காந்தமடி நான் உனக்கு!!-6
அத்தியாயம்-6
அன்று இரவு தன் இரவு உணவை முடித்து விட்டு மனம் ஏனோ இன்னும் பாரமாய்
இருக்க, மெதுவாக அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு வந்தாள்
சத்யா.
அது ஒரு மூன்று தளங்களைக் கொண்ட வீடு. ஒவ்வொரு தளத்திலும் ஒற்றைப் படுக்கை அறை கொண்ட மூன்று போர்சன்களாக
தடுத்திருந்தாள் சத்யா.
அதில் முதலாவது தளத்தில் ஒரு வீட்டில்
அவர்கள் இருந்து கொண்டு மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தாள். கூடவே மாடியில்
ஒரு ஒற்றை அறை மட்டும் வைத்து சிறிய அறையாக கட்டி இருந்தாள்.
சமையல் அறை,
வரவேற்பறை, படுக்கை அறை என்று தனித்தனியாக
இல்லாமல் அனைத்தும் ஒன்றாய் பத்துக்கு பத்தும் குறைவில் ஒற்றை அறை மட்டும்
இருந்தது.
அதில் ஓரமாய் சமைத்துக் கொள்ள
சிறியதாய் கொஞ்சமாய் சமையல் மேடை போல அமைத்திருந்தாள். குளியலறை கூட வெளியில் தான்
இருந்தது. பேச்சிலருக்கு என்று கட்டப்பட்டது அந்த ஒற்றை அறை.
மேல மாடிக்கு வந்தவள் மார்புக்கு
குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தாள் சத்யா.
அந்த பௌர்ணமி நிலவின் ஒளியில் அவள்
முகம் ஜொலி ஜொலித்தது. எப்பொழுதும் அந்த நிலவை கண்டால் துள்ளி குதிக்கும் அவள்
மனம் இன்று ஏனோ அமைதி இழந்து தவித்தது.
அவள் மனதில் எப்பொழுதும் இருக்கும் உற்சாகம்
இல்லை. அவள் கண்களிலும் எப்பொழுதும் இருக்கும் துள்ளல் இல்லை.
அதே நேரம் எந்த கவலையும் இல்லாமல் எப்பொழுது வானில் பிரவேசித்தாலும் மலர்ந்து சிரித்து
கொண்டே இருக்கும் அந்த நிலாப்பெண்ணை பார்க்க அவளுக்கு ஏக்கமாக இருந்தது.
அவளும் ஒரு காலத்தில் அப்படி இருந்தவள்
தான். கவலைக்கே கவலையை கொடுப்பவள். இன்று அதெல்லாம் தொலைந்து போய் தன் சுயத்தை
தொலைத்து ஒருத்தனுக்காய் ஏங்கி தவிப்பது எரிச்சலாக இருந்தது.
அவனை பற்றி இனிமேல் நினைக்க கூடாது
என்று எத்தனையாய் தனக்குள்ளே தீர்மானம் செய்து கொண்டாலும் சில நொடிகளில் அவன்
நினைவுகள் அந்த மாயக்கண்ணனிடம் சென்று நிக்கும்.
இப்பொழுதும் அவள் எண்ணங்கள், நினைவுகள் எல்லாம் மீண்டும்
தன்னவனை சுற்றிக் கொண்டிருக்க, அவள் பார்வையும் அந்த ஒற்றை அறையின் மீது சென்று
நின்றது.
அதுதான் அவன், அமுதன் தங்கி இருந்த அறை. அதைக் கண்டதுமே அவள்
முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.
அந்த அறையின் மேலே இருந்த வாட்டர்
டாங்க் ற்கு செல்ல என்று அறையின் பக்கவாட்டில் ஒரு ஏணி வைக்கப்பட்டிருக்க, அந்த ஏணி வழியாக ஏறித்தான் சிலநேரம் அந்த வாட்டர் டேங்க்
சரிபார்க்கவும் பழுது பார்க்கவும் முடியும்.
சில நேரம் அவர்கள் இருவரும் அதன் மீது
ஏறி அந்த வாட்டர் டேங்க் அருகில் அமர்ந்து கொண்டு காலை கீழ தொங்க போட்டு கொண்டு
கதை அடித்த நாட்கள் கண் முன்னே வந்தது.
