காந்தமடி நான் உனக்கு!!-4

 


அத்தியாயம்-4

  

முதன் எங்கிருந்தாலும் நன்றாக பத்திரமாக இருக்க வேண்டும். அவனுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடாது. அவன் சீக்கிரம் தன்னைத் தேடி வந்து விட வேண்டும் என்று உள்ளுக்குள் மருகியவாறு வீட்டிற்குள் நுழைந்தாள் சத்யா.

அவளைக் கண்டதும் அதுவரை வீட்டு வேலையை முடித்து அப்பொழுதுதான் ஆயாசமாக அமர்ந்து டிவி சீரியலை பார்த்துக் கொண்டிருந்த அவள் அன்னை வளர்மதி சத்யாவை பார்த்ததும் முகத்தில் புன்னகை மலர

“வா சத்யா மா...ஏன் முகம் ஒரு வாட்டமா இருக்கு? என்று கேட்டவாறே இருக்கையிலிருந்து எழுந்து சமையல் அறை நோக்கி சென்றாள்.

“ஒன்னும் இல்லமா... எப்பவும் போல தான் இருக்கிறேன்...இன்னைக்கு வேலை கொஞ்சம் ஜாஸ்தி..அதுதான் டயர்டா இருக்கு...”  என்று வாய் சொன்னாலும் அவள் முகத்தில் இருந்த சோர்வும் கண்களில் இருந்த சோகமும் வளர்மதியின் கண்ணுக்கு தெரியாமல் இல்லை.

ஆனாலும் வேலையில் இருந்து களைத்து வந்த பிள்ளையை தோண்டித் துருவ விருப்பம் இல்லாமல் அவளாகவே சொல்லட்டும் என்று எண்ணி கொண்டவர்

“சரி போயி ரெப்ரெஸ் ஆய்ட்டு வா டா. நான் உனக்கு பிடிச்ச வாழைக்காய் பஜ்ஜி போட்டிருக்கேன். வந்து சாப்பிடு...”  என்றவாறு சமையலறைக்குள் நுழைந்தார் வளர்மதி.

சத்யா வும் அந்த ஒற்றை படுக்கை அறைக்குள் நுழைந்து தன்னுடைய உடைமைகளை வைத்து விட்டு குளியலறைக்குள் சென்றாள்.

அன்று ஏனோ மனம் ரொம்பவும் அழுத்தமாக, பாரமாக இருக்க நல்ல சூடான வெந்நீரில் ஒரு குளியலை போட்டாள். பின் இரவு உடையை அணிந்து கொண்டவள் தலைவாரி, முகத்திற்கு லேசாக ஒப்பனை செய்து கொண்டு வெளியில் வர அவளுக்காய் கையில் பஜ்ஜியுடன் காத்து கொண்டிருந்தார் வளர்மதி புன்னகையுடன்.

தன் அன்னையின் புன்னகையை கண்டதும் கொஞ்சம் பாரம் விலகுவதை போல இருக்க, அவளும் வரவைத்த புன்னகையுடன் அவர் அருகில் சென்றவள் அதை கையில் வாங்கிக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு அதை சாப்பிட்டவாறு ரிமோட்டை கையில் எடுத்தாள்.

அவள் கையிலிருந்த பஜ்ஜி ஒரு வாய் வயிற்றுக்குள் இறங்கவும் அவளுக்கு  கொஞ்சமாய் புது தெம்பு வந்ததை போல இருந்தது. அதே நேரம் கண்முன்னே வந்து குதித்தான் அமுதன்.

அவனுக்கு இந்த வாழைக்காய் பஜ்ஜி என்றால் ரொம்பவும் பிடிக்கும். முதல் முறை அவள் அன்னை அந்த பஜ்ஜியை செய்து இருந்த பொழுது அவன் வாழ்க்கையிலேயே அப்பொழுதுதான் அந்த பஜ்ஜியை சாப்பிடுபவன்  போல ஆர்வமாய் அதை ரசித்து சாப்பிட்டான்.

அன்றிலிருந்து வாரம் ஒரு முறை அவனுக்காகவே அந்த பஜ்ஜியை செய்து விடுவார் வளர்மதி. அவர் அப்படி செய்யவில்லை என்றாலும் உரிமையோடு செய்ய சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடுவான்.

