காந்தமடி நான் உனக்கு !!-2
அத்தியாயம்-2
சத்யா!!!
அப்பர் மிடில் கிளாஸ் ம் இல்லாமல்
லோயர் மிடில் கிளாஸ் ம் இல்லாமல் இடையில் சிக்கி கொண்டு மிதிபடும் மத்தியதர
குடும்பத்தை சேர்ந்தவள்.
அவள் தந்தை ராஜன் ஒரு கார்மெண்ட்
ஃபேக்டரி ல் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிந்தார்...அவள் அன்னை வளர்மதி. முப்பெரும்
தேவியர்களை போல மூன்று முத்தான இளவரசிகளை பெற்று எடுத்தவர்.
வாய் பேசா மடந்தை... தன் கணவன், மூன்று மகள்களும், சமையல்கட்டும் மீதி நேரத்தில் தன்
ஆருயிர் தோழியாய் அவர் உடன் எப்பொழுதும் ஒட்டி கொண்டிருக்கும் தையல் மெசின் என ஒரு
சலிப்பான வாழ்க்கையையும் சலிப்பு தட்டாமல் ரசித்து வாழ்பவர்.
சத்யாவின் தந்தை தமிழகத்தை பூர்வீகமாக
கொண்டவர்! அவளுடைய மூதாதையர் தமிழ்நாட்டில் வேலூர் பக்கத்தில் ஒரு கிராமத்தை
சேர்ந்தவர்கள்.
அவளுடைய தாத்தா காலத்தில்
பிழைப்பிற்காக பெங்களூர் வந்தவர்கள் இங்கேயே தங்கிவிட அவள் தந்தை பிறந்து
வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான்.
ஆனால் அவள் தந்தைக்கு பெண் தேடும்
பொழுது அவர்கள் உறவினர்களின் தூரத்து சொந்தமான, வேலூரில் பிறந்து வளர்ந்திருந்த வளர்மதியை மணம் முடித்தனர்
வளர்மதியும் ஆரம்பத்தில் புது இடம், புது மொழி என தயங்கினாலும் விரைவிலேயே எதார்த்தத்தை புரிந்து கொண்டு
அந்த ஊர் பழக்கத்தையும் ஏற்றுக் கொண்டு தன் இல்லற வாழ்க்கையில் பொருந்தி போக பழகி கொண்டார்.
பிறந்து வளர்ந்தது வேறு வேறு இடம், வேறு வேறு பழக்கவழக்கங்கள்
என்றாலும், வளர்மதி மற்றும் ராஜன் இருவருமே
குறுகிய நாட்களிலயே ஆதர்ஷ தம்பதிகளாக மாறி போயினர்.
அவர்களின் அழகான இல்லத்திற்கு சான்றாக மூன்று
பெண் குழந்தைகள். சத்யா அதில் மூத்தவள். அவளுக்கு அடுத்த மூன்று வயது இடைவெளியில்
பிறந்தவள் வித்யா.
இரண்டு பிள்ளைகள் போதும் என்று ராஜன்
நிறுத்திக் கொள்ள வளர்மதிக்கோ ஆண் மகன் வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் இருக்க
எப்படியோ தன் கணவனை சம்மதிக்க வைத்து மூன்றாவது குழந்தையையும் பெற்றுக் கொண்டார்.
ஆனால் துரதிஷ்டவசமாக அதுவும் பெண் குழந்தை
என ஆகிவிட ரொம்பவும் இடிந்து போனார் வளர்மதி. ராஜன்தான் வளர்மதியை ஏதேதோ சொல்லி
சமாதானம் செய்தார்.
தனக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று
மனதை தேற்றிக் கொண்டார் வளர்மதி. அவளுக்கு
நித்யா என்று பெயரிட்டு ஆண்மகனைப் போல வளர்த்து வந்தார்.
ராஜனுக்கு தன் மூன்று மகள்கள் தான் உலகம்.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அந்த குடும்பத்தில் சந்தோசத்திற்கும்
மகிழ்ச்சிக்கும் குறை இல்லாமல் இருந்தது.
ஆனால் யார் கண் பட்டதோ அந்த
குடும்பத்திற்கும் பெரும் சோதனை வந்து சேர்ந்தது.
சத்யா பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தவள் கர்நாடகா ஸ்டேட்
போர்டில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் பத்தாவது இடத்தை
பிடித்திருந்தாள்.
அதைக் கண்டு ரொம்பவும் மகிழ்ந்து போனார்
ராஜன். தன் மகளை டாக்டர்க்கு படிக்க வைக்க
வேண்டும் என்று பெருமையுடன் உச்சி முகர அந்த விதிக்கோ அந்த குடும்பத்தின்
மகிழ்ச்சியை காண பொறுக்கவில்லை.
வேலைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த
ராஜன் மீது கட்டுபாடின்றி வேகமாக வந்த லாரி ஒன்று வேகமாக மோதிவிட, அந்த இடத்திலேயே தன்
குடும்பத்தை அனாதையாக்கி விட்டு மறைந்து விட்டார்.