சில நேரம் அவன் அந்த ஏணியில் மூன்றாவது
படியில் அமர்ந்து கொள்ள, அவளோ அதற்கு அடுத்த கீழ் படியில்
அமர்ந்து கொண்டு அவன் மடி மீது தலை சாய்த்து கொள்ள,
அவனின் வலுவான கரங்கள் அவள் கூந்தலில் விளையாடியவாறு மையலுடன் இனிக்க இனிக்க காதல்
கதைகளை பேசியிருக்கிறார்கள்.
அதுவும் அந்த மெல்லிய நிலவொளியில், அவனின் முறுக்கேறிய பரந்த மார்பின் படிக்கட்டுகள் அப்படியே
தெரியுமாறு, இலகுவான ஒரு டீசர்ட்டில் அவன்
அமர்ந்து கொண்டு, அவள் கை நீட்டி சொல்லும் கதைகளையெல்லாம் கேட்டு
மந்தகாசமாய் புன்னகைக்கும் பொழுது அவனை அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டும் போல இருக்கும்
பெண்ணவளுக்கு.
“அழகன்டா நீ...என் அம்மு செல்லம் டா
நீ....என் காந்தம் டா நீ....” என்று எத்தனை எத்தனை முறை அவனை கொஞ்சியிருக்கிறாள்.
“அப்படிப்பட்டவனை, என்னவனை, என்னோடு உணர்வால் ஒன்றாய் கலந்தவனை , என்னை விட்டு ஏன் போகச் சொன்னேன்?
நான் ஒரு மடச்சி.. எந்த பொருளும் அருகில் இருந்தால் அதன் அருமை பெருமை தெரியாதாம்.
நம் கையை விட்டு போகும்பொழுதுதான் அதன்
மதிப்பு தெரியுமாம். அந்த மாதிரி என் அமுதன் என்னையே சுற்றி வந்த பொழுது தெரியாத
அவன் அருமை இப்பொழுதல்லவா தெரிகிறது.
அவன் என் பொக்கிஷம் என்பது தெரியாமலயே
அவனை எட்டி உதைத்து விட்டேனே...நான் ஒரு மடச்சி...அறிவு கெட்டவள். அவசர
குடுக்கை...” என்று மீண்டும் தனக்குள் புலம்பியவள் தன்னையே திட்டி கொண்டாள்.
“சை... நான் ஏன் இப்படி எல்லாம்
புலம்புகிறேன்?. என்ன ஆனது எனக்கு? நான் போக சொன்னால் அவன் போய்டுவானா?
என்னை விட்டு போக முடியாது என்று பிடிவாதமாக நிற்க வேண்டாமா?
அப்படி என்றால் என்மீது அவனுக்கு
தீவிரமான காதல் இல்லையா? அதனால்தான் உடனே விட்டுவிட்டு
போய்ட்டானா? “ என்று அவள் மனம் பல நூறு கேள்விகளை
கேட்டு கொள்ள, அவளால் அதற்கு சரியான விடையை கண்டு
பிடிக்க முடியாமல் திணறினாள்.
தன்னுடனேயே சற்று நேரம் போராடியவள்
பின் மெதுவாய் நடந்து அந்த அறைக்கு அருகில் சென்றாள். கதவு தாழ் போட்டு பூட்டி இருந்தாலும்
அதனுடைய சாவி வைக்கப்படும் இடம் அவளுக்கும் தெரியும்.
அதனாலேயே கை தானாக உயர்ந்து சாவி வைக்கும் இடத்தில் தேட, அவள் நினைத்ததை போல அது அங்கேதான் இருந்தது.
அதை எடுத்தவள் மெல்ல பூட்டை திறந்து
உள்ளே நுழைந்தாள்.
கதவருகில் இருந்த ஸ்விட்ச் ஐ தட்ட அந்த
நான்கு வாட்ஸ் எல்.இ.டி பல்ப் மெதுவாய் ஒளிர்ந்தது. அதன் மங்கிய வெளிச்சத்தில்
பார்வையை சுழற்ற, பெரிதாக பொருட்கள் என்றும் எதுவும் இல்லை அந்த
அறையில்.
அவன் தரையில் படுத்து உறங்கிய மடிக்கப்பட்ட
படுக்கை விரிப்பு; ஒரு தலையணை; சமையல் மேடையில் இருந்தது ஒரு குட்டி சிலிண்டர்
உடனே அட்டாச் ஆகி இருக்கும் போர்ட்டபில் ஸ்டவ். சில நேரம் அவனே டீ போட்டு குடிக்க
என்று வைத்திருந்தான்.