அவ்வளவு நெருக்கமாகவும் உரிமையாகவும் அந்த குடும்பத்தோடு பழகியவன் இப்பொழுது சொல்லாமலேயே எங்கோ சென்று விட்டானே... என்று மீண்டும் மனம் அதனுள்ளேயே சுற்றிக் கொண்டிருக்க அவள் கரங்கள் கையில் இருந்த ரிமோட்டை ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டிருந்தது.

ஏனோ எதிலுமே அவள் மனம் லயிக்கவில்லை. எப்பொழுதும் எத்தனை கஷ்டம் இருந்தாலும் அதை தனக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டு  உற்சாகத்துடனும் துள்ளலுடனும் வலம் வருபவள் மனம் ஏனோ கடந்த ஒரு வாரமாகவே டல்லடித்து போனது.

எதிலும் ஆர்வமில்லாமல் எதிலும் விருப்பம் இல்லாமல் வாழ்க்கையே சலிப்பு தட்டி விட்டதைப் போல ஒரு  மனநிலை. நொடிக்கொரு தரம் அவள் நினைவுகள் அவனிடமே சென்று நின்றதுதான் அவளுக்கு புரியாத புதிராக இருந்தது.

அவன் இருந்த பொழுது தெரியாத அவன் அருமை அவன் விலகி சென்றதுதான் அவளுக்கு புரிகிறது. கூடவே அவன் தன் உணர்வுகளோடு எந்த அளவுக்கு கலந்து இருக்கிறான் என்றும் அந்த நொடியில் புரிந்தது.

“இந்த கொஞ்ச நாள் லயே என்னை அவன் மீது பைத்தியம் மாதிரி ஆக்கிவிட்டானே... திருடன்... ப்ராட்...”  என்று அவனை உள்ளுக்குள் அர்ச்சனை பண்ணி கொண்டிருக்க,

மீண்டும் அவள் மனம் அவனை நோக்கியே சென்று இருப்பதை கண்டு திடுக்கிட்டவள் மீண்டுமாய் தலையை உலுக்கி கொண்டு அவளுக்கு முன்னால் இருந்த தொலைக்காட்சியில் பார்வையை பதித்தாள்.

அப்பொழுது ஏதோ ஒரு நியூஸ் சேனலை வைத்திருந்தாள். அதிலும் கவனம் செலுத்தாமல் அவள் மீண்டுமாய் வேற பட்டனை அழுத்தி கொண்டு இருக்க, அவள் மனமோ மீண்டுமாய் அமுதனை சுற்றிவர,  அவள் பார்வையோ எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதேநேரம் சமையலறையிலிருந்து காபியுடன் வந்த வளர்மதி காபியை சத்யாவின் கையில் கொடுத்தவர் ஏதோ சொல்ல எண்ணி பின் தயங்கி நின்றார்.

அதை வாங்கிக் கொண்டவள் தன் அன்னையின் முகத்திலிருந்த தயக்கத்தை கண்டு கொண்டவள்

“என்னமா... என்கிட்ட  ஏதாவது சொல்லனுமா? என்று அவளாகவே கேட்டு வைத்தாள்.

“அது வந்து... சத்யா...  அமுதன் தம்பியை பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?  இன்றோடு அந்த தம்பி போய் ஒரு வாரம் ஆகிறது. அவரைப் பார்க்காமல் என்னவோ போல் இருக்கிறது...”  என்று அவரும் வாடிய முகத்துடனும் யோசனையுடன் சத்யாவின் முகம் பார்த்தார்

“வந்து...உனக்கும் அமுதன் தம்பிக்கும் ஏதாவது பிரச்சனையா?  அவரிடம் நீ எதுவும் சண்டை போட்டாயா?  அதனால்தான் அவர் கோபித்துக் கொண்டு எங்கோ போயிட்டாரா? என்று தன் மனதில் தோன்றிய யூகத்தை வளர்மதி சொல்ல சத்யா  அதிர்ந்து போனாள்.  

