுத்து வச்சிருப்பேன்.

இந்த மாசம் அந்த ஆண்டவன் புண்ணியத்தில் எந்த செலவும் வரவில்லை. அதனால் அதைத்தான் உங்களுக்கு கொடுக்கிறேன். உங்க பையனை கூட்டிட்டு போய் பாருங்க. சம்பளம் வாங்கியதும் திருப்பிக் கொடுத்தாள்  போதும்... “  என்று சிரித்தாள் சத்யா.

அதைக் கண்டதும் சரோஜாவின் கண்கள் பணித்தன்.  

“ரொம்பவும் நன்றி சத்யா...இந்த மாதிரி கேட்காமலேயே அடுத்தவர் முகம் பார்த்து உதவி செய்யும் குணம் எத்தனை பேருக்கு அமைந்து விடும். உன் நல்ல மனதுக்கு உனக்கு நல்ல வாழ்க்கை அமையும்.

உன்னை கட்டிக்க போகிறவன்  ரொம்ப கொடுத்து வைத்தவன்...”  என்று வாங்கின காசுக்கு நாலு வார்த்தை சேர்த்து சந்தியாவை புகழ்ந்து தள்ளி விட்டு வேகமாக சென்றாள் சரோஜா.

அவள் தன்னை கொஞ்சம் ஓவராகத்தான் புகழ்ந்தாள் என்று தெரிந்தாலும் அவள் கடைசியாக சொன்ன உன்னை கட்டிக்க போகிறவன்  கொடுத்து வைத்தவன்...”  என்பதிலேயே அவள் மனம் சுழன்று நின்றது.

அடுத்த நொடி கண்முன்னே  வந்து நின்றான், அவன்,  அமுதன்.  அவளைப் பார்த்து மந்தகாசமாய் புன்னகைத்தான்.  

“டேய் அமுதா... நீ உண்மையிலேயே கொடுத்து வைத்தவன் தானா? என்று தனக்குள்ளே கேட்டுக்கொள்ள அவனும் எப்பவும் போல் அமைதியாய் வழக்கமான தன் டிரேட் மார்க் புன்னகையுடன் பளீர் என்று சிரித்தான்.

மனக்கண்ணில் தோன்றிய அவன் புன்னகையே காந்தமாய் அவளை கட்டி இழுக்க தன் மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்...  

காந்தமடா நீ எனக்கு...”   என்று

ஆனால் அடுத்த நொடி மகிழ்ச்சியில் பூரித்து இருந்த அவள் முகம் காற்று போன பலூனாய் வாடிப்போனது.

அவனை, அமுதனை தன்னவனை பார்த்து இன்றோடு ஏழு நாட்கள் ஆகிறது என்பது மண்டையில் உறைக்க அவள் முகத்தில் வேதனை ஓடிவந்து ஒட்டிக் கொண்டது.

“நீ எங்கே இருக்க அமுதா?  ஐ மிஸ் யூ...”  என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவள் தன் வேதனையை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு தன் தோழி சுகந்தி உடன் முன்னே நடந்தாள் சத்யா!!!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!