ஒரு சில பாத்திரங்கள். மற்றபடி
அவனுக்கு சமைக்க தெரியாது. சாப்பாடு எல்லாம் அவள் அன்னை வளர்மதியின் சாப்பாடுதான்.
அதற்காக என்று கட்டாயப்படுத்தி மாதம்தோறும் பணத்தை கொடுத்து விடுவான்.
மீண்டும் கண்களை அந்த அறைக்குள் சுழல விட்டாள்
சத்யா.
அங்கே சுவற்றில் அடித்து இருந்த
ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்தது அவனுடைய இரண்டு பழைய ஜீன்ஸ்கள், மற்றும் இரவு நேரத்தில்
அணியும் இலகுவான சாயம் வெளுத்துப் போன ஒரு சில டீசர்ட்கள்.
அதை பார்த்தவளுக்கு உடனே அந்த ஆரவ் கண்
முன்னே வந்து நின்றான். சற்றுமுன்
தொலைக்காட்சியில் பார்த்த ஆரவ்; அவன் அணிந்திருக்கும் ஆடை மட்டுமே பல
லட்சங்களை விழுங்கி இருக்கும்.
“அப்படிப்பட்டவனா இந்த குட்டி அறையில் அமுதனாய் இங்கே தங்கி
இருந்திருப்பான்? ஆரவ் வீடு மாளிகை போன்று பல அடுக்கு
மாடிகளை கொண்டது.
பைவ் ஸ்டார் ஹோட்டல் ஐயும் மிஞ்சிய, ஆடம்பரமாய், சொகுசாய் அவன் மாளிகை இருக்க, அவன் எப்படி இந்த பத்துக்கு
பத்து கூட இல்லாத, காலை முழுவதுமாக நீட்டி கூட படுக்க முடியாமல்
மடக்கியபடி உறங்க வேண்டிய இந்த குச்சுக்குள் வாழ்ந்திருப்பான்?
கண்டிப்பாக என் அமுதன் அவனாக இருக்க
முடியாது.
அதுவும் கட்டில் கூட இல்லை. ஒரு சாதாரண
படுக்கை விரிப்பு தான். அதில் படுத்து உறங்கினால் உடம்பெல்லாம் வலிக்கும். அப்படி இருக்க, இந்த வசதி இல்லாத இடத்தில் வந்து பெரிய இடத்து பையன் எப்படி தங்கி இருந்திருப்பான்? என்று அவளே கேள்வியையும்
கேட்டு அவளே பதிலும் சொல்லி கொண்டாள்.
“இல்லை...கண்டிப்பாக அவன், அந்த ஆரவ் என்னவன் இல்லை...”
என்று மீண்டுமாய் தனக்குள்ளே சொல்லிக்
கொண்டாள்.
“அப்படி என்றால்? எங்கே... அமுதன் எங்கே? “ என்று மீண்டும் பழைய கேள்வியை கேட்டுக் கொண்டவள்
மெதுவாய் அந்த ஹேங்கரில் இருந்த அவன்
டீசர்ட் ஐ தொட்டுப் பார்த்தாள்.
அதை மிருதுவாய் தொடவும் அவள் உடல்
சிலிர்த்து போனது. அதோடு அந்த டி-ஷர்ட்டை எடுத்து லேசாக உதறிவிட்டு அதை அவள் போட்டிருந்த
ஆடை மீதே அணிந்து கொள்ள, அடுத்த நொடி அவன் மார்பில் தஞ்சம்
புகுந்ததை போல அப்படி ஒரு சிலிர்ப்பு அவள் உள்ளே.
அதுவரை அவள் மனதில் அரற்றி கொண்டிருந்த
குழப்பம் எல்லாம் மாயமாய் மறைந்து மனம் அமைதி அடைந்ததை போல அப்படி ஒரு நிம்மதி
அவள் உள்ளே.
அவன் வாசம் கொஞ்சம் கூட குறையாமல்
அப்படியே அந்த டி ஷர்ட்டில் இருந்தது. அவனுக்கு என்ற பிரத்தியேகமான வாசமது.
எத்தனையோ ஆண்களிடம் பழகி இருக்கிறாள். ஆனால்
யாரிடமும் இந்த மாதிரியான ஒரு வாசம் வந்ததே இல்லை.
அவனின் அந்த வாசத்தில் கூட அவனின் ஆண்மையும்
ஆளுமையும் கலந்து இருக்க, அதுவே அவளை கட்டி இழுக்கும் காந்தமாய்
அப்படியே மெய் மறந்து நின்றிருந்தாள். .