நேரில் பார்த்த மாதிரி அவள் அன்னை அப்படியே சொல்லவும் ஒரு நொடி மனம் துணுக்குற்றாள்.  அடுத்த நொடி அது மறைந்து வேதனை தான் வந்து  ஒட்டிக்கொண்டது.

அதற்குள் தன்னை சமாளித்தவள்  

“அதெல்லாம் இல்லம்மா... அவன் என்ன சின்ன குழந்தையா?  காணாமல் போவதற்கு. வேலை விஷயமாக எங்காவது சென்று இருப்பான். சீக்கிரம் வந்து விடுவான்...”  என்று தனக்கும் சேர்த்து சமாதானம் சொல்லி தன் அன்னைக்கு தேறுதலாய் பேசினாள்  சத்யா.

“ஹ்ம்ம் அப்படி வேலை விஷயமாக சென்றாலும் ஒரு போன் பண்ணி யாவது நல்லா இருக்கேன் என்று சொல்லி இருக்கலாம் இல்ல. அவர் கிட்ட தான் நம்ம போன் நம்பர் இருக்கே... “  என்று மீண்டும் விடாமல் புலம்பினார் அவள் அன்னை.

அதைக் கேட்டு கடுப்பானவள் அவன் போன் பண்ணலைனா நாம என்ன பண்ண முடியும் மா? சும்மா தொணதொணக்காத...போகத் தெரிந்தவனுக்கு தானா வரத் தெரியாதா? இனிமேல் அவனைப் பற்றி பேசாதீங்க...”  என்று சிடுசிடுத்தவள் தன் கையில் இருந்த காபியை குடிக்க அதே நேரம் வளர்மதி “சத்யா.....”  என்று சந்தோச கூச்சலிட்டார்.

அவள் அன்னை சத்யா என்று கத்தவும் திடுக்கிட்டு நிமிர்ந்து அருகில் நின்றிருந்த தன் அன்னையை பார்க்க அவர் பார்வையோ டிவியில் எதையோ பார்த்து சந்தோசத்தில் கத்திக் கொண்டிருந்தார்.

அப்படி என்னத்த பார்த்து விட்டார் என்று அவளும் பார்வையை டிவியின் பக்கம் திருப்ப அங்கு கண்ட காட்சியில் அப்படியே மெய் சிலிர்த்து போனாள்.

யாரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாளோ அவனே, அவள் மனம் கவர்ந்தவனே,  அந்த காந்தமவனே அங்கு டிவியில் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தான்.

அவன் புன்னகை எப்பவும் போல அவள் மனதை கட்டி இழுக்க, ஒரு நொடி தன்னையும் மறந்து அவனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.

“அது நம்ம அமுதன் தம்பி தானே...பார் எவ்வளவு சந்தோஷமா சிரிச்சுகிட்டு இருக்கார்...” என்று  அவள் அன்னையும் சந்தோசத்தில் சிரிக்க அப்பொழுது தான் அவள் மண்டையில் உறைத்தது.

அங்கு இருப்பவன்  அவளவன் அல்ல. ஆரவ் குரூப் ஆப் கம்பெனி எம்.டி ஆரவ் என்று. அடுத்த நொடி அதுவரை குதூகலித்த அவள் மனம் காற்றுப்போன பலூனாய் புஷ் என்றாகியது.

உடனே அவள் முகத்தில் சோகம் வந்து அப்பிக் கொள்ள தன் அன்னையை வேதனையுடன் பார்த்தவள்  

“இல்லம்மா...அவர் அமுதன் இல்லை. அமுதனை போலவே இருக்கிற வேற ஒருவர். அவர் பெரிய பிசினஸ் மேன். ஆரவ் குரூப் ஆப் கம்பெனிஸ் இல்ல. அதோட எம்.டி... “  என்றான் சலிப்புடன்.

அதைக் கேட்டு நம்ப முடியாதவராய் கண்களை அகல விரித்த வளர்மதி

“இல்லடி...இது நம்ம அமுதன் தான். சிரிக்கும் பொழுது தெரியும் அந்த தெத்துப்பல் அப்படியே இருக்கே. கன்னத்தில் விழும் குழி கூட கொஞ்சமும் அச்சு பிசகாமல் அப்படியேதான் இருக்கு.  இது கண்டிப்பா நம்ம அமுதன் தான்...”  என்று அடித்துச் சொன்னார்.

