காந்தமடி நான் உனக்கு!!-5

 


அத்தியாயம்-5

தே நேரம் பக்கத்து வீட்டிற்கு ஒரு பர்த்டே பார்ட்டி என்று கொண்டாட சென்றிருந்த சத்யாவின் இரு தங்கைகளும் குதூகலத்தோடு துள்ளி குதித்தவாறு ஓடிவந்தனர்.

உள்ளே வந்தவர்கள் அங்கு வரவேற்பறையில் அமர்ந்து இருந்த தன் அக்காவை பார்த்ததும் இன்னும் முகம் மலர,

“ஹை... அக்கா வந்திட்டியா... உனக்கு ஒரு சர்ப்ரைஸ்...! “  என்றவாறு முகமெல்லாம் பூரிக்க,  குதித்தபடி சத்யாவை நோக்கி ஓடி வந்தனர்.

இருவரும் சத்யாவின் அருகில் வந்ததும் அவள்  முன்னே அந்த தினசரியை காட்டி

“இங்க பாரேன்...நம்ம அமுதன் ப்ரோ தானே இது. எவ்வளவு சூப்பரா இருக்கார்... “  என்று கண்கள் மின்ன அவள் தங்கைகள் இருவரும் ஒரே நேரத்தில் ஆர்ப்பரித்து சொல்ல சத்யாவோ அந்த புகைப்படத்தில் இருப்பவனை பார்த்து நொந்து போய் மீண்டும் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

“சே... இவனை பற்றி நினைக்க கூடாது... பார்க்க கூடது என்று இருந்தால் தானாகவே என்னை தேடி வந்து என்னை கொள்றானே...இவனை என்ன செய்யலாம்...” என்று உள்ளுக்குள் திட்டி கொண்டவள் தன்  முகத்தை இறுக்கி கொண்டு  

“அடியே... இவர் ஒன்னும் அமுதன் இல்லை. இவர் அமுதன் சாயலில் இருக்கிற ஆரவ்... “  என்று மீண்டும் அதே டயலாக்கை சொல்லி தன் தங்கைகளை சமாளிக்க பார்த்தாள்.  

அவர்களும் அதை நம்பாமல்

“இல்லக்கா... அமுதன் ப்ரோ வை எங்களுக்கு தெரியாதா?  எத்தனை முறை  நாங்கள் அவருடன் விளையாடி இருக்கிறோம். கண்டிப்பா இவர் அமுதன் தான்.

உன் கண்ணுல தான் ஏதோ கோளாறு... முதலில் அதைப் போய் சரி பண்ணு..“ என்று இடுப்பில் கைவைத்து முறைத்தாள் மூத்த தங்கை,  அந்த வீட்டின் இரண்டாவது இளவரசி வித்யா.  

“ஆமாம்... ஆமாம் நானும் கூட பார்த்தேன்...அதே அலைஅலையான முடி... அதே நெற்றி...அதே கண்ணு... அதே மூக்கு...  அதே ஸ்டைல்...கண்டிப்பா இவர் அமுதன் தான்... “  என்று அந்த வீட்டின் கடைக்குட்டி நித்யாவும் துள்ளி குதிக்க,  சத்யாவோ கடுப்பானாள்.  

“ஐயோ...இந்த லூசுங்களை எப்படி நம்ப வைக்கிறது?”  என்று சத்தமாக சொல்லி தன் தலையில் கையை வைத்துக் கொண்டு தளர்ந்து போய் இருக்கையின் பின்னால் சாய்ந்தவாறு அமர்ந்தாள்.