எதிர்பாராத அந்த விபத்தினால் சத்யா குடும்பமே
தள்ளாட ஆரம்பித்தது. மூன்று பெண் பிள்ளைகளை வைத்துகொண்டு எப்படி சமாளிப்பது என வளர்மதி
ரொம்பவும் ஒடிந்து போனார்.
ஆனால் அந்த நிலையில் சத்யா தான் கொஞ்சமாய் தன்னை தேற்றிக் கொண்டு நிமிர்ந்து
நின்றாள்.
அந்தக் குடும்பத்தின் தலைமகளாய், அவள் தந்தையின் இடத்தில் இருந்து பொறுப் பேற்றுக் கொண்டாள்.
விபத்தில் இறந்ததால் ராஜன் வேலை செய்த
அலுவலகத்திலிருந்தும் மற்றும் தனியாக போட்டு வைத்திருந்த காப்பீட்டு திட்டத்தினால்
ஓரளவுக்கு பணம் வந்திருக்க அதை வைத்து அவள் வீட்டில் மேல ஒற்றை படுக்கை அறை கொண்ட
வீடுகளாக கட்டி வாடகைக்கு விட்டாள்.
அவர்கள் கீழ் தளத்தில் இருந்த வீடு பெரிய
வீடு என்றதால் அதையும் வாடகைக்கு விட்டுவிட்டு ஒற்றை படுக்கை அறை கொண்ட வீட்டிற்கு மாறினர்.
அடுத்ததாய் அவள் படிப்பை
நிறுத்திவிட்டு அவள் தந்தை பணிபுரிந்த கார்மென்ட்ஸ் லயே தையல் பிரிவில் சேர்ந்து
கொண்டாள்.
வளர்மதியும் வீட்டிலயே துணிகளை தைத்து
கொடுக்க, குடும்ப வண்டி கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புக்கு
திரும்பி தடையின்றி நகர ஆரம்பித்தது.
சத்யா படிப்பை விட்டாள். அவள் தங்கைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பி
படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள்.
இப்பொழுது வித்யா இன்ஜினியரிங்
படித்துக் கொண்டிருக்க நித்யா பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கிறாள்.
சத்யாவுக்கு உள்ளுக்குள்ளே தானும் படிக்க
முடியவில்லையே என்ற கவலை இருந்தாலும் அதை தன் தங்கைகளின் வாயிலாக தீர்த்துக்
கொள்வாள்.
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை
வெளியில் காட்டாமல் எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் வளைய வருவாள்.
தன் தந்தைக்குப் பிறகு இருண்டு போனதாய்
எண்ணியிருந்த அவள் வாழ்வில் விடி வெள்ளியாய் வந்தான் அவன்... அமுதன்.
பெயரை போலவே குணத்திலும் அதேபோல, அமுதைப் போல இனியவன். அவன்
தன் வாழ்வில் வந்த பிறகு கருப்பு வெள்ளையாய் இருந்த அவள் வாழ்க்கை வண்ணமயமாய் ஆனதைப்
போல மகிழ்ந்து போனாள் சத்யா.
ஆனால் அந்த மகிழ்ச்சியும் நிலைத்து
நிற்கவில்லை. திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து விட்டான் அவன்.
எங்கே சென்றான் என்றுதான் தெரியவில்லை.
தனக்கு தெரிந்த இடங்களிலெல்லாம் விசாரித்து பார்த்து விட்டாள். ஆனால் எந்த ஒரு
நல்ல செய்தியும் கிடைக்கவில்லை.
எங்கே போயிருப்பான் என்று யோசித்தவாறே
தன் தோழி சுகந்தியுடன் நடந்தவள் தன் வீட்டை அடைந்ததும் சுகந்தி இடம் விடைபெற்று
தன் வீட்டின் முன்னாலிருந்த காம்பவுண்டை திறந்தாள்.
அதே நேரம் பக்கத்து வீட்டிலிருந்து ஒரு
பொடியன் வேகமாக அவளை நோக்கி ஓடிவந்தான்...
“சத்யா அக்கா.. நீ அமுதன் அண்ணாவை
காணவில்லை என்று தேடிக் கொண்டு இருந்தாய் அல்லவா. இங்கே பார் பேப்பர்ல அவருடைய
போட்டோ வந்திருக்கு... “ என்றவாறு அவன்
கையிலிருந்த தினசரியை சத்யாவிடம் நீட்டினான்.
அதைக் கேட்டதும் திடுக்கிட்டு பயந்து
நடுங்கியவள் அவசரமாய் அந்த பேப்பரை வாங்கி அவன் சுட்டி காட்டிய இடத்தில் பார்வையை
ஓட விட்டாள்.
அடுத்த நொடி பலமாய் அதிர்ந்து போனாள். அங்கே அந்த புகைப்படத்தில் , கோட் சூட் அணிந்து கண்களில் ஸ்டைலாக கூலர் அணிந்து அழகாய் அம்சமாய் காந்தமாய்
சிரித்துக் கொண்டிருந்தான்... அமுதன்...அவளவன்...!
Comments
Post a Comment