அதைக் கேட்டு சத்யாவும் மீண்டும் ஆர்வமாய் அந்த டிவியை பார்க்க அவள்  அன்னை சொன்னது உண்மை தான் என்று புரிந்தது.

அதே வசீகரிக்கும் பார்வை, ஆளை சுண்டி இழுக்கும் கன்னத்துக்குழி,  எத்தனை முறை அந்த  குழியை தொட்டுப் பார்த்திருக்கிறாள்...

தொட்டுப் பார்த்தது மட்டுமா? அவனை ஆசையாக எத்தனை முறை அந்த குழியில், அவன் கன்னத்தில் முத்தமிட்டு இருக்கிறாள்.

ஒவ்வொரு முறையும் காந்தமாய் இழுப்பவனை கட்டியணைத்து கன்னத்தில் அவள் இதழை பதித்திருக்கிறாள்.

அவனோ அதில் கிறங்கி போய்

“இந்த பாக்கியம் கன்னத்திற்கு மட்டும்தானா?  ஏன் எனக்கு இல்லையா என்று என் உதடுகள் என்னிடம் சண்டைக்கு வருகின்றது சது டார்லிங். ஒரே ஒரு முறை அதுக்கும் உன் பரிசை கொடுத்து விடேன். அதன் சண்டையையும் தீர்த்து வைத்து விடு...”  என்று கண் சிமிட்டி அவன் தெத்துப்பல் தெரிய  குறும்பாக சிரிக்க

“ஹா ஹா ஹா போனால் போகுது என்று கன்னத்தில் மட்டுமாய் கிஸ் பண்ணேன். ரொம்ப பேராசைப்பட்டால் இனிமேல் அதுவும் கிடையாது...”  என்று கை நீட்டி மிரட்டி சிரிக்க அவனோ

“அடிப்பாவி... முதலுக்கே மோசம் பண்ணிடுவ போல. இல்லை இல்லை இப்போதைக்கு இது போதும். பின்னால் அனைத்தையும் சேர்த்து வட்டியும் முதலுமாய் வசூல் பண்ணிக்கிறேன்...”  என்று அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் கொடுத்ததை அவளுக்கு திருப்பி கொடுத்தான்.

அந்த இனிய தருணங்கள் மீண்டுமாய் கண் முன்னே, அவள் உள்ளே சிலிர்த்து போனது.

“சே... எங்க சுத்தி எங்க வந்தாலும் என் நினைப்பு ஏன்தான்  அவன்  பின்னாலேயே சுற்றுகிறதோ... அந்த அளவுக்கா நான் அவன் மீது பைத்தியம் ஆகி போனேன்...”  என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவள்  அவசரமாய் தலையை உலுக்கிக் கொண்டு மீண்டும் டிவியில் பார்த்தாள்.  

அங்கே ஆரவ் குரூப் ஆப் கம்பெனிஸ் ன் தலைமைப் பொறுப்பை அந்த ஆரவ் ஏற்று கொள்ள, அந்த கம்பெனி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவரும் அவனுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

பின் பக்கத்தில் இருந்த தலை நரைத்த ஒருவர், கம்பீரமும் மிடுக்கும் குறையாமல் இருந்தவர் அவனை கைப்பற்றி குறித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

அவள் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். அவர் முகத்தை உற்றுப் பார்க்க அப்படியே அமுதனை போலவே இல்லை இல்லை அங்கு நின்றிருந்த ஆரவ் ஐ போலவே இருந்தார்.

“அப்படி என்றால் இவர் தான் ஆரவ் உடைய அப்பாவாக இருக்கும்...”  என்று  எண்ணியவள் மீண்டும் அவள்  பார்வை அந்த ஆரவ் இடம் படிய, இப்பொழுது அவன் அங்கிருந்த மைக் முன்னால் நின்று கொண்டு கணீரென்ற குரலில் கம்பீரமாக பேசிக் கொண்டிருந்தான்.  