“யாரு லூசு? உண்மைய சொன்னா நாங்க லூசா? “  என்று இருவரும் தன் அக்காவை முறைக்க

“சரி...சரி...அவன் யாரா இருந்தா நமக்கு என்ன?  முதல்ல போய் ரெண்டு பேரும்  படிங்க.  அவன் அமுதனா இல்லை ஆரவ் ஆ என்ற ஆராய்ச்சியை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

எக்ஸாம் வருது...ரெண்டு பேரும் உள்ள போய் படிங்க...”  என்று தன் தங்கச்சிகளை விரட்ட அவர்களும்

“ஐயோ...சரியான நேரத்தில் மறக்காமல் நினைத்துக் கொண்டாளே...இனி படிக்காமல் எஸ் ஆக முடியாது...”   என்று தன் அக்காவை முறைத்தபடி அறைக்குள் சென்றனர்.

சத்யா மீண்டுமாய் அந்த பேப்பரையும் தொலைக்காட்சியையும் பார்க்க,  எல்லோரும் சொல்வதை போல இவன் அமுதன் தானோ? என்று  ஒரு நொடி ஆழ்ந்து யோசித்தாள்.

கூடவே அவனைக் காணாமல் அவளைப் போலவே எத்தனை பேர் புலம்பி கொண்டிருக்கிறார்கள் என்பதும் கண் முன்னே வர,

“சை...எப்படித்தான் இத்தனை பேரிடமும் கொஞ்ச காலத்திலேயே நல்ல பெயர் வாங்கிக் கொண்டானோ? எல்லாரும் அவனையே காணாமல் ஏங்குகின்றனர்.

சரியான திருடன்... வந்த கொஞ்ச நாள்லயே எல்லார் மனதையும் கொள்ளை கொண்ட அந்த மாயக் கண்ணன். “

அதுவும் இரும்பாய் இறுகி இருந்த அவள் இதயத்தையும் இளக வைத்து அதற்குள் குடிபுகுந்து  அவளையே ஆட்சி செய்தவன் ஆயிற்றே...!  

அவனின் அந்த காந்த புன்னகை ஒன்று மட்டுமே போதும். எல்லோரும் அவன் வழிக்கு வந்துவிட. அப்படித்தானே அவளும் அவனிடம் ஈர்க்கப் பட்டு உருகி போய் அவனிடம் இரும்பாய் ஒட்டிக் கொண்டாள்.  

“ஆனால் இன்று என்னை விலக்கி விட்டு, என்னை மறந்து எங்கே சென்றிருப்பான் ? இத்தனை பேரை தவிக்க விட்டுட்டு எங்கடா போன?  வந்துவிடேன்... சீக்கிரம் என்னிடம் வந்துவிடேன்.

மற்றவர்கள் சொல்வது போல இந்த டிவியிலும், இந்த பேப்பரிலும் இருப்பவன்  நீ அல்ல. அது வேற யாரோ தானே..! என் அமுதன், என் அம்மு பணக்காரனாக இருக்கக்கூடாது.

எங்களைப்போல ஏழையாக இருந்தாலே போதும். நீ வேணும்டா எனக்கு. நீ வேணும். ப்ளீஸ் எனக்காக வந்துவிடு. என்னை ரொம்பவும் காத்திருக்க விடாமல்,  என்னை பார்க்க, எங்களையெல்லாம் பார்க்க, எங்கள் தவிப்பு நீங்க சீக்கிரம் வந்து விடேன்.  

நீ வேண்டும் எனக்கு. உன்னை இனிமேல் கைநழுவ விட்டு விட மாட்டேன். உன்னை பத்திரமா பார்த்துக்கிறேன். ப்ளீஸ் வந்து விடு அம்மு. ஐ லவ் யூ டா... ஐ லவ் யூ அம்மு...”  என்று மீண்டும் உள்ளுக்குள் புலம்ப ஆரம்பித்தாள் சத்யா.

வரப்போகிறான் அவளவன் சீக்கிரம். ஆனால் இப்பொழுது புலம்புபவள் அப்பொழுதோ கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் தன் கோபத்தை கொட்டி அவனை அனலாய் பார்த்து எரித்து அவனை மீண்டும் விரட்ட போகிறாள்.


 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!