அதன் சிலிர்ப்பில் தன்னையும் மறந்து அப்படியே
தன்னையே இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.
பெண்ணவளுக்கோ இன்னுமே அவனே அவளை இறுக்கி அணைத்துக் கொண்டதை போல் பரவசமாகிட, இன்னுமாய் சிலிர்த்துப் போனாள்.
அந்த மயக்கத்தில் அப்படியே கிறங்கி
நின்றவள் மெல்ல சுதாரித்து கைகளை விலக்கி கொண்டவள் மீண்டும் அந்த அறையை ஆராய, கிட்டதட்ட அவன் கடைசியாக
பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் அப்படியே தான் இருந்தது.
ஏன் அவன் ஜீன்சை கூட எடுத்துச்
செல்லாமல் விட்டுச் சென்றிருக்கிறான்.
“அப்படி என்றால் அவனுக்கு என்னை விட்டு
போக வேண்டும் என்ற திட்டமில்லை. இருந்திருந்தால் இந்த அறையை காலி பண்ணிக் கொண்டு
சென்றிருப்பான்.
அப்படி என்றால்? என் மீது கோபம் இல்லை என்னவனுக்கு. அவனே எங்கோ சென்றிருக்கிறான். திடீரென்று அவன் சொல்லாமல்
கொள்ளாமல் கிளம்பி செல்லும் அளவுக்கு என்ன வேலை வந்துவிட்டது?
அவன் அலுவலகத்திலும் விசாரித்து
விட்டாள். அப்படி எதுவும் அலுவலக வேலையாக எங்கும் சென்று இருக்கவில்லை. அவர்களும்
அவனைத்தான் தேடிக் கொண்டிருந்தனர்.
அது இப்பொழுது நினைவு வர, அதுவரை இருந்த ஏகாந்தம் மறைந்து விட,
மீண்டும் அவள் மனம் இன்னும் குழப்பத்தில் ஆழ்ந்தது,
“என்னவாக இருக்கும்? எங்கே போய் இருப்பான்? எப்பொழுது வருவான்? வந்து விடுவானா? “ என்று யோசித்தவாறு அந்த அறையை பூட்டிவிட்டு
வெளியில் வந்தவள் அந்த மாடியில் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க ஆரம்பித்தாள்.
அவளின் பார்வை என்னவோ தலைக்கு மேலே
ஒளிர்ந்த வெண்ணிலவையே வெறித்து பார்த்து கொண்டிருக்க,
அவள் நினைவுகளோ அவனை முதன் முதலாய் சந்தித்த நாளை நோக்கி சென்றது.
அதே நேரம் அமுதனுடைய டீசர்ட் ஐ
அணிந்ததும் அவளை விட்டு வெகு தொலைவில் இருந்த அவனுக்குமே சிலிர்த்து போனது. தன்
மஞ்சத்தில் அவள் மையம் கொண்டுள்ளதை போல பிரமிக்க,
அவன் கால்கள் தானாக மொட்டை மாடிக்கு வந்திருந்தது.
அவனும் அதே நேரம் அதே
நிலாப்பொண்ணைத்தான் பார்த்து கொண்டிருந்தான். ஆனால் சத்யாவை போல் வெறித்து
பார்க்காமல் அந்த நிலவை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.
ஆனாலும் அவன் கண்களிலும் தன்னவளை காணாத
ஏக்கம் பெரிதாக குடி கொண்டிருந்தது...
“ஐம் சாரி சது..... சாரி டி
செல்லம்மா..... உன்னை பார்க்காமல் என்னால் முடியல டி. இப்பயே உன்னை
பார்க்கணும்...அள்ளி அணைச்சுக்கனும் போல இருக்கு டி...
சீக்கிரம் வந்து விடுகிறேன் உன்னை
பார்க்க...அதுவரை இந்த அம்முவை மன்னித்துவிடு.... ஐ மிஸ் யூ சோ மச்... ஐ லவ் யூ.. லவ்
யூ லாட் செல்லம்மா... “ என்று வாய்விட்டு மெதுவாக முனகி கொண்டான் அமுதன்.
அவன் ஆசை நிறைவேறுமா? வந்து விடுவானா விரைவில் ?
வரும் நாட்களில் பார்க்கலாம்...
Super mam. When will u put உன்னை vidamatten என்னுயிரே episode
ReplyDeleteThanks pa. will update soon..little busy now
Delete