அதுவும் அழகான சரளமான ஆங்கிலத்தில் சர்வ சாதாரணமாய் மிடுக்குடன் பேசிக்கொண்டிருந்தான்.  அதை கண்டதும் சத்யாவிற்கு மீண்டும் தூக்கி வாரி போட்டது.

குரல்...அந்த குரல்... அவன் குரல் அப்படியே அமுதனின் குரல் போலவே இருந்தது. ஆனால் அதில் இருந்த கம்பீரம் ஒரு நிமிர்வு ஒரு ஆளுமை அது அமுதனுடையது அல்ல.

அதோடு இவன்  பார்ப்பதற்கு இறுகிப் போய் இருக்கிறான் என்றால் அமுதன் எப்பொழுதும் இலகிய நிலையில் கனிவுடன் எல்லாரிடமும் அன்பாக, அரவணைப்புடன் பேசிப் பழகுபவன்.

அவன் குரலில் இவ்வளவு கடின தன்மை இருக்காது. எப்பொழுதும் கொஞ்சலும் கூடை கூடையாய் அன்பும் கரிசனமும் அவன் குரலில் கொட்டி கிடக்கும்.

அதுவும் அவனின் சது...  என்ற அழைப்பில் அப்படி ஒரு கொஞ்சல், காதல், ஏக்கம், தவிப்பு என எல்லாம் கொட்டி கிடக்கும். இந்த ஆரவ் குரல் அமுதன் குரல் போலவே இருந்தாலும் அதில் இருந்த மற்ற எக்ஸ்ட்ராஸ் மிஸ்ஸிங் இவனிடத்தில்.

“அவன் தோற்றம், குரல் ஒரே மாதிரி இருந்தாலும் கண்டிப்பாக இவன் அவன் அல்ல. இவன் என்னவன் அல்ல.. “  என்று மீண்டுமாய் தனக்குள்ளே உரு போட்டுக் கொள்ள வளர்மதியோ இன்னுமே மெய் மறந்து அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏனோ இப்பொழுது அந்த ஆரவ் ஐ பார்க்க அவளுக்கு பிடிக்கவில்லை. தன்னவனை போலவே இருக்கும் மற்றொருவன் என்றாலும் அவனிடத்தில் இவனை வைத்து பார்க்க பிடிக்காமல் உடனே சட்டென்று அடுத்த சேனலுக்கு மாற்றினாள்.

அதைக் கண்ட அவள் அன்னை, அவளை முறைத்தவாறு

“இப்ப எதுக்குடி சேனலை மாத்தின? எவ்வளவு அழகா அமுதன் தம்பி பேசறார். அதை இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். அதையே வை...”  என்று முறைத்தார்.

அவன் பேசுவது என்னவென்று புரியாவிட்டாலும் அவன் முகத்தையாவது பார்த்து கொண்டு இருக்க வேண்டும் போல இருந்தது அவள் அன்னைக்கு. அவளுக்கும் அதே எண்ணம் தான். அதனால் தான் அவனை பிடிக்காது என்று வேறு சேனலுக்கு மாற்றினாள். அவள் அன்னை மீண்டும் அதே சேனலை கேட்க, அதில் கடுப்பானவள்  

“ஐயோ...புரிஞ்சுக்கமா. அவர் அமுதன் இல்லை. திரும்பத் திரும்ப சொல்றேன். அவர் ஆரவ். அவர் ஒரு மல்டி மில்லினர். டாப் டென்  பணக்காரர்களில்  அவனுரும் ஒருவர்.  கண்டிப்பாக அவர் நம் அமுதனாக இருக்க சான்ஸ் ஏ  இல்லை. நீ போய் வேலையை பாரு... “  என்று தன் அன்னையை முறைத்து அவரை சமையலறைக்கு  அனுப்பி வைத்தாள்.  

அவரும் கன்னத்தில் கை வைத்தவாறு

“நான் சொன்னா நீ எப்ப அப்படியே கேட்டிருக்க...நான் அடிச்சு சொல்றேன். இவர் அமுதன் தான்... எழுதி வச்சுக்க...”  என்று அவளை பார்த்து முறைத்தவாறு சமையலறைக்குள்  சென்றார் வளர்மதி